Search This Blog

2.12.09

பகுத்தறிவு நூல்களைப் பரப்புவதில் சாதனை படைத்து வருகிறார் வீரமணி

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பகுத்தறிவு
நூல்களைப் பரப்புவதில் சாதனை படைத்து வருகிறார் ஆசிரியர் வீரமணி

எழுத்தாளர் சின்னக்குத்தூசியுடன் நேர்காணல்

தியாகராஜன் இப்பெயரை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சின்னக்குத்தூசி எனும் பெயரை தெரியாத தமிழ் மக்கள் திராவிட இயக்கத்தவர் இருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் மூத்த வாழும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் சின்னக்குத்தூசி என்று அறியப்பட்ட திருவாரூர் தியாகராஜன் அவர்கள் சிறு வயது முதலே பெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டவர். அவரின் உடலுக்குத்தான் இளமை குறைந்திருக்கிறதே தவிர, அவரது எழுத்துகளுக்கு என்றுமே குறைந்ததில்லை. சற்றே உடல்நலம் குன்றியிருந்தாலும், உள்ளத்தின் உறுதியுடன் அன்றாடம் முரசொலி அலுவலகம் சென்று விடுகிறார்.

தமிழர் தலைவர் அவர்களிடத்தில் மாறாத அன்பு கொண்டவர். தமிழர் தலைவரின் பிறந்த நாளினையொட்டி விடுதலை சிறப்பு விருந்தினர் பக்கத்திற்காக சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு தெளிவாகவே பதிலளித்தார்.

நீங்கள் அடிப்படையில் திராவிட இயக்கத்தவரா?

நான் அப்படிச் சொல்லிக் கொள்வதில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பெருமைப்பட்டுக் கொள்பவனாகவே வாழ்ந்து வருகிறேன். ஆனால் நான் அடிப்படையில் திராவிட இயக்கத்தவனா, அல்லவா என்பதை நானே சொல்லிக் கொள்வதைவிட என்னோடு பழகியவர்கள் எனது எழுத்தைப் படித்தவர்கள், இனிவரும் காலத்திலும்கூட என்னைப் பற்றியும் எனது எழுத்து பற்றியும் புதிதாகத் தெரிந்து கொள்ளப் போகிறவர்கள் என்னைப் பற்றி என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்களோ அதுதான் சரியான பதிலாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் நான்!

நீங்கள் ஆசிரியர் பணியைத் துறந்து பொது வாழ்க்கைக்கு வரக் காரணம் என்ன?

நான் திருவாரூரில் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்குப் படிப்பைவிட அரசியலிலேயே அதிக நாட்டமிருந்தது. அப்போது திருவாரூர் அரசியலின் சூத்திரதாரியாகவும் நகர்மன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை வாய்ந்தவராகவும் விவசாயப் பெருங்குடி மக்களிடம் அபரிமிதமான செல்வாக்குப் படைத்தவராகவும் இருந்த சிங்கராயரோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயம் காலப் போக்கில் நெருக்கமானவன் என்று கூறுமளவுக்கு வலுவடைந்தது. பெரும்பாலான நேரங்களை அவருடனேயே கழிப்பேன்; அவரது விவசாய சங்கப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உதவுவேன்.

எனது பிறப்பு காரணமாக, என்னை திராவிடர் கழகத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அது ஒரு மனக் குறையாகவே இருந்தாலும், அன்று திருவாரூர் திராவிடர் கழகத்தின் பெருந்தூண்களாக இருந்து தஞ்சை மாவட்டத்தை பெரியாரின் கோட்டையாக மாற்றிட அரும்பாடுபட்ட வி.எஸ்.பி.யாகூப், முத்துக்கிருஷ்ணன், தண்டவாளம் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ரங்கராஜன், பேபி கந்தசாமி, சுரக்குடி வாசுதேவன், சோடாக்கடை ராமையன் போன்ற திராவிட இயக்கத் தீரர்களுடனும் நட்பு ஏற்பட்டது.

நான் உயர்நிலைப் பள்ளிப்படிப்பு முடித்த பின்னரும் வேலை எதுவும் தேடுவதில் அக்கறை காட்டாமல் சம்பாதித்து வீட்டுக்கு உதவிடும் எண்ணமில்லாமல் பொது வாழ்க்கையில் நாட்டம் மிகக் கொண்டவனாகவே இருந்து வந்தேன்.

ஒருநாள் சிங்கராயருடன் நகர்மன்றத் தலைவராக இருந்த வி. சாம்பசிவம் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். பொதுவான அன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து வழக்கம் போல் அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் சிங்கராயரிடம்,

என்ன எப்போது பார்த்தாலும் இவர் உங்களுடனேயே இருக்கிறாரே, வேலைக்குப் போக இவருக்கு விருப்பமில்லையா என்று என்னைப் பற்றிக் கேட்டார்.

சிங்கராயர் சொன்னார்:

பெரியார் அவர்கள் திருச்சியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றினைத் தொடங்கியிருக்கிறார். அந்தப் பள்ளியில் இவரை சேர்த்துவிடவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்...

என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே சாம்பசிவம் அவர்கள் குறுக்கிட்டு,

பெரியாருக்கு நான் சிபாரிசுக் கடிதம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னை ஆசிரியர் பள்ளியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரி அய்யாவுக்கு ஒரு சிபாரிசுக் கடிதத்தை சிங்கராயர் கேட்காமலே தாமாகவே முன்வந்து எழுதிக் கொடுத்துவிட்டார்.

சிங்கராயர், யாகூப் மூலமாக அய்யாவுக்கு என்னை நன்கு தெரியும். நான் திருச்சி சென்றேன். அப்போது இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. புத்தூர் பெரியார் மாளிகைக்குள் சென்றேன். பெட்டியடி மேசை கணக்குப் பிள்ளை மேசை என்பார்களே அந்த மாதிரி மேசையின் மேல் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்த பெரியார் எங்கே இந்த நேரத்தில் என்ற கேள்வியுடன் என்னை வரவேற்று உட்காரச் சொன்னார். நான் சிபாரிசுக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன்.

பிரித்துப் படித்த பெரியார் என்னை நிமிர்ந்து பார்த்து,

உங்களை புத்திசாலிப் புள்ளையாண்டான் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று தெரியாமல் திகைத்துப் போனேன்.

அய்யா தொடர்ந்து சொன்னார்

ஜூன் மாதம் ஆறாம் தேதியோடு அட்மிஷன் முடிந்து, பயிற்சிப் பள்ளியும் திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இப்போது வந்து இடம் கேட்கிறீர்களே! என்றவர் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்டார். இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினேன்.

அடுத்த சில நிமிடங்களில்,.

மணியம்மையார் அவர்கள் அதே இடத்தில் தட்டு வைத்து உணவு பரிமாறினார். அப்போது பெரியார் தமது செயலாளர் கொரடாச்சேரி கிருஷ்ணமூர்த்தியை அழைத்து,

நம்ம நெ.து.சு. அய்யா அவர்களுக்கு செக்ஷனுக்கு அய்ந்து இடங்கள் கூடுதலாக அனுமதி வழங்கக்கோரி எழுதுங்கள். கிடைத்தால் இவருக்கே முதல் கார்டை அனுப்பி இவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.

நான், இரவு 12 மணிக்கு மேல் திருவாரூர் செல்ல ஒரு ரயில் இருக்கிறது அய்யா நன்றிங்க அய்யா நான் வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டபோது, பெரியார் மாளிகை வளாகத்தின் நிருவாகியாக இருந்த சோமுவை அழைத்து இவரை நம்ம வேனிலேயே கொண்டுபோய் ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிடுங்கள் என்றார். பத்து நாள்களுக்குப் பிறகு எனக்கு அட்மிஷன் கார்டு வந்தது.

இப்படித்தான் நான் ஆசிரியரானேன் சிங்கராயர் தூண்டுதலில், சாம்பசிவத்தின் சிபாரிசில் அய்யாவின் பேரன்பினால் நான் ஆசிரியரானேன்.

எனினும் எனக்கு அரசியலிலேயே அதிக நாட்டமிருந்ததால் சில காலம் பள்ளி ஆசிரியராக இருப்பேன்; ஆசிரியர் பதவியைத் துறந்துவிட்டு பத்திரிகையாளனாக அரசியல் உலகத்துக்கே திரும்பிவிடுவேன். குன்றக்குடி அடிகளாரின் பள்ளி உட்பட எத்தனைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினேன்; எத்தனை பத்திரிகைகளில் பணி ஆற்றினேன் என்பது தனிக்கதை!

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கம்யூனிச அமைப்புகளைவிட திராவிடர் இயக்கம் பலமாக வேரூன்றக் காரணமென்ன?

வர்க்க பேதத்தை ஒழிப்பதா? வர்ண பேதத்தை ஒழிப்பதா? எதற்கு முதலிடம் தருவது? என்ற கேள்விக்குத் தந்தை பெரியார் அவர்கள்,

தமிழகத்தில் மட்டுமல்ல; அகில இந்தியாவிலும் ஜாதி பேதம்தான் சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் எதிரியாகவும் வாய்ப்புக்கேடாகவும் இருந்து வருகிறது. எனவே முதலில் ஒழிக்கப்படவேண்டியது ஜாதி பேதங்களைத்தான் என்று ஓங்கியடித்துச் சொன்னார்.

ஜாதிப் பிளவுகளுக்கும் பேதங்களுக்கும் மூல காரணமாக இருந்துகொண்டுஅனைத்து ஜாதியினர் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஜாதி வேறுபாடுகளுக்கு அடிப்படை அஸ்திவாரமாக இருக்கும் பார்ப்பனர் கொட்டத்தை ஒடுக்குவதே ஜாதி ஒழிப்பு முயற்சிகளில் முதலிடமாக இருக்கவேண்டும் என்று திண்ணமாக நம்பிய திட்டவட்டமாக அறிவித்த பெரியாரின் தன்மான இயக்கம்;

பார்ப்பானே, வெளியேறு!

என்று முழக்கமிட்டது.

சூத்திரன் என்றால்

ஆத்திரம் கொண்டுஅடி!

என்று பெரும்பான்மைச் சமூகத்தினரான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களிடம் ஜாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அந்த கால கட்டங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் வர்க்க பேதத்தை ஒழித்துவிட்டாலே போதும் ஜாதிகள் ஒழிந்த சமூக சமத்துவம் தானாகவே மலர்ந்துவிடும் என்று கூறியதோடு நில்லாமல் பெரியார் இயக்கத்தைக் கேலி பேசினார்கள், எதிர்த்தார்கள்.

கால மாறுதல் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு பாடத்தை வழங்கியது.

ஜாதியை ஒழிப்பதே தமிழகத்தைப் பொறுத்தவரையில் முதல் கடமை என்பதுதான் அது!

பெரியார் இயக்கத்தைக் கேலி செய்தபோது சோறா மானமா என்றால் சோறுதான் முக்கியம் என்று முழக்கமிட்டவர்கள் இன்று, பெரியார் கூறிய மானத்தை நிலைநாட்ட உத்தபுரம், காங்கியனூர், செட்டிப்புலம் போன்ற ஊர்களில் அருந்ததியர்களை தாழ்த்தப்பட்ட மக்கள், கோயிலில் நுழைவதற்கான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இது வரவேற்கத் தகுந்த மாறுதல்தான் என்றாலும்,

தமிழக மக்களின் சகல தரப்பினரிடமும் செல்வாக்கோடு விளங்கும் தி.க., தி.மு.க. காங்கிரஸ் போல அல்லாமல் தொழிலாளர்கள் விவசாயிகள் மத்தியில் மட்டுமே செல்வாக்கு கொண்ட கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் குறுகிவிட்டன!

திராவிட முன்னேற்றக் கழகம் போல் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியையே கைப்பற்றும் வலிமை கம்யூனிஸ்ட்களுக்கு இல்லை. விவசாயிகள், தொழிலாளிகள் நிறைந்த தொகுதிகளில் மட்டுமே அதுவும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்வதன் மூலமே வெற்றி பெறக்கூடிய கட்சிகளாக அவை குறுகிவிட்டன!

திராவிடர் இயக்க தயவில்லாமல் சமீபத்தில் நடந்த 5 தொகுதி இடைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட்களும் தலா இரண்டிரண்டு இடங்களில் தனித்துப் போட்டியிட்டன! முடிவு என்ன? நான்கு தொகுதிகளிலும் ஜாமீனைப் பறி கொடுத்ததுதான் மிச்சம்!

நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள்: 948)

என்ற வள்ளுவப் பெருந்தகையின் அனுபவ வாக்கிற்கேற்ப தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமைகள் என்னவென்று தேர்ந்து அய்யாவும் அண்ணாவும் திறம்படச் செயல்பட்டார்கள். அதனால்தான் திராவிடர் இயக்கம் தமிழகம் முழுவதும் ஆல் போலத் தழைத்து அருகு போல் வேரூன்றி அசைக்க முடியாத பலத்தோடு திகழ்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தின் பட்டிதொட்டிகள் குக்கிராமங்களில் எல்லாம் திராவிடர் இயக்கத்தைப் பேணி வளர்க்க பலமான ஸ்தாபனத்தைக் கட்ட அய்யாவாலும், அண்ணாவாலும், கலைஞராலும் முடிந்தது. அத்தகைய ஆற்றல் படைத்த ஸ்தாபன பலத்தைக் கட்டி வளர்க்கும் திறமைமிக்க தலைவர்கள் கம்யூனிச இயக்கத்தில் இல்லை.

திராவிடர் - தமிழர் என்ற சர்ச்சை சிலரால் கிளப்பப்படுகிறதே... அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதிலே சர்ச்சைக்கு என்ன இடமிருக்கிறது? இந்தியாவின் பூர்வீகக்குடிகள் யார் என்றால் திராவிடர்கள், திராவிட இனம் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் எழுதி வைத்திருக்கிறார்கள். மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் இதையே உறுதி செய்வதாக இருக்கிறது.

அதுபோலவே திராவிடர்களுக்கு எதிரான ஆரியர்கள் பற்றி அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கணவாய் வழியாக ஆடு, மாடு ஓட்டிக்கொண்டு இந்தியாவில் நுழைந்த வந்தேறிகள் என்றும் சரித்திரம் சான்று கூறுகிறது!

இனத்தால் இருவேறு பிரிவினர் திராவிடர்களும், ஆரியர்களும் என்பதிலும் எந்தவித சர்ச்சைக்கும் இடமில்லை.

மொழியால் தமிழர் என்று குறிப்பிடுவதிலும் சர்ச்சைக்கு இடமெதுவுமில்லை!

தமிழர் என்று மட்டுமே சொன்னால், நாங்களும் தமிழ்தானே பேசுகிறோம்; நாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரியப் பார்ப்பனர்கள் பாத்தியதை கொண்டாட முன் வந்து விடுவார்கள். அதனால்தான் பார்ப்பனரல்லாத மக்களை தமிழர்கள் என்பதோடு திராவிடர்கள் என்றும் சொல்லவேண்டியது அவசியமாக இருக்கிறது! மற்றபடி திராவிடர் - தமிழர் என்பது பற்றியெல்லாம் சர்ச்சை கிளப்புவது தேவையற்றது; தீதானது!

தமிழர் தலைவரின் தனித்தன்மைகளில் தங்களைக் கவர்ந்தது என்ன?

பெரியார் மறைவிற்குப் பின்னர் அவர் வகுத்துத் தந்த பார்ப்பனர் எதிர்ப்பு - மத எதிர்ப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற அரசியல் கட்சிகளால் பிரச்சாரம் செய்ய முடியாத அவரால் மட்டுமே அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேல் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த கொள்கைகள் கூர்மழுங்கிப் போய்விடும்; நீர்த்துப் போய்விடும் என்று ஜாதி ஆதிக்க சக்திகளும் வர்ணாஸ்ரம தர்மிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்களது ஆசை நிறைவேறவில்லை.

பெரியார் _ மணியம்மையார் காலத்திற்குப் பிறகும் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெரியார் காலத்துப் பிரச்சாரத்துக்குச் சற்றும் குறையாத வகையில் பெரியார் கொள்கைகளைப் பரப்புவதில் அனைத்து விதங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

மாதத்தில் 15 அல்லது இருபது நாள்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்கிறார்.

அவரது சமகாலத்தில் பலபேர் பதவி பெறவேண்டும் என்பதற்காகவே புது புதுக் கட்சிகளை உருவாக்கிக் கொள்வதைப் பார்த்து வருகிறோம்.

வீரமணி அவர்களுக்கு பெரியார் ஒரு பெரிய இயக்கத்தையே கட்டி வளர்த்துக் கையில் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பெரியாரின் அந்தப் பேரியக்கத்தையே அரசியல் கட்சியாக மாற்றி அரசியலில் குதித்திருக்க முடியும்.

ஆனால் அவரோ அப்படிப்பட்ட ஆசைகளுக்கு எல்லாம் இடம் தராமல் பெரியார் கொள்கைகளை தமிழக அளவில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் கொண்டு செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து அயராது பாடுபட்டு வருகிறார்.

பெரியார் கனவுகளை நனவாக்கும் விதத்தில் வல்லத்திலும், தஞ்சையிலும் அவர் உருவாக்கியுள்ள கல்விச் சாலைகளையும் அதில் பயிலும் ஆயிரமாயிரம் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் நூற்றுக்கு நூறு என்கிற அளவில் தேர்வு பெற்று சாதனை படைத்து வருவதையும் கண்டு கல்வியுலகே கண்டு வியந்து பாராட்டியபடி இருக்கிறது.

இதுவரை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 400 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அழகுற மலிவு விலையில் வெளியிட்டு 4 நகர்வு புத்தகச் சந்தைகள் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அனுப்பி மாதந்தோறும் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெரியார் நூல்கள் சென்றடையச் செய்வதில் சாதனை படைத்து வருகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பெருக்கத்துவேண்டும் பணிவு என்பதற்கடையாளமாக எளிமை, அடக்கம் எல்லோரிடமும் இனிமையாகப் பழகுதல் ஆகியவைகளிலும் வாழ்நாள் சாதனையாளராகத் திகழ்கிறார். என்னைப் பொருத்தவரையில் அவரது நட்பை நான் பெரும் பேறாகக் கருதி மகிழ்கிறேன்!

-------------------நன்றி:- "விடுதலை" 1-12-2009

0 comments: