Search This Blog

15.8.08

இதுவா விடுதலை முயற்சி? - பெரியாரின் தொலைநோக்கு!





சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!




இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை.

ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும்.

இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே
அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது.
திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.
தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான்.
காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட
நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன்
மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும்.
திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல;
ஆரியன் பிராமணன் அல்ல,மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல. சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா
பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி.
அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி!


தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?

------------------ பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை - 'விடுதலை' 15.06.1946

0 comments: