Search This Blog

28.6.09

மழைக்கு ஏற்பாடு செய்ய மனம் இல்லாத கடவுள் மனம் கல்லா? கருணையின் வடிவமா?


வருண ஜெபமா?

ஆந்திர மாநிலத்தில் மழை பொழியவில்லை என்பதற்காக அம் மாநில முதலமைச்சர் டாக்டர் ராஜசேகர ரெட்டி, கோயில்களில் யாகங்களை, வருண ஜெபங்களை நடத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். இந்து மதக் கோயில்களில் மட்டுமல்ல; சர்ச், மசூதிகளில் கூட சிறப்பு வழிபாடுகளை நடத்தச் சொல்லியிருக்கிறார்.

இவ்வளவுக்கும் அவர் ஒரு டாக்டர் படித்தவர்தான். அவரே இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுகிறார் என்றால், நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் எந்தவித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதுதான் தெளிவு. தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ்தான்.

தமிழ்நாட்டில்கூட எம்.ஜி.ஆர். முதலமைச்சராகவிருந்த காலகட்டத்தில் மழை வேண்டி புழல் ஏரியில் குன்னக்குடி வைத்தியநாதய்யர் மூலம் ஹர்ஷ வர்த்தினி ராகத்தை இசைக்கச் செய்தார். விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை.

மழை பெய்வது எப்படி என்பதை நான்காம் வகுப்பு மாணவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே டாக்டருக்குப் படித்தும்கூடத் தெரியவில்லை என்றால், இந்தப் படிப்பு எதற்கு என்று கல்விமீது கூடக் கோபம் பிறக்கிறது.

கடவுள் கருணையால்தான் மழை கிடைக்கும் என்றால், அந்தக் கடவுளுக்குத் தெரியவேண்டாமா நாட்டு மக்களுக்கு மழை தேவையென்று?

யாகம் நடத்தி, தோத்திரம் பாடினால்தான் மழையைக் கொட்டோ கொட்டென்று கொட்டச் சொல்வாரா?

அப்படியென்றால் தற்புகழ்ச்சிக்கும், முகமனுக்கும் அடிமையாகக் கூடிய சராசரி மனிதனுக்கும் கீழான ஒன்றா?

இன்னொன்று கடவுள் கருணையானவர் என்கிறார்களே, மழையில்லாத காரணத்தால் பயிர்கள் காய்கின்றன, உயிர்களுக்கு உணவு கிடைக்காது; பட்டினிச் சாவு ஏற்படும் என்றிருந்தும், மழைக்கு ஏற்பாடு செய்ய மனம் இல்லாத கடவுள் மனம் கல்லா கருணையின் வடிவமா?

கடவுளாவது கத்தரிக்காயாவது! அது வெறும் கல்லு குத்துக்கல் என்று பெரியார் கட்சிக்காரர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்று மக்கள் அறியவேண்டாமா?

ஒருமுறை சென்னைக் கடற்கரையில் மழைக்காக அனைத்து மதக்காரர்களும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். அப்பொழுது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அர்த்தமிக்க வினா-வொன்றை எழுப்பினார்.

வழிபட்டால், ஜெபித்தால், தொழுதால் மழை கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கை சம்பந்தப்பட்ட மதவாதிகளுக்கு, பக்தர்களுக்கு இருந்திருக்குமேயானால் ஆளுக்கொரு குடை எடுத்துச் சென்று இருக்கமாட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பினார்.

நியாயமான கேள்விதானே வழிபட்டாலும் மழை வராது என்று எண்ணிய காரணத்தால்தானே அவர்கள் குடையை எடுத்துச் செல்லவில்லை; அப்படியானால் அவர்களும் நாத்திகர்கள்தானே?

------------ மயிலாடன் அவர்கள் 27-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: