Search This Blog

Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

28.1.10

இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் - இயக்குநர் பாலா

தேசியவிருது பெற்றதற்காக
இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்

-இயக்குநர் பாலா

நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேள்வி: தேசிய விருதுபெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா?

பதில்: நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்? கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர், நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்?


---------------------”விடுதலை” 27-1-2010

2.12.09

பகுத்தறிவு நூல்களைப் பரப்புவதில் சாதனை படைத்து வருகிறார் வீரமணி

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பகுத்தறிவு
நூல்களைப் பரப்புவதில் சாதனை படைத்து வருகிறார் ஆசிரியர் வீரமணி

எழுத்தாளர் சின்னக்குத்தூசியுடன் நேர்காணல்

தியாகராஜன் இப்பெயரை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சின்னக்குத்தூசி எனும் பெயரை தெரியாத தமிழ் மக்கள் திராவிட இயக்கத்தவர் இருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் மூத்த வாழும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் சின்னக்குத்தூசி என்று அறியப்பட்ட திருவாரூர் தியாகராஜன் அவர்கள் சிறு வயது முதலே பெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டவர். அவரின் உடலுக்குத்தான் இளமை குறைந்திருக்கிறதே தவிர, அவரது எழுத்துகளுக்கு என்றுமே குறைந்ததில்லை. சற்றே உடல்நலம் குன்றியிருந்தாலும், உள்ளத்தின் உறுதியுடன் அன்றாடம் முரசொலி அலுவலகம் சென்று விடுகிறார்.

தமிழர் தலைவர் அவர்களிடத்தில் மாறாத அன்பு கொண்டவர். தமிழர் தலைவரின் பிறந்த நாளினையொட்டி விடுதலை சிறப்பு விருந்தினர் பக்கத்திற்காக சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு தெளிவாகவே பதிலளித்தார்.

நீங்கள் அடிப்படையில் திராவிட இயக்கத்தவரா?

நான் அப்படிச் சொல்லிக் கொள்வதில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பெருமைப்பட்டுக் கொள்பவனாகவே வாழ்ந்து வருகிறேன். ஆனால் நான் அடிப்படையில் திராவிட இயக்கத்தவனா, அல்லவா என்பதை நானே சொல்லிக் கொள்வதைவிட என்னோடு பழகியவர்கள் எனது எழுத்தைப் படித்தவர்கள், இனிவரும் காலத்திலும்கூட என்னைப் பற்றியும் எனது எழுத்து பற்றியும் புதிதாகத் தெரிந்து கொள்ளப் போகிறவர்கள் என்னைப் பற்றி என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்களோ அதுதான் சரியான பதிலாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் நான்!

நீங்கள் ஆசிரியர் பணியைத் துறந்து பொது வாழ்க்கைக்கு வரக் காரணம் என்ன?

நான் திருவாரூரில் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்குப் படிப்பைவிட அரசியலிலேயே அதிக நாட்டமிருந்தது. அப்போது திருவாரூர் அரசியலின் சூத்திரதாரியாகவும் நகர்மன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை வாய்ந்தவராகவும் விவசாயப் பெருங்குடி மக்களிடம் அபரிமிதமான செல்வாக்குப் படைத்தவராகவும் இருந்த சிங்கராயரோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயம் காலப் போக்கில் நெருக்கமானவன் என்று கூறுமளவுக்கு வலுவடைந்தது. பெரும்பாலான நேரங்களை அவருடனேயே கழிப்பேன்; அவரது விவசாய சங்கப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உதவுவேன்.

எனது பிறப்பு காரணமாக, என்னை திராவிடர் கழகத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அது ஒரு மனக் குறையாகவே இருந்தாலும், அன்று திருவாரூர் திராவிடர் கழகத்தின் பெருந்தூண்களாக இருந்து தஞ்சை மாவட்டத்தை பெரியாரின் கோட்டையாக மாற்றிட அரும்பாடுபட்ட வி.எஸ்.பி.யாகூப், முத்துக்கிருஷ்ணன், தண்டவாளம் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ரங்கராஜன், பேபி கந்தசாமி, சுரக்குடி வாசுதேவன், சோடாக்கடை ராமையன் போன்ற திராவிட இயக்கத் தீரர்களுடனும் நட்பு ஏற்பட்டது.

நான் உயர்நிலைப் பள்ளிப்படிப்பு முடித்த பின்னரும் வேலை எதுவும் தேடுவதில் அக்கறை காட்டாமல் சம்பாதித்து வீட்டுக்கு உதவிடும் எண்ணமில்லாமல் பொது வாழ்க்கையில் நாட்டம் மிகக் கொண்டவனாகவே இருந்து வந்தேன்.

ஒருநாள் சிங்கராயருடன் நகர்மன்றத் தலைவராக இருந்த வி. சாம்பசிவம் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். பொதுவான அன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து வழக்கம் போல் அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் சிங்கராயரிடம்,

என்ன எப்போது பார்த்தாலும் இவர் உங்களுடனேயே இருக்கிறாரே, வேலைக்குப் போக இவருக்கு விருப்பமில்லையா என்று என்னைப் பற்றிக் கேட்டார்.

சிங்கராயர் சொன்னார்:

பெரியார் அவர்கள் திருச்சியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றினைத் தொடங்கியிருக்கிறார். அந்தப் பள்ளியில் இவரை சேர்த்துவிடவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்...

என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே சாம்பசிவம் அவர்கள் குறுக்கிட்டு,

பெரியாருக்கு நான் சிபாரிசுக் கடிதம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னை ஆசிரியர் பள்ளியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரி அய்யாவுக்கு ஒரு சிபாரிசுக் கடிதத்தை சிங்கராயர் கேட்காமலே தாமாகவே முன்வந்து எழுதிக் கொடுத்துவிட்டார்.

சிங்கராயர், யாகூப் மூலமாக அய்யாவுக்கு என்னை நன்கு தெரியும். நான் திருச்சி சென்றேன். அப்போது இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. புத்தூர் பெரியார் மாளிகைக்குள் சென்றேன். பெட்டியடி மேசை கணக்குப் பிள்ளை மேசை என்பார்களே அந்த மாதிரி மேசையின் மேல் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்த பெரியார் எங்கே இந்த நேரத்தில் என்ற கேள்வியுடன் என்னை வரவேற்று உட்காரச் சொன்னார். நான் சிபாரிசுக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன்.

பிரித்துப் படித்த பெரியார் என்னை நிமிர்ந்து பார்த்து,

உங்களை புத்திசாலிப் புள்ளையாண்டான் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று தெரியாமல் திகைத்துப் போனேன்.

அய்யா தொடர்ந்து சொன்னார்

ஜூன் மாதம் ஆறாம் தேதியோடு அட்மிஷன் முடிந்து, பயிற்சிப் பள்ளியும் திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இப்போது வந்து இடம் கேட்கிறீர்களே! என்றவர் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்டார். இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினேன்.

அடுத்த சில நிமிடங்களில்,.

மணியம்மையார் அவர்கள் அதே இடத்தில் தட்டு வைத்து உணவு பரிமாறினார். அப்போது பெரியார் தமது செயலாளர் கொரடாச்சேரி கிருஷ்ணமூர்த்தியை அழைத்து,

நம்ம நெ.து.சு. அய்யா அவர்களுக்கு செக்ஷனுக்கு அய்ந்து இடங்கள் கூடுதலாக அனுமதி வழங்கக்கோரி எழுதுங்கள். கிடைத்தால் இவருக்கே முதல் கார்டை அனுப்பி இவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.

நான், இரவு 12 மணிக்கு மேல் திருவாரூர் செல்ல ஒரு ரயில் இருக்கிறது அய்யா நன்றிங்க அய்யா நான் வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டபோது, பெரியார் மாளிகை வளாகத்தின் நிருவாகியாக இருந்த சோமுவை அழைத்து இவரை நம்ம வேனிலேயே கொண்டுபோய் ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிடுங்கள் என்றார். பத்து நாள்களுக்குப் பிறகு எனக்கு அட்மிஷன் கார்டு வந்தது.

இப்படித்தான் நான் ஆசிரியரானேன் சிங்கராயர் தூண்டுதலில், சாம்பசிவத்தின் சிபாரிசில் அய்யாவின் பேரன்பினால் நான் ஆசிரியரானேன்.

எனினும் எனக்கு அரசியலிலேயே அதிக நாட்டமிருந்ததால் சில காலம் பள்ளி ஆசிரியராக இருப்பேன்; ஆசிரியர் பதவியைத் துறந்துவிட்டு பத்திரிகையாளனாக அரசியல் உலகத்துக்கே திரும்பிவிடுவேன். குன்றக்குடி அடிகளாரின் பள்ளி உட்பட எத்தனைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினேன்; எத்தனை பத்திரிகைகளில் பணி ஆற்றினேன் என்பது தனிக்கதை!

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கம்யூனிச அமைப்புகளைவிட திராவிடர் இயக்கம் பலமாக வேரூன்றக் காரணமென்ன?

வர்க்க பேதத்தை ஒழிப்பதா? வர்ண பேதத்தை ஒழிப்பதா? எதற்கு முதலிடம் தருவது? என்ற கேள்விக்குத் தந்தை பெரியார் அவர்கள்,

தமிழகத்தில் மட்டுமல்ல; அகில இந்தியாவிலும் ஜாதி பேதம்தான் சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் எதிரியாகவும் வாய்ப்புக்கேடாகவும் இருந்து வருகிறது. எனவே முதலில் ஒழிக்கப்படவேண்டியது ஜாதி பேதங்களைத்தான் என்று ஓங்கியடித்துச் சொன்னார்.

ஜாதிப் பிளவுகளுக்கும் பேதங்களுக்கும் மூல காரணமாக இருந்துகொண்டுஅனைத்து ஜாதியினர் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஜாதி வேறுபாடுகளுக்கு அடிப்படை அஸ்திவாரமாக இருக்கும் பார்ப்பனர் கொட்டத்தை ஒடுக்குவதே ஜாதி ஒழிப்பு முயற்சிகளில் முதலிடமாக இருக்கவேண்டும் என்று திண்ணமாக நம்பிய திட்டவட்டமாக அறிவித்த பெரியாரின் தன்மான இயக்கம்;

பார்ப்பானே, வெளியேறு!

என்று முழக்கமிட்டது.

சூத்திரன் என்றால்

ஆத்திரம் கொண்டுஅடி!

என்று பெரும்பான்மைச் சமூகத்தினரான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களிடம் ஜாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அந்த கால கட்டங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் வர்க்க பேதத்தை ஒழித்துவிட்டாலே போதும் ஜாதிகள் ஒழிந்த சமூக சமத்துவம் தானாகவே மலர்ந்துவிடும் என்று கூறியதோடு நில்லாமல் பெரியார் இயக்கத்தைக் கேலி பேசினார்கள், எதிர்த்தார்கள்.

கால மாறுதல் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு பாடத்தை வழங்கியது.

ஜாதியை ஒழிப்பதே தமிழகத்தைப் பொறுத்தவரையில் முதல் கடமை என்பதுதான் அது!

பெரியார் இயக்கத்தைக் கேலி செய்தபோது சோறா மானமா என்றால் சோறுதான் முக்கியம் என்று முழக்கமிட்டவர்கள் இன்று, பெரியார் கூறிய மானத்தை நிலைநாட்ட உத்தபுரம், காங்கியனூர், செட்டிப்புலம் போன்ற ஊர்களில் அருந்ததியர்களை தாழ்த்தப்பட்ட மக்கள், கோயிலில் நுழைவதற்கான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இது வரவேற்கத் தகுந்த மாறுதல்தான் என்றாலும்,

தமிழக மக்களின் சகல தரப்பினரிடமும் செல்வாக்கோடு விளங்கும் தி.க., தி.மு.க. காங்கிரஸ் போல அல்லாமல் தொழிலாளர்கள் விவசாயிகள் மத்தியில் மட்டுமே செல்வாக்கு கொண்ட கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் குறுகிவிட்டன!

திராவிட முன்னேற்றக் கழகம் போல் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியையே கைப்பற்றும் வலிமை கம்யூனிஸ்ட்களுக்கு இல்லை. விவசாயிகள், தொழிலாளிகள் நிறைந்த தொகுதிகளில் மட்டுமே அதுவும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்வதன் மூலமே வெற்றி பெறக்கூடிய கட்சிகளாக அவை குறுகிவிட்டன!

திராவிடர் இயக்க தயவில்லாமல் சமீபத்தில் நடந்த 5 தொகுதி இடைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட்களும் தலா இரண்டிரண்டு இடங்களில் தனித்துப் போட்டியிட்டன! முடிவு என்ன? நான்கு தொகுதிகளிலும் ஜாமீனைப் பறி கொடுத்ததுதான் மிச்சம்!

நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள்: 948)

என்ற வள்ளுவப் பெருந்தகையின் அனுபவ வாக்கிற்கேற்ப தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமைகள் என்னவென்று தேர்ந்து அய்யாவும் அண்ணாவும் திறம்படச் செயல்பட்டார்கள். அதனால்தான் திராவிடர் இயக்கம் தமிழகம் முழுவதும் ஆல் போலத் தழைத்து அருகு போல் வேரூன்றி அசைக்க முடியாத பலத்தோடு திகழ்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தின் பட்டிதொட்டிகள் குக்கிராமங்களில் எல்லாம் திராவிடர் இயக்கத்தைப் பேணி வளர்க்க பலமான ஸ்தாபனத்தைக் கட்ட அய்யாவாலும், அண்ணாவாலும், கலைஞராலும் முடிந்தது. அத்தகைய ஆற்றல் படைத்த ஸ்தாபன பலத்தைக் கட்டி வளர்க்கும் திறமைமிக்க தலைவர்கள் கம்யூனிச இயக்கத்தில் இல்லை.

திராவிடர் - தமிழர் என்ற சர்ச்சை சிலரால் கிளப்பப்படுகிறதே... அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதிலே சர்ச்சைக்கு என்ன இடமிருக்கிறது? இந்தியாவின் பூர்வீகக்குடிகள் யார் என்றால் திராவிடர்கள், திராவிட இனம் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் எழுதி வைத்திருக்கிறார்கள். மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் இதையே உறுதி செய்வதாக இருக்கிறது.

அதுபோலவே திராவிடர்களுக்கு எதிரான ஆரியர்கள் பற்றி அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கணவாய் வழியாக ஆடு, மாடு ஓட்டிக்கொண்டு இந்தியாவில் நுழைந்த வந்தேறிகள் என்றும் சரித்திரம் சான்று கூறுகிறது!

இனத்தால் இருவேறு பிரிவினர் திராவிடர்களும், ஆரியர்களும் என்பதிலும் எந்தவித சர்ச்சைக்கும் இடமில்லை.

மொழியால் தமிழர் என்று குறிப்பிடுவதிலும் சர்ச்சைக்கு இடமெதுவுமில்லை!

தமிழர் என்று மட்டுமே சொன்னால், நாங்களும் தமிழ்தானே பேசுகிறோம்; நாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரியப் பார்ப்பனர்கள் பாத்தியதை கொண்டாட முன் வந்து விடுவார்கள். அதனால்தான் பார்ப்பனரல்லாத மக்களை தமிழர்கள் என்பதோடு திராவிடர்கள் என்றும் சொல்லவேண்டியது அவசியமாக இருக்கிறது! மற்றபடி திராவிடர் - தமிழர் என்பது பற்றியெல்லாம் சர்ச்சை கிளப்புவது தேவையற்றது; தீதானது!

தமிழர் தலைவரின் தனித்தன்மைகளில் தங்களைக் கவர்ந்தது என்ன?

பெரியார் மறைவிற்குப் பின்னர் அவர் வகுத்துத் தந்த பார்ப்பனர் எதிர்ப்பு - மத எதிர்ப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற அரசியல் கட்சிகளால் பிரச்சாரம் செய்ய முடியாத அவரால் மட்டுமே அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேல் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த கொள்கைகள் கூர்மழுங்கிப் போய்விடும்; நீர்த்துப் போய்விடும் என்று ஜாதி ஆதிக்க சக்திகளும் வர்ணாஸ்ரம தர்மிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்களது ஆசை நிறைவேறவில்லை.

பெரியார் _ மணியம்மையார் காலத்திற்குப் பிறகும் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெரியார் காலத்துப் பிரச்சாரத்துக்குச் சற்றும் குறையாத வகையில் பெரியார் கொள்கைகளைப் பரப்புவதில் அனைத்து விதங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

மாதத்தில் 15 அல்லது இருபது நாள்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்கிறார்.

அவரது சமகாலத்தில் பலபேர் பதவி பெறவேண்டும் என்பதற்காகவே புது புதுக் கட்சிகளை உருவாக்கிக் கொள்வதைப் பார்த்து வருகிறோம்.

வீரமணி அவர்களுக்கு பெரியார் ஒரு பெரிய இயக்கத்தையே கட்டி வளர்த்துக் கையில் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பெரியாரின் அந்தப் பேரியக்கத்தையே அரசியல் கட்சியாக மாற்றி அரசியலில் குதித்திருக்க முடியும்.

ஆனால் அவரோ அப்படிப்பட்ட ஆசைகளுக்கு எல்லாம் இடம் தராமல் பெரியார் கொள்கைகளை தமிழக அளவில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் கொண்டு செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து அயராது பாடுபட்டு வருகிறார்.

பெரியார் கனவுகளை நனவாக்கும் விதத்தில் வல்லத்திலும், தஞ்சையிலும் அவர் உருவாக்கியுள்ள கல்விச் சாலைகளையும் அதில் பயிலும் ஆயிரமாயிரம் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் நூற்றுக்கு நூறு என்கிற அளவில் தேர்வு பெற்று சாதனை படைத்து வருவதையும் கண்டு கல்வியுலகே கண்டு வியந்து பாராட்டியபடி இருக்கிறது.

இதுவரை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 400 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அழகுற மலிவு விலையில் வெளியிட்டு 4 நகர்வு புத்தகச் சந்தைகள் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அனுப்பி மாதந்தோறும் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெரியார் நூல்கள் சென்றடையச் செய்வதில் சாதனை படைத்து வருகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பெருக்கத்துவேண்டும் பணிவு என்பதற்கடையாளமாக எளிமை, அடக்கம் எல்லோரிடமும் இனிமையாகப் பழகுதல் ஆகியவைகளிலும் வாழ்நாள் சாதனையாளராகத் திகழ்கிறார். என்னைப் பொருத்தவரையில் அவரது நட்பை நான் பெரும் பேறாகக் கருதி மகிழ்கிறேன்!

-------------------நன்றி:- "விடுதலை" 1-12-2009

10.8.09

பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுமா?முதலமைச்சர் கலைஞர் பதில்




பெரியார் நூல்கள் நாட்டுடைமை

ராஜாஜியின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை

நீங்கள் வீரமணிக்குச் சொன்னது ராஜாஜிக்கும் பொருந்துமா?

செய்தியாளர் வினாவுக்கு முதலமைச்சர் பதில்


தந்தை பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதுபற்றி செய்தியாளரின் கேள்விக்கு, ராஜாஜியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை. நீங்கள் வீரமணிக்குச் சொன்னது ராஜாஜிக்கும் பொருந்துமா? என்று திருப்பிக் கேட்டார் முதலமைச்சர் கலைஞர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர்:- பெங்களூருவில் நீங்கள் திருவள்ளுவருடைய சிலையைத் திறந்து வைத்ததின் முக்கியத்துவம் என்ன? இதன் காரணமாக இரு மாநிலங்களுடைய உறவு சீர்படுமா? ஒகனேக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதுபற்றி அவர்கள் ஏதாவது உறுதி கொடுத்திருக்கிறார்களா?


கலைஞர்
:- ஒகேனக்கல் பற்றியோ வேறு பிரச்சினைகளையோ பேரமாக வைத்து இந்தச் சிலைகள் அங்கும் இங்கும் திறக்கப்படவில்லை. மாநிலங்களுக்கிடையே உருவாக வேண்டிய அல்லது உருவாகி இருந்தால் நிலைக்க வேண்டிய ஒற்றுமை, நட்புணர்வு என்ற இந்த அடிப்படையிலே தான் திருவள்ளுவர் சிலை 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பெங்க ளூருவில் திறக்கப்பட்டிருப்பதும், 13ஆம் தேதியன்று சென்னை, அயனாவரத்தில் சர்வக்ஞருடைய சிலை திறக்கப்படவிருப்பதும் ஆகும்.

செய்தியாளர்:- இதன் காரணமாக இரு மாநிலங்களின் உறவு சீர்படும் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

கலைஞர்:
- நம்பிக்கையை நோக்கித் தான் யார் ஒருவரும் முன்னேற வேண்டும்.

செய்தியாளர்:- இலங்கையில் தமிழர்களுக்கு மறு வாழ்வுப் பணி எப்படி நடக்கிறது? உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

கலைஞர்:- அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே இன்னும் வேகம் தேவை என்பது எங்களுடைய கருத்து.

செய்தியாளர்:- பல அறிஞர்களுடைய நூல்களை நீங்கள் தொடர்ந்து நாட்டுடைமையாக ஆக்கிக் கொண்டு வருகிறீர்கள். ஆனால் பெரியாரை மட்டும் நீங்கள் வீரமணிக்கு நண்பர் என்பதால் விட்டு வைத்திருக்கிறீர்களா?

கலைஞர்
:- ஒரு நூலை நாட்டுடைமையாக்குவது என்பது குறிப்பாக உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமே யானால் மூதறிஞர் ராஜாஜி, கல்கி, வாரியார் போன்றவர்கள் எழுதிய நூல்களையெல்லாம் நாங்கள் நாட்டுடைமையாக்க முயன்றபோது, அதை நாட்டுடைமை ஆக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். மூதறிஞர் ராஜாஜியின் நூல்கள் நாட்-டுடைமையாக்கப்படவில்லை. கல்கி ராஜேந்திரன் பிறகு ஒப்புக் கொண்டார். நீங்கள் வீரமணிக்குச் சொன்னது எல்லாம் ராஜாஜிக்குப் பொருந்துமா?

செய்தியாளர்:- இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

கலைஞர்:- வீரமணியின் கருத்து; பெரியாரின் கருத்துக்களை யாரும் சிதைத்துவிடக் கூடாது என்பதாகும். ஆகவே பெரியாரின் பெயரால் அமைந்துள்ள சுயமரியாதை ஸ்தாபனம் இருக்கின்றது. அதன் மூலமாக வெளியிட்டால்தான், பெரியாரின் கருத்துக்கள் அதிலே இடம் பெற முடியும். ஆகவே அதை பலரும் வெளியிட்டு, அதை நீர்த்துப் போகச் செய்து விடக் கூடாது என்பது வீரமணியின் கருத்து. அரசைப் பொறுத்தவரையில் மரபுரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நூல்களையும் நாட்டுடைமை ஆக்குவதில்லை என்பது தான்.

------------------நன்றி:-"விடுதலை" 10-8-2009

4.8.09

மத, கடவுள் நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிப்பது சரியா?




பெற்றோர்களே தங்களது
மத, கடவுள் நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்


நாரிசெட்டி இன்னையா (மதநம்பிக்கைகளை ஏற்றுப் பின்பற்றுவதில் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தும், பகுத்தறிவு ஆய்வு மய்யத்தின் இந்தியப் பிரிவு தலைவரான அய்தராபாத்தைச் சேர்ந்த திரு நாரிசெட்டி இன்னையாவின் கோட்பாட்டைப் பற்றி முரண் பட்ட விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலின் மொழியாக்கம் இங்கே தரப் படுகிறது.)

அண்மையில் வெளியான உங்களின் மத, கடவுள் நம்பிக்கைகள் திணிக்கப்படுகின்றன என்ற நூலில் உள்ள குழந்தைகளின் உரிமைகளை மதம் எவ்வாறு நசுக்குகிறது என்ற உபதலைப்பில் வெளியாகி உள்ள கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதே. உங்கள் கூற்றை எவ்வாறு நியாயப்படுத்தப்போகிறீர்கள்?

குழந்தைகள் திருமணத்திற்கு தடை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மதங்கள் பற்றிய முத்திரைகளை குழந்தைகள் மீது குத்தப்படும்போது மட்டும் இத்தகைய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகளை பெற்றோர் தங்களது சொத்தாக பாவித்து, தங்களது நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணித்துவிடுகின்றனர். வளர்ந்த பின் ஒரு மதத்தை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்ற சுதந்திரம் குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில், பெற்றோர் தங்களின் மத, கடவுள் நம்பிக்கைகளைப் பற்றி குழந்தைகளிடம் திணிக்காமல் இருக்க வேண்டிய காலம் இது. குழந்தைகளாக இருக்கும் போது இவ்வாறு அவர்கள் மீது திணிக்கப்படுவது, இந்த விஷயத்தில் வளர்ந்த பின் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாகத் தேர்வு செய்வதற்கு இயலாதவர் களாக அவர்களை ஆக்கிவிடுகிறது.

குழந்தைகள் மீது மத, கடவுள் நம்பிக்கைகள் திணிக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்வது பற்றி அய்க்கிய நாடுகள் மாநாடு ஒன்று கூட்டப்பட வேண்டும் என்று ஏன் நீங்கள் கோருகிறீர்கள்?

1989 இல் அய்க்கிய நாடுகளின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட குழந்தைகளின் உரிமைப் பிரகடனம் இந்த விஷயத்தில் எதுவும் குறிப்பிடாமலேயே உள்ளது. பெண் குழந்தைகளின் உறுப்புகளை சிதைப்பது, போர்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் மன்ற மாநாடு கண்டிக்க முன்வந்தாலும், காலத்துக்கு ஒவ்வாத பழைமையான மத நம்பிக்கைகளை குழந்தைகளின் மனதில் விதைத்து அவற்றை தூய்மையற்றதாக்கும் குற்றத்தை மதம் செய்கிறது என்பதை மட்டும் கண்டிக்க ஏனோ தயங்குகிறது; கூச்சப்படுகிறது.

பெற்றோர்கள் கூறுவது எதையும் குழந்தைகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்கின்றனர். தாங்கள் வளர்ந்து இளைஞர்களாக ஆகும் வரை குழந்தைகளிடம் இந்தப் பழக்கம் நீடிக்கிறது. மூடநம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும் தலைவர்கள் ஒரு மோசமான எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள். சத்ய சாயி பாபாவின் கால்களைத் தொட்டு வணங்குவது சரியானதுதான் என்று குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் கருதியது வருந்தத்தக்கது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்ததை விட சாயிபாபாவின் கால்களைத் தொட்டு வணங்கியது மிகுந்த அவமானம் தருவதாகும் என்று நான் கருதுகிறேன். ஒரு பகுத்தறிவுவாதி நாத்திகராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

பகுத்தறிவுடன் சிந்திக்கும் ஒருவர் தான் ஒரு நாத்திகர் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவியல் மனப்பான்மை எதற்கும் ஆதாரத்தையும், சாட்சியையும் கேட்கிறது. கடவுள் என்ற கருத்து மதத் தலைவர்களிடமிருந்து உருவானது. கடவுள் இருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் பொறுப்பு அவர்களிடமே உள்ளது. அவ்வாறு அவர்களால் மெய்ப்பிக்க இயலாமல் போகும்போது, கடவுள் இருக்கிறார் என்ற முதலில் சொல்லப்பட்டது எவ்வாறு என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்கின்றனர். கடவுள் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் அழகான கதைகளாக வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் அவற்றுக்கான சான்றுகள் இல்லை. நாத்திகர் என்று தங்களை அழைத்துக் கொள்வதை விரும்பாத பலரையும் கூட அனைத்து அறிவியல் பூர்வமான பகுத்தறிவு நாத்திகத்துக்கே அழைத்துச் செல்கிறது.

வாஸ்து, பெங் சூயி, ஜோதிடம், பட்சி ஜோசியம் ஆகியவை போன்ற போலி அறிவியல்களின் புகழ் வளர்ந்து வருவதாகத் தோன்றுகிறதே. அறிவியல் அறிவு இந்த அளவுக்கு வளர்ந்துள்ள நிலையிலும், இவ்வாறு பகுத்தறிவு பலமற்றுப் போவதற்குக் காரணம் என்ன?

சிறுகுழந்தையாக இருக்கும்போதிலிருந்து பெற்றோரால் திணிக்கப்பட்ட மத, கடவுள் நம்பிக்கைகள் அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது என்பதுதான் இத்தகைய இன்றைய மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிப்படையான காரணமாகும். காரண காரியம், நியாயத்தைக் காண நாம் தவறும் போதும், உணர்ச்சி பூர்வமான பிரச்சினைகளை நாம் சந்திக்கும்போதும், நமது பலவீனமே, நாம் அறியாத, அனைத்தும் ஆற்றல் நிறைந்தது என்றும் கூறப்படும் ஏதோ ஒன்றை நம்பச் செய்ய வழி நடத்துகிறது. தன்னம்பிக்கை இல்லாமையும், காரணகாரிய நியாயங்களை சிந்திக்காமல் உணர்ச்சிக்கு இடம் கொடுப்பதும் கண்மூடித்தனமாக நம்பிக்கைகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதனால்தான் மாறுபட்ட அறிவியல் அல்லாத நடைமுறைகளிலும், மதச் சடங்குகளிலும் ஈடுபட நாம் இழுக்கப் படுகிறோம்.


------------ நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா- 29.7.2009 மொழியாக்கம்: த.க.பாலகிருட்டிணன் - "விடுதலை" 3-8-2009

13.6.09

தமிழீழம் வரும் காலத்தில் எப்படி அமையும்?




ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்
தொல். திருமாவளவன் பேட்டி


தாழ்த்தப்பட்டவர்களுக்காக எவ்வளவு பேர் எவ்வளவோ அமைப்புகளை, கட்சிகளை கண்டிருக்கின்றார்கள்.ஆனால், கரையேறாமல் போனவர்களை கணக்கில் வைக்க இயலாது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர அமைப்பினை உருவாக்கி அதனை இயக்கமாகத் தொடங்கி இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எனும் தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த அரசியல் கட்சியாக அதை மாற்றியிருக்கும் ஆற்றலாளராய் மிளிர்பவர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்கள் ஆவார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் திமுக கூட்டணியின் வேட்பாளராகக் களம் கண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார். தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த குரல் இன்று நாடாளுமன்றத்தில் ஒலிக்க இருக்கிறது. விடுதலையின் சார்பில் இனிதான வாழ்த்துகளைக்கூறி, விருந்தினர் பக்கத்திற்காக மானமிகு தொல். திருமாவளவன் அவர்களை சந்திக்க சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்குச் சென்றோம்.

டெல்லிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த திருமா நமக்காக தனது பயண நேரத்தினை ஒதுக்கிக் கொண்டு மனம் திறந்து பேசினார். அவருடன் உரையாடியதில் இருந்து.....


விடுதலை: தாங்கள் பொது வாழ்க்கைக்கு வந்ததற்கான சூழல் எப்படி இருக்கிறது?

திருமா: சென்னையில் 1979 காலகட்டத்தில் கல்லூரியில் படிப்பதற்காக வந்திருந்த காலகட்டத்தில் திராவிடர் கழகம் திமுக ஆகிய திராவிட இயக்கங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றேன். பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வழக்கமாக பங்கேற்பேன். குறிப்பாகப் பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வேன். திராவிடர் கழக, திமுகழக மாநாடுகள், சமூக நீதிக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொள்வேன். இவ்வாறு திராவிடர் இயக்க அரசியல் எனக்கு அறிமுகமானது. தந்தை பெரியாரின் கருத்து கள் அறிமுகமானது. அதனடிப்படையில் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு மேலிட்டது.

1983இல் மிகப் பெரிய இனக்கலவரம் கொழும்பில் நடைபெற்றபோது லட்சக்கணக்கான தமிழர்கள் தாய்த் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். மாநிலக் கல்லூரி மாணவனான நான், மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய போராட்டங்களிலும் கலந்து கொண்டேன். தமிழர்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல் என்னை வெகுவாகப் பாதித்தது.

மேலும், மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட களமிறங்கினேன். பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., குற்றவியல் படித்துக் கொண்டிருந்த போது விடுதலைப்புலி எனும் பெயரில் கையெழுத்து ஏட்டினையும் நடத்தியிருக்கிறேன். சகமாணவர்களை அதைப் படிக்கச் செய்தேன். 1984இல் பெரியார் திடலில் ஈழ ஆதரவு மாணவர் மாநாட்டினை நடத்தினேன். சைக்கிள் பேரணியும் நடத்தினேன். சட்டக் கல்லூரியில் படிக்கும்போது ஈழ ஆதரவுப் போராட்டத்தில் மேலும் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது. அரசியல் தலைவர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தினேன். கவிஞர் காசிஆனந்தன், பேராசிரியர் அன்பழகன், வைகோ போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். சட்டக் கல்லூரியில் பயிலும்போது நானும், செல்வி அருள்மொழியும், சக்திவேலும் ஈழத் தமிழர் கூட்டமைப்பில் பங்கேற்று இருக்கிறோம். இப்படித் திராவிடர் கழக, திமுகழக நிகழ்ச்சிகள்தான் என்னை பொதுவாழ்க்கைக்கு உள்ளே வரக் காரணமாக அமைந்தன.

விடுதலை: விடுதலைச் சிறுத்தைகள் தொடங்கிய நேரத்தில் தேர்தலைப் புறக்கணித்த நீங்கள் தற்போது தேர்தல் பாதைக்கு வரவேண்டிய அவசியம் என எதைக்கருதுகிறீர்கள்?

திருமா: திராவிடர் கழகத்தைப் போலவே தேர்தலில் ஈடுபடாத அமைப்பாகவே நடத்திட விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைத் தொடங்கினேன். 91இல் தொடங்கி 99 வரை அப்படிப்பட்ட வகையில்தான் பணி யாற்றினோம். மதுரையில் தொடங்கிய எங்கள் இயக்கத்தின் பணிகள் வட மாவட்டத்திலும் வளர்ச்சி பெற்றது. கடலூர் மாவட்டத்தில் 1995, 96 வாக்கில் எங்கள் இளைஞர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்பட கடுமையான சட்டங்கள் ஏவப்பட்டன. அந்நிலையில் முன்னணித் தலைவர்கள் ஒன்றுகூடி, நாம் தேர்தலைப் புறக்கணிப்பதால் தீவிரவாதிகளாக அரசு நம்மைக் கருதுகிறது; விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் இயங்குவதால் விடுதலைப் புலிகளின் பின்னணியில் இயங்குபவர்கள் என்று அரசு அச்சப்படுகிறது. இந்நிலையில் இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் அல்லது தேர்தல் பாதையில் ஈடுபடவேண்டும். இல்லையேல் பொதுவாழ்க்கைக்கு வர விரும்பும் இளைஞர்கள் வருவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இயக்கம் முடங்கிவிடும் என்று கூறினார்கள். இயக்கத்தின் பெயரை மாற்றுவதற்கு நான் உடன்படவில்லை. தேர்தல் பாதைக்குச் சென்றால் அரசு நம்மை எப்படிக் கருதினாலும் மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற கருத்துப் பரவலாக வந்தது.

எனவே, தேர்தலில் நாம் வேட்பாளரை நிறுத்தாவிடினும் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களை அடையாளம் காட்டிட வேண்டும். நம் பின்னே வருகிற மக்களின் வாக்குகளை அளித்திடவேண்டும் என்று கருதினோம். எனவேதான் 1999இல் விழுப்புரத்தில் கூடிய மாநில செயற்குழுவில் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவது என்கிற முடிவை இயக்கம் எடுத்தது. ஆக இந்த இயக்கத்தின் மீது வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தி ஓரங்கட்டி விடக்கூடாது என்று முடிவெடுத்தோம். புரட்சியாளர் அம்பேத்கர்கூட தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தவில்லை. ஆகவே தேர்தலில் நிற்க முடிவெடுத்தோம்.

விடுதலை
: நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உங்களின் பணி நாடாளுமன்றத்தில் எத்திசையில் அமையும்?

திருமா: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலன்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் எம்மால் இயன்ற அளவு குரல் கொடுப்போம். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு தொடர்பாக இந்திய அரசு ஆற்றவேண்டிய பணிகளை சுட்டிக்காட்ட முயற்சிப்பேன். சிறு பான்மை மக்கள்நலன், மகளிர் மேம்பாடு, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்குக் குரல் கொடுப்பேன். நான் ஒற்றை உறுப்பினராக இருப்பதால் உரை யாற்றுவதற்கே நேரம் போராடித்தான் பெறவேண்டியிருக்கும். வலிமையுள்ள எதிர்க்கட்சி அல்லது அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கக்கூடும். எனவே, கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்ற உலகெங்கும் வாழும் தமிழர் களின் உரிமைகளுக்காகக் கட்டாயம் குரல் கொடுப்பேன். தேர்தல் தொடர்பாக தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பாடுபடுவேன். கூரை இல்லாத வீடுகள் கட்டித் தருவோம் என்று சொல்லியிருக்கிறோம். அதனையும் நிறைவேற்றுவோம்.
-------------"விடுதலை"ஞாயிறுமலர் 6-6-2009




பெரியாரே எம் வழிகாட்டி!

தொல். திருமாவளவன் பேட்டி விடுதலை ஏட்டின்மூலம் உள்வாங்கிய அரசியல்தான் இன்றும் எம்மை வழி நடத்துகிறது!



தந்தை பெரியாரை நாம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் யார் நம் எதிரிகள் என்பதையும், யார் நம்முடைய நண்பர்கள் என்பதையும் எளிதாக அடையாளம் காணலாம் என்பதை விளக்கி தொல். திருமாவளவன் அவர்கள் அளித்த பேட்டியின் சென்ற இதழின் தொடர்ச்சி வருமாறு:

விடுதலை : தமிழீழம் வரும் காலத்தில் எப்படி அமையும்?

திருமா: நாம் எதிர்பாராத வகையில் ஈழத் தமிழ் சமூகம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகப் பெரும் சேதத்தை அல்லது தடையை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு முற்றிலுமாக தமிழ் மக்களின் வாழ்நிலை சிதைக்கப்பட்டிருக் கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள ராணுவம் வதை முகாம்களில் சிக்கித் தவிக்கிறார்கள். எஞ்சியுள்ள தமிழர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த மக்களின் ஒற்றைப் பாது காவலராக இருந்த விடுதலைப்புலிகளும் ஒரு கட்டுக்கோப்பான நிலையிலிருந்து சிதறடிக் கப்படுகிற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். களப்பலியானவர்களைத் தவிர எஞ்சியுள்ளவர்கள் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க பெரிதும் வாய்ப்பிருக்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அய்ந்தாம் கட்ட போரை விரைவில் அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆனாலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை தமிழ் சமூகம் இன்னும் பெறவில்லை. அதற்கான முயற்சியில் நாம் வெற்றி பெறவில்லை என்பதை நாம் எதார்த்தமாக ஒப்புக் கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய நெருக்கடியில் இந்தியா மட்டுமல்ல, உலகத்தின் எந்த நாடும் தமிழர்களை பாதுகாக்க முன் வரவில்லை. போரை நிறுத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுத்தும்கூட பேச்சு வார்த்தை புலிகளுடன் நடத்த வேண்டும் என்று முனைப்பைக் காட்டவில்லை. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு கட்டாயம் தேவை. எனவே அங்கு நடைபெறுவது தேசிய இன விடுதலைப் போராட்டம்தான் என்பதை நம்மைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தப் பாடு பட வேண்டும்.

விடுதலை: ஜாதி ஒழிப்பிற்காகவே வாழ்நாள் முழுதும் பாடுபட்ட தந்தை பெரியாரை தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே நடத்தப்படும் அமைப்புகளில் சிலர் கடுமையாக விமர்சிப்பது குறித்து?

திருமா: பெரியார் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ளவர்; அவரை முழு பரிமாணத்தோடு பார்க்கிற வலிமை இல்லாதவர்கள் அவரவர்கள் நிற்கிற வளையத்துக்குள் நின்று கொண்டு விமர்சித்திருக்கலாம். அந்த விமர்சனங்களை பெரியார் வாழ்ந்த காலத்திலும், சரி, மறைந்த காலத்திலும் சரி இத்தகைய விமர்சனக் கணைகள் எழுந்திருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலை நிமிர்வுக்கு தந்தை பெரியார் அவர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பும், உழைப்பும் தான்! அடிப்படை. புரட்சியாளர் அம்பேத்கருடைய பங்களிப்பு எத்தகைய போற்றுதலுக்குரியதோ, அதைப் போலவே பெரியாரின் பங்களிப்பும் போற்று தலுக்குரியது தான். பெரியாரையும், அம்பேத்கரையும் தனது அரசியல் வழி காட்டிகளாகக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் செயல்படுகிறது. எனவே இத்தகைய விமர்சனங்கள் பொருளற்றது என்று நான் கருதுகிறேன்.

விடுதலை: தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் இன்றையக் கால கட்டத்தில் எந்த அளவுக்குத் தேவை என கருதுகிறீர்கள்?

திருமா: எந்த காலத்துக்கும் பொருந்தி வருகிற கருத்தியல் தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தியல் ஆகும். எந்தப் பொருளையும் பகுத்துப் பார்க்கிற ஆற்றலைக் கொடுப்பது தந்தை பெரியாருடைய கருத்தியல். ஆகவே அனைத்துக் காலங்களிலும், சூழல்களிலும் தேவைப் படுகின்றன என்பதை இன்றைக்கும் நடை முறையிலே காணலாம். தந்தை பெரியாரையே நாம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் யார் நம் எதிரிகள் என்பதையும், யார் நம்முடைய நண்பர்கள் என்பதையும் எளிதாக அடையாளம் காணலாம். அதைப்போல சகிப்புத் தன்மையோடு, மனம் தளரா உறுதியோடு போராட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்குபவர், முழுமையான அர்ப்பணிப் போடு களம் கண்ட ஆற்றலைப் பெற்றவர் தந்தை பெரியார் அவர்கள். ஆகவே, எக்காலத் திற்கும் ஏற்ற இயல்பான கருத்தியலைக் கொண்டதுதான் தந்தை பெரியாரின் கருத்தியல் என்பதை நான் உறுதியோடு பதிவு செய்கிறேன்.

விடுதலை: திராவிடத் தேசியம் - தமிழ்த் தேசியம் என்பதில் தங்களின் நிலைப்பாடு அல்லது கருத்து?

திருமா: மொழிவழியாக மாநிலங்களை பிரித் தாண்ட நேரத்தில் அதாவது 1956க்கும் முன்னர் ஆரிய-திராவிடக் கருத்தியலே ஒன்றுக்கொன்று முரண்பாடாக மோதிக்கொண்டிருந்தன. அப்போது மொழிவழியான உணர்வுகள் மேலோங்காத காலகட்டம். ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் அன்றைய இந்திய மக்களிடையே முன்னிருந்த ஒரு சவாலாகும். ஆகவே, இந்தியர்கள் என்ற உணர்வு ஊட்டப்பட்டு ஒருங்கிணைக்கப் பட்டிருந்தாலும், இந்தியர்களுக்குள்ளேயே ஆரியர்-திராவிடர் என்கிற வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிலவிவந்த நேரம். ஆரியத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கும், ஆரிய தேசியத்தை எதிர்ப்பதற்கும் திராவிடத் தேசியம் அன்றைக்கு வலிமையான ஆயுதமாக நமக்குப் பயன்பட்டது. 1956க்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு சென்னை ராஜதானி, கர்நாடகாவாகவும், ஆந்திரவாகவும், கேரளாவாகவும் பிரிக்கப்பட்ட பிறகு திராவிடத் தேசியம் என்கிற கருத்தியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு மலையாள தேசியம், கன்னட தேசியம், தமிழ்த் தேசியம் என்கிற கருத்தியல் வளர்ச்சியைத் தொடங்கி இன்றைக்கு மொழிவழி தேசியம் இம்மண்ணில் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இதில் குறிப்பாக தமிழ்தேசியம் என்பது திராவிடத் தேசியத்திலிருந்து இன்னும் வலிமையான தேசியமாக தமிழ் மண்ணில் வளர்க்கப்பட்டு வருகிறது.

ஆகவே, ஒன்றிலிருந்து மற்றொன்று என்னும் இயங்கியல் விதிப்படி திராவிடத் தேசியத்திலிருந்து தமிழ்த்தேசியம் என்பது ஒரு குறிப்பான புள்ளியை நோக்கி நகர்ந் திருக்கிறது, வளர்ந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ்த் தேசியம் என்பது பிற மொழிவழி தேசியங்களுக்கு இணையாக அல்லது ஒத்ததாக நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த தமிழ்த் தேசியம் ஆரிய தேசியத்திற்கும், பிறமொழித் தேசியத்திற்கும் எதிரானது. இது தமிழ்த் தேசியம் திராவிடத் தேசியத்திலிருந்து பரிணாமம் அடைந்த, ஆற்றல் வாய்ந்த ஒரு கருத்தியல். இது திராவிடத் தேசியத்திற்கு எதிரானது அல்லது முரணானது என்று கருதப்பட்டாலும் பேசப்பட்டாலும் திராவிடத் தேசியத்திலிருந்து வளர்ந்த ஒரு கருத்தியல்தான் தமிழ்த்தேசியம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. திராவிடத் தேசியமாக எழுந்த கருத்தியல்தான் மேலும் குறிப்பான ஒரு செழுமை பெற்ற கருத்தியலாக வளர்ந்திருக்கிறது. ஆகவே, திராவிடத் தேசியத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் உள்ள முரண்பாடு ஆரிய தேசியத்திற்கும், திராவிடத் தேசியத்திற்கும் உள்ள முரண்பாட்டை போல அல்ல. இதை தீவிரமான பகை முரண் பாடாகப் பார்க்க முடியாது.

விடுதலை: பவளவிழா காண்கிற விடுதலை உடனான தொடர்பு பற்றி?

திருமா: 1979இல் இருந்துதான் விடுதலை ஏட்டைப் படிக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது நூலகங்களில் நான் தேடிப்படிக்கிற ஏடுகள் விடுதலை, முரசொலி ஆகிய ஏடுகள்தான். அதன்மூலம் நான் உள்வாங்கிய அரசியல்தான் இன்றைக்கு எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்தப்பட்டு வந்த இந்த ஏடு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வலிமைமிக்க வழிகாட்டுதலால் கடந்த 50 ஆண்டுகளை நெருங்கக் கூடிய அளவிற்கு ஆசிரியரின் ஈடில்லா உழைப்பின் மூலம் வெற்றி கரமாக நடந்தேறி வருகிறது. உலகெங்கும் வாழ்கிற தமிழர்களை கருத்தியல் ரீதியாக தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைக்கிறது எனும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பிறகு அவர் விட்டுச் சென்ற பணிகளை போற்றுதலுக்குரிய முறையில் வெற்றிகரமாக தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இயக்கத்தின் ஊடகப் பணிகளையும் முன்னெடுத்துச் சொல்கிறார். அவரோடு நான் பல ஆண்டுகளாக நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப் பினைப் பெற்றிருக்கிறேன். எதிலும் பதற்றப்படாமல் தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுக்கொண்ட தலைமைப் பண்புகளின் அடிப்படையில் எந்தப் பிரச்சினையையும் இலகுவாகக் கையாள்கிறார்.
தற்போது ஈழப்பிரச்சினையில்கூட நான் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாகி இருந்தபோது, அவ்வப் போது எனக்கும் வழிகாட்டுதல்களைத் தந்து பதற்றப்படாமல் பிரச்சினைகளை கையாள ஆலோசனைகளை வழங்கினார். அதை என்றும் என்னால் மறக்க இயலாது. தந்தை பெரியார் எந்த அளவுக்கு இவரை செதுக்கி ஆளாக்கியிருக்கிறார் என்பதை அவருடைய உழைப்பிலிருந்தும், அணுகுமுறையிலிருந்தும் காண முடிகிறது. பெரியார் உருவாக்கியிருந்த ஒன்றைப் பத்தாக்கி இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழினமும் பெருமைப்படக்கூடிய வகையில் பெரியாரின் இயக்கப் பணிகளை, கல்விப் பணிகளை, சமூகப் பணிகளை, அரசியல் பணிகளை மிகச்சிறந்த முறையிலே முன்னெடுத்திருக்கிறார். தந்தை பெரியார் இன்றிருந்தால் இவரைப் (ஆசிரியரை) பாராட்டி, பாராட்டுப் பட்டயங்களை, பதக்கங்களை வழங்கி உச்சி மோந்து பாராட்டியிருப்பார். அந்தளவு ஓர் ஆற்றல் மிக்க, நிருவாகத் திறன்மிக்க தலை வராகத் தமிழர் தலைவர் விளங்குகிறார். அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்துகிற போர்க்குணம் உள்ளவராகவும், இந்த வயதிலும் விடாப்பிடியான களப்போராளி யாகவும் விளங்குகிறார்.
அவருடைய பணியைப் பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. எனவே, அந்த வகையில் நானும் அவரை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். தந்தை பெரியாரைப்போல அவர் நூறாண்டுக்கும் மேலாக வாழவேண்டும். 75 ஆண்டுகாலமாக தமிழ்மக்களுக்கு வழிகாட்டி வந்திருக்கிற விடுதலை ஏட்டிற்கும், அதன் ஆசிரியர் தமிழர் தலைவரையும் வாழ்த்துகிறேன்
என்று அகம் நிறைந்த வாழ்த்துகளைக் கூறிய மானமிகு தொல்.திருமா வளவன் அவர்களுக்கு நன்றி கூறி, விடைபெற்றோம்.

------------நேர்காணல்: நம்பியூர் சென்னியப்பன்- "விடுதலை"ஞாயிறுமலர் 13-6-2009

30.5.09

எதிர்காலத் தமிழீழம் எப்படி அமையும்? - சுப.வீ .


பிறந்த இடத்திற்கே வந்துவிட்டேன்!

- பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நெகிழ்ச்சி


சென்னை போன்ற பெருநகரங்களில் மாலை நேரக்கூட்டங்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு மக்கள் அரங்கத்திற்கு வருவது கிடையாது. கேட்கிற ஆர்வமும், பொது வாழ்க்கையில் இருக்கும் ஆர்வமும் குறைவு என்பதும், பரபரப்பான வாழ்க்கைக்கு இடையில் இதற்கெல்லாம் நேரத்தை ஒதுக்குவதை தவிர்க்கிறார்கள் என்பதும் ஒருபுறமிருந்தாலும் விதிவிலக்காக குறிப் பிட்ட ஒரு சிலர் பேசுகிறார்கள் எனில் அதற்கு பெருத்த கூட்டம் அரங்கம் நிரம்பி வழிவதையும் காண முடிகிறது.

அப்படி அவனைவரையும் ஈர்க்கும் வகையில், குறிப்பாக இளைஞர்களை பெரிதும் ஈர்க்கிற வகையில் பேசக் கூடிய, நாடறிந்த சொற்பொழிவாளராக அறியப்படுபவர் சுப.வீ என அன்போடு அழைக்கப்படுகிற மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான இவர், சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவர். பல்வேறு தளங்களில் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடி வருபவர். எழுத்தாளராக, பேச்சாளராக, தமிழ் தேசிய போராளியாக, தற்போது கருஞ்சட்டைத் தமிழர் எனும் இதழாசிரியராக என பல்வேறு அடையாளங்களை தமிழுலகில் நன்கு பதித்தவர். நம் விடுதலை வாசகர்களுக்காக, விருந்தினர் பக்கத்திற்காக சந்தித்து உரையாடியதிலிருந்து........


விடுதலை :

அய்யா, வணக்கம். தாங்கள் சிறப்பு மிகுந்த ஒரு சுயமரியாதைக் குடும்பத்திலிருந்து வந்தவர். எனவே தாங்கள் பகுத்தறிவுப் பாதையில் நடப்பதற்கு குடும்ப சூழல்தான் காரணமா? இல்லை வேறு ஏதும் காரணமாக அமைந்ததா?

சுப.வீ :

குடும்பச் சூழல் தான் காரணம். குறிப்பாக அப்பா 1930 லிருந்தே அய்யா பெரியார் அவர்களுடனும், சுயமரியாதை இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டவர். நான் பிறக்கும் போதே அப்பா திமுகவில் இருந்தார். 1949-இல் திமுக தொடங்கும் போதே இருந்தவர். அதனால் வீட்டுக்கு திராவிட இயக்க இதழ்கள் நிறைய வரும். குறிப்பாக அதில் விடுதலையும் இருக்கும். நான் 5 வயது சிறுவனாக இருக்கும் போது அப்பா தேர்தலில் 1957-இல் போட்டியிட்டார்கள். எனவே அரசியல் சூழல் என்பது வீட்டில் முழுமையாக இருந் தது. அதுவும் திராவிடர் இயக்கம் சார்ந்த அரசியல். எனவே நான் எனது சுயசிந்தனையினாலோ அல்லது படித்து அறிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது. அப்பாவின் வழியில் நான் திராவிட இயக்கத்திற்கு வந்தேன். வந்தததற்குப் பிறகு படித்தேன். படித்ததற்குப் பிறகு அதில் அழுத்தமாக ஊன்றி நிற்க வேண்டும் என கருதினேன். ஆனால் தொடக்கம் அப்பாவிடத்திலிருந்து தான்.

விடுதலை :

தங்களுடைய மாணவப் பருவகாலத்தில் தங்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

சுப.வீ:

மிகவும் சராசரி மாணவனாகவே நான் இருந்தேன். பொது அறிவிலும் சராசரி மாணவனாக வாங்குகிற மதிப்பெண்ணிலும் சராசரி மாணவனாகத் தான் இருந்தேன். பட்ட வகுப்பில் கூட மூன்றாண்டு தாண்டிப் பிழைத்து வந்தேன் என்கிற நிலைதான். நன்றாக படிக்கிற மாணவனாக இருந்தது முதுகைலயில் மட்டும்தான். குறிப்பாக சின்ன வயதிலிருந்து கடுமையான எம்ஜிஆர் ரசிகன். எம்ஜிஆர் படங்களைப் பார்க்கத் தவறியதில்லை. ஒரே ஒரு வேறுபாடு எனக்கு சின்ன வயதில் அய்யா பெரியாரின் நூல்கள் அல்லது பெரியாரைப் பற்றிய செய்திகள் நிறையக் கிடைத்தன. அப்பா மட்டுமில்லாமல், எங்க அம்மாவும் பெரியார் பற்றி நிறைய சொல்வார்கள். அடிக்கடி சொல்வார்கள். இவ்வளவுக்கும் எங்க அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில் சுயமரியாதை இயக்க ஈடுபாடு, பெரியரைப் பற்றிய செய்திகள் நிறைய சொல்வார்கள்.

எனவே எனக்கு அப்போது கடவுள் இல்லை என வாதிடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் சமூகநீதி, பெண்விடுதலை பற்றியெல்லாம் பின்னால்தான் அறிந்து கொண்டேன். பெரியாரைப் போல கடுமையான ஒரு நாஸ்திகனாக இருக்க வேண்டும் என்ற ஆசை. எம்ஜிஆரைப் போல ஒரு சண்டை போடுகிற வீரனாக வர வேண்டுமென விருப்பம். திமுக கழகத்தின் மீது ஒரு பற்றுதல். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறுகிறது. எனக்கு அப்போது 7 அல்லது 8 வயது இருக்கும். வீட்டில் ஒரே கொண்டாட்டம் . சித்தாந்தத் தெளிவில் ஏற்பட்ட மகிழ்ச்சி என்று சொல்லிட முடியாது.

1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிற போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற ஒரு மாணவன். அன்றைக்கு இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த ஏராளமான கால்களில் என் கால்களும் இருந்தன.

எல்லா திமுக மாநாடுகளுக்கும் என்னை அப்பா கூட்டிக்கொண்டு போவார். கரைக்குடியில் நடந்த எல்லாக் கட்சிக் கூட்டத்தையும் நான் கேட்பேன். அய்யாவின் பேச்சை தொலைவில் நின்று கேட்டிருக்கிறேன்.

அண்ணா, கலைஞர், நாவலர், சம்பத் இவர்களின் பேச்சில் மிகவும் கவரப்பட்டிருக்கிறேன். 65-இல் மாணவத் தலைவர்கள் சிலர் பேச்சினைக் கேட்டேன். குறிப்பாக காளிமுத்து, பெ.சீனிவாசன், போன்றவர்கள் பேச்செல்லாம் கேட்கிறபோது நாமும் மேடை ஏறி பேசலாம் என்கிற நம்பிக்கை வந்தது. ஏனெனில் என்னை விட இரண்டு மூன்றாண்டுகள் மூத்தவர்கள் என்பதால் நாமும் பேசலாம் என்கிற ஆர்வம் வந்தது. இதுதான் என் தொடக்கநிலை அரசியல். சித்தாந்த அரசியல் ஆழமாக அப்போது இல்லை. ஆனால் கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்தேன். நான் பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை முற்றிலுமாகக் கிடையாது. இன்றைக்கு வரை; மேலும் மேலும் அதுவலுப் பெற்றிருக்கிறதே தவிர மாறவில்லை.

விடுதலை :

தாங்கள் தொடக்க காலங்களில் தமிழ் தேசியத்தின் உயர்வுக்கும், உணர்வுக்கும் பணி யாற்றிவர். அதைப்பற்றி?

சுப.வீ.:

தமிழ்தேசியம் என்கிற அரசியல் சொல்லாடல் எல்லாம் 80களின் இறுதியில் தான் என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத் தெரிந்ததெல்லாம் பெரியாரும், திமுகவும் சொன்ன திராவிட நாடு திராவிடர்க்கே. தமிழ்நாடு தமிழருக்கே என்பது மட்டும் தான். குறிப்பாக 82 லிருந்து 84 வரைக்கும் கும்பகோணத்தில் திருப்பனந்தாள் கல்லூரியில் வேலை பார்த்த போது பொது நிகழ்ச்சிகளில் மெல்ல மெல்ல கலந்து கொண்டேன். கவிஞர் இன்குலாப் உடன் பழகிய போது மார்க்சியத்தில் ஓர் ஈடுபாடு வந்தது. 1987 ஆம் ஆண்டு குறிப்பாக பல மாற்றங்களை என்னுள் கொண்டு வந்தது. என் அம்மா இறந்த போனதும், அதற்குப் பிறகு திலீபனின் மரணத்தையொட்டி நான் புலிகளின் ஆதரவாளனாக மாறியதும் 87-இல் தான். 83-இல் இருந்தே ஈழத்தை ஆதரித்தாலும் பொத்தாம் பொதுவில் எல்லா இயக்கங்களையும் ஆதரித்தேன். திலீபனின் மரணம்தான் என்னை புலிகளின் ஆதரவாளனாக ஆக்கியது. 1987-இல் தான் அமைப்பில் இணைந்து அந்த அமைப்பிற்கு அமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது அந்த அமைப்பின் பெயர். பெரிய வியப்பு என்னவெனில் அவ்வமைப்பில் பெருஞ்சித்திரனார், சாலையார், கவிஞர் மேத்தா, ஞாநி, இன்குலாப், அருள்மொழி குகநாதன் இப்படி இத்தனைப்பேர் இருந்த அமைப்புக்கு நான் அமைப்பாளரானது ஒரு விபத்து. எல்லோரும் பெரியவர்களாக இருந்ததால் யரைத் தேர்ந்தெடுக்கலாம் என குழப்பம் வந்து புதிதாக வந்த என்னை தேர்வு செய்தார்கள். அதுதான் என் அரசியலின் முதல் நுழைவு அப்போதும் நான் ஆசிரியராகத்தான் இருக்கிறேன்.

பின்னர் மணியரசன், தியாகு போன்றவர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளால் தமிழ்தேசியம்நோக்கி செல்ல ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல திராவிடத் தேசியத்தை விட தமிழ் தேசியம் தான் சரி என்கிற உணர்வை ஏற்படுத்தினார்கள். தமிழ்த் தேசியத்திற்கு தடையாக இருப்பதில் திராவிட தேசியமும் ஒரு காரணம் என்கிற கருத்தை என்னுள் விதைத்தார்கள். நானும் உண்மை என் நம்பினேன். பெரியாரைத் தவிர மற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரையும் விமர்சித்தேன். அதில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான தலைவர்களில் கலைஞரும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் கூட அடங்கு வார்கள். இனி என்னும் இதழை நடத்திய அனுபவத்தில் நந்தன் இதழுக்கும் ஆசிரியவரானேன். 1990 ஆம் ஆண்டு விடுதலைக்குயில்கள், 94 ஆம் ஆண்டு தமிழ்தமிழர் இயக்கம், தமிழ்ச் சான்றோர் பேரவை, 2002 முதல் 2006 வரை நெடுமாறன் அவர்களின் தலைமையில் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றினேன்.

விடுதலை :

மீண்டும் நீங்கள் திராவிடர் இயக்கத்திற்கு வந்தது குறித்து?

சுப.வீ :

நான் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அதாவது திராவிடர் இயக்கத்துக்கே கொண்டு வந்து சேர்த்தது என்றால் அது ஓர் எதிர்மறையான நிகழ்ச்சி. 1995 ஆம் ஆண்டு பெங்களூரிலிருந்து குணா எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற புத்தகம்தான் என்னை விழிக்க வைத்தது. அவர் செய்த ஒரு நல்ல காரியம் பெரியாரைக் கடுமையாகச் சாடியது தான். அப்போது தான் நான் விழித்தேன். திராவிட இயக்கம் அதுவும் தமிழின் பெயராலேயே சிதைக்கப்படுகிறது என்று உணர்ந்தேன்.

ஆனாலும் முழுமையாகத் தெளிவு பெறுவதற்கு மேலும் பத்தாண்டுகள் ஆயிற்று. 1987 க்குப் பிறகு 2005 ஆண்டு மீண்டும் ஒரு திருப்பத்தை என் அரசியல் வாழ்வு கண்டது. பெரியாரின் இடது சாரித் தமிழ்த்தேசியம் என்னும் நூல் திராவிட இயக்கம் என்பதே சரியானது என்கிற என் கருத்தை வெளிப்படுத்தியது.

அதற்குப் பெரும் வரவேற்பும் பலத்த எதிர்ப்பும் கிடைத்தது. பிறகு 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அதையொட்டி எழுந்த விவாதங்களின் அடிப்படையில் நான் தமிழர் தேசிய இயக்கத்தைவிட்டு வெளியேறினேன். ஏறத்தாழ 15 ஆண்டுகள் நான் யாரைக் கடுமையாக மேடைகளில் சாடிக் கொண்டிருந்தேனோ அந்தத் தலைவர் கலைஞரை 2006 ஏப்ரல் 17 ஆம் நாள் காலையில் நண்பர் நக்கீரன் கோபால் அவர்களின் உதவியோடு சந்தித்தேன். என் வாழ்க்கை மறுபடியும் ஒரு முறை புரண்டு படுத்தது. பிறகு 2007 ஆம் ஆண்டு ஜனவரில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். பெரியாரின் கொள்கைகளை பரப்புவதும், ஈழத்தமிழர்களின் உரிமைகளை உரத்து ஒலிப்பதுமா அமைப்பின் பணிகள் தொடர்ந்தன. தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

விடுதலை :

தமிழர் என்பவர் யார்? தமிழருக்கான வரையறை என்ன? தமிழ் பேசுகிற அனைவரும் தமிழரா?

சுப.வீ :

தமிழர் என்பதற்கும், தமிழ்த் தேசிய இனம் என்பதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. தமிழை தாய் மொழியாகவும், சமூக மொழியாகவும் இம்மண்ணிலேயே தம் மண உறவுகளை அமைத்துக் கொண்டு வரலாறு, உடலியல் போக்குகளிலும் தமிழர்களின் பாரம்பரியத்தில் ஊன்றி நிற்பவர்கள் தமிழர்கள். 400, 500 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு குடியேறி இன்றைக்கும் அவர்களின் தாய்மொழி வேறாக இருந்தாலும் சமூகப் பொது மொழியாக, தமிழை ஏற்றுக்கொண்டு தமிழர்களோடு இரண்டறக் கலந்து விட்டவர்களையும் சேர்த்தே நாம் தமிழ் தேசிய இனம் என்று கூறுகிறோம். அந்த வரிசையில் பார்ப்பனர்களும் தங்களை நம் இனத்தோடு இரண்டறக் கலந்து கொண்டால் தமிழ்தேசிய இனத்தின் ஒரு பகுதியாக ஆக முடியுமே தவிர தமிழர்களாக ஆக முடியாது.

விடுதலை :

இன்றைய சூழலில் பெரியாரின் கொள்கைகள் எந்தளவுக்குத் தேவைப்படுகின்றன?

சுப.வீ :


முன்பு எப்போதைக் காட்டிலும் பெரியாரின் கருத்துகள் இப்போது தான் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. பெரியார் என்றால் கடவுள் மறுப்பும், பார்ப்பன எதிப்பும்தான் வெகுமக்கள் நினைக்கிறார்கள். பெரியாரின் சித்தாந்தத்திலிருந்து பிரிக்கப் பட முடியாதைவையே என்றாலும் பெரியாரின் சிந்தனை, உழைப்பு, செயல் ஆகியவை தங்கியிருப்பதன் ஆழம் என நான் கருதுவது ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை இரண்டும் தான். சுருக்கமாக சமத்துவம் தான் அவருடைய நோக்கம். சமத்துவத்துடன் மக்கள் சுயமரியாதையுள்ள பகுத்தறிவாளர்களாக ஆகவேண்டும் என்பதுதான். அதைத்தான் மானமும் அறிவும் என்று இரண்டு சொற்களில் அடைக்கிறோம். இவை இன்றைக்கும் தேவை; என்றைக்கும் தேவை.

விடுதலை :

கடைசியாக, ஒரு கேள்வி மிகவும் வருந்ததக்க செய்தியான ஈழத்தமிழர்களின் அண்மைக்கால அவலம் குறித்து? எதிர்காலத் தமிழீழம் எப்படி அமையும்?

சுப.வீ :

கற்பனையில் கூட நாம் எண்ணிப்பார்க்காத துயரம் இன்றைக்கு ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் கசப்பாக எப்போது இருந்தாலும் போர் என்பது ஒரு நேர்கோட்டில் செல்வது இல்லை எனும் உண்மையை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். உலகின் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் முன்னேற்றம், பின்னடைவுகள் இருந்திருக்கின்றன. களங்களை இழக்கும்போது போரையே இழந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை. தற்போது மறுபடியும் ஒரு முறை களத்தை இழந்திருக்கிறோம். அதே நேரத்தில் விடுதலைப் போராட்டம் மக்கள் நெஞ்சில் எரிகிற நெருப்பு. இன்றைக்கு புலிகள் இயக்கம் அங்கு பலவீனப்பட்டிருக்கலாம். ஆனால் விடுதலைக்கான காரணங்கள் மேலும் வலிமைபெற்றே இருக்கின்றன. நியாயம் சரியாக இருக்கும் வரையில் போராட்டத்தீ ஒரு நாளும் அணைந்து விடாது. பிரபாகரன்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தயங்காமல் வெளிப் படையாக பல செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.

---------------சந்திப்பு : நம்பியூர் சென்னியப்பன்.- நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 30-5-2009

18.4.09

திராவிடர் கழகத்தின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை..? அதனுடைய வளர்ச்சி குறித்து...?


குவைத் "நீதியின் குரல்" இதழுக்குத்
தமிழர் தலைவர் பேட்டி!



பகுத்தறிவுப் பகலவன் - ஈரோட்டுச் சிங்கம் - வெண்தாடி வேங்கை என்றெல்லாம் பலவாறு போற்றப்படுகிற தந்தை பெரியார் ஏற்றிவைத்துச் சென்ற அறிவுச்சுடரை அணையாது காத்து வருபவர் அய்யா கி.வீரமணி ஆவார். திராவிடர் கழகத் தலைவராக மட்டுமன்றி - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தராகவும் - மேலும் பெரியாரின் பெயரில் இயங்கும் பல்வேறு கல்விநிறுவனங்கள் - அறக்கட் டளைகள் என்று அனைத்தையும் கவனித் துக்கொண்டு - கட்டிக்காத்துக் கொண்டு - இன்றும் பெரியார் தொடக்கிவைத்த விடுதலை நாளிதழையும் தொய்வின்றி நடத்திக்கொண்டு அப்பப்பா... இந்த வயதிலும் சற்றும் ஓய்வறியாது, சுற்றும் சூரியனாய் தொண்டாற்றி வருபவர்தான் அய்யா கி.வீரமணி அவர்கள் அவரது சிறப்பு நேர்காணல்:


நீதியின் குரல்: - தற்போது பாட்டாளி மக்கள் கட்சியானது தி.மு.க.விலிருந்து - அ.தி.மு.க.விற்கு அணி மாறியுள்ளதே...? இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்...?

கி.வீரமணி:- பா.ம.க. எப்போதாவது ஒரு முறை இருந்த கூட்டணியில் மறுமுறை இருந்திருக்கிறதா? கூடுவிட்டு கூடு பாயும் அரசியல் வரவு-செலவுக்காரர்கள் அவர்கள். ஏன் அது பற்றிப் பெரிதும் கவலைப்பட வேண்டும்? ஓட்டுப்பொறுக்கிகளே... உள்ளே கிராமத்திற்குள் வராதீர்கள்..! என்று எழுதி வைக்கச் சொன்னவர்தான் மருத்துவர் அய்யா..! பிறகு என்னவானார்.? அதுபோல நல்ல சர்க்கஸ் வித்தைக்காரர் அவர்!

நீதியின் குரல்:- தமிழகத்தில் மும்முனைப்போட்டியை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ள நடிகர் விஜய காந்த் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன...?


கி.வீரமணி:- வரும் தேர்தல் முடிவும் திருமங்கலம் போலவே அவருக்கு இருக்கும்!


நீதியின் குரல்:-
சென்ற முறைபோல் இப்போதும் தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட அணியினர் 40-தொகுதிகளையும் கைப்பற்றுவார்கள் என்று நம்பு கிறீர்களா..?

கி.வீரமணி:- நாளும் செய்யும் - செய்த சாதனைகளை அனுபவிக்கும் தமிழகப் பெருமக்கள் மறக்க வில்லை - நன்றியோடு நினைவுகூர்ந்து வாக்களித்தால் - நாடு வளரும். மக்கள் ஒரு நல்ல ஜனநாயக ஆட்சியை அனுபவிப்பார்கள்.

நீதியின் குரல்:- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சிக்குள்ள முரண்பட்ட கருத்து தமிழக தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?

கி.வீரமணி:- பெரும் அளவு பாதிக்கும் என்று எண்ணவில்லை. ஓரளவுக்கு அதன் தாக்கம் இருக்கக் கூடும். இதுவரை அப்பக்கம் திரும்பாதவர்கள் அதைத் தேர்தலில் அரசியல் மூலதனமாக்கிட முயற்சிக்கிறார்கள். மக்கள் புரிந்து கொள்ளும் சக்தியை பெற்றவர்களே.

நீதியின் குரல்:- மருத்துவர் ராமதாஸ் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது குறித்து என்னசொல்ல விரும்புகிறீர்கள்?

கி.வீரமணி:- முதல் பதிலிலேயே எனது கருத்து அடங்கியுள்ளதே...!

நீதியின் குரல்:- வருண் காந்தியின் கைது பற்றிய தங்களின் கருத்து...?

கி.வீரமணி:- சட்ட நடிவடிக்கை தேவையானதே! சட்டத்தின் முன் அனைவரும் சமம். அது பழிவாங்கும் நடவடிக்கையாக அமையாமல் இருந்தால் நல்லது.

நீதியின் குரல்:- சற்று வித்தியாசமான கேள்வி..! எம்.ஜி.ஆர். - கலைஞர் இருவரிடமும் தங்களுக்குப் பிடித்தது என்ன..? பிடிக்காதது என்னென்ன..?

கி.வீரமணி
:- எம்.ஜி.ஆரின் பிறருக்கு உதவும் மனிதநேயம்! கலைஞர் உழைப்பால் எவரோடும் ஒப்பிட முடியாத ஓர் உயர்தனிச்செம்மல்! கடைசிவரை கலைஞரை மரியாதையுடன் தலைவராகவே பார்த்தது எம்.ஜி.ஆரின் தன்மை! எம்.ஜி.ஆரிடம் பிடிக்காதது என்னவென்றால் கட்சியை உடைத்தது. கலைஞரிடம் பிடிக்காதது என்று எதுவுமில்லை! அளவுக்கு மீறிய அவரது இளகும் இதயம் - சிற்சில நேரங்களில்...!

நீதியின் குரல்:- திராவிடர் கழகத்தின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை..? அதனுடைய வளர்ச்சி குறித்து...?

கி.வீரமணி:- திராவிடர் கழகத்திற்கு கண்ணுக்குத் தெரிந்த கறுப்புச்சட்டை அணியும் எண்ணிக்கை ஒரு ரகம். கண்ணுக்குத் தெரியாத பெரியார் பற்றாளர்கள் - விளம்பரம் இல்லாத பகுத்தறிவாளர்கள் - இன உணர்வாளர்கள் இன்னொரு ரகம். இவர்கள் இருவரும் லட்சக்கணக்கில் வளர்ச்சி பன்னாடுகளிலும் உள்ளது! பெரியார் உலக மயமாகிறார்!

நீதியின் குரல்:- செல்வி ஜெயலலிதா குறித்து இரண்டு வரிகளில் விமரிசியுங்களேன்...?

கி.வீரமணி:- முரட்டுத்துணிவை என்றும் உடையவர்! தனது இந்துத்துவா கொள்கையை மாற்றிடத் தெரியாத திராவிட முத்திரை மட்டும் கொண்டவர்.

நீதியின் குரல்:- எமது குவைத் நீதியின் குரல் வாசகர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன..?

கி.வீரமணி:- நீதியின் குரலுக்கு நாம் எப்போதும் செவிமடுத்து நடந்தால்தானே நல்ல சமுதாயம் உருவாக முடியும்...! கடுமையாக உழைக்கும் நமது மக்கள் உடல்நலம் - உள்ள வளம் பெறுவதோடு - சிக்கனமாக வாழ்ந்து சேமியுங்கள்! மற்றவர்களுக்கு வாய்ப்புகிட்டும் போதெல்லாம் உதவத் தவறாதீர்! அறத்தால் வருவதே இன்பம். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, அப்படியே மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்பதே ஒழுக்கம் என்பார் தந்தை பெரியார். அவர் கூறும் ஒழுக்கத்துடன் தன்னம்பிக்கையுடன் - சோதனைகளை சாதனைகளாக மாற்றிடும் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டுமென விழைகிறோம்!!

அய்யா கி.வீரமணி அவர்களிடம் இந்த பேட்டிக்கு முன்னதாக நாம் பேசிக் கொண்டிருந்தபோது... மார்ச்சு மாதம் 31-அன்று முரசொலி அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவில் முதல்வர் கலைஞர் அவர்களிடம் கலைஞர் விருது பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்தோம்! அதோடு குவைத்தில் தந்தை பெரியார் நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் செல்லப்பெருமாள் அவர்கள் குறித்தும் மாதாமாதம் அவர் நடத்திக் கொண்டிருக்கும் அண்ணா நூற்றாண்டு கருத்தரங்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துச்சொல்ல, ஆமாம்! ஆமாம்! அவர் பெரியாரிடம் மிகுந்த பற்றுக் கொண்டவர் - எனக்கு நெடுநாட்களாக அவரைத் தெரியும் என்று மகிழ்ந்தார் அய்யா கி.வீரமணி. தொடர்ந்து நாம் இந்த ஆண்டு இறுதியில் உங்களை அழைத்து விழா நடத்த அண்ணன் செல்லப்பெருமாள் ஆர்வமாக உள்ளார் என்றும் கூற, அவசியம் வருவேன்-வருவேன்!! என்று அழைப்பை இப்போதே ஏற்று ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

------ நீதியின் குரல் - ஏப்ரல் 2009

13.4.09

இலங்கை அரசு போரை கட்டாயம் நிறுத்த வேண்டும்! இந்திய அரசு அறிவிப்பு


போரை கட்டாயம் நிறுத்துங்கள்
இலங்கைக்கு இந்தியா கூறியது!

- ப.சிதம்பரம் பேட்டி


காரைக்குடியில் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், போரை நிறுத்துமாறு சிறீலங்கா அரசையும் விடுதலைப்புலிகளையும் இந்திய அரசு வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சருடனும் தேசியப் பாது காப்பு ஆலோசகருடனும் தாம் பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை அரசு போரை முடித்துக்கொள்ளுமாறு கூறுவதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர் எனும் தகவலையும் தெரிவித் துள்ளார்.

இதுபற்றிய தகவல் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் என்ற வகையில் இல்லாமல் கட்டாயமாகச் செய்யப் படவேண்டும் என்ற உறுதியான முறையில் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறினார்.




இதே கருத்து விடுதலைப்புலிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என் றும் அவர்கள் அதனை ஏற்று நடப்பார்கள் என் றும் நம்பிக்கை தெரிவித்தார்

இணக்கமான நடவ டிக்கை இரு தரப்புக்கும் நன்மை தரக்கூடியதாக அமையும் என்றார். அத்துடன் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கும் நல்லது என்றார்.


இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் நம்பிக்கை கொள்ளுமாறு தமிழக மக்களை ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். 1983 ஆம் ஆண்டில் இருந்தே, தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றே வற்புறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.மக. கூறியது பற்றிக் கேட்டபோது, நான்கரை ஆண்டுக் காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரு கட்சிக்கு அப்படிப் பேசுவதற்கு தகுதி கிடையாது என்றும் மய்ய அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்தார்.



--------------நன்றி:-"விடுதலை" 13-4-2009

12.4.09

விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவுக் காலமா?


அப்பாவித் தமிழர்கள் படுகொலை போரை நிறுத்தும்படி
உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள் வேண்டுகோள்



போரை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று, உலக நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெகல்கா இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவுக் காலம் என்று கூறப்படுவது பற்றி?

பதில்: தமிழ் ஈழ விடு தலைப்புலிகளுக்கு பின்னடைவுக் காலம் என்று ஒன்று இருக்கப் போவதில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுய மரியாதைக்குமான தாகம்தான் குடிகொண் டுள்ளது. நமது அரசியல் விருப்பு வெறுப்புகளை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழர்கள் கருது கிறார்கள்.
அவர்களுடைய விடுதலைப் போராளி என்ற முறையில் அவர்களது உரிமைகளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக் காமல் கடந்த 35 ஆண்டு களுக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருவதன் மூலமே இந்த நிலையை பெற்றிருக்கிறோம்.

விடுதலைப்புலிகளுக்கான ஒரு காலம் வரும் என்று காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்கு பதிலாக எமது மக்களுடைய சுயநிர் ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் படி இந்தியாவையும் அனைத்துலக சமூகத்தை யும் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி
: பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு இலங்கைப் படைகள் முயற்சி செய்வதாக வெளியான செய்திகள் தொடர்பாக அவரு டைய பிரதிபலிப்புகள் எவ்வாறு உள்ளன?

பதில்: இந்தச் செய்திகளைப் பார்த்து அவர் (பிரபாகரன்) சிரிக்கிறார்.

கேள்வி
: இந்தப் போரில் இலங்கைப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைந் துள்ளனரா?

பதில்: இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் ராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

கேள்வி: போர் நிறுத் தத்துக்கு தயார் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?

பதில்: தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படு கொலைப் போரை இலங்கை அரசு தீவிரப் படுத்தி இருப்பதால்தான் போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி வருகிறோம். மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட் கள் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் அவசியமாகும்.

அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் பெரியவர்கள் இலங்கை ஆயுதப்படைகளினால் நாள் தோறும் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிங்கள அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போகவேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட் டுக்கொள்கிறோம்.

இந்தப் போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத் துலக சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு நடேசன் தான் அளித்த பேட்டி யில் கூறியிருக்கிறார்.

-------------------நன்றி:- "விடுதலை" 12-4-2009

23.2.09

ஈழப் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?




காங்கிரசை கூட்டணிக்கு அழைத்துள்ளார் ஜெயலலிதா
அதிமுகவுடன் கூட்டணி சேரும் இடதுசாரிகளின் நிலை என்ன?
சேலத்தில் செய்தியாளர்கள் மூலம் தமிழர் தலைவர் எழுப்பிய வினா


திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கிறார். காங்கிரஸ் இல்லாத அணியுடன் இருப்போம் என்று சொல்லிச் சென்ற இடதுசாரிகள் நிலை என்ன? அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பேசிக் கொண்டிருக் கின்ற மற்றவர்களின் நிலை என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்கள் பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் 21.2.2009 அன்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: திமுக அரசை கலைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளாரே?

தமிழர் தலைவர்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அன்றைக்கு அடுத்த நாளில் இருந்தே அதிமுக பாடுகின்ற பழைய பாட்டு இது. கீறல் விழுந்த கிராம ஃபோன் பிளேட்டின் வரிகள். அதற்கு மக்களிடமும் மரியாதை இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கேள்வி: காங்கிரஸ் - திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளாரே?

தமிழர் தலைவர்:

எங்களுக்கு அதைப்பற்றி எந்த கருத்தும் இல்லை. இதுவரை அதிமுகவிற்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. அவர்கள் ஆசைகளை குதிரைகளாக்கி சவாரி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள். நாங்கள் மூன்றாவது அணி அமைப்போம் என்று அதிமுகவோடு சென்ற இடதுசாரிகளும் இப்பொழுது செல்ல திட்டமிட்டுப் பேசிக் கொண்டிருக்கின்றவர்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விசயம்.

எனவே காங்கிரசைப் பொறுத்த வரையிலே அவர்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டார்கள். இடதுசாரிகளின் நிலைதான் பரிதாபகரமானது.


கேள்வி: என்ன காரணத்திற்காக காங்கிரஸ் வர வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள்?

தமிழர் தலைவர்:

என்ன காரணத்தைக் கொண்டு அழைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். காங்கிரசை ஒரு நேரம் அழைப்பார்கள். இன்னொரு நேரம் மக்களோடுதான் எங்களுடைய கூட்டணி என்று சொல்லுவார்கள். இன்னும் போகப் போக பல்வேறு பதில்கள் வெளி வரும்.

கேள்வி: ஈழப் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

தமிழர் தலைவர்:

ஈழத் தமிழர் நல உரிமைப் பாதுகாப்பு துணைக் குழு மூலம் டெல்லி சென்று குடியரசு தலைவர், மற்றும் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினோம்.
எங்களிடம் உறுதிமொழிகூறினார்கள். மீண்டும் இந்தப் பிரச்சினை வந்திருக்கிறது. இப்பொழுது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதனுடைய அமைப்பாளர் சட்டமன்றத்தில் இருக்கிறார். நாங்கள் சுற்றுப்பயணத்தில் இருக்கின்றோம். சுற்றுப்பயணம் முடிந்தவுடனே இதனுடைய தொடர் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பரிசீலித்து செயல்படுவோம்.


கேள்வி: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று சொல்லி மனு கொடுத்திருக்கின்றார்களே!

தமிழர் தலைவர்:

ஈழப் பிரச்சினையிலே மற்றவர்கள் யார் எதைச் செய்தாலும் நாங்கள் அதைக் குறை கூறுகிறவர்கள் அல்லர். அதே நேரத்திலே அதை நாமும் சேர்ந்து நல்லனவற்றை வரவேற்க வேண்டும்.
கலைஞர் அவர்கள் மிக முக்கியமான உதாரணத்தைச் சொன்னார்கள். இரண்டு அணிகளாக இருக்கிறார்கள் என்பதினாலே ஈழத் தமிழர் பிரச்சினை பலகீனமாகியிருக்கிறது என்று யாரும் கருதத் தேவையில்லை.
கத்தரிக்கோலினுடைய இரண்டு பிளேடுகள் எப்படி சிறப்பாக இருக்கிறதோ அது போல பணியாற்றுவோம் என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.


இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.


---------------------நன்றி:"விடுதலை" 22-2-2009

29.1.09

அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்களா?



மக்கள் மனிதக் கேடயங்களா? வன்னிக்கு வந்து பாருங்கள்
உலகத் தலைவர்களுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு

முல்லைத் தீவு மாவட்டத்தில் அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாற்றை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உண்மை நிலை என்ன என்பதை அறிய வன்னிப் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிடும்படி உலகத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பல இலட்சக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று இலங்கை அரசு நடத்தி வரும் பொய் பரப்புரை பற்றி கேட்டபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்களின் மக்களுக்காகவே நாங்கள் போராடுகிறோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாங்கள் வைத்திருக்கிறோம் என்பது பொய் பரப்புரையாகும். எங்கள் தமிழ் மக்களை கொல்வதற்கான பொய் பரப்புரையாக இதை சிங்கள அரசு செய்து வருகிறது. வன்னிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் வாழ்வதையே விரும்புகின்றனர். அதனால் தான் கடந்த 2 ஆண்டு களாக எங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் என்று நடேசன் தெரிவித்தார்.

இதே குற்றச்சாற்றை பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் முன்வைப்பது பற்றி கேட்டபோது, எங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்குவந்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். எங்கள் மீது குற்றச்சாற்றுகளை முன் வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுக்கும் நான் வெளிப்படையான அழைப்பு விடுக்கிறேன். எங்கள் மக்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலை நிறுத்தி விட்டு, எங்கள் பகுதிக்கு வந்து பாருங்கள். அங்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றும் நடேசன் கூறினார்.


இலங்கைப்படையினருடனான போரில் விடுதலைப்புலிகள் பெரும் இழப்பை எதிர் கொண்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் அரசியல் தீர்வை பெறக் கூடாது என்று கேட்டபோது, சுதந்திரமான சிறப்பான அரசியல் தீர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தத் தீர்வை பெறுவதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம் என்று அவர் விடையளித்தார்.

------------------ நன்றி: "விடுதலை" 29-1-2009

31.12.08

"அக்னி பார்வை"யில் "தமிழ் ஓவியா"



தோழர் அக்னி அவர்கள் தனது மின்னஞ்சல் முகவரிக்கு எனது கைபேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியும் அனுப்பி வைக்க கோரினார். அதன்படி அனுப்பி வைத்தேன். உடனே கைபேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. நாம் என்ன அப்படி பெரிதாகச் செய்து விட்டோம் என்ற மன நிலையில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை, அந்த அளவுக்கு பெரிய ஆளுமல்ல என்று கூறினேன். அதற்கு தோழர் அக்னி என்னிடமிருந்து எப்படியாவது பதில் பெற்றுவிடவேண்டும் என்ற அக்கரையில் பேசினார். நானும் பேட்டியாக இல்லாமல் ஒரு பதிவாக பதிவு செய்வோம் என்று கூறியதை அடுத்து அவர் மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு எனது பதிலை அளித்தேன். அதை "அக்னிபார்வை" தனது (http://agnipaarvai.blogspot.com/)வலைப் பூவில் வெளியிட்டிருந்தார். அதன் மீள்பதிவு இங்கு வெளியிடப்படுகிறது.

நன்றி

----------------------------------------------------------------------------------------

அக்னியின் கேள்விகள்:பதிவர் தமிழ் ஓவியாவின் பதில்கள்

நான் ’திருவிளையாடல் தருமி’ மாதிரிதான். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒருவரை கேள்வி கேட்பது என்றால் ’அல்வா’ சாப்பிடுவது மாதிரி.

தமிழ்மணத்தின் வாயிலாகவோ, தமிலிஷ் வாயிலாகவோ ஒரு நாளைக்கு சுமார் 50 வெவ்வேறு பதிவுகள் படிக்கும் பொழுது, மனதில் கேள்விகள் ஊற்றெடுக்க துவங்கிவிடும். சில நேரம் பின்னுட்டதில் கேட்பேன். பல நேரம் கேள்விகள் மனதில் தங்கிவிடும்.பதிவர் சந்திப்புகளிள் சில நேரம் பதில்களை பெற்றுவிடுவேன்.

ஒரு நாள் திடிரென்று இந்த யோசனை தோன்றியது ‘அஞியின் கேல்விகள்’.. இனி நிறைய பதிவர்களிடம் என் கேள்விகளுக்கான பதிலகளை பெற்று பதிவிடுவேன்..அந்த வரிசையில், முதலில் பதிவர் ’தமிழ் ஓவியா’.. என்னயும் மதித்து, பதிலளித்த அவருக்கு என் நன்றிகள்.



அக்னியின் கேள்விகள்..

1. கேள்வி: - உங்களைப் பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -

என்னைப்பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

ஒருநாளைக்கு இருமுறை மட்டுமே பேருந்து அதுவும் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் வந்து செல்கிறது. அப்படிப்பட்ட குக்கிராமத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் கடினமான உழைப்பின் மூலம் எனக்கு கல்வியைத் தந்தனர். கிராமத்தில் வளர்ந்த சூழல் காரணமாக அனைத்துவிதமான அடக்குமுறைகளும் அறிந்து கொள்ள முடிந்தது. படிப்படியாக படித்து முடித்து பணிக்கு வந்து ஒரு கட்டத்தில் பணியை இழந்து மீண்டும்

பணி ஏற்று, ஏற்றுக் கொண்ட கொள்கையின்படி ஜாதி மறுப்புத்திருமணம் புரிந்து ஒரு பெண்குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னைப்பற்றி இதுவே அதிகம் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


2.கேள்வி:- ஒரு மாதத்தில், சில சமயம் 100 பதிவுகள் வரை போட்டிருக்கிறீர்கள்.இதற்கான நேரமும் தகவலும் உங்களுக்கு எப்படிக்கிடைக்கிறது?

தமிழ் ஓவியா பதில்: -

கிராமத்தில் வளர்ந்ததால் அருகில் உள்ள நகரமான பழனிக்கு வருவதற்கு கூட முடியாத சூழல், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு பெரியார் பற்றிய நூல்கள் அறிமுகமானது. ஆனால் அப்போது பெரியாரைப் படித்து புரிந்து கொள்ள இயலாத வயது அதைவிட அப்போது பள்ளிப் பாடத்தையே படிக்க நேரம் கிடைக்காது. இருந்தாலும் எங்கள் ஊரில் கடை வைத்திருந்த நாகராஜ், அவருடைய உறவினர் திருநாவுக்கரசு( அப்போது அவர் கல்லூரில் படித்து வந்தார்) போன்றவர்கள் பெரியார் பற்றிய நூல்களை கொடுத்து படிக்க வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக பெரியாரை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கினேன். பின்பு நான் பழனிக்கு கல்லூரிப் படிப்புக்கு போக ஆரம்பித்தபிறகு பெரியாரின் நூல்களை நானே வாங்கிப் படிக்கும் அளவுக்கு தேறி விட்டேன். அந்த நூல்கலைப் படிக்கும் போது சமுதயாம் அரசியல் போன்றவைகள் நன்கு புரிய ஆரம்பித்து விட்டது. அதோடு கிராமத்தில் நடக்கும் அடக்கு முறைகளுக்கான அடிப்படைக்காரணமும் தெரிந்து விட்டது. இந்தக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்ற அடைப்படையில் பெரியார் மற்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்களையும் படிக்கலானேன். படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட அய்யங்கள் தோழர்களுடன் விவாதிக்கும் போது அவர்கள் என்னிடம் கேட்ட அய்யங்கள் அத்தனையும் குறித்து வைத்துக் கொண்டு அதற்கான விடைகளைத் தேடினேன். அந்த அய்யங்களுக்கு பெரியார் கருத்துக்களில் விடை கிடைத்தது அப்போதிருந்தே குறிப்பு எடுப்பதும் அதை ஒரு நல்ல தரமான நோட்டில் எழுதி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.


நான் கல்லூரியில் படிப்பதால் “விடுதலை” இதழை பழனியில் இருந்து எங்கள் ஊருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர் பழனி பெரியார் இயக்கத்தினர். அப்படி கொண்டு போகும்போது பேருந்துலேயே

“விடுதலை” (4 பக்கம்) இதழைப் படித்து விடுவேன். படிக்க படிக்க பல உண்மைகள் புரிய ஆரம்பித்து அந்த இதழ்களைச் சேகரித்துவைக்கும் பழக்கமும் வந்துவிட்டது. தமிழர்களின் ஆயுதம் “விடுதலை” என்று பெரியார் சொன்னார். நானும் அந்த ஆயுதத்தை பலமாகப் பற்றிக் கொண்டேன்

இப்போது கூட நான் ஒரு மாதத்தில் நூறு பதிவு போடுவதற்கு செய்திகள் முழுவதும் “விடுதலை” “உண்மை” இதழ்களிலிருந்தே எடுக்கிறேன்.

பணி முடித்ததும் என்னுடன் பணியாற்றுபவர்கள் வேறு பணி செய்து பணத்தை தேடி ஓடுவார்கள். நான் செய்தியைத் தேடி ஓடுவேன்.

எனது துணைவியார் மாலையில் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (டூயுசன்) வகுப்பு எடுப்பார். மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு எங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையை ஒதுக்கிவிட்டு இன்னொரு அறையில் உள்ள கணனி நான் அமர்ந்து விடுவேன். இரவு 9 மணி வரை நான் எடுத்த குறிப்புகளிலிருந்தும், “விடுதலை” இதழில் இருந்தும் செய்திகளை வலைப்பூ வில் பதிவு செய்து விடுவேன். இணையத்திலிருந்தும் பல செய்திகள் கிடைப்பதால் இது சாத்தியமாகிறது.


3.கேள்வி:- பெரியர் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள்,உங்களுக்கு பெரியார், அவரின் கொள்கைகள் அறிமுகமாகிய விதம் பற்றி?


தமிழ் ஓவியா பதில்: -

இரண்டாவது கேள்விக்கான பதிலைப் படிக்கவும்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே திராவிடர் கழகத்தில் இணைந்து என்னாலான பணியைச் செய்து வந்து கொண்டிருக்கிறேன். படிக்கும் போது நான் படித்தவைகளிலிருந்து தொகுத்துவைத்திருந்த செய்திகளை “விடுதலை” “உண்மை” இதழ்களுக்கு அனுப்பிவைப்பேன். அந்தச் செய்திகளும் பதிவாகும். தேடலும் தேடிய செய்திகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் பெரியார் அறிமுகமாகி, இன்று எங்களது வாழ்வியலாகி விட்டது.



4. கேள்வி:- உங்கள் வீட்டில் பெரியரின் கொள்கைகள் நடைமுறையில் உள்ளதா?

(வீட்டில் நடக்கும் திருமணம், இறப்பு நிகழ்சிகள் மூலம் கொள்கைக்காரனா இல்லையா என்பதை வெகு எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் .

அதனடிப்படையில் நான் திருமணம் செய்தால் ஜாதி மறுப்புத்திருமணம் தான் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்து வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டேன். அது போல் என் தந்தை இறப்பின்போதும், தாய் இறப்பின் போதும். எந்த வித சடங்குகளுமின்றி இறுதி நிகழ்ச்சி நடந்தது.

திருமணத்தைப் பொறுத்தவரை எனது தனிப்பட்ட உரிமை. அதில் எனது சகோதரகள் சகோதரிகள் தலையிட முடியாது. எனது பெற்றோர் இறப்பு என்பது எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது. ஆனாலும் எனது முடிவுக்கு கட்டுப்பட்டு எந்தச் சடங்கும் இன்றி எங்களது பேற்றோரின் இறுதி நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைத்த எனது அண்ணன் மற்றும் அக்கா இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நான், என் துணைவியார், எனது மகள் மூவரும் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்று சற்றும் பிசகாமல் நடந்து வருகிறோம்.

5.கேள்வி:- தமிழ் ஈழம் பற்றி, உங்களின் கருத்து.

தமிழ் ஓவியா பதில்: -



இலங்கையில் தமிழன் இரண்டாந்தரக் குடிமகனாக நடத்தப்பட்டதால் தந்தை செல்வா பொன்றவர்களால் அறப்போரட்டமாக ஆரம்பித்து, அடக்குமுறை அதிகமானதால் இன்று ஆயுதப் போரட்டமாக உருவெடுத்திருக்கிறது.

அடக்குமுறை எங்கிருந்தாலும் அது கண்டிக்கதக்கது. அந்த வகையில் ஈழத்தமிழர்களுக்கு தமிழன் என்ற முறையில் தார்மீகமான ஆதரவு எப்போதும் உண்டு.

6. கேள்வி:- இப்பொழுதும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் இருக்கிறார்கள?

தமிழ் ஓவியா பதில்: -

பெரியாரின் கொள்கைகள் என்பது ஒரு வாழ்க்கை நெறி, அது மனித நேயத்தை மலரச் செய்வதில் முதலிடம் வகிக்கிறது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மூலம் பல நூல்களை திராவிடர்கழகம் வெளியிட்டு பெரியாரின் கருத்தை மக்களிடம் கொண்டு செல்கிரது. அதேபோல் மகளிரணி, இளைஞரணி மூலம் தற்போதைக்கு ஏற்ற முறையில் புதிய அணுகுமுறையில் பிரச்சாரப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அது போல் பெரியார் தொண்டர்கள் அவரவர்கள் சக்திக்கேற்றவாறு தனது சொந்தக் காசை செலவு செய்து பெரியாரைப் பரப்பி வருகின்றனர். கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கும் வரையில் பெரியாரின் பணி தேவைப்படும். இப்போது கொஞ்சம் அதிகமாகவே தேவைப் படுகிறார் பெரியார். இது குறித்து ஒரு சான்றை மட்டும் கீழே தருகிறேன்.

“தீர்மானம் 6 (அ):

இயக்க நாளேடான விடுதலை மாதம் இருமுறை இதழான உண்மை, குழந்தைகள் இதழான பெரியார் பிஞ்சு, ஆங்கில மாத இதழான தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றிற்கு அதிக அளவில் சந்தா சேர்ப்பதையும், இயக்க வெளியீடுகளை, நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதையும், புதிய வெளியீடுகளை திட்டமிட்ட வகையில் கொண்டு வருவதையும் முதன்மையான பணியாகக் கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை ஏட்டிற்கு இது பவளவிழா ஆண்டு (75 ஆம் ஆண்டு) என்பதால், அதன் முக்கியத்துவத்தை நாடு முழுவதும் எடுத்துச் சொல்லி வாசகர்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகப்படுத்து வதற்கான முயற்சியை திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 (ஆ):

வீதி நாடகம், பகுத்தறிவுக் கண்காட்சி, கிராமப் பிரச்சாரம், நடமாடும் புத்தகச் சந்தைப் பயணம் இவற்றை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு திட்டத்தின்மூலம் தீவிரமாகச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வீதி நாடகம், மந்திரமா? தந்திரமா? ஆகியவைகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி இதில் இன்னும் ஏராளமான அளவில் இளைஞர்களை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 (இ):

பெரியாரியல் பயிற்சி முகாம் - பெண்களுக்கான முகாம், களப்பணி முகாம், பேச்சாளர் முகாம், தலைமைத்துவ முகாம்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.”

-----------2009 ஆம் ஆண்டுக்கான திராவிடர் கழகச் செயல் திட்டங்கள் உள்பட திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து . “விடுதலை” 23-12-2008



7. கேள்வி:- இன்றய இந்தியாவில் நிலவும் அரசியல் பற்றி உங்கள் கருத்து.


தமிழ் ஓவியா பதில்: -

இன்று இந்தியாவில் நிலவும் அரசியல் தன்மையை நினைக்கும் போது வேதனையும் வெட்கமும் படத்தக்க சூழல்தான் நிலவுகிறது. ஒருபக்கம் இந்து தீவிரவாதிகளால் மாலேகன் குண்டு வெடிப்பு, இன்னொரு பக்கம் இஸ்லாம் தீவிரவாதிகளால் மும்பையில் பல இடங்களில் குண்டு வெடிப்பு மனிதத்துடன் வாழமறந்து விட்டு மதத்தை கட்டிக் கொண்டு வாழும் மதவெறியே இன்றைய அரசியல் நிலையாகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அரசியல் சாக்கடையை யாராலும் சுத்தம் செய்ய முடியாது. லஞ்சம், ஊழல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை , ஜாதி மதம், என எல்லாமும் நிறைந்த இந்தியாவை அரசியல் காப்பாற்றிக் கொண்டு(மேற்கண்டவைகளை ஒழிக்காமல்) இருக்கிறது. சட்டரீதியாக மடுமல்லாமல் மனரீதியாகவும் மூலகாரணத்தை அறிந்து அதைப் போக்கினால் நிலமை மாறலாம்.


8.கேள்வி:- தமிழ்நாட்டில் மெல்ல RSS பரவி வருகிறதே அதை பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -



இந்தியாவில் தமிழ்நாடு எப்போதும் தனித்தன்மையாக ஒவ்வொரு செயலிலும் இருக்கும். அந்த வகையில் மதவெறிக்கு இடம் கொடுக்காமல் மண்ணின் பெருமையை நிலைநாட்டியே வந்துள்ளது.உதாரணமாக இந்துமத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு மதவெறிக்கு இடம் கொடுக்காமல் (ஒருசில தவிர) அமைதி காத்தது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றி தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மிக அதிகமாக வளர்ந்தனர். அப்போதே அதை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்தது திராவிடர் கழகம். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பரப்புரையில் ஈடுபட்டு அதன் முகமூடியை கிழிதெறிந்து அம்பலப்படுத்தினர் பெரியார் இயக்கத்தினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர்.

ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசால் சுமார் நான்கு முறை தடை செய்யப்பட்ட வன்முறை அமைப்பு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.க்கு முட்டு கொடுத்ததனால் ஆர்.எஸ்.எஸ். பரவி வருவது போல் ஒரு தோற்றம் நிலவுகிறது. அதில் உண்மை இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் பருப்பு தமிழகத்தில் வேகாது.

9. பழனியின் பிரபலமே பக்தி, அந்த ஊரில் ஒரு பெரியரிஸ்ட்டாக எப்படி உணருகிறீர்கள்?

தமிழ் ஓவியா பதில்: -

எங்கள் ஊரான பழனியில் ஒரே “பொழுதுபோக்கும்” இடம் பழனிமலைதான். பெரியார் தொண்டர்கள் என்றாலே ஒரு தனிமரியாதை உண்டு. பழனியில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும். நான் அடிக்கடி சொல்லுவதுபோல் உலகத்தில் உள்ள எல்லாப் பதவிகளையும் விட “பெரியார் தொண்டன்” என்ற பதவி உயர்வானது. பக்தி என்பது யாரும் விரும்பி செய்வது போல் தெரியவில்லை. பயத்தினால் பக்தியாக இருப்பது போல் நடிக்கிறார்கள். அல்லது எனக்கு இதைசெய்து கொடு நான் உனக்கு மொட்டைஅடிக்கிறேன், விரதம் இருக்கிறேன் போன்ற ஒப்பந்தங்கள் நடக்கிற இடமாகத்தான் இருக்கிறது. லஞ்ச ஊழலின் பிறப்பிடம் கோவில் என்று சொன்னால்கூட தவறில்லை.

பக்தர்கள் எதையாவது எதிர்பார்த்து எதையும் செய்கிறார்கள். ஆனால் பெரியார் தொண்ர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறார்கள். உதாரணம் வேண்டுமானால் பக்தர்கள் இறந்தபின்கூட சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். ஆனால் பெரியார் தொண்டர்கள் எதையும் பொருட்படுத்தாமல்“தொண்டறம்” நோக்கில் செயல்படுவார்கள். ஆக

பெரியாரின் தொண்டனாக இருப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது.


10. கேள்வி:- பழனியில் நிறைய, பக்தி என்ற பெயரில் மோசடிகள் நடக்கிறதாமே உண்மையா?


தமிழ் ஓவியா பதில்: -

பக்தியின் பெயரால் நடக்கும் அட்டூழியம் கொஞ்சநஞ்சமல்ல. பழனியில் மட்டுமல்ல கோவில் நகரங்கள் அனைத்திலும் மோசடிகள் நடந்துதான் வருகிறது.

பழனிக்கு வருபவர்கள் தலையில் மட்டும் மொட்டை போட்டுக் கொள்வதில்லை, தங்களுடைய வருமானம் தன்மானத்தையும் சேர்த்து மொட்டை போட்டுக் கொள்கிறார்கள்.

பூசை சாமான்கள் வாங்குவதிலிருந்து மொட்டை போட்டுக் கொள்வதிலிருந்து மோசடிகள் தாராளமாக நடந்து வருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் மோசடி செய்பவர்கள் அனைவரும் பக்தர்கள். ஏமாறுபவர்களும் பக்தர்கள்.

11. கேள்வி:- உங்களின் ஆன்மீக நிலை பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -

நான் 9ஆம் வகுப்பு படிக்கும் வரை எனது குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று “கடவுளை” வணங்கியுள்ளேன். அதன் பின் பலமுறை கோவிலுக்கு சென்றுள்ளேன். ஆனால் கடவுளை வணங்குவதற்கல்ல. அங்கே நடக்கும் அட்டுழியங்களையும், ஆய்வு நோக்கில் அந்தக் கோவிலின் தலபுராணங்களை அறிந்து கொள்ள. என்னைப் பொருத்தவரைஆன்மீகம் என்பதே மோசடி. தானும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றுவது.


13.கேள்வி:- உங்களின் பொழுதுபோக்கு?

தமிழ் ஓவியா பதில்: -



பொழுது போக்கு என்பதே இல்லை என்று சொல்லலாம். பணி முடித்தபின், படிப்பது ,எழுதுவது போன்றவைகளுக்கே நேரம் போதவில்லை.இரவு உணவின் போது குறிப்பாக 9- 10 எனது குடும்பத்தாருடன் பேசி மகிழ்வதுதான் இப்போதைய பொழுது போக்கு. விடுமுறை நாள்களில் பழனி முழுவதும் குடும்பத்துடன் நடந்து சென்று பல் வேறுபட்ட மக்களைச் சந்திப்போம். எனது துணைவியாரின் சொந்த ஊருக்கு போகும்போது மட்டும் பகலில் தூங்குவேன். இதைத்தவிர வேறு இல்லை.


14. கேள்வி:- உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

தமிழ் ஓவியா பதில்: -

நான் ஆரம்பித்திலேயே சொன்னது போல் பெரியார் நூல்களை விரும்பிப் படிப்பேன். அதேஅளவு ஈடுபாட்டுடன் அம்பேத்கர் நூல்களையும் விரும்பிப் படிப்பேன். மற்றபடி எந்த நூல் கையில் கிடைத்தாலும் வாசித்துவிடுவேன். வீடு முழுவதும் நூல்கள், இதழ்கள் என்று சிதறிக் கிடக்கும். எனது துணைவியாரோ நூலை எடுத்த இடத்தில் வைக்கச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் அதை மட்டும் என்னால் செய்யவே முடியவில்லை. என்னை திட்டிக் கொண்டே அதைப் பொறுப்பாக அடுக்கி வைத்து உதவுவார் எனது துணைவியார்.

தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் எழுத்துக்களும், தி.க.பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் எழுத்துக்களும்தான் என்னையும் எழுதத் தூண்டியது.

15. கேள்வி:- பதிவராக இன்றய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி பார்கிறீர்கள்?

தமிழ் ஓவியா பதில்: -



தொழிநுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் மூடநம்பிக்கையை வளர்க்க இந்த அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களைக் கண்டால் எரிச்சலாக இருக்கிறது.

இந்த வளர்ச்சியை நாம் ஆக்க சக்திக்கு பயன்படுத்தினால் மற்ற நாட்டுக்காரன் போல் நாமும் வேகமாக முன்னேற்றமடையலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி எழுதும்போது பெரியாரின் “இனி வரும் உலகம்” என்ற நூல்தான் நினைவுக்கு வருகிறது. அதில் 1943 ஆம் ஆண்டிலேயே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் ஏராளம் (கடவுள் என்ற கற்பனை உட்பட). இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க வேண்டியவைகளும் ஏராளம் இருக்கிறது. அதற்கு இந்த அறிவியல் வளர்ச்சி உதவும்.

]இதுகுறித்து பெரியார் கருத்து ஒன்றை தருகிறேன்.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும், கண்ணும் கொள்ள எனக்கு விருப்பமேயொழிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் பற்றி அக்கறை கிடையாது”

---------------- பெரியார் 11-12-1944 இல் ஈரோட்டில் பேசியது.

இன்னும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து அதை நாம் ஆக்க சக்தியாக பயன்படுத்த வேண்டும்.

தாங்கள் அனுப்பிய 15 கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவு விடை அளித்துள்ளேன். கேள்விகள் அனைத்தும் மிகவும் கூர்மையானவை,பொருள் பொதிந்தவை. இந்த வாய்ப்பைக் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி.

28.12.08

ராவணன் நல்ல மனிதனா? கெட்டவனா?




திருப்பித் தாக்கும் திராவிடர்

இங்கிலாந்துக்காரரான மார்ட்டின் பக்லி என்பார் எழுதியுள்ள An Indian Odyssey எனும் பெரிய நூலில் 16 ஆம் தலைப்பு The Dravidians Strike Back என்பதாகும்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் ராமாயணம் பற்றிய அவரது கருத்துகளைப் பற்றியும், தமிழர் தலைவரை நேரில் கண்டு, பேசி அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ள கட்டுரை இது:-

சென்னையில் - இந்தியாவின் தென்கிழக்குக் கடலோரத்தில் - நினைவுப் பூங்கா ஒன்றில் சுமார் 20 அடி உயரத்தில் எரியும் சுடரைத் தூக்கிப் பிடிக்கும் முஷ்டி நிற்கிறது. அவை, சாதாரணமாக சுதந்திரச் சுடராகவோ, சத்திய ஜோதியாகவோதான் இருக்கும். இது ஏன் கருப்பாக? இந்தச் சுடரை ஏந்திப் பிடிக்கும் இயக்கம் - சுயமரியாதை இயக்கம் - கருப்பின் பெருமை - அந்த இயக்கத்தவர் அணியும் சட்டையின் நிறம் கருப்புதான்.

இந்தச் சுடருக்குச் செல்லும் வழியில், இரு மருங்கும் கருப்பு கிரானைட் பலகைகள் - இராமாயணத்தின் பெருமையைப் பீற்றிக்கொள்ளும் இந்தியாவில், அதனைச் சிதைத்த மனிதரின் அறிவுரைகள் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் திராவிட மக்களை ஆரிய வலையில் வீழச் செய்து அவர்களைத் தன்மானம் - பகுத்தறிவு அற்றவர்களாகச் செய்வதே ராமாயணமும் மகாபாரதமும்


மற்றொன்று,

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று முழங்குகிறது.


மூன்றாவது ஒன்று.

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? பார்ப்பனர்களால், பார்ப்பனர் அல்லாதாதாருக்குச் சமத்துவம் கிடைக்குமா? ஒருக்கால் கிடைத்தாலும் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது.

சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் இந்தச் சொற்களுக்குரியவர், ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்பட்ட தென் இந்தியத் தமிழர். வேதநூல் போல் போற்றப்பட்ட ராமாயணத்தைத் திராவிடர்களுக்கு எதிரான மெய்ன் காம்ப் (இட்லர் எழுதிய நூல்) போல மாற்றிக் காட்டியவர். இக்காலத்தில் தென்னகத்தில் நிலவும் அரசியல் நிலைகளுக்குக் காரணமானவர்.

இங்கே, திராவிட அரசியல்வாதிகள், இந்தியாவுக்கு வந்தேறிய அன்னியர், ஆரியப் படையெடுப்பு போன்றவற்றை ஏற்கும் தனித்த குழுவினராக இருக்கிறார்கள். வெள்ளைத் தோல் பார்ப்பனர்கள் இந்நாட்டின் பூர்வகுடிமக்கள் மீது தாக்குதல் தொடுத்த வரலாற்றின் சின்னமாகத்தான் ராமாயணத்தைக் கருதுகிறார்கள். இந்நாட்டில் பூர்வ மக்கள் வாழ்ந்து வந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். (சில ஆசிரியர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள்). தென் இந்திய மொழிகளைக் குறிக்கும் திராவிட எனும் சொல் சரியாகவே இவர்களைக் குறிப்பதாகிறது. ஆனால் கருநிறமும், கரிய தலைமயிரும், சப்பையான மூக்கு வடிவமும் கொண்ட ஆதி மக்களைக் குறிப்பதாக திராவிட எனும் சொல் அமைந்துள்ளது.

இராமனை ஒழித்த ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் (ராமக் கடவுள் என்பதுதான் ராமசாமி என்பதற்கு அர்த்தம் என்பது வேடிக்கையானதுதான்). 1879 இல் பார்ப்பனர் அல்லாத, வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். மத ஆச்சாரப்படி தடுக்கப்பட்டிருந்தாலும், முசுலிம் நண்பர்களின் வீடுகளில் தண்ணீர் குடித்ததன் மூலம் அந்த நம்பிக்கையை எதிர்த்துக் காட்டியவர். 19 வயதில் திருமணம் செய்து கொண்டு சிறந்த வணிகராக விளங்கினார். ஆனாலும் அவரது கட்டுப்பாடற்ற போக்கு அவரின் குடும்பத்தாரைச் சங்கடப்படுத்தியது. 25 வயதில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறிச் சில ஆண்டுகள் சன்னியாச வாழ்க்கை வாழ்ந்தார். காசிக்குப் போயிருந்தபோது, பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவு அளிக்கும் இடத்தில் இவரை உள்ளே விட மறுத்தார்கள்; அங்கேதான் ஜாதி அமைப்பின் கொடுமையை அறியும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. மற்றவர் சாப்பிட்டு மிச்சம் வைத்ததைச் சாப்பிடும் நிலை இவருக்கு ஏற்பட்டது. புரோகித வர்க்கம், பெரும்பான்மை மக்களை நசுக்கி ஆதிக்கம் செலுத்திடப் பயன்படுத்தும் மதத்தை எதிர்ப்பதைத் தன் குறிக்கோளாகக் கொள்ளும் மாற்றத்தை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தி விட்டது.
வடக்கே இருப்பவர்களைக் காட்டிலும் அதிக அளவில் தெற்கே மக்கள் சூத்திரர்களாகக் கருதப்பட்டுள்ளனர். மிகச் சிறுபான்மைக் கூட்டமான பார்ப்பனர்கள் பெரும் நாசம் விளைவிப்பவர்களாகியிருப்பதற்குக் கூட இது காரணம்.

ஈ.வெ. ராமசாமி 1925 இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி அரசியல்வாதியாகவும் சமூக சீர்திருத்த வாதியாகவும் செயல்படத் தொடங்கினார். அவர் மிகச் சிறந்த பத்திரிகையாளர், புகழ் பெற்ற பேச்சாளர்! சுட்டெரிக்கும் அவரது சொற்பொழிவுகள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றன - அவற்றை அவரது கருத்தை எதிர்ப்பவர்களும் போற்றினர். பெரும் மனிதர் எனப் பொருள்படும் பெரியார் எனும் அடைமொழி அவருக்கு அளிக்கப்பட்டது. பெரிய ஆத்மா எனப் பொருள்படும் மகாத்மாப் பட்டம் காந்திக்கு உரித்தாக்கியது போல இப்பட்டம் இவருடைய தொண்டர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததை அவரும் ஏற்றுக் கொண்டார். மகா ஆத்மா ஏற்றுக் கொண்ட ஜாதிமுறையை பெரும் மனிதர் ஒழிக்க உறுதி கொண்டார். திராவிட இயக்கம் இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கான தளம் அமைத்தார்; வட இந்தியச் சார்பான அரசியல் மேல் தட்டுக்காரர்களின் குரலிலிருந்து மாறுபட்டு ஒலித்த குரல் அவருடையது!
அவருடைய அரசியல் கோட்பாடுகள் அவரின் தளபதிகளால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது; அவரோ சமூக சீர்திருத்தத்தை முதன்மையாகக் கொண்டு பாடுபட்டு, பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கும் ராமனைத் தாக்கினார். தென்னிந்தியாவின் லட்சோப லட்சம் மக்கள் ஆரியப் பார்ப்பனர்களால் அடிமைப் படுத்தப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு கட்டுரைகளால் விளக்கினார். அந்நூல்கள் ஏராளமாக விற்பனையாகின்றன, தொடர்ந்து பல பதிப்புகள் வெளியாகி வருகின்றன. ராமன் கெட்டவன், ராவணன் பெரிய வீரன்; அவனைப் பற்றிக் கெடுதலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதுதான் பெரியாரின் கருத்தாகும்.

பெரியாரின் இயக்க அலுவலகம் அமைந்துள்ள இடம், கால்பந்து மைதானம் அளவு இருக்கிறது. அதன் கடைகோடியில் அவரது கூர்த்த கருத்துகள் கருப்புக் கற்களில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்ட பூங்கா உள்ளது. அதன் அருகே நவீன பாணி அலுவலகக் கட்டடம் உள்ளது. இரண்டு பக்கமும் பழங்காலக் கட்டடங்கள் எதிரெதிரிலே அமைந்து உள்ளன. ஏராளமான பகுத்தறிவு நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகக் கடை ஒன்று உள்ளது. பழைய பங்களா ஒன்றில் பெரியார் அருங்காட்சியகம் எனும் பலகை உள்ளது.
அவர் தமது 95 ஆம் வயதில் (1973 இல்) இறந்தார். திராவிட நாட்டின் விடுதலையை அவர் காணவில்லை. ஆனால் கல்வியும் சுதந்திரமும் மறுக்கப்பட்ட நிலையில் கீழ் ஜாதியினரை ஆக்கி வைத்திருந்த ஜாதி முறையை அழிக்கும் பணியை அவர் நிறையவே செய்தார்.
அவருடைய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் தற்போது இருப்பவர் கி. வீரமணி (கி. என்பது கிருஷ்ணசாமியைக் குறிக்கும் - இந்தியாவின் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களின் பெயர்களிலெல்லாம் இரண்டு இந்து மதக் கடவுள்களின் பெயர்கள் உள்ளன) தம் பத்து வயதில் இயக்கத்தில் திரு. வீரமணி சேர்ந்தார் என்பது வரலாறு. அப்பொழுதே, மேசைமேல் ஏறி நின்று கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு வயதில் மூத்தவர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அவரைச் சந்திக்க நான் காத்துக் கொண்டிருந்தபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட பெரியார் கல்வி நிறுவனங்கள் பற்றியும் - அவற்றில் சாதாரண கல்வி நிலையம் முதல் மருத்துவக் கல்வி வரையிலும் இருக்கின்றன, சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் கற்றுத் தரும் பெரியாரியல் கல்லூரி - ஆகியவை பற்றியெல்லாம் விவரிக்கும் வெளியீடு ஒன்றையும் படித்தேன்.


நேர்காணலுக்கு முன், பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்த்தேன். அந்தப் பெரும் மனிதரின் உடைமைகள், படுக்கை, சிறப்பாக அவர் பயன்படுத்திய சக்கர நாற்காலி முதலியவை அங்கே உள்ளன. பெரியாரின் மூக்குக் கண்ணாடி, ஊற்றுப் பேனா, பழைய நூல்கள் முதலியவை வைக்கப்பட்டுள்ளன அந்த அறை அண்மையில் புதிய தரை அமைக்கப்பட்டு சுத்தமான செராமிக் ஓடுகள் பதிக்கப்பட்டுச் சுகாதாரமாக அமைக்கப்பட்டுள்ளது.

அவரைப் பார்ப்பதற்கு அறையினுள் நுழைந்தேன். நாற்காலியில் அமர்ந்திருந்த திரு வீரமணி என்னைக் கண்டதும் எழுந்து வரவேற்றார். தூய, வெண்ணிறத் தலைமயிர், அவருடைய தோற்றம் அவரை எழுபது வயதுக்கு மேற்பட்டவராகக் காட்டின. அவர் இயக்கத்தின் சீருடையான கருஞ்சட்டை அணிந்திருந்தார்; இடுப்பில் வெள்ளை வெளேர் வேட்டி, இடது தோளில் அணிந்திருந்த மடிக்கப்பட்ட துண்டு ஆகியவை அவரைத் தலைவர் என அடையாளங்காட்டின. என்னை அமரச் சொல்லி விட்டு என்னைப் பார்த்துக் கேட்டார். வெளியே காத்திருந்ததால் சங்கடம் ஏற்பட்டதா? அன்றைய வார ஏட்டுக்குத் தலையங்கம் எழுதிக் கொண்டிருந்ததால் தாமதம் ஏற்பட்டது எனக் கூறினார். மாதந் தோறும் வெளிவரும் மூன்று ஏடுகளுடன், நாளிதழ் விடுதலை ஏட்டுக்கும் அவர் ஆசிரியர். உலகிலேயே ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைதான். பெரியார் நூல்களைப் பதிப்பகத்தின் தற்போதைய உலக அடையாளமே ரிச்சர்ட் டாக்கின்ஸ்தான்.

வேகமாக ஊற்றெடுக்கும் எண்ணத் தொடர்களை மிக விரைவாக ஆசிரிய உரையாக எழுதி 15 மணித்துளிகளுக்குள் முடித்துவிட்டார். தன் கைக் கடிகாரத்தைப் பார்த்து, மகிழ்வின் அடையாளமாக விரிந்த உதடுகளைத் திறந்து என்னைக் கேட்டார், என்ன தெரியவேண்டும்?

ராமாயணம் பற்றித் தற்காலப் பெரியாரிஸ்ட்கள் என்ன கருத்தினைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். ஆரியர்களால் தங்கள் முன்னோர்களாகிய திராவிடர்கள் தாக்கி அழிக்கப் பட்டார்கள் எனும் கருத்தின் அடிப்படையில் அந்த இதிகாசத்தை இன்னமும் வெறுக்கிறீர்களா?

தன் கருத்தை அவர் கூறத் தொடங்கினார். நிச்சயமாக ஒரு படையெடுப்பு நடந்துள்ளது, தென்னாட்டின் கலாச்சாரம் வடநாட்டுக் கலாச்சாரத்திற்கு மிகவும் மாறுபட்டே இருந்துள்ளது; இருக்கிறது!
அப்படியானால், இனவேறுபாடு ஏதும் இல்லையா?
இருக்கிறது. தென் இந்தியர் கருப்பு. ஆரியர்கள் சிறிது மஞ்சள் நிறமானவர்கள். அவர்களின் தோல் மாறுபட்டது.
திரு. வீரமணியே ஓரளவு தங்க நிறம் கொண்டவர் என்பதை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து திராவிடர் என்று ஒரு இனம் இருக்கிறதோ இல்லையோ, படையெடுப்பு நடந்ததை மறுப்பதற்கில்லை என்றார்.

அப்படியானால், அந்த அளவில் ராமாயணம் ஒரு வரலாற்று உண்மையை எதிரொலிக்கிறது
இந்தக் கதை உண்மையா, கற்பனையா என்பதை அறிய இயலாது. உண்மை மனிதர்களை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலே புனையப் பட்ட கற்பனைக் கதையாக இருக்கலாம். இருவேறு கலாச்சாரங்களின் மோதலை, தென்னாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை கெடுபிடித் தாக்குதலை அந்தக் கதை உருவகப்படுத்துகிறது. கதையில் குறிக்கப்பட்ட குரங்குகள் மனிதர்கள் தாம், எங்கள் மனிதர்கள்தாம், தென்னாட்டவர்தாம். தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் நடந்த போரின் அடிப்படையில்தான் ராமாயணம் எழுதப்பட்டது என்கிற கருத்தை ஜவகர்லால் நேரு தம் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களில் தெரிவித்திருக்கிறார்.

பெரும்பாலும் ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்களின் கருத்தையே நேரு ஏற்றுக்கொண்டார் என நான் நினைக்கிறேன். எனவே, ராவணன் பற்றிப் பேசலாம் என நினைத்தேன்.

ராவணன் நல்ல மனிதனா? கெட்டவனா?

ராவணன் சிறந்தவன். அவன் நாட்டு மக்கள் அவனைக் குற்றம் கூறவில்லை, குறை காணவில்லை; புகழ்ந்து பேசப்பட்டுள்ளவன். அவனது கட்டுப் பாட்டில் சீதை பலகாலம் இருந்தும் கூட, அவளை ராவணன் வன்கலவி செய்யவில்லை. அவன் அதிகாரங்கள் மிக்கவன், ஆனாலும் அவளைத் தொடவே இல்லை. ஏன் அவள் மானபங்கப்படுத்தப் படவில்லை? ராவணன் செய்த தவறே, சீதாவுடன் சேர்ந்து ஓடிப்போனதுதான்.
பிற்காலத்தில் எழுதப்பட்ட சில ராமாயணக் கதைகளில், ராவணனுடன் சேர்ந்து சீதா ஓடிப் போனாள் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆனால், மூல நூலான வால்மீகி ராமாயணம் தெளிவாகக் கூறுகிறது, அவள் கடத்தப்பட்டாள், அடிக்கப்பட்டாள், மனத்தளவில் துன்புறுத்தப்பட்டாள் என்கிறது. எதிர் ராமாயணங்களைப் போலவே, வீரமணியும் ஒரு ராமாயணம் எழுதுகிறார். வால்மீகியின் மூல நூலில் அவ்வளவு பரிச்சயம் அவருக்கு இல்லையோ? வால்மீகியின் ராமாயணத்தை மொழி மாற்றம் செய்துதான் கம்பனும் துளசிதாசும் தத்தம் ராமாயணங்களை எழுதினார்கள் என்று வடக்கிலும் தெற்கிலும் மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில் வால்மீகி ராமாயணத்தின் தாக்கத்தில்,இருவரும் எழுதியவையே அவை! தங்கள் காலத்திய கருத்தோட்டத்திற்குச் சரிப்பட்டு வராதவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு தங்கள் விருப்பப்படி கதைப் பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
தன் தலைவரைப் போலவே திரு. வீரமணியும் ராமாயணத்தை மெய் என்றே நினைக்கிறார் போல் எனக்குத் தோன்றுகிறது. எதிர்ப்புக்கு அது ஒரு கருவி. ஆனாலும் மக்களின் மனதில் அந்த இலக்கியக் கதா பாத்திரங்களின் தாக்கம் - ஏற்றாலும் சரி, எதிர்த்தாலும் சரி, அவை மக்களின் மனதில் பதிந்துள்ள பாங்கினை மறுக்க முடியாது.

பெரியார் கூட, பலரையும் போலவே, அந்த இதிகாசக் கதா பாத்திரங்களைப் பார்த்திருக்கிறார். இப்போதோ, ராமாயணத்தைக் கண்டனம் செய்வதில் குழுவாகப் பிரித்துக் கொண்டுள்ளார்கள் ராவணனை ஆதரிப்பவர்கள் ஆரியப் படைத் தலைவனான ராமனை எதிர்ப்பதும், மறு பிரிவினர் அதற்கு எதிர்மாறாகக் கூறுவதும் நடக்கிறது. அண்மையில் பெரியார் இயக்கத்தால் ஒரு நூல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழ் வரலாற்று ஆய்வாளர் என். சுப்ரமணியம் என்பவர் எழுதிய இதிகாசக் குறிப்புகள் என்பதில் ராமன் அவனைச் சுற்றியுள்ள பாத்திரப் படைப்பில் உள்ள குறைபாடுகள் மிகமிக கோபமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ராமனிடமிருந்து சீதாவைப் பிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராவணன் கவர்ந்தானே தவிர, அவளை அடைய வேண்டும் என்பதற்காக அல்ல என்று சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

சீதையின் மார்பகங்களை வால்மீகி வருணித்திருக்கும் விதத்தைப் படிக்கும் எவரும் ராமாயணத்தின் மெய்ப்போக்கை உணர்ந்து ராவணன் தான் இந்தக் கதையின் நாயகன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் கருத்துக் குருடர்களாக்கப்பட்டுள்ளனர் என்கிற முடிவுக்குத்தான் வருவர். வால்மீகியின் வெளிப்படையான ஆபாச வருணனைகளைப் பற்றிப் பெரியார் கூறி அவை பார்ப்பனரின் இழி நிலையைக் குறிக்கிறது என்பார். கொச்சையாகத் தம் கருத்தையும் கூறுவார். அனுமனைத் திட்டித் தீர்ப்பார்; காரணம் என்னவென்றால், அனுமான் சீதையிடம் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளான். ஆண் குறியைப் பற்றியும் பெண்களிடம் கூறப்படாத விசயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறான்.
வடக்கே சிறு பகுதியில் எழுதப்பட்ட கற்பனைக் கதைதான் ராமாயணம் என்று கூறும் கல்வியாளர்கள் . . .

இடைமறித்து திரு. வீரமணி, அவர்கள் சொல்வது திரிக்கப்பட்ட கருத்து என்றார்.

ஆனால், என்னுடைய எண்ணம், ஒரு பிளவுபட்ட அடிப்படையே அக்கதைக்குக் காரணம். கொரில்லாப்போர் முறை போன்ற ஒன்று நடந்திருக்கலாம் என்று ஓரளவு சரியாக இருக்கும். நீண்ட நாளாக இருந்த பிளவு மனப்பான்மை இதற்கு அற்புதத் தன்மையைத் தந்திருக்கலாம். அல்லது எழுதுவதற்கு முன்பே வழக்கத்தில் இருந்த புனைவுகளாக இருக்கலாம். ராமன் கூட அற்புதக் கற்பனை கற்பிக்கப்பட்ட வீரனாக, ராபின் ஹூட் போல இருந்திருக்கலாம். ஆனால் அதிலே முக்கியமான, முதுகெலும்பு போன்றதான வரலாற்று உண்மை இருக்கிறது - வெற்றி பெற்றவர்கள் எழுதி வைத்தது என்பதுதான் அது!

திரு வீரமணி சொன்னார் - அது ஒரு கொரில்லாப் போர் என்கிற உங்கள் கருத்தோடு நான் ஒத்து வருகிறேன். படையெடுப்பு நடந்தது என்பதற்கு தடயம் உள்ளது. ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம் - வெற்றி பெற்ற ஆரிய மன்னர்கள் தென்னாட்டுக்கு யாகங்களைக் கொண்டு வந்தனர். தமிழ்க் கலாச்சாரம் யாகங்களை ஒரு போதும் ஏற்றது கிடையாது. அது கலாச்சார ஊடுருவல் (யாகம் என்பது வேதச் சடங்கு. அக்னியில் பல பொருள்களையும் ஊற்றும் சடங்கு - வழிபாடு எனக் கூறுவதை விட, தந்திரம் (மாஜிக்) எனலாம்.)
நான் சொன்னேன் - சங்கடம் என்ன என்றால் இந்தக் கல்வியாளர்கள் எனப்படுவோர் திராவிடர் கலாச்சாரம் என்பதே எப்போதும் இருந்ததில்லை. திராவிட எனும் சொல் இனத்துக்குக் குறிப்பிடலாம் என்கிற மாதிரியான கருத்து கொண்டுள்ளனரே!
திரு. வீரமணி இம்முறையும் ஆவேசப்பட்டார், கல்வியாளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்றார்.

கல்வியாளர்கள் கருத்து விற்பனைக்காக உள்ளன என்று உள்ளபடியே நீங்கள் கருதுகிறீர்களா?
மேற்கத்தியக் கருத்துகளை இந்தியாவில் திணிக்க திட்டமிடப்பட்ட ஒரு முயற்சி நடக்கிறது. அவர்களின் விவாதம் நடுநிலையானது அல்ல என்பதைத்தான் நான் கூறுகிறேன்.
இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆரியப் படையெடுப்பு எனும் கருத்தை மேற்கு நாடுகள் திணித்தன என்று பல இந்தியர்கள் நினைக்கின்றனர். இங்கே திரு. வீரமணி, படையெடுக்கவில்லை எனும் மேல்நாட்டுக் கருத்தை கெட்ட நோக்கம் கொண்ட முயற்சி என்கிறார்.

உங்கள் இயக்கம் திராவிட நாட்டுக்காக இன்னமும் முயல்கிறதா? எனக் கேட்டேன்.

நாங்கள் விரும்புவது ஜாதியற்ற ஒரு சமூகம், சமவாய்ப்புள்ள சமூகம். இப்போது சமூக நீதிக்கான முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. ஒரு முசுலிம் குடியரசுத்தலைவர், சீக்கியப் பிரதமர், ஆளுங்கட்சித் தலைவராக ஓர் இத்தாலியப் பெண்மணி என இப்போது உள்ளனர். அடுத்து, நாங்கள் உண்மையான கூட்டாட்சியை விரும்புகிறோம். மத்திய அரசிடமிருந்து இந்தி பேசும் வட இந்திய இந்து மக்களிடமிருந்து கூடுதல் அதிகாரங்களைப் பெற விரும்புகிறோம். நல்வாய்ப்பாக, 1924 இல் பெரியார் வடித்த சொற்றொடர் பிராமினோக்ரசி (பார்ப்பன ஆதிபத்யம்) பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்கு நடத்தப்பட்ட ஆட்சி முறை ஒழிந்து விட்டது.

பல வழிகளில் பெரியார் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தார் என்பது சுவாரசியமாக இருக்கிறது . . .

பிரிட்டிஷ் படையெடுப்பு இருந்திருக்கா விட்டால், பார்ப்பனக் காட்டுமிராண்டித்தனம் இன்றளவும் நீடித்து நிலை பெற்றிருக்குமே! ராமாயணம் முழுக்க முழுக்கப் பார்ப்பன ஆதரவுதானே! துளசிதாசனே பார்ப்பனருக்கான ஆள்தானே!

ஈ.வெ. ராமசாமியாரின் பார்ப்பன எதிர்ப்பின் தீவிரம் 1956 இல் தெரிந்தது! அவரின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பொது இடத்தில் கடவுள் ராமனின் படத்தைக் கொளுத்தப் போவதாக அறிவித்தனர். எந்தக் கடவுளின் நம்பிக்கையைக் காட்டி மகாத்மா காந்தி இந்திய நாட்டுக்கு விடுதலை பெற்றாரோ, அந்தக் கடவுளை அவமானப்படுத்துவதைத் தவிர்க்குமாறு பல அரசியல் தலைவர்களும் கேட்டுக் கொண்டனர். பின்னாள்களில் அய்ந்து கொடுமைகளில் ஒன்றாகக் காந்தியத்தைச் சேர்த்த ராமசாமியார், அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கடவுளைக் கொளுத்தத் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு, சிறைவாசத்திற்குத் தயாராக படுக்கையையும் தூக்கிக் கொண்டு போராட்டத்திற்குத் தயாரானார்.

ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காகப் பிறரின் உணர்வுகளை அவமானப்படுத்துவது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல் என நான் திரு. வீரமணியைக் கேட்டேன். சில பார்ப்பனர்களின் செயல்களுக்காக எல்லா இந்துக்களும் அவமானப்படுத்தப் வேண்டுமா? ஒரு மதத்தைச் சேர்ந்த சிலர் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக, அம்மதத்தையே அழிக்க முயல்வது சரியா? எனவும் கேட்டேன்.

இதோ பாருங்கள்! மதமே பொய்களால் ஆனது. பொய்களிலிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள, சில நேரங்களில் நான் ஆத்திரமூட்ட வேண்டியுள்ளது. அந்தக் கோபத்தை ஊட்டாமலிருந்தால் (என்னைத்தேடி) நீங்கள் இங்கே வந்திருக்க மாட்டீர்கள்!
நான் சிரித்துவிட்டேன். அதுதான் உண்மை என்றேன்.

இது ஒரு நியாயமான பிரச்சாரம். அடிமைத் தன்மையை வளர்க்கும் மூடநம்பிக்கையைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பெரியார் விரும்பினார். ஒழுக்கம் என்று நீங்கள் சொன்னால், ஒழுக்கம் என்பதற்காக நீங்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பது அல்லவே!


கடைசியாக ஒரு கேள்வி. தனிநபர் வழிபாடு தன்னைச் சுற்றி இருந்ததை ஏன் பெரியார் அனுமதித்தார்?

வழிபாடா? அந்த சினிமா சுவரொட்டி! அதிலே பெரிய சாமியார் போல இருக்கிறாரே!
பெரியாரின் கொள்கைகளால் பலனும் வாழ்வும் அடைந்த பார்ப்பனரல்லாத மக்களுக்கு அவர் கடவுள் போலவே! சிலர் அவரை மகான் ஆக்க விரும்பினர். ஆனால் அவருடைய இயக்கத் தொண்டர்களாகிய நாங்கள், அவரை ஒரு போதும் மகானாக்கியது கிடையாது. ஆனால் அவர் எங்களின் வழிகாட்டும் தலைவர். தலைமையைப் போற்றுவது துதிபாடுவது அல்ல! நான் சர்ச்சிலை விரும்புகிறேன். ஆனால் அது அவரை மகான் ஆக்குவதாகாது!



--------------------நன்றி: "விடுதலை" 28-12-2008