Search This Blog

12.3.11

வரலாறு உள்ளவரை வாழ்வார்கள் நடராசன் - தாளமுத்து


நடராசன் - தாளமுத்து


இந்த இரு பெரும் வீரர்கள் வரலாறு உள்ளவரை வாழ்வார்கள். பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைப் புகுத்தும் தந்திரத்தில் இந்தியைக் கட்டாயப் பாடம் என்றுஅறிவித்தவர் (10.8.1937) குல்லுகப்பட்டரான - அன்றைய சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் சி.ஆர்.ஆச்சாரியார் (ராஜாஜி).ஆரிய சூழ்ச்சியின் அடிநாதத்தைப் புரிந்து கொண்ட அரிமா பெரியார் போர் தொடுத்தார். தொண்டர்கள் துடித்து எழுந்தனர்.தமிழ்நாடு - அதற்குமுன் கண்டிராத உணர்வின் எரிமலையாக வெடித்துக் கிளம்பியது.சென்னையைச் சேர்ந்த நடராசன் என்ற தோழர் சிறையில் முதல் பலியானார்


(15.1.1939).குடந்தையைச் சேர்ந்த தாளமுத்து என்ற இளங்காளை சென்னைப் பொதுமருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார் (12.3.1939).சென்னை இந்து தியாலாஜிக்கல் உயர்நிலைப் பள்ளிமுன் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மறியலில் (13.9.1938) கைது செய்யப்பட்டு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிபதி மாத வராவ் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.கைதி என்றாலும் தலைதாழாச் சிங்கமாக நின்றான் அந்த மானமறவன்.இப்படியே விட்டுவிட்டால் சொந்த ஊருக்குத் திரும்புவாயா? என்று மாஜிஸ்டிரேட் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.கோழையா அந்தக் கொள்கைக் குன்று? நெஞ்சு நிமிர்த்து வெடிக் குரலால் முடியாது - சிறை ஏகத் தயார்! என்று கர்ச்சித்தான்.நான்கு மாத கடினக் காவல் தண்டனை -தீர்ப்பளித்தார் நீதிபதி - சிரித்த முகத்துடன் வெஞ்சிறை ஏகியது அந்த வீர வேங்கை.தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று தமிழர் வெள்ளம் உச்சியிடிந்து விழுந்தது போல குரல் கொடுத்தது.புலியென உறுமிச் சென்ற அந்தக் கட்டிளங்காளை சிறையில் நோய் வாய்ப்பட்டான். சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுப் பலனின்றி இமைகளை இறுதியாக நிறுத்திக் கொண்டான்


(12.3.1939).பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களின் கொள்கை முழக்கத்தோடு அந்த மாவீரனின் இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நடராசன் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே தாளமுத்துவும் புதைக்கப்பட்டான் - இல்லை, இல்லை - விதைக்கப்பட்டான்.இரங்கல் கூட்டத்தில் அண்ணா வீரவுரையாற்றினார்.


(பெரியார் அப்பொழுது சிறையில்).தமிழராட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களை (நடராசன்-தாளமுத்து) அடிப்படையாகக் கொண்டே கட்டப்படும். வருங்காலத்தில் பெரியார் உருவத்தை நடுவில் வைத்து தாளமுத்து, நடராசன் உருவங்களை இரு பக்கங்களிலும் எழுப்ப வேண்டும் என்று கூறினார்.இன்று சென்னை எழும்பூரில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (M.M.D.A.) கட்டடம் வானளாவ கம்பீரமாக நிற்கிறதே - அந்தக் கட்டடத்திற்கு தாள முத்து-நடராசன் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தவர் நம் இனமான முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் ஆவார் (14.4.1989).முக்கிய தகவல் ஒன்று உண்டு.


தாளமுத்து மறைந்த நிலையிலும் அவரின் துணைவியார் குருவம்மாள் துக்கத்தில் புரண்டுகிடக்காது, அதே இந்தி எதிர்ப்புப் போரில் குதித்துச் சிறைப்பட்டாரே! அடடே, நம் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கவில்லையா!


------------------------ மயிலாடன் அவர்கள் 12-3-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: