Search This Blog

6.8.08

"சிவபெருமானின்" முட்டாள்தனம்!
கடவுள்களை முட்டாளாக்குபவர் யார்?

"சிவபெருமானின்" முட்டாள்தனம்! நம் கடவுள்களைப் போல முட்டாள்களையும், அயோக்கியர்களையும் மனித ஜென்மங்களில் கூட காண்பது அதிசயமாக இருக்கின்றது. ஆனால் கடவுள் என்பவர் அப்படி முட்டாளாகவும், அயோக்கியனாகவும் இருக்க முடியாது என்பது உண்மையான யோக்கியமான கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாகவே இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

மற்றபடி கடவுள்களை சிருஷ்டித்து, அவர்களை அயோக்கியர்களாக, மடையர்களாகக் கற்பித்து, சாஸ்திரபுராணம், இதிகாசங்கள் ஏற்படுத்தியவர்கள் தான் முட்டாள்களாக அயோக்கியர்களாக இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன்.மக்களில் இந்த முட்டாள்தனமும், அயோக்கியத்தனமும் சில மதவாதிகள் இடத்தில் தான் இருக்கிறதாகக் காணப்படுகிறதே ஒழிய எல்லா மக்களிடமும் இருந்ததாகக் காண முடியவில்லை. உண்மையாகவே நம் நாட்டு முன்னேற்றம் இந்த மடையர்களாலும், அயோக்கியர்களாலுமே மிக மிக தடைப்பட்டு விட்டது என்று சொல்லலாம்! உலகத்தில் இன்று எவ்வளவோ அதிசயங்கள், அற்புதங்கள் விஞ்ஞான அறிவால் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளை நாம் நம் பஞ்சேந்திரியங்களாலும் அனுபவிக்கிறோம்.அப்படிப்பட்ட அதிசயங்கள், கண்டுபிடிப்புகள் நம் நாட்டவர்களால் அல்லது நம் நாட்டில் ஏதும் நடைப்பெற்றதாகக் காணமுடியவில்லை. காரணம் நம் மதம், நம் கடவுள்கள், நம் மதஆதாரங்கள், நம் கடவுள் செயல்கள் நம் தத்துவ ஆராய்ச்சிகள் முதலானவைகளேயாகும்.நம் நாட்டில் நல்ல வைத்திய முறை இல்லை. 1000 –க்கணக்கான ஆண்டுகளுக்கு முன் போகர், அகஸ்தியர், சித்தர்கள், தன்வந்திரி முதலான பல அதுவும் புராண இதிகாச காலத்திற்கு முந்திய சில அதிசய மனிதர்கள் பேரால் ஏடுகளில் கர்ண பரம்பரையில் இருந்து வரும் சில முறைகள் தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முறை எதுவும் எளிதில் காண முடியவில்லை.ஏனெனில் "மக்களுக்கு வரும் நோய்கள் கடவுள்களால் ஏற்பட்டவைகளாகும்" என்பதும், அவர்களுக்கு அந்நோய் வரக் காரணங்கள் மக்களின் முற்பிறப்பு வினைப்பயனால் உண்டானவை" என்பதும் நம் அறிஞர்களின் முடிவு.

உதாரணமாக ஜோசியத்தில் இந்த மனிதனுக்கு இன்ன வயதில் இன்ன நோய் வரும், அதற்கு இன்ன பிராயச்சித்தம், இன்ன சாந்தி, இன்ன அருச்சனை, இன்ன ஸ்தல யாத்திரை, இன்ன தீர்த்தஸ்நானம் செய்தால் நோய் தீரும் என்பதாக நந்திதேவர் நாரதமுனிக்குச் சொன்னார் என்று சோதிடன் சொல்லிவிடுகிறான். உடனே நோயாளியை மந்திரவாதி, அர்ச்சகன், ஸ்தல யாத்திரை, தரகர், சாமியாடிகள் சூழ்ந்து கொள்கிறார்கள். இதனால் மருந்து சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கவோ, செய்யவோ வைத்தியம் செய்யவோ தூண்டுதல் ஏற்படுவதில்லை.அதனாலேயே "ஜோசியன், மந்திரவாதி, சாமியாடி (சாமி பிடித்தவன்) அர்ச்சகன் வைத்தியன், ஆகிய அய்வரும் பித்தலாட்டம் வாழ்வு என்றும்,ஒரு மரத்தின் வெவ்வேறு கிளையில் காய்த்த காய்கள்" என்றும் பெரியவர்கள் சொல்லுவது வழக்கம்.

இப்படியாக ஏற்பட்ட கற்பனைகளுக்கு ஏற்பத்தான் கோயில், குளம், மூர்த்திதீர்த்தம், ஸ்தலம் முதலியவைகள் உண்டாக்கப்பட்டும் இருக்கின்றன.இந்தக் காலத்தில் நோய்களுக்கு சாந்தி செய்வதும், தீர்த்தமாடுவதும், ஸ்தல யாத்திரை செய்வதும், அரசர், ஜமீன், மிராசு, வியாபாரி முதலிய செல்வர்களும் பி.ஏ., எம்.ஏ., சையன்ஸ், மெடிக்கல் துறை நிபுணர்கள் உள்பட கற்ற அறிஞர்கள் என்பவர்களும் இவைகளுக்கு அடிப்பட்டு நடந்து வருகிறார்கள். இந்தப் புரட்டும், முட்டாள்தனமும் ஆன காரியங்கள் உடல் நோய்களுக்கு மாத்திரமில்லாமல், மக்களின் ஒழுக்கத்திற்கும், நடத்தைக்கும்கூட சம்பந்தப்படுத்தி ஒழுக்கம் கெட்ட யோக்ககியமும், நாணயமும் அற்ற, தீய வஞ்சகக் காரியங்களுக்கும் பரிகாரமாக மூர்த்தி தீர்த்த ஸ்தலங்ககளை கற்பித்து மக்கள் ஒழுக்கத்தை பாழாக்கி இருக்கிறார்கள்.

உதாரணம் பாருங்கள்:

சைவ சமயிகளுக்கு அருணாசலபுராணம் என்பது மிகவும் உவப்பானது. அந்தப் புராணத்தை ஆதாரமாகக் கொண்டதுதான் திருவண்ணாமலை நாதர், கார்த்திகை தீபம் முதலியனைளாகும். இந்த கோயில் முதலியவைகளுக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள் உண்டு. கோடிக்கணக்கான பக்தர்கள் உண்டு. பூஜை, திருவிழா, நாள், நட்சத்திரம் ஆகியவை ஏராளமாக உண்டு. அவைகளுக்கு ஆக ஆண்டுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்து லட்சக்கணக்காகப் பணம் செலவிடுவதுண்டு.அந்த ஸ்தல விசேஷத்தைப் பார்த்தால் அது எவ்வளவு மோசமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். அருணாசல புராணம் தீர்த்தச் சுருக்கம் - 13 –ம் பாட்டு:

"தென்திசை தரும தீர்த்தக்
குளத்திற் செரிந்து மூழ்கில்
பொன்திகழ் வடிவமாகும்
உடற்பிணி பொடி பட்டோடும்."

அதாவது "திருவண்ணாமலைக்கு தெற்கே "யமதீர்த்தம்" என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. அதில் முழுகினால் உடல் பொன்னிறமான வடிவினதாகும். உடலில் உள்ள நோய்கள் எல்லாம் பொடிப் பொடியாகி பறந்து போகும்" என்பது இதன் பொருளாகும்.

ஒரு குளத்தில் நீராடினால் சொறி பிடித்த உடல் பொன்னிறமாகி நோய் கொண்ட உடல் நலமாகி விடுகிறது என்று, கடவுள் பேரில் - ஸ்தலத்தின் பேரில் - குளத்தின் பேரில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது எவ்வளவு முட்டாள்தனமும், அயோக்கியத்தனமுமான காரியம் என்பதை ஆஸ்திகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு அழுக்குப் பிடித்த, அதுவும் புழுவும், கொசுவும் நிறைந்த நாற்றமுள்ள ஆபாசக் குளத்திற்கு இந்த மாதிரியான சக்திகளைக் கற்பித்து விட்டால், இதை நம்பும் மூடர்கள் அதில் குளித்தும், அருந்தியும், அதிகமான நோயை உண்டாக்கிக் கொள்வார்களே ஒழிய, இதனால் குணமடைய முடியுமா?


இதுதான் போகட்டும் என்றால் மனிதர் தாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்கு ஆக மதவாதிகள் கற்பித்து இருக்கும் மார்க்கமானது எவ்வளவு அயோக்கியத்தனமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். தீர்த்தச் சுருக்கம் 36-ம் பாட்டு:

"காகமுன் பலி பீடத்தில்
பலிதனைக் கவரும் போதில்
ஆகமார் சிறகைக் கீழே
புடைத் தாலை யத்தினூடே
ஓகையால் நமது கோயில்
விளங்கிய தெனஉட் கொண்டு
பாகசா தனனார் வாழும்
பதியினைப் பரமன் ஈந்தான்."

இதன் பொருள் :

காக்கையானது திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள பலி பீடத்தில் வைத்திருந்த சோற்றை தின்னும் போது தன் சிறகை விரித்து அசைத்தது. அதனைக் கண்ட பரமசிவன் இந்தக் காக்கை நட்முடைய கோயிலை சுத்தம் செய்தது என மகிழ்ந்து அதற்கு உடனே தேவேந்திரன் வாழும் உலகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படி 37 –ம் பாட்டு:

"மூடிக மொன்று கோயில்
முளையினைக் கிளறும்போது
தேடரு மணி யொன்றங்கே
சிதறியோர் விளக்கிற் காட்ட
ஆடிய பெருமாள் தீபம்
அளித்ததென் றதற்கு நல்ல
வீடுயர் நெறியுங் காட்டி
விரைந்துசா லோக மீந்தார்".

இதன் பொருள்:

ஒரு பெருச்சாலியானது (மூஷிகம்) கோயிலில் வளை தோண்டும் போது அது பறித்துத் தள்ளிய மண்ணில் இருந்து ஒரு ரத்தினமானது சன்னதியில் விளக்கு போல் ஒளி மின்னியது. அதனைக் கண்ட சிவபெருமான் அந்தப் பெருச்சாளி தன் சன்னதிக்கு தீபம் போட்டது என்று கருதி மோட்ச வழியைக் காட்டி சாலோகப் பதவியைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படிச் சுருக்கம் 38 –ம் பாட்டு:

"சிலந்தி யொன் றொரு நாள் அந்தத்
திருமலை யிடத்து நூலைக்
கலந்துடன் இழைக்க, ஈது
கலைநமக் களித்த தென்று
நலத்திக ழரச னாக்கி
அதற்குநல் லறிவு நல்கி
உலர்ந்தபின் நெடிய மாயன்
உலகினை உதவினானே."

இதன் பொருள் :

திருவண்ணாமலையில் ஒருநாள் ஒரு சிலந்திப் பூச்சியானது தன் வாய் நூலால் ஒரு கூடு கட்டியது. அதனை சிவபெருமான் அச்சிலந்தியானது தனக்கு நல்ல வஸ்திரத்தை செய்து கொடுத்ததாகக் கருதி அதை ராஜாவாக்கி – நல்ல ஞானம் உண்டாக்கி – அது இறந்த பிறகு வைகுந்த லோகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

வாசகர்கள் இம்மூன்று பாட்டினையும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். காக்கை சிறகை ஆட்டினதினால் அது குப்பையைக் கூட்டி சுத்தம் செய்ததாக எவனாவது கருதுவானா? பெருச்சாளி தோண்டிய மண்ணில் ஒரு ஒளி மின்னும் கல்லு காணப்பட்டால் அதை அந்தப் பெருச்சாளி விளக்கேற்றியது என்று கருதுபவனைவிட மூடன் இருக்க முடியுமா? சிலந்திப் பூச்சி கூடு கட்டியதைக் கண்டு அது தனக்கு வேட்டி நெய்து கொடுத்ததாகக் கருதுவது கடுகளவு புத்தியுள்ளவனுக்காவது பொருந்துமா? எனவே இப்பாட்டுக்களிலிருந்து பரமசிவனை எவ்வளவு முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் புலவர்களும், மதவாதிகளும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!இவ்வளவு முட்டாள்தனமான புலவர்களும், மதவாதிகளும் எழுதும் கருத்து என்ன என்று பார்ப்போமானால், எந்த முட்டாளாவது இதை நம்பி காசு கேட்காமல் குப்பைக் கூட்டவும், விளக்கு போடவும், துணி வாங்கித் தரவும் முன்வரமாட்டானா என்பது தானே. அதற்கு ஏற்றாற் போலவே இப்படிப்பட்ட முட்டாள்தனமான கூற்றுக்களை நம்பித்தானே அநேக மூடர்களும் அங்கு விளக்குப் போடவும், குப்பைக் கூட்டவும், சாமிக்கென்று துணி வாங்கிக் கொடுக்கவும் முன் வருகிறார்கள்.இதைப் பார்க்கும் போது இதுபோன்ற புராணங்கள் எல்லாம் எவ்வளவு பித்தலாட்டமாக மூடத்தனமாக எழுதப்பட்டு இருக்க வேண்டுமென்பது விளங்கவில்லையா?

சுயநலக்காரர்களும், பித்தலாட்டக்காரர்களும் செய்யும் இப்படிப்பட்ட காரியங்களால் மக்கள் ஏமாறுவது ஒருபுறம் இருந்தாலும் இதனாலெல்லாம் தங்கள் பாவம் தீர்ந்துவிடும். தாங்கள் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் மோட்சம் கிடைத்துவிடும் என்று கருதி, தீய காரியங்களுக்குப் பயப்படாமல் மேலும் மேலும் அயோக்கியத்தனம் செய்வது ஒருபுறம் இருந்தாலும் இதனால் கடவுள்கள் எவ்வளவு மடையர்களாகவும் ஒழுக்கத்திற்கும் நல்ல குணங்களுக்கும் பொறுப்பற்றவர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள் என்பதை அறிவுள்ள மக்கள் உணர வேண்டும்.

இம்மாதிரி கடவுள்கள் முட்டாளாக ஆக்கிவிட்டு, எவனாவது இந்த முட்டாள்தனத்தை எடுத்துக் காட்டினால் "அய்யோ! கடவுளை குறை கூறுகிறானே," "மதத்தை இழிவுபடுத்துகிறானே" என்று கூக்குரலிடுவதில் அறிவுடைமை ஏது? ஆகவே மதவாதிகளும், புலவர்களும், சுயநலக்காரர்களும் செய்த காரியங்களால் தான் இன்று கடவுள்கள் சந்தி சிரிக்கப்படுகிறார்களே ஒழிய சுயமரியாதைக்காரர்களால் அல்ல என்பேன்.

----------- 09-03-1950 விடுதலை இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. நூல்: "பெரியார்களஞ்சியம்" தொகுதி:2 … பக்கம்:235 -240

1 comments:

Unknown said...

ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42)ரோமன்
கத்தோலிக்க
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும்
இவருக்கு
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது.
இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார்.
இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின்
படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள்
வரை
இந்தியாவில் தங்கி இருந்தார்.
“ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில்
நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில்
வழிபடுவது
போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள்
ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன
நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.
இதனால் அவருக்கு இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவில்
இருந்த
காலகட்டத்தில் இந்து கோவில்களுக்கு சென்று பல்வேறு சிறப்பு பூஜைகள்,
ஆராதனைகள்,
அபிஷேகங்களில் கலந்து கொண்டார்.
டெல்லி அருகே உள்ள ஹரி மந்திர் ஆசிரமம் சென்று சாமியார் தரம் தேவிடம் ஆசி
பெற்றார்.தரம் தேவ் ஜூலியாவுக்கு இந்து மத தத்துவங்கள் ஆழகாக
எடுத்துக்கூறினார். பூஜை,யாகம், அபிஷேகங்களின் மகத்துவம் பற்றி
விளக்கினார்.இதனால் ஜூலியாவுக்கு இந்து மதத்தின் மீது தீவிர பற்று
ஏற்பட்டது.
இந்து மத வழிபாடுகளில் தனக்கு பூரண மன அமைதி கிடைத்ததால் கிறிஸ்தவ
மதத்தில்
இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.
தனது வீட்டிலும் இந்து தெய்வங்களின் படத்தை வைத்து பூஜை செய்து
வருகிறார். இது
பற்றி ஜூலியா ராபர்ட்ஸ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
கூறி
இருப்பதாவது:-
எனது சொந்த நாடு ஜார் ஜியா.ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர்.
சிறுவயது
முதலே வேதாகமத்தை படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று
அவ்வப்போது
வழிபடுவேன்.
ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து
வந்தன.
கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன்.
இந்த
வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை
கண்டு
மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு
கிடைத்தது.
இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும்
போது
எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.
எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற
பிரமிப்பு
ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை
கடவுள்
பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு
பூசி
வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து
மதம் என்
வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் கூறினார்.
ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவர்கள் எதிரிப்பு
தெரிவித்துள்ளனர். பல்வேறு இணைய தளங்களில் ரசிகர்கள் அவருக்கு கண்டனம்
தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் அவரது முடிவை வரவேற்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள இந்து மத சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜன் செட்,
ஜூலியா
ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்து மதத்தில் இணைவதை மனப்பூர்வமாக
வரவேற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜூலியா ராபர்ட்ஸ் இந்து
மதத்தில் இணைந்திருப்பதால் கிறிஸ்தவ மதத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும்
என்று
இங்கிலாந்தை சேர்ந்த மெத் தடிஸ்ட் பேராலய போதகர் கிங்ஸ்டன் கூறினார்.