புத்தர் யார்?
புத்தர் என்றால் என்ன? உங்களுக்கு தெரிய வேண்டும். ஈரோட்டில் நடந்த புத்த மாநாட்டில் திரு.மல்லல சேகரா விளக்கமாக எடுத்துச் சொன்னார். உலக புத்த சங்கத் தலைவர் அவர். அவர் வந்து எடுத்துக் கூறியபிறகுதான் நாமும் தைரியமாக ஓங்கி அடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. புத்தன் என்று ஒருவர் இருந்தது கிடையாது. சித்தார்த்தன் என்று ஒருவர் இருந்திருக்கிறார். சித்தார்த்தன்தான் தன் புத்தியைக் கொண்டு ஆராய்ந்து, அதனால் புத்தர் ஆனார். இது மல்லல சேகரா சொன்னது. புத்தர் என்றால் அறிவாளி என்றுதான் பெயர்.
ஆங்கில பேரகராதியில் என்சைக்ளோ பீடியா அதாவது 60, 70 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த அகராதியில் பார்த்தால் புத்தன் என்றால் புத்தியை அடிப்படையாக கொண்டவன்: அறிவை அடிப்படையாக கொண்டவன், அறிவன் என்றுதான் அர்த்தம் இருக்கிறது. இன்றும் தமிழ் நிகண்டில் பார்த்தாலும், புத்தியை ஆதாரமாக கொண்டவன் புத்தன்: புத்திக்கு ஆதாரமாகத் தோன்றுகின்ற உண்மைகள்தான் புத்தம் என்று இருக்கிறது. ஈரோடு புத்த மாநாட்டில் பாலி வார்த்தையில் உள்ள சுலோகங் களைச் சொல்லி எடுத்துக் காட்டிய போது பெரிய அதிசயமாக இருந்தது.
புத்தமதம் என்பதிலும் ஒன்றைச் சொல்லி அதை நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டுத்திட்டம் இல்லை. மல்லல சேகரா இதை விளக்கமாக சொன்னார். புத்த மதத்தில் சித்தார்த்தர் என்பவர் சொன்னதாக எதுவும் இல்லை. இப்போது குரான் என்பது நபிகள்நாயகம் பல சந்தர்ப்பங்களில் பல பேரிடம் சொன்னதைப் பலபேர் கேட்டுக் கொண்டிருந்ததை எழுதினார்கள். அப்படி எழுதியதைக் கடைசியாக ஒத்துப்பார்த்தால் சரியாக இருந்தது என்று சொல்லுகிறார்கள். அதுபோலப் புத்தன் யாரிடம் என்ன சொன்னான்என்று சொல்ல முடியுமா? புத்த மதத்தில் சொல்லுவது எல்லாம், அம்மா சொல்லுகிறாள் என்பதற்காக நம்பாதே; அப்பா சொல்லுகிறார் என்பதற்காக நம்பாதே; நீண்ட நாள்களாக நடந்து வருகிறது என்பதற்காக நம்பாதே; சாத்திரம் சொல்கிறது, வேதம் சொல்கிறது, அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் நம்பாதே; உன் அறிவுக்கு ஆதாரமானதைப் பொருத்தமானதை நம்பு இதைத்தான் இன்று நாம் சொல்லி வருகிறோம். இதைச் செய்ய இந்து மதத்தைவிட்டு வெளியேறித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இருக்கிறது?
-----------------வேலூர் நகராட்சியில், 28.10.1956இல் தந்தை பெரியார் சொற்பொழிவு - விடுதலை 7.11.1956
0 comments:
Post a Comment