Search This Blog

19.12.21

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்

 

கடவுள்!

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

 


மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

 

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.

 

இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும்; இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

 

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல; நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல; நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.

 

இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!

 

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.

 

கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)

 

அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் (M.L .பிள்ளை), திரு.வி..வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.

 

மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான்.

 

சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

 

மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.

 

கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

 

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

 

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால், பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்.

 

'சாத்தான் படைத்தான்' என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.

 

இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள், ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத் தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.

 

இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ளதன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

 

பிறகுமுன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

 

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள், கருமம், மோட்சநரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், , எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.

 

இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம், இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன்.

 

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.

 

இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.

 

இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100–ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது

67-முதல் 74-வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950–ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50-ஆக ஆகிவிட்டது! இதற்குக் காரணம், 1940–ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100–க்கு 9–பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100–க்கு 50–பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

 

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும்; சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் பூணர சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

 

முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு..காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது.

 

இது தான் கடவுள் இரகசியம்.

 

               -------------------- 03.11.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

24.5.21

வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்? - பெரியார்

 

வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்?
காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே! எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும், ஆரியனும் சுரண்டப்படக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.

 

காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தேவையில்லை. நாட்டை ஆண்டு வந்த நாங்கள் வெள்ளையன் வந்தபிறகு பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைகோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, திவானாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர்.

 

பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை. ஏனெனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம். காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம். வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப் போகின்றீர்களென்று ஆரியனுக்கும் தெரியும். ஏன்? அதுபாடுபடாத கூட்டம். 'கடுகளாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல.' அணுகுண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்போழுது நீங்கள் உணரப் போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக் கூடாது என்று இந்தக் காலத்திலா சொல்லுவது? நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்துப்  பூமியைத் திருத்தி உழுது பயிரிட்டுப் பாடுபடுகின்றோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா?

 

அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது கால் வெட்டப்பட்டது. அகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள். காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்கள் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.

 

கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட் காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வேண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே, "வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகி விட்டான்" என்று! இது தானா சுயராஜ்யம்?

 

கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா?

 

பிராமணன் உயர்வானவனென்று எக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. "கடவுளாலே கொடுக்கப்பட்டது" என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

 

கம்யூனிஸ்ட் தோழர்களே! சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவு நாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டு ஆட்சி அல்ல. இந்தப் பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக் கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதுபடி நடந்தது இந்த ஆட்சி பிராமணன் உடலால் உழைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜூ (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான். இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான் இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான். மற்றப் பேர்களெல்லாம் தந்திரம் இதை இரண்டு வருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன். அம்பேத்கரும், ஜின்னாவும் இப்பொழுது சொல்லுகிறார்கள். இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம் இதற்கு ஒரு உதாரணம் திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார், பி.எஸ். சிவசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் "நாம் செய்து கொண்ட உடன்படிக்கை மீறுகின்றாயே" என வெள்ளையனைக் கேட்டார்கள். இதைத்தான் நாம் உடைக்க வேண்டும்.

 

வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது, மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம். சண்டை நீங்கியவுடன் அவரவர்கள் நாட்டை அவரவர் நாட்டை அவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கிறான். காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா? நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமே!

 

பெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையுடைய ஒரு இனம் அதுவும் நூற்றுக்கு 60-க்கு மேல் மெஜாரிட்டியாகவும் இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிற தென்றால் இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை? நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்? இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும் ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

 

                                      ---------------------- கும்பகோணத்தில் 18.08.1946-ஆம் தேதி காங்கேயன் பார்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் .வெ.ரா. உரை   "குடிஅரசு" தலையங்கம், 09.10.1946

 

 

பறைகள், தப்பட்டைகள் அடிக்கும் இழிவு நீங்க வழி என்ன?

மக்களுக்கு அரசியல் சுதந்திர உணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாய் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு வேண்டாம் என்று கருதத்தகுந்த அவசியம் எப்படி ஏற்பட்டதோ, அதேபோல் சமுதாய உணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாய் சமுதாய சுயமரியாதை ஏற்பட்டு தாழ்ந்த ஜாதித் தன்மையை வெறுத்துத் தங்களுக்கு இந்து மதமே வேண்டாம் என்று சொல்லும்படியான ஆத்திரம் வந்துவிட்டது. மானமுள்ள எவருக்கும் இந்த எண்ணம் வந்துதான் தீரும். இதற்கு யாரும் வருத்தப்பட்டுப் பயனில்லை அவனவன் தீண்டாத ஜாதியாக பஞ்சமனாக இருந்தால்தான் அவனவனுக்கு முஸ்லிமாக, கிருஸ்தவனாக ஆகிவிட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பது விளங்கும். எவனோ பறையன் - சக்கிலியாக உதைவாங்கிக் கொண்டு, கக்கூஸ் (மலம்) எடுத்துக் கொண்டு தீண்டத்தகாதவனாக இருக்கும் போது எவனோ ஒருவன் வந்து, 'நீ முஸ்லிமாகாதே, கிறிஸ்தவனாகாதே' என்று உபதேசம் செய்வது கொஞ்சம் கூட தகுதியும் யேர்ககியமுமான காரியமாகாது.

 

பறையன், சங்கிலியன், பள்ளன், புலையன், செரமன், குறவன், நாவிதன் என்று பெயர் சொல்லி இழிவாய் அழைத்து தீண்டாதவர்கள், புழங்காதவர்கள் என்று இழிவுபடுத்துவது இன்றா? நேற்றா? இராமாயண - பாரத காலம் தொட்டு, வேத சாஸ்திர புராண காலம் தொட்டு, பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறதென்றால் இதற்கு பரிகாரம் யார் செய்தார்கள்? எந்த அரசாங்கம் செய்தது? எந்தக் கட்சியார் செய்கிறார்கள்?

 

நேற்று காலம் சென்ற மாபெரும் தலைவர்களான விஜயராகவாச்சாரியார், பண்டித மாளவியா இவர்கள் சங்கதி யாருக்கும் தெரியாதா? இவர்கள் வருணாசிரம தர்மப் பிரசாரகர்களாகத் தானே செத்தார்கள்? அவர்கள் பார்ப்பனர்களானதால் அவர்களைப் பெரிய தேசியவாதிகள் என்று பார்ப்பனர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பைத்தியக்காரர்களாகிய நம்மவர்கள் கூலிக்கோ, முட்டாள்தனத்திற்கோ, கூடவே ஒத்துபாடுகிறார்கள்.

 

காந்தியார் தானாகட்டும் இந்தக் கீழ்ஜாதி தன்மைக்குப் பரிகாரமாக என்ன செய்தார்? காங்கிரஸ் தானாகட்டும் என்ன செய்தது? தீண்டாமை விலக்கு என்னும் பித்தலாட்டப் பெயரால் ஏராளமான பணம் வசூல் செய்து கீழ்ஜாதி என்பதில் உள்ள மானமற்ற, உணர்ச்சியற்ற மக்களைக் கூலிக்கமர்த்தி, கீழ்ஜாதி நிலைக்கும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதல்லாமல் செய்யும் காரியமென்ன? என் மீது கோபிப்பதில் பயனில்லை. கீழ்ஜாதித் தன்மையைப் போக்க இன்று இஸ்லாம் - கிருஸ்து மார்க்கத்தில் சேருவதை தவிர இன்றைய நிலையில் வேறு மார்க்கம் இல்லை என்பதைப் பந்தயம் கட்டிக் கூறுவேன்.

 

காந்தியார் தீண்டாமையில்லை என்கிறாரே தவிர, கீழ்ஜாதி மேல்ஜாதி இல்லை என்று ஒரு நாளும் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக "வருண தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இராமராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்; ஸ்தாபிப்பதற்கே உயிர் வாழ்கிறேன்; அதற்காகவே சுயராஜ்யம்" என்கிறார். இதை எந்தக் காங்கிரஸ்காராவது மறுக்க முடியுமா?

 

காங்கிரஸ் தானாகட்டும், ஜாதி ஒழிப்புத் திட்டம் இருக்கிறதா? தீண்டாமை வேறு; ஜாதி வேறு; இதையறியாமல் காங்கிரசிலிருக்கும் பல சூத்திர - பஞ்சம தோழர்கள் என்பவர்கள் ஏமாந்து போய் நம்மீது கோபிக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறார்கள் இந்துமதம் உள்ளவரை ஜாதி அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பிரிவு தன்மை போகவே போகாது. கீதை, இராமாயணம், மனுதர்மம் முதலியவை பொசுக்கப்பட்டால் ஒழிய, ஜாதிப்பாகுபாடுத்தன்மை போகவே போகாது என்பது உறுதி. அதனால் தான் ஜாக்கிரதையாக காந்தியாரும் காங்கிரசும் ஜாதியைப் பற்றிப் பேசுவது கிடையாது என்பேன்.

 

முஸ்லிமாகவோ, கிருஸ்தவனாகவோ ஆவதற்கு இஷ்டமில்லாதவன் சூத்திரனாகவோ, பஞ்சமனாகவோ இருக்க இஷ்டமுள்ளவன் பேசாமல் இருந்து தொலையட்டுமே! அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அப்படிப்பட்டவன் மற்றவர்களை ஏன் தடுக்க வேண்டும்? ஏன் குறைகூற வேண்டும்? என்று கேட்கிறேன்.

 

காங்கிரஸ்காரர் சுயராஜ்யத்தைப் பொருத்தவரை வெள்ளையனை விரட்டுகிறவரை, வேலை பார்த்துக் கொண்டு போக வேண்டுமே தவிர, இந்து மதத்தைக் காப்பாற்றவும், சூத்திரன் பஞ்சமன் ஜாதியை, பட்டத்தைக் காப்பாற்றவும் வேறு மதத்திற்குப் போவதைத் தடுக்கவும் ஏன் வரவேண்டும்? இதிலிருந்தே தெரியவில்லையா காங்கிரஸ் ஜாதி மத ஸ்தாபனம்; இந்து மதத்தை ஜாதி வர்ணத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனம்" என்பது? ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ் ஓர் இந்து ஸ்தாபனம் என்று சொல்லுவதில் என்ன குற்றம் காணமுடியும்?

 

டாக்டர் அம்பேத்கார், "நான் இந்துவல்ல, என்னைத் தலைவனாக ஒப்புக் கொண்டு இருக்கும் மக்கள் இந்துவல்ல. எனக்கு எந்த மதத்தையும் தழுவ உரிமையுண்டு" என்று சொன்னால் காங்கிரஸ்காரன் ஏன் அதை மறுக்க வேண்டும்? அதுவும் அம்பேத்கரையும் அவரது சமூகத்தாரையும் பறையர், சக்கிலி, பஞ்சமன் என்று கருதிக் கொண்டு தன்னையும் சூத்திரன் என்பதைச் சம்மதித்துக் கொண்டு இருக்கும் ஒரு காங்கிரஸ்காரன் ஏன் மறுக்க வேண்டும்?

 

திராவிடர் கழகமோ, ஷெட்யூல் வகுப்பு கழகமோ ஜாதியை, வர்ணமுறையை, ஒழிப்பதைத் தங்கள் சுயராஜ்யத் திட்டமாகக் கொண்டிருப்பதால் அதைப்பற்றிப் பேசவும் போராடவும் வேண்டி இருக்கிறதே தவிர வேறு என்ன? திராவிடர் காங்கிரஸ் தோழருக்குக் கவலை இருந்தால் ஒரு அறிக்கை வெளியிடட்டுமே, பார்க்கிறேன். அதாவது:

 

'தோழர் அவினாசிலிங்கம், பக்தவச்சலம், குமாரசாமி ராஜா, காமராஜர் முதலியவர்கள் சேர்ந்து "காங்கிரஸ் பெறும் சுயராஜ்யத்தில் சூத்திரன் இருக்கமாட்டான். பஞ்சமன் இருக்க மாட்டான். இது சம்பந்தமான மதம் ஆதாரம் இருக்காது. ஒரு ஜாதி, ஒரு கடவுள் தான் இருக்கும்' என்று அறிக்கை விடட்டுமே பார்ப்போம்! அதாவது ரோஷமிருக்கிறவர்கள் ஆத்திரமிருக்கிறவர்கள் காந்தியாரை, ராஜகோபாலாச்சாரியாரைப் பிரகாசம் காருவை எழுதிக் கேட்கட்டுமே? அதை விட்டுவிட்டுக் காங்கிரஸ் திராவிடனையும், ஷெட்யூல் வகுப்பானையும், சூத்திரன் அல்ல, பஞ்சமன் அல்ல என்று செய்யப்பாடுபடுகிற எங்களையா அடிப்பது, கோபிப்பது? இதைவிட நாங்கள் வேறு என்ன வேலை பார்ப்பது? கொடி தூக்கி ஜே போடுவதா? அல்லது திராவிடனையே உதைக்கவும், அடிக்கவும், வையவும் கூலிபெறுவதா? அந்த வேலைக்கு ஒரு பகுதி போகட்டும். மானமுள்ள திராவிடர்கள் இழிவை நீக்கப் பாடுபடட்டும்.

 

காங்கிரஸ்காரர்கள் உண்மையாய் வெள்ளையனை முடுக்குவதானால் அந்த வேலைக்கு நாங்கள் சிறிதும் தடையாக இல்லை. வெள்ளையன் வேண்டாம் என்றே சொல்லிவிட்டோம். எங்கள் திட்டத்தில் அதுவே முதல் காரியமாகும்.

 

ஆகையால் அதில் அபிப்பிராய பேதம் இல்லை. ஆதலால் ஷெட்யூல் வகுப்பார் இஸ்லாத்தையோ, கிருஸ்து மதத்தையோ தழுவுவதைப் பற்றி யாரும் வருந்த வேண்டியதில்லை. அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை யாரும் காட்டவும் இல்லை; அவர்கள் ஸ்தானம் அவர்களுடைய பஞ்சமத் தன்மையை நீக்கிக் கொள்ளவே இருக்கிறதே தவிர, சட்டத்திற்கும் மந்திரி வேலைக்கும் இல்லை. அது சிலருக்குத்தான் கிடைக்கும் என்பதை உணர வேண்டுகிறேன்.

 

இந்த நாட்டில் இந்து முஸ்லீம் கலகம் ஏற்படுமேயானால் அடுத்தாற் போல் நடக்கும் காரியம் அதுதான். அதாவது மக்கள் மதம் மாற வேண்டியதுதான். அதைத் துரிதப்படுத்தத்தான் கலவரம் ஏற்படுகிறது என்று அர்த்தம். எப்படியெனில் இந்து - முஸ்லீம் கலவரத்தால் ஷெட்யூல் வகுப்பார்கள், மந்திரி, சட்டசபை மெம்பர், மக்கள் பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருஸ்து யாவரும் ஒரே மதம் ஆய்விடுவார்கள். இது உறுதி. ஷெட்யூல் வகுப்பு மந்திரி, காரியதரிசி, சட்டசபை மெம்பர்கள் தவிர மற்றெல்லோரும் இஸ்லாம் ஆகப்போவது உறுதி.

 

(பெரியார் பேசி உட்கார்ந்தவுடன் சில ஷெட்யூல் வகுப்புத் தோழர்கள் தப்பட்டைகள், தாசாக்கள், மத்தளங்கள் முதலிய பல திறப்பட்ட தோற்கருவிகளுடன் சுமார் 100-பேர்கள் திடீரென்று மேடை அருகில் வந்தார்கள். வந்தவுடன் கூட்டத்தில் தடபுடல் ஏற்பட்டது. பெரியார் அமைதியாயிருக்கும்படி வேண்டி அமைதி ஏற்படுத்திய பிறகு பெரியாருக்கு முன்னிலையிலேயே அவைகளைப் போட்டுக் குவித்துவிட்டு ஒருவர் மேடை மீது ஏறி நின்று,

 

"நாங்கள் பறை அடிப்பதால்தானே பறையர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இனிமேல் பறை அடிப்பதில்லை. சாவு வீட்டிற்கும், வாழ்வு வீட்டிற்கும், சாமி வீட்டிற்கும் கண்டிப்பாகப் பறை அடிப்பதில்லை என்று இப்போது உறுதி செய்து கொண்டோம். அதற்காக அந்தக் கருவியை இதோ கொளுத்துகிறோம்" என்று சொல்லி 4, 5-புட்டி மண்ணெண்ணெயை ஊற்றி நெருப்பு வைத்தார். நெருப்பு திகு திகு என்று எரிந்தது. யாவரும் ஆரவரித்தார்கள். "டாக்டர் அம்பேத்கர் அனுமதி வந்ததும் நாங்கள் பெண்டு பிள்ளைகளுடன் மதம் மாறுவோம்" என்று ஒலித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள்.

 

- (22.11.1946-ல் வாணியம்பாடியில் பெரியார் .வெ.ரா பேச்சு ('விடுதலை', 23.11.1946)