ஒரு பூனைக்குட்டி மியாவ்! மியாவ்!!
‘தினமணி’யின் ஆசிரியராக இருக்கக் கூடிய திருவாளர் வைத்தியநாதய்யரின் பேட்டி ஒன்று, அவரின் குருநாதரான ‘சோ’வின் ‘துக்ளக்’ இதழில் (7.9.2016) வெளிவந்துள்ளது.
இந்தப் பேட்டியில், தான் ‘சோ’வின் சீடர் என்பதை ‘அபஷ்டமாக’ ஒப்புக் கொண்டுவிட்டார். அப்பாடி! அரை குறையாக இருந்த அப்பாவித் தமிழர்கள் இப்பொழுதாவது விழித்துக் கொள் வார்களாக!
அவர் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர் ‘சோ’வின் சீடர் என்பதை நாம் வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறோம்.
இந்தப் பேட்டியில் இவர் அசல் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற அக் மார்க்குக்குச் சொந்தக்காரர் என்பதையும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
விஜயராகவன்: ஆனாலும், ஊடகங்களில் ஹிந்து மத நம்பிக் கைகளை மட்டுமே விவாதம் செய் கிறீர்களே, ஏன்?
வைத்தியநாதன்: எப்போதுமே பெரும்பான்மை குறித்த விமர்சனங் கள்தான் எழுமே தவிர, சிறுபான்மை குறித்த விமர்சனங்கள் ஒரு நாளும் எழாது. இதற்குக் காரணம், பெரும் பான்மை மக்களைத் தாக்கி வளர வேண்டிய கட்டாயம் சிறுபான்மைக்கு உண்டு.
எனவே, எல்லா சமுதாயத் திலும் பெரும்பான்மை சமுதாயம் தாக்கப்படுகிறது. இது இங்கு மட்டும் நடக்கிற ஆச்சரியப்படவேண்டிய விஷயமில்லை. அய்ரோப்பாவில் முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்? கிறிஸ்துவ மக்களைத் தாக்குகிறார்கள். இஸ்லாமிய நாடுகளிலேயே, அந்த மதத்தின் சிறுபான்மைப் பிரிவினர் பெரும்பான்மைப் பிரிவினருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர். எனவே, எப்போதுமே பெரும்பான் மையை உடைத்துதான் சிறுபான்மை யினர் வளர முயற்சி செய்வார்கள். எனவே, இப்படிப்பட்ட விமர்சனங் களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் கூறியுள்ளார்.
இவர் கூறியுள்ளதில் எள்மூக்கு முனை அளவாவது உண்மையின் நிழலாவது படிந்திருக்கிறதா?
இந்தியாவில் இப்பொழுது நடப்பது என்ன? பசு மாமிசம் என்ற போர்வையில் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாக் கப்படுபவர்கள் சிறுபான்மையினரா? பெரும்பான்மையினரா? மோடி முதல மைச்சராக குஜராத்தில் இருந்தபோது 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப்பட் டனரே - அந்த முஸ்லிம்கள் சிறுபான் மையினர் இல்லை என்று சொல்லப் போகிறார்களா?
பாபர் மசூதியை இடித்தவர்கள் சிறு பான்மையினரா? பெரும்பான்மையினரா? இந்தியாவில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் இந்துக் கள்தான் என்ற எதேச்சதிகாரக் குரல் கொடுப்பவர்கள் சிறுபான்மையினரா - பெரும்பான்மையினரா?
கிருத்தவர்களும், முஸ்லிம்களும் இராம னையும், கிருஷ்ணனையும் வழிபட வேண்டும் என்று சொல்லுபவர்கள் யார்?
குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது என்னவென்றே தெரிந்து கொள்ளாமல், அதில் இருந்தது மாட்டு மாமிசம் என்று பழி சுமத்தப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டவர் கூட பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த வர்தானா?
பிரதமர் மோடியை பக்கத்தில் வைத் துக்கொண்டே அமெரிக்க அதிபர் ஒபாமா மொத்தினாரே - அப்பொழுது கூட புத்தி கொள்முதல் பெற்றுக்கொள்ளவில்லையா?
‘பாரத் மாதா கீ ஜே!’ என்று சொல்ல விரும்பாதவர்கள் பாகிஸ்தான் ஓட வேண்டும் என்று சொல்லுபவர்கள் யார்?
பசு மாமிசம் சாப்பிடுவதற்குப் பதிலாக மனித மலத்தைச் சாப்பிடலாம் என்ற இராம- முன்னணி தலைவர் யார்?
அடுக்கிக் கொண்டே போகலாம். பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கப்பா, அட போக்கத்த பசங்களா என்ற உடுமலை நாராயணகவியின் பாடல் வரிதான் நினைவிற்கு வந்து தொலைக் கிறது.
இன்னொரு கேள்வி - பதில்:
அதையும் கேளுங்கள்.
வெங்கடாசலம்: மக்களின் நம் பிக்கையை, நம்பிக்கையா? மூடநம் பிக்கையா என்று தீர்மானிப் பதற்கு ஊடகங்களுக்கு என்ன உரிமை இருக் கிறது? சில ஊடகங்கள் மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் செய்திகளை வெளியிடு கிறார்களே?
வைத்தியநாதன்: மூடநம்பிக்கை என்பதை அதிகம் பேசுவது பகுத் தறிவாளர்களும், கம்யூனிஸ்ட்களும் தான். கோவிலில் சிலை வைத்துப் பாலபிஷேகம் செய்து கும்பிடுவது மூடநம்பிக்கை என்பது அவர்களது பார்வை. ஆனால், தெருவிற்குத் தெரு ஒரு சிலையை வைத்து, அந்தச் சிலைக்கு ஒவ்வொரு வருடமும் மாலை போடுவது என்பது எந்த நம் பிக்கையில் வரும்? இது பார்வையைப் பொறுத்த விஷயம். எனக்குப் பிடித்ததெல்லாம் சரி, எனக்குப் பிடிக் காததெல்லாம் தவறு என்ற சிலரது பார்வைக்குக் காரணம், மேற்கத்திய தாக்கம். நம்முடையது தத்துவம், அவர்களுடையது சித்தாந்தம்.
இவை இரண்டிற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ‘நான் நம்புவது சரி. நீ நம்புவது தவறு’ என்பது சித் தாந்தம். ‘நான் நம்புவதும் சரி, நீ நம்புவதும் சரி. ஆனால், நீ நம்புவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அதேநேரம் குறை சொல்லமாட்டேன்’ என்பது தத்துவம். நாம் பின்பற்றுவது தத்துவம் சார்ந்த மதத்தை. எந்தச் சித்தாந்தங்களும் இந்த உலகில் வெற்றி பெற்றதில்லை என்பதுதான் உண்மை.
ஒவ்வொரு சித்தாந்தத்தின் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கும். ஒரு காலகட்டத்தில் அது மறைந்து போகும். ஆனால், தத்துவம் என்றென் றைக்கும் நிலைத்து நிற்கும். இதனு டைய பார்வை பரந்து விரிந்தது. எனவே, மூடநம்பிக்கை என்பது, அவரவர்களுடைய பார்வையைப் பொறுத்து மாறுபடும் விஷயம். ஒவ்வொரு ஊடகத்திற்கும் இதுபோல் ஒரு பார்வை இருக்கிறது. இதுதான் பதில்.
இந்தக் கும்பலுக்குப் பகுத்தறிவு என் றாலே குமட்டிக் கொண்டுதான் வரும்.
இவரின் குருநாதரான திருவாளர் சோ ராமசாமி சொன்ன பதிலை எடுத்துக்காட் டினாலே இவர்கள் எத்தகையவர்கள் என்பதை எளிதில் எடை போட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?
பதில்: ஏன் நிறுத்திவிட்டீர்கள்? ‘‘பித்தலாட்டம் என்றால் உங் களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேஷம் என்றெல்லாம்... சொன்னால், உங் களுக்கு ஏன் கசக்கிறது?’’ என்று கேட்க வேண்டியதுதானே! அப் பொழுதுதான் உங்கள் கேள்வி முழுமை அடையும். (‘துக்ளக்’, 4.3.2009).
எப்படியாகப்பட்ட பதில் பார்த்தீர்களா? உலகத்திலேயே பகுத்தறிவுக்கு இப்படி விளக்கம் கொடுத்துள்ள பித்துக்குளிகளை தமிழ்நாட்டின் அக்கிரகார வட்டாரத் திலேயேதான் பார்க்க முடியும்.
மற்ற உயிர்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவதே அவனுக்குள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவுதான்! அந்தப் பகுத்தறிவையே இப்படி கேலி யாகவும், கேவலமாகவும் பேசுகின்றார் என்றால் - இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்ற கேள்விதான் எழும். ஒருக்கால் ‘முனிபுங்கவர்களாக’ இருக்கலாம்.
காங்கேயன் கழுதைக்குப் பிறந்தான்; மாண்டவ்யர் தவளைக்குப் பிறந்தான் என்று புராணங்கள் எழுதி வைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே!
மூடநம்பிக்கைகளை அதிகம் பேசுவது பகுத்தறிவாளர்களும், கம்யூனிஸ்டு களும்தானாம். இருக்கட்டும்; மூடநம்பிக் கைகளைச் சாடாமல், பார்வதி தேவியின் உடல் அழுக்கில் இருந்து பிறந்தவர் விநாயகர் - அவர் விக்னங்களை எல்லாம் தீர்க்கக் கூடியவர் என்று கூறிப் பிரார்த் தனை செய்யவேண்டுமா?
ஒரு கடவுளைக் கூட ஒழுக்கமான முறையில், ஆரோக்கியமான வகையில், நாகரிகமான தன்மையில் கற்பிக்க முடி யாதவர்கள் எல்லாம் பேனா பிடிப்பதுதான் வேடிக்கை!
இவர் ஆசிரியராக இருக்கும் தினமணி ஏட்டில் ‘நோபல்’ விஞ்ஞானி வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் மூடநம்பிக் கையைப்பற்றி விளாசினாரே! (‘தினமணி’, 12.12.2015) அவரும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்தானா? கம்யூனிஸ்டுக் கட்சி யைச் சேர்ந்தவர்தானா?
‘‘அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகள் முன்னேறியுள்ள தற்கு நவீன அறிவியலின் பயன்பாடு தானே தவிர, அது விபத்தால் நேர்ந்ததல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளைப் பின்பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின்தங்கி விட்டன. மூடநம்பிக்கை, ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுத்து வருகின்றன.’’ (‘தினமணி’, 12.12.2015).
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு என்ன முத்திரையைக் குத்த உத்தேசமோ! திருவாளர் வைத்தியநாதய்யருக்குத்தான் வெளிச்சம்.
இதைவிட இன்னொரு தமாசும் உண்டு. ஆன்மீகமும், பகுத்தறிவும் பிரிக்க முடியா தவை என்று இதே வைத்தி அய்யர் பேசி, இதே தினமணியிலும் வந்துள்ளது (19.10.2008).
சந்தனமும், சாணியும் ஒன்றுதான்; மலரும், மலமும் இரட்டைக் கிளவிகள் என்று பாஷ்யம் சொன்னாலும், சொல்லு வார்கள்.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இந்த அய்ந்தையும் ஒன் றாகக் கலக்கிப் ‘பஞ்சகவ்யம்’ என்று நாம கரணம் சூட்டி, தட்சணையையும் வாங்கிக் கொண்டு குடிக்க வைக்கும் குடிகாரர்களா யிற்றே - என்னதான் பேசமாட்டார்கள்?
பகுத்தறிவாளர்கள் சிலைகளுக்கு மாலை போடுகிறார்களாம்? இது என்ன நம்பிக்கையாம்? என்று நம்மை நோக்கிக் கேள்வி கேட்டு மடக்கி விட்டாராம். அடேயப்பா, எப்படியாகப்பட்ட கேள்வி!
தலைவர்களின் பிறந்த நாளில், அவர் களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது வரம் கேட்பதற்காக அல்ல - பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் - நமக்காகப் பாடுபட்ட இந்தத் தலைவரின் பிறந்த நாள் என்று நினைவூட்டத்தான். இது ஒன்றும் எந்தவித நம்பிக்கையின் அடிப்படையிலும் அல்ல.
தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போடுவதை நிறுத்திவிட்டால், குழவிக் கல்லு சாமிகளுக்குப் பாலாபிஷேகம் செய் வதை நிறுத்தி விடுவார்களா? அதற்குத் தயார்தானா?
சிலைகளுக்குப் பாலாபிஷேகம்பற்றி இவர்களின் கருத்தென்ன? முதலில் அதற்குப் பதில் சொல்லாமல், நழுவுவது ஏன்? திசை திருப்புவது திரிநூலார்க்கு கைவந்த கலையாயிற்றே!
தலைவர்களின் பிறந்த நாளில் அவர் களின் சிலைக்கு மாலை அணிவித்தால், படிக்காமலேயே பரீட்சையில் பாசாகி விடலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் அல்ல; தன் மனைவிக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற பத்தாம்பசலித்தனத்தால் அல்ல.
உண்மையிலேயே வாழ்ந்து, உண்மை யிலேயே மக்களுக்காக உழைத்த தலை வருக்கு அவர்தம் பிறந்த நாளிலோ, மறைந்த நாளிலோ மாலை சூட்டுவதும், சாணியைப் பிடித்து வைத்து சாமி என்று கூறி படையல் போட்டு, தோப்புக் கரணம் போட்டு, கோரிக்கைகள் வைப்பதும் ஒன்றுதானா?
தத்துவத்தைப் பற்றி எல்லாம் விளா சுகிறார் ‘தினமணி’ ஆசிரியர். நாத்தி கனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் சங்கராச்சாரியாரை மகா பெரியவாள் என்று சொல்லுவதில் பதுங்கி இருக்கும் தத்துவம் - சித்தாந்தம் என்ன வாம்? அடுத்த இதழில் பதில் வருமா?
வேறு எதுவும் சொல்ல முடியாத நிலையில், பாமரத்தனமாக எதையாவது சொல்லி அடித்துத் தள்ளுவோம் என்பது ஆரியத் தளுக்குத்தானே தவிர, அதில் அறிவுச் சரக்குக்குச் சற்றும் இடமில்லை.
ஆனாலும், இதுபோன்ற சந்தர்ப்பங் களிலாவது பார்ப்பனர்களின் பம்மாத்து களையும், பதுங்கிக் கிடந்து சந்தர்ப்பம் வரும்போது நச்சுத் தலையை நீட்டும் நடவடிக்கைகளையும் நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமது எதிர்ப்பார்ப்பு!
பக்தர்கள் யார்?
கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப் பேர் பக்தர்களாயிருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது - பணமுடை அதிகரித்துள்ளது.
(‘குமுதம்’, 22.2.2009).
இவ்வாறு கூறியிருப்பவர் யார் தெரியுமா? சொன்னால், யாரும் எளிதில் நம்பக் கூட மாட்டார்கள்.... காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் ‘திருவருள் மொழி’தான் இது.
வைத்திய நாதய்யர்களுக்கு அர்ப்பணம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------மின்சாரம் அவர்கள் 3-9-2016 ‘விடுதலை’ ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment