கிருஷ்ண ஜெயந்தியா?
பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்று ஒருபுறத்தில் சொல்லிக் கொண்டு, கிருஷ்ணன் பிறந்தான் என்றும், விநாயகசதுர்த்தி என்றும், ராமன் பிறந்தான் என்றும் கயிறு திரிப்பது என்பது மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்தவும், பக்தியின் பெயரால் சுரண்டவும்தான்.
நாளை கிருஷ்ண ஜெயந்தியாம் - அதாவது கிருஷ்ணன் என்ற கடவுள் பிறந்த நாளாம். அவன் பிறப்பே வேடிக்கையாகப் புனையப்பட்டுள்ளது.
மதுரா அருகே கோகுலத்தில் வாசுதேவர் - தேவகிக்கு எட்டாவதாகப் பிறந்த பிள்ளைதான் இந்தக் கிருஷ்ணனாம்!
தேவகிக்குப் பிள்ளை பிறந்தால் - தேவகியின் அண்ணனான கம்சன் மகாராஜா உயிருக்கு (அதாவது பிறக்கும் குழந்தையின் தாய்மாமனுக்கு) ஆபத்தாம். அதனால் தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் தாய் மாமன் கொன்று விட்டானாம். (கடவுள் குடும்பத்தின் கதை எவ்வளவு கயவாளித்தன்மையில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவும்).
எட்டாவதாகப் பிறந்த குழந்தை சிறையில் பிறந்ததாம் - அந்தக் குழந்தையைக் காப்பாற்ற கோகுலத்தைவிட்டு வெளியே வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். அந்தக் குழந்தைதான் கிருஷ்ணன். அவன் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு தாய்மாமனான கம்சனைக் கொன்றானாம்!
இந்தக் கொலைகாரக் கடவுளுக்குத்தான் நாளை பிறந்த நாளாம் - அன்று இந்துக்கள் விழாவாகக் கொண் டாடுகிறார்களாம்.
கொலைகாரன் மட்டுமா? சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடும் இவன் - வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன். சதா பெண்களோடு காமலீலைகள் செய்துகொண்டு கிடந்தவன். அறுதபாயிரம் கோபிகாஸ்திரிகள் இவனுக்குக் காதலிகளாம்! (ஒரு நகராட்சியின் மக்கள் தொகைக்குச் சமம்).
கரையில் துணிகளை அவிழ்த்து வைத்துவிட்டுக் குளத்தில் குளிக்கும் பெண்களின் துணிகளைத் திருடி, மரத்தில் ஏறிக் கொள்வானாம்; நிர்வாணமாகக் குளிக்கும் பெண்கள் துணிகளைக் கொடுக்குமாறு கெஞ்சுவார்களாம்.
இவன் முரண்டு பிடிப்பானாம்! தரையில் வந்து இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டுக் கேட்டால்தான் துணிகளைக் கொடுப்பேன் என்பானாம். அவர்களும் அவ்வாறு வந்து கேட்ட பின்புதான் துணிகளைக் கொடுப்பானாம்; நிர்வாணப் பெண்களை ரசிக்கும் இந்தக் காலிப் பயல்தான் கோகுலகிருஷ்ணனாம் - அவன் எழுதிய புனித நூல்தான் பகவத் கீதையாம்! வெட்கக்கேட்டுக்குப் பிறந்த வெட்கம் கெட்ட கூட்டம் இப்படியெல்லாம் எழுதி வைத்து விழாக் கொண்டாடுவதை கடுகத்தனை அறிவும், ஒழுக்கமும் கொண்டவர்கள் ஏற்க முடியுமா?
மரத்தின் கிளையில் கிருஷ்ணன் அமர்ந்துள்ளது போலவும், குளத்தில் பெண்கள் குளிப்பது போலவுமான படத்தை பய பக்தியாக கொஞ்ச காலத்துக்கு முன்வரை வீடுகளில் மாட்டி வைத்ததுகூட உண்டு.
நமது பிரச்சாரத்தால் இப்பொழுது அத்தகையப் படங்களை அப்புறப்படுத்தி விட்டார்கள்.
சினிமாவில் செக்ஸ் காட்சிகளைக் காட்டி எப்படி திரையரங்கத்துக்கு மக்களை ஈர்க்கிறார்களோ, அது போலவே, இந்து மதத்தில் கிருஷ்ணன் என்கிற ஆபாசக்கடவுளைக் கற்பனை செய்தும், பெண்களை நிர்வாணமாக (செக்சியாக) காட்டியும் - இதுதான் இந்து மதத்தின் தத்துவம் என்று சொல்லியும், இந்து மதத்திற்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்திவிட்டனர்.
ஒழுக்கத்தையும், நல் அறனையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் புத்தர். மக்கள் மத்தியில் அவர் கருத்துக்குச் செல்வாக்கு மிகுந்தது. அரசர்கள் பலரும் புத்தநெறியை அரசு மார்க்கமாகக் கொண்டனர்.
புத்தர் மறைவுக்குப் பிறகு கிருஷ்ணன் என்ற ஆபாசக் கடவுளை (இன்றைய சினிமா ஆபாசக் காட்சிபோல்) உண்டாக்கி மக்களை மட்ட ரகமான ரசனைக்கு ஆட்படுத்தி விட்டனர் இந்து மதப் பார்ப்பனர்கள் என்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் பக்தர்களே! கிருஷ்ணனைப்போல உங்கள் வீட்டுப் பிள்ளைகள் காமாந்தகாரக் கயவாளியாக நடந்துகொண்டால் ஏற்றுக் கொள்வீர்களா?
---------------- நன்றி: "விடுதலை" 22-8-2008
Search This Blog
22.8.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment