Search This Blog

30.6.09

அய்.அய்.டி.,களில் ஒடுக்கப்பட்டோரின் அவல நிலை!
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலாகி 59 ஆண்டுகள் கரைந்த பிறகும்கூட தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வித் துறையில் பல நிலைகளை எட்ட இன்னும் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலைதான் இருந்து வருகிறது.

இந்நாட்டுக்குரிய பெரும்பான்மை மக்களுக்கு இந்த நிலை என்றால், இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? பெரும்பான்மையோர்களால் ஆளப்படுவதுதான் ஜனநாயகம் என்கிற கருத்து குருடாக்கப்பட்டு விட்டதே இந்தியத் துணைக் கண்டத்தில். காலம் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்ற போராட்டத்தில் ஓரளவு வெற்றி பெற்று முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறையினர் தத்தித் தத்தி மேலே வந்துகொண்டு இருக்கின்றது.

இடை இடையே ஆதிக்க ஜாதியினரின் முரட்டுக் கரங்களில் சிக்கிய அரசும், நிருவாகமும், நீதித்துறையும் சாண் ஏறினால் முழம் சறுக்கச் செய்யும் ஒரு நிலைமையை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்தி வந்துகொண்டிருக்கின்றன.

பூணூலை ஒரு பக்கம் கையில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே, இட ஒதுக்கீட்டினால் ஜாதி வளரும் என்றனர். அது எடுபடவில்லை என்றதும், இட ஒதுக்கீட்டினால் தகுதி, திறமை போய்விடும் என்று மூக்கால் அழுதனர்.


அந்தக் கருத்தின் முதுகில் மண்ணைக் காட்டிவிட்டனர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள்.

இப்பொழுது இன்னொரு கட்டமாக இட ஒதுக்கீடு தேவைதான்; அது எல்லாத் துறைகளுக்கும் கூடாது; உயர்நிலைக் கல்வி என்கிற இடங்கள் இட ஒதுக்கீட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறி, அதில் இதுவரை அவர்களின் ஆதிக்கக் கைகள் கூரிய நகங்களுடன் நிமிர்ந்து நிற்கின்றன.

நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்கிற மசோதாவை கடந்த நாடாளுமன்றத்தின் கடைசித் தொடரில் மாநிலங்களவையில் அவசர அவசரமாக நிறைவேற்றியும் விட்டனர்.

இவ்வளவுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அமைச்சரவையால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் இப்படியொரு மசோதா மாநிலங்களவையில் எப்படி நிறைவேற்றப்பட்டது? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்?
இவ்வாண்டு அய்.அய்.டி.,களில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுதிய 36,117 தாழ்த்தப்பட்டவர்களில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 967 பேர்கள் மட்டும்தானாம். தாழ்த்தப்பட்டோருக்குரிய 1100 இடங்கள் காலியாகவே இருக்குமாம்.

இட ஒதுக்கீடு மாணவர்கள் அய்.அய்.டி., படிப்புக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கு ஓர் ஆண்டு தனியே பயிற்சி வேறு அளிக்கப்படுமாம். இதன் பொருள் மற்ற உயர்ஜாதிக்காரர்களைவிட இவர்கள் ஓராண்டு அதிகமாகப் படிக்கவேண்டும் காலமும், பொருளும் நஷ்டம் இட ஒதுக்கீட்டுக்காரர்களுக்கு.

அய்.அய்.டி.,களில் சேர நுழைவுத் தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 95 ஆயிரம் பேர். தேர்ந்தெடுக்கப்பட்டோர் 1930. இதில் 1546 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிலும் 1493 பேர்களுக்கு மட்டுமே அனுமதியாம். 53 பேர்களின் விண்ணப்பங்களில் சில விவரங்கள் இல்லாமையால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை. அப்படியானால் இந்த இடங்கள் உயர்ஜாதிக்காரர்களின் வயிற்றில்தான் அறுத்து வைக்கப்படும்.

எதைச் சொல்லியாவது, எதைச் செய்தாவது ஆரிய நரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை ஆடுகளாகக் கபளீகரம் செய்வதில்தான் குறியாக இருக்கின்றன.

அத்தனை அய்.அய்.டி. இயக்குநர்களும் பார்ப்பனர்கள்தான் என்கிற நிலையில் எந்த அநியாயத்தைச் செய்யத்தான் அவர்கள் தயங்குவார்கள்?


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (29.6.2009) காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் வினா ஒன்றைக் கிளப்பினார்.

அய்.அய்.டி.,களில் தாழ்த்தப்பட்டோருக்கான 1100 இடங்கள் காலியாக இருப்பதுபற்றிய வினா அது. உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் பொறுப்பான பதிலை அளித்துள்ளார்.

அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற உயர்கல்விகளில் சேரும் தகுதியும், திறமையும் தமிழக மாணவர்களிடம் உள்ளது. ஆனால், தாழ்வு மனப்பான்மை காரணமாக பலர் இதில் சேரத் தயங்குகின்றனர். எனவே, வருங்காலத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் சேருவதற்கான பயிற்சி அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்க பதிலாகும்.

59 ஆண்டுகளுக்குப் பிறகும் உயர்கல்வி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பது தடுக்கப்பட்டே தீரவேண்டும்.

தந்தைபெரியார் அவர்களின் மாணவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு இதில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டானதாக இருக்கவேண்டும் அல்லவா!


------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 30-6-2009

அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டு வருவதை நோக்குக!


பார்ப்பனர் தமிழரை வென்றது எப்படி? - 1

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டுகளாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்தொகையில் நூற்றுக்கு மூவராகவேயுள்ளனர். முதன்முதல் தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரே யாவர். போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரிகத்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினாலேயே. அவ்வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ் நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறுகூட்டம். ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப்பற்றலாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப் போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத்திலேயே இல்லை.

தமிழர் வேறெவ்வெவ்வகையில் மடம் படினும், போரில் மடம் படுபவரல்லர். கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் அயலரசுகள் வந்து நிலைத்ததேயில்லை. அதன் பின்பும், தமிழர்க்குள் ஒற்றுமையின்மையாலேயே, அயலார் தமிழ்நாட்டைக் கைப்பற்ற நேர்ந்தது.

பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்

1. அரசரையடுத்தல்

பார்ப்பனர் தமிழ்நாட்டில் முதலாவது அரசரை வயப்படுத்தினால், பின்பு பொதுமக்கள் தாமே வயப்படுவர் என்று கருதி, அரசரிடத்தில் பாங்கரா யமர்ந்தனர்.

2. தவத்தோற்றம்


பார்ப்பனர் வைகறையெழுந்து ஆற்றிற் குளித்து, அதன் கரையிலமர்ந்து ஆரிய மந்திரங்களை நெடுநேரம் ஓதிக் கொண்டிருப்பதைத் தமிழர் கண்டு அவர்களை முனிவராகக் கொண்டனர்.

3. தமிழ் கற்றல்

பார்ப்பனர் தமிழைக் கற்றுத் தமிழாசிரியராகித் தமிழில் நூல்களை இயற்றினதினால், தமிழரால் மிக மதிக்கப்பட்டனர்.

4. வடமொழியில் நூலெழுதுதலும் தமிழ்நூல்களை மொழி பெயர்த்தலும்

பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ்நாட்டுக் கதைகளையும் செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வடமொழியில் மொழி பெயர்த்தும் வைத்துக் கொண்டு, அவ் வடநூல்களை முதனூல் களாகவும் தென்னூல்களை வழிநூல்களாகவும் காட்டினர்.

வடமொழியில் நூலெழுதுதலுக்கு ஹாலாஸ்யமான்மியத்தையும், மொழிபெயர்த்தலுக்குச் சங்கீத ரத்னாகரம் போன்ற இசை நூல்க-ளையும் காட்டாகக் கூறலாம்.

5. தற்புகழ்ச்சி

பார்ப்பனர் தங்களைத் தேவர் என்றும், பூசுரர் என்றும் தங்கள் மொழியைத் தேவமொழி யென்றும், தாங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர் களென்றும், தங்களுக்கொப்பானவர் உலகத்தி லேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களிலும் வரைந்து கொண்டனர்.

அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழி யொலி களும் அதற்குத் துணையாயிருந்தன.


6. மதத் தலைவராதல்

பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங்களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களையிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைக ளையும் புனைந்துகொண்டு, தமிழ் மதாசிரியர்களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினைகளையும் நடாத்தி வரலாயினர்.

7. தமிழைத் தளர்த்தல்

பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்களையும் ஆவணங் களையும் வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும், பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வடசொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்துவிட்டனர்.


8. பிரித்தாட்சி

பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மையாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வர்ணத்தாரையும் முறையே தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர்.


கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்) உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற்கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர்.

பிராமணர் முதலிய நால்வர்ணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ்வேறாகவே மனு தருமங் கூறுகின்றது.

தமிழ்நாட்டிலுள்ள பல குலங்களும் தொழில் பற்றித் தொன்றுதொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடியுறவாடாதபடி செய்தது ஆரிய முறையாகும். இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க் காகிய காலமும் உண்டே” (கற்பியல் 3)

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலறியலாம். இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும் உயர்ந்த வேளாளர் என் பாரை. அந்தணர் என்பார் துறவிகளாதலின். அவர்க்குக் கரணமில்லை. தாழ்த்தப்பட்டோர் இன்றும் தாங்களே மணவினை நடத்தி- வருகின்றனர்.


அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையாகவும் பிறவூர்களில் அவ்வளவு கொடுமையில்லாமலும் நடத்தப்பட்டு வருவதை நோக்குக.


----------------தொடரும்...

-----------------------மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய நூல்:- “ஒப்பியன் மொழி”, - பக்கம் 43-51

29.6.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஜமைக்கா-ஜப்பான்
ஜமைக்கா

ஜமைக்கா தீவில் 1494 இல் கொலம்பஸ் வந்திறங்கியபோது அரவாக் இந்தியர்கள் அங்கே வாழ்ந்திருந்தனர். அவர்களை அடிமைப்படுத்தி 1655 ஸ்பெயின் நாட்டவர்கள் ஆட்சி செலுத்தினர். பின்னர் பிரிட்டிஷார் அதனைக் கைப்பற்றித் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கருப்பின மக்களை அடிமைகளாகக் கொண்டு வந்து அடிமை வணிகத்தில் ஈடுபட்டனர். 1807 இல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் உலகச் சந்தையில் சர்க்கரை விலை பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றம் 1865 இல் ஜமைக்கா தீவில் எழுச்சியையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது. 1866 இல் ஜமைக்கா பிரிட்டிஷாரின் குடியேற்ற நாடானது.

1958 இல் மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதில் ஜமைக்கா முக்கிய பங்காற்றியது. பிறகு நடந்த வாக்கெடுப்பின் முடிவுப்படி 1962 இல் ஜமைக்கா தன் விடுதலையைப் பிரகடனப்படுத்தியது.

கியூபாவுக்குத் தெற்கே அமைந்துள்ள ஜமைக்கா தீவின் பரப்பு 10 ஆயிரத்து 991 சதுர கி.மீ. இதன் மக்கள் தொகை 28 லட்சம் ஆகும். புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள் 61 விழுக்காடும் ஆவி வழிபாட்டினர் 35 விழுக்காடும் உள்ளனர். இங்கிலீசே ஆட்சி மொழி.

6-8-1962 இல் விடுதலை அடைந்த இத்தீவின் ஆட்சித் தலைவர் பிரிட்டிஷ் அரசியாவார். அவரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் உள்ளார். 19 விழுக்காடு குடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 11 விழுக்காடுக்கு மேல் வேலை கிட்டாதோர் உள்ளனர்.

************************************************************************************

ஜப்பான்

நான்காம் நூற்றாண்டில்தான் ஒன்றிணைந்த ஜப்பான் நாடு யமாடோ வம்சத்தால் அமைக்கப் பட்டது. அதே காலத்தில் கொரியா வழியாக பவுத்த நெறி ஜப்பானில் பரவத் தொடங்கியது. 1192 இல் மினமோடோ யோரிசோமோ என்பவர் முதல் தளபதி வமிசத்தையும் ஆட்சியையும் உருவாக்கினார். ராணுவத்தின் தலைமைத் தளபதி தனது வமிச ஆட்சியை முதன் முதலில் உருவாக்கியதும் அப்போதுதான்.

1542 இல் போர்த்துகல் நாட்டுக் கப்பல் ஜப்பான் கடற்கரையை அடைந்தபோது அய்ரோப்பிய நாடுகளின் தொடர்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து போர்த்துகல் மற்றும் ஏனைய அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வணிகர்கள் வரத் தொடங்கினர். 1603 முதல் 1867 வரை ஆண்ட டோகுகோவா தளபதி வமிச ஆட்சியாளர்கள், டச்சு நாட்டவர் தவிர வேறு மேலை நாட்டார் யாரும் ஜப்பானில் வணிகம் செய்யக்கூடாது எனத் தடை செய்தார்.

1868 இல் மெய்ஜி பேரரசர் பதவிக்கு வந்ததும் தளபதி வமிச ஆட்சியை ஒழித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டை மேலை நாடுகளைப் போல நவீன மயமாக்கும் பணியில் ஈடுபட்டார். புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டது; நாடாளுமன்ற ஆட்சி முறை அமைக்கப்பட்டது. ராணுவம் அமைக்கப்பட்டது. வலுவுள்ள வாலிபர்கள் வலுக் கட்டாயமாகப் போர்ப்படையில் சேர்க்கப்பட்டனர். ஜப்பானின் எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் போர்கள் மூண்டன. 1894 இல் சீனாவுடன் போர் நடந்தது. பிறகு 1904 இல் ரஷ்யாவுடன் போர். இதன் விளைவாக 1910 இல் கொரியாவைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சீனாவில் இருக்கும் மஞ்சூரியாவை 1931 இல் ஜப்பான் சேர்த்துக் கொண்டது.

7-12-1941 இல் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியது. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் போர் ஏற்பட்டது. நடந்து கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஜப்பான்நாடு ஜெர்மனியுடன் சேர்ந்த அச்சு நாடாக இருந்தது. போரின் தாக்குதலினால் ஜப்பான் சரண் அடைந்தது. 1945 ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானின் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அமெரிக்கா அணுகுண்டு போட்டு நாசமாக்கியதன் விளைவு ஜப்பானின் சரண்.

1947ல் ஜப்பானில் புதிய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. போர் ஏற்படுத்திய பேரழிவில் இருந்து விடுபட்டுப் புதியதொரு ஜப்பானை உருவாக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் அமைந்தது. தொடர்ந்த ஆண்டுகள், எத்தகைய மலைப்பூட்டும் வளர்ச்சியை ஜப்பான் அடைந்துள்ளது என்பதை எண்பிக்கின்றன. இன்றைய நிலையில் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள இரண்டாம் நாடாக ஜப்பான் விளங்குவதே அந்நாட்டின் வளர்ச்சிக்குச் சான்று.

ஆசியாவின் கிழக்கே வடபசிபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் ஜப்பான் நாடு. இதன் பரப்பு 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 சதுர கி.மீ. பெரும்பாலும் கரடுமுரடான மலைகளும் எரிமலைகளும் நிரம்பிய நாடு. இதன் மக்கள் தொகை 12 கோடியே 75 லட்சம் ஆகும். ஷிண்டோ எனும் பாரம்பர்ய ஜப்பானியக் கொள்கைளையும் பவுத்த நெறியையும் பின்பற்றுவோர் 84 விழுக்காடு உள்ளனர். ஜப்பானிய மொழி பேசும் மக்களில் 99 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்.

குடிக்கோனாட்சி நடக்கும் இந்நாட்டில் பேரரசர் அகிஹிடோ நாட்டின் தலைவர். ஆட்சித் தலைவராகப் பிரதமர்இருக்கிறார். பேரரசர் ஜிம்மு என்பார் பொதுக்கணக்கு ஆண்டுக்கு 660 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய அரச வமிசத்தைக் குறிக்கும் வகையில் அதுதான் நாட்டின் விடுதலை நாள் என்கிறார்கள். டயட் என்கிற அவை, கொக்கய் எனும் மற்றொரு அவை ஆகியவை கொண்ட நாடாளு மன்றம். 247 இடங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் டயட் அவைக்கு நடக்கிறது.480 இடங்களைக் கொண்ட கொக்கய் அவைக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்.

ஜப்பான் நாட்டின் சிறப்பு, அங்கு பணி செய்யும் ரோபோக்கள். உலகில் உள்ள 7 லட்சத்து 20 ஆயிரம் ரோபோக்களில் ஜப்பானில் மட்டுமே 4 லட்சத்துப் பத்தாயிரம் ரோபோக்கள் உள்ளன. அப்படியும் 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர் என்பது வேடிக்கையான செய்தி.

--------------------"விடுதலை" 29-6-2009

திராவிட தேசியமே - தமிழ்த் தேசியம்தான்!


14.6.2009 விடுதலை இதழின் ஞாயிறு இணைப்பில் திருமிகு.திருமாவளவன் எம்.பி., அவர்கள் அளித்த பேட்டியை கண்ணுற்றேன். அதில் திராவிடத் தேசியம். தமிழ்த் தேசியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதல்ல என்ற சிறந்த கருத்தினைக் கூறியிருந்ததை வரவேற்கும் அதேவேளையில் இன்னும் தெளிவு பெறாதுள்ளவர்களுக்காக சில கருத்துகளை ஈண்டு எழுத முற்பட்டுள்ளேன்.

திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லின் திரிபுதான் என அறிஞர் பெருமக்கள் பலரின் கருத்தாகும். தமிழ் - தமிள் - த்ரமிள - திரவிட - திராவிட என்று ஆயிற்று என்பர். இன்றும்கூட ஆந்திரநாட்டு தெலுங்கு மொழி அறிஞர்கள் பலர் தமிழ்மொழியை திராவிட பாஷா என்றும் தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபோது அக்கல்லூரியின் தெலுங்குப் பேராசிரியராக இருந்தவரும், பிற்காலத்தில் ஆந்திர மாநில கல்வித்துறையின் இயக்குநராகப் பதவி வகித்தவருமான திரு.ஜோதி சோமயாஜிலு அவர்கள் எழுதிய திராவிட பாஷா சரித்திரமு என்கிற தெலுங்கு நூலில் மிகவும் தெளிவாகவே இதை வலியுறுத்துகிறார்.

1950க்கு முன்னர் சென்னை மாநிலத்தின் பள்ளி, கல்லூரிகளில் வைத்திருந்த வரலாற்றுப் பாடநூல்களில் திராவிடர் என்போர் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து தங்களின் கால்நடைகளை மேய்ப்பதற்காக வேண்டி கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியாவுக்கு வந்து தங்கிய ஆரியர்களுக்கும் - திராவிடர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாகத் திராவிடர்கள் வடஇந்தியாவை விட்டு விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள தென்னிந்தியாவுக்கு வந்து நிலைகொண்டனர் என்றும், அவர்கள் பேசிய மொழிதான் நாளடைவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, எனப்பிரிந்து தனித்தனி மொழிகளாக பேசப்பட்டு வருகிறது என்றும் வடஇந்தியப் பகுதியை ஆரியவர்த்தம் எனவும், தென்னிந்தியாவை திராவிடதேசம் எனவும் குறிப்பிட்டு வந்துள்ளனர் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வரலாற்று உண்மையானது திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிய திராவிட இயக்கத்திற்கு வலிவு சேர்த்துவிடும் என்ற அச்சம் காரணமாக அன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு, ஒருசில வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள் என்ற மேற்கோள் காட்டி திராவிடர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் என ஒருசில வரலாற்று ஆசிரியர்களும், இல்லை இல்லை திராவிடர்களும் ஆரியர் வருகைக்கு முன்னர் ஆப்பிரிக்கா மத்தியதரைக்கடல் பகுதிகளிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும் ஆரியர் இந்தியாவில் குடியேறுவதற்கு முன்னரே திராவிடர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று மட்டும் தெளிவாகிறது என்ற பைசல் முறை கருத்தைப் புகுத்திப் பார்த்தும் திருப்திப்படாமல் வரலாற்றுப் பாடம், - வரலாற்று விருப்பப் பாடம் என்பதை எல்லாம் கைவிட்டு சமூகப் பாடம் (social studies) எனும் அறிவியல்முறை பாடத்திட்டத்தை நிறைவேற்றினார்கள்.

அத்தகு பாடத் திட்டமேதான் இன்றளவும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

1950க்கு முன்னர் தனியே வரலாற்றுப் பாடங்கள் படித்த இன்று 70--, 80 வயது நிறைந்தவர்களாக உள்ள முதியவர்களில் பெரும்பாலோர் திராவிட சிந்தனையில் ஊறித் திளைத்தவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இவைகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அத்தகையவர்கள் தென்னிந்தியா முழுமையிலும் இருந்த காரணத்தால்தான் தவிர்க்க முடியாமல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்தபோதும், இணக்கமான முறையில், நட்பான முறையில் பிரிந்து செல்ல முற்பட்டனர். அப்போது எழுப்பிய மதராஸ் மனதே என்ற கோஷம்கூட பிசுபிசுத்து போனமைக்கும் திராவிடச் சிந்தனையே காரணம் எனக் கூறலாம்.

திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை இதர மொழி மாநிலங்களில் ஏற்படுத்த முடியவில்லை. மொழிப்பற்று மேலோங்கிவிட்ட காரணத்தால் இனப்பற்று குறைந்துபோனது மட்டுமல்ல. தனிஇனம் என்று நினைக்கும் அளவுக்குகூட சென்றுள்ளது என்பதையும் மறுக்கவில்லை. இதை மாற்ற எடுத்த பலரின் முயற்சிகள் போதிய பலன் அளிக்கத் தவறிவிட்டன.

ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் திராவிடப் பல்கலைக்கழகம், கேரளாவில் திராவிட மொழி ஆய்வு மய்யம் இவைகள் எல்லாம் ஏற்படுத்தியும்கூட எதிர்பார்த்த பலனைத்தர தவறிவிட்டது எனலாம். ஆராய்ச்சிவாதப் பிரதிவாதங்களில் திராவிட தேசியத்தை ஏற்றுக் கொண்டாலும்கூட மொழிப்பற்று மேலோங்கி விட்ட காரணத்தால் போதிய வலிவினைப் பெறாது உள்ளது.

இவற்றை எல்லாவற்றையும்விட, ஆந்திர, கர்நாடக, கேரள தேசத்திலே தற்போது வாழும் தலைமுறையினர் தங்கள் மொழியானது தமிழிலிருந்து பிரிந்து வந்தது என்கிற உண்மையை ஒத்துக்கொள்ள விருப்பம் இல்லாதிருப்பதும், தமிழுக்குத் தாய் அந்தஸ்தும் தங்கள் மொழிக்கு சேய் அந்தஸ்தும் கிடைத்துவிடுமே என்ற உள்ளுணர்வு தடுப்பதாலும் அப்படி ஒத்துக் கொள்வதானது தங்கள் மொழிக்கு இழுக்கு செய்வதாக ஆகிவிடுமோ என்ற அச்சம்கூட ஒரு காரணம்தான். அதனால்தான் திராவிட இனம் என்று அடையாளப்படுத்திக் கொள்ள தயக்கம் கொண்டுள்ளனர்.

அண்மையில் சென்னைப் பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசிய மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் கூறிய மகத்தான கருத்தினை ஈண்டுகுறிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தென்னிந்தியா முழுமையும் பரவி இருந்த திராவிடர்கள் அதாவது தமிழர்கள் அந்தந்தப் பகுதியில் பேசிய வட்டாரத் தமிழே உருமாறி, சிதைந்து, வடமொழியை ஏற்றுக்கொண்ட காரணத்தால் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் எனும் மொழிகளாக மாறியது மட்டுமல்ல தனி அடையாளமும் படுத்திக் கொண்டது. அந்த மொழியிலுள்ள வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மீதம் இருப்பது தமிழாகவும், தமிழின் திரிபாகவும் அல்லது வழக்கொழிந்த தமிழ்ச் சொல்லாகவுமே இருக்கும் என்பது உண்மை

மறைந்த குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் தெலுங்கு உரைகள் - _ எழுதிய தெலுங்கு நூல்கள் எல்லாம் அச்ச தெலுகு மொழியில் உள்ளவை. அச்ச தெலுகு என்பது வேறெதுவுமில்லை. தூய தமிழ்ச் சொற்களின் தாக்கம்தான். எனவே, திராவிட தேசியம் என்றாலும், தமிழ் தேசியம் என்றாலும் எல்லாம் ஒன்றுதான் என்று துணிந்து கூறலாம். தமிழ் என்று கூறும்போது ஆரிய ஊடுருவலுக்கு வாய்ப்பு உண்டு என்பதை எச்சரிக்கையுடன் கவனிக்கத் தவறக்கூடாது.

--------------------வேலை.பொற்கோவன் அவர்கள் 27-6-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

கடவுள்களின் வாகனங்கள் பற்றி ஒரு அலசல்


பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை

பார்வதி: எனது பிராணநாதனாகிய ஓ, சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே; அது எதற்காக நாதா?

பரமசிவன்: கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்திலடித்துக் கொள்ளுகிறார்கள்.

பார்: ஓஹோ அப்படியா சங்கதி! சரி, அப்படி-யானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஓட ஓட அடிக்கிறார்கள்; செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள்; அடித்துக்கூட தின்று விடுகிறார்களே, அது ஏன்?

பரம
: நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை; நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.

பார்: அதுதான் போகட்டும்; நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால் ஏன் கன்னங் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்? அய்யோ பாவம்!

பரம: கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால், கணபதிக்கு அபிஷேகம் செய்வார்கள். அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றி கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம் பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே! இந்த வெட்கக் கேட்டை யாரிடம் சொல்லுவது!

பார்: அதுதான் போகட்டும்; தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு! சோடு! என்று விரட்டுகின்றார்களே, அது என்ன காரணம் நாதா?

பரம: கண்மணி, அதுவும் பக்தர்களில் அறியாத்தனம்தான்; ஆனாலும், அது மலம் சாப்பிடுகின்றதல்லவா! அதனால் அதன்மீது சிலர் அசுசியப்படுகின்றார்கள்போல் இருக்கின்றது.

பார்: என்ன நாதா, பைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால், மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்துகளையெல்லாம் சாப்பிடுகிறதே; அதையெல்லாம் அந்த பக்தர்கள் மன்னிக்கும்போது, மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக் கூடாது? அதுதான் போகட்-டும். நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொள்வதில்லை? அன்றியும், ஆட்டைக் கண்டால் அடித்துத் தின்று விடுகிறார்களே! அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத் தின்றுவிடுகிறார்கள்! இது என்ன அநியாயம்!

பரம: அது அந்த பக்தர்களின் பக்திக் குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்?

பார்: நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் வெட்கக் கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கவுரவமும் அவர் பக்தர்களுக்கு மாத்திரம் இவ்வளவு பக்தியும் இருப்பதும், நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும் நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக் குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே; தவிர, விஷ்ணுவின் பெண் ஜாதியான மகாலட்சுமி கூட இதனாலேயே அடிக்கடி என்னைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றாள். தவிர, நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல் நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இப்பதோடல்லாமல் விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொண்டு மரியாதைசெய்கிறார்களே, இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள்.

பரம: என்ன செய்யலாம் சகி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்து விட்டான். விதியாரைவிட்டது, சொல் பார்ப்போம்! என் கண்மணி, நீ இதற்காக அழ வேண்டாம்; உன்னைப் பார்த்தால் எனக்கும் அழுகை வருகிறது.

பார்: சரி, சரி, இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும். இனி நீங்கள் வேறா அழுக வேண்டும்! போனால் போகட்டும். இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிரம்மாவை பேசிக் கொள்ளலாம். வாருங்கள் நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்.

---------------சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது, "குடிஅரசு" 17.6.1928

உலக நாடுகள் - தூரப்பார்வை - இஸ்ரேல்
இஸ்ரேல்

ஆரியப் பார்ப்பனர்களைப் போலவே நாடற்ற இனம் யூத இனம். பைபிள் கதைகளின் படி எகிப்தில் இருந்த இவர்கள், பாரோ மன்னனால் கொல்லப்பட இருந்தார்கள். அவர்களைத் தப்புவிக்க மோசே முயற்சி செய்து காப்பாற்றினார் என பலவித மூட நம்பிக்கைகளுடன் கதை நீளும்.

இவர்களுக்கென்று ஒரு நாடு தரப்பட வேண்டும் என்று 1896இல் பத்திரிகையாளர் தியோடர் ஹெர்கல் என்பார் எழுதினார். 1903இல் இன்றைய இசுரேலியப் பகுதிகளில்; 25 ஆயிரம் யூதர்கள் திரண்டனர். அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 40 ஆயிரம் யூதர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். துருக்கியின் ஒட்டோமான் பேரரசைச் சார்ந்த அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே 5 லட்சம் அரபியர்கள் வாழ்ந்து வந்தனர்.

1917இல் யூதர்களுக்கென பாலஸ்தீன நாடு அமைக்கப்படும் எனும் உறுதி மொழியை இங்கிலாந்து அயலுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் போல்போர் வழங்கினார். யூதர்களின் தலைவராக விளங்கிய பாரன் ரோத்ஸ்சைல்டு என்பாருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் 1939 இல் இம்முடிவு மாற்றிக் கொள்ளப் பட்டது. வந்தேறுபவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் எண்ணிக்கைக்குள் இருக்க வேண்டும் எனவும் எனவே 1944 க்குப் பிறகு இனிமேல் யாரும் குடியேறக்கூடாது எனவும் கூறப்பட்டது. இதை யூதர்கள் கண்டனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கில் யூதர்கள் பாலஸ்தீனத்துக்குள் நுழைந்து குடியேறிவிட்டனர்.

14-.5-.1948இல் இசுரேல் நாடு என்பதை யூதர்களே டெல் அவிவ் நகரில் அறிவித்துக் கொண்டனர். மறு நாளே எகிப்து, ஜோர்டான், ஈராக், லெபனான், சிரியா ஆகிய 5 அரபு நாடுகளின் படைகள் இசுரேலைத் தாக்கின. ஆனாலும் வெற்றி பெறவில்லை. அதன்பின் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இசுரேல் நாட்டின் எல்லை வரையறுக்கப்பட்டது. அது ஏறத்தாழ பிரிட்டன் நாடு குறிப்பிட்ட பாலஸ்தீனப் பகுதியளவுக்கு இருந்தது. எனினும் காஜா எல்லைப் பகுதியை எகிப்து தன் வசமே வைத்துக் கொண்டது. கிழக்கு ஜெருசலப் பகுதியை ஜோர்டான் தக்க வைத்துக் கொண்டது; தற்போதைய அப்பகுதி மேற்குக்கரை எனப்படுகிறது.

1956இல் இசுரேல், சினாய் தீபகற்பத்தின் மீது படையெடுத்தது. காஜா பகுதியை 5 நாள்களில் மீட்டு எடுத்துக் கொண்டது.அத்துடன் ராஃபா, அர்அரிஷ் ஆகிய பகுதிகளும் இசுரேல் வசம் வந்தன. சூயஸ் கால்வாய்க்குக் கிழக்கே உள்ள தீப-கற்பத்தின் பெரும் பகுதியை இசுரேல் ஆக்ரமித்துக் கொண்டதுடன், ஆயிரக்கணக்கானவர்களைச் சிறைப் பிடித்தனர்.

1964இல் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் (PLO) என்கிற அமைப்பினைத் தொடங்க எல்லா அரபு நாடுகளும் முடிவு செய்தன. அந்த இயக்கத்தின் சார்பாக பாலஸ்தீன விடுதலைப் படை (றிலிகி) ஒன்றும் 1968இல் அமைக்கப்பட்டது.

1967இல் கனன்றுகொண்டிருந்த பகைநெருப்பு வெடித்தது. இசுரேலுக்கும் பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகளுக்கும் போர் மூண்டது. 5-.6.-1967இல் தொடங்கி 11.-6.-1967இல் முடிந்த இந்தப் போரில் எகிப்திடமிருந்து சினாய் பகுதியையும், சிரியாவிடம் இருந்து கோலான் உச்சிகளையும் இசுரேல் கைப்பற்றியது; ஜோர்டான் வசமிருந்த மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகளிலிருந்து அந்நாட்டுப் படைகளைத் துரத்தியது. தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எகிப்திய போர் வானூர்தியை இசுரேல் போரின் முதல் நாளிலேயே தாக்கி அழித்துவிட்டது.

யூதர்களின் புனித நாள் எனக் கூறப்படும் யோம் கிப்புர் நாளான 1973 அக்டோபர் 6இல் எகிப்தும் சிரியாவும் இசுரேலைத் தாக்கின. போருக்குப் பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாடுகள் நவம்பர் மாதத்தில் ஏற்றுக் கொண்டன. உடன்படிக்கை 18-1-1974இல் கையெழுத்தானது.

1970களில் உலகெங்கும் யூதர்களைக் குறி வைத்து பாலஸ்தீனியர்கள் தாக்கினர். மூனிச் நகரில் 1972 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது நடத்தப் பட்டதுதான் மிகவும்-மோசமான தாக்குதல்.இதில் 11 இசுரேல் நாட்டு விளையாட்டு வீரர்கள் இறந்து பட்டனர்.

உலகெங்கும் தேடப்பட்டு வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்1974 இல் அய்.நா. மன்றத்தில் திடீர் எனத் தோன்றினார்.

1977இல் இசுரேல் நாட்டுக்குப் பறந்து சென்ற எகிப்து அதிபர் அன்வர் சதத் இசுரேல் நாட்டு நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 1978இல் இசுரேலும் எகிப்தும் கேம்ப் டேவிட் எனுமிடத்தில் கூடிப் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சம்பவமும் நடந்தது. இவையெல்லாம் அரபு நாடுகள் எகிப்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலையை உருவாக்கின. அமைதிப் பேச்சுக்கு எதிர்ப்பானவர்கள் 1981இல் எகிப்து அதிபர் அன்வர் சதத்தைக் கொன்றுவிட்டனர்.

இசுரேலில் 1992 ஜூன் மாதத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இடதுசாரிக் கொள்கை உடைய தொழிலாளர் கட்சியின் ஆட்சி அமைந்தது. பிரதமராக யிட்ஜெக் ராபின் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் காலத்தில் அமெரிக்க வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் ராபினும் யாசர் அராபத்தும் சந்தித்துப் பேசி இரு நாடுகளுக்குமான கொள்கைப் பிரகடனத்தை இறுதி செய்து வெளியிட்டனர்.இதன் விளைவு 1994 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபர் பரிசு யாசர் அராபத், யிட்ஜெக் ராபின் மற்றும் ஷிமொன் பெரஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு 24-.9.-1995இல் இரண்டாம் ஆஸ்லோ உடன்படிக்கை இசுரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் ஏற்பட்டது. எகிப்தில் கையெழுத்தான இந்த உடன்படிக்கையின்படி, மேற்குக் கரைப் பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனத்திற்கு ஒரு பகுதி, பாலஸ்தீன இசுரேலிய நாட்டுப் பொறுப்பில் ஒரு பகுதி, இசுரேலுக்கு ஒரு பகுதி என்றானது. இதனை ஏற்காத யூதர்கள் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி இசுரேல் பிரதமரைக் கொலை செய்தனர். அமைதிப் பேரணியில் இந்த அக்கிரமத்தைச் செய்தவர் மதத் தீவிரவாதிகள்.

இசுரேலின் அடுத்த பிரதமராக ஷிமோன் பெரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் 1996 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அமைதிப் பேச்சுகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த பிளைமின் நடான் யாஹூ என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் அடுத்த தேர்தலில் தோற்றுப் போனார். அவருக்கடுத்து வந்த பிரதமர் எகுத் பாரக் ஓராண்டில் பிரச்-சினைகளைத் தீர்ப்பதாக உறுதி கூறிப் பதவிக்கு வந்தார். ஆனால் அவருடைய பதவிக் காலத்தில், நாடெங்கும் வன்முறைகள் நடந்து அமைதிச் சூழ்நிலையைக் குலைத்தன. இறுதியில் 2001 இல் அவர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அவருக்குப் பின் ஏரியல் ஷாரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் வந்தாலும் மதவெறிக்கு ஆட்பட்ட யூதர்கள் அமைதிப் பேச்சுக்குத் தயாராக இல்லாத நிலைதான் இசுரேலில்!

எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையில் 20 ஆயிரத்து 770 சதுர கி.மீ. பரப்பில் அமைந்த இந்நாட்டின் மக்கள் தொகை 64 லட்சமாகும். இவர்களில் 77 விழுக்காட்டினர் யூத மதத்தினர். 16 விழுக்காட்டினர் இசுலாமிய சன்னி பிரிவைச் சேர்ந்தோர். கிறித்துவர்கள் மீதிப் பேர். யூத மொழியான ஹீப்ரு மொழிதான் ஆட்சி மொழி. அரபி, ஆங்கிலம் பேச்சு மொழிகள்.

96 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரிந்தோர். 21 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். 9 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதவர்கள்.

அதிபரும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்தும் பொறுப்பில் உள்ளனர். நாடற்ற யூத இனம் நாடு ஒன்றில் குடியேறி அரபு நாடுகளிடையே அமைதிக்குப் பங்கம் விளைவித்துக் கொண்டிருக்கிறது

---------------------நன்றி:-"விடுதலை" 28-6-2009

28.6.09

எந்தப் பார்ப்பனர்களிடமும் குரோதமோ, வெறுப்போ கிடையாது!


நமது பத்திரிக்கை

நமது குடிஅரசு ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருடத்தில் முதல் இதழ் இன்று வெளியாகிறது. குடிஅரசு ஆரம்ப இதழில் குடிஅரசு என்று ஒரு தலையங்கமும், ஆறுமாதம் கழித்து நமது பத்திரிகை என்று ஒரு தலையங்கமும், ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில், நமது பத்திரிகை என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம்.

இப்போது இரண்டு வருஷம் முடிந்து, மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே நமது பத்திரிகை என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம்.

நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோரத்துவத்தையும் உண்டாக்க குடிஅரசு என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல்முதல் நானும் எனது நண்பர் சிறீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922 இல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம்.

அது போலவே, வெளியில் வந்த கொஞ்ச நாட்களுக்குள், குடிஅரசு என்று ஒரு வாரப் பத்திரிகையும், கொங்கு நாடு என்று ஒரு மாதாந்திரமும் நடத்தப் போவதாய் 19-.1.-1923 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

இவ்விஷயத்தை முதலில் சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையைக் கேட்டவுடன் சந்தோஷப்பட்டு, இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான்; அதற்கு நீயே சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால், அதிக நாள் நிலைக்காது; ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும் நடந்தவரை லாபம்; நடத்துங்கள் என்றார்.


பிறகு சிறீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்புவதாகவும், வெளியாகத் தாமதமேற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும்படியும் சொன்னார்.

பிறகு சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர், இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும், மகாத்மா ஜெயிலில் இருக்கும் போது இதை விட்டு விட்டு நீ பத்திரிகை நடத்தப்போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. ஆனதால், கண்டிப்பாய்ப் போகக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதன் பேரில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிட்டு, மறுபடியும் ஒத்துழையாமைக்காகவே உழைத்தேன். தற்செயலாய் வைக்கம் சத்தியாக்கிரகம் ஏற்பட்டது. சிறீமான் ஜார்ஜ் ஜோசப் அவர்களும் வைக்கத்திலிருந்து, என்னைப் பிடிக்கப் போகிறார்கள்; நான் இதோ ஜெயிலுக்குப் போகிறேன்; வேறு யாரும் இல்லை; நீ வந்து ஒப்புக் கொள் என்று எழுதின கடிதமும், தந்தியும் என்னைக் குடும்பத்துடன் வைக்கத்திற்குப் போகும்படி செய்து விட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும் போது இதே எண்ணந்தான். அதாவது, வெளியில் போனதும் பத்திரிகை நடத்தவேண்டும் என்கிற ஆவல் அதிகமாயிற்று. அது போலவே,-வெளியில் வந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்துவிட்டேன். அதற்கேற்றாற்போல் திருப்பாப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகளும் கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அவர்களை இங்கு அழைத்து அவர்களைக் கொண்டே ஆரம்ப விழா நடத்திவிடலாம் என நினைத்து, கோயம்புத்தூர் சென்று அழைத்ததும் யாதொரு ஆட்சேபணையும் சொல்லாமல் அவர்கள் ஒப்புக் கொண்டு, ஈரோட்டிற்கு வந்து, ஆரம்ப விழா நடத்திக் கொடுத்தார்கள். அது சமயம் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி ஞானியார் சுவாமிகளைக் கேட்டுக் கொண்டபோது, நான்,
அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும் அவைகள் தங்கள் மனச்சாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப் பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்றப் பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதை தைரியமாய், பொதுமக்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது எமது நோக்கம் என்று சொல்லி இருக்கிறேன்.


ஞானியார் சுவாமிகளும் பத்திரிகாலயத்தைத் திறக்கும்போது,
நமது நாட்டில் பல பத்திரிகைகள் இருந்தும் இப் பத்திரிகை போன்ற கருத்துடைய பத்திரிக்கை வேறொன்றுமில்லை. இன்று உயர்வு- தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடிஅரசின் கருத்து இதுவே என நான் அறிந்துகொண்டேன். சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்டும். இவை குடிஅரசுவின் முதல் கொள்கையாய் விளங்கவேண்டும். இப்பத்திரிகையில் சிறீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு என்று ஆசீர்வதித்து இருக்கிறார்.

முதல் இதழ் தலையங்கத்திலும், நமது நோக்கத்தை வெளியிட்ட தலையங்கத்திலும் நாம் குறிப்பிட்டிருப்பதாவது: ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து வெறும் தேசம் தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்... இன்னோரன்ன பிற நற்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவது நமது நோக்கமாகும் எவர் எனக்கு இனியர்; எவர் எனக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்பின்றி, நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்றிடித்தற் பொருட்டு என்ற வாக்கைக் கடைப்பிடித்து, நண்பரேயாயினும் ஆகுக, அவர் தம் சொல்லும் செயலும் கேடுசூழ்வதாயின் அஞ்சாது கண்டித் தொதுக்கப்படும் என்று எழுதி இருக்கிறோம். இவை யாவும் 2.-5.-1925 தேதி குடிஅரசுவில் காணலாம்.

அடுத்தபடி, ஆறு மாதம் முடிந்த இதழில், நமது பத்திரிகை என்னும் தலையங்கத்திலும் குடிஅரசு குறிப்பிட்ட கருத்தைப் பிரச்சாரம் செய்யும் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால் . . . பிரதி வாரமும் குடிஅரசு தனது ஆத்மாவை வெளிப்படுத்தும் (தத்துவத்தை விளக்கும்) போது கண்ணீர் கொட்டாமலிருக்க முடிவதே இல்லை. இதன் பலனால், உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்வோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர் என்று சொல்வோராகிய பல ராஜதந்திரி-களுக்கும் விரோதியாகவும், அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் நமது குடிஅரசு ஆளாக வேண்டி இருப்பதால் இது சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் பெறமுடியாமலிருப்பது ஆச்சரியம் அல்ல என்றார்.

உண்மையில் குடிஅரசுக்கு எந்தப் பிராமணனிடத்தும் குரோதமோ, வெறுப்போ கிடையாது; ஆனால் பிராமணன் உயர்ந்தவன் என்றும், மற்றவர்கள் தீண்டாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்பன போன்ற இழிவான மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும்; தங்கள் வகுப்பார்தான் முன்னணியில் இருக்க வேண்டும், மேன்மையுடன் பிழைக்கவேண்டும், மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளிடத்திலும் தான் குடிஅரசு க்குக் குரோதமும் வெறுப்பும் இருப்பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு உழைத்து வருகிறது என்றும்;

குடிஅரசு ஏற்பட்டு, ஆறு மாதகாலமாகியும் இதுவரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள்; அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லை-யென்றும், பாமர ஜனங்கள் சரியானபடி குடிஅரசை ஆதரிக்க வில்லையானால், அது தானாகவே மறைந்து போக வேண்டியதுதான். அதன் கடமையேஅல்லாமல், வியாபார தோர-ணையாய் நடந்து வராது என்றும் எழுதியி-ருந்தது. இதை 1-.11.-1925 இதழில் பார்க்கலாம்.

பிறகு ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்ப இதழில், நமது பத்திரிகை என்ற தலையங்கத்திலும், இதுவரை நமக்குள்ள 2000 சந்தா தாரர்களில் நால்வர் அதிருப்திக்கே ஆளாகிறோம் என்று எழுதிவிட்டு, குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய், உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால் அதுதானே மறைந்துவிடுமே யல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப் போல வாழாது. குடிஅரசு தோன்றிய பிறகு, அதனால் ராஜீய உலகத்திலும், சமூக உலகத்திலும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்று பலர் நமக்கு எழுதி இருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம் என்றும் எழுதி இருக்கிறோம்.

ஆகவே, இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருட ஆரம்ப இதழில் அதே தலையங்கத்துடன் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். முதலாவதாக, ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதாவது, குடிஅரசுக்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒரு வருஷத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும், இப்போது இரண்டு வருஷத்தில் நாலாயிருத்து அய்ந்நூறு சந்தாதாரர்களும் இருப்பதால், கூடுமான வரையில் தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்று இருக்கிறது என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆரம்பத்திலிருந்து இதுவரை, முன்னால் குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக் கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்-டோம். ஆகவே குடிஅரசு குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும், இந்நாலாயிரத்து அய்ந்நூற்றைக் கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை. அன்றியும் எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும் ஊர்கள் தோறும் குடிஅரசின் வளர்ச்சியையும், பரவுதலையும் எம்மை விட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் எமக்குத் தெரியும். அவர்கள் குடிஅரசு கொள்கைகளைப் பரப்பப் பாடுபட்டதற்கும் நான் மனப்பூர்வமாய் நன்றி செலுத்துகிறேன். குடிஅரசுக்கு இரண்டாவது வருஷத்தில் நஷ்டமில்லை; முதல் வருஷத்தின் நஷ்டம் அடைபடவேண்டும். ஆனால், இன்னமும் கொஞ்சம் நல்ல இதழில் இன்னும் நாலு பக்கம் அதிகப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் இருந்து வருகிறது. இக் காரியங்களுக்கு, இப்போது ஆகும் செலவை விட இன்னமும் வருஷம் ஒன்றுக்கு ரூ.2000 அதிகமாகச் செலவு பிடிக்கும். இனியும் கொஞ்சம் சந்தாதாரர்கள் அதிகமானால் இவைகளைச் செய்ய சவுகரியமாய் இருக்கும்.

இவ்வருடம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் அதிகமாய் இல்லை என்றே நினைக்கிறேன். பொதுவாக, நமது பிரசங்கத்தினாலும், குடிஅரசு வினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன்; அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன்; மதம் என்-பதைக் கண்டித்தேன்; மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன்; மதச் சடங்கு என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; சாமி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்கிறேன்; சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; புராணம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; பார்ப்பனீயம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; நியாயாதிபதி என்-பவர்களைக் கண்டித்திருக்கிறேன்; நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; பிரதிநிதிகள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன் தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; கல்வி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சுயராஜ்யம் என்பதைக் கண்டித்-திருக்கிறேன். சிறீமான்கள் கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கிறேன்.

இன்னும் என்னென்னவற்றையோ, யார்யாரையோ கண்டித்திருக்கிறேன்; கோபம் வரும்படி வைதுமிருக்கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன், எதைக் கண்டிக்கவில்லை, யாரை வையவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும் , பேசலாம் என்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும், வையவும்,துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத் தகாத, வையத் தகாத இயக்கமோ, திட்டமோ அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது.

இவைகளன்றி,எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் சேதத் துரோக-மென்றும், வகுப்பு துவேஷமென்றும், பிராமண துவேஷம் என்றும் மான நஷ்டமென்றும், அவதூறு என்றும், ராஜ துரோகமென்றும், ராஜ துவேஷமென்றும், நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேசபக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்யவேண்டும்? சிலருக்காவது மனவருத்தத்தையும் அதிருப்தியையும் கொடுக்கத் தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பது உண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும். நாம் ஏன் இக்கவலையும் இவ்வளவு தொல்லையும் அடையவேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா?இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல் இருக்கிறது என்பதாகக் கருதி, விலகி விடலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுள்காலமும் தீர்ந்து விட்டது. இனி நாலோ, அய்ந்தோ அல்லது அதிகமிருந்தால் பத்து வயது காலமோ இருக்கலாம். இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நமது மனச்சாட்சிக்கு விட்டுவிடக்கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்ப-தாகக் கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை.

உண்மையில், நாம் முன் சொன்ன அரசியல், மத விஷயம் முதலியவைகளைக் கண்டிக்க நேரிட்டபோது உண்மையானஅரசியல், மத இயல் இவைகளை நாம் கண்டிக்கவே இல்லை. எதைப் பார்த்தாலும் புரட்டும், பித்தலாட்டமும், பெயரைப் பார்த்து ஏமாறத் தகுந்த தாயிருக்கிறதேயல்லாமல் - தத்துவங்கள் எல்லாம் நமக்கும் நமது நாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும், கொஞ்சம் கூட ரிப்பேர் செய்வதற்கில்லாமல் அடியோடு-அழித்து மறுபடியும் புதிதாய் உண்டாக்க வேண்டியதாகவே இருக்கிறது. நமது காலத்தில் இவை திருத்தப்பாடடையும் என்கிற நம்பிக்கை கொஞ்சமும் இல்லாவிட்டாலும், வேறு யாராவது மகாத்மாவைப் போன்ற மகான்கள் வந்தால் அவர்களுக்குப் பக்குவம் செய்து வைத்திருக்கக்கூடாதா? என்றும், அதுவும் முடியாவிட்டால் பலன் எப்படியானாலும் கடமையைச் செய்ய வேண்டியதுதானே என்கிற முடிவும் கிடைக்கிறது. ஆகவே, இக்கஷ்ட மானதும், மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடியதுமான இக்காரியத்தில் இறங்கிவிட்டோம். உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி, தள்ளிவிட்டாலும் சரி நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நமது கடமையை எப்படி நாம் பிரதானமாய்க் கருதி இருக்கிறோமோ, அது போலவே பொது ஜனங்களும் அதாவது இக்கடமையை சரி என்று எண்ணியவர்கள் தங்கள் தங்களது கடமையையும் எண்ணி அக்கடமையைச் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்.


--------------------தந்தைபெரியார் - "குடிஅரசு",தலையங்கம், 1.5.1927

திராவிடர் இயக்க வாழும் வீராங்கனை - திருமகள் இறையன்
பொதுவாகப் பெண்கள் சிறுவயதிலேயே சிந்திக்கும் திறமையை இயற்கையாகவே பெற்றிருக்கிறார்கள். பகுத்தறிவுச் சிந்தனையும் அவர்களுக்கு இருந்தாலும் பெற்றோர், சுற்றுச்சூழல் இவைகளால் வளர வளர எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாமல், செயல்பட இயலாமல் அழுத்தி வைக்கப்பட்டு விடுகின்றனர். இவைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவது மிகச்சிலரால் மட்டுமே முடிகின்றது. அப்படி வெற்றிபெற்ற வீராங்கனைகளில் ஒருவர்தான் திருமகள் இறையன் அவர்கள்.

பிறந்த இடம்: பழனி (தாத்தா வீடு) பிறந்த தேதி: 4.7.1939 தாய் தந்தை: சாமிநாதன், பொன்னுத்தாய் கல்வி: எஸ்.எஸ்.எல்.சி., ஆசிரியர் பயிற்சி இவர்கள் வளர்ந்தது பரமக்-குடியில் 16 ஆண்டுகள். இவருடைய தந்தை உணவு விடுதி நடத்தி வந்தார். தன்னுடைய 7ஆம் வயதில் தங்கள் உணவு விடுதியில் பள்ளர் ஜாதியைச் சார்ந்தவரை உணவருந்த அனுமதிக்காதது இவருடைய உள்ளத்தில் ஜாதிபற்றிய தாக்கம் மிக அழுத்தமாகவே பதிந்துவிட்டது.

அது மட்டுமல்ல. பெண்கள் படிக்கக்கூடாது என்று மூன்றுமுறை கல்விகற்க மறுப்பு தெரிவித்த தந்தையை எதிர்த்து, உண்ணாவிரதம் இருந்து தொடர்ந்து பள்ளி செல்வதற்கு அனுமதி பெற்று வெற்றி பெற்றார்.

10ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்துவிட்டார். இவருடைய மாமா ஆர்.ஏ.பி.சிவம் ஆசிரியர் கந்தசாமியின் நெருங்கிய நண்பர். அந்நாளில் தி.மு.க. செயலாளர் பரமசிவம் தந்த புத்தகத்தை ஆசிரியர் கந்தசாமியிடம் தரும்போது தமிழாசிரியராக நகைச்சுவையுடன் பாடம் நடத்தியது இவரின் உள்ளத்தில் ஓர் ஈர்ப்பு உணர்வு ஏற்படச் செய்தது. இவரைச் சந்தித்தது அக்டோபர் மாதம் 1954ஆம் ஆண்டு. இவருடைய நெருங்கிய தோழி சுலோச்சனா. இருவரும் வகுப்புத்தோழிகள். ஆசிரியர் கந்தசாமிக்கும் வேண்டிய தோழியாக இருந்தார்.

தந்தை இறந்தபின் மதுரையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளியில் பயிற்சி முடித்ததும் கடைசியாகக் கட்டவேண்டிய பணம் கட்டுவதற்கு உதவியில்லாததால் மிகுந்த சிரமத்திற்கிடையில் ஆசிரியர் கந்தசாமி அந்தப் பணத்தைக் கட்டி ரிலிவிங் சர்டிபிகேட் வாங்குவதற்கு உதவி புரிந்தார்.

சிறு வயதிலேயே ஜாதிபற்றிய சீர்கேடுகள் உள்ளத்தைத் தாக்கி இருந்ததாலும், தன்இன ஆண்கள் 2, 3 மனைவியர்களைத் திருமணம் செய்துகொள்ளும் ஒழுக்கமற்ற முறையை இவர் விரும்பாததாலும் தன் இனத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. மேலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்வதே குற்றம் என்ற கட்டுப்பாட்டு முறையையும் அறவே வெறுத்தார். அந்த நாளைய ஜாதிக்கலவரம், இமானுவேல் தாக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், தன் மாமாவின் காதல் ஜாதி காரணத்தால் தடைப்பட்டுப் போனதும் இவர் உள்ளத்தை மிகவும் பாதித்தன.

அதனால் தன் ஜாதியில் திருமணம் செய்ய விரும்பாததால் உதவிபுரியும் மனப்பான்மையும், பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்ட ஆசிரியர் கந்தசாமியை (இறையனார்) 3.10.1959ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி(கிறிஸ்துவ)யில் படிக்கும்போது அந்த மதத்திலும் ஜாதி வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்து மதங்களையே வெறுத்தார்.

திருமணமான பிறகு அன்னை மணியம்மையார் சந்தித்த அவலங்-கள், அவதூறுச் சொற்கள் அனைத்தும் இவர்களும் பிறரால் கேட்கும் நிலை ஏற்பட்டது. உதாரணமாக, தெருவில் செல்லும்போது அதோ தேவடியா, அவுசாரி போகிறாள் என்று பெண்களே தூற்றினர். அவைகளை இவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அருப்புக்கோட்டையில் முதல் பெண் குழந்தை பண்பொளி பிறந்தது. அதிலும் கைராசியில்லாத டாக்டர் சதாசிவம் என்று பெயரெடுத்தவரிடம் வெற்றிகரமாக குழந்தைப் பேறு நடந்து, மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டது.

1959 செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் பிறந்த நாளுக்குப் பரிசாக 16 ரூபாயில் முதல்முதலாக சேலை எடுத்துத் தந்தார் இறையனார் என்பது இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது என்று பெருமையுடன் கூறும் இவர் தீபாவளிப் பண்டிகைக்கு அக்கம் பக்கத்தினர் தரும் பலகாரங்கள்கூட அந்த மூடநம்பிக்கையை நாம் ஏற்றுக்கொள்வதாக ஆகாதா என்று கணவரிடம் விவாதம் செய்து வெற்றி பெற்றதையும் மறக்கவில்லை. இரண்டாவது குழந்தை இசையின்பன்: 10.6.1962இல். மூன்றாவது குழந்தை இறைவி: 24.8.1964இல். நான்காவது குழந்தை மாட்சி: 22.2.1966லும் பிறந்தனர்.

ஆசிரியர் பணியில் 60லிருந்து 1997 வரை பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பார்வதி அவர்கள் மகளிரணி பொறுப்பில் இருந்தபோது பணியாற்றிக் கொண்டே விடுமுறை நாள்களிலும், மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு இயக்கப் பணிகள், சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்டார்.

திருப்பூரில் பணியாற்றியபோதும், எந்த ஊருக்கு மாற்றலானாலும் அங்கு இயக்கப் பணிகள் முழு ஈடுபாட்டுடன் ஆற்றினார்.

சேலம் மாநாட்டுத் தந்தை பெரியாரின் தீர்மானத்தை, மதுரையில் தேவசகாயம் அவர்களின் பெண்கள் திருமணத்தில் வரவேற்பு இதழ் வாசித்தளித்ததுதான் இவரின் முதல் மேடைப்பேச்சு.

மாநாடுகளில் 1967க்குப் பிறகு முழுமையான இயக்கப்பணி, சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் யாரோ எறிந்த செருப்பு, நெற்றியில் இரத்தக்காயம் ஏற்படுத்த மேலும் கொள்கையில் உறுதியோடு பணிசெய்திடும் எண்ணம் வலுப்பெற காரணமாயிற்று. தபால் அலுவலக மறியலில் அன்னை மணியம்மையார் காலத்தில் கலந்துகொண்டார்.

மூத்த மகள் பண்பொளியின் திருமணம் அம்மா தலைமையில் நடைபெற்றபோது கமிட்டியும் கூட்டப் பட்டிருந்ததில் கறுப்புச் சட்டையணிந்தவர்கள் முதலில் சாப்பிட்டதால் உறவினரின் கசப்பு.

இசைஇன்பன்-, பசும்பொன் திருமணம் மேனாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கறுப்புக்கொடி காட்டி கைதாகி திருமண மண்டபத்தில் இருந்தபோது ஆசிரியர் தலைமையில், அனைத்துக் கட்சியினரின் வாழ்த்துதலோடு நடைபெற்றது போன்றவை இவரின் மறக்கமுடியாத அனுபவங்கள்.

1990இல் தஞ்சையில் நடைபெற்ற ஜெயில்சிங் கலந்துகொண்ட மாநாட்டில் இறைவி, நயினார் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணமும் ஒரு சவாலை சந்தித்து சாதித்த திருமணம்தான் என்றால் மிகையாகாது! உடன் பணிபுரிந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில்தானே திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடுவீர்கள்? தாழ்த்தப்பட்ட இனத்தில் திருமணம் செய்வீர்களா? என்று கேட்டதை சவாலாக ஏற்று நான்கு ஆண்டுகள் தேடி தாழ்த்தப்பட்ட இன மாப்பிள்ளை நயினாருடன் திருமணம் செய்தது சாதனைதானே?


மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்தபோது ஆசிரியர் அவர்கள் அரசுப்பணியில் இருந்துகொண்டு இப்படிப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டு கைதாகக் கூடாது. அப்படி மீறி கலந்துகொண்டால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துகூட உங்களை நீக்கிட வேண்டியிருக்கும் என்று நல்லெண்ணத்தோடு கண்டித்ததனால் அதில் கலந்துகொள்ளவில்லை. பணிஓய்வுக்குப்பின், எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு ஒரு நாள் சிறை சென்றாலும், வாரக் கணக்கில், மாதக் கணக்கில் சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏக்கத்துடன் கூறுகிறார். இறையனார் அவர்களுடன் 46 ஆண்டுகள் வாழ்ந்த நிறைவான வாழ்க்கை.

5 அறுவை சிகிச்சைகள் நடந்திருந்தும் சிறிதும் மனச்சோர்வு, உடல் சோர்வின்றி இயக்கப் பணிகள் ஆற்றுவதில் மனநிறைவு.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்திற்கு இயக்குநராகப் பணிபுரியும் இவர் ஜாதி மறுப்புத் திருமணம், மூடநம்பிக்கைகள் அகற்றி பதிவுத் திருமணம் பலபேருக்குச் செய்து தந்தை பெரியாரின் ஜாதிகளற்ற சமுதாயம் காணும் பணியை சிறப்புடன் செய்து வருகிறார்.

சமுதாய மாற்றத்திற்கு சிறை செல்லத் தயாராக இருக்கும் இப்படிப்பட்ட வீராங்கனைகள் திராவிட இயக்கத்தைத் தவிர வேறு இயக்கத்தில் காணமுடியுமா?

ஒரு நாள் சிறை சென்றாலும், வாரக் கணக்கில், மாதக் கணக்கில் சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையே!

----------------நன்றி:-"விடுதலை"ஞாயிறுமலர் 27-6-2009

மழைக்கு ஏற்பாடு செய்ய மனம் இல்லாத கடவுள் மனம் கல்லா? கருணையின் வடிவமா?


வருண ஜெபமா?

ஆந்திர மாநிலத்தில் மழை பொழியவில்லை என்பதற்காக அம் மாநில முதலமைச்சர் டாக்டர் ராஜசேகர ரெட்டி, கோயில்களில் யாகங்களை, வருண ஜெபங்களை நடத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். இந்து மதக் கோயில்களில் மட்டுமல்ல; சர்ச், மசூதிகளில் கூட சிறப்பு வழிபாடுகளை நடத்தச் சொல்லியிருக்கிறார்.

இவ்வளவுக்கும் அவர் ஒரு டாக்டர் படித்தவர்தான். அவரே இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுகிறார் என்றால், நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் எந்தவித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதுதான் தெளிவு. தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ்தான்.

தமிழ்நாட்டில்கூட எம்.ஜி.ஆர். முதலமைச்சராகவிருந்த காலகட்டத்தில் மழை வேண்டி புழல் ஏரியில் குன்னக்குடி வைத்தியநாதய்யர் மூலம் ஹர்ஷ வர்த்தினி ராகத்தை இசைக்கச் செய்தார். விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை.

மழை பெய்வது எப்படி என்பதை நான்காம் வகுப்பு மாணவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே டாக்டருக்குப் படித்தும்கூடத் தெரியவில்லை என்றால், இந்தப் படிப்பு எதற்கு என்று கல்விமீது கூடக் கோபம் பிறக்கிறது.

கடவுள் கருணையால்தான் மழை கிடைக்கும் என்றால், அந்தக் கடவுளுக்குத் தெரியவேண்டாமா நாட்டு மக்களுக்கு மழை தேவையென்று?

யாகம் நடத்தி, தோத்திரம் பாடினால்தான் மழையைக் கொட்டோ கொட்டென்று கொட்டச் சொல்வாரா?

அப்படியென்றால் தற்புகழ்ச்சிக்கும், முகமனுக்கும் அடிமையாகக் கூடிய சராசரி மனிதனுக்கும் கீழான ஒன்றா?

இன்னொன்று கடவுள் கருணையானவர் என்கிறார்களே, மழையில்லாத காரணத்தால் பயிர்கள் காய்கின்றன, உயிர்களுக்கு உணவு கிடைக்காது; பட்டினிச் சாவு ஏற்படும் என்றிருந்தும், மழைக்கு ஏற்பாடு செய்ய மனம் இல்லாத கடவுள் மனம் கல்லா கருணையின் வடிவமா?

கடவுளாவது கத்தரிக்காயாவது! அது வெறும் கல்லு குத்துக்கல் என்று பெரியார் கட்சிக்காரர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்று மக்கள் அறியவேண்டாமா?

ஒருமுறை சென்னைக் கடற்கரையில் மழைக்காக அனைத்து மதக்காரர்களும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். அப்பொழுது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அர்த்தமிக்க வினா-வொன்றை எழுப்பினார்.

வழிபட்டால், ஜெபித்தால், தொழுதால் மழை கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கை சம்பந்தப்பட்ட மதவாதிகளுக்கு, பக்தர்களுக்கு இருந்திருக்குமேயானால் ஆளுக்கொரு குடை எடுத்துச் சென்று இருக்கமாட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பினார்.

நியாயமான கேள்விதானே வழிபட்டாலும் மழை வராது என்று எண்ணிய காரணத்தால்தானே அவர்கள் குடையை எடுத்துச் செல்லவில்லை; அப்படியானால் அவர்களும் நாத்திகர்கள்தானே?

------------ மயிலாடன் அவர்கள் 27-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

ஆதித்திராவிடர்கள் கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள் -பெரியார்ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு தடையாக இருக்கும் பார்ப்பனிய மேலாமையை ஒழிக்க பாடுபடும் பெரியாரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் நாம்(பார்ப்பனர்கள்) சொன்னால் பெரியாரின் செல்வாக்கு மேலும் உயர்ந்து விடும் என்பதால் எந்த மக்களுக்காக பெரியார் பாடுபட்டாரோ அந்த மக்களில் ஒரு சிலரைப் பிடித்து பெரியார் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சொல்வது என்பது பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் வழக்கமான அணுகுமுறையாகும். பெரியார் மறைவுக்கு பின் தான் என்றில்லை. பெரியார் உயிரோடு இருந்த போதும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. இது குறித்து பெரியார் தரும் விளக்கத்தைப் பார்ப்போம். (வெங்கடேசன் போன்றவர்களுக்கென்றே சொல்லப்பட்டது போல் இருக்கிறது என்று நீங்கள் (வாசகர்கள்) நினைத்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.). இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறியதற்கு யார் காரணம் என்பதையும் பெரியார் விளக்கியுள்ளார்.ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.


"என் மீதோ, எனது இயக்கத்தைப் பற்றியோ எந்தவிதக் குறையும் கண்டுபிடிக்க முடியாததன் காரணமாக அவர்களின் வண்டவாளங்கள் வெளியாகின்றதே என்ற ஆத்திரத்தினால் ஏதேதோ பொய்ப் பித்தலாட்டமான பிரச்சாரங்களை எல்லாம் கிளப்பி விட்டு இருக்கின்றனர்.


எல்லா சாதி மக்களிலும் சில புல்லுருவிகள் 4- அணா கொடுத்தால் சொன்னபடி எல்லாம் ஆடும் எச்சக்கலை ஆட்கள் இருப்பது போல ஆதித்திராவிடர்களிலேயே சில எச்சக்கலை ஆசாமிகளைப் பிடித்து தவறாக நோட்டீஸ்கள் போட்டு உள்ளார்கள். இது கண்டு அந்த ஆதித்திராவிட மக்களும் நம்பி விட மாட்டார்கள். இப்படிப்பட்ட பித்தலாட்டப் பிரச்சாரங்களை எல்லாம் கண்டு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. கழகத் தோழர்கள் எல்லோரும் கூறினார்களே, அதுவே போதும்.

திராவிடர் கழகமானது இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆற்றிய தொண்டு இன்றைய இளைஞர்களுக்கு என்ன தெரியப் போகின்றது? 50-ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை எவ்வாறு இருந்தது? இன்றைய நிலை எப்படி உயர்ந்து உள்ளது? என்று ஒப்பிட்டுப் பார்க்கும் வயதானவர்களுக்குத்தான் தெரியும். இன்றைய இளைஞர்கள் - இன்றைய நிலை போலத்தான் அன்றைக்கும் இருந்ததாக எண்ணிக் கொண்டு இருப்பார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது வண்ணார், நாவிதர் வீட்டுப் பிள்ளைகள் கூட, தனியாகத் தாழ்வாரத்தில் அமர்ந்துதான் படிக்க வேண்டும். அவர்களுக்கே இப்படி என்றால் ஆதித்திராவிடர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டும்?

வீதியில் நடக்க முடியாதவர்களாக, நல்ல உடை உடுத்தவோ, உணவு உண்ணவோ முடியாதவர்களாக கல்வி, உத்தியோகம் பெறக் கூடாதவர்களாக இருந்த நிலையானது இன்றைக்கு மாறி அவர்களும் மனிதத் தன்மையுடன் நடத்தும்படியான நிலை யாரால் ஏற்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள்.

எனவே, ஆதித்திராவிடர் மக்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு எல்லாம் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


------------------“விடுதலை” 18-12-1961.


ஆக பெரியார் கூறியது போல் ஒரு சில தாழ்த்தப்பட்ட தோழர்கள் பார்ப்பனர்களுக்கு அடிவருடியாகி அவ்வப்போது இது போன்ற குற்றச் சாட்டுகளை சொல்லி மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். ஆனால் பெரியாரின் உண்மை உழைப்பால் முன்னுக்கு வந்த எத்தையோ ஒடுக்கப்பட்ட தோழர்கள் அந்தக் குற்றச் சாட்டுக்களை மறுத்து பெரியாரைப் போற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை.

---------------------தொடரும்

உலக நாடுகள் - தூரப்பார்வை - அயர்லாந்து-இத்தாலி
அயர்லாந்து

12_ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதத் தலைவரான போப் நன்கொடையாக பிரிட்டன் அரசுக்கு அளித்த நாடு அயர்லாந்து ஆகும். ஆனாலும் கூட 500 ஆண்டுகள் கழித்து 17 ஆம் நூற்றாண்டில்தான் அயர்லாந்தின் மீது பிரிட்டிஷ் முழு ஆட்சி அதிகாரத்தைச் செலுத்த முடிந்தது.

1801 ஆம் ஆண்டில்தான் அயர்லாந்தும் இங்கிலாந்தும் இணைந்ததற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டு, யுனைடெட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து எனும் நாடு உருவானது. அதற்குப் பிறகு அயர்லாந்தின் பொருளாதார நிலை சீரழிந்தது. உருளைக் கிழங்குப் பஞ்சம் நாட்டை 1840 இல் பாதித்தது. பல ஆண்டுகளாக உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிக்கப் பட்டது. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அயர்லாந்தில் இருந்து வட அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்திடும் நிலை ஏற்பட்டது.

1916 இல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அயர்லாந்து நாட்டினர் கிளர்ச்சி செய்தனர். இதை வரலாறு, ஈஸ்டர் எழுச்சி எனப் பதிவு செய்துள்ளது. ஈஸ்டர் கலவரம என்றும் சிலர் கூறுவர். திங்கள்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது 14-1-1916 இல் டப்ளின் நகரில் நடந்ததால் இந்தப் பெயரே தவிர, யேசு உயிர்த் தெழுந்தார் எனக் கூறப்படும் பைபிள் கதைக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை. பிரிட்டிஷ் அரசு கலவரத்தை நசுக்கி, தலைவர்களைத் தூக்கில் போட்டது. ஆனாலும், அந்தக் கிளர்ச்சிதான் அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம். 1919 இல் நாம் மட்டுமே எனும் பொருள் படும் சின் பெய்ன் (ளு குந) இயக்கம் டப்ளின் நகரில் அமைக்கப் பட்டது. இந்த இயக்கம் அயர்லாந்தின் விடுதலைக்குக் குரல் கொடுத்தது. அதே நேரத்தில் ஐ.சு.ஹ. எனும் (அய்ரிஷ் ரிபப்ளிகன் ஆர்மி) கொரில்லாப் போர்ப்படை உருவாகி பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போராடியது.

மற்றொரு திங்கள் கிழமை ஈஸ்டர் விழாவின்போது 1949 இல் அயர்லாந்து குடியரசானது. விடுதலைக் குரலை எழுப்பி 33 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் சாதித்துக் காட்டி வெற்றி பெற்றது அயர்லாந்து விடுதலை இயக்கம். அதிலும் ஒன்று. வட அயர்லாந்து புதிய குடியரசில் சேராமல், பிரிட்டனுடனேயே இருந்து கொண்டது. தெற்கு அயர்லாந்து மட்டுமே குடியரசு நாடானது. பிரிட்டிஷ் காமன்வெல்த்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.

70ஆயிரத்து 280 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 41 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 88 விழுக்காட்டுக்கு மேல் ரோமன் கத்தோலிக்கர். 4 விழுக்காடு மக்கள் மதமற்றவர்கள். இங்கிலிஷ்தான் பெரும்பாலும் பேச்சுமொழி. அய்ரிஷ் மொழி பேசுவோர் குறைவு. அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள் 6-12-1921 இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்நாட்டில் அதிபரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உண்டு.

10 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளனர். 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதவர்கள்.

*********************************************************************************************************************

இத்தாலி

இத்தாலி நாட்டின் பகுதிகளில் எட்ருஸ்கன் நாகரிகம் பொது ஆண்டுக்கு முந்தைய நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில் செழித்திருந்தது. எட்ருஸ்கன் வமிச ஆட்சியை நீக்கி ரோமப் பேரரசு இத்தாலியை ஆண்டது. அவர்களையும் ஆட்சியில் இருந்து அகற்றியவர்கள் நாகரிகம் அற்றோர் என வரலாறு அழைக்கும் மக்கள். அவர்களின் படையெடுப்பு நான்காம், அய்ந்தாம் நூற்றாண்டுகளில் நடந்தது.

15 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தாலியைப் பல நாடுகள் ஆண்டு ஆதிக்கம் செலுத்தின. பிரான்சு, ரோமானிய அரசு, ஸ்பெயின், ஆஸ்திரியா எனப் பல நாடுகளும் அரசாட்சி செய்தன. ஆனாலும் கூட அய்ரோப்பிய நாகரிகத்தின் மய்ய இடமாக இத்தாலி விளங்கியதையும் வளர்வதையும் எவராலும் தடுக்க முடியவில்லை. மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறப்படும் காலப் பகுதியில் இத்தாலி பெரும் வளர்ச்சியை அடைந்தது.

1815 ஆம் ஆண்டில் நெப்போலியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது இத்தாலி சுதந்திரமான சின்னஞ்சிறு பகுதிகள் பல கொண்டதாக இருந்தது. இவற்றை ஒருங்கிணைக்கும் பணி தொடங்கப்பட்டு இத்தாலியைத் தீவுக்குறை (தீபகற்பம்) 1870 இல் ஒன்றானது. போப்பின் ரோம அரசும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அரசியல் அமைப்புடன் கூடிய முடியாட்சியாக இத்தாலி உருப்பெற்றது.

இத்தாலியின் தலைவர் எனக் கூறப்பட்ட பெனிடா அமில்கர் ஆண்ட்ரியா முசோலினி எனும் பாசிசத் தலைவர் இத்தாலியின் பிரதமராக வந்தார். வயது குறைந்த பிரதமர் இவரே. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியுடன் இத்தாலி சேர்ந்து கொண்டது. அச்சு நாடுகளில் ஒன்றானது. இந்தக் கூட்டு இரண்டு நாடுகளுக்கும் பாதகமானது என்பதை வரலாறு கூறுகிறது. இட்லர், முலோலினி என்கிற இவ்விரண்டு சர்வாதிகாரிகளுமே போரில் தோற்றுப் போய்ப் பிணமாகக் கிடந்தனர். அதிலும் முசோலினியின் செத்த உடல் அவன் வாழ்ந்த வீட்டின் வெளிக் கதவின் கம்பிகளில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டுக் கிடந்தது.

ஜெர்மனி, இத்தாலி இரு நாடுகளுமே போரினால் பெரும் சேதத்தைச் சந்தித்தன. 1946 இல் இத்தாலி குடியரசு நாடானது.

இத்தாலித் தீவுக்குறைக்குப் பக்கத்தில் உள்ள சார்டினியா, சிசிலி ஆகிய தீவுகளையும் சேர்த்து, இந் நாட்டின் பரப்பு 3 லட்சத்து ஓராயிரத்து 230 சதுர கி.மீ. ஆகும். இங்கு வாழும் மக்கள் 5 கோடியே 82 லட்சம் ஆகும். இவர்களில் ரோமன் கத்தோலிக்கர்களே பெரும்பான்மை. மிகமிகச் சிறுபான்மையினராக புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள், யூதர்கள், குடியேறிய முசுலிம்கள் உள்ளனர்.

இத்தாலி மொழி பேசும் மக்கள் 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். அதிபரும் பிரதமரும் உள்ளனர். எட்டு விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர். இசை, சிற்பம், ஓவியம், கட்டடம் முதலிய நுண்கலைகளில் சிறந்து விளங்கிய, விளங்கிக் கொண்டிருக்கும் நாடு என்றால் மிகையல்ல.

--------------------நன்றி:-"விடுதலை" 27-6-2009

27.6.09

பெரியார் - இராமசாமி என்ற பெயரை ஏன் மாற்றிக் கொள்ளவில்லை?
இராமசாமி ஏன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை?(17.6.1947 அன்று அரூர் தோழர் விநாயகம் அவர்களின் ஆண் குழந்தைக்கு வீரத் திராவிடன் என்று பெய-ரிட்டு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

தோழர்களே! தாய்மார்களே! குறிப்பு தெரிவதற்காக குழந்தைகளுக்குப் பெயரிடுவது அவசியந்தான். அது காலத்திற்கேற்பவும், அந்தந்த காலத்திய தத்துவத்திற்கேற்பவும், அந்தந்த காலத்திய உணர்ச்சிக்கேற்பவும், அவரவர்களுடைய கொள்கை அல்லது மதம், லட்சியத்திற்கேற்பவும் இடப்படுவது வழக்கம். ஆரியத் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து சமீபகாலம் வரை திராவிட மக்களின் பெயர்கள் யாவும் ஆரிய மதத்தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்டு வந்தன. அதற்குமுன் திராவிடர் பண்பு, லட்சியம் ஆகியவைகளைக் கொண்டதாகவும் இருந்தன. நமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, மதத்திலுள்ள கெடுதிகள் - அதனால் இனத்திற்கு ஏற்பட்ட இழிவுகள் விளக்கப்பட்ட பிறகு பண்டைத் தமிழர்களின் பெயர்களையும் அவர்களது வீரத்தின் பண்புப் பெயர்களையும் தம் குழந்தைகளுக்கு இட ஆரம்பித்தார்கள். பலர் தம் பெயர்களை மாற்றிக் கொண்டார்கள். எனக்கு அவ்விதமே மாற்றிக்கொள்ள ஆசையிருந்தாலும் நீண்டநாள் ஆகிவிட்டதால் மாற்றிக்கொள்வதில் உள்ள அசவுகரியங்களை முன்னிட்டுப் பெயரை மாற்ற முடியாவிட்டாலும் கருத்தை மாற்றிவிட்டேன்.

புராண இதிகாசங்களை வெறுப்பவர்கள் இராவணன், இரணியன் என்று (வேறு மொழியாய் இருந்தாலும்) பெயர் வைத்துக் கொள்வதையும், பொதுவுடைமையில் விருப்பமுள்ளவர்கள் ரஷ்யா, ஸ்டாலின், லெனின் என்று பெயர் வைத்துக் கொள்வதையும் மூடநம்பிக்கையை வெறுப்பவர்கள் இங்கர்சால், சாக்ரடீஸ், ரூஸோ, பெர்னாட்ஷா என்று பெயர் வைத்துக் கொள்வதையும் நாம் தற்போது பார்க்கிறோம். அதேபோல் நமது இழிநிலை சமூகத்தில் பிறவியின் காரணமாக ஏற்பட்ட இழிநிலை, திராவிடன் ஒருவன் மகாராஜாவானாலும் கோடீஸ்வரனாயிருந்தாலும், ஸ்ரீலஸ்ரீ பண்டார சன்னிதியானாலும் அவன் நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதியாகக் கருதப்படுவானேயல்லாது முதல் ஜாதிக்காரனாக முடியாது என்ற இழிநிலை நீக்கப்பட வேண்டும் என்பதை ஞாபகப்படுத்த திராவிடன் என்றும், அதைச் சந்திக்க வீரம் வேண்டும் என்பதைக் குறிக்க வீரத்திராவிடன் என்றும் இக்குழந்தைக்குப் பெயரிடுகிறேன்.

பிறவியினால்நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழிநிலை நீங்கி உலக மக்களுக்குள் நாமும் சரிசமானமாக வாழ் நாம் பாடுபடுவோம். அதுவே நமது முதல்வேலை.
அதை வீரத்தோடு செய்வோம் என்பதைக் குறிப்பிடவும், நம் மக்கள் யாவரும் வீரத்திராவிடர்களாய் வாழ வேண்டுமென்பதைக் குறிப்பிடவும், உங்கள் ஆமோதனையின் பேரில் இக்குழந்தைக்கு வீரத்திராவிடன் என்று பெயரிடுகிறேன். இது வீரத் திராவிடனாகவே திகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

-------------------தந்தைபெரியார் -"விடுதலை", 18.8.1947

நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன் - பெரியார்


ம.வெங்கடேசன் என்ற நண்பர் ஒருவர் 2004 ஆம் ஆண்டு எழுதிய நூல் ஒன்றை (‘ஈ.வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’)தற்போது பார்ப்பன வலைதளத்தில் வலையேற்றியுள்ளனர். ம.வெங்கடேசன் என்ற அந்த நண்பர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவராம்.தாழ்த்தப்பட நண்பர் ஒருவரை வைத்து நூல் எழுதி பெரியாரை இழிவுபடுத்த வேண்டும் என்பது பார்ப்பனர்களின் சாம,தான,பேத தண்ட வழிமுறைகளில் இதுவும் ஒரு வழியாக அவர்கள் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த “வழி” பார்ப்பனர்களுக்கு “வலி”யாய் முடிந்தது என்பதே வரலாறு காட்டும் உண்மை. தன் கையைக் கொண்டே தன் கண்னைக் குத்திக் கொண்ட நண்பர் ம.வேங்கடேசனுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

“தாழ்த்தப்பட்ட சமூகத்தவனாகிய நான் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப்பற்றி எழுதலாமா என்ற கேள்வி எழும்பினால் அந்தக் கேள்வி வெறுப்பினால் எழுப்பப்பட்ட கேள்வியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தக் கேள்வியை விட்டுவிட்டு நான் ஆதாரம் இல்லாமல் எழுதியதாக யாராவது கருதினால் அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.” என்கிறார் வெங்கடேசன்.

தாழ்த்தப்பட்ட தோழர்கள் மட்டுமல்ல பார்ப்பனர்கள் உள்பட உலகில் உள்ள யார் வேண்டுமானலும் பெரியாரை விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனம் நேர்மையாக, நாணயமாக, சான்றுகளுடன் கூடியதாக உண்மையின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதே பொதுவான விதி. ஆனால் தாழ்த்தப்பட்டவன் என்கிற அறிமுகத்துடன் வெங்கடேசன் ஆகிய நீங்கள் எழுதிய இந்த நூலில் உண்மையிலேயே அப்படி நாணயமான கருத்துக்கள் உள்ளதா?நேர்மையாக எழுதியுள்ளீர்களா? அல்லது பார்ப்பனர்களின் கைக்கூலியாக செயல் பட்டுள்ளீர்களா என்பதை பார்த்து விடலாம். முடிவை படிக்கும் வாசகர்களிடமே விட்டு விடலாம். இனி நூலினுள் சென்று விவாதிப்போம்.


“ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள, கிட்டதட்ட 90 சதவீத புத்தகங்களைப் படித்தேன்.”
என்று பெருமையடித்துக் கொள்கிற வெங்கடேசன் அல்லது இவரை தூண்டிவிட்ட பார்ப்பனர்கள் முதலில் நமது கேள்விக்கு பதில் சொல்லட்டும்.

பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள எந்த நூலில் “ஈ வே.ராமசாமி” என்று உள்ளது? முதலில் அதைப் பட்டியலிடுங்கள். 90 விழுக்காடு நூலைப் படித்த லட்சணம் இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறதே. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதாக ஆகிவிட்டது உங்கள் நிலை.

ஈ.வே.ரா – ஈ.வெ.ரா. எது சரி

“பெரியார் அவர்களின் தந்தையார் பெயர் வெங்கட்டநாயக்கர் என்பதே சரியானது.வேங்கட்டப்ப நாயக்கர் என்பது தவறானது.”

இந்த விபரத்தைக்கூட சரியாக எழுதாத ம.வெங்கடேசன் பெரியாரைப் பற்றி நூல் எழுத வந்தது வேதனையானது. அந்த நூலைப் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்ள நினைப்பது வெட்கக்கேடு. அயோக்கியத்தனம். பார்ப்பனருக்குத்தான் எபோதும் முன் புத்தியே கிடையாதே.

“தாழத்தப்பட்டவர்களுக்கு 1 சதவீதம்கூட ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததில்லை என்பதுதான் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.” என்று நூலின் முன்னுரையில் எழுதியுளீர்களே இதில் எள்மூக்கு அளவு உண்மை உண்மையுண்டா?

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளிட்ட “தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்” என்ற ஒரு நூல் போதுமே உண்மையை எடுத்துரைக்க. தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் பாடுப்பட்டதை சான்றுகளுடன் பலர் பல நூல்களை எழுதியுள்ளனர். அந்த நூல்கள் எல்லாம் உங்கள் கண்னில் படவில்லையா? நூல்களை வாங்கிக் கொடுத்தவர்கள் திட்டமிட்டே அந்த ஆதாரபூர்வமான நூல்களை வாங்கிக் கொடுக்காமல் விட்டுவிட்டார்களா?. சரி பரவாயில்லை. இதற்குப் பிறகாவது அந்த நூல்களை வாங்கிப்படித்து உண்மையை உணர கீழே அந்த நூல்களின் பட்ட்டியலைத் தருகிறேன்.

1.தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்
2.பெரியார் சுயமரியாதை சமதர்மம்
3.பெரியார் ஆகஸ்ட் 15
4.பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு
5.திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?
6.இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
7.பெரியார்களஞ்சியம் ஜாதி-தீண்டாமை 1-17 பாகங்கள்
8.பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்


இன்னும் பல நூல்கள் இருக்கின்றன வெங்கடேசன். இப்போதைக்கு இதை மட்டுமாவது படித்து தெளிவடைய வேண்டுகிறேன்.
*************************ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா? என்ற தலைப்பில் கீழ் கண்டவாறு எழுதியுள்ளார் மா.வெங்கடேசன்.

“ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே - அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?
”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் - முதல் தொகுதி)
என்றும்,
”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)
என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.”

பெரியார் தன்னை சரியாகவே அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். எதையும் மறைக்க வில்லை. நேர்மையாகவும் நாணயமாகவும், உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளார். இதில் எங்கிருந்து வந்தது பெரியாருக்கு மறுபக்கம்?

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் எதையும் வெளிப்படையாக தன் மனதில் பட்ட கருத்தை யாருக்காகவும்,எதற்காகவும் மாற்றிக்கொள்ளமால் உழைத்த தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது பெரியார் மட்டுமே. சுருக்கமாகச் சொன்னால் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறது. ஒருசில வெங்கி- சொங்கிகள் பெரியாரின் மறுபக்கத்தை காட்டுகிறேன் என்று கூறிக் கொண்டு தங்களின் பார்ப்பனிய அடிமை முக சுயரூபத்தை அம்பலப்படுத்திக் கொள்கின்றனர்.

“”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” என்று பெரியார் எந்தப் பொருளில் எந்தச் சூழலில் கூறினார் என்பதை உணர்ந்து கொண்டால் வெங்கடேசனின் தில்லுமுல்லுகள் அமபலமாகிவிடும்
.

இது குறித்து பெரியார் குறிப்பிட்டதை அப்படியே தருகிறேன்.

“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஸ்டமாயிருக்கும் போது-தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஸ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர்,நான் கன்னடியன்,தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் ஜாதிப் பிரிவுகள்.என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டர்கள்.தெலுங்கரும் அப்படியே. எனவே,”திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம்;நம் நாடு திராவிட நாடு” என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்.”

--------------------சேலம் செவ்வாய்பேட்டையில் சொற்பொழிவு,16-1-1944—“குடிஅரசு” 29-1-1944 (ஈவெராசி -550).


மேற்கண்ட பெரியாரின் சொற்பொழிவில் பெரியார் எந்த இடத்தில் ‘நான் கன்னடியன்’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார் ?

பிரிந்து கிடக்கும் தோழர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும் நோக்கோடு கருத்துச் சொல்லிய பெரியாரை வேண்டுமென்றே விசமத்தனமாக எழுதி கொச்சைப் படுத்தியிருக்கும் இந்த பார்ப்பன அடிவருடி வெங்கடேசனுக்கு இப்படி ஒரு ஈனப்பிழைப்பு தேவையா? வரலாற்றை சொல்லும் போது உண்மைத் தன்மையுடன் சொல்லவேண்டும் அதுதான் அறிவு நாணயம். அந்த நாணயம் பெரியாருக்கு இருந்தது. அதனால்தான் பெரியார் பெருமை பொங்க குறிப்பிடுகிறார் “என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன்.” என்று

பெரியாருக்கு இருந்த இந்த நாணயம் கிஞ்சிற்றும் பார்ப்பனர்களுக்கு கிடையாது. தாழ்த்தப்பட சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பனருடன் சேர்ந்த காரணத்தினால் வெங்கடேசனுக்கும் இல்லை என்று இதன் மூலம் உணரலாம். பெரியாரைப் பற்றி கொச்சைப்படுத்தி ஒரு நூல் எழுத வேண்டும் என்று வெங்கடேசனிடம் வந்த பார்ப்பனர்/பார்ப்பன அடிவருடிகளின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்க வேண்டாமா? இந்த வெங்கடேசன். அப்படிச்செய்திருந்தால் தானே இவன் உண்மைத்தமிழன். அப்படிச் செய்திருந்தால் இப்போது வெங்கி- சொங்கியாக ஆகியிருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது.

ஆக பெரியார் எந்த இடத்திலும் தன்னை பெருமையோடு கன்னடர் என்று சொல்லிக் கொண்டதில்லை. அதுபோல் எந்த தகவலையும் மறைத்ததில்லை.உண்மைத்தகவல்களையே கூறியுள்ளார். பெரியாருக்கு என்று மறுபக்கம் இருந்ததில்லை. எப்போதும் திறந்த புத்தகமாக சொல்லிலும் செயலிலும் நடந்து காட்டியுள்ளார் என்பதை அவரின் கருத்துக்களும் செயல்பாடுகளும் உறுதி செய்கிறது. பெரியார் பிறப்பால் தான் ஒரு கன்னடர் என்பதை எங்கேயும் எப்போதும் மறைத்தது இல்லை.அப்படி மறைத்திருந்தால் இந்த சொங்கிகள் வைக்கும் குற்றச்சாட்டில் ஏதாவது பொருளிருக்கும். ஆனால் வெளிப்படையாக உண்மையை சொல்லியுள்ள பெரியாரை வேண்டுமென்றே திட்டமிட்டே கொச்சைப்படுத்தியுள்ளார்கள் இந்த வீணர்கள். இதற்கு முன்கூட இப்படி பல பேர் சொல்லி மூக்குடைபட்டுப் போய் உள்ளார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை.

இது குறித்த இன்னொமொரு பெரியார் அவர்களின் கருத்தை தருகிறேன்.

“என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதனை நான் தினசரிப் பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை.எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத்தான் பயன் படுத்தி வருகிறேன். எனக்கு கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும்.இருந்தாலும் தமிழ் மொழியில்தான் என்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்”
-------“விடுதலை” 21-5-1959
ஆக எந்த இடத்திலும் பெரியார் தான் ஒரு கன்னடர் என்று பெருமைப்பட்டுக் கொண்டதில்லை என்பதோடு அவருடைய ஒவ்வொரு செயலும் தமிழனின் நலத்துக்கும் உயர்வுக்குமானதகாவே இருந்தது என்பது தான் உண்மையிலும் உண்மை.

--------------தொடரும்

நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் ‘Stop, look, and see’
நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள்!

விழியற்றவராக இருந்தும் பிரபலமானவர் - சாதனையாளர் ஹெலன் கெல்லர். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய துன்பமயமான கேடு என்று எதைக் கருதுகிறீர்கள்? என்ற கேள்வி.

அதற்கு பளிச் சென்று சிறிதும் தாமதியாமல் அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?
விழிகள் இருந்தும் சரியாகப் பார்க்கத் தவறியவரது செயல்தான்!


இதில் ஆழமான புரிதல் உணர்வுடன் இதனை நாம் ஆராய வேண்டும்.

விழியற்றவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் படுகிறோம்; பச்சாதாபம் கொள்கிறோம். ஆனால் விழியுள்ளவர்கள் பலர் விழிகள் இருந்தும் சரியான பார்வையற்றவர்களாக வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடந்து கொள்பவர்கள் பற்றி பலர் அனுதாப்படுவதில்லையே, ஏன்?

விழியில்லாதவர்கள் பலர், வழிகளில் கவனமாக நடக்கிறார்கள்; ஆனால் விழியுள்ள பலரோ வழி தடுமாறி நடந்து பழியைச் சுமப்பவர்களாக ஆகிறார்கள்!

நாம் பிறருக்கு உபதேசங்கள் செய்யும் முன்பு, நாம் நமக்கே அதைச் செய்து கொள்ள வேண்டியவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம்.

நம்மில் மிகப் பெரும்பாலோர் சரியான கவனத்துடன் கவனித்து நடக்கத் தவறியதால்தான் வாழ்வில் பல துன்பங்களை, துயரங்களைச் சந்தித்துத் துவண்டு, தோல்விகளைச் சுமக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

எனவே மேலே உள்ள தலைப்புக் கூட சிலருக்கு, - மேலெழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குப் புரியாது.

நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் ‘Stop, look, and see’ என்ற தலைப்பில் ரீடர்ஸ் டைஜஸ்ட் வாழ்வியல் பற்றி எழுதிய சுவையான பயன்தரும் நூலில் படித்த தலைப்பு.

குற்றாலம் பயிற்சி முகாமின்போது, எனது நீண்டநாள் கழகத் தோழர், ஓய்வுபெற்ற ஆசிரியர் கோம்பை தங்கமுத்து அவர்கள் அன்புடன் அந்நூலை எனக்கு அளித்து மகிழ்ந்தார். பழைய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, வாங்கிப் பத்திரப்படுத்தி, எனக்கு அளித்து மகிழும் பல நண்பர்களில் அவரும் ஒருவர்!

நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் என்றுதான் அந்த ஆங்கிலத் தலைப்பை தமிழ் மொழியாக்கம் செய்ய முடிந்தது!

கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். நாம் நடந்து செல்லும்போதோ, அல்லது காரில் பயணிக்கும் போதோ, நாம் கடந்து செல்பவைகளைப் பார்த்தே செல்லுகிறோம். ஆனால் சிலவற்றை மட்டுமே நாம் கவனித்து மனதில் இருத்துகிறோம்.
இரண்டுக்கும் பலமான வேறுபாடு என்பதை ஆழமாகச் சிந்தித்தால்தான் அது புரியும்!

பார்ப்பது வேறு; கவனிப்பது வேறு. எதை மனதில் நிலைநிறுத்தும் அளவுக்குக் கவனிக்கிறோமோ அதுவே சரியான பார்வையாகும்! ஆங்கிலத்தில் இப்படி நுணுகிப் பார்ப்பதை வீஸீவீரீலீ என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்கள்!
அகராதிகளில் இதற்கு ஆழ்ந்த அறிவு நுண்ணறிவு என்றே குறிப்பிடுகின்றனர்.
பார்த்தல், கவனித்தல், நுண்ணறிவுடன் ஆராய்தல் இப்படி எத்தனையோ கட்டங்கள் நமது மூளைக்கு வேலை தரும் வாய்ப்புகளாகின்றன. நம் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவிடக்கூடும்.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், லண்டன் மாநகரத்தில் குண்டு மாரி பொழிந்த போது கூட, துணிச்சலுடன், லண்டன் அதைத் தாங்கும் என்று கூறி, மற்றவர்கள் நம்பிக்கை இழந்த நேரத்தில் கூட துணிவுடன் பிரிட்டிஷ் படைகளை நடத்தக் கட்டளை இட்டு, இரண்டு விரல்களால் வெற்றி நமதே என்று தெம்பூட்டிய மாவீரர்!
மரணத்தைக் கூட எளிதில் ஏற்காது பல நாள் கோமா நிலையில் கூட அதனை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் அவர்!

அவர் ஜெர்மனிய ஹிட்லரின் படைகளைத் தோற்கடிக்க, மரத்தில் பொம்மைகளை இராணுவ வீரர்களைப் போலச் செய்து வைத்து, திறந்த வெளிகளில் அணிவகுத்து நிற்கச் செய்தார். மேலே வானிலிருந்து எதிரிகளின் வேவு விமானங்கள் ஒளிப் படங்கள் எடுத்துச் சென்று மிரளட்டும் என்று செய்து வெற்றியை ஈட்டியவர்!

அவர் ஆணைப்படி, கப்பல் துறைமுகங்களில் மரங்களால் ஆன பொய் போலிக் கப்பல்கள் பிரிட்டிஷ் கப்பல் தளத்தில் ஸ்கேப்பா ஃப்ளோ என்னும் இடத்தில், பொய் விமானங்களையும் அடுக்கடுக்காக நிறுத்தி வைக்கச் செய்தார். அதன்படி செய்தார்கள் இராணுவ அதிகாரிகள்!
இவர் வந்து சுற்றிப் பார்த்தார். மற்றவர்கள் திகைக்கும்படி கூர்ந்து கவனித்து, ஒரு திருத்தம் சொன்னார்: கடலில் உள்ளவை போலியான கப்பல்கள், விமானங்கள் என்று எதிரிகள் தெரிந்து கொள்ளக் கூடாது; அதைச் செய்ய ஒரு விஷயத்தைக் கோட்டை விட்டு விட்டீர்கள். கடற்பறவைகள் நிறைய இது போன்ற இடங்களைச் சுற்றி, தீனி கிடைக்கும் என்பதற்காக பறந்து கொண்டிருந்தால்தான் அது இயற்கையானது போல் எதிரிகளுக்குத் தெரியும்; இல்லையேல் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆகவே அந்த சீ கல்ஸ் பறவைகளை வட்டமடிக்கச் செய்ய அவைகளுக்கு உணவுகளைத் தொடர்ந்து தண்ணீரில் போட்டுக் கொண்டேயிருங்கள். அப்போதுதான் எதிரி விமானங்கள் இவைகள் டம்மிகள் என்று கவனிக்கத் தவறுவார்கள் என்றாராம்.

என்னே கூரிய கவனம் மிக்க பார்வை!


எனவே, வாழ்க்கையில் நின்று, நிதானித்து, வெறும் பார்வையோடு நில்லாமல், கவனித்து, உற்று நோக்கிக் காரியமாற்றும்போது வெற்றி வீதியில் உலா வருவீர்கள். நாமும் முழுமையடைந்த பார்வை உள்ளவர்களாகிப் பெருமைப்பட்டுக் கொள்ள இயலும்

--------------------நன்றி:- கி. வீரமணி அவர்கள் எழுதிவரும் "வாழ்வியல் சிந்தனைகள்" பகுதியிலிருந்து-"விடுதலை" 26-6-2009

ஜோதிடம் பலித்தது ஒன்று; தோற்றது மூன்று. அது எப்படி?


ஜோதிடம் உண்மையா?


வரலாற்றில் தோன்றி மறைகின்ற மன்னர்களைப் பற்றி எப்பவுமே எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஏனெனில் அதற்குரிய யோக்கியதை எந்த மன்னர்களிடமுமே கிடையாது. அந்தக் காலத்து மன்னர்களுக்கு இரண்டே வேலைகள் தான்:

1. இளைத்த மன்னனையடித்துக் கப்பம் வாங்குவது,

2. நினைத்த பெண்களைப் பிடித்து விளையாடுவது,

இத்தகையவர்களை எப்படி யோக்கியர்கள் என்பது? என்று உலக சரித்திரத்தில் நேரு எழுதுகிறார்.

உலகில் எந்த அரசனைத்தான் யோக்கியன் என்ற சொல்வது? எல்லாத் தரும நியாயங்களையும், கற்றுணர்ந்த தருமபுத்திரனே, பெண்சாதியை வைத்துச் சூதாடி விட்டானே! என்று கவி பாரதியார் கேட்கின்றார்.

அந்தக் காலத்து நாடகங்களில் மன்னன் கேட்பானாம். மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? என்று. ஆமாம், நம்ம ஊர்ல மழை பெய்ததா? என்பதையே மந்திரியிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதென்றால் மன்னர்களுக்குக் குடிமகக்கள்மீது எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா?

அந்தக் காலத்து மன்னர்கள், மந்திரிகள், பிரதானிகள், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், சோதிடர்கள் எனப் பலரைப் பக்கத்துணையாக வைத்துத்தான் ஆட்சி நடத்தினர் இப்போதும் அப்படித்தானே சம்பந்தப்பட்ட துறைக்கு செயலாளர்களை வைத்துத்தானே அரசை நடத்தி வருகின்றனர்.

பிரதமர்கள் - சோதிடர்கள்

இந்திரா காந்தி - பண்டிட் பார்சாய்
பி.வி. நரசிம்மராவ் - என்.கே. சர்மா
எச்.டி. தேவகவுடா - நா. மேட்டுப்பட்டி சங்கரய்யர்

தேவகவுடா தமது பதவி நிலைக்கவும், நீடிக்கவும் வேண்டி ஒரு யாகம் செய்தாராம் சோதிடரை வைத்து. அதில் 20 டன் பலாப்பட்டை, 2250 கிலோ நெய்; 2250 கிலோ தேன், ஜரிகை பட்டுப்புடவை என ரூபாய் 1200 கோடி செலவிட்டராம்; நாட்டைப் பிடித்த கேடு காலத்தைப் பார்த்தீர்களா? இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் எல்லாம் நாட்டுக்குத் தலைவர்களா? உருப்படுமா நாடு? கடைத் தேறவார்களா மக்கள்? சண்டாளக் கடவுளே, தயவு செய்து இருந்தால் காப்பாற்று! இப்போதுதமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக்கப் போராடும் தமிழக முதல்வரின் (ஜெயலலிதா) சோதிடர் உன்னி-கிருஷ்ணமேனன். இவரது தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவர் இத்தகைய சோதிடர்கள்தானாம்!

சோதிடம் பலித்தது ஒன்று; தோற்றது மூன்று. அது எப்படி?

1. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனது அண்ணன் மன்மோகன்சிங், உயர்ந்த பதவியைப் பெற்று மேனிலை எய்துவார் என்று ஒரு சோதிடர் கூறினார். அது பலித்து விட்டது என்று பிரதமரின் தங்கை திருமதி அமர்சித் கவுர் என்பவர் கூறினார். (செய்தி 21.4.2004, கதிரவன்) இது பெருமைக்குரிய செய்திதான். டாக்டர் மன்மோகன் சிங் நேர்மையானவர், பல உயர் பதவிகளை வகித்தவர். அவரது தலைமையில் நாடு நலம் பெறும் என நம்பலாம். இது ஜெயித்த சோதிடம்.

2) அடுத்து மிதுன ராசிக்காரரான திருமதி சோனியா காந்தி எதைச் செய்தாலும் வெற்றி பெறுவார் என்று ஆரூடம் கூறியவர் அக்னி சர்மா என்பவர் (ஆதாரம்: 18.4.1999, கல்கி பக்.80).
அண்மைத் தேர்தலில் நாடெல்லாம் சுற்றி காங்கிரசின் வெற்றிக்காகப் பாடுபட்டவர் சோனியாகாந்தி. நாடும் அடுத்த பிரதமர் சோனியாதான் என எதிர்பார்த்தது. ஆனால் இராஜயோகம் திசைமாறிவிட்டது. ஆக சோதிடம் தோற்றது

3) இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டுத் தலைநகரில் செங்குட்டுவனோடிருந்த இளங்கோவடிகள்தான் மன்னராகும் தகுதியுள்ளவர், தெய்வவாக்காகக் கூறினாள் தேவந்திகை என்னும் பணிப் பெண்ணொருத்தி. இதைக் கேட்ட இளங்கோவடிகள் தனது தமையனைத் திருப்திப்படுத்துவதற்காக, இளங்கோவடிகள் இளமைத் துறவியானார். செங்குட்டுவனே மன்னனானான். இங்கேயும் சோதிடம் தோற்றது.

4) இராமாயணத்தில் ராஜரிஷியாகிய வசிட்டன் இராமனுக்குத்தான் பட்டாபிஷேகம் என நாள் குறித்தான்; என்ன நடந்தது? இதுதான் நாடறிந்த கதையாயிற்றே! வசிட்டன் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்க ராமனுக்கோ நாடாள வேண்டிய யோகம் இருந்தது; மாவுரி தரித்துக் காடேகினான் இராமன்! என்னாயிற்று? சோதிடம் தோற்றது.

----------------பொய் சொல்லான்,நானாக்கிணறு -நன்றி:-"விடுதலை" 26-6-2009

26.6.09

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து சரியான நடவடிக்கையா?


பத்தாம்வகுப்புதேர்வுரத்து: நாடுமுழுவதும்ஒரேகல்வித்திட்டம்?
மத்திய அரசின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும்
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அதிரடியாக மேற்கொள்ளத் துடிக்கும் கல்வி சம்பந்தமான மாற்றங்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர் கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வி போர்டு, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு ரத்து பற்றியும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதன் அவசியம் குறித்தும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:-

மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை கல்வி அமைச்சராகப் பொறுப்-பேற்றுள்ள திரு. கபில்சிபல் அவர்கள், கல்வித் துறையில் உடனடியாக 100 நாள் வேகத்திட்டத்தின்கீழ், பல தடாலடி மாற்றங்களைச் செய்ய எண்ணுவதாகத் தெரிகிறது. அவரது நல்லெண்ணம், செயல்வேகம் நமக்குப் புரிந்தாலும், அதிவேக ஆர்வம் தொடக்கத்தில் அவர் தனது துறையின் பற்பல பணிகளை ஆய்வு செய்யவே பல மாதங்கள் பிடிக்கும் என்ற நிலையில், அடிப்படை மாற்றங்களில் அவசரப்பட்டு ஈடுபட்டுக் கருத்துத் தெரிவித்திருப்பது, பல்வேறு புதுப் பிரச்சினைகளை, மத்திய ஆட்சிக்கு ஏற்படுத்தும்.

குறைந்தபட்சம் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி செல்லவேண்டிய குழந்தைகள், சிறார்கள் ஆரம்பக் கல்வியைப் பெறுவதே 1960 இல் முடிந்திருக்க வேண்டியது, 2010 இல் கூட முடியுமோ என்ற நிலைக்கு வந்துள்ளது! அதனால்தான் கொஞ்ச காலத்திற்குமுன்தான் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம் என்ற சட்டத்தை இதே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியது.

அதன் செயல்பாடு எந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் சென்று, எதிர்பார்த்த விளைவுகளை உருவாக்கியுள்ளதா இல்லையா என்பதை ஆராய்வது அவசர அவசியமாகும்!

இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வியா?

இந்தியா முழுவதற்கும் ஒரே கல்வி போர்டு, எஸ்.எஸ்.எல்.சி. என்ற பத்தாம் வகுப்புத் தேர்வு கட்டாயமல்ல; விரும்பியவர்கள் எழுதலாம்; விரும்பாதவர்கள் எழுதாமல் வெறும் கிரேடு வாங்கலாம் என்றெல்லாம் மத்திய அமைச்சர் கூறியதாக வரும் செய்திகள் பலவகை குழப்பத்திற்கு இடம் தந்துள்ளது.

கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் அரசியல் சட்டத்தில் 1975 வரை இருந்தது. ஆனால், நெருக்கடி காலத்தில் 1976 இல் மாநிலங்கள் எதையும் கலந்து ஆலோசிக்காமலேயே, அதைப் பொதுப் பட்டியலில் கொண்டுபோய் வைத்தது அன்றைய மத்திய (இந்திரா காந்தி) அரசு.

இந்திய யூனியன் என்பது பல மாநிலங்களின் கூட்டு அமைப்பு; பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல பகுதிகள், பன்மொழிகள் என்றுள்ள நிலையில், தாய்வழிக் கல்வி போன்று பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், அரசியல் சட்ட வரைவாளர்கள் கல்வியை மாநிலப் பட்டியலிலேயே வைத்தனர்; அது பரந்துபட்ட நாட்டின் பல்வேறு பண்பாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் கல்வி அமையவேண்டும் என்பதற்காகவே!

கல்வி - மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்

பொதுப் பட்டியலுக்கு 1976 இல் கொண்டு சென்ற கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை பல மாநிலங்கள் வைக்கும் நிலையில்,
பத்தாம் வகுப்புத் தேர்வு ஒழிக்கப்பட்டு 12 ஆம் வகுப்பில்தான் தேர்வு; நாடு முழுவதும் ஒரே போர்டு; மாநிலங்களில் தற்போதுள்ள போர்டுகள் ஒழிக்கப்பட்டு ஒரே சீர்மை கொண்டுவர யோசிக்கப்படுகிறது என்பது மிகவும் ஆபத்தான மாநில அதிகாரப் பறிப்பு போன்ற யோசனையாகும்.

இதைப் புரிந்துதான் உடனடியாக கேரளா, மேற்குவங்க முதல்வர்கள் இதனை எதிர்த்துள்ளனர். மறைமுகமாக பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை யூனியன் (மத்திய அரசு) பட்டியலுக்கே நகர்த்திக் கொண்டும் செல்லும்அடிப்படையை தகர்க்கும் முயற்சியேயாகும்.

பத்தாம் வகுப்பு அரசு தேர்வை நீக்கினால் ஏற்படும் இடையூறுகள்

மிசோராம் போன்ற மாநிலங்களில் தாய்மொழிபோல அவர்கள் கல்விக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். உ.பி., மற்றும் இந்தி பேசும் மத்திய மாநிலங்களில் பெரிதும் இந்தி வழிக் கல்வியே சொல்லித் தரப்பட்டு, ஆங்கிலத்திற்குக் கடைசி இடம்தான் என்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது!

அத்தோடு, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்றால்தான், இன்றைக்கு மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள். தேர்வில்லை என்றால், அவர்கள் அதிகக்கவனம் செலுத்தவேண்டிய வாய்ப்பே குறைந்துவிடும்.

மேலும் பாலிடெக்னிக்குகள், அய்.டி.அய். படிப்பில் சேர, குறைந்தபட்ச தகுதி, 10 ஆம் வகுப்பு என்று வைத்துள்ளதையே மாற்றிடவேண்டியிருக்கும்.

பெரும்பாலான கிராம மக்கள் இந்தத் தொழிற்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் பாதிக்கப்படக் கூடும். பொதுத்தேர்வு இல்லாவிட்டால், எதை அடிப்படையாகக் கொண்டு பாலிடெக்னிக்குகளில், அய்.டி.அய்.,க்களில் மாணவர்களைச் சேர்ப்பது?


எனவே, அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்காமல், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்காமல், தேவையான மாற்றங்களை மத்தியக் கல்வி அமைச்சர் அவர்கள் செய்யட்டும்; அதை நாம் வரவேற்கக் காத்திருக்கிறோம்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்குக் கதவைத் திறப்பதா?

அதுபோலவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இங்கே கதவு திறந்துவிடுவதும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் ஆழமாக யோசிக்கவேண்டும்!
ஏதோ வசதி படைத்த சிலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்பது வெகுக்குறைந்த சதவிகிதமேயாகும்!

அதனைக் காரணமாக்கி, அந்தப் பல்கலைக்கழகங்களையே இங்கே கொண்டு வரலாம் என்பது உலக மயம், தாராளமயம், தனியார் மயம் என்ற கொள்கையின் நீட்டிப்பே ஆகும்!
அப்பல்கலைக்கழகங்கள் நமது மனித வள மேம்பாட்டுக் கட்டுத் திட்டங்களுக்குக் உட்படுமா? என்பது அடுத்த கேள்வி.

இப்படி பலப்பல சிக்கல்கள் உண்டு. எனவே, இச்சீர்திருத்தங்களில் உடனடியாக இறங்காமல் மாநில கல்வி அமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டி விவாதித்து, அதற்குப் பிறகு கொள்கை முடிவுகளை அறிவித்தலே சிறப்பானதாக இருக்கும்.

எனவே, இதில் அவசரம் காட்டுவது விரும்பத்தக்கதாகாது.

------------------"விடுதலை" 26-6-2009

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஈராக்ஈராக்

மெசபடோமியா என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட நாடுதான் இன்றைய ஈராக். நதிகளின் நடுவிலான நாடு எனும் பொருள் அமைந்த சொல் மெசபடோமியா என்பது. அதற்கேற்பவே நாடு டைக்ரிஸ், ஈபரேட்ஸ் நதிகளுக்கிடையில் அமைந்து இருந்தது. பூவுலகில் மனித சமுதாயத்தில் மலர்ந்த முதல் நாகரிகமே இந்தப் பகுதியில் எழுந்ததுதான். பொது ஆண்டுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி பாபிலோனியர் அசிரியர் சாம்ராஜ்யங்கள் அமைந்த பகுதியாகும்.

பொது ஆண்டுக்கு 538 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீக மாமன்னன் சைரஸ் மெசபடோமியாவை வென்றார். அதன் பிறகு மகா அலெக்சான்டர் இந்நாட்டை 331ஆம் ஆண்டில் வென்றார்.
பொது ஆண்டுக்குப் பின் 637 ஆண்டுக் கால வாக்கில் அராபியர்கள் இந்நாட்டை வெற்றி கொண்டு தங்கள் தலைநகரை பாக்தாத் நகரில் வைத்து ஆண்டனர்.

1258ஆம் ஆண்டில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட மங்கோலியர்கள் ஆட்சி செலுத்தினர். 16, 17, 18ஆம் நூற்றாண்டுகளில் நாடு துருக்கி பாரசீக ஆதிக்கப் போர்களிலும் சிக்கிக் கொண்டிருந்தது. 1638ஆம் ஆண்டில் ஏற்பட்ட துருக்கியின் அதிகாரத்தின் விளைவாக ஈராக்கில் துருக்கியின் ஆட்சி 1831 வரை நீடித்தது.

முதல் உலகப் போரின்போது மெசபடோமியா வின் பெரும் பகுதி பிரிட்டனின் வசம் வந்தது. இதை ஆளும் உரிமையை 1920 இல் பிரிட்டன் பெற்றது. நாட்டின் பெயரை ஈராக் என மாற்றி பய்சல் எனும் அரசரின் தலைமையின் கீழ் ராஜ்யத்தை அங்கீகரித்தது. மெக்கா நகரின் காவலராக (ஷெரிப்) இருந்தவரின் மகனை மன்னராக்கினார்கள். ஈராக்கின் முதல் மன்னர் எனும் பெருமையை 1921 ஆகஸ்ட் மாதத்தில் அவர் அடைந்தார்.

1932 அக்டோபர் 3ஆம் நாள் ஈராக் விடுதலை பெற்றது. இருப்பினும் இரண்டாம் உலகப் போரின் போது நாட்டை பிரிட்டன் மீண்டும் கைப்பற்றியது. 14-7-1958 இல் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, இங்கிலாந்து மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது. நாடு குடியரசு என அறிவிக்கப்பட்டது. அப்துல் கரீம் காசிம் என்பார் பிரதமரானார்.

1972 இல் ஈராக்கும் சோவியத் ஒன்றியமும் 15 ஆண்டுகளுக்கான நட்புணர்வுக்கும் கூட்டுறவுக்குமான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. அந்த ஆண்டில் ஈராக்கில் இருந்த எல்லா எண்ணெய் நிறுவனங்களையும் அரசு நாட்டுடைமையாக்கியது. 1979 இல் சதாம் உசேன் புதிய அதிபரானார்.

ஈரான் நாடு ஈராக்-கின்எல்லையோர நகரங்களின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் 4-9-1980 முதல் ஈரான் - ஈராக் போர் தொடங்கியது. ஈரானிய எண்ணெய் வயல்களுக்குச் சொந்தம் கொண்டாடிய ஈராக் படையெடுப்பை ஈரான் மீது நிகழ்த்தியது. 1988 ஆகஸ்டில் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தம் ஏற்பட அய்.நா. மன்றம் உதவியது.

2.8.1990இல் குவைத் மீது ஈராக் படையெடுத்தது. இதை அய்.நா. கண்டித்தது. குவைத் நாட்டிலிருந்து ஈராக் படைகள் முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்று அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. 6.8.1990இல் பொருளாதாரத் தடைகள் ஈராக் மீது விதிக்கப்பட்டன. ஆனால் 8.8.1990இல் குவைத்தை ஈராக்குடன் இணைத்துக் கொண்டு விட்டதாக ஈராக் அறிவித்தது.

அய்.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்களை அமல் செய்திட, குவைத்தை ஆதரிக்கும் அனைத்து நாடுகளும் உதவிட வேண்டுமென பாதுகாப்பு அவை கேட்டுக் கொண்டது. 1991 ஜனவரி 16இல் வளைகுடாப் போர் தொடங்கியது. குவைத் ஆதரவு நாடுகளின் கூட்டுப் படை ஈராக் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டன. 24-2-1991 இல் தரை வழித் தாக்குதல் தொடங்கியது. பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் குவைத்தை விடுவித்தது. மார்ச் 3ஆம் நாள் போர் நிறுத்தத்தற்கு ஈராக் ஒப்புக் கொண்டது.

15.10.1995இல் நடை-பெற்ற பொது வாக்கெடுப்பின் முடிவுகளின்படி சதாம் உசேன் மேலும் 7 ஆண்டுகளுக்கு அதிபராக நீடிக்கும் நிலை உண்டானது. 31.8.1996இல் போரில்லாப் பகுதியான வடபகுதியைத் தாக்கி குர்திஷ் நகரமான இர்பில் நகரைப் பிடித்துக் கொண்டது.

1998 டிசம்பரில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கின் அணு ஆயுதங்களை அழிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு ஈராக் மீது தாக்குதலைத் தொடங்கின. பல உலக நாடுகளின் ஒப்புதலும் ஆதரவும் இல்லாத நிலையிலும், மேற்கண்ட இரு நாடுகளும் ஈராக்கின் விண்வழிவலுவைத் தகர்ப்பதற்கான தாக்குதலை நடத்தின.

ஈராக் நாட்டின் மிகப் பயங்கரமான அச்சுறுத்தல் இருப்பதாக வருணித்து அதனை எதிர்த்து உலக நாடுகள் போரிடவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உலக நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில் பேசினார். ஈராக்கிடம் இருக்கும் ஆயுதங்கள் என்று ஒரு பட்டியலை பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் வெளியிட்டார். 17-3-2003 இல் அரசு ரீதியான முயற்சிகள் ஈராக்கிடம் தீர்ந்து போய்விட்டன என உலக நாடுகள் மன்றத்திற்கான பிரிட்டனின் பிரதிநிதி கூறிவிட்டார்.

சதாம் உசேனும் அவரது மகன்களும் அவர்களின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் உத்தரவிட்டார். 48 மணி நேர அவகாசம் தந்து இறுதி எச்சரிக்கை விடுத்தார். இல்லையென்றால் போரைச் சந்திக்கட்டும் என்று கூறினார். 20.3.2003இல் அமெரிக்க ஏவுகணைகள் ஈராக் தலைநகர் பாக்தாதைத் தாக்கின. அமெரிக்க, பிரிட்டன் படைகள் ஈராக் நாட்டின் தென்பகுதி வழியாக நாட்டின் உள்ளே நுழைந்தன. 9.4.2003இல் பாக்தாத் நகரின் மய்யப் பகுதிக்குள் நுழைந்துவிட்டன. அமெரிக்கப் படைகள் குர்திஷ் கலகப் படைகளுடன் கைகோத்து வடபுல நகரங்களான கிர்குக், மோசுல் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டன.

2003 அக்டோபரில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை உலக நாடுகள்மன்றம் ஏற்றுக் கொண்டது. ஈராக்கில் அமெரிக்க நிருவாகத்தை அங்கீகரித்தது. 14.12.2003இல் சதாம் உசேன் பிடிபட்டார். அவர் மீது வழக்கு போட்டு, அவருக்குக் கைவிலங்கிட்டு, விசாரணை நடந்தது. அமெரிக்காவின் புஷ்தான் கிரிமினல் குற்றவாளி என்றே அவர் உறுதிபடக் கூறினார். அவரைக் கொல்லுமாறு அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட வழக்கு மன்ற அதிகாரிகள் தீர்ப்பு வழங்கினர்.

30.1.2005இல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தி 275 தேசிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. 15.12.2005இல் பிரதிநிதிகள் அவைக்கான 275 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்திடவும் அரசமைப்புச் சட்டத்திற்கான இறுதி ஒப்புதல் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க பிரிட்டன் ஆதரவுதாரர்களின் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.

4 லட்சத்து 37 ஆயி-ரத்து 72 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 2 கோடியே 68 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 60 முதல் 65 விழுக்காட்டினர் ஷியா முசுலிம்கள். 32 முதல் 37 விழுக்காட்டினர் சன்னி முசுலிம்கள். இவர்களில் எழுதப்படிக்கத் தெரிந்தோர் 40 விழுக்காடுதான்.

--------------------"விடுதலை" 26-6-2009