அறிவுக்கு எட்டாததை நம்பச் சொல்லும் நாடு
நான் ரஷ்யா சென்றிருந்தபோது திருச்சியிலே ஒரு மாபெரும் கூட்டத்திலே காங்கிரஸ் தலைவர்கள் ரஷ்யாவைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்கள்.
ரஷ்யாவிலே ஒன்றும் கிடையாது. மக்கள் எல்லாம் கஷ்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் அதைப்பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள்.
இப்பொழுது இங்கிருந்து ஒரு கோமாளி போயிருக்கிறான். அவன் வந்து என்னென்னவோ உளறப் போகிறான். அதை நீங்கள் எல்லாம் நம்ப வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள்? அது உண்மைதான்.
நம் நாட்டிலே எதை நம்பச் சொல்கிறார்கள் தெரியுமா? அறிவுக்கு எட்டாத எங்கோ இருப்பதாகச் சொல்லுகிற சொர்க்கத்தை நம்பச் சொல்லுகிற நாடு நம் இந்தியா. தேவலோகத்தை நம்பச் சொல்லும் நாடு. ஒருவரும் பார்க்கவில்லை. யாரும் ஏற்க முடியாது.
அதை நம்பச் சொல்லுகிறது நம் நாடு. ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் நேராகச் சென்று ரஷ்யாவைப் பார்த்து வருகிறான். அவன் சொல்வதை நம்பாதே. நாம் எப்படி உருப்பட முடியும்? இந்தியா ஒரு காலத்திலும் ரஷ்யாபோல் மாறுமென்று சொப்பனம் கூடக் காண முடியவில்லை.
அங்கு கோவில்கள் இருக்கின்றனவா என்றால் இருக்கிறது. அங்கு பெரிய சர்ச்சுகள் இன்றும் இருக்கின்றன. அந்த சர்ச்சிலே என்ன இருக்கிறது என்றால், மியூசியம் இருக்கிறது. சர்ச்சுகளில் சாமி இல்லை.
சாமி படத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள். இம்மாதிரி அப்புறப்படுத்தப்பட்ட சிற்பங்கள், நகைகள், மற்றவை எல்லாம் மியூசியம் மாதிரியாக ஜனங்கள் பார்த்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறார்கள்.
கடவுளை அடித்து விரட்டி, ஜோசியர்களுக்குத் தண்டனை கொடுத்து ஜெயிலில் போட்டு, சகுனம் பார்ப்பவர்களைச் சமுத்திரத்தில் தள்ளி தன் கையே தனக்குதவி என்று வாழ்கின்றது. அதுதான் ரஷ்யா!
அங்கு ஒரு ஸ்டாலின் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் எனக்குப் பல காரணங்கள் தோன்றிவிட்டன. எப்படியென்றால் கையை முன்னாலே வைத்திருப்பது வணக்கத்தைக் கூறுகிறது.
இரண்டாவது, -நண்பா, ஜோசியத்தை நம்பாதே, கடவுள், மதம் இவற்றை வெறுத்து விடு, தன் கையே தனக்குதவி, பிறத்தியாரை என்றும் நம்பி வாழாதே என்று சொல்வது போல் இருந்தது.
சென்னை கடற்கரையில் 29.10.1951இல்
கலைவாணர் என்.எஸ்.கே.ஆற்றிய உரை
0 comments:
Post a Comment