திராவிடர் கழகத் தனிமாநாடுஅன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! சென்ற தடவை திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில்
அரசியல் சட்டத்தை எரிப்பது, காந்தி படத்தை எரிப்பது என்பதான பிரச்சனைகள் வந்த போது பெரும்பாலான அங்கத்தினர்கள் இந்த தீர்மானம் மத்திய நிர்வாக கமிட்டியில் செய்வதைவிட இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டி அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவைப் பெற்று அதன் பின்பு சிறிது நாள் தவணைகொடுத்து பிரசாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவித்தார்கள். அந்த தீர்மானத்தின் கருத்துப்படி எப்போது கூட்டுவது என்று முயற்சி செய்துவந்தோம். டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம் என்று இரண்டொரு தடவை சொன்னேன். இந்த நிலையில் எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் நாட்டில் பல இடங்களில் பலவிதமாக நடத்தினார்கள். தஞ்சையில் எனது பிறந்த நாள் விழாவை சிறிது விசேஷமா நடத்த வேண்டும் என்று கருதி எனது எடைக்கு எடை வெள்ளி கொடுப்பது என்று முடிவு செய்து அதன்படி விழா நடத்த முயற்சி செய்தார்கள். இந்த விழாவுக்கு பெரும்பாலான மக்கள் வருவார்கள், வருவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதாக எண்ணிப்பார்க்கிறபோது எல்லா மாவட்டங்களிலிருந்தும் தமிழ்மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. முன் குறிப்பிட்டு வைத்திருந்த தனிமாநாட்டை இப்போதே வைத்துக் கொண்டால் இரண்டு வித நன்மை அதாவது செலவும் தொந்தரவும் இருக்காது; எல்லோரும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் ஒருவாய்ப்பு இருக்கும் என்று கருதி விழாவை யொட்டியே தனிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ரொம்ப நெருக்கத்தில் அதாவது (20.10.57ல் நினைத்து) பத்து நாட்களில் துவக்கப்பட்டது. இருந்தபோதிலும் நாட்டில் உண்டான கிளர்ச்சி உணர்ச்சி இங்கு மக்களை கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இது மிக மிகப்பாராட்டத்தக்கதாகும்.
தஞ்சை முன்னணியில் உள்ளதுஎங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும் என்னுடைய முயற்சிக்கும் போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர்கழகமாக ஆன பிறகுமாத்திரமல்ல; நான் காங்கிரசில் இருந்த காலத்திலும் தஞ்சை பெருமளவில் ஆதரவளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தகாலத்திலும் நடத்திய காலத்திலும் தஞ்சை தான் ஆதரவு அளித்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு என்னை தலைவனாக்க பெரும் ஆதரவளித்ததுக் கூட தஞ்சைதான் என்றால் மிகையாகாது. எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ் நாடு பூராவும் பகுதி செய்கிறது. என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலைசிறந்த கட்டுப் பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.
இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடுஉள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித் தான் சொல்லிவிட்டு வந்தேன்.
எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எந்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரியாதை இயக்க காலமுதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள் எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் 1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும் அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்ததில்லை இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள்ளோம் என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு எல்லாவற்றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங்களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனாகவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல் காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவனுக்கு வழிகாட்டிக்கு இதுவரை நடந்திராத மரியாதை நடக்கிற போது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் 'கூட்டம் இல்லை' என்று சொல்லுவதுதான் எனது வழக்கம் நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது ஒருவர் நாலு லட்சம் என்கிறார் ஒருவர் மூன்று லட்சம் இருக்கும் என்கிறார் உள்ளபடியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. எல்லோருடைய கணக்கும் குறைவாகத்தான் இருக்கும். மழை அருமையான உதவி செய்தது காலையில் மழையில்லை எல்லோரும் மழை போய்விட்டது போய்விட்டது என்றார்கள் ஊர்வலம் முடியும்வரை மரியாதையாகக் காத்துக் கொண்டிருந்தது இவ்வளவுதான் தாங்குவேன் இனிமேல் தாங்கமாட்டேன் என்று சிறு தூறல் போட ஆரம்பித்துவிட்டது நான் எப்படியோ ஆகட்டும் மாநாடு காலையிலேயே நடந்துவிட்டது போங்கள் என்று கூறி விட்டேன். இனிமேல் வசூலித்த பணத்தை திருப்பியா கொடுத்து விடப்போகிறார்கள் எங்காவது தாழ்வாரத்தில் வைத்தாவது கொடுத்துவிடுவார்கள் நானும் அவ்வளவு சல்லீசாக விட்டுவிட்டுபோய் விடமாட்டேன். நடக்கிறது நடக்கட்டும் என்று கூறிவிட்டேன் எப்படியோ அதோடு மழை நின்று விட்டது. மாநாட்டு பந்தல் ஈரமாக இருக்குமேஎப்படி உட்காருவார்கள் என்று கவலைப்பட்டேன் இப்போது என்னடா என்றால் எள் விழக்கூட இடமில்லாதபடி அளவு வசதியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.
சிறைக்கு வழிகூட்டும் மாநாடுஇந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப்படத்தக்கதுமான மாநாடாகும்.
என்னைக் கேட்டால் நான் சொல்லுகிறேன். திராவிடர் கழகத் தனிமாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்கு செல்ல வழியனுப்புமாநாடுதான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச்சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. இந்த மாநாட்டின் பலன் வெற்றி அதுவாகத்தான் இருக்கும்.
கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது லேசில் கிடைக்கக் கூடியதல்ல, முன்பெல்லாம் சாதாரணம், ஆனால் அது இப்போது லேசில் கிடைப்பதாக இல்லை.
பிள்ளையாரை உடைத்தோம்; ராமனைக் கொளுத்தினோம் இன்னும் பல காரியங்கள் செய்தோம்; ஏன் என்று கேட்க ஆளில்லை! ராஜாஜி காலத்திலும் எதுவும் செய்யவில்லை. இல்லாவிட்டால் இப்போது காமராசர் தான் விட்டு விட்டார் என்று அவரை சுட்டுத் தள்ளி விடுவார்கள். இப்போது அவருக்கும் பதில் சொல்ல சுலபமாகிவிட்டது. 'ராஜாஜி காலத்திலேயே ஒன்று மில்லை நான் என்ன அதிசயம்' என்று கூறிவிடுகிறார். பார்ப்பனர்கள் தூண்டுதல்என்ன ஆனாலும் சரி! இப்போது அரசாங்கத்தை மிகவும் நெறுக்குகிறார்கள். மேலிடத்திலிருந்தும் பத்திரிகைக்காரர்களும், பார்ப்பனர்களும் இன எதிரிகளும், ஏன் விட்டு வைத்திருக்கிறாய்? என்று நெறுக்குகிறார்கள். எதனால்? குற்றம் கண்டு பிடித்தா? எல்லோருக்கும் பொறாமை! நாம் நினைக்க முடியாததை சொல்லமுடியாததை இந்த கூட்டம் செய்கிறதே நம் யோக்கியதை வெளியாகிவிடுகிறதே; இந்த கூட்டம் இருப்பதால் நாம் பிள்ளைப் பூச்சியாக இருக்க வேண்டியுள்ளதே; இவர்களை அடக்கினால்தான் நமக்கு மரியாதை இருக்கும் என்று அரசாங்கத்தை நெறுக்குகிறார்கள்; பல முயற்சிகள் நடக்கின்றன.
ஆகவே இன்றைய சர்க்கார் அடக்குமுறை செய்து தீரவேண்டிய சந்தர்ப்பம் இது. தங்களுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் கூட ஊரார் வாயை அடைக்கவாவது பிடித்துதீருவார்கள். ஆகவேதான் தோழர்களே! முன்பே இது என்னை சிறை செல்ல வழியனுப்பு மாநாடாக இருக்கும் என்றேன்.
இன்றைய லட்சியம் முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது.
பிறவியில் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்குமேல் எவனும் இல்லை எல்லோரும் சமம். என்ற இந்தநிலை நமக்குதான் அவசியமாகத் தோன்றுகிறது.'ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும் ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்' என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?
இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லா சாதியும் ஒரு சாதி தான் என்கிறோம் நாம். இந்த ஒரு காரியம் தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது.
மற்ற நாடுகளில் எள்ளி நகையாடுவர்!இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இது போல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். சாதாரணமாக அரசாங்கமே யோக்கியமான, பொது மக்களுக்கான, மேல்சாதிக்காரர்கள் ஆதிக்கத்தில் இல்லாத அரசாங்கமாக இருக்குமானால் ஒரு வரியில் செய்து விடலாம்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போட்டிருக்கிறார்களே! தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது சாஸ்திரத்திற்கு ஆகமத்திற்கு விரோதம்தான். ஆனால் தீண்டாமை ஒழிக்க வேண்டுமென்பது அரசாங்கத்திற்கு அரசியல் சூதாட்டத்திற்கு ஆக அவசியமாக இருந்தது செய்தார்கள். அதுபோல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது?
சாதி ஒழிய பரிகாரம் ஏன் பண்ணக்கூடாது என்று கேட்டால் இப்படி பேசுகிறேன் அப்படி பேசுகிறேன் என்று எழுதுகிறார்களே தவிர பேசுவதில் என்ன தப்பு? சாதி ஒழிய வேண்டும் என்பதால் என்ன கெட்டுப் போகும்? சர்க்கார்தான் ஏன் ஆதரவு தரக்கூடாது என்று கேட்பவர்களைக் காணோமே!
இது என்ன சுயராஜ்யம்?ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமையில்லை யென்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும்.
எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை குத்தியதில்லை ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன்.
வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே?
ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பானர்களையாவது அதில் தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?
(கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று லட்சக்கணக்கானவர்கள் முழக்கமிட்டனர்) எவனாக இருந்தாலும் இந்த முடிவுக்குத்தானே வர வேண்டும்? அட! பைத்தியக்காரா! நான்தானா சொல்லுகிறேன்? (நாங்கள் செய்வோம் என முழக்கம்) இன்றே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அதைத்தவிர வேறு வழியில்லை யென்றால் என்ன செய்வது?நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்கு பரிகாரம் வேண்டும் என்றால் 'குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான்' என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?
முதுகுளத்தூர் சம்பவம்முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும் வந்து விடுவானா? சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? அந்த மாதிரி சொன்னான் அந்த யோக்கிய பொறுப்பே கிடையாது நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். 'ராமசாமி குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் என்று சொன்னபோது எப்போது சொன்னான்? எங்கு சொன்னான் கடுதாசியைக் காட்டு' என்றதும் ஒருவனையும் காணோம் ஓடிவிட்டார்கள், 'பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள் சி.அய்.டி.ரிப்போர்ட்டில் அதுபோலக் காணவில்லையே என்றார் ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால் வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன்தான் சும்மா இருப்பான்?
ஆண்மையாக 'இருக்க வேண்டியதுதான் எடுக்க முடியாது' என்றாவது சொல்லேன்.
வீண்மிரட்டல் பலனளிக்குமா?ஆறுமாதமாக கிளர்ச்சி நடக்கிறது 750 பேரை கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.
'குத்துகிறேன் வெட்டுகிறேன்' என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கிவிடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்கு பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி, விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மான மற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை. சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கரையில்லை 'குத்துகிறேன்' என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?
இரண்டிலொன்று முடியவேண்டும்இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தேதீர வேண்டும்! என்ற லட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும் வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்ற லட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது, பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக் கொள்ள வேண்டியது தானா?
பார்ப்பானுக்கு மட்டும் தான் அரசாங்கமா?அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கு தானா? தந்திரமாக பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்கு போக முடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம் இல்லாவிட்டால் சாகிறோம் சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.
சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை. நம்மை அடக்கப் பார்க்கிறார்கள்.
பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம்நம் அரசாங்க மந்திரிகளை இழுத்துப்போட்டு இவர்கள் தான் இடம் கொடுக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இதோ படம் போட்டுக் காட்டுகிறார்கள். மந்திரிகள் உட்கார்ந்து கொண்டு சிங்கத்தைவிட்டு பார்ப்பனர்களை கடிக்க விடுகிறார்கள். பார்ப்பனர்கள் பயந்து கொண்டு ஓடுகிறார்கள். நான்தான் சிங்கமாம். இப்படி படம் போடுகிறார்கள். காமராசர் ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்கிறார்கள் பதினாயிரக்கணக்கில் போகிற பத்திரிகை இந்தியா பூராவும் போகிற பத்திரிகை இவ்வளவு அயோக்கியத்தனமாக எழுதுகிறான்? பத்திரிகைக்காரர்களுக்கு மானம் மரியாதை இருந்தால் நான் சொல்வதற்கு பரிகாரம் சொல்ல வேண்டாமா? நீங்கள்தான் மக்கள்; நாங்கள் மக்கள் அல்ல, ராஜ்யம் அவர்களுடையதுதானா?
துரோகிகளால் வந்த ஆபத்துநம் பிரகலாதன்கள் அவர்களுக்கு அடிமையாகப் போவதால்தானே இவர்களுக்கு இவ்வளவு அகந்தை வருகிறது? வேறுநாட்டில் இதுபோல் இருந்தால் ஒரு ராத்திரியில் வெடிகுண்டு வைத்துகட்டிடத்தை இடித்து நொறுக்கிவிடமாட்டானா? துருக்கியில், பாகிஸ்தானில், இங்கிலாந்தில், ஜெர்மனியில் இது போல ஒரு நிலைமை இருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த மானங்கெட்ட நாட்டில் தானே இவ்வளவு கொட்டம் அடிக்கும் போதும் கட்டிடம் இருக்கிறது? அவன் வாழ்கிறான்.
வீண்மிரட்டலுக்குப் பணிவதா?'ஏண்டா அடிக்கிறாய்' என்றாலே 'கொல்கிறான் கொல்கிறான்' என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை எப்படி எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்று தான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சக்கணக்கான குரல்) நாலு பேர் சாவது ஜெயிலுக்குப் போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி அதுதான் சாஸ்திரம் அதுதான் வேதம் அதைத்தான் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் 100க்கு 97பேராக உள்ள நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும் பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டுவிடப் போவதில்லை. அந்தமாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.
இந்த இரண்டு வருடத்தில் எனக்கு இருபது இடங்களில் கத்தி கொடுத்துள்ளார்கள் எதற்கு கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை, முத்தம் கொடுக்கவா இல்லை, விற்றுத்தின்னவா? உன்னால் ஆகும் வரை பார் முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள் இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை அன்பு செல்வாக்கு உள்ளது இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் காத்திருப்பதா?
செல்வாக்கை தப்பாக உபயோகிக்கமாட்டேன்நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக 'வெட்டு குத்து' என்று சொல்லமாட்டேன் வேறு மார்க்கம் இல்லை யென்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியை 'புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும் 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான் தப்பான காரியத்திற்கு உபயோகப்படுத்தமாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; பொது வேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேணடும்.
இன்றா ஏற்பட்டது இந்த உணர்ச்சி?பார்ப்பானைக் கொல்லுவதும் பார்ப்பானைக் குத்துவதும் இன்று நேற்றல்ல. அந்த காலத்திலேயே நடந்துள்ளதே! பார்ப்பான் எழுதி வைத்துள்ள புராணங்களைப் பார்த்தாலே தெரியுமே? இரணியன் சொல்லியிருக்கிறான்; இது பாகவதம் 7வது ஸ்கந்தம் 2வது அத்தியாயம் இன்ஜிக்கோல்லை பண்டிட் ஆர் சிவராம சாஸ்திரி மொழி பெயர்ப்பு புரோகரசிங் அச்சுக்கூடப் பதிப்பு 715-716வது பக்கங்களில் உள்ளது.இரண்யன் சொன்னதுஇரண்யன் சொல்கிறான் 'ஓ! தானவர்களே நான் சொல்வதைக் கேளுங்கள் ; தாமசியாமல் அப்படி செய்யுங்கள்! நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் நிறைந்திருக்கும் 'மிக்குச் சென்று தபசு யாகம் அத்யாயனம், விரதம் ஆகியவைகளைச் செய்கின்றவர்களைக் கொல்லுங்கள். பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ்டானமே விஷ்ணுவுக்கு ஆதாரமாகிறது ஆனதால் எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எந்த தேசத்தில் வர்ணாசிரமங்களுக்குரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றதோ அந்த தேசத்திற்குச் சென்று அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள், நாசம் செய்யுங்கள்' என்றான் அதைக்கேட்ட தானவர்கள் உடனே சிலர் அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள். சிலர் மண் வெட்டியை எடுத்து கோவில்களையும் பிரகாரங்களையும் கோபுரங்களையும் பிளந்தார்கள் சிலர் ஜவ்லிக்கும் கொள்ளிகளைக் கொண்டு அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தினார்கள் இப்படி இவர்கள் செய்யும்பொழுது தேவர்கள் பூமியில் மறைந்து சஞ்சரித்தார்கள்!'
எதில் இது - பாகவதத்தில் !கொளுத்துவது வெட்டுவது 2000 வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது அந்த காலத்தில் பித்தலாட்டம் செய்து எப்படியோ பார்ப்பனர்கள் ஜெயித்துவிட்டார்கள் இந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் அவர்கள் ஜெயிப்பது என்பது நடக்காது.
பார்ப்பான் புத்திசாலியாக இருந்தால் பார்ப்பானைச் சேர்ந்தவன் புத்திசாலியாக இருந்தால் 'இந்து மதத்தில் சாதிகிடையாது சாதியை உண்டாகும் சாஸ்திர புராணங்கள் இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்டவை அல்ல' என்று சொல்ல வேண்டும்.இந்த 1957லும் இதற்கு பரிகாரம் இல்லையென்றால் என்ன அர்த்தம்? ஆதனால்தான் மிகமிக வருத்தத்தோடு வேறு பரிகாரம் இல்லாததால் இந்த மாதிரி எண்ணங்கள் எண்ண வேண்டியுள்ளது இந்த காரியத்திற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டாமா?
சாதியில்லை என்று கூட எவனும் சொல்வதில்லையே? கொடி கொளுத்துகிறேன் என்றதும் 8 நாளில் துடிதுடித்துக்கொண்டு பதில் சொன்னாயே! இதற்கு அதேபோல பரிகாரம் சொல்லாதகாரணம் பார்பபானுக்கு பயந்து கொண்டுதானே! தவறாக நினைத்தால் சர்க்கார் தான் ஏமாந்துபோகும் பார்ப்பான் தான் ஏமாந்து போவான் நாம் ஏமாறமாட்டோம் இன்னும செய்யவேண்டிய காரியகள் பல இருக்கின்றன அதெல்லாம் செய்த பார்த்து ஒன்றும் நடக்கவில்லையென்றால் கண்டிப்பாக இந்த முடிவுக்கு வருவோம். -----------------------3.11.57 அன்று தஞ்சை தனி மாநாட்டில்
தலைமை வகித்து
தந்தை பெரியார் அவர்கள்பேசிய முன்னுரையிலிருந்து