Search This Blog

31.10.11

சூரசம்ஹாரமாம்! இது நியாயமா - சரியா? சிந்திப்பீர்!


சூரசம்ஹாரமாம்!

இன்று சூரசம்ஹாரமாம். சூரபத்மனை முருகன் கொன்ற நாளாம். கடவுள் ஒருவனைக் கொலை செய்கிறது என்கிற தீய நடவடிக்கைகள் எல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம்.
நாகப்பட்டினத்தையடுத்த சிக்கலில் உள்ள சிங்கார வடிவேலனிடம் (முருகனிடம்) வேல் வாங்கி திருச்செந்தூரிலே சூரபத்மனை முருகன் வதம் செய்தானாம். கந்தசஷ்டி என்று சொல்லி முருகனுக்காக ஆறு நாள் விரதம் இருந்து ஆறாவது நாள் முருகன் இருக்கும் கோயில்களில் அசுரனை முருகன் வேல் கொண்டு தாக்கி அழிப்பதுதான் சூரசம்ஹாரம் என்று சொல்லப் படுகிறது.

இதற்காகக் கூறப்படும் கதைகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை துக்கடாக்களாக இருக்கும்.

சிவனின் மாமனாராகிய தட்சன் யாகம் ஒன்றை நடத்தினானாம். தன் மகள் பார்வதியையும், மருமகன் சிவனையும் யாகத்திற்காக அழைக்க வில்லையாம். ஆனால் மற்ற மற்ற கடவுள்களையும், தேவர்களையும் அழைத்துத் தடபுடலாக யாகத்தை நடத்தினானாம். கோபம் கொண்ட சிவனும், பார்வதியும் அந்த யாகத்தை அழித்து விட்டார்களாம். (அவமதிப்பு - கோபம் - அழிப்பு - இவைதான் கடவுள் சங்கதிகளா? இவற்றில் உயர்ந்த ஒழுக்கம், முன்மாதிரியான குணங்கள் ஏதாவது இருக்கின்றனவா?) மகளாகிய பார்வதி ருத்ரகாளியாகவும், மருமகனாகிய சிவன் வீரபத்திரனாகவும் உரு கொண்டுதான் அந்த யாகத்தை அழித்தார்களாம். அதோடு விடவில்லை. மாமனாருக்கே சாபம் கொடுத்தான் சிவன். நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக - மறுஜென்மத்தில் உனக்கு அசுர குணங்கள் ஏற்படுவதாகுக. உன்னை அடக்க என்னில் பிறந்த ஒரு சக்தி வரும். என் மகனாகிய சுப்பிரமணியன்தான் அந்த சக்தி - அவன் உன்னை வதம் செய்வான் என்று சிவன் சாபம் கொடுத்தானாம். சூரனின் உடலை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை தனது வாகனமான மயிலாகவும், இன்னொரு பகுதியினை சேவலாக்கி தனது கொடியாகவும் ஆக்கிக் கொண்டான் முருகன்.

என்று புராணங்களையும், தல புராணங்களையும் எந்தக் காலத்திலோ அறிவுக்குப் பொருந்தாத வகையில் கிறுக்கியவற்றிற்கெல்லாம் கோவில் வடிவம் கொடுத்து இப்படி ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் என்றும், தேர் என்றும், திருவிழா என்றும், காவடி என்றும் முழுக்கு என்றும் மக்களின் அறிவை மழுங்கடித்து அவர்களின் உழைத்துச் சேர்த்த பொருளையும், பயனுள்ள பொழுதையும், உழைப் பையும் சுரண்டி மக்களின் சிந்தனா சக்தியைச் சிதறடித்து ஒன்றுக்கும் உதவாத மவுடிகளாக மாற்றுவதற்குச் செய்யப்பட்டவை தான் இந்த ஏற்பாடுகள்.

இந்தக் கதைகளை ஊசி முனை அளவுக்காவது நம்பும்படியாக ஏதாவது இருக்கிறதா? இவற்றை நம்புவதால், சூரசம்ஹாரத்தைப் பார்ப்பதற்காக செலவு செய்வதால் நமக்கு ஏற்படப் போகும் பலாபலன்கள் என்ன? ஏற்கெனவே பலன்கள் ஏற்பட்டுள்ளனவா? இப்பொழுதாவது ஏற்பட்டு வருகிறதா? பக்தர்களின் வறுமை ஒழிந்ததா? நோய் - நொடிகள் அகன்றனவா? நிம்மதியான வாழ்க்கை தான் அவர்களுக்குள் கிடைத்ததா? குறைந்தபட்சம் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் இவற்றிற்காவது ஏதாவது பயன் உண்டா? கந்தபுராணத்திற்கு விஞ்சிய புராணம் வேறு எந்தப் புராணத்திலும் கிடையாது என்று பக்தர்களே கூறும் அளவுக்குத்தானே அதன் யோக்கியதை அமைந்திருக்கிறது. அதுவும் கந்தன் என்று கூறப்படும் அந்தச் சுப்பிரமணியனின் பிறப்பு ஆபாசக் கடலாக அல்லவா இருக்கிறது? நூறு தேவவருட காலம் சிவன் தன் மனைவியைப் புணர்ந்தான் என்று சொல்லுவ தெல்லாம் எத்தகைய அருவருப்பு! ஒரு தேவ வருடம் என்றால் 365 ஆண்டுகள்; நூறு தேவ வருடங்கள் என்றால் 36500 ஆண்டுகள் மனைவியைப் புணர்ந்தான் என்பது எவ்வளவு காட்டு விலங் காண்டித்தனம்! பக்தியில் புத்தியைப் பறி கொடுப்பதால் இத்தகைய ஆபாசங்களையும், அருவருப்புகளையும் கண்ணில் ஒத்திக் கொள்கிறார்களே - இது நியாயமா - சரியா? சிந்திப்பீர்!

-------------------"விடுதலை” தலையங்கம் 31-10-2011


30.10.11

பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்!


உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் - பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஒரு அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. இந்த அறிவை மனிதன் மனிதனிடம் நடந்து கொள்ளும் அன்புக்கும், உதவிக்கும் பயன்படுத்தாமல், இன்னொருவனுக்குக் கேடு செய்வதிலும், திருடுவதிலும், வஞ்சிப்பதிலும் செலுத்தக் கூடாது என்றுதான் சொல்லுகிறோம். ஏன், மேலும் மேலும் வற்புறுத்துகிறோம் என்றால் மனிதன் இந்தக் கேவலமான நிலைமையிலிருந்து மீண்டு மனித சமுதாயத்திலே மனிதனாக மனிதனுக்கு மனிதன் தோழனாக வாழ வேண்டுமென்றே ஆசைப்படுகிறதனால்தான். ஆகையால் நாங்கள் சொல்வது எல்லாம் பழைய மூடப் பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டொழியுங்கள். தங்கள் தங்கள் புத்தியைக் கொண்டு, அறிவைக் கொண்டு சுதந்திரமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கூறுகிறோம். எந்தக் கடவுளாலும், எந்த சாஸ்திரத்தினாலும், எந்த மதத்தினாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு மனி தனுக்கு ஒழுக்கமும், நேர்மையும் தானாக வந்துவிடாது. நான் அவற்றைக் குறை கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே அவை எல்லாம் நம் சமுதாயத்திற்கோ, நம் மக்களுக்கோ உயர்ந்ததில்லை. அவ்வளவும் புரட்டும், பித்தலாட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அதைப் பின்பற்றக்கூடியவர்கள் எப்படி ஒழுங்காக வாழ முடியும்?

இதைப்போல்தான் இன்றைய அரசாங்கமும் இருக்கிறது. சும்மா சொல்லவில்லை.

எனக்கு வயது 72.

என்னுடைய 60 வருட அனுபவத்தைக் கொண்டு தான் சொல்லுகிறேன். ஆகவே, இன்றைய நிலைமையில் எந்த மனிதனும் யோக்கியமாக நடந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த ஸ்தானத்திலும், எந்தப் பதவியிலும் எவன் இருந்தாலும் லஞ்சம் வாங்கித்தான் தீரவேண்டு மென்ற மனப்பான்மை பரவி விட்டது. இன்றைய நிலையில் நான் கூட ஒரு பதவியில் இருந்தால் வாங்கித்தான் ஆக வேண்டும். என் வரைக்கும் 100, 1,000 கணக்குக்கு ஆசையிருக்காது. காரணம்? இது எனக்கு மட்டமானது. ஆனால், லட்சக்கணக்கில் ரூபாய் வருமானால் நானும் ஒரு கை பார்க்கத்தான் செய்வேன். ஏன்? இதுதான் இன்றைய தின மக்கள் இயற்கை நிலைமை, மூடக் கொள்கை. ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், சர்க்காருக்காக, பாவ புண்ணியத்துக்காக நடந்து கொள்ள வேண்டும், சமுதாயத்திற்காக நடந்து கொள்ள வேண்டுமென்பதும் இனிமேல் முடியாத காரியம். நாம், இன்னொருவனுக்கு மோசம் செய்தால் அவனுடைய வயிறு எரிகிற மாதிரிதான், நமக்கும் இன்னொருவன் மோசம் செய்தால் வயிறு எரியும் என்று நினைக்க வேண்டும். ஆகவே, நாளுக்கு நாள் திருந்தி ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமானால் நாம் நல்ல காரியங்கள் செய்யாவிட்டாலும், கெட்ட காரியங்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற தன்மை ஏற்படத்தக்க காரியங்கள் கண்டு பிடித்து அதற்கேற்ற காரியம் செய்ய வேண்டும். அதுதான் இனி மனிதத் தொண்டாக மாற வேண்டும். ஆகவே, இனியும் மக்கள் தொட்டதற்கெல்லாம் சட்டம் மீறுவதோ, இல்லாமல் அதிகாரிகளையும் சர்க்காரையும் எதற்கும் மீறும் உணர்ச்சி இல்லாமல், வரவேண்டுமென்று சொல்லுகிறேன். எதற்கும் பயந்து அல்ல! இதுதான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் அமைதிக்கும், நல்லாட்சிக்கும் பயனளிப்பதாகும்.

------------------24.8.1951 அன்று கள்ளக்குறிச்சி அருகே கிராமம் என்னும் ஊரில் (வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போர் தோழர்களுக்கு பாராட்டு) தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - "விடுதலை" 31.8.1951.

கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?


பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?

சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும் விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.


ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.


விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாக போகக்கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம். மற்றும் தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீது பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.


ஆதாரம்: வால்மீகி இராமாயணம்
(கடைசி வரி..... எவ்வளவு காட்டுமிராண்டிச் சிந்தனை! இராமாயணத்தை படித்தால் இந்தப் புத்திதான் வரும்)

நாட்டை மன்னர்கள் மாறி மாறி ஆள்கிறார்களே, ஏன் தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாத ஒரு சங்கதியை இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில் (அய்ப்பசி 14 - அக்டோபர் 31) தெரிந்து கொள்ள வேண்டாமா?

நவராத்திரி முடிந்தது, தீபாவளியும் கழிந்தது அடுத்து சுரண் டலுக்கு வழி தேட வேண்டாமா?

வந்துவிட்டது - ஆம், வந்து விட்டது கந்தசஷ்டி! கந்தன், சுப்பிரமணியன், முருகன், ஆறுமுகன் எல்லாம் ஒரு பொருள் பன்மொழிகள்!

ராமநவமி, கிருஷ்ணன் அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி - அற்றவன் கடவுள் பிறப்பு, இறப்பு என்று சொல்லிக் கொள்வார்கள்; ஆனால் கடவுள்களின் பெரிய ஜாபிதா அதற்குப் பிறந்த நாள்கள் - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.

வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?

சிவனை வேண்டினர் - கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண் டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் நடந்ததாம்.

இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறை யிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.

அதன் விளைவு வீரியம் ஆறாகப் பெருக்கெடுத்ததாம். தேவர்கள் கைகளில் ஏந்தி குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீபுரத்தில் உள்ள கரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.

மீதி வீரியத்தை கங்கையில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற்றாம்.

ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன் றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் (தலைகள்) கைகள் பன்னிரெண்டாகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம்.

இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரியம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலிருந்து பிறந்ததால் ஸ்கந்தன் - கந்தன் என்று பெய ராம்.

இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண்டாட வேண்டும்.

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர் சோலை ஆகிய இடங்களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை பக்தர்களிடமிருந்து!

அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான் - தனக்குரிய வீரியத்தைப் பூமி தேவி தாங்கியதால் பார்வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.

உன்னை மாறி மாறி அரசர்கள் ஆளக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?

--------------------”விடுதலை” 29-10-2011


29.10.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -16

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (16) பெரியாரைப் பற்றி சோ எழுதியது என்ன?9.7.1953 நாளிட்ட விடுதலை தலையங்கத்தின் தலைப்பு ஆரியத்தின் அற்பப் புத்தி! என்ன அந்த அற்பப் புத்தி? கோபால்சாமி அய்யங்கர் இறந்து போன போது அரைப் பத்தி அளவுக்கு அனுதாபச் செய்தி வெளியிட்ட தமிழ்நாட்டு ஆரியத் தலைவர் ஒருவர் உலகத் தலைவர்களில் முதலிடம் பெற்றிருந்த ஸ்டாலின் இறந்தபோது, சாவது உலக இயற்கைதான். இவருக்குப் பின்னால் மற்றொருவரும் இவர் இடத்துக்கு வருவார் என்று ஒரே வரியில் கூறி முடித்துக் கொண்டார். இதனால் ஸ்டாலினுடைய புகழ் குறையவில்லை. இப்படிக் கூறியவரின் சிறுமைக் குணம்தான் வெளிப்பட்டது. 3-ஆந்தரம் - 4 ஆந்தரமான பார்ப்பன ருக்காக அனுதாபத் தலையங்கம் எழுதுகின்ற ஹிந்து பத்திரிகை பனகல் அரசர், கே.ஆர். சண்முகம் போன்ற திராவிட இனத் தலைவர்களுக்கு ஒரு வரி கூட எழுதவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்து போன்ற ஏடுகள் கூட தனியாருடையவை. அவை எப்படியோ போகட்டும். அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலி நிலையம் எப்படி நடந்து கொண்டது? ஆல் இண்டியா ரேடியோ அல்ல; ஆல் அய்யர் அண்ட் அய்யங்கார் ரேடியோ நிலையம் என்றுதான் திராவிடர் கழகத்தவர்கள் அழைப்பது வழக்கம். அதைப் பற்றியும் அன்றைய விடுதலை (9.7.1953) அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தெலுங்குப் பார்ப்பனர் - முதியவர் - இறந்து போனார். அவர் ஒரு மருந்து வியாபாரி. கேசரி குடீரம் என்ற மருந்து விற்றுப் பெரும் பொருள் திரட்டியவர். இவரைப் பற்றி சென்னை வானொலி நிலையத்தார் செய்தி பரப்பியதுடன் வரலாற்றுக் குறிப்பு, பாராட்டுக் குறிப்பையும் ஒலி பரப்பினார்கள். இவருடைய மருந்தின் பெயரால்தான் இவர் பெயர் மக்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்டவர்க்கு - பார்ப்பனர் என்ற ஒரே காரணத்தால் - வானொலி இலாகாவில் விளம்பரம்! இதேபோல் அண்மையில் காலஞ் சென்ற டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி யாரைப் பற்றியும் சென்னை வானொலி நிலையத்தார் தனிப்புகழ் பாடினர். ஆனால் மறைமலையடிகள், ஆர்.கே.சண்முகம், எஸ்.முத்தய்யா (முதலியார்) போன்ற மாபெரும் தலைவர்கள் மறைந்தபோது வானொலி யில் எந்தப் பாராட்டுரையும் வழங்கப் படவில்லை. ஆர்.கே.எஸ். மரணம் பற்றி 2-3 வாக்கியங்களே கூறினர். இவர் காங்கிரஸ் கட்சிப் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். அக்கட்சியின் முதலாவது மந்திரிசபை டில்லியில் ஏற்பட்ட போது இவர் எதிர்க்கட்சித் தலைவராயிருந்துங்கூட தனித்திறமை கருதி நிதியமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர். அகில இந்தியப் புகழ் மட்டுமல்ல; சர்வதேசப் புகழும் பெற்றவர். நிர்வாகத் துறைகள் பலவற்றிற்குத் தலைமை தாங்கித் தனித் திறமை காட்டியவர். கலாச்சாரத் துறையிலும் தமிழிசைக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக சி.ஆர். கல்கி யார் போன்ற ஆரியத் தலைவர்களின் புகழுரைகளுக்கு உரிமையாயிருந்தவர். திராவிட இன உணர்ச்சியைக் காட்டிக் கொள்வதே வெட்கம் என்று கூடக் கருதியவர். இப்பேர்ப்பட்ட ஒருவருக்கே வானொலி நிலையத்தில் இருட்டடிப்பு நடக்கிறது என்றால் மற்ற திராவிடத் தலைவர்களின் கதி என்னவாகும்? என்று தலையங்கம் தீட்டியதே விடுதலை. இவற்றையெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்கள். உலகத் தலைவர் தந்தை பெரியார் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஒரு ஏடு ஹிந்து பார்ப்பன ஏடுதானே! தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான சி.பி.ஆதித்தனாரின் மறைவுச் செய்தியை உள்ளே மறைவுச் செய்தியாக வெளியிட்ட ஹிந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வானான பாலக்காட்டு மணி அய்யர்வாளைப் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்ததே! அன்னை மணியம்மையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மறைவுச் செய்திகளை மரணம் அடைந்தோர்க்கென்று ஹிந்து ஏட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்தியில் (ளிதீவீணீக்ஷீஹ்) வெளியிட்டு இருந்தது என்றால், இவற்றை விட பார்ப்பனத் திமிர் பிடித்த கூட்டத்தின் துவேஷம் என்ற ஆலகால நஞ்சுக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இவ்வளவு இருந்தும் இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ்நாட் டில் ஒரு அதிசயம் நடந்திருக்கின்றது. அதுதான் துக்ளக் இதழ் தந்தை பெரியார் பற்றி தீட்டிய தலையங்கம் ஆகும். சோவின் சிந்தனைகளையும் மீறி அந்த இடத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார் என்று தான் இதற்குப் பொருள். இதோ சோ எழுதுகிறார்:

திரு ஈ.வெ.ரா.

இவர்களா பெரியார்கள்? என்று பலரைப் பார்த்து, திரு ஈ.வெ.ரா. கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது . . . ஜாதி, மத வித்தியாசங்களின் அடித் தளத்தையே ஆட்டி வைத்து சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அடித்து நொறுக்கும் பணியில் ஈடுபட்டதற்காக இவரைப் பாராட்டத்தான் வேண்டும். . . அர்த்தமற்ற இந்த ஜாதி, மத பேதங்கள் என்ற வறட்சி நிலையில் அகப்பட்டுத் துவண்டு கொண்டிருந்த தமிழ் நாடு என்ற பயிர் மீது ஈ.வெ.ரா. என்ற பருவ மழை கொட்டியது . . . தன் மனத்திற்கு அவ்வப்போது சரியென்று படுவதை எந்த மேடையிலும் துணிவாகப் பேசிவிடும் இவர் நேர்மை, பொது வாழ்வில் சஞ்சரிக்கும் மற்றவர்களிடம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். 1-.6.-1970 துக்ளக்கில் பெரியார் பற்றி எழுதியிருந்த கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைத்தான் மேலே கொடுத்திருக்கிறோம்... அந்தக் கட்டுரையிலும் சரி, மற்ற பல சந்தர்ப்பங்களிலும் சரி, பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடைய சில செயல்களை நாம் விமர்சனம் செய்திருக்கின்றோம். அர்த்தமற்றவையாகவும், பல சமயங்களில் அவருடைய பேச்சுக்கள் வேதனையளிப்பதாகவுமே இருந்தன என்பதே நம் அபிப்பிராயமாக இருந்தது. அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப் போக முடியவில்லை என்றாலும் ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை என்று அலையும் அரசியல் வாதிகளே எங்கும் பரந்து கிடக்கும் சூழ்நிலையில் திரு.ஈ.வெ.ரா. மட்டும் தன் கொள்கைகளில் கடைசி வரையில் அசையாது பிடிப்புக் கொண்டிருந்தார். ஊருக்குத் தகுந்தாற்போல், மேடைக்குத் தகுந்தாற் போல், வந்திருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற் போல் தங்கள் பேச்சுக்களைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் பேச்சாளர்கள் நிறைந்த நம் நாட்டில், எங்கு பேசினாலும் சரி, எவர் வந்தாலும் சரி, தனது கருத்தை மண்டையிலடித்தாற் போல் கூறும் துணிவு கொண்டி ருந்தவர் திரு. ஈ.வெ.ரா. இந்த நாட்டில் பெருவாரியான மக்கள் ஒன்று தனக்கென எந்தவித அபிப்பிராயமும் இல்லாதவர்கள் ; இரண்டு அப்படியிருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சுபவர்கள். அப்படிப்பட்ட . . . . திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் அவர். ஒரு தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் இவர் மற்றவர்களுக்குக் காட்டிய மரியாதையைக் கேள்விப் பட்டால் வியப்பு மேலிடுகிறது! வயது, அந்தஸ்து, பிறப்பு இந்த மாதிரி அடிப்படைகளிலெல்லாம் சற்றும் வித்தியாசம் பாராமல், எந்த மனிதனையும் மனிதன் என்று உணர்ந்து மதிப்பதிலும், மரியாதை அளிப்பதிலும் இவருக்கு நிகராக யாருமே இல்லை யென்று கேள்விப்பட்டிருக்கிறோம். அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் யாரிடமும் திரு.ஈ.வெ.ராவுக்கு வெறுப்பு உணர்ச்சி இருந்தது இல்லை.

--------------------------15.-1.-73 துக்ளக் இதழிலிருந்து ஒரு பகுதி. . .

இராஜாஜியுடன் இவருக்கு இருந்த அபிப்பிராய பேதங்கள் ஆயிரமாயிரம். அவரைப் பற்றி இவர் தாக்கிப் பேசிய மேடைகள் கணக்கில் அடங்காது. அவர் ஆஸ்திகர். இவர் நாஸ்திகர். இப்படி அவருக்கும் இவருக்கும் மிகுந்த மனவேறுபாடுகள்தான் எத்தனை?
ஆனால் இராஜாஜி இறந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரியர் ஈ.வெ.ரா. துடித்த துடிப்பையும், உடல் நலக் குறைவு இருந்தும் இடுகாட்டிலும் வந்து அமர்ந்து இராஜாஜியின் அந்திமக்கிரியைகள் முடியும் வரை அங்கேயே இருந்து, தாங்க முடியாத துயரத்தை இவர் குழந்தை போல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந் ததையும் நேரில் கண்டவர்கள் கூறும் போது மெய் சிலிர்க்கிறது. நட்பிற்கு உதாரணம் வகுத்த இவருக்கு, இந்த சமயத்தில் மரியாதை செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நாட்டில் குறைந்து கொண்டே வருகிறார்கள். போலியாகவும், மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகத் தனது மனச்சாட்சியை அமுக்கிக் கொண்டும் வாழ்பவர்களுமே நிறைந்து காணும் இக் காலத்தில், உண்மையாக வாழ்ந்த ஒரு சிலரில் திரு.ஈ.வெ.ராவும் ஒருவர். அவருடைய கொள்கைகள் சிலவற்றிலும் அவருடைய செயல்கள் பலவற்றிலும் நாம் பல முறை குற்றங்கண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் மீண்டும் சுட்டிக் காட்ட இது நேரமில்லை. ஆனால், அவருடைய எண்ணங்களின் நேர்மையில் நாம் குற்றம் கண்டதும் கிடையாது; காண வும் முடியாது. சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத சில காரியங்களை அவர் செய்திருக்கிறார் என்று கூறும்போது, சமூகத்திற்கு நன்மையையும் செய்திருக்கிறார் என்று ஒப்புக் கொண்டே தீர வேண்டும். ஜாதி துவேஷங்கள் வெகுவாகக் குறைந்த பிறகும் அதைப் பற்றி விடாமல் பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட, 95 வயதாகியும் கடைசிவரை புத்தி தீட்சண்யத்துடன் அவர் வாழ்ந்தது இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு. மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்று கூறி மக்கள் மனத் திருப்தி பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. தெய்வங்களிடம் கூட நம்பிக்கை வைக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வந்தவர் திரு. ஈ.வெ.ரா. தெய்வ நம்பிக்கை கூடாது என்று அவர் கூறியதை நம்மால் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் தெய்வங்களின் அளவிற்கு, அருகதையற்ற மனிதர்களை உயர்த்தி, அந்த மனிதர்களிடம் மூடநம்பிக்கை வைத்து விடுவது என்ற நம் நாட்டு மக்களின் மடமை என்றாவது நீங்கினால் அன்றுதான் பெரியாரின் வாழ்க்கை இலட்சியம் ஓரளவாவது ஈடேறியிருக்கிறது என்று அர்த்தமாகும். அது என்றாவது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன், மறைந்த திரு.ஈ.வெ. ரா.வின் துணிவிற்கும் நேர்மைக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.

----------------------------(துக்ளக் 1-.1.-1974)

என்னதான் வலிந்து குறை சொல்லி எழுதி இருந்தாலும் தந்தை பெரியார் அவர்களின் சீலமிக்க கொள்கையினையும், நேர்மையையும், கொழுந்து விட்ட அவர்தம் பண்பாட்டின் நீட்சியையும் சோ போன்ற பார்ப் பனர்களே புறந்தள்ளிவிடவில்லை. இன்றைக்கு அதே துக்ளக்கில் தந்தை பெரியார் அவர்களையும், அவர் கண்ட இயக்கத்தையும், இயக்கத் தலைவர்களையும் மானாவாரியாகக் கொச்சைப்படுத்தி சேறு வாரி இறைத் தாலும், அவை கதிரவனைக் கண்டு சத்தம் போடுவதாகவே கருதப்படும்.


(பார்ப்போம்)

------------------------------------கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 29-10-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

28.10.11

திராவிடர் - தமிழர்

திராவிடர் - தமிழர் - தந்தை பெரியார்

ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்த மற்றவை என்பது நமது கருத்தாகும்.

இதை மறந்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்தமுள்ளதென்றும் அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடைய தல்ல வென்றும் நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களேயானால், அப்படி இருந்தாலும் அவை அந்த (அதாவது மக்கள் இன்றைய அறிவுபெறாத அந்த) காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித் தள்ள வேண்டியவைகளோயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.

அதற்காக வேண்டியே, அதாவது அவைகளை நம் மக்கள் உணரவேண்டு மென்பதற்கு ஆகவே, அவைகள் பற்றிய ஆதாரங்களை ஆரியர்களாலும், ஆரியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களது மதம், கடவுள்களுக்கும் அடிமைப்பட்ட நம் பண்டிதர்களாலும், கற்பிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்தே சில எடுத்து அடிக்கடி குடிஅரசுவில் எழுதி வரப்படுகிறது.

அந்தப்படி இவை சம்பந்தமாக குடிஅரசுவில் எழுதி வந்ததும் வருவதுமான சேதிகள் கண்டிப்பாக ஆரியர் களால் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆதாரங்களி லிருந்தும், அவைகளை ஆரியர்களாலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்புகளிலிருந்தும், மற்றும் அவற்றை நம் தமிழ்ப் பண்டிதர்களால் மொழி பெயர்த்தோ அல்லது ஆரியர் மொழிபெயர்த்ததைக் கவிகளாகப் பாடிய கவிகளிலிருந்தோ எடுத்துக் கையாளப்படுபவைகளேயல்லாமல் கற்பனையாக எந்தச் சங்கதியும் குறிப்பிடப்படுவதில்லை என்பதை மறுபடியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறோம்.

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ அவர்களது பழக்க வழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. அக்கால மானாபிமானத்துக்கும், இக்கால மானாபிமானத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே ஆரியர்கள் சகல துறைகளிலும் அக்காலத்திய ஆரியர் வாழ்வில் பூரண சுயேச்சையோடு எவ்விதக் கொள்கையும் இல்லாமல் அவரவர்கள் இச்சைப்படி விலங்குகள் போல் வாழ்ந்து வந்ததாகவே தெரிகிறது. அதனால்தான் வள்ளுவர்,

தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்

என்று பாடினார்போலும். (தேவர்-ஆரியர்)

நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எது மேன்மையாகக் கருதப்படுகிறதோ அதைத் தங்கள் பழக்கவழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக்கூடும் என்றாலும் வேத புராண இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றி-லிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.

நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றை தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக் கொண்டால் அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி மூடிவைத்துத் தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம்.
அந்தக் காலத்தில் கணவன் மனைவி என்கின்ற கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் இன்று இருப்பதில் 100 இல் ஒரு பங்கு இருந்ததாகக்கூடத் தெரியவில்லை.

அந்தக் காலத்து நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நல்லெண்ணம், பிறநலம் பேணுதல் முதலிய நற்குணங் களும் இக்காலத்தவைகளுக்கு மிகமிக மாறுபட்டதும் தாழ்ந்ததுமாகவே இருந்து வந்திருக்கிறது.

அந்தக்கால ஆரியர்களுக்கு ஏதாவது ஒரு சமயம் இருந்திருப்பதாகக்கூடத் தெரியக் காணுவதில்லை. அவர்களுக்கு அப்போது ஏதாவது ஒரு கடவுளோ, பல கடவுள்களோ இருந்திருந்ததாகவும் தெரிய முடியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச பூதங் களையும், சூரிய சந்திரன் முதலியவைகளையும் மனி தனைப் போல் உருவகப்படுத்திக் கொண்டு தங்களுக்கு வேண்டியதை நல்கும்படி வேண்டிக்கொண்டு இருந் திருக்கின்றார்கள். அப்படி வேண்டியிருப்பதாலும் ஒரு கவனிக்கத்தக்க சமயமென்ன வென்றால், தங்களுடைய ஒழுக்க ஈனங்களையும் மோசடிகளையும் அவைகளுக்கும் கற்பித்து இருக்கின்றார்கள்.
ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத் தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபசாரம், மது, மாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்கள்) இழிவாய் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதும் ஆன காரியங்களையே கொள்கையாகவும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கிறார்கள்.

வேதத்திலும் அதன்பின் ஏற்பட்ட வேதசாரமான புராணக் கதை, காவிய இதிகாசங்களிலும் பார்த்தால் தகப்பன்- மகள், அண்ணன்- தங்கை என்கின்ற பேத முறைகூட இல்லாமலும், மிருகம்- மக்கள் என்கின்ற இன பேதம்கூட இல்லாமலும், ஆணும் ஆணுமாகவும் இன்னமும் எத்தனையோ விதமாக இயற்கைக்கு விரோதமாக சேர்க்கையுடன் இருந்து வந்திருப்பதாகப் பல இடங்களில் காணப்படுகின்றன.

இவைகளையெல்லாம், ஏதோ காட்டுமிராண்டி காலத்துக் கொள்கை என்றும், எந்த சமூகத்திலும் மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்றும், ஒரு விதத்தில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றாலும், மேற்கண்ட விஷயங் களைக் கொண்ட ஆதாரங்களை இன்று ஆரியரும், தமிழரும், தங்கள் தங்கள் சமய ஆதாரங்கள் என்றும் தங்களால் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டிய புண்ணிய சரித்திரங்கள், புண்ணிய காரியங்களில் என்றும் பிரசங்கித்துப் பிரச்சாரம் செய்கின்றார்களே இதற்கு என்ன சமாதானம் என்பது நமக்கு விளங்கவில்லை.

சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்பிரமணியன், இராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களைப் பற்றிப் பிறகு யோசிப்போம். அக்கினி, வாயு, வருணன் முதலிய பஞ்சபூதக் கடவுள்களைப் பற்றியும் பிறகு யோசிப்போம். இந்திரன் என்கின்ற கடவுளைப் பற்றி ஆரியர்கள்தானாகட்டும், தமிழர்கள் தானாகட்டும், அக் கடவுள்களின் கதைகளையும், பண்டிகைகளையும் எதற்கு ஆக கொண்டாட வேண்டும் என்று கேட் கின்றோம்.

இந்திர விழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர தமிழர்களும் ஆதி காலத்தில் இருந்தே இந்திர விழாவைக் கொண்டாடி இருக்கின்றார்கள் என்றும் ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்றும் தெரியவருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர சோழ பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.

இன்றைய அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், கலைவாணர்கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும், ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார்களோ அப்படித்தான் பழங்கால தமிழர்கள் உலகத்திலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய இன்று தமிழர் களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படியான தமிழன் ஒருவனைக் கூட அக்காலத்தில் இருந்ததாகக் காணமுடியவே இல்லை.

தமிழர்களுக்கு ஆரியர்வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவை தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ முறையோ இருந்தும் இருந்ததாகச் சொல்லியும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும் பழந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள்.

பெரிய புராணத்தையும், பக்த சீலாமிர்தத்தையும், கந்தப் புராணத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும் அவன் தனித்தமிழர் கொள்கைக்காக இதுவென எதையாவது காட்ட முடியுமா? என்றும் இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னிதியாயிருந்தாலும் அவன் நாஸ்திகனல்லாமல் அதுவும் முழு முழு நாஸ்திகனே யல்லாமல் கடுகளவு நாஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற் கண்ட பெரிய புராணாதிகளையும் அவற்றில் வரும் கடவுளர் களையும், அவர்களது செய்கைகளையும் பாராட்டி வழிபடுகிறவனாக இருந்தால் அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான் என்று கேட்கிறோம்.

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது? தீக்கை எங்கிருந்து வந்தது? பஞ்சாட்சரமேது? முத்திரஸ் தானம், (சமாரட்சனம்) ஏது? அஷ்டாட்சரம் ஏது? பஞ்சகச்சம், திருநீறு, திருநாமம் பூச்சுக்கள் ஏது? என்பன போன்ற எத்தனையோ விஷயங்களை கவனித் தால் உண்மைத் தமிழன் எவனாவது இருக்கிறானா என் பதும் விளங்காமல் போகாது.

தமிழனென்று தன்னை சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும் தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள் அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண் டியதில்லை என்றும் கருதிக் கொண்டு தமிழனெனில் பெரியவனாகத் தன்னைக் கருதவேண்டும் என்றிருப்பவர்கள் நம்மீது கோபித்துத்தான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம். இவர் கோபத்தை விட அதனால் ஏற்படும் கேட்டைவிட தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால் இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ள வேண்டி இருக்கிறது.

-----------------------தந்தைபெரியார் - “ குடிஅரசு”, 13.11.1948

27.10.11

வைதீகப் பார்ப்பனர்களைக் காட்டிலும் லவுகீகப் பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள்


கேள்வி: என்னதான் அறிவியல் முன்னேற்றம் கண்டாலும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லையே?

பதில்: தீண்டாமை பிறப்பால் வருவது அல்ல. சுமார் 100 குழந்தைகளை, பிறந்தவுடன் சமூகத்திலிருந்து பிரித்து எடுத்துச் சென்று, ஒரு தீவில் வளருங்கள். தீண்டாமை என்றால் என்ன என்றே தெரியாமல் வளருவார்கள். தீண்டாமை என்பது பரம்பரையாகப் புகட்டப்படும் உணர்வு அறிவியல் முன்னேற்றத்தால் தீண்டாமை ஒழியாது. அரிச்சுவடியில் இருந்து கற்றுத்தர வேண்டிய விஷயம் அது.

- ஆனந்தவிகடன், 26.10.2011

சபாஷ், நல்ல அறிவுரைதான். பரம்பரையாகப் புகட்டப்படும் உணர்வு. தொடக்கத்திலேயே இடிக்கிறதே! தீண்டாமை பிறப்பால் வருவதல்ல என்பது தொடக்கம். அடுத்து தீண்டாமை பரம்பரையாகப் புகட்டப்படும் உணர்வு என்பது இடிக்கிறதே! அது சரி. பரம்பரையாகப் புகட்டியவர்கள் யார்? அதைக் கொஞ்சம் விளக்கி இருக்கக் கூடாதா?

இந்து மத சாஸ்திரங்களும், சங்கராச்சாரியார்களும் தீண்டாமை குறித்து என்ன கூறுகிறார்கள்?

தீண்டாமை க்ஷேமகரமானது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறி இருக்கவில்லையா? (ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள் - இரண்டாம் பாகம்).

அவர் வாக்கைத் தெய்வத்தின் குரல் என்பவர்கள் இந்த ஆனந்தவிகடன் பரபம்பரையினர்தானே!

பஞ்சமர்கள் கிட்டே வரக்கூடாது என்று சொல்லப்படுவதற்குக் காரணம் பரம்பரைப் பரம்பரையாக பிறப்பின் அடிப்படையில் வந்த புனிதமற்ற தன்மையை (Impurity) உலகத்தில் உயர்ந்த வகை சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் அணிமணிகளால் நவீன காலத்திற்கேற்பப் பூட்டினாலும், மிக ஆழமாகப் பதிந்து போன (Originated from the Deep Rooted Contamination) பரம்பரையாக வந்த அந்தத் தீண்டாமையை ஒழிக்கவே முடியாது.

(‘‘The Hindu Ideal’’ - சிருங்கேரி சங்கராச்சாரியார்)

ஞானபீடம் எனும் நாடகத்தை மாலி என்ற பார்ப்பனர் நடத்தினார்.

அந்த நாடகம்பற்றி கல்கி (9.11.2003) ஜெயேந்திரர் போட்ட தடை என்ற தலைப்பில் எழுதியது என்ன?

இதோ!

ஞானபீடம் என்ற ஒரு நாடகம்.

வெகு நாள்களுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸான மேடை நாடகம் பார்த்த மகிழ்ச்சி, ஞானபீடம் பார்த்தபோது! ஜாதிக் கொடுமைக்கு ஆளாகும் நந்தன். இவரது மனைவிக்குப் பிரசவமாகிறது. அதே நேரத்தில் கொடுமைக்கார மிராசுதாரருக்கும் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றி விடுகிறார் நந்தன்!

மாறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்து, நந்தனின் உண்மையான பிள்ளை வேத வித்வானான சங்கரனாகவும், மிராசுதாரரின் உண்மையான பிள்ளை ராஜா அய்.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிடுகின்றனர். ராஜா, தான் காதலிக்கும் கிறிஸ்தவ மேலதிகாரியின் பெண்ணை மணப்பதற்காக, மதம் மாறக்கூடத் தயங்குவதில்லை. இந்தப் பின்னணியில் கிராமத்துக்கு விஜயம் செய்கிற ஒரு மடத்தின் தலைவர், வேதம், சாத்திரம் எல்லாம் படித்து ஞானப்பழமாக இருக்கிற சங்கரனைத் தம் மடத்தின் அடுத்த வாரிசாக எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். நந்தன் இதைக் கேள்விப்பட்டுச் சுவாமிகளிடம் உண்மையைச் சொல்லி விடுகிறார். பிறப்பால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆகிவிடுவதில்லை. அவரவர்க்குரிய அனுஷ்டானங்களை அனுசரித்தே ஆகிறார் என்று சொல்லி, தமது முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுவாமிகள்.

இதுதான் கல்கி கூறும் தகவல்:

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பையனாக இருந்தாலும் வேதம் சாத்திரம் எல்லாம் படித்து ஞானப் பழமாக இருக்கிறான் சங்கரன். அவனை மடத்தின் அடுத்த வாரிசாக நியமித்தது. உள்ளபடியே புரட்சிதான், வரவேற்கத்தக்கது தான், நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் இருப்பதுதான்! சங்கர மடத்தில் அடுத்த வாரிசாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டும் வருகிறோம். ஜாதிப் பிரச்சினைப்பற்றி எங்கு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பினாலும், இந்தக் கருத்தும் வெடித்துக் கிளம்புவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது! அதனுடைய தாக்கமாகக் கூட இருக்கலாம். ஞானபீடம் நாடகம்.

இப்பொழுதுதான் உச்சகட்டமான முக்கிய காட்சி. இந்த நாடகத்தை நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி.

நாடக உலகில் பழுத்த அனுபவம் வாய்ந்த நாடக ஆசிரியர் - இயக்குநர் மாலியும் அவரது குழுவினரும் ஜெயேந்திரரைச் சந்தித்து மன்றாடியுள்ளனர்.

பத்தொன்பது தேதிகள் வாங்கிவிட்டேன்! இனிமேல்தான் செலவழித்த பணத்தை எல்லாம் சம்பாதித்தாக வேண்டும். சபாக்களிடம் நான் எதைச் சொல்லி கேன்சல் பண்ண முடியும் என்றெல்லாம் கெஞ்சி இருக்கிறார் மாலி.

நீங்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாராவது ஸ்டே வாங்க வேண்டி வரும் என்றாராம் ஜெயேந்திரர். கல்கிதான் இதையெல்லாம் சொல்லுகிறது.

தீண்டாமை பிறப்பால் வருவதல்ல என்று வாய் நீளம் காட்டும் ஆனந்தவிகடன் இதற்கு என்ன கூறப்போகிறது?

இந்து மதத்தின் தொழுநோயாக இருக்கக் கூடிய இந்தத் தீண்டாமை குறித்த கருத்து இந்து மதத்தின் மேல் மட்டத்திலிருந்து தொடங்கப்படவேண்டும். மூலத்தைவிட்டு விட்டு நிழலோடு விளையாடிப் பார்க்கிறது ஆனந்தவிகடன்கள்.

நாளைக்கே ஒரே ஒரு வரியை விகடன்களும், கல்கிகளும் எழுதட்டுமே பார்க்கலாம் -

மாலி நாடகக் கருத்தை வலியுறுத்தி எழுதுவார்களா?

இந்து மதத்தைச் சேர்ந்த, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்து சாஸ்திரங்கள், வேதங்களைக் கற்றுத் தேர்ந்து, நல்ல பயிற்சி பெற்று ஒழுக்கமுடன் வளரும் எவரும் சங்கராச்சாரியார் ஆகலாம், இந்துக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று ஒரு வரி எழுதுவார்களா?

எழுதமாட்டார்கள் - காரணம் ஆனந்தவிகடனானாலும், கல்கியானாலும், துக்ளக் ஆனாலும் அவர்களுக்கு இருக்கும் பிறவி ஆதிக்கத் திமிரை விட்டுக் கொடுக்க மனசு வராது - வரவே வராது.

ஆனாலும், அதிமுற்போக்குத்தனத்தின் உச்சத்தில் ஊஞ்சலாடுவதுபோலக் காட்டிக் கொள்வார்கள் - ஆனந்தவிகடன் கேள்வி - பதில் அதனைத்தான் காட்டுகிறது.

ஆனால், அவர்கள் உள்ளத்தில் மட்டும் அந்த ஆரிய சனாதனத்தின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு!

வைதீகப் பார்ப்பனர்களைக் காட்டிலும், இந்த லவுகீகப் பார்ப்பனர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று தந்தை பெரியார் மட்டுமல்ல அண்ணல் அம்பேத்கரும் கூறியிருக்கிறாரே!

----------------------- “விடுதலை” 27-10-2011

துக்ளக் சோ வின் சொத்தை வாதம்கேள்வி: அரசு அலுவலகங்களில் செய்யப்படும் ஆயுத பூஜை போன்ற வழி பாடுகளை சிலர் எதிர்க்கிறார்களே?

பதில்: அரசு அலுவலகங்கள் பொது இடங்கள் என்பதால், அவற்றில் ஒரு மதத்தினருக்கு மட்டும் நம்பிக்கையுள்ள வழிபாடுகள் நடத்தப்படக்கூடாது. ஏனென்றால், நம் அரசு மதச்சார்பின்மைக் கொள்கையாகக் கொண்ட அரசு - என்ற அடிப்படையில் அரசு காரியாலயங்களில் ஆயுத பூஜை போன்றவை கூடாது என்கிறார்கள்.

சரி. தெருக்கள்கூட பொதுச் சொத்துதான். அது ஒரு மதத்தினருடைய சொத்து அல்ல; அரசுக்குச் சொந்தமானது. அதில் ஆயுத பூஜை போன்றவை நடத்தப் படுகின்றனவே, அது பரவாயில்லையா? ஸ்வாமி ஊர்வலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவே? அப்போது தெருக்களின் பொதுத் தன்மை கெட்டுச் சீரழிந்து விடாதா? அது பரவாயில்லையா?

மதச் சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட அரசை நடத்துகிற அமைச் சர்கள், மந்திரிகளில் பலர் கோவிலுக்குச் செல்கிறார்கள்; சிலர் மசூதிக்குச் செல்கிறார்கள்; சிலர் சர்ச்சுக்கு செல்கிறார்கள். அதெல்லாம் பரவாயில்லையா? அவர்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில்தான் போகிறார்கள். அமைச்சர்களாகப் போகவில்லை என்றால், அந்த அமைச்சர் என்ற பதவியைக் கழற்றி வைத்துவிட்டா அங்கே செல்கிறார்கள்?

சரி, அதற்கு ஆட்சேபம் இல்லை என்றால், அரசு காரியாலயங்களில் ஆயுத பூஜை செய்பவர்கள், அரசின் சார்பாகவா அதைச் செய்கிறார்கள்? இல்லையே? தமிழக அரசு ஆயுத பூஜை செய்கிறது என்றா அறிவிக்கப்படுகிறது? அப்படியா நடத்தப் படுகிறது? இல்லையே? அங்குள்ள ஒரு சிலர் தங்களுடைய நம்பிக்கையின் படி செயல்படுகிறார்கள். அது பொது இடம், அங்கே அவையெல்லாம் கூடாது என்றால், தெருக்களிலும் அவையெல்லாம் கூடாது.
------------------------- துக்ளக் 26.10.2011

திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளின் வாத(?)த்திறன் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதுமே!

தெருக்களில் நடப்பதெல்லாம் அரசு அலுவலகங்களுக்குள் நடக்கலாம் என்று கூறுகிறார். தெருக்களில் நாய்கள் போகும், பன்றிகள் போகும், நிர்வாண சாமியார்கள் போவார்கள், பைத்தியக்காரர்கள் போவார்கள். அதே போல அரசு அலுவலகங்களுக்குள்ளும் யாரும் போகலாம் என்று கூறுவாரோ!

தெருக்களில்கூட இஷ்டத்துக்கு யாரும் எந்தக் கோயிலையும் எழுப்பக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளதே - அதன்படி பார்த்தாலும்கூட அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்களை மாட்டு வது பூஜை போடுவது என்பதெல்லாம் குற்றச் செயல்கள்தானே.

நடைபாதைக் கோயில் கள் அகற்றப்பட்டிருப்பது குறித்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதி பதிகள் கறாராக உத்தர விட்டார்களே!

அனுமதியில்லாமல் சாலைகளில், நடைபாதை களில் தமிழ்நாட்டில் கட் டப்பட்டுள்ள கோவில்களின் எண்ணிக்கை 77,450 என்றும் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக் கப்பட்டதே! இவற்றை யெல்லாம் வசதியாக மறந்து விடுவாரா திரு வாளர் சோ

நல்ல வேளை பொது வீதிகளில் மனிதன் சிறு நீர் கழிக்கிறான்; அது போல அரசு அலுவலகங்களிலும் கழிக்கலாம் என்று சொல்லாமல் விட் டாரே - அதுவரை க்ஷேமம் மகாக்ஷேமம் தான்!

------------------- ”விடுதலை” 26-10-2011

26.10.11

நரகாசுரன் நாளில் சிந்திப்பார்களாக! ஜெயேந்திர வதம்

ஜெயேந்திர வதம்

தீபாவளி என்றால் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று தொலைக்காட்சிகளில் வாய் திறக்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியின் முகவரி தெரிய வில்லை.

பரவாயில்லை. தொலைக்காட்சிகள் - பாராட்டுகள்; ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியுமா?

திருவாய் மலர்ந்துள்ள சேதி ஒரு நாளேட்டில் வெளிவந்துள்ளது. தீபமும், ஆவளியும் சேர்ந்தது தீபாவளி. தீபங்களுடைய வரிசை, வடநாட்டில் வீடுகளில் தீபங்கள் வரிசையாக ஏற்றி வைப்பார்கள். தீய சக்திகள் எல்லாம் அழிந்து ஞான ஒளி ஏற்படும் நாள் தீபாவளி, கலியுகத்திலே அசுரர்கள் இல்லாவிட்டாலும், அசுர குணம், தீய குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

இன்றுள்ள நிலையில் தர்மம், நேர்மை, நீதி, பொய் செல்லாமை, திருடாமை இவைகள் எல்லாம் மிகவும் குறைந்து விட்டன. நல்லோரைக் காண்பது அரிதாக உள்ளது. காற்றடித்தால் வெகு தூரத்தில் உள்ள மணல் எப்படி அள்ளி வீசிக் கொண்டு வருமோ, அது போல தீயோர் களின் காற்று தற்போது பலமாக வீசுகிறது. நல்லோர்மீதும் இது பட்டு விடுகிறது. அப்படிப்பட்ட துஷ்டதோஷம் உள்ள காற்றை விலக்கி, நல்ல காற்று வேகமாக அடித்து, தீயோர்களையும் நல்வழிப்படுத்த உதவியாக இருக்க வேண்டும்.

எல்லோரும் கோவிலுக்கு சென்று தேவைகளை பிரார்த்திக்கின்றோம். நம் முடைய தேவைகளை பகவான் கொடுக் கிறார். இவைகளை அனு பவித்தபோதும் மேன்மேலும் ஆசைகள் நமக்கு அதிகமாகி வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்வது அதிகமாகிறது.

எனவே பக்தர்கள் கோவிலுக்கு சென்று கீழ்க்கண்டவாறு நல்ல பிரார்த்தனைகளை செய்ய வேண்டும்.

பேராசையைக் கொடுக்காதே, நல்ல புத்தியைக் கொடு, தர்ம மார்க் கத்தில் ஈடுபடச் செய், நல்ல காரியங் களை செய்ய நல்ல புத்தி கொடு, ஸத் சங்கத்தில் ஈடுபாடு கொடு, என் வாழ்க் கைக்கு நல்ல தேவையுள்ள பொருட்களை கொடு இது போன்ற நல்ல பிரார்த்தனை களை இறைவனிடம் செய்ய வேண்டும். தீபாவளி நன்னாளில் ஞான ஒளி, நல்ல புத்தி கிடைப்பதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்த்து சொல்ல இந்த மாஜிக்கு அருகதை உண்டா?

தர்மம், நேர்மை, நீதி, பொய் சொல்லாமை, திருடாமை பற்றியெல்லாம் இவர் பேசலாமா? கோவிலுக்குச் சென்று பக்தர்கள் இந்தத் தீபாவளி நாளில் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம்!

அட பாவிகளா? அந்தக் கோவிலில்தானே (காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில்) அக்கோயிலின் மேலாளர் சங்கரராமன் ஒரு பட்டப்பகலிலே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அந்தக் கொலை வழக்கில்தானே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார் - 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பிகளை எண்ணினார்.


இந்தியன் தண்டனைச் சட்டம் 302, 120 பி,201 (கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை) பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை படிக்கப் பட்டுள்ள ஆசாமி நேர்மை, பொய் பேசாமை பற்றியெல்லாம் கடை வாய் திறக்கலாமா?

ஜெயேந்திரரின் அருள்வாக்கை இன்னொரு முறை வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்.

நெஞ்சார்ந்த பொய்களின் கூட்டுத் தொகைதானே இவை.

குங்குமம் இதழுக்கு பேட்டி கொடுத்தார் ஜெயேந்திர சரஸ்வதி; அதையும் படித்துத் தொலைப்போம்:

கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள்.. யார்மீது தவறு?

பதில்: மனுஷனுக்குப் பேராசை இருக்கிற வரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஏன்னா குறுக்கு வழியில் சம்பாதிக்கணும்னு ஆசைப் படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக் குமே ஆபத்து வருது. ஆனா, ஜனங்க தப்பிச்சி வேறொரு சாமியார் கிட்ட போயிடுறாங்க. இவங்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால இந்த விஷயத்தில் சாமியார்கள் தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கி இருக்க வேண்டும். (குங்குமம் 27.3.1998).

ஆகா, ஜெயேந்திரரின் தொலை நோக்கே தொலைநோக்குதான்.

சாமியார்களில் ஒரிஜினல் சாமியார்கள் என்ன - போலி சாமியார்கள் என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.


பக்தர்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க என்கிறாரே - இப்படி சொன்னவரே ஜெயிலுக்குப் போக வில்லையா? (வேஷம் கலைந்து விட்டதோ!)

இப்பொழுது இருப்பது பெயிலில்தான். ஜெயில் + பெயில் = சங்கராச்சாரியார் 2004- இதே தீபாவளி நாளில்தான் தமிழ்நாட்டை விட்டு வேக வேகமாக தப்பித்து ஓடிய ஜெயேந்திர சரஸ்வதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

ஏழு தீபாவளிகள் ஓடி விட்டன. குற்றவாளிகளான சங்கராச்சாரியார்கள் நேர்மையான முறையில் வழக்கைச் சந்திக்க முடியாமல் சட்டத்தின் சந்து பொந்துகளில் ஓடி ஓடி மறைகிறார்கள்.

நரகாசுரனை ஆரியர்கள் அன்று வதம் செய்தார்கள். வதம் செய்த கூட்டத்தின் தலைவர் பெரியார் சகாப்தத்தில் வதம் செய்யப் பட்டுள்ளார்.

மதவாதிகள் கூறும் நேர்மையின் எடை என்ன? யோக்கியதையின் கனபரிமானம் என்ன? காஞ்சி ஜெயேந்திரரைப் பார்த்தால் போதாதா?

நரகாசுரன் நாளில் சிந்திப்பார்களாக!

-------------- மின்சாரம் அவர்கள் 26-10-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

தீபாவளி பற்றி பாரதிதாசன்

தீபாவளிபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை

மானம் உணரும் நாள்

*நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?*

நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன் என்றவனை அறைகின்றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?

இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்

பன்னு கின்றனர் என்பது பொய்யா?

இவைக ளைநாம் எண்ண வேண்டும்.

எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது

படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?

வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.

ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்

தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்

நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?

என்று கேட்பவனை, 'ஏனடா குழந்தாய்!

உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று

கேட்கும் நாள், மடமைகிழிக்கும்நாள்,**அறிவை

ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.

தீவா வளியும் மானத் துக்குத்

*தீபாவாளி ஆயின் சீ என்று விடுவிரே! *

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

25.10.11

பன்றியுடன் போகம் செய்யும் கடவுள்! தீபாவளிபற்றி சிந்தித்துப் பார்!

பன்றியுடன் போகம் செய்யும் கடவுள்!


வருகுதப்பா தீபாவளி - வழமை போல். நீ என்ன செய்யப் போகிறாய்.

தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால் தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால் தான் திருந்தும்.

ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.
ஆதலால், சாஸ்திரம் சொல்லுகிறது அந்தப்படி செய்கிறேன் என்று நீ சொல்லுவாயானால் நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதனென்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்கு சிறிதுகூட யோக்கியதை கிடையாது.

சாஸ்திரம் பெரியவாள் எழுதினது என்று சொல்லுவாயானால், நீ யாரு? சிறியவாளா? எந்தப் பெரியவாள்? அந்தப் பெரியவாள் காலத்தைவிட முட்டாள்தனமான காட்டு மிராண்டித்தனமான காலத்திலா நீ பிறந்தாய்? போக்குவரத்து சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத நல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்? ஆகவே, அந்தக் காலத்தை விட அந்தக் காலத்து பெரியாரைவிட நீ எந்த விதத்திலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது. ஆதலால் சாஸ்திரம், பெரியவாள், வெகுகாலத்திற்கு முன் ஏற்பட்டது என்கின்ற முட்டாள் தனத்துக்குத் தாயகமாக இருக்கும் பித்தலாட்டத்தில் இருந்து முதலாவதாக நீ வெளியில் வா!

சாஸ்திரத்தைப் பற்றிக் கவலை இல்லை, பெரியவாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள்களால் சொல்லப்பட்டது; உண்டாக்கப்பட்டது என்று சொல்லுகிறாயோ? அப்படியானால் இப்படிச் சொல்லுகிறவனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒருவருமே இருக்க முடியாது என்பதோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக்கிறானே அவனைப் போல் அடிமடையனும் வேறு இருக்க முடியாது என்று சொல்லுவதற்கு தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.

கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள். கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள். யாருக்குச் சொன்னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படியானால், கிறிஸ்துவருக்குச் சொன்னாரா? முஸ்லிமுக்குச் சொன்னாரா? பார்சிகளுக்குச் சொன்னாரா? அவற்றை நம்பாத நாஸ்தி னுக்கு சொன்னாரா? யாருக்குச் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந்தாயா? நீ பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்ன வர்கள் யார்? சொன்னவர்களுக்குச் சொன்னவர்கள் யார்? சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட்டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிருபானந்தவாரி, பண்டிதமணிகள் பிரசங்கங்களுமே போதுமா? இவை களையெல்லாம் யோசித்த பிறகல்லவா சாஸ்திரம் சொல்லுகிறது என்பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன்னார் என்பதையும் நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண்டும். மாடாயிருந்தால் அல்லவா யோசியாமல் ஆம் என்று தலையாட்ட வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டில் உனக்கு இதுகூடவா தம்பி தெரிய வில்லை? சாஸ்திர காலத்தைவிட இன்று கடவுள்கள் அருமை என்று நினைக் கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள்களுடைய அற்புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களிடத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது? பெசண் டம்மை இடம் பேசினார்; காந்தியாரிடம் பேசுகிறார்.

அசரீரியும், சோதனைகளும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும் போது இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன்னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ்திரம் சொன்னேன்; சந்தேகப்படாதீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?

அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயிபாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத்தனை பேர்களில் யாரிடமா வது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?

இவ்வளவு தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலிஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?

ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்து விட்டு உன் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!

கோபம் செய்தாலெமன் கொண்டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்! தீபாவளிகதை பற்றி சுமார் 10 வருடங் களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசய மானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற் கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத் திற்குள் நுழைந்து கொண்டான். தேவர் கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்று விட்டார். இளையவனான இரண்யாட் சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத் திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில்ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.

என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.
விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதார மெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத் தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கி விட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம் சிவன் பத்மா சூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந் தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட் சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானா லும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர் களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண் டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந் தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும் தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திர மிருந்திருந்தால் அது எதன்மீது இருந் திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அது வும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.
இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்த தற்குக் கூலியா? அப்படியேதான் இருக் கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதின தல்லாமல் வேறு என்ன இது? வங்காளத் தில் ஆரியர் வருமுன்பு திராவிடர்கள் தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர் களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லாவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனை கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிட ரல்லவா?

நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண் டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங் கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

-------------- தந்தை பெரியார்- "குடிஅரசு" -கட்டுரை - 07.10.1944

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?


தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று"

- 'தமிழர் சமயம்' என்ற நூலில் தமிழ்ப் பெரும் புலவர், கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை


'தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு, புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை'

- "மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு" என்னும் நூலில் பேராசிரியர் அ.கி.

பரந்தாமனார்


'தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை' (தீபம் - விளக்கு, ஆவலி - வரிசை)

-"சமணமும் தமிழும்" என்ற நூலில் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி '


ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" "ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்.'-

- "தமிழர் மதம்" மற்றும்"வேளாளர் நாகரிகம்" ஆகிய நூல்களில்

தமிழ்க்கடல் - மறைமலை அடிகள்


தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டா டப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படி-யானால் இரணியன், இராவணன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்-களைக் கொன்றதற்கு கொண்டாட்டம் இருக்க-வேண்டும். ஆகவே நரகாசுரனைக் கொன்ற-தற்கும் தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று.

- வாரியார் விரிவுரை விருந்து நூலில் திருமுருக கிருபானந்தவாரியார்.

24.10.11

ஏன் தீபாவளி கொண்டாடுவதில்லை? நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ?

நீங்கள் பார்ப்பனர்களின் தாசர்களா?தீபாவளி நெருங்கி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் பார்ப்பானின் அடிமை, நான் பிராமணியத்தின் தாசானுதாசன், நான் திராவிடர்களின் தொன்று தொட்டு விரோதியான அய்யர் மார்களின் பாதுகாவலன், நான் எனது திரேகத்தில் ஓடும் வீரதிராவிட இரத்தம் சுண்ட காரணபூதனான ஒரு துரோகி என்று பெயரெடுக்கப் போகிறீர்களா? அல்லது நான் வீரத் திராவிடனே; நான், என் சமுகத்தின் நீண்ட நாளைய முட்டாள்தனத்தை மீண்டும் புதுப்பித்து முழுமுட்டாளாக மாட்டேன்; நான், பிராமணிய விஷம் எனது சமுகத்தை அரிக்கக் காரண பூதனாக இருக்கமாட்டேன்; நான் இனியும் திராவிட சாம்ராஜ்யம் உண்டாவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கமாட்டேன் என்று பெயர் எடுக்கப்போகிறீர்களா? என்று தெரிந்து கொள்வதற்காகவே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் தீபாவளிக்கு என்று கேட்க ஆசைப் பட்டோம்.

இத்திராவிட நாட்டில் நமது முன்னோர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வந்த காலத்தில் ஆரியர் குடியேறினர். அவர்களின் தீய பழக்க வழக்கங்கள் திராவிட சமுகத்திற்கு வந்துவிடாது இருக்க அக்கால திராவிட மன்னர்கள் ஆரியரை விரட்டினார்கள்.

அக்காலத்தில் ஆரியர்கள் நமது திராவிடர்களிலேயே சிலரைப் பிடித்து ஏமாற்றி, அவர்கள் மனம் தங்களிடம் ஆசையாக இருக்கும்படிச் செய்யவேண்டியதை எல்லாம் செய்து தம் கையாளாக்கிக் கொண்டு, தங்களை எதிர்த்த திராவிடர்களை ஆரிய சூழ்ச்சியையும், ஏன் திராவி டர்களின் பலத்தையும் ஒன்றாகச் சேர்த்து, எதிர்த்து நமது திராவிட மன்னர்களைக் கொன்றார்கள். இது ஆரியர்கள் எழுதி வைத்த சரித்திரங்களிலேயே இருக்கிறது.

ஆரிய நஞ்சிலிருந்து தன் சமுகத்தைக் காப்பாற்றப் பாடுபட்ட ஒரே குற்றத்துக் காகத்தான் அக்காலத் திராவிட வீரர்கள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர். இதற் காகப் பிராமண சமுகத்தை நாம் கடிந்துகொள்வதில் பிரயோஜனமில்லை. நமது திராவிடர்களில் பலர், புன்சிரிப்புக்கும், புடவை பொன்னாபரணங்களுக்கும் ஏமாந்து போனார்கள்.

ஆனால், நமது முன்னோர்களில் நல்லவர்கள் தீயவர்களால் நயவஞ்சகமாய் அழிக்கப்பட்ட நாள் இது என்றால் இந்நாளை ஆரியர்கள் கொண்டாட வேண்டுமா? திராவிடர்களான நாம் கொண்டாடுவதா? என்பதை எந்தப் படித்தவனும் தன்னை அறிவாளி என்று எண்ணிய எவனும், தன்னை பண்டிதன் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் கொஞ்சமும் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

இதுவரையில் நாம் ஏமாந்து இருந்த நாள் சரி, இன்னும் நாம் கொண்டாடினால் உண்மையில் நம்மைவிடக் கோழைகள், மானத்தை மதிக்காதவர்கள், எவரும் உண்டு என்று சொல்வதற்கில்லை. பதினெட்டாண்டாக இந்நாட்டில், எப்படிப் பிராமணியம் நம்மை அடிமைப்படுத்தியது என்று பேசியாய் விட்டது; எழுதியாய் விட்டது. பிராமணியக் கொடுமையை, ஆரிய அகந்தையை, எடுத்துச் சொன்ன காரணத்துக்காகவும் பிராமணியப் படுமோசத்தை எழுதிய காரணத்திற் காகவும் சிறைப்பட்டும் ஆய்விட்டது.

நீங்களும் பத்தாயிரக்கணக்கான கூட்டத்தில் அய்ம்பதினாயிரக்கணக்கான கூட்டத்தில் ஏன், இரண்டு லட்சம் மக்கள் உள்ள கூட்டத்திலும், நம்மவர்கள் பிராமணிய நயவஞ்சகத்தை எடுத்துச் சொல்லும்போது, கைதட்டி ஆரவாரம் செய்தீர்கள். ஆனால், ஆரியர் அடிமைக் கட்டை நாம் அறுத்தெறிய வேண்டிய தினங்களில் ஏமாந்து போகிறீர்கள்.

சென்ற ஆண்டு இரண்டாயிரம் பெயர்களுக்கு அதிகம் தீபாவளி கொண்டாடு வதில்லை என்று எழுதினார்கள்.

இந்தத் தடவை அந்த எண்ணிக்கை பதின் மடங்காக வேண்டும். இல்லாவிட்டால் பணக்காரனானாலும், பட்டதாரியானா லும் பார்ப்பானின் அடிமை என்பதில் சிறிதும் சந்தேகமற்றவர்களாகவே எதிர் காலத் திராவிட உலகம் உங்களைக் கருதும் என்பதை இன்றே எச்சரிக்கை செய்கிறோம்.


----------------தந்தை பெரியார் "குடிஅரசு' - தலையங்கம் - 20.10.1940

உண்மைத் தமிழ் மக்கள் என்று சொல்லிக்கொள்வோர் தீபாவளி கொண்டாடலாமா?


தமிழர்களும் தீபாவளியும்

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து "தேவர்கள் அசுரனைக்" கொன்றதாகவும் அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும் அதற்கு ஆக மக்கள் அந்த கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வட நாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்ன வென்றால் அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழி நிலைக்கும் தமிழர்களின் முட்டாள் தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.

அதாவது இரண்யாக்ஷன் என்னும் ராக்ஷஸன் ஒருவன் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனை சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியை பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராக்ஷதனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.

அந்த சமயத்தில் அந்த பன்றியை பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.

இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம்.

மற்றும் இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.

நரகாசூரன் விஷ்ணுவை தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்த தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம்.

இதுதான் தீபாவளியாம்.

தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக்கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில்

பூமியை ஒரு ராக்ஷதன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்.

சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதின்மேல் இருந்திருக்கும்?

கடவுளுக்கு சக்தி இருந்தால் பூமியையும் நரகாசூரனையும் "வா" என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?

அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?

அந்த அழகை பார்த்து பூமி தேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத்தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. "நம்" பாரதத்தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர் களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின பாரததேவியும் அரபிக்கடலும் வங்காளக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படி கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம் ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டு மென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறைபிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னம் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அருத்தமாகும்? அப்படித் தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.

ஆகவே பாமர மக்களுக்கு புத்தி இல்லாவிட்டாலும் பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கரஸ்காரர்களுக்கு சுரணை இல்லாவிட்டாலும் மற்ற தமிழ்ப் பண்டிதர்களும் தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக்கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப்பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.

ஹிந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே ஹிந்தியை கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும் மன வேதனையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

-------------- தந்தைபெரியார் -- “குடி அரசு” - மறுபிரசுரம் - 31.10.1937

23.10.11

தீபாவளி கொண்டாடுவோர் சிந்திக்கவேண்டாமா?


தீபாவளி என்றால் என்ன? - தந்தை பெரியார்

புராணம் கூறுவது

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.

10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.

பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?

சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?

எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா?

நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.


வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்து வதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவ தும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

--------------------தந்தைபெரியார் - நூல்: “இந்துமதப்பண்டிகைகள்” பக்கம் 28-31

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர்.

ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தையும், உடலையும் பார்த்து பலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணையுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர்.

ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர்களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு உதவிய துரோகிகளை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

- விடுதலை, 27.10.2005