Search This Blog

30.11.13

பார்ப்பான் மிரட்டலுக்கு நடுங்காதீர்! - பெரியார்


என் மீது கேஸ் (வழக்கு) உள்ளது; பெரிய கேஸ் 5, 6-வருடம் வரை சிறையிலிடும்படி தண்டிக்கலாம். 2-வருடமாவது தண்டிப்பார்கள். அதுவும் தண்டிக்கவில்லை விட்டுவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்; 3000- பேருக்கு மேல் உள்ளே வைத்துவிட்டு நான் வெளியே இருக்க மனம் வருமா? மற்றவர்கள் என்னைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை; எனக்கே திருப்தி இருக்குமா? 3000-உடன் 3001-என்று இருக்க வேண்டும். எங்காவது இந்த அக்கிரமம் உண்டா? சாதி ஒழிய வேண்டும் என்பதற்காக எவ்வளவு கொடுமை!

திருட்டுப்பயல்கள் 4-பேர் சேர்ந்து நடத்துகிற அரசாங்கமாக இருந்தால் கூட இந்தக் கொடுமை நடக்குமா?

நீங்கள் கவனிக்க வேண்டியது இதுதான்; சிறை உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் எப்படி அங்குப் போவது என்று நினைக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? அவர்கள் எல்லோரும் அவர்களுக்காகவேதான் சிறை சென்றார்களா? அவர்கள்தான் மனிதர்களா? நாமும் நமது பங்குக்குச் செல்ல வேண்டும் என்கிற உணர்ச்சி ஏற்பட்டு மளமளவென்று காரியம் ஆக வேண்டும். அதுதான் உண்மையான சமுதாயக் கொந்தளிப்பு ஆகும். அதற்குத் தான் உண்மையான சமுதாயப் புரட்சி என்று பெயர்.

வருத்தத்தோடு சொல்கிறேன். அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள்! ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய்விடும். இக்கிளர்ச்சி அடிக்க அடிக்க பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக்கூடியதல்ல! அத்தனை பேருக்கும் சம்பந்தமான காரியம்! மந்திரிகளுக்கே சாதி ஒழியவேண்டாம் என்ற எண்ணம் இருக்காது. எனக்குத் தெரியும் அடக்குமுறையை நம்பாதீர்கள்! அடக்கு முறையை நம்பிப் பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு விடாதீர்கள்! இந்த உணர்ச்சியை ஒருக்காலும் அடக்குமுறை மூலமே நசுக்கிவிட முடியாது. இன்று மந்திரிகள் என்னைப் பைத்தியக்காரனாக நினைக்கலாம். ஏன்? அவர்கள் இருக்கும் இடம் அப்படிப்பட்டது. 100-க்கு 97-பேர் ஆக உள்ள ஒரு இனத்திற்கு அவர்கள் மனம் புண்படும் காரியம் நடந்தால் நாட்டை இராணுவம்தானே ஆளவேண்டும்?

வடநாட்டான் விடாதே பிடி, அடை என்கிறான்! யாரைச் சொல்கிறான் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? உன்னைச் சொன்னால் என்ன? என்னைச் சொன்னால் என்ன?

அரசாங்க மரியாதை போய்விடும் என்று கருதினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதையாவது சொல்ல வேண்டுமே! நான் இப்போது விட்டுவிடுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன? சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்றுதானே பார்ப்பான் என்னைச் சொல்லுவான்? அரசாங்கத்தின் கடமை, புத்திசாலித்தனம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டம் கொண்டு வந்து அடக்கிவிடலாம் என்பதே போதுமா? ஒரு சட்டம் பண்ணினால் போதாதே? அடுத்த ஒவ்வொரு காரியத்திற்கும் சட்டம் செய்ய வேண்டுமே?


நேரு படத்தை எரித்தால், சிலையை உடைத்தால் இப்போதுள்ள சட்டம் ஒன்றும் செய்ய முடியாதே! காந்தியாவது செத்துப் போனவர். அவர் பெயரை இழுப்பதால் நாமும் அவரை இழுக்கவேண்டியுள்ளது. உயிரோடு இருக்கிற நேரு படத்தைக் கொளுத்தினால் இனிமேல் அதற்கும் சட்டம் கொண்டு வருவார்களா? எதற்கு இவற்றையெல்லாம் செய்கிறோம்? பதவிக்குவரவா? அல்லது அரசாங்கத்தைக் கைப்பற்றவா? அரசினரைக் கவிழ்க்கவா?

இன்று கைதானவர்கள் பட்டியல் 3000-போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்திருந்த சில இடங்களுக்குப் போலீசே (காவல் துறையே) போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பகுதிப் பேரைக்கூடப் பிடிக்கவில்லை. அதற்கே அங்கிருந்து லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு திருச்சிராப்பள்ளி வந்து திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால்குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்ப திருச்சிக்குக் கொண்டுவந்து இப்படிப் பந்து விளையாடியிருக்கிறார்கள்!

3000-பேருக்கு மேல் போயிருக்கிறார்கள் என்று பெருமைப் படவுமில்லை. 1000- பேர் போனாலும் வெட்கப்பட்டிருக்கவும் மாட்டேன்; ஏன் ஓட்டுக்கு, பதவிக்கு, விளம்பரத்திற்காகவா இந்தக் காரியத்தைச் செய்கிறோம்.

உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது. இன்னுமா பரீட்சை பார்க்க வேண்டும்?

சிலபேர் "இந்தக் காரியத்திற்கு இணங்கிவிட்டால் இன்னொரு காரியம் ஆரம்பிப்பார்" என்று யோசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு காரியம் ஆரம்பிப்பதாயின் முக்கியம் என்று கருதி ஆரம்பிப்போமே தவிர விளையாட்டுக்கா செய்வோம்?

அடுத்த காரியம் திராவிட நாடு இல்லையென்றாலும் தமிழ்நாடு தமிழருக்கு வரவேண்டுமா வேண்டாமா? அடுத்த காரியம் அதுதான்!

இந்தச் சட்டம் என்றால் என்ன? வடநாட்டான் தூண்டுதல் தானே? என் மீது வழக்கு எப்படி வந்தது? 2-நாள் முந்தி 'ஹோம் மினிஸ்டர்' (உள்துறை அமைச்சர்) சி.அய்.டி ரிப்போர்ட்டைப் பார்த்தோம் பத்திரிகைக்காரர்கள் சொல்வதற்கும் அதற்கும் வித்தியாசம் இருக்கிறது. (பத்திரிகைக்காரர்களைப் பார்த்து) "உங்கள் ரிப்போர்ட்டைக் கொண்டு வாருங்கள்! ஒத்திட்டுப்பார்க்கலாம்; அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை" என்று சொல்லி விட்டாரே!

இந்த மாதிரியெல்லாம் சொல்லி விட்டு திடீரென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஆச்சாரியார் சொல்கிற மாதிரி வடநாட்டான் உத்தரவு வந்தது நடவடிக்கை எடுக்கிறார்கள் அவ்வளவுதான்.

இன்று டெல்லியில் நேரு பேசியிருக்கிறார்; பத்திரிகையில் பார்த்தால் தெரியும்! "இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனம்; சிலபேர் அவர்களுக்கு உள் ஆளாக இருக்கிறார்கள் (அதாவது இந்த மந்திரிகள் உள் ஆளாக இருக்கிறார்களாம்) நானே நடவடிக்கை எடுக்க வேண்டுமா" என்று பேசியிருக்கிறார்.

இவர்களைக் தவறாக நினைத்துப் பயனில்லை. இந்த நாட்டை வட நாட்டான் ஆள்கிறான்; அவன் உத்தரவு போடுகிறான்; அதன்படி நடக்கிறார்கள்!


வடநாட்டுப் பத்திரிகையெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலறுகின்றன. படம் போடுகிறார்கள் இது 'சங்கர்ஸ் வீக்லி' என்ற பத்திரிகை. இதில் படம் போட்டிருக்கிறான்; நான் பார்ப்பானை வெட்ட கையில் கோடாரி வைத்துக் கொண்டு ஓங்கிக் கொண்டு நிற்கிறேன். கருப்புச் சட்டைக்காரர்கள் பார்ப்பானைப் பிடித்து இழுக்கிறார்கள் பார்ப்பான்கள் மூலைக்கு மூலை ஓடுகிறான்கள். காமராசரை போலீஸ்காரன் போல போட்டிருக்கிறான். அவரைப் பார்த்து ஒரு பார்ப்பான் அய்யோ என்று கத்துகிறான். அவர் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு இதெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டது என்கிறாராம். இப்படிப் படம் போடுகிறான்.

இன்னொரு படம்: நான் நிற்கிறேன். வட நாட்டு மந்திரி - போலீஸ் மந்திரி பந்த் என் மீது நடவடிக்கை எடுக்க காமராசரைப் பிடித்தத் தள்ளுகிறார். அவர் அப்போதும் என்னிடம் நெருங்கப் பயப்படுகிறார். இப்படி ஒரு படம் போட்டிருக்கிறான். மந்திரிகள் நடுங்குகிறார்கள். மாஜிஸ்திரேட்டும் இந்த மந்திரி தயவை எதிர் பார்ப்பவர்கள். ஜில்லாதாஜிஸ்ரேட் மாத்திரமல்ல, அய்க்கோர்ட் ஜட்ஜ் கூட (உயர் நீதிமன்ற நீதிபதி) இப்போது மந்திரிகள் தயவை எதிர்பார்த்து ஆகவேண்டும்.

என் வழக்கில் முதலில் அவர்களேதான் சொந்த மூச்சலிகாவில் நீங்கள் போகலாம் என்றார்கள். பிறகு திடீரென்று 25-ஆம் தேதி மூச்சலிக்காவை ரத்து செய்ய வேண்டும். பழையபடி ஊர் ஊராகப் போய் குத்து வெட்டு என்று பேசுகிறான் என்று விண்ணப்பம் போடுகிறான். நினைத்தால் கஷ்டமாகத்தான் உள்ளது. எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறான்? 20-ஆம் தேதி எங்களிடம் கையொப்பம் வாங்கி இருக்கிறான்; 22-ஆம் தேதி மதுரையில் எனக்குச் சம்மன் சார்வு செய்தான்; 22-ஆம் தேதி மாலை வரையில் எங்கும் பேசவில்லை; கூட்டமுமில்லை நான் வாய் திறக்கவேயில்லை. பழையபடி 'குத்து வெட்டு என்று பேசுகிறான்' என்று சொல்கிறான். எப்போது பேசினார் என்றால் 17, 18, 19- ஆம் தேதி பேசியிருக்கிறார் என்கிறான். என்னிடம் கையொப்பம் வாங்கி கொண்டு 20-ஆம் தேதி விட்டிருக்கிறான். அதிலும் பேசக்கூடாது என்ற நிபந்தனை ஒன்றுமில்லை. இருந்தும் பேசாதே போதே 22-ஆம் தேதி சம்மன் வருகிறது 'ஏமாற்றி விட்டார்', 'நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்', 'சாட்சிகளைக் கலைப்பார்', 'சாட்சிகளுக்குத் துன்பம் கொடுப்பார் அதாவது காயப்படுத்துவார்' இப்படி ஏதேதோ கேவலமாக எழுதியிருக்கிறான்.

ஜட்ஜே (நீதிபதி) கேட்டாராம். என் காதில் விழவில்லை. சாட்சியைக் கலைப்பார் என்கிறாயே எல்லா சாட்சியும் போலீஸ்காரர்கள்தானே? அதுவும் ரிக்கார்டு சாட்சிதானே; அதை எப்படி கலைப்பார்? என்று கேட்டதற்கு அந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் (அவர் பார்ப்பனர்) போலீஸ்காரர்கள் எல்லாரும் அந்த உணர்ச்சி உள்ளவர்கள்; அதாவது என் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று பதில் சொல்கிறார். என்ன அக்கிரமம்? நீதி கெடுத்துவிடுவார் என்கிறான்; நான்தான் எதிர் வியாஜ்ஜிமே (எதிர் வழக்கு) ஆடப்போவதில்லை என்கிறபோது நீதி எப்படிக் கெட்டுப்போகும்? அந்த நீதிபதிக்கு, எங்குப் பேசினார்? எந்த தேதியில் பேசினார்? ஆதாரமென்ன? என்று கேட்டு 20-ஆம் தேதிக்குப் பிறகு எங்கும் பேசவில்லையே! ஆகையால் இந்த மனுவைக் கேன்சல் (தள்ளுபடி) செய்கிறேன் என்று சொல்லத் தைரியம் வரவில்லையே? என்னைக் கேட்கிறார் "இனிமேல்" பேசவில்லை என்று எழுதிக்கொடு" என்கிறார்.

என்னய்யா, நான்தான் பேசவே இல்லை என்கிறேன் இனி மேல் பேசவில்லை என்று எழுதிக்கொடு என்கிறீர்களே என்றால் "உனக்கு நான் சொல்வது புரியவில்லை. நீ சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றுதான் எதையாவது எழுதிக் கொடு; இப்ப, நீ வாயால் சொல்கிறாயே அதையே எழுதிக் கொடு" என்கிறார். என்னய்யா இது உங்கள் எதிரேயே சொல்கிறான் போலீஸ்காரன் எல்லாம் என் கட்சி என்று; அய்க்கோர்ட் (உயர்நீதிமன்றம்) போனாலும் நீதிபதிகூட என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான். பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான்.

இப்படிப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் "எழுதிக் கொடுத்துவிட்டான்! எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று பத்திரிக்கைக்காரன் எல்லாம் பிரச்சாரம் செய்வானே? நான் பொதுவாழ்வில் இருப்பவன் அது பற்றியும் கவலைப்பட வேண்டும். நான் வேண்டுமானால் உடனடியாக 'வெட்டு' 'குத்து' என்று சொல்லவில்லை என்று எழுதித் தருகிறேன் என்றேன். 'உடனடியாக' என்று போட்டிருக்கிறாயே அந்த வார்த்தையை எடுத்துவிடு என்றார்.

"நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அது முடியாவிட்டால் வெட்டு, குத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் வந்தால் சொல்லுவேன் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். வேண்டுமானால் உங்கள் விசாரணை முடியும் வரையில் அதுபோலச் சொல்லவில்லை. அதற்குமேல் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் மூட்டை முடிச்சோடு வந்துவிட்டேன்; என்னைத் ஜெயிலுக்கு அனுப்பிவிடுங்கள்; நிம்மதியாக இருப்பேன்", என்றேன். பின்னர் ஏதேதோ செய்து எழுதி வாங்கியதாகப் பேர் செய்து கொண்டு விட்டார்கள்.

நான் 23-ஆம் தேதி இருக்கக்கூடாது என்பது எண்ணம்; அதற்கு ஏதேதோ காரணம் சொல்லி (சிறையின்) உள்ளே பிடித்துப் போடு என்றான் திரும்ப சீரங்கம் கூட்டத்திற்குப் புறப்படும் நேரம் வந்ததும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் பார்ப்பான் மிரட்டினால் எல்லாம் நடுங்குகின்றன. ஒரு மந்திரி நினைக்க வேண்டாமா?


ஆகவே வடநாட்டு தென்னாட்டை அடிமை மாதிரி நடத்துகிறது; எதுவும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை; எனவே தென்னாட்டைத் தென்னாடே ஆளவேண்டும். அடுத்து இந்தக் காரியம் தான் செய்யப்போகிறோம்.

இந்திய ராஜ்ஜிய - இந்திய யூனியன் ராஜ்யப் படத்தைக் கொளுத்தப் போகிறேன். அதற்கும் ஒரு சட்டம் கொண்டுவர தடுப்புக்காவல் சட்டத்தின்படி பிடித்துப்போடுவேன் என்கிறான். அதாவது முத்துராமலிங்கத் தேவரைப் போட்ட மாதிரி எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் யாருக்கும் ஒரு சிறு கேடும் இல்லாமல் அமைதியாக நடத்திக் கொண்டு வருகிற எனக்கும் அதுவா? நடக்கட்டுமே!

ஓர் அதிசயமான சம்பவம்! நான் சிறையிலிந்து வந்ததும் சொன்னார்கள்: சிறையிலிருந்து வரும் போதே போலீஸ்காரர்களைக் கேட்டேன். காரில் வரும்போது சொன்னார்கள் - ஏதோ நாலுபேர் குடுமி பூணூல் வெட்டப்பட்டிருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்; செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றார்கள். இங்கு வந்ததும் சிலர் சொன்னார்கள். சேர்ந்து பார்ப்பனர் தாங்களே இப்படிச் செய்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஒரு பார்ப்பன மிராசுதாரர் தூண்டிவிட்டிருக்கிறார். தன் ஆட்களை வைத்தே இதுபோல ஒரு காரியம் செய்து இருக்கிறார்.

நம் தோழர்கள் மீது பழி சுமத்த முயற்சி நடக்கிறது; (காவல்துறையினர்) போலீஸ்காரர்கள் இதற்குக் குப்பைக்கூளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இது போலச் செய்து கொள்கிற நிலை வந்துவிட்டது என்றால் மகிழ்ச்சிதான்.

இன்றும் சொல்கிறேன். கழகக்காரர்கள் அதுபோல நடந்திருப்பார்களானால், வெட்கப்படாமல் சொல்கிறேன், அது தவறு. அவர்கள் கழக்கக்காரர்கள் அல்ல; கழகக்காரர்கள் அதுபோல நடந்திருக்க மாட்டார்கள், பூணூல் அறுப்பதும் குடுமி வெட்டுவதும் என் திட்டத்தில் இல்லாமலில்லை; ஆனால் அதை இப்போது செய்தால் அது தவறுதான்.

உயர்ந்த சாதிக்காரன் என்பதற்காக அதைக் காட்டிக் கொள்ளத்தானே உச்சிக்குடுமி, பூணூல். அதைப் பார்க்கும்போது எங்கள் இரத்தம் தொதிக்குமா இல்லையா?

ஆகவே ஓட்டல் போர்டுகளில் (உணவகப் பெயர்ப் பலகைகளில்) பிராமணாள் என்பதை அழிக்க வாய்தா கொடுத்ததுபோல் இதற்கும் வாய்தா கொடுப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது கழகத் தோழர்களால் என்று சொல்வது தப்பு உங்களுக்குத் தெரியாது. சென்னையில் பார்ப்பான் முகத்தில் தார் ஊற்றியதாகப் புகார் வந்தது. அவனே ஊற்றிக் கொண்டானா? யார் ஊற்றினார்கள் என்பது தெரியாது. போலீஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். "எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரையாவது ஒருவரை ஒத்துக் கொள்ளச் சொல்லுங்கள். எச்சரிக்கை செய்து விட்டுவிடச் சொல்கிறோம். இல்லாவிட்டால் எங்களுக்குக் கஷ்டமாகும் என்றார்கள்" நானும் ஏமாந்துதான் போய்விட்டேன். தோழர்களிடம் சொல்லி ஒருவரை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லச் செய்தேன். ஒரு குற்றமும் அறியாத ஒருவர் ஒத்துக் கொண்டார். அபராதம் போட்டார்கள். அதைக்கூட போலீஸ்காரர்கள் தான் தந்தார்கள். ஆனால் அது என்ன ஆயிற்று என்றால் அதை வைத்துத்தான் தடையுத்தரவு போட்டார்கள்; போட முடிந்தது.


-------------------------- 28.11.1957-அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு.-"விடுதலை" 30.11.1957

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்வும் - பாடமும்


இன்று நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களது பிறந்த நாள். 49 வயதே வாழ்ந்த நமது கலைவாணர், இளம் வயதில் நாடகக் கம்பெனியில் இணைந்து, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். திரையில் (சினிமா) அவர் செய்த அறிவுப் புரட்சி வேறு எவரும் செய்திராத ஒரு முன்னோடிப் புரட்சி.

இவையெல்லாவற்றையும்விட அவரது தனித் தன்மையும் தனிச் சிறப்பும் என்னவென்றால்,  சிறந்த பகுத்தறிவாளர்.

ஈரோட்டில் தந்தை பெரியார் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு வார ஏடுதான் அவரை இப்படி ஒரு ஒப்புவமையற்ற நகைச்சுவைத் தேனில் பகுத்தறிவு சீர்திருத்தக் கருத்துக் களைக் குழைத்துக் கொடுத்து, கலைத் துறையை அதற்குரிய களமாக் கிட அவரை பக்குவப்படுத்தியது.

இதைக் கலைவாணர் அவர்களே பல மேடைகளில் கூறியுள்ளார்! அவருக்கு அருமையான கலைத்துறை வாழ்விணையராகியவர் டி.ஏ. மதுரம் அம்மையார்.

இவரது குழு (NSK குழு) எந்த நேரத்திலும் இணை பிரியாது உடன் இருந்து ஒத்துழைத்தவர் என்.ஆர். சாமிநாதன், ஆழ்வார் குப்புசாமி, புளி மூட்டை இராமசாமி, காக்கா ராதா கிருஷ்ணன், வாத்தியார் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, உடுமலை நாராயண கவிராயர் பாட்டுகள் எல்லாம் உடனுக்குடன் தயாராகும்!

பகுத்தறிவுப் பிரச்சாரம் இல்லாத நகைச்சுவை நடிப்பு, பாத்திரங்களே இல்லை இவர்களிடத்தில் என்பதே கலைவாணரின் நகைச்சுவை குழுவின் கலையுலகத் தொண்டு.

கலைவாணரின் நகைச்சுவைகளுக்கு வயது இப்போது 70, 80 ஆண்டுகளா கின்றன!

மூத்த தலைமுறைகளாகிய எங்களைப் போன்ற முதுகுடிமக்களால் மட்டும் அவை சுவைக்கப்படாமல், நான்கு தலைமுறை களுக்குப் பிறகு இன்றும்கூட இருபால் இளைஞர்களைகூட நம்மைப் போலவே ஈர்த் துள்ளது மிகப் பெரிய அதிசயம் ஆகும்.

எங்களது பேரன், பேத்திகளும்கூட கலைவாணர் என்எஸ்.கே. மதுரம் நகைச் சுவைகளைப் பார்த்து தொலைக் காட்சியில் சிரித்துச் சிரித்து மகிழ் கின்றனர்!
இப்போது இருப்பதைப் போல சென்சார் கடுமை யான கட்டுப்பாடு அதிகம் இல்லாத காலம் அது!

அவரே சிந்தித்து உரு வாக்கிடும் நகைச்சுவை பாத்திரங்களும், வசனம் பாட்டுகளும், பஞ்ச் என்ற நெற்றியடி பதில்களும் மிகவும் மறக்க முடியா தவை. ஒரு படத்தில் கலை வாணரைப் பார்த்து  அவர் நண்பர் டேய் தெரியுமா நான் ஒரு குத்துவிட்டால், என்றென்றும் உதை ஞாபகத்தில் இருக்கும்படியாக இருக்கும் என்பார்.

அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைவாணர் ஏய் நான் ஒரு குத்து விட்டேன்னா உனக்கு ஞாபக சக்தியே இருக்காது போய் விடும் ஜாக்கிரதை! என்பார்!

பூம்பாவை என்ற திருஞான சம்பந்தர் பற்றிய படத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நடித்ததில், கலைவாணரின் கிண்டல் கேலி, பலத்தசிரிப்பை உண்டாக்கிடும்.

இவரு (திருஞானசம்பந்தர்) குழந் தையாயிருக்கும்போது அழுதப்ப.. அந்த பார்வதியே வந்து முலைப்பால் கொடுத் தாராம் தெரியுமா? என்று ஒரு பக்தர் கேட்க, என்.எஸ்.கே. உடன்  எந்த பார்வதி? நம்ம பல சரக்கு கடை பரமசிவஞ் செட்டியார் சம்சாரம் பார்வதியா? என்பார்!

சின்ன வயசிலே... கன்னித் தமிழிலே..
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறாயே வேட்டு
கல்வி கற்றுத் தேறாமுன்னம்
கவி எழுதிட வருமா?
கட்டுக்கதைகளை விட்டுத் தள்ளு
குட்டு வெளிப்படுமே! என்பார்

இப்படி எத்தனை எத்தனை அறிவுச் சொடுக்குகள்! அர்த்தமுள்ள கேள்விகள் ஏராளம் சரளமாக வந்து விழும்!

இவ்வளவு சிறப்பு, புகழ் வாய்ந்தவர் கொடுத்துக் கொடுத்தே கடனாளி யாகி வாழ்ந்து பிறகு அதை மறக்க ஏதோ ஒரு தீய பழக்கத்திற்கு எப்படியோ அடிமையாகி, 49 வயதில் புகழின் உச்சிக்கே சென்று வரலாறாகி வாழ்கிறார்!
மாமனிதர்களுக்கும்கூட இப்படி அடிச்சறுக்கல்கள் உண்டு! எனவே எச்சரிக்கையான வாழ்க்கை தேவை என்பதை கலைவாணர் வாழ்க்கை நமக்குத் தெரிவிக்கிறது!

என்றும் அவர்தம் சகாப்தம் ஈடு இணையற்றது!

                  ---------------- -----------------  வாழ்வியல்  சிந்தனைகள் பகுதில் கி.வீரமணி அவர்கள் எழுதிய  கட்டுரை - “விடுதலை” 29-11-2013

29.11.13

திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபடுகிறது?

சமுதாயத் துறையில் நமது நிலை!

திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபடுகிறதென்றால், நான் நாயுடு, நீ முதலியார், இன்னொருவர் செட்டியார், மற்றொருவர் நாயக்கர் என்று மக்கள் சமுதாயம் பல்வேறு ஜாதிகளாகத் தங்களைத் தவறாகக் கருதிக் கொண்டு அந்தப்படித் தவறாகக் கருதியதால் ஒருவருக்கொருவர் பிரிந்தும், பேசப்பட்டும் வாழ்ந்து வருகிற பைத்தியக்காரத்தனங்கள், காரணங்கள் இவற்றிற்கு அடிப்படையாக ஆதாரமாக அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற கடவுள், மத, சாஸ்திர, புராண சம்பிரதாயங்கள் முதலிய அறிவுக்குப் பொருந்தாதவைகள் ஒழிய வேண்டும் என்று வேலை செய்து வருகிறது.

அடுத்தபடியாக, திராவிடர் கழகம் இந்த நாட்டை இந்த நாட்டுக்காரர்களே ஆளவேண்டும்; இந்த நாட்டு ஆட்சியிலும் அனுபவிப்பதிலும் மற்றவர்களுக்கு - இந்நாடு அல்லாத வெளி நாட்டவர்களுக்கு எந்த விதமான உரிமையும், அதிகாரமும் இருக்கக்கூடாது. இந்த நாட்டிலே திராவிடர் கழக்கதார் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும், ஆனால் அவர்கள் இந்த நாட்டுக்காரர்களாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் வேண்டுமானாலும் ஆளட்டும், அல்லது காங்கிரசுக்காரர்களே வேண்டுமானாலும் ஆளட்டும், இன்னும் இந்துமகா சபையே வேண்டுமானாலும் ஆளட்டும், அதைப் பற்றிக் கவலை இல்லை ஆனால் அவர்கள் இந்தநாட்டுக்காரர்களாக, திராவிட நாட்டு கம்யூனிஸ்டுகளாக, திராவிட நாட்டுக் காங்கிரசுக்காரர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டுக் கம்யூனிஸ்டுகளாக, வெளிநாட்டுக் காங்கிரசுக்காரர்களாக இருக்கக் கூடாது. இந்த ஆச்சாரியாரே வேண்டுமானாலும் இந்த நாட்டை ஆளட்டும். ஆனால், அவர் ஒவ்வொரு உத்தரவுக்கும் நேருவைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். இவருக்கு நேரு எஜமான்; நேருவுக்கு இவர் அடிமை அரசாங்கத்தவராக இருக்கக் கூடாது; இதைத்தான் திராவிடர் கழகம் சொல்லி வருகிறது. அதாவது திராவிடநாடு அந்நிய நாட்டுக்காரர்களுக்கு அடிமைப்பட்டு சுதந்திரமற்ற நாடாக இருக்கக்கூடாது. இது சுயேச்சை நாடாக அந்நியர் தலையீடு, அதிகாரம் இன்றி நடைபெறும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் பாடுபடுகிறது.

இந்தச் சென்னையைப் பொறுத்த வரையில் பெரிதும் சமுதாயத் துறையைக் குறித்தே நான் பேச விரும்புகிறேன், ஏனென்றால் - நாகரிகம் அடைந்தது என்று சொல்லிக் கொள்ளப்படுகிற இந்தப் பட்டணத்திலே தான் மூட நம்பிக்கைகளும், மடமை நிறைந்த பல விழாக்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. பெரிய பெரிய ஆசாமிகள் எல்லாம் கூட இங்குக் கடவுள் மத, சாஸ்திர துறையைப் பொறுத்த வரையில் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். இங்கு தான் அதிகமான புராண உபந்நியாசங்களும், கதாகாலட்சேபங்களும் நடைபெறுகின்றன. இந்தக் கூட்டத்திற்கு என்னை அழைத்தவர்கள் கூட இந்தத் தெருவில் சமுதாய சம்பந்தமான மூடநம்பிக்கைகள் மிகுதியாக இருக்கின்றன; ஆதலால் நீங்கள் இங்கே பெரிதும் சமுதாய சம்பந்தமாகவே பேச வேண்டும் என்று சொன்னார்கள். அந்தப்படியே சமுதாய சம்பந்தமாக சில வார்த்தைகள் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

மேலும் பெரியார் அவர்கள், இந்துக் கடவுள்கள் என்பவற்றின் திருவிளையாடல்களையும் அவற்றின் ஆபாச நடத்தைகளையும் திருவிழாக்களையும் கண்டித்து மக்கள் பகுத்தறிவு பெற வேண்டும்; சிந்தனைக்குத் தாழ்ப்பால் போடாமல் தாராளமாகச் சிந்தனை செய்ய வேண்டும்; அது எந்த சங்கதியையும் பொறுத்ததாய் இருந்தாலும் என்று கேட்டுக் கொண்டு தமது உரையை முடித்தார்கள்.

------------------------ சென்னை சூளையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை. "விடுதலை" 15.01.1953

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்-தமிழர்களே எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!


சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நீண்ட காலமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் திட்டம்; இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசியல் முட்டுக்கட்டைகள் போடப்படும் இந்தக் காலகட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே எதற்கு இதில் மூக்கை நுழைக்கிறார்?

இது தொடர்பாக ஒரு குழு போட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து ஆராயப் போகிறாராம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது இந்தியாவுக்குள் நடைபெறும் ஒரு திட்டமாகும். இதில் போய் இன்னொரு நாடான இலங்கை தலையிடவோ, ஆய்வு செய்யவோ உரிமை எங்கிருந்து வந்து குதிக்கிறது?

இலங்கை அதிபர் ராஜபக்சே வெளியிட்டுள்ள கருத்துக் குறித்து இந்தியா ஏன் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. அந்த அளவு பலகீனமாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இலங்கைக்கு வரும் வருமானத்தில் மண் விழுந்துவிடும் என்ற சுயநலம்தான் இதன் பின்னணி இரகசியமாகும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் கப்பல் போக்குவரத்தின் தூரம் எவ்வளவு மிச்சப்படும் தெரியுமா? 420 கடல் மைல் அளவு மிச்சப்படுவதோடு, (ஒரு கடல் மைல் என்பது 1.8 கி.மீ.) பயண காலமும் 30 மணிநேரம் குறையும்.

அய்ரோப்பாவிலிருந்து ஆசிய நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து சேரவேண்டிய கப்பல்கள் ஆப்பரிக்காவைச் சுற்றி சூயசுக்கு வந்து சேரவேண்டிய நிலை இருந்தது. சூயஸ் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியதற்குப் பிறகு வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டன.
அதுபோலவே இப்பொழுது இந்தியாவில் மேற்கு - கிழக்கு கடல் பகுதிகளுக்கிடையே பயணிக்கும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிவரும் நிலை உள்ளது.

சேதுகால்வாய்த் திட்டம்பற்றி தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக இருந்த திரு.இரகுபதி அய்.ஏ.எஸ். சொன்ன தகவல்கள் கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கவையாகும்.

செங்கடலையும், மடகாஸ்கரையும் இணைக்கம் சூயஸ் கால்வாய் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய், வடகடலையும், பால்டிக் கடலையும் இணைக்கும் கீழ்க் கால்வாய் போன்று மன்னார் வளைகுடாவையும், பாக்.நீரிணைப்பையும் கால்வாய்மூலம் இணைத்து பெருங்கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தும் சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டின் தொழில் வர்த்தக மேம்பாட்டையும், பொருளாதார வளர்ச்சியையும் நிச்சயம் ஏற்படுத்தும்; இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த சிறந்த பரிசு என்று இரகுபதி கூறினார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒளிந்துகொண்டு இருக்கிறது. இப்பொழுது இந்தக் கப்பல்கள் எல்லாம் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளதால், இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் குவிந்து கொண்டிருக்கிறது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இலங்கைக்குக் கிடைக்கும் வருமானம் அடிபட்டுப் போகும். இந்தச் சுயநல உணர்வுடன்தான் ராஜபக்சே, இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையான இந்தத் திட்டத்தில், மூக்கை நுழைக்கிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

நீண்ட காலமாக இந்தத் திட்டம் தடைப்பட்டுப் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமே! இலங்கைக்கு உதவுவதற்காகவே அன்று இருந்த அரசுகள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாற்றும் நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒன்றுதான்.

இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (26.11.2013) சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல.
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தக் கூடாது என்று இங்குள்ளவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

இலங்கை ராஜபக்சேவும் அதே குரலில்தான் பேசுகிறார். ஒரு கூட்டுச் சதி இதில் இருக்கிறது என்பதுதான் அந்த எச்சரிக்கை. தமிழர்களே, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!

                          -------------------------"விடுதலை” தலையங்கம் 28-11-2013

28.11.13

ஜாதி ஒழிப்பே எனது லட்சியம்!


இன்றைய தினம் எனது பிறந்த நாள் பேரால் பாராட்டு உரையும், பட்டயம் அளிப்பு விழாவும் நடத்தியுள்ளீர்கள். இந்த ஊர் 500- வீடுகளே உள்ள சிறிய ஊராக இருந்தாலும், 56000- வீடுகள் நிறைந்துள்ள ஊர்களில் கூடுவது போல் பல்லாயிரம் பேர்கள் கூடியுள்ளீர்கள்.

எனது கழகம் அரசியல் இலட்சியம் உள்ள கழகம் அல்ல. நானும் அரசியல்காரனும் அல்ல. சமூதாய நலன் காக்க விரும்புபவன். சந்நிதானம் கூறியது போல் ஜாதிக் கொடுமையை ஒழிப்பதற்கு 2000- ஆண்டுகளாக எவரும் முன் வரவில்லை. யாராவது எண்ணினார்கள் என்றால் திண்ணையில் உட்கார்ந்து நாலு வார்த்தை பேசி இருப்பார்கள். இறங்கி வந்து பாடுபட எவரும் முன் வரவே இல்லை. நாங்கள் தான் அதற்காக முனைந்து பாடுபடுகிறோம்.

100-க்கு 97- பேராக உள்ள மக்கள் ஈனஜாதி. 100-க்கு 3- பேராக ஜாதி உயர்ந்த ஜாதி. பாடுபடுபவன் இழிஜாதி. பாடுபடாத சோம்பேறி உயர்ஜாதி. இந்த அக்கிரமத்தை ஏன் என்று கேட்க எந்தக் கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ, அவதார புருஷர்களோ, மகான்களோ, முன்வரவே இல்லையே! நாங்கள் தான் இவற்றை ஒழிக்க வெளிவந்து பாடுபடுகின்றோம்.

இழிஜாதி மக்களாகிய 100-க்கு 97-பேராக உள்ள மக்களில் 50-க்கு மேற்பட்டவர்கள் சாதியை ஒழித்து தான் ஆக வேண்டும் என்று எண்ணும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள். ஆனால் 100-க்கு 3- பேராக உள்ளவர்கள் ஜாதி ஒழியக் கூடாது என்று கூறி ஒழிய விடாமல் பாதுகாக்கும் முயற்சியிலும் இன்று முனைகின்றார்கள்.

நான் ஏன் கடவுள், மதம், சாஸ்திரங்கள், ஒழிய வேண்டும் என்கிறேன் என்றால் இவை ஜாதியைப் பாதுகாக்கின்ற காரணத்தினால் தான். இல்லாவிட்டால் நான் ஏன் இதில் இறங்க வேண்டும்?

தோழர்களே! ஜாதியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காகவே காங்கிரசில் இருந்து வெளிவந்தவன்; காங்கிரசினை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டவன்.

அப்படிப்பட்ட நான் தான் இன்று ஜாதி ஒழிப்பு அவசியத்துக்காகவே காங்கிரசை ஆதரிக்க வேண்டிய அவசியத்துக்கு வந்து இருக்கிறேன்.

தோழர்களே! கடவுளை ஒழித்து, மதத்தை ஒழித்து, சாஸ்திரத்தை ஒழித்து, ஜாதியை ஒழிக்க முடியாவிட்டாலும், மனிதனை ஒழித்தாவது ஜாதியை ஒழிக்க மக்கள் முன்வந்து விடுவார்கள்.

தோழர்களே! இன்று நாட்டில் இரண்டே கட்சி தான். ஒன்று ஜாதி ஒழிய வேண்டும் என்ற கட்சி. மற்ற ஒரு கட்சி ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்சி.

ஜாதி ஒழிய வேண்டும் என்கிற கட்சிக்குக் காமராசர் தலைவர். அவருக்கு நாங்கள் எல்லாம் ஆதரவு கொடுக்கின்றோம்.

ஜாதி ஒழியக் கூடாது, காப்பாற்ற வேண்டும் என்ற கட்சிக்கு இராஜாஜி தலைவராக இருந்து பாடுபட்டு வருகிறார்.

ஜாதி ஒழிப்புக்காகக் காமராசர் பாடுபட்டு வருகிறார் என்றால் சமூதாயக் குறைப்பாடுகளைக் களைந்து எறிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பாடுபடும் என் போன்றவர்கள் கடமை என்ன? காமராசரை ஆதரிப்பது தானே.

சமீபத்தில் தேர்தல் வருகின்றது. ஓட்டர்கள் (வாக்காளர்கள்) ஒவ்வொருவரும் முடிவு செய்து கொள்ள வேண்டும். நான் தகுதி இல்லாத மக்களுக்கு ஓட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது என்று குறை கூறிவந்தவன். இப்படிப்பட்ட மக்களை ஓட்டுக்குத் தகுதி உள்ளவர்களாக ஓரளவுக்காவது இந்த ஆட்சி மாற்றி உள்ளது. இப்படி அளிக்கப்பட்டு உள்ள ஓட்டானது நல்ல வழியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களது கவலையாகும்.

எனவே உங்கள் கையில் இருக்கும் ஓட்டினைத் தகுந்த வண்ணம் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஓட்டினைச் சாதியை ஒழிக்கக் கூடிய காமராசர் ஆட்சி ஏற்படக் காங்கிரசுக்கு அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சாதி ஓழிப்புக்குக் கேடு விளைவிக்கும் ஆட்சிகளுக்கு அளிக்கக் கூடாது.

-------------------------- 16.10.1961- அன்று குளித்தலைக்கு அடுத்த கட்டளையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு.-"விடுதலை"  - 27.10.1961

27.11.13

கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்க வேண்டும்!பேய் என்றெல்லாம் வேறொன்றும் இல்லை; இல்லாததை இருக்கிறதாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாகத் தொல்லைப்பட்டுக் கொண்டு இருப்பதுதான். சாதாரணமாக நம் பெண்களிடத்தில் பார்த்தால் தெரியும்; 'பேய் பிடித்துவிட்டது அதை விரட்டுகிறோம்' என்பார்கள்! பேயைப் போலவே இல்லாததை இருப்பதாக நம்புவது, கடவுள், மதமும் ஜாதியும், ஜனநாயகம் - இந்த மூன்று பேய்களும் நாட்டைவிட்டே விரட்டப்படவேண்டும். 

அப்போதுதான் நம் மக்கள் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபட முடியும். கடவுள் என்ற ஒன்று கிடையாது. பேய் போல அது ஒரு கற்பனைதான். உங்களிடத்திலேயே பலர் பக்தி நிறைந்தவர்களாக இருக்கலாம். ஆத்திரப்படாமல் கேட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திப்பதற்கு முன், இதைச் சொல்லுகிற நான் யார் என்று யோசனை செய்து பார்க்க வேண்டும்.

'எங்கள் குடும்பம் ஈரோட்டிலேயே பெரிய கடவுள் பக்திக் குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவன் நான். ஊரில் உள்ள பாகவதர்களெல்லாம் எங்கள் வீட்டில்தான் சதா சாப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் எந்த சாமானைப் பார்த்தாலும் அதில் நாமம் போட்டுத்தான் இருக்கும். நானும் பெரிய பதவிகள் வகித்து இருந்திருக்கிறேன். ஈரோடு தேவஸ்தான கமிட்டிக்கு பிரசிடென்டாக இருந்திருக்கிறேன். சில பாடல் பெற்ற ஸ்தலங்கள் எல்லாம்கூட என்னுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் நிர்வாகம் செய்து முதன் முதலாக ஆதிதிராவிடனை கோயில் உள்ளே நுழைய வைத்து கோர்ட் வரையிலே சென்றிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடவுள் என்பதை நம்பாததற்குத்தான் நிறைய அறிவு வேண்டும். கடவுளை நம்ப முட்டாள்களாக இருக்க வேண்டும். கடவுள் இல்லையென்று சொல்ல வேண்டுமானால் அதற்கு இயற்கையைக் கட்டி ஆள வேண்டும்; ஒவ்வொன்றுக்கும் சரியான சமாதானம் சொல்ல வேண்டும்.

நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும், நினைக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கிறதாகவே வைத்துக் கொண்டால், அது எப்படி இருக்க வேண்டும். இதுதான் எங்கள் கேள்வி! உலக மக்கள் தொகையாகிய 230-கோடியில் இந்தியா என்ற இந்த நாட்டில் உள்ள 30- கோடியைத் தனியாக வைத்து விட்டு மற்றதைப் பார்த்தால் 100-கோடி மக்களுக்கு மேல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் சரிபகுதி மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சைனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன், கொரியா ஆகிய நாடுகளில் உள்ள பவுத்தர்களுக்கு மோட்சம், நரகம் ஆகியவற்றால் ரஷ்யாவில் உள்ள 30- கோடி மக்கள் ஒரு குஞ்சுக்குக்கூட கடவுள் நம்பிக்கை இல்லை. ஒன்றிரண்டு கிழடுகளுக்குத்தான் சில கோயில்கள் இருக்கின்றன. அதுவும் எல்லாக் கிழடுகளும் அப்படியிருப்பதில்லை. மற்ற பெரிய பெரிய ஆலயங்களெல்லாம் கண்காட்சி சாலையாகத்தான் அங்கு இருக்கிறது.

நாம் 30 கோடி மக்களும் காட்டுமிரண்டிகளாக இருக்கிறோம். கடவுள், பேய் பிடித்து ஆட்டுபவர்களாக இருக்கிறோம். ஏன் மற்ற மதத்துக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்களைப் போலாவது கடவுளைப்பற்றி நினைக்கிறோமா? கடவுளால் ஜாதிக்க இயலாததை எல்லாம் வெள்ளைக்காரன் தற்போது ஜாதித்துக் காட்டுகிறானே, சக்கிமுக்கிக்கல் காலத்தில் கடவுள் இருந்திருந்தால் ஏன் அவன் நமக்கு எலக்டிரித் தரவில்லை? கட்டை வண்டிக் காலத்தில் கடவுள் இருந்திருந்தால் ஏன் நமக்கு அவன் ஆகாய விமானம் தரவில்லை? அவ்வளவு தான் கடவுள் சக்தி. கிறிஸ்தவனாக உள்ள வெள்ளைக்காரன் இதுமாதிரி பற்பல அதிசயங்களைச் செய்கிறான்.

கடவுளால் ஆகாததைச் செய்துகாட்டி, கடவுள் சக்தி இவ்வளவுதான் காட்டுகிறான் என்றாலும் அவன் ஒரு கடவுளைக் கும்பிடுகிறான் என்றால் அது சடங்கு சம்பிரதாயத்திற்கே தவிர வேறில்லை. அவன் கடவுளைத் தொழுகிறான்; அவனுக்கு ஒரே கடவுள்தான் உண்டு. அதற்கு உருவமில்லை; மகா யோக்கியர் அந்தக் கடவுள் என்கிறான். கருணாநிதி என்கிறான்; ஒழுக்கமுள்ளவர் என்று வருணிக்கிறான். அந்தக் கடவுளுக்கு ஒன்றும் தேவையில்லை. இதுதானய்யா கிறிஸ்தவனும், முஸ்லிமும் சொல்லும் கடவுள்! ஆனால், உனக்குத் தெரியாதே உன் கடவுள் எப்படிப்பட்டதென்று. உனக்கு எத்தனை கடவுள் என்றால் உனக்கே தெரியாதே! நாட்டில் இருக்கிற அத்தனையும் கடவுள்கள்!

ஏதோ நாங்கள் வந்ததனாலே இப்போது இந்த நாட்டிலே கடவுள்கள் குறைந்து இருக்கின்றன. ஒன்றா இரண்டா இங்கே - உன் கடவுள்? மாடு, பன்றி, குரங்கு, மீன், நாய், கழுதை, குதிரை எல்லாம் உன் கடவுள்! 600, 700- ரூபாய் செலவு செய்து கல்லில் குதிரை செய்து வைக்கிறானே; மாட்டுச் ஜாதியைக் கடவுளாக்கி வைத்திருக்கிறானே. நல்ல வேளையாக மனுஷன் ஜாதியை கடவுளாக்கவில்லை. ஏனென்றால், பார்ப்பானுக்குத் தெரியும், அப்படி ஆக்கினால் பின்னால் அவனுக்கே கஷ்டம் என்று அதனால்தான் விட்டு விட்டான். மதுரை வீரன் என்றொரு கோயிலுக்குப் போனால், அங்கு இரண்டு நாய்கள் இருக்கும். ஒரு கடவுளுக்குப் பதில் இத்தனை கடவுள்கள் எப்படி ஆயிற்று இந்நாட்டில்?

ஒரு கடவுளைப் பற்றிச் சொல்லுகிறான். அவனது அரைஞாண் கயிறு படாத பெண் பிள்ளையே உலகத்தில் இல்லை என்று சொல்லுகிறான்! கிருஷ்ணனைப் பார்த்து நாரதர் இப்படிச் சொன்னார் என்று எழுதி வைத்திருக்கிறான். கடவுள் யோக்கியதை இப்படியா இருக்கவேண்டும்? பெரும்பாலான கடவுள்கள் ஒண்ணாம் நம்பர் கொலைக்காரக் கடவுள்களாக இருக்கின்றன. கடவுள் தொகையைப் பெருக்குவதில் சைஃபர் சேர்ப்பதற்கு பஞ்சம் வந்தால்தான் அதோடு நிறுத்துகிறான்.

கருணாநிதியான கடவுள் மற்றவனைக் கடித்துத் தின்னும்; இரணியனைப் பிய்த்து எறிந்து கடித்தது என்றல்லவா எழுதி வைத்திருக்கிறான். நாய்கூட மனிதனைக் கடிக்கிறதே தவிர கடித்துத் தின்னுவதில்லை. ஆனால், கடவுள் மனிதனைக் கடித்ததோடு இல்லாமல் தின்னவும் செய்திருக்கிறது. நடராசன் என்று ஒரு கடவுள் மனுஷனை அதுவும் நம்மவனைப் போட்டு மிதித்து வைத்துக் கொண்டு நடனம் ஆடுகிறதாம். காளி என்ற இன்னொரு கடவுள் கழுத்தெல்லாம் மனிதத் தலையாகவே இருக்கும்! அவ்வளவு கருணை வெள்ளம்! கடவுள் உருவம் செய்தவனுக்காகவது புத்தி இருந்திருக்க வேண்டாமா? அன்பு வடிவமான கடவுள் என்று சொல்லப்படுவதற்கு வேலாயுதம் ஏன்? சூலாயுதம் எதற்கு? கொழுவும் மழுவும் வைக்கலாமா என்று யோசிக்க வேண்டாமா? இதையெல்லாம் வைத்திருந்தால் அவை கொலை பண்ணாமல் இருக்க முடியுமா? இப்படி நாம் அந்த காட்டுமிராண்டிகளாகத்தானே வாழ்கிறோம்?

படியளக்கும் கடவுள் என்று சொல்லப்படுவதற்கு நாம்தானே படியளக்க வேண்டியிருக்கிறது? ஆவுடையார் கோயிலில் மூன்று மூட்டை அரிசி தினசரி செலவாகிறது என்றால் எதற்கு? சாமி பேரைச் சொல்லி பார்ப்பான் விழுங்குகின்றான். மிகுந்ததைப் பிறகு மார்க்கெட்டிலும் விற்கிறான், பார்ப்பான். தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கஞ்சியில்லாமல் செத்தார்கள் என்று போட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் கோயில் விழாக்கள், வடை, பாயசம், புளியோதரை, பொங்கல் இவற்றிற்கு குறைச்சல் உண்டா? இவ்வளவும் கடவுளுக்கு ஜீரணமாகுமா? என்று யாரும் யோசிப்பதில்லையே. இவ்வளவும் செய்த நாம் கோயிலில் ஏன் கடவுளுக்கு கக்கூஸ் கட்டி வைக்கவில்லை என்று யோசிப்பது இல்லையே? ஸ்ரீரங்கம் கோயிலில் டின் டின்னாக நெய்யை ஊற்றிச் செய்கிறானே, அதையெல்லாம் யார் வயிற்றிலே அறுத்து வைப்பதற்கு? கொட்டாப்புளி மாதிரி இருக்கிற பார்ப்பான்களுக்குத்தானே அவ்வளவும்.

ஸ்ரீரங்கம் கோயிலிலே சாமிக்குத் தேங்காய் உடைப்பது இல்லை. திருகுவதற்கு ஒரு பெரிய கருவியை வைத்திருக்கிறான். எவ்வளவு பெரிய தேங்காயானாலும் நொடியிலே திருகிவிடும். ஏண்டா என்றால், உடைக்கிற சப்தத்தைக் கேட்டு விழித்துக் கொள்ளுவார் என்று சொல்கிறார்கள். எப்போது படுத்தார், எப்போது எழுந்திருப்பார் என்று ஒரு பயலுக்கும் தெரியாது.

அப்படி எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டேயிருக்கும் சாமிக்கு எதற்கு இத்தனைப் பண்டங்கள், ஆறுகால பூஜைகள்? ஒருத்தனும் ஏன் என்றே கேட்டதில்லையே. ஒருவனுக்கும் இந்த 1958-இல் கூட புத்தி இல்லையே. இன்னும் நாங்கள் இல்லை என்று சொன்னால் ஒவ்வொருவரும் கட்டாயம் ஸ்ரீரங்கம் வரவேண்டும் என்று சொல்லி உதைப்பானே?

இந்த சாமிகளுக்கு எத்தனை பெண்டாட்டிகள், கருமாதிகள், கல்யாணங்கள் போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆயிற்று. இந்த வருடம் சாமிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறார்களே என்று ஒருத்தனும் யோசிப்பது இல்லையே. காளை மாடு கன்று போட்டது என்றால் உடனே சொம்பு எடுத்துக் கொண்டு போய் பால் கற என்று சொல்லுபவன் புத்தி மாதிரிதான் இருக்கிறது இவர்கள் நிலை, சாமி எதற்காக தேவடியாள் வீட்டிற்குப் போவது? மனுஷன் பிறகு இந்த இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக மாட்டானா? கடுகு அளவு புத்தியிருந்தால் ஸ்ரீரங்கத்திலிருந்து உறையூருக்கு தேவடியாள் வீட்டிற்காக சாமியைத் தூக்கிக்கொண்டு வருவானா? வெளியார்கள் பார்த்தால் காரித்துப்ப மாட்டார்களா? நாம் இதற்கெல்லாம் வெட்கப்பட வேண்டாமா?

பக்தி என்றால் ஒழுக்கம், நாணயம் இவை வேண்டாமா? பன்னிராயிரம் கோபிகாஸ்திரீகளோடு கொஞ்சினார், அத்தனை பேரும் கடவுளுடைய பெண்டாட்டிகள் என்று எழுதி வைத்திருக்கின்றானே. நாரதர் தனக்கொரு பெண்டாட்டி வேண்டுமென்று கேட்டாராம். கிருஷ்ணன், நான் எந்த வீட்டில் இல்லையோ அந்த வீட்டிற்கு நீ போ என்றானாம். நாரதர் எந்த வீட்டிற்குப் போனாலும் அங்கே கிருஷ்ணன் இருந்தானாம். நாரதர் திரும்பி வந்து இதைச் சொன்னாராம். பிறகு நாரதரும், கிருஷ்ணனும் சேர்ந்து பிள்ளை பெற்றார்களாம். அப்படிப் பிறந்த 60-குழந்தைகள்தான் பிரபவ, சுக்கில மற்றும் தமிழ் வருடங்கள் எனப்படுபவை எங்கேயாவது ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை பெற முடியுமா? இது எவ்வளவு ஆபாசமும் அறிவு அடிப்படையும் இல்லாத கதையாகும்.

இவ்வளவு ஒழுக்க ஈனமாக, அநாகரிகமாகவா நமது கடவுள் தன்மை இருக்க வேண்டும்? மனிதத் தன்மைகளே இல்லை இவைகளிடத்தில், இந்த மாதிரியான அயோக்கிக் கடவுள்கள் இருக்கலாமா? விஷ்ணு, சிவன், பிள்ளையார் கொழுக்கட்டைராயன் மாதிரி இந்தக் கடவுள்கள் என்ன ஜாதித்திருக்கின்றன? அல்லது அவற்றால் நாம்தான் என்ன ஜாதித்துக் கொண்டோம்? இல்லாத குறை ஒன்றைப் போக்க இத்தனை இழிவுகளா? எனவேதான் இந்தப் பேயை ஒழிக்க வேண்டுமானால், கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்க வேண்டும்; பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அரசாங்கத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம்.

உலகத்தில் அனுபவிப்பதற்கென்றே பார்ப்பான் இருக்கிறான். நாம் என்ன பலனைக் கண்டோம்? அவன் அனுபவிப்பதைக் கண்டு நாம் என்ன பயன் பெறுகிறோம்?

----------------------------- 14.10.1958- அன்று மதுரை மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி - "விடுதலை", 19.10.1958

சாணி கடவுள், அரசமரம், வில்வமரம், கல், படம், பொம்மை எல்லாம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்?

கடவுள்கள் யோக்கியதை

கடவுள் என்றால் மூடநம்பிக்கைக்கு ஆளாகக் கூடாது; சாணி கடவுள், அரசமரம், வில்வமரம், கல், படம், பொம்மை எல்லாம் நம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்? ஆறறிவு உள்ள மனிதனா இவ்வளவு காட்டுமிராண்டியாயிருப்பது?

கடவுள் வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்களேன். அந்தக் கடவுளுக்கு உருவம் கிடையாது. எங்கும் இருப்பார், பேர் இல்லாதவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகமதியரும் கிறிஸ்தவரும் அப்படித்தானே வைத்திருக்கிறார்கள்? ஒரு கடவுள் என்றுதானே எல்லோரும் பேசியிருக்கிறார்கள்? நம்மவர்களும் பேசியிருக்கிறார்கள். இருந்தும் எப்படி இவ்வளவு கடவுள்கள் உண்டாயின?

சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட்டால் இதுவரை மைல்கல், ஃபர்லாங்குக்கல் எல்லாம் சாமியாகியிருக்குமே! அவற்றிற்கு நாமம் போட்டு பொட்டு வைத்து மைலீசுவரர், ஃபர்லாங்கீசுவரர் என்றெல்லாம் சொல்லியிருப்பானே!

இந்தச் சாமிகளுக்குப் பன்றிமுகம், பாம்பு முகம் எல்லாம் எப்படி வந்தன? தோற்றமெல்லாம் குத்துகிற மாதிரி, வெட்டுகிற மாதிரி உள்ளதே; எதற்காக இந்தப் போக்கிரித்தனமான வேடம்? கடவுளுக்குப் பெண்டாட்டி எதற்காக? போதாது என்று வைப்பாட்டி, பள்ளி அறைத் திருவிழா, ஊர்வலம் வருவது, இவையெல்லாம் எதற்கு? இவற்றையெல்லாம் வெளிநாட்டிலே போய்ச் சொல்லிப் பாரேன். உன்னை காட்டுமிராண்டி என்பான்!


ஒருவன் சொல்கிறான்; கிருஷ்ணன் தங்கை அண்ணனிடம் சென்று "உலகத்திலிருக்கிற பெண்கள் எல்லாம் உன்னை அனுபவிக்கிறார்கள்; நான் அப்படிச் செய்ய முடியவில்லையே" என்கிறாள். அவனும் ஜெகநாதத்திற்கு வா என்கிறான். இதுதானே இன்றைக்கும் ஜெகநாதத்தில் இருக்கிறது? துரோபதை முதலியவர்கள் எல்லாம் அவன் தங்கைகள் என்று இன்னொருவன் சொல்கிறான்! துரோபதை யோக்கியதை எப்படி? சினிமாவிலே வேண்டுமானால் இப்படியெல்லாம் செய்யேன்!

ஆண் பிள்ளை சாமி பெண் பிள்ளை சாமி எல்லாவற்றிற்கும் கையிலே சூலாயுதம் வேலாயுதம் சக்தி - இவை எதற்கு? இப்படிச் சாமிகளே யோக்கியதையாக நடக்கவில்லையென்றால் மனிதன் எப்படி யோக்கியதையாயிருப்பான்? காசு பிடுங்கினாலும் பரவாயில்லை, நம்மை மடையனாக்கி விட்டானே, 1957-லே எப்படி நடந்து கொள்வது என்று வேண்டாமா? நமக்குச் சரித்திரம் இல்லை; பார்ப்பான் வருவதற்கு முன் நம்ம சங்கதியைக் காட்டுவதற்குச் சரித்திரம் இல்லையே! பார்ப்பான் வருவதற்கு முன்னாலே கடவுள் இருந்ததாகக் கதைகூட இல்லையே! பார்ப்பான் வந்த பிறகுதானே கடவுள் வந்தது? யாராவது மறுத்துச் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பாரதம், பாகவதம் போன்ற இவற்றிலே வருவதுதானே இன்றைக்குக் கடவுள் யோக்கியதை? பொண்டாட்டி, வைப்பாட்டி, ஆணும் ஆணும் கூடி பிள்ளை பெறுவது போன்றவை! என்ன அநியாயம்? இவற்றையெல்லாம் இன்னொரு நாட்டானிடம் போய்ச் சொன்னால் நம்மை மதிப்பானா? ஒழுக்கமுள்ள சாமி என்று ஒரு சாமியை யாராவது சொல்லட்டுமே! இராமாயணத்திலே வருகிற இராமன், அவன் மனைவி, வேலைக்கார அனுமான் எல்லாம் கடவுள்! இராமன் கடவுள் என்கிறதற்கு ஆதாரம் வேண்டாமா? எதிலே யோக்கியதையாக, நாணயமாக நடந்தான் என்று யாருக்கும் தெரியாது. 1957-லேயோ இராமாயணத்தைக் கடவுள் சம்பந்தமானது என்று நினைப்பது? பாரதத்திலோ எல்லாம் அயோக்கியர்களே! இன்றைக்கு எல்லோரையும் தெய்வீகத் தன்மையுள்ளவர்களாகச் செய்து வைத்திருக்கிறான்! பாரதத்தை ஒரு விபச்சாரிக் கதை என்றே சொல்லலாம். ஒருவனாவது அதிலே அவன் அப்பனுக்குப் பிறக்கவில்லையே! கண்டவர்களுக்குப் பிறந்தவர்கள் பங்கு கேட்டார்கள். கொடுக்க முடியாது என்ற சொல்லிவிட்டதாகக் கதை!

கதை நடந்தது என்று சொல்லவில்லை; குப்பைக் கதையை எழுதிவிட்டு அய்ந்தாவது வேதம், அப்படி இப்படி என்று சொல்லி நம்மை மட்டம் தட்டி வைத்திருக்கிறான் பார்ப்பான்.


இராமன் ஏன் காட்டுக்குப்போனான்? ஏன் அவன் தாயார் காட்டுக்குப் போகச் சொல்கிறாள்? கதைப்படி இராமனுக்கும் அவனப்பனுக்கும் சொத்தில் உரிமையில்லை. பரதனின் அம்மாவைக் கல்யாணம் பண்ணும்போதே இராச்சியத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டான். தசரதன் மரியாதையாக அவளுக்கே நாட்டைக் கொடுத்திருக்க வேண்டும். துரோகத்திற்குச் சம்மதித்ததாலே "காட்டுக்குப் போ" என்று சொன்னாள். அப்பன் சொன்னதுக்காகப் போனான் என்று திரித்துச் சொல்லுகிறான் பார்ப்பான் இன்றைக்கு!

இராமனும் அவனப்பனும் காட்டுக்குப் போகாமலிருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தார்கள்! இராமனே சொல்கிறான், பரதனிடம்: "உன் அம்மாவுக்கே இராச்சியம் சொந்தம்" என்று. சோமசுந்தர பாரதியார் "தசரதன் குறையும் கைகேயி நிறையும்" என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதைப் படித்தால் தெரியும். இராமாயண ஊழல் பற்றிப் பேச ஒருநாள் போதாதே!

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இப்படியெல்லாம் வெட்கம் இல்லாமலே எழுதியிருக்கிறானே என்றுதான் சொல்கிறேன்.

வால்மீகி எழுதியபடி சீதையே இராவணன் பின்னாலே போயிருக்கிறாள்! அவன் வந்தது தெரிந்தே இலட்சுமணனைப் போகச் சொல்லி வேலையிடுகிறாள். இராமாயணத்தில் வர்ணித்து எழுதியிருக்கிறான். "படுக்கையெல்லாம் சிதறிக் கிடந்தது. சின்னா பின்னப்பட்டிருந்தது" என்று வால்மீகிப்படி இராவணன் சீதையை அவள் இஷ்டமில்லாமல் தொட்டிருக்க முடியாதே? இரண்டு சாபங்கள் இருக்கின்றன. வால்மீகி சாடை காட்டுகிறான். சாபம் ஞாபகத்துக்கு வந்து அவள் கூந்தலையும், தொடையையும் பிடித்து தூக்கினான் என்று! வால்மீகி ஒன்றையும் மறைக்காமல் எழுதியிருக்கிறான். நாங்கள் சொல்வதிலே பொய்யிருந்தால் பார்ப்பான் விட்டு விடுவானா? உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி மாதிரி விழித்துக் கொண்டே நம்மை ஒழித்துக்கட்டப் பார்க்கிறானே? இராமன் ஒடித்த வில் முன்னாலேயே ஒடிக்கப்பட்ட வில் என்கிறதற்கு அபிதான சிந்தாமணியில் 5- இடங்களிலே ஆதாரங்கள் இருக்கின்றன.


------------------------------------------05.07.1957- அன்று பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி - "விடுதலை", 14.07.1957

26.11.13

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா?ஜாதி இருக்கிற நாட்டிலே சுதந்திரம் இருக்குமா?

நவம்பர் 26 நவம்பர் 26 என்பது திராவிடர் கழக வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாற்றிலும்கூட மறக்க முடியாத நாள்! இந்த நாளில்தான் இன்றைக்கு 56 ஆண்டுகளுக்குமுன் (1957இல்) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள பகுதியை தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி திராவிடர் கழகத் தோழர்கள் எரித்து மூன்றாண்டுக் காலம் வரை கடுங்காவல் தண்டனை ஏற்ற நாள்.

1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சையிலே ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாடு கூட்டினார்.

கொட்டும் மழையிலும் 4 லட்சம் மக்கள் கூடினார்கள். அந்த மாநாட்டிலே ஜாதி ஒழிப்புக்கான திட்டத்தைத் தந்தார் தந்தை பெரியார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதம், ஜாதிகளைக் காப்பாற்றும் பகுதிகளைச் சுட்டிக் காட்டினார் (13(2); 25(1); 26, 29(1)(2) 368).

15 நாட்களுக்குள் இந்தப்  பகுதியை மாற்றி ஜாதி ஒழிப்புக்கு அரசு வழி செய்யவில்லையென்றால் நவம்பர் 26 அன்று திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் பகுதியை எரிப்பார்கள் என்று பிரகடனப்படுத்தினார்.

பல லட்சக்கணக்கான மக்கள் கூடிய ஒரு மாநாட்டில் வெகு மக்களின் மாபெரும் தலைவர் ஒரு கருத்தை வெளி யிடுகிறார் என்றால், அதற்குரிய மதிப்பைக் கொடுத்து ஆராய்வதுதான் உண்மையான ஜனநாயகமாகும்.
ஆனால் அரசு அந்தப்படி நடந்து கொண்டதா என்றால் இல்லை என்பதுதான் வேதனையான ஒன் றாகும்.

சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லை, அப்படியொரு போராட்டத்தை அறிவித்தார் பெரியார்.
சென்னை மாநில அரசு அவசர அவசரமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது தேசிய அவமதிப்பு தடுப்பு மசோதா (Prevention of Insult to
National Honour 1957).

மூன்றாண்டுகள்வரை தண்டனை விதிக்கலாம் என்கிறது அந்தச் சட்டம்.
தந்தை பெரியாரா அஞ்சுவார்? கருஞ்சட்டைத் தோழர்களா பின் வாங்குவார்கள்? 10 ஆயிரம் தோழர்கள் எரித்தனர். வெறும் மூவாயிரம் பேர்களை அரசு கைது செய்தது. பலர் சிறையில் மாண்டனர்; வேறு பலர் நோய் வாய்ப்பாட்டு, வெளியில் வந்த சில நாட்களிலேயே மரணத்தை  தழுவினர்.

இன்றைக்கு 56 ஆண்டுகள் ஓடி விட்டனவே - இந்திய அரசு அந்த ஜாதி ஒழிப்புக்கு வழி செய்ததா? தந்தை பெரியார் கேட்டாரே - ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கிற நாட்டிலே சுதந்திரம் இருக்குமா? என்று வினா எழுப்பினாரே - அறிவு நாணயமாக இதற்கு விடை உண்டா?

கடைசியாக தந்தை பெரியார் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (1973 நவம்பர் 8,9) ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில் இடம் பெற்று இருக்கும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே!

இதுவரை இதுகுறித்த சிந்தனை அரசியல் கட்சிகளுக்கு உண்டா? நாட்டுத் தலைவர்களிடத்தில்தான் உண்டா? ஊடகங்கள்தான் இதனைக் கண்டு கொள்வதுண்டா?

திராவிடர் கழகம் தானே தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்கள்தானே அதற்காகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் - களங்களைக் கண்டு கொண்டும் இருக்கின்றனர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தேவை என்ற கழகத்தின் கோரிக்கை - போராட்டம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் மிக முக்கியமான கூறு அல்லவா!

இதுகுறித்துத் திராவிடர் கழகம் தொடர்ந்து பல திட்டங்களை வகுத்து நாடெங்கும் பிரச்சாரப் புயலைக் கிளப்பி கடைசியாக ஒருமித்த கருத்துள்ளவர்களை ஒன்று கூட்டி  மாநாட்டை நடத்தி, மாபெரும் போராட் டத்தை நடத்தும் திட்டம் கழகத்திடம் உண்டு.

உச்சநீதிமன்றமும் தேவையில்லாத வகையில் இந்த வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் நியாயமான கொள்கையை ஏற்றுக் கொண்டு, மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையிலான ஆட்சி இரு முறை சட்ட மன்றத்தில் உரிய வகையில் சட்டம் இயற்றியும், தீர்மானம் நிறைவேற்றியும் உள்ள நிலையில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்று விடுகிறார்கள்.

பிறவியின் அடிப்படையில் பேதம் பேசும் வழக்குக்கு எதிரான ஒரு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அலட்சியம் காட்டுவது சரியானதல்ல;  விரைவில் தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று இந்த ஜாதி ஒழிப்புப் போராட்ட நாளில் வலியுறுத்துகிறோம்.

இந்த நாளில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வெஞ்சிறை கண்ட தோழர்களுக்கெல்லாம், வீர மரணம் அடைந்த கருஞ்சட்டைகளுக்கெல்லாம் வீர வணக் கத்தைச் செலுத்துவோம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
                    ----------------------------”விடுதலை” தலையங்கம் 26-11-2013

பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!

பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்! நீங்களே இழிமகன் என்று ஒப்புக்கொள்ளலாமா?

தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக் கூட்டம் கட்டட நிதி அளிப்புக் கூட்டமாகக் கூட்டப்பட்டுள்ளது. நிதியளிப்புக் காரியத்திற்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை. பணத்தைத் தபாலில் (பண விடைத்தாள் மூலம்) அனுப்பினால் அல்லது ஆள் மூலம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். பணம் வாங்குவதற்கு நான் இவ்வளவு ஆடம்பரம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நிதியளிப்புக் கூட்டம் என்ற பெயரால் ஆங்காங்கு நம் கருத்துக்களைச் சொல்லலாம் என்பதற்கே - பிரச்சாரப் பயனை உத்தேசித்தே - இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீண் ஆடம்பரம், அதோடு வெட்டியான செலவு, இவைகளில் நேரமும் அதிகமாகிவிட்டது. நான் முதலில் இந்த ஊரில் ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்ற கண்டிஷன் (நிபந்தனை) பேரில் தான் வந்தேன். முக்கிய செயல்களில் கவலையில்லாமல், கண்டபடி அநாவசியமான வழிகளில் செலவு செய்து ஆடம்பரம் செய்துவிட்டார்கள். ஏனென்றால் இந்த மாவட்டத்தில் (தஞ்சாவூர்) ரூ.7000- தான் கேட்டேன். அவர்கள் திட்டம் போட்டுக் கொண்டது 12,500 ரூபாய். ஆனால், இதுவரையில் 30- ஆயிரம் தந்துவிட்டார்கள். ஆகவே, நான் பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிடைத்த வரையில் சரி - என்ன கொடுத்து வைத்தது வீணாகப் போகிறது? ஆனால், எனக்குப் பேசுவதற்கு நிறைய அவகாசம் (கால நீளம்) தந்து என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் யாரும் என்னைப்போல் பேசமாட்டார்கள். காரணம், அவர்களுக்கு விஷயம் தெரியாது என்பதல்ல. ஏன் அவர்கள் அறிவாளிகள்தான், மேதைகள்தான்! ஆனால், என்னைப்போல் பேசினால் ஓட்டு (தேர்தல் வாக்கு) கிடைக்காது - உதை கிடைக்கும் என்று பயந்து கொள்வார்கள். விஷயம் அததான். எனக்கு வயது 81- ஆகிவிட்டது. இவ்வளவு நாள் இருப்பதே அதிசயம்தான். அதனால் நம்முடைய மீதி நாள்களை இந்தக் காரியத்தில் செலவிட்டுக் கருத்தைச் சொல்லிவிட்டுப் போவது என்ற தைரியத்தில் துணிந்து பேசுகிறேன்.


தோழர்களே! இன்று நம் மக்களுக்குள்ள இழிவு இன்று நேற்றல்ல, 3000- ஆண்டகளாக உள்ளது. நமக்குப் புத்தியும், கவலையும் இல்லாததால் நம்மை இழிவுடுத்தவே உண்டாக்கப்பட்ட சாஸ்திரங்களையும், குழவிக் கல்லையும் (கல் சிலையையும்), பார்ப்பானையும் கட்டிக் கொண்டு அழுகிறோம். மான உணர்ச்சியைப் பற்றியும் கவலைப்படுவதற்கு இல்லாத காட்டுமிராண்டிகளாக இன்றும் வாழ்கிறோம். இன்று நாம்தான் மூட்டை தூக்குகிறோம். கக்கூசு (மலக்கழிவு) எடுக்கிறோம். பாடுபட்டுப் பயிர் செய்கிறோம். கல்லுடைக்கிறோம். இப்படித் துன்பப்பட்டுச் சமுதாயத்திற்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு திராவிடர் ஆகிய நாம்தான் இழிமக்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று கூறப்படுபவர்களாக வாழ்கிறோம்! ஒரு வேலையும் செய்யாத சோம்பேறி, மேல்சாதியாக - பிராமணனாக வாழ்கிறான்!

இது ஏன் என்று 3000- ஆண்டுகளாக எவரும் பேசவில்லையே? புத்தர் பகுத்தறிவுக் கருத்துச் சொன்னார். அவரையே தீர்த்துக்கட்டி விட்டார்கள். மற்றப்படி ரிஷிகள், முனிவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாரும் நமக்கு எதிரிகளாக - நம்மை இழி மக்களாக்குவதற்கு ஆதரவாகத் தோன்றியவர்கள்தான். முன்பு நம்மைவிட மடையனாக அக்காள் - தங்கையைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவன் தான் வெள்ளைக்காரன். இன்று அவன் அறிவால் எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! அதுபோலத்தான் முஸ்லிம்களும் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்கள்! "நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் அவர்களே சொல்வார்கள், நபிகள் பிறப்பதற்கு முன்பு நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தோம்" என்று! இன்று எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்! நாம் இன்றும் சிந்திக்காமல், கவலைப்படாமல் இருக்கிறோம் என்பதைத் தவிர நமக்குப் புத்தியில்லை என்று சொல்ல முடியுமா?

இதுவரையில் யாரும் கவலைப்படாத - சொல்லப் பயப்படுகிற காரியத்தை நாங்கள் தோள் மேல் போட்டுக் கொண்டு அலைகிறோம். முடிந்தால் நமக்கு இருந்துவரும் இழிவை - ஜாதியை - ஒழிக்கிற காரியம் தான் முடியும். நாங்கள் என்ன மற்றவர்களைவிட நெய்யில் பொரித்தவர்களா என்றால், நாங்கள் துறவிகள் மாதிரி யார் தயவிலும் பிழைக்க வேண்டியவர்கள் அல்லர். எங்கள் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் அப்பன் பாட்டன் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்திப் பாடுபடுகிறவர்கள். மற்றவர்கள் மாதிரி உங்கள் ஓட்டுக்கோ மற்றவைகட்கோ உங்களை எதிர்பார்க்கிறவர்கள் அல்லர்.


இப்படிப்பட்ட எங்கள் தொண்டில் பலனும் கிடைக்கிறது. சாதாரணமாகப் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள்; இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு அடி வாங்காத பெண் யார்? ஒருத்தன் பல வைப்பாட்டிகள் வைத்திருப்பான். கேட்டால் "கிருஷ்ணனே ஆயிரக்கணக்கில் வைப்பாட்டி வைத்திருந்தான் - எனக்கென்ன" என்பானே! இதை யார் கேட்டார்கள்? பெண்களுக்காக முதலில் நாங்கள்தான் கூப்பாடு போட்டோம்.

இன்று காங்கிரஸ்காரன்தான் தீண்டத்தகாதவர்க்கு மந்திரி பதவி தந்திருக்கிறான் என்றால் முதலில் கூப்பாடு போட்டது யார்? மற்றவர்கள் பேசாத காலத்தில் நாங்கள்தானே பேசினோம்! இன்றும் என்ன? எங்களை ஒழித்துவிட்டால் மீண்டும் தோசையைத் திருப்புகிற மாதிரித் திருப்பிப் போடலாம் என்று எண்ணுகிறான். இன்று சட்டத்தில்தானே பெண்களுக்கு உரிமை - சொத்து கொடுத்திருக்கிறான்! நாளைக்குச் சட்டத்தைத் திருத்தினால் போகிறது!

இன்று இராஜாஜி (இராஜகோபால ஆச்சாரியார்) தனிக்கட்சி வைத்துக் கொண்டு பெண்களுக்குச் சொத்து கொடுத்தது தப்பு என்று தைரியமாகப் பேசுகிறாரே! நாங்கள் உயிருடன் இருக்கும்போதே பேசுகிறாரே! நம்மை என்றும் சூத்திரனாகவே வைத்திருக்க வேண்டும், (மனு) தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறாரே! நம் (திராவிட) இனத்தவர்களான மானங்கெட்டவர்களும் அதில் போய்ச் சேருகிறார்களே? இந்தக் கம்யூனிஸ்ட் (பொதுவுடமைவாதி) - சாதியைப் பற்றிப் பேசுகிறானா? இவனுக்கு எதற்கு ஜமீன்? இவனுக்கு எதுக்கு சொத்து என்கிறானே தவிர 'உழைக்கிறவன் ஏன் கீழ்ச்ஜாதி? உழைக்காத பார்ப்பானுக்கு எதற்கு உயர் சாதிப் பட்டம்?' என்று கேட்கிறானா? நாங்கள் தான் சொல்கிறோம். சக்கிலி செருப்புத் தைக்க வேண்டும், நாவிதன் சிரைக்க வேண்டும், குயவன் சட்டி பானைதான் செய்ய வேண்டும் - எல்லோரும் படித்துவிட்டு உத்தியோகத்திற்கு வந்தால் எங்கள் கதி என்னாவது என்று இராஜாஜி பேசுகிறாரே! இவற்றையெல்லாம் யார் கேட்கிறார்கள்?


திராவிடர் கழகம் ஓர் அதிசமயமான நிறுவனம். உண்மையில் ஓர் அதிசயமான ஸ்தாபனம்தான். சாமியை உடைக்கிறோம். இராமாயணம் புரட்டு என்கிறோம். பாரதம் விபசாரி சரிதம் என்கிறோம். கடவுள் கல் என்கிறோம். இத்தனைக்கும் ஒரு ரகளை (கலகம்) இல்லை. ஓர் உயிர்ச்சேதம் இல்லை. சாதாரணமாக வடகலை, தென்கலை நாமத்திற்கு அசிங்கமாகச் சண்டை போடுகிறான்! சாம்பலுக்குப் பெரிய ரகளை நடக்கிறது. இன்னும் ஏதேதோ நடக்கிறது. நாங்கள் யாவரும் நினைக்காத மற்றவர் சொல்லப் பயப்படுகிற காரியத்தைச் செய்கிறோம். எந்த இரகளையும் இல்லை. முப்பதாண்டு பிரச்சாரத்தில் நல்ல பயன் கிடைத்திருக்கிறது.

அதனால்தான் இதை ஓர் அதிசயமான இயக்கம் என்கிறேன். இன்று உங்களுக்குத் தெரியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.


தோழர்களே! நீங்கள் யாரும் மானத்தை எண்ணி, கோயிலுக்குப் போகக் கூடாது. உள்ளே போய் நீ (திராவிடன்) சாமியைத் தொட்டால் சாமி செத்துவிடும் என்கிறான்! வெளியில் இருந்துதான் கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறான்! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால், கீழ்ஜாதி என்பதை ஒத்துக் கொள்வதாகத் தானே அர்த்தம் (பொருள்)?

பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள். அவன் பிராமணன் என்றால் நீ யார்? உன் மனைவியை வைத்துக் கொண்டே, கூட இருக்கும் வேறொரு பெண்ணை அவள் பதிவிரதை என்றால் உன் மனைவி விபச்சாரி என்று வாயால் சொல்லாவிட்டாலும் அர்த்தம் அதுதானே? அதுபோல நீ பார்ப்பானைப் பிராமணன் என்றால் நீ உன்னைச் சூத்திரன் - தேவடியாள் மகன் - என்பதை ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தம்? ஆகவே நீங்கள் நல்லபடி சிந்தித்து உங்கள் இழிவு நீங்க முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு உங்கள் ஆதரவை - உங்களுக்குச் சரி என்று பட்டால் தரவேண்டும்.


--------------------------------------------- 17.01.1960- அன்று நன்னிலத்தில் (குளிக்கரை) பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- "விடுதலை" 21.1.1960

25.11.13

பாலியல் வன்முறை!என்ன தான் தீர்வு?


இன்று - பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான  பன்னாட்டு நாள். இப்படியொரு நாள் தேவைப்படும் அளவிற்குப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது, சர்வ சாதாரணமாகி விட்டது.

இந்தத் திசையில் சட்டங்கள் போட்டாயிற்று என்றாலும், அதனால் பெரும் பயன் விளைந்திடவில்லை. பின் என்ன தான் தீர்வு? பெண்கள் தங்களைத் தற்காத்து, தேவையானால் தம்மைத் தாக்கவரும் மனித மிருகங்களைத் தாக்கும் அள விற்குத் தங்களை வளர்த் துக் கொள்ள வேண்டியது தான் சரியான தீர்வு.

கொஞ்ச காலத்திற்காவது பெண்கள் அனைவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான வாய்ப் பினை உருவாக்கலாம்.

நாலு இடத்தில் நச்சென   துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்ற செய்தி வந்தது என் றால், இந்த வீராதி வீரர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி விட மாட்டார்களா?

இன்றைக்கு 82 ஆண்டு களுக்கு முன்பே தந்தை பெரியார் கூறியுள்ளார்.

கும்மி, கோலாட்டங் களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலிய வைகளையும் சொல்லிக் கொடுத்து ஓர் ஆண் பிள்ளைக்குள்ள பலம் தைரி யம் உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கு உண்டாகும் படியாகவும் செய்ய வேண் டும் என்று ஈரோடு கருங்கல் பாளையம் முனிசிபல் பெண் கள் பாடசாலையின் ஆண்டு விழாவில் பேசி இருக்கிறார் (குடிஅரசு 26.4.1931).

அன்று பெரியார் சொன்ன கைக்குத்து என்பதை இன்றைய கராத்தேயோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

பெண்களுக்கான காவல் நிலையங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. காவல்துறையில் பணியாற் றும் பெண்களுக்கே பாது காப்பு இல்லை என்பதுதான் இந்நாட்டின் வெட்கக் கேடான நிலை.

சடை பின்னிப் போட்டுக் கொள்வது, பொட்டு வைத் துக் கொள்வது, பூ வைத்துக் கொள்வது என்று காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் கடைப்பிடித்தால் அந்தப் பணிக்கான மிடுக்கும், கம்பீரமும் காணாமற் போய் சாதாரண பெண்கள் நிலைக்குத்தான் அவர்கள் தள்ளப்படும் நிலை! பெண் களின் மீதான வன்முறை என்பது வெறும் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல; பெண்கள்பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள பழைய பஞ்சாங்கக் குப்பைகளை, சாஸ்திரச் சழக்குகளை, நாள் ஒன்று குறிப்பிட்டு அவற்றைக் கொண்டு வந்து கொளுத்த வேண்டும். பெண்கள்  மத்தியில் சிந்தனை ரீதியான புரட்சி வெடிக்கும் பொழுது, ஆண்களேயே மலைக்க வைத்து, அச்சங் கொள்ளவும் செய்துவிடுமே!

வடமொழி சுலோகத்திலி ருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1990 டிசம்பர் 24 இந்தியன் எக்ஸ்பிரஸ் மெகசின் பகுதியில் ஒரு செய்தி.
“Only when fire will cool, the moon, or the ocean fill with tasty water will a women be pure”
எப்பொழுது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப்பொழுதுதான் ஒரு பெண்ணும் தூய்மையானவளாக இருப்பாள் என்கிறது அந்த சுலோகம்.

முதலில் இந்தக் கேவலக் குப்பைகளைக் கொளுத்த பெண்கள் முன் வரட்டும்! வரட்டும்!!

------------------------- மயிலாடன் அவர்கள் 25-11-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

இராமன், கந்தன், கிருஷ்ணன், கணபதி என்பவர்கள் கடவுள்களா? கதைப்படி யோக்கியர்களா?

கடவுள் இழிவு!

இராமன் படத்தை "இழிவுப்படுத்தியதை"ப் பற்றி பார்ப்பனப் பத்திரிக்கைகள் கற்பனைச் செய்திகளை உண்டாக்கிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற இமாலயப் பிரயத்தனம் செய்து மானங் கெடும்படியான தோல்வியை அடைந்தார்கள். "அதன் பயனாக" என்று சொல்லத்தக்க அளவில் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தார், இராமனைக் காப்பாற்றி அய்ந்து வருடம் ஆளலாம் என்கின்ற நிலைக்கு வரவேண்டியவர்களாகி விட்டார்கள்.

இராமனை இழிவுப்படுத்தியதாக சொல்லப்பட்ட கற்பனைக் குற்றச்சாட்டிற்கு எந்தவித பதிலும், சமாதானமும் சொல்லவில்லை. காரணம், தி.மு.க. விஷயத்தில் தாட்சண்யம் கொண்டேதான்.

இராமனை இழிவுப்படுத்தியதை யாரும் மறுக்காமலிருந்தும், இழிவுப் பிரச்சாரம் பலமாக, அதி பலமாக செய்யப்பட்டு வந்தும், எதிரிகள் (பார்ப்பனர்) படுதோல்வி அடைந்திருப்பது யாவரும் அறிந்ததேயாகும்.

இப்போது எனது நிலை என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

இராமன் என்கின்ற பெயரையோ, உருவத்தையோ பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதவர்களை கடவுளாகக் கருதும்படியும் அதன் பயனாகவே பார்ப்பனரல்லாதவர்கள் (திராவிடர்களை) சூத்திரர், இழிஜாதி மக்கள் என்று ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடத்தும்படியும் செய்துவிட்டார்கள்.

இதை மாற்ற வேண்டுமென்கின்ற பிடிவாதக் கொள்கையில் அய்ம்பது ஆண்டாகத் தொண்டு செய்து வருகிறேன். அதன் பயனாய் இராமன் கடவுள் படம் செருப்பால் அடிக்கப்படவில்லை என்றாலும், பலவிதமான அவமானச் சின்னங்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. ஆதலால் இப்போதும் அது தொடர்ந்து செய்யப்பட வேண்டியிருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு நமது மக்களுக்கு இக்காரியம் செய்யப்பட வேண்டும் என்பதில் அதிகமான உற்சாகமும், ஊக்கமும் இருந்து வருகிறது. ஆங்காங்கு கூட்டம் நடத்தி அதில் செய்யவும், மாநாடுகள் நடத்தி அதில் செய்யவும் மக்கள் துடிக்கிறார்கள். நானும் மக்கள் அந்தப்படியே நடக்க வேண்டும் என்றே அறிக்கை விட்டு இருக்கிறேன்; சொற்பொழிவுகளிலும் வேண்டுகோள் விட்டிருக்கிறேன்.

இந்தப்படி செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட சில இடங்களில் நம் தோழர்களைப் போலீசார் அழைத்து ஊர்வலத்தில் இக்காரியம் செய்வதை நிறுத்திவிடும்படிக் "கேட்டுக் கொண்ட"தாகத் தெரிகிறது. போலீசார் கேட்டுக் கொள்வதும், தடை விதிப்பதும் இரண்டும் ஒன்று என்பது தான் எனது கருத்து.

ஆதலால், நமது ஜாதி, மத, கடவுள் ஒழிப்புப் பிரச்சாரத்தில் இப்போதைக்கு அதை மாத்திரம் நிறுத்தி வையுங்கள் என்று தோழர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்றாலும், நமது எதிரிகள் (பார்ப்பனர்) ஜாதி, மதம், கடவுள் காப்பாற்றப்படும், பரப்பும் பிரச்சாரத்தால் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக வடநாட்டில் 'இராம லீலா' நடக்கிறது. அதில் இராவணன் எரிக்கப்படுகிறான். தமிழ்நாட்டில் சமணர்களைக் கழுவேற்றிய உற்சவம் நடக்கிறது. சூரசம்ஹார உற்சவம்; இவை தவிர கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்கள் பிறந்த நாள் உற்சவங்கள், சில விடுமுறைகள் நடக்கின்றன.

இவைகளையெல்லாம் எதிர்ப்பில்லாமல் நடக்கவிட்டு விட்டு, எதிர்க்காரியம் செய்யாமல் சும்மாவும் இருப்பது என்றால் பிறகு எப்படித்தான், என்றைக்குத்தான் என்றைக்குக்தான் நமது இழிவு நிலையை –மூடநம்பிக்கையைப் போக்கிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை.

நாட்டில் ஆயிரக்கணக்காண கோயில்கள் இருப்பதுடன், பல நூற்றுக்கணக்கானவற்றில் ஏராளமான உற்சவங்கள், நாட்கள், நட்சத்திரங்கள் நடந்த வண்ணமிருக்கின்றன. எதிரிகளுக்கு புராணங்கள், பத்திரிக்கைகள், பிரச்சாரங்கள், காலட்சேபங்கள், நாடகங்கள், சினிமாக்கள், பண்டிகைகள் முதலியவைகள் ஏராளமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நமக்கு பரிகார மார்க்கம் என்ன இருக்கிறது?

இவைகளை ஒழுங்காய் நடத்திக் கொடுக்கும் ஆட்சிதானே நம்மிடம் இருக்கிறது!

இப்போது மக்கள் நமக்கு அனுகூலமாய் இருக்கிறார்கள். இதுபோல் எப்போதும் இருந்ததில்லை; இனி இருக்கப் போகிறார்களா என்பது சொல்ல முடியாத செய்தியாகும். என்னவென்றால் "இராமனை தார் பூசி நெருப்பிட்டுக் கொளுத்தியதோடு, "இராமன், முருகன் முதலாகிய கடவுள்களை செருப்பாலடித்ததாக" உருவகப்படுத்தி, படம் எழுதி சுவற்றில் ஒட்டி பல லட்சம் பத்திரிக்கைகளில் வெளியிட்டு இந்தியா முழுவதும் தெரியும்படி, அறியும்படிச் செய்த பிறகு தமிழ்நாட்டிலும், ஆந்திரம், மைசூர் நாட்டிலும் மற்றும் இந்தியாவில் பல இடங்களிலும், நாம் இமாலய வெற்றியும், பார்ப்பனர், ஆத்திகர் படுதோல்வியும் அடையும்படியான நிலை ஏற்பட்டதென்றால், இந்த வெற்றி செருப்படிக்கா அல்லது அது கூடாது என்பதற்காக என்று ஆட்சியாளரையும் மற்றும் பார்ப்பனரையும் கேட்கிறேன்.

நாட்டின் பட்டிதொட்டி, மூலை மூடுக்குகளிலெல்லாம் ஆள் உயர செருப்படி சுவரொட்டிப் படங்களும், இராஜாஜியும் காமராஜர் முதலிய பெருந்தலைவர்கள் என்பவர்களும் பிரச்சாரம் செய்தும் (எதிரிகளுக்கு) செய்தவர்களுக்கு வெட்கப்படத்தக்க தோல்வி என்றால், மக்கள் செருப்படியை விரும்புகிறார்கள் என்று அர்த்தமா? வெறுக்கிறார்கள் என்று அர்த்தமா? என்று கேட்கிறேன்.

இந்த இடத்தில் நான் ஆத்திக – நாத்திகப் பிரச்சாரம் செய்யவரவில்லை. மான- அவமான சுயமரியாதைப் பிரச்சாரம் செய்கிறேன். இராமன், கந்தன், கிருஷ்ணன், கணபதி என்பவர்கள் கடவுள்களா? கதைப்படி யோக்கியர்களா? நமக்கும் இவர்களுக்கும் நம்மை இழிவுபடுத்தியதல்லாமல் வேறு சம்பந்தம் என்ன என்று கேட்கிறேன். எது எப்படி இருந்தாலும் இன்றைய தினம் நமது மக்களுக்கு ஜாதி ஒழிய வேண்டும், பார்ப்பனர் ('பார்ப்பனர்') ஒழிய வேண்டும் என்பது தான் முக்கிய இலட்சியமே ஒழிய, கடவுள் காப்பாற்றப்பட வேண்டும், மரியாதை செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. ஆதலால் அதற்கேற்ற காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.


ஆகவே, "கடவுள்" விஷயத்தில் இன்று நம்மால் செய்யப்படும் காரியங்கள் முழுமையும் ஜாதி ஒழிப்புக்காக, நமக்குள்ள ஜாதி ஒழிப்புக்காக, நமக்குள்ள ஜாதி இழிவு நீக்கத்திற்காகவே ஒழிய, யாருடைய மனமும் புண்பட வேண்டும் என்பதற்காகவோ, யாருக்கும் மனச் சங்கடத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என்பதை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தி கொள்கிறேன். மக்களும் இதை நல்லவண்ணம் உணர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நமது எண்ணமெல்லாம், இந்த ஆட்சிக் காலத்திலாவது ஜாதி மூட நம்பிக்கை ஒழிய வேண்டுமென்பதேயல்லாமல், எப்படியாவது இந்த ஆட்சி அய்ந்தாண்டுக்கு இருக்க வேண்டும் என்பதே அல்ல.

ஆகையால், ஆட்சியாளர்கள் இந்த வாய்ப்பைக் காலம் கடத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், காரியம் நடப்பதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொள்ள வேண்டுமென்பது எனது ஆசை.

மக்கள் ஆதரவைப்பற்றி ஆட்சியாளர்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. மக்களைப்பற்றி ஆட்சியாளருக்குத் தெரிந்த அளவுக்குக் குறையாமல் எனக்கும் தெரியும். இப்போது நான் சும்மாயிருந்துவிட்டால் மக்கள் என்னைக் கைவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு இருந்து வருகிறது. ஆகையால், எப்படியாவது நம் கடமையைச் செய்யாமல் நழுவிவிடுவது நமக்கு நல்லதல்ல என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறேன்.


                     --------------------28.03.1971- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

24.11.13

இந்தப் பார்ப்பனரைக் கவனியுங்கள்!


தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் ஏடு நடத்திப் பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்தாலும் துக்ளக் சோ ராமசாமி அய்யர் தமிழ் மீதும், தமிழர்கள்மீதும் கக்கும் விஷக் கட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

எடுத்துக்காட்டுக்கு ஒரே ஒரு இதழை எடுத்துக் கொண்டால்கூட போதுமானதே.  20.11.2013 துக்ளக் இதழில் சில கேள்வி பதில்கள் போது மானவை.

1) கேள்வி; இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய, விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவைக் கற்பழித்து, கொடூரமாகச் சுட்டுக் கொன்ற இலங்கை ராணுவத்தினரின் செயலை, சேனல் -4 தொலைக்காட்சி வெளி யிட்டுள்ளதே?

பதில்: இப்போதெல்லாம், எப்படிப் பட்ட செயற்கையான வீடியோவையும் தயாரித்து, அதை உண்மையான நிகழ்ச்சி போலக் காட்ட முடியும் என்ற அளவிற்குத் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட் டுள்ள வீடியோ அப்படிப்பட்டதா, அல்லது உண்மையானதா என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், அந்த வீடியோவில் வருகிற காட்சிகள் உண்மையானதாக இருந் தால், இது தீர விசாரிக்கப்பட வேண் டிய விஷயம்; கடும் கண்டனத்திற்குரி யது. சட்டப்படியான தண்டனையை சம்பந்தப்பட்டவர்கள் பெற வேண்டும் என்று எழுதுகிறார் சோ.

பிரிட்டன் 4 வெளியிட்ட படம் உண்மையானதுதான் என்று தொழில் நுட்ப ரீதியாக ஒப்புக் கொண்டபின் சோ அய்யர் இப்படி எழுதுவது அறிவு நாணயம்தானா?

இதற்கு முன்பும் இதே பிரிட்டன் - 4 அலைவரிசையில் ஈழத்து இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட் டதும் வெளியிடப்பட்டனவே. உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினவே! பாதிப்பு தமிழர்களுக்கு என்றால் அதற்காக இந்தப் பார்ப்பனர் கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் அளவு கோலே வித்தியாசமானது -_ விஷம மானது.

டெஹல்கா பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்களிடமே நேரடியாகப் பேட்டி எடுத்து வீடியோ காட்சிகளாக வெளியிட்டதையே எப்படி புரட்டுத் தனமாக விமர்சித்தார் இந்த சோ என் பதைத் தெரிந்து கொண்டால் பிரிட்டன் - 4 ஒளிபரப்புப்பற்றி  எதைத்தான் எழுத மாட்டார் என்பதை எளிதிற் தெரிந்து கொள்ளலாம்.

டெஹல்கா வெளியிட்ட டேப்பின் சாட்சிகளில் வருகிறவர்கள் எல்லாம் நான் கற்பழித்தேன் நான் இத்தனைப் பேரைக் கொலை செய்தேன் என் கிறார்கள். இதையெல்லாம் எவனாவது கேமராமுன் சொல்வானா? (துக்ளக் 27.2.2008 பக்கம் 25).

எப்படி இருக்கிறது பதில்?

வீடியோ காட்சி இருக்கிறது. அதை வெளியிட்டும் இருக்கிறார்கள். இவ் வளவுக்குப் பிறகு சோ வால் இப்படி எழுத முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன? உண்மையை ஒப்புக் கொள்ளும் நாணயம் இல்லை என்பது தானே!
டெஹல்காவின் டேப்புகள் பொய்யென்று நிரூபிக்க மோடியால் ஏன் முடியவில்லை? டேப்பின் உண் மைத் தன்மை கண்டு மோடியே சப்த நாடியும் ஒடுங்கி விட்ட நிலையில், ராஜாவை விஞ்சிய விசுவாசியாக சோ ராமசாமி பூணூலால் போல் வால்ட் தாண்டப் பார்க்கிறார் என்பதைக் கவனித்துக் கொள்க!

2) கேள்வி: 30 ஆண்டுகள் நிலவி வந்த பயங்கரவாதத்தை மூன்று ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டு வந்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே!

பதில்: முடிவிற்குக் கொண்டு வந்துவிடவில்லை. பெருமளவிற்கு ஒடுக்கியிருக்கிறார்கள். (துக்ளக் 20.11.2013 பக்கம் 27).

பயங்கரவாதம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று ஒழித்ததை எவ்வளவு நய வஞ்சகமாக எழுதுகிறார்! இது போதாதாம், இன்னும் ஒடுக்க வேண்டுமாம்.  ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் சோ கூட்டத்திற்கு பிடிக்காத தமிழர்கள் ஆயிற்றே!

போராளிகள் ஆயுதங்களை எடுத்தார்கள் என்றால் எந்த கட்டத்தில்? எந்த சூழ்நிலையில்?

காந்தியாரைவிட அகிம்சவாதி என்று ஒப்புக் கொள்ளப்பட்ட தந்தை செல்வாவின் அகிம்சை போராட்டங் கள் எல்லாம் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையிலும், தமிழ்ப் பெண்கள் சூறையாடப்பட்ட நிலையிலும், தமிழன் மாமிசம் இங்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் தான் போராளிகள் ஆயுதங்களை ஏந்தினர் என்பதை மறைப்பானேன்? மான உணர்ச்சி பற்றி பார்ப்பனர்களுக்குக் கவலையில்லாமல் இருக்கலாம் - (அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது தானே அவாளின் கலாச்சாரம்!)
குஜராத்தில் கர்ப்பிணிப் பெண் களின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பில் விசிறி எறிந்து குத்தலாட்டம் போட்ட குஜராத்தில் மோடி ஆட் சியை கக்கத்தில் வைத்துக் கொஞ்சும் கூட்டம் தான் இந்த சோ கூட்டம் என்பதை மறந்துவிடக் கூடாது.

3) கேள்வி: கலைஞரை இன்னும் தொண்டர்களும், ஒரு பகுதி பொதுமக்களும் நம்புகிறார்களே, அது ஏன்?

பதில்: அதுதான் பெரியார் வளர்த்த பகுத்தறிவு எனக்கு முட்டாள்கள் தேவை என்றார். (துக்ளக் 20.11.2013 பக்கம் 28).

பெரியார் சொன்ன தத்துவத்தை கொச்சைப்படுத்தும் குல்லுகப்பட்டர்த் தனம் இது.

பெரியாரின் தொண்டர்கள் நாட்டின் எந்த அறிவாளியையும் விட மேலானவர்கள்தாம் தன்னைப் பின் பற்றும் பத்தியக் கட்டுப்பாட்டுத் தன் மைக்கு அவர் பயன்படுத்தியது அது.

புத்தம் சரணம் கச்சாமி 
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி

என்ற புத்த மார்க்கத்தைச் சேர்ந்தது.

அன்றைக்குக் கலைஞர் வீட்டில் அவரின் காலடியில் உட்கார்ந்து கொண்டு அரசியல் புரோக்கர் வேலை பார்த்தாரே திருவாளர் சோ அது கலைஞருக்கு அடி முட்டாளாக இருந்து சேவகம் புரிந்தது தானோ!

குறிப்பு; சோவை அரசியல் புரோக்கர் என்று நாமாக எழுதவில்லை. ஆனந்தவிகடன் பேட்டியில் (1.2.2012) தன்னை அரசியல் தரகர் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்.

இன்னொன்றையும்கூட இங்குக் குறிப்பிட வேண்டும்.
இதே துக்ளக் இதழில் வெளி வந்துள்ள கேள்வி பதில் அது.

கேள்வி: இத்தனைக் காலமும் நீங்கள் வாசகர்கள் கேட்கும் எல்லா வகையான கேள்விகளுக்கும், எப்படி அலுக்காமல், சளைக்காமல் பதில் சொல்லி வருகிறீர்கள்?

பதில்: பிழைப்பு! (துக்ளக் 20.11.2013 பக்கம் 20)

இன்னொரு கூடுதல் தகவல் இதோ:

கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டு களுக்கு மேலாக நடத்தியும் எந்த ஒரு பலனும் ஏற்பட்டதாகத் தெரிய வில்லையே என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்ததுண்டா?

பதில்: எந்தப் பலனும் இல்லை யென்று எப்படி சொல்வது? எனக்குப் பிழைப்பு நடக்கிறதே!

துக்ளக் 24.10.2005 பக்கம் 26


பிழைப்புக்காக பத்திரிகை நடத்தக் கூடிய பேர் வழியென்றாலும்
விஷக் கிருமிகளைப் பரப்புவதில் மட்டும் குறைச்சல் இல்லை. துக்ளக் வாங்கும் அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

அவா - இவா - எவா?

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவா இவா என்று பேசி விட்டாராம்; அதற்குத் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமிக்குத் தேள் கொட்டிய மாதிரி பி. சிதம்பரம் அவர்களைக் கேலியும், கிண்டலும் செய்துள்ளார்.  இதற்கு முன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு நிகழ்ச்சி பற்றி இதே துக்ளக் ராமசாமி என்ன எழுதினார்?

கேள்வி: சட்டசபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் பிராமண பாஷை பாணியில் பேசியது யாரைக்கிண்டல் செய்ய?

பதில்: தெரியவில்லை. இதையே தி.மு.க.வினர் யாராவது செய்திருந்தால் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இப்போது ஏன் இப்படிச் செய்தார்? என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது. விடை தெரியவில்லை.
(துக்ளக் 22.7.2009 பக்கம் 14)

ஏனிந்த இரட்டை வேஷம் இந்தத் துக்ளக் ராமசாமி அய்யருக்கு?
இப்படிப் பேசியிருந்தது தவறு என்று தமக்குத் தெரிந்திருந்தால் சொன்னவர்கள் யாராகவிருந்தாலும் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டாமா? அதற்குப் பெயர்தானே அறிவு நாணயம் என்பது!
ரோஷம் எல்லாம் இவாளுக்கு இடத்துக்குத் தகுந்தாற்போல பொத்துக் கொண்டுவரும் அல்லது வராதா?

தி.மு.க. சொன்னால் கோபம் கொப்பளிக்கும்! அதிமுக சொன்னால் அடங்கிப் போகும் என்பதுகூட அவாளுக்கிடையே உள்ளஅக்ரகாரப் பாசம்தானே?

ஆமாம் அவா இவா என்று இவாள் பேசுவதில்லையா? அப்படி மற்றவர்கள் பேசினால் இவாளுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

இவாளுக்கு இந்தப் பேச்சு முறை ஒருக்கால் அசிங்கமாக இருக்கிறதோ! அதனால்தான் அடுத்தவர் பேசினால் அவாள் ஆத்திரப்படுறாளோ!
------------------------------------------------------------------------------------------------------------------------------
-                                    ----------------- - மின்சாரம் அவர்கள் 23-11-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

23.11.13

பக்தி என்பது முட்டாள்தனம் அல்லது புரட்டு!


பக்தி என்றால் என்ன? கோவிலுக்குப் போய் கடவுளைக் கும்பிடுவதும், வீட்டில் கடவுளை நினைத்து நாமம், விபூதி அணிந்து கடவுளைக் கும்பிடுவதும், பார்ப்பனரிடம் மிக்க விசுவாசம் காட்டி அவர்களுக்கு மரியாதை செய்து காசு, பணம், பொருள் கொடுப்பதும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய மத நூல்களைப் படிப்பதும்; படிக்கக் கேட்பதும் அல்லாமல் - வேறு எதைப் பார்ப்பனர்கள் பக்தி என்கிறார்கள்?

ஸ்தல யாத்திரை, தீர்த்த யாத்திரை செய்வது புண்ணியம் என்பார்கள். பிரபந்தம், தேவாரம் படிப்பது பெரிய பக்தி என்பார்கள்.

பக்தியை பற்றி விளக்கப் போவோமானால், இப்படி ஏதாவது இன்னும் பல நடப்புக்களைத்தான் சொல்லலாமே யொழிய, பக்திக்கும், அறிவுக்குமோ அல்லது எந்தவிதமான ஒழுக்கம், நாணயம், நன்றி, உபகாரம், நேர்மை முதலிய மனிதப் பண்புகள் - அதாவது மற்ற மனிதனிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய எந்த ஒரு நற்குணத்தையாவது முக்கியமாகக் கூறமாட்டார்கள்.

இந்த மேற்கண்ட குணங்கள் தான் மனிதனிடம் இருக்க வேண்டிய அவசியமான பண்புகளாகும் என்று மக்களிடையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்குமானால், இவ்வளவு ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, நேர்மைக்கேடு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.


இன்றைக்கு நாம், எத்தனை மக்களிடம் விபூதி, நாமம், கோவில் செல்லுதல், வீட்டில் பூசை செய்தல், வாயால் சிவநாமம், ராமநாமம் உபசரித்தல் முதலிய பக்திக் குணங்களைக் காண்கிறோம் - அவற்றில் ஒரு பங்குக் கூட யோக்கியதையோ, ஒழுக்கத்தையோ, நாணயத்தையோ, நேர்மையையோ, காணமுடிவதில்லையே, என்ன காரணம்?

சாதாரணமாக, பக்தி என்பது ஒரு மனிதனுக்கு வெறும் பச்சை சுயநலமே ஒழிய அதனால் மற்ற மக்கள் எவருக்கும் எவ்விதப் பயனுமில்லை. ஒரு மனிதனுடைய பக்தியினால் ஏதாவது பலன் கிடைப்பதானாலும் பக்தி செலுத்தும் மனிதனுக்கு மாத்திரம் பலன் உண்டாகலாமே தவிர, வேறு எந்த மனிதனுக்கும் அதனால் எந்தவித பயனும் ஏற்படுவதற்கும் இடமே இல்லை.

ஆனால் -

மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமையளிப்பது மாத்திரமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மை அளிக்கும் காரியமாகும். உதாரணமாக ஒரு மனிதன் பக்தியற்றவனாக இருந்தால், அதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் ஏற்படப் போவதில்லை.

ஆனால் -

ஒரு மனிதன் ஒழுக்கமற்றவனாக இருந்தால், நாணய மற்றவனாக இருந்தால், நேர்மையற்றவனாக இருந்தால், அவனைச் சுற்றியுள்ள, அவன் சம்பந்தப்பட்டுள்ள எல்லா மக்களுக்கும் தொல்லை, துன்பம், நட்டம், வேதனை, உண்டாகுமா இல்லையா?

மற்றொரு மனிதனுக்குக் கேடு செய்வது என்பது தானே ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, நேர்மைக்கேடாக முடிகிறது.

உலகிலே - பாழாய்ப் போன எந்தக் கடவுளும் உலகத்தில் மக்களுக்குக் கேடு செய்த எப்படிப்பட்ட அயோக்கியனையும் மன்னிக்கவும், முடியாவிட்டால் தண்டிக்கவும் தான் தகுதி உடைய கடவுளாக இருக்கிறதே தவிர, எவனையும், எந்த ஜந்துவையும், மற்ற மனிதனுக்கு மற்ற ஜந்துவுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கும்படியான சக்தி இல்லாதவையாகத் தானே இருக்கின்றான்.

மக்களுக்குக் கேடு செய்யாதவனைத் தண்டித்தால் தண்டிக்கப்பட்ட மனிதன் இனிமேல் கேடு செய்யாமல் இருக்கத்தான் அந்தத் தண்டனை பயன்படலாமே ஒழிய துன்பமோ – கேடோ அடைந்தவனுக்குக் கடவுளால் என்ன பரிகாரம் செய்ய முடிகிறது? நல்லபடியாய் பக்தி செய்தவனுக்குக் கேடு, துன்பம் வந்தாலும் இதுதானே முடிவு?

ஆகையால், பக்தியால் மனிதனுடைய குணமாவது மாறுகிறதா? மற்ற மனிதனுக்குக் கேடு செய்யாமல் இருக்கவாவது பயன்படுகிறதா?

ஆகவே, பக்தி என்பதெல்லாம் முட்டாள்தனமும், புரட்டும் பயனற்ற தன்மையும் கொண்டதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன்.


------------------------------------17.04.1973- "விடுதலை" நாளிதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

தாழ்த்தப்பட்டோருக்குச் சமஉரிமை தேடித்தந்தது திராவிடர் கழகமே!திராவிடர் கழகத்தினுடைய கொள்கையை நீங்கள் ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பண்டைக் காலத்தில் எப்படி நடந்தன? அப்படி நடந்த இடத்தில் இரத்தம் சிந்தாமலும், ஒரு கலவரமும் இல்லாமல் நடந்து இருக்கின்றனவா? ஆனால் நாங்கள் இந்த 20, 30- ஆண்டுகளில் செய்கின்ற கிளர்ச்சிகளில் - காரியங்களில் - செயல்களில் எங்காவது சிறிது இரத்தம் சிந்தியது உண்டா? கலவரம் ஆனது உண்டா? எங்கள் காரியங்களால் மற்றவர்களுக்குத் தொல்லைகள் இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? என்று பார்த்தால், ஒன்றும் இருக்காது. கூறுவார்கள், "காந்தி சத்தியாக்கிரம் - அகிம்சையில் நடந்தது" என்று. அவர் நடத்தியதில் எத்தனை பேர் சாவு - எவ்வளவு பேர்களுக்குச் சொத்து நஷ்டம் (இழப்பு) ஏற்பட்டது - பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?

மற்ற மற்ற அரசியல் கட்சிகள் கூட, பெரிய பெரிய கிளர்ச்சிகள் என்று நடத்துகிறார்களே - அவர்களால் சொத்துக்குச் சேதம் இல்லாமல் அடிதடி கலவரம் இல்லாமல் நடத்த முடிந்ததா? யாராவது நடத்தினார்களா?

ஒரு கொடி பிடிக்க எத்தனை பேர் அடிவாங்கினார்கள்! இரயில் சங்கிலியை இழுக்கப் போய் எத்தனை பேர் செத்தனர். யாரோ இழுக்க, சம்பந்தம் இல்லாதவன் செத்தான்! கம்யூனிஸ்ட், கண்ணீர்த்துளி, காங்கிரஸ் இவர்கள் நடத்தியது ஒன்றிலாவது பொருட்சேதம், அடிதடி இல்லாமல் நடந்ததா? கண்ணீர்த்துளி கொடிபிடிக்கப் போகிறேன் என்று போனான்; எழுந்திருக்க முடியாமல் படுக்க வைத்து நன்றாக முதுகில் அடித்தான். டால்மியாபுரம் என்பதைக் கல்லக்குடி எனப் பெயர் மாற்றப் போகிறேன் என்று போய் 5- பேர் செத்தானே தவிர, பெயர் மாற்றவில்லை. இந்தப்படி 5, 6- பேர்கள் செத்தார்களே என்று கூடக் கவலை இல்லை. தூத்துக்குடியில் சங்கிலியை இழுத்து அடி, உதை வாங்கினார்கள். சிலர் செத்தார்கள். கம்யூனிஸ்ட் வேலை நிறுத்தம், அறுவடைக் கூலிப் போராட்டம் செய்கிறான் என்றால், அதிலும் அடி, உதை, கலவரம் எல்லாம் ஏற்படுகின்றன. இல்லை என்று கூற முடியுமா? காங்கிரஸ்காரர்களின் கிளர்ச்சியிலும் அப்படியே.

நாங்களும்தான் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் செய்கிறோம். அடிதடி கலவரம் ஏற்பட்டது உண்டா? எங்காவது - யாருக்காவது சொத்து நாசம் உண்டா? விளையாட்டாக நம் திராவிடர் கழகத்தைக் கருத முடியாது. அப்படி நடத்தியதன் பலனாக நல்ல வெற்றி அடைந்து வருகிறோம். பலர் எவ்வளவு பேசியும் என்ன பலன்? நாங்கள் தோன்றிய பிறகு இந்த 10, 20- ஆண்டுகளில் தானே மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களிடையே ஒரு உணர்ச்சி தோன்றியிருக்கிறது. பார்ப்பான் நிலை முன்பு எப்படியிருந்தது? இன்று அவன் நிலை என்ன? ஒரேயடியாக அவன் ஒழிந்து போகவில்லை நாட்டை விட்டு ஓடிப் போகவில்லை என்றாலும் நாட்டில் 20-ஆண்டுகட்குமுன் பார்ப்பானின் நிலை எப்படி இருந்தது. இன்று அவனது நிலைமை எப்படி உள்ளது என்று பார்த்தாலே தெரியும். சுத்தமாக ஈனம் இல்லாதவன் - மானங்கெட்டவன்தான் இன்றும் பார்ப்பானைச் சாமி என்கின்றான். ஓட்டு (தேர்தலில் வாக்கு) வாங்க வேண்டும் என்பவன்தான் பிராமணன் என்று கூறுகிறான். மற்றவர்கள் எல்லாரும் அவர்களை அய்யரே என்றுதான் கூப்பிடுகிறார்கள்; அவனும் கோபித்துக் கொள்வதில்லை.

மற்றும் கோயில் நிலைதான் என்ன வாழுது? சாமி போகிறது என்றால் பிணம் போகிற மாதிரி போகுது. கூட்டம் சேருவதில்லை. தோழர் டி.கே. சண்முகம் நடத்திய இராசராச சோழன் என்ற நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசும்படி நேரிட்டது. அந்தக் கதை சப்பையானது. ஆனால், நடித்தது - உடுப்பு - சீன் (காட்சி) பேச்சு எல்லாம் திறமையாகவும், ஆடம்பரமாகவும் இருந்தன. ஆனால், அறிவு உணர்ச்சியில்லை. நான் பேசும்போது, நடிப்பு - ஆடை அலங்காரம் பற்றிப் பாராட்டிவிட்டு, "இந்தக் கதை சுத்த உபயோகமில்லாதது; இதைத் தோழர்கள் (டி.கே.எஸ். கம்பெனி) நடித்ததால் பாராட்டத்தக்க மாதிரி நடித்திருக்கிறார்கள். இந்த அரசர்களைப் பற்றிப் பேசவே தகுதியில்லை; அவன் எந்தக் காரியமும் நமக்கு நல்லதாகச் செய்தான் நாம் அனுபவிக்கிறோம் என்று கூறமுடியாது" என்றேன். தோழர் டி.கே. சணமுகம் பேசுகையில் நான் கூறியதைக் கூறிச் சமாதானம் கூறுகையில், "அப்படிக் கூறக் கூடாது. தஞ்சையில் அருமையான கோயில் இருக்கிறது. இதைக் கட்டியவன் இராசராசன்தான்" என்றார். நான் வழிமறித்துக் கேட்டேன். கோயில் பெரியதுதான், இன்று அதனால் யாருக்குப் பிரயோசனம். வவ்வால் தானே அடைகிறது. குச்சிக்காரிகளும், காலிகளும் தானே அங்குக் குடியிருக்கின்றனர்?" என்று.

அடுத்தபடியாக குன்றக்குடி அடிகளார் பேச எழுந்தார். அவர், "பெரியாரிடம் எனக்குப் பற்றும் பாசமும் உண்டு. அவர் கூறினார், கோயிலில் வவ்வால் அடைகிறது என்று. நான் கேட்டேன், யாரால் வவ்வால் அடையும்? கோயிலை இந்நிலைக்குக் கொண்டு வந்தது யார்" என்று கூற ஆரம்பித்தார். (அதாவது நான் தான் அதற்குக் காரணம் என்றும், என் பிரச்சாரத்தின் பயனால்தான் என்பதாகவும் கூறினார்) இதில் அவரே ஒத்துக் கொண்டார், கோயில் வவ்வால் அடையும் நிலைக்கு வந்துவிட்டது என்று.

இங்குத் தலை மயிரைக் காணிக்கையாக வாங்கும் சாமிகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் பிரசித்தமானது சிறீரங்கம் ஆகும். சிறீரங்கம் (பெருமாள்) கோயிலில் மொட்டை அடிக்க என்று ஏலத்திற்கு விடுவார்கள். அப்படி மொட்டை அடித்து விடுவதை 1938-ஆம் ஆண்டில் 1,500-ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அந்த ஆண்டிலேயே 15-ஆயிரம் பேர்களுக்கு மேல் மொட்டை அடித்துக் கொண்டனர். அது இருக்கும் போது குறுகி வந்து 1959-லே கணக்குப் பார்த்தால் 3,000- பேர்தான் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 57, 58, 59- ஆகிய மூன்று ஆண்டுகளிலே இந்தக் கணக்கு. ஏலம் எடுத்தவருக்கு 900-ரூபாய் நஷ்டம் (இழப்பு) ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஒரு தலை மொட்டை அடிக்க அரை அணா - ஒரு அணா என்றால், இப்போது ஆறு அணா - எட்டு அணா என்று ரேட் (கட்டணம்) இருக்கிறது. இப்படி வாங்கியும் ரூ.900- நஷ்டம். இப்போது இதைவிட இன்னும் குறைவு. யாரும் மொட்டை அடித்துக் கொள்வதில்லை - சிறிது கத்திரித்துக் கொள்கிறார்கள். இதற்குப் பூமுடி என்று பெயர் கூறுகிறார்கள். இம்மாதிரி ஒவ்வொரு திட்டமும் குறைந்துதானே வருகிறது. "உங்களால்தான் (பெரியாரால் தான்) எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. மொட்டை அடிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று அதை ஏலத்திற்கு எடுத்த காண்டிராக்டர் இந்தக் கணக்கை எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார்.

இன்று பொம்பளையைப் பார்க்க ஆண்களும் ஆண்களைப் பார்க்கப் பெண்களும் கோயிலுக்குப் போகிறார்களே தவிர வேறு சாமி கும்பிடப் போகிறார்கள் என்று கூற முடியுமா?

இந்நிலைக்குக் காரணம் நம் இயக்கம்தான். ஆச்சாரியார் சுதந்திராக் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றால் எதற்காக? "இன்னும் 10- வருடத்திற்குள் திராவிடர் கழகம் போகும் போக்கை மாற்றாவிட்டால், கூடவே காமராசர் மந்திரி சபையை மாற்றாவிட்டால், பார்ப்பான் மண்வெட்டி எடுத்துக் கொத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். பார்ப்பனத்திகள் களை எடுக்க நேரிடும். இதுதான் ஆச்சாரியாரின் கண்டுப்பிடிப்பு ஆகும். பார்ப்பான், கடவுள், சாஸ்திரம், சாதி, மதம் இவற்றைக் காப்பாற்றி ஆகவேண்டும். அதற்கு இந்த நாட்டிலே கட்சி இல்லை. இந்த அரசாங்கமும் அதற்கேற்றாற்போல், பார்ப்பானை - சாதியை ஒழிக்கும் காரியங்களைச் செய்கிறது. திராவிடர் கழகம் வேறு மக்களைத் தன் பக்கம் திருப்பி நம்மை (பார்ப்பனர்களை) ஒழிக்கப் பாடுபடுகிறது. இவை இரண்டையும் ஒழிக்காவிட்டால் நாம் செத்தோம், தப்பினோம். இன்று பார்ப்பன ஆட்சியாக இருந்தும் நமக்குப் (பார்ப்பனருக்கு) பாதுகாப்பு இல்லை என்பதால்தான், இந்தப் புதிய கட்சி தோன்றியிருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. பச்சையாக - தர்மம் கெட்டுப் போச்சு, மைனாரிட்டியாருக்குப் பாதுகாப்பு இல்லை, தனியார் சுதந்தரம் பறிக்கப்படுகிறது."

தர்மம் என்றால் என்ன? வருணாஸ்ரம தர்மம்தானே! சூத்திரனுக்கு எதுக்குப் படிப்பு? அவன் தகப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதுதானே அது. மைனாரிட்டி (சிறுபான்மை) வகுப்பார் என்பவர்கள்தானே கல்வி - உத்தியோகம் பூராவிலும் நிறைந்திருக்கின்றனர். நம்மாள் 100-க்கு 10, 15- பேருக்குக்கூடப் படிப்பு இல்லை அவர்கள் (பார்ப்பனர்) 100-க்கு 100- மொட்டு, முளை, குஞ்சு முதல் படித்து விட்டிருக்கின்றனர்.

மற்ற எந்தக் காரியமும் நம்மால் முடியாவிட்டாலும், இந்த 5, 6 வருடங்களாக காமராசர் மந்திரி சபையைக் காப்பாற்றி இருக்கிறோம். அதனால் இன்று கல்வித் துறையிலே பெரிய புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டு, நம்மக்கள் அதிக அளவில் கல்வி கற்று, உத்தியோகம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பார்ப்பானுடைய பிழைப்பு - கோயில் மணி அடிப்பது, புரோகிதம் செய்வது, உத்தியோகம் செய்வது இவை தான். இப்போது மணி அடிப்பதும் ஒழிந்து, புரோகிதமும் இல்லை என்று ஏற்பட்டு, உத்தியோகத்திற்கும் ஆபத்து என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு அணை போட வேண்டும் என்று கருதித்தான் நம் ஆள்களில் சில துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு தங்களுடைய கட்சிக்கும் ஆதரவு இருக்கிறது என்று கூறிக்கொண்டு காமராசர் ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிலர், என்ன இது? பெரியாரும் திராவிடர் கழகமும் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதித்தார்கள். இப்போது காங்கிரசுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று பெரியார் சொல்லுகிறாரே என்று கருதுகிறார்கள். நான் ஒன்றும் இரகசியமாகக் கூறவில்லை. நாளைக்கு வரப் போகிற தேர்தலில் காங்கிரசை ஆதரித்து ஓட்டுப் போடணும் என்றுதான் கூறுவேன். அதற்காக நான் வெட்கப்படுவதில்லை. உங்களுக்கு வேண்டுமானால் ஆச்சாரியமாக இருக்கலாம். காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அதை விட்டு வந்தவன் நான். இன்றுநான் காங்கிரசில் இருந்தால் மந்திரியாகியிருப்பேன். நான் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியபோது - அது பார்ப்பானுடைய நலத்திற்காகவே இருப்பதால் ஒழிக்க வேண்டும் என்றேன். அப்போது பார்ப்பனர்கள் காங்கிரசைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி வேலை செய்தனர். காங்கிரசில் பார்ப்பானை அசைக்க முடியாத நிலை அப்போது. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்கிற நம் பிரச்சாரத்தாலே நம் வசத்திற்கு அது வந்துவிட்டது. காங்கிரசைக் காப்பாற்றணும் என்று பார்ப்பான் கூற வேண்டியது போய், நாம் காப்பாற்றணும் என்றும், அவன் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியும், அதற்காகப் படையெடுக்கும்படியும் ஆகிவிட்டது.

ஆச்சாரியார், "காந்தி கர்கிரசை ஆதரிக்கிறேன். காந்தியார் இருந்தால் இப்படி ஆகியிருக்காது" என்கிறார். அதாவது காந்தி இருந்தபோது காங்கிரஸ் முழுக்க முழுக்க சாதி, மதம், கடவுள், புராணம் இவற்றைப் பாதுகாத்தது. அப்படிப்பட்ட காங்கிரஸ் இன்று சாதி, மதம், கடவுள், புராணம் ஆகியவற்றைக் கவனிக்கமாட்டேன் என்கிறது.

எப்படியென்றால் இராமசாமி (நான்) சொல்கிறபடிதான் நடக்கிறது என்கிறார்கள்.

காந்தி கண்ட இராமராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து "எல்லோரும் படித்தால் வேலைக்கு எங்கே போவது? தகப்பன் தொழிலை மகன் செய்யட்டும் - இரண்டு நேரம் படிப்பு எதற்கு? ஒரு நேரம் படித்தால் போதும்" என்றார். சாதிகளில் பார்ப்பனச் சாதி மைனாரிட்டியாக (சிறுபான்மையானதாக) இருந்தும் அவரை அசைக்க முடியவில்லை. 6,000 பள்ளிகளை மூடினார். ஹைஸ்கூலே (உயர்நிலைப் பள்ளியே) இனி வேண்டாம் என்றார். காலேஜில் (கல்லூரியில்) இண்டர்வியூ மார்க் (நேர்முகத் தேர்வு மதிப்பெண்) மூலம் நம் மாணவர்கள் சேர முடியாமல் செய்தார்.

பிறகு நம்முடைய நல்வாய்ப்பாக காமராசர் (முதலமைச்சராக) வந்தார். உடனே குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டினார். அவர் மூடிய 6000- பள்ளிகளைத் திறந்ததோடு மேற்கொண்டும் 6000- பள்ளிகளைத் திறந்தார். ஹைகூஸ்லே வேண்டாம் என்று ஆச்சாரியார் எழுதி வைத்தார். இவர் பல ஹைஸ்கூல்களைப் புதிதாகத் திறந்தார். 12- கல்லூரிகளைத் திறந்து "எங்கள் காலேஜில் இடம் இருக்கிறது விண்ணப்பிக்கலாம்" என்று விளம்பரம் வரும்படியாகச் செய்தார்.

எங்கள் இயக்கத்தின் பலன் இன்னும் என்ன என்று கேட்டால், இந்தக் குடந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். 5, 6- கோயில்கள் இருக்கின்றன. அங்குப் பக்தியோடு இப்போது யாராவது போகிறார்களா? இங்கே இந்தக் கூட்டத்தில் 6- ஆயிரம் பேர்களுக்குமேல் இருக்கிறீர்கள். யாருடைய நெற்றியிலாவது நாமம் - விபூதி - பட்டை இருக்கிறதா? இல்லை. தப்பித்தவறி ஒருவர் இருவர்களுக்கு இருந்தால் அவர்களும் கடைசியில் மறைவாக இருக்கிறார்கள். சிலர் துணிவாக தைரியத்துடன் அழித்துவிட்டு முன்னாடி வந்து உட்கார்ந்து விடுகிறார்கள்.

தமிழர்களாகிய நாம் காமராசருக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் பிள்ளைகளுக்குச் சம்பளம் இல்லை - சோறு - புத்தகம், உடைகள் இலவசம் என்று இப்படிப் பல நன்மைகள் செய்து வருகிறார்கள். தமிழர்கள் என்பவர்கள் இவற்றுக்கெல்லாம் நன்றி கூறாமல் - மாறாக இப்படிச் செய்தவரையும் திட்டிக்கொண்டு, இதன் மூலம் வயிறு வளர்க்கிறார்கள். தமிழர்களுடைய தற்குறித் தன்மையை நீக்க - அவர்கள் முன்னேற - நீ என்ன செய்தாய் என்றால், ஒன்றும் இல்லை. காமராசர் தான் செய்கிறார். அவருடைய அருமையான பொற்காலத்தில் - (தங்க ஆட்சிக் காலத்தில்) நாம் இருக்கிறோம் இப்படிப்பட்ட காலம் இதற்கு முன் இருந்ததில்லை. காமராசர் (ஆட்சியிலிருந்து) ஒழிந்தால் பிறகும் இருக்காது.

உத்தியோகத்தை எடுத்துக்கொண்டால் நமக்கு 100-க்கு 100- பியூன் வேலை - மசால்ஜி வேலை கட்டுவது இதுதான். மேலே எல்லா உத்தியோகமும் பார்ப்பானுக்கே. இந்த வேலை தான் நம் (திராவிட) இனத்திற்கு முத்திரை போட்டதாகும். இதில் ஒருவனையாவது பார்ப்பான் இருக்கின்றான் என்று காட்ட முடியுமா?

1927-இல் சுயமரியாதைச் சங்கம் இருந்த காலம். அப்போது பஞ்சாயத்து போர்டு (ஊராட்சி மன்ற) உறுப்பினர்களை ஜில்லாபோர்டே (மாவட்டக் கழகம்) நியமிக்கும். பட்டுக்கோட்டைப் பகுதியில் ஓர் ஆதிதிராவிடரை உள்ளே உட்கார வைக்க மறுத்துவிட்டார் தலைவராக இருந்த நாடிமுத்துப் பிள்ளை. வெளியில் உட்கார வைத்து அந்த ஆதிதிராவிட உறுப்பினரிடம் கையெழுத்து வாங்கி வந்தார். இந்தக் கொடுமையை எதிர்த்து - திராவிடர் கழகத் தோழர்கள் பஞ்சாயத்துக் கூட்டம் நடக்கும்போது - அந்த அரிஜன மெம்பரை (உறுப்பினர்) வலுக்கட்டாயமாக உள்ளே இட்டுச் சென்று நாற்காலியில் அமர்த்தினார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால். அந்த ஊர் திராவிடர் கழகக் கோட்டை என்பதால் - நம் கழகக் கோட்டை என்பதால் - நம் தோழர்கள் துணிந்து செய்தனர். இன்று அந்த அரிஜனனுடைய நிலை என்ன? கலெக்டராகவும் (மாவட்ட ஆட்சியராகவும்), மந்திரியாகவும் (அமைச்சராகவும்), பெரிய உத்தியோகங்களிலும் ஆதிதிராவிடன் இருக்கிறான். கோயிலில் அவனுக்குப் பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கிறதைவிட இன்னும் அதிசயமாக ஆதிதிராவிடன் மேலே வந்துவிடுவான் போல் இருக்கிறதே என்று பார்ப்பான் நடுங்குகிறான்.

தாசி ஒழிப்புப்பற்றி சட்டசபையிலே சட்டம் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர், "பொட்டுக் கட்டுவது என்பது கடவுள் காரியம் - புண்ணிய காரியம். இதிலே பிரவேசிக்கக் கூடாது, இதை ஒழிக்கக் கூடாது" என்று எதிர்த்துப் பேசினார். அப்போது முத்து லெட்சுமி ரெட்டி என்ற அம்மையார் எழுந்து, "இது புண்ணிய காரியம்தான் - கடவுள் காரியம்தான். இத்தனை நாள்தான் நாங்கள் (திராவிடர்) செய்து வந்தோம். இனி இந்தக் கடவுள் காரியத்தை நீங்கள் (பார்ப்பனர்) பொட்டுக் கட்டிக் கொண்டு செய்யுங்களேன்" என்று சுடச்சுடப் பதில் கூறினார்.

------------------------------------- 30.01.1960- அன்று குடந்தையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- "விடுதலை" 19.02.1960