Search This Blog

21.10.11

தீபாவளி மூடநம்பிக்கைகள்


தீபாவளி கொண்டாடுகிறார்களே! அதில் படாபடா லட்சியங்கள் குதித்துக் குதித்துக் கூத்தாடுகின்றனவாம். சில கொலம்பசுகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

தீபாவளியன்று நீராடுகிறார்களே - அந்தத் தண்ணீர் சாதாரணமானது அல்லவாம் - கங்கை புண்ணிய ஜலமாம்! (அப்படியா? கங்கையை சுத்தம் செய்வதற்காக பலகோடி ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டுள்ள அரசு நாஸ்திக அரசோ! கண்டனம்! கண்டனம்!!) அப்புறம்... எண்ணெய்யில் லட்சுமி இருக்கிறாளாம். அப்படியென்றால் வீட்டுக்கு வீடு எண்ணெய் வழங்கி லட்சுமியை (செல்வக் கடவுளாச்சே!) வீட்டுக்கு வரவழைத்து விட்டால் தீர்ந்தது வறுமைப் பிரச்சினை! ஜனாதிபதி வீட்டிலோ, பிரதமர் வீட்டிலோ குடம் குடமாக எண்ணெயை கொண்டு வந்து வைத்து விட்டால் வெளிநாட்டுக் கடன்கூட ஒரே ஒரு நொடியில் பறந்து ஓடி விடுமே! (அதை ஏன் செய்ய வில்லையோ!) அரப்பில் சரஸ்வதி இருக்கிறாளாம். எவ்வளவு வருஷமா இந்த அரப்பு நம் நாட்டில் வீட்டுக்கு வீடு இருக்கிறது. கல்விக் கடவுளான இந்த சரசுவதியாகிய அரப்பு இருந்தும் நம் நாட்டில் ஏன் தற்குறிகள்? (இப்படி எல்லாம் இடக்கு முடக்காகக் கேள்விகளைக் கேட்கக் கூடாது! கேட்டால் சாமி கண்ணைக் குத்தி விடும் - ஜாக்கிரதை!)

ஹூம் அப்புறம்?

சந்தனத்தில் பூமிதேவி இருக்கிறாளாம். மார்பு நிறைய, வயிறு நிறைய சந்தனத்தை அப்பிக் கொண்டால் பூமிகள் கிடைக் கும், பூமாதேவி தானே நரகாசுரனை அழித்தாள். எனவே நம் எதிரிகளை அழிக்க எளிதான வழி கிடைத்து விட்டது; ஆம், என்க! புத்தாடைகளில் மகா விஷ்ணு இருக்கிறாராம். பழைய ஆடையில் யார் இருப்பார்கள் என்று சொல்லப்படவில்லையே! தீபாவளி அன்று அணியும் புத்தாடையில் மட்டும் தான் மகாவிஷ்ணு இருப் பாரா? மற்ற நாள்களில் இருப்பாரா என்று தெரிவிக் கப்படவில்லை. சரி, இவற்றை எல்லாம் தீபாவளி நாளில் மக்கள் கடைபிடித்துத்தானே வருகிறார்கள்? ஏன் செல்வம் கொழிக்கவில்லை? வறுமை மருண்டு ஓடவில்லை. அனைவரும் ஏன் படிக்க வில்லை?

(கடவுள், மத விஷயத் தில் கேள்விகள் கேட்கக் கூடாதோ!)

மக்களை மண்ணாங் கட்டிகளாக, மம்புட்டிகளாக மாங்காய் மடையர்களாக நினைத்து எவரோ எந்தக் காலத்திலோ கிறுக்கி வைத்ததை நம்பி இவற்றை இந்தக் கணினியுகத்திலும் பின்பற்றினால் நம்மைவிடக் கிறுக்கர்கள் உலகத்தில் யார் இருப்பார்கள் - எங்கே தான் தேடிக் கண்டுபிடிக் கவும் முடியும்?

-------------------”விடுதலை” 21-10-2011


1 comments:

தமிழ் ஓவியா said...

தீபாவளி நாளில்...


மகாவீர் முக்தி அடைந்தார்.

ஆதி சங்கரர் ஞானபீடத்தை ஏற்படுத்தினார்.

குருநானக் வீடு பேறு அடைந்தல்;

ராமர் வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்தி திரும்பி அரியணை ஏறினார்.

ஏன் அதோடு நிறுத்தி விட்டார்கள்?

அதன்பிறகு ராமன்

சரயூ நதியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

சீதை பூமி பிளந்து தற்கொலை செய்து கொண்டாள்.

இதிகாசங்கள் காட்டும் வழி இவைதானே!

----”விடுதலை”21-10-2011