Search This Blog

19.12.23

திராவிட உணர்ச்சி வலுத்தால் ஆரிய ஆதிக்கம் அழியும் - பெரியார்

 திராவிட உணர்ச்சி வலுத்தால் ஆரிய ஆதிக்கம் அழியும்

தந்தை பெரியார் 

23

பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே! தோழர்களே!! 

இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்கங்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

பெருமைப்படுகிறேன் 

தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிடர் வாலிபர் கழகம் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப்படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவேயாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும் - முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக் கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருத்தமான எண்ணமாகும். இவ்வபிப்பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது, கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்துவருகிறது. இன்றைய நிலையில் அவ்வெண்ணம் மேலும் ஊர்ஜிதமாகிவிட்டதை நான் காண்கிறேன்.  

இஷ்டமில்லை என்றாலும்...

சில மாதங்களுக்குமுன் நடைபெறுவதாயிருந்த அகிலஇந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தின்போது பத்திரிகைக்காரர்கள் அதுபற்றி எனது அபிப்பிராயம் கேட்டனர். அது சமயம் நான் திருச்சியில் நமது கழக நிர்வாகத் தலைவர் தோழர் டி.பி.வேதாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். அங்குதான் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்தது. 

“வேலை நிறுத்தம் செய்வது எனக்கு இஷ்டமில்லை. ஆனால், வேலை நிறுத்தம் தொடங்கி விட்டால் அதைத்தான் நான் ஆதரிப்பேன்” என்றேன். இவ்வாறு கூறுவது எங்களுக்குப் புரியவில்லையே என்றனர் பத்திரிகை நிருபர்கள்.

உங்களுக்குப் புரியாதுதான், நான் புரியும்படி விளக்கம் கூறுகிறேன் என்று மேலும் அவர்களிடம் நான் சொன்னேன், "நமது குழந்தைகள் இருக்கின்றன; நெருப்புக்கிட்டே போகாதே என்று எவ்வளவோ பயப்படுத்தித்தான் வைக்கிறோம். எனினும் அக்குழந்தை தீயில் குதித்துவிட்டு, அய்யயோ சுடுதே! சுடுதே!! என்று அலறும்போது, பெற்றெடுத்த தாயோ, தகப்பனாரோ அந்தக் குழந்தையை மேலும் ஏன் தீயில் குதித்தாய் என்று கடிந்து இரண்டு உதை கொடுப்பது அறிவுடைமையாகுமா? அவர்கள் செய்தது தவறாயிருப்பினும் அந்தச் சமயத்தில் நாம் அவர்களைக் கடிந்து தண்டிப்பது நியாயமில்லை யல்லவா? அதேபோன்று வேலை நிறுத்தம் கூடாதென்று கடைசி நேரம்வரை நான் ஒவ்வொரு வேலைநிறுத்தக் காலங்களிலும் கூறி வந்திருக்கிறேன். இதனால் நான் தொழிலாளிக்கும் துரோகி என்றுகூடக் கெட்ட பெயர் சூட்டப்பட்டேன். ஆனால் வேறு வழியின்றி வேலைநிறுத்தம் துவக்கப்பட்டுவிட்டால், மற்றவர்களைக் காட்டிலும் நானே அதில் அதிக கவலைப்பட்டு என்னாலியன்ற தொண்டு புரிந்து வந்திருக்கிறேன். அத்தன்மையிலேயே அனைத்து இந்திய ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் அறவே கூடாதென்பதும், எக்காரணத்தாலேனும் துவக்கப்பட்டு விட்டால் நானும் எனது இயக்கத்தாராகிய திராவிடர் கழகத்தினரும் ஆதரித்தே தீருவோம் என்பதும்" என்று கூறினேன். இவையனைத்தையும் பத்திரிகை நிருபர்கள் எழுதிக் கொண்டார்கள். ஆனால் அதைச் சிறிதுகூட வெளியிடவேயில்லை.

பத்திரிகைகளின் மோசடி

சில நாள்கழித்து மற்றொரு காரியமாக அதே நிருபர்கள் என்னிடம் வந்தனர். "என்னையா! முன்பு தாங்கள் எடுத்துக் கொண்ட செய்தி வெளியிடவேயில்லை. மீண்டும் வேறு காரியத்துக்காக என்னை அபிப்பிராயம் கேட்க வந்துவிட்டீர்களே" என்று சற்று கோபமாகக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்; "நாங்கள் என்ன செய்வது? நீங்கள் தொழிலாளரின் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையாக அபிப்பிராயம் கூறுவீர்கள் என்று பத்திரிகை உலகத்தார் நினைத்தார்கள்போலும். ஆகவே தான் நாங்கள் அனுப்பிய செய்தியை கத்திரித்து விட் டார்கள். அது எங்கள் குற்றமல்ல, பத்திராதிபர்களின் குற்றமாகும்" என்றனர்.

நம் தொண்டின் முக்கியம்

இதை ஏன் கூறுகிறேன் என்றால், சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், 

அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்டவேயாகும். இதைத் தவிர, எங்களுக்கு பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காக தொழிலாளர் தயவைப்பெற அவர்களி டத்திலே வீண்படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

தொழிலாளரின் குறைகள்

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, சோசியலிஸ்ட்டு, தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடி தடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றையத் தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படு வோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரி வினைகளை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக்கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். 

எனவே தான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டுவருவதின் கருத்தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டு ழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொது வாக நம்நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலை திட்டங்களுமாகும்.

ஆரியச் சூழ்ச்சி

நம் நாட்டுக்கு கி.மு.2000 ஆண்டு காலத்தில் திராவிடம் என்றே பெயர் இருந்தது. இராமாயணங்களிலும் புராணங்களிலுங்கூட நம் நாட்டுக்கு திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் இந்நாட்டுக்குக் குடியேறிய பின்னர்தான் திராவிடம் என்பதற்குப் பதிலாக தென்னாடு என்று பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு என்றும் வழங்கி வரலாயிற்று. திராவிடம், திராவிடர் என்பதால் ஆரியர் ஆதிக்கத்துக்கு என்றும் எதிர்ப்பு இருக்கும். ஆதலால் திராவிடம் என்ற உணர்ச்சியை அறவே அழித்தொழிக்கச் சூழ்ச்சி செய்துவரலாயினர். 

ஆனால் தற்சமயம் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர் கூறலாம்; நாங்கள் ஆரியரல்ல நாங்களும் இந்நாட்டினர் தானென்று. ஆனால் இதே சமயத்தில், நம் நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ சிறிதும் கிடையாது. ஆரியக் கலாசாரத்தையே பின்பற்றி வருவதோடல்லாமல், நமது முன்னேற்றத்தையும் முயற்சியையும் ஒழிப்பதையே அவர்களது முழுமுயற்சியாகக் கொண்டிருக்கின்றனர். இவைகளைக் கைவிடாமல் நாங்கள் ஆரியரல்ல என்று கூறிவிட்டால் போதுமா?

உதாரணமாக ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள், நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள்தானே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சியிருக்கிறதா? நமது மக்களைப்பார்த்தால் டேய்! “தமிழ் மனுசா” என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் எப்படிப் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ நேராக அய்ரோப்பாவில்  பிறந்து இங்கு குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவோ நடக்கிறார்கள்.

அதைப்போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும், மேல் நாட்டிலிருந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாயிருந்தும் கூட, ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துவதும், அதற்கேற்ப நம் நாட்டு மன்னர்களை ஏமாற்றி ஜாதி-மதம்-கடவுள்-புராணம்-இதிகாசம் பேரால் தங்களுக்குத் தனிச்சலுகைகளும் பெற்று, பாடுபட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வில் வறுமையும் தொல்லையும் இருக்க, பாடுபட்டுழைக்காத ஒரு கூட்டத்துக்கு வாழ்க்கையிலே மிதமிஞ்சிய ஆதிக்கமும் இருந்து வருகிறது.

திராவிடர் உணர்ச்சி வலுத்தால்...

 இன்றுகூட எந்தப் பார்ப்பனனையாவது பார்த்து “நீ என்னையா பிராமணனா” என்று கேட்டால், இன்றைய நிலையில் அவ்வாறு கூறிக்கொள்ளச் சற்று அச்சம் கொண்டாலும், “நான் பிராமணனல்ல” என்று கூறுவானேயன்றி “நானும் திராவிடன்தான்” என்று கூற முன்வரமாட்டார்களே ஏன்? திராவிடர் என்ற உணர்ச்சி வலுத்துவிட்டால் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு, அன்றே அழிவு ஏற்பட்டுவிடும் என்பதாலேயாகும்.

எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் பார்ப்பனர்களுக்குத் தனிப்பட்ட தொல்லையோ தீங்கோ விளைவிப்பதென்பது எங்கள் கொள்கையல்ல; பார்ப்பனியத்தை அறவே ஒழித்து மக்களிடையே ஒன்றுபட்ட சமுதாய உணர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்பதாகும் என்று கூறுகிறோம். இதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் இனியாவது அறிந்து தம் தவறுதலைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து எங்களது முயற்சியை அழிக்க மேலும் சூழ்ச்சிகள் செய்வார்களேயானால் அது தமக்குத் தாமே அழிவு தேடிக்கொள்வதாக முடியும். 

பார்ப்பனர்களுக்கு தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? காரணம் என்ன? உழைக்கும்வேலை அவர்களுக்குக் கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனனாயிருப்பினும் கடவுள் பேரால் பாடுபடாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்? பிறவியின் பேரால், ஜாதியின் பேரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந்நாட்டைத் தவிர வேறு நாட்டில் இருக்கிறதா? அதுவும் சுயராஜ்யம் பெற்றபின்னரும் இந்த அக்கிரமம் இருக்கலாமா? 

அறிவின் பேரால், உழைப்பின் அருமையின் பேரால் ஒருவனுக்கு உயர்வும் நல்ல பலனும் இருக்க வேண்டுமா? ஜாதியின் பேரால் பதவியின் பேரால் சோம்பேறிகளெல்லாம் உயர்ந்தவர்கள் என்று புகழப்படுவதா என்று கேட்கிறேன்? தொழிலாளத் தோழர்களே! இந்த உணர்ச்சியும், மானமும், ரோஷமும் உங்களுக்கு ஏற்படாமல், உங்களுக்கு என்னதான் கூலி உயர்ந்தாலும் பயன் என்ன?

சமுதாய அமைப்பு

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.

சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டாரச் சன்னதிகள் வரைதான் தெரியுமா? சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடியவில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும். அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி-பட்டம் ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?

சமுதாயமும் அரசியலும் வெவ்வேறல்ல

சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால் நமது மதமிருக்கிறதே அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. 

நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

வாலிபர் பங்கு

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்குவதில் தீவிரப்பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களேயாகும். அவ்வித தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்டுகளும், சோஷியலிஸ்டுகளும் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக்கொள்கைக்கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழிலாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டுமானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்திசெய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்டுகளும், சோசியலிஸ்டுகளும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

எச்சரிக்கை!

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். 

என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.

நாம் வழிகாட்டுவோம்

நம்மை வேண்டுமானால், காங்கிரஸ்காரரோ, மதவாதிகளோ அவர்கள் மேடையில் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நாம் அதற்கு வழி காட்டவேண்டும். ஏனென்றால் நம்மிடம் ஒன்றும் ஒளிவுமறைவு கிடையாது. அரசியல் லாபத்துக்காக இயக்கத்தை நடத்துபவர்களல்ல நாம்; எனவே, தோழர்களே! எதிர்காலத்தில் நமக்குப் பொறுப்பு அதிகமிருப்பதால், திராவிடர் அனைவரும் ஒன்றுபட்டு வாழவும், உழைப்பாளிகளுக்கு உள்ளபடியே உரிமை ஏற்படவும் பாடுபட வாலிபர்கள் முன்வரவேண்டும். பார்ப்பனத் தோழர்களும் கால நிலையை அறிந்து, மனமாற்றம் அடைந்து திராவிட நாட்டின் நலனுக்காக ஆவன செய்ய வேண்டுகிறேன். அதுவே திராவிடர் இயக்கத்தின் கொள்கையாகும். இனிப்பொதுத் தொண்டில் மக்களிடையே ஒரு சிறிதும் துவேஷ உணர்ச்சி கூடாது. கனம் ஆச்சாரியாரும் நானும் சந்தித்த வாய்ப்பு இதற்கு வழிகாட்டியாகவும், அனுகூலமாகவும் இருக்குமென்பதே எனது எண்ணமாகும். 

--------- 22.05.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய பேருரை. “குடிஅரசு’’ - சொற்பொழிவு - 28.05.1949

10.11.23

அறிவை அழிக்க திட்ட மிடப்பட்ட தீ நாள்! தீபாவளி!!

 

தீ நாள்!


என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை பூலோகப் பிராமணர்களை யெல்லாம் கொடுமைப் படுத்தினானாம். இதனால் தன்பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம். செத்துப் போனதைப் பூலோகமக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மாகவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

தீபாவளிப் பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் –  சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால்  நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப்பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.

சுயமரியாதைக்காரர்கள் – திராவிடக் கழகத்தாரர்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?

பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான்.

ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத – நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?

மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக்கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும்போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூல விக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது. ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரச்சாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை யென்றாலும், படித்தவன் ? பட்டதாரி ? அரசியல் தந்திரி ? மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப்பல பேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால்.

இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர் களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல் படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை ? மக்களின் தலைவர்களை அசுரர்கள்? அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையை கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கில் நின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் ? அதன் பாதுகாவலரான தேசீயப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்?

திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக்கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி. இதை மறைக்கவோ எவரும் முன்வரமுடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வமிசத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காகத் துக்கப்படுவதா?

திராவிட இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்தப் பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம். தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தை சூரையாட திராவிடனின் அறிவை அழிக்க திட்ட மிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன?

தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக்கொள்வதா? யோசியுங்கள்!

              ----- -------------------------  தந்தை பெரியார் -- ‘குடி அரசு’ 15-10-1949

6.8.23

பெரியார் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தாரா?

 

பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும்


இந்துத்துவச் சொல்லாடல்களுக்கும்  நடைமுறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் என பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு இணையாக இந்திய வரலாற்றில் யாரையாவது சொல்ல முடியுமானால் அது புத்தரும் அம்பேத்கரும் மட்டுமே. இவர்களில் புத்தரையும் அம்பேத்கரையும் கூட இன்று இந்துத்துவ சக்திகள் எதையாவது சொல்லித் தம்முள் வாங்குவதற்குச் சதி செய்து கொண்டிருக்கும் சூழலில் இறுதிவரை இந்துத்துவ சக்திகளால் தொடமுடியாத நெருப்புத்துண்டமாக விளங்கக்கூடியவராகப் பெரியார் ஒருவரே உள்ளார். இந்நிலையில் இன்று இந்துத்துவ எதிர்ப்பில் அக்கறையற்ற சக்திகள் இன்னொரு வகையில் பெரியார் மீது பழி தீர்க்க முயற்சிக்கின்றனர். பெரியார் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார் என்ற பொய்யான அவதூறைக் கட்டவிழ்த்து விடுவதுதான் அது. ஆனால் பெரியாரின் சுமார் ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்வையும் அவரது பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்போருக்கு இப்படிச் சொல்வது எத்தனை பெரிய அபத்தம் என்பது விளங்கும். இது தொடர்பான அவரது சில கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மட்டும் பார்ப்போம்.

 

பெரியாரது அரசியல் வாழ்வின் தொடக்கப்புள்ளியாக வைக்கம் போராட்டத்தைக் கருதலாம். இது குறித்து பெரியாரே எழுதியுள்ள கட்டுரை அவரது சிந்தனைத் தொகுப்புகளில் உள்ளது. ஈழவர், புலையர் முதலான தீண்டத்தகாத  மற்றும் சூத்திரச் சமூகத்தினர் பொதுச்சாலையில் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்து அப் போராட்டம் நடைபெற்றது(1925).

போராட்டத்தின் உச்சகட்டத்தில் திருவிதாங்கூர் ராணி காந்தியாரோடு பேச்சு நடத்தினார். சாலையைத் திறந்துவிடத்தயார் எனவும் அதற்காக கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சொல்லக்கூடாது என்றும் ராணி விதித்த நிபந்தனையைக் காந்தி ஏற்றுக்கொள்ள போராட்டம் முடிவுக்கு வருகிறது.

பெரியார் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோயிலுக்குள் நுழைவது என்கிற பிரச்சாரத்தைத் தொடர்கிறார். பெரியார் சொல்கிறார்.

“அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்தி போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)

விசயம் அத்தோடு நிற்கவில்லை. இஸ்லாமாக மாறிய புலையர்களுக்கும் நாயர்களுக்கும் பலமான மோதல் ஏற்பட்டது. ஒருவர் செத்தும் போனார். இன்னும் பலர் இஸ்லாமாவது என்ற நிலை ஏற்பட்டவுடன் அன்றைய திவான் சி.பி.ராமசாமி ஐயரின் ஆலோசனையின்படி கோயில் கதவுகள் திறக்கப்பட்டன.

தீண்டத்தகாதவர்களின் விடுதலைக்கான வழிகளில் முதன்மையானது மதமாற்றமே, அதிலும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதே என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். எங்காவது தீண்டத்தகாதவர்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மதமாற்றம் என்கிற அச்சுறுத்தலின் விளைவாகத்தான் நடந்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான் என்று சொன்னதோடு நிற்காமல்,“இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று தொழுநோய் போன்றது. வெகு நாளைய நோய்” என்றும்,  இந்த நோயிலிருந்து விடுதலை பெற ஒரே வழி இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான் எனத்திரும்பத் திரும்பவும் சொன்னார். வெளியேறுவது என்று சொன்னதோடும் நிறுத்திவிடவில்லை.

“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம்  என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)

 

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மத மாற்றத்தை முன் மொழிந்த இன்னொரு பெருந்தலைவரான அம்பேத்கரின் முயற்சிக்கு அகில இந்திய அளவில் பெருந்துணையாக நின்றவரும் பெரியாரே. தொடக்கத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறுவது என்கிற நிலைப்பாட்டையும் அம்பேத்கர் சிந்தித்தார். 1930ல் முஸ்லிமாக மாறுவது என அம்பேத்கர் சொன்னபோது,

“எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதை கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள் அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், நீங்கள் ஒண்டியாகப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும். அப்போது தான் முஸ்லிம் மதிப்பான்… ஒரு லட்சம் பேரோடு தாங்கள் அங்கு போகும்  போது நானும் ஒரு பத்து இருபதாயிரும் பேர்கள் தருகிறேன் என்பதாகத் தந்தி கொடுத்தேன்.” (ஆனைமுத்து தொகுப்பு, பக். 1033)

இப்படியாக அவரை இஸ்லாமுக்கு மாற ஊக்குவித்தவர் பெரியார்.

அம்பேத்கர் இறுதியில் பௌத்தத்திற்கு மாறியபோது கூட இஸ்லாமுக்கு மாறுவதே சரியாக இருக்கும் என்ற கருத்து பெரியாருக்கு இருந்தது. இது குறித்து,

“அம்பேத்கர் பௌத்தத்தில் சேருகிறேன் என்று சொன்னவுடன் எப்போதும் போல பலர் எதிர்த்தார்கள். ஆனாலும் இஸ்லாம் ஆவது என்றால் பயப்படுகிற அளவுக்கு பௌத்தர் ஆகிவிடுவது என்று சொல்லுவதற்கு இந்து மதத்தார்கள் (பார்ப்பனர்கள்) பயப்படமாட்டார்கள். ஏனென்றால் பௌத்தத்தை இந்து மதத்தோடு ஏறக்குறைய கலர வைத்து விட்டார்கள்.”

என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து (சென்னை சொற்பொழிவு 13.5.1952) இது விளங்கும்.

ஏதோ இஸ்லாமுக்கு மதம் மாறுவது என்கிற அளவோடு பெரியாரின் முஸ்லிம் ஆதரவு நின்று விடவில்லை. முஸ்லிம் அரசியலுக்கும் அவர் ஆதரவாக நின்றார். விடுதலைக்கு முந்தைய முஸ்லிம் அரசியலில் இரண்டு கூறுகள் முக்கியமானவை:

  1. முஸ்லிம்களுக்கானத் தனி நாடு -பாகிஸ்தான் பிரிவு
  2. முஸ்லிம்களுக்குத் தனி வகுப்பு வாரி ஒதுக்கீடு.

 

இந்த இரண்டு கோரிக்கைகளையும் பெரியார் ஆதரித்தார். முஸ்லிம் இந்தியா என்ற கோரிக்கை பற்றி பேச வருமபோது,
“ஜனாப் ஜின்னா இந்தப் பிரிவினைக்கு கூறும் காரணங்கள் மறுக்க முடியாதன. அவரது கோரிக்கை நியாயமானதே. காந்தியார் சதா காலமும் பச்சையாகவே தாம் விரும்பும் சுயராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம் தானென்றும், தமது வாழ்க்கையின் இலட்சியமே இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்வது தானென்றும் கூறிக் கொண்டிருக்க, தோழர் சாவர்கார் போன்ற  இந்து மகாசபைத் தலைவர்கள் ‘இந்துஸ்தானம் இந்துக்களுக்கே’ என்ற போர் முழக்கம் செய்து கொண்டுமிருக்கக் கண்ட பிறகும் முஸ்லிம்கள் கைகட்டி வாய்பொத்தி இருப்பார்கள்  என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்?

இந்து முஸ்லிம் பிரச்சனை தீர்க்கப்பட முடியாதோ என்று திகைக்குமளவில் இருக்கிறது. இதனைத் தீர்த்துக் கொள்ள ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது. நான் ஜனாப் ஜின்னாவின் கோரிக்கையை ஆதரிப்பதோடு,மற்றொரு முக்கியமான அம்சத்தையும் வற்புறுத்த விரும்புகிறேன். முஸ்லிம்கள் ‘முஸ்லிம் நாடு’ என இந்தியாவில் தனி நாடு பிரித்துக் கொள்ள முடியும். ஆனால் இந்துக்கள் முடியாது. ஏனெனில் இந்துக்கள் என்று கூறப்படும் தொகுப்பில் பலப்பல வர்க்கத்தார் உள்ளனர்”.

எனப் பெரியார் இக்கோரிக்கையை முழுக்க முழுக்க ஆதரித்தார். (குடியரசு அறிக்கை-31.3.1940).

இந்தியாவுக்கு ‘இந்துஸ்தானம்’ எனப்பெயர் வைப்பதைக்  காட்டிலும், ‘திராவிடக் கொள்கையை உடைய பாகிஸ்தான்’ என்று பெயர் வைக்கலாம் எனக் கூட அவர் ஒரு முறை குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கு உரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது இன்றளவும் நியாயமான ஒரு கோரிக்கை. பெரியார் அன்று சொன்னார்:

“இந்திய அரசாங்கத்தில், இந்திய ஜனங்களில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய முகம்மதிய சமூகத்தாரர்களுக்குப் பங்கு உண்டா இல்லையா?

அவர்கள் ஏழரைக் கோடிப் பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப்போக முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் இராஜ்ய விஷயத்திலும் மத விஷயத்திலும் நமக்குச் சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும்? வகுப்பு பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்குச் சம உரிமைகிடைத்துவிடுமா?” (குடிஅரசு, தலையங்கம் 14.2.1926)

தேர்தலில் மட்டுமின்றி அரசுப் பணிகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படவேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

முஸ்லிம்களை ‘அந்நியர்களாக’ முத்திரை குத்தும் சதிக்கு எதிராக அவர்களைத் திராவிடர்கள் என அணைத்துக் கொள்ளும் போக்கையும் பெரியாரிடம் காணமுடியும். பெரியாரைப் பொருத்தமட்டில் பார்ப்பனர்களே அந்நியர்கள் (பார்க்க: ஆனைமுத்து, தொகுப்பு, பக்.32. 55.)

இஸ்லாம் மீது பெரியாருக்கு இருந்த பற்றுக்கான காரணங்களையும் அவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சுருக்கம் கருதி மேற்கோள்களைத் தவிர்த்து அவர் கூறுகிற காரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

1.இஸ்லாம் மதத்தில் பல கடவுள் வணக்கம் கிடையாது. மூட நம்பிக்கைகள் கிடையாது. விக்கிர ஆராதனைகள் கிடையாது (ஆனைமுத்து தொகுப்பு பக்.301,302).

2.சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது. தீண்டத்தகாதவர் என்றோ வேதத்தை படிக்கக் கூடாதவர் என்றோ ஆலயத்திற்குள் அல்லது பொது இடங்களுக்குள் நுழைய முடியாதவர் என்றோ இங்கு யாரும் தடுக்கப்படுவது இல்லை(ஆனைமுத்து தொகுப்பு பக்.32.33).

இஸ்லாம் என்றால் ஏதேனும் ‘லுங்கி’ கட்டிக் கொள்வது அல்லது தாடி வைத்துக் கொள்வது என்று நினைக்க வேண்டாம். “இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி என்ற பொருள்படும் அரபுச் சொல். இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை என்பது. இவ்வளவு தான்” என்று சொன்னபெரியார்,

“நம்மிலும் பல பெரியார்கள் ஒன்றே குலம் ஒருவனே  தேவன் என்பது போலெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவைகள் என்றும் ஏட்டளவிலே இருக்கின்றனவே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திலே நடப்பிலே ஒரே ஆண்டவன் வழிபாடும் மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகின்றன”

என்பதைக் சுட்டிக் காட்டினார்.

நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் பெரியார் ஒருவராகத்தான் இருக்கமுடியும். ‘நான்தான் கடைசி நபி’ என நாயகம் சொன்னதைப் பெரியார் விதந்தோதுகிறார்.

“இன்றைய வரையிலே அவருக்குப்பின்னால் இந்தத் துறைகளில் அவர் சொன்ன கொள்கை கருத்துக்களை விட மேலானதாகச் சொல்லுவதற்கு எவரும் தோன்றவில்லை” என முத்தாய்ப்பு வைக்கிறார் (சென்னை சொற்பொழிவு, 20.12.1953).

“திரு. முகம்மது  நபியைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும், மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் கூடி கருத்தரித்து பிறந்தவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அனேகத்தை நான் புகழ்கிறேன். அதற்காகவே அவரையும் நான் பாராட்டுகிறேன்.அப்படிச் சொல்லப் படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும்  நினைக்கிறேன்…. ஆனால் மற்ற மதத்துக்காரர்களோ தங்கள் மதத் தலைவரை ஒரு மனிதர் என்றலே கோபித்துக் கொள்கிறார்கள். கழுதை, நாய், குதிரை இவற்றினுடைய வயிற்றிலிருந்து பிறந்தவர் என்றாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்”

என்றெல்லாம் சொல்லிச் செல்வது குறிப்பிடத்தக்கது (சாத்தான்குளம், 28.7.1931).

அப்படியானால் இஸ்லாமையும் முஸ்லிம் அரசியலையும் பெரியார் எங்குமே விமர்சிக்கவில்லையா? விமர்சிக்கிறார். அந்த விமர்சனங்களின் அடிப்படையில் தான் இன்று சில விஷமிகள் பெரியாரை இஸ்லாமுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவிற்கு வந்த இஸ்லாமில் கலந்து போன சில மூட நம்பிக்கைகளை, இந்து பழக்க வழக்கங்களையே அவர் கண்டிக்கிறார்.

“ஆனால் நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமன கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள்” (சாத்தான்குளம், 28.7.1931).

என்று சொல்கிற பெரியார் அத்தகைய மூட நம்பிக்கைகளாகச் சமாதி வணக்கங்கள், பஞ்சா அடித்தல், சந்தனக்கூடு, தீமிதி, கூண்டு உற்சவம், கொடிவணக்கம், அல்லாசாமி பண்டிகை முதலியவற்றைப் பட்டியலிடுகிறார். இத்தகைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமியருக்குரியவையல்ல என இன்று பல இஸ்லாமிய மத அறிஞர்களே குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கது. இறுதியாக,

“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் முரண்பட்டவன்” (களக்காடு, 23.12.1950).

என்கிறார். பகுத்தறிவுக்குட்பட்ட நவீன மதமாக இஸ்லாம் திகழ்வதில் தவறேதும் வந்துவிடலாகாது என்கிற அக்கறையோடு இந்த விமர்சனங்கள் அமைந்துள்ளன என்பது முக்கியம்.

அதே போல் முஸ்லிம் அரசியலை பெரியார் விமர்சிப்பது என்பது கூட 1948க்குப் பின்புதான். பிரிவினைக்குப் பிறகு இங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு நிலை எடுத்த போதும், 1962க்குப் பின்பு ராஜாஜி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த போதும் தான் பெரியார் முஸ்லிம் அரசியலை விமர்சித்தார். பெரியார் வெறும் சமூக சீர்த்திருத்தவாதியல்ல. ஐம்பது ஆண்டு காலம் இந்த மண்ணில் தீவிரமாக அரசியல் போராட்டம் நடத்திய போராளி. பார்ப்பன எதிர்ப்பு என்பது அவரது அரசியலின் ஆணி வேராக இருந்தது. அதற்கு முஸ்லிம் மற்றும் தலித் அரசியல் துணையாக இருக்கும் என நம்பினார். அப்படி இல்லை என அவர் கருதியபோது அவரது அரசியல் நோக்கிலிருந்து அந்தப்போக்குகளை விமர்சித்தார். எனினும் அதற்காக இதுவரை தாம் முன்வைத்த அவரது கருத்துகள் எதையும் அவர் மாற்றிக் கொண்டதில்லை. கடைசி வரை இஸ்லாமிய ஆதரவிலேயே அவர் நின்றார்.


“நாத்திகம் எனது முக்கிய கொள்கை அல்ல. இஸ்லாமியர்கள் சுயமரியாதை இயக்கத்தில் சேருங்கள்” எனப் பெரியார் அறைகூவல் விடுத்ததையும் ஜின்னா அவர்கள் தென்னக முஸ்லிம்கள் சுயமரியாதை இயக்கத்திலேயே இருக்கலாம் எனச் சொன்னதையும் நாம் மறந்து விடலாகாது.

இஸ்லாமையும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அரசியலையும் இத்தனை அப்பட்டமாக ஆதரித்த ஒரு முஸ்லிம் அல்லாத தலைவரை இந்திய அரசியலில் பார்க்க இயலாது. அதனால்தான் இந்துத்துவம் பெரியாரை மட்டும் அண்ட முடியாமல் விலகி நிற்கிறது.

குறிப்புகள்


1.அப்படியானால் ஏன் பெரியார் மதம் மாறவில்லை எனக்கேள்வி எழுவது இயற்கை. அம்பேத்கரிடம் இதற்கான பதிலைப் பெரியார் கூறியுள்ளார்.

“அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி நாம் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள். நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம் என்றார். நான் சொன்னேன். ’ரொம்ப சரி, இப்போது முதலில் நீங்கள்  சேருங்கள், நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீர்மானமாகப்  பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தியக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமர் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும்  இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான்,இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது” (டெல்லி பகார் கஞ்ச், 15.12.1959).

என்று தான் வெளியே நிற்க வேண்டியதன் நியாயத்தைப் பெரியார் விளக்குகிறார்.

  1. தனது சுய மரியாதைக் கொள்கைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக இஸ்லாத்தைப் பெரியார் கருதினார்.

 

இறைத்தூதர்’ என்கிற இஸ்லாமியக் கருத்தாக்கத்தைப் பெரியார் ஏற்றுக்கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். அதற்கான அவரது விளக்கமும் கூட நடைமுறை சார்ந்ததாகவும் சுயமரியாதைக்குப் பொருத்தமானதாகவுமே இருந்தது.

“மேலும், முகமதிய மதம் மிக்க சுயமரியாதை உணர்ச்சி உடையது என்றும் சொல்லுவோம். எப்படி என்றால், அது இனி உலகத்திற்குக் கடவுள் அவதாரங்ளோ, நபிமார்களோ, தீர்க்கதரிசிகளோ வரக்கூடும் என்பதை ஒருக்காலும் ஒப்புக் கொள்வதில்லை. மனிதனை மனிதன் வணங்குவதையோ அவன் காலில் விழுவதையோ அது சிறிதும் சம்மதிப்பதில்லை”(குடி அரசு’ ஆக. 25, 1929).

என இடைத்தரகர்கள், மகான்கள் ஆகியோர்  இஸ்லாத்தில் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டதை அவர் அடையாளம் கண்டார்.

இந்து மதத்தைப் போலன்றி இஸ்லாம் காலச் சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தத்திற்கு சாத்தியமுள்ளது என்றும் பெரியார் நம்பினார். அன்றைய துருக்கி (கமால் பாஷா), ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. (‘குடி அரசு’ ஆக. 23, 1931; ஆக.2, 1931; நவம்பர் 17, 1935).

“இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? ஏனெனில், திரு. முகம்மது நபி கொள்கைகள் ஆனதனாலும், அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதையுடையதாய் இருக்கின்றது” (‘குடி அரசு’ ஆக. 23, 1931).

“அவர் (முகமது நபிகள்-அ.மா) சொன்னவற்றிலேயே இது மிகவும் முக்கியமாய் கவனத்தில் வைக்க வேண்டிய காரியமாகும். என்ன அவர் சொல்லுகிறார்? நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றில் உனக்குச்  சம்மதமிருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்”  (டிசம்பர் 20, 1953, சென்னை).

என்பன பெரியாரின் கூற்றுகள். பஞ்சா கொண்டாட்டம், அல்லாசாமி பண்டிகை, சமாதி வணக்கம் முதலான  ‘மூடநம்பிக்கைகளை’ அவர் இந்த நோக்கிலேயே வெறுத்தார்.

“ஆகவே முஸ்லிம் பகுத்தறிவுக்கு விரோதமாய் ஏதாவது இருந்தால், அது தங்களது கட்டளை அல்ல என்று தள்ளிவிடவும், அவற்றை நீக்கிவிடவும், பகுத்தறிவுக்காரரையெல்லாம் தங்கள் சகோதரர்கள் என்றும், இஸ்லாம் என்று சொல்லவும் தயாராக இருக்க வேண்டும்… உலகமெல்லாம் ஒரே மார்க்கமாவதற்கு பகுத்தறிவு மார்க்கமாவதற்கு முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். அவர்களுக்கே அதிக சவுகரியமிருக்கிறது. ஆதலால் அதுவே நபி அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்” (‘குடிஅரசு’, ஆகஸ்டு 23, 1931).

என்பதே அவரது நபிகளின் பிறந்தநாள் செய்தியாக இருந்தது. மதங்கள் பகுத்தறிவுக்கு விரோதமானவையாக இருந்தபோதிலும் மதங்களை ஏதேனும் பகுத்தறிவு மயமாக்க  முடியுமெனில் முஸ்லிம்களுக்கே’ அதிக சவுகரியமிருக்கிறது’ எனவும் அவர் நம்பினார்.

பிரத்யட்சத்தில் முஸ்லிம் மதத்தின் சிறப்புக்கள் என்கிறபோது சாதியையும் தீண்டாமையையும் ஒழித்து சகோதரத்துவத்தை நிலை நாட்டும் அதன் சிறப்பை அவர் பலப்பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். அது சண்டாளர்களையும் ரட்சிக்கும் மதம்; வீரத்தையும் ஆண்மையையும் (ஒடுக்கப்பட்ட மக்களுக்கு-அ.மா) அளிக்கும் மதம் (‘குடிஅரசு’ ஆக.25, 1929). “ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டதாய்ச் சொல்லி, 5,30 மணிக்குத் ‘தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று” மனிதனாக முடியும் என (‘குடிஅரசு’, ஆக.2, 1931) ரொம்பவும் romantic ஆகச் சிலாகித்தார். முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்பதே நம்மில் பலருடைய எண்ணம். ஆனால் பெரியாரோ, பெண்களுக்குக் கோஷா அணிவிக்கும் முறையில் தனக்கு உடன்பாடில்லை எனச் சொன்னபோதும்,

“முகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது.அதாவது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, விதவை விவாகம் உண்டு, கணவனும் மனைவியும் ஒத்துக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ள சுதந்திரம் உண்டு” (குடிஅரசு, ஆக. 25, 1929)எனச் சுட்டிக்காட்டினார்.

கோஷா முறை பற்றி விமர்சனங்கள் இருந்த போதும் அதுவும் கூட படிப்படியாக விலகி வருவதையும் துருக்கி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் முஸ்லிம் பெண்கள் வேலைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வதையும், ஹைதராபாத் நிஜாம் தம் புத்ரிகளுடன் தாராளமாய் பொது அரங்கில் உலா வருவதையும் அதே உரையில் அவர் கவனம் ஈர்த்தார்.

 

வருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாக ஏழைகளுக்குச் செலவிடுவது (சக்காத்), விக்ரக ஆராதனையை மறுப்பது, சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுகிற வகையில் மற்ற மதங்களைவிட மிக்க நாகரீகம் கொண்டதாக இருப்பது ஆகியன இஸ்லாத்தில் அவர் வரவேற்ற இதர அம்சங்கள் (பெ.சி.4.196-202,4.3-14).

ஹஜ் யாத்திரையையும் கூட அவர் ஆதரிக்கவே செய்தார். அதற்கான அவரது விளக்கம்  பகுத்தறிவு சார்ந்ததாக மட்டுமின்றி அறம் சார்ந்ததாகவும் இருந்தது. இதுகுறித்து.


“மவுல்வி அப்துல் அமீது சாயபு பாகவி அவர்களைக் கேட்டேன். முஸ்லிம்கள் மக்காவுக்குப் போவதில், செல்வத்திலும் சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர, எல்லோரும் போய்த் தீரவேண்டுமென்று இல்லையென்றும், அந்த இடம் முகம்மது நபி அவர்கள் பிரத்தியட்சத்தில் பிறந்த இடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்றும், அறிவு வளர்ச்சிக்கும், மற்ற மக்கள் நடை, உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும்படியான ஒரு யாத்திரை என்றும், கொலை, களவு, கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்துவிடும் என்று சொல்வது தப்பு என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் சொல்வதில்லை என்றும் சொன்னார்” (குடிஅரசு, ஆக. 9, 1931).

என்று விளக்கினார். புனித ஹஜ் என்பது நபிகள் பிறந்த தலத்திற்குச் சென்று வருதல் என்பதிலும் வேறான பல அர்த்தங்களை உடையது என்கிற அளவிற்குப் பெரியார் இஸ்லாம் குறித்து அறிந்திராத போதிலும் ‘பிரத்தியட்சம்’சார்ந்த ஒரு விளக்கத்தை அதற்கு அளித்தார். பிறமதங்களில் யாத்திரை என்பது பாவங்களை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுவது. எல்லாப் பாவங்களையும் செய்துவிட்டுப் புண்ணிய தீர்த்தமாடினால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஒழுக்கமான வாழ்வொன்றின் மூலமாகவே நல்ல கதி அடைதல் என்கிற புரிதல் உள்ள இஸ்லாத்தில் யாத்திரைக்கு அந்தப் பொருள் இல்லை என்பதைப் பெரியாரால் அடையாளம் காண முடிந்தது.

இவை யாவும் ஏதோ முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்டவை அன்று. ஏனெனில் இதே காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் மற்றும் இஸ்லாம் குறித்த தனது விமர்சனத்தைப் பெரியார் அவ்வப்போது முன் வைக்காதிருந்ததில்லை. “இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக்கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்துவிடாதீர்கள்” என்கிற எச்சரிக்கையை அவர் செய்யத் தயங்கியதில்லை(குடிஅரசு, ஆக.2, 1931). மதங்கள் சமூக அமைதியைக் கெடுப்பதைப் பற்றிச் சொல்ல வருகையில், 1926 தொடங்கி 1931வரை ஆண்டு வாரியாக ‘இந்து மூர்க்கர்கள்’ பலாத்காரமாகக் கற்பழித்த பெண்களின் எண்ணிக்கையைச் சொல்லும் அதே நேரத்தில் ‘முஸ்லிம் மூர்க்கர்கள்’ செய்ததையும் அவர் பட்டியலிட்டார் (பகுத்தறிவு, 1934, செப்டம்பர் 9. பார்க்க: ஆனைமுத்து, பக்.1420). கிறித்துவ மதத்தைப் போலவே இஸ்லாமும்கூட நடைமுறையில் ஒரு பார்ப்பனீய மதமாகவே உள்ளது என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டார். முல்லாக்கள் புரோகிதர்கள் போலச் செயற்படுவதை அவர் விமர்சித்தார்.

விருதுநகர் மாநாட்டில் மத ஒழிப்புத் தீர்மானத்தை இயற்றியதோடு அதை விளக்கி,

“அன்றியும், இந்த நாட்டின் இன்றைய சுதந்திர ஆட்சிக்கு, சகோதரத்திற்கு சினேக தத்துவத்திற்கு மதங்களே இடை யூறாய் இருந்து கொண்டு உட்பகையையும் சாந்தியற்ற தன்மையையும் உண்டாக்கி வருவதை நாம் நேரிலேயே தினமும் பார்த்தும் கேட்டும் வருகின்றதோ மாதலால் விருதுநகர் மாமநாட்டில், ‘மக்களுக்குள் எவ்வித மத உணர்ச்சியும் இருக்கக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று”

எனத் தலையங்கம் வெளிவந்த (குடிஅரசு அக். 23, 1931) அதே இதழில்தான் கோயமுத்தூரில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் அவர் ஆற்றிய உரையும் வெளிவந்தது. உலகமெல்லாம் ஒரே மார்க்கமாக வேண்டும் என அங்கு பேசிய பெரியார் மத ஒழிப்பு குறித்த தனது பார்வையை ரத்தினச் சுருக்கமாக,

“’மதங்கள் ஒழிந்த பிறகுதான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும், என்பது அநேக அறிஞர்களது அபிப்ராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போதே ‘உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ சாந்தி ஏற்பட்டு விட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அத சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமான கவலை எடுத்து வருகின்றது” (குடிஅரசு, ஆக.23,1931).என்றார். ‘மதங்கள் ஒழிய வேண்டும்’ என்பதையும் ‘மதமாற்றம்’ என்பதையும் இணையாகவே அவர் சொல்லி வந்தததன் பொருள் இதுவே.

 

மதம் பற்றிய சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பற்றிச் சொல்ல வரும்போது அதில் ஆஸ்திகர்களும்  இருக்கலாம் என்று சொல்லும் பெரியார், ‘இந்து மதத்தை விட்டுவிடுங்கள். மதமில்லாமலும் நாஸ்திகர்களாகவும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை என்பார். வேறு ‘சிறிதாவது அதைவிட மேலானதும், சீர்திருத்தமானதும், மூடநம்பிக்கைகள் குறைவானதுமான மதத்தை’ அனுசரிக்கலாம் என்பார் (குடிஅரசு, நவம்பர் 17,1935).

அப்படியான மதமாக அவர் முகமதிய மதத்தையே திரும்பத் திரும்ப அடையாளம் காட்டினார் என்பதில் யாருக்கும் அய்யமிருக்க இயலாது.

   ----------------- பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள்  பல ஆண்டுகளுக்கு  முன்பு எழுதிய கட்டுரை

 https://www.amarx.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/

18.5.23

நம்மைச் சூத்திரர்களாக்கியது யார்? ஆரியரா? கடவுளா?

 

 எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து சுமக்கிறானா?                                                                 தந்தை பெரியார்

என்னையோ அல்லது திராவிடர் கழகத்தாரையோ இன்று ஆரியம் தூற்றுகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்கள் கடவுளைப் பழிக்கிறோம் என்பதற்காகவே அல்ல. கடவுளுக்கேன் கோயில்கள், பூஜைகள், தேவடியாள்கள் என்று கேட்கிறோம் என்பதற்காகவோ அல்லது “நாங்கள் ஏன் சூத்திரர்கள் ? எங்கள் தாய்மார்கள் ஏன் சூத்திரச்சிகள்? எங்கள் தோழர்கள் ஏன் சண்டாளர்கள்? நீங்கள் மட்டுமேன் பிராமணர்கள்?” என்று வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்துக் கேட்பதால்தான். இதை அறியாமல் எங்களை நாஸ்திகர்கள் என்று நீங்களும் சேர்ந்து தூற்றுவீர்களானால் நான் என்ன கூற முடியும்? அந்த அளவுக்கு நமக்குள்ளாகவே அவன் உண்மைச் சூத்திரர்களை உண்டாக்கி நம்மை மானங்கெட்ட சமுதாயமாக்கி விட்டான் பார்ப்பான் என்றுதானே கூறமுடியும்?

என்னதான் மதத்திலோ கடவுளிடத்திலோ பக்தியிருந்தாலும் கூட, ஒருவனுக்கு மானமிருந்தால், தன் மகளை, தன் சகோதரியைக் கடவுளுக்கு என்று பொட்டுக் கட்டி, ஊருக்கு உபகாரத்திற்கு விடுவானா? எந்தப் பார்ப்பானாவது தன் மகளைக் கடவுளுக்குப் பொட்டுக் கட்டிக்  கொள்ள  அனுமதித்திருக்கின்றானா? எந்தப்பார்ப்பானாவது தன் மகளைத் “தேவடியாளாக்கிக்” கடவுள் முன்னிலையில் சதிராட விட்டிருக்கிறானா? எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து அவன் சுமக்கிறானா? எந்தப் பார்ப்பானாவது உங்களைப் புரோகிதத்துக்கு வைத்து சடங்கு செய்து பார்த்ததுண்டா? மானமிருந்தால், அவன் உங்களை இவ்வளவு இழிவு படுத்தியிருக்கும்போதும், இழிவுபடுத்தி வரும்போதும், இன்னும் உங்கள் அறிவை அவனுக்கு அடிமைப் படுத்திவிட்டு அவன் உங்கள்மீது சவாரி செய்யப் பார்த்துக் கொண்டிருப்பீர்களா? இதைத்தானே நாங்கள் கேட்கிறோம்? இஷ்டப்பட்டால் நீங்கள் கோயிலுக்குப் போங்கள்.. வேண்டாமென்று கூறவில்லை. பக்தி பரவசமாகி, ஆனந்தக் கூத்தாடுங்கள். அதையும் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அந்த அழுக்குப் பிடித்த பார்ப்பானுக்கு ஏன் தலை வணங்குகிறீர்கள்? அவன் மொழிக்கு ஏன் அடிமையாகிறீர்கள்? என்றுதானே உங்களைக் கேட்கிறோம். இதுவா நாஸ்திகம்? இதுவா துவேஷம்?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஏன் அவர்கள் பாடுபடாமல் வாழக் கொடுத்து கும்பிட்டு, அவர்களின் “தாசிகளாக, தாசி மக்களாக” வாழவேண்டும்? அவர்கள் ஏன் உங்கள் காசை ஏமாற்றிப் பறித்துக்கொண்டும், பிராமணர்களாக _ உங்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக _ இருக்கவேண்டும் என்று தானே நாங்கள் கேட்கிறோம்? இந்த ஆரியக் கொடுமை ஏமாற்றம் என்றோ அழிந்திருக்காதா? ஆரியத்தை வளர்க்க உதவிய இக்கோயில்களும், இக்குழவிக்கல் சாமிகளும் சாஸ்திரங்களும் மத சம்பிரதாயங்களும் என்றோ இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுத் தரைமட்டமாகி இருக்காதா? நீங்கள் ஏன் ஈனமாய் மானமற்று வாழவேண்டும் என்று கேட்டால் அதற்கா என்மீது நீங்கள் பாய்வது? நீங்கள் ஏன் சூத்திரர்கள்? அவர்கள் ஏன் பிராமணர்கள் என்று கேட்டால் அதற்கா நீங்கள் என்மீது காய்வது?

அந்தப் பார்ப்பனர் ஒரு பெரிய சமுதாயத்தையே மதம் என்ற பேரால் கடவுள் என்ற பேரால் மானங்கெட்ட மடையர்களாக்கி. அவர்களில் தப்பித் தவறி ஓரிருவர் அறிவு கொண்டு சிந்திப்பார்களானால், அவர்கள் மீதும் அம்மடையர்களையே ஏவிவிட்டுக் கெடுத்து வருவானாகில், அதை நீங்களும் ஆதரித்து வருவதா? சற்றேனும் மான உணர்ச்சி இருந்தால், சிறிதாவது பகுத்தறிவு கொண்டு, பொறுமையோடு சிந்தித்துப் பாருங்களேன். உங்கள் மகான்களும் உங்கள் ரிஷிகளும் உங்களின் இந்த மானங்கெட்ட தன்மையைக் கண்டித்திருக்கிறார்களா? நீங்கள் அன்றாடம் தொழும் தெய்வங்களாவது இதைப் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? உங்கள் அரிசி பருப்பையெல்லாம் உண்டு வாழும் அத்தனை சாமிகளும் இன்று வரைக்கும் அந்த நாற்றம் பிடித்த பார்ப்பானைத்தானே தமக்குப் பூசாரியாக வைத்துக் கொண்டிருக்கின்றன? அய்யோ, பாவம்! வெறுங் கூழாங்கல்லைக் கடவுளென்று நம்பி நீங்கள் போனால் அதற்கு அந்த உயிரற்ற, பேச்சு மூச்சற்ற கல்லென்ன செய்தல் கூடும்?
அன்றைய ரிஷிகள், மகாத்மாக்கள்தான் தொலைந்து போகட்டுமென்றால், இன்றைய மகாத்மாக்கள், ரிஷிகள் மட்டுமென்ன, அவர்களை மிஞ்சிவிட்டனர்?

இந்த வர்ணாஸ்ரம தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் ஒரு வார்த்தை கூறியிருப்பார்களா  இந்தக் காந்தியார், இந்த இராஜகோபாலாச்சாரியார்? அவர்கள்தான் போகட்டுமென்றால், இந்த முனிசாமிப் பிள்ளையாவது, சிவஷண்முகம் பிள்ளையாவது கேட்டிருப்பார்களா, தான் ஏன் பஞ்சமன் என்று? இவர்கள் வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை கூறியிருந்தால்கூட, இவர்கள் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்க முடியாதே! இன்றுதான் என்ன? ஒருவார்த்தை எதிர்ப்பாகக் கூறி விட்டால்கூட, அன்றே பழிக்க ஆரம்பித்த விடுமே அவர்களை இந்த ஆரியப் புல்லுருவிக் கூட்டம்.! எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள்? ஆதரித்தவர்கள் என்ன ஆனார்கள்? என்று கூறுகிறேன், கேளுங்கள்.

ஆரியத்தை எதிர்த்த கபிலரை உங்களுக்குத் தெரியுமா? பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று கூறி ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவரை உங்களில் எத்தனைபேர் அறிவீர்கள்? அவர்கள் இயற்றிய அகவலை குறளைத்தான் உங்களில் எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? ஜாதியிரண்டொழிய வேறில்லை என்று நாலுஜாதி முறையை எதிர்த்த அவ்வையை உங்களுக்குத் தெரியுமா? இதற்கு மாறுபட்டு, ஆரியத்தை ஆதரித்த, அன்னக் காவடிப் பார்ப்பானைப் பிராமணன் என்று உயர்த்தி மதித்த, ஒரு “ராமனை”யோ ஒரு “கிருஷ்ணனையோ” உங்கள் வீட்டு மாட்டுக்காரப் பையனுக்குக்கூடத் தெரியுமே! திருடிய கிருஷ்ணனுடைய கீதை, ஒழுக்க ஈனமாக நடந்த கிருஷ்ணனுடைய கீதை, உங்களை “நான்தான் சூத்திரனாகப் படைத்தேன், நாலு வர்ணங்கள் உண்டு’’ என்ற கீதை, உங்களுக்குப் பிரார்த்தனைப் புத்தகம்! அவன் உங்கள் கலியுக தெய்வம்! ஆனால், அருள் கபிலனும் தெய்வப் புலவனாம் திருவள்ளுவரும் கலைப்பிறவி அவ்வையும் உங்களுக்குப் பறச்சி வயிற்றில் பிறந்தவர்கள் என்பதோடு அவர்களுடைய பாடல் உங்களுக்குத் தெரியாது.

அதாவது திருவள்ளுவர், கபிலர், அவ்வை ஆகியவர்கள் ஆதி என்ற சூத்திரச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவர்களாம். நீங்கள் போற்றும் தொல்காப்பியரும் ஆரியனுக்குப் பிறந்தவராம். அப்படிக் கெட்டிக்காரத்தனமாக எல்லா உயர்வுகளையும் தன் இனத்தவரே அடையவேண்டும் என்றும் அவன் பாடுபட்டு வரும் போது, அதைக் கண்டும் நீங்கள் வாளாவிருப்பீர்கள் ஆனால், உங்களை மானமுள்ள மக்களாக எப்படி மற்ற மக்கள் கருத முடியும்? மானமிருந்தால் தோழர்களே! நீங்கள் மனிதத்தன்மை பெற எங்களோடு ஒத்துழையுங்கள். இன்றேல் சற்று ஒதுங்கியாவது நில்லுங்கள். ஆரியத்திற்குக் கையாளாக விபீஷணர்களாகவோ, அநுமார்களாகவோ ஆகாதீர்கள்!


நீங்கள் ஏன் சூத்திரர்கள்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். சூத்திரர் என்றொரு வர்க்கம் இருப்பானேன் _ அதுவும் இந்த ஞானபூமியில்? இந்த புண்ணிய பூமியில் மட்டும் இந்த இழிவர்க்கம் இருப்பானேன்? வேறெந்த நாட்டிலாவது சூத்திரர்கள், பிராமணர்கள் உண்டா? நாகரிகமில்லாத முரட்டு மக்களான நீக்கிரோக்களில் கூட பிராமணன் – சூத்திரன் இல்லையே? இருளடைந்த பனிக்கட்டியினூடே பச்சையாக மக்களைத் தின்று வாழும் எஸ்கிமோக்களில்கூட இல்லையே இந்த உயர்வு தாழ்வு?

பாரதமாதா புத்திரன் என்று கூறிக்கொள்ளும் அன்பனே! பாரத மாதவுக்கு ஜே போடும் வீரனே! உன் பாரத மாதாவுக்கு மட்டும் எப்படி
நாலு அய்ந்து ஜாதிப் புத்திரர்கள் பிறந்திருக்க முடியும்? அப்படியானால் பாரதமாதா புத்திரர் களுக்கு நாலு தகப்பன்மார்களா? ஒரே ஒரு ஜாதியா? எப்படி இருக்க முடியும்? இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? ஏன் இப்படிப் பித்தலாட்டம் செய்து ஒரு தாய்க்கு நாலு ஜாதிப் பிள்ளைகள் என்று மானமற்று எங்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்?


உங்களைச் சூத்திரர்கள் என்ற கூறுவது எது? இந்து மதம்தானே உங்களைச் சூத்திரர்-களாக்கி வைத்திருக்கிறது? நீ உன்னை இந்துவென்று கூறிக் கொள்வதால்தானேஅதன் வர்ணாஸ்ரம தர்மத்திற்குக் கட்டுப்பட்டாக வேண்டியிருக்கிறது? இந்து மதக் கடவுளை ஒப்புக் கொள்வதால்தானே நீ சூத்திரனாக்கப்பட்டிருக்கிறாய்? அதைக் கும்பிடப் போவதால் தானே கடவுள் அறைக்கு வெளியில் நின்று குனிந்து தாடையில் அடித்துக் கொள்ளுகிறாய் தம்பி!

பித்தலாட்ட முட்டாள் தனமான கதையை நீ யோசித்துப் பார்! உன்னை உற்பத்தி செய்தவர் பிரம்மாவாம்! அந்தப் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்கள் பிராமணர்களாம். அவரின் தோளிலிருந்து வெளிப்பட்டவர்கள் சத்திரியர்களாம். அவரின் இடுப்பிலிருந்து வெளிப்பட்டவர்கள்தான் வைசியர்களாம். அவரின் காலிலிருந்து வெளிப்பட்டதால் தான் (நீ) சூத்திரனாம். பிரம்மாவிற்குப் பெண்டாட்டி ஒருத்தி இருக்கும்போது, புருஷனுக்கு இந்த வேலை எதற்கு? அது முடியுமா? பிரம்மா ஆணா பெண்ணா?அதுதான் போகட்டுமென்றாலும், பிறப்புவிக்கும் வசதி பல இடங்களில் ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? கீதையில் கிருஷ்ணன், தான் 4 ஜாதிகளைப் பிறப்பித்ததாகச் சொல்லுகிறானாம். 4 பேரையும் பிரம்மா பிறப்பித்து இருந்தால் பிராமணனுக்கு மாத்திரம் பிரம்ம புத்திரன், பிரம்ம குலத்தன் என்கின்ற பெயர் ஏன்? கீழ் பாகத்தில் பிறந்தால் மட்ட ஜாதியா? பலா மரம் அடியிலும் காய்க்கிறது. மேலும் காய்க்கிறது. தன்மையில் ருசியில் பேதமுண்டா? முட்டாள் தனத்துக்கும் அக்கிரமத்திற்கும் ஓர் எல்லை வேண்டாமா? பாடுபட்டு உழைத்துக் கோவில் கட்டிப் படியளக்கும் நம்மையா இந்தத் தெய்வங்கள் காலிலிருந்து பிறந்த மக்களாக ஆக்கவேண்டும்? பாடு உழைப்பு என்பதையே கண்டறியாத ஒரு காசுகூட தெய்வத்திற்கு என்று கொடுத்தறியாத, சாமியையும் ஏமாற்றி சாமிக்கு ஆக நாம் கொடுப்பதில் வயிறு வளர்க்கும் அவனையா தன் முகத்தில் இருந்து பிறந்த பிராமணனாக ஆக்கவேண்டும்? இதைச் செய்யும் அல்லது அனுமதிக்கும் ஒரு கடவுளும் நமக்குக் கடவுளாக இருக்கக்கூடுமா? நாம் தொட்டால் தன் உயிர் போய்விடும் என்று கூறும் கடவுளும் நமக்குக் கடவுளா?

என் வண்ணாரத் தோழனும் என் சக்கிலித் தோழனும்கூட இன்று தந்தி கொடுக்கலாம்; தொலைபேசியில் பேசலாம். அவர்களும்கூட ஆகாயக் கப்பலேறி உங்கள் தலை மீதும் உங்கள் சாமி தலை மீதும் உங்க சாமி கோயில் கோபுரங்களுக்கும் மேலே கூட பறக்கலாமே, 1 மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், இவற்றை எல்லாம் அநுபவிக்க அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கும் போது இந்த அசையாத குழவிக்கல் கடவுளை மட்டும் இந்த அழுக்குப் படிந்த பார்ப்பான் மட்டுமேவா தொடவேண்டும்? சூரத்திற்கும் வீரத்திற்கும், ஆற்றலுக்கும் அறிவுக்கும், ஆண்மைக்கும், அன்புக்கும், அழகுக்கும், அரசுக்கும் ஆகிய அத்தனைச் சிறப்புகளுக்கும் காரண பூதர்களாயிருந்த இருக்கிற மக்களின் சந்ததியார்களாகிய நாம் சூத்திரர்களாக்கப்பட்டது எந்தக் காலத்தில்? நம்மைச் சூத்திரர்களாக்கியது யார்? ஆரியரா? கடவுளா?

ஆரியர் இந்நாட்டில் குடியேறிய பின்னர் தானே அவர்கள் நம்மை வேசி மக்கள் என்று ஏசியிருக்கவேண்டும்? அதற்கு பின்புதானே நாம் சூத்திரர்கள் ஆனோம்? அதற்கு முன்பே நாம் சூத்திரர்களானால் நம்மை நம் கடவுளேவா வேசி மக்கள் என்று அழைத்திருக்கும்? அப்படி இருந்தாலும் அதை நாம் கடவுளென்றுதான் ஒப்புக்கொண்டிருப்போமா? ஆகவே, 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கேயோ மத்திய ஆசியாவிலிருந்து ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு புல் தரைதேடி பிச்சை எடுத்துப் பிழைக்க வந்த ஆரிய மலைவாசிக் கூட்டம்
தான், அவர்களின் யாகத்தையும் சோம சுராபானத்தையும் வெறுத்தமைக்காக நம் முன்னோர்களை வேசி மக்களென்று – சூத்திரர்களென்று பழித்தது.
அதை இந்தப் பகுத்தறிவு விஞ்ஞான காலத்திலும் மானமின்றி ஒப்புகொண்டு அவர்களுக்குத் தாசானுதாசர்களாய் இருந்து வருவதால் தான் இன்னும் அவர்கள் நம்மை ஏய்த்து வருகிறார்கள்? நீங்களும் ஏன் என்று கேளாது ஏமாந்த சோணகிரிகளாய் இருந்து வருகிறீர்கள். இதுவரை யார் சிந்தித்தார்கள், இவ்விழிவு பற்றி? ஏதோ நான் பலரைச் சேர்த்துக்கொண்டு இவ்விழிவு நீக்க வேலையையே முக்கியமாகக் கொண்டு பணியாற்றி வருவதால், சிலர் இவ்விழிவை உணர்ந்து பணியாற்ற வந்திருக்கிறீர்கள். இதைக் கண்ட ஆரியக் கூட்டம் தன்செல்வாக்கு அழிகிறதே என்று என்னைத் தூற்றுமானால், என் அன்பனே! நீயுமா அத்துடன் சேர்ந்து கூப்பாடு போடுவது? அவனுக்குத்தான் வருவாய் போய் விடுகிறதே, தன் உயர்வு போய்விடுகிறதே என்று வருந்தி வாய்குன்றி ஏதோ பிதற்றுகிறான். அவனுடைய தவற்றை நாங்கள் எடுத்துக் கூறினால், திராவிடனே உனக்கு என்னத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரவேண்டும்? நீ ஏனப்பா வேதனைப்படுகிறாய்? உனக்கு வேதனையாயிருந்தால் அவனுக்குப் போய் நியாயம் சொல்லி அவனை மாற்றிக்கொள்ளும் படி செய்யேன். அதை விட்டு விட்டு என் உயிரை ஏனப்பா வாங்குகிறாய்?

எனக்கு மட்டுமா பாடுபடுகிறேன்? உனக்கும் உன் குடும்பத்துக்கும் உன் சந்ததியாருக்கும் சேர்த்துத் தானப்பா நான் சூத்திரப்பட்டம் போகவேண்டுமென்று பாடுபடுகிறேன். ஜாதிப் பிரிவினை கூறும் இந்து மதத்தையும் அதற்கு ஆதாரமாயுள்ள சாஸ்திரங்களையும் புராணங்களையும் இவற்றை ஒப்புக்கொள்ளும் கடவுளையும் நான் குறைகூறினால் திராவிட காங்கிரஸ் தோழனே! உனக்கேன் தம்பி கோபம் வருகிறது? என்னைச் சூத்திரன் என்று இவை கூறுவது எனக்கு அவமானமாயிருந்து வருவதால் இவற்றிலுள்ள குறையை எடுத்துச் சொல்கிறேன். உனக்கு மானமில்லை யென்றால் உன்னை வேசி மகன் என்று இவை கூறுவதை நீ ஒப்புக்கொள்வதாயிருந்தால், ஒதுங்கியிரேன் ஒரு புறத்தில்!

-------------------------------14.12.1947 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார்சொற்பொழிவு) – ‘விடுதலை’, 23.12.1947

17.5.23

திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது

 திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது.


5

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடைய வர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத் தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது.

ஆனால் “படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு?” என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோச மானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிவிட்டது. 

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் “பேச்சள விற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக” என்று சொல்லப்படுகிறது. 

ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. 

 பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல் லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் - இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர் களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப்படிப்பாகப் போய்விட்டது.   

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப்பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக்கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்பு வீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகு வார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமை யாவது காலப்போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்ப வர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்? 

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப் படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் ‘திரா விடர்’ என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டிய தாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த் தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. 

இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரி வினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்க ளுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். 

திராவிடம் - திராவிடர் என்பது 

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி,ஙி,சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. 

இதுகூட ஏன்? 

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங் களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், 

ஏற்பட்ட கெடுதி 

அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. 

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப்பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண் டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகி விடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத் தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவி டனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் 

சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், “பிராமண”னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றி பெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. 

திராவிடர் என்பதின் கருத்து 

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். 

நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதா தீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில் தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.

கலந்துவிட்டது என்பது... 

ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராம ணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக் கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றி விட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா? 

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். 

நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டு களும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாத வனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயி ருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடு கிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும்.  

இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப் பட்டுத்தான் போகும். 

சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்ப வைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகிய வைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக் காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தி யுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். 

மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். 

இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள் தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்ன வைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். 

      ---------------09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" - சொற்பொழிவு - 14.07.1945