நான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....
இன்றையத் தினம் உண்மையிலேயே நமக்கெல்லாம் பண்டிகை நாள் போன்றதாகும் என்றாலும், இதற்காக அவர் எடுத்திருக்கிற முயற்சியும், செய்திருக்கின்ற பெரிய ஏற்பாடும், செலவும் தான் பயமாக இருக்கிறது. நண்பர் முத்து அவர்கள் ஒரு காசு செலவு இல்லாமல் பெரிய வீரராகி விட்டார். தன்னுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் நடத்தி, அதன்பின் பல பெருமைகளை எல்லாம் பெற்று, அதைத் தன் பெண்ணும் அடைய வேண்டுமென்று அவளுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் அமைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்து - காலம் பார்த்து, நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் பொறாமைப்படும்படியான அளவிற்கு அவர் வீரராகி விட்டார். நேரம், காலம், பொருத்தம் எல்லாம் பார்த்துத் தான் கண்ணகி - சீதை - சந்திரமதி - திரவுபதை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றன என்றாலும், இவற்றில் ஒழுக்கமாக நாணயமாக நடந்து கொள்ளவில்லை.
தமிழனுக்கு இதுபோன்ற ஒரு முறையே கிடையாது. இந்தக் கட்டுப்பாடு முறை எப்போது வந்தது என்றால், பார்ப்பான் வந்த பின் ஏற்பட்டது தானாகும். பார்ப்பான் இங்கு வரும்போது தேவையான பெண்களோடு வரவில்லை. இங்குள்ளவர்களைச் சரி செய்து கொண்டு வாழ்ந்தனர்.
இவர்கள் சரி செய்து கொண்ட பெண்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடையே ஒழுக்கக் கேடுகள் ஏற்பட்டன. அதனால் பார்ப்பான் தனக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பெண்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். எப்படி அரசாங்கமானது நெருக்கடி நேரும்போது சட்டம் இயற்றிக் கொண்டு சமாளித்திருக்கிறதோ, அதுபோன்று பார்ப்பான் (சட்டம்) கட்டுப்பாடு ஏற்படுத்தினான். இதை நான் சொல்லவில்லை. தமிழனின் மிகச் சிறந்த இலக்கண நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் எழுதி இருக்கிறான். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" என்று. அய்யர் என்பது பார்ப்பனரைக் குறிப்பிடும் சொல் அல்ல. அக்காலப் பெரியவர்களை, அறிவில் சிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாகும் என்று சில தமிழ்ப் புலவர்கள் கூறுவார்கள். இது சரியல்ல என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்று. பார்ப்பனர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழேரான சூத்திரர்களுக்கும் ஆயிற்று என்று குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து அய்யர் என்ற சொல் பார்ப்பானையே குறிப்பதாகும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார்.
நானும் 100-வருடத்திற்கு இருந்து அவர்களும் (தி.மு.க அரசும்) 100- வருஷமிருந்தால் இத்திருமணத்தைக் கிரிமினலாக்கி விடுவார்கள். ஆண்கள், என்று அயோக்கியராயினரோ அன்றே பெண்களை அடிமையாக்கி விட்டான். நம் நாட்டிலே மட்டுமல்ல - உலகமே இப்படித்தான் இருக்கிறது. நம் நாட்டிலாவது நாகம்மாள், ராஜம்மாள் என்று பெண்கள் பெயரைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், வெள்ளைக்காரன் நாட்டில் எல்லாம் மிஸஸ் தான். பெண்ணிற்கு உரிமையில்லை. எனவே, பெண்ணடிமையைப் பற்றி எவனுமே கவலைப்படவில்லை. இந்தியாவிலேயே இதற்காகப் பாடுபடக் கூறயவர்கள் நாங்கள் ஒருவர் தான்.
பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடையவளாக இருக்க வேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான் - அவ்வை சொல்கிறாள். மற்ற எல்லா புலவனும் இதைத்தான் சொல்கிறான். இரண்டு பேர்களும் சமம் என்று இம்முறையில் இருவரிடமும் உறுதி வாங்குகிறோம். அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களோ, இல்லையோ. ஆனால் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்குகிறோம். அவர்களும் நடந்து கொள்வதாக உறுதியளிக்கின்றார்கள்.
வழக்கம் என்பது காட்டுமிராண்டி காலத்ததும், சாஸ்திரம் என்பது மிருகப் பிராயத்ததும் ஆகும்.
பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பதும், ஜாதகம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது இவை யாவும் முட்டாள்தனமானது. மூட நம்பிக்கையானது. பெரிய பி.ஏ., எம்.ஏ., படித்தவனெல்லாம் மேதாவி, அறிவாளி எல்லாம் இதைப் பார்த்துத் தான் திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வளவு மூட நம்பிக்கை படிந்திருக்கிறது. அறிவு வளர்ச்சி இல்லை.
இப்போது நடைபெற்ற இத்திருமணமானது 68-ஆம் வருஷ மாடல் ஆகும். 1967-ஆம் வருட மாடல் - இத்திருமணம் செல்லாதென்றிருந்தது. 1968-ஆம் வருடத்தில் சட்டப்படிச் செல்லும் என்றாகி இருக்கிறது. நாளை 1969-இல் இத்திருமண முறை எப்படி மாறுமோ சொல்ல முடியாது.
மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கடங்கி செலவு செய்ய வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. பிறர் கண்டு பொறாமைப்படும்படியாக வாழாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். தங்களின் குடும்பத்தை மட்டும் நினைக்காமல் நம் சமுதாயத்தையே நினைக்க வேண்டும். நம் இனத்திற்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். மோட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கவலையற்ற தன்மையாகும். பிள்ளைகள் இல்லாமலிருப்பதும் வரவிற்கு மேல் செலவிடாமலிருப்பதும், மனிதனுக்குக் கவலையற்ற வாழ்வாகும், மோட்சமாகும். சிலர் அறிவுள்ள குழந்தைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றார்கள். அறிவுள்ள பிள்ளையைப் பெற வேண்டுமானால் எந்தக் கடையிலே போய்ச் சாமான் வாங்குவது? பிள்ளை பிறந்த பின்தானே அதை அறிவுள்ளதாக்க நாம் தானே மாரடிக்க வேண்டும். பிறப்பதற்கு முன்பே - பெறும் போதே எப்படி அறிவுள்ளதாகப் பெற முடியும்?
---------------------------- 12.07.1968 அன்று நடைபெற்ற பெருமாள் - இலங்கனி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை."விடுதலை", 12.08.1968
0 comments:
Post a Comment