Search This Blog

27.3.11

முஸ்லீம் சுயமரியாதை வாலிபர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!- பெரியார்


இந்தியாவில் வகுப்புத் தொல்லை ஒழிய வேண்டும்
உண்மைச் சுதந்திரத்துக்கு மார்க்கம் முஸ்லீம் சமூகம் 16 கோடி ஆவதே

இன்று இந்தியாவில் வகுப்புத் தொல்லையானது அளவிட்டுக் கூறும்படியான நிலையில் இல்லை. இவற்றுள் இந்து முஸ்லீம் வகுப்புத் தொல்லையானது எல்லாவற்றையும்விட தலை சிறந்து விளங்குவதாகும், இது இந்தியா முழுமையையும் பொறுத்ததாக இருக்கிறது.

அடுத்தாற்போல் தீண்டப்படாதவர்கள் மேல்ஜாதிக்காரர்கள் என்கின்ற தொல்லையாகும். இதுவும் ஏறக்குறைய இந்தியா பூராவையும் பொறுத்ததானாலும் தீண்டப்படாத மக்கள் கல்வியிலும், செல்வத்திலும் சுயமரியாதை உணர்ச்சியிலும் மிகவும் பிற்பட்டவர்களாய் இருப்பதாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததாலும் தனித்தனியே மக்கள் சுயநலம் கோருவதாலும் அத்தொல்லை சம்பந்தமான கிளர்ச்சிக்கு எவ்வித ஜீவ உணர்ச்சியும் இல்லாமல் போனதோடு அதை பலர் உபயோகித்துப் பயன் பெறும்படியாக இருந்து வருகிறது.

அடுத்தாப்போல் சொல்ல வேண்டியது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வகுப்புத்தொல்லை என்று சொல்லலாம். இது தென்னிந்தியாவில் மாத்திரமே விசேஷ கிளர்ச்சியில் இருந்தாலும் பார்ப்பனரல்லாதார் மத விஷயத்தில் சுயமரியாதை அற்று பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பதாலும் பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள மதப்படிப்பினையானது தங்கள் சமூகத்தையும் சகோதரர்களையும் காட்டிக்கொடுத்தாவது முத்தி பெறலாம் என்பதாக கற்பிக்கப்பட்டிருப்பதாலும் அதையே பல வைதீக மக்களும் கீழ்ப்படியிலுள்ள மக்களும் பின்பற்றுவதில் சிறிதும் மான அவமானத்தை கவனிப்பதற்கு இல்லாமல் போய்விட்டதாலும் அக்கிளர்ச்சிக்கும் தகுந்த பலனில்லாமல் போய்விட்டது. என்றாலும் அக்கிளர்ச்சித் தொல்லையில் உண்மையான பொது நன்மைகள் பெரிதும் பாதிக்காமல் இருப்பதில்லை.

அடுத்தாப்போல் பல தொல்லைகள் வடக்கிலும் கிழக்கிலும் நடந்து வருகின்றது என்றாலும் அவை மற்றவைகளைக் கவனிக்கும்போது மிகச் சிறியவை என்றே சொல்லலாம்.

எப்படி இருந்தாலும் இந்தியாவானது உலகத்தின் கண்முன் ஒரு காட்டு மிராண்டி தேசமாகவும், இந்திய மக்கள் ஒரு இழிகுல மக்களாகவும் காணப்படுவதற்கு இந்த வகுப்புப் பிரிவுகளும், வகுப்புத் தொல்லைகளும் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதுமாத்திரமல்லாமல் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்பவர்களிலேயே 100க்கு 90 பேர்களாய் உள்ளவர்கள் கல்வியிலும் சுயமரியாதையிலும் கீழ் நிலையில் இருப்பதற்கும் பொருளாதாரத்தில் மிக மிக கேவல நிலையில் இருப்பதற்கும் இந்த பிரிவினைகளும் அதனால் ஏற்பட்ட தொல்லைகளும்தான் காரணம் என்பதையும் எவரும் மறுக்கமுடியாது.

ஆனால் அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் இந்த வகுப்புத்தொல்லைகளை மறைத்தும் அதை அலக்ஷியப்படுத்திக் கூறியும் விட்டு அதனால் ஏற்பட்ட கெடுதிகளுக்கெல்லாம் அரசாங்கத்தார் மீது பழிபோட்டுப் பேசலாம்.

அரசாங்கத்தைப்பற்றி பேசுவதானால் இன்றைய அரசாங்கம் இதற்கு முன் இருந்த எந்த அரசாங்கத்தையும் விட மோசமானதாய் இருந்ததாக சரித்திரங்கள் காணப்படவில்லை. சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, மக்களைச் சமமாய்க் காணல் என்கின்ற துறைகளில் இதற்கு முன் இருந்த ஆட்சிகளில் இது ஒரு துறையிலும் குறைந்ததாகவும் காணப்படவில்லை.

இந்த உண்மைகள் பழய சரித்திரங்களில் காணப்படுவது மாத்திர மல்லாமல் 1920ம் வருஷம்வரை இந்திய அரசியல்வாதிகளும் தேசியவாதிகளும் இன்றைய அரசாங்கத்தைப் புகழ்ந்து பாராட்டி "தெய்வீக" ஆட்சியாகவும் தர்மராஜ்ஜிய ஆட்சியாகவும் வர்ணித்து எழுதிய சாசனங்களும் பேசிய பேச்சுக்களும் இன்றும் கல் எழுத்துப்போல் இருந்து வருகின்றன.

இவைகளையெல்லாம் பற்றி இரண்டுவித அபிப்பிராயம் இருக்கலாமானாலும், தர்க்கத்திற்கு இடமிருக்கிறது என்றாலும் உலகமே விழிப்படைந்த இந்த சுயமரியாதை வேகமுள்ள இக்காலத்தில் மற்ற நாடுகள் எல்லாம் பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் சுதந்திரத்திலும் முற்போக்கடைந்து கொண்டிருக்கும்போது இந்தியா மாத்திரம் ஏன் இன்னும் சராசரி கல்வியில் 100க்கு 92 பேர்கள் தற்குறிகளாகவும், பொருளாதாரத்தில் சராசரி ஒரு மனிதனுக்குரிய தின வரும்படி 2 அணாவை விட குறைவாகவும் இருக்கும் படியான நிலை, குறிப்பு கண்டுபிடிக்க முடியாத காலத்திலிருந்து இன்றுவரை ஏன் நிலைத்துவருகிறது? இப்படிப்பட்ட ஒரு ஆட்சி ஏன் திருத்தமடையாமல் இருக்கிறது? என்பதற்கு இந்திய அரசியல்வாதிகளும், தேசியவாதிகளும் என்ன பதில் சொல்லக்கூடும்?

இந்திய ஜனத்தொகை லக்ஷம் இரண்டு லக்ஷமல்ல, ஒரு கோடி இரண்டு கோடி மாத்திரம் அல்ல. ஜன கணிதப்படி முப்பத்திஐந்து கோடியாகும். ஆளும் சமூகத்தை பிரித்து பார்ப்போமானால் மிக மிக சொல்பமேயாகும்.

ஆளுகின்றவர்கள் "தெய்வ பல" மில்லாமலோ, மந்திர தந்திர சக்தியினாலோ ஆளுகிறார்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது. எல்லோருக்கும் தெரிந்த பலத்தைக்கொண்டும் எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய மார்க்கங்களை கொண்டும் தான் ஆளுகிறார்கள். ஆளும் ஜாதியாரைப் பிரித்துப்பார்த்தால் அவர்கள் இந்தியாவில் சில லக்ஷ கணக்கில் தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களுடைய ஆட்சி ஒழுங்காயில்லையானால் இந்த முப்பத்தி ஐந்து கோடி மக்களும் ஏன் அவர்களைத் திருத்தி நல்ல ஆட்சியாக அரசு புரியும்படி செய்து இருக்கக்கூடாது? ஜனங்களுக்கு புத்தி இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அல்லது இந்திய மக்கள் பயங்காளிகள் என்று சொல்லிவிட முடியுமா? அல்லது ஆட்சிபுரிகின்றவர்களாவது மனிததன்மை அற்ற மிருக சுபாவ அநாகரீக ஜாதியார் என்று சொல்லிவிட முடியுமா? அப்படியிருந்தால் உலகில் தலை சிறந்த மக்களாகவும் உலகத்துக்கு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் போதிக்கும் மக்களாகவும் அவர்கள் இன்றுஇருக்க முடியுமா என்பவைகளையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நமக்குள் ஏதோ ஒரு தவறுதல் இருப்பதாகத்தான் உணரமுடியும்.

அது எது என்று பார்த்தால் இந்த வகுப்புத்தொல்லைகள் என்பவைதான்.

இந்தியா இன்று உள்ள நிலையில் எந்தக் காரணத்தைமுன்னிட்டும் வகுப்புத்தொல்லைகளை ஒழித்துக் கொள்ளக் கூடியதாய் இல்லை. ஏதாவது ஒரு வகுப்பு ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்புகளை அடக்கி ஆளும் நிலைமை பெற்றால் தான் வகுப்புத் தொல்லைகள் நீங்க முடியுமே ஒழிய வேறு வழியில் ஒருநாளும் ஒழியக்கூடியதாய் இல்லை.

நம் தேசிய வாதிகளும் அரசியல் வாதிகளும் ஜெயிலிலும் தங்கள் வகுப்பு உரிமை இருந்தாகவேண்டும் என்று தான் பாடுபடுகிறார்களே ஒழிய நாம் எல்லோரும் ஒரே வகுப்பு என்று வேஷத்தில் கூட இருக்க சம்மதிப்பதில்லை.

இதற்கு மார்க்கம்

இப்படிப்பட்ட இந்த இந்திய நாடு இன்று வகுப்புத் தொல்லை ஒழிந்து ஒரு குறிப்பிட்ட லட்சியத்துக்கு எல்லா மக்களுக்கும் ஒருவரை ஒருவர் நம்பி ஒற்றுமையுடன் பாடுபடவேண்டுமானால் எல்லோரும் ஒரு வகுப்பு ஆவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதுதான் நமது முடிவு.

அப்படிப் பார்ப்போமேயானால் அதிகமான ஜனத்தொகை கொண்ட வகுப்பு எதோ அதில் மற்ற வகுப்புக்காரர்கள் கலந்துகொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

உதாரணமாக நமது காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) இந்தியா பூராவும் ஒரு பாஷை ஆவதற்கு இந்தி பாஷை தான் தகுந்தது என்று சொல்லி அதையே இந்தியர்கள் எல்லோரும் கற்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்தியாவின் மெஜாரட்டி ஜனங்கள் இந்தி பேசுகிறார்களா என்பது ஒரு புறம் விவகாரத்துக்கு இடமாய் இருந்தாலும் இருக்கின்ற பாஷைகளில் அதிகமான ஜனங்கள் பேசும் பாஷை இந்தி என்று சொல்லி அதைக் கற்க அரசாங்கத்தின் மூலமும் முயற்சி செய்கிறார்கள் அல்லவா?

அதுபோல் இன்று இந்தியாவில் உள்ள வகுப்புகளில் அதிகமான ஜனங்களைக் கொண்ட எந்த வகுப்பார் ஒற்றுமையோடு ஒரேவிதமான வகுப்புணர்ச்சியோடு இருக்கிறார்களோ அந்த வகுப்பைக் கைப்பற்றி விடுவதுதான் இந்தியா ஒரு வகுப்பு என்று சொல்லுவதற்கு தகுதி உடையதாகும்.

அப்படி பார்த்தால் இன்று இந்தியாவில் முஸ்லீம் வகுப்புதான் ஒற்றுமையுடன் தங்கள் மக்களுடன் பிறவிக் காரணங்களை லக்ஷியம் செய்யாமல் உண்ணல், பொருந்துதல், சமுதாய வாழ்வில் சமமாக பாவித்தல் முதலிய காரியங்களில் எல்லா வகுப்புகளையும் விட முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை இன்று இந்தியாவில் மாத்திரம் 9 கோடிக்கு மேல்பட்ட ஜனசங்கையாகும்.

அவ்வளவு ஜனசங்கை உள்ளவர்கள் இந்தியாவில் வேறு எந்த வகுப்பிலும் இல்லை.

இந்துக்கள் என்பவர்கள் சுமார் 24 கோடி இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடுமானால் இவர்களில் சீக்கியர், பாரசீகர், ஜெயினர், பௌத்தர், கிருஸ்தவர் முதலிய இந்துக்கள் அல்லாத வகுப்புகளைப் பிரித்துவிட்டால் 20 கோடிக்குத்தான் வரும். அதிலிருந்தும் தொடுவதற்கும் கிட்ட நெருங்கு வதற்கும் "தகுதி இல்லாத" 7 கோடி தீண்டப்படாத மக்களைப் பிரித்து விட்டால் 13 கோடியே யாகும். இதிலிருந்தும் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்ள முடியாத, ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட முடியாத, சம்மந்தம் செய்ய முடியாத, பார்ப்பனர், கோமுட்டிகள், ஆசாரிகள், செட்டிகள், சைவர்கள் போன்ற பல உள் வகுப்புக்காரர்களையும் பிரித்து விடுவோமேயானால் இன்னும் எவ்வளவு சிறிய தொகைக் கொண்ட வகுப்பாகும் என்று பார்த்தால், சமத்துவமாய் ஒற்றுமையாய் புழங்கிக்கொள்ளும் மக்களுள் முஸ்லீம்களே அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் என்பதில் யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. அப்படி யாராவது ஆக்ஷேபப்படுவதாயிருந்தாலும், ஒற்றுமையிலும் சமத்துவ பாவத்திலும் பலம் பொருந்திய வகுப்பார் முஸ்லீம்கள் தான் என்பதை எவரும் சுலபத்தில் ஆக்ஷேபிக்க முடியாது.

அவர்களோடு அதாவது இந்த முஸ்லீம்களோடு டாக்டர் அம்பத்கார் அவர்கள் யோசனைப்படி 7 கோடி தீண்டப்படாத மக்களும் சேர்ந்து முஸ்லீம்கள் எண்ணிக்கையை 9+7 = 16 கோடியாக ஆக்கிக் கொள்வார்களேயானால் பிறகு அவர்களை அவர்களது இஷ்டத்திற்கு விரோதமாய் அடக்கி ஆளும் மக்கள் உலகத்தில் இல்லை என்றும், இருக்கவும் முடியாது என்றும் வலியுறுத்திக் கூறலாம்.

இந்தியாவுக்கு உண்மையாகவே ஒரு சுதந்திர ஆட்சி வேண்டுமானால், ஐரோப்பியா ஆட்சியானது இன்று இந்தியர்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாக ஆளப்பட்டு வருகின்றது என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுவது அவர்கள் மனப்பூர்வமாய் சொல்லப்படுவதனால் இவைகளுக்கு பரிகாரம் முஸ்லீம் சமூகத்தை 16 கோடியாக ஆக்கிவிடுவதேயாகும்.

அப்படிக்கு இல்லாமல் இந்துக்கள் ஆட்சி வேண்டும், கிறிஸ்தவர்கள் ஆட்சி வேண்டும், முஸ்லீம்கள் ஆட்சி வேண்டும், பார்ப்பனர்கள் ஆட்சி வேண்டும், பார்ப்பனரல்லாதார் ஆட்சி வேண்டும், தீண்டப்படாதார் ஆட்சி வேண்டும் என்பன போன்ற முயற்சிகளும் சூழ்ச்சிகளும் ஒவ்வொரு வகுப்பாரும் செய்வது என்பது, பொதுக் கிணற்றில் மலம் விழுந்ததற்கு ஒப்பான பலனைத்தான் கொடுக்குமே அல்லாமல் வேறு எவ்வித பயனையும் கொடுக்க முடியாது.

மற்றும் இன்று இந்தியா ஒரு தேசம் என்றோ, ஒரு சமூகம் என்றோ சொல்லிக்கொள்ளுவது ஒரு நாளும் புத்திசாலித்தனமான பேச்சாகவோ, யோக்கியமான பேச்சாகவோ இருக்க முடியாது என்பதும் நமது வெகு நாளைய அபிப்பிராயமாகும்.

ஆதலால் இந்தியாவின் சுயமரியாதையும், விடுதலையும் நெருங்கி இருக்கிறது என்பதோடு இந்தியா ஒரு சமூகம் என்று சொல்லக்கூடிய நிலை எய்துவதற்கும் அறிகுறியேதான் இன்று டாக்டர் அம்பேத்கார் அவர்கள் "தீண்டப்படாதவர்கள் இந்துமதத்தை விட்டு சமுதாய வாழ்வில் சமத்துவம் அளிக்கக்கூடிய வேறுமதத்துக்கு போய்விட வேண்டும்" என்று கண்டு பிடித்த அபிப்பிராயமாகும். முஸ்லீம் சமூகத்தில் உள்ள செல்வவான்கள், சுதந்திரவாதிகள், சுயமரியாதைக்காரர்கள் ஆகியவர்கள் இது சமயம் பல கோடி ரூபாய்களைப் பண்டாக சேர்த்து ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பண உதவி புரிந்தாவது வேறு பல சவுகரியங்கள் செய்து கொடுத்தாவது முஸ்லீம்களாக ஆக்குவார்களானால் அவர்கள் முஸ்லீம் மதத்தை பெருக்குகிறார்கள் என்பதாக கருதுவதை விட இந்தியாவின் விடுதலைக்கு, சுயமரியாதைக்கு அருகதை உடையவர்களாக்குகிறவர்களாவார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாததாக ஆக்கினவர்களாவார்கள்.

முஸ்லீம் சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களில் பலரை வயிற்றுப் பசி பிராணனை வாங்குவதால் அவர்களிடம் உள்ள 10ம் பறந்து போகா விட்டாலும் 10ல் 6க்கு குறையாமலாவது பறந்து போய் விடுகின்றன.

அதுபோலவே தேசீய முஸ்லீம் என்பவர்களிலும் பலர் பசி கொடுமையால் 10ல் 8ஐ விற்றுப் பிழைக்கிறார்கள்.

ஆகையால் சீர்திருத்த முஸ்லீம்கள் தேசாபிமான முஸ்லீம் என்பவர்களை விட்டுவிட்டு அவர்களை இவ்விஷயத்தில் லக்ஷியம் செய்யாமல் சுயமரியாதை முஸ்லீம் வாலிபர்கள் ஒன்றுகூடி ஆங்காங்குள்ள செல்வவான்களைப் பிடித்து முதலில் நிதியைத் திரட்டிவிட்டால் நிதியின் தொகை இவ்வளவு என்று வெளிப்படுத்தி விட்டால் பஞ்சாமிர்தத்திற்கு ஈக்கள் வந்து விழுவதுபோல் ஏராளமான மக்கள் முஸ்லீம்களாவதாகச் சொல்லிக் கொள்ள முன் வருவார்கள். ஏனெனில் இன்றைய மத தத்துவமும், மதம் மாறும் தத்துவமும் 100க்கு 75 பாகத்துக்கு மேல் பொருளாதாரத்தையும், அரசியல் ஆதிக்கத்தையுமே பொறுத்திருக்கிறது.
அன்றியும் உண்மையிலேயே ஒரு மனிதன் தனக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று சொல்லுவானேயானால் அவனுக்கும் "இந்து மதத்தை விட, கிறிஸ்தவ மதத்தை விட, முஸ்லீம் மதமே சிறந்தது" என்று இதற்குமுன் பலதடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம்.

அம்மதமே இன்று உலகில் மற்ற பாகங்களில் எவ்வித வேகமான சீர்திருத்தத்தையும் வரவேற்று வருகின்றதைப் பார்க்கின்றோம்.

துருக்கியையும், ரஷ்யாவையும், ஈஜிப்டையும், தார்த்தார் ரிப்பப்ளிக்கையும் நேரில் பார்த்தவர்களுக்கு பெண்கள் விஷயத்திலோ, தொழுகை விஷயத்திலோ, மற்ற வைதீக விஷயத்திலோ, வேஷம் விஷயத்திலோ, மற்ற சமூகத்தாருடன் கலந்து வாழும் விஷயத்திலோ முஸ்லீம்கள் எவ்வளவு துணிந்து மாறுதலடைந்து இருக்கிறார்கள் என்பது நன்றாய் விளங்கும்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம் மத சம்பிரதாயங்கள் எல்லாம் முஸ்லீம் மார்க்கத்தின் அரிவரி ஏ,பி,சி,டி யேயாகும். தண்டவாளத்தின் மீது போகும் ரயில்வண்டி போன்றதேயாகும்.

உலக முஸ்லீம்களின் மொத்த ஜனத்தொகை இன்று 682870000 அறுபத்தி எட்டேகால் கோடி ஆகும். இன்று இந்தியாவில் உள்ள முஸ்லீம் மார்க்க சம்பிரதாயம் அரிவரி என்று மேலே சொன்னோம். ஆனாலும் அது பெரிதும் இந்துக்களில் தொல்லைகளை சமாளிக்கவோ இந்துக்களோடு தொல்லை கொடுக்கவோ நடத்தப்பட்டு வருவதாகும். இதை சாதாரண முஸ்லீம்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ராஜதந்திர முஸ்லீம்கள் இதை ஒப்புக்கொள்ளுவார்கள். உதாரணமாக சாதாரண முஸ்லீம்கள் காந்தியாரை மகாத்மா என்று கூட சொல்லமாட்டார்கள்; ஏனென்றால் மகமது நபி ஒருவரைத் தவிர மற்றவர்களை மகாத்மா என்று அழைப்பது முஸ்லீம் மார்க்கத்துக்கு ஏற்றதல்ல என்கிறார்கள். என்றாலும் பல காரணங்களால் முஸ்லீம்கள் காந்தியாரையும் அறிந்தும் அறியாமலும் மகாத்மா என்று பிறரையும் சொல்லுவது சகஜமாக இருக்கிறது.

அது போல இன்னும் அனேக விஷயங்கள் மார்க்க விஷயமாக நடைபெற்று வருகின்றது என்றாலும் முஸ்லீம் சமூகம் பலப்படுமானால் அவை இந்துக்களைப்போல் தனித் தனி பிரிவார் சுயநலம் என்று இல்லாமலும் தனிப்பட்ட மனிதன் சுய நலம் என்று இல்லாமலும் அது உயர்ந்த முன்னேற்ற மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்.

ஆதலால் வகுப்புத் தொல்லை ஒழியவும், இந்தியா விடுதலையும் சுயமரியாதையும் அடையவும், தீண்டாமை என்பதே இந்தியாவை விட்டு மறையவும், இதைத்தவிர வேறுமார்க்கமில்லை என்பது தான் இவ் வியாசத்தின் கருத்து.

கிருஸ்தவ மார்க்கத்தைப்பற்றியோ என்றால் அவர்களில் ஒரு பெரும் பகுதியாரை நினைத்தால் நமது வருணாச்சிரமப் பார்ப்பனர்கள் 1000 பங்கு மேலானவர்கள் என்று சொல்லலாம்.

பொதுவுடைமை வாதிகள், நாஸ்திகர்கள் ஆகியவர்களில் சிலர் இந்த அபிப்பிராயத்தில் மாறுபடலாம். இப்போது நாம் இந்த அபிப்பிராயம் கூறுவது நாஸ்திகர்களுக்கும் பொதுவுடமை வாதிகளுக்கும் வைதீக முஸ்லீம்களுக்கும் அல்ல.

ஆஸ்திகர்களாய் ஏதாவது ஒரு மதக்காரர்களாய் தீண்டிக்கொள்ளப் படக்கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும், இந்தியாவை ஒரு வகுப்பாக்கி (நேஷனாக்கி) அதன் மூலம் விடுதலை அடைய வேண்டும் என்று கருதுபவர்களுக்கும் சொல்லும் யோசனையாகும். ஆகவே முஸ்லீம் சுயமரியாதை வாலிபர்கள் இதை சிந்தித்துப் பார்ப்பார்களாக.

--------------------தந்தைபெரியார் - “குடி அரசு” துணைத் தலையங்கம் 12.01.1936

1 comments:

Nalam Peruvom said...

Thanks, Nice post keep it up my friend...