Search This Blog

1.8.08

எதைத்தான் கடவுள் வழிபாட்டு முறை என்பது?


வழிபடுதலின் விளக்கம்!

கடவுள் என்பது வழிபடுவது தானே! என்னை வழிபடுகிறார்கள்
என்றால் என்னுடைய கொள்கைகள் உண்மை என்று உணர்ந்து நம்பிப் பின்பற்றுபவர்கள் என்னை வழிபடுகிறார்கள். என் வழி நடக்கிறார்கள்
என்று தான் பொருள். உண்மையான கருத்துக்களைச் சொல்கின்றவனை வழிபடுதல் அதாவது பின்பற்றுவதில் என்ன தவறு? ஒன்றுமில்லை!

கிருஸ்துவர்கள், ஏசுகிறிஸ்துவை வழிபடுகிறார்கள் என்றால் கிறிஸ்து சொன்னதைப் பின்பற்றுகிறார்கள் என்று தான் கருத்து. முஸ்லீம்களும் அதுபோலவே நபிநாயகம் இன்னின்ன உண்மைகளைச் சொன்னார் என்பதற்காகவே அவர் சொன்னதை வழிபடுகிறோம் என்று சொல்கிறார்கள். புத்தமதத்தவர்களும் கடவுள் ஏது? என்று சொன்ன புத்தரைத் தான் அதாவது புத்தியைத் தான் வணங்கி வழிபடுகிறார்கள்.

வழிபாட்டு முறைகளும் பல!

கடவுளுக்கு வழிபாட்டு முறை ஏது? இந்து மதத்தான் ஆடு, மாடு, பன்றிகளை வெட்டிக் கடவுளுக்குப் பூசை செய்தால் தான் வழிபாடு என்கிறான்! முஸ்லீமோ பன்றியைத் தொட்டால் பாவம் என்கிறான். கிருஸ்துவன் ஞாயிற்றுக் கிழமையில் வேலை செய்தால் பாவம் என்கிறான். அன்றைக்குத் தான் கடவுளை வழிபட வேண்டும் என்கிறான். எதைத்தான் கடவுள் வழிபாட்டு முறை என்பது?

அறிவு வழிபாடு:

நமது சுயமரியாதை முறை அறிவு வழிபாடு என்பது தான். அது தான் கடவுள் வழிபாடு என்று வழிபட வேண்டுமே தவிர கல்லை வழிபடுவது கடவுள் வழிபாடு ஆகுமா?

-------------பெரியார் ஈ.வெ.ரா. -- நூல்: "வாழ்க்கைத்துணை நலம்" பக்கம் 28-29

0 comments: