Search This Blog

24.12.16

பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!-பெரியார்

(தந்தைபெரியார் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இக்கட்டுரையை பதிவு செய்கிறோம். ஜாதி ஒழிந்த மதம் ஒழிந்த பெண்ணடிமை ஒழிந்த சமுதாயம் அமைய உறுதி ஏற்போம். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! மலரட்டும் மாந்தநேயம்!!!  -- தமிழ் ஓவியா) 


பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காரு வதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்!
கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்! ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலை வேறு!
முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறாதுழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை!
பிந்தியது, உயர்ந்தபட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலு பேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச் சவாரி செய்தாலும், உட்கார்ந்து செல்லும்போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!  கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறு வேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகை யில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடை யவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல. பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங்காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்!  அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!
இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!
பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப்பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ்செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம்பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப்பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர்வாதத்தினால் விளைந்த வளர்ச்சி தான் இன்றையத் திராவிடர் கழகம்!
அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர்களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால், மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனையில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லா விட்டால், உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங்களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியதுதானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!
அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவி டரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொருவரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!! இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப்பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை! எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல்லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது!  யோசியுங்கள்! இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர்களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்! தோளோடு தோளிணைத்து நாட்டுக்குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்த மாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள். அப்போது பல தீர்மானங்களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட்டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவதாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண்டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்யவேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.
இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்பதினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்யவேண்டிய திருப்பணி என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், தாங்கள் வேறானவர்கள், உயர்ந்தவர்கள் என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மாநாட்டுக்குப் பிறகு, அடுத்தபடியாக, மாகாணத் திற்கு வந்திருக்கும் ஏகாதிபத்தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் பட்டேல் பிரபு அவர்கள் பேச்சுகளிலிருந்து தெரி கிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு விடுதலையை ஒழித்து விட வேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந் திருக்கிறது. சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் பட்டேல் பெருமான் அவர்கள். இந்தப் பெருமான்தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக பவநகரை நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக் காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத் தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க்காரான, மாகாண மந்திரி சபையினருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந்தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!
ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரையாகவே நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார்களே, இதைக் கண்டு நாம் உண்மை யாகவே பச்சாதாபப்படுகிறோம்! பார்ப்பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென்கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறை வேற்றியும் விடலாம்.
ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்கு கேட்ட நீதிக்கட்சியை, அய்ம் பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந்தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங்கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத்திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடுகின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித் திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லாதிருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்!

---------------தந்தை பெரியார்‘குடிஅரசு' - தலையங்கம், 26.02.1949

12.11.16

பிராமணன் என்றால் என்ன அர்த்தம்?


‘பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்?


ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.

மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் ஸ்திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சாஸ்திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.


பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.

அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.

‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,

¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.

¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.

¨ அவன், ஏர் உழுதால் பாவம்!

¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!

¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!

¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.

¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!

¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.

¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம். 

--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!

¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.

இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!


இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சரஸ்வதி முதலிய ஏராளமான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.

மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல்லுங்கள்.

_----------------------- 01-05-1957 ‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை


1.11.16

பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்


பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற (29.10.2016) பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துகளும், தகவல்களும் முக்கியத்துவம்வாய்ந்தவையே.

(1) பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட முயற்சிக்கும், பொது சிவில் சட்டத்தை நோக்கிய சில கேள்விகள் உண்டு. மற்ற மதத்தை நோக்கி செலுத்தப்படும் பார்வைக்கு முன்னதாக பி.ஜே.பி. அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான இந்தச் சட்டத்தில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


 (அ) பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் இந்து மதத்தின் வருணாசிரமம் - ஜாதிக்குத் தடை வருமா?

 (ஆ) சுடுகாடு - இடுகாடுகூட பொதுவாக இல்லாமல் இன்னும் ஜாதி அடிப்படையிலான இடங்கள் இருக்கின்றனவே - அவற்றைத் தடை செய்து இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு உருவாக்கப்படுமா?

 (இ) இந்து மதத்துக்குள் முரண்பட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றனவே அவையெல்லாம் அகற்றப்பட்டு ஒரே கோட்பாடு - சீரமைப்புக்குள் கொண்டுவரப்படுமா? எடுத்துக்காட்டாக பல்வேறு திருமண முறைகள் ஒழிக்கப் பட்டு, ஒரே மாதிரியாக ஏற்படுத்தப்படுமா?

 (ஈ) இந்து மதத்துக்குள்ளே சில பிரிவினர்களிடையே பலதார திருமணங்கள் உண்டே - அவையும் தடுக்கப்படுமா?

 (உ) இந்துக்களுக்குள் உணவுப் பழக்கவழக்கங்கள் பலவகைப்பட்ட முறைகளில் உள்ளனவே - வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி, நாய்க்கறி உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உண்டே! மாட்டுக்கறித் தடை விதிப்பை அப்பகுதிகளிலும் முற்றாகச் செய்யும் நோக்கம் பின்வாங்கப்படுமா?

 (ஊ) இந்து மதக் கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே வர முடியும் என்ற நிலை ஒழிக்கப்பட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராகும் உரிமை வழங்கப்படுமா?

 (எ) இந்து மத வேதங்கள், சாஸ்திர நூல்கள், (மனுதர்மம் உள்பட)உபநிஷத்துகள்,இதிகாசங்கள்,புராணங்கள்எனப்படு பவைகளில் ஜாதியை ஆதரித்தும், பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திர்கள் என்றும், அசுரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், பெண்களைப் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதே - இந்த அவமரியாதையை அகற்றும் நோக்கத்திலும், அனைவரும் சமத்துவம் என்ற ஒரே பொது நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் அவையெல்லாம் தடை செய்யப்படுமா?

 (ஏ) இந்தியா முழுவதற்கும் மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படுமா? (அய்) புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக உத்தேசித்துள்ளார்களே - அந்தத் திட்டம் பொது சிவில் சட்டத் திற்கு விரோதமான தன்மையில் இருக்குமாதலால் அத்திட்டம் கைவிடப்படுமா? புதிய கல்வித் திட்டத்தின் முகவுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி, வேதக் கல்வி அடிப்படையில் குரு - சிஷ்ய உன்னதமான உறவு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே - இப்பொழுது கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு இந்தக் கல்வி முறை எந்த வகையில் உகந்ததாக இருக்க முடியும்?

 (ஒ) இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றனவே சி.பி.எஸ்.இ., செகண்டரிஸ்கூல், மெட்ரிகுலேசன், அங்கன்வாடி என்றெல்லாம் பல்வேறு வகையான கல்விக் கூடங்களும், கல்வித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளனவே இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்டுவரப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதிலும், விளக்கமும் தெளிவோடு சொல்லியதற்குப் பிறகு, பொது சிவில் சட்டம்பற்றிய கருத்துக் கூறுமாறு பொதுமக்களைக் கேட்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? 


இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது. இந்து மதத் துக்குள் தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்) தாங்கள் பிர்ம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிர்ம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகையாகக் காட்சியளிக்கும் பூணூலுக்குத் தடை விதிக்கப்படுமா? முஸ்லிம் மதத்தில் பெண்கள் உரிமைப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் - அவர்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கவலையுடன் கூறியிருப்பதை ‘வரவேற்கிறோம்.’ பெண்கள் எந்த மதத்தின்கீழ், எந்தப் பதாகையின்கீழ் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண் டியதுதான். கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எந்த மதத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு உரிமை மறுக்கப் பட்டவர்கள் கொந்தளித்து எழவே செய்வார்கள். அந்தக் கல்வி, அறிவுத் திசையை செப்பனிடுவதாகவும் இருக்க வேண்டும்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா முக்காடு அணிந்து வருவது அனேக மாக முற்றாக மறைந்துவிட்டது. இந்து மதத்திலும்கூட சில பிரிவுகளில் அது இருந்துதான் வருகிறது. தலாக் முறைகூட சிலநாடுகளில் கடைபிடிக்கவில்லைதான். இந்த முறை இந்தியாவில் இருப்பதால் எல்லா முசுலிம் வீடுகளிலும் இது அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான விவரங்கள் கிடையாது! நூற்றுக்கு நூறு கல்வியைக் கொடுங்கள்- உரிமைகள் எந்த மதத்தில் மறுக்கப்பட்டாலும் கல்வியின் எழுச்சிக்குமுன் மறுப்புகள் மரித்துப் போய்விடும். 

அடிப்படையைச் செய்யாமல், இலைகளையும், கிளைகளையும் வெட்டிக் கொண்டிருக்கவேண்டாமே! 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி, அகில இந்திய அளவில் மதுவிலக்கு என்று கூடத்தான் இந்திய அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், பொது சிவில் சட்டம்தான் முக்கியம் என்று பி.ஜே.பி. சொல்லும்போது, அச்சமும், அய்யமும் கைகோர்க்கின்றன என்பது உண்மையே! 

 ----------------------------------’விடுதலை’ தலையங்கம் 1-11-2016

16.9.16

சமதர்மம் நிலவ....பெரியார்

( தந்தைபெரியார் அவர்களின் 138 (17-9-1879) ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  பெரியார் அவர்களின்  இச்சொற்பொழிவை பதிவு செய்வதில் பெருமையடைகிறோம். அனைவருக்கும் பெரியார் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்  ------  தமிழ் ஓவியா)
சமதர்மம் நிலவ....


திராவிடர்கழகம் ஒரு அரசியல் கட்சியல்ல; சமுதாய சீர்திருத்த இயக்கம் ஆகும். அரசியல்கட்சி என்பது தேர்தலில் ஈடுபடுவது,  மக்களிடம் ஓட்டுப் பெற்று பதவிக்குப்போவது:

எங்கள் இயக்கம் தேர்தலுக்கு நிற்கின்றதோ, பதவிக்குப்போகின்றதோ இல்லை. சமுதாயத்துறையில் பாடுபடுகிறவர்களுக்கு அரசியல் பேரால் சட்டசபைக்கோ, பார்லிமென்டுக்கோ போய்ச் செய்ய ஒன்றும் இல்லை.

சட்டசபைக்குப்போகின்றவர்களால்சமுதாயத்தொண்டுஉண்மையாகச்செய்யமுடியாது. மக்களின் மூடத்தனம் மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித்தனங்களைச் சட்டசபைக்குப் போகின்றவர்களால் கண்டிக்கமுடியாது. கண்டித்தால்யாரும்ஓட்டுப்போடமாட்டார்கள். சட்டசபைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களிடம்வந்துஓட்டுக்கேட்காத எங்களால்தான்முடியும்.

தோழர்களே! நான் காங்கிரஸ்காரனாக, தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளனாக, தலைவனாக இருந்து பாடுபட்டவன் தான். பிறகு காங்கிரஸ் பார்ப்பனர்கள்நலனுக்கும்,  நமது இனநலனுக்குக் கேடாகவும் உள்ளது என்பதை உணர்ந்து காங்கிரசில் இருந்து வெளிவந்து சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்துகடவுள், மதம், சாஸ்திரம்ஒழியவேண்டும், பார்ப்பான்ஒழியவேண்டும், காங்கிரஸ் ஒழியவேண்டுமென்று பாடுபட்டுக்கொண்டே வந்து இருக்கின்றேன்.

எங்களுடைய தொண்டு எதிர்நீச்சல் தொண்டாகும். சமுதாயத் தொண்டு எவன் செய்ய முற்பட்டாலும் ஒழிக்கப்பட்டே இருக்கிறார்கள். நாங்கள் தான் துணிந்து இந்தத்துறையில் பாடுபட்டு வருகின்றோம்.

எங்களுக்குப் பொதுமக்களுடைய ஆதரவோ, பத்திரிகைகாரர்கள் விளம்பரமோ கிடையாது. எதிர்ப்புத்தான்அதிகம்.

ஆனால், நமதுஎதிரியான பார்ப்பனர்கள் நிலை அப்படி அல்ல. நமதுநாட்டில்சுமார் 30- லட்சம் பார்ப்பனர்கள் உள்ளார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

ஒரு பார்ப்பான் வாய் அசைந்து எதைப் பேசினாலும் அதையே அத்தனை பார்ப்பனர்களும் பேசுவார்கள்! பார்ப்பான் ஒருவனைஅயோக்கியன் என்றால், அத்தனை பார்ப்பானும் அவனை அயோக்கியன் என்பான். சுத்த அறிவுசூன்யமான ஒருவனை ஒரு பார்ப்பான் மகரிஷி என்று கூறினாலும், அத்தனை பார்ப்பானும் பகவான் மகரிஷி என்பான்.

பத்திரிகைக்காரர்கள் எல்லாம் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றார்கள் என்றாலும், பல இன்னல்களுக்கு இடையே எதிர்ப்புகளுக்கும் இடையே தான் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றேன்.

எங்கள் தொண்டு ஒன்றும் வீண்போகவில்லை. 40- ஆண்டு தொண்டும் இன்று தான் பலன் தர ஆரம்பித்து உள்ளது.

காங்கிரஸ் ஆனது பார்ப்பானுடைய ஸ்தாபனமாக இருந்து வந்தது இன்று அடியோடு மாறி தமிழர்கள் கைக்கு வந்துவிட்டது.

காங்கிரசும், மனுதர்மத்தினை ஆட்சிதர்மமாகக் கொண்டு இருந்ததை மாற்றி மனிததர்மத்தை ஆட்சி தர்மமாகக் கொண்டு தொண்டு புரிய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய மாறுதலுக்குக் காரணமாக இருந்தவர்கள் நாங்கள் தான்ஆவோம்.

எங்கள் தொண்டு காரணமாகத்தான் ஆச்சாரியாரின் மனுதர்மஆட்சி ஒழிக்கப்பட்டு காமராசர் 1954-இல் பதவிக்குவந்தார். அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒருபுதியதிருப்பம்ஏற்பட்டது.

காமராசரின் ஆட்சியின் பயனாக நம்மக்களும் படிக்கவும் எல்லா உத்தியோகமும் பார்க்கவாய்ப்பும், வசதியும் ஏற்பட்டது.

நம்நமதுநாடுகளில் 30-ஆண்டுகளுக்கு முன்பு என்னஎன்ன தீர்மானங்கள் போட்டோமோ அவை எல்லாம் இன்றைக்குக் காங்கிரசினால் அமலாக்கப்படுகின்றது. இன்றைக்குக் காங்கிரசு கொள்கை ஜாதியை ஒழிப்பது, பணக்காரனை ஒழிப்பது ஆகும்.

ஆனால் காங்கிரசிலேயே இதற்கு விரோதமானவர்கள் அனேகம் பேர்கள் இருக்கின்றார்கள்! இன்றைக்குக் காங்கிரசிலேயும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். தங்கள் ஆதிக்கவாழ்வு போய்விடக் கூடாது என்பதற்காகக் காங்கிரசுக்குக் குழிதோண்டுகிறவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைக்கு நம் முதல்மந்திரியார் பக்தவச்சலனாருக்குக் குரு ஆலோசனை கூறுகின்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்தான் ஆகும்.

கடவுள், மதம், சாஸ்திரம், நாமம், சாம்பல், பக்தி இத்தனையும் காங்கிரஸ்காரர்கள் வைத்துக்கொண்டே சமதர்மம்பேசுவது முட்டாள்தனம்ஆகும்.

இவற்றை வைத்துக் கொண்டால் எப்படி சமதர்மம் நிலவமுடியும்? எனவே, சமதர்மம் நிலவ வேண்டுமானால், கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை ஒழித்தாக வேண்டும்.

நெற்றி சுத்தமாக இருந்தால் தான் புத்தி சுத்தமாக இருக்கும்.

இன்றைக்குக் காங்கிரசில் பணக்காரர்கள் சிலர்இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் 'சமதர்மம் காங்கிரசில் நடக்கவாபோகின்றது?' என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற முயற்சியில் பணக்காரன்கள் எல்லாம் காங்கிரசில் இருந்து வெளியாகி விடவேண்டும். காங்கிரசில் பணக்காரன் இருக்கவே விடக் கூடாது.

தோழர்களே! எங்கள்கழகம், கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரத்தில் நம்பிக்கைஇல்லாதகட்சி. இப்படிப்பட்ட எங்கள் கட்சியில் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம் இவற்றில் நம்பிக்கை வைத்தவர்கள் இருக்கவே மாட்டார்களே.

எங்கள்கட்சிபார்ப்பானைவெறுக்கின்றகட்சி.  எங்கள் கட்சியில் பார்ப்பான் கிடையாதே! இது போல காங்கிரஸ்ஆகவேண்டும். காங்கிரஸ் சமதர்மம் என்று பேசிக் கொண்டு பணக்காரன்களையும், கோடீஸ்வரன்களையும் காங்கிரசில் வைத்துக் கொண்டு, மந்திரியாக வைத்துக் கொண்டு இருந்தால் எப்படி காங்கிரஸ் உண்மையான சமதர்மதிட்டத்தை அமலாக்குகின்றது என்றுகூறமுடியும்?

நாம் நெருக்குகின்ற நெருக்கில் பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களும் காங்கிரசில் இருந்து வெளியாக்க காங்கிரஸ் முயல வேண்டும்.

இல்லாவிட்டால்,  பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களும் தாமாகவே காங்கிரசை விட்டு ஓடும்படியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும்.

சமதர்மம் என்பது பேதம் அற்ற தர்மமாகும்.

காங்கிரசுக்காரர்களுக்கு நமது பேச்சு பிடிக்கும் என்று நான் கருதவில்லை. கேட்டால்கேள், கேட்காவிட்டால்வீணாகப்போ. சீரழி! வருகின்றதை அனுபவி என்று கருதியே நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு    உள்ளோம்.                                          
----------------------------------------தந்தை பெரியார் இராமநாதபுரத்தில் ஆற்றிய அறிவுரைகளின்தொகுப்பு. ’விடுதலை’, 07.10.1965

4.9.16

சோ வின் கோணிப் பையிலிருந்து ஒரு பூனைக்குட்டி மியாவ்! மியாவ்!!


 ‘சோ’வின் கோணிப் பையிலிருந்து 
ஒரு பூனைக்குட்டி மியாவ்! மியாவ்!!

‘தினமணி’யின் ஆசிரியராக இருக்கக் கூடிய திருவாளர் வைத்தியநாதய்யரின் பேட்டி ஒன்று, அவரின் குருநாதரான ‘சோ’வின் ‘துக்ளக்’ இதழில் (7.9.2016) வெளிவந்துள்ளது.
இந்தப் பேட்டியில், தான் ‘சோ’வின் சீடர் என்பதை ‘அபஷ்டமாக’ ஒப்புக் கொண்டுவிட்டார். அப்பாடி! அரை குறையாக இருந்த அப்பாவித் தமிழர்கள் இப்பொழுதாவது விழித்துக் கொள் வார்களாக!
அவர் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர் ‘சோ’வின் சீடர் என்பதை நாம் வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறோம்.
இந்தப் பேட்டியில் இவர் அசல் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற அக் மார்க்குக்குச் சொந்தக்காரர் என்பதையும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
விஜயராகவன்: ஆனாலும், ஊடகங்களில் ஹிந்து மத நம்பிக் கைகளை மட்டுமே விவாதம் செய் கிறீர்களே, ஏன்?
வைத்தியநாதன்: எப்போதுமே பெரும்பான்மை குறித்த விமர்சனங் கள்தான் எழுமே தவிர, சிறுபான்மை குறித்த விமர்சனங்கள் ஒரு நாளும் எழாது. இதற்குக் காரணம், பெரும் பான்மை மக்களைத் தாக்கி வளர வேண்டிய கட்டாயம் சிறுபான்மைக்கு உண்டு.
எனவே, எல்லா சமுதாயத் திலும் பெரும்பான்மை சமுதாயம் தாக்கப்படுகிறது. இது இங்கு மட்டும் நடக்கிற ஆச்சரியப்படவேண்டிய விஷயமில்லை. அய்ரோப்பாவில் முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்? கிறிஸ்துவ மக்களைத் தாக்குகிறார்கள். இஸ்லாமிய நாடுகளிலேயே, அந்த மதத்தின் சிறுபான்மைப் பிரிவினர் பெரும்பான்மைப் பிரிவினருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர். எனவே, எப்போதுமே பெரும்பான் மையை உடைத்துதான் சிறுபான்மை யினர் வளர முயற்சி செய்வார்கள். எனவே, இப்படிப்பட்ட விமர்சனங் களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் கூறியுள்ளார்.
இவர் கூறியுள்ளதில் எள்மூக்கு முனை அளவாவது உண்மையின் நிழலாவது படிந்திருக்கிறதா?
இந்தியாவில் இப்பொழுது நடப்பது என்ன? பசு மாமிசம் என்ற போர்வையில் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாக் கப்படுபவர்கள் சிறுபான்மையினரா? பெரும்பான்மையினரா? மோடி முதல மைச்சராக குஜராத்தில் இருந்தபோது 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப்பட் டனரே - அந்த முஸ்லிம்கள் சிறுபான் மையினர் இல்லை என்று சொல்லப் போகிறார்களா?
பாபர் மசூதியை இடித்தவர்கள் சிறு பான்மையினரா? பெரும்பான்மையினரா? இந்தியாவில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் இந்துக் கள்தான் என்ற எதேச்சதிகாரக் குரல் கொடுப்பவர்கள் சிறுபான்மையினரா - பெரும்பான்மையினரா?
கிருத்தவர்களும், முஸ்லிம்களும் இராம னையும், கிருஷ்ணனையும் வழிபட வேண்டும் என்று சொல்லுபவர்கள் யார்?

குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது என்னவென்றே தெரிந்து கொள்ளாமல், அதில் இருந்தது மாட்டு மாமிசம் என்று பழி சுமத்தப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டவர் கூட பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த வர்தானா?
பிரதமர் மோடியை பக்கத்தில் வைத் துக்கொண்டே அமெரிக்க அதிபர் ஒபாமா மொத்தினாரே - அப்பொழுது கூட புத்தி கொள்முதல் பெற்றுக்கொள்ளவில்லையா?
‘பாரத் மாதா கீ ஜே!’ என்று சொல்ல விரும்பாதவர்கள் பாகிஸ்தான் ஓட வேண்டும் என்று சொல்லுபவர்கள் யார்?

பசு மாமிசம் சாப்பிடுவதற்குப் பதிலாக மனித மலத்தைச் சாப்பிடலாம் என்ற இராம- முன்னணி தலைவர் யார்?

அடுக்கிக் கொண்டே போகலாம். பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கப்பா, அட போக்கத்த பசங்களா என்ற உடுமலை நாராயணகவியின் பாடல் வரிதான் நினைவிற்கு வந்து தொலைக் கிறது.
இன்னொரு கேள்வி - பதில்:
அதையும் கேளுங்கள்.

வெங்கடாசலம்: மக்களின் நம் பிக்கையை, நம்பிக்கையா? மூடநம் பிக்கையா என்று தீர்மானிப் பதற்கு ஊடகங்களுக்கு என்ன உரிமை இருக் கிறது? சில ஊடகங்கள் மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் செய்திகளை வெளியிடு கிறார்களே?
வைத்தியநாதன்: மூடநம்பிக்கை என்பதை அதிகம் பேசுவது பகுத் தறிவாளர்களும், கம்யூனிஸ்ட்களும் தான். கோவிலில் சிலை வைத்துப் பாலபிஷேகம் செய்து கும்பிடுவது மூடநம்பிக்கை என்பது அவர்களது பார்வை. ஆனால், தெருவிற்குத் தெரு ஒரு சிலையை வைத்து, அந்தச் சிலைக்கு ஒவ்வொரு வருடமும் மாலை போடுவது என்பது எந்த நம் பிக்கையில் வரும்? இது பார்வையைப் பொறுத்த விஷயம். எனக்குப் பிடித்ததெல்லாம் சரி, எனக்குப் பிடிக் காததெல்லாம் தவறு என்ற சிலரது பார்வைக்குக் காரணம், மேற்கத்திய தாக்கம். நம்முடையது தத்துவம், அவர்களுடையது சித்தாந்தம்.
இவை இரண்டிற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ‘நான் நம்புவது சரி.  நீ நம்புவது தவறு’ என்பது சித் தாந்தம். ‘நான் நம்புவதும் சரி, நீ நம்புவதும் சரி. ஆனால்,  நீ நம்புவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அதேநேரம் குறை சொல்லமாட்டேன்’ என்பது தத்துவம். நாம் பின்பற்றுவது தத்துவம் சார்ந்த மதத்தை. எந்தச் சித்தாந்தங்களும் இந்த உலகில் வெற்றி பெற்றதில்லை என்பதுதான் உண்மை.
ஒவ்வொரு சித்தாந்தத்தின் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கும். ஒரு காலகட்டத்தில் அது மறைந்து போகும். ஆனால், தத்துவம் என்றென் றைக்கும் நிலைத்து நிற்கும். இதனு டைய பார்வை பரந்து விரிந்தது. எனவே, மூடநம்பிக்கை என்பது, அவரவர்களுடைய பார்வையைப் பொறுத்து மாறுபடும் விஷயம். ஒவ்வொரு ஊடகத்திற்கும் இதுபோல் ஒரு பார்வை இருக்கிறது. இதுதான் பதில்.
இந்தக் கும்பலுக்குப் பகுத்தறிவு என் றாலே குமட்டிக் கொண்டுதான் வரும்.
இவரின் குருநாதரான திருவாளர் சோ ராமசாமி சொன்ன பதிலை எடுத்துக்காட் டினாலே இவர்கள் எத்தகையவர்கள் என்பதை எளிதில் எடை போட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?
பதில்: ஏன் நிறுத்திவிட்டீர்கள்? ‘‘பித்தலாட்டம் என்றால் உங் களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேஷம் என்றெல்லாம்... சொன்னால், உங் களுக்கு ஏன் கசக்கிறது?’’ என்று கேட்க வேண்டியதுதானே! அப் பொழுதுதான் உங்கள் கேள்வி முழுமை அடையும். (‘துக்ளக்’, 4.3.2009).
எப்படியாகப்பட்ட பதில் பார்த்தீர்களா? உலகத்திலேயே பகுத்தறிவுக்கு இப்படி விளக்கம் கொடுத்துள்ள பித்துக்குளிகளை தமிழ்நாட்டின் அக்கிரகார வட்டாரத் திலேயேதான் பார்க்க முடியும்.
மற்ற உயிர்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவதே அவனுக்குள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவுதான்! அந்தப் பகுத்தறிவையே இப்படி கேலி யாகவும், கேவலமாகவும் பேசுகின்றார் என்றால் - இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்ற கேள்விதான் எழும். ஒருக்கால் ‘முனிபுங்கவர்களாக’ இருக்கலாம்.
காங்கேயன் கழுதைக்குப் பிறந்தான்; மாண்டவ்யர் தவளைக்குப் பிறந்தான் என்று புராணங்கள் எழுதி வைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே!
மூடநம்பிக்கைகளை அதிகம் பேசுவது பகுத்தறிவாளர்களும், கம்யூனிஸ்டு களும்தானாம். இருக்கட்டும்; மூடநம்பிக் கைகளைச் சாடாமல், பார்வதி தேவியின் உடல் அழுக்கில் இருந்து பிறந்தவர் விநாயகர் - அவர் விக்னங்களை எல்லாம் தீர்க்கக் கூடியவர் என்று கூறிப் பிரார்த் தனை செய்யவேண்டுமா?
ஒரு கடவுளைக் கூட ஒழுக்கமான முறையில், ஆரோக்கியமான வகையில், நாகரிகமான தன்மையில் கற்பிக்க முடி யாதவர்கள் எல்லாம் பேனா பிடிப்பதுதான் வேடிக்கை!
இவர் ஆசிரியராக இருக்கும் தினமணி ஏட்டில் ‘நோபல்’ விஞ்ஞானி வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் மூடநம்பிக் கையைப்பற்றி விளாசினாரே! (‘தினமணி’, 12.12.2015) அவரும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்தானா? கம்யூனிஸ்டுக் கட்சி யைச் சேர்ந்தவர்தானா?
‘‘அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகள் முன்னேறியுள்ள தற்கு நவீன அறிவியலின் பயன்பாடு தானே தவிர,  அது விபத்தால் நேர்ந்ததல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளைப் பின்பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின்தங்கி விட்டன. மூடநம்பிக்கை, ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுத்து வருகின்றன.’’ (‘தினமணி’, 12.12.2015).
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு என்ன முத்திரையைக் குத்த உத்தேசமோ! திருவாளர் வைத்தியநாதய்யருக்குத்தான் வெளிச்சம்.
இதைவிட இன்னொரு தமாசும் உண்டு. ஆன்மீகமும், பகுத்தறிவும் பிரிக்க முடியா தவை என்று இதே வைத்தி அய்யர் பேசி, இதே தினமணியிலும் வந்துள்ளது (19.10.2008).
சந்தனமும், சாணியும் ஒன்றுதான்; மலரும், மலமும் இரட்டைக் கிளவிகள் என்று பாஷ்யம் சொன்னாலும், சொல்லு வார்கள்.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இந்த அய்ந்தையும் ஒன் றாகக் கலக்கிப் ‘பஞ்சகவ்யம்’ என்று நாம கரணம் சூட்டி, தட்சணையையும் வாங்கிக் கொண்டு குடிக்க வைக்கும் குடிகாரர்களா யிற்றே - என்னதான் பேசமாட்டார்கள்?
பகுத்தறிவாளர்கள் சிலைகளுக்கு மாலை போடுகிறார்களாம்? இது என்ன நம்பிக்கையாம்? என்று நம்மை நோக்கிக் கேள்வி கேட்டு மடக்கி விட்டாராம். அடேயப்பா, எப்படியாகப்பட்ட கேள்வி!
தலைவர்களின் பிறந்த நாளில், அவர் களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது வரம் கேட்பதற்காக அல்ல - பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் - நமக்காகப் பாடுபட்ட இந்தத் தலைவரின் பிறந்த நாள் என்று நினைவூட்டத்தான். இது ஒன்றும் எந்தவித நம்பிக்கையின் அடிப்படையிலும் அல்ல.
தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போடுவதை நிறுத்திவிட்டால், குழவிக் கல்லு சாமிகளுக்குப் பாலாபிஷேகம் செய் வதை நிறுத்தி விடுவார்களா? அதற்குத் தயார்தானா?
சிலைகளுக்குப் பாலாபிஷேகம்பற்றி இவர்களின் கருத்தென்ன? முதலில் அதற்குப் பதில் சொல்லாமல், நழுவுவது ஏன்?  திசை திருப்புவது திரிநூலார்க்கு கைவந்த கலையாயிற்றே!
தலைவர்களின் பிறந்த நாளில் அவர் களின் சிலைக்கு மாலை அணிவித்தால், படிக்காமலேயே பரீட்சையில் பாசாகி விடலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் அல்ல; தன் மனைவிக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற பத்தாம்பசலித்தனத்தால் அல்ல.
உண்மையிலேயே வாழ்ந்து, உண்மை யிலேயே மக்களுக்காக உழைத்த தலை வருக்கு அவர்தம் பிறந்த நாளிலோ, மறைந்த நாளிலோ மாலை சூட்டுவதும், சாணியைப் பிடித்து வைத்து சாமி என்று கூறி படையல் போட்டு, தோப்புக் கரணம் போட்டு, கோரிக்கைகள் வைப்பதும் ஒன்றுதானா?
தத்துவத்தைப் பற்றி எல்லாம் விளா சுகிறார்  ‘தினமணி’ ஆசிரியர். நாத்தி கனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் சங்கராச்சாரியாரை மகா பெரியவாள் என்று சொல்லுவதில் பதுங்கி இருக்கும் தத்துவம் - சித்தாந்தம் என்ன வாம்? அடுத்த இதழில் பதில் வருமா?
வேறு எதுவும் சொல்ல முடியாத நிலையில், பாமரத்தனமாக எதையாவது சொல்லி அடித்துத் தள்ளுவோம் என்பது ஆரியத் தளுக்குத்தானே தவிர, அதில் அறிவுச் சரக்குக்குச் சற்றும் இடமில்லை.
ஆனாலும், இதுபோன்ற சந்தர்ப்பங் களிலாவது பார்ப்பனர்களின் பம்மாத்து களையும், பதுங்கிக் கிடந்து சந்தர்ப்பம் வரும்போது நச்சுத் தலையை நீட்டும் நடவடிக்கைகளையும் நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமது எதிர்ப்பார்ப்பு!பக்தர்கள் யார்?
கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப் பேர் பக்தர்களாயிருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது - பணமுடை அதிகரித்துள்ளது.
(‘குமுதம்’, 22.2.2009).
இவ்வாறு கூறியிருப்பவர் யார் தெரியுமா? சொன்னால், யாரும் எளிதில் நம்பக் கூட மாட்டார்கள்.... காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் ‘திருவருள் மொழி’தான் இது.
வைத்திய நாதய்யர்களுக்கு அர்ப்பணம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                 ------------------மின்சாரம் அவர்கள் 3-9-2016 ‘விடுதலை’ ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

25.8.16

கோகுலாஷ்டமி கொண்டாடும் பக்தர்களே சிந்திப்பீர்! கண்ணன்... காமுகன்...

கோகுலாஷ்டமி கொண்டாடும் பக்தர்களே சிந்திப்பீர்! கண்ணன்... காமுகன்...விஷ்ணு (கிருஷ்ணன்) மும்மூர்த்தி களில் ஒருவரான தேவன் விஷ்ணு வென்றால் - இரட்சிக்கிறவன் என்பது பொருளாம். புராணங்களில், விஷ்ணுவை மகாதேவன் என்று சொல்லப்படவில்லை. விஷ்ணுவுக்கு பல பெயர்களும் - அவதாரங்களும் உண்டாம்.
விஷ்ணுவின் மறுபெயர்கள்:
அச்சுதன் - சரவணச் செல்வன் - அரி அரிந்தமன் - உவணதேவன் - கடல்வண் ணன் - கமலக்கண்ணன் - கரியன் - கருட கேதனன் - கேசவன் - கொண்டல் வண் ணன் - சக்கரபாணி - சக்ராயுதன் - சக்கிரி - சங்கமேந்தி - சனர்த்தனன் - சம்பு - சலச லோசனன் - சாரங்கபாணி - சிறீதரன் - சவுரி - திருநாதன் - துளாய்மவுலி - நாராயணன் - நெடியோன் - பிச்சை - பஞ்சாயுதன் - பதுமநாதன் - பிரமன்றாதை - பிள்ளை கேள்வன் - பீதாம்பரன் - பூமிகொழுநன் - பெம்மான் - பெருமான் - மாதவன் - மாயன் - மால் - முகுந்தன் - முண்டகாசனைக் கேள்வன் - வலவன் - வனமாலி - விண்டு வேலைற்றுயின் றோன், என்பனவாம்
தச அவதாரப் பெயர்கள்
மச்சன் - கூர்மன் - வராகன் - நரசிங்கன் - வாமணன் - இந்திரவாசன், உலகளந்தோன், கிரிவிக்கிரன், பரசுராமன் - இராகவன், இராமன், நாகுத்தன் - பலபத்திரராமன், குண்டலன் அலகை முலையுண்டோன் - கண்ணன் - கிருஷ்ணன், கோவிந்தன், தாமோதரன், தேவகி மைந்தன், நந்தநந்த னன், பஞ்சவர்தூதன் - புத்தன், மதுசூதனன், முராரி, கோபாலன், கோபிநாதன் பலராமன் என்பதும் விஷ்ணுவின் பெயர்களே.
விஷ்ணு - சுய உருவை, நாலுகையு டையதாய் கறுப்பு நிறத்திற் செய்து, மஞ்சள் நிற ஆடையை அணிவித்து வணங்கு வார்கள். விஷ்ணு பக்தர்களில் சிறீ வைண வர், ராமாஞ்சி மதத்தார், எம்பெருமாள் மதத்தார், சாத்தாதிகள், எனப்பல வகுப்பாய் பிரித்து, மந்திரங்கள் சடங்குகளுடன் விஷ்ணுவை தெய்வமென்றும், சிறீமன் நாராயணனென்றும் போற்றி வணங்கி வருகிறார்கள்.
பிர்மாவுக்கு ஆயுள் கணித்திருப்பது போல், விஷ்ணுவுக்கும் ஆயுள் கணிக்கப் பட்டிருக்கிறது, விஷ்ணுவுக்கு ஆயுள் பதிநான்கு கோடியே நாற்பது லட்சம் (14,40,00,000) ஆண்டுகள். விஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம்.
விஷ்ணுவுக்கு மனைவி - வைப்பாட்டி யாரும் உண்டு. மனைவியின் பெயர் லட்சுமி. இவள் பிர்மாவின் உடன்பிறந்த சகோதரி. ருக்மணி, ராதை வைப்பாட்டிகள். இவையன்றி இளம் பெண்களைக் கற்பழித் துக் கறைப்படுத்தி, சீர்கெடச் செய்த காம சேட்டைகள் நிறைந்த கதைகள் ஏராளம் உண்டு. இத்தனையும் சேர்ந்ததயையே கிருஷ்ணலீலை என்கிறார்கள்.
கல்வியறிவும், நாகரீகமும்,  நாட்டு முன்னேற்றமும் பெற்றுள்ள இக்காலத்தில் புராணச் செயல்கள் உச்சம் பெற்றிருந்த காலங்களில் நடத்திய கிருஷ்ணலீலையைப் போல நடந்தேறச் சமயம் பெற்றால் இளம் பெண்களைப பெற்ற பெற்றோரின் கண் ணும் மனமும் இக்காதல் காட்சிகளைக் கண்டு சகிக்குமா? கொழுந்துவிட்டுத் தாவிப் படர்ந்து பற்றி எரியும் நெருப்பு முன் விழுந்த மெழுகு போல் பொங்கி உரு காதோ? இப்படி காமச்செயல் புரிவோரை இன்று எவரேனும் கண்டால் மனங்கனிய கடவுளென்று வணங்க மனம் இடம் தருமா? இக்காமக்கோட்டிக் காட்சி நாடகக் கதையை கண்கூடாகப் பார்க்கவும், கேட்கவும் கூடுகின்ற கூட்டம் அங்கங்கே எண்ணற்ற பல ஆயிரம் என்பது பொருந்துமல்லவா? இப்படி கண்ணன் காதல் கதையை உணர்ந்து அறியாதிருப்பது எத்தனை பரிதாபமென்பதை சற்று சிந்தியுங்கள்.
ஒருமுறை கிருஷ்ணன் நடத்திய காதற் செயலால் பார்வதியிட்ட சாபம் பலித்துப் பாம்பாய்ப்போன கதையும், தனக்கு மனை வியிருந்தும் திருப்தியின்றி ஒரு காட்டு வேடுவப்பெண்ணை இச்சித்து மோகித்துக் கூடிப் புணர்ந்ததை தன் மனைவி லட்சுமி கேள்விப் பட்டு கிருஷ்ணனை வாசல் வழியாய்  நுழைய விடாதபடி - வாயில் காவலருக்குக் கட்டளையிட கிருஷ்ணன் வேறுவழியாய் உட்புகுந்து வந்ததாயும் கதையுண்டு.
விஷ் ணு, கிருஷ்ணவதாரத்தில் நடத் திய காமச்சேட்டைகளும், ரிஷிபத்தினி களில் உண்டாக்கிய கற்பழிவும், நட்டமும் கணக்கற்றதாய்த் தெரிகிறது. இதன் உண் மையினை அய்ந்தாம் .. பாரதத்தில் மிகத் தெளிவாய் அறியலாம். அவற்றில் சிசு பாலன் அரசக் கூட்டத்தில் கிருஷ்ணவதார மெடுத்த விஷ்ணுவின் தீயச் செயல்களில், செவிசாய்த்து கேட்டு சகிக்க முடியாத - வெட்கத்துக்குரிய பெருங்குற்றங்களை அறவே தள்ளிவிட்டு அதில் கண்டபடியே கீழே விளக்கிக் காட்டியுள்ள சிலவற்றைப் பாருங்கள்.
பாரதம், சபாபர்வம் 27ஆம் பக்கம்: “சூதுவாது அக்கிரமம், கொலை, களவு, கள், காமம் முதலியவை நிறைந்த பாண்டமாகிய இந்தக் கரியக் கிருஷ்ணனை ஆக்கிரம கண்ணியனாக்கி, பூசைகொடுவென்று வியாசர் சொல்லுவது தகுதியா?”

“தன்னைப் பெற்ற தேவகியிடத்து ஒரு பெண்ணை உண்டாக்கி வைத்தான்...

“ஆச்சியர், வெண்ணையைத் திருடித் திருடித் தின்கிறபோது, கண்டுபிடித்து, அசோதையிடத்து வந்து முறையிட அசோதை யிவனைப் பார்த்து என்னடா கிருஷ்ணா வெண்ணையைத் திருடித் தின்பது தகுதியா எனக்கேட்க - தன் கையிலிருந்த வெண்ணையை நக்கி கொண்டே நான் அறியேன் என்று பொய்மை கூறினான். (பாரதம் - சபாபர்வம் 28ஆம் பக்கம் பார்க்கவும்)
ஆயர் மாதர்கள் இவன் செய்யும் துடுக்கனைத்தும் அசோதைக்குச் சொல்லி, தங்களுக்கு நன்மை கிடையாதிருப்பதை நினைத்து திருஷ்டாந்தத்துடன் பிடித்துப் போக வேண்டுமென்று தகுந்த முயற்சி யோடிருக்கும்போது ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான்’, என்ற பழமொழி போல (பாரதம் - சபாபர்வம் 29ஆம் பக்கம்) வெண்ணெய் திருடித்தின்ற இந்த கிருஷ்ணன் ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டு, பூனை வாயில் எலிபோல மன வருத்தமுற்றிருக்க, ஆயர் மாதர் இவனைப் பிடித்துக் கல்லுரலில் கட்டி அசோதைக்குத் தெரியப்படுத்த, அசோதை வந்து திருடர்க்கு தரப்படும் தண்டனையை அவ்விடத்தில் தானே செய்யக் கருதி இவனைத் தன் கையிலிருக்கும் பிரம்பாலும், ஆயர்மாதர் மத்தாலும் அடிக்க, கிருஷ்ணன் அடிபட்டு ஓவென்று அலறி இரண்டு கண்ணிலும் அருவிபோல ஜலம் வர அழுதான்...” தன் னந்தனியாக ஒரு மாது செல்வாளாகில் அவளைப் பின்தொடர்ந்து தன் கருத்துக் கிசைந்தவிடம் சமீபித்தபோது வேடரைப் போல் வீழ்ந்து கற்பழித்துத் திரிந்தான் - (பாரதம் - சாபபர்வம் 20ஆம் பக்கம் காண்க)

“தாயோடு பிறந்த அம்மானாகிய நஞ்சனை கிஞ்சித்தேனும் இரக்கமில்லாமல் கொன்று போட்டான்”.
“தன் தந்தையோடு பிறந்தவளை அத் தையென்று மதிக்காமல், அவளைக் கட்டிப் புணர்ந்தான்.
“இந்தக் கிருஷ்ணனுக்கு, ஏழு மனைவி கள் இருக்கிறார்கள். அவர்களிருக்க, பதினாயிரம் கோபிகாஸ்திரிகளை மனைவி களாக வைத்திருக்கிறான்” என்று சிசுபாலன் சொன்னான். அப்படிவெட்கத்திற்குரிய பற்பல குற்றங்களை விவரித்தபின் கிருஷ் ணனை நோக்கி நானாவித தண்டனைகளில், அவன் மீளவும் சொன்னதாவது. “அடா கொலையாளி, ஸ்திரிகளை கொலை செய்வது மகாபாதகமென்று பேதைகளுக் குத் தெரிந்திருக்க நீ அஃது உணராமல், உனக்குப் பாலூட்டும் தாயாகிய ஒரு ஸ்திரியை கொலை செய்தாயே!...”
“அடா பாவி உன் செயல்களில் ஒன்றாவது நன்னெறிக்கேதுவாக இருக் கின்றதா? நான் எவ்வளவு எடுத்துரைத்தேன். நல்ல யோக்கியதையுடையவனாய் இருப் பாயாகில் விடை கொடாதிருப்பாயோ. நீ தான் விடை கொடாமலிருந்தாலும் சபை யார் மவுனமாக இருப்பார்களோ? நான் கூறுவது உண்மையாய் இருப்பதினால், நீயும் சித்திரப் பதுமைபோல சற்றும் அசைவின்றி இருக்கின்றனையே என்றான்.
அவதரித்த விஷ்ணுவாகிய கிருஷ்ண னோவெனில்  சினந்து, சிசுபாலனைக் கொன்று போட்டானே ஒழிய, அதெல்லாம் பொய்யென்று மறுக்க, அவனாற் கூடாமற் போயிற்று. (பாரதம் - சபாபர்வம் 36 ஆம், 38ஆம் பக்கம்) அல்லாமலும் தன் குருவின் மனைவியை களவாய்க் கொண்டு போய், கானகத்தில் கூடியிருந்ததாகக் கதையுண்டு. இதல்லாமல், தன் தாயையும், சகோதரியை யும் மோகித்து பற்பலச் செயல்களைச் செய்ததாயும் தெரிகிறது.
கடைசியாய் கிருஷ்ணன் ஓர் ஆல மரத்திலேறி படுத்திருக்கையில், வேடன் ஒருவன் மிருகமென்றெண்ணி அம்பால் எய்ய - அம்பு பட்டு செத்து. உடல் கழுகு களால் கொத்தப்பட்டதாகவும், நரிகளால் பிடுங்கப் பட்டதாயும் கதையுண்டு.
பார்த்தீர்களா? - இத்துணைச் செய்தி களையும் நாம் கற்பனையாகக் கூறவில்லை. அவர்கள் எழுதி வைத்த புராணத்திலி ருந்தே கிருஷ்ணபரமாத்வாவின் வண்ட வாளங்கள் தெரிகின்றன. இதைப் பார்த்த பிறகும் படித்த பிறகும் கிருஷ்ண ஜெயந் தியைக் கொண்டாடப் போகிறீர்களா?
                                     ---------------------இரா.கண்ணிமை அவர்கள் எழுதிய கட்டுரை--’விடுதலை’  24-08-2016--http://viduthalai.in/page-2/128308.html
                ***********************************************************************

‘அட, கோகுல கிருஷ்ணா?’

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தேய் பிறையின் எட்டாம் நாளில் (அஷ்டமி) ரோகிணி நட்சத் திரம் சேர்ந்த நேரத்தில், மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரானகிருஷ்ணன்என் பவன் பிறந்தானாம். அன் றைய நாளை தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி என்றும், கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றும் கொண் டாடுகிறார்கள்.
இந்து மதத்தில் ஒரு யோக்கியமான, ஒழுக்கமான, நாணயமான கடவுளை உண்டாக்க முடியவில்லை என்பதற்கு இந்தக் கிருஷ்ண அவதாரக் கடவுள் ஒன்றே போதுமானது.
சிறிய வயதில் வெண் ணெய்யைத் திருடி, வாலிப வயதில்பெண்ணைத்திரு டியவன்என்றுஇந்தக் கடவுளைப்புகழுவதில் பக்தர்கள் வெட்கப்படுவதில் லையே, ஏன்?
கோகுலத்தில் அடுத்தவர் வீட்டுக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து யாரும் அறியாவண்ணம் பால், தயிர், வெண்ணெய்யை உண்டு உடலை வளர்த்தவன் இவன்; சிறு வயதிலேயே திருட்டைக்கற்றுக்கொண் டவனைக் கடிந்து கொள்ளா மல் கடவுள் என்று கன்னத்தில் போட்டுக் கொள்ள வெட் கப்படுவதில்லையே ஏன்?
ஒருமுறை ஒரு வீட்டில் வெண்ணெய்யைத் திருடிய போது கையும் களவுமாகப் பிடிபட்டான். அவனை அவ னது தாயிடம் அழைத்துச் சென்றாள் மதுகரவேணி என்ற அந்தப் பெண். அப் பொழுது அந்தச் சிறுவன் கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகச் சொல்லி, தான் துடைத்து விடுவதாகச் சொன்னான்; அந்தப் பெண் குனிந்தபோது, வெண்ணெய்யை அந்தப் பெண்ணின் வாயிலும், கையிலும் தடவி விட்டு, தன் தாய் யசோதையிடம் என்ன சொன்னான் தெரியுமா?
‘‘இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெய்யைத் தின்று விட்டு, என்மீது பழியைப் போடுகிறாள். இதோ பாருங் கள், இவளின் வாயிலும், கையிலும் வெண்ணெய் ஒட் டிக் கொண்டு இருக்கிறது’ என்றானேபார்க்கலாம்! மகனின் வார்த்தைகளை நம்பி அந்தப் பெண்ணைக் கடிந்து கொண்டாள் தாயான யசோதை.
பிஞ்சிலேயேமுத்திப் போன இந்தப் பித்தலாட்டக் காரனை பெருமாளின் அவ தாரம் என்று சொல்லிப் பெருமையாகப் பேசுவதற்கு வெட்கப்படுவதில்லையே, ஏன்?
ஆம்! இந்துக்களால் ஒரு ஒழுக்கமான, யோக்கியமான, நாணயமான கடவுளைக் கற்பிக்கமுடியவில்லை.தங்களைப்போலவேதங் களின் கடவுளையும் கற் பித்துக்கொண்டு விட்டனரோ!
வெட்கக்கேடு - இந்தக் கேவலமானவனுக்குக் கோகு லாஷ்டமி விழாவாம்!
ஆமாம், ஒரு சந்தேகம் - பகவான் கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியை கெட்ட நாள் என்கிறார்களே, ஏனாம்? ஒருக்கால் அவன் கெட்டவனாக இருந்ததால், இருக்குமோ!
--------------------------- மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை--’விடுதலை’   24-08-2016  http://viduthalai.in/e-paper/128300.html