Search This Blog

4.10.11

நவராத்திரியைக் கொண்டாடுவோரே சிந்திப்பீர்!

இந்த விஜயதசமியை வைத்து இந்தப் பத்திரிகையாளர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே சகிக்கவில்லை!

அப்படியே உருகி உருகி எழுதுகிறார்கள். இந்தப் பத்திரிகை உரிமையாளர்களும், ஆசிரியர் குழுவினரும் இந்தக் கடவுள்களை, கடவுளச்சிகளை அப்படியே நூற்றுக்கு நூறு நம்புபவர்கள் போல நடிக்கிறார்கள்.

ஒரு சிறு தலைவலி வந்தால்கூட ஆஸ்ப்ரோ மாத்திரையை நாடும் இவர்கள், மக்கள் மட்டும் பக்தியில் புத்தியைப் பறி கொடுத்து நாசமாகப் போக வேண்டும் என்கிற அவ்வளவு நல்ல எண்ணம்!

இதே கூட்டம் ஆன்மிகம் என்ற ஒரு பகுதியை வெளியிடும். அதில் பார்த்தால் பகவான் ஒருவனே அவனுக்கு உருவமும், நாமமும் கிடையாது - நம் நெஞ்சுக்குள்ளேயே கடவுள் - அது கோயில்களில் இல்லை; சிலைகளில் இல்லை என்று மூக்கைச் சிந்தி எழுதுவார்கள்.

இவ்வளவையும் 3-ஆம் பக்கத்தில் எழுதிவிட்டு 13-ஆம் பக்கத்தில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி என்று கதை கட்டுவார்கள். தலபுராணங்கள் அள்ளிக் கொட்டுவார்கள்.

இந்தப் படித்த பாமரர்களும் இந்த முரண்பாட் டைப்பற்றி ஒரு கணமும் சிந்திக்க மாட்டார்கள். பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே!

நவராத்திரியின் நாயகியைப் பற்றி ஒரு பாடல் ஒரு எட்டில்:

பால்கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்

படித்துறையில் பால் கொடுத்தாய்!

பச்சைவெற்றிலைதுப்பி கவிகாளமேகத்தைப் பாட்டரசன் ஆக்கி வைத்தாய்! வேல் கேட்ட

பிள்ளைக்கும் செந்தூரில் சமர் செய்ய

விருப்பமுடன் வேல் கொடுத்தாய்!

விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்

விலகிடும் வழி அமைத்தாய்!

நூல் கேட்ட ஞானத்தில் நூறு கவி பாடுமனை

நோக்கி நீ எது கொடுத்தாய்?

நொடிப் பொழுதில் என் வாழ்வில் படிப்படியாய்

துயரங்கள் நுழைவதற்கு ஏன் விடுத்தாய்?

வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள் வரும் காலம் ஆக்க வருவாய்!

வளமான வாழ்வு தரும் நவராத்திரி நாயகியே

வளம் காண வைக்கும் உமையே!

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஓரிரவு அகிலாண்டே சுவரியின் ஆலய நடையில் தன்னை அறியாது கண்ணயர்ந்து தூங்கினான். அகிலாண்டேசுவரி சூலமேந்தி எழுந்து வந்தார். உறங்கிய சிறுவனை உசுப்பி, வெற்றிலையை அவன் நாக்கில் உமிழ்ந்து என்னைப் பற்றிப் பாடு என்றாள். எழுந்த சிறுவனோ காளமேகம் ஆனான். அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி, ஆதிபராசக்தி என்று உணரவைத்தாய் தேவி என்று பாடத் தொடங்கினானாம். கவி காளமேகம் ஆனான். ஓரிரவில், ஆடு மேய்த்த வனைப் பாடு என்று சொன்னவுடன் அவன் கவிஞன் ஆனது அம்பிகையின் அருள்தானாம்.
அப்படி என்ன ஒரு கடவுளுக்குத் தற்புகழ்ச்சி?

தன்னைப் பற்றிப் பாட வேண்டும் என்கிற தலைக்கனம் உள்ளவளும் ஒரு கடவுளா?

தற்புகழ்ச்சி, தலைக் கனம், செருக்கு என்ப தெல்லாம் கீழ்க்குணம் என்பது உலகம் ஒப்புக் கொண்டவையல்லவா?

கீழ்க்குணம் கொண்டவள் கடவுளா? அந்தக் குணங்கொண்டவளைக் கும்பிடுவதால் பக்தர்களுக்குக் கிடைக்கக்கூடியதும் கீழ்மைகள்தானே?

பத்திரிகை நடத்தும் உத்தமர்கள் ஒரு கணம் இது குறித்து சிந்தித்தார்களா?

பாமரர்களின் பக்தியும் பணமும்தான் முக்கியமா?

ஒரு கணம் கடவுளுக்கும் கடவுளச்சிகளுக்கும் உள்ள அக்கறை எல்லாம் பார்ப்பனர்கள் மீது தானோ! ஞானசம்பந்தனுக்கு ஞானப்பால் ஊட்டினாள் - ஒரு காளமேகத்துக்கு எச்சிலைத் துப்பி கவிஞனாக்கினாள்.

கடவுள்களின் கழுத்தில் எல்லாம் பூணூலைத் தொங்கவிட்டுள்ள நாட்டில் இப்படித்தானே எழுதி வைப்பார்கள்.

ஆதி பராசக்தி எச்சில் துப்பி கவிஞனாக்கினாளே காளமேகப்புலவனை - அந்தப் புலவனின் யோக்கியதை என்ன?

திருவானைக்கா தாசி வீட்டில் மயங்கிக் கிடந்தவன்தானே - மறுக்க முடியுமா? அந்தத் தாசி சைவத்தைச் சேர்ந்தவளாம்.

காளமேகப் புலவனோ வைணவன்; ஒரு நாள் அந்த வைணவனைப் பார்த்து உன்னைத் தீண் டேன் என்று மறுத்தாளாம்!

வைணவனான அந்தக் காளமேகம் அந்தத் தாசி மீது கொண்ட மோகத் தால் அடுத்த கணமே தன்னைச் சைவனாக்கிக் கொண்டானாம்.

பணத்தைக் கொடுத்து, பொருளைக் கொடுத்து மதம் மாறச் செய்கிறார்கள் என்று கூச்சல் போடும் ஒரு கூட்டம் நாட்டில் இருக்கிறது. கேவலம் ஒரு தாசியின் உடல் சுகத்துக்காக மதம் மாறியவன்தான் அவாள் கூட்டத்தைச் சேர்ந்த காளமேகம். நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?

தேவியின் தெய்வ எச்சில் சாப்பிட்டு கவி காளமேகம் ஆனவன் ஒழுக்கவானாக இல்லையே - இதுதான் கடவுள் சக்தியா - தெய்வ பக்தியா? நவராத்திரியைக் கொண் டாடுவோரே சிந்திப்பீர்!

--------------------"விடுதலை” 4-10-2011

*******************************************************************************

நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் இந்து மதத்தில் பண்டிகைகள் உண்டு. மக்களின் அறிவையும், காலத்தையும், பொருளையும் சுரண்டும் புரோகித சூழ்ச்சிதான் இதற்குள் சூல் கொண்டு இருக்கிறது.

மூன்று நாள் துர்க்காவுக்கும், மூன்று நாள் லட்சுமிக்கும், மூன்று நாள் சரஸ்வதிக்கும் பூஜை நடத்துவதுதான் இந்த நவராத்திரியாம்.

முதலில் இந்த முத்தேவிகளுக்குள்ளும் ஒற்றுமை உண்டா என்பது கேள்விக் குறி. கடவுள்கள் என்றால் மக்களுக்கு நல்வழி காட்டுவதாக அமைய வேண்டாமா? ஒழுக்கம் உள்ளவர்களாக நடந்து காட்ட வேண்டாமா?

பிரம்மபுத்திரனாகிய நாரதர் இந்த முத்தேவி மார்களின் கற்பைச் சோதிக்க விரும்பி, ஒரு இரும்புக் கடலையைக் கொண்டு போய் முத்தேவியர்களிடம் கொடுத்து அதனை வறுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டாராம். முடியவில்லையாம். இதன் மூலம் முத்தேவிகளும் பத்தினித் தன்மை உடையவர்கள் அல்லர் என்று நாரதர் கூறுகிறார்.

இதில் கலைவாணிக்கு (சரசுவதிக்கு) மூன்று நாள் ஒதுக்கி பூஜை செய்கிறார்களே - அந்த சரஸ்வதியின் யோக்கியதை என்ன தெரியுமா? பிர்மாவின் மகள்தான் சரஸ்வதி - மகளே மனைவியான கொடுமையை என்ன சொல்ல! சரஸ்வதி பூஜை கொண்டாடும் பக்தர்கள் சிந்திக்க வேண்டாமா? இத்தகைய ஒழுக்கம் கெட்டவள் எப்படி கல்விக் கடவுளாவார்? வேண்டுமானால் கலவிக் கடவுள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆண்டுதோறும் கொலு வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடிய நாட்டில் கல்வியாளர்கள் நிலை என்ன? குறிப்பாகப் பெண்களின் கல்வி நிலை என்ன?

கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார்தானே கல்வி உரிமைக்காகப் பாடுபட வேண்டியிருந்தது? கடவுளை மறந்து மனிதனை நினைத்த காரணத்தால் தானே (கல்வி வள்ளல் காமராசர்) நாட்டில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது?

சரஸ்வதியைக் கடவுளாக ஏற்காத கிறிஸ்தவர்கள் இந்துக்களைவிட கல்வியில் மேலோங்கி நிற்பது ஏன்?

லட்சுமி என்று கூறப்படக் கூடிய திருமகளுக்கு மூன்று நாள் பூஜை நடத்தப்படுகிறது. இவள் செல்வத்துக்கு அதிபதியாம். இந்த நாட்டில்தான் நாள் ஒன்றுக்கு வெறும் இருபது ரூபாய் சம்பாதிக்கக் கூடிய மக்கள் 77விழுக்காடாம். பொருளாதார வளர்ச்சியில் ஜிம்பாப்வேக்குக் கீழேதானே இருக்கிறது இந்தியா?

செல்வக் கடவுள் இருப்பதாகக் கூறப்படும் இந்த நாட்டில்தான் வறுமைக்கோடு பற்றிய சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இந்தியன் தலையிலும் 25,985 ரூபாய் கடன் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்?

செல்வக் கடவுள் லட்சுமி இருப்பதாகக் கூறப்படும் பாரத புண்ணியப் பூமியின் வெளிநாட்டுக் கடன் 1050 கோடி டாலராம்.

இந்த வெட்கக் கேட்டுக்குப் பதில் என்ன? சக்தி (துர்க்கா)க்கு மூன்று நாள் விழா எடுக்கப்படுகிறது. துர்க்காதேவி சக்தியைக் கொடுக்கிறார் என்று கூறப்படும் இந்த நாட்டில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் கொடுமைக்கு ஆளாகிறார்.

பெண்கள் கராத்தே கற்றுக் கொண்டால் இந்த வன்முறைகளிலிருந்து தப்பிக்கலாமே தவிர, துர்க்கா தேவியைக் கும்பிடுவதால் விளையப் போகும் பலன் பூச்சியமே.

கடவுளுக்கு உருவம் இல்லை என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் துர்க்கை என்றும், சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும் பெயர் சூட்டி உருவங்களை உற்பத்தி செய்தது ஏன்? உருவமற்ற கடவுளுக்குக் குடும்பங்கள் எப்படி வந்தது? குழந்தை குட்டிகள் எப்படி வந்தன? வைப்பாட்டிகள் வந்த இரகசியம் என்ன?

கடவுள்கள் சண்டை போட்டதாகவும், கற்பழித்த தாகவும் புராணங்களை எழுதி வைத்துள்ளனரே - இவற்றில் அடிப்படையில் பண்டிகைகள் நடத்தப் படுகின்றனவே. இது கடைந்தெடுத்த முரண்பாடு அல்லவா!

நவராத்திரி போன்ற பண்டிகைகளால் எவ்வளவு பொருள்கள் நாசமாகின்றன? எவ்வளவு காலம் விரயமாகிறது - உடலுழைப்பு விழலுக்குப் பாய்ச்சப் பட்ட நீராகிறது?

சிந்திக்க வேண்டாமா? அப்படித்தான் வருடம் தோறும் இத்தகைய பண்டிகைகளைக் கொண்டாடு கிறார்களே - விளைந்த பயன்தான் என்ன?

யோக்கியமான மக்கள் நலன் அரசாக இருக்குமானால் மக்களை நட்டத்துக்கு உட்படுத்தும் இத்தகு பண்டிகைகளைத் தடை செய்ய வேண்டாமா?

மக்களே, சிந்திப்பீர்!

குறிப்பாகப் பக்தர்களே, ஒரு கணம் சிந்திப்பீர்!

------------------------"விடுதலை” தலையங்கம் 4-10-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

நவராத்திரியில் நடப்பது என்ன?


நவராத்திரி விழாவின்போது ஆயிரக்கணக்கான இளமையான ஆண்களும் பெண்களும் நள்ளிரவு வரை ஆடல் பாடலில் ஈடுபடுவது வழக்கம். ஒன்பது இரவுகள் இவ்வாறு கொண்டாடப்படுகின்றன. நவராத்திரிக் கொண்டாட்டத்துடன், எய்ட்ஸ், எச்.அய்.வி., மற்ற பிற பாலியல் நோய்கள் பரவுவதைப் பற்றியும், விரும்பத் தகாத கருத்தரித்தல் பற்றியும் அச்சம் நிலவுகிறது.

ஜாஸ்லோக் மற்றும் லீலாத்வதி மருத்துவமனைகளில் ஆலோசகராக இருக்கும் பிள்ளைப்பேறு மருத்துவர், டாக்டர் திருமதி ரேஷ்மா பாய் இதைப் பற்றிக் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நவராத்திரிக்குப் பின்பு கருவைக் கலைக்கக் கோரி மருத்துவமனைகளுக்கு வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, என்றார்.

வேண்டாத கருவைக் கலைக்க வருவோர் பெரும்பாலும் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொதுவாக இவர்கள் பழைய சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோர். ஆனால் நவராத்திரியின்பொழுது கட்டுப்பாடுகள் இல்லை. ஆதலால் இளசுகள் எல்லை மீறுகிறார்கள், என அவர் மேலும் கூறினார்.

ஆனால் டாக்டர் ஜெய்தீப் டேங்க் என்ற பிள்ளைப் பேறு மருத்துவர், இவ்வாறான ஒரு போக்கு இருப்பதை மெய்ப்பிக்கப் புள்ளி விவரங்கள் இல்லை என்கிறார். பொதுவாக, நவராத்திரியின் பொழுது கருவுறுதல் அதிகரிக்கிறது, கருக்கலைப்புகள் மிகுந்து வருகின்றன என்று மருத்துவர்களிடையே பேசப்படுவது வழக்கம் என்றார். என்னுடைய மருத்துவமனைகளில் உள்ள அனுபவத்தைக் கொண்டு அப்படிச் சொல்லுவதற்கு இல்லை என்றும், கருத்தடைச் சாதனங்கள் தாராளமாகக் கடைகளில் கிடைக்கின்றன என்றும் சொன்னார்.

நவராத்திரி மண்டல்களுக்கு (மன்றங்களுக்கு) அருகில் அரசு சாராத அமைப்புகள், எச்.அய்.வி., மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மய்யங்களைத் திறந்துள்ளன. கருக் கலைப்பில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அவை சொல்லுகின்றன. வீதி நாடகங்கள், கண்காட்சிகள் முதலிய வற்றின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுகிறது. அந்த அமைப்புகளில் சில கருத்தடை உறைகளையும் விநியோகிக்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற மராத்திய நடிகர் ஆதேஷ் பந்தேகர் பெயரில் உள்ள நவராத்திரி மன்றம், மற்றும் போரிவலியில் உள்ள நாயுடு நவராத்திரி மன்றம் ஆகியவற்றிற்கு அருகில் விழிப்புணர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று மும்பை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தைச் சேர்ந்த ஷீடல் மாத்ரி கூறினார்.

கடந்த 4-5 ஆண்டுகளாக, அவர்ட் சங்கம் எனும் அமைப்பு நவராத்திரி மற்றும் கணேஷ் மன்றங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அந்தச் சங்கம் கருத்தடைச் சாதனங்களை இலவசமாக விநியோகிக்கிறது. அதிக மானவர்கள் அவற்றை இந்தக் கொண்டாட்டங்களின்போது பெற்றுச் செல்லுகிறார்கள் என, அவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கள மூர் கூறினார்.

(இது கடந்த (2010) நவராத்திரியையொட்டி ஏடுகளில் வெளிவந்த செய்தி - தகவல் --”விடுதலை” 5-10-2011