Search This Blog

26.6.09

மாமனிதர் யார்?
மாமனிதர் யார்?மாமனிதன் என்று யாரைச் சொல்லலாம் என்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.

கேட்டுவிட்டு, அவரே அந்த சொற்பொழிவின் இடையே விடையையும் மற்றொரு கேள்வி போட்டுச் சொன்னார்.

மாமனிதர்கள் பட்டியலில் இராணுவ வீரர்களான அலெக்சாண்டர், அட்டில்லா, சீசர், தமர்லேன் ஆகியோரைப் பற்றிக் கேட்டால் பதில் அளிப்பது எளிது. காரணம் இராணுவ வீரர்கள் புதிய வரலாறு படைக்கிறார்கள். மிகப் பெரிய மாற்றங்களையும் உண்டாக்குகிறார்கள். அவர்களுடைய வெற்றிகள் அவர்களின் சமகால மக்களை மலைப்புறச் செய்தன.

மிகச் சிறந்த தளபதியான நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்குப் பின்பும்கூட, பிரான்ஸ் தேசம் முன்பிருந்ததை விடச் சிறிய நிலப்பரப்பாகவே மிஞ்சியது. உலக இயக்கத்தின் போக்கில் குறிப்பிட்ட கால கட்டங்களில் தோன்றும் இது போன்ற மாமனிதர்கள் தாங்கள் வாழ்ந்த சமூகத்தின் மீது எந்த விதமான நிரந்தரப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
தாமஸ் கார்லைல் அவருக்கே உரிய விதத்தில், மாமனிதர் யார் என்பதை ஆராய்கிறார்: மாமனிதர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் உண்மையின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பது நம்பத்தகுந்ததுதானா என்பது விவாதத்திற்கு உரியது. உண்மையான உணர்வுடன் செயல் ஆற்றுபவரே மாமனிதராக இருப்பதற்கான அடித் தளத்தைப் பெற்றவர் என்று எனக்குப் படுகிறது. ஒருவனிடம் ஒன்றை முடிப்பதற்கான திறமை இல்லாதிருக்கலாம். ஆனால், அச்செயல் குறித்து உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், அவனே நேர்மையான மனிதன். ஆழமான, உண்மையான, நேர்மையான மாமனிதனுக்கான முதன்மையான குணநலம்.

அதே நேரத்தில் அறிஞர் கார்லைல் நேர்மைக்கான சோதனையையும் துல்லியமாக விளக்கியுள்ளார்!

தன்னை நேர்மையானவர் என்றுக் கூறிக் கொள்பவர் நேர்மையாக இருக்க முடியாது; அது கீழ்த்தரமானது; அது மேலோட்டமானது; வீண் பெருமை பேசுவது; பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காக செயலாற்றுவது; மிதமிஞ்சிய தற்பெருமை போற்றுவது. ஆனால், மாமனிதனின் நேர்மையானது இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது தற்பெருமை பேசாது. மாறாக, நேர்மையற்ற செயலை நினைத்துக்கூடப் பார்க்காது. நேர்மையின் விதி முறைகளை அனுசரித்து, ஒரே ஒரு நாள் மட்டும் நடப்பது என்பது எந்த மனிதனுக்காவது சாத்தியமா? இல்லை.

மாமனிதர்கள் தங்கள் நேர்மையைப் பறைசாற்றிக் கொள்வதில்லை. முற்றிலும் அதற்கு அப்பாற்பட்டவர்கள். தான் நேர்மையானவன்தானா என்ற கேள்வி கூட அவனுள் எழுவதில்லை. ஏனெனில், நேர்மை அவனைச் சார்ந்து இருப்பதில்லை. நேர்மை அவனது இயல்பு. அவன் நேர்மையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

சமூகத்தின் ஒரு புறம் சாட்டையையும் மறுபுறம் துடைப்பத்தையும் கொண்டவராக சமூகத்தைத் தூய்மைப்படுத்தி, சமூகத்தினை வழிநடத்திச் செல்பவர்கள் மாமனிதர்கள் என்று சிலர் எண்ணலாம்.

அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார்: இந்த ஆய்வுகள் எல்லாம் அரைகுறையானவை. எதிலும் முழுமை இல்லை என்பதே என் முடிவு. நேர்மையே மாமனிதனுக்கான உரைகல்லாக இருக்க வேண்டும் என்று கிளமென்சோ (clemenceau), பெரும்பாலான அரசியல் அறிஞர்கள் கயவர்கள். அரசியல் அறிஞர்கள் மாமனி-தர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேர்மையற்ற அரசியல் அறிஞர்களிடம் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்துதான் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார் கிளமென்சோ என்கிறார் அம்பேத்கர். நேர்மையற்ற ஒருவனை மாமனிதன் என்று கூறமுடியாது. மாமனிதன் என்று அழைப்பதற்கு நேர்மையுடன் வேறு சில பண்புகளும் இணைந்திருக்க வேண்டும். நேர்மையுள்ளவன் மூடனாகக் கூட இருக்கக் கூடும்! மூடன் மாமனிதனுக்கு நேர்மாறானவன்.

நெருக்கடியான நேரங்களில் சமூகத்தைக் காத்து நிற்க வழி காண்பவனே மாமனிதன்.
சிந்தனைத் திறனும், நேர்மையும் இன்றி எவரும் மாமனிதனாக இருக்க முடியாது.
புகழ்பெற்ற மனிதன் எல்லாம் மாமனிதனாகி விடமுடியாது!


சமூகத் தேவைகளால் உந்தப்பட்டு சமூகத்தை நல்வழியில் நடத்திச் செல்பவனாகவும், தூய்மைப் படுத்துகிறவனாகவும் செயல்படுபவனே மாமனிதன். ரானடே என்ற மராத்திய சமூக சீர்திருத்தவாதியையே இந்த மாமனிதர் விளக்கத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தினார் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர்.

ஒரு சமூக சீர்திருத்தவாதிக்குத் தேவையானது தொலை நோக்கும் துணிவுமே என்று அழகுபடக் கூறிவிட்டு, யார் அதிக துணிச்சலுள்ளவர் என்று கேட்கிறார். விடையையும் கூறுகிறார்!

சமூகத்திற்கு அறைகூவல் விடுத்து பகிஷ்கரிப்பைத் தானே வரவழைத்துக் கொள்ளும் சமூக சீர்திருத்தவாதியா? அல்லது அரசை எதிர்த்ததற்காக, ஒரு சில மாதமோ, வருடமோ சிறைத் தண்டனை பெறும் அரசியல்வாதியா?

ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூகத்தை எதிர்த்ததற்காக, அவரை யாரும் தியாகி என்று கொண்டாடுவது இல்லை. அவருடன் உறவாடக் கூடத் தயங்குவர். ஆனால், அரசியல்வாதி அரசை எதிர்த்துப் பேசினால், முழுச் சமூகமே அவருக்குத் துணை நிற்கிறது; அவர் புகழப்படுகிறார், மீட்பர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார். தன்னந்தனியே போராடும் சமூக சீர்திருத்தவாதிதானே அதிக துணிவுடன் செயல்படுகிறார்.

யார் மாமனிதர்? விடை காண்க!

------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும்வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து "விடுதலை" 24-6-2009

4 comments:

களப்பிரர் - jp said...

மாமனிதர் யார் என்று கேள்வி கேட்டுவிட்டு, அதுக்கு கீழே வீரமணி படம். ( வீரமணி என்று லேபேல் வேறு ). நல்ல சிரிப்பு தான் !!!

தமிழ் ஓவியா said...

வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரையில் வீரமணி அவர்கள் படம் போடாமல் உங்களுடைய படத்தையா போடமுடியும்.அவர் எழுதியதால் லேபிலில் அவர் பெயர் போட்டுள்ளேன்.

அதை பார்த்து உங்களுக்கு சிரிப்பு வருகிறதென்றால் உங்களுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கும். எதற்கும் நல்ல மன நல மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளவும்.

Anonymous said...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனிதனை பிடிக்கும்.150 கோடி(இந்த காலகட்டத்தில் மட்டும்)மேலான மக்கள் ஒரு தலைவனை இன்றும் தங்களுடைய உயிரினும் மேலாக மதித்து கொண்டிருக்கிறார்களே அவர்தான் சிறந்த மனிதர்.அந்த மாமனிதர் "நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்)" அவர்கள்தான்.அவர் ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் சிறந்த தலைவராக விளங்கினார்.

நம்பி said...

//இறையடியான் said...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனிதனை பிடிக்கும்.150 கோடி(இந்த காலகட்டத்தில் மட்டும்)மேலான மக்கள் ஒரு தலைவனை இன்றும் தங்களுடைய உயிரினும் மேலாக மதித்து கொண்டிருக்கிறார்களே அவர்தான் சிறந்த மனிதர்.அந்த மாமனிதர் "நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்)" அவர்கள்தான்.அவர் ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் சிறந்த தலைவராக விளங்கினார்.
June 27, 2009 11:54 AM //

மனிதனை (பெண், ஆண்)மனிதன் மதித்து தன் உடன்பிறப்புகளைப் போல், உறவுகளைப்போல், சமத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மனிதரும் "சிறந்த மனிதர்".

"சிறந்தவர்" என்ற பட்டத்தை தூக்கி இப்பொழுது இல்லாதவருக்கும், காணாதவருக்கும் கொடுத்து விட்டு, வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை கீழே போட்டு மிதிப்பதை, இழிவு படுத்துவதை எந்த மனிதநேயமிக்கவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த மனிதநேயமிக்கவரே பகுத்தறிவாளர்.

அந்த இழிவைத் துடைப்பதற்கு தடையாக இருப்பவர் எவரையும் பகுத்தறிவாளர்கள் தூக்கி எறியவும் தயங்குவதில்லை. இது தான் பெரியார் எனும் தலைசிறந்த மனிதர் கற்று கொடுத்த பாடம். அதை பின்பற்றுவதே பகுத்தறிவாளர்களின் கடமை.

எங்கெங்கெல்லாம், இழிவுகள் இருக்கிறதோ? அங்கெங்கெல்லாம் பாரபட்சமில்லாமல், பெரியார் இருப்பார், அவரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் எண்ணங்களில், உருவங்கொண்டு...