Search This Blog
12.6.09
கடவுள், மதம், ஜாதி இருக்கும் வரை எவரும் யோக்கியமாய் இருக்க முடியாது.!
மனிதன் அயோக்கியனாவது ஏன்?
மனித சமுதாயத்தினிடம் ஒழுக்கம், நாணயம் குறைந்துவிட்டது. பலாத்கார உணர்ச்சியும் கெடுதல் புத்தியும் வளர்ந்த விட்டது. இதற்கு நமது, மதம், ஜாதி என்பனவாகிய இரண்டும் தான் காரணம்.
கடவுளைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் கடவுள் என்றால் என்ன என்பது உலகில் யாருக்குமே தெரியாது. அது வெறும் வேஷம்தான்.
மதம், சாதி என்பது யாவருக்குமே தெரியும். மதம் என்பது மற்ற மதக்காரனிடம் துவேஷம், வெறுப்பு, இழிவுப்படும் தன்மை என்பனவாகும்.
எந்தவிதமான கூடாத, கேடான காரியத்தைச் செய்தாவது மதத்தைக் காப்பாற்றலாம் - காப்பாற்ற வேண்டும்; அதுபோலவே தானும் வாழ வேண்டும் என்பதாகும். ஜாதியும் அதுபோன்றதே. இந்துமதம் - பார்ப்பன ஜாதி என்பவை எந்தவிதமான அதர்மத்தைச் செய்தாவது தர்மத்தைக் காப்பாற்று என்பதோடு, பிராமணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பதாகும்.
அதுபோல கிருஸ்துவர், மகமது (இஸ்லாம்) மதங்கள் மனிதன் என்ன பாவத்தைச் செய்தாலும் சடங்கு, பிரார்த்தனை, தொழுகை மூலம் பாவமன்னிப்புப் பெறலாம் என்பது.
இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்ட மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியம் முதலியவைகளை எதிர்ப்பார்க்கமுடியுமா? எந்த மனிதனாலாவது ஒழுக்கம், நாணயம், நேர்மை, யோக்கியம் ஆகியவைகள் உடையவனாக இருக்க முடியுமா?
பாவத்திற்கு (கேடு செய்ததற்கு) பிரார்த்தனையால், வேண்டுதலால் மன்னிப்பு கிடைக்கும் என்று கடவுளை, மதத்தை வணங்குகின்ற கொள்கை கொண்ட எவனால் தான் உலகில் யோக்கியனாக இருக்க முடியும்? அதனால் தானே கடவுள் பக்தர்களிடம் வேஷத்தைத் தவிர ஒழுக்கத்தையோ யோக்கியத்தையோ காண முடிவதில்லை,
இப்பொழுது தெரிகிறதா, மனிதன் ஏன் அயோக்கியனாய் இருக்கின்றான் என்பதற்குக் காரணம்?
ஆகவே கடவுள், மதம், ஜாதி ஆகியவை உலகில் இருக்கும் வரை எவரும் யோக்கியமாய் இருக்க முடியாது.
மனிதனுக்கு ஆசை இயற்கை; அதோடு அதற்காக எது செய்தாலும் மன்னிப்பு உண்டு என்றால் என்ன ஆகும் என்பதை நீங்களே சிந்தித்தும் அனுபவத்தைக் கொண்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
-------------------தந்தைபெரியார் 92-ஆம் ஆண்டு பிறந்த நாள் "விடுதலை" மலரில் (17.9.1970) தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment