Search This Blog

18.6.09

ஜாதி நீங்கும்வரை மக்களுக்கு, வகுப்புரிமை வழங்க வேண்டும்


சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடும் - அதன் தாக்கமும்!

பிராமணர் அல்லாதோர் என்ற வகைப்பாடே வசதி கருதியதாகும். சமயத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர், தாழ்த்தப்பட்டோர் என்று மூன்று பெரும் பிரிவுகளை வகைப்படுத்துவதாக 1891-ஆம் ஆண்டு சென்னை மாகாண மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டன. அதிகாரங்களை இந்தியர் மயமாக்க வேண்டும் என்ற கருத்தின்படி கல்வி வாய்ப்புகள் பரவலாக்கப்பட்டன. சில ஜாதிகளுக்கும் அரசு சலுகைகள் கொடுத்தது. 1903-இல் 45 ஜாதிகளும் 1923-இல் 245 சாதிகளும் சலுகை பெற்றனர். பல ஜாதிகளுக்கு அரைச் சம்பளச் சலுகையும் கொடுக்கப்பட்டது. கல்வியில் கட்டணச் சலுகை தரப்பட்டதே தவிர, ஜாதிவாரி இடஒதுக்கீடு இல்லை. அரசுப் பதவிகளில் பின்பற்றும் இடஒதுக்கீடே இதிலும் ஒரு நடைமுறையாகப் பின்பற்றப்பட்டு வந்தது. அரசின் சலுகைகளைப் பெற்று படிக்கும் மாணவர்கள் தொகை உயர்ந்தது. சென்னை மாகாணத்தில் தமிழ் நாட்டிற்குள்ள விவரங்களைக் காண்போம்.

பள்ளிக் கல்வி

ஆண்டு - மொத்த மாணவர்கள்- மாணவர்களில் பிராமணர் சதவீதம் - மாணவர்களில் பிராமணரல்லாதோர் சதவீதம்




1889- 1890 - 68,370 - 31.2 - 40.0
1910-1911 - 1,52,413 - 34.3 - 42.4
1920-1921 - 1,61,796 - 37.8 - 45.1
1925-1926 - 1,76,144 - 30.8 - 48.8

கல்லூரிக் கல்வி

ஆண்டு - மொத்த மாணவர்கள் - மாணவர்களில் பிராமணர் சதவீதம் - மாணவர்களில் பிராமணரல்லாதோர் சதவீதம்


1889- 1890 - 2,688 - 76.7 - 12.5
1910-1911 - 3,741 - 68.5 - 20.1
1920-1921 - 7,580 - 64.2 - 21.9
1925-1926 - 12,258 - 53.7 - 32.3

இரண்டையும் இணைத்துக்காணும் பொழுது 35 ஆண்டுகளில் (1889-90 முதல் 1925-26 வரை) ஏற்பட்ட வளர்ச்சிகளை இவ்வாறு தொகுத்துக் காணலாம்.

பள்ளிக்கல்வி பெற்ற மாணவர்களின் சதவீத உயர்வைவிடக் கல்லூரிக் கல்வி பெற்ற மாணவர்களின் சதவீத உயர்வு கணிசமானது. அப்படியாயின், பள்ளிக் கல்வியின் பெருக்கத்தைவிட உயர் கல்வியின் பெருக்கம் அதிகம். உயர்நிலைப் பள்ளிகளில் பிராமணர் அல்லாதோர் அதிக சதவீதத்தினர்.

கல்லூரியில் பயிலும் மொத்த மாணவர்களில் பிராமணர் சதவீதம் சீரான விதத்திலும் படிப்படியாகக் குறைந்து கொண்டே சென்றுள்ளது. மேலும் இந்த உயர்வு, 1920-க்குப் பின் மிகக் கணிசமானது. ஆக, வேலையை எதிர்நோக்கி உள்ள மாணவர்களில் பிராமணர்களும் பிராமணர் அல்லாதோரும் 5.3 என்ற விகிதத்தில் நெருங்கியுள்ளனர்.

எனவே, வேலை வாய்ப்பு வேட்டையில் இரண்டு தரப்பினருமே அருகருகே நின்று போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். எனினும், இந்த வகைப்பாட்டை மாணவரின் சமுதாய, பொருளாதாரப் பின்னணி கொண்டு பார்க்கலாம்.

ஆண்டு - அதிகாரிகள் குடும்ப சதவீதம் - சிறு அதிகாரிகள் குடும்ப சதவீதம் - வணிகக் குடும்ப சதவீதம் - நிலப்பிரபுக் குடும்ப சதவீதம்





1895-1896 - 38.3 - 5.1 - 5.6 - 46.9
1926-1927 - 31.4 - 11.5 - 9.2 - 39.6


மொத்த மாணவர்களில் பிராமணராயினும் வேறு யாராயினும் அதிகாரிகள் மற்றும் நிலப்பிரபுக்களது குடும்பத்திலிருந்து 71 சதவீதம் பயின்று கொண்டிருந்தனர். ஆக, தொழில் ரீதியாக பார்த்தால் அதிகாரிகள், நிலப்பிரபுக்கள், வணிகர்கள் ஆகிய குடும்பங்களிலிருந்து கற்ற மாணவர்க்கே பயனளிக்கத்தக்க வகையில் அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு அமைந்து போயிற்று. இன்னும் சற்று நுண்முறையில் காண்போம். அதிகாரிகள், வணிகர்கள், நிலப்பிரபுகள் ஆகியோரில் எந்தெந்த ஜாதியினர் படிப்பறிவு உள்ளவராக இருந்தனர் என காண்போம்.

எண் - ஜாதி - 1901விழுக்காடு - 1911 விழுக்காடு - 1921 விழுக்காடு


01 - பிராமணர்கள் - 70.6 - 71.9 - 71.5
02 - செட்டியார்கள் - 32.0 - 39.1 - 39.5
03 - நாடார்கள் - 15.4 - 18.1 - 20.0
04 - பலிஜா நாயுடுகள் - 14.3 - 20.9 - 22.3
05 - வேளாளர்கள் 6.9 - 24.6 - 23.2

இந்தப் பொதுக்கல்வி நிலவரப்படியே பிராமணர் தம் மக்கள் தொகையில் எப்போதும் 70 விழுக்காட்டினர்க்கு மேலாகவே கற்றறிந்தோரைக் கொண்டுள்ளனர். செட்டியார், பலிஜா நாயுடு, நாடார் ஆகிய வணிக ஜாதியினர் அடுத்தடுத்து இருக்க, நிலவுடைமைத்துவ மற்றும் அதிகாரத்துவ ஜாதியான வேளாளர் பொதுக்கல்வி வளர்ச்சி வீதம் (1901-1911) மிகவும் கணிசமானது. பிராமணருக்கு எதிரான விழிப்புணர்வில் பங்கு கொண்ட ஜாதியினராகவும் இவர்களே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே, வேலை வாய்ப்புக்கும் ஆட்சி நிருவாகத்திற்கும் ஆங்கிலப் படிப்பு அத்தியாவசியமானது. அதைப் பெற்ற ஜாதி சமூகத்தினரைப் பார்க்கும்போது, எந்த அளவுக்குப் பிராமணரது பிடிப்பு இருந்ததென்பதைத் தெளிவாக அறியலாம்.

ஆங்கிலம் கற்றோர் சதவீதம்

எண் - ஜாதி - 1901 விழுக்காடு - 1911 விழுக்காடு - 1921 விழுக்காடு


01- பார்ப்பனர் - 17.88 - 22.27 - 28.21
02- பலிஜா நாயுடு - 0.98 - 2.60 - 3.43
03 - வேளாளர் - 0.19 - 2.12 - 2.37
04 - செட்டியார் 0.15 - 0.98 - 2.34
05 - நாடார் - 0.05 - 0.30 - 0.75

ஆங்கிலக் கல்வி படித்தோரே அரசியல் பதவிகளையும், அரசுப் பதவிகளையும் பெற்றனர் என்பவையோடு அந்தக் காலத்திய அரசியல் சூழ்ச்சிக்காரர்களாகவும் இருந்தனர் என்பதனையும் இணைத்து, இந்தப் பட்டியலை நோக்குதல் பொருத்தமாக இருக்கும். அதாவது, 1921-இல் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 2 சதவீதத்தினராக இருப்பினும், தம் மக்கள் தொகையில் 28.2 சதவீதம் ஆங்கிலம் பயின்றோராக இருப்பதே முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம் அமைந்தது.

சுயமரியாதை இயக்க முதல் மாநாடு:

மேற்கண்ட பின்னணியில் 25.08.1929-இல் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் ஏற்றப்பட்ட கொள்கைகளைக் கவனிக்க வேண்டும்.

அ. தீண்டப்படாதவர்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளை இலவசமாக வழங்கி, கல்வி கற்பிக்க வேண்டும்.

ஆ. பார்ப்பனரல்லாத இளைஞர்களின் கல்வித் தடையை நீக்க ஏற்பாட செய்ய வேண்டும்.

இ. கல்வியில் தாய்மொழி, அரசு மொழி தவிர மற்ற கல்விக்குப் பொது நிதியைச் செலவழிக்கக் கூடாது. ஆரம்பக் கல்விக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும். உயர்கல்விக்குப் பொது நிதியைச் செலவழிக்கக் கூடாது. மேற்கொண்ட தீர்மானங்கள் கல்வி வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டன.

மேலும், சடங்குகள் செலவில்லாமல், சுருக்கமாகச் செய்யப்பட வேண்டும். கோவில் பணத்தை அறிவு வளர்ச்சி, பொது நல வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். மூடப்பழக்கங்களை வளர்க்கும் நூல்களையும், ஆசிரியர்களையும் ஒதுக்க வேண்டும். உணவு விடுதிகளில் வேறுபாடு கூடாது. ஜாதி நீங்கும்வரை மக்களுக்கு, வகுப்புரிமை வழங்க வேண்டும் (குடிஅரசு 25.8.1929)

- என்ற பொதுச் சீர்திருத்தங்கள் இம்மாநாட்டில் கொண்டு வரப்பட்டன. வரையறுக்கப்பட்ட தீவிரமான ஜாதி ஒழிப்புக்கான கொள்கைகள் பின்வருமாறு இருந்தன. இவைகளைப்பற்றி தந்தை பெரியார் அவர்களே "குடிஅரசு" இதழில் தலையங்கம் எழுதினார். மக்கள் பிறவியில் ஜாதி பேதம் கிடையாது. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணம் இவைகளைப் பின்பற்றக்கூடாது. வருணாசிரமப் பிரிவுகளை (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர்) ஏற்றுக் கொள்ளக்கூடாது. மக்களுக்குள் தீண்டாமையை ஒழித்து, பொதுக்குளம், கிணறு, நாடக சாலை, சத்திரம், தெரு, கோவில் முதலியவைகளில் பொது மக்களுக்குச் சம உரிமை இருக்கச் செய்ய வேண்டும். சில சுயநலக் கூட்டத்தார் இம்மாற்றங்களைத் தடை செய்வதால், அரசு சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

ஜாதி, மத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால், ஜாதி, மத வித்தியாசங்களைக் காட்டும் பட்டம், குறி முதலியவற்றை உபயோகிக்காமல் இருக்க மக்களைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறாக பல்வேறு புரட்சிகரமான மேலும் நடைமுறைக்காக கொள்கைகளைச் சுயமரியாதை இயக்கம் தனது முதல் மாநாட்டிலே வெளியிட்டது.


----------------"விடுதலை" 13-6-2009

0 comments: