Search This Blog

6.12.09

ஆத்மா பற்றி புத்தர்: அம்பேத்காரின் ஆய்வு சொல்வதென்ன?


டிசம்பர் 6: அம்பேத்கார் நினைவுநாள்

ஆத்மா பற்றி புத்தர்: அம்பேத்காரின் ஆய்வு சொல்வதென்ன?

வாழ்க்கை ஒரு துக்கம். சாவு ஒரு துக்கம். மறுபிறப்பு ஒரு துக்கம். இப்படி எல்லாமே துக்கம். இந்தத் துக்கத்திற்கெல்லாம் காரணம் என்ன என்றால் ஆசைதான் என்று முடிச்சுப் போட்டுச் சொல்லிவிட்டார்கள். ஆசையைத் துறக்கச் சொன்னார் புத்தர் என்று நான்கைந்து வார்த்தைகளைக் கணக்குகளில் எழுதுகிற மாதிரி சொல்லிவிட்டார்கள்.

எல்லாமே துக்கமயம். எல்லாமே சோக மயம். எதுவும் இன்பமயம் அல்ல என்று ஒரு தத்துவத்தைச் சொன்னால் அந்தத் தத்துவம் எப்படி மனித குலத்திற்குப் பயன்படும் என்று அம்பேத்கர் அவர்கள் கேள்வி கேட்டார். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து சாகின்ற வரை துக்கம் என்றால் இதைப் போக்குவதற்கு ஒரு வழியே கிடையாது என்றால் இதுதான் மதம் என்றால் அந்த மதம் எப்படி ஒரு மனிதனைக் காப்பாற்ற முடியும்? அல்லது புத்தர் தான் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்று ஒரு கேள்வியைக் கேட்கின்றார். இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டு விட்டு, சிந்திக்க வேண்டும் என்று சொல்லுகின்றார் அம்பேத்கர்.

நான்கு அரிய உண்மைகள் என்ற ஏதோ ஒரு மேலான வார்த்தையைப் போட்டுச் சொல்லுகின்றார்கள். இவைகளை எல்லாம் இப்படிச் சொன்னால் புத்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு மற்றவர்கள் எப்படி வருவார்கள்? என்று இதிலே தெளிவாக அவர் கேள்வி கேட்கின்றார்.

கர்மா, மறுபிறப்பு என்பதைப்பற்றிக் கேள்வி கேட்கின்றார். புத்தர் கடவுள் என்று சொல்கின்றார்கள். அதன் பிறகு அவரும் ஆத்மாவை நம்பினார். கர்மாவை ஏற்றுக் கொண்டார். அவரும் மறுபிறப்பைப் பற்றிச் சொன்னார் என்று மற்றவர்கள் சொன்னார்கள்.

ஆத்மாவை ஒரு போதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுத்தவர்தான் புத்தர். தந்தை பெரியார் அவர்களுடைய கருத்தும், அம்பேத்கர் அவர்களுடைய கருத்தும், புத்தருடைய கருத்தும் இவை எல்லாவற்றையும் பார்த்தீர்க-ளேயானால் ஒரே நேர்க்கோட்டில் தான் இருக்கும். ஏனென்றால் பொய்யைப் பொய் என்று சொல்லுகின்றார்கள். உண்மையை மெய் என்று சொல்லுகின்றார்கள்.

கடவுளைக்கூட ஒரு பக்கம் விட்டுவிடலாம். அது கூட சாதாரணம். அதனால் ஏற்படுகின்ற தீமை மிகவும் குறைவு. ஆனால் இந்த ஆத்மா நம்பிக்கையினால் ஏற்படுகின்ற தீமை இருக்கிறது பாருங்கள். அது பன்மடங்கு என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களே புத்தா அண்ட் ஹிஸ் தம்மா (The Buddha and His Dhamma) என்ற இந்த அற்புதமான விளக்க நூல்களிலே சொல்லுகின்றார்கள்.

பார்ப்பனர்கள் எந்த அர்த்தத்தில் ஆத்மா என்பதைப் பயன்படுத் தினார்களோ அந்த அர்த்தத்தில் புத்தர் பயன்படுத்தவில்லை என்று அம்பேத்கர் சொல்லுகின்றார்.

ஆத்மா என்பது இல்லை என்று சொல்லி விட்டால் அதையே மறுத்துவிட்டால் அதன் பிறகு கர்மாவுக்கு என்ன வேலை? மறுபிறப்புக்கு என்ன வேலை? அவற்றுக்கெல்லாம் இடம் கிடையாது என்று அம்பேத்கர் சொல்லுகின்றார்.

எனவே இப்படிப்பட்ட முரண்பாடுகளை எல்லாம் ஆராய வேண்டும் என்று அவர் எழுதிய கடைசி நூலான புத்தா அண்ட் ஹிஸ் தம்மா (The Buddha and His Dhamma) என்ற நூலின் முன்னுரையில் சொல்லுகின்றார்.

--------------ஆசிரியர் கி.வீரமணி எழுதிய டாக்டர் அம்பேத்கர் புத்தநெறியைத் தழுவியது ஏன்? நூலிலிருந்து...

0 comments: