Search This Blog

Showing posts with label கலைவாணர். Show all posts
Showing posts with label கலைவாணர். Show all posts

21.5.13

கலைவாணர் போட்ட மந்திரம்!



எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பிலையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள்கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்


நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

30.11.12

தந்தை பெரியாரும் - கலைவாணர் என்,எஸ்.கே அவர்களும்

கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30 

தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும்

தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள், தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் தன்மானம் பெற்று உரிமை பெற வேண்டும் என்று விரும்பினார். தகுதி இருந்து, திறமை இருந்து, ஆற்றல் இருந்து தன்மானத்தை இழக்காதவர்களை எல்லாம் தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார், கலைத் துறையிலும்  பெரியாருடைய கண் ணோட்டம் சுயமரியாதைக் கண் ணோட்டமாக இருந்தது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குத் தந்தை பெரியார் ஆதரவு காட்டினார்.
கலைவாணர் திரைப்படம், நாடகம் வாயிலாகச் சுயமரியாதைக் கருத்து களை நாட்டில் உலவ விட்ட நாகரிகக் கோமாளியாக விளங்கினார். அவரே அதனை நல்லதம்பி திரைப்படத்தில் நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா, ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி - நல்ல அழகான ஜதை யோடு வந்தானய்யா! மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா! முன்குடுமி சீவிக்கிட்டு வந்தானய்யா!  ராட்டினம் போல் சுழன்று வந்தானய்யா! - நம்ம ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்த்து வந்தானய்யா! என்று பாடினார்.

30.8.1957-இல் நம் நாடு இதழில் தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடாக விளங்கிய இதழில் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கோட்பாட்டின் வழி நின்றவர்தாம் என்பதை அவர் மறைந்த போது வெளியிட்ட இரங்கல் செய்தி யில் பதிவு செய்திருப்பது கலைவாணர் பகுத்தறிவு நெறி, பகுத்தறிவு இயக்க வழி நின்றவர் என்று காட்டும்.

தமிழகம், தன்னைச் சிரிக்க வைத்தே சிந்திக்கச் செய்த பகுத்தறிவுக் கலைஞனை இழந்து தவிக்கிறது. அன்பும், பண்பும் நிறைந்த கள்ளமில்லா வெள்ளை உள்ளமும், எப்போதும் இதழ்க்கடையில் தங்கும் புன்னகையும், அகமும் முகமும் மலர்ந்து தரும் அன்புரையும் நகைச்சுவையோடு இணைந்த  நற்கருத்தும் இனி நமக்கு எங்குக் கிடைக்கும்? கலைவாணர் மறைந்துவிட்டார். ஆனால் கலைத் துறை மூலம் பகுத்தறிவு வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணி, பொது வாழ்வுத் துறையில் அவர் காட்டிய அக்கறை, ஏழை எளிய மக்கள் மீது அவர் கொண்ட அன்பு, அவர்களின் ஈடேற்றத்திற்காக - ஈட்டிய பொருளை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல் தன்மை - திரைப்பட உலகிற்கு அவர் செய்துள்ள சேவை முதலியவற்றால் அவர். தமிழ் நாட்டில் பெற்றுள்ள புகழ், தென்னவர் உள்ளத்தில் பெற்றுள்ள இடம் என்றும் மறையாது - மங்காது
கலைவாணர் திரைப்படத்தில் சிரிப்பு நடிகர். ஆனால் அவரிடம் ஆழ்ந்து ஊறித் திளைத்தது தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு உணர்ச்சி. எனவே அதைச் சுட்டிக் காட்டாமல் எவரும் கலைவாணர் குறித்துப் பேசினால் பேசாமல் விட்டு விட முடியாது என்பதற்கு சென்னை - மெரீனா கடற்கரையில் 6.9.1957ஆம் நாள் நடைபெற்ற கலைவாணரின் இரங்கல் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சை முதலில் தொட்டுக் காட்டுவோம். ஏனென்றால் இப்படி ஒரு பகுத்தறிவுக் கலைஞர் கலைவாணர் இருக்கிறார் என்று தந்தை பெரியாருக்கு முதலில் எடுத்துக் கூறித் தந்தை பெரியாரை முதலில் பாராட்டச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா இரங்கலுரையில் கூறுகிறார்:

கலைவாணர் மக்களின் உள்ளத்தைத் தொட்டுச் சிரிக்க வைத்தவர் உல கிலேயே இவர் ஒருவர் தாம் மக்களிடத் திலே தொடர்பு கொண்டு, மக்களுக்காக உழைத்த கலைஞராவார். இவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் நாட்டிலே இருப்பது மிக அபூர்வம்.

மக்களின் மன அழுக்கு நீங்க, மூடநம்பிக்கை அகல, குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஒழிய, தாழ்ந்த மக்கள் தன்னுணர்ச்சி பெற இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு  நடிகனும் கலை வாணரைப் போல் பணியாற்ற முடிந்த தில்லை. இந்த நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை. (நம் நாடு 7.9.1957).

பெரியார் வழியில் பகுத்தறிவுப் பாதையில் தனி வாழ்க்கையும், கலை வாழ்க்கையும் மேற்கொண்ட கலைவாணர் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில் தூங்காமை, கல்வி துணிவுடைமை என்ற நீங்காக் குணம் படைத்த ஆங்காரமான அறிவுத் தந்தை பெரியார் பிறந்த நாடு என்றே குறிப்பிட்டுச் சொன்னார் என்றால் அவர் உள்ளத்தில் பெரியார் உரம் எந்த அளவிற்கு ஊறித் திளைத் திருத்தது என்பது விளங்கும்.

கலைவாணர் கதர் கட்டினாலும், காந்தியைப் பெரிதும் போற்றினாலும் தன்னை ஒரு சுயமரியாதைக்காரன் என்றே கூறிக் கொண்டார். இதற்குச் சான்று வேண்டுமாயின் 1952 தென்றல் ஏட்டின் பொங்கல் மலருக்கு அளித்த நேர்முகம் இது.

ஆதிமுதல் குடிஅரசு, கிருஷ்ண சாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அப்போதுநான் சிறுவன். நாடகக் கம்பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும், நாஸ் திகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நானாகத் தெரிந்து கொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன். சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு

மாணிக்க வாசகர்

கலைவாணர் நடித்த மாணிக்க வாசகர் எனும் திரைப்படம்தான் அண்ணாவை ஈர்த்தது மட்டுமல்லாமல் பெரியாரிடம் கலைவாணரை அண்ணா அழைத்துச் செல்லவும், பெரியாரின் பாராட்டைக் கலைவாணர் நேரில் பெறவும் துணை புரிந்தது.

1939இல் வெளிவந்த திரைப்படம் இசை மேதை எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த மாணிக்கவாசகர் எனும் படம். அதில் மேஸ்திரி வெங்குப் பிள்ளையாகக் கிருஷ்ணன் நடித்தார்.

அந்தப் படத்தில் மன்னர் எதையும் தானே சொந்தமாகச் சிந்தித்து முடிவெ டுப்பதில்லை. அரச குடும்பத்துப் புரோகிதர் சொல்வதைத்தான் அவர் கேட்கிறவர். இதைக் குறித்து அரண் மனை நிருவாகி வெங்குப் பிள்ளையிடம் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கப் புரோகிதர் அவர்களைக் கடந்து போவார்.
நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று யூகித்த புரோகிதர், உச்சிக்குடுமி வைத்துப் பூணூல் அணிந்தவர் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பார். அதைப் பார்த்துவிட்ட வெங்குப் பிள்ளை பாத்திரமேற்ற கலைவாணர் தலையை ஆட்டிக் கொண்டு என் கையில் இருக்கும் இது என்ன தெரியுமா? எழுதுகோல்! தர்ப்பைப் புல் இல்லை. தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு நினைவு வைச்சுக்க ஜாக்கிரதை என்று புரோகிதர் காதில் விழும்படி உரக்கக் கூறுவார்.

அண்ணாவின் வியப்பு
மாணிக்கவாசகர் படத்தைத் தம் நண்பர்களுடன் பார்த்து விட்டு அண்ணா வியந்து போனார். நாம் இத்தனை வருடங்களாகச் சொல்ல முயற்சி செய்ததை ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டாரே, இவர் என்று தந்தை பெரியாரிடம் அண்ணா சொல்ல, அதைக் கேள்விப்பட்ட பெரியார் கலைவாணரை நேரில் பார்க்க விரும்பினார்.

பெரியார் பாராட்டு

அண்ணா, அவரைப் பெரியாரிடம் அழைத்துக் கொண்டு போனார். பெரியார் பாராட்ட, பெரியார் அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில் கிருஷ்ணன் பெரியாருக்கு மாலை அணிவித்து வணங்கினார். தாம் சொல்ல விரும்பும் கருத்துக்கள் கிருஷ்ணனுக்குப் பிடித்துப் போனவையாக இருந்தது குறித்து அறிந்த பெரியார் மகிழ்ந்தார்.

கலைவாணரைப் பெரியார் பாராட்டிப் பேசிய பேச்சுக்கள் பலவாகும். 31.7.1944இல் சென்னையில் சந்திரோதயம் நாடகத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார்.

நாடகத்திற்குச் சென்னை மாநில மாஜிஸ்ட்ரேட், கலைவாணர், தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசிகர் பல திரைப்பட நடிகர்கள் உட்பட சுமார் 4000 பேர் வரையில் வந்திருந்தனர்.

மண்டப ஒலி பெருக்கி பெரிதாய் வைத்து மேடை நடிப்பு, பேச்சுக்கள் ஆகியன ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் நடிப்பின் கடைசிப் பகுதியில் சொற்பொழிவாற்றினார்.

தாய்மார்களே! தோழர்களே! நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் முதலாகிய திராவிடக் கலைவாணர்களே! கலா நிபுணர்களே! உங்கள் மத்தியில் பேசக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் தோழர் அண்ணாதுரை அவர்களால் துவக்கப்பட்டு, அவரே தலைமை வகித்துச் சுயமரியாதை இயக்கத்தார் ஆதரவில் நடைபெற்ற சந்திரோதய நாடகத்தைக் கண்டு களித்தீர்கள். நீங்கள் 4000 பேர் கண்டும் கேட்டும் உணர்ச்சி பெற்று அனுபவித்த மகிழ்ச்சி இன்பம் எவ்வளவோ அவ்வளவு இன்பத்தைவிட பெரும் பாகத்தை நான் ஒருவன் அனுபவித் தேன். திராவிட கலைவாணர்களாகிய தோழர்கள் என்.எஸ். கிருஷ்ணன் தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசகர் முதலியோர் முன்பு ஒருவர் நடிப்பது என்றால் அதுவே ஒரு அதிசயிக்கத் தகுந்த காரியமாகும். அப்படி இருந்தும் நீங்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை மிக்க மகிழ்ச்சியோடு சுவைத்ததை நான் கண்டு வந்தேன் என்று தொடங்கினார்.

அடுத்து அவர் நாடகத் துறையில் இன்று சில திராவிடர்கள் நடந்து வரும் மானங்கெட்ட தன்மையான நடிப்புகளை மாற்றி திராவிடர் நலனுக்கு ஏற்ற வண்ணம் நடித்துக் காட்டி அதை நாட்டில் பரவச் செய்ய நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மங்கள கான சபை என்னும் ஒரு நடிகக் குழுவை தனதாக்கி அதன் செயலை ஏற்று நடத்தப் போகிறார்கள் என்று கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நானறிந்த வரை சுமார் 10,15 வருட காலமாகவே திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து திராவிடத் தொண்டு ஆற்றுவதானது உண்மைத் திராவிடன் ஒவ்வொருவரும் அவருக்குக் கடமைப்பட்ட வனாக ஆக வேண்டியதாகும் என்பதோடு மற்ற நடிகர்கள் வெட்கப்பட வேண்டியது மாகும் என்று கூறியவர் தோழர் என்.எஸ். கிருஷ்ணன் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை அடைந்து விட்டார்கள் என்று திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற வேண்டியதாகும் என்று பாராட்டினார்.

அதோடு பெரியார் அந்தக் கூட்டத்தில் சில சிந்தனை விதைகளை வழக்கம் போல விதைத்தார்.

கலையோடு மனிதனுக்கு அறிவு, மானம், இனப் பற்று ஆகியவை இருக்க வேண்டாமா? பணமே தானா பெரிது? என்று கேட்டதோடு தாங்கள் பெற்ற கலை வளத்தால் பெற்ற செல்வத்தை உண்மைத் திராவிடன் திராவிடனுக்கும் பயன்படுத்தாவிட்டாலும் திராவிடர் கேட்டிற்குப் பயன் படுத்தாமலாவது இருக்க வேண்டாமா? அப்படித் திராவிடருக்குக் கேடாகப் பயன்படுத்தியவர்களைப் பயன்படுத்துபவர்களை எப்படித் திராவிடர் என்று நம்மால் சொல்ல முடியும் என்று கேட்டார் பெரியார்.

சற்றுக் கடுமையாகவே, இவர்தான் பெரியார் என்று சொல்லும் வகையில் பொருத்தமாக, அப்பப்பா இந்த சினிமாக்களையும் புராண நாடகங்களையும், பாட்டு பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டால், நம் கள், சாராயக் கடைகளையும், தாசிவேசிகள் குச்சுக்காரிகள் வீடும், மார்வாடி செட்டி கொள்ளைகளும் ஆயிரம் பங்கு மேலென்று சொல்லுவேனே சுயமரியாதைக்காரர்களின் காரியம் போதிய வெற்றி பெறாமல் தடைப்படுவதற்குக் காரணமே இந்த முக்கலையும், முக்கலைவாணர்களும், முக் கலை ரசிகர்கள் என்று சொல்லப்படுபவர்களுமாவார்கள் என்று கடுமையாகச் சாடினார்.

அடுத்துப் பேசிய கலைவாணர் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது சரியானதே என்றார் பெரியாரவர்கள் சொன்னதெல்லாம் சரியானதே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு என்றார். பெரியார் அவர்கள் இந்த மாதிரி வெகு நாளைக்கு முன்னமே எங்களுக்குச் சொல்லி, எங்களை மிரட்டிக் கண்டித்திருக்க வேண்டும். இப்பொழுது துணிந்து சொன்னதற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அண்ணாதுரை அவர்கள் எங்கள் விரோதம் கூடாது என்பதற்கு ஆக எங்களைப் பாராட்டியும் பெரியார் சொன்னதைக் கொஞ்சம் பூசிமெழுகியும் பேசினார். அப்படி ஒருவர், இப்படியும் ஒருவர் இருக்க வேண்டியதுதான் பெரியார் எங்கள் தலைவர்; அண்ணாதுரை என் குரு, தந்தை, சகோதரர் ஆவார். நாங்கள் பெரியார் தொண் டுக்கு உதவியளிக்க வேண்டியவர்களாவோம். அதுவே எங்கள் நன்றி அறிதல் கடமையாகும் என்றார் (குடிஅரசு 6.8.1944).

இதனைப் போலவே 8-9-1944-இல் ஈரோட்டில் கிந்தனார் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றபோதும், 1.11.1944இல் இழந்த காதல் நாடகத்திற்குத் தலைமை ஏற்றபோதும் பெரியார் அய்யா அவர்கள் என்.எஸ். கிருஷ்ணனைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

நகைச்சுவை அரசர் கிருஷ்ணன் அவர்கள், நான் அறிந்த வரை சுமார் 10,15 வருஷ காலமாகவே, திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து திராவிடத் தொண்டு ஆற்றி வருவதால் உண்மைத் திராவிடன் ஒவ்வொருவனும் அவருக்குக் கடமைப்பட்டவன் ஆகிவிட்டான் என்பதோடு, மற்ற நடிகர்கள், நாமும் இப்படி நடிக்கவில்லையே என்று வெட்கப்பட வேண்டியும் ஏற்பட்டு விட்டது தோழர் கிருஷ்ணனின் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை அடைந்து விட்டார்கள் என்ற திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற வேண்டிய தாகும். இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற, புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத் துறையிலும் இசைத் துறையிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

நம் அருமை கிருஷ்ணன் அவர்கள் தனது தொழிலை வெகு தூரத்திற்கு மாற்றியும், புரட்சி செய்தும், மற்றவர் களுக்கு வழிகாட்டியாகவும் ஆகிவிட்டார். கலை சீர்திருத்தம் சரித்திரத்தில் கிருஷ்ணன் பெயர் பொன் னினால் பொறிக்கப்படும்

கிந்தன் கதை நடத்துவதில் கதை பொய்யானாலும் அதை மக்களுக்கு மானமும், அறிவும் முற்போக் குணர்ச்சியும் ஏற்படும்படி செய்து அதன் வருவாயில் பெரும்பாகம் பொது நலத்துக்கு உதவுகிறார்.
பணப் பிசாசுக்கு அவர் மனம் அடிமைப்படவில்லை. மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற கவலை அவருக்கு இல்லை. இதுபோல எவனொருவன் தன்னலமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரன் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக் காட்டாகும்

கிருஷ்ணனைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் அவரை ஒரு புரட்சி வீரரென்றே கருதுவது ஏன்? அவர் ஒரு நல்ல தேவையான புரட்சியில் வெற்றி கண்டவர் இனி அவர் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக் காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கம் கிருஷ்ணன் படம் போடா விட்டால் அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்

பெரியார் வரிசையில்...

ஒரு முறை அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதியி ருந்தார். இதுபற்றி மாறபாடன கருத்துடை யவர்கள் வ.ரா.வும் எப்படி இவ்வாறு எழுதலாம் என்று மோதினர். உடனே அவர் இது பற்றி என்னிடம் கேட்பதைவிடப் பெரியாரிடமே கேட்டுப் பாருங்கள் என்று கூறவே பெரியாரிடம் போய் இதுகுறித்துக் கேட்டார்கள்.

அதற்குத் தந்தை பெரியார் தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு

பெரியார் மேல் கலைவாணரின் பற்று

திரைப்பட உலகிலே முதன் முதலாக பெரியார் என்ற பெயரை அறிவித்தவர் கலைவாணர் என்று கூறலாம். பணம் படத்தில் வரும் பாடலில் தினா - முனா கானா என்பதில்

பெரியார் வள்ளுவப் பெரியார்
அந்தப் பாதையில் நாடு சென்றிட வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்

ராஜா ராணி படத்தில் சாக்ரடீஸ் ஒரங்க நாடகம் இடம் பெறும். அந்த நாடக நிகழ்ச்சிக்குக் கலைவாணர் தலை மையேற்று நாடகத்தில், சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கும் கட்டத்தில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கலைவாணர் மேடைக்கு ஓடிப் போய் நாட்டுக்கு நல்லது செய்த பெரியாரையா சாகச் சொல்றீங்க? என்று பதறிக் கேட்பார். அவர் தந்தை பெரியாரை நினைத்துக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மக்களின் ஆரவாரக் குரலால் திரை அரங்கே அதிரும்.

கலைவாணர் தந்தை பெரியாரைக் குறித்துக் கூறிய இந்த வைர வரிகளில் பெரியார் அவர் நெஞ்சில் வாழ்ந்தார் என்பது விளங்கும். தமிழகம் பெற்றிருக்கும் பொதுச் செல்வங்களில் அவரும் ஒருவர். பூப்போன்ற நெஞ்ச முள்ளவர் புகழுக்காகத் தம் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார். அவருக்காக வேண்டுமானால் புகழ் தான் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். புனிதமான மனிதர் துணிவு என்றும் மூன்றெழுத்து முத்தமிழ் பண்பை மனித உருவில் காண வேண்டுமாயின் அந்த உருவம் ஈ.வெ.ரா.தான் வேறு எதுவும் இல்லை

வானொலியில்...

1947 முதல் விடுதலை நாள் கொண்டாட இருந்த வேளையில் சென்னை வானொலியில் கலைவாணரின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பப்பட இருப்பதாக விளம்பரம் செய்தனர். கலைவாணர் நடத்தும் அந்த நிகழ்ச்சிக்குரிய எழுத்து வடிவத்தைச் சென்னை வா னொலி நிலையத்துக்கு அளித்தவர் ராங்கு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் வரிசையில் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒலிபரப்புப் பதிவாக வேண்டிய நாளில்  நிலையம் வந்த கலைவாணரிடம் வானொலி நிலைய உயர் அதிகாரி எழுத்து வடிவத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி ஒலிபரப்பின் போது பெரியார் பெயரைச் சொல்லாமல் விட்டுவிடச் சொன்னபோது கலைவாணர் அதிர்ச்சி அடைந்ததுடன், பெரியார் பெயர் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும் தன்னுடைய நிகழ்ச்சி வானொலியும் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும்  தன்னுடைய நிகழ்ச்சி வானொலியில் இடம் பெறாது என்று வெளியேறினார். அதிகாரிகள் செய்வதறியாது திகைத் தனர். மறுபடியும் கூடிப் பேசி கலைவாணர் விரும்பியவாறே பெரியார் பெயரைச் சேர்த்துச் சொல்லுவதை அனுமதிக்க வைத்து அதன்படியே நிகழ்ச்சியை ஒலிபரப்பினார்கள் என்றால் கலைவாணர் தந்தை பெரியார் மீது கொண்ட பற்றும் அன்பும், மதிப்பும் சாதாரணமானதா? 

14.1.1948 திராவிடன் பொங்கல் மலரில் இச்செய்தி அன்றே இடம் பெற்றது.
தந்தை பெரியார் கலைவாணர் குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தாரோ அதே கருத்தை மாற்று முகாமைச் சேர்ந்தவரானாலும் தந்தை பெரியாரின் நண்பராகவே வாழ்ந்த இராஜாஜியும் கொண்டிருந்தது வியப்பு எனலாம். எனவேதான் இராஜாஜி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் விட்டுச் சென்ற இடத்தில் வேறு யாரும் புகுந்து புகழ் பெற இயலாது என்று வெகு பொருத்தமாகச் சொன்னதை இங்கே சுட்டிக் காட்டுவோம். அது உண்மையே. கலைவாணர் மறைந்து 50 ஆண்டுகள் ஆனபின்பும் வெற்றிடமாகவே அவ்விடம் நிரப்பப்படாத இடமாகவே உள்ளது என்பது உண்மையே.

---------------- - முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்  அவர்கள் 30-11-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஜாதி ஆணவப் புரட்டு பற்றி கலைவாணர் என்.எஸ்.கே.

பகுத்தறிவுச் செம்மல் கலைவாணர் என்.எஸ்.கே. என்றும் வாழுகிறார்!
இன்று (நவம்பர் 29) நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கே. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட, போற்றுதலுக்குரிய என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.

மூடநம்பிக்கை முட்புதர்களே நிறைந்த நாடகம் மற்றும் சினிமா துறைகளில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி செய்த மாமேதை அவர்.

அவருடன் இணையாக டி.ஏ. மதுரம் அம்மையார் நடித்து, அந்த ஜோடிப் புறாக்கள் புதுவானத்தில் தன்னிகரற்றுப் பறந்தன; பார்த்தோரைப் பரவசமாக்கியது மட்டுமா? பார்த்தவர்களை ஒரு நொடிப் பொழுதாவது (சிரிக்க வைப்பதோடு) சிந்திக்கவும் வைத்தார்கள்.

அப்படிப்பட்ட இணையர் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட் டார்கள்.
நாகர்கோயில் குமரி தந்த குணாளர் என்.எஸ்.கே. ஒரு படிக்காத மேதை - ஆனால் மற்ற படித்த மேதைகளுக்குப் புரியாதவை, தெரியாதவை எல்லாம் இவர்களால் நாட்டுக்கே வகுப்பெடுத்து பாடங்கள்போல் சொல்லிக் கொடுத்தார் என்பது ஒரு தனி வரலாறு.

இவ்வளவு பகுத்தறிவுப் பாடங்களை, தமது எளிய நகைச்சுவைக் காட்சிகளை எங்கிருந்துதான் கற்றாரோ இவர் என்று வியத்த பலருக்கும் அவரே அந்தப் புதையல் அவருக்குக் கிடைத்த இடம் அக்காலத்தில் தந்தை பெரியார் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு ஏடு; நாடகக் கம்பெனியில் அவர் நடிகனாக இருந்த அக்காலத் தில் 80 ஆண்டுகளுக்குமுன்பே குடி அரசின் வாசகனாக - இல்லை இல்லை மாறாக காதலனாக அவர் மாறியதின் விளைவு அவர் அதன்மூலம் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார்!

அந்த பச்சை அட்டைக் குடிஅரசுப் பயிற்சிப் பட்டறையில்  உருவான அந்த வாள்வீச்சு எத்தனையோ பழமையை, சனாதனத்தை, ஜாதி ஆணவங்களை வீழ்த்திட பல லட்சம் மக்கள் மனதைப் பக்குப்படுத்தியது.

அவ் வாள் தலையை வெட்டவில்லை; தலைக்குள் இருந்த அறியாமையை வெட்டிச் சாய்த்து, மூளைச் சலவை செய்து, பலரும் சிந்திக்கும்படிச் செய்தது!

அக்காலத்து உத்தமபுத்திரன் திரைப்படம் அதில் இவரது நகைச்சுவைப் பாத்திரம் ஒரு வைதீக வைஷ்ணவ அய்யங்கார் பாத்திரம்; மதுரம் அவரது மனைவி.

தன் பசு மாட்டிற்கு புல்லுக்கட்டு கொண்டு வந்து விற்கும் கீழ் ஜாதி (பறைச்சி வேடம்)ப் பெண் வேறு ஒருவர்.

ஜாதி குலம் எல்லாம் தான் காமத்தின் முன் சுட்டெரிக்கப்படும் என்பதை வைத்து, இந்த அய்யங்கார் அந்தப் பெண்ணை (பின் வழியாகத்தான் எப்போதும் வருவார் அவர்) ஒரு நாள் தனியே புல்லுக்கட் டுடன் மாலை வரச் சொல்லுகிறார்.

தனது மனைவி (மதுரத்தை) வேண்டு மென்றே சண்டை போட்டு, (சுடும் தோசையை கீழே  போட்டு புரட்டி மண்ணுடன் தான் உனக்கு தோசை விக்கத் தெரியுமோ, நீ ஒரு மனுஷியா? என்று வம்பு செய்து, ஆத்திரமூட்டுவார்; சண்டை முற்றும்... என் தாய் வீட்டுக்குப் போவதாக இவர் சொல்லி விட்டு வெளியேறுகிறார்.

வைணவ அய்யங்காருக்கோ மகிழ்ச்சி - தன் திட்டப்படி அவரது மனைவி வெளியேறிவிட்டார்!

மாலை காத்திருக்கிறார். காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோயால் தவிக்கிறார்!

இவரது மகன் (8 வயது பையன்) காக்கா இராதா கிருஷ்ணன் அப்போது இளைஞர், அந்த வேடம் ஏற்றவர்) ஓடி வந்து, அப்பா அப்பா என்று குறுக்கிட்டு இடைஞ்சல்போல பேசித் தொணதொணக்கிறார். அவருக்கு 4 அணா - பெரிய காசு அப்போது - எடுத்துக் கொடுத்து டேய் வெளியே போய் பக்ஷணம் வாங்கி சாப்பிட்டு வாடா என்று விரட்டுவார். மகனும் மகிழ்ச்சியோடு ஓடுவார் - வெளியே போகும் சமயம் இந்த தோப்பனார் அய்யங்கார் பையனை சத்தம் போட்டு கூப்பிட்டு டேய் பக்ஷணம் வாங்கிச் சாப்பிடும்போது, நம்மவா கடையாய்ப் போய் பாத்து சாப்பிடு; சூத்ராள் கடையில் இடையில் வாங்கி சாப்பிட்டிராதே; வாங்கி சாப்பிட்டு அப்புறமாக என்று அந்த அப்புறத்தை அழுத்திச் சொல்லுகிறார்  (அரங்கமே கைத்தட்டலால் அதிரும்).
பிறகு புல்லுக்கட்டுடன் கீழ் ஜாதிப் பெண் வருவா அவளை எதிர்கொண்டு சாகசமெல்லாம் செய்வார்; ஏஞ் சாமி, நீங்க உசந்தவங்க, நாங்க கீழ்ஜாதி - என்ன நீங்க...

அட நீ ஒண்ணு அதெல்லாம்... என்றெல்லாம் வசனம் பேசிடுவார்! தன் மனைவி பற்றி அவர் புல்லுக் கட்டுக்காரியிடம் அலட்சியமாகப் பேசுவார்; பிறகு தலை முக்காட்டை சிறிது நேரம் (வசனம்) பேசியபின், நீக்கிப் பார்த்தால் தன் மனைவிதான் (டி.ஏ. மதுரமே) அந்தப் புல் சுமந்த பெண்ணாக இருப்பார்! (ஏற்கெனவே அந்த கீழ்ஜாதிப் பெண் இவரது தகாத  உறவு அழைப்புபற்றி வீட்டு எஜமானி மதுரத்திடம் சொல்லியதால் இது மதுரம் செய்த ஏற்பாடு) அய்யங்காரை விளாசு விளாசு என்று விளாசித் தள்ளுவார் (மதுரம்) மனைவியார்!

இந்தக் காட்சி எப்படிப்பட்ட அருமையான உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவப் புரட்டு பற்றியது பார்த்தீர்களா?

எத்தனையோ ஆண்டுகள் முன் பார்த்த காட்சி - கண்ணை - கருத்தை விட்டு அகலாக் காட்சி. கலைத்துறையில் அக்கால பெரியார் கொள்கை பரப்பாளர் அவர். இன்றும் வாழுகிறார்கள் அவ் இணையர்கள். மறையவில்லை என்றும் வாழ்வார்கள்.

கலைவாணர் - மதுரம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து.. “விடுதலை” 21-11-2012

6.3.11

ஜோசியத்தை நம்பாதே, கடவுள், மதம் வெறுத்து விடு

அறிவுக்கு எட்டாததை நம்பச் சொல்லும் நாடு


நான் ரஷ்யா சென்றிருந்தபோது திருச்சியிலே ஒரு மாபெரும் கூட்டத்திலே காங்கிரஸ் தலைவர்கள் ரஷ்யாவைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்கள்.

ரஷ்யாவிலே ஒன்றும் கிடையாது. மக்கள் எல்லாம் கஷ்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் அதைப்பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள்.

இப்பொழுது இங்கிருந்து ஒரு கோமாளி போயிருக்கிறான். அவன் வந்து என்னென்னவோ உளறப் போகிறான். அதை நீங்கள் எல்லாம் நம்ப வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள்? அது உண்மைதான்.

நம் நாட்டிலே எதை நம்பச் சொல்கிறார்கள் தெரியுமா? அறிவுக்கு எட்டாத எங்கோ இருப்பதாகச் சொல்லுகிற சொர்க்கத்தை நம்பச் சொல்லுகிற நாடு நம் இந்தியா. தேவலோகத்தை நம்பச் சொல்லும் நாடு. ஒருவரும் பார்க்கவில்லை. யாரும் ஏற்க முடியாது.

அதை நம்பச் சொல்லுகிறது நம் நாடு. ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் நேராகச் சென்று ரஷ்யாவைப் பார்த்து வருகிறான். அவன் சொல்வதை நம்பாதே. நாம் எப்படி உருப்பட முடியும்? இந்தியா ஒரு காலத்திலும் ரஷ்யாபோல் மாறுமென்று சொப்பனம் கூடக் காண முடியவில்லை.

அங்கு கோவில்கள் இருக்கின்றனவா என்றால் இருக்கிறது. அங்கு பெரிய சர்ச்சுகள் இன்றும் இருக்கின்றன. அந்த சர்ச்சிலே என்ன இருக்கிறது என்றால், மியூசியம் இருக்கிறது. சர்ச்சுகளில் சாமி இல்லை.

சாமி படத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள். இம்மாதிரி அப்புறப்படுத்தப்பட்ட சிற்பங்கள், நகைகள், மற்றவை எல்லாம் மியூசியம் மாதிரியாக ஜனங்கள் பார்த்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறார்கள்.

கடவுளை அடித்து விரட்டி, ஜோசியர்களுக்குத் தண்டனை கொடுத்து ஜெயிலில் போட்டு, சகுனம் பார்ப்பவர்களைச் சமுத்திரத்தில் தள்ளி தன் கையே தனக்குதவி என்று வாழ்கின்றது. அதுதான் ரஷ்யா!

அங்கு ஒரு ஸ்டாலின் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் எனக்குப் பல காரணங்கள் தோன்றிவிட்டன. எப்படியென்றால் கையை முன்னாலே வைத்திருப்பது வணக்கத்தைக் கூறுகிறது.

இரண்டாவது, -நண்பா, ஜோசியத்தை நம்பாதே, கடவுள், மதம் இவற்றை வெறுத்து விடு, தன் கையே தனக்குதவி, பிறத்தியாரை என்றும் நம்பி வாழாதே என்று சொல்வது போல் இருந்தது.

சென்னை கடற்கரையில் 29.10.1951இல்
கலைவாணர் என்.எஸ்.கே.ஆற்றிய உரை

31.8.10

கி.வீரமணி அவர்கள் பார்வையில் கலைவாணர்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது கிராமிய மக்கள் மத்தியிலும் வெகுகாலமாகப் புழங்கும் ஓர் அற்புதமான அனுபவப் பழமொழியாகும்.

மனிதர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும்; அவர்களை மட்டுமல்ல, அவர்களுடன் பழகுபவர்களிடமும்கூட இதன் தாக்கம் ஏற்பட்டு அவர்களது வாழ்வும் நோயற்ற வாழ்வாக அமையும்.

கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் கலைத்துறையில் நாடகம், சினிமா போன்ற துறைகளில் எளிதில் காணமுடியாத கொள்கை வைரமாகும்!

அவர் பச்சை அட்டை குடிஅரசு ஏட்டினை வாராவாரம் படித்தே, பல்வேறு பகுத்தறிவு சிந்தனைகளைப் பெருக்கிக்கொண்ட குடிஅரசின் விசித்திர மாணவர் - மாமனிதர்!

அவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இராது; மாறாக, வாழ்வியலை மற்றவர்களுக்கு ஒரு சில நொடிகளில் பதிய வைக்கும் ஆற்றலை உள்ளடக்கியவையாகும்!

அவர் மறைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குமேல் ஆன போதிலும்கூட, கலையுலகில் அவர் சாகா சரித்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்!

அவரது வாழ்க்கையில் பல்வேறு பழிகளுக்கு ஆளாகி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதை உள்ளபடி ஏற்றும்கூட, சிறையேகிய பின்னரும் உறுதி குலையாது, உண்மையை நிலைநாட்டி விடுதலையாகி வந்தும் தனது தொண்டறத்தைத் தொடர்ந்தவர்!

தனது பொருளையெல்லாம் தாராளமாக வாரி வழங்கிய ஒப்புவமை இல்லாத வள்ளல் அவர்!

எந்தெந்த வள்ளல்களைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; ஆனால், நம் கண்ணெதிரே வாழ்ந்த கலைவாணர் அவர்கள் தமது பொருள், செல்வத்தை ஊருணி நீராக மக்களுக்குத் தந்த மகத்தான உண்மை வள்ளல் ஆவார்கள்!

மனிதர்கள் தங்களைப்பற்றிக் கவலைப்படுவதைவிட, பிறரை அழிக்கவே சிந்திக்கின்றனர்; குரூர மனப்பான்மையாளர்களாகவும் அல்லது பொறாமையால் நெளிபவர்களாகவும்தான் வாழுகிறார்கள்; அது மிகவும் மோசமானது என்பதை அவர் நல்லதம்பி திரைப்படத்தில் (அறிஞர் அண்ணா அவர்கள் எழுதி வெளிவந்த திரைப்படம் சுமார் 60 ஆண்டுகளுக்குமுன்பு) ஒரு காட்சி:

அவரது உறவுக்காரராக அண்ணன் என்று அழைக்கும் திரு. சி.எஸ். பாண்டியன் (குழு நடிகர்) வந்து இவரிடத்தில், அண்ணே, அடுத்த தெரு பரமசிவஞ் செட்டியார் கதையைக் கேட்டீர்களா? அவருக்கு ஏகப்பட்ட கடனாம்! ரொம்ப கஷ்டமாம்! இனி தேறவே மாட்டாராம் என்றெல்லாம் ரொம்ப உற்சாகமாகப் பேசுவார்!

இவரும் அவரை தற்காலிகமாக உசுப்பிவிடுவதுபோல, ஓகோ அப்படியா? அப்ப, பரமசிவம் செட்டியார் சீக்கிரத்தில் குளோஸ்! அப்படித்தானே...?

ஆமாம் அண்ணே, அதிலென்ன சந்தேகம்?

அப்படி, சரி, சரி... உன் பையிலே என்னென்ன வச்சுருக்கே, தம்பி?

அதுவா? கொஞ்சம் காசு, சில நோட்டு, இப்படி பர்சிலே இருக்கு.

ஹூகும்... சரியா நோட்டு எவ்வளவு, சில்லறை எவ்வளவு என்றெல்லாம் விவரமாக சரியா சொல்லுப்பா...

அதெப்படிண்ணே உடனே சரியா சொல்ல முடியும்? எண்ணி, பிறகு சொல்றேன்...

...ஏம்பா, உன் பையிலே இருக்கிறது எவ்வளவுங்கிற விவரம்பற்றி உனக்குக் கவலை இல்லை; பக்கத்துத் தெரு பரமசிவம் செட்டியார் கதையைப்பற்றிப் பேசறீயே, உன் பையை முதலில் நீ எண்ணிப் பார்க்கவில்லை. இப்படி அக்கப்போர் எல்லாம் தேவையா? என்றவுடன்,

அவருக்குப் பொறி தட்டுகிறது. உடனே மன்னிப்புக் கேட்டு இனிமேல் ஊர் வம்பு, வெட்டிப் பேச்சு பேசமாட்டேன் என்று இவரிடம் கூறிவிட்டுச் செல்வார்!

ஒரே காட்சியில் எவ்வளவு பெரிய தத்துவம்! எவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாழ்வியல் பாடமாகப் போதித்தது.

கலைவாணர் என்.எஸ்.கேயை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், திராவிடர் இயக்கமும் ஏன் இவ்வளவு சிறப்பாக நேசித்தது என்பது புரிகிறதா?

இளைய தலைமுறைகூட அவருடைய பழைய நகைச்சுவை துணுக்குகளை இன்றும் சுவைக்கிறதே தலைமுறை இடைவெளி தாண்டிய மனிதாபிமானி அல்லவா அவர், அதனால்தான்!

அவருடைய நினைவு என்றும் நீங்கா நினைவாகும்!

வாழ்க கலைவாணர்! வளர்க அவர்தம் தொண்டறம்!!

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து - “விடுதலை” 31-8-2010

10.7.10

கலைவாணர் என்.எஸ்.கே. கண்ட ரஷ்யா

அறிவுக்கு எட்டாததை நம்பச் சொல்லும் நாடு

நான் ரஷ்யா சென்றிருந்தபோது திருச்சியிலே ஒரு மாபெரும் கூட்டத்திலே காங்கிரஸ் தலைவர்கள் ரஷ்யாவைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்கள். ரஷ்யாவிலே ஒன்றும் கிடையாது. மக்கள் எல்லாம் கஷ்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் அதைப்பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள். இப்பொழுது இங்கிருந்து ஒரு கோமாளி போயிருக்கிறான். அவன் வந்து என்னென்னவோ உளறப் போகிறான். அதை நீங்கள் எல்லாம் நம்ப வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார். அது உண்மைதான். நம் நாட்டிலே எதை நம்பச் சொல்கிறார்கள் தெரியுமா? அறிவுக்கு எட்டாத எங்கோ இருப்பதாகச் சொல்லுகிற சொர்க்கத்தை நம்பச் சொல்லுகிற நாடு நம் இந்தியா. தேவலோகத்தை நம்பச் சொல்லும் நாடு. ஒருவரும் பார்க்கவில்லை. யாரும் ஏற்க முடியாது. அதை நம்பச் சொல்லுகிறது நம் நாடு. ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் நேராகச் சென்று ரஷ்யாவைப் பார்த்து வருகிறான். அவன் சொல்வதை நம்பாதே. நாம் எப்படி உருப்பட முடியும்? இந்தியா ஒரு காலத்திலும் ரஷ்யாபோல் மாறுமென்று சொப்பனம்கூட காண முடியவில்லை.

அங்கு கோவில்கள் இருக்கின்றனவா என்றால் இருக்கிறது. இங்கு பெரிய பெரிய சர்ச்சுகள் இன்றும் இருக்கின்றன. அந்த சர்ச்சிலே என்ன இருக்கிறது என்றால், மியூசியம் இருக்கிறது. சர்ச்சுகளில் சாமி இல்லை. சாமி படத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள். இம்மாதிரி அப்புறப்படுத்தப்பட்ட சிற்பங்கள், நகைகள், மற்றவை எல்லாம் மியூசியம் மாதிரியாக ஜனங்கள் பார்த்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறார்கள். கடவுளை அடித்துவிரட்டி, ஜோசியர்களுக்குத் தண்டனை கொடுத்து ஜெயிலில் போட்டு, சகுனம் பார்ப்பவர்களைச் சமுத்திரத்தில் தள்ளி தன் கையே தனக்குதவி என்று வாழ்கின்றது அதுதான் ரஷ்யா!.

அங்கு ஒரு ஸ்டாலின் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் எனக்குப் பல காரணங்கள் தோன்றிவிட்டன. எப்படியென்றால் கையை முன்னாலே வைத்திருப்பது வணக்கத்தைக் கூறுகிறது. இரண்டாவது, நண்பா, ஜோசியத்தை நம்பாதே, கடவுள், மதம் இவற்றை வெறுத்துவிடு, தன் கையே தனக்குதவி, பிறத்தியாரை என்றும் நம்பி வாழாதே என்று சொல்வது போல் இருந்தது.

- சென்னைக் கடற்கரையில் 29.10.1951-இல்
கலைவாணர் என்.எஸ்.கே ஆற்றிய உரை,

நூல்: கலைவாணர் கண்ட ரஷ்யா.

17.1.09

கலைவாணருக்கு பெரியார் கொடுத்த அஸ்திவார அறிவு




கலைவாணர் நூல்கள் வெளியீடு
மற்றும் இணையதளத் தொடக்க விழா


தமிழன் தன்வரலாறு எழுத மறந்ததால் தமிழனுக்கு வரலாறில்லை -
கலைவாணரின் ஆசான் "குடிஅரசு" ஏடுதான்

கலைவாணர் அவர்களுடைய விழா அடுத்து
நாகர்கோயிலில் கழகம் சார்பில் நடைபெறும் சென்னையில்
தமிழர் தலைவர் அறிவிப்பு - அறிஞர்கள் எம்.எஸ். உமர்,

சென்னையில் தமிழர் தலைவர் அறிவிப்பு -
அறிஞர்கள் எம்.எஸ். உமர், மறைமலை
இலக்குவனார் பங்கேற்றுப் பாராட்டு


கலைவாணர் அவர்களுடைய விழா அடுத்து நாகர்கோயிலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் - தமிழர்கள் தன்வரலாறு எழுத மறந்ததால் தமிழனுக்கென்று வரலாறு இல்லை என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்று நடைபெற்ற கலைவாணர் நூல்கள் வெளியீட்டு விழாவில் அறிவித்தார்.

கலைவாணர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா, மற்றும் இணையதளம் தொடக்க விழா கலைவாணர் குடும்பத்தின் சார்பில் 12-1-2009 அன்று மாலை 6-15 மணிக்கு சென்னை எழும்பூர் கன்னிமரா நூலக அரங்கில் மிகச் சிறப்பானதொரு குடும்ப உறவு விழாவாக கொள்கைப் பிரச்சார விழாவாக, கலைவாணர் அவர்களுடைய புகழைப் பரப்பும் உணர்ச்சி மிக்க பெருவிழாவாக நடைபெற்றது.

பாரதி மனோகரன்

இந்நிகழ்ச்சியில் வெலிங்டன் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியை பாரதி மனோகரன் தொடக்கவுரையையும், இணைப்புரையையும், அறிமுகவுரையையும் நிகழ்த்தினார்.

என்.எஸ்.கே.கிட்டப்பா

அடுத்து, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் மகன் என்.எஸ்.கே. கிட்டப்பா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது. 17 வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என் தந்தையின் பெருமையை நாங்கள் அறிந்தவற்றைவிட, மற்றவர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

பெரியாரின் அஸ்திவார அறிவு

பண்டிகைக் காலங்களில் உடன் பணியாற்றுபவர்கள், மற்றும் நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வார். காரில் செல்லும்போது கூட டிராபிக் கான்ஸ்டேபினை அழைத்து பணம் கொடுத்து பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறி விட்டுச் செல்வார். என் தந்தையாரின் தனித்தன்மையே தந்தை பெரியார் கொடுத்த அஸ்திவார அறிவுதான் காரணம்.

என் தந்தையார் இறந்த செய்தி கேட்டு

என் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு கூட்டம் அலை மோதியது. 36 அடி - 40 அடி சுவரை உடைத்துக் கொண்டு மக்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுத காட்சியை என்னால் மறக்க முடியவில்லை. நாங்கள் இருக்க நீ இறந்துவிட்டாயே. இந்த உயிர் எதற்கு? என்று என் தந்தையின் உடலை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும்பொழுது மக்கள் கதறிய காட்சியை மறக்க முடியவில்லை.

எல்லாம் முடிந்துவிட்டது

எல்லாம் முடிந்துவிட்டது. உம் பாடியை வண்டியில் ஏற்றுங்கள் என்று சொன்னவர் அந்த நடிகர் - யார் என்பது உங் களுக்குத் தெரியும். அவர்தான் எம்.ஆர்.ராதா. அவருடைய காரில் தான் என்னுடைய தந்தையார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

என்னுடைய தந்தையார்தான் அந்தக் காலத்தில் நாகர்கோவில் நகரத்தில் காந்தியாருக்கு ஒரு நினைவுத் தூணையே அமைத்தவர் என்று கூறினார்.

கலைமாமணி டாக்டர் எஸ்.எம்.உமர்

கலைவாணருடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகிய நண்பர் டாக்டர் எஸ்.எம். உமர் - தமது உரையில் குறிப்பிட்டதாவது:

கலைவாணர் என்று இன்றைக்கு அழைக்கிறார்கள். அந்தக் காலத்தில் என்.எஸ்.கே. என்றுதான் அழைப்பார்கள். என்.எஸ்.கே. அவர்கள் அந்தக் காலத்திலிருந்து தான் மறையும் இறுதி நாள் வரை அதே மரியாதையோடு இருந்து மறைந்தார்.

தனக்கென சொத்து சேர்க்கவில்லை

அவர் எல்லோருக்கும் தானம் வழங்கினார். தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு இன்முகத்தோடு தானம் வழங்கினார். அவர் தனக்கென எந்தச் சொத்தையும் சேர்க்க வில்லை.

ஒன்றே ஒன்று அவர் செய்த காரியம். தன் பிள்ளைகள் எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்கினார். தியாகராஜ பாகவதர் இருந்தார். பி.யு. சின்னப்பா இருந்தார். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் யாரும் படிக்கவில்லை.

மிருகங்கள் மீதும் இரக்கம் கொண்டவர் கலைவாணர் அவர்கள் மனிதர்களிடம் மட்டும்தான் அன்பு காட்டினாரா என்றால் - இல்லை மிருகங்களுக்கும் இரக்கம் காட்டினார் ஒருமுறை அவர் காரில் போய்க்கொண்டு இருந்தபொழுது கொளுத்தும் வெயிலில் ஒரு குதிரை வண்டியில் ஒரு மனிதன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த கொளுத்தும் வெயிலில் குதிரை நின்று கொண்டிருந்தது.

இதைப் பார்த்தவுடன், உடனே அவர் - குதிரைகள் நிழலில் நின்று இளைப்பாறுவதற்கென்றே ஒரு பெரிய நிழற்குடையை திருச்சியில் கட்டிக் கொடுத்தார். அதை இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம்.
எந்த நடிகரும் செய்யாத காரியத்தை செய்த மாபெரும் மனிதர்.

என் தலையில் நெருப்பை வைடா!

ஒரு முறை நாகூர் பாட்சா பத்து இருபது பேரை வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். நாடகம் நலிந்த நிலையில், நடத்திக் கொண்டிருந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை நாடகம் பார்க்க அழைத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும், வசூல் ஆகும் என்று நினைத்து என்எஸ்.கே.வை நாடகத்தைப் பார்க்க அழைத்தார். என்.எஸ்.கே.வும் நாடகத்தைப் பார்த்தார். அதில் ஒரு காட்சி - நாகூர் பாட்சா தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். ஒரு சிறுவன் நெருப்புடன் அவரிடம் வருவான். இதை என்ன செய்வது? என்று கேட்பான். என் தலையில் வைடா! என்று சொல்லுவார். அந்தக் காட்சி சிறப்பாக இருந்தது.

உடனே 500 ரூபாய் கொடுத்தார்.

உடனே என்.எஸ்.கிருஷ்ணன், பாட்சாவை அழைத்து இந்தக் காட்சியை நாடகத்தில் புகுத்தப் போகிறேன். இந்தக் காட்சியின் அனுமதிக்காக அய்ந்நூறு ரூபாய் பிடி என்று கொடுத்தார். அவர் காட்சியைத் திருடவில்லை. நேர்மையாக நடந்து கொண்டார். ஆனால் இன்றைக்கு அவருடைய நகைச்சுவைக் காட்சிகளைத் திருடியவர்கள் நன்றி என்று கூட போட மறுக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் பாராட்டியிருக்கின்றார். நாங்கள் பல நாள் செய்கின்ற பிரச்சாரத்தை கிருஷ்ண நீ ஒரு நாடகத்தின் மூலம் அவ்வளவு கொள்கைகளையும் பிரச்சாரம் செய்கின்றாயே என்று பாராட்டியிருக்கின்றார். திராவிடர் கழக மேடையில் அவரைப் பற்றிச் சொன்னால் கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகும். அவர் வாழும்பொழுது எப்படி சிரித்துக் கொண்டே வாழ்ந்தாரோ அதே போல சாகும் பொழுதும் சிரித்துக் கொண்ட மறைந்தார். இவ்வாறு மேலும் ஏராளமான செய்திகளை கூறினார்.

மறைமலை இலக்குவனார்

கலைவாணர் அவர்களைப் பற்றி ஏறத்தாழ 22 ஆயிரத்து 300 களங்களில் குறிப்புகள் இருக்கின்றன. இது சரியா? தவறா? என்பதைச் சொல்ல முடியாது.

122 படங்களில் ஒன்றாக நடித்த தம்பதியினர்

122 படங்களில் கலைவாணர் அவர்களும் அவருடைய துணைவியார் மதுரம் அம்மையார் அவர்களும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு தம்பதியினர் ஒற்றுமை யாக இவ்வளவு படங்களில் நடித்தது வேறு எங்குமே கிடையாது. கலைவாணர் தான் மட்டும் சம்பாதித்த சொத்துக்களை கொடுக்கவில்லை. டி.ஏ.மதுரம் அவர்களும் அத்தனையையும் மற்றவர்களுக்கே வழங்கினார்.

கதாநாயகர்கள் அஞ்சி நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கதாநாயகர்களை விட அஞ்சாமல் நடித்து நல்ல பல கருத்துக்களைச் சொன்னவர் கலைவாணர். 1940 ஆம் ஆண்டிலேயே பனிச்சறுக்கு (ஸ்கேட்டிங்) விளையாட்டை மக்களுக்கு நடித்துக் காட்டியவர் கலைவாணர்.

எஸ்டேட்டுகளை வாரி வழங்கியவர்

நாஞ்சில் நாட்டில் நன்செய் பயிர்கள் விளையும் பல நூறு ஏக்கரா எஸ்டேட்டுகளை மற்றவர்களுக்காகக் கொடுத்தவர். கல்வி, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, பொதுவுடைமைக் கருத்துகளை நாட்டு மக்களிடத்திலே பரப்பியவர்.

இன்றைக்கும் கலிஃபோர்னியாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் பொழுது கலைவாணர் அவர்களுடைய கருத் துக்களை வைத்திருக்கிறார்கள் என்றால் அவருடைய அறிவு ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முடி கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: இந்த விழா ஒரு கொள்கை விழாவாக, குடும்ப விழாவாக, கல்விக் குடும்ப விழாவாக, உறவுக் குடும்ப விழாவாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா ஒரு சிறிய அரங்கத்தில் நடைபெற்றாலும் உலகளாவிய அளவிலே அவருடைய புகழைப் பரப்பக்கூடிய பணியைச் செய்திருக்கின்றார்கள். அத்தகைய வாய்ப்பை அன்புக் கொடி - நல்லதம்பி அவர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

கலைவாணருடைய ஜீன்ஸ்

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அய்ந்தாயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கின்றார்கள். கலைவாணருடைய ஜீன் என்பதை உதவி செய்யும் மனப்பான்மையைக் காட்டியிருக்கின்றார்கள். அதற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பி.எச்.டி. ஆய்வுக்குரிய நூல்

சமூக விஞ்ஞானி கலைவாணர் என்ற நூலை அன்புக்கொடி நல்லதம்பி அவர்கள் கொடுத்தார்கள். தனித்தனியே இருந்த செய்திகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பி.எச்டி. ஆய்வுக் குரிய நூலாக இதை அவர்கள் தயாரித்து வெளியிட்டிருக்கின்றார். கலைவாணர் அவர்களைப்பற்றி வேறு எந்த நூலிலும் இவ்வளவு செய்திகள் வரவில்லை.

இந்த நூலை மட்டும் படித்தால் போதும்

அவர் எழுதிய இந்த ஒரு நூலை மட்டுமே படித்தேன் - கலைவாணர் அவர்களைப் பற்றி அவ்வளவு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த நூலை மிகச் சிறப்பாகத் தயாரித்திருக்கின்றார்கள்.

பொதுவாக நம்மைப் போன்றவர்களுடைய சிந்தனை என்றைக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நூலின் தலைப்பே சமூக விஞ்ஞானி கலைவாணர் என்பதுதான். 2 மணிநேரம் அல்ல இரண்டு நாட்கள் வரை இந்த நூலைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம் (மற்றொரு நூல் கலைவாணர் சிந்தனைத் துளிகள்)

எனக்கு மன அழுத்தமோ, அல்லது மனச் சங்கடமோ ஏற்படும் பொழுது கலைவாணர் அவர்களுடைய நகைச்சுவைகளை என் குடும்பத்தார் உட்பட பார்ப்பது வழக்கம். ரிலாக்சேஷன் எனக்குத் தேவை என்று மருத்துவர்கள் சொன்ன அறிவுரையாகும்.

சிரிப்புதான் உடலுக்கு நல்ல மருந்து

சிரிப்புதான் உடலுக்கு நல்ல மருந்து. சிரிப்பில் எத்தனை வகையான சிரிப்பு என்பதையே அவர்கள் நடித்துக் காட்டியி ருக்கின்றார்கள் திரைப்படத்தில் வஞ்சகச் சிரிப்பு எப்படியிருக்கும், கேலிச் சிரிப்பு எப்படி இருக்கும் மகிழ்ச்சிச் சிரிப்பு எப்படியிருக்கும் என்பதை நடித்துக் காட்டியிருக்கிறார்.

தேன் தெவிட்டாது அல்லவா?

கலைவாணரின் நகைச்சுவைக்காட்சிகள் - செய்திகள் தலை முறை இடைவெளி இல்லாதது. மக்களை வென்றவர் அவர். அன்புக்கொடி நல்லதம்பி அவர்கள் எழுதிய நூலை முழுவது மாகப் படித்தேன், சுவைத்தேன், முடித்தேன். தேன் தெவிட்டாது அல்லவா? அதுபோல இந்த நூலில் உள்ள அவ்வளவு செய்திகளும் தெவிட்டாத செய்திகள். இங்கே வந்திருக்கின்றவர்கள் நூல்களை வாங்க வேண்டும்.

மேலே மேலே படிக்க வேண்டும். ஒரு முறை படித்த பொழுது ஒரு செய்தி விளங்கும். அடுத்து முறை படிக்கும் பொழுது இன்னும் ஆழமான செய்திகள் நமக்கு விளங்கும். டாக்டர் உமர் அவர்கள் கலைவாணர் அவர்களைப் பற்றி நிறைய செய்திகளைச் சொன்னார். நான் அவரிடம் கூடக் கூறினேன். வாய்ப்பு கிடைக்கும்பொழுது, அல்லது ஓய்வாக இருக்கும் பொழுது அல்லது காரில் பயணம் செய்யும்பொழுது, இவைகளை எல்லாம் டேப் ரிகார்டரில் பதிவு செய்யுங்கள். இன்றைக்கே மிகச் சிறிய டேப் ரெக்கார்டர் எல்லாம் வந்துவிட்டது. இது போன்ற டேப் ரெக்கார்டர் மூலம் அந்த செய்திகளை எல்லாம் பதிவு செய்து நூலாகக் கொண்டு வரலாம்.

தமிழன் தன் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும்

தமிழன் தன்னுடைய வரலாற்றைப் பதிவு செய்ய மறந்த காரணத்தால்தான் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு இல்லாத கொடுமையான சூழ்நிலை ஏற்பட்டது. நம்மவர்கள் நம்முடைய பிள்ளைகள் யாரைக் கேட்டாலும் வெளிநாட்டுக்காரரான எட்டாம் ஜார்ஜ் பெயரைச் சொல்லு கிறார்கள். ஏழாம் எட்வர்டு பெயரைச் சொல்லுகிறார்கள். உன்னுடைய தாத்தா பெயர் என்ன? என்று கேளுங்கள். நம்முடைய பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.

குடிஅரசு எனது ஆசிரியர்

தந்தை பெரியார் அவர்களை ஈர்த்தவர் என்.எஸ்.கே. அவர்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்கிறீர்களே. இவ்வளவு ஆற்றலோடு திகழுகின்றீர்களே. உங்களுடைய ஆசிரியர் யார் என்று கேட்ட பொழுது தந்தை பெரியார் அவர்களின் குடி அரசு ஏடுதான் எனக்கு ஆசிரியர் என்று சொன்னார். தந்தை பெரியார் அவர் களுடைய பகுத்தறிவுக் கருத்துக்களை, கொள்கைகளை, நாடகங் கள் மூலமாகவும் திரைப்படங்களின் மூலமாகவும் பரப்பிய பெரும் துணிச்சல்காரர்.

அய்யோ கிருஷ்ணா உனக்கா 14 ஆண்டுகள் தண்டனை?

கலைவாணர் அவர்களுக்கு 14 வருட தண்டனை கிடைத்த பொழுது செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனையா? அய்யோ கிருஷ்ணா உனக்கா 14 ஆண்டுகள் தண்டனை? என்று தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழில் எழுதிய உணர்ச்சி பூர்வமான தலையங்கம் நமக்குக் கண்ணீரை வரவழைக்கக் கூடிய தலையங்கமாகும்.

அது மட்டுமல்ல. கலைவாணர் அவர்கள் சிறைச்சாலையில் இருந்த பொழுது அவரை சந்தித்து வழக்கு நடத்த பத்தாயிரம் பணம் கொண்டு வந்திருக்கின்றேன் என்று பெரியார் சொன்னார்.

1940-களில் ரூபாய் பத்தாயிரம் என்பது . .

தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு காலணாவையும் முடிச்சுப் போட்டு, முடிச்சுப் போட்டுதான் இவ்வளவு நிறுவனங் கள் வளர்ந்திருக்கின்றன. மீண்டும் அந்தப் பணம் பொது மக்களுக்கே சென்று கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட பெரியார் அவர்கள்தான் கலைவாணரைச் சந்தித்து உருக்கமாகச் சொன்னார். இதோ பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்திருக்கின்றேன். இன்னும் பணம் தருகிறேன்.

பெரிய, பெரிய வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வெளியே வாருங்கள் என்று 1940 ஆம் ஆண்டு அந்தக் காலத்திலே பெரியார் அவர்கள் இப்படிச் சொன்னார் என்றால் கலைவாணர் அவர்கள் மீது எத்தகைய அன்பை, பற்றை வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

1931-ஆம் ஆண்டுகளில் கிராமியக் கலைக்கு வில்லுப்பாட்டு களின் மூலம் புத்துயிர் ஊட்டினார் விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி என்று அந்தக் காலத்திலேயே பாடினார்.

சுயமரியாதைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்

கலைவாணர் அவர்கள் சுயமரியாதைக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தார். கலைவாணர் அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார். கலைவாணர் அவர்கள் ஆங்கிலத்தில் சொல்ல, இன்னொருவர் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தச் செய்தியை கலைவாணர் அவர்களே சொல்லி இருக்கின்றார்.

இந்தியாவைப் பற்றி மேலும் சொல்லிக் கொண்டு வரும் பொழுது, நம் டைரக்டர் சுப்பிரமணியம் அவர்கள் எங்கள் இந்தியாவிலே கம்யூனிசமும், காந்தியமும் ஒன்றுதான் என்று சொன்னவுடன் மொழி பெயர்ப்பாளன் இல்லை (நோ) என்று சொன்னார். சொல்கிறாயா? இல்லையா?

நான் சொல்வதெல்லாம் பொய் என்று அவன் சொன்னான். நம் டைரக்டர் சுப்பிரமணியம் அவர்கள் கம்யூனிசம் ஏரோப் பிளேனில் பறக்கிறது. காந்தியம் கட்டை வண்டியில் செல்கிறது. அதைச் சொல் என்றார். உடனே முடியாது என்று சொன்னான். சொல்கிறாயா? இல்லையா? நான் சொல்வதை நீ சொல்லவேண்டியது உன் கடமை என்று சொன்னார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. அடக்க முடியவில்லை. சொல்கிறாயா என்ன? என்றேன். இவ்வளவும் நல்ல ஆங்கிலத்தில் கேட்டேன். அப்படி நான் சொல்ல முடியாது என்றான். எனக்குக் கோபம் வந்துவிட்டது.

உங்கள் சாப்பாடும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டேன். இதெல்லாம் தமிழில்தான் பேசினார். எழுந்து போனவுடன் மாஸ்கோ விஸ்கி என்ன என்று கேட்டார். அவருக்கு விவரம் சொல்லப்பட்டது. அந்த ஆளைக் கொண்டு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர் என்று கலைவாணரே சொல்லுகின்றார்.

இந்தச் செய்தி அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய சமூக விஞ்ஞானி கலைவாணர் என்ற நூலில் உள்ளது. இப்படி தனது சுயமரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர் அவர்கள்.

அண்ணா அவர்களின் கடைசி பொது நிகழ்ச்சி

1969 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கின்ற நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் சென்னை தியாகராய நகர் வாணிமகால் அருகேதான் - கலைவாணர் அவர்களுடைய சிலையைத் திறந்து வைத்தார். இதுதான் அண்ணா அவர்களின் கடைசிப் பொது வாழ்வு நிகழ்ச்சி.

1947-ஆம் ஆண்டு வானொலி நிலையம் கலைவாணரைப் பேச அழைத்தது. விடுதலைக்காக உழைத்த தலைவர்களைப் பற்றி கலைவாணர் அவர்கள் சொல்லிக் கொண்டே வந்தார். தந்தை பெரியார் பெயரை கலைவாணர் சொன்னவுடன் வானொலி நிலையத்தார் தந்தை பெரியார் பெயரைச் சொல்லாதீர்கள் என்று சொன்னார்கள்.

வானொலி நிலையத்திலிருந்து திரும்பிவிட்டார்

பெரியார் பெயர் இதில் இடம் பெறவில்லை என்றால் இந்த நிகழ்ச்சியே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு அப்படியே வெளியே வந்தவர்தான் கலைவாணர் அவர்கள்.

அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய இந்தப் புத்தகம் அறிவியல் பூர்வமான, சரித்திர பூர்வமான புத்தகம் என்பதைச் சொல்லி அவர்களைப் பாராட்டுகிறேன். அதேபோல கலைவாணர் அவர்களைப் பற்றி தெரிந்து இணைய தளம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த கலைவாணர் அவர்களுடைய பெயர்த் தியையும் பாராட்டுகிறேன்.

அடுத்து - நாகர்கோவிலில் கலைவாணர் விழா

கலைவாணர் அவர்களுடைய விழா அடுத்து நாகர்கோவிலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும். இவ்வாறு பேசிய தமிழர் தலைவர் மேலும் ஏராளமான கருத்துக்களைக் கூறினார்.

இறுதியாக அன்புக்கொடி நல்லதம்பி ஏற்புரை ஆற்றினார். நல்லதம்பி அவர்களுக்கு 60-ஆவது பிறந்தநாள் விழாவை தமிழர் தலைவர் அவர்கள் பரிசுப் பொருட்களை வழங்கி நல்லதம்பி - அன்புக்கொடி தம்பதியினரை வாழ்த்தினார்.

விழாவில் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு முதலியோர் கலந்துகொண்டனர். இறுதியாக அன்புக்கொடி - நல்லதம்பி ஏற்புரை ஆற்றினார்.

கலைவாணரின் மகன் பொறியாளர் என்.எஸ்.கே. நல்லதம்பி நன்றி கூறினார்.