Search This Blog

31.1.14

காந்தியார் எதற்காகப் பலியானார்? அவரைக் கொன்றொழித்த கூட்டம் எது?


கோட்சே உயிருடன் இல்லை - கோட்சேயிசம்
உயிருடன்தான் இருக்கிறது! அதுதான் இந்துத்துவா!

சென்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவரின் படப்பிடிப்பு


சென்னை, ஜன.31- கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கோட்சேயின் தத்துவமான இந்துத்துவா இன்றும் இருக்கிறது - எச்சரிக்கையாக இருந்து முறியடிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னைப் பெரியார் திடலில் மாணவர் இந்தியா எனும் அமைப்பில் நேற்று (30.1.2014) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் வரைந்த கருத்தோவியம் வருமாறு:

1. காந்தியார் சுடப்பட்டது ஏன்?

காந்தியார் சுடப்பட்டது ஏன்? என்பதுபற்றி தந்தை பெரியார் தனது நாட்குறிப்பிலே குறித்து வைத்திருந்தார். அது இதோ:

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947 இல்; காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல். காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல். அதாவது அவர் நம் நாடு மத சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கிய மானது.

(ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறேன் என்று சொன்னபோது காந்தியாரை மகான் ஆக்கினார்கள். நான் சொன்ன ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு என்று சொன்னபோது, அவரை துர் ஆத்மா ஆக்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை).

2. காந்தியாருக்குப் பார்ப்பனர்கள்மீது ஏன் கோபம்?

சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) இருந்தார். பொது வாழ்க்கையில் மிகவும் தூய்மையானவர்; பக்த சிரோன்மணிதான்; மாதம் தவறாமல் திருவண்ணாமலை ரமண ரிஷியைத் தரிசிப்பவர்தான். அவரிடம் சமூக நீதிப் பார்வை இருந்தது. முழுக்க முழுக்கப் பார்ப்பனர்கள் - கல்வி, உத்தியோகங் களைத் தாங்களே அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதனால் பார்ப்பனர்களுக்கு ஆத்திரம்; விளைவு காந்தி யாரிடம் காவடி எடுத்தார்கள். ஓமந்தூர் ராமசாமி தாடி யில்லாத ராமசாமி நாயக்கர் என்று புகார் சொன்னார்கள்; எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர் அல்லா தாருக்குத்தான் கொடுக்கிறார். பார்ப்பனர்கள் வஞ் சிக்கப்படுகிறார்கள் என்று குற்றப்பத்திரிகை படித் தார்கள். காந்தியார் அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.

அதற்குப்பின் முதலமைச்சர் ஓமந்தூரார் காந்தி யாரைச் சந்தித்து உண்மை விவரங்களைக் கூறினார். பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்குமேல் எத்தனைப் பங்கு அனுபவிக்கிறார்கள் என்பதையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார். காந்தியாருக்கு உண்மை நிலவரம் புரிந்துவிட்டது.

அதற்குப்பின் தங்களைச் சந்திக்க வந்த பார்ப் பனர்களிடம் சொன்னார், உங்கள் பங்குக்குமேல் அதிகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுக் கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்

பார்ப்பனர்களைப் பார்த்து, பிராமணர் களுக்குத் தர்மம் வேதம் ஓதுவதுதானே? உங்களுக்கு ஏன் பிணம் அறுக்கும் டாக்டர் வேலை? உங்களுக்கு ஏன் டி ஸ்கொயர்? போய் உங்கள் வருணத் தொழிலைச் செய்யுங்கள் என்று காந்தி யார் கூறியதுதான் தாமதம், பார்ப்பனர் கள் ஒரு புள்ளி வைத்துவிட்டனர் அப்பொழுதே!

சரி இனிமேல் காந்தி நமக்குச் சரி வரமாட்டார். அவர் செல்வாக்குப் பார்ப் பனர்களுக்கு இனிப் பயன்படப் போவ தில்லை என்று தீர்க்கமாக முடிவு செய்து, காந்தியாரை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு கட்டிவிட்டனர்.

3. வானொலியில் என்ன பேசினார் பெரியார்?

உலக மக்கள் எல்லோராலுமே போற்றப்படும் பெரியார் காந்தியார் முடிவெய்திய சேதியானது எல்லா மக்களுக்குமே துக்கத்தைக் கொடுக்கக் கூடிய சேதியாகும். இவரது முடிவு இந்த நாட்டுக்கு பரிகரிக்க முடியாத நஷ்டம் என்பதோடு, இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் மறைய நேரிட்டது எந்த விதத்திலும் சகிக்க முடியாத சம்பவம். அவர் உலகத்தில் உயிர் வாழும் பிரபலஸ்தரான மாபெரும் பெரியார்கள் வரிசையில் ஒரு பெரியாராய் இருந்தார். அவரைப் போல் பொதுத் தொண்டையே தனது வாழ்நாள் தொண்டாகக் கொண்ட வர்களையும், தனக்கென எதுவுமே இன்றி ஒரு லட்சியத்திற்கே வாழ்ந்து வந்தவர் களையும் காண்பது மிகவும் அரிதான காரியமாகும். தென் ஆப்பிரிக்காவில் அவர் பெற்ற வெற்றியே இந்திய மக்களின் மதிப்பையும், பின்பற்றுதலையும் அவருக்கு வலியக் கிடைக்கச் செய்தது.

கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒரே லட்சியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பதும், அதில் ஏற்படும் எப் படிப்பட்ட கஷ்ட நஷ்டங்களையும், வெற்றி தோல்விகளையும் லட்சியம் செய்யாமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், எப்படி நினைப்பார்கள் என்பதைப்பற்றியும் கவலை இல்லாமல் தொண்டாற்றுவது என்பதும் எல்லோராலும் ஆகும் காரியம் அல்ல. 

இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்தக் கோரமான முடிவு ஏற்பட்டது. இந்த நாட்டின் மதிப்பைக் கெடுக்கக்கூடியதும், இயற்கைக்கு விரோதமானதுமான வாய்ப்பு என்பதில் சிறிதும் அய்யமில்லை. அதிலும் காந்தியார் யாருக்காக, எந்த மக்களுக்காக உயிர் வாழ்ந்தாரோ, அல்லும் பகலும் இடையின்றி பாடுபட் டாரோ, அவர்களாலேயே இந்த முடிவு ஏற்பட்டதென்றால், இது வெகுவெகு வெறுக்கத்தக்க காரியம். இவ்விழிதர மான காரியத்துக்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை.

பொதுவாகவே இந்நாட்டில் பொது ஒழுக்கம்  மோசமான தன்மை அடைந்து விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது. ஒரு நாகரிக நாட்டில் இப்படிப்பட்டவருக்கு இந்த மாதிரி சம்பவம் ஏற்படுவதென்பது சிறிதும் ஏற்க முடியாத காரியமாகும்.

எனவே, இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப்பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பேராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும் கருத்து வேற்றுமைக்காக கலவரங்களும், கேடுகளும், நாசங்களும் மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லாமல் அறிவுடைமையோடும் வாழுபவர்களாக மக்கள் நடந்து கொள் வார்களேயானால் அதுவே பரிதாபகர மானதும், வெறுக்கத்தக்கதுமான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும். திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப் பட்ட நிலையிலும் அமைதியுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டு மென்பது எனது விண்ணப்பம்.

(நெருக்கடியும், பதற்றமும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் தந்தை பெரியார் எவ்வளவுப் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொண்டுள்ளார் என்பதைக் கவனிக்கவேண்டும்).

காந்தியாரைச் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று பரப்பிவிட்டார்கள். இதன் காரணமாக நாட்டின் பல பாகங் களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் மூண்டன. வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியாரின் வானொலி உரை அமைதியை ஏற்படுத்தியது. வட மாநிலத்தில் குறிப் பாக பம்பாயில் பார்ப்பனர்கள் தாக்கப் பட்டனர். தீ வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொரார்ஜி தேசாய் தனது வாழ்க்கை வரலாறு நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

4. பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

காந்தியாரை பார்ப்பன சக்திகள், இந்துத்துவா வெறியர்கள் கொன்றது ஒரு திட்டமிட்ட சதியின் அடிப்படையில் தான். கோட்சேயின் பின்னணியில் இருந்தவர் வி.டி.சவர்க்கார்தான்.

இதுபற்றி காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் ஏ.காந்தி என்பவர் ‘‘Let’s Kill Gandhi’’

என்ற நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அதில் தெளிவாகவே குறிப்பிட் டுள்ளார் காந்தியாரைக் கொன்றவர்கள் பார்ப்பனர்கள் என்று.

தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (சென்னை, பெரியார் திடல், 30.1.2014)

இந்து மகாசபையிலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பார்ப்பனர்களே நிறைந் திருந்தனர். அவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். வகுப்புகளற்ற, ஜாதியில்லாத ஓர் இந்தியச் சமுதாயத்தை உருவாக்குவதற்காக காந்தியார் ஓர் இயக்கத்தைத் தொடங்கியமைக்காகப் பார்ப்பனர்கள் அவர்மீது கடுஞ்சினம் கொண்டிருந்தனர். காந்தியார் விடுதலை பெற்ற கீழ்ஜாதி மக்களின் புத்தெழுச்சியும், அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பற்றிய அவர்களது புரிதலும் ஆங்கிலேய ஆட்சியில் ஆட்சித் துறையிலும், நீதித் துறையிலும் நீக்கமற நிறைந்து இவற்றைத் தங்களின் தனி உடைமையாக்கி வைத் திருந்த உயர்ஜாதியினரின் குறிப்பாகப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அச் சுறுத்திக் கொண்டிருந்தன. 1947-க்கு முன்பு இந்தியாவில் ஒரே ஒரு பார்ப்பன அரசுதான் இருந்தது. மராட்டியத்தில் பூனாவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் மராத்தா பேரரசு மட்டும்தான் பார்ப்பன அரசாக இருந்தது. பூணூல் பார்ப்பனர் கள் பிரிட்டானியாவில் இந்தியாவை விட்டு வெளியேறிய அடுத்த நொடியே இந்த நிலத்தின் ஆட்சி அதிகாரம் மீண்டும் தங்கள் கைகளிலேயே வந்து விழும் என்று எப்போதும் கருதிக் கொண் டிருந்தார்கள். பேஷ்வா (பார்ப்பனர்) மரபினரின் இந்தக் கனவு காந்தியாரால் தகர்த்தெறியப்பட்டு விட்டது என்று காந்தியாரின் பேரன் எழுதியுள்ளார்.

மற்றொரு தகவலையும் காந்தியாரின் பெயரன் துசார் காந்தி தம் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையைப்பற்றியது அது. இதோ காந்தியாரின் பெயரன் எழுதுகிறார்:

கோட்சேயின் அறிக்கை உறுதியாக அவனால் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் மொழி ஆளுமையை அவன் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. அந்த அறிக்கை இளகிய மனம் கொண்டவர்களையும் உணர்ச்சிவயப்படச் செய்து மாற்றும் வகையில் மிகத் திறமையாக எழுதப் பட்டிருக்கிறது. சதிகாரர்களில் ஒருவரான வி.டி.சவர்க்கார்தான் அந்த அறிக்கை யினை உருவாக்கியவர். அவர் அனல் வீசும் எழுத்தாளர். இணையற்ற பேச் சாளர். அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட காலத்திலும், விசாரணையின்போதும் கோட்சே சவர்க்காரோடு மிக நெருங்கிய உறவாடினான். கோட்சேயின் பெயரில் வெளியான அந்த அறிக்கையில் சவர்க் கார் எழுதுகோலின் உயிர்த் துடிப்பைக் காண முடிந்தது என்று காந்தியாரின் கொள்ளுப் பெயரன் எழுதியுள்ளார்.
உண்மையில் இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிச் சொன்ன வர்தான் இந்த சவர்க்கார் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்று முதலில் பிரிவினையை உருவாக்கியதே சவர்க்காரே தவிர முஸ்லிம்கள் அல்ல. ஆனால், முஸ்லிம்கள் தான் பிரிவினைவாதிகள், இந்தியாவைத் துண்டாடிவிட்டனர் என்று பழிபோடு வதும் இந்த இந்துத்துவா பார்ப்பனர் கூட்டம்தான்.

தேசியம் என்று சொல்லி அதன் பலாபலன் முழுவதையும் அனுபவத்த வர்கள் பார்ப்பனர்களே!

முதல் இந்தியர் நீதிபதி யார் என்றால் முத்துசாமி அய்யர்தான். முதல் துணை வேந்தர் யாரென்றால் சுப்பிரமணிய அய்யர்தான்.

திராவிடர் கழகக் கூட்டங்களில் எல்லாம் அப்பொழுது சொல்லப்படுவது மூன்று பி (‘B’ )க்கள்.

பிரிட்டீஷ், பிராமின், பனியா இந்த மூன்றும்தான்.

அந்த ‘B’ கள்! அதில் ஒன்று தொலைந்தது. இன்று மீதி இரண்டும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக் கின்றன.

5. தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை எதுவாக இருந்தது?

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரை தனி மனிதர்மீது பகையல்ல - தத்துவத்தின்மீதுதான் பகை! காந்தி யாரைப் படுகொலை செய்தபோது தந்தை பெரியார் தூண்டிவிட்டிருந்தால், இங்கு என்னவெல்லாம் நடந்திருக்கும் . மகா ராட்டிரத்தில் பார்ப்பனர்கள் தாக்கப் பட்டதுபோல இங்கு நடக்காமல் தடுக்கப் பட்டு விட்டதே!

கோட்சே என்பவன் ஒரு துப்பாக்கி - துப்பாக்கி ஒரு கருவிதானே தவிர, மூலமல்ல. அதனை இயக்கும் சக்தி எது? தத்துவம் எது? நம் கோபம் அதன்மீது தான் திரும்பவேண்டும்; அதனைக் கண்டு பிடித்து அறிவித்தவர்தான் தந்தை பெரியார்.

என் மதம், என் ஜாதி என்பதுதான் ஹிந்துத்துவா என்பது. எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் தந்தை பெரியார் தத்துவம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே வித்தியாசம் இல்லாமல் தான் பழகி வருகிறோம். மார்க்கத்தால் முஸ்லிம்கள் என்றாலும், இனத்தால் திராவிடர்களே. அண்ணன், தம்பிகளாக, மாமன் மச் சானாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் பண்பாடு இங்கு - இதற்குக் காரணம் திராவிடர் இயக்கம்தானே! மறுக்க முடியுமா? (பலத்த கைதட்டல்)!

இளைஞர்களின் கடமை என்ன?

கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம்; அந்தக் கோட்சேயிசம் என் பது வேறு ஒன்றும் இல்லை. இந்துயிசம் தான். அதன் ஒரு வடிவம்தான் நரேந்திர மோடி.

அவர்தான் பிரதமராக வேண்டுமாம்; காரணம் அவர் குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்துவிட்டாராம்.

உண்மையிலே அது ஒரு திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரமே!

மேற்கு வங்காளத்தில் மம்தா விரட் டினால் டாட்டாவுக்குப் புகலிடம் குஜராத் தில்தான். ஏழை - எளிய மக்களை விரட்டி விட்டு நிலங்கள் எல்லாம் தாரை வார்க்கப் படுகின்றன.

வளர்ச்சி என்றால் யாருக்கு வளர்ச்சி? மேல்தட்டு மக்களுக்குத்தானே அங்கு வளர்ச்சி.

பணக்காரர்கள் பார்ப்பனர்கள் இவர் கள்தானே மோடியின் பின்புலமாக பலமாக இருக்கிறார்கள். அடையாளம் காண வேண்டாமா?

நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் பிரச்சார வாகனமாக மாற வேண்டும். அவர்கள் முகநூலில் புகுந்து விளையாடுகிறார்கள் என்றால், அதற்கு மேலும் நாம் செல்லவேண்டும் - அவர் களின் அகநூல் வரை ஆராய்ந்து வெளிப் படுத்தவேண்டும்.

பயங்கரவாதிகள் என்றால் ஒரு தொப்பி, ஒரு குறுந்தாடி என்று சித்தரிக் கிறார்கள். நாம் திருப்பிப் பதிலடி கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகள் என்றால் ஒரு உச்சிக்குடுமி ஒரு பூணூல், ஒரு காவி என்று அடையாளப்படுத்தவேண்டும்.

அவர்கள் பாசிசத்தைப் பரப்பக் கூடியவர்கள். நாமோ பகுத்தறிவை, சமூகநீதியை, சமத்துவத்தை, சமதர்மத்தை எடுத்து முன்வைக்கவேண்டும்.
மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்கும் நமது முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

காந்தியார் எதற்காகப் பலியானார்? அவரைக் கொன்றொழித்த கூட்டம் எது? சக்தி எது? அதன் கொள்கை என்ன? என்று பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கிட வேண்டும்.

----------------------------- சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை மாணவர் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை (30.1.2014).

நிகழ்ச்சி

மாணவர் இந்தியா மாநிலச் செய லாளர் புதுமடம் அனீஸ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் என்.தைமிய்யா, திருமங்கலம் ஷமீம், தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த அருள் மதிவர்மன், இளையராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

காஞ்சி வடக்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் அன்சாரி நன்றியுரையாற் றினார்.

கோட்சே யார்? மகாவிஷ்ணு அவதாரம்!

முன்பு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில், சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர் சி.சாமிநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடகம் ஒன்று வெளியிடப்பட்டது.

காந்தியார் மிக அதிக அளவில் தொண்டு செய்து வந்தாராம் - அதனால் பூபாரம் தாங்கவில்லையாம். அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்பதற்காக மகாவிஷ்ணு கோட்சே அவதாரம் எடுத்து வந்து காந்தியாரை வதம் செய்ததாக எழுதப்பட்ட நாடகம் இது. (மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியின்போது மை நாதுராம் கோட்சே என்ற நாடகத்தை முக்கிய நகரங்களில் வட மாநிலங்களில் சங் பரிவார்க் கூட்டம் அரங்கேற்றியது). நான்தான் கோட்சே பேசுகிறேன் - கோட்சே காந்தி என்ற தனி மனிதனைக் கொல்லவில்லை. மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து கோட்சே, காந்தி என்ற அரக்கனைக் கொன்றதாக நடித்துக் காட்டப்பட்டது. 

 (ஆக, அவதாரம் என்பது பார்ப்பனர் அல்லாதாரை வதம் செய்வதற்குத்தான். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது).

-------------------- மாணவர் இந்தியா கூட்டத்தில்  தமிழர் தலைவர்

யார் சிறுபான்மையினர்?

1. சிறுபான்மையினர் என்றால் இரண்டு வகை உண்டு. ஆதிக்கம் செலுத்தும் சிறுபான்மையினர் அவர்கள்தான் பார்ப்பனர்கள்.

2. இரண்டாவது சிறுபான்மை யினர் நாங்களும் வாழவேண்டும் என்று உரிமைக்காகப் போராடும் - குரல் கொடுக்கக் கூடியவர்கள்.

-------------------------------- மாணவர் இந்தியா கூட்டத்தில் தமிழர் தலைவர்

மூன்று அப்பன்கள்!


நாட்டில் மூன்று கறுப்புகள் உண்டு.

ஒன்று கறுப்புச் சட்டை அணியும் பெரியார் தந்த கறுப்பு - மெய்யப் பன்கள்

இரண்டாவது கறுப்பு அய்யப் பன் பக்தர்கள் அணிவது

மூன்றாவது கறுப்பு - - கறுப்புத் துண்டு அணிந்து கொள்கைக்கு விரோதமான பொய்யப்பன்கள்.

--------------------------------- மாணவர் இந்தியா கூட்டத்தில் தமிழர் தலைவர்
 
                   ----------------- நமது சிறப்புச் செய்தியாளர்--  “விடுதலை” 31-1-2014

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாள்இன்று காந்தியார் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாள் (1948).

ஒரு தகவல் தெரியுமா? செத்துப் போன காந்தி யாரை உயிர்ப் பிழைக்க வைக்க ஒரு சாமியார் முன் வந்தார் - இந்தச் சேதி புதியதாக இருக்கலாம் - ஆச்சரியமாகவும் இருக்க லாம்.

சாமியாருக்கு அந்தச் சக்தியிருக்குமேயானால், அதை டில்லிக்கு வந்துதான் செய்ய வேண்டுமா? சென் னையிலிருந்தே செய்ய வேண்டியதுதானே? என்ற பகுத்தறிவு வினாவை எழுப்பினார் பிரதமர் நேரு.

சாமியார் விடுவதாக இல்லை - பெரிய மனிதர் களை எல்லாம் சந்தித்து தன்னை டில்லிக்கு அனுப்பு மாறு வேண்டினார். கடைசி யில் இருவர் சிக்கினர். ஒருவர் டாக்டர் சுப்பராயன் (சென்னை மாநில முன் னாள் முதல்வர்). இரண் டாமவர் கொடை வள்ளல் - பிரபல செல்வந்தர் அழகப் பச் செட்டியார். சாமியாரை விமானத்தில் அழைத்துக் கொண்டு டில்லிக்கும் சென்றனர்.
டில்லி சென்ற சாமியார் காந்தியாரின் கை கால் களைத் தொட்டார். எந்தப் பலனும் ஏற்படவில்லை. அடுத்த கட்டத்துக்குச் சென்றார் அந்த சாமியார்.
காந்தியாரின் தொண்டையை அறுத்து ஒரு குளிகையைப் போட வேண்டும் என்றார். ஆனால் அங்குள்ளவர்கள் யாரும் அதற்கு இடம் கொடுக்க வில்லை. சாமியாரை வெளி யேற்றி விட்டனர். டில்லி யிலே விடப்பட்ட சாமியார் பிழைக்க வழியின்றி அல்லாடியிருக்கிறார்.

இந்தச் செய்தியை குடிஅரசு இதழ் (7.2.1948) பெட்டிச் செய்தியாக வெளி யிட்டது.
படித்தவர்களாக இருக்க லாம்; பெரும் பதவிக் காரர்களாகக் கூட இருக்க லாம் மிகப் பெரிய செல் வந்தர்களாகக்கூட இருக்கலாம்.

இவ்வளவும் இருந்து என்ன பயன்? பகுத்தறிவு வேலை செய்யவில்லையே! யாரோ ஒரு  கிறுக்கன் சொல்லுகிறான் என்பதற் காக காந்தியாரை உயிர்ப் பிக்க சாமியாரை விமா னத்தில் ஏற்றிச் சென்றனர் என்றால், பார்த்துக் கொள்ளலாமே!

காந்தியார் 120 ஆண்டு காலம் வாழ்வார் என்று திருத்தணியைச் சேர்ந்த அந்தக் காலத்தில் பிரபல மான சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரி கணித்து எழுதினார் பாரததேவி இதழில் (15.8.1947).

காந்தியடிகள் பிறந்தது சிம்மலக்கினம், மகநட் சத்திரம் விடியற்காலையில் மக நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. மேலும் ஜன்ம லக்னம் சிம்மமாகவும், அதில் சந்திரன் தனித்தி ருப்பதாலும், ஆயுள் ஸ்தான திபதியான குரு, தசமகேந் திரத்தில் நின்று லக்னாதி பதியான சூரியனையும், ஆயுள்காரகனாகிய சனியையும் பார்ப்பதனாலும்  பரம ஆயுள் என்ற கணக் கில் 120 வருஷம் ஆயுள் உண்டு என்று அந்தப் பிரபல ஜோதிடர் கணித் தாரே - கடைசியில் காந் தியார் வாழ்ந்தது வெறும் 78 ஆண்டு ஆறு மாதங் கள்தானே!

--------------------- மயிலாடன் அவர்கள் 30-1-014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30.1.14

காந்தியார் படுகொலைச் சிந்தனை!


இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனை எத்தனையோ கறுப்பு நாட்கள் உண்டு. அதில் ஜனவரி 30ஆம் தேதி குறிப்பிடத்தக்கது;  இந்திய மக்களால் மகாத்மா காந்தி என்றும் தேசத் தந்தை என்றும் பரவலாக மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவர் இந்துத்துவா வெறியர்களின் திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட நாள் இந்நாள். (1948).

நாதுராம் கோட்சே என்னும் மகாராட் டிரத்தைச் சேர்ந்த இந்துவெறி பிடித்த பார்ப்பனன்தான் அந்தக் கொடூரத்தைச் செய்தவன்; அவன் ஆர்.எஸ்.எஸின் தொட்டிலில் வளர்ந்தவன் என்று அவனுடைய சகோதரர் கோபால் கோட்சேயே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளான்.

கோட்சே ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவன் அல்ல என்று அத்வானி சொல்லுவது கடைந் தெடுத்த கோழைத்தனம் என்றும் கோபால் கோட்சே சொன்னதுண்டு. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்தவர் சவார்க்கர்.

காந்தியாரைப் படுகொலை செய்தது என்பது ஏதோ திடீரென்று உணர்ச்சி வயப்பட்டு நடந்ததல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்டது.  படுகொலை செய்யப்பட்ட 10 நாள்களுக்கு முன்புகூட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மயிரிழையில் காந்தியார் தப்பினார். இந்த வகையில் காவல்துறை விழிப்பாக இருக்க வில்லை என்ற குற்றச்சாற்று மறுக்கப்பட முடியாத ஒன்றே!

7.2.1948 நாளிட்ட குடிஅரசு இதழில் ஒரு பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது.

நான் நாதுராம் வினாயக கோட்சேவை பூனாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் முஸ்லீம்களின் பரம்பரை விரோதியாகக் காணப்பட்டார். இந்தியாவி லுள்ள முஸ்லீம்களின் பிரஜா உரிமைகள் பறிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து அவர் தர்க்க ரீதியாக என்னிடம் விவாதித்தார்; தோழர் கோட்சே உயர் ஜாதிப் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். ஹிந்து ராஷ்டிரா என்ற தீவிரத் தேசியப் பத்திரிகையின் ஆசிரியருமாவார்

அவரது வாதமானது; இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தான் எய்தப் பெற ஜின்னாவையும், முஸ்லீம் லீக்கையும் ஆதரித்து வந்தனர். இப்பொழுது அவர்கள் பாகிஸ்தானை அடைந்து விட்டார்கள். எனவே அவர்கள் ஹிந்து ஸ்தானத்தை விட்டு, வெளியேற வேண்டியது தானே முறை! தாய்நாடு பிளவு உண்டதற்கு இந்து சமுதாயம் தனது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளப் போவது உறுதி. இந்தியா முஸ்லீம்களுக்கு விற்கப்பட்டது.

மகாராஷ்டிரர்களின் பழங்காலக் கீர்த்திபற்றி தோழர் கோட்சே பேசுகையில் அவரது கண்களில் வெறியுணர்ச்சி தாண்டவ மாடியது. கோபக் கனல் பொங்க ஆத்திரக் குரலில் தோழர் கோட்சே காந்தியாரைக் கொடூரமாகச் சபித்து, என்னை விட்டுப் பிரிந்தார். எதுவும் பேச எனக்கு நா எழவில்லை

- இவ்வாறு லண்டன் ரெய்னால்டஸ் நிறுவனப் பத்திரிகையில் தோழர் தாமன்கார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெறிபிடித்த  கூட்டத்தைச் சேர்ந்த வர்கள், காந்தியார் மீது கொண்ட கோபத்தை வெறியை இன்று வரை தளர்த்திக் கொண் டார்கள் இல்லை.
மத்தியில் பிஜேபி ஆட்சிக் காலத்தில் இதே இந்துத்துவா சக்திகள் மை நாதுராம் கோட்சே போல்தா என்ற நாடகத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களில் அரங்கேற்றினர்.

நான் காந்தியார் என்ற அரக்கனைத்தான் கொன்றேன் என்று காந்தியாரை அரக் கனாக்கி, கோட்சேயைக் கடவுளாக்கிச் சித்தரிக்கப்பட்ட நாடகம் அது.

இந்தக் கூட்டத்தின் இந்தக் காலத்திய அவதாரப் புருடர் தான் பிஜேபியின் பிரதம ருக்கான வேட்பாளரான நரேந்திரமோடி என் பதை மறக்கக் கூடாது. காந்தியார் படுகொலை செய்யப்பட்ட இந்த நாளில் இந்தச்சிந்தனையை விதைப்போமாக! பரப்புவோமாக!
  
                     ----------------------”விடுதலை” தலையங்கம் 30-1-2014

29.1.14

அமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததால் ஒரே ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆபத்தா?


சென்னை தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைநகரமல்ல - மூடநம்பிக்கைக்கும் இதுதான் தலைநகரம் என்று சொல்லுவார் தந்தை பெரியார்.

நேற்று ஒரு வதந்தி - ஜனவரி மாதம் அமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததாலும், தை மாதம் செவ்வாய்க்கிழமை பிறந்ததாலும் ஒரே ஆண் குழந்தை பெற்றவர்களுக்கும், வீட்டுக்கும் ஆபத்து என்ற வதந்தி காஞ்சிபுரத்தில் பரவியது.

இதற்குப் பரிகாரமாக பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் ஏழு விளக்கு ஏற்றி வைத்து வழிபடவேண்டும் என்று யாரோ கூற, அந்த முட்டாள்தனமும் அட்டியின்றி நடைபெற்றுள்ளது. (ஏன் எட்டு விளக்கு ஏற்றினால் என்னவாம்? யாருக்குத் தெரியும்?).

அது சென்னை, பெரம்பூர், வியாசர்பாடி, சர்மா நகர், எஸ்.ஏ.காலனி, பாரதி நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளிலும் பரவிட - பெண்கள் தெருக்களில் விளக்கேற்ற ஆரம்பித்துவிட்டனராம். அத்தோடு விட்டார்களா?

ஏழு சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பழம், மஞ்சள், குங்குமத்துடன் ஜாக்கெட் துணி கொடுத்து, அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனராம். (நல்ல வியாபாரத் தந்திரம்தான்!)

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் அவ்வப்பொழுது கிளப்பிவிடப்பட்டு, ஒரு சில நாள்களிலேயே தானாகவே அடங்கிவிடும்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் எருமை மாடு புகுந்தது என்றனர். திருப்பதி கோவிலில் தாயாரம்மாள் தாலி அறுந்து விழுந்தது என்று கிளப்பிவிட்டனர். தாலிக் கயிறு வியாபாரம் ஜோராக நடைபெற்றது.
இந்த வருஷப் பிறப்பு சரியில்லை - சகோதரிக்குப் பச்சைப் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்றனர்.

இன்னொரு முறையில் சிவப்புப் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று கிளப்பிவிட்டனர் - ஜவுளிக் கடைக்காரர்களின் பிழைப்புக்கு வழி செய்யப்பட்டது.

பிள்ளையார் பால் குடித்தார் என்ற வதந்தி இரண்டொரு நாள்களில் வந்த சுவடு தெரியாமல் அடங்கிவிட்டது.

தலையில்லா முண்டம் டீ குடித்தது என்கிற அளவுக்குக்கூட தலைநகரமாம் சென்னையில் கிளப்பிவிடப்பட்டது. (அப்பொழுது சென்னை மாநகர ஆணையராக இருந்த சிறீபால் ஏதாவது ஒரு முண்டம் இப்படிக் கிளப்பிவிட்டிருக்கும் என்று மண்டையில் அடித்ததுபோல பதில் சொன்னார்).

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையைப் பரப்பிடவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், இங்கே அதற்கு மாறாக மூட நம்பிக்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அரசின் தலைமையே மூட நம்பிக்கையில் மூழ்கி எழுந்தால், குடிகளும் அவ்வழிதானே தொடர்வார்கள்.

வதந்தியில் ஈடுபடுவது என்பதும் குற்றமே! இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கவேண்டியது அரசின் தலையாய கடமையாகும். காவல்துறையின் உளவுப் பிரிவு முனைந்தால் வதந்தியாளர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தலாம்.

தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தால், விஷமிகள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்களே!

நமது தொலைக்காட்சிகளும் கொஞ்சம் சமூக அக்கறையோடு நடந்துகொண்டால், இதுபோன்ற மூடத்தனங்களைச் சுலபமாக குழிதோண்டி மூடிவிடலாமே!

கழகம் நடத்தும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஒளிபரப்பினால்கூடப் போதும். இவர்கள்தான் மோசடி மகரஜோதியையே நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்களே, என்ன செய்ய!

                      ---------------------------"விடுதலை” 29-1-2014

கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமா?

எதற்கும் ஓர் எல்லை உண்டே! 


கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் - அது மீட்கப்பட வேண்டும் என்ற வழக்கை முதலில் தொடுத்தது திராவிடர் கழகம் (ஜூலை 1997) அந்த வழக்கு இன்னும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. 

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. சார்பிலும் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இப்படியொரு சூழ்நிலையில் தனியார் தொடுத்த வழக்கு ஒன்றில் இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை என்று கொஞ்சம்கூட கூச்சமும், நாணயமும் இன்றி கூறியுள்ளது இந்திய அரசு.

இப்படிச் சொன்ன பிறகு எந்த முகத்தோடு இலங்கை அரசோடு நாம் மோதுவது?

கச்சத்தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தமென்று எத்தனை எத்தனை முறைதான், எத்தனை எத்தனை ஆதாரங்களோடுதான் இடித்து இடித்துக் கூறுவது!

1921ஆம் ஆண்டு, அக்டோபர் 25ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசுக்கும்,  இலங்கை அரசுக்கும் இடையிலான கடல் எல்லை வரையறை ஒப்பந்தமானது, மீன்பிடி தொடர்பானது. ஒப்பந்தம் கையொப்பம் ஆவதற்கு முன்பே இந்தியக் குழுவிற்குத் தலைமையேற்ற சி. டபுள்யூ இ.காட்டன் அவர் களின் தலைமையிலான இந்தியக் குழுவிற்கும், பி. ஹார்ஸ்பெர்க் தலைமையிலான இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் போது,  இரு நாடுகளுக்குமிடையிலான கரைகளுக்கு இடையே சம தூரத்தில் புள்ளிகள் வைத்து, கடல் எல்லைக் கோட்டை வரையறை செய்து கொள்வது என்று முடிவானது; அப் பொழுது கச்சத்தீவை இலங்கைக் கடற்பகுதிக் குள் வருமாறு கோட்டைச் சற்று இழுத்துப் போடுமாறு பி. ஹார்ஸ்பர்க் கேட்டுக் கொண் டார்; கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும் கூறினார்.

அதனை ஏற்க மறுத்த இந்தியக் குழுவின் தலைவர் சி. டபுள்யூ இ. காட்டன், கச்சத்தீவு இராமநாதபுரம் மன்னருக் குச் சொந்தமானது என்று இந்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த லீச் கூறியதைச் சுட்டிக் காட்டினார். மேலும் செயின்ட் ஜார்ஜ்கோட்டை யில் நடந்த - இதற்கு முற்பட்ட சந்திப்பில் அந்தக் கடல் எல்லைக் கோடு, கச்சத்தீவின் கிழக்கு எல்லையில் இருந்து ஒரு மைல் தூரத்தில் குறித்தே நிர்ணயம் செய்யப்பட்டதை யும் காட்டன் குறிப்பிட்டார்; அது மட்டுமல்ல; மீன் பிடித்தலுக்காகச் செய்யப்படும் கடல் எல்லை வரையறையானது - எந்த விதத்திலும் இரு நாடுகளின் நிலப் பகுதி தொடர்பான உரிமைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க ஒப்புக் கொள் ளப்பட்டே  ஒப்பந்தம் உருவானது என்பதையும் காட்டன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை 350 ஆண்டு காலம் ஆண்ட அந்நியனான வெள்ளைக்காரன் கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்பதில் உறுதி காட்டினான். ஆனால் இந்திய அரசோ இல்லை- இல்லை - கச்சத்தீவு,  இலங்கை அரசுக்கே சொந்தம் என்று சொல்லி நமது மூக்கை நாமே அறுத்துக் கொள்ளும் ஒரு நிலையை எடுத்திருப்பது வெட்கக் கேடே!

தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே இரண் டாந்தர குடி மக்களாகக் கருதும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மை இந்திய அரசுக்கு இருப்பதாகவே தெரிகிறது.
கச்சத்தீவு - இந்தியாவுக்கே சொந்தம் - அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமையுண்டு என்ற நிலை உறுதிப்படுத்தப் படாத வரை தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு என்பது பெரும்பாலும் குதிரைக் கொம்பே!
சீன மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கலாம்; தமிழக மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்கக் கூடாது என்ற சிங்களவர்களின் நய வஞ்சகத்திற்கு ஒத்தடம் கொடுக்க வேண்டாம் - இந்திய அரசு. தமிழர்களின் உணர்வுகளை மதிக்கப் போவதில்லை என்ற உணர்வோடு இந்திய அரசு விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் - எதற்கும் ஓர் எல்லை இருக்கிறதே!

                       --------------------------------”விடுதலை” தலையங்கம் 28-1-2014

28.1.14

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து ஏன் பிராண்டுகிறது?

கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லா?


அண்ணா திராவிட என்ற இரு அரும்பெரும் பெயர்களையும், அதன் பின்னணியில் அரும் பெரும் தத்துவங்களையும் தன் கட்சிக்குச் சூட்டிக்கொண்டு இருக்கும் ஒரு கட்சி (அண்ணா திமுக) அந்தத் தத்துவங்களைக் காலில் போட்டு மிதித்து, அக்கிரகார திமுக வாகவே மாறி (பூணூல் அணிவதன் தத்து வத்தைப் பற்றி கட்சியின் அதிகாரபூர்வ ஏடு பிரலாபிக்கிறதே!) யுள்ள நிலையில் அதற்கேற்ப ஏதாவது பினாத்தும்.
நேற்றுகூட (26.1.2014) அந்த ஏடு திராவிடர் கழகத் தலைவர் பற்றி அந்த ஏட்டுக்கே உரித்தான தராதரத்தில் கிறுக்கி இருக்கிறது.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். மாறுபட்டு சென்ற நேரத்தில், இன்னொரு கட்சியின் பிரச்சினை என்று தந்தை பெரியார் கண்டு கொள்ளாமல் இருந்ததில்லை; தலையிட்டுப் பேசினார்! கருத்தும் தெரிவித்தார்!
கலைஞர் அவர்களுக்கும், நாவலர் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மை யார் தலையிட்டதுண்டு - கருத்து தெரிவித்ததும் உண்டு; திரு. வைகோ பிரிந்த போதும்கூட திராவிடர் கழகத் தலைவர் தலையிட்டு, பிளவைத் தவிர்க்க முயற்சி மேற்கொண்டதுண்டு. இந்த வரலாறு எல்லாம் இந்தக் கத்துக் குட்டிகளுக்கு எங்கே தெரியப்போகிறது?

திமுகவில் ஏற்படும் பிளவு அக்கட்சிக்குள் நடக்கும் தனிப்பட்ட ஒரு பிரச்சினையாகக் கருத முடியாது. குறிப்பாக இனநலம் பேணுவோர் கருதக்கூடாது.

ஒரு சமுதாயப் பிரச்சினை- இன நலக் கண் ணோட்டம் அதில் குடிகொண்டு இருக்கிறது.

அந்த அடிப்படையில்தான் இப்பொழுதும் திராவிடர் கழகத் தலைவர் தாய்க் கழகத்தின் தலைவர் என்ற முறையில் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பும்கூட அறிக்கை வெளியிட்டதுண்டு. கட்சியின் கட்டுப்பாட்டை வலி யுறுத்தியுள்ளார். யாரையோ தனிப்பட்ட முறையில் நினைத்துச் சொல்லப்பட்ட கருத்தல்ல அது.

பொது நிலையில் உள்ளவர்கள், திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கையை வரவேற்கிறார்கள். திமுக தோழர்களும் வரவேற்று வருகிறார்கள்.

இதில் அண்ணா திமுகவுக்கோ, அதன் அதிகார பூர்வ ஏட்டுக்கோ என்ன வந்தது? திமுக பலகீனப் பட்டுவிடாமல் காப்பாற்றப்படுகிறது என்ற அரசியல் காழ்ப்புணர்வுக் காரணமாக அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்ளலாமா?

குறிப்பிடப்பட்டவரைப்பற்றி நேற்றுவரை, இவ் வேட்டின் - அக்கட்சியின் விமர்சனம் என்ன? மறந்துவிட்டதா?

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து ஏன் பிராண்டுகிறது?

ஒரு கட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் எங்கள் கொள்கையின் பார்வையில்தான்.

அதிமுக பார்வையில் திராவிடர் கழகத் தலைவர் ஒரு கட்சியை ஆதரிப்பதற்குக் காரணம் பணம்தான் என்றால், ஆதாயம்தான் என்றால் அதிமுகவை ஆதரித்தபோது கொடுத்த பணம் எவ்வளவு? பெற்ற ஆதாயம் என்ன? நாணயம் இருந்தால், நல்லொழுக்கம் சிறிதும் இருந்தால் அதற்கான விவரத்தை வெளியிடட்டுமே பார்க்கலாம் - சவால் விட்டே கேட்கிறோம்!

ஒவ்வொரு முறையும் எதையாவது அண்ணா திமுக ஏடு எழுதுவது; அதற்கு நாம் பதிலடி கொடுப்பதும் உண்டு.

வாங்கிக் கட்டிக் கொண்டதே தவிர, ஒரே ஒரு முறையாவது அந்த ஏடு பதில் அளித்து எழுதிய துண்டா? எப்படி எழுத முடியும்?

அதன் ஆணிவேர்க்கே சென்று வைக்கும் அணுகுண்டாக அல்லவா ஆதாரபூர்வமாக விடுதலை அடி கொடுத்திருக்கிறது.

முதல்நாள் மாநிலங்களவைத் தேர்தலில் ஒருவர் பெயர் வேட்பாளராக அறிவிப்பு - மறு நாளே அந்த ஆள் சுத்த மோசம் - ஊழல் பேர்வழி - அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத் திலிருந்தும் நீக்கப்படுகிறார் - இந்தக் கோமாளிக் கூத்துகளை எழுத ஆரம்பித்தால் தாங்காது நமது எம்.ஜி.ஆர். ஏடு!

கட்சியின் தலைமைக்குத் தெரியாமலேயே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட முடியும் என்ற விசித்திர நிலையில் உள்ள மகாகட்டுப்பாடு உள்ள ஒரே கட்சி அதிமுகவாகத்தான் இருக்க முடியும். அதுகள் எல்லாம் பேனா பிடிக்க அவசரப்படு வதுதான் ஆச்சரியமும், வேடிக்கையும் கூட்டணி வைக்கும் அபத்தம்!

மண்சோறு சாப்பிடுவோர் எல்லாம் பகுத்தறி வாளர்களைச் சீண்டிப் பார்க்க ஆசைப்படக் கூடாது!

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியவும் வேண்டாம்.

-----------------------------"விடுதலை” 27-1-2014

27.1.14

மதமும் முதலாளித்தனமும் ஒழிய வேண்டும் - பெரியார்


சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும், சடங்கு களையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்த தாகும். இக்கார ணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத் யோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர்.

பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத் தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டு மென்னும் பிரச்சாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்துகொள்ளாமலும், நடுத் தெருவில் நின்றனர்.

இதன் பின் சில மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங் களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநே கர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத் தினால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.

சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண் டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மா னங்களை ஒப்புக்கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றனர்.

இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத் தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளியிடுகிறோம்.

முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இக்கொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.

வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாகவேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும், நமக்கும் எக்காலத் திலும் பகையில்லை.

பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம். பார்ப்பனீயத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப் பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல் லாம் நமது போராட்டம் சென்றுதான் தீரவேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.
சுயமரியாதை இயக்கம் இதுவரை யிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப் படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக் கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின் றனர்.

தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர். இதற்கு காந்தி அவர்களின் ஹரிஜன இயக்கமும், இந்து மகாசபைப் பிரச்சாரமும் போதிய சான்றாகும். ஆகை யால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரச்சாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.

சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவ சியம் என்பது ஆலோசிக்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங்களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடி யோடு போக்கி விடவோ புதிய காரி யங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்திவிடவோ எக்காலத்திலும் இயலாது.

ஆதலால் சீர்திருத்தவாதி களுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள் கைகள் செயலில் நடைபெற வேண்டு மானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப் போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுயமரியாதை இயக்கமானது நேர்முகமா கவோ, அல்லது மறைமுக மாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக்கொண்டு தீரவேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலைசெய்து வரும். பலாத்கார முறை யையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட் டத்தைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்?

(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப் பற்றும் வேலையையும் சுய மரியாதை இயக் கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வர லாமென அபிப்பிராயப்படு கின்றவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளை யும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும்.

தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலை யிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் போக்குவதும், அப்பழக்க வழக்கங்களில் வைத் துள்ள நம்பிக்கையை ஒழிப் பதும், புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும்.

இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத்தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகி விடும். இவ்வளவே தான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத் திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்றவில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை.

சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம். இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத் தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக் கத்தையும் கொண்டு தொடங்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் அக்காலநிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்ய முடியும்.

சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ளுகின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது.

சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகா ரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்யவேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.

பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப் பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய கட்சி தற்பொழுது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாய கக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டி ருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம்.

இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் யாராயிருப் பினும் நிற வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத் தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதர வளித்து வர வேண்டுமென் பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன்றாகக் கொள்ள வேண்டும். இதற் கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசிய மாகும். இந்த ஸ்தாபனத்தில் அரசியல் நிறம் வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டாமல் மதமற்றவர்கள் எல்லோ ரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்துவர வேண்டும்.

மேற்கூறிய இரு இயக்க ஸ்தாப னங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தா பனங்களின் கொள்கைகளுக்கு மாறு படாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நடக் கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர் களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமா யிருப்பார்களாயின் அதைப் பொறுத்த வரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத் திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத் தினால் இயக்கம் வளருவதற்கே வழி யில்லாமற் போய்விடும்.

நமது கொள் கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது, நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்யமுடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.

மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுய மரியாதை இயக்கத் தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தா லொழிய உருப்படியான வேலை எதையும் செய்துவிட முடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்மக் கொள்கைகளையும், சுய மரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வ தற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம்.

ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சினைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சினையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக் கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத் திற்கு சேர்த்துக் கொண்டு இப் பிரச் சினைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல் லாம், விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.

--------------------- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை- "விடுதலை", 11.7.1950

26.1.14

தனியார்துறைகளில் இடஒதுக்கீடு - ஒரு பார்வை!


தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று 16ஆவது மக்களவைத் தேர்தலுக்குமுன் காங்கிரஸ் முன் வைக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே!

ஆனால், காங்கிரஸ் இப்படி கூறுவது ஒன்றும் புதிதல்ல - 2004ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டத்திலேயே இடம் பெற்ற ஒன்றுதான் இது. அதற்காக அமைச்சரவைக் குழுகூட ஒன்று அமைக்கப்பட்டதுண்டு - தொழிலதிபர்களுடன் பேசியதெல்லாம் வெறும் சடங்காகவே போய் விட்டது.

2006ஆம் ஆண்டில் இந்தியத் தொழி லதிபர் சம்மேளனம் மற்றும் வர்த்தக சபை யும் கைகோர்த்து ஒரு திட்டத்தை மேற் கொண்டன.

பத்து பல்கலைக் கழகங்களிலிருந்து 1000 தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பது; அதில் நூறு பேருக்கு தொழில் தொடர்பான பயிற்சி, 500 பேர்களுக்கு அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுப்பது; அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற கல்வி நிறுவனங் களில் படிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது; வெளி நாடுகளில் பயிலும் ஒடுக்கப்பட்டவர்கள் அய்ந்து பேர்களுக்கு உதவுவது என்பதெல்லாம் ஆண்டிமடம் கடவுள் கதையாக ஆனது தான் மிச்சம்!

இப்பொழுது காங்கிரஸ் அறிவித் திருப்பது அந்தக் கதிக்கு ஆளாகி விடக் கூடாது என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 12 சதவீத வளர்ச்சி என்ற இலக்கை அடைவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த ராகுல்பஜாஜ், சுனில்பாரதி, மிட்டல் உள்ளிட்டோர் கூறினர்.

(19.4.2006 அன்று டில்லியில் கூடிய தொழில் கூட்டமைப்புக் கூட்டத்தில் மேற்கண்ட கருத்துக் கூறப்பட்டது - தினமலர் 20.4.2006).

இந்தியாவில் இடஒதுக்கீட்டை அளிக்க மறுக்கும் இதே தொழில் அதி பர்கள் வெளிநாடுகளில் தொழில்களைத் தொடங்கும்போது இதே அணுகு முறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.
குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நடந்து கொள்வது எப்படி?
கறுப்பரின் பொருளாதார அதிகாரம் என்பது _- ஒரு தொழில் நிறுவனத்தில் கறுப்பர் ஒருவர் தலைமைச் செயல் அலு வலராக இருப்பதும், ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டினரான கறுப் பர்கள் மேலாண்மையினராக இருப்பது மட்டுமன்றி தொழில் நிறுவனங்களில் பங்குகளும் கறுப்பர்களுக்குத் தரப்பட்டாக வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது வெவ்வேறு தொழில் நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவின் டாடா நிறுவனம் பங்குகளைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து 27.5.2005 நாளிட்ட பிசினஸ் ஸ்டாண் டர்டு இதழ் விரிவாக வெளி யிட்டுள்ளது.

கேள்வி எண் 1: தனியார்த் துறை களிலும் இடஒதுக்கீடு அவசியம் ஏன்? பதில்: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி (Justice Social) என்பதற்கு முதல் இடம் அளித்துள்ளது. அரசுத் துறைக்கு மட்டும் என்று அதில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தனியார்த்துறைகளிலும் பொருந்தக் கூடியதே!

மண்டல் குழுப் பரிந்துரையில்

விதி முறைகளைத் திருத்தி மத்திய - மாநில அரசு பதவிகள் பொதுத் துறை நிறுவனப் பகுதிகள், அரசு உதவி பெறும் தனியார்த் துறைப் பதவிகள் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் அனைத்திலும் இடஒதுக்கீட்டினை அமுல்படுத்த வேண் டும் என்று மண்டல் குழுப் பரிந்துரை களுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 முதல் செயல்பாட்டுக்கு வந்திருந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. 1990 ஆகஸ்டில் சமூக நீதிக் காவலர் மாண்பு மிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக வந்த நிலையில் தான் பிற்படுத்தப்பட் டோருக்குக் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு அறிவிக்கப்பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு 2005ஆம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.

ஆனால் நிலைமை என்னவென்றால் பிரத்தியட்சமாக அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய இடம் 7 சதவீதம்தான் என்று மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். (18.11.2011).

2012லும் இதுதான் சமூகநீதி நிலை

மத்திய அரசில் 149 உயர் அரசு செய லாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை
கூடுதல் செயலாளர்கள்    108
தாழ்த்தப்பட்டவர்    2
இணைச் செயலாளர்கள்    477
தாழ்த்தப்பட்டவர்    31 (6.5%)
மலைவாழ் மக்கள்    15 (3.1%)
இயக்குநர்கள்    590
தாழ்த்தப்பட்டவர்    17 (2.9%)
மலைவாழ் மக்கள்    7 (1.2%)
அய்.ஏ.எஸ். அதிகாரிகள்    3251
தாழ்த்தப்பட்டவர்    13.9%
மலைவாழ் மக்கள்    7.3%
பிற்படுத்தப்பட்டோர்    12.9%
காலி இடங்கள் 73 துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கான
காலி இடங்கள்    25037
குருப் ஏ
தாழ்த்தப்பட்டோர்    13%
மலைவாழ் மக்கள்    3.8%
இதர பிற்படுத்தப்பட்டோர்    5.4%
குரூப் பி
தாழ்த்தப்பட்டோர்    14.5%
மலைவாழ் மக்கள்    5.2%
இதர பிற்படுத்தப்பட்டோர்    4.2%
சுத்திகரிப்பாளர் (Sweeper)
தாழ்த்தப்பட்டோர்    59.4%

இந்தப் புள்ளி விவரங்கள் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவில்லையா?

கேள்வி எண் 2: வெளிநாடுகளில் இதுபோல் இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறதா?
பதில்: தென்னாப்பிரிக்காவில் கிரிக் கெட் விளையாட்டில்கூட இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது குறித்து தீக்கதிர் ஏட்டில் வெளி வந்துள்ள தகவல் வருமாறு:

ஒதுக்கீடு முறை தொடர்கிறது தென் ஆப்பிரிக்கா அறிவிப்பு!
கிரிக்கெட் அணியில் கறுப்பர்களுக் கான ஒதுக்கீடு முறை இன்னும் தொட ரும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
நிறவெறி அரசிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு கிரிக்கெட் போன்ற விளை யாட்டுகளில் கறுப்பினத்தை சேர்ந்த வர்களும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப் பட்ட முறையால் பல ஆட்டக்காரர்கள் பலன் அடைந்ததோடு, கறுப்பர்கள் மத்தியில் விளையாடுவதற்கான ஆர்வமும் தூண்டப்பட்டது.

இந்தக் கொள்கை நடைமுறைப்படுத் தப்படுவதுபற்றி ஒவ்வொரு ஆண்டும் வாரிய அதிகாரிகள் விவாதிப்பது வழக்கம். அதே போல 2009-_இல் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து விவா தித்த அவர்கள், இந்த ஒதுக்கீடு முறை தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர். விலக்கிக் கொள்வதுபற்றி 2011க்கு முன்பாக முடிவு செய்ய முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜெரால்டு மஜோலா, தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அதற்கான சூழலும் உருவாக வேண்டும். அது இன்னும் உருவாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கொள்கையால் தேர்வு செய்யப் பட்ட முதல் ஆட்டக்காரர் கிப்ஸ் ஆவார். அதன் பிறகு நிடினி, பிரின்ஸ், ஹாசிம் அம்லா போன்றவர்களும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இவ்வாறு ஓதுக்கீடு முறையில் சேர்க்கப்பட்டவர்களும் சர்வதேசக் கவ னத்தை ஈர்க்கும் வகையில் விளையாடி யது குறிப்பிடத்தக்கது.
(தீக்கதிர் 5.12.2008)

தென் ஆப்பிரிக்கா: தொழில் நடத் தும் நிறுவனங்கள் 25 சதவீதம் அளவு கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை தர வேண்டும்.
பிரேசில்: பிரேசிலில் பிறந்த குடி மக்கள், கறுப்பர் ஆகிய இனத்தவர் களுக்கு 20 சதவீதம், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு 20 சதவீதம், ஊன முற்றோருக்கு 5 சதவீதம், ஒதுக்கீடு செய் யப்படுகின்றன.
நார்வே: வேலை வாய்ப்பில் 40 சதவீதம் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

அமெரிக்கா; அமெரிக்காவில் 11 பேர்களுக்கு மேல் பணியாற்றும் எந்த நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் தம் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் கறுப்பர்கள் எத்தனைப் பேர் என்று அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். எந்தப் பிரிவினராவது தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் வழக்குத் தொடரலாம். இந்த முறைக்கு அமெரிக் காவில் Affirmative Action  என்று பெயர்). (அவுட்லூக் இதழ் 29.5.2006)

கேள்வி எண்: 3 இடஒதுக்கீடு அளிப்பதால் தகுதி, திறமை பாதிக்கப் படாதா?
நமது பதில்: இதற்கு மத்திய அமைச் சர் வீரப்பமொய்லி அவர்கள் அறிக் கையே பொருத்தமானது.

இதர பிற்படுத்தப்பட்டோர் என்பது வெறும் மாயையா? அவர்கள் முன் னேறவே இல்லையா? படிப்பில் சாதிக்க வில்லையா? அவர்களுக்கு ஒதுக்கீடு தந்தால், படிப்பின் தரம் குறையுமா?

இப்படி பல கேள்விகளுக்கு வீரப்பமொய்லி தரும் இறுதிப் பரிந்துரை அறிக்கையில் தகவல்கள் இருக்கும். வீரப்பமொய்லி தலைமையில் கமிட்டி போடப்பட்டவுடன், பல்வேறு மாநிலங் களில் உள்ள பல்வேறு கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கொண்ட துணை கமிட்டியை அவர் அமைத்தார்.

அவர்கள் மூலம், ஆங்காங்கு உள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்வித்தரம், அவர்களின் படிப்பு திறன் பற்றி ஒரு புள்ளி விவரம் தரச் சொன்னார். அப்படி அமைக்கப்பட்ட குழுக்களில் ஒன்று தான், பெங்களூர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் என்.ஆர். ஷெட்டி தலைமையிலான குழு ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு ஒதுக்கீடு அளித்தால் கல்வித் தரம் பாதிக்கப்படுமா என்ற இவர்களின் அறிக்கையில் புள்ளி விவரம் தர வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஷெட்டி தன் அறிக்கையில், வித்தி யாசமான தகவல்களை ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார். அவர் அறிக்கையில் சில தகவல்கள்:

பெங்களூரில் உள்ள விஸ்வேஸ் வரய்யா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் பயின்ற 1998_-2002 மற்றும் 2001-_2005 பேட்ச் மாணவர்களை ஒப்பிட்டு பார்த்ததில், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தான் தேர்ச்சி வீதத்தில் முன்னணியில் உள்ளனர்.

கடந்த 1998_-2002ஆ-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் 93.01 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயம், கடந்த 2001_-2005ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 97.4 விழுக்காடாக உள்ளது.
அதே சமயம், பொதுப் பிரிவு மாணவர்கள், கடந்த 1998_-2002ஆம் ஆண்டுகள் பேட்ச்சில் 66.09 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 200-2_2005 பேட்ச் மாணவர்களில் தேர்ச்சி வீதம் 94.77 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஒப்பிட்டால், பொதுப் பிரிவு மாணவர்களைவிட, இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மூன்று சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெரியும். இதில் கடந்த 1998-_2002 பேட்ச் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 37.7 விழுக்காடு பேர். கடந்த 2001-2005 பேட்ச் மாணவர்களில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 42.35 விழுக்காடு பேர்.
இதுகுறித்து ஷெட்டி தன் அறிக் கையில் குறிப்பிடுகையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டால், திறம்பட சாதிப்பர் என்பதுதான் இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அவர்களால் கல்வித்தரம் குறையாது. உயரத்தான் செய்யும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த அறிக்கைகளை எல்லாம் ஆதரங்களாக வைத்துத்தான் மொய்லி தன் இறுதி அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சமர்ப்பிக்கப் போகிறார்.
(தினமலர் 4.10.2006 பக்கம் 7)

கேள்வி எண் 4: தனியார்த் துறை களில் இடஒதுக்கீட்டுக்காக திராவிடர் கழகம் மேற்கொண்டது என்ன?

நமது பதில்: 1.1.1982 அன்று மதுரை ரீகல் திரையரங்கில் நடைபெற்ற  மதுரை மாவட்ட கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்2: வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் இடஒதுக்கீட்டினை அரசுத் துறையில் மட்டுமின்றி, தனியார்த்துறை கூட்டுத்துறை (றிக்ஷீவீஸ்ணீமீ ஷிமீநீஷீக்ஷீ, யிஷீவீஸீ ஷிமீநீஷீக்ஷீ) ஆகிய துறைகளிலும் அமல்படுத்த அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அதன் மூலம் பல லட்சக்கணக்கில் படித்துவிட்டு, வேலை வாய்ப்புகளை இழந்து நிற்கும் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய இளை ஞர்களுக்கும், பொதுவாகப் பார்ப்பனர் அல்லாத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போதிய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு கழகப் பொதுச் செயலாளர் அவர்களை இந்த இளைஞர் இன எழுச்சி மாநாடு கேட்டுக் கொள்கிறது. (விடுதலை 2.1.1982 பக்கம் 1).

போராட்டம்

யார் பாதிக்கப்பட்டோர்களோ, யார் அடிபட்டார்களோ, அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்கு பதிலாக தின்று விட்டு செரிமானம் ஆகாத புளி ஏப்பக்காரர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதா?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே தனியார் துறைகளில் இன்றைக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதுவரையில் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படவே இல்லை.

முன்னேறிய ஜாதி ஏழையினருக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத் திற்கே விரோதமானது. (சென்னையில் தபால் தந்தி அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டது)

(விடுதலை 17.10.2003 பக்.3)

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம். பொருள்: தனியார்த்துறை களில் இடஒதுக்கீடு தேவை மற்றும் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல் கூடாது. (விடுதலை 17.10.2003).

நாடாளுமன்ற நிலைக்குழுவிடமும் வைக்கப்பட்ட கோரிக்கை

பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் சிறிது சிறிதாகக் குறைந்து வரும் இக்கால கட்டத்தில், கூடுதலான வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு மக்கள் நம்பி எதிர்பார்க்கும் துறை தனியார் துறை ஒன்றே. ஆனால் இந்தத் தனியார்த்துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து உயர் பதவி களிலும் இருக்கும் உயர் ஜாதியினர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் கொள் கையைப் பின்பற்றுவதில்லை.தகுதி, திறமை என்ற பெயர்களில், தங்களின் சமூகக் கடமையை நிறைவேற்றாமல் தட்டிக் கழிக்கவே அவர்கள் முயலு கிறார்கள். அதே நேரத்தில் அரசிட மிருந்து கடன் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளையும், வரிச் சலுகை போன் றவைகளையும் அவர்கள் முழுமையாக அனுபவித்துக் கொள்ளவும் தவறுவ தில்லை. எனவே நாடாளுமன்றக் குழு இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டு தனியார்த் துறைகளிலும் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத் தவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றி நிறைவேற்றச் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, நிறைவேற்றச் செய்ய வேண்டியதே. இந்தக் காலக் கட்டத்தின் மிகப் பெரிய தேவையாகும். (சென்னை வந்த நாடா ளுமன்ற நிலைக் குழுவிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் கி.வீரமணி அவர் களால் அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று இது (28.9.2012).

தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை

தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு - இதுவே தந்தை பெரியார் நினைவு நாள் (24.12.2012) சூளுரை என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

இராசபாளையம் மாநாட்டில்

2013 மே இராசபாளையத்தில் நடை பெற்ற மாநில இளைஞரணி மாநாட்டில் தனியார்த் துறையில் இடஒதுக்கீடு குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுவது  என்று முடிவு செய்யப்பட்டது.
கேள்வி எண் 5: தனியார்த் துறை களின் இன்றைய நிலை என்ன?
நமது பதில்: தனியார்த்துறை விரிவடைந்து போகிறது; பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்து கொண்டுள்ளன. அவற்றில் உச்சக்கட்ட அதிகாரமிக்க பதவிகளில் உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக தனியார் நிறுவ னங்களில் மொத்தம் இயக்குநர்களின் எண்ணிக்கை 83787, இதில் முன்னேறிய ஜாதியினர் 92.6 சதவீத பார்ப்பனர் - 4037, வைசியர் 4167,  சத்திரியர் 46, பிற முன் னேறிய வகுப்பினர் 137, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 346 (3.8%) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 319 (3.5%)
(Economic & Political Weekly Dated 11.8.2012)

மேற்கண்ட புள்ளி விவரங்கள் விளக்குவதென்ன? தனியார்த் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு அவசி யம் தேவை என்பதை எடுத்துக் காட்டவில்லையா?

தனியார்த்துறை என்றால் கடன் உதவி, குறைந்த விலையில் நிலம் (இனமாகக் கூட) தண்ணீர், மின்சாரம் இவை எல்லாம் அரசின் உதவியுடன் தானே நடக்கின்றன. பெரிய அளவில் இலாபம் கொழிக்கும்போது உள் நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பில் உரிய இடங்கள் அளிக்கப்படுவதுதானே சமூகநீதி? வெளிநாடுகளிலும் இந்த நிலைதானே இருக்கிறது. எனவே தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கதே!


அகில இந்திய அளவில்

தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை அகில இந்திய அளவிலும் எழத் தொடங்கியது.

தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டுமென்றும், இதை நீதிமன்றத்தில் வழக்குக்கு ஆட்படுத்தாத வகையில் அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் இடஒதுக்கீடு சேர்க்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் அமைப்பு கோரியுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் ஒரு குழுவினர் (18.3.1994) குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இக்குழுவின் தலைவர்களாகச் சென்ற ராம் விலாஸ் பஸ்வான் (ஜனதா தளம்) மற்றும் திலீப் சிங் பூரியா (காங்) ஆகியோர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். இடஒதுக்கீட்டை தனியார் துறைக்கு விஸ்தரிப்பது முக்கியமான பிரச்சினை என்றும், அதுபற்றி பிரதமருக்குத்தான் கடிதம் எழுதுவதாகவும் சர்மா உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் துறைக்கு ஆதரவாக பொதுத் துறை தாரை வார்த்து வரப்படுவதால் இச்சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இடஒதுக்கீடு தனியார் துறைக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உயர்ந்துள்ள இப்பிரிவினரைச் சார்ந்தோரை கணக்கிலெடுத்து 22.5 சதவிகித ஒதுக்கீடு 25 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், இப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள அரசு வேலைகளை நிரப்பவும் கோரினர்.

அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்கள் இக்குழுவில் இருந்தனர்.

தி.மு.க. மாநாட்டில்

திருச்சியில் நடைபெற்ற திமுக ஒன்பதாவது மாநில மாநாட்டில் இரண்டாம் நாளில் (4.3.2006) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தனியார்துறையில் இடஒதுக்கீடு: தொழில் துறையில் வளர்ச்சி காணும்போது தனியார் முதலீடு பெருகிவரும் சூழ்நிலையில், தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டு முறையை ஏற்றுப் பின்பற்றாததால், ஆண்டாண்டுக் காலமாகப் போராடிப் பெற்ற சமூக நீதிக் கொள்கையில் முழுப் பயனும் பல வகையிலும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே, முதல்கட்டமாக அரசின் அனுமதியோ நிதியுதவியோ பெற்று நடைபெறும் தனியார் நிறுவ னங்களில், இடஒதுக்கீட்டு முறையை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு உரிய வழிவகையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலும் மகளிர் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு, மத்திய ஆட்சி மொழியாகத் தமிழ், வேலை நிறுத்த உரிமை, நதிநீர் இணைப்பு மாநில சுயாட்சி உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.              (விடுதலை 5.3.2006)
 
-------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 25-1-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

25.1.14

இதற்குப் பெயர்தான் பெரியார் மண் என்பது!சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகள் 12 காலியாக உள்ளன. இதற்காக  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூத்த இரு நீதிபதிகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்த 12 பேர்களைக் கொண்ட பட்டியல் பெரும் சர்ச்சைப் புயலைப் பிரசவித்து விட்டது.

ஏற்கெனவே அய்ந்து பார்ப்பன நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில், விகிதாசாரத்துக்கு மேல் பல மடங்கு உள்ளனர். போதும் போதாதற்கு இந்தப் பட்டியலில் மேலும் மூன்று பார்ப்பனர்களைச் சிபாரிசு செய்துள்ளனர்  - அவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள் கூட!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற இருபால் வழக்குரைஞர்களும் போர்க் கொடி உயர்த்தி விட்டனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் போராட்டம் வலுத்து விட்டது. மூத்த வழக்குரைஞர் திரு ஆர். காந்தி ரிட் மனு தாக்கல் செய்து விட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடிய திரு சி.எஸ். கர்ணன் அவர்களும் இந்தப் பிரச்சினையில் தானும் மனு தாக்கல் செய்வதாக முன் வந்து புதுத் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.

இந்தப் பிரச்சினையில் இவர்களுக்கெல்லாம் முந்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை சென்னை யிலும், மதுரையிலும் திராவிடர் கழகம் நடத்திய துண்டு. மேலும் ஒரு போராட்டத்தை அறிவித் திருந்தது.

இதற்கிடையில் சென்னை வழக்குரைஞர் சங்கத்தினர் மத்திய சட்ட அமைச்சர் திரு கபில்சிபல் அவர்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு ப. சதாசிவம் அவர்களையும் சந்தித்து முறையிட, அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு சரி செய்வதாக உத்தரவாதம் கொடுத்த நிலையில் வழக்குரைஞர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

திராவிடர் கழகமும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று நடத்தவிருந்த போராட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது - தேவைப்பட்டால் போராட்டம் நடக்கும் என்ற அறிவிப்புடன். சமூக நீதி என்பதும், பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு என்பதும் ஏதோ திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கிளப்பி விடும் ஒன்று என்று வாய்ப் புளித்ததோ  மாங்காய்ப் புளித்ததோ என்று பேசியவர்கள், எழுதி வந்தவர்கள் இப்பொழுது ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வழக்குரைஞர்களை திராவிடர் கழகமா தூண்டியது? மூத்த வழக்குரைஞர் திரு ஆர். காந்தி என்ன திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரா? நீதியரசர் திரு. சி.எஸ். கர்ணன் அவர்கள் கறுப்புச் சட்டைக் காரரா?

இல்லையே! இருந்தும் இவர்கள் எல்லாம் கிளர்ந்து எழுந்தனர் என்றால், இதற்குப் பெயர்தான் தந்தை பெரியார் பிறந்த மண் என்பதற்கான (Soil Psychology) அடையாளமாகும்.

இதுபோல ஒரு பிரச்சினை எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில்  எழுந்தபோது, திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது; அப்பொ ழுது சட்ட அமைச்சராக திரு சி. பொன்னையன் இருந்தார்.
பிரச்சினை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் வரை சென்றது. அப்பொழுதே அது பெரியார் பிறந்த மண்ணின் சிந்தனை மணம் என்று தெரிவிக்கப் பட்டது. ஏதோ பெரியார் மறைந்துவிட்டார் - அத்தோடு அந்தச் சகாப்தம் முடிந்து விட்டது என்று சிலர் மனப்பால் குடித்துக் கிடந்தனர்.

தந்தை பெரியார் அவர்களுக்குப்பிறகு தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் செம்மாந்த இன நலப் பணியின் காரணமாகத்தான்  பார்ப்பனர்கள் பழனியில் மாநாடு கூட்டி, அவரின் உருவத்தைப் பாடை கட்டித் தூக்கினர்.
அதன் மூலம் பெரியார் பாதையில் வீரமணி சரியாகவே செல்லு கிறார் என்பதை அடையாளப்படுத்தவும் செய் தார்கள். அதில் ஒன்றும் தொய்வு ஏற்பட்டு விட வில்லை என்பதற்கு அடையாளம்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்பொழுது உயர்த்தப்பட்டு இருக்கும் போர்க் கொடி!
உடலால் பெரியார் மறைந்திருக்கலாம்; உணர்வால் நம்மிடையே அவர் வாழ்ந்து கொண்டுதானிருக் கிறார்! வாழ்க பெரியார்!

---------------------------------"விடுதலை” தலையங்கம் 24-1-2014

24.1.14

சுயமரியாதையும் சுயராஜியமும் - பெரியார்

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா

தலைவர் அவர்களே ! சகோதரர்களே!!

“சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பதுபற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக்கூடும் என்று நம்புகின்றேன்.

சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன்.

பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில் நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரிய வில்லை. ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிக சாதாரண விஷயமாகவே தோன்று கிறது. ஆனால் கேட்பவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் உண்டாகலாமே என்கின்ற எண்ணம் மாத்திரம் சற்று தயங்கச் செய்கின்றது. இருந்த போதிலும் யாரையும் நான் சொல்லுவதை எல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ளும்படி கேட்கப்போவதில்லை. அன்றியும், நான் சொல்லுவ தெல்லாம் சரியாகவே இருக்குமென்று கண்மூடித்தனமாய் நம்புங்கள் என்றும் உங்களுக்குச் சொல்லுவதில்லை. என் அபிப்பிராயத்தைச் சொல்லுகிறேன். அதை உங்கள் அபிப்பிராயங்களோடு வைத்து ஒத்துப் பார்த்து சரி எது, தப்பு எது என்பதை உணர்ந்து நீங்கள் உணர்ந்தபடி நடவுங் கள் என்றுதான் சொல்லுகின்றேன்.

ஆதலால் நான் சொல்லுவதில் யாருக்கும் எவ்வித கெடுதி ஏற்படவோ, சங்கடம் ஏற்படவோ இடமிருக்காது. மனிதன் பொதுவாகவே எவ்வித அபிப்பிராயங்களையும் கேட்பதற்கும் தெரிவதற்கும் ஒரு வித ஊக்கம் உடையவனாக இருக்க வேண்டும். இல்லை யானால் மனிதன் உண்மையைக் கண்டு பிடிக்கவோ, அறிவு பெறவோ, முன்னேற்றமடையவோ முடியாது.

அன்றியும் நமது சொந்த அறிவில் நமக்குப் போதிய தைரிய மிருந்தால் யார் என்ன சொன்னாலும் யாரிடம் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது. ஆகையால் ஒருவரை பேசாமல் இருக்கச் செய்வது என்பதோ, பேசுவதைக் கூட கேட்காமல் இருக்கச் செய்வது என்பதோ கோழைத்தனமேயாகும்.

ஆகவே நான் சொல்லுவதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலை யிலிருந்து கேட்கும்படி கோறுகிறேன்.

சகோதரர்களே! சுயமரியாதை சுயராஜ்யம் என்று சொல்லப்படும் இரண்டு வார்த்தைகளிலும் சுயமரியாதை என்பது நீங்கள் எல்லோரும் பொருள் தெரிந்து அனுபவத்தில் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் பிரயோகித்துவரும் ஒரு உண்மை வார்த்தை என்பதில் உங்கள் யாருக்கும் ஆட்ஷேபணை இருக்காதென்றே கருதுகின்றேன்.

மற்றும் ஒவ்வொரு மனிதனும் அவ்வார்த்தையின் தத்துவத்தை மனதில் பதிய வைத்து தன்னுடைய ஒவ்வொரு எண்ணமும் செய்கையும் அதைப்பொருத்தே இருக்கவேண்டுமென்று கருதுவதையும் உணருகின் றீர்கள். ஆனால் சுயராஜ்யம் என்னும் பதமோ சமீபகாலத்தில் உண்டாக்கப் பட்டதான ஒரு வார்த்தையேயாகும்.

எதுபோலவெனில் இந்து மதம் என்பதாக ஒரு வார்த்தை எப்படி சமீப காலத்தில் கற்பிக்கப்பட்டு அதற்கு ஒரு கருத்தில்லாமலும், அருத்தமில்லா மலும் வார்த்தை அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதோ அதுபோலவே தான் சுயராஜ்யம் என்னும் ஒரு வார்த்தை கற்பிக்கப்பட்டு அருத்த மில்லா மலும், கருத்தில்லாமலும் வெறும் வாய்வார்த் தையில் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற வார்த்தையாகும். ஆனால் இந்த வார்த்தைக்கு அருத்தமும் கருத்துமில்லாமல் போனாலும் “சுயராஜியமே எனது பிறப்புரிமை” என்று சொல்லப்படுவதிலும் அதற்கே எல்லா முக்கியஸ்தானமும் கொடுக்கப்படு வதிலும் அதாவது மேலே குறிப்பிட்ட இந்து மதத்திற்கு பிரதானம் கொடுப்பது போலவே கொடுக்கப்பட்டு மிகப்பிரமாதப் படுத்தப்பட்டு அதற்காகப் பெரிய கிளர்ச்சியும் செய்யப்பட்டு வருகின்றது. பாமர மக்களுக்கு உலகக்கல்வியும் பகுத்தறிவு ஞானமும் இல்லாத காரணமே சுயராஜ்யம் என்னும் வார்த்தை மோக்ஷம், கைலாயம் என்னும் வார்த்தையைவிட மிக்க விளம்பரமும் மக்களின் கவர்ச்சியும் பெற்று விட்டது. இவ்வளவு மாத்திரம் அல்லாமல் “சுயராஜியம் கடவுள் யெத்தனத்தாலும் கடவுள் சித்தத்தாலும் அடையப் படவேண்டியது” என்றும் அதன் சர்வாதிகாரியான திரு.காந்தி அவர்களால் சொல்லப்படுவதாகி இனி அதற்காக வேறு கடவுள் தயவை எதிர்பார்த்து அர்ச்சனைகள் பிரார்த்தனை கள் செய்யப்பட வேண்டியதாகவுமாய்விட்டது. ஆனால் சுயமரியாதைக்கு அந்தக் கடவுள் தயவு தேவையில்லை என்ப தோடு, அந்தக் கடவுளைப் பற்றிய கவலையும் வேண்டியதில்லை என்று சொல்வதோடு சகலமும் சுய முயற்சியினாலேயே ஆக வேண்டும் என்றும் சொல்லப்படுவதாகும்.

அதுமாத்திரமல்லாமல் சுயமுயற்சியை விட்டு கடவுள் தயவுக்கும், கடவுள் செயலுக்கும் இதுவரை எதிர்பார்த்திருந்ததின் பலனே நமது நாட்டுக்கு இன்று சுயமரியாதை இவ்வளவு இன்றியமையாத அவசியமாய் போய் விட்டதென்றும் அது சொல்லுகின்றது.

நிற்க, இன்றைய தினம் கருத்தில்லாமல் கற்பிக்கப்பட்டிருக்கும் சுயராஜியம் என்னும் போலி வார்த்தைக்கு ஆதாரமாகப் பல காரணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவெனில்,

“இந்த நாட்டு மக்களுக்கு கல்வியில்லை, செல்வமில்லை, தொழிலில்லை மற்றும் அநேக குறைகளிருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் சுயராஜியமில்லாததே. ஆதலால் சுயராஜியம் சம்பாதிக்க வேண்டும்” என்பதாகச் சொல்லப்பட்டு பாமர மக்களை நம்பச் செய்து பட்டினி கிடப்பவர்களையும் வேலையில்லாமல் திண்டாடுவோரையும் சிறு பிள்ளைகளையும் சோம்பேரிக் கூட்டங்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றது. ஆனால் நான் இவற்றிற்கு அதாவது கல்வி, செல்வம்,தொழில் முதலாகியவை நமது நாட்டில் இல்லை என்பதற்கும் இவை மாத்திரம் இல்லாமல் மற்றும் அறிவு, ஆராய்ச்சி, முற்போக்கு, ஈவு, இரக்கம், ஒழுக்கம், நியாயம், நீதி, மனிதத்தன்மை முதலாகியவைகூட இல்லாமல் போனதற்கும் நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லா மல் போனதே காரணம் என்று சொல்வதோடு, சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி மேல்கண்ட சாதனங்களை மக்கள் அடையச் செய்யும் பாதை களை அடைக்கவே “சுயராஜிய முயற்சி” என்பது புதிதாகக் கற்பிக்கப்பட்டி ருக்கின்றது என்றும் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அன்றியும், சுயராஜிய முயற்சி என்பது வெரும் “வெள்ளைக்காரனைப் பற்றி வசை புராணம் பாடுவதன் மூலமே அவனுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வேண்டு மென்பதின் மூலமே நமது கஷ்டமெல்லாம் நீங்கி விடும்” என்று சொல்லப் பட்டு வருவதோடு இதுவரை அப்படியே செய்யப் பட்டும் வரப்படுகிறது.

ஆனால் சுயமரியாதை இயக்கம் சுயராஜிய முயற்சியைப்போல் எல்லாப் பொறுப்பையும் வெள்ளைக்காரன் மீது சுமத்தி அவனைப் பற்றிப் பேசுவதிலேயே காலம் கழித்து அவனுக்குக் கஷ்டம் கொடுப்பதிலேயே நமது ஊக்கத்தையும், முயற்சியையும் செலவழிப்பதில் கவலை கொள்ளு வதில்லை. ஆனால் அவர்களது(வெள்ளைக்காரர்களது) அக்கிரமத்திற் காதாரமானதும், இடங்கொடுப்பதும், கொடுத்துக்கொண்டு இருப்பதானதுமான விஷயம் எது - யாரால்? என்று கண்டுபிடித்து அதாவது அந்த அக்கிரமங் களுக்கு எது தூண்களாய் இருந்து தாங்கிக் கொண்டிருக்கின்றனவோ அவைகளை பரித்துக் கீழே தள்ளும் வேலையில் ஈடுபடச் செய்கின்றது.

ஆகவே நாட்டில் உள்ள குறைகளை ஒப்புக்கொள்ளுவதில் சுயராஜி யத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக வித்தியாசமில்லை. அதற்கு ஆதாரமான காரணங்களை கண்டு பிடிப்பதிலும் காரணஸ்தர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்களே தாங்கள் தப்பித்துக் கொள்ள அன்னியர் பேரில் பழி சுமத்துவதையும் மாத்திரம் சுயமரியாதை இயக்கம் நம்பி ஏமாந்து போவ தில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

உதாரணம் வேண்டுமானால் பாருங்கள்.

கல்வியில்லை என்பது வாஸ்தவந்தான், ஆனால் யாருக்குக் கல்வி இல்லை? பார்ப்பனர் ஒழிந்த ஏனையோருக்குதான். அதிலும் பள்ளு, பறை என்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விவசாயம், கைத்தொழில் ஆகிய வைகள் செய்யும் சரீரப் பிரயாசைப்படும் மக்களுக்குத் தான் கல்வியில் லையே யொழிய வேறென்ன?

ஆனால் பாடுபடாத சோம்பேறிக் கூட்டமான பார்ப்பனர்கள் எல்லோருமே நமது நாட்டில் படித்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா என்று கேட்கிறேன். இதற்கு வெளைக்காரர் காரணமா - சுயராஜியம் இல்லாதது காரணமா? அல்லது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியும், அதனால் ஏற்படவேண்டிய பகுத்தறிவு இல்லாததும் காரணமா? என்பதை உங்கள் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

இன்றைய வெள்ளைக்கார அரசாங்கத்தில் அதாவது சுயராஜிய மில்லாத அரசாங்கத்தில் பார்ப்பனர்கள்தான் படிக்கவேண்டுமென்றாவது, அவர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக்கூடாது என்றாவது, எங்காவது சட்ட மிருக்கின்றதா? அல்லது அவர்களது ஆட்சியில் மற்றவர்கள் படிக்க வசதி செய்யப்படாமலாவது, ஏதாவது சட்டபூர்வமான தடைகள் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் 100க்கு கால்பங்கு கூட படித்தவர்கள் இல்லை. பெண் மக்களில் 100க்கு அரைப் பங்கு கூட படித்தவர்கள் இல்லை. விவசாயம், கைத்தொழில் முதலியவை செய்யும் வகுப்பார்களில் 100க்கு ஒருவர் கூட படித்தவர்கள் இல்லை. ஆனால் பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர்கள் படித்தவர்களாக இருக்கின்றார்களே. இதற்கு என்ன காரணம் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்கிறேன். இது சுயராஜியமில்லாததாலா? அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை இல்லாததாலா? என்ற கேள்விக்குத் தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

ஒரு சமயம் பணம் இல்லாததால் பார்ப்பனரல்லாதார் படிக்க முடியவில்லை என்று சொல்ல வருவீர்களானால் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் எப்படி பணம் சேர்ந்தது? அவர்கள் உங்களைவிட அதிகமாகப் பாடுபட்டு பணம் சம்பாதிக்கின்றார்களா? அவர்கள்தான் தங்களையே அடிக்கடி தாங்கள் பிச்சை வாங்கி உண்ணும் ஜாதி என்றும், புரோகிதம் செய்தும், மணி யாட்டியும், தட்சணையும், உபதானமும் பெற்று வயிர் வளர்க்கும் ஜாதி யென்றும் பல தடவை அவர்களே தாராளமாய்ச் சொல்லிக்கொண்டிருக் கிறார்களே! இன்றும் அந்தப்படி தான் பலர் இருந்தும் வருகிறார்களே. இதை நீங்கள் அறியாததா? இப்படி இருக்க அவர்கள் மாத்திரம் எப்படி 100க்கு 100 பேர் படித்தார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். சுயமரியாதை உணர்ச்சி உண்டாகி பகுத்தறிவு உங்களுக்கு ஏற்பட்டுவிடுமானால்தான் இந்த இரகசியத்தை நீங்கள் சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியும். மற்றபடி உங்களுக்கு விளங்கவே விளங்காது.

சும்மா வாயில் சுயராஜியம், சுயராஜியம் என்று கூறிக்கொண்டு கொடி யைச் சுமந்துகொண்டு வந்தே மாதரம் என்று பிதற்றித்திரிய வேண்டியதுதான் நமது மக்களின் வேலையாகிவிட்டது. ஆனால் இதனால் என்ன பலன் கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்? என்கின்ற அறிவு பூஜியமாகிவிட்டது. இன்னமும் நிர்தாட்சன்னியமாய் நான் பேசுவது என்றால் சுயராஜியம் என்பது இருந்த காலத்தில் தான் அதாவது அன்னிய ஆட்சி என்பது இல்லாத காலத்தில்தான் இந்திய மக்களில் இன்னும் அதிகமான எண் ணிக்கை உள்ள மக்கள் தற்குறிகளாய் இருந்திருக்கின்றார்கள். அன்னிய ராஜியம் ஏற்பட்ட பின்னரே “பள்ளு, பறை” தொழிலாளி - பெண்கள் ஆகிய எல்லா வகுப் பாரும் படிக்கலாம் என்கின்ற சட்டமும் அனுமதிப்பும் ஏற்பட்டது. அன்னிய அரசாக்ஷியில் ஏற்பட்ட இந்த சட்டமும் அனுமதியும் கூட இன்று சுயராஜியம் கேட்கும் மக்களாலேயே ஆnக்ஷபிக்கப்பட்டு வருகின்றது. அனேக கிராமங்களில் பள்ளு, பறை பிள்ளைகள் படிக்க சர்க்கார் பணமும் இடமும் கொடுத்தாலும், சுயராஜியம் கேட்கின்ற தேசிய வாதிகள், தேச பக்தர்கள், காங்கிரஸ்வாதிகள் ஆகிய ஜனங்களிலேயே பலர் பள்ளிக்கூடத்தில் உட் காரவோ, பள்ளிக்கூடம் இருக்கும் இடத்திற்கு நடந்து போகும் தெருவையோ அனுமதிப்பது கூட இல்லை. தேசீயவாதி களிலேயே கூட தேசபக்தர் களிலேயே கூட இப்படிப்பட்டவர்கள் இருந்தால் மற்ற மக்களின் ஆnக்ஷ பணை எவ்வளவு இருக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றேன்.

இந்தக் கொடுமையை ஒழிக்க சுயராஜியத்தில் வழி யிருக்கின்றதா? அல்லது சுயமரியாதையில் வழி இருக்கின்றதா? என்று இப்போது யோசித்துப் பாருங்கள். முதலாவது முன்னால் இருந்து வந்த நமது சுயராஜிய அரசாங்கத்தில் ஒரு கூட்டத்தார்தான் படிக்கலாம். மற்றக்கூட்டத்தார் படிக்கக்கூடாது என்று சட்டமிருந்தும் இன்னும் அது நமது மத தர்மமாய் இருப்பதும், அன்னிய ராஜியத்தினாலேயே அவை முழுவதுமாய் தலை காட்டச் செய்யாமல் மறைக்கப்பட்டிருப்பதும் அன்னிய ராஜியம் மறைந்த உடன் அவை அதாவது மததர்மம் என்னும் பேரால் மறுபடியும் தலைதூக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றேன்.

நாளைய தினம் இந்த திரு.காந்திக்கே சக்கரவர்த்திப்பட்டம் சூட்டினா லும் இந்த மத தர்மங்கள்அழிக்கப்பட முடியுமா என்று உங்களைக் கேட் கின்றேன். அவரைச்சுற்றித் திரிகின்றவர்கள் யார் என்று பாருங்கள். இந்தக் காந்தியும் அவரது இந்தக் கூட்டமும் நாளைக்கு இந்தத்துறைகளில் ஏதாவது நன்மை செய்யக்கூடுமானால் இன்று அவர்கள் செய்வதை யார் தடுக்கின்றார்கள் என்று நான் கேட்கின்றேன்.

செல்வம்

இதுபோலவே செல்வநிலையும் மிக மோசமானதுதான் என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், யாருடைய செல்வநிலை மோசமா னது? என்பதை யோசித்துப் பாருங்கள். பாடுபட்டு உழைப்பவர்களுடைய வும், யோக்கியமானவர்களுடையவும், செல்வநிலைதான் மோசமாக இருக் கின்றதே தவிர சோம்பேரிகள், சூக்ஷிக்காரர்கள், வஞ்சக்காரர்கள், கல் மன முடையவர்கள் ஆகியவர்களுடைய செல்வநிலை எங்காவது மோசமாக இருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள்.

எந்த நாடாவது சோம்பேரிகள் எல்லாம் மூக்குபிடிக்க சாப்பிட்டு அவர்களது பெண்டு பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சவாரி செய்து கொண்டு மாட மாளிகைகளில் குடிஇருக்கும்படியான மேன்மையில் இருந் தால் அந்தநாடு செல்வநிலையற்ற நாடு ஆகுமா? அல்லது சுயமரியாதை அற்ற மூடர்களையுடைய நாடு ஆகுமா என்று கேட்கின்றேன்.

இந்த மூடத்தனம் ஒழிய சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா? என்று யோசித்துப்பாருங்கள். இன்று உங்களுக்கு சுயராஜியம் வேண்டுமென்கிற ஆட்கள் எல்லாம் பெரிதும் நான் மேலே சொன்ன பாடுபடாமல் சோம்பேரியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிர் வளர்க்கும் வஞ்சகர்களும், அவர்களது கூலிகளும் அல்லாமல் ஏதாவது ஒருவர் இரண்டு கூடை மண் வெட்ட தகுதி உடையவரோ அல்லது ஒரு நாலு பரி தண்ணீர் இறைக்கும் அறிவுள்ளவரோ, அல்லது ஒரு மூட்டை தூக்க தகுதி யுடையவரோ அல்லது ஏதாவது ஒரு சரீரத் தொழில் புரிய யோக்கியதை உடையவராகவா இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்த்துக் கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்று கேட்கின்றேன். மதத்தின் பேரால் காவி கட்டி சன்னியாசிகளாகி மோக்ஷத்திற்குப் பிரசாரம் செய்யும் சோம்பேரிகளுக்குச் சமமாக மற்றொரு வேஷம் போட்டு சுயராஜியப் பிரசாரம் செய்கிறவர்கள் தவிர பாடுபடுவதற்குத் தகுதி உடையவர்கள் எத்தனை பேர் என்று கேட்கின்றேன். மற்றும் ஒவ்வொரு தனி மனிதனின் வரும்படி இந்த நாட்டில் எவ்வளவு வரையில் இருக்கின்றது பாருங்கள். வருஷம்10 லக்ஷம் 8 லக்ஷம் வரும்படி உள்ள தனி மனிதர்கள் எவ்வளவு பேர்கள் இருக்கின்றார்கள். ஆள் ஒன்றுக்கு 1000, 2000, 5000, 10000 ஏக்கராக்கள் நிலமுடையவர்கள் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள். இந்த யோக்கியதையில் இவர்கள் இருப்பதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதைகள் இருக்கின்றன? நாட்டுக்கு இவர்களால் என்ன நன்மைகள் இருந்து வருகின்றன? என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இவர்களாவது ஒரு வகையில் நகரும் பிராணிகளாக இருக்கின்றார்கள். மற்றபடி நகராத ஜெந்துக்களாகிய கடவுள்களுக்கு - குழவிக்கல்லுக்கு - எடுத்து உட்காரவைக்கும் - தூக்கிச்செல்லும் ஜீவன்களான பண்டார சன்னதிகள் சங்கராச்சாரியார் ஆகிய நகரா ஜெந்துக்களுக்கு இந்த நாட்டில் எவ்வளவு செல்வம் எவ்வளவு வரும்படி இருக்கின்றது என்பதை சற்று கவனித்துப் பாருங்கள்.

இந்தப்படி செல்வமுள்ள நாட்டின் செல்வநிலை போராது என்று ஒருவன் சொன்னால் அவன் மூடன் அல்லது உண்மையை மறைப்பவன் என்று கருதுவீர்களா அல்லது பெரிய தேசபக்தன் தேசியவாதி என்று கருது வீர்களா என்று கேட்கின்றேன். இந்தப்படியான செல்வநிலை மாற சுயராஜி யம் வேண்டுமா, சுயமரியாதை வேண்டுமா என்பதை இப்பொழுதாவது நன்றாய் யோசித்துப்பாருங்கள். கன்னியாகுமரி முதல் கல்லுருவங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கன்னியாகுமரி அம்மனுக்கு மாதத்திற்கு 3-நாள் வீட்டிற்கு தூரமாகின்ற சடங்குகள்கூட செய்யப்படுகின்றது. அவ்வளவு சக்தியுள்ளசாமி. ஆனால் அந்த சுத்துப்பிரகாரத்துக்குள், காந்தி, லாலா லஜபதி முதலிய எப்பேர்பட்ட மகாத்மாக்களும் தேசபக்தர்களும், தேசீயவாதிகளும் கூட போகக் கூடாது.

இந்த நிலையில் ஒரு கல்லுக்கு இருக்கும் கௌரவம், செல்வம், கட்ட டம், பூஜை, உற்சவம், வீட்டுக்குத்தூரமான சடங்கு ஆகியவற்றிற்கு செலவு எவ்வளவு என்று கருதுகிறீர்கள். அதற்கு 5 மையில் அடுத்தாப்போல் உள்ள சுசீந்திரத்திலுள்ள ஒரு கல்லுக்கு தினம் 10 மூட்டை அரிசி வேகவைத்துப் படைக்கப்படுகின்றது. அந்தக் கல்லு இருக்கும் இடத்திற்கு கால்மைல் தூரத்திற்கு இப்பால் கூட சில மனிதர்கள் நடக்கக்கூடாது. இதற்கு வருஷந் தோரும் கல்யாணம் முதலிய அநேக ஆடம்பரங்கள் இப்படியே. அதற் கடுத்த வானமாமலை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்திருப்போரை, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமேஸ்வரம், திருப்பரங்குன்றம், மதுரை, பழனி முதலிய இடங்களின் செல்வமும், செலவையும் பார்த்துவிட்டு அவசர அவசரமாகவே ஸ்ரீரங்கத் திற்கு வந்து பாருங்கள். இந்த கோவில் திருபணி கும்பாபிஷேகம் தைலக்காப்பு உற்சவம், பூஜை, சொத்து, நகை, வாகனம், கட்டடம் ஆகிய வைகளை கணக்குப் பாருங்கள். இதுபோன்ற மற்ற தஞ்சை, வடஆற்காடு, செங்கல்பட்டு ஜில்லாக்களையும் கணக்குப் பாருங்கள். மற்றும் ஒவ்வொரு கிராமத்திய கிராமதேவதை பிறகு அவனவனு டைய குலதேவதை குலகுரு வரையிலும் கவனித்துப் பாருங்கள். இந்தச் சொத்தும் செலவும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் நாடு உண்மையிலேயே செல்வமில்லாத நாடா? என்பதை தயவு செய்து நடுநிலைமை யிலிருந்து யோசித்துப்பாருங்கள்.

இந்த செல்வமும் செலவும் மக்களுக்கு பிரயோகிக்கப்பட்டால் இந்த நாட்டிற்கு வேறு என்ன தேவை இருக்கும் என்று கேட்கின்றேன். இதற்கு சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா?என்று யோசித்துப் பாருங்கள். இதைத் திருத்துவதற்கு எந்த சுயராஜியத்திலாவது திட்டம் இருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள். சர்வாதிகாரி காந்தி சுயராஜிய திட்டத்தில் ராமராஜியதிட்டம் போட்டாய்விட்டது. அதாவது மத விஷயத் தில் பொதுவில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. பூரண சுயேச்சைக்கும் மேல்பட்ட போல்ஸ்விக்வீரர் ஜவர்லால் அவர்கள் சுயராஜிய திட்டத்திலோ செத்தவர் எலும்பு கங்கையில் போட்டால்தான் அவரது ஆத்மா மோக்ஷ மடையும் என்கிற திட்டம் போட்டாய்விட்டது காலம் தவறாமல் பிண்டங் களும் போட்டுக்கொண்டு வரப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தக் கோவில்கள் இடிபடவும் இந்தச் சாமிகள் அழி படவும் இந்த சோம்பேரி மடாதிபதிகள் சங்கராச்சாரிகள் ஏர் உழும்படியும், செய்யப்பட இவர்களது சுயராஜியத்தில் இடம் உண்டா என்று கேட்கின் றேன். இந்த சொத்துக்கள் வரும்படிகள் எல்லாம் பாடுபடும் மக்கள் வயி றார கஞ்சிகுடிக்கவும் ஏமாற்றப்படாமல் இருக்கவும் இவர்களது சுய ராஜியத்தில் இடம் உண்டா என்று கேட்கின்றேன்.

சொத்துக்களையெல்லாம் சிலர் கைவசப்படுத்திக் கொண்டு பாடுபடுப வர்களின் வரும்படிகளையெல்லாம் சோம்பேரிகள் அனுபவித்துகொண்டு பாடுபடுபவனுக்கும் தொழிலாளிக்கும் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச வரும் படியையும் கல்லுக்கும் குட்டிச்சுவற்றிற்கும் அழுகும்படி செய்து கொண்டு இருக்கின்ற ஒரு நாட்டுக்கு சுயமரியாதை வேண்டுமா? அல்லது சுயராஜியம் வேண்டுமா ? என்று யோசித்துப் பாருங்கள்.

சுயராஜியம் வந்தால் இந்த வீண் செலவுகளில் எதையாவது நிறுத்த முடியுமா? இந்தக் கோவில்களில் எதையாவது இடிக்கமுடியுமா? இந்தச் சாமிகளில் எதையாவது ஒழிக்க முடியுமா? என்று பாருங்கள்.

ஒவ்வொரு சாமிக்கும் 7- சுத்து கோட்டைச்சுவர்கள் போன்ற மதில் களும் 5, 6 பிரகாரங்களும் ஆகிய இவைகள் எல்லாம் எதற்கு? இவைகள் இல்லாவிட்டால் சுவாமிகள் ஓடிப்போகுமா? ஓடிப்போனால்தான் என்ன கெடுதி ஏற்பட்டு விடும்? அல்லது சுவாமி என்றால் என்ன? அது ஒரு குற்றவாளியா? அல்லது கைதியா? அல்லது சிறைபிடிக்கப்பட்ட அடிமையா? இந்த மாதிரி அடைப்பட்டுக்கிடக்கும் சிறிதும் சுயமரியாதை இல்லாத சாமியை கும்பிடுகின்ற மக்களுக்கு சுயமரியாதை எப்படி ஏற்படும்? அந்த சாமிகள் ஒழிந்தாலல்லது சுயமரியாதை ஏற்படமார்க்க மில்லை. இந்த மாதிரி சாமிகள் ஒழிய எந்த சுயராஜியத்திலும் திட்டமில்லை என்பது தெரிந்தும் சுயராஜியம், சுயராஜியம் என்று வீணாய் உளறுகின் றோம். இந்த மாதிரி நாட்டையும் ஜன சமூகத்தையும் தேசத்தின் செல்வத் தையும் பாழாக்கும் சாமிகள் முதலில் ஒழிய வேண்டும். ஏழைகளின் - உழைப்பாளிகளின் செல்வத்தை கொள்ளை யடித்த பணக்காரர்கள் “கடவுள் செயலால் பணம் கிடைத்தது” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டிருப்பதும் ஏழைகள் பாடுபட்ட பொருள்களை ஏமாற்றுக்காரர்கள் கொள்ளை கொண்டுவிட்டால் அதை உணராமல் “கடவுள் செயல்” என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடப்பதற்கும் ஆதாரமான “கடவுள் செயல்” “தலைவிதி” என்பவைகள் முதலில் ஒழியவேண்டும். இவை ஒழிவதற்கு சுயராஜியத்தில் இடமிருக்கின்றதா? சுயமரியாதை இயக்கத்தில் இடமிருக் கின்றதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இதுபோலவே விவசாயம், அறிவு, ஆராய்ச்சி, வலிமை முதலிய பல காரியங்களுக்கும் சுயராஜியத்தில் சிறிதும் இடமில்லை என்றும் சுயமரியாதை ஒன்றினாலேயே தான் இவைகளை சுலபத்தில் அடையலாம்.


-------------------------------------------திருச்சி நகரவை பொதுமண்டபத்தில் 17.05.1931 அன்று  தந்தைபெரியார் ஆற்றிய உரை.”குடி அரசு ”- சொற்பொழிவு - 24.05.1931