Search This Blog

26.11.13

பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!

பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்! நீங்களே இழிமகன் என்று ஒப்புக்கொள்ளலாமா?

தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக் கூட்டம் கட்டட நிதி அளிப்புக் கூட்டமாகக் கூட்டப்பட்டுள்ளது. நிதியளிப்புக் காரியத்திற்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை. பணத்தைத் தபாலில் (பண விடைத்தாள் மூலம்) அனுப்பினால் அல்லது ஆள் மூலம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். பணம் வாங்குவதற்கு நான் இவ்வளவு ஆடம்பரம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நிதியளிப்புக் கூட்டம் என்ற பெயரால் ஆங்காங்கு நம் கருத்துக்களைச் சொல்லலாம் என்பதற்கே - பிரச்சாரப் பயனை உத்தேசித்தே - இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீண் ஆடம்பரம், அதோடு வெட்டியான செலவு, இவைகளில் நேரமும் அதிகமாகிவிட்டது. நான் முதலில் இந்த ஊரில் ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்ற கண்டிஷன் (நிபந்தனை) பேரில் தான் வந்தேன். முக்கிய செயல்களில் கவலையில்லாமல், கண்டபடி அநாவசியமான வழிகளில் செலவு செய்து ஆடம்பரம் செய்துவிட்டார்கள். ஏனென்றால் இந்த மாவட்டத்தில் (தஞ்சாவூர்) ரூ.7000- தான் கேட்டேன். அவர்கள் திட்டம் போட்டுக் கொண்டது 12,500 ரூபாய். ஆனால், இதுவரையில் 30- ஆயிரம் தந்துவிட்டார்கள். ஆகவே, நான் பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிடைத்த வரையில் சரி - என்ன கொடுத்து வைத்தது வீணாகப் போகிறது? ஆனால், எனக்குப் பேசுவதற்கு நிறைய அவகாசம் (கால நீளம்) தந்து என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் யாரும் என்னைப்போல் பேசமாட்டார்கள். காரணம், அவர்களுக்கு விஷயம் தெரியாது என்பதல்ல. ஏன் அவர்கள் அறிவாளிகள்தான், மேதைகள்தான்! ஆனால், என்னைப்போல் பேசினால் ஓட்டு (தேர்தல் வாக்கு) கிடைக்காது - உதை கிடைக்கும் என்று பயந்து கொள்வார்கள். விஷயம் அததான். எனக்கு வயது 81- ஆகிவிட்டது. இவ்வளவு நாள் இருப்பதே அதிசயம்தான். அதனால் நம்முடைய மீதி நாள்களை இந்தக் காரியத்தில் செலவிட்டுக் கருத்தைச் சொல்லிவிட்டுப் போவது என்ற தைரியத்தில் துணிந்து பேசுகிறேன்.


தோழர்களே! இன்று நம் மக்களுக்குள்ள இழிவு இன்று நேற்றல்ல, 3000- ஆண்டகளாக உள்ளது. நமக்குப் புத்தியும், கவலையும் இல்லாததால் நம்மை இழிவுடுத்தவே உண்டாக்கப்பட்ட சாஸ்திரங்களையும், குழவிக் கல்லையும் (கல் சிலையையும்), பார்ப்பானையும் கட்டிக் கொண்டு அழுகிறோம். மான உணர்ச்சியைப் பற்றியும் கவலைப்படுவதற்கு இல்லாத காட்டுமிராண்டிகளாக இன்றும் வாழ்கிறோம். இன்று நாம்தான் மூட்டை தூக்குகிறோம். கக்கூசு (மலக்கழிவு) எடுக்கிறோம். பாடுபட்டுப் பயிர் செய்கிறோம். கல்லுடைக்கிறோம். இப்படித் துன்பப்பட்டுச் சமுதாயத்திற்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு திராவிடர் ஆகிய நாம்தான் இழிமக்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று கூறப்படுபவர்களாக வாழ்கிறோம்! ஒரு வேலையும் செய்யாத சோம்பேறி, மேல்சாதியாக - பிராமணனாக வாழ்கிறான்!

இது ஏன் என்று 3000- ஆண்டுகளாக எவரும் பேசவில்லையே? புத்தர் பகுத்தறிவுக் கருத்துச் சொன்னார். அவரையே தீர்த்துக்கட்டி விட்டார்கள். மற்றப்படி ரிஷிகள், முனிவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாரும் நமக்கு எதிரிகளாக - நம்மை இழி மக்களாக்குவதற்கு ஆதரவாகத் தோன்றியவர்கள்தான். முன்பு நம்மைவிட மடையனாக அக்காள் - தங்கையைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவன் தான் வெள்ளைக்காரன். இன்று அவன் அறிவால் எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! அதுபோலத்தான் முஸ்லிம்களும் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்கள்! "நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் அவர்களே சொல்வார்கள், நபிகள் பிறப்பதற்கு முன்பு நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தோம்" என்று! இன்று எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்! நாம் இன்றும் சிந்திக்காமல், கவலைப்படாமல் இருக்கிறோம் என்பதைத் தவிர நமக்குப் புத்தியில்லை என்று சொல்ல முடியுமா?

இதுவரையில் யாரும் கவலைப்படாத - சொல்லப் பயப்படுகிற காரியத்தை நாங்கள் தோள் மேல் போட்டுக் கொண்டு அலைகிறோம். முடிந்தால் நமக்கு இருந்துவரும் இழிவை - ஜாதியை - ஒழிக்கிற காரியம் தான் முடியும். நாங்கள் என்ன மற்றவர்களைவிட நெய்யில் பொரித்தவர்களா என்றால், நாங்கள் துறவிகள் மாதிரி யார் தயவிலும் பிழைக்க வேண்டியவர்கள் அல்லர். எங்கள் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் அப்பன் பாட்டன் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்திப் பாடுபடுகிறவர்கள். மற்றவர்கள் மாதிரி உங்கள் ஓட்டுக்கோ மற்றவைகட்கோ உங்களை எதிர்பார்க்கிறவர்கள் அல்லர்.


இப்படிப்பட்ட எங்கள் தொண்டில் பலனும் கிடைக்கிறது. சாதாரணமாகப் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள்; இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு அடி வாங்காத பெண் யார்? ஒருத்தன் பல வைப்பாட்டிகள் வைத்திருப்பான். கேட்டால் "கிருஷ்ணனே ஆயிரக்கணக்கில் வைப்பாட்டி வைத்திருந்தான் - எனக்கென்ன" என்பானே! இதை யார் கேட்டார்கள்? பெண்களுக்காக முதலில் நாங்கள்தான் கூப்பாடு போட்டோம்.

இன்று காங்கிரஸ்காரன்தான் தீண்டத்தகாதவர்க்கு மந்திரி பதவி தந்திருக்கிறான் என்றால் முதலில் கூப்பாடு போட்டது யார்? மற்றவர்கள் பேசாத காலத்தில் நாங்கள்தானே பேசினோம்! இன்றும் என்ன? எங்களை ஒழித்துவிட்டால் மீண்டும் தோசையைத் திருப்புகிற மாதிரித் திருப்பிப் போடலாம் என்று எண்ணுகிறான். இன்று சட்டத்தில்தானே பெண்களுக்கு உரிமை - சொத்து கொடுத்திருக்கிறான்! நாளைக்குச் சட்டத்தைத் திருத்தினால் போகிறது!

இன்று இராஜாஜி (இராஜகோபால ஆச்சாரியார்) தனிக்கட்சி வைத்துக் கொண்டு பெண்களுக்குச் சொத்து கொடுத்தது தப்பு என்று தைரியமாகப் பேசுகிறாரே! நாங்கள் உயிருடன் இருக்கும்போதே பேசுகிறாரே! நம்மை என்றும் சூத்திரனாகவே வைத்திருக்க வேண்டும், (மனு) தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறாரே! நம் (திராவிட) இனத்தவர்களான மானங்கெட்டவர்களும் அதில் போய்ச் சேருகிறார்களே? இந்தக் கம்யூனிஸ்ட் (பொதுவுடமைவாதி) - சாதியைப் பற்றிப் பேசுகிறானா? இவனுக்கு எதற்கு ஜமீன்? இவனுக்கு எதுக்கு சொத்து என்கிறானே தவிர 'உழைக்கிறவன் ஏன் கீழ்ச்ஜாதி? உழைக்காத பார்ப்பானுக்கு எதற்கு உயர் சாதிப் பட்டம்?' என்று கேட்கிறானா? நாங்கள் தான் சொல்கிறோம். சக்கிலி செருப்புத் தைக்க வேண்டும், நாவிதன் சிரைக்க வேண்டும், குயவன் சட்டி பானைதான் செய்ய வேண்டும் - எல்லோரும் படித்துவிட்டு உத்தியோகத்திற்கு வந்தால் எங்கள் கதி என்னாவது என்று இராஜாஜி பேசுகிறாரே! இவற்றையெல்லாம் யார் கேட்கிறார்கள்?


திராவிடர் கழகம் ஓர் அதிசமயமான நிறுவனம். உண்மையில் ஓர் அதிசயமான ஸ்தாபனம்தான். சாமியை உடைக்கிறோம். இராமாயணம் புரட்டு என்கிறோம். பாரதம் விபசாரி சரிதம் என்கிறோம். கடவுள் கல் என்கிறோம். இத்தனைக்கும் ஒரு ரகளை (கலகம்) இல்லை. ஓர் உயிர்ச்சேதம் இல்லை. சாதாரணமாக வடகலை, தென்கலை நாமத்திற்கு அசிங்கமாகச் சண்டை போடுகிறான்! சாம்பலுக்குப் பெரிய ரகளை நடக்கிறது. இன்னும் ஏதேதோ நடக்கிறது. நாங்கள் யாவரும் நினைக்காத மற்றவர் சொல்லப் பயப்படுகிற காரியத்தைச் செய்கிறோம். எந்த இரகளையும் இல்லை. முப்பதாண்டு பிரச்சாரத்தில் நல்ல பயன் கிடைத்திருக்கிறது.

அதனால்தான் இதை ஓர் அதிசயமான இயக்கம் என்கிறேன். இன்று உங்களுக்குத் தெரியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.


தோழர்களே! நீங்கள் யாரும் மானத்தை எண்ணி, கோயிலுக்குப் போகக் கூடாது. உள்ளே போய் நீ (திராவிடன்) சாமியைத் தொட்டால் சாமி செத்துவிடும் என்கிறான்! வெளியில் இருந்துதான் கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறான்! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால், கீழ்ஜாதி என்பதை ஒத்துக் கொள்வதாகத் தானே அர்த்தம் (பொருள்)?

பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள். அவன் பிராமணன் என்றால் நீ யார்? உன் மனைவியை வைத்துக் கொண்டே, கூட இருக்கும் வேறொரு பெண்ணை அவள் பதிவிரதை என்றால் உன் மனைவி விபச்சாரி என்று வாயால் சொல்லாவிட்டாலும் அர்த்தம் அதுதானே? அதுபோல நீ பார்ப்பானைப் பிராமணன் என்றால் நீ உன்னைச் சூத்திரன் - தேவடியாள் மகன் - என்பதை ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தம்? ஆகவே நீங்கள் நல்லபடி சிந்தித்து உங்கள் இழிவு நீங்க முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு உங்கள் ஆதரவை - உங்களுக்குச் சரி என்று பட்டால் தரவேண்டும்.


--------------------------------------------- 17.01.1960- அன்று நன்னிலத்தில் (குளிக்கரை) பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- "விடுதலை" 21.1.1960

9 comments:

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (2)

காலம் - நேரம் - பறக்கிறது (‘Time Flies’) என்பது கெட்ட செய்தி! அதில் நீங்கள் விமானியாக (Pilot) இருக்கிறீர்கள் என்பது நல்ல செய்தி!! என்றார் மைக்கேல் அல்ஷுலர்.

காலத்தை (நேரத்தை) நாம் மாற்ற முடியாது; மாறாக அக் காலத்தை நாம் பயன்படுத்திட சரியாக திட்டமிட்டுச் செயல்படுத் திட முடியும். அப்போது நேர மில்லையே எனக்கு என்ற பஞ்சப் பாட்டுக்கு போலி சமாதானங் களுக்கு இடமே ஏற்படாது.

ஆழமாக மனதில் பதிய வைத் துக் கொள்ளுங்கள்.

பறக்கும் காலம் என்ற விமானத் தில் நீங்கள் விமான ஓட்டியாக, விமானியாக, அமர்ந்து விமா னத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயணம் செய் யுங்கள் - இலக்கு நோக்கி!

உங்களுக்கு ஒவ்வொரு நாளிலும் 1440 மணித் துளிகளும், ஒவ்வொரு ஆண்டிலும் 5,25,600 மணித் துளிகளும் உங்கள் கட்டுப்பாட்டிற் குள் உள்ளது என்று உணர்ந்து பறக்கும் விமானத்தை உற்சாகத் துடன் ஓட்டுங்கள்! இலக்கினை அடையும்போது இறக்குங்கள்!
சிலர் நேரத்தை எப்படி உருப்படி யான வகையில் செலவழிப்பது என்பதை நடைமுறைப்படுத்தி, அன்றாட வாழ்க்கையில் அனுபவ ரீதியாக கற்றுக் கொள்ள புத்தகம் புத்தகமாக புரட்டுவதில் அரிதினும் அரிதான காலத்தை நாம் வீணாக்கி விரயம் செய்து விடுகிறோம்.

உறுபயன் அதனால் உடன் விளைவது கிடையாது.

சமையலை வெறும் புத்தகங்களால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. அவை ஒரு வழிகாட்டி என்று மட்டுமே கருதிட வேண்டும். ஒவ்வொரு முறை சமையலிலும் வெறும் வரி வரியாகப் படித்து சமையலைச் செய்யத் துவங் கினால் சமையலும் முடியாது; சுவை யாகவும் இராது, பொருள்களும் வீணாகவே செலவாகும்!

உள்வாங்கிய கருத்துக்களும், நடைமுறை அனுபவங்களும், வார்ப்புப் பட்டறைகளாகி, மளமளவென கற்றுக் கொள்ள கவனத்துடன் திட்டமிடு தலும் - திறம்படச் செய்தலும் தேவை யாகும்.

சிலர் காலத்தை நிர்வகிக்க என்று கனத்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டே காலத்தை அதில் விரயம் செய்து விடுகிறார்கள்!

அனாவசிய செலவாளிகள் பலர் எத்தனைப் பேர் பணத்தை கணக்குப் பார்க்காமல் செலவழிக்கிறார்கள். சாப்பிட்டு எழும்போது, உணவு விடுதிகளில் - ஓட்டல்களில் டிப்ஸ் என்ற ஒரு வெகுமதிப் பணம் அளவ றிந்துகூட தராமல், ஜம்பத்திற்காக 50 ரூபாய் தர வேண்டிய இடத்தில் 500 ரூபாய் தருவது எப்படி ஒரு தவறான விரும்பத்தகாத செயலோ, அது போன்றதே 5 மணித் துளிகளை ஒதுக்க வேண்டிய பணிகளுக்கு 50 நிமிடங்களை - செலவிட்டு வீணாக் குவது ஆகும்!

புத்தகங்களை இதுபோன்ற செய் திகளை அறிய என்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு அதில் செலவழித்து விட்டு, ஏமாறுவது நியாயமா?

எடுத்துக்காட்டாக, தேர்வுக்கு விடை எழுதத் துவங்குமுன் நன்கு கேள்விகளைப் படித்துப் புரிந்து கொண்டு விடை எழுதத் துவங்கி னால் உங்களுக்கு நல்ல வெற்றி கிட்டும் என்று ஆசிரியர்கள் அறிவு றுத்துகின்றனர்.

உண்மைதான், அதற்காக கேள்வியைப் படித்து உள்வாங்கிடவே மொத்தம் உள்ள 2 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளலாமா? அது அபத்த மல்லவா? அதுபோலத்தான், இந்தக் காலத்தை, எப்படி நிர்வாகிப்பதில் வெற்றி பெறுவது பற்றியே சதா ஓர் ஆய்வு செய்கிறேன் என்று கூறி அந்த வழிகாட்டிகளைப் படித்துக் கொண்டே இருந்தால் எப்படி?

ரயில்வே டைம் டேபிள் வாங்கி ரயில் புறப்படும் நேரத்தைப் பார்த்து விட்டு சரியான நேரத்தில் (அதன்படி) சென்ற ரயிலில் ஏறி பயணம் செய்யாமல், டைம் டேபிளையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் உங்களுக்காக ரயில் நிற்குமா? அதுபோல எதற்கு எவ்வளவு நேர ஒதுக்கீடு - எப்பணிக்கு எம்மாத்திரம் அளவு என்ற நேர அளவீடும், முன்னுரி மையும் (Sense of Priority and Sense of Proportion) மிகவும் முக்கிய மாகும்.

ஆயுதத்தின் முனையை, சாணை பிடிப்பதுபோல் இந்தச் செயல்கள், பயன்பாடுகள் நமக்கு வெற்றியை ஈட்டித் தர முந்தும்!

நிறுவனங்கள், ஆய்வுக் கூட் டங்கள் என்ற பெயரில் தேவையற்ற விவாதங்கள் அடங்கிய கூட்டங் களால் பல பயனுறு பணிகள் தாமத மாகுமே தவிர, முழுப் பலன் தராது என்பது பல தலைமைப் பொறுப் பாளர்கள் அறிய மாட்டார்கள்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க அ.தி.மு.க. அரசு மேலும் ஒரு மனு தாக்கல் கலைஞர் கருத்து

சென்னை, நவ.26- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருப்பது குறித்து தி.மு.க. தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (26.11.2013) சென்னை பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடையே கூறியதாவது:

செய்தியாளர் :- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசின் சார்பில் மேலும் ஒரு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்
கிறதே?

கலைஞர் :- சேது சமுத்திரத் திட்டத்திற்காக 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் முதலமைச் சராகப் பொறுப்பேற்றவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தாரையும், தமிழ்நாட்டு மக்களையும் பார்த்து விடுத்த வேண்டுகோள், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

அண்ணா அவர்களுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்ற, அந்தக் கனவை நனவாக்க, முயற்சிகள் எடுத்துக் கொண்டு, திராவிட இயக்கத்தாராகிய நாங்கள் பாடுபடும்போது, இன்றைக்கு இருக்கின்ற ஜெயலலிதா அரசு, ஏற்கென வே ஒரு முறை இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரி யிருக்கிறது.

திரும்பவும் இப்போது நான் கேள்விப்படுகிறேன் - இரண்டாவது முறையாகவும், ஏற்கெனவே தாங்கள் சொல்ல விட்டுப் போன விஷயங்களைச் சொல்லுகிறோம் என்று சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்தைக் கை விட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்திற்கு மேலும் ஒரு முறையீடு செய் திருக்கிறது.

அண்ணா அவர்களின் எண்ணங்களை, தமிழ் நாட்டு மக்களுடைய தேவைகளை ஜெயலலிதாவும், அவர் தலைமையிலே உள்ள இந்த ஆட்சியும் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படு கிறார்கள் என்பதற்கு இதுவே தக்க அடையாளம்.

தமிழ் ஓவியா said...


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை


காஞ்சிபுரம் சங்கர்ராமன் படுகொலை வழக்கு:

சங்கராச்சாரியார்கள் உட்பட 25 பேரும் விடுதலையா?

81 பேர் பிறழ் சாட்சியானது எப்படி? காவல்துறை என்ன செய்தது?

தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

தமிழ்நாடு அரசின் முடிவைப் பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கர்ராமன் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (3.9.2004).

சங்கராச்சாரியார்கள் கைது

இது தொடர்பாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் (11.11.2004) ஜெயேந்திரர் 61 நாட்களும், விஜயேந்திரர் 31 நாட்களும் சிறையில் இருந்தனர். மொத்தத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரால் விண்ணப்பிக்கப் பட்டு, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி புதுச்சேரி மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.

பொது மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு -பக்தர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியதுண்டு. தொடக்கத்தில் குற்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

81 பேர்கள் பிறழ்சாட்சியாம்!

இந்த வழக்கில் அதிர்ச்சிக்குரியது என்னவென்றால் 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான் -ஆக்கப்பட்டதுதான்.

இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சி (Hostile) யானது கிடையாது.

குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் (Prosecution) எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர் என்பது அதைவிட முக்கியமானது.

இப்படி பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதும் கூட வழக்குப்பதிவு செய்ய, தண்டிக்க, சட்டத்தில் இடம் உண்டு - இந்த வகையில் காவல்துறை ஏன்செயல்படவில்லை?
25 பேர்களும் விடுதலையாம்!

ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைப்பேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து அரசு தனது நடவடிக்கையைக் கைவிட்டு விடக் கூடாது, மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் யாரும் எந்தக் குற்றத்தையும் செய்யலாம் - எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தைப் பொது மக்கள் மத்தியில் எளிதில் ஏற்படுத்தி விடும்.

மற்ற மற்ற வழக்குகளில் மிகவும் ஆர்வம் காட்டும் அரசு இந்த மிக முக்கியமான பரவலாகப் பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் மேற்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்து நமது நடவடிக்கை

ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதனை நாங்கள் கூறவில்லை. நியாயமும், நீதியும், உண்மையும் தோற்றுவிடக் கூடாது என்ற பொது நோக்கோடு இதனை அணுகுகிறோம்.

அடுத்து தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, மனித உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உரியது செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

27.11.2013

தமிழ் ஓவியா said...


இன்று வி.பி.சிங் நினைவு நாள்

மண்டல் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன் றத்தில் (7.8.1990) முழங்கியவர்.

காவிரி நடுவர் மன்றம் அமைத் தவர்; மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்; சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரைச் சூட்டியவர்; பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, அவரது படம் நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்தவர்; அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறை அறி வித்தவர்.

மண்டல் குழுப் பரிந்துரையை நிறைவேற்றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் உறுதியாய் இருந்தவர்; ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த முறையை எதிர்த்துப் போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளையில், நாங்கள் சிக்கலுக் கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மக்களவையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.

இந்திய அரசியலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.

அவரது நினைவு நாளில் (27.11.2008), அவரை வணங்கு வோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம். வி.பி.சிங் வாழ்க.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளராக டாக்டர் பிறைநுதல் செல்வி

திராவிடர் கழக பொருளாளராக இருந்த வழக்கறிஞர் கோ.சாமி துரை அவர்கள் 9.11.2013 அன்று மறைவுற்றார்.

அவருக்குப் பதிலாக 26.11.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி (65) திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.

கல்வித்தகுதி: பி.எஸ்.ஸி, எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ.

உதகையில் மருத்துவத்துறையில் துணை இயக்குநராகப் பதவி வகித்தவர். விருப்ப ஓய்வு கொடுத்து திராவிடர் கழகத்தில் பணியாற்ற முன்வந்தவர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவர் இணையர் இரா.கவுதமன் அவர்களும் மருத்துவர் ஆவார். ஒரு மகன் மருத்துவர்; ஒரு மகள் பொறியாளர். இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: அதிமுகவை மன்னிக்கவே முடியாது


சேது சமுத்திரத் திட்டம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய திட்டம் - வெகு காலமாக தமிழ்நாட்டு மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் திட்டமாகும்.

அந்தத் திட்டம் கூடாது என்பவர்கள் யாராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்களே - இது கல்லின் மேல் எழுத் தாகும். இந்தத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க.வும் - அதன் பெயரில் அமைந்த அரசும் எதிர்க்கிறது - எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது எந்த அடிப்படையில்? இப்பொழுது இரண்டாவது முறையும் எதிர்த்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மன்னிக்கத் தக்கதுதானா?

இதே அ.இ.அ.தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் அவசியமானது - வேண்டுமென்றே மத்திய அரசு, கால தாமதம் செய்கிறது என்று குறிப்பிட்டி ருந்ததே - அந்தத் தெளிவான நிலை இப்பொழுது ஓடி மறைந்த மர்மம் என்ன?

திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி இப்பொழுது அ.இ.அ.தி.மு.க. இத்திட்டத்தை எதிர்க்கிறது என்றால் அதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதால் அதன் பெருமை அல்லது அரசியல் லாபம் தி.மு.க.வுக்குப் போய் விடுமே என்ற ஆற்றாமை தான் இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத் திற்குச் சென்றுள்ள காரணமாகும்.

அ.இ.அ.தி.மு.க.தான் இந்நிலையை எடுத் துள்ளது என்றால் பிஜேபி திடீரென்று எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? அய்யகோ இராமன் பாலத்தை இடிக்கிறார்களே! என்று சந்திரமதியின் மயானக் கூச்சலைப் போடுவானேன்?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தானே இந்தத் திட்டம் இப்பொழுதுள்ள பாதையில் செயல்படுத்தப்பட ஒப்புதல் வழங்கப்பட்டது?

பிரதமர் வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, சு.திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாம் யார்? பிஜேபியின் மத்திய அமைச்சர்கள் தானே - இவர்கள் தானே அனுமதி அளித்து ஒப்புதல் கையொப்பமிட்டார்கள்.

இன்றைக்கு ஏன் சுருதிபேதம்? அவர்களையும் ஆட்டிப் படைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிதானா?

இராமன் பாலம் என்றெல்லாம் பேசுவது அறிவியலுக்கு உட்பட்டதுதானா? அரசு, தனது திட்டத்தில் புராண நம்பிக்கைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் எந்த ஒரு திட் டத்தையும் உருப்படியாக நிறைவேற்றத்தான் முடியுமா?

இராமனையும், கிருஷ்ணனையும் அவரவர் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அரசுப் பணத்தை செலவழிக்கும் ஒரு திட்டத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக் கலாமா?

இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதே - அதன் நிலை என்னாவது? இவ்வளவுப் பெருந் தொகை செலவழிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த முட்டுக்கட்டை போட்டால் இதற்கான நட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யார்?

அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளுமா? அல்லது பிஜேபி என்ற கட்சிதான் ஏற்றுக் கொள்ளுமா?

தமிழ்நாட்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கட்சிகள் - இந்த நிலைகளுக்குப் பிறகும் மவுன சாமியார்களாக ஆன மர்மம் என்ன?

அரசியல்தானா? கூட்டணிதானா? கேவலம் ஒட்டுக்காகத் தானா?

பதவிப் பசி எடுத்தால் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்களா? வெட்கம்! மகா வெட்கம்!!

தமிழ் ஓவியா said...


ஏன்?மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும் மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்பட வேண்டும்?
(குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (3)

நமக்குக் கிடைத்துள்ள காலம் என்பது அற்புதமான ஆயுதம்! மனித சமூகத்தின் தனித் தன்மை யான பகுத்தறிவின் பயன்பாட்டில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஆயுதத்தின் பயன்பாடே நம் வாழ்வின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.

இதுவரை சொன்ன கருத்துக் களை சற்று அசை போட்டு சிந்தித்து, பசை போட்டு மனதில் ஒட்டிக் கொள் ளுங்கள்.

1. காலத்தை நாம் நிர்வகித்து கூட்டவோ, குறைக்கவோ முடியாது; ஆனால் நமது அறிவு - ஆற்றல் காரணமாக நம்முடைய பணிகளை காலத்தை எப்படியெல்லாம் திட்ட மிட்டு பயனுறு வகையில் செலவழிக் கலாம் என்பதை நம்மால் நிர்ண யித்துக் கொள்ள முடியுமே!

2. அப்படி திட்டமிட்டு, நிர்ணயித் துப் பணியாற்றுகையில் எது மிக முக்கியமான, நெருக்கடியான உடனே தலையிட்டு தீர்வு காண வேண் டிய பிரச்சினை என்பதை அறிந்து (Critical tasks) அதற்கே முன்னுரிமை அளித்தல்.

3. திட்டமிட்டு நேரத்தைச் செலவழிக் கக் கற்றுக் கொள்ளுங்கள்; இன்றேல் எது உங்களால் தீர்வு காணப்பட வேண் டிய வெகு முக்கிய அவசரப் பிரச்சினை எது என்பதை எப்படி நீங்கள் கண்டறிய முடியும்?

4. மாதிரி வாரம் (Model Week) என்று அமைத்துக் கொண்டு செயல் படக் கற்றுக் கொள்ளுங்கள். இதில் பெரும் பகுதி நேரம், எது, முக்கியத் தீர்வு காண வேண்டிய நெருக்கடி தரும் பிரச்சினைகளோ அவைகளுக்கென தனியாக நேரத்தை ஒதுக்கி, தீர்வு காண சிந்தித்து செய லாற்ற முன் வாருங்கள்; இப்படிப்பட்ட அணுகு முறையை நீங்கள் - கையாள வில்லை யென்றால், உங்களை நோக்கி வாழ்வின் வெற்றி என்பது வந்து ஒரு போதும் உங்கள் கதவைத் தட்டாது!

5. முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டிய இந்த அவசரப் பிரச்சினை களின் பட்டியலை உங்களோடு பணி யாற்றும் சக பணியாளர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்து அவர் களுக்கும் அந்தப் பிரச்சினையின் தீர்வு அவசரமாகக் காண வேண்டியது என்பதைப் புரிய வையுங்கள்.

6. தேவைப்பட்டால், சிறிய, குறைந்த நேரத்தில் தோழர்களை - பணியாளர் களை அழைத்து ஒரு கலந் துரையாடலை நடத்தி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள் - பகிர்வு மிகவும் முக்கியம்.

7. ஏற்கெனவே வேறு வகையா கவோ, காலம் பறப்பதைப் பற்றிய கவலையோ இல்லாதவர்கள் இனியா வது இந்தக் கோணத்தில் புதிய சிந்தனைக்கு ஆளாகி, காலம் என்ற அற்புதக் கருவியை மிகவும் பயனுறு வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளரான ரால்ப்ஃவேல்டா எமர்சன் அவர்களது கவிதை வரிகளை இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்:

உங்களால் முடியும் அளவுக்கு செய்து முடிக்கக் கூடிய பணியை ஒவ் வொரு நாளும் செய்து முடியுங்கள்;

சில தவறுகளும், அபத்தங்களும் கூட அப்பணியில் ஊடுருவி நுழைந் திருக்கலாம். அவற்றை எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அதைச் செய்து விட்டு; நாளை என்ற புதிய நாளைத் துவங்கட்டும்; நீங்கள் அதை மிகவும் பெருமிதத்துடனும், பழைய அர்த்த மற்ற நிகழ்வுகளை புறந்தள்ளிய புத்துணர்வுடன் இந்நாளைத் துவக் குங்கள்

- ஒவ்வொரு புதிய நாளும் புதிய தோர் அத்தியாயமாகப் பொலிவுற, புத்தாக்கம் செய்யுங்கள்; காலத்தைப் போற்றி கணக்கிட்டு திட்டமிடுதலே நீங்கள் வாழ்க்கையில் வாகைசூட வழிகாட்டும்.

- கி.வீரமணி