மொழி நக்சலைட்டுகள் யார்?
தோழர் ஜீவா சொன்னாலும் சரி, வேறு யார் சொன்னாலும் சரி, பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் என்பது தந்தை பெரியார் அவர்களால் கற்பனையாக உருவாக்கப் பட்டதல்ல. அது நீண்ட காலப் போராட்டம். கவுதம புத்தர் காலத்திலும் நடைபெற்றதுதான்.
தொடர்ச்சியாக நடந்ததுதான் - ஆரியர் சூழ்ச்சிகளால் வென்றிருக்கலாம். பெரியார் காலத்தில் அது மரண அடி வாங்கியது என்பதுதான் உண்மை.
தோழர் ஜீவாவை விட்டே மோத விடுவது கூட ஒரு வகையான பார்ப் பனத்தனம்தான். அதே ஜீவா தந்தை பெரியாரின் தொண்டராக இருந்து பார்ப்பனர் எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தவர்தான். கடைசி காலத்திலும் தந்தை பெரியாரை நன்கு உணர்ந்து அவர் நிலையை ஆதரித்தவர்தான்.
மாபெரும் காரியங்களை சாதித்து வந்திருக்கும் அய்யா அவர்களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் நிதானமாகதான் பேசவேண்டும் என்று ஜீவா அவர்கள் சொன்னது (23-.11.-1951 சென்னை செம்பியம் பொதுக் கூட்டத்தில்) துக்ளக்குக்கும் பொருந்தும்; லட்சுமி நாராயணர் வகையறாக்களுக்கும் பொருந்தும்.
பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல எழுதுகிறார்களே -_ எழுதுபவரின் தோளிலும், எழுதப்படும் ஏட்டின் ஆசிரியரின் தோளிலும் தொங்குவது என்ன? அந்தப் பூணூலின் திமிருக்கு என்ன பொருள்?
நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் யார்? பதில் சொல்லும் திராணி உண்டா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று பெரியார் கூறியதும், திராவிடர் கழகம் இன்று வரை போராடுவதும், கலைஞர் அவர்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டதும், ஜாதி ஒழிப்புச் சிந்தனை அல்லவா? அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற பதின்மூன்று பேர்களும் பார்ப்பனர்கள் அல்லவா?
அடுத்த வார துக்ளக்கில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். சங்கராச்சாரியாராக இந்து மதத்தைச் சேர்ந்த அதற்கான சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த எவரும் வரலாம் - நாங்கள் ஏற்கிறோம் என்று எழுதிடத் தயாரா? சவால் விட்டுக் கேட்கிறோம். இந்த 2011 ஆம் ஆண்டிலும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்ற ஆணவத்தில் எழுதலாமா?
பார்ப்பனர்களின் ஜாதி ஆணவத்தை காந்தியார் சுட்டிக் காட்டவில்லையா?
ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது, பிராமணரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால், அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.
-இதைச் சொன்னவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தியார். தஞ்சாவூர் பொதுக் கூட்டத்தில்தான் (16.9.1927) அப்படிச் சொன்னார். காந்தியாரைக் கறுப்புச் சட்டைப் பட்டியலில் சேர்த்திட உத்தேசமோ?
கதர் போர்டின் தலைவராக பெரியார் இருந்தார். செயலாளராக சந்தானம் அய்யங்கார் இருந்தார். உத்தியோகங்களை எல்லாம் பார்ப்பனர்களுக்கே தாரை வார்த்துக் கொண் டிருந்தார். தலைவர் பெரியார் எதிர்த்தார். சந்தானம் ராஜினாமா செய்தார். காந்தியார் வரை கொண்டு சென்றனர்.
இது குறித்து காந்தியார், பெரியார், சந்தானம், ராஜகோபாலாச்சாரியார் எல்லோரும் விவாதித்தனர். அப்பொழுது நடைபெற்ற உரையாடல் (குடிஅரசு இதழில் (6.3.1927) வெளி வந்துள்ளது.
பெரியார்: கதர் போர்டு சம்பந்தமான உத்தியோகங்களைப் பெரிதும் பார்ப்பனர்களுக்கே அவர் கொடுப்பதால் அதன் தலைவர் என்ற முறையில் பார்ப்பனர் அல்லாதாருக்கும் கொடுக்க வேண்டும் என்பதாகச் சொன்னதனால் அவருக்குத் திருப்தி இல்லாமல் அவர் ராஜினாமா கொடுத்துவிட்டார்.
மகாத்மா: இது ஸ்ரீமான் ராஜ கோபாலாச்சாரியாருக்குத் தெரியாதா
பெரியார்: இது விஷயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்றுதான்.
மகாத்மா: அப்படியானால் உமக்கு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூட நம்பிக்கை இல்லையா?
பெரியார்: பார்ப்பனர்களுக்கு அவரிடம் இருக்கும் நம்பிக்கை அளவு எனக்கு அவரிடம் இல்லை.
மகாத்மா: அப்படியானால் பார்ப்பனர்களிடத்திலேயே உமக்கு நம்பிக் கையில்லையா
பெரியார்: இந்த விஷயத்தில் நம்பிக்கையே உண்டாவதில்லையே
மகாத்மா: அப்படியானால் உலகத்திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பதுதான் உமது அபிப்பிராயமா
பெரியார் : என் கண்ணுக்குத் தென்படுவதில்லையே; நான் என்ன செய்யட்டும்
மகாத்மா: அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக்கிறேன். அவர்தான் கோகலே. அவர் தம்மைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. யாராவது அவரை பிராமணன் என்று கூப்பிட்டாலும் மரியாதை செய்தாலும் நட்புக் கொள்ளாததோடு உடனே ஆட்சேபித்துத் தமக்கு அந்த யோக்கியதை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவார்.
பெரியார்: மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராமணன் மாத்திரம் தென்பட்டு இருக்கும்போது என் போன்றவர்கள் கண்ணுக்கு எப்படி தென்படக்கூடும்?
மகாத்மா: (வேடிக்கையாகச் சிரித்து விட்டு) மறுபடியும் ஸ்ரீமான் சந்தானம் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டு காரியதரிசி வேலை பார்க்கக்கூடாதா?
பெரியார்: நன்றாய் பார்க்கலாம். எனக்கு ஒன்றும் ஆட்சேபணை யில்லை. ஆனால் பார்ப்பனரல்லாதாருக்கு 100-க்கு 50 வீதம் உத்தியோகமாவது கொடுக்கக் கட்டுப்பட வேண்டும்.
(ஸ்ரீமான் பாங்கர் ஆச்சரியப்பட்டு 100-க்கு 50 வீதம் போதுமா? அது கூடவா இப்போது கொடுக்கப்பட வில்லை என்கிறீர் என்று கேட்டார். ஆம் என்றார் பெரியார்).
சங்கர்லால் பாங்கர்: ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் 100-க்கு 50 வீதம் போதும் என்கிறாரே. இது என்ன அதிசயம்?
மகாத்மா: நான் ஒரு போதும் சம்மதியேன். 100-க்கு 90 வீதம் கொடுக்க வேண்டும்.
பெரியார்: 100-க்கு 50 கொடுப்பதாய் தீர்மானம் போட முடியாது என்கிறவர்கள் 100-க்கு 90 வீதம் கொடுப்பதெப்படி?
மகாத்மா: தீர்மானம் போட வேண் டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் 100-க்கு 90 வீதம் கொடுக்க வேண்டியது கிரமம் என்றுதான் சொல்லுவேன். (ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து) பார்ப்பனர் அல்லாதாருக்கு உத்தியோகம் கொடுப்பதில் உமக்கு என்ன ஆட்சேபணை?
சந்தானம்: எனக்கு ஒன்றும் ஆட் சேபணை இல்லை. ஒருவரும் வருவ தில்லையே. நான் என்ன செய்யட்டும்?
மகாத்மா: (பெரியாரைப் பார்த்து) நாயக்கர் ஜீ! யாரும் வருவதில்லை என்கிறாரே என்ன சொல்கிறீர்?
பெரியார்: அது சரியல்ல. ஏன் வருவதில்லை என்பதற்கே காரணம் வேண்டும். முதலாவது வேலை கொடுக்க வேண்டும்; வேலை கொடுத்து அவனை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த இரண்டு காரியம் நடந்தால் எவ்வளவு பேர் வேண்டு மானாலும் கிடைப்பார்கள்.
மகாத்மா: அப்படியானால் இனி மேல் உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நீங்கள் வைத்துக் கொள்கிறீர்களா?
பெரியார்: ஸ்ரீமான் சந்தான முடியாதென்றால் நானே பார்த்துக் கொள்கிறேன்.
மகாத்மா: (ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து) இனி, உத்தியோகஸ்தர்கள் நியமனத்தை நாயக்கரிடம் விட்டு விடுங்கள் என்றார்.
சந்தானம்: எனக்கு ஆட்சேபணை யில்லை. (ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் குறுக்கே தலையிட்டு அது முடியாத காரியம்.ஏனென்றால் யார் வேலை வாங்குகிறார்களோ, அவர்கள்தான் வேலைக்காரரை நியமிக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒருவர் நியமிப்பதும் ஒருவர் வேலை வாங்குவதுமாயும் இருந்தால் வேலை நடக்காது என்றார்.)
மகாத்மா: உடனே சிரித்துக் கொண்டு நாயக்கர் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கும்போல் தோன்றுகிறது. இப்போது நான் காங்கிரஸ் பிரசிடென்ட், ஸ்ரீமான் ஜவஹர்லால் நேரு காரியதரிசி, நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவஹர்லால் வேலை வாங்க முடியா விட்டால் நானாவது குற்றவாளியாக வேண்டும்; அல்லது ஜவஹர்லாலாவது குற்றவாளியாக வேண்டும். நியமிக்கப் பட்ட ஆளிடம் குற்றமிருக்க நியாயமில்லை. சர்க்காரில் கூட நியமிப்பவர் ஒருவர், வேலை வாங்குபவர் ஒருவர். அப்படியிருக்க, அதில் எங்கேயாவது வேலை வாங்குபவர் நியமிக்காததால் வேலைக்காரர்கள் சரியாக நடக்க வில்லை என்று ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்டார்.
ராஜகோபாலாச்சாரியார்: வகுப்புப் பிரிவினை பார்த்தால் போதுமான வேலை நடக்க வேண்டாமா? தகுதியும் கூட பார்க்க வேண்டாமா?
மகாத்மா: நாயக்கர் அதையும் பார்த்துக் கொள்வார் என்றே நினைக் கிறேன். அப்படி பார்ப்பனரல்லாதாரை நியமிப்பதன் மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம் கெட்டுப் போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்க வேண்டியதுதான். அதாவது கதர் விஷயம் எப்படி முக்கியமானதோ அது போல வகுப்பு அதிருப்திகளும் நீங்கவேண்டியதும் மிக முக்கியமானது. ஆதலால் கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக்கட்டும் என்று சொன்னார்.
-------------------------(குடிஅரசு 16.3.1927)
பார்ப்பனர் பிரச்சினையில் பெரியார் சொன்னது உண்மை என்பதைக் காந்தியாரே ஒப்புக் கொண்டு விட்டாரே! காந்தியாரும் பிராமணத் துவேஷி என்று சொல்லவேண்டியதுதானே!
வரலாற்றில்தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள் நதிகள் போல் ஓடியிருக் கின்றன. 1937ஆம் ஆண்டிலேயே பார்ப்பனர்களைப் பார்த்து தந்தை பெரியார் ஒன்றைக் கேட்டார்.
இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாகா மந்திரியாயிருக்கிறார். அவர் ஆதீனத்தில்தான் இந்நாட்டுக் கோவில்களின் தலையெழுத்து பூராவும் இருக்கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட்டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ காங்கிரசே சர்க்கார் - சர்க்காரே காங்கிரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக் கொள்ளும்படியான நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில்களுக்கெல்லாம் பார்ப்பானே மணி அடிக்க வேண்டும். பார்ப்பானே சோறு பொங்க வேண்டும். பார்ப்பானே வேதம் ஓத வேண்டும் என்பவை ஆன பார்ப்பானே செய்ய வேண்டும் என்கின்ற காரியங்களை மாற்றி, வகுப்புவாதம் புரிகின்ற ஜஸ்டிஸ் கட்சியார் உள்பட தனித் தொகுதி கேட்பதும் இந்து மதத்தை விட்டுப் போவதும், ஆபத்து என்று கூறி தடுக்கப்படும் ஷெட்யூல் வகுப்பார் வரை உள்ள எல்லா இந்துக்களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்தரவோ செய்து வகுப்புவாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்கமாய் கேட்கின்றோம்.
இதாவது நாளைக்குச் செய்யட்டும். இன்றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு ஜாதி என்கின்ற வித்தியாச முறை இல்லாமல் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வதயாபரமும் உள்ளவரான பகவானைத் தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப்படும் என்று உத்தரவு போடட்டுமே என்றுதான் கேட்கிறோம். -
--------------------------(குடிஅரசு - தலையங்கம் - 08.08.1937)
இன்றைக்கு 74 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் இவ்வாறு எழுதியிருக்கிறாரே பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இன்றுவரை இவற்றில் மாற்றம் பெற்றுள்ளனரா? இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் பேனா பிடித்து முண்டா தட்டுவது
யாரை ஏமாற்ற?
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்ததுண்டு.
இந்த வார துக்ளக்கில் (26.10.2011) சென்னை இராயப்பேட்டை இலட்சுமிபுரத்தில் உள்ள லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்கிற பார்ப்பன சங்கத்தில் அண்ணாவும் ராஜாஜியும் பங்கு கொண்டது குறித்தும், அதில் அண்ணா அவர்கள் ராஜாஜியைப் புகழ்ந்தது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அமைப்பில் தந்தை பெரியார் அவர்களும் பங்கு கொண்டு(5.1.1953) உரையாற்றியதுண்டு. அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இன்றைக்கும் கூட சிந்தித்துப் பார்த்திட வேண்டும் பார்ப்பனர்கள்.
இதோ பெரியார் பேசுகிறார்:
யாரோ சில பிராமணர்கள், பெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்ப தாகக் கேட்டார்கள் என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்ய வில்லை.-திராவிடர் கழகத்தின் திட்ட மும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் - திராவிடர் கழகமும், நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம் - நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இது, பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டை விட்டு அவர்கள் போய் விடவேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.
நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம்; ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றமடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்த நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு. காலம் எப்போதுமே ஒன்றுபோல இருக்க முடியாது.
நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார்; அதாவது பிரா மணர்களும் கால தேச வர்த்தமானத்துக்குத் தக்கபடி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது.
------------------------ (விடுதலை 8.1.1953)
என்று பார்ப்பனர்கள் மத்தியிலேயே பேசினாரே தந்தை பெரியார்.
இந்தச் சந்தர்ப்பத்தை எல்லாம் பார்ப்பனர்கள் பயன் படுத்திக் கொள்ள வில்லையே!
இன்றைக்கும் என்ன எழுது கிறார்கள்?
கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். - (தினமலர், வாரமலர் 13.62004)
தமிழகப் பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத் திற்குக் கர்நாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கர்நாடகஅரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.
டவுட்தனபாலு: அதனால என்னங்க. பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? - (தினமலர் 18.8.2009)
கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல் அமைச்சர்?
பதில்: எல்லாம் கிடக்க, கிழவியை மணையில் அமர்த்திய கதைதான். (கல்கி 27.1.2008)
தமிழ்ப் புத்தாண்டு இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது, நம்பிக்கைக்கு விரோதமானது.
(துக்ளக் 27.1.2010)
கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன்மூலம்கன்னடர்- தமிழர் இடையே நல்லுறவு, நல்லி ணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே!
பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! - (துக்ளக் 19.8.2009)
தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம்.
(துக்ளக் 23.6.2010)
கேள்வி: தமிழை வைத்து இன்னும் எத்தனை விதங்களில் என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?
பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை? நிறைய வாய்ப்பிருக்கிறது! கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு, கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு - என்று எவ்வளவோ விழாக்கள் நடத்தலாமே! கலைஞர் ரெடி - தமிழகம் ரெடி- தமிழ் ரெடியா?
(துக்ளக் 4.8.2010)
கேள்வி: உலகத் தமிழ் மாநாடு என்பது எதற்காக நடத்தப்படுகிறது?
பதில்: இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் எதற்காக நடத்தப் பட்டன? அவை என்ன சாதித்தன? அதனால் தமிழ் மொழிக்குக் கிட்டிய சிறப்புகள் என்னென்ன? என்பதை யெல்லாம் கண்டுபிடியுங்கள். அதைக் கண்டுபிடித்த பின், அதே பயன் களுக்காகத் தான் இந்த மாநாடும் நடத்தப்படுகிறது என்பது உங்களுக்குப் புரிய வரும். - (துக்ளக் 14.10.2009)
தமிழை வளர்க்கிறேன் என்று அரசு நிர்வாகத்தில் புகுந்து குட்டிச் சுவராக்கும் இவர்களை மொழி நக்சலைட்டுகள் என்றுதான் கருத வேண்டும். . . முதல்வரே தமிழைச் சொல்லி ஏமாற்றுகிறவராக இருப்பதால், சென்னை மேயர் முதல் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வரை தமிழை அமல்படுத்துகிறோம் என்று கம்பு, கடப்பாரை சகிதம் கிளம்பி விடுகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறவர்கள்தான் தீவிரவாதிகள் என்பதல்ல. இதுபோல், நடைமுறைக்கு ஒவ்வாத மொழி வெறி பிடித்து அலைகிறவர்களும், அந்த மொழி வெறியைத் தங்கள் அதிகாரத்தின் மூலம் ஜனங்கள் மீது திணிக்கிறவர்களும் தீவிரவாதிகள்தான். இவர்கள் மொழி நக்சலைட்டுகள். - (துக்ளக் 15.9.2010)
இவற்றுக்கெல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவையில்லை.
தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, திருவள்ளுவர் என்னும் சொற்களைக் கேட்கும்போதே இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்குக் குமட்டிக் கொண்டு வருகிறதே!
பார்ப்பனர்களின் இந்தப் பிறவிக் குணத்தை மிக அழகாக - நேர்த்தியாக படம் பிடித்துக் கண்ணாடி சட்டம் போட்டுக் காட்டுகிறார் அறிஞர் அண்ணா.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழியைப் பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரென்னும் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர் களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான். - (திராவிட நாடு - 2.11.1947)
அண்ணா சொன்னது ஏதோ விளையாட்டல்ல. நிதர்சனமானது. துக்ளக்கில் ஒரு கேள்வி.
கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியும் எந்தப் பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்ததுண்டா?
பதில்: எந்தப் பலனும் இல்லை என்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே.
(துக்ளக் - 24.10.2005)
இப்படி தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்தான் தமிழைப் பழிக்கிறார். அதைத்தானே அண்ணாவும் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழ் மீது பற்றுக் கொள்வது மொழி நக்சலிசமாம். இப்படிச் சொல்லுகிற பார்ப்பனர்களின் நிலை என்ன?
கோவில்களில் வழிபாட்டு மொழி தமிழ் என்று சொன்னால், துக்ளக் (18.11.1998) என்ன தலையங்கம் தீட்டுகிறது? தலைப்பே மொழி ஆர்வமா? மத துவேஷமா?
என்ன எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்?
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும்; புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல. ஒலிக்கு என்று வரிந்து கட்டிக் கொண்டு ஸம்ஸ்கிருதத்திற்காக எழுது கிறாரே - இது ஸம்ஸ்கிருத மொழி வெறியில்லையா?
தமிழ் வழிபாட்டு உரிமை பிரச்சி னையில் ஆனந்த விகடன் (8.11.1998) என்ன எழுதியது?
விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மக்களைத் திசை திருப்பும் பழைய வார்த்தைதான் என்று எழுதுகிறதே.
இந்து முன்னணி ராம கோபால அய்யர்வாள் என்ன பேசுகிறார்?
தமிழ் அர்ச்சனைனால் விலைவாசி குறைந்து விடுமா? (திருச்சியில் 15.11.1998)
காஞ்சி சங்கராச்சாரியாரும் இதே வார்த்தைகளை குமுதத்தில் பேட்டி யாகச் சொல்லுகிறார்.
தமிழ்- தமிழர் உணர்வு அடிப் படையில் எதைச் செய்தாலும் இவற் றால் விலைவாசி குறையுமா என்று கேட்கிறார்களே - திருப்பி நம்மால் கேட்கமுடியாதா? கோயில் கும்பா பிஷேகம் செய்கிறீர்களே, தேரோட்டம் நடத்துகிறீர்களே - நாள்தோறும் கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடத்துகிறீர்களே. தீபாவளி கொண் டாடச் சொல்லுகிறீர்களே. இவற்றால் விலைவாசி குறைந்து விடுமா? கேள்விக்கு என்ன பதில்?
இவர்கள் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். எல்லாவற்றையும் முற்றும் து(தி)றந்த முனிவர் ஒருவர் இருந்தாரே காஞ்சி மடத்தில். அவர் என்ன சொன்னார் தெரியுமா?
சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் சர்வவியா பகத்வம் என்பார்கள்.
உலகில் முதன் முதலில் தமிழ் மொழி தோன்றிற்று; அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப் பட்டது. பிறகுதான் ஸம்ஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பாணினி என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற் கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாஷை சாஸ்திரம் (philology) என்று சொல்லக் கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதந்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது.
--------------------(ஞான வழி, வானதி பதிப்பக வெளியீடு)
முற்றும் துறந்த முனிவருக்கே சமஸ்கிருதம் தனது தாய் மொழி என்னும் பார்ப்பன வெறி தலைக்கு மேல் வழிகிறது. இது மொழி நக்சலிசம் இல்லையா?
ஒரு கேள்வி: பிரம்மத்திற்குச் சமமான ஸம்ஸ்கிருதம் ஏன் செத்த மொழி ஆயிற்றாம்?
பார்ப்பனர்களைப் புரிந்து கொள்ள, எடை போட இன்னும் ஆதாரங்கள் தேவையா?
---------------------------- 22-10-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment