Search This Blog

30.11.14

தமிழர் நிலை மாறவேண்டுமானால்... பெரியார்


தந்தை பெரியார்

தமிழர்களாக கவிஞர், கட்டுரையாளர், அறிவுரைப் பிரச்சாரம் செய்பவர், எழுத் தாளர், மற்றும் நடிப்புத்துறையில் உள்ள வர்கள் முதலிய யாவரும் தங்கள் கலை களை மக்களுக்கும் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாளவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.


தமிழர்களைக் கைதூக்கிவிட இன்று எந்தக் கலையும், எந்தக் கவிஞரும் இல்லை. உள்ளவர்கள் எல்லோரும் பத்தாம் பசலிக் காரர்கள் என்று சொல்லும்படி பழைமையைக் கையாண்டே தங்கள் கலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.


தமிழர்களைத் தாழ்த்தியதும், தலை தூக்கவொட்டாமல் அழுத்தியதும் தமிழ் அறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்களும், தமிழர் கையாண்ட சமய இலக்கியம், தமிழர்களின் முன்னோர் களைப் பின்பற்றி வந்த நடப்புகளும் தமி ழர்கள் உழைத்து உருவாக்கிய அரசியலும் முதலியவையும் தான்.


தமிழன் வளர்ச்சிக்கு, அறிவுக்கு, கலை களுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்குப் பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர ஒரு தமிழன் காட்டிய வழியென்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நம் கலைஞர், கவிஞர், புலவர் அரசியலாளர்கள் பார்ப்பானைக் குறை மாத்திரம் சொல்லிக் கொண்டு அவன் கலாச்சாரத்தின் மூலம் அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கின்றவர்களாகத்தான் இருந்து வந்தார்கள். வருகிறார்கள் என்பதல்லாமல் தமிழர்கள் நலத்துக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீங்குவதற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா? எல்லாத் தமிழ் உணர்ச்சியாளரும், எப்படிப்பட்ட பார்ப்பன வெறுப்பாளரும் தனது சுயநலத் திற்கு வேண்டுமான அளவுதான் வெறுப் பைக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, தமிழர் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத் திற்கு என்பதாகக் காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிக மிகப் பரிதாபமாகவே இருந்து வருகிறார்கள்.


தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவிகள், கவிஞர், புலவர் இன்னும் பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர் களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப் பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப் பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றில் புகுத்தப்பட்ட கடவுள்கள், கந்தன், சிவன், விஷ்ணு, கண பதி, ராதை, கிருஷ்ணன் முதலிய கட வுள்கள். இவர்களது பெண்டு, பிள்ளைகள் முதலியவர்களையும், கலாச்சாரமாகவும், வணக்கத்திற்குரியதாகவும் கொண்டு நடந்து வருகிறவர்களாக இருக்கிறார்களே தவிர, அறிவைப்பற்றியோ, மானத்தைப் பற்றியோ தன் இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லவும் ஒருவரையுமே குறிப்பிட முடியவில்லையே.

எந்த பெரிய மனிதன் அறிஞர், கவிஞர், வித்வான், மேதாவி என்பவர் யாரானாலும் அவர் திவசம், திதி கருமாதி முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்பவரும், இவை சம்பந்தமானதான நெற்றியில் சாந்து, செம்மண், சுண்ணாம்பு பூச்சுப்பட்டை அடித்துக் கொள்கிறவர்களும், கடவுள் சமயப்பற்று உடையவர்களுமாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இவை எதற்கு? இவற்றினால் பலன் என்ன? என்று சிந்தித் தவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காணமுடியவில்லையே.


1968 இல் தமிழர் சூத்திரனாக இருக் கிறான் என்றால், இருந்து கொண்டு திவசம், திதி செய்து கொண்டு, சாம்பல் மண் அடித் துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்டு இருக்கிறான் என்றால், தமிழன் எந்த வகையில் முன்னேறத் தக்கவன் ஆவான் என்பது புரியவில்லை. 

பார்ப்பானைக் கூப்பிட்டு திதி கொடுக்கிற தமிழன் என்னைக்குத் தன்னை சூத்திரன் அல்ல என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?


சிவனையும், விஷ்ணுவையும், கந்த னையும், கணபதியையும், இராமனையும், கிருஷ்ணனையும் கும்பிடுகிற தமிழன் என்னைக்குத் தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள முடியும்?


1968 இலும் தமிழனுக்கு மானம், வெட் கம், பகுத்தறிவு வரவில்லையென்றால், மற்ற எந்த நூற்றாண்டில்  வர முடியும்?


அரசியல் என்றால் பார்ப்பனருக்கு அடிமையாக இருப்பவன்தான் அரசியலில் பயனடைய முடியும் என்றாகி விட்டது.


சமுதாயத்தில், தரத்தில், கீழ் நிலையில் இருந்தவர்கள் பெரும்பாலோர் இன்று அரசியலால் மேல் நிலைக்கு வந்துவிட்ட படியால் அவர்கள் நாமப்பூச்சு, பக்தி, கோவில் குள தரிசனக்காரர்களாக ஆவதில் சிறிதும் வெட்கப்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

சமுதாயப் புரட்சிக்கு உண்மையாகவே இந்தச் சமயம், மிக்க பொருத்தமான காலம் என்பதே எனது கருத்து. இன்று நமக்குப் பெரும் சனியனாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்றபடி மற்ற எல்லா ஸ்தாப னங்களும் பெரிதும் நமக்கு அனுகூலமாக இருக்கிறதென்றே சொல்லலாம்.  ஆனால், தமிழனுக்குப் புத்தி, மானம் இருக்க வேண் டும். இருந்தால் தான் அவற்றால் எளிதில் மாற்றம் உண்டாக்கிக் கொள்ளலாம்.


கல்வி இலாகாவில் பகுத்தறிவுப் புத்தகங் களையும், பகுத்தறிவு ஆசிரியர்களையும் நல்ல வண்ணம் புகுத்தப் பார்க்க வேண்டும்.
உத்தியோக இலாகாவில் பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைப் புகுத்த வேண்டும்.


போலீசிலும், கிராம கணக்கு, மணியம் ஆகிய பதவிகளிலும் தாழ்த்தப்பட்டவர் களை அதிகமாகப் புகுத்த வேண்டும்.


அய்க்கோர்ட்டுக்கு இனி வக்கீல்களி லிருந்து யாரையும் எடுக்கக்கூடாது. கண்டிப்பாய் எடுக்கக்கூடாது. எடுப்பது அனாவசியமாகும். அது பார்ப்பனரைப் புகுத்துவதற்கென்றே ஏற்பாடு செய்யப் பட்ட சூழ்ச்சியாகும்.


20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் நீதிபதி யாயிருந்து அனுபவப்பட்ட  நடுநிலைமை யாளர்களான ஜில்லா ஜட்ஜை விட்டு விட்டு கடிவாளம் இல்லாத குதிரைகளாய்த் திரிந்த கட்சிக்காரர்களுக்கு அடிமைகளாக இருந்து பழகின வக்கீல்களை அந்தப் பதவியில் போட்டால் அது எப்படி நேர்மையைக் கொடுக்க முடியும்?


மற்றும் நிருவாகத்துறையில் அய்.ஏ. எஸ்சை ஒழித்துக்கட்டியாக வேண்டும். இது வெள்ளையன் தன் ஆதிக்கத்தின்கீழ் நீதித்துறை, நிருவாகத்துறை இருக்க வேண் டுமென்று கருதிச் செய்த சூழ்ச்சியேயாகும். இதையே பார்ப்பானும் பின்பற்றுகிறான். ஆகவே, இவை தமிழர்களைத் தலை யெடுக்கவொட்டாமல் செய்து வரும் காரியங்களுக்காகவே இருந்து வருகின்றன. இவை மாற்றம் அடையும் படியான அள வுக்குக் கிளர்ச்சி செய்யவேண்டி இருக் கிறது.
மற்றும் கல்வித்துறையில் காமராசரால் நாம் முன்னேறி இருக்கிறோம் என்றாலும் இது போதாதென்று கருதுகிறேன்.

இன்றைய ஆட்சியானது காமராசரை விட ஒருபடி அதிகமாக முன்வந்து இன் றைய இலவசக் கல்வியைக் கட்டாய இலவசக் கல்வியாக ஆக்கிவிட வேண்டும்.

இந்தக் காரியங்களை இன்றைய ஆட்சி செய்து விடுமானால், இந்த ஆட்சியை அசைக்க எவராலும் முடியாது என்பதோடு தமிழர் நிலையும் நல்ல அளவுக்கு முன்னேற் றமடையக்கூடும் என்பது நமது கருத்து.

                ---------------விடுதலையில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை--"விடுதலை", 05.11.1968

 *************************************************************************************


மணியம்மை திருவண்ணாமலை பஸ்ஸில் வரும்போது நான்கு பார்ப்பனர்கள் இந்த  இராமசாமி ஆரம்பத்தில் ஈரோட்டிலிருந்து செல்லாக் காசாகி, திருச்சி வந்து, நான்கு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு, பல லட்சம்  பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். நமது நேரு வந்து 4000 பேர்களை உதைத்து,  ஜெயிலில் போட்டு ஒழிக்கச் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.  அதனால் ஒழிந்தார்கள் என்று பேசிக் கொண்டு வந்தார்களாம். இதிலிருந்து நம்மை ஒழித்துக்கட்டி விட்டதாக அவன் களுக்குள் எண்ணம். 


தீபாவளிபண்டிகை விமரிசையாக நடப்பதாக எண்ணி நம்மைக் கிண்டலாக தினமணிக்காரன் எழுதுகிறான். இந்தக் கதைப்படி உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளிந்தானென்றும்,  கடவுள் பன்றி அவதாரம்  எடுத்து மீட்டு, அசுரனைக் கொன்று, தேவர்களைக் காப்பாற்றினான் என்றும் கூறுகிறான். இது எப்படி என்றால் உன் அப்பன் எங்கே என்றானாம்? ஒருவன். என் அப்பன் வானம் ஓட்டையாகி விட்டது. ஆகையால் எறும்புத் தோலை உரித்து அடைக்கப் போயிருக்கிறான் என்றானாம்! இதைப் போன்று பெரும் புளுகு அல்லவா அந்தக் கதை?அடுத்து வரும் கிளர்ச்சிக்கு அறிகுறியாக அதிகமான பேர் தமிழ்நாடு நீங்கிய இந்தியநாடு படத்தைக் கொளுத்தத் தயாராயிருக்க வேண்டும்.  நம் நாட்டை  நாம் பார்த்துக் கொள்வோம். அவனவன் நாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அரசாங்கத்துக்கு வாய்தா கொடுப்போம். நீங்கள் நிறைய ஆதரவு தரவேண்டும்.


              -----------------------12-11-1958 அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : "விடுதலை" 7-1-1959

29.11.14

பக்தி என்னும் வணிகம்-தினமணி ஒப்புக் கொண்டதைப் பார்த்தீர்களா?


இந்தத் தலைப்பு விடுதலை கொடுத்ததல்ல - தினமணி கொடுத்தது என்றால் பலருக்கும் ஆச்சரிய மாகத் தானிருக்கும். என்ன செய்வது? காலந் தாழ்ந்தாலும் தந்தை பெரியார் அவர்களின் கணிப்புக்கும், கருத்துக்கும் யாரும் இறங்கி வந்துதானே தீர வேண்டும்?

28.11.2014 நாளிட்ட தினமணி ஏட்டில் (பக்கம் 8இல்) பக்தி என்னும் வணிகம் எனும் தலைப்பில் எஸ். சந்திரசேகர் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று தலையங்கப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியை உரு வாக்கவே கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால், இப்போது கோயில்கள் அனைத்துமே வணிக மய்யங் களாக மாறி விட்டன. சிறப்புக் கட்டணம், மிகச் சிறப்புக் கட்டணம், பரிகாரக் கட்டணம் என விதவிதமாக வசூலிக்கின்றனர்.

சிறப்பு தரிசனக் கட்டணத்திலும் நாளுக்கு நாள் மாற்றம் உண்டு. சாதாரண நாள்களில் ஒரு கட்டணம், விசேஷ நாள்களில் வேறு கட்டணம் என வசூலிக்கிறது அறநிலையப் பாதுகாப்புத் துறை.


உதாரணமாக, பல பெருமாள் கோயில்களில் சாதாரண நாள்களில் தரிசனத்துக்கு ரூ.5 கட்டணம். அதுவே சனிக்கிழமைகளில் ரூ.10 ஆக உயர்ந்து விடுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் அது பல மடங்கு எகிறி ரூ.100 வரை செல்கிறது.


கார்த்திகை துவங்கி, தை வரை பக்தி சீசன் காலம். அய்யப்ப பக்தர்கள் வருகை அனைத்துக் கோயில் களிலும் அதிகமாக இருக்கும். இதைப் பயன்படுத்தி கல்லா கட்ட முனைந்துள்ளன கோயில் நிர்வாகங்கள்.


இப்போது தரிசனக் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளனர். அதாவது கூட்டத்தைப் பயன் படுத்தி வசூலை பெருக்கிக் கொள்கின்றனர். ஏறக்குறைய எல்லா கோயில்களிலும் இது தான் நிலை. என்று தினமணிக் கட்டுரை கூறுகின்றது.


மனதை ஒரு நிலைப்படுத்துகிறதா? அமைதியை உண்டாக்குகிறதா? என்பதெல்லாம் பக்தர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். அது ஒருபுறம் இருக்கட்டும்!


மற்றபடி கோயில்கள் வணிக நிறுவனங்களாக உள்ளன என்பதை தினமணியே மனம் வெதும்பிக் கூறும் நிலைக்கு நிலைமைகள் உள்ளன.


பிரார்த்தனை என்பது என்ன? தந்தை பெரியார் அழகாகக் கூறுகிறார்.

பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும், பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதேயாகும். (பகுத்தறிவு மலர் 1 - இதழ் 9 - 1935) என்ற தந்தை பெரியார் அவர்களின் கூற்று மிகத் துல்லியமான படப்பிடிப்பேயாகும்.


கடவுள்தான் எல்லாம் அறிந்தவராயிற்றே - சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே - அவருக்கு ஏன் காணிக்கை? என்று பகுத்தறிவின் அடிப்படையில் கேட்டால் அறிவார்ந்த முறையில் யாரால்தான் பதில் சொல்ல முடியும்?


ஒரு வகையில் பார்க்கப் போனால் காணிக்கை கொடுத்தால்தான் கடவுள் அருள் புரிவார் என்பதுகூட ஒரு வகை கையூட்டுதானே - இலஞ்சம் தானே? நான் இதைத் தருகிறேன் - நீ இதைக் கொடு! என்பது கடவுளுக்கும், பக்தர்களுக்குமிடையிலான பேரம் தானே?


இதைத் தவிர, சில கோயில்கள் விதவிதமாக பரிகாரங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. பிரம்மாண்ட விக்கிரகங்கள், அந்தத் தோஷத்துக்குப் பரிகாரம், இந்தத் தோஷத்துக்குப் பரிகாரம் என வசூலை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்குகின்றன. அங்கே செல்கிறவர்களின் பிரச்சினை தீருகிறதோ இல்லையோ பணம் கரைவது  உறுதி - என்று மேலும் தினமணிக் கட்டுரை பரப்புரை செய்கிறது.


பிரச்சினை தீருகிறதோ இல்லையோ என்ற சந்தேகத்தையும் தினமணி எழுப்பியுள்ளதையும் பக்தர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு சிறீரங்கத்தில் கூட்டப்பட்டது - அந்த அமைப்பின் தலைவரான வேதாந்தம் என்பவர்தான் அந்த மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டில் முக்கிய தீர்மானம் - கோயில்களில் தட்சணை கேட்பது பற்றியதாகும். தட்சணை கேட்பது இந்து மதத்தைப் பீடித்த புற்று நோய் என்கிற அளவுக்கு அம்மாநாட்டில் பேசப்பட்டது.


மாநாடு கூட்டி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் போதுமா? அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண் டாமா! திருப்பதி, திருத்தணி சிறீரங்கம் கோயில்கள் முன் உள்ள அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாமா!  அவர்களுக்கு உகந்த முறையில் (உண்ணாவிரதம் போன்ற) அறவழியில் மக்கள் கருத்தை ஈர்க்கலாமே!


ஆன் லைனில் தரிசனத்திற்கு ஏற்பாடு என்கிற வரையில் பக்தி வியாபாரம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. பிரசாதங்கள் அஞ்சல் வழியில் அனுப்பப்படுகின்றன - அது அதற்கு தனித்தனி விலை நிர்ணயம் (Rate).
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கிளைக் கோயில்கள் (Branch)
உருவாக்கப்படுகின்றன - நாகர்கோயிலில் அப்படி ஒரு கிளைக்கோயில் கட்டப்பட்டு வருகிறது.


சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக் கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது என்றால், இவற்றின் பொருள் என்ன! பக்தர்களே சிந்திப்பீர். விடுதலை சொல்லுவதைக் காலந் தாழ்ந்தாவது தினமணி ஒப்புக் கொண்டதைப் பார்த்தீர்களா?

                           -----------------------------”விடுதலை” தலையங்கம் 29-112014

28.11.14

தமிழ்மண் எனும் எரிமலை வெடிக்கும்!


மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியின் அழிவுக்கு எதிரிகள் தேவையில்லை; தனக்குத் தானே தற்கொலை செய்து கொள்ள எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.

மொழிப் பிரச்சினை மிகவும் கூர்மையான நுண்ணிய பிரச்சினை! அதை இலாவகமாகக் கையாளா விட்டால் எதிர்வினை எரிமலை தன் தீக்குழம்பை திக்கெட்டும் வெடித்துப் பரப்பும்!

தமிழ்நாட்டைப்பற்றி பிஜேபி சங்பரிவார்க் கும்பல் இன்னும் தெளிவாக அறிந்து கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படித் தெரிந்திருந்தால் இந்தி யையும், செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிரு தத்தையும் கையில் எடுத்துக் கொண்டு நடவுக்குப் புறப்படுமா?

இந்தப் பிரச்சினையை  உச்சரிக்கும் பொழுதெல் லாம் திராவிடர் கழகமும் மற்றும் பல அமைப்புகளும், தலைவர்களும் பதிலடிக் கொடுத்துச் சவ்வைக் கிழித்திருக்கின்றனரே! - அவற்றையெல்லாம் மறந்து விட்டதா மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற பக்குவமான மொழி என்பதால் உலகெங்கும் கற்பிக்கப்படுகிறது. இப்பொ ழுது அது வேண்டாம் என்றால் அதன் பொருள் என்ன? கல்வியாண்டின் இடையில் இந்தக் கூத்தா?

விஞ்ஞான வளர்ச்சிக்கு வெகுவாகப் பயன்படும் ஜெர்மனியை நீக்கி விட்டு, அந்த இடத்தில் செத்துப் போனவர்களுக்குக் கருமாதி மந்திரம் கூறப்பயன்படும் செத்த மொழியான சமஸ்கிருதத்தைத் திணிப்பது அசல் பைத்தியக்காரத்தனம் அல்லவா - பிற்போக்குத்தனத் தின் உச்சம் அல்லவா?


சமஸ்கிருதம் என்பது என்ன? பலவற்றையும் ஒன்றாகக் கலப்பது என்று பொருள், அப்படி உருவாக் கப்பட்டதால் தான் சமஸ்கிருதம் என்ற நாமகரணம் சூட்டப்பட்டது. பிறவியிலேயே பேதப்படுத்தும் - வருணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கும் வேதங் களும், இதிகாசங்களும், புராணங்களும் கூட்டுச் சேர்ந்ததுதானே சமஸ்கிருதம்.


சமஸ்கிருதம் செய்த கேட்டுக்கு - அளவும், எல்லையும் கிடையாது. தமிழில் ஊடுருவி மணிப் பிரவாள நடையை அறிமுகப்படுத்தியது. அதன் விளைவு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று பல மொழிகளாகச் சிதறுண்டு போனது.


தமிழ் மொழியின் வரலாறு எனும் புகழ் பெற்ற நூலை எழுதிய பார்ப்பனரான பரிதிமாற் கலைஞரும் (சூரிய நாராயண சாஸ்திரி) இதனை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார்.

இவ்வழி மொழிகளிலே தெலுங்கு தான் வடமொழியொடு மிகவும் கலந்து விசேடமான திருத்தப் பாடடைந்தது. தனது நெடுங் கணக்கையே திருத்தி விரித்துக் கொண்டது. பல்லாயிரக்கணக்கான சொற் களையும் மேற்கொண்டது. வடசொல் இலக்கணத்தை யும் மிகத் தழுவிக் கொண்டது. தெலுங்கிலக்கண மெல்லாம் தமிழ்ப் போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கையனுசரிக்கப் புகுந் தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கு இலக்கணம் அமைவதாயிற்று. இது இடைக்கால திலிருந்த நன்னயப்பட்டராகிய பிராமண வையா கரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாக தெலுங்கு தமிழின் வழிமொழியன்றென்பது அசங்க தமாம்!

இவ்வாறே கன்னடமும் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற் றானுந் தன்னைச் சீர்படுத்திக் கொண்டது. இதனா லன்றோ பழங் கன்னடம் என்றும், புதுக் கன்னடம் என்றும், அஃது இரு வேறு பிரிவினதாகியியங்குகின்றது.


இனி  மலையாளமோ வெகு நாள் காறுந் திருந்தா திருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுக்கு முன்னர் எழுத்தச்சன் என்பானொருவனால் மிகத் திருத்தப் பாடடைந்தது. உடனே வடமொழிச் சொற் களையும் சொற்றொடர்களையு,ம், சந்திகளையும், முடிவுகளையும் மலையாளம் மேற்கொண்டது.


மேற்கூறிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப் பையும் அணியையுமுடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன! என்று குறிப்பிட்டுள்ளாரே பரிதிமாற் கலைஞர்.
வடமொழியாகிய சமஸ்கிருதம் என்பது தமிழையும் பிளவுறச் செய்தது. தமிழுக்கு அது செய்த இரண்டகம்  மன்னிக்க தக்கதல்ல; அது போதாதென்று மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் என்று கேந்திர வித்தியாலயா பள்ளிகளில்  6 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பது - எந்த விலை கொடுத்தாவது ஒழிக்கப்பட வேண்டியதாகும்.


தொடக்கத்தில் மூனறாம் மொழியாக ஜெர்மனிக்குப் பதில் இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் உள்ள ஒரு மொழியை விருப்பப் பாடமாக படிக்கலாம் என்று சொன்ன மத்திய அரசு - உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒன்றில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயம் என்று பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளது.


தொலைக்காட்சி விவாதங்களில்  தாங்கள் சொன்னது அப்பட்டமான பொய்யென்பதை பிஜேபி காரர்கள் இப்பொழுதாவது ஒத்துக் கொள்ள வேண்டும். புரட்டுப் பேசுவதிலும், பொய் சொல்லுவதிலும் கொஞ்சம்கூட தயக்கம் காட்டாத அநாகரிகக் கும்பல் தான் இந்த காவிக்கும்பல் என்பது மற்றொரு முறை அம்பலமாகி விட்டது;  அவர்கள் முகங்களெல்லாம் இப்பொழுது வெளிறிப் போய் விட்டன. மத்திய அரசின் இறுதியான - உறுதியான இந்த அறிவிப்புக்குப் பிறகு தமிழ் மண் எனும் எரிமலை உறங்காது என்பதில் அய்ய மில்லை! இந்த வெடிப்பு இந்தியாவின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் இது உறுதி!

                                               ------------------------------"விடுதலை” தலையங்கம் 28-11-2014

மோடிகளும், சீதை வேடம் போட்ட ஸ்மிருதி இராணிகளும்

மகாபாரதக் காலத்தில் மத்திய அமைச்சர்கள்! 


மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி 21ஆம் நூற்றாண் டுக்கானது அல்ல! அது வேத காலத்துக்குப் பொருத்த மான கட்சிதான் - ஆட்சிதான்.


பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடி சிவபெருமானால் கழுத்து வெட்டப்பட்ட விநாயகருக்கு யானைத் தலையை வெட்டிப் பொருத்தியது - அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்திருக்கிறது என்றும், கர்ணன் குந்தியின் கருப்பையில் தரிக்காமல் காது வழியாகக்  பிறந்தான் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்த இதிகாசம் எழுதப்பட்ட காலத்தில் மரபணு அறிவியல் பற்றி அறியப்பட்டுள்ளது என்று ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில் ஒரு பிரதமர் கூறுகிறார் என்றால், இந்தப் பரிதாபத்தை என்னவென்று சொல்லுவது!


பிரதமரின் இந்தக் கூற்றைக் கேட்டு தொடக்கப் பள்ளி மாணவன்கூட கைகொட்டி கெக்கலிப்பான். மோடி தனிப்பட்ட முறையில் இந்து மதத்தின்மீது தீரா வெறி கொண்டவராக இருக்கலாம்.


பிரதமர் என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடிய நிலையில் மூடத்தனங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறலாமா? பிரதமரின் மீதுள்ள மரியாதை வேறொரு மூடத்தனமான சுவாசத்தின் பக்கம் தள்ள இடம் கொடுத்து விடக் கூடாது அல்லவா?


15 கோடி கி.மீ., தூரத்தில் சூரியன் இருக்கும்போதே அதன் வெப்பத்தால் மண்ணில் மனிதன் பாதிக்கப் படுகிறான். அப்படி இருக்கும்போது சூரியனோடு சேர்ந்து ஒரு பெண் பிள்ளை பெற்றாள் என்று நம்புவது, சொல்லுவது - அடி மட்டமான மூடத்தனம் அல்லவா?

பிரதமர் இப்படி என்றால் மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஸ்மிருதிராணி, பிரதமரைத் தோற்கடிக்கும் வகையில் மூடத்தனத்தில் முதல் பரிசைத் தட்டிச் செல்லப் பார்க்கிறார்.

ஜோதிடரிடம் கையை நீட்டிக் கொண்டு அலை கிறார். குடியரசுத் தலைவராக ஆவதற்குக்கூட அம்மை யாருக்கு யோகம் இருக்கிறதாம். இப்பொழுது அவர்மீது சனியனின் பார்வை உள்ளதாம். இதை மாற்றுவதற்கு வீட்டிலேயே யாகம் நடத்தியுள்ளார். இப்பொழுது குடியிருக்கும் அரசு வீடு இராசியில் லாததாம்; அதனால் தான் பல சர்ச்சைகளில் இவர் சிக்கிக் கொள்வதால் வேறு ஒரு வீட்டிற்குச் செல்ல இருக்கிறாராம். இவர்கள் எல்லாம் இந்திய அரசமைப்புச் சட்டத் திற்கு சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் 51a(h) என்ற பிரிவு என்ன கூறுகிறது? மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நிலையில், பிரதமரும், அமைச்சர்களும் விஞ்ஞானத்துக்கு மாறான அஞ்ஞான இருட்டில் உழலுபவர்களாக இருக்கலாமா?


அதுவும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் (கல்வித்துறை) இப்படியொரு மூடநம்பிக்கைவாதியாக இருந்தால், பாடத் திட்டங்கள் எல்லாம் எந்தத் திசையில் அமையும் என்பது முக்கியமான கேள்வியாகும்.


முன்பு பிஜேபி ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி பல்கலைக் கழகங்களில் வேத கணிதம் என்றும், கருமாதி மந்திரம் என்றும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார் என்பதும் இந்த நேரத்தில் நினைவூட்டத் தக்கதாகும்.


வரலாற்றுத் துறைக்கு தலைவராக  ஒய்.எஸ். ராவ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் மகாபாரத கால ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அவர் இதுவரை எழுதிய உருப்படியான வரலாற்று நூல் எதுவும் இல்லை என்று, புகழ் பெற்ற ரொமிலா தாப்பர் போன்ற  வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூகம், பொருளாதாரம், அரசியல் அனைத்துத் துறைகளிலும் பிற்போக்குத்தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் பிஜேபி ஆட்சி இந்தப் போக்கில் தொடர்ந்தால் நாடு 21ஆம் நூற்றாண்டில் பயணிப்ப தற்குப் பதிலாக மகாபாரத காலத்திற்குத் தான் செல்ல நேரிடும்.


மக்கள் மத்தியில் இந்த நிலையை பிரச்சாரத்தின் மூலம் விழிப்பை ஏற்படுத்தித்தான் இவர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.
திராவிடர் கழகம் இந்தப் பகுத்தறிவுப் பணியை முன்பைவிட அதிகமாகவே செய்யும். இடதுசாரிகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் இந்தத் திசையில் பணி ஆற்றுவதில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டமிது.


தேவே கவுடா பிரதமராக இருந்தபோது நாமக்கல் சோதிடரைப் பார்க்க ஒவ்வொரு மாதமும் வருவார்; கருநாடக மாநில முதல் அமைச்சராக இருந்த எடியூரப்பா சோதிடர் பேச்சைக் கேட்டு நிர்வாணமாகப் படுத்துக் கிடந்தார் - ஒரு கோயிலில் படுக்கையாகப் போடப்பட்டு இருந்த கல்லில் போய் முட்டிக் கொண் டார். அதனால் ஏற்பட்ட பலன் என்ன? விளக்கெண் ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைக்க வில்லையே!


மோடிகளும், சீதை வேடம் போட்ட ஸ்மிருதி இராணிகளும் சிந்திக்க மாட்டார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முன்னவர்களுக்கு ஏற்பட்ட கெதிதான் இவர்களுக்கும் என்பது மட்டும் உறுதியான உண்மையாகும்.

                     ---------------------------------"விடுதலை” தலையங்கம் 27-11-2014

27.11.14

ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா?


மணமகள் பாடினியின் கொள்ளு தாத்தா மணிப்பிள்ளை ஒரு முரட்டுச் சுயமரியாதைக்காரர்
குடும்பமே கொள்கைக் குடும்பம்! மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும்
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்லத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்லத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை


கல்லக்குறிச்சி, நவ. 26- கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தியின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்குத் தலைமை வகித்த திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களின் பெயரத்தி பாடினி - பிரபாகரன் ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

அன்புச்செல்வர்கள் இராமதாஸ் - பொன்னெழில் ஆகியோரின் அன்பு மகள் இரா.பாடினி பி.இ., எம்.பி.ஏ., அவர்களுக்கும், அதேபோல, எம்.என்.குப்பம் அருமை அய்யா கண்ணப்பன் - சரசுவதி ஆகியோருடைய செல்வன் பிரபாகரன் பி.இ., எம்.பி.ஏ., ஆகியோருக்கும் நடைபெறக் கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவதில், நடத்தி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.

ஒரு முரட்டு சுயமரியாதைக்காரர்
காரணம், இந்தக் குடும்பம் என்பது அறிவுக்கரசு அவர்கள்  இங்கே குறிப்பிட்டதைப்போல, முழுக்க முழுக்க கடலூரில் என்னுடைய இளமைக் காலம் முதற்கொண்டு, அவருடைய தந்தையாரும், நானும் மிக நெருக்கமாக இருந் தவர்கள். சுயமரியாதைச் சுடரொளியாக இருக்கக்கூடிய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக் கக்கூடிய, உணர்வுகளில் உறைந்திருக்கக்கூடிய,  மணிப் பிள்ளை என்று அந்த வட்டாரத்தில் அழைப்பார்கள், வயதானவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அவருடைய தந்தையார் ஒரு முரட்டு சுயமரியாதைக்காரர். அவரிடத்தில் யாரும் பேசுவதற்குக்கூட தயங்குவார்கள், வேறு வகையான நிலையில் அல்ல, அவ்வளவு வாதப் பூர்வமாக, விவாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்து, பெரியாருடைய கொள் கையை, ஒரு மணித்துளி கிடைத்தால்கூட, அவர்களோடு உரையாடி, அவர்களைத் தன்வயப்படுத்து வார்கள்.
எங்கே இவருடைய கருத்துகளைக் கேட்டால், நாம் மாறிவிடப் போகிறோமோ என்று அஞ்சித்தான், அவரைப் பார்த்தவுடனே, பல பேர் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இன்றைய இளைய தலைமுறைகளுக்கெல்லாம், அவரு டைய தாத்தாவின் அப்பாவைப்பற்றி,  கொள்ளுத்தாத்தா வைப்பற்றி நாங்கள் சொன்னால்தான், இவர்களுக்கேகூட தெரியும். அவ்வளவு தெளிவான, அத்தனை ஆண்டுகால மாக இருக்கக்கூடிய, அவ்வளவு நெருக்கமான குடும்பம்.
இது நான்காவது தலைமுறை
இன்னுங்கேட்டால், மணமகளின் தாத்தாவாக, இன் றைக்கு நம்மையெல்லாம்  வரவேற்று இருக்கக்கூடிய, நேற்று பவழ விழா கண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் தம்பி அறிவுக்கரசு அவர்கள், ஒரு இளைஞனாக இருந்த காலத்திலிருந்து, இன்றுவரையில், நான்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாவலன் என்பது மட்டுமல்ல, மிகப்பெரிய அள வில், எல்லா வகையிலும், அவர்களுடைய வாழ்க்கையில், இந்தக் குடும்பத்தினுடைய வாழ்க்கையில், இந்தப் பிள் ளைகளுடைய வளர்ச்சியில், மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டவனாவேன்.

எனவே, இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில், இது ஒன்றாவது தலைமுறை, இரண்டாவது தலைமுறை, மூன்றா வது தலைமுறையை எல்லாம் தாண்டி, நான்காவது தலை முறை என்று வரக்கூடிய அந்த வாய்ப்பை இன்றைக்குப் பெற்று, அந்த நான்காவது தலைமுறையிலும் கொள்கை தேயவில்லை. கொள்கை வளர்ந்துகொண்டிருக்கிறது. கொள்கையிலே ஒத்துழைக்கக்கூடிய அருமையான சம்பந் தக்காரர்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. எனவே, முதற்கண் யாரையாவது நாம் பாராட்டவேண்டுமானால், மணமகனுடைய பெற்றோர் கண்ணப்பன் - சரசுவதி அவர்களையும், அவர்களுடைய உற்றார், உறவினர்களைத்தான் பாராட்டவேண்டும் இயக் கத்தின் சார்பிலே, காரணம், இந்தக் குடும்பத்தில் நாங்கள் வந்து மணவிழாக்களை நடத்தி வைப்பது என்பது இவர் களைப் பொறுத்தவரையில் சாதாரணம்; அதற்கு மாறாக நடந்தால்தான், அதிசயம். ஆனால், அவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் மிகுந்த தாராள உள்ளத்தோடு, பெருமிதத்தோடு இந்த மணமுறைக்கு ஒப்புக்கொண்டு, எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிதான் மிக முக்கியம் என்பதற்கு முன்னுரிமை கொடுத்தவர்கள், ஒரு எடுத்துக்காட்டான தாய் - தந்தையர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு, மற்றவர்களுக்கு நாம் சொல்லியாகவேண்டும்.

நமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் நாம்
இங்கே, மிக அற்புதமாக சொன்னார், அறிவுக்கரசு அவர் கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண் டவர். இதைவிட பொருத்தமான மணமக்களை நாம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மணமகள் பாடினி; அவர் பொறியாளர் - மேலாண்மை படிப்புத் துறையில் எம்.பி.ஏ. என்று சொல்லக்கூடிய அந்தப் படிப்பு மிக சிறப்பு. ஒரு காலத்தில், நமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒடுக்கப் பட்ட சமுதாயத்தவர்கள் நாம்.  ஆனால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் மணிமணியாகப் படிக்கிறார்கள். எல்லா ஆற்றலும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மணமக்கள் இருவரையும் பார்த்தீர்களேயானால், வங்கியில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். மணமகன் பிரபாகரன் ஆனாலும், மணமகள் எங்கள் பேத்தி பாடினி அவர்களா னாலும், அவர்கள் இருவருமே வங்கி அதிகாரிகள்.

இந்த அளவிற்கு அவர்களைப் படிக்க வைத்து அவர் களை சிறப்பான அளவிற்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் பகுதிக்கு வருகிறபொழுது, இது புதுச்சேரி மாநிலத்தை தாண்டி, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு கிராமப் பகுதிதான். ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு பகுதி. நான் இந்தப் பகுதிக்கு இப்பொழுதுதான் முதன்முறை யாக வருகிறேன். உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

இப்படிப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய இந்தக் குடும்பத்தில், தன்னுடைய மகனை, இந்த அளவிற்கு அவர்கள் ஆளாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், இதைவிட பெருமைமிக்க நல்ல குடும்பம் வேறு இருக்க முடியாது என்பதுதான் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.

நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்; நம் முடைய அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள், மணமக் கள் இருவரும் படிக்கும்பொழுதே, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு, கற்பனையான ஒன்று, நீண்ட காலமாக, ஆரியத்தினுடைய வருகையினால், நம் மூளை யில் விலங்கு போடப்பட்டது. அந்த விலங்கிலே இன்றைக் கும் நம்மைத் தாழ்த்திக் கொண்டிருப்பது, இந்த ஜாதி விலங்குதான். மிக முக்கியமானது.


துக்ககரமான கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள்

நான் இங்கே வருவதற்கு முன்புகூட, தொலைக்காட்சி யில் செய்தி முடிந்து, கல்யாண மாலை என்ற ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையில் ஒரு பார்ப்பன நண்பர் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில், படிப்பு இவ்வளவு படித்திருக்கிறார் என்று மற்ற விவரங்களையும் போட்டுத்தான் நடத்துகிறார்.

ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். பொறியியல் படிப்பை நாமெல்லாம் முன் பெல்லாம் படிக்க முடியாது. இன்றைக்கு உள்ள இளைஞர் களுக்கெல்லாம் பழைய காலத்தைப்பற்றியெல்லாம் தெரியாது. இவர்கள் எல்லாம் இப்பொழுது சிமெண்ட் சாலையில் பயணிப்பவர்கள்.

கைநாட்டுப் பேர்வழிகள் எல்லாம் இருந்த காலம் ஒன்று உண்டு; அதுமட்டுமல்ல, கடிதங்கள் போட்டால், துக்ககர மான கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள். வயதானவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இது எதற்காக என்று பல பேருக்குத் தெரியாது. அப்பொழுதெல்லாம் நம் சமுதாய மக்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. பெரிய மிராசுதாரராக இருப்பவர், வில் வண்டியில் போய் இறங்குவார். ஆனால், சொத்து வாங்கும்பொழுது, பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று, கையெழுத்துப் போடச் சொன்னால், அந்த மிராசு தாரர் சிரிப்பார். பிறகு, அந்தப் பதிவாளர் புரிந்துகொண்டு, அந்த மிராசுதாரரும் கட்டை விரலை உயர்த்திக் காட்டுவார். இப்பொழுதுதான் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ரப்பர் ஸ்டாம்பு பேடு உண்டு. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கட்டை வண்டி மையைத்தான் கட்டை விரலில் தடவுவார்கள். பதிவாளர் அந்தக் கட்டை விரலை உருட்டி, கையொப்பம் வாங்குவார்.

உங்களை சங்கடப்படுத்துவது என்னுடைய கருத்தல்ல!
இப்படி இருந்த சமுதாயம்தான் நம்முடைய சமுதாயம். இந்த சமுதாயத்தில்தான், இன்றைக்கு எங்கள் பிள்ளைகள் மிக உயர்ந்த படிப்பை படித்திருக்கிறார்கள். இவர்கள் பொறியாளர்கள் படிப்பு படித்தது எப்படியென்றால், தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், இது நீங்கள் சரசுவதி பூஜை கொண்டாடியதினால் வந்தது இல்லை. உங்களை சங்கடப்படுத்துவது என்னுடைய கருத்தல்ல. நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இந்த சமயத்தில் மணமக்களுக்கு அறிவுரை சொல்வது முக்கியமல்ல; மணமக்கள் இருவரும் விஷயம் அறிந்தவர் கள்; ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டவர்கள். இந்த மண விழாவிற்கு வந்திருக்கின்ற தாய்மார்களாகிய உங்களுக்குத் தான் தேவை. ஏனென்றால், இவ்வளவு தாய்மார்கள் நாங்கள் பொதுக்கூட்டம் போட்டால்கூட வரமாட்டீர்கள்; ஆகை யால், உங்களை சுலபமாக அனுப்புவதாக இல்லை. உங் களுக்கு இந்தக் கருத்துகளைச் சொல்லவேண்டும்; அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எங்களைப் பார்த்தவு டன், ஏதோ சொல்கிறார்களே, என்று யாரும் பயப்படக் கூடாது.

எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடிந்தது? பெரியார் பாடுபட்டார்; பெரியார் கேட்டார்; ஏனய்யா, நம் பிள்ளைகள் படிக்கக்கூடாதா? என்று கேட்டார். அதனுடைய விளைவு என்ன? நம்முடைய தாத்தா காலத்தில் கைநாட்டுப் பேர் வழிகள் நாம். அதனால்தான் துக்கரமான விஷயத்திற்கு கடிதாசியின் மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருந்தார்கள். ஏனென்றால், அவர்களுக்குப் படிக்கத் தெரியாது; அப்படி கடிதாசியின் மூலையில் மை தடவியிருந்தால், இரண்டு மைல், மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு வாத்தியாரிடம் சென்றுதான் அந்தக் கடிதாசியைக் காட்டுவார்கள். அவர்தான் அந்த ஊரிலேயே படித்திருப்பார். அய்யா, ஏதோ துக்ககரமான செய்தி வந்திருக்கிறது; உடனே படித்துச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். அவரும் அவரும் அந்தக் கடிதாசியில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவார்.
தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடை
இன்றைக்கு அதற்கெல்லாம் அவசியமே கிடையாது; அந்த அளவிற்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற் பட்டிருக்கிறது. பெண்களுடைய படிப்பு சதவிகிதம் இருக்கிறது பாருங்கள், நம் நாட்டில் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு, எல்லா தகுதிகளும் வாய்ந்தவர்களாக பெண் கள் இருக்கிறார்கள்.
பெண்களுக்குச் சம உரிமை; பெண்களுக்குச் சொத் துரிமை; பெண்களுக்குப் படிப்பு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு இவை அத்தனையும் தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடையாகும். அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். அருமைத் தாய்மார்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த மண்ட பத்தைப் பாருங்கள்; ஒரு மாநாடு போல் போடப்பட்டிருக் கின்ற அத்தனை நாற்காலிகளும் நிறைந்திருக்கிறது. ஏனென்றால், இது செல்வாக்குள்ள குடும்பம்; அவர்கள்பால் அன்புள்ளவர்கள் அத்தனைப் பேரும் இங்கே வந்திருக் கிறீர்கள்.

இவ்வளவு தாய்மார்களுக்கு விளங்கும்படியாக நான் சொல்கிறேன். ஏனென்றால், இது நம்ம குடும்பம்; அதனால் உரிமை எடுத்துக்கொண்டு தாராளமாகச் சொல்கிறேன்.
இந்தப் பக்கம் பாருங்கள்; அங்கேயும் பாருங்கள்; ஆண்கள் எல்லாம் நின்றுகொண்டிருக்கிறார்கள். நம் முடைய தாய்மார்கள் எல்லாம் வசதியாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள். கூச்சப்படாமல் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
              --------------------(தொடரும்)--”விடுதலை” 26-11-2014

Read more: http://viduthalai.in/page-4/91847.html#ixzz3KAlLavLD
 ******************************************************************************************

ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா?
ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம் ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா?
பாடினி-பிரபாகரன் திருமண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கல்லக்குறிச்சி, நவ. 27- ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா? என்றும் ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா? என்றும் கேள்வி எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தி பாடினி - பிரபாகரன் ஆகியோரின் இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ஆண்களுக்கா? பெண்களுக்கா?
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இதுபோன்ற ஒரு கிராமத்தில், ஆண்கள் எல்லாம் நின்று கொண்டிருக்க, பெண்கள் தைரியமாக நாற்காலியில் உட்காரக்கூடிய சூழ்நிலை இருந்திருக்கிறதா? என்று கேட்டால், கிடையவே கிடையாது!


ஒரு அம்மணியைக் கேட்டால், அவர் பளிச்சென்று சொல்வார், இது என்னங்க, இதைப் போய் பெரிய விஷய மாகப் பேசுகிறீங்க, நாங்கள் முன்னதாகவே வந்துவிட்டோம்; அதனால் அமர்ந்துவிட்டோம்; அவர்கள் தாமதமாக வந்தார்கள், இடமின்மையால், நின்றுகொண்டிருக்கிறார்கள்.
இன்னுங்கேட்டால், குறைவாக நாற்காலிகள் போடப் பட்டு இருந்தால், யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்று கேட்டால்கூட, பெண்களாகிய தாய்மார்களாகிய உங்களுக்குத்தான் நாற் காலிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் - நியாயப்படி!
பெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்!
ஏனென்று கேட்டால், ஆண்கள் அணிந்திருக்கக்கூடிய உடைகளை மதிப்புப் போட்டால், சில ஆயிரம்தான் இருக்கும்; ஆனால், தாய்மார்கள் உடுத்திருக்கக்கூடிய பட்டுப்புடவை என்ன விலை இருக்கும்? நீங்கள் அணிந்திருக்கக்கூடிய நகைகளின் மதிப்பு என்னவாக இருக்கும்? எனவே, நாற்காலியில் உட்காரக்கூடியவர் களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றால், பெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.


அப்படி இருந்தும், நாற்காலி காலியாக இருந்தாலும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாற்காலியில் உட்காரக்கூடிய துணிச்சல் பெண்களுக்கு இல்லை.
இப்பொழுது அப்படியில்லை. நாற்காலியில் பெண்கள் உட்கார்ந்து விட்டால், அந்த நாற்காலி மற்றவர்களுக்கு சுலபமாகக் கிடைக்குமா? என்று சந்தேகம் வரக்கூடிய அளவிற்கு வந்தாயிற்று.


இந்த மாறுதல்கள் எல்லாம் எப்படி வந்தன? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம்தான் சாதித்தது!

பெரியார் கேட்டார், ஆணும் - பெண்ணும் சமமாக இருக்கவேண்டும். இரண்டு கைகளுக்கும் சமபலம் இருக்கவேண்டும்; இரண்டு கண்களுக்கும் சம பார்வை இருக்கவேண்டும்; இரண்டு காதுகளும் சரியாகக் கேட்க வேண்டும்; இரண்டு கால்களும் சரியாக இயங்கவேண்டும். ஒரு கால், ஒரு கை இயங்கினால், அதற்குப் பெயர் பக்கவாதம் என்று பெயர்.


அதுபோல், ஆண் - பெண் இந்த சமுதாயத்தில் இரண்டு பேர்களும் சரி சமமானவர்கள். இரண்டு பேர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும். ஆனால், மனுதர்மம் என்ற ஆரிய தர்மம், பார்ப்பன தர்மம் இந்த நாட்டில் உள்ளே புகுந்ததினால் என்ன நடந்தது என்றால், எந்தக் காலத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று ஒரு தர்மம் ஏற்பட்டது.
சுயமரியாதை இயக்கம், திராவிடஇயக்கம்தான் அதனை உடைத்தது. பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்தான் இதற்கு முன்னோடியாக இருந்தார்கள்.


ஆகவே, இன்றைக்கு அதனுடைய விளைவுதான்; அந்தத் தொண்டினுடைய கனிந்த கனிகள்தான் இவர்கள் எல்லாம் இன்றைக்குப் பிடித்த மணமக்களாக இருக் கிறார்கள்.


ஆகவே, இந்த அற்புதமான வாய்ப்பில் உங்களை யெல்லாம் இந்தச் சந்திப்பதில், இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டு கிறேன்.


அடுத்தபடியாக, திருமணம் - வாழ்க்கை இணையேற்பு விழா. ஒருவர் எஜமானர் அல்ல; மற்றொருவர் அடிமை அல்ல. இரண்டு பேரும் நண்பர்கள். அவர்கள் சொன்னது போல், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் நண்பர்களாக இருந்துகொண்டு, ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் நல்லது.
நான் ஏன் மணமகனுடைய பெற்றோரை, அந்தக் குடும்பத்தினரை வெகுவாகப் பாராட்டுகிறேன் என்றால், ஜாதி என்பதற்கு ஒன்றும் அடையாளம் கிடையாது; அது இடையில் ஏற்பட்ட ஒரு கற்பனை. ஆதியில் ஜாதி கிடையாது. வள்ளுவருடைய குறள் என்ன?

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
அதுமட்டுமல்ல,

நமக்கு அனைத்துயிரும் ஒன்று என்று எண்ணித்தான் நம்முடைய சமுதாயம் வாழ்ந்திருக்கிறது.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

எல்லாமே நமக்கு ஊர்தான்; எல்லாருமே நமக்குச் சொந்தம்தான். யாரும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வாழ்ந்தவன்தான் தமிழன்.


எப்படி ஜாதி நுழைந்தது? ஜாதிக்கு என்ன அடையாளம்?

அவனுக்கு அவ்வளவு பெரிய விரிந்த மனப்பான்மை, பரந்த மனப்பான்மை இருந்த இடத்தில் எப்படி ஜாதி நுழைந்தது? அந்த ஜாதிக்கு என்ன அடையாளம்? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


ரு உதாரணம் சொன்னால், உங்களுக்கு நன்றாக விளங்கும்.

அறிவியல் ரீதியாக ஜாதிக்கு ஆதாரம் உண்டா? தேர்தல் நேரங்களில் ஜாதி பயன்படுகிறது; மற்ற மற்ற இடங்களில் ஜாதி பயன்படுகிறது. ஆனால், அறிவியல்  ரீதியாக, கற்பனை என்று சொன்னாலும், அதன் காரணமாக படிக்காதவர்களாக, உத்தியோகம் மறுக்கப்பட்டவர்களாக, சமூகநீதி மறுக்கப்பட்டவர்களாக இருந்ததினால்தான், நாம் அந்த அடிப்படையை சொல்கிறோம்.

ஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது

ஆனால், அதேநேரத்தில் நீங்கள் நன்றாக எண்ணிப் பாருங்கள்; அண்மைக்காலத்தில், ஒரு நல்ல மனிதநேயம் நம் நாட்டில் எத்தனையோ சங்கடங்கள் இருந்தாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

அந்த உதாரணத்தை உங்களுக்குச் சொன்னால், ஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது என்பது நன்றாக விளங்கும்.

அது என்னவென்றால்,

விபத்து நடக்கின்ற நேரத்தில், ஒரு சிலருக்கு மூளைச் சாவு ஏற்படுகிறது. அவர்கள் எல்லாம் கட்சிக்காரர்களாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது;  பகுத்தறி வாளர்களாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மனிதநேய சிந்தனையாளர்களாக இருந்தால் போதும்.
மூளைச்சாவு அடைந்தவரின் பெற்றோர்களிடம், மருத்துவர்கள் சொல்கிறார்கள், என்ன செய்யப் போகிறீர் கள் என்று?

உடல் உறுப்புக் கொடை

அந்தப் பெற்றோர்கள் சொல்கிறார்கள், எங்களுடைய மகனின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படட்டும்; அவன் உயிரோடு இல்லை என்பது எங்களுக்கு இழப்பு தான். இருந்தாலும், அவன் உறுப்புகளாவது மற்றவர்களுக் குப் பயன்படட்டும். ஆகவே, அவனுடைய உறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடையாக அளிக்க சம்மதிக்கின்றோம் என்று சொல்கிறார்கள்.

உடல் உறுப்புக் கொடை என்பதிருக்கிறதே, இப் பொழுது பெரிய அளவில் மனிதநேயத்தோடு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் ஒரு செய்தியை நீங்கள் பார்த்திருப் பீர்கள்; ஏனென்றால், தொலைக்காட்சி, பத்திரிகைகளைப் படிப்பவர்கள் நிறைய இங்கே இருக்கிறீர்கள். அந்த செய்தி என்ன செய்தி என்றால், பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை எடுத்து, விமானம் மூலமாக சென்னைக்குக் கொண்டு வருகிறார்கள். காவல்துறை யினரின் உதவியால், போக்குவரத்திற்கு இடையூறின்றி, விமான நிலையத்திலிருந்து சென்னை அடையாறு மருத் துவமனைக்கு வருகிறது. அங்கே இதயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து,  அவருக்குப் புது வாழ்வு கொடுக்கிறார்கள்.


அதேபோல, கண் கொடை அளிக்கிறார்கள்; குருதிக் கொடை அளிக்கிறார்கள். தலைவர்கள் பிறந்த நாளில், நம்முடைய இளைஞர்கள் குருதிக் கொடை அளிக்கிறார் கள். நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். அங்கே எங்காவது ஜாதிக்கு இடம் உண்டா? ஜாதி என்பது கற்பனை என்பது நிரூபணமாகிறது அல்லவா!


நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டால், நம்மாள் உடனே பதில் சொல்வான். சரி, உங்களுடைய குருதிப் பிரிவு என்னவென்று கேட்டால், தெரியாது என்று சொல்வான். பல பேருக்கு அவர்களுடைய குருதிப் பிரிவு என்னவென்று தெரியாது.

ஒவ்வொருவருக்கும் தங்களுடைய குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்

எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். குருதிப் பிரிவை முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஏனென்றால், நமக்கு ரத்தம் வேண்டும் என்றாலும், குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்; அவசரத்திற்கு நாம் ரத்தம் கொடுக்கவேண்டும் என்றாலும், நம்முடைய குருதிப் பிரிவைத் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.


அதனால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், மாணவர்கள் யார் சேர்ந்தாலும், முதலில் நாங்கள் செய்வது, அவர்களுடைய குருதிப் பிரிவு என்ன? என்று கேட்டு, அதனைப் பதிவு செய்து ஒரு அடையாள அட்டையைக் கொடுப்போம்.


ஆனால், இங்கே அமர்ந்திருப்பவர்களில் பல பேருக்கு தங்களுடைய குருதிப் பிரிவு தெரியாது. ஆனால், ஜாதியைப்பற்றி கேளுங்கள், நான் செட்டியாருங்க; என்ன செட்டியார் என்று கேட்பான்; செட்டியாரில் பல பிரிவு இருக்கும்; பிரிவுக்குள் பிரிவு என்று அது நீண்டுகொண்டே போகும். ஆகவே, ஜாதிக்கு எங்கேயாவது அடையாளம் இருக்கிறதா? கிடையவே கிடையாது!
உதாரணத்திற்கு, ஒரு அய்யங்கார் அடிபட்டு விட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; ரத்தம் தேவைப்படுகிறது.  அய்யங்காரிடம் டாக்டர் சொல்கிறார், உங்களுடைய ரத்த வகை ஏ1 பாசிட்டிவ்.  உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று. அதற்காக விளம்பரம் கொடுத்துள்ளோம் என்று சொல்கிறார்.


டாக்டரிடம் அய்யங்கார் சொல்கிறார், நான் தான் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்லிவிட்டேனே, இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்.


உடனே டாக்டர் அய்யங்காரிடம் சொல்கிறார், நாம் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களுக்கு ரத்தம் கொடுக்க முன் வந்திருக்கிறார். அந்த ரத்தத்தை உங்களுக்குச் செலுத்தினால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்கிறார்.


அய்யங்காரோ, அப்புறம் என்ன டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுதானே என்கிறார்.


டாக்டர் அய்யங்காரிடம், நீங்களோ அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர்களைத் தொட்டாலே நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை உங்களு டைய உடம்பில் ஏற்றவேண்டும் என்றால், உங்களுடைய அனுமதி வேண்டும் அல்லவா? நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்கமாட்டீர்களா? என்று சொல்கிறார்.


பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று!

இப்படி டாக்டர் சொன்னால், அந்த பேஷன்ட்டான அய்யங்கார் என்ன சொல்வார், அய்யய்யோ அவருடைய ரத்தம் வேண்டவே வேண்டாம்; நான் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வாரா?


என்ன டாக்டர் நீங்க, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! என்ன நீங்க இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள்? உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்தத் தாழ்த்தப்பட்டவருடைய ரத்தத்தை எனக்குச் செலுத்துங்கள் என்பார்.


அப்படியென்றால், இவரைக் காப்பாற்றுவதற்கு, தாழ்த்தப்பட்டவருடைய ரத்தம் தேவை; இந்த சமுதாயம் வளர்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களுடைய உழைப்பு தேவை. ஆனால், ஜாதி இருக்கவேண்டும் என்று சொன்னால், இது செயற்கையானது அல்லவா? இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா? இயற்கையானது அல்ல என்பதுதானே உண்மை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.


செட்டியார் ரத்தம் செட்டியாருக்கு இல்லை; வன்னியர் ரத்தம் வன்னியருக்கு இல்லை; முதலியார் ரத்தம் முதலியா ருக்கு இல்லை; நாடார் ரத்தம் நாடாருக்கு இல்லை.


ஆகவேதான், நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜாதி என்பது கற்பனை; எனவே, இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
இங்கே மணமக்கள் இரண்டு பேரும் மிகவும் மகிழ்ச்சியாக அதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் - பாடினி ஆகிய இருவருக்கும் ஏற்பட்டிருக் கின்ற மிகத்தெளிவான இந்த வாய்ப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.


எனவேதான், இந்தக் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த மணமக்கள் அருமையான ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.


ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும்
ஆகவேதான், இந்த நிலையில், இவர்கள் இந்த ஏற்பாட்டினை செய்தது, பாராட்டத்தக்கது என்று சொல்லி, இந்த மணமக்கள் இருவருமே சிறப்பாக வாழவேண்டும், சிக்கனமாக வாழவேண்டும், மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழவேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி,
மணமக்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக  இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி, சிறப்பான வகையில் இவர்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும் என்று சொல்லி,
இந்த மணமுறையைப் புகுத்தியவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார்; இம்மணமுறைக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஆகவே, அந்த இருபெரும் தலைவர்களுடைய தொண் டுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                                                    ----------------------”விடுதலை” 27-11-2014


26.11.14

தீண்டாமை Untouchability ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக ஜாதி Caste ஒழிக்கப்பட வேண்டும்!

நவம்பர் 26


இந்நாளை மறக்கவே முடியாது - ஜாதியை ஒழிப்ப தற்காக, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் கட்டளைக்கிணங்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தைக் கொளுத்திய நாள் மட்டுமல்ல; (26.11.1957) இந்த நவம்பர் 26 (1949) அன்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் முழுமை பெற்று அங்கீகரிக்கப்பட்ட நாள்கூட!


நவம்பர் 26ஆம் நாளை தந்தை பெரியார் போராட்டத்திற்கான நாளாக தேர்ந்தெடுத்ததற்குக்கூட இந்தப் பொருத்தமானதுதான் காரணமாகும்.


நாடு சுதந்திரம் அடைந்தபிறகு உரிய வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுதான் இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் மாநாட்டில் அறிவித் ததற்கு முரணாக 10 சதவீத மக்களே வாக்குரிமை பெற்றவர் களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு அரச மைப்புச் சட்டத்தை உருவாக்குவதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியாரே!


இது திராவிட மக்களைக் கட்டுப்படுத்தாது என்று கூட தந்தை பெரியார் சொன்னதுண்டு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் - உட்பிரிவுகள் 13(2); 25(1); 26, 29(1); 368 ஜாதியையும் மதத்தையும் பாதுகாக்கின்றன.


இதனைத்தான் தந்தை பெரியார் கண்டித்தார். இதற்காகவே தஞ்சாவூரில் ஜாதி ஒழிப்பு தனி (ஸ்பெஷல்) மாநாட்டைக் கூட்டினார் கொட்டு மழையில் இலட்சக் கணக்கான மக்கள் கூடிய அம்மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு களைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார்.


ஜாதி ஒழிய, தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால் இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1957 நவம்பர் 26ஆம் தேதி அன்று மாலையில், இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது என்று அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பிராமணன், சூத்திரன் என்று பிறப்பின் அடிப்படையில் ஒரு நாடு இருக்குமேயானால் அங்கு உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்ற அர்த்தமுள்ள ஆழமான வினாவை தந்தை பெரியார் எழுப்பினார்; அந்தக் கேள்விக்கு இன்றுவரை தான் நேர்மையான பதில் உண்டா?


ஜனநாயகவாதி - முற்போக்குச் சிந்தனையாளர் என்று பொதுவாகக் கூறப்படும் ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தும் உருப்படியான முடிவு எடுக்கப் படாதது வெட்கக் கேடே! மாறாக சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனை என்ற ஒரு சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றினார்கள். (Prevention of Insult to National Honour Act - 1957) அதன் மூலம் சுதந்திரம் என்ற பெயரால் மனுதர்ம அரசியல் சட்டம்தான் அமலுக்கு வந்தது என்று தானே பொருள்.


சட்டத்தை நிறைவேற்றி விட்டதன் மூலம் அரசாங்கத்தினர் சாதியைக் காப்பாற்றிதான் தீர வேண்டும் என நமக்குச் சவால் விட்டிருக்கின்றனர். இந்தச் சவாலுக்கு நீங்கள் சட்டத்தைக் கொளுத்தாவிட்டால் மனிதர்கள் தானா? 

சட்டம் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன் மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும் என்று அறிவித்தார் அறிவாசான் அய்யா. (விடுதலை 14.11.1957).


மூன்றாண்டுவரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட சட்டம் வழி செய்தது. அதைப் பற்றியெல்லாம் திராவிடர் கழகத் தோழர்கள் அஞ்சவில்லை; குடும்பம் குடும்பமாக கைப்பிள்ளைகளோடுகூட, நிறை மாதக் கர்ப்பிணிகள்கூட ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தி சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.


சிறையில் பலர் மாண்டனர்; விடுதலையான பிறகும் கூட, சிறையில்பட்ட அவதியால்  நோய் வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவிக் கொண்ட தோழர்கள் பலர் உண்டு.


உலக வரலாற்றில் மனித சமத்துவத்துக்காக இத்தகைய தியாகப் போராட்டத்திற்கு இணையாகவோ, இதில் ஈடுபட்ட கருஞ்சட்டைத் தோழர்களின் தியாகத்துக்குச் சமமாகவோ கூறுவது அரிதேயாகும்.


1973 டிசம்பர் 8,9 தேதிகளில் சென்னைப் பெரியார் திடலில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை தந்தை பெரியார் கூட்டினார். அம்மாநாட்டில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆவது பிரிவில் கண்டுள்ள தீண்டாமை (Untouchability) ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக ஜாதி (Caste) ஒழிக்கப்பட வேண்டும் என்று மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.


இதுவரை இதுபற்றி இந்திய அரசு கவலைப்படவில்லை என்பது வெட்கப்படத்தக்கதாகும்.


தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும். தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஏற்று திமுக அரசில் மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றியும், அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.


இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்தத் திசையில் சிந்தித்த - கவலைப்பட்ட தலைவர் தந்தை பெரியார்தான்;இயக்கம் திராவிடர் கழகமே!
தந்தை பெரியார் அடையாளம் காட்டிய தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியாரின் கட்டளையை நிறைவேற்ற சர்வப்பரித் தியாகம் செய்ய உறுதி கொள் வோம்!


ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்காக தியாகத் தீயில் குளித்தெழுந்த, உயிர் நீத்த கருஞ்சட்டைச் சீலர்களுக்கு வீர வணக்கத்தை இந்நாளில் செலுத்துவோம்!

                 -----------------------”விடுதலை” தலையங்கம் 26-11-2014

அய்யப்பன் கோயில் பற்றி ஒரு சங்கதி

அய்யோ' ப்பா! 


அய்யப்பன் கடவுள் பற்றி ஆயிரம் ஆயிரம் கேள்விகளை திராவிடர் கழகம் எழுப்பியுள்ளது. இதுவரை முறையான பதில் இல்லை. 


அரிகரப் புத்திரன் என்கிறீர்களே. அரியும் ஆண், அரனும் ஆண். அப்படியிருக்கும்போது எப்படி ஆணுக்கும் ஆணுக்கும் அய்யப்பன் பிறந்திருக்க முடியும்? என்று கேள்வி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். அது கடவுள் சமாச்சாரம்; கேள்வியெல்லாம் கேட்டுத் தொலைக்கக் கூடாது என்பதுதான் ஒரே பதில்.


ராமஜென்மபூமி பற்றி கேட்டாலும், ராமன் பாலம் பற்றி பிரச்சினை எழுப்பினாலும், பா.ஜ.க. உள்ளிட்ட பக்தகே()டிகள் சொல்லும் ஒரே பதில் - இது நம்பிக்கையைப் பொறுத்த விஷயம் - இதில் பகுத்தறிவுக்கோ, சட்டத்துக்கோ இடம் இல்லை என்பதுதான்.


சரக்கு இல்லாதவர்கள் காற்றில் சலாம் வரிசை ஆடுகிறார்கள்.
 

இப்பொழுது அய்யப்பன் கோயில் பற்றி ஒரு சங்கதி - நாமாக இட்டுக் கட்டிச் சொன்னதல்ல - அரைப் பார்ப்பன ஏடான குமுதம் ரிப்போர்ட்டர் தரும் தகவல் (10.6.2010 பக்கம் 38, 39)


அய்யப்பன் கோயிலில் ஊழல் அமர்க்களமாக நடக்கிறதாம். அய்யப்பன் கோயில் வருமானத்தை விட செலவுதான் அதிகமாம். இந்த நிலை நீடித்தால் கோயிலை ஊத்தி மூட வேண்டியதுதானாம்.


ஒரு முறைஅரவணை தயாரித்தால் 250 மி.லி. கொண்ட ஆயிரம் டப்பாக்களில் அடைத்து விற்கலாம் என்பது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் விதி. அப்படியிருக்க கடந்த சீசனில் 955 டப்பாக்கள் மட்டுமே தயாரித்-ததாக கணக்குக் காட்டிய தேவஸ்தான சிப்பந்திகள் ரூ 50 விலையுள்ள 66,577 டப்பாக்களை கூலிங் சேம்-பரில் மறைத்து வைத்து விற்பனையும் செய்திருக்கிறார்கள். மேலும் இதற்-காகப் பயன்படுத்தப்பட்ட அரிசி, வெல்லம் போன்ற பொருள்களில் அவர்கள் கை வைக்க, அத்தனையையும் கண்டுபிடித்த தேவஸ்வம் போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் இதை அரசுக்கு அறிக்கையாகவும் சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த ஊழலின் மய்யமாக சபரிமலை மாறி-விட்டது என ஆளும் கட்சி அமைச்சரான சுதாகரன் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இதோடு முடிந்ததா? நீதிமன்றம் என்ன சொன்னது?

தேவஸ்வம் ஊழியர்கள் 68 பேரின் இட மாறுதலுக்-கெதிராக அதன் ஊழியர்கள் கூட்டமைப்பு கேரள உயர்-நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் தேவஸ்வம் போர்டை கடுமையாகச் சாடியிருக் கிறது. அதில், தேவஸ்வம் போர்டில் ஊழல் என்பது ஒரு பொதுத் தத்துவ மாகவே மாறிவிட்டது என்று கூறியுள்ளது.

இவ்வளவு நடக்கிறது. அய்யப்பன் என்ன செய்கிறார்? குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டு இருக்கிற இவர்தான் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்துக் கிழிக்கப் போகிறாராம்! ஹி... ஹி.... வாயால் சிரிக்க முடியவில்லையே!

--------------------------- மயிலாடன் அவர்கள்  6-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25.11.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 44

இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

நான் அம்பைப் பிடுங்க. என்னைப் பார்த்துப் பயந்து உடனே உயிரை விட்டான். நான் அவனுடைய தாய் தந்தையரிடம் போய் நடந்ததைக் கூறி மன்னிக்க வேண்டி னேன். அவர்கள், நீ தெரிந்து செய்திருந்தால் உன் குலமே அழிந்துவிடும். எங்களை எங்கள் மகனிடம் கொண்டு போய்விடு என்றார்கள். நான் அவர்களை அவ்விடம் கொண்டுபோய் சேர்க்க அவர்கள், மகனே, நீ வேதத்தை அத்தியயனம் செய்வதை இனி நாங்கள் கேட் போமா? என்று பலவாறு புலம்பிக் கிரியைகளைச் செய்தனர். அப்போது இறந்த முனிவன் ஒளியுருவையடைந்தான். தேவேந்திரன் வந்து அவனை விமானத்திலேற்றிப் போனான். பின் தாய் தந்தையர் நீ அறியாத்தனத்தால் அவனைக் கொன்றதால் உன்னைச் சாம்பலாக எரிக்காமலிருக்கின்றோம். ஆகையால் நீயும் எங்களைப்போலப் புத்திர சோகத்தால் மரணமடை வாய் என்று சபித்து எரியிற் புகுந்து விண்ணுலகடைந்தனர். அந்த மகானுடைய சொற்படி நான் இன்று புத்திரசோகத்தால் இறக்கப்போகிறேன். அநியாயமாக இராமனைத் துரத்தி னேன். கோசலே! என்னைத் தொடு. இராமன் ஒரு தடவை என்னைத் தொட்டாலும் போதும்; ஒருமுறை என் கண்ணில் பட்டாலும் போதும்; நான் பிழைத்திருப்பேன். அவனை நானிறக்கும் போது பார்க்கமுடியவில்லையே. இராமனைப் பார்க்காததால் உண்டாகும் சோகம் என் உயிரை வற்றச் செய்கிறது. அவனுடைய பேரழகு வாய்ந்த மதுரமான வாசனை வீசும் முகத்தை அவன் திரும்பி வரும்போது பார்ப்பவர்களே புண்ணியம் செய்தவர்கள் என்றிப்படிக் கதறினான். பின் பாதி இரவு கழிந்தபின் துக்கந் தாங்காமல் உயிரை விட்டான்.


கோசலையும், சுமித்திரையும் அவன் பக்கத்திலேயே படுத்துத் துயின்றிருந்தனர். விடிந்ததும் மற்றைப் பெண் களெல்லாம் எழுந்து அரசன் செத்துக் கிடப்பதைப் பார்த்து அலறினர். அவர்கள் அலறுவதைக் கேட்டுக் கோசலையும் சுமித்திரையும் எழுந்து அரசனிறந்ததுணர்ந்து கதறினர். கைகேயி முதலிய பெண்களும் வந்து அரற்றினர். கோசலை தசரதனைக் கட்டிக்கொண்டு, அடி கைகேயி! என் மகனை இருந்தும் இறந்தவனைப்போல் செய்து விட்டாய்! கண வனையும் கொன்றுவிட்டாய். இனி நான் உயிர் வாழேன். கணவரோடு உடன்கட்டையேறுகிறேன் என்றாள். மந்திரிகள் தசரதனுடைய பிணத்தை எண்ணெ யிலிட்டுப் போற்றினர். உறவினர் சிலர் கொளுத்தி விடுவோமென்று கூறினும், அவர்கள் பிள்ளைகள் வரும்வரை அச் செயலை நிறுத்திவைப்போமென்றனர். மறுநாள் காலை யில் அமைச்சர், அந்தணர், குடிகளனைவரும் சபை கூடினர். அவர்கள் வசிட்டனை நோக்கி அரசனில்லா மையால் விளையும் கேடுகளைக் கூறி அரசனுடைய மக்களில் யாரையாவது உடனே அரசாக்குமாறு வேண்டினர். வசிட்டன், மன்னன் அரசைப் பரதனுக்குக் கொடுத்துவிட்டான். ஆதலின் சித்தார்த்தன் முதலிய வீரர்கள் உடனே புறப்பட்டுச் சென்று பரதனைக் கண்டு நான் அவசரமாக அழைத்த தாகப் பரதனை அழைத்து வரட்டும். இராமன் காட்டையடைந்ததையும், தசரதன் மாண்டதையும் அவனிடம் கூற வேண்டாம் என்றனன். சித்தார்த்தன் முதலியோர் புறப்பட்டுப்போய்ப் பரதனை யடைந்தனர். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

இராமன் சொல்லியனுப்பியதைக் கேட்டவுடன் மூச்சற்று விழுந்த தசரதனைக் கோசலை பார்த்து அநியாயக் காரனென்றும், பாசாங்குக்காரனென்றும், வஞ்சகனென்றும் கூறுவதைக் கவனித்தால், தீய பெண்களுக்கொருவழி காட்டியாக இருக்கிறாளென்பது திண்ணம், அவளைப் போலும் பெண்களைக் கொண்ட வனுக்குக் கூற்றுவனும் வேறு வேண்டுமோ? பின்னரும் அவள், தன்னையும் தன் மகனையும் தசரதன் கெடுத்துவிட்டதாகப் பலவாறு அவதூறாகப் பேசுகிறாள். அவள் அப்போது பேசிய பேச்சுகள் மிகவும் கொடியவை. அதைக் கேட்டவுடன் தசரதன் நடுங்கி மனமுடைந்து மூச்சற்றான். பின் அவளை நோக்கிக் கைகுவித்து வேண்டுகிறான். இவ்வளவுதூரம் தன் கணவனையே நடுநடுங்கச் செய்த கோசலையைப் பெண் என்பதா? பேய் என்பதா? பேய்கூட இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்ளாதே. கோசலை, சுவை மிகுந்த மாமிசங்களை உண்டவளான சீதை காட்டில் என்ன செய்வாள்? என்று புலம்புகிறாள். சீதை காட்டில் முழுப்பன்றிகளையும் மான்களையும் தின்பது இவளுக்குத் தெரியாது. இதனால் சீதை முதலியோர் நாடோறும் புலாலுண்போரென்பது உறுதியாகின்றது.


கோசலை, கணவன், மகன் அல்லது தந்தை இவர்களுடைய ஆளுகையிலேயே பெண்கள் இருக்க வேண்டியவர்கள், பெண்கள் பிறருக்கு அடங்கியிராமல் ஒருக்காலும் தம்மனப்படி நடக்க முடியாதென்று விதியுள்ளதன்றோ? என்று கூறுகிறாள். இதனால் ஆசிரியர் தம் பெண்மக்களை மிகவும் தாழ்த்தியே வந்தனரெனத் தெரியவருகிறது. தற்காலத் திலும் ஆசிரியர் பெண்கள் முத்தியடையாரென நம்புகின்றனர். நூல்களெழுதுகின்றனர். நடையிலும் அவ்வாறே செய்கின்றனர். ஆரியப் பெண்களில் திருநீறு அணியும் குடும்பத்தைச் சேர்ந்தோர் தம் கணவரைப் போலத் திருநீறணிவதில்லை. திருநீறணியும் குடும்பத்தினர் கணவனைப் பறிகொடுத்த விதவைகளுக்கு நம்மைப் போல் திருநீறணிய உரிமை தருகின்றனர். இதனால் அவர்கள் விதவைகளைத் தமக்குச் சரியான நிலை யுடையரெனக் கருதுகின்றனரென்பது விளங்குகிறது. பெண் மக்களை உரிமையற்றவர்களாக ஆக்கிக் கல்வியற்றவராகப் போகும்படி செய்த இவ்வாரியர் வழக்கமே தமிழ்மக்களிடையும் பரவுவதாயிற்று. பண்டைத் தமிழ் மக்கள் ஆண்களுக்கும் பெண் களுக்கும் வேறுபாடு காட்டாத நிலையினர்.


தசரதன் சாகும்போது கோசலையும் சுமித்திரையும் அவன் பக்கத்திலேயே படுத்துத் தூங்கியிருந்தனர். மற்றைய பெண்கள் எழுந்து மிகவும் கூச்சலிட்டுப் புலம்பியபோதுதான் விழிக்கின்றனர். சாகும் நிலைமையில் அவனிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை யினால் அவனிடம் அவர்களுக்கிருந்த அன்பின் அளவு விளங்குகிறது. கணவன் உயிர் போய்க்கொண்டிருக்கும் போது, மனைவியருக்கு உறக்கம் வருமா? கண வனிறந்ததையுணர்ந்த கோசலை கைகேயியையே திட்டுகிறாள். பின் உடன்கட்டை யேறுவதாகக் கூறுகிறாள். ஆனால், கடைசியில் அப்பேச்சு வெறும் பேச்சாகவே போகிறது.


சுமந்திரன் மிகவும் தீயவனென்பதும், ஏமாற்றுக் காரனென்பதும், தீயவனாகிய தசரதனுடைய சூழ்ச்சி களுக்கு உடந்தையாயிருக்கிறானென்பதும் முன் கட்டுரைகளிற் கண்டோம். அது இக்கட்டுரையிலும் வலியுறுகிறது. அவனிடம் இராமன் மட்டுமே செய்தி சொல்லி யனுப்பியிருக்க, அவன் இலக்குவன் கூறியதாகவும் சில கொடிய பொய் மொழிகளைக் கூறுகிறான். முன் ஒன்பதாம் கட்டுரையில் இராமன் மட்டுமே செய்தி கூறியனுப்புகிறான் என்பதைத் தெளிவாகக் கண்டோம். இதனால் அவன் மிகவும் பொய்யன் என்பது விளங்குகிறது. இராமனால் பொய்புகலத் தூண்டப்பட்டபோது அதை கண்டிக்காமல் இணங்கி இருந்தவன்தானே இவன். இவ்விடத்து மொழிபெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அது கவனிக்கத்தகுந்தது. அது வருமாறு, (பக்கம் 244) சுமந்திரனிடத்தில் இராமனும் இலட்சுமணனும் சீதையும் என்ன சமாச்சாரம் சொல்லியனுப்பினார்களென்று முதலில் வால்மீகி வருணித்ததற்கும் பிறகு, அவர் அதை அரசனிடத்தில் தெரிவிப்பதற்கும் சில பேதங்கள் காணப்படுகின்றன. இலட்சுமணனுடைய வார்த்தைகள் முதலில் காணப் படவில்லை என்பதைக் கவனிக்கவும். இக்குறிப்பைக் கவனித்தால் ஒன்று வால்மீகி முனிவர் முன்னுக்குப்பின் முரணாக எழுதி அதனால் திறமையற்றவன் என்ற பெயரடைய வேண்டும், அல்லது சுமந்திரன் உண்மையில் கொடிய பொய்யனாக வேண்டும். இவ்விரண்டில் வால்மீகியிடத்தில் அறியா மையைக் கற்பிப்பதிலும் சமந்திரனிடம் பொய்மை யையும் வஞ்சகமும் உண்டு எனும் உண்மையறிவதே முறை. ஏனெனில், அவர் அத்தகையன் என்பது முன்னரே நிலைநாட்டப் பெற்றது.


இராமனும் சீதையும் மகிழ்ச்சியோடும் படகேறிச் சென்றிருக்கச் சுமந்திரன் அவர்கள் அழுதுகொண்டு சென்றார்களென்று கூறுகிறான். பின் சீதை கைகேயியைப்பற்றி ஒரு வினோதமான வார்த்தை கூறினாளெனக் கூறுகிறான். இது அபாண்ட மான புளுகே. பின் அதைக்கூறினால் கோசலைக்குப் பிரியமா யிருந்தாலும் அரசனும் கைகேயியும் உயிரை விட்டாலும் விடுவார்கள் என்று சிந்தித்து அதை மறைக்கிறான். இதனால் இப்பேச்சு கைகேயியினுடைய துர்நடத் தையைப் பற்றியே இருக்குமென நினைக்க வேண்டிய திருக்கிறது. இப்பேச்சு சீதை கூறாத பொய்மொழியே. இதைச் சுமந்திரன் வேண்டுமென்று கட்டிக்கூறத் தொடங்குகிறான். இவ்வளவு தீமையாளனாகிய சுமந்திரனை மந்திரியாகக் கொண்டிருந்த தசரதன் தன்மை மிக அழகியதே! நல்ல வாய்ப்பாக அவ்வித அபாண்டப் புளுகை கூறாது நிறுத்தினானே சுமந்திரன்! அதுவே, மிகப் பெருமையுடைத்து.

---------------------- தொடரும்--”விடுதலை” 25-11-2014

24.11.14

அய்யப்பப் பக்தர்களின் சிந்தனைக்கு...


அய்யப்பப் பக்தர்களே, உங்கள் மீது எங்களுக்கு ஒன்றும் கோபம் இல்லை - 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று மகரஜோதியைத் தரிசித்து வந்தால் பாவங்கள் பறந்து போய்விடும் என்பதுதானே உங்கள் நம்பிக்கை?

அந்த மகரஜோதி என்பதே மோசடி - தெய்வ ஜோதி அல்ல; அய்யப்பனின் மகிமையல்ல என்று தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிந்துவிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

பாவங்கள் தொலைவது பிறகு இருக்கட்டும். இவ்வாண்டு (14.1.2011) மகரஜோதியைத் தரிசிப்பதற்காகச் சென்று திரும்பிய 102 பக்தர்கள் புல்மேடு எனும் இடத்தில் பரிதாபகரமான முறையில் பலியாகி விட்டார்களே - நெஞ்சம் பதறுகிறதே - 1999 ஆம் ஆண்டிலும் இதேபோல 54 பக்தர்கள் பலியானார்கள்.


உண்மையிலேயே அய்யப்பனுக்குச் சக்தியிருந்தால் தன்னை நாடி வந்த பக்தர்களைக் காப்பாற்றியிருக்க மாட்டானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

பொன்னம்பலமேடு பகுதியில் தோன்றுவதாக நம்பும் மகரஜோதி என்பது உண்மையானதல்ல - தெய்வ சக்தி யல்ல; மனிதர்களால் காட்டப்படுவதுதான் என்று திரு வாங்கூர் தேவசம் போர்டு ஒப்புக்கொண்ட செய்தி தமிழ், ஆங்கில ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் (தொலைக் காட்சிகளில் 31.1.2011 அன்றும், ஏடுகளில் 1.2.2011 அன்றும்) விரிவாக வெளிவந்தனவே - கேட்டீர்களா - படித்தீர்களா?

102 பக்தர்கள் பலியான நிலையில் கேரள உயர்நீதி மன்றம் சந்தேகத்தை எழுப்பியதால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை தேவசம் போர்டுக்கு ஏற்பட்டது. அந்தப் போர்டு கூடி (31.1.2011) கடவுள் சக்தியல்ல - மனிதர்கள் காட்டும் செயற்கையானதுதான் மகரஜோதி என்பதை நீதி மன்றத்தில் சொல்லப் போகிறோம் என்று கூறிவிட்டார்களே!

1973 ஆம் ஆண்டிலேயே கேரளாவில் உள்ள பகுத்தறி வாளர்கள் 24 பேர் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு நேரில் சென்று, அங்கு மின் வாரியத்தைச் சேர்ந்த கோபி என்னும் ஓட்டுநர்தான் சூடக் கட்டிகளை அலுமினிய சட்டியில் வைத்துக் கொளுத்திக் காட்டுகிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். பகுத்தறிவாளர்கள் பட்டாசுகளை வெடித்துக் காட்டி பக்தர்களின் குழப்பங்களைத் தெளிய வைத்தார்கள். இவர்கள்மீது காவல்துறை வழக்குப் போட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது - அவர்கள் செய்தது குற்றம் அல்ல என்றும் கூறிவிட்டதே! 1980 இல் ஒருமுறை திருச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு சென்று வழக்கமான திசைக்கு எதிர்த் திசையில் விளக்கைக் (ஜோதியை) காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள். பிளிட்ஸ் ஆங்கில இதழும் (16.1.1982) தெகல்கா இதழும் (21.6.2008) மகரஜோதி பொய்யை, மோசடியை படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்திற்றே! கேரள மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஜி. சுதாகரனும், தேவசம் போர்டு தலைவராக யிருந்த சி.கே. குப்தனும், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்திக் காட்டுகிறான் என்று ஒப்புக்கொண்டார்களே! இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஜோசப் எடமருகு அன்றைய கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நாயனாரைச் சந்தித்து இதுகுறித்துச் சொன்னபொழுது, அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்; ஆனாலும், இதில் தலையிட வேண்டாம் என்று கூறினாரே! இப்பொழுது உள்ள கேரள மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அச்சுதானந்தன், உண்மை எதுவாகயிருந்தாலும் மக்களின் மதப் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளாரே - அது சரியானதுதானா? அதேநேரத்தில், உண்மையை ஒப்புக்கொண்டு அதனை கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப் போவதாக தேவசம் போர்டு அறிவித்துவிட்டது.

மார்க்சியம் பேசும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி மத மோசடிக்குத் துணை போவது வெட்கக்கேடானதும் - வருந்தத்தக்கதும் அல்லவா!

பொதுமக்கள் குறிப்பாகப் பக்த கோடிகள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் ஆகும்.

மகரஜோதி என்றும், அது தெய்வ சக்தி என்றும், அது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் தோன்றும் என்றும்தானே நம்பிக் கொண்டிருந்தீர்கள்; அந்த ஜோதியைத் தரிசித்தால் பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும், புண்ணியம் கிடைக்கும் என்று நம்பி தானே 48 நாள்கள் (ஒரு மண்டலம்) விரதம் இருந்து, பணத்தைச் செலவு செய்து, வெகுதூரம் பயணமும் செய்தீர்கள். இப்பொழுது அந்த மகர ஜோதியே உண்மையல்ல என்று ஆகிவிட்டதே!

கடவுள் அருளால் தோன்றுவது அல்ல என்று சம்பந்தப்பட்டவர்களே சொல்லிவிட்டார்களே! பக்தியைக் காட்டி பணம் சம்பாதிக்கச் செய்த திட்டமிட்ட ஏற்பாடு -மோசடி என்று தெரிந்துகொண்டுவிட்டீர்களா இல்லையா?

இன்னொரு சேதி உண்டு.


1956 இல் ஒருமுறை இந்த அய்யப்பன் கோயிலே தீப்பிடித்து எரிந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டீர்களே - இனியும் ஏமாறப் போகிறீர்களா? மோசடிக்குப் பலியாகப் போகிறீர்களா? உங்களுக்கு உண்மையிலேயே பக்தியிருந்தால் உள்ளூரில் கோயில்கள் இல்லையா? அந்தக் கோயில்களில் இருக்கும் சாமிகளுக்குச் சக்தியில்லை என்று கருதுகிறீர்களா?

சிந்திப்பீர்! எங்களுக்காக அல்ல, உங்களுக்காக! உங்கள் அறிவும், பொருளும், உழைப்பும், காலமும் வீணா கலாமா? ஒரே ஒருமுறை சிந்தித்தாலே போதும் - உண்மை தெரிந்துவிடும் - மூட நம்பிக்கையும் ஒழிந்துவிடும்!

மானமும் அறிவும் மனிதனுக்கழகு
- தந்தை பெரியார்
---------------------”விடுதலை” தலையங்கம் 2-2-2011

மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்!இவற்றை ஒழித்தாக வேண்டும்-பெரியார்

முப்பெரும்கேடுகள்
- தந்தை பெரியார்-
இப்போது உள்ளபடி நானும்,  நீங்களும் கீழ்சாதி. இந்த இழிநிலை நீங்க, கிளர்ச்சி நடந்து  தீரவேண்டும். ஆகவே இப்போது எனக்கு அளித்த வரவேற்பு எல்லாம் நாம் எல்லோரும் மீண்டும் சிறை செல்ல வழி யனுப்பு உபசாரமே என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது! சிறைமீண்ட பெரும் பாலான நம் தோழர்களும், மீண்டும் சிறை ஏகத் தயார்! போராட்டத்துக்குத் தேதி கொடுங்கள்! என்று சொல்கிறார்கள்.


சிறை சென்றவர்களில் சில பேர் செத்தனர், இவர்களெல்லாரும் சாகாதிருந் தால் ஆயிரம் ஆண்டுகளுக்கா இருக்கப் போகிறார்கள்? நோயால் தூக்குப் போட்டுக் கொண்டா செத்தோம்? இல்லை! பின் எதற்காக? இலட்சியத்திற்காகச் செத்தனர். எனக்கும் உங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். எந்த நேரத்திலேயோ சாகும் நாம், இந்த உயர்வான இலட்சியத் துக்காகச் சாவோமே! செத்தவர்களைக் கண்டு  நாம் வெட்கப்பட வேண்டும். நாமும் இலட்சியச் சாவு பெறத் துணிய வேண்டும்.


நமது இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். காரணம் விளங் கினால்தான் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்! தோழர்களே!  இந்த நாட்டிலே மனித சமுதாயத் துக்கு மூன்று பெரிய கேடுகள்!  மக்கள் நன்மை தீமை உணர இவற்றை  ஒழித்தாக வேண்டும்.


முதலாவதாக மேல்சாதி.... கீழ் சாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சம மானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந் தவர்கள்.


மனிதனில் எதற்கு மேல்சாதி.... கீழ்சாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!


மேல்சாதி என்பது பாடுபடாத சோம் பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ் சாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் சாதி. பாடுபட்டதைச்  சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.


இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து, பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப் படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடு படுகிறான்? ஏழை என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணி யானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்ப்பந்தம், அடக்குமுறை ஆண்களுக் குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங் களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவை யில்லாதது; அக்கிரமமானதுங்கூட; பொருத் தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.


இங்கு மூன்று பேர் மேல் சாதி; 97 பேர் கீழ்ச்சாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மை யினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்து கிறார்கள்.


காரணம் 1. கடவுள்; 2. மதம் - சாஸ்திரம்; 3. அரசாங்கம்.


கடவுள் பெயரால் ஏன் மேல் சாதி கீழ்சாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா, வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக் கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?
திராவிடர்கழகம் என்றால் கடவுள் இல்லை, மதத்தை  எதிர்க்கிறது, நேரு அர சாங்கம் ஒழிய வேண்டு மென்பது தானா? என்கின்றனர்.


பாடுபடாத சோம்பேறிக் கொள்ளைக் காரன்களுக்கு அனுமதி அளிக்க இந்த மேல் சாதி பாதுகாப்பென்றால் ஏன் இவற்றை ஒழிக்கக் கூடாது? சூழ்ச்சி சுயநலக்காரன் வாழவே இந்த ஆட்சி; இதை ஒழிக்கப் பாடுபடாவிட்டால் நமக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? இவற்றை ஒழிக்க, நாம் மனிதத் தன்மையை அடைய முடியாதபடி செய்ய, இம்மூன்று தன்மைகளும் மக்களை ஏமாற்றி துப்பாக்கி, இராணுவம் பேரால் மிரட்டுகின்றன.


இதற்குக் கிளர்ச்சி என்பது சாதாரண மானது; போதாது. இரத்த ஆறு ஓட வேண்டும். நேர்மையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். இந்த மாதிரியான நிலை ஏன் ஏற்பட்டதென்றால் நமக்குக் கோழைத் தனம்; அறிவில்லாத தன்மையால் ஏற்பட்ட குறைகள்! பின் எதற்காக இம்மாதிரி வேறு பாடுகள் இருக்க வேண்டும்?


மத-சம்பிரதாயங்களால்தான் இந்த வேற் றுமைகள் ஏற்படுகின்றன. இவை ஒழிய, ஆணும், பெண்ணும் பாடுபடவேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் இக்காரி யத்தில் இறங்க வேண்டும்.


உலகத்தில் 30 கோடி மக்களைக் கொண்ட ரஷ்யா, 65 கோடி மக்கள் உள்ள சைனாவில் கடவுள், மதமில்லை! சாஸ்திர சம்பிரதாயமில்லை! ஆண், பெண் பேத மில்லை! உத்தியோகத்தில், பட்டாளத்தில், போலீசில் இரு பிரிவினரும் சமம். அங்கு ஆண்கள் செய்யும் வேலையைப் பெண்கள்  பார்க்கிறார்கள்.  அங்கெல்லாம் எப்படி இந்த நிலைமை  வந்தது?


இராஜாவைப், பாதிரியை வெட்டி வீழ்த்தினார்கள்; கோயில்களை இடித்துத் தள்ளினார்கள்! எனவே அங்கு ஆண் எசமானுமில்லை. பெண் அடிமையுமில்லை.


இந்த நிலையிலே ஒன்று நீயா! அல்லது நானா! என்பதுதான் நமது முடிவாக இருக்க வேண்டும்; இந்த இழிநிலையை நீக்க எல்லோருமே தான் சாவோமே! என்ன முழுகி விட்டது? கடவுள் அப்படிச் சொன் னார்! சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது? என்றெல்லாம் மனிதன் பயங்காளிப் பழக்க வழக்கத்தில் ஊறிப்போய்விட்டான்.


இம்மாதிரி முயற்சி, நமது கிளர்ச்சி சாதி ஒழியவேண்டுமென்பது.  இதற்கு எவ்வளவு தூரம் போக வேண்டும்? முதலாவது சாதியைப் பாதுகாக்கும் கடவுளை ஒழிக்க வேண்டும்.


நாம் ஏன் 4-ஆவது 5-ஆவது சாதி? ஏன் பறையனென்றால் கடவுளையும், மதத் தையும் நம்புகிறான். இதை நம்புவனெல் லாம் சாதியில் பறையன், எனவே நாம் சாதியையும் கடவுளையும் ஒழிக்க வேண் டும். நீ என்ன மதம் என்று கேட்டால், நான் அறிவு. மதமென்று சொல்ல வேண்டும். கடவுள் இல்லை, சாஸ்திரமில்லை என்று சொல்லவேண்டும்; கடப்பாறையை விழுங்கி விட்டுச் சுக்குக் கஷாயம் குடித்தால் போதுமா? ஏன் என்று கேட்க வேண்டாமா? மதம், கடவுள் இப்படி! இதைப் பாதுகாக்க இப்படி அரசாங்கம் ஒன்று இருக்கிற தென்றால் இதை ஒழிக்க வேண்டாமா?


காந்தி இவற்றையெல்லாம் நினைத் திருப்பாரா? இல்லையே, இதனால்தான் காந்தி பார்ப்பானுக்கு மகான்! எனக்கு அவர் சாதாரண மனிதன்! சாணியையும், கல்லை யும் கடவுளாக்குபவன் மனிதனை மகாத்மா என்றால் நம்பத்தானே செய்தான்? இதை எதிர்க்க  திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எவன் பாடுபட்டான்? சொல்லப் பயப் படுகிறானே? சொல்பவனைச் சிறையில் போடுவதும், கொடுமைப்படுத்துவதுமா அரசாங்கம் என்பது? மக்களை நேர் மையாக ஆள்வதல்லவா அரசாங்கம்!


பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத் தான் அரசாங்கம் உள்ளது; சட்டதிட்டம் மீறினால் போலீஸ், பட்டாளம், ஜெயில், துப்பாக்கியெல்லாம்.


இந்தக் கொடுமைகளை மாற்ற வேண்டுமென்று ஒருவனும் சொல்ல வில்லை. பாடுபடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் சொன்னார்! சொன்னவரை ஒழித்தார்கள்!  புத்த நிலை யங்களைக் கொளுத்தினர். திருவள்ளுவர் இவையெல்லாம் அக்கிரமமென்றார்.


அவர் சொல் இன்று குப்பையில்! இராமாயணம், கீதை முதலிய கசுமாலம் (மலக்கழிவு)  இம் மாகாணத்தில் முன்நிற்கின்றன. இவற்றைக் கொளுத்து என்று சொல்ல ஒருவனு மில்லை, திராவிடர் கழகத்தைத் தவிர! இவனில்லையென்றால் உங்கள்  கதி இன்று எப்படி இருக்கும் என்று நினையுங்கள். வேறு எவன் இதைச் சொல்லி இருக்கிறான்?
காங்கிரஸ்காரன் அவ்வளவு பேரும் கடவுளை நம்பணும், மதத்தை நம்பணும், அதைக்காப்பாற்ற அரசாங்கம் தேவை, என்பவர்கள், கடவுள், மதம் வேண்டு மென்கிற காங்கிரசை எதிர்ப்பவன், எதிர்க் கிற எதிர்கட்சி என்று கூறி, காங்கிரசுக் காரனுக்குப் பாதுகாப்பான சட்டசபையில், பார்லிமெண்டில் (நாடாளுமன்றத்தில்) இருந்து கொண்டு வயிறு வளர்க்கிறான். வெளியிலும் சொல்லிக் கொண்டுமிருக் கிறான்.


திரு. ம.பொ.சிவஞானம் நம்மை எதிர்த்துப் பார்ப்பானிடம் பொறுக்கப் போகிறார். நாம் தமிழர், என்னும் கட்சிக் காரர்கள் கடவுளைச் சாதியைப் பற்றிப் பேசினால் வாய் சுட்டுவிடும் என்கின்றனர்! ஆனால் ஒரு  காரியத்தில்  - தனிநாடு தேவை என்பதில் ஒத்து வருகிறார்கள்; பாடுபடுகிறார்கள்.


கண்ணீர்த்துளிகள் பார்ப்பானைப் பற்றி, கடவுளைப் பற்றி, சாமியைப்பற்றி மூச்சு விடுகிறார்களா? பார்ப்பான் தயவில் ஓட்டுப் பிச்சைப் பெற்றுப் பதவிக்குப் போக வேண் டுமென்றே கட்சி வைத்துக் கொண்டிருக் கிறார்கள். கம்யூனிஸ்டும் அப்படியே; தலைவர்கள் பார்ப்பான் (சிரிப்பு)! அங்கு வேறு என்ன இருக்க முடியும்? மதத்தைக் காப்பாற்றணும், கட்சியைக் காப்பாற்றணும், பார்ப்பன ரல்லாத பணக்காரனை மாத்திரம் ஒழிக்க வேண்டும்  என்கிறான்.

காங்கிரஸ் கருதுவதோ பார்ப்பானுக்குச், சாதிக்குக், கடவுளுக்கு, மதத்துக்குக், காங்கிரசுக்குப் பாதுகாப்பு தந்து, பதவி ஒன்றே போதும் என்கிறது. கடவுள், சாஸ் திரம் ஒழிய வேண்டுமென்று  கூற வேறு யார் இருக்கிறார்கள்? நாங்கள் இல்லா விட்டால்  பள்ளர், பறையர், சூத்திரன், பார்ப்பான் காலில் விழுவார்கள். அவன் நட்ட கல்லில் முட்டிக் கொள்வார்கள். எவனாவது  இனி கடவுள் மதத்தைப் பற்றி பேசினால் ஒழிக்க வேண்டாமா? கொள் ளையடிக்கிறார்கள், கொடுமை செய் கிறார்கள்.


இம்மாதிரி செய்பவர்களே கீழ்ச்சாதி - அயோக்கியனென்பதானால் அது பார்ப்பானைத்தான் பெரிதும் சொல்ல வேண்டும்; நோகாமல் வஞ்சித்துச் சாப் பிடுகிறான். மனிதனுக்குத் தேவையான  காரியங்களை நாம் செய்வது. அதன் பலனை நாம் அனுபவிப்பதில்லை. ஆனால் இவை ஒன்றும் செய்யாத பார்ப்பான்தான் அனுபவிக்கிறான்.


ஆகவே பார்ப்பான்தான் கீழ்ச்சாதியாகும். வலுத்துவன் இளைத்த வனைச் சுரண்டாமல், உதைக்காமல் பாது காத்தலே அரசாங்கக் கடமை.  இப்போது அப்படி இல்லாமல் வலுத்தவனுக்காத்தானே அரசாங்கமிருக்கிறது! அறிவு, உணர்ச்சி இருக்கிறவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலையில், நாம் அறிவிலிகள், உணர்ச்சி யற்றவர்களாதலால் சும்மா இருக்கிறோம்.


புத்தி, மானம் உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பாற்றுமென்று நினைக்க லாமா?..... பார்ப்பான் மேல் சாதியா? அவன் கடவுள், சாஸ்திரத்தைக் காப்பற்ற வேண் டுமா? அதற்குப் பாதுகாப்பான அரசாங் கத்தை ஆதரிக்க வேண்டுமா? நாம் இவைகளை முட்டாள் தனம் என்று உணர வேண்டும். சைனா, ரஷ்யா மாதிரி ஆக வேண்டும். இவற்றைச் செய்யப் பகுத்தறி வாதியாக வேண்டும்.


மொத்த உலக ஜனத்தொகை 250 கோடி. சைனா, ஜப்பான், ரஷ்யா, போன்ற நாட்டு 100 கோடி மக்களுக்கு மேல் கடவுளில்லை என்பவர்கள். அவர்கள் மற்றும் 100 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம் கிறிஸ்தவர் களுக்குக் கடவுள் உண்டு; மதமுண்டு. அவர்கள் கடவுள் எப்படி இருக்கிற தென்றார்கள்?
நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் கட வுளை? அன்பு, ஒழுக்கமான, நேர்மையான ஒரு கடவுள்; அதற்கு உருவமில்லை அது ஒன்றும் வேண்டாத கடவுளென்கிறார்கள்.


இந்துக்களையெடுத்துக் கொள்ளுங்கள். குரங்கு, பாம்பு, கழுகு, பன்றி, குதிரை, ஆடு, மாடு, எலி, மரம், ஆறு, குளம், அசிங்கக் குட்டை, எல்லாம் கடவுள். (பைத்தியக்கார னுக்கு கள் ஊத்தினது மாதிரி  கடவுள்கள்)
செருப்புக் கடவுள் - கரூர் பக்கம் சக்கிலி, கதவு அளவு செருப்பு செய்து அதற்குச் சூடம் காண்பிக்கிறான்.


கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப் பாட்டி. வேறு எந்த நாட்டுக் காரனாவது செய்கிறானா? நமதென்கிற கடவுளுரு வத்தைத் துலுக்கன் உதைப்பான். பார்ப்பான் சுங்கம் வசூலிக்கவே தவிர வேறு எதற்கு? அவனுக்குக் கடவுள் பக்தி உண்டா உங்களைப்போல்? இந்த இராமன் சிவன், கிருஷ்ணன், நம் கடவுள்களா?


எல்லாம் வடநாட்டில் இருந்து பார்ப்பான் கொண்டு வந்த கடவுள்களே! இவற்றை நம் நாட்டில் கொண்டு வந்து வைத்துள்ளான். உதைத்து நம்பவைத்து, காசு பறிக்கிறான். இராமன், கிருஷ்ணன் எவனுக்கோ பிறந்து செத்தவன்களை நமக்குக் கடவுளென்றால் பிறந்தான், செத்தான் என்றால் கடவுள்களா அவன்கள்? இறப்பு, பிறப்பு இல்லாதவன் கடவுள் என்று கிறிஸ்தவர், முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.


பாகவதத்தில் கிருஷ் ணனுக்கு இலட்சம் பெண்டாட்டிகள், பல லட்சம் வைப்பாட்டிகள்! பல பெண்களை அவமானப்படுத்திக் கெடுத்தவன். அவன் படத்தை நம் பெண்கள் துடைப்பத்தால் அடித்துக்  காறித்துப்ப வேண்டாமா? ஆண் களுக்குத் தான் புத்தியில்லை என்றால், பெண்களாவது நினைத்துப் பார்கக வேண் டாமா? அவன் படத்தை வீட்டில் வைக்க லாமா? கொலைகாரனைக், கொள்ளைக் காரனைக் கடவுளென்று அவன் அயோக் கியத்தனத்தைப் போற்றிக் கும்பிட்டால் பார்ப்பான் நம்மை சூத்திரன், பறையன், பள்ளனென்று  ஏன் சொல்லமாட்டான்? இராமாயணமும், பாரதமும் மனித சமு தாயத்துக்குப் பித்தலாட்டத்துக்கு ஆதாரம்.


இவை கடவுள் கதைகள். இவற்றை இராசகோபலாச்சாரியும், சங்கராச்சாரியும் வானளாவப் புகழ்ந்து  இவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்கிறார்கள். அது அந்தச் சாதியின் ஒழுக்கம். திரௌபதி அய்ந்துபேர் போதாதென்று ஆறாமவனை யும் காதலித்தவள்! சீதை இராவணனுடன் போனவன். அவள் சினையானது இலங் கையில்! இராமன்  பிள்ளைத்தாய்ச்சியுடன் கூட்டி வந்தான். அகலிகை ரிஷி பெண் டாட்டி, தேவகுரு பெண்டாட்டி.

இருவரும் (தாரை, அகலிகை)  விபசாரத்தனம் செய்து, தடயம்  கண்டுபிடித்து, கேசு (வழக்கு) ருசுவாகித் தண்டனையும் ஆகியுள்ளது. இம்மாதிரி ருசுவான கேசுள்ளவர்களுக்குப் பதிவிரதைப் பட்டம் என்பது டாக்டர் இராஜனுக்கு மந்திரி வேலைகொடுத்தது போல் அல்லவா? அவர்கள் மோசமான சாதி.

ஆனதால் அவர்களுக்கு அந்த ஒழுக்கம் பொருத்தம். நாம் அப்படி சொல்லலாமா? புத்தி, மானம் இல்லா விட்டால் இவ்வளவு அவுசாரிகளைக் (விபசாரிகளை) கும்பிட்டால் ஏன் நம்மைச் சூத்திரன் என்று கூறாமலிருப்பான்? இவற்றைக் கண்டிக்க வேண்டும். இவற்றைக் கும்பிடலாமா? இந்தப் புத்தியை நாம் மாற்ற வேண்டாமா?


கிறிஸ்தவனில் சாதி உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம்களில் பார்ப்பான்  துலுக்கன், பறை துலுக்கன் இல்லை. ஒரே பைபிள்; ஒரே குர்ஆன்; ஒரே ஏசு. ஒரே நபி தலைவன். உனக்கு (திராவிடனுக்கு) யார் தலைவன்? இராசகோபாலாச்சாரி, சங்க ராச்சாரி உனக்குத் தலைவனா? இப்பொழுது நடைமுறையிலுள்ள ஆண்டு எண்ணிக் கைக்கு அவர்களுக்கு ஆதாரம் உண்டு. உனது ஆண்டுக்கு ஆதாரம் ஏது? இராமா யணமா? பாகவதமா? உன்னை அதில் அரக்கன், சூத்திரன், தேவடியாள் மகன் என் கிறான் - ஏற்கலாமா நீ? அதன்படி இந்த ஆட்சிக்காரன் சட்டத்திலும்  சூத்திரன் என்கிறான்.


ஆகவே தோழர்களே! முதலில் கூறிய மூன்று கேடுகளையும்  ஒழிக்க வேண் டாமா?


மணியம்மை திருவண்ணாமலை பஸ்ஸில் வரும்போது நான்கு பார்ப் பனர்கள் இந்த  இராமசாமி ஆரம்பத்தில் ஈரோட்டிலிருந்து செல்லாக்காசாகி, திருச்சி வந்து, நான்கு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு, பல லட்சம்  பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். நமது நேரு வந்து 4000 பேர்களை உதைத்து,  ஜெயிலில் போட்டு ஒழிக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  அதனால் ஒழிந்தார்கள் என்று பேசிக் கொண்டு வந்தார்களாம். இதிலிருந்து நம்மை ஒழித்துக்கட்டி விட்டதாக அவன் களுக்குள் எண்ணம்.


தீபாவளிபண்டிகை விமரிசையாக நடப்பதாக எண்ணி நம்மைக் கிண்டலாக தினமணிக்காரன் எழுதுகிறான். இந்தக் கதைப்படி உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளிந்தானென்றும்,  கடவுள் பன்றி அவதாரம்  எடுத்து மீட்டு, அசுரனைக் கொன்று, தேவர்களைக் காப்பாற்றினான் என்றும் கூறுகிறான். இது எப்படி என்றால் உன் அப்பன் எங்கே என்றானாம்? ஒருவன். என் அப்பன் வானம் ஓட்டையாகி விட்டது. ஆகையால் எறும்புத் தோலை உரித்து அடைக்கப் போயிருக்கிறான் என்றானாம்!


இதைப் போன்று பெரும் புளுகு அல்லவா அந்தக் கதை?அடுத்து வரும் கிளர்ச்சிக்கு அறிகுறியாக அதிகமான பேர் தமிழ்நாடு நீங்கிய இந்தியநாடு படத்தைக் கொளுத்தத் தயாராயிருக்க வேண்டும்.  நம் நாட்டை  நாம் பார்த்துக் கொள்வோம். அவனவன் நாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அரசாங்கத்துக்கு வாய்தா கொடுப்போம். நீங்கள் நிறைய ஆதரவு தரவேண்டும்.


----------------------12-11-1958 அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : ”விடுதலை” 7-1-1959