Search This Blog

13.3.11

ஆரியர்களுக்கு மனிதத்தன்மை இல்லை!



எதிரிகளுக்கிடையே நாம் வெற்றி முரசு
கொட்டிக் கொண்டிருக்கின்றோம்!
நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் உரை






எதிரிகளுக்கிடையேதான் நாம் வெற்றி முரசு கொட்டிக்கொண்டிருக்கிறோம் என்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தமது உரையில் கூறி விளக்கினார்.




நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:

நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா


நீதிக்கட்சியினுடைய 95ஆம் ஆண்டு விழா இவ்வளவு சீரோடும், சிறப்போடும் நடைபெறுகிற பொழுது இந்த விழாவிலே கலந்துகொள்ளுகிற வாய்ப்பை எனக்கு வழங்கி என்னை பெருமைப் படுத்தியிருக்கின்ற என்னுடைய அன்புக்குரிய நண்பர்களுக்கு, வீரமணி அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


எவ்வளவோ மாற்றங்கள்




நீதிக்கட்சித் தோன்றியபொழுது எந்த சூழ் நிலையிலே தோன்றியதோ அந்த நிலையிலே இருந்து எவ்வளவோ மாற்றங்களை இன்றைக்கு நாம் பெற்றிருக்கின்றோம்.


அன்றைக்கு எது இலட்சியமாக இருந்ததோ அந்த இலட்சியம் விரிவடைந்து கொண்டே யிருக்கிறது. அந்த குறிக்கோள் மேலும், மேலும் ஆழப்பட்டு வருகிறது. அகலப்பட்டு வருகிறது. உயர்ந்து வருகிறது.



மேலும் ஆற்றல் மிக்கதாக உருவாக்கி வருகிறது. உண்மையிலேயே நீதிக்கட்சி தோன்றியபொழுது மிகப்பெரிய செல்வாக்குடைய-செல்வமுடைய தலைவர்கள் ஜமீன்தார்கள், வியாபாரிகள், முன்னணியினர்கள் அவர்கள் மட்டும்தான் இந்த இயக்கத்திலே இருக்க முடிந்தது. அதற்கான காரணம் அவர்களுக்குத்தான் அந்தக் காலத்திலே அரசியல் சூழ்நிலைகளை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது.


ஏழை, எளிய மக்களுக்கு வாக்களிக்கக்கூட உரிமை இல்லை


ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளிகள் அவர்கள் எல்லாம் அரசியலைப்பற்றித் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை இல்லை. வாக்களிக்கக் கூடிய வாய்ப்பும் அவர்களுக்கு அந்தக் காலத்திலே கிடையாது.



வெள்ளைக்காரர்களுடைய காலத்திலே வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் எப்படியோ பி.ஏ., படித்துவிட்டு, எம்.ஏ.படித்துவிட்டு, டாக்டருக்குப் படித்துவிட்டு உலகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கிய அந்த முன்னணித் தலைவர்தான் முதன் முதலாக நீதிக்கட்சிக்கு வித்திட்ட நம்முடைய பெரியவர் நடேச முதலியார்.



தியாகராயச் செட்டியார், டாக்டர் டி.எம்.நாயர், அதிகம் படிக்கவில்லை என்று சொன்னால் கூட, எதை எதைப் படித்தால், என்ன படித்தால், என்ன பேசலாம் என்று தெரிந்து படித்த தந்தை பெரியார் அவர்கள் எல்லாம் (கைதட்டல்). இந்த இயக்கத்தை உருவாக்கி வளர்ப்பதற்கு முன்னோடியாக விளங்கினார்கள் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.




நான்கு தலைவர்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை


இந்த நான்கு பேருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த நான்கு பேரும் காங்கிரசிலே இருந்தவர்கள். நான்கு பேருக்கும் ஓர் ஒற்றுமை-அவரவர்கள் சுயமாக சிந்தித்தவர்கள். நான்கு பேருக்கும் ஒரு ஒற்றுமை-நான்கு பேரும் சேர்ந்து திராவிடத்தை உருவாக்குகிறார்கள். (கைதட்டல்).




நடேச முதலியார் தமிழர் என்ற பெருமைக்குரியவர். தியாகராயர் சென்னையிலே வாழ்ந்தாலும் ஆந்திரர் என்ற சிறப்புக்குரியவர். சென்னையிலே-லண்டனிலே வாழ்ந்தாலும், டாக்டர் நாயர் மலையாளி என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள் தமிழராகவே வாழ்ந்தாலும் கன்னடராகப் பிறந்தவர். எனவே, இந்த நான்கு பேரும் சேர்ந்து திராவிடத்தை உருவாக்கினார்கள்.

1200 ஆண்டுகளுக்கு முன்னாலே....


கன்னடமே தமிழுக்குப் பிறந்தது. (கைதட்டல்). அந்தக் கன்னடப் பெரியாருடைய தாய்மொழி, தியாகராயருடைய தாய்மொழி தெலுங்கும் தமிழில் இருந்து பிறந்ததுதான். 1200 ஆண்டுகளுக்கு முன்னாலே தெலுங்கே, ஒரு தனி மொழியாக சொல்லக்கூடிய நிலை. வடுவு என்று சொல்லுவார்களே தவிர, வடக்குப் பக்கத்திலே தமிழ் வழக்கு என்றுதான் சொல்லு வார்களே தவிர, தெலுங்குக்கு எழுத்து கிடையாது. தெலுங்குக்கு இலக்கியம் கிடையாது. 1200 ஆண்டுகளுக்கு முன்னாலே உள்ள நிலை.




1300 ஆண்டுகளுக்கு முன்னாலே கன்னடமும் பழைய கன்னடமாக, தமிழாகத்தான் இருந்தது. உச்சரிப்பு வேறுபடும். சென்னையிலே பேசுகிற தமிழ் உச்சரிப்பும், குமரியிலே பேசுகிற தமிழ் உச்சரிப்பும் வேறுபடுவது போல இருக்கலாம்.

ஒருவர் பேசினால் இன்னொருவருக்குப் புரியும்


அந்த வேறுபாடு குறைந்திருப்பதற்குக் காரணம், வானொலி ஒரு பக்கம், தொலைக்காட்சி ஒரு பக்கம், ரயில் பயணம் ஒரு பக்கம், பேருந்துப் பயணம் ஒரு பக்கம். மக்கள் கலந்து பழகுகிற வாய்ப்பு மிகுதி.




ஏராளமான செய்தித்தாள்கள், புத்தகங்கள் அச்சு எந்திரம் எல்லாம் சேர்ந்து நம்மை நெருக்கி நெருக்கிக் கொண்டு வந்து, ஏறத்தாழ ஒருவர் பேசினால் இன்னொருவர் புரிந்துகொள்ளக்கூடிய நிலையை இந்த 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து நாம் பெற்றிருக்கின்றோம்.



ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே, எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னாலே இந்த வாய்ப்பு வசதிகள் எல்லாம் பெருகாத காலத்தில் உச்சரிப்பு வேறுபட்டு நிலைத்துப் போயிருக்கு மானால் அந்தத் தமிழ் தனித்தனியாகத்தான் ஆகும்.

மொழிக்கு வரலாறு கிடையாது


இன்றைக்கும் கொங்கு தமிழ் என்கிறோம். நாஞ்சில் தமிழ் என்கிறோம். பாண்டிய நாட்டுத்தமிழ் என்று சொல்லுகிறோம். சென்னைத் தமிழ் என்று ஒரு தமிழை அழைக்கிறோம். அப்படி அழைக்க வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அது அந்தக் காலத்திலே எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.



இன்னும் சொல்லப்போனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ராஜ ராஜ சோழனோ, குலோத்துங்கனோ அவர்கள் எல்லாம் மன்னர்களாக இருந்தபொழுது அவர்களுடைய பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் கூட, ஆந்திர வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, தெலுங்கு தோழர் என்று பெயர் பெறக்கூடிய அளவிற்கு அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவருடைய மொழிக்கு ஒரு வரலாறோ, பெருமையோ இல்லாத ஒரு காலம்.



அவர்கள் தமிழைக்கூட வெறுக்காத காலம். நான்கு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலே இருந்தபொழுதுதான் காங்கிரஸ் கட்சி வளர்ந்தது.


நாயுடு, நாயக்கர், முதலியார்


அப்படி வளர்த்ததிலே மிகப்பெரிய பங்குக்குரியவர்கள் நாயுடு, நாயக்கர், முதலியார் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வரதராஜுலு நாயுடு, தந்தை பெரியார், திரு.வி.க-அந்த மூன்று பேரும்தான்.



அப்புறம் ஆச்சாரியார், சர்மா, சாஸ்திரிகள் எல்லாம் இருந்தார்கள். அவர்களிடத்திலே கட்சி இருந்தது. பிரச்சாரம் இவர்களிடத்திலே இருந்தது. ஆக அப்படி ஒரு காலம் ஆனாலும், நீதிக்கட்சி தோன்றியபொழுது என்ன நிலை?


வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது.....


வீரமணி அவர்கள் பேசுகிற பொழுது மேடையில் துணைவேந்தர், படித்தவர்கள் எல்லாம் இருக்கிறோம் என்று சொன்னார். அவருக்கு நான் இன்னொன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு கூச்சப் பட்டுக்கொண்டு இருக்கின்ற துணைவேந்தர்கள் இன்னும் பல பேர். இருக்கிறார்கள. (கைதட்டல்). இங்கே வராத அறிஞர்கள் பல பேர்.


வரலாறே தெரியாத ஆசிரியர்கள்


வரலாறே தெரியாமல் வரலாற்றை எழுதுகிற ஆசிரியர்கள் எல்லாம் இந்த நாட்டிலே இருக்கிறார்கள். (கைதட்டல்). ஆக, வராதவர்கள் பலர். வந்தவர்கள் பலர். வந்தவர்களுடைய எண்ணிக்கை பெருகியிருக்கிறது-நீதிக்கட்சி போட்ட விதை என்ற அடிப்படையில்தான்.



அ.ராமசாமி படித்து ஒரு துணைவேந்தர் ஆகக்கூடிய அளவிற்கு அவர்களுடைய பாரம்பரியத்திலே ஊக்கத்தைத் தரக்கூடிய சூழ்நிலை நீதிக்கட்சியின் வசம் இருந்தது.



இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சி இல்லை என்று சொன்னால் இன்றைய தமிழ்நாடு இல்லை. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்கிறோமே, அந்த நிலை உருவாவ தற்கான வாய்ப்பு அறிஞர் அண்ணாவாலேயே கூட உருவாக்கியிருக்க முடியாது. அறிஞர் அண்ணா உருவாக்கினார். அதற்கு ஓர் அடித்தளம் இருந்தது. தந்தை பெரியார் அந்தப் பாதையிலே நடைபோடவில்லை.


அரசியலில் உள்ள பித்தலாட்டங்களைப் பார்த்த பெரியார்


அரசியலிலே உள்ள பித்தலாட்டங்களைப் பார்த்துவிட்டு, இது நம்மால் தாங்காது என்று அவர் ஒதுங்கிவிட்டார். தான் ஆலோசனை வழங்குவார்களே தவிர, தானே நேரடிப் பொறுப்பை அவர் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.



ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாம்தானே அந்த வியாதிக்கு மருந்தூட்ட வேண்டும் என்று, யார் இருக்கிறார் என்று கருதி, அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய பின்னர் நீதிக்கட்சி பாரம்பரியத்திலே நாமும் அரசியல் நடத்தத்தான் வேண்டும் என்று கருதினார்.



அதனாலேதான் நீதிக்கட்சியின் 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியிலே அண்ணா பேசுகிற பொழுது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இன்றைக்கு வந்திருக்கிறதென்றால், நாங்கள் நடத்துகிற ஆட்சி நீதிக்கட்சியின் பாரம் பரியத்திலே வந்த ஆட்சி என்று பெருமையோடு சொன்னார்.


நீதிக்கட்சி ஆட்சியில் லஞ்சம்-ஊழல் கிடையாது


இங்கே பேசிய ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் ஈசுவர ரெட்டி பெருமையோடு சொன்னார். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலே ஊழல் கிடையாது; லஞ்சம் கிடையாது; குற்றச்சாற்றுக்கு ஆளானவர்களே கிடையாது; அதுவும் நிதி அடிப்படையிலே-பணம் அடிப்படையிலே குற்றச்சாற்றுக்கு ஆளானவர்களே கிடையாது. அப்படி ஒரு நல்ல ஆட்சி நீதிக்கட்சியினாலே நடைபெற்றது என்று சொன்னார்.



இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் நீதிக்கட்சி குறைகளைப் போக்கத்தான் குரல் கொடுத்தார்கள். முதல் குரல் பள்ளிக் கூடத்திலே இடம் கொடு. இரண்டாவது குரல் கல்லூரியிலே எங்களுக்கு இடம் வேண்டும். மூன்றாவது குரல் அரசாங்கத்திலே வேலை வேண்டும். நான் வரலாற்று நூல்களினுடைய பல நூல்களின் பெயரைக் கூட எழுதிக்கொண்டு வந்தேன்.


நூல்களின் பெயர்கள்


நம்முடைய இயக்கத்தின் வரலாறு, திராவிடர் இயக்கத்தின் வரலாறு, நீதிக்கட்சியின் வரலாற்றை எல்லாம் நம்முடைய நண்பர்கள் பலபேர் எழுதி யிருக்கின்றார்கள். அந்த நூல்களினுடைய பெயர் களை இந்த நிகழ்ச்சியிலே படிப்பது ஒரு கடமை என்று கருதுகின்றேன். ஒரு நூல் நம்பிஆரூரன்-மறைமலை அடிகளாருடைய பெயரன் எழுதியது. Tamil Renaissance and Dravidian Rationalism அண்மையிலே நம்முடைய க.திருநாவுக்கரசு அவர்க ளாலே மொழி பெயர்க்கப்பட்டு, தமிழ் மறு மலர்ச்சியும், திராவிட தேசியமும் என்னும் நூலாக வந்திருக்கிறது.


க.திருநாவுக்கரசு எழுதிய நூல்கள்


அதே நம்முடைய க.திருநாவுக்கரசு நீதிக்கட்சி வரலாறு தொகுதி (1) தொகுதி (2) என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். மிக விரிவான விளக்கமான, தெளிவான நூல். அதைப் போலவே கே.ஜி.ராதாமணாளன், திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர். அவர் திராவிட இயக்க வரலாறு என்று ஒரு விரிவான நூலை எழுதி வழங்கியிருக்கிறார்கள்.



தமிழ்ப் புலமையும், இயக்கப் பற்றும் கொண்ட ஒரு நண்பர், அவர் பெயர் அண்ணாமலை என்று கருதுகின்றேன். அவர் எழுதிய புத்தகம் பயணம் என்ற பெயரால் மூன்று தொகுதிகள் வெளிவந்திருக்கிறது. ஒரு தொகுதிக்கு 400 பக்கங்கள், 500 பக்கங்கள் கொண்ட நூல்.



பயணம் என்ற நூல் உரையாடல் முறையிலேயே, நாடகப் பாங்கிலே உரையாடல் முறையிலே சமுதாயச் சூழலை சித்திரித்துக் காட்டி, அதனால் நீதிக்கட்சித் தலைவர்கள் இன்ன கொள்கையை எடுத்துச் சொன்னார்கள், இன்ன இலட்சியத்தை மேற்கொண்டனர் என்பதை விளக்கி ஒரு புதினம் படிப்பதைப் போல ஒரு கதை படிப்பதைப் போல இந்த இயக்கத்தினுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி யிருக்கின்றார். அவர் தருமபுரி ஆசிரியர் என்று கருதுகின்றேன். அந்தப் புலவர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். மிக விரிவான நூல்.



இந்த அடிப்படையிலே மாநில சுயாட்சி எனும் நூலை முரசொலி மாறன் அவர்கள் மிக விரிவாக எழுதியிருக்கின்றார். அதே போல கே.எஸ்.ஆனந்த் அவர்கள் மலர்க மாநில சுயாட்சி எனும் ஒரு விரிவான நூலை அவர் எழுதியிருக்கின்றார். தந்தை பெரியாருடைய வரலாற்றிலேயும் இந்த அடிப்படை உண்மைகள் விளக்கப்படும்.



பேரறிஞர் அண்ணா, அவர்களுடைய வரலாற்றி லேயும் விளக்கப்படும். இவற்றைத் தவிர, திராவிட இயக்கத் தூண்கள் அதுவும் க.திருநாவுக்கரசு எழுதியது என்று கருதுகின்றேன். தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பனகல் அரசர், அண்ணா, அழகிரி என்று அத்துணைத் தலைவர்களைப் பற்றி எழுதிய நூல்கள் நாட்டிலே வெளிவந்திருக்கின்றன.


நானே பல நூல்களுக்கு அணிந்துரை தந்திருக்கிறேன்


ஆனால், இந்த நூல்களை எவ்வளவு பேர் படிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. நானே கூட பல நூல்களுக்கு அணிந்துரை கொடுத்திருக்கின்றேன். ஆனால் படித்ததாக யாரும் எங்களிடத்திலே சொல்லுவதே கிடையாது; கேட்டதே கிடையாது. காரணம் என்னவென்று கேட்டால், இயக்கத்தைப் பற்றி கூட காதில் கேட்டால் போதும் என்று இருக்கிறார்களே தவிர, படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் அந்த இலட்சிய உணர்வு குறைவு.


ஆட்சியில் இருக்கிறோம் என்ற மிதப்பு....


காரணம், நாம் எதிரிகளை வென்று இன்று ஆட்சியிலே இருக்கிறோம் என்ற நினைப்பு நமக்கு ஏற்பட்ட மிதப்பு காரணமாக நம்மை நாமே உணரத் தவறுகின்றோம்.




நாம் ஆட்சியிலே இருக்கிறோமே தவிர, சூழ்ச்சிக்கிடையிலேதான் நாம் ஆட்சியில் இருக்கிறோம். எதிரிகளுக்கிடையே தான் நாம் வெற்றி முரசு கொட்டிக்கொண்டிருக்கின்றோம். பகைவர் படைதிரட்டுவது தெரிந்தும் கூடத்தான் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த அரசியலை நடத்துகின்றோம். ஆகவே, அரண் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணு கிறவர்கள் எல்லாம் இந்த வரலாற்றைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

--------------------(-தொடரும்) ”விடுதலை”23-11-2010






பார்ப்பனர்களுடைய கொடுமையை எதிர்த்து
முதல் குரல் கொடுத்தவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள்




நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் இனமானப் போர்முழக்கம்






பார்ப்பனர்களுடைய கொடு மையை எதிர்த்து அந்த காலத்தில் குரல் கொடுத்த வர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள் என்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தமது உரையில் கூறி விளக்கினார்.



நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:



ஆரியர்களுக்கு மனிதத்தன்மை இல்லை



இந்த இயக்கம் எவ்வளவு ஆழமான தத்துவ அடிப்படையைக் கொண்டது என்று எண்ணிப் பார்த்தால் தமிழனுடைய மரபிலே மனிதத் தன்மையைக் காப்பாற்றுகின்ற அடிப்படை தமிழ் மரபிலே உண்டு. ஆரிய மரபிலே மனிதத் தன்மையைக் காப்பாற்றமாட்டார்கள். மனிதத் தன்மை என்பதற்கே அவசியமில்லை. ஆரியக் கலாச்சாரம் வளர்ந்ததே பிராமணர்களுக்கு முடிசூட்டத்தான்.



பிராமணர்கள்தான் எழுதுவதற்குத் தகுதி படைத்தவர்கள். அவர்கள்தான் சாஸ்திரங்களைப் படைப்பதற்குத் தகுதிபெற்றவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தால் எல்லா சாஸ்திரங்களும் பிராமணர்களுக்கு அடிமை. எல்லா இலக்கியங்களும் பிராமணர்களைப் போற்றுவது.



அது பாரதமோ, இராமாயணமோ, வேறு எந்தக் கதையோ, பார்ப்பானை உயர்த்துவதற்குத்தான் அந்தக் கதைகள் பயன்பட்டன. தென்னாட்டிற்கு வருகின்ற பொழுது இந்த ஆயுதங்களோடு வந்து சேர்ந்தார்கள். தென்னாட்டிற்கு வந்த பிராமணர்கள் பாரதத்தோடு வந்தார்கள். இராமாயணத்தோடு வந்தார்கள். மனுஸ்மிருதியோடு வந்தார்கள். வேத சாஸ்திரங்களோடு வந்தார்கள்.



ஆரியர்களில் பிராமணர்களே உயர்ந்தவர்கள்



இன்னும் சொல்லப்போனால் உயர்ந்தவர்கள் என்ற அந்த உறுமலோடு வந்தார்கள். ஆரியர்கள் உயர்ந்தவர்கள். ஆரியர்களிலேயே பிராமணர்கள் உயர்ந்தவர்கள். தமிழர்கள் தாழ்ந்தவர்கள். அதிலே சூத்திரர்கள் மிகத் தாழ்ந்தவர்கள்-வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாழ்ந்த வர்கள். ஆரியர்கள் மட்டும்தான் உயர்ந்தவர்கள்.



குழந்தை பெற யாரை அழைப்பார்கள் தெரியுமா?



டாக்டர் அம்பேத்கர் சொல்லுவார். ஆரிய ருடைய வேதங்கள், ஸ்மிருதிகளை எல்லாம் படித்துப் பார்க்கின்றபொழுது அவர்களை விட உயரமான இலட்சணமான தோற்றம் உடைய வர்களாக இருந்தால் தங்களைவிட உயர்ந்த ஜாதி என்று ஏற்றுக்கொண்டு அவர்களை பூதேவர்கள் என்று அழைத்து, அந்த பூதேவர்களை இந்த பிராமணர்கள் குழந்தை விருத்தி செய்வதற்கு அழைப்பது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.



அப்படி ஒரு நாகரிகம் அவர்களுடையது. உயரமாக இருந்தால் ஒரு பெருமை. வெள்ளையாக இருந்தால் ஒரு பெருமை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பேசிய மொழி இன்றைய சமஸ்கிருதம் அல்ல. சமஸ்கிருதம் செய்யப்பட்ட மொழி. எதற்காகச் செய்தார்கள்? தங்களுடைய மொழி உயர்ந்தது என்பதற்காகச் செய்தார்கள். ஆண்டவன் மொழி!



மொழி என்ற தகுதியில் அது உயர்ந்ததா என்றால் அல்ல. இலக்கியம் என்ற முறையில் உயர்ந்ததா என்றால் இல்லை. பிராமணர்களுக்குத் தேவையான கருத்துகளை எழுதி வைத்து இதுதான் உயர்ந்த மொழி. இதுதான் கடவுள் மொழி. இதுதான் ஆண்டவனுக்கு, அர்ச்சனைக்கு உரிய மொழி. இதுதான் தேவமொழி என்று அதை உயர்த்தி னார்கள்.



தமிழ் மொழியோ, தெலுங்கு மொழியோ, கன்னடமோ, மலையாளமோ வேறு ஏதாவது மொழி இந்தியாவில் இருந்திருக்குமானால் பிராகிருதங்கள் எல்லாம் நீச மொழிகள். மனிதர்கள் ஏதோ பிழைப்புக்கு பேசுகிற மொழி.



முதல் குரல் கொடுத்தவர் டாக்டர் நடேசனார்



அவைகளில் இலக்கியம் இருந்தாலும் நல்ல கதை இருந்தாலும் அவைகளுக்கு மதிப்பு இல்லை. அப்படி ஒரு காலம். அவைகளை எல்லாம் எதிர்த்துநிற்கக்கூடிய மனப்பான்மை இந்த நாட்டிலே உருவாவதற்குக் காரணமாக இருந்தது வேதனைப்பட்ட பார்ப்பனர் அல்லாதாருக்காக முதல் குரல் கொடுத்தார்கள் நீதிக்கட்சித் தலை வர்கள். டாக்டர் நடேசனார் குரல், தியாகராயர் குரல், அந்த நாள்களிலே நான்கு பேர் சேர்ந்து இந்த உணர்வுகளை எழுப்ப முடியாத சூழல் இருந்த பொழுது டாக்டர் நடேசனார்தான் பல முறை எண்ணிப் பார்த்து அவர் நடத்திய பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கான விடுதி-திராவிட மாணவர் விடுதியை ஆரம்பித்தார். அந்த விடுதியிலே எட்டு பிள்ளைகளோ, பத்து பிள்ளைகளோ, இலவசமாக தங்க வைத்து உணவு வழங்கி படிக்க வைத்தார்.



பிராமண விடுதிகளில் உணவு வழங்கவில்லை...



அதற்கு இரண்டு காரணம். ஒன்று அவர் காலத்தில் 1912-அதற்குப் பின்னரும் கூட சென்னையில் உள்ள பிராமணர்களின் உணவு விடுதிகளில் எந்த பிராமணர் அல்லாதாருக்கும் சாப்பாடோ உணவோ தருவது கிடையாது. அவர்களுக்கென்று விடுதிகளும் கிடையாது. மாநில கல்லூரியில் படித்தாலும், வேறு எந்தக் கல்லூரியில் படித்தாலும் விடுதியும் கிடையாது.



பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதியில் உணவு கிடையாது. ஆகவே அவர்களுக்கு உணவு வழங்கி அவர்களைப் படிக்க வைப்பதற்காக டாக்டர் நடேசனார் திராவிட மாணவர் விடுதியை நடத்தினார்.



ஆர்.கே.சண்முகம் செட்டியாரை அழைத்தார்



அப்படி நடத்தியபொழுது முதல் ஆண்டு விழாவுக்கோ, இரண்டாவது ஆண்டு விழாவுக்கோ அப்பொழுது படித்து பட்டம் பெற்ற சர்.ஆர். கே.சண்முகம் செட்டியாரை அழைத்து, (அப்பொழுது சர் இல்லை, ஆர்.கே. சண்முகம் தான்). நிகழ்ச்சியில் பேசச் சொன்னார்.



அவர் அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்ட பொழுது டாக்டர் நடேசனாருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏதோ இந்த முறை சண்முகம் செட்டியார் பட்டம் பெற்றிருக்கின்றார் அவரை அழைத்தோம் என்ற எண்ணம் வந்த போதிலும் பின்னர் இப்படி பிள்ளைகளைப் படிக்க வைக்க ஓர் இயக்கம் இருக்க வேண்டும் என்று கருதினார்.



அதற்குத் தகுந்தவர்கள் அப்பொழுது கிடைக்கவில்லை. அப்படியே யாரேனும் ஆதரித்தால் அவர்கள் எல்லாம் வசதி அற்றவர்கள், வழிகாட்ட இயலாதவர்கள்.



கோயில் குளம் வெட்ட எதற்குப் பணம்?



அந்த நிலையிலேதான் டாக்டர் நாயரையும், தியாகராயரையும் சந்தித்து பிராமணர் அல்லாதாருக்காக ஓர் இயக்கம் வேண்டும்; நீங்கள்தான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அந்த இரண்டு பேரையும் இணையச்செய்தார்.



மாநகராட்சியிலே தியாகராயர், டி.எம்.நாயர் உறுப்பினர்களாக இருந்தார்கள். திருவல்லிக் கேணி பார்த்தசாரதி குளம் தோண்ட வேண்டும் என்பதற்கு மாநகராட்சி மன்றத்திலே தீர்மானம் போட்டு நிதி ஒதுக்கிய பொழுது டாக்டர் டி.எம்.நாயர் எதிர்த்தார். தியாகராயர் ஆதரித்தார். தியாகராயருடைய பக்தி உணர்வு கோவிலுக்கு குளம் வெட்ட செலவிடலாமே என்பது.



இரண்டுநாள் விவாதம் நடைபெற்றது



டி.எம்.நாயருடைய பகுத்தறிவு உணர்வு கோவிலிலே நிதி இருக்கின்ற பொழுது மாநக ராட்சி பணத்திலே கோயிலுக்கு குளம் வெட்டித் தரத் தேவையில்லை என்றார். இந்த வாதமே இரண்டு நாள், நான்கு நாள்கள் நடைபெற்றி ருக்கிறது. அப்படி இருந்தவர்களை ஒன்றாக இணைத்து திராவிடர்களுடைய நலனுக்காக, பார்ப்பனரல்லாதாருடைய நலனுக்காக குரல் கொடுக்கக் கூடிய நிலையை டாக்டர் நடேசனார் ஏற்படுத்தினார்.



நீதிக்கட்சியின் ஆட்சி



நீதிக்கட்சி மெல்ல மெல்ல பல துறைகளில் தலையிட்டு வந்தது. குறிப்பாக பரிசோதனைக்காக ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட அன்றைய சென்னை மாகாணத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பெருமை நீதிக்கட்சித் தலைவர்களுக்கு உண்டு. இந்தியாவிலே முஸ்லிம் லீக்கும், நீதிக்கட்சியும்தான் இரட்டை ஆட்சி முறையிலே பங்கு பெற்று அந்தந்த மாநிலங்களிலே நல்லாட்சியை நல்கியது.



அதிலே சிறப்பான ஆட்சி நம்முடைய ஆட்சி. அந்தக் காலத்திலே முதல் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார். அவர் தவறிப்போய்விட்டார்.



பனகல் அரசர் முதலமைச்சர் ஆனார்



பின்னர் அதற்குப் பிறகு ஒரு கட்டத்திலே பனகல் அரசர் முதலமைச்சராக வருகிறார். அந்தக் காலம் ஏறத்தாழ 1923, 24,25 என்று கருதுகின்றேன்.



அவர் முதலமைச்சரே தவிர, மாநிலத்தில் உள்ள எல்லா அதிகாரமும் அவருக்குக் கிடையாது. இந்த நாட்டிலே சில துறைகள்; இந்த நாட்டைச் சார்ந்தவர்களுக்கு-மற்ற துறைகள் வெள்ளைக் காரர்களுக்கே. அந்த நிலையிலே பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தார். அவர் கொண்டு வந்த ஒரு மகத்தான சட்டம்தான் இந்து அறநிலையத் துறை சட்டம். அதற்கு பிராமணர்கள் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.



சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர்



ஆனால், முதலமைச்சர் பனகல் இரண்டு விதத்திலே அவைகளை எல்லாம் சமாளித்தார். அவரோ சமஸ்கிருதத்திலே எம்.ஏ. படித்தவர். எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம் பதில் சொன்னார் (கைதட்டல்). பிராமணர்களால் கோயில் சொத்துகள் பல வகையிலே பாதிக்கப்படுகிறது. அந்தச் சொத்தைக் காப்பாற்ற நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொன்னார். அந்தக் காலத்திலே அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கோபால்சாமி அய்யங்கார். அவர் சென்னை மாகாணத்திலே ஒரு உறுப்பினராக இருந்தார் என்று கருதுகின்றேன்.



அவர் பனகல் அரசரை ஆதரித்துப் பேசக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியதன் விளைவாக முதன் முதலாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.



தி.மு.க.வே வெற்றி பெற்றிருக்க முடியாது



அந்த சட்டம் மட்டும் நிறைவேற்றப்படாவிட்டால் இன்றைக்குக் கூட திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்ட காரணத்தால்தான் செல்வாக்கு உள்ளவர்கள் மக்களை ஆட்டிப்படைக்கக் கூடிய நிலை தடுக்கப்பட்டது.



-----------------(தொடரும்) “விடுதலை”24-11-2010








ஆரியர்-திராவிடர் போராட்டம் வரப்போகிற தேர்தலில் எதிரொலிக்கும்



நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சாட்டை






ஆரியர், திராவிடர் போராட்டம் வரப்போகிற தேர்தலில் எதிரொலிக்கும் என்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தமது உரையில் கூறி விளக்கினார்.


நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் (24.11.2010 ) அன்றையத் தொடர்ச்சி வருமாறு:


முத்தையா முதலியார்


அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு அமைச்சர வையிலே முத்தையா முதலியார் அமைச்சராக இருந்தார். அவர்தான் கம்யூனல் ஜி.ஓ. ஆணையாகப் போட்டார். 1921ஆம் ஆண்டிலேயே பார்ப்பனரல்லா தாருக்குத் தீர்மானம்-அரசு உத்தியோகங்களில் பங்கிட்டுத் தர வேண்டும் என்பது.


எந்த வெள்ளைக்கார அதிகாரியும் நிறைவேற்றித் தரவில்லை. பல இடத்திலே செல்வாக்காக இருந்த பிராமணர்கள் எந்த இடத்தையும் பிரித்துத் தரவில்லை.


கம்யூனல் ஜி.ஓவுக்காக பார்ப்பனரையே பேச வைத்தனர்


வகுப்புவாரி உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அதற்குப் பிறகு போராடிப் போராடி நடேச முதலியாரும் வேறு பலரும் போராடி கடைசியாக முத்தையா முதலியார் அமைச்சராக வந்தபொழுது முதல் கம்யூனல் ஜி.ஓ. உத்தரவை வெளியிட்டார்.


எதிர்ப்பெல்லாம் இருந்தது. சில சில அய்யர்களையே பயன்படுத்தி பதில் சொல்லச் சொன்னார்கள். பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அவ்வளவு இடம் இல்லை. பிராமணர்கள் புறக்கணிக்கப்படவில்லை. ஆகவே, கம்யூனல் ஜி.ஓ வை கொண்டு வரலாம் என்று சட்டமன்றத்திலே பார்ப்பனரையே பேச வைத்தார்கள்.


அப்படித்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இவ்வளவு பேர் படித்தவர்களாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய முழு வாய்ப்பு.


அண்ணா வசதியற்ற குடும்பத்திலே பிறந்தாலும்....


இல்லையானால் நானே கூட எம்.ஏ. வரை படிக்கக்கூடிய வாய்ப்பு, அந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டிருக்காது. பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட ஏழையாக இருந்து வசதியற்ற குடும்பத்திலே பிறந்து அவர் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் படிப்பதற்குப் போதுமான வசதி இல்லாத காரணத்தால் இரண்டாண்டு, மூன்றாண்டு இடைவெளிவிட்டு 1934ஆம் ஆண்டுதான் அவர் எம்.ஏ. பட்டம் பெற்றார்.


எனவே, அப்படி பல சிக்கல்கள் வரக்கூடிய நிலைதான் நம்முடைய குடும்பங்களிலே இருக்கிறது. ஆனால், ஓர் அடிப்படை உண்மையை நான் சொல்ல விரும்புகிறேன். வெள்ளைக்காரன் வெளியேற வேண்டும் என்பதும், நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதும் யாரும் மறுக்க முடியாத கொள்கை.


வெள்ளைக்காரனால் நாம் வாழ்ந்தோம்


ஆனால், வெள்ளைக்காரன் இந்த நாட்டிற்கு வந்த காரணத்தால்தான் நாமெல்லாம் வாழ்ந்தோம். வெள்ளைக்காரன் நம்மை ஆட்சி செய்தான். ஆனால், அடிமைக்குக் காட்டுகிற பரிவை அவன் காட்டினான். அடிமைக்கு பரிவைக் காட்டதவன் ஆரியன். ஆரியன் நம்மை அடிமைப்படுத்தினான்; கொடுமைப்படுத்தினான்.


எண்ணாயிரம் என்ற இடத்திலே....


ஆங்கிலேயன் அடிமையைப் பரிவோடு நடத்தினான். இன்னும் சொல்லப்போனால் அன்றைக்கு அந்த வெள்ளைக்கார அதிகாரிகளிட மிருந்து சமையலுக்காக அவர்களிடத்திலே வேலை பார்த்தவர்கள்தான், ஆதிதிராவிட சமுதாயத்திலே முதன்முதலாகப் படித்து வாய்ப்பு பெற்றவர்கள். அந்த ஆங்கிலேயர் ஆட்சி இருந்த காரணத்தால் தான் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் படிப்பதற்கு உரிமை இல்லை என்ற நிலைமை நீக்கப்பட்டிருக்காது. அந்த அடிமை சாசனம் முறியடிக்கப்பட்டிருக்காது. ராஜராஜ சோழன் காலத்திலே எண்ணாயிரம் என்ற இடத்திலே மிகப்பெரிய கல்வி நிலையம், வேதபாடசாலை. 300 பேர் 400 பேர் படித்தார்கள். படிக்கிற பிராமணப் பிள்ளைகளுக்கெல்லாம் உணவு, உடை, எண்ணெய் தேய்த்து கொள்வதற்கு எண்ணெய், மற்றும் அதற்கான பொருளும் குளிப்பதற்கு வசதி இவை எல்லாம் வழங்கினார்கள். அந்த ஆசிரியர்களுக்கு மாதம் 5 பவுன், 4 பவுன், மூன்று பவுன் என்று சம்பளம்.


வேத பாட சாலையில் சத்தம் கேட்கும்


ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு பிராணமர்கள் மட்டும் படிப்பதற்கு பெரிய பெரிய பாட சாலைகள். மயிலாடுதுறையிலே நான் சிறு பிள்ளையாக படித்தபொழுது அங்கு உள்ள பட்டமங்கலத்தில் இரண்டு, மூன்று பெரிய கட்டடங்கள் எல்லாம் வேத பாட சாலை.


காலையிலே என்னுடைய தந்தையார் கடை திறக்கச் செல்கிற பொழுது நான் உடன் செல்வேன். அப்பொழுது அந்த வேத பாடசாலையிலே ஓதுகின்ற சத்தம் கேட்கும்.முனிசிபல் ஹைஸ்கூல் திறக்கப்படுகிறவரையில் வேத பாடசாலை சத்தம்தான். அத்தனையும் பிராமணர்கள்தான். இன்னும் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பிராமணர்கள் சாப்பிடுகின்ற இலையைத்தான்-ஏழை எளிய மக்கள்-அந்த எச்சில் இலையில் உள்ள உணவுகளை எடுத்து உண்பார்கள்.


கண்ணாரப் பார்த்திருக்கிறேன்


அதைக் கண்ணாரப் பார்த்திருக்கின்றேன். பிராமணர்களுக்கு இருந்த வசதிக்காக நான் சொல்லவில்லை. பிராமணர்கள் மட்டும்தான் படிக்கலாம். வேடிக்கை என்னவென்றால், மனுதர்மம் மனுதர்மம் என்று சொல்லுகின்றோமே, அந்த மனுதர்மம்-ஆரிய இனத்தைத் தவிர மற்ற இனத்தை அழிப்பதற்காகத் தீட்டப்பட்ட சதித்திட்டம் (கைதட்டல்).


திருப்திப்படுத்துவதற்காக பட்டம்


அந்த மனுதர்மத்திலே பிராமணர் அல்லாதாரை சூத்திரர் என்று சொல்ல நம்முடைய தலைவரோ, மற்றவர்களோ பேசுவதை சொன்னதைப் போல தியாகராய செட்டியார் எல்லாம் அவர்கள் வைசியர் என்றோ, சில பட்டப்பெயர்களுக்கு உரியவராக இருந்தால் கூட, அவருடைய அகராதியிலே இந்தப் பட்டங்கள் எல்லாம் சூத்திரர்களுக்கு வழங்கி அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக வழங்கப்பட்டதே தவிர, இவர்களை மேல்ஜாதியாக ஏற்றுக்கொள் வதற்காக அல்ல.


சற்சூத்திரர் என்று ஒரு பட்டம். சூத்திரர்களிலேயே கொஞ்சம் பணம் வசதி இருந்து, பிராமணர்களை அழைத்து சடங்கு சம்பிரதாயங்கள் செய்வார்கள். அவர்களை சற் சூத்திரர்கள் என்று ஆக்குவார்கள்.


அவர்கள் கையில் ஆதிக்கம்


அதற்கு என்ன அர்த்தம் என்று நாங்கள் பல காலம் பேசியிருக்கின்றோம். சூத்திரன் என்றால், இன்னாருடைய மகன் சற்சூத்திரன் என்றால் சுத்தமாக இன்னாருடைய மகன் (கைதட்டல்). ஆக, அந்தப்பட்டப் பெயர் வழங்கக்கூடிய அளவுக்கு நிலைமை எதனாலே வந்தது. அவர்கள் கையில் ஆதிக்கம் இருந்தது. எல்லாம் அவர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் அவர்கள்தான் வக்கீல், அவர்கள்தான் டாக்டர், அவர்கள்தான் எம்.எல்.ஏக்கள், அவர்கள்தான் அமைச்சர்கள் என்று காலம் போய் இப்பொழுது ஒரு பார்ப்பன அமைச்சர் கூட கிடையாது. (கைதட்டல்).


ஒரு அமைச்சர் கூட அவர்கள் இல்லை. இருந்தாலும் எல்லா அமைச்சர்களையும் வீழ்த்தக்கூடிய ஆற்றல் அவர்களிடத்திலே இருந்தது.


ஏதோ இந்தப் பதவிகளுக்கு வருகிறோமே தவிர, இன்னும் இனம் தலைநிமிரவில்லை. இனஉணர்வு இன்னும் ஏற்படவில்லை. நாம் வேண்டுமானால் ஏதோ கூடியிருக்கிறோம்.


வீரமணியின் செல்வாக்கால்.....


வீரமணியின் செல்வாக்கால் கூடியிருக்கிறோம், அல்லது இந்த மண்டபத்துக்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது; அதற்காகக் கூடியிருக்கிறோம். அல்லது விளம்பரம் பெற்ற பேச்சாளர்கள் சில பேர் இருக்கிறோம்; அதற்காகக் கூடியிருக்கிறோம். ஆனால், திராவிடராக இன்னும் கூடவில்லை.


உண்மையான திராவிடன் என்றைக்கும் ஆரியத்தை ஏற்றுக்கொள்ளமாட்டான். (கைதட்டல்).


ஆரியக் கலாச்சாரம் வீழ்த்தியது


அந்த ஆரியக் கலாச்சாரம் எந்த அளவுக்கு நம்மை வீழ்த்தியது என்றால், சுயமரியாதை இயக்கம் தொடங்கி தந்தை பெரியாருடைய தலைமையிலே சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்ட, தம்பதிகள், இரண்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள்-இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணவனும், மனைவியுமாக வாழ்க்கை நடத்தி பின்னர் அவர்கள் இறந்துபோகிற பொழுது, தந்தையின் சொத்துக்கு பிள்ளை உரிமை கொண்டாடி வழக்குப் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனென்றால், அவர் இரண்டு திருமணம் செய்தவர். அந்த வழக்குப் போட்டபொழுது நீதிமன்றத்திலே, உங்களுக்கு எப்பொழுது திருமணம் ஆயிற்று? நீங்கள் சாஸ்திரப்படி திருமணம் செய்துகொண்டீர்களா? என்று கேட்டபொழுது, நாங்கள் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்று சொன்னார்கள். அவருடைய பெயரை எல்லாம் நான் மறந்து விடுவேன்.


உயர்நீதிமன்றத்திலே சொன்ன பதில்-நீங்கள் செய்துகொண்ட திருமணம் செல்லாது-விவாகம் செல்லாது; நீங்கள் சாஸ்திரப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை; ஓமம் வளர்க்கவில்லை; அக்னியை சுற்றிவரவில்லை; மந்திரம் சொல்லவில்லை.


திருமணம் செல்லாது


அதுவும் இந்து தர்மப்படி உங்களுடைய திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியது. அப்படி செல்லாது என்று சொன்னதற்கு என்ன காரண மென்றால், மனுதர்மத்திலே இன்னின்ன சடங்குகள் செய்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரு விதி.


இன்னொருவிதி-அந்தந்த ஜாதிக்கிடையிலேதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது. மூன்றாவது விதி- எந்தக் காரணத்தாலும் மேல் ஜாதிக்காரனாக இருக்கிற ஆடவன் பிராமணன், மற்ற ஜாதிப்பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது பிராமணனுக்கு அடுத்த சத்திரியன் தனக்குக் கீழே இருக்கின்ற சமூகப் பெண்களை திருமணம்செய்து கொள்ளலாம். கீழ்ஜாதி ஆடவன் மேல் ஜாதிப் பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாது; சாஸ்திரம் அனுமதிக்காது.


சாஸ்திரம் என்றால் கேட்டு வாசற்படி மாதிரி. அது சிலபேரைத்தான் உள்ளே விடும். சில பேரை உள்ளே விடாது.


அதற்கு மேலே அடுத்து சூத்திரர்கள். அவர்க ளுடைய சமூகத்திலேயே திருமணம்செய்து கொண்டால் கூட, திருமணம் ஆகாது-விவாகம் ஆகாது. ஏன் விவாகம் ஆகாது என்று கேட்டால், சூத்திரர்களுக்குத் திருமண உரிமையே கிடையாது.


சூத்திரர்களை எல்லாம் தாசி மக்கள், அடிமைகள், போரில் பிடிக்கப்பட்டவர்கள் என்கின்ற அடிப்படிப்பட்ட வாய்பாட்டில் என்றைக்கும் தகுதி அற்றவர்கள். ஆகவே, அவர்களுடைய திருமணமே செல்லாது. அது அவர்களுடைய சாஸ்திரம்.


சூத்திரன் ஆட்சி நடத்துகின்ற நாட்டில்....


அந்த அடிப்படையில்தான் சூத்திரன் ஆட்சி நடத்துகின்ற ராஜ்யத்தில் குடியிருக்கவே கூடாது. ஆக, சூத்திரனை ஆட்சி நடத்தவிடக்கூடாது. நீ குடியிருக்க வேண்டுமா? ஆகவே, அவனை ஆட்சி நடத்தவிடாதே-இந்தத் தேர்தலில் கூட அது மறைமுகமாக ஒலிக்கும் என்று கருதுகின்றேன். (கைதட்டல்).


ஆக, இந்த நாட்டு மக்கள் மனித உரிமை பெற முடியாமல் தடுக்கப்பட்டார்கள். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோயபெல்ஸ் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னாலே ஒரு தத்துவவாதி சொன்னான்: ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்து மக்களை அழித்தால் போதாது; அந்த இனத்து மக்களுடைய நாகரிகத்தை அழித்தால் போதாது; அந்த இன மக்களுடைய மொழி அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்று சொன்னான்.


அதே போல டிவெல்ரா சொன்னார்-அயர்லாந்து நாட்டை விடுவிப்பதற்காக அந்த மாவீரன் சொன்னான்: என் நாட்டை இழந்தாலும் இழப்பேன். என் மொழியை ஒரு நாளும் இழக்க மாட்டேன் என்று சொன்னான். என் மொழியை இழக்காவிட்டால் மறுபடியும் என்னுடைய மக்கள் தலையெடுத்து நாட்டைக் கைப்பற்றிக்கொள்ள முடியும்.


மொழியை அழித்துவிட்டால்.....


என்மொழியை அழித்துவிட்டால் யார் அய்ரிஷ் மக்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே, என்னுடைய மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னான். ஆரியம் இந்தியாவிலே எந்த மொழியும் தனித்து வளருவதற்கு அனுமதிக்கவில்லை.


-------------------(தொடரும்) ---”விடுதலை” 26-1-2011






நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா




என்னதான் அரசியல் வாழ்வு கிடைத்தாலும் இனஉரிமையை மறந்துவிடக்கூடாது



நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் விளக்கவுரை







என்னதான் அரசியல் வாழ்வு கிடைத்தாலும் இன உரிமையை மறந்துவிடக் கூடாது என்று தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் விளக்கவுரையாற்றினார்.



நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:



தமிழ்மொழியை அழிக்க 150 ஆண்டுகால முயற்சி



ஆரிய மொழி கலாச்சாரத்தை எல்லா மொழி யிலும் புகுத்தினார்கள். தமிழ் போல தனித்து பாரம்பரியமாக வளர்ந்த அந்த மொழியைக் கூட அழிக்க முயற்சித்தார்கள்.



மணிப்பிரவாள நடை என்று இடைக்காலத்தில் தமிழ்மொழியை சிதைப்பதற்கே 150 ஆண்டுகாலம் நடவடிக்கை எடுத்தார்கள். நல்ல தமிழ் எது என்று கேட்டால் வடமொழி நிறைவாக கலந்து எழுதுகின்ற தமிழ்தான் நல்ல தமிழ் என்றார்கள்.



இந்தியாவிலே உள்ள எல்லா மொழிக்கும் சமஸ்கிருதம் கடன் கொடுத்திருக்கின்ற காரணத் தால் சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழி. மற்ற மொழி எல்லாம் தாழ்ந்த மொழி. அந்த இலக்கணம் தமிழுக்குப் பொருந்தாது என்று சொன்னாலும் கூட, தமிழ் அந்த இலக்கணத்திற்கு உரியதாக அவர் களாலே கருத்தப்பட்டது.



வெள்ளைக்காரன் வந்ததால்....



நல்ல வேளை வெள்ளைக்காரன் வந்தான். நல்ல வேளை கிறிஸ்துவ மதம் வந்தது. நல்ல வேளை டாக்டர் கால்டுவெல் வந்தார். நல்ல வேளை ஜி.யு.போப் வந்தார். இன்னும் சொல்லப்போனால் அவர்களைப் போன்ற பல அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்தவர்கள்-தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்-வடக்கே வந்தவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு ஆய்வு நடத்தினார்கள்.



தெற்கே வந்தவர்கள்-தமிழகத்திற்கு வந்தவர்கள் தமிழிலே ஆய்வு நடத்தினார்கள். தமிழ் மொழி யினுடைய தனித்தன்மையை உணர்ந்தார்கள். உணர்ந்து போற்ற ஆரம்பித்தார்கள். பாராட்டி னார்கள்.



தமிழர்களையும் ஓர் இனம் என்று சொன்னார்கள்



தமிழர்களையும் ஒரு நாகரிகத்தினுடைய இனம் என்று சொன்னார்கள். ஒரு இனம் என்ற தகுதியே வந்த காரணத்தால்-வெள்ளைக்காரனோ அவனைச் சேர்ந்தவனோ வந்த காரணத்தால் கிடைத்ததே தவிர, இல்லையானால் ஆரிய கலாச்சாரம் மட்டும் இருந்திருக்குமானால், அந்நிய ஆட்சி வராமல் இருந்திருக்குமேயானால் நம்முடைய இனம் தலை எடுத்திருக்க முடியாது.



இனம் இருந்திருக்கலாம் அடையாளம் தெரி யாமல் அடிமைப்பட்ட இனமாக, ஒடுக்கப்பட்ட இனமாக , ஓரங்கட்டப்பட்ட இனமாக, கூலி வேலை செய்கிற பட்டாளமாக நாம் இருந்திருப்போமே தவிர, இவ்வளவு துணைவேந்தர்களையும் பார்க்க முடியாது (கைதட்டல்); அமைச்சர்களைக் காண முடியாது.



கருணாநிதியே பிறந்திருக்கமாட்டார்



ஆட்சியிலே நாம் இருக்கவே முடியாது. கருணாநிதி என்ற ஒரு மனிதனே பிறந்திருக்க மாட்டார் (கைதட்டல்). அந்த அளவுக்கு இந்த நாட்டிலே ஒரு நிலை. அந்த ஆரியக் கலாச் சாரத்தினுடைய விளைவை இன்னொரு வகையிலே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.



பரிதிமாற் கலைஞர் யார்?



ஒன்றிரண்டு பிராமணர்கள் தமிழ்மொழியிலே பற்று வைத்து, தொண்டு செய்திருப்பது உண்மைதான். பெரியார் தமிழைப் பாராட்டாமலா இருந்தார்? பரிதிமாற் கலைஞர் பாராட்ட வில்லையா? அந்த பிராமணர்கள் ஆரியக் கலாச்சாரம்தான் உயர்ந்தது என்ற எண்ணத்திற்கு ஆட்படாதவர்கள்.



அதுதான் உயர்ந்தது என்ற எண்ணத்திற்கு ஆட்பட்டிருந்தால் தமிழைப் போற்றியிருக்க மாட்டார்கள். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று சொல்லியிருப்பாரா? (கைதட்டல்).



பார்ப்பனரை அய்யர் என்ற காலமும் போச்சே



பார்ப்பனரை அய்யர் என்ற காலமும் போச்சே என்று சொல்லியிருப்பாரா? ஆனால், அவர்களும் கூட ஆங்கிலம் வந்த காரணத்தால்தான் இந்தத் தெளிவைப் பெற்றவர்கள். ஆங்கிலமே இல்லை என்றால் பாரதியாருக்கு அந்தத் தெளிவு வந்திருக்குமா? கால்டுவெல் இலக்கணம் இல்லாவிட்டால பரிதிமாற் கலைஞர் இப்படி வாதாடியிருப்பாரா? இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலம் இந்த நாட்டிற்கு வரக்கூடிய வாய்ப்பை நாம் பெற்ற காரணத்தால் பி.டி.சீனிவாச அய்யங்கார் தொல் தமிழருடைய வரலாற்றை எழுதினார். Pre Aryan Tamil Culture என்ற புத்தகத்தை எழுதினார்.



பிராமணர்கள் மாறி .......



அப்படி எவ்வளவோ மாற்றங்களுக்கு பிராமணர்கள் மாறி நமக்கு ஆதரவாகவோ நடு நிலையாகவோ பல கருத்துகளைச் சொன்னவர்கள். உண்டென்றால் ஆங்கிலத்தினுடைய செல்வாக்கு கூடும். (கைதட்டல்).



அரசியல் வாழ்வு கிடைத்தாலும் இன உரிமையை மறந்துவிடக்கூடாது



நாம் இந்த வாய்ப்பைப் பெற்றோம் என்றால் ஆங்கிலேயர்களால் வந்த வாய்ப்பு. ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் நம்முடைய நிலை மிகத் தாழ்ந்து போயிருக்கும். அந்த நிலையை மாற்றுவதற்கு நீதிக்கட்சிதான் முதல் குரல் கொடுத்த கட்சி என்ற முறையிலேயும், அந்த வழியில் திராவிடர் கழகம், அந்த வழியிலே திராவிட முன்னேற்றக் கழகம் அந்த வழியிலே பெரியார், அண்ணா; அந்த வழியிலே இன்றைக்கு நாம் தொடர்ந்து நடைபோடுகிறோம் என்பதையும் நான் நினைவூட்டி என்னதான் அரசியல் வாழ்வு கிடைத்தாலும். இன உரிமையை மறந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் நீதிக்கட்சி என்பதை நினைவூட்டி (பலத்த கைதட்டல்) என் உரையை நான் நிறைவுசெய்கிறேன், வணக்கம்.



-இவ்வாறு நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.


------------------ “விடுதலை” 27-11-2010

0 comments: