Search This Blog

15.3.11

வன்னியகுலக்ஷத்திரியர் மாநாட்டில் பெரியார்


சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு
உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்


சகோதரர்களே!

உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக்கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜனமுள்ள விவசாயத்தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக் கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால் இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நான் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன்.


அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப்போக நான் இங்கு வரவில்லை. மற்றபடி நான் எந்தத் துறையில் ஈடுபட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறேனோ எந்தக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்குச் சாதகம் ஆனவைகள் எனக் கருதி தொண்டாற்றுகின்றேனோ அதைப்பற்றியேதான் இப்பொழுதும் இந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்போகிறேன்.


நான் சொல்லுவனவற்றில் பல உங்கள் மனதிற்குச் சங்கடத்தைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். பல உங்களுக்குப் பிடிக்காமலிருந்தாலுமிருக்கலாம். எப்படி இருந்த போதிலும் என் சொற்கள் முழுவதையும் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நான் கூறப் போவதில்லை. நான் கூறுவனவற்றை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியெனப்பட்டால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள் என்ற முறையில்தான் சில சொல்லுகிறேன்.

சகோதரர்களே

பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதிப் பெருமையைப் பற்றி பாட்டிக் கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இம் மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் நீங்கள் சில ஜாதிக்கு மேலானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆக வேண்டுமென்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக் கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ் ஜாதி பட்டம் நிலைத்து விடுவதோடு நீங்கள் மேல் ஜாதி என்கின்ற தத்துவம் தகராறில் இருந்து விடுகின்றது.

உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல க்ஷத்திரிய ரென்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர் கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதமில்லாமல் ஒப்புக் கொண்டவர் களாகி விட்டீர்கள். ஆனால் உங்கள் க்ஷத்திரியத் தன்மையாலோ தகராறுக ளுக்கு குறைவில்லை. நீங்கள் வன்னியர் குல க்ஷத்திரியரென்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல க்ஷத்திரியர்களென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றை விட கொஞ்ச மும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி உங்களை கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை க்ஷத்திரி யர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழிவார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பேரைச் சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது. நாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் க்ஷத்திரியர்கள் அல்ல என்று சொல்லி விட்டு தாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் க்ஷத்திரியர்கள் அல்ல. நாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் க்ஷத்திரி யர்கள் அல்ல; நாங்கள் தான் சரியான க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். இது போல் இன்னமும் குடகு க்ஷத்திரியர்கள் எத்தனையோ பேர் க்ஷத்திரியப் பட்டத்திற்கு இத்தனைப் பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும், சண்டை யும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கிண்ணம் கழுவுபவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்ப வனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்து விட்டது. அப்படி கிடைக் கப்பெற்ற அந்தப் பிச்சைத் தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக் கொண்டு மகாநாடு கூட்டி, க்ஷத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லி விடுகிறான். அப்படி இருந்துங்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் சிறிதும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக்கழுவி தண்ணீரைக் குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக்கிறான். ஆகவே இந்த மாதிரி ஒரு இழி வானதும் முட்டாள்தனமானதும் அர்த்தமற்றதுமான காரியங்களுக்கு இம் மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தாலும் இம்மகாநாடுகள் அழிந்து போவதே மேல் என்று மிக்க வருத்தத்துடன் சொல்லிக் கொள்ளுகிறேன்.



தங்கள் ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாயும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடு களின் சுபாவமாய் விட்டது. இதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் என்பவர்கள் தங்களை விஸ்வப் பிராமணர்கள் என்பதும், சௌராஷ்டிரகள் என்பவர்கள் தங்களை சௌராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், சாலியர்கள் என்பவர்கள் தங்களை சாலிய பிராம ணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்க்கை நடத்திக் கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேரிப் பட்டங்களை வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றதை பார்க்கின்றோம்.

ஆனால் பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்து கொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல க்ஷத்திரியர்கள் கூட அல்ல பேசப்போனால் வைசியர் கூட அல்ல, நாங்கள்தான் பிராமணர்கள், நீங்கள் எல்லோரும் எங்களுக்குத் தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் சட்ட புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்து விட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக் கொண்டு சௌகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேரி சௌக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப்பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படத் தக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம்.


ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக் கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! இந்தியா ஒரு நாடு ஆக வேண்டாமா?

இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே இந்தியா முழுமையும் பற்றிபேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாய் இருக்கின்றதா?

நீங்களே யோசித்துப் பாருங்கள். சாதிகள் காட்சி சாலையாக, மத கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?

இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம்ம நாட்டை யும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்த்துக் கொள்ளுவதென்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிசயிக்கத்தக்கபடி முன்னேறுகிறார்கள். ஆச்சரியமானதும் அற்புதமானதுமான காரியங்களைச் செய்கின்றார்கள்.

நாம் இன்றையதினம் யார் க்ஷத்திரியர் என்று பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

க்ஷத்திரியன் என்கின்ற வார்த்தைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? அந்த பெயரினால் என்ன லாபம். அந்த பட்டம் வைத்துக் கொண்டால் நம்மிடம் என்ன மாறுதல் ஏற்பட்டு விட்டது? எந்த தேசத்தைப் பிடித்தோம். எதை ஆளுகிறோம் யாரிடத்தில் கூறித் தரம் காட்டினோம். ஏதோ சிலர் பூணூலைப் போட்டுக் கொண்டதைத் தவிர காரியத்தில் 100க்கு 90 பேர்கள் கூலிகளாயிருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் காணோமே. எனது நாடார் நண்பர்கள் அநேகர் இப்போது பூணூலை அறுத்தெறிய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் ஜாதி விஷயத்தை இனி மறந்துவிட்டு உலகப் போக்கில் கலந்து கொள்ள முன்வாருங்கள் என்று கூப்பிடவே இங்கு வந்தேன். உலகப்போக்கு இப்போது எப்படி இருக்கிறது. ஆகாயத்தில் மனிதன் மணிக்கு 250 மயில் வேகம் பறக்கிறான். தண்ணீருக்குள் முழுகும் மனிதரை மணிக்கு 50 மயில் வேகம் ஓடுகிறான். நீங்கள் இமயமலைமேல் ஏறமுடியாமல் அதுதான் கைலாயம், அதுதான் வெள்ளிமலை. அங்குதான் பரமசிவன் கால்மேல் கால்போட்டுக்கொண்டு துடைமேல் பார்வதியை உட்கார வைத்துக் கொண்டு தலையில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு அதன் மூலம் கங்கை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த புளுகுக் கதைகள் எல்லாம் இப்போது தவிடுபொடி ஆகும்படியும் வெள்ளைக்காரன் “கைலாயத்திற்கு” போய் “ பரமசிவனின் தலையைப் பிடித்து” ஆட்டி அங்கு ஒன்றுமில்லை என்பதை ருஜுப்படுத்திவிட்டான். ஆணைப் பெண்ணாக் கவும், பெண்ணை ஆணாக்கவும், செத்தவர்களை பிழைக்க வைக்கவும் முயற்சிக்கிறார். கிழவனைக் குமரனாக்குகிறான். ஆண் குழந்தை வேண்டு மானால் ஆண் குழந்தையையும் பெண் குழந்தை வேண்டுமானால் பெண் குழந்தையும் பெற்றுக் கொள்ள வழிகண்டு பிடிக்கிறான். செவ்வாய் மண்டலம் போகிறான். தந்தியில் சேதி அனுப்பி பாட்டு அனுப்பி இப்போது ஆட்டம் அனுப்புகிறான். பொம்மைகள் எல்லாம் கம்பியில்லாத தந்தியில் உருவங்கள் எல்லாம் ஆகாய தந்தியில் வருகின்றது. (நமக்கு யார் க்ஷத்திரியர் என்பதும், க்ஷத்திரியர் உலகத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதும் இன்னமும் நமது ஆராய்ச்சி யில் முடிவு பெறவில்லை) ஆகவே அந்தமாதிரி உலகப் போக்கை நீங்களும் தயவு செய்து திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளத்தான் இங்கு வந்தேனே ஒழிய இவ்வளவு காயலாவுடன் உங்கள் மனம் நோகும் படியே நான் இங்கு வரவில்லை. மற்றபடி இந்த நாட்டில் இருக்கும் உங்கள் சமூகம் ஒற்றுமையுடன் பாடுபடாவிட்டால் நீங்கள் எவ்வளவோ மேன்மை பெற்று இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செய்யலாம். சட்டசபை ஸ்தல ஸ்தாப னம் இவைகளை கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர் நிலைக்கு கொண்டு வாருங்கள்.


வெறும் நாமமும் பூணூலும் ஒன்றையும் அளித்து விடாது. மூடப்பழக்க வழக்கங்களை விட்டு ஓட்டி அறிவை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள். சட்டசபை முதலிய தேர்தல்களில் நீங்கள் தைரியமாய் முன் வாருங்கள். கட்சி பேதங்களை விட்டு ஒழியுங்கள். முதலில் உங்கள் சமூகம் முழுவதும் ஒன்றானால்தான் மற்ற சமூகங்களுடன் நீங்கள் சரிசமமாக ஒத்துவாழமுடியும் என்பதை தெரியப்படுத்திக் கொண்டு நான் இதுவரை சொன்னவைகளை அப்படியே நம்பிவிடாமல் உங்கள் சொந்த அறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு இம் மகாநாட்டை திறந்து வைத்ததாகச் சொல்லி அமர்கின்றேன்.

---------------------தந்தைபெரியார் - “குடி அரசு” - சொற்பொழிவு - 01.06.1930

1 comments:

Pranavam Ravikumar said...

The post is good. Please take care of the background and font color. My wishes.