Search This Blog

Showing posts with label பார்ப்பனியம்-மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label பார்ப்பனியம்-மூடநம்பிக்கை. Show all posts

12.9.09

காஞ்சி மடம் ஒரு போலி மடம்!


ஹோலி (புனித) மடமல்ல; போலி மடம்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் இங்கிலீஷ் நாளேடு சென்னையில் வரத் தொடங்கி இன்னும் 20 மாதங்கள் முடியாத நிலையில் வேண்டாத வேலை ஒன்றில் ஈடுபட்டு உள்ளது. அந்நிறுவனத்தின் சர்ர்பில் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 168 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 450/. விலையைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. நூலின் மூலம் பார்ப்பனர்கள் விதைத்துள்ள விஷமம் பற்றிக் கவலைப்படுகிறோம்!

காஞ்சி மடம் எனும் தலைப்பிலான. இந்நூல், சங்கர மடத்தின் வந்த வழியைக் கூறுகிறதாம். பொது ஆண்டுக்கு முன் 482 ஆம் ஆண்டில் (கி.மு. 482) காஞ்சி மடம் உருவாக்கப்பட்டதாம். சுமார் 2500 ஆண்டுக் கால, மடத்தின் வரலாறைக் கூறுகிறதாம்.

இதைவிடப் பெரிய அயோக்கியத்தனம் வேறு ஏதாவது உண்டா? பொது ஆண்டு 788 இல் (கி.பி. 788) காலடியில் பிறந்த ஆர்யாம்பாளின் மகன் (ஆதி) சங்கரன் 34_ஆம் வயதில் செத்துப் போனான் (கி.பி. 820 இல்) என்பது இதுவரை எழுதப்பட்ட வரலாறுகளில் உள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் யாரை ஏமாற்ற நூல் போடுகிறது? எப்படிப்பட்ட பித்தலாட்டத்தை இந்நிறுவனம் செய்கிறது? இதன் வடநாட்டு முதலாளிகளுக்கு இது தெரியுமா? வடக்கே உள்ள 3 மடங்களிலும் தெற்கே உள்ள அதிகாரப் பூர்வமான சிருங்கேரி மடத்திலும் இதற்கான ஆதாரம் எதுவும் உண்டா என விசாரித்துப் பார்த்துப் பொத்தகம் போட்டார்களா?

யாரோ காமாந்தகாரப் புளுகன் கூறியதை நம்பி நூல் வெளியிடுவது என்றால்... யோக்கியப் பொறுப்பு வேண்டாமோ? காஞ்சி மடமே , நேற்று முளைத்தது. கும்பகோணம் மடம்தானே ஆதியில் இருந்த மடம்! காங்கிரஸ் கட்சி 1885 இல் தொடங்கி அதன் மாநாடுகள் சென்னையில் நடந்த போது அதில் கலந்துகொண்டது கும்பகோணம் சங்கர மடப் பிரதிநிதி என்றுதானே அக்கட்சியின் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது?

அப்படியிருக்க, இப்படி ஒரு புளுகை அச்சுப் போட்டு விற்க எப்படித் துணிவு வந்து விட்டது இந்த ஏட்டுக்கு? காஞ்சி மடமே, ஒரு போலி மடம்! அது ஒன்றும் (Holy) ஹோலி (புனித) மடம் அல்ல என்பதற்கு ஆதாரமே அதன் தலைவர் ஒரு கொலை வழக்கில் ஏ1 (அக்யூஸ்டு 1) குட்டித் தலை ஏ 14 அல்லது ஏ 15! இந்தப் போலி மடத்துக்கு இப்படி ஒரு விளம்பரமா? நாயைப் புலி எனலாமா?


************************************************

முதலைக்கதையும் முடவன் கதையும்

முடவன் தேனடையை எடுக்க, மர உச்சிக்கு ஏறிப் போனான் என்பதைப் போல, எட்டு வயதுப் பையன் வட இந்தியா முழுக்கக் கால்நடையாகச் சுற்றினான், வாதங்களில் வென்றான் அத்வைதத்தைப் பரப்பினான் என்று புளுகுகிறார்கள். அவன்தான் சங்கரன் என்கிறார்கள்.

16 வயதில் அவன் காலை முதலை கவ்விப் பிடித்துக் கொண்டதாம்! இழுத்துக் கொண்டு நீருக்குள் போய் ஆள் செத்ததும் விழுங்குவதுதான் முதலையின் பழக்கம். இங்கே அப்படியே இருந்து விட்டதாம் முதலை. பிள்ளையாண்டானின் ஆத்தாள் வரும்வரையும் காத்திருந்ததாம். வந்த பிறகு அவளிடம் பிள்ளையாண்டான் பேரம்பேசி சன்னியாசத்திற்குச் சம்மதம் வாங்கும் வரை முதலை ஒன்றும் செய்யாமல் காத்திருந்ததாம். சன்னியாசத்திற்கு அம்மா ஆர்யாம்பாள் அனுமதி தந்ததும் முதலை பிள்ளையாண்டானை விட்டு விட்டதாம். இந்தக் கதையை எந்த மடையனாவது நம்புவானா?

காஞ்சி சங்கரமடத்தில் மட்டுமல்ல எல்லா பார்ப்பனர்களும், சில மடத் தமிழர்களும் நம்புகிறார்களே! எப்படி?

-----------------------12-9-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

14.8.09

அரியும் சிவனும் ஒன்றா?



அரியும் சிவனும் ஒன்று



மதுரையில் விருபாக்சன் ஒரு பார்ப்பனன், தன் மனைவி சுபவிரதையுடன் இல்லறம் நடத்தி வந்தான். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை இல்லை. அந்தக் காலத்தில் மருத்துவர்களும் இல்லை, சாமியார்களும் இல்லை, குழந்தை வரம் தருவதற்கு! ஆகவே விரதங்கள் இருந்தனர். சிவனை நோக்கித் தவம் செய்தனர். கடைசியாக மனம் இரங்கி குழந்தைப் பேறு தந்தார் பரமசிவன். சுபவிரதைக்குப் பெண் குழந்தை பிறந்தது. கவுரி (சிகப்பி) என்ற பெயர் சூட்டிச் செல்லமாக வளர்த்தனர்.

கவுரிக்கு அய்ந்து வயது ஆகும்போதே கடவுள் பக்தியை ஊட்டி, கதைகள் சொல்லி நம்ப வைத்து வளர்த்தனர். பார்ப்பன விரு பாக்சன் பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள உதவும் பராசக்தியின் மந்திரத்தை மகளுக்கு உபதேசித்து வளர்த்து வந்தான். கவுரியும் மந்திரத்தை மறக்காமல் பூஜித்து வந்தாள்.

கவுரி பருவ மங்கையானாள். ஒரு நாள் ஒரு பார்ப்பனன் பிச்சை கேட்டு அவர்கள் வீட் டுக்கு வந்தான். பிச்சைக்காரனைப் பார்த்ததும் தன் மகளை அவன் தலையில் கட்டி விடலாம் என்று விருபாக்சன் கணக்குப் போட்டு அவனிடம் பேச்சு கொடுத்தான். பிச்சை எடுத்துச் சாப்பிடும் ஒருவனுக்குப் பெண் கொடுக்க வருகிறவனை, வேண்டாம் என்று யார்தான் ஒதுக்குவார்கள்? அவன் சரி என்று தலையை ஆட்டிவிட்டான். நல்ல சமயமடா இது, நழுவ விடுவாயோ என மனதுக்குள் சொல்லிக் கொண்டே அப்பார்ப்பனன் தாரைவார்த்து (தண்ணீர் தெளித்து) மகளை அவனிடம் ஒப்படைக்கத் துணிந்து காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டான்.

தெருவில் நடந்த இத்தனை விசயங்களும் கவுரியைப் பெற்ற தாய்க்கே தெரியாது. தாயின் கருத்து முக்கியமா என்ன? தாய் பையனைப் பார்த்தாள். மனம் திடுக் என்று ஆகிவிட்டது. பையன் நன்னா பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொண்டு நின்றான். இவர்களோ பட்டை அடிக்கும் சிவபக்தர்கள். ஒத்து வருமோ? இருந்தாலும் என்ன செய்வது, தன் ஆம்படையான் தாரை வார்த்துக் கொடுத்து விட்டாரே?

வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், சீர், செனத்தி, வரதட்சணை எல்லாம் கொடுத்து விவாகத்தை நடத்தி இருவரையும் பிள்ளையாண்டான் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

புக்ககம் போனபோது, தம்மாத்து மருமகளைப் பார்த்ததும் அவர்களுக்குப் பொக்கென்று ஆகிவிட்டது. நல்ல வைஷ்ண வப் பையன் சிவகோத்திரக் கன்னிகையைக் கரம்பிடித்து வருகிறானே என்ற வருத்தம் தலைதூக்க இருவரையும் வரவேற்றனர். கவுரியும் நாமம் போடும் நபர்கள் வீட்டில் வாக்கப்பட்டிருக்கிறோமே என்கிற பயம் கொஞ்சங்கூட இல்லாமல் மந்திரமாவது நீறு சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள், கவுரியை மட்டும் வீட்டில் விட்டுப் பூட்டிக் கொண்டு எல்லாரும் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்திற்குப் போய்விட்டனர். பூட்டிய வீட்டுக்குள் இருந்து கொண்டு சன்னல் வழியே பராக்கு பார்த்துக் கொண்டிருந்த கவுரியின் கண்களில் திருவோடு ஏந்தித் தெருவோடு போன கிழப் பார்ப்பனப் பிச்சைக்காரன் பட்டுவிட்டான். அவனும் வீட்டுக்கு வந்தான். அவனை வரவேற்று உட்கார வைத்தாள் கவுரி.

மகிழ்ச்சியடைந்த பிச்சைக்காரக் கிழவன் சாப்பிடச் சோறு கேட்டான். கவுரி கையைப் பிசைந்து கொண்டே வீட்டில் உக்கிராண அறையும் சமையலறையும் பூட்டி இருப் பதைச் சொல்லித் தன்னிடம் சாவி இல்லை யென்று சொன்னாள். அசராத பிச்சைக்காரன் அவளிடம் சாவியே தேவையில்லை, நீ போய்க் கையை வை, பூட்டு திறந்து கொள்ளும் என்றான்.
முன்பு ஒரு முறை வேதாரண்யத்தில் பூட்டிக் கிடந்த கோயிலைத் திறக்க திருநாவுக்கரசர் ஒன்பது பாட்டு பாடியும் திறக்காமல் இருந்த பூட்டு, பார்ப்பன சம்பந்தன் ஒரு பாட்டு பாடிய உடனேயே திறந்து கொண்டதை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளலாம். கவுரி பூட்டில் கையை வைத்ததும் அது திறந்து கொண்டது. உடனே சமைத்து அவனுக்குச் சோறு போட்டாள்.

உணவு உண்டதும், என்ன ஆச்சரியம்? கிழப்பார்ப்பான் அழகிய வாலிபனாக உருமாறிவிட்டான். என்னடா, இது வம்பாகப் போய்விட்டதே என்று கவுரி செய்வது அறி யாது பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தபோது கல்யாணத்திற்குப் போனவர்கள் உள்ளே வந்து விட்டனர். அவர்களைக் கண்டவுடன் வாலிபன் ஒரு குழந்தையாக மாறிவிட்டான்.
குழந்தையைப் பார்த்த அவர்களுக்குத் திக் என்றாகிவிட்டது. ரிஷி எவனாவது வீட்டுக்கு வந்து, ஏடா கூடமாக நடந்து, ரிஷிப் பிண்டம் ராத்தங்காது என்கிற மாதிரி குழந்தை வந்து விட்டதோ என்று ஏதேதோ கற்பனை செய்து, குழந்தை ஏது என்று கவுரியைக் கேட்டார்கள். வானுலகத்தில் இருந்து சிவதூதன் வந்து குழந்தையைக் கொடுத்துக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு வெளியே போயிருக்கிறான் என்று பொய் சொன்னாள் கவுரி! கடவுள் பக்தர்கள் சமயத்திற்குத் தக்கமாதிரிப் பொய்களைக் கூறுவது பக்திக்கு அடையாளம் ஆயிற்றே!
ஆனாலும் கவுரியின் மாமியார்க்காரி ஏற்றுக் கொள்ளவில்லை. சிவனையே நினைத்து அவன்மீது பக்தியாக, சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு எலும்பு கடிக்கும் சிவனைக் கும்பிட்டுக் கொண்டு, வைஷ்ணவத்திற்கே அபச்சாரம் செய்யும் நீ என் ஆத்துக்கு வேண்டாம், வெளியே போ என்று துரத்தி விட்டார்கள். கட்டியவன் ஒன்றுமே சொல்லாமல் இருக்கவே, கவுரிக்கு வெறுத்துப் போய் விட்டது. பிச்சைக்காரப் பார்ப்பானால் தனக்கு நேர்ந்த நிலையை எண்ணி வருந்துவதா, ஏதோ ஒரு குழந்தையைச் சுமக்க வேண்டியதாகி விட்டதே என நொந்து கொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள். அந்த நேரத்தில் தந்தை சொல்லிக் கொடுத்த பராசக்தி மந்திரத்தை உச்சரித்தாள். அவ்வளவுதான்.
கையிலிருந்த குழந்தையைக் காணோம். நான்குபக்கமும் குழந்தையைத் தேடியவள், தலையைத் தூக்கி மேலே பார்த்தாள். அங்கே, வானில் மாட்டின் மேல் இரண்டு பேர் ஏறிக் கொண்டு அந்தரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். பரமசிவன் தன் பார்யாளுடன் காட்சி தந்தார். கவுரி மந்திரத்தைத் தொடர்ந்து உச்சாடனம் செய்து கொண்டே இருந்தாள். மனம் மகிழ்ந்த பராசக்தியான பார்வதி தன் கணவனிடம் சொன்னாள். அவனும் கவுரியைப் பார்வதி மாதிரி உரு மாற்றி மாட்டில் ஏற்றிக் கொண்டு மறைந்து போனான் - என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது!

அரியைத் தாழ்த்தி அரனை உயர்த்திக் கதை எழுதிப் பரப்பிவிட்டு, அரியும் சிவனும் ஒன்று, இதை அறியாதவன் வாயில் மண்ணு என்று பசப்பிக் கொண்டு இருக்கும் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது?


------------------செங்கோ அவர்கள் "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

12.8.09

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோர் சிந்தனைக்கு.....


கையாலாகாத கண்ணபிரான்

ஒருத்திக்குப் பிறந்து இன்னொருத்தியிடம் வளர்ந்தவன் ஆயர் பாடிக் கண்ணன், விஷ்ணுவின் தசாவதாரங்களில் கிருஷ்ணாவதாரமும் ஒன்று.

வசுதேவனை அப்பனாக வரித்து, தேவகி வயிற்றில் அவதாரம் எடுத்த இந்தக் குறும்புக்காரக் கடவுளுக்குக் கோபிகைகள் குலவுவதற்கு வாய்த்த குலக்கொழுந்துகள். தாலாட்டிப் பாலூட்டிய பாவைகளிடமே மடியிலும், அதற்கடியிலும் கைவைத்தக் கில்லாடிக் கள்ளன் கிருஷ்ணன். பிறந்து விழுந்ததுமே, பிறப்பித்தவர்களை மிரளவைத்த தனித்துவம் இந்தப் பெருமானுக்கே உரியது. தொப்புழ் கொடியாட பிறப்பித்தவர்களைப் பார்த்துப் பிறந்ததும். கிருஷ்ணன் சொன்னானாம்.

"உங்கள் முற்பிறப்பு இப்படி இப்படி ! இனியும் நான் இங்கிருக்க முடியாது; என்னைக் கொண்டுபோய் நந்தகோபரிடம் விட்டு விடுங்கள்"என்று பயமுறுத்தினான் கிருஷ்ணன். பிரசவித்தக் களைப்போடு தேவகியும் அதற்குச் சம்மதித்தாள். விருப்பப்படி அவனை அனுப்பிவைத்தாள்.

கண்ணனை வளர்த்தவள் நந்தகோபரின் யசோதை. கோகுலத்தை ஆண்டுவந்த மன்னன் நந்தகோபரின் வீட்டில் சீரோடும் பேரோடும் வளர்ந்தான் கண்ணன். சின்னஞ்சிறு வயதிலேயே பூதன், சகடாசுரன், திருணாவர்த்தன் முதலிய பெரும் பெரும் புள்ளிகளை உயிர்"பொலி"போட்டவன் இந்தக் கோகுலப்பாலன்.

ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா முதலான பத்தாயிரத்து நூற்று எட்டுப் பெண்டாட்டிகள் இவனுக்கு.
தனக்குப் புத்திரபாக்கியம் இல்லையென்று ருக்மணியுடன் தவஞ்செய்திருக்கிறான் கிருஷ்ண பரமாத்மா. கோகுலத்தில் ஒரு முறை கண்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக் கவிழ்ந்து கிடந்தபோது, விரஜை, கங்கை ஆகியவர்கள் அங்கு வந்தனர்.

வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மோகம் துளிர்விட்டது! கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர் இருவரும். இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி ஏசி முடித்தாள். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி ! விடுவிடென அங்கிருந்து மறைந்தாள். அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.

பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கண்ணபெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான். இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து. தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான் கண்ணன். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள்; என்னால் எதுவும் நடக்காது என்று போய்விட்டான் பரமாத்மா.

பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்!


---------------ஆதாரம் - அபிதான சிந்தாமணி பக்கம் 447-450

எங்கெங்கும் ஈரக்கோலம் ! மகிழ்ச்சி ஓலம் ! கங்கையின் பிரவாகத்தில் வறட்சி வற்றி, செழிப்பு சிதறியதாம்.

கிருஷ்ணனுக்கு ஆராரோ பாடி அமுதூட்டி வளர்த்த கோபிகையர்களை, ஆற்று ஈரத்தில் அவிழ்த்த கோலத்தில் அடித்துப் பதற வைத்த கதை பிரசித்தமான ஒன்று. இப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவின் கோடானு கோடி கும்மாளக் கூத்தை மெய்யுருகப் பரவலடித்து வரும் கண்ணதாசர்களுக்கு ஒரு சில கேள்விகள்:

கேள்விகள் :

1. பிறந்த குழந்தை பேசுகிறது; பெற்றவர்களை விட்டு மற்றவர்களை நாடத் துடிக்கிறது. பெற்றுப் போட்டவர்களும் , உறவுஅற்றுப்போகட்டும் என்று விட்டுவிடுவது அறிவிற்குப்
பொருந்துகிறதா? அறியாமைக்கு விருந்திடுகிறதா? கடவுளைப்பெற்றால் , அவ்வளவுக்கா மனம் இறுகிப்போகும்?

2. வளர்த்த தாதிகளான "கோபிகை"க் கூட்டத்தை கணிகைக் கூட்டமாக்கி லீலைகள் புரிய தேர்ந்தெடுப்பதும், புடவைகள் திருடிகலங்க அடிப்பதுதான் கடவுள் தன்மை என்றால், பஸ்ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் காலரைத் தூக்கிச்சீட்டி அடித்து அலைந்து திரியும் ரோடு ரோமியோக்களுக்குக்கோவில் கட்டிக் கும்பிட நீங்கள் தயார் தானா?
கிருஷ்ணனுக்கும், இந்த இளசுகளுக்கும் பேதமேது?

3. பால்குடி மறக்காத வேளையிலேயே "ஆள்-அடி" வீரங்காட்டி,கண்ட கண்டவனையெல்லாம் கண்ட துண்டமாக்கிய கண்ணபிரான், "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" என்று ஒரு டூயட் பாடி தனது பதிவிரதையைப் பக்குவப்படுத்தாமல் விட்டுவிட்டு
பிரம்மனையே பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டானே! எப்படி?

கூழுக்கு அழுத குசேலனை "குபேர" குசேலனாக்கியவனின் திறமையும், தெம்பும் இங்கு பட்டுப் போனதுக்கும் கெட்டு மாண்டதற்கும் என்ன காரணம் ?

4. பத்தாயிரத்தெட்டு பாவைகளிடம் "முத்தே பூங்கொத்தே" என்று பித்தாகித் திரிந்தவனின் பக்தர்களே! உங்கள் பக்தியின் லட்சணத்தில் காமநெடி அடிப்பதற்குச் சப்பைக் கட்டு எது? ஏது?

5. சொந்தத்திற்குப் பிள்ளை இல்லையே என்று "தபசு" பண்ணிய பரம ஆத்மாவிடம் "பிள்ளைவரம்" கேட்கும் "மலட்டுப் பூச்சிகளே" கையாலாகாத கடவுளா கருக்குடத்தில் பயிர்
விளைவிப்பான்?


----------------நூல்:- "கடவுளர் கதைகள்"

20.7.09

சந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்





நிலவில் மனிதன் முதன்முதலில் இறங்கி நடந்த நாளான இன்று (20.7.1969) நிலவைப்பற்றிய
சில சேதிகள்

கட்டுக் கதைகள்:

1. பழங்காலத்தில் சந்திரனை கோள வடிவமாக கருதினர். புளுடார்ச் போன்ற சித்தாந்தவாதிகள் கூட அதன் மேற்பரப்பில் கடல், ஆறு போன்றவைகளின் நிழல்கள் காணப்படுவதாக நம்பினர்.

2. பவுர்ணமி வெளிச்சத்தில் படுத்துக் கிடந்தால் ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் பவுர்ணமி காலத்தில் அறுவடை நடந்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று நம்பினார்கள். அதே வேளை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றினால் கெடுதல்கள் ஏற்படும் என்றும் நம்பினர்.

3. உலகத்தில் உள்ள நீர், நிலம், நெருப்பு, காற்று போன்றவைகளுக்கும், அழிக்க முடியாத நட்சத்திரங்களுக்குமிடையே சந்திரன் தான் எல்லைக் கோடு என்று கருதினார் அரிஸ்டாட்டில். அதன் பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட இயற்பியல் மாற்றத்தால் தனித்தனியாகப் பிரிந்தது என்றும் அவர் கூறினார்.

4. சந்திரனில் சாங்கி என்ற சீனப் பெண் வாழ்ந்ததாக ஒரு கதை உள்ளது.அவளும், அவளுடைய கணவனும் என்றும் அழியாத மனிதர்களாக இருந்ததாகவும், பின்னர் அவர்களின் கெட்ட நடத்தைகளால் அவர்களால் மரணமடையும் மனிதர்களாக சபிக்கப்பட்டார்கள் என்றும் ஒரு கதை சீனாவில் இன்றும் உலவுகிறது. இதன் அடிப்படையில்தான் அந்தப் பெண் பெயரான சாங்கி என்பதையே சீன செயற்கைகோள் ஆராய்ச்சி மய்யத்திற்கு சூட்டி உள்ளனர்.

உண்மைகள்:

1. சூரியனும், சந்திரனும் பெரிய கோள வடிவிலான ராட்சத பாறைகள் என்றும் சூரியனின் ஒளியை உள்வாங்கி சந்திரன் ஒளிருவதாக மேற்கத்திய நாடுகளில் முதல் முதலாக தனது கருத்தை பதிவு செய்தார் அனாக்சோகிராச்.

2. 1609 இல் தன்னுடைய தொலை நோக்கியின் மூலம் முதல் முறையாக சந்திரனை ஆய்வு செய்தார்.அதில் சந்திரனில் மலைகள் மற்றும் சிறு சிறு பள்ளங்கள் காணப்படுவதாகவும் கூறினார். 17 ஆம் நூற்றாண்டில் ரிச்சியோலி மற்றும் கிரிமால்டி ஆகியோர் சந்திரனின் வரைபடைத்தை வெளி-யிட்டு அங்கு காணப்படும் பள்ளங்களுக்கு பெயர்களும் சூட்டினர். அந்தப் பெயர்கள் இன்னும் அழியாமல் உள்ளன.

3. பல தொடர் முயற்சிகளுக்குப் பிறகு பூமியில் உள்ள சந்திரனை தொலை நோக்கி மூலம் கண்டு அங்-குள்ள சந்திரனின் உண்மையான தோற்றத்தை 1645 இல் வரைபடமாகத் தந்தார் மைக்கேல் புளோரென்ட். அவருடைய வரை படம்தான் சந்திரனை பற்றிய முதல் உண்மையான வரைபடம். எரிமலைகள், மலைகள், பள்-ளங்கள் ஆகியவற்றை வரைபடத்தில் குறிப்பிட்டார்.

4. சந்திரனில் காற்று இல்லை என்பதை 1753 இல் குரோட்டைன் ஜெசூட் கண்டுபிடித்தார். 1824 இல் சந்திரனில் மலைகள் ஏற்பட்டதற்கான காரணங்களையும் அதனால் எரி நட்சத்திரக் கற்கள் தோன்றும் விதத்தையும் பிரான்ஸ் வொன் என்ற வானியல் நிபுணர் கண்டுபிடித்து தெரிவித்தார்.

சந்திரனில் முதன் முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கோலின்ஸ் ஆகியோர் கையொப்பமிட்டுக் கொடுத்த தங்களின் புகைப்படங்களை இந்தியாவின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் தொலைத்து விட்டது.


**********************************************************************************************



40 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் சந்திரனில், மனித குலத்தின் மகத்தான சாதனையாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் காலடி பதித்த நாள் (20.7.1969).


---------------நன்றி "விடுதலை" 20-7-2009

12.6.09

இந்துமத அடிப்படையில் ஒரு அரசு விழாவின் தொடக்கம் நடைபெறலாமா?




(அரசு விழாவில் இந்து மத பூஜை
மெட்ரோ ரயில் திட்டத்தில் நடந்த கூத்து

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை உயர் ரயில் பாதை அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடந்தது. கட்டுமானப் பணிகளை இந்து மதாச்சாரப்படி பூமி பூஜை என்பதைப் பார்ப்பனப் புரோகிதர்கள் செய்து தொடங்கி வைத்தனர். மதச்சார்பின்மையும், இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 51-ஏ-இன்படிக்கான அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பதில் அரசு அதிகாரிகள் காட்டும் அக்கறையும் இதன்மூலம் விளங்குகிறது(!).)



பூமி பூஜையா?

சென்னை - மெட்ரோரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை உயர் ரயில் பாதை அமைக்கும் பணியின் தொடக்க விழா கடந்த புதனன்று (10 ஆம் தேதி) நடைபெற்றது. இந்து மதச் சடங்குகளுடன் பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. ஏடுகளில் படத்துடன் செய்திகள் விரிவாக வெளிவந்துள்ளன.

சிறந்த திட்டம்தான் - சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது.

மக்கள் பெருக்கம் ஒரு பக்கம் - வாகனங்களின் பெருக்கம் இன்னொரு பக்கம்; இந்த நிலையில் மெட்ரோரயில் திட்டம் என்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அதெல்லாம் சரிதான். இந்தத் திட்டத்தின் தொடக்க விழா என்பது இந்துமத ஆச்சாரப்படி நடத்தப்பட்டது சட்டப்படி சரியானதுதானா?

எந்தமதச் சடங்குகளும் இடம்பெறக்கூடாது என்பது தான் மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு. அப்படி இருக்கும்போது இந்து மதச்சடங்குகளின் அடிப்படையில் புரோகிதப் பார்ப்பனர்களை அழைத்து நடத்தப்பட்டது எப்படி?


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே இந்தியா என்பது மதச்சார்பற்ற (செக்குலர்) நாடு என்று எடுத்த எடுப்பிலேயே சுவர் எழுத்தாக முகத்தில் அடித்ததுபோல வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது - இந்த நிலையில் இந்துமத அடிப்படையில் ஒரு அரசு விழாவின் தொடக்கம் நடைபெறலாமா?

இது ஒரு பக்கம் இருக்க - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு என்ன சொல்கிறது? அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியில் உட்பிரிவு (எச்) விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம், ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது அடிப்படைக் கடமையாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்ப்பனரை அழைத்து சடங்குகளை ஒரு அரசு விழாவில் அனுமதிப்பது விஞ்ஞான மனப்பான்மைக்கு ஏற்றதுதானா?

ரயிலைக் கண்டுபிடித்தது மந்திரங்களா? சாஸ்திரங்களா? இதற்கு முன்பேகூட அரசு விழாக்கள் பூமி பூஜையோடு நடந்தனவே - அவற்றால் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது பலன் ஏற்பட்டது உண்டா?

இப்படி பூமி பூஜை போடுவதன் மூலம் விபத்துகள் வராமல் தடுக்கப்படும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? ஆண்டு ஒன்றுக்கு எத்தனை இரயில் விபத்துகள் நடக்கின்றன - அவை எல்லாம் பார்ப்பனரை அழைத்து பூமி பூஜை நடத்தப்பட்டவைதானே?
அப்படி நடத்தப்பட்டதால் இப்பொழுதும் நடத்தப்படுகிறது என்பது சமாதானம் ஆகாது!

அறிவியல் கண்டுபிடித்தது மின்சாரம் - ஆன்மிகம் கண்டுபிடித்தது பிரசாதம் என்று தமிழ்நாட்டின் சுவர் எழுத்துக்களில் எல்லாம் கருஞ்சட்டை தோழர்கள் எழுதி வைப்பதுண்டு.
படித்தவர்களே இப்படி மூடத்தனமான கொள்கையில் ஈடுபடலாமா? அதிகாரிகள் தம் சொந்த வீட்டில் நடக்கும் கல்யாணம், கருமாதி இத்தியாதி இத்தியாதி சங்கதிகளில் தங்கள் மூடத்தனத்தை தம் சொந்த செலவில் அரங்கேற்றிக் கொள்ளட்டும் - படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லை என்று காட்டிக் கொள்ளட்டும்.
ஆனால், ஒரு அரசு விழாவில், அரசு செலவில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படலாமா?

சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் - சட்டம் மீறப் படவே கூடாது - ஆனால், மத விவகாரங்களில் மட்டும் விதிவிலக்கு என்று புதிதாக அரசு அதிகாரிகள் தனியே சட்டம் ஒன்றே எழுதி வைத்துள்ளனரா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பிறந்த தமிழ்நாட்டில் இருக்கிற அதிகாரிகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டாமா?

அரசு அலுவலகங்களில் இந்து மதத்தவர்கள் மட்டும்தான் பணிபுரிகிறார்களா? மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள், மதங்களில் நம்பிக்கை இல்லாதவர்களின் நிலை என்ன?
பொதுமக்களின் வரிப்பணத்தில்தானே திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அந்தப் பொதுமக்கள் என்றால், பார்ப்பனிய இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தானா?
தேவையில்லாத மத மாச்சரியங்களை உண்டு பண்ணும் இத்தகைய அதிகாரிகள்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டியது அவசியமாகும்
. வேலியே பயிரை மேய்வதை எந்த காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது!


---------------------"விடுதலை"தலையங்கம் 12-6-2009

7.6.09

கலவரத்திற்குக் காரணமாகும் கடவுளின் திருவிழாக்கள்


பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவோமென பார்ப்பன பா.ஜ.க. இந்தியாவில் அதாவது அவர்களது பாரதத்தில் ராமராஜ்ஜியம் கொண்டு வருவோமென கொக் கரித்து, பாபர் மசூதியை இடித்தும், ஆயிரக் கணக்கான முசுலிம்களை பலியிட்டும் இந்து மதத்தை வளர்க்க நினைக்கும் இந்து மதவெறிக் கும்பல் ராமர் கோவில் கட்டுவது இருக்கட்டும்; இருக்கும் இந்துக் கோவில்களில் நடக்கும் அருகதை என்னவென்று அவர்களால் கூட்டம் போட்டு பேச முடியுமா?

இந்து மதம் என்பது வருண, ஜாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் சிறைச்சாலை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நாட்டுப்புறங்களில் இருக்கும் கோவில்களில் தலித்துக்களுக்கு இன்றும் அனுமதியில்லை என்பது; எங்கெல்லாம் தலித் மக்கள் அந்த உரிமையை கோருகிறார்களோ அங்கெல்லாம் ராமனின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்? சூத்திரன் சம்புகன் நேரடியாக ஆண்டவனை வணங்கி தவம் இருந்தான் என்பதற்காக, அதாவது ஒரு சூத்திரன் தெய்வத்தை தொழவேண்டு மென்றால் பார்ப்பன பூசாரிகள் மூலம்தான் செய்யவேண்டும் என்பதற்காக அந்த சம்புகனை வெட்டிக் கொன்றவன் இந்த அயோத்தி ராமன். இது இராமாயணத்தில் பலரது கவனத்திற்கும் வராத செய்தி.
அந்த பார்ப்பனிய வெறிபிடித்த ராமனின் வாரிசுகள் இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றும் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கொன்று வருகிறார்கள்
. ஆம், இந்து மதம் சமீபத்தில் தென்தமிழகத்தில் நடத்தியிருக்கும் நரபலியை உங்கள் கவனத்திற் காகக் கொண்டு வருகிறோம். ராம ராஜ்ஜியம் குறித்து இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்! திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும் பான்மையாக உள்ள மேல் ஜாதியினர் ஜாதித்தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.

கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப் பட்ட ஜாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் ஜாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், ஜாதி வெறியர்கள் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு ஜாதிய மேலாதிக்கத்தை ஏவி ஜாதி வெறியர்கள் ஒடுக்கி வருகின்றனர். செந்தட்டி ஊரிலிருக்கும் முப் பிடாதி அம்மன் கோவிலில் மூன்று ஜாதி மக்களும் சேர்ந்துதான் கோவில் விழாவை நடத்துவது வழக்கம். கடந்த 2003இல் குடமுழுக்கு நடைபெற்றபொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் தீர்த்தம் எடுத்துக்கொண்டு உள்ளே வருவதை மேல் ஜாதியினர் தடுத்துள்ளனர்.
கடந்த வருடம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான சுடலை மாடசாமி கோயில் திருவிழாவின் போது பாடப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை என்று கூறி, மின் இணைப்பை துண்டித்து ஆதிக்க ஜாதியினர் ரவுடித்தனம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2008 இல் முப்பிடாதி அம்மன் கொடை விழாவை மேல் ஜாதியினர் நடத்தும்முன்,
கணக்கு வழக்குகளை முறைப்படி நேர் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் கோரிக்கை வைத்தனர். பிறகு, இரு தரப்பினரும் தனித்தனியே விழா நடத்திக்கொள்ளலாம் என அனைவரும் ஒப்புதல் அளித்து, மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கைச்சாத்து(ஒப்பந்தம்) இடப்பட்டுள்ளது.

ஆதிக்க ஜாதியினர் கொடைவிழாவை நடத்தி விட்ட நிலையில், மார்ச் 10ஆம் தேதி தமது கொடைவிழாவை நடத்தத் திட்டமிட்டு தாழ்த்தப்பட்டோர் மனுக் கொடுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய அவர்கள் முற்பட்டபோது, இதனை எதிர்த்து நடைபாதைகளில் முட்கிளைகளை வெட்டிப் போட்டு, ஜாதிவெறியர்கள் இடையூறு செய்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் ஒருவரின் வளர்ப்பு நாயை வெட்டிக் கொன்று குரூரத்தனத்தைக் காட்டினர். மேலும், தாழ்த்தப்பட்டோரை சமூக விலக்கம் செய்து ஊரில் உள்ள கடைகளில் அவர்களுக்குப் பலசரக்கு விற்பதை நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், மேல் ஜாதிப் பெண் ஒருவர் வந்தபோது, புதர்க்காட்டில் மலம் கழித்துக் கெண்டிருந்த தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எழுந்து நிற்கவில்லை என்ற அற்பகார ணத்தை முன்வைத்து இக்குரூரக் கொலைகளை செய்துள்ளனர். படுகொலைத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்குச் சென்று மிரட்டியுள்ளனர்.
சங்கரன்கோவிலில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கருப்பசாமி என்பவரை வழி மறித்து தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடிவிட்ட தால் அவருக்கு பின்னால் வந்த ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். ஈஸ்வரனின் கழுத்தை வெட்டித் துண்டாக்கி தலையை அறுத்தெடுத்து, இரண்டு துண்டு களாகப் பிளந்துள்ளனர். பரமசிவத்தின் கை வேறு கால் வேறாக வெட்டித் துண்டாக்கி வீசியெறிந்துள்ளனர்.

இந்த வெறிச்செயலுக்கு பழிவாங்கும் உள் நோக்கம் மட்டும் காரணமல்ல. இனி தாழ்த்தப் பட்டோர் யாராவது சம உரிமை கேட்டால் ஆதிக்க ஜாதி குரூரமாகப் பழிதீர்க்கும் எனும் பீதியில் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் அஞ்சி நடுங்க வேண்டும் எனும் ஜாதிவெறிதான் வெட்டுப்பட்டு இறந்தவர்களையும் கண்டம் துண்டமாய்க் கூறுபோட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்டோரைக் கொன்றொழிப்பது மட்டுமன்றி, பிகார் ஜாதிவெறி நிலப்பிரபுக்களைப் போல அந்த வட்டாரமெங்கும் ஆதிக்க ஜாதிவெறி பயங்கரத்தை நிலைநாட்டும் நோக்கத் தோடுதான் இப்படி கண்டம்துண்டமாக வெட் டிக் கொலை செய்துள்ளனர். கோவில்கொடை தகராறு மட்டுமே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறி இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க ஜாதிவெறியை மறைக்க பல்வேறு தரப்பும் முயலுகின்றன.

தம்மை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அங்கீகரிக்கக் கோரி அரசிடம் கெஞ்சும் ஆதிக்க ஜாதியினர், சம உரிமை கோரும் தாழ்த்தப்பட்டோரை ஆண்ட ஜாதித்திமிரில் இவ்வாறு வெட்டிக் கொல்வதை அந்த கடவுள் வந்து காப்பாற்றுவானா? என்பதே நம்முன் தொக்கி நிற்கும் கேள்வி.

செந்தட்டி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல கிராமங்களிலும் கோவில் திருவிழா என்ற போலியான மூடபழக்க வழக்கத்தினால் மனிதம் மரத்து போயுள்ளது.

இதேபோல, கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம், செம்பாளூர் கிராமத்திலும்,மதுரை கொட்டக்குடி,மற்றும் ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் நடைபெற்ற மோதல்களையும் இந்த சம்பவத்திற்கு உதாரணம் சொல்லலாம்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஜாதி ரீதியாக பிரித்துப் பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும் செய்யவேண்டும்.

களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட் டாயம் இல்லை. ஆதிக்க ஜாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும்.

------------------வீர்காத்- "விடுதலை" 6-5-2009

6.6.09

நந்தனின் பக்திக் கதை பார்ப்பனர்களின் சதியே!



தில்லையில் ஒரு மோசடி


ஆதனூரிலே புலையர் குலத்திலே தோன்றி வெட்டியான் தொழிலைச் செய்து வந்த நந்தனின் பக்திக் கதை பார்ப்பனர்களின் சதிச் செயலையே காட்டுகின்றது. கோவிலுக்கு உள்ளே சென்று கும்பிட முடியாத சாதியாதலால் வாயிலிலேயே நின்று சிவனைக் கும்பிடும் வழக்கத்தையுடைய நந்தன், சிதம்பரம் நடராசப் பெருமானை அருகில் சென்று தரிசிக்க எண்ணினாராம். சிவன் அவருடைய கனவில் தோன்றி நெருப்பில் மூழ்கிச் சாதி நீங்கி நம் சன்னிதானத்தைச் சேர்வாய் என்று கூறினாராம். தில்லைவாழ் அந்தணர்கள் கோபுரவாயிலுக்கு முன்னே வளர்த்திருந்த அக்கினிக் குழியிலே புகுந்து அந்தண வடிவத்தோடு வெளிவந்தாராம். ஈசன் திருப்பாதத்தை அடைந்து விட்டாராம். கோயிலுக்கு உள்ளே சென்ற நந்தன் வெளியே வரவில்லையாம். சிவனோடு அய்க்கியமாகி முக்தி பெற்றுவிட்டதாகக் கதை கூறியுள்ளனர். முக்தி பெற்றாரா? இல்லை, நெருப்பிலே மூழ்கடித்து முக்தி பெற்றதாகக் கதை சொன்னார்களா? தாழ்த்தப்பட்ட ஜாதி யைச் சேர்ந்தவனுக்குக் கிடைத்த தண்டனையாக உள்ளது என்பதே பெரியாரின் கருத்து.

தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் கோயிலுக்கு உள்ளே போக வேண்டுமானால் உயர்ந்த ஜாதியாக ஆன பிறகே போக முடியும் என்ற வருணாசிரம தர்மத்தைப் பார்ப்பனர்கள் இக்கதை மூலம் நிலைநாட்டியுள்ளதாகப் பெரியார் கருதுகிறார்.



-----------------"விடுதலை"5-6-2009

சிவன் ஒரு காமாந்தக்காரன்





ஆதிபகவன் என்று தொடங்கும் அந்தக் கடவுள் வாழ்த்துப்பாடல் கொஞ்சம் நகைச்சுவை தோன்றக் கூறப்பட்டுள்ளது. பார்வதி தன்னிடம் கொண்ட ஊடலைத் தணிக்கச் சிவன், பார்வதியின் காலில் வீழ்ந்து வணங்கிய போது, சிவன் மட்டுமன்றி அவன் தலை யிலே இருந்த பிறைச் சந்திரனும், கங்கையும் வணங்கியதை எண்ணிப் பார்வதி பெருமிதம் அடை கிறாள். அத்தகைய பெருமிதம் கொண்ட உமாதேவியை வணங்குவதாகப் பாடல் அமைந் துள்ளது.

சிவனின் தலையில் உள்ள பிறைச்சந்திரன் பார்வதியின் நெற்றிக்குப் பகையாம். நாகப் பாம்பு பார்வதியின் அல்குலுக்குப் பகையாம். இந்தப் பகையுடையவை வணங்குவதிலோ, தன் கணவன் சிவன் வணங்குவதிலோ பார்வதிக்குப் பெருமகிழ்ச்சி இல்லையாம். ஆனால் சிவனின் சடாமுடியில் தங்கியுள்ள கங்கை பார்வதியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியதை எண்ணிப் பார்வதி பெருமகிழ்ச்சி கொண்டாளாம். ஏனென்றால் எந்தப் பெண்ணும் தனது சக்களத்தி தன் காலில் வீழ்ந்து வணங்கினால் பெருமகிழ்ச்சி கொள்ளத்தானே செய்வாள். அதுபோலப் பார்வதியும் தன் சக்களத்தியான கங்கை தன் காலில் வீழ்ந்து வணங்கியதை எண்ணி மகிழ்கிறாள். சிவனின் தலை பார்வதியின் பாதங்களில் வீழ்ந்து கிடந்த செய்தியைப் புலவர் சிவப்பிரகாசர் நல்ல கற்பனை நயந்தோன்ற விளக்கியுள்ளார் என் பதில் புலவர்கள் வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் பகுத்தறிவுவாதி மகிழ்ச்சியா கொள்வான். ஒரு கடவுளை இந்தக்கதிக்கு ஆளாக்கிவிட்டு அக்கடவுளை நம்மையும் வணங்கச் சொல்கிறானே என்று எண்ணி அவனது முட்டாள்தனத்தை நினைத்துப் பரிதாபப்படுவான்.
ஒரு முழுமுதற்கடவுள் என்று கூறப் பெறும் சிவன் தன் மனைவியின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனம் என்று கருதுகிறார் பெரியார். பார்வதிக்குக் கங்கை சக்களத்தி என்று கற்பனை செய்திருப்பதைப் புலவர்கள் வேண்டுமானால் பாராட்டுவார்களே தவிர பெரியார் பாராட்டு வாரா! இத்தகைய இலக்கியங்கள் தமிழுக்குத் தேவையில்லை என்பதுதான் பெரியாரின் இலக்கியச் சிந்தனையாகும்.


-------------------நன்றி:-"விடுதலை"5-6-2009

4.6.09

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை எப்படி நம்புவதாம்?




இந்தியா, மதச்சார்பற்ற நாடாம்!

15 நாள்களுக்கு முன்பு ஆந்திரப்பிரதேச முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி, நேற்று (புதன் கிழமை) தான் அலுவலகப் பொறுப்பை ஏற்றுத் தம் அலுவலகத்தில் நுழைந்தார். காரணம், அந்த நாள் தான் நிர்ஜல ஏகாதசி நாளாம்.

ஜோசியர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நேரமான காலை 7.15 மணிக்கு அவர் பொறுப் பேற்றார். அந்த நேரத்தில் தான் அவருக்குச் சாதகமான இடங்களில் நட்சத்திரங்கள் இருந்தனவாம்.

இதற்கும் முன்னதாகச் சர்வமதப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டனவாம். திருப்பதி வெங்கடாசலபதிக்குப் பூஜையாம். கிறித்துவப் பாதிரி ஒருவர் ஜெபம் செய்தாராம். (கத் தோலிக அல்லது புரொடஸ்டன்ட் அல்லது அதில் இருக்கும் 100க்கும்மேற்பட்ட எந்தப் பிரிவு என விவரம் இல்லை) முசுலிம் முல்லா ஒருவர் நமாஸ் செய்தாராம். இவ்வளவும் செய்த காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லையில்லாது 5 ஆண்டுக்காலத்தை ஓட்டவேண்டும் என்பதற்காகவாம். போதாக் குறைக்குப் பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலுக்கும் போனாராம்.

கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று செயலகத்திற்கு வந்து அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அன்றைய நாளில் ஜோசியப்படி 8 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். பூஜை புனஸ்காரச் சடங்குகளுடன் அமளி துமளியுடன் அலுவல்களைச் செய்தனராம்.

காட்டிலாகா அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி மாலை 5.30-க்குப் பூஜை செய்த பின் அலுவல் அறைக்குள் நுழைந்தாராம். சிறிய நீர்ப்பாசன அமைச்சர் சுனிதா லட்சுமண்ரெட்டி மாலை 4.41 க்கு நல்ல நேரத்தில் நுழைந்தாராம்.

இந்தக் கூத்தில், முதலமைச்சர் மருத்துவம் படித்த டாக்டர் படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பது போல நடந்து கொள்கிறார். மேலும் இவர் கிறித்துவர். இன்னும் ஜாதிப்பட்டத்தை விடாமலும் இந்து மத மூடத்தனமான ஜோசியத்தை நம்பியும் எல்லா மதச் சடங்குகளையும் செய்து அனை வரையும் ஏமாற்றுகிறார். அனைத்து மதக் கடவுள்களையும் கூட கேலிக்கு ஆளாக் குகிறார்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை எப்படி நம்புவதாம்?

------------------"விடுதலை"4-6-2009

2.6.09

உலகிலே உள்ள எல்லா பாவங்களுக்கும் காரணகர்த்தர்களே பார்ப்பனர்கள்தான்!



சொன்னவர்கள் நாத்திகர்கள் அல்லர்!

கேள்வி: இங்கு சைலக்கை மிஞ்சக்கூடிய பார்ப்பன வட்டிக் கடைக்காரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

--------------- கிருஷ்ண அய்யங்கார், சென்னை

பதில்: இந்த உலகிலே உள்ள எல்லா பாவங்களுக்கும் காரணகர்த்தர்களே பார்ப்பனர்கள்தான்! அவர்கள்தான் பாபத்தை உற்பத்தி செய்து, உருவம் அமைத்து, பாதுகாத்து வருபவர்கள். அவர்கள் கடவுளையே பாபியாக் கினார்கள்! வட்டி வாங்குவது அவர்களுக்கு மிகவும் சாமான்யமான பாவம்.

-------------------------------- பிலிம் இந்தியா - பாபுராவ் படேல்

**************************************************************************************

சபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும் மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத்திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமுமே கடவுள் இருக்கிறான். அவர்களுடன் வெயிலிலும் மழையிலும் உழைத்து அவருடைய ஆடையில் தூசி படிந்திருப்பதைப் பார். ஆகவே நீயுங்கூட உன் காசாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதைவிடச் சுலபமான மார்க்கம் கிடையாது.

------------------------- கவி. தாகூர்

*************************************************************************************

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த
பெருங் கோயில் பல
சாதிமதச் சாக்கடை யாய்ச்
சண்டாளர் இருப்பிடமாய்
நீதி அறம் அழித்து வரல்
நின்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத் தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

-------------------------------- திரு.வி.க.

*****************************************************************************************

நம்முடைய தற்கால சமூக அமைப்பு நியாயமற்றதாயிருக்கிறது. நம்முடைய சமூகத்தில் பணக்காரர்களாயிருப்பவர்கள் அதிக பணத்தைப் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றனர். இதன் பயனாய் ஏழைகள் அதிக வறுமைப்பட்டு வாடுகின்றனர். இந்தச் சமூகக் கொடுமை அடியோடு மாறி விட வேண்டும்.

இந்த ஸ்தலத்தில் (திருப்பதியில்) வீற்றிருக்கும் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளும் ஒரு ஜமீன்தாரேயாவர். நூற்றுக்கணக்கான ஏழை மக்களின் இரத்தத்தை இவர் உறிஞ்சி வருகிறார். நேர்த்திக் கடன் செய்பவர்களும், இந்தியாவின் பல பாகங்களிலிருந்து யாத்ரிகர்களும், ஆயிரக்கணக்காகத் திருப்பதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் வருஷா வருஷம் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு முட்டாள்தனமாகப் பதினாறு லட்ச ரூபாய்கள் வீதம் செலவு செய்கின்றனர். எனக்கு இத்தகைய கடவுள் மீது சிறிதேனும் நம்பிக்கையே இல்லை. நீங்கள் தோழர் வெங்கடேஸ்வரர்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், அவருடைய ஆட்சியின் கீழ் சரியான நியாயம் வழங்கப் படுகிறதா? அவர்மீது தான் நம்பிக்கை வைப்பதற்கு மறுதலிக்கிறேன்.

இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினி கிடக்கிறார்கள். முதலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய கொள்கைப் படி; சுயராஜ்யம் என்றால் அபேத வாதந்தான்.

------------------------------ என்.ஜி. ரங்கா

******************************************************************************************

திரவுபதியின் மானத்தைக் காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண்டாகிறோம். கவிகள் அவனைப் பற்றிக் காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவ தாரம் என்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில், ஒரு திரவுபதியின் மானத்தைக் காப்பாற்ற ஓடிவந்த கண்ணன், இன்றைய தினம் உடுக்க ஒரு முழம் கந்தலுமின்றித் தவிக்கின்ற இலட்சக்கணக்கான ஏழைப் பெண்களைக் காப்பாற்ற ஏன் முன் வரவில்லை? தெய்வமே குரு டாகி விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.

---------------------------------- காண்டேகர்

****************************************************************************************

இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும், அந்தந்த உருவங்களுக்கேற்ற முறையில் கதைகளையும் கற்பனை பண்ணியிருக்கிறார்கள், அன்றைய தமிழர்கள். ஒரு நாமம், ஒரு உருவம் ஒன்றறுமில்லாத இறைவன், இப்படித் தான் ஆயிரம் திருநாமங்களுடனும், இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகியிருக்கிறான் - மனிதனது கற்பனையிலே.

இப்படிக் கற்பனை செய்ததையெல்லாம் கல்லிலும், செம்பிலும், வடித்தெடுத்திருக்கிறார்கள் நம் நாட்டுச் சிற்பிகள். அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே இன்று நமது தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன.

-------------------------- கல்கியில் - தொ.மு. பாஸ்கரத்தொண்டமான்


**************************************************************************************


---------------------"விடுதலை" ஞாயிறுமலர் 30-5-2009

1.6.09

மதமும் ஜாதியும் மக்களை என்ன பாடுபடுத்துகின்றன?


எதற்காக இந்தக் கல்வி?

கேரளா ஒரு விசித்திரமான மாநிலம். படித்தவர் அதிகம். பைத்தியம் பிடித்தவர்களும் கூடுதல். தற்கொலை செய்து கொண்டு மாள்பவர்களும் இங்கேதான் அதிகம்.

எர்ணாகுளம் அருகே உள்ள அலுவாநகரில் இந்தியாவின் மூன்று பெரிய மதங்களைச் சேர்ந்தவர்களும் முகாமிட்டு தத்தம் கடைச் சரக்கின் பெருமைகளைப் போதித்துக் கொண்டு வருகின்றனர்.

தூய ஜோசப் (கிறித்துவ) மடாலயம் கிறித்துவப் பாதிரியார்களை உருவாக்கி வருகிறது. 16 முதல் 22 வரை வயதுள்ள இளைஞர்களைச் சேர்த்து மதக் கல்வி கற்றுத் தருகிறார்களாம்! 400 பேர் படித்து வருகிறார்கள். மொத்தம் 10 ஆண்டுகள் பயிற்சியாம். முடித்தால் பாதிரியாம். மதம் பரப்பும் பணி. கர்த்தருக்கும் ஏசுவுக்கும் ஊழியம் செய்யும் தொண்டு! ஆனால் கற்பவர்களின் மனோநிலை எப்படி என்பதை அந்தோணி எனும் பாதிரியார் கூறுகிறார் - தூய்மையான தொண்டு உள்ளத்தோடு முன்பெல்லாம் வந்தார்கள்; இப்போது வருபவர்கள் உலகச் சுகங்களை எல்லாம் அனுபவிக்கத் துடிக்கிறார்கள் என்கிறார்! இதற்கு யார் காரணம்?

முன் ஏர் செல்வது போல பின் ஏரும் செல்கிறதோ? போப் எத்தகைய ஆடம்பர வாழ்க்கையை எல்லாவிதச் சுகபோக பாக்கியங்களோடும் அனுபவிக்கிறார்! அதைப் பார்க்கும் இளம் பாதிரிக்கு ஆசை வருவதில் என்ன தவறு?

இதே ஊரில், தந்த்ர வித்யாபீடம் ஒன்று இருக்கிறது. செரியாத்து நரசிம்மசாமி கோயிலுக்குப் பக்கத்தில் பெரியாறு நதிக்கரையில் உள்ளது. மேலே எதுவும் அணியாமல் இடையில் மட்டும் வேட்டி கட்டிய மாணவர்கள் சிலபேர் பயின்று வருகின்றனர். இவர்களுக்குச் சொல்லித் தரப்படுவது தந்திர சாஸ்திரம், வேதம், ஜோசியம், சமக்கிருதம், வாஸ்து சாஸ்திரம், புராணங்கள் ஆகியவற்றுடன் இங்கிலீசும்! 16 முதல் 23 வயதுடைய 45 மாணவர்கள் பயில்கின்றனர். இதனைத் தொடங்கியவர் ஆர்.எஸ்.எஸ்.காரரான மதவ்ஜி என்பவர். அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது பார்த்தீர்களா? 1972 இல் வாய்மொழிப்பாடமாகச் சொல்லிக் கொடுத்தவர்கள் இப்போது புத்தகங்கள் அச்சடித்துச் சொல்லிக் கொடுக்கிறாக்ள். இதையே 7 ஆண்டுகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

படித்து முடித்து சமக்கிருத வாத்தியாராகவோ, கோயில் அர்ச்சகராகவோ போகலாம்! நம்பூதிரியும் அந்தோணிப்பாதிரியார் போலவே, தம் மாணவர்களைப் பற்றி நல்லபடியாகக் கூற வில்லை.

பின் எதற்காகச் சொல்லித் தருகிறார்கள்?

மூன்றாம் மதமான முசுலிம்கள் விட்டுவிடுவார்களா? ஆறு ஆண்டுக் காலப் பயிற்சி தருகிறார்கள். 18 முதல் 23 வயது உள்ள மாணவர்கள் 100 பேர் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனாலும் 40 பேர் சேர்ந்து படித்த வகுப்பில் வெறும் 11 பேர் மட்டுமே இறுதியில் படிப்பை முடித்தனர் என்றால் எவ்வளவு ஆர்வம் அங்கு படிப்பதற்கு! ஒரு வகுப்பில் 45 பேர் சேர்ந்து தொடங்கி 5 பேர் மட்டுமே முடித்து வெளியேறினர்.

என்றால் - மதக் கல்விக்கு எவ்வளவு மவுசு என்பது புரியவில்லையா?

மதக்கல்வி சோறு போடாது என்பது ஒரு புறம் இருக்க, வேறு வகைகளிலும் கூடப் பயன்படாதது என்பதை நிறையப் பேர் உணர்ந்து விட்டார்கள்.

பெருமதங்கள் எனும் பேய்பிடியா திருக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------

பதில் வருமா?

மதமும் ஜாதியும் மக்களை என்ன பாடுபடுத்துகின்றன? இரு மதங்களுக்குள் சண்டை - சிலுவைப் போர் என்றும் ஜிஹாத் என்றும் பார்க்கிறோம். யூத இசுலாமியப் போர்! இந்து முசுலிம் சண்டைகள்.

ஒரு மதத்திற்குள்ளேயே சண்டைகள்! சைவ- வைணவப் போர், கத்தோலிக்க - புரொடஸ்டென்ட் போர், சியா, சன்னி போர், இப்படியே நீண்டு கொண்டே போகும்.

மதத்திற்குள்ளே அடிதடி, நான் உயர்த்தி, நீ தாழ்ச்சி என்ற பேதம்! ஜாதியால், வருவது. புண்ணிய பாரத பூமியில் உள்ள மதங்களுக்கு மட்டும் பிரத்யேகமான சண்டைகள். இந்து, சீக்கிய மதத்தில் உள்ள சண்டைகள்.

இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குப் போனாலும் - பிழைக்கப் போன இடத்திலும் போட்டுக் கொள்ளும் சண்டைகள்- முற்றி, மோதி, கொலை அளவுக்கு வந்துவிட்டது, வியன்னாவில்! தாழ்ந்த ஜாதி குருவும் அவரது உபதேசங்களும் அவற்றால் ஈர்க்கப்படும் நம்பிக்கை வாதிகளும், அதற்குக் கூடும் கூட்டமும், அதனால் ஏற்படும் பெருமையும் அதைச் சகித்துக் கொள்ள முடியாத உயர் ஜாதித் திமிரும் குருவைச் சுடும்அளவுக்குப் போய்விட்டதே, மதங்கள் தேவையா?

நல்வழிப்படுத்த, ஒழுக்கத்தைப் போதிக்க, உயர் எண்ணங்களை வளர்க்க, ஒரு வழிகாட்டல், ஒரு மதம் தேவை என்று உளறும் அரைவேக்காட்டு மதவாதச் சக்திகள் இதற்குக் கூறும் பதில் என்ன?

கூறுகெட்ட மதவெறியர்கள் 6 பேர் செய்த காரியத்தைக் கண்டிப்பதற்கு இங்கே இந்தியாவில் கலவரம், தீ வைப்பு, கொலை, கொள்ளை என்று நடத்தினால் ஒழுக்கம் வளருமா? மதம் வளரலாம், மனிதம் வளருமா?


பதில் வருமா?

------------------30-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

இந்தியா - இந்து மதச் சார்பான நாடா?






சென்னை வானூர்தி நிலையம் விரிவாக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இரண்டாம் ஓடுபாதை அமைக்கப்படவிருக்கிறது. இதற்காகத் தமிழக அரசு 128 ஏக்கர் நிலத்தை ஒப் படைத்திருக்கிறது. இந்தப் பாதையில் அடையாறு ஓடுகிறது. ஆற்றுப் பகுதியில் 462 மீட்டர் நீளமும்ள 200 மீட்டர் அகலமும் உள்ள பாலம் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் உருவாகும். சென்னை அய்அய்டி அளித்துள்ள தொழில்நுட்பக் கருத்தின் அடிப்படையில் அமைக்கப்படும்.

இந்தியாவிலேயே முதலாவதாக இந்த வகைப் பாலமும் ஓடுதளமும் அமைகிறது. இதற்கான தொடக்கப் பணிகள் நடந்தன.

வானூர்தி நிலைய இயக்குநர் நடராஜன் தொடங்கி வைத்தாராம். பூமி பூஜை நடந்ததாம். பார்ப்பனர் ஒருவர் இந்து மத வழக்கப்படி கர்ப்பூரம் கொளுத்தி ஆரத்தி காட்டி, ஆராதனை செய்து பணிகளைத் தொடங்கினாராம். நடராஜன் பயபக்தியுடன் கர்ப்பூரத் தட்டைப் பெற்றுக் கொள்வதை ஏடுகள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

இந்தியா, இந்து மதச் சார்பான நாடு அல்ல. மாறாக, மதச்சார்பற்ற நாடு இந்த நிலையில், இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் விழாவில் இந்துமதச் சடங்குகள் செய்திட எப் படி அனுமதிக்கலாம்? பூமிபூஜை செய்து, பிறகு தான் கட்டுமானப் பணி தொடங்கப்பட வேண் டும் என அய்அய்டி கொடுத்த தொழில் நுட்பக் கருத்தில் உள்ளதா?

இந்திய அரசமைப்புச் சட்டப்படி தவறான, குற்றமான செய்கைகளில் உயரதிகாரிகளாக இருப் பவர்கள் இறங்கலாமா?


================"விடுதலை"30-5-2009

26.5.09

இராணுவத்தில் மூடநம்பிக்கை மண்டிப் படர அனுமதிக்கலாமா?

எலுமிச்சைப் பழம் ஏன்?

இந்திய போர்ப்படையின் 43 ஆம் பிரிவுக்குப் புதிதாக 16 எம்பிடி அர்ஜூன் "டாங்க்" களை (கவசப்போர் வண்டி) ஒப்படைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தியவிலேயே தயாரிக் கப்பட்ட கவசப் போர் வண்டி என்பது பெயரைப் பார்த்தாலே விளங்கும்.

இந்த போர் வண்டிகளை ஒப்படைக்கும் விழாவிலும் இந்தியத் தனம் அல்லது இந்துத் தனம் தெரிந்தது. வண்டிகள் இயங்க உதவும் சக்கரங்களுக்குக் கீழே இன்னொரு கருவி பொருத்தப்பட்டு அதன்பின் அவை இயக்கப்பட்டு நகர்ந்தன. புதிய கருவி, வண்டிகள் நகர்ந்தபோது நசுங்கி விட்டன. அவை என்ன?

எலுமிச்சைப் பழங்கள்! ஒவ்வொரு சக்கரத்தின் கீழும் வைக்கப்பட்டு நசுக்கப் பட்டதன் மூலம் எதிரிகளை விரட்டுகிறார்களாம்! வண்டியில் உள்ள பீரங்கிகள் பின் எதற்காக வைக்கப்பட்டன? எலுமிச்சைப் பழங்களே போதுமே!

இராணுவத்தில் மூடநம்பிக்கை மண்டிப் படர அனுமதிக்கலாமா? இராணுவ அமைச்சர் நம்பிக்கை அற்றவராயிற்றே!


இதைக் கவனிப்பாரா?


------------------நன்றி: "விடுதலை" 26-5-2009

25.5.09

இதற்குப் பெயர்தான் புரோகிதச் சுரண்டல்

அக்னி தீர்த்தம்

வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை 4 மணிமுதல் அக்னித் தீர்த்தத்தில் தீர்த்தமாடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனராம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது; பக்தர்கள் தீர்த்தமாடுகின்றனர்; மகாளய அமாவாசை என்று கூறி, அன்று ஏகப்பட்ட அமர்க்களங்கள் நடக்கின்றன.

பெயரக்கேற்ப அது அக்னி (நெருப்பு)த் தீர்த்தமாகவிருந்தால் பக்தர்கள் அதில் நீராட முடியுமா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஒரு குட்டையில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குளித்தால், அத னால் ஏற்படும் சுகாதாரக் கேடு எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இத்தகைய தீர்த்தங்களில் மக்கள் குளித்து எழுந்த பின் அந்தத் தண்ணீரை பரிசோதனை செய்து பார்த்ததுண்டா? மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தக் கடமையைச் செய்ய வேண்டாமா? நல்லாட்சி (welfare State) என்ற சொல்லாட்சி என்பது அப்பொழுதுதானே பொருந்தும்.

இந்திரா காந்தி என்ற அம்மையார் சென்னைப் பல்கலைக்கழகத்திலே மயிலாப்பூர் கோயிலைப்பற்றிய ஒரு ஆய்வின்போது, அந்தக் கோயில் மூல விக்கரகத்தில் அபிஷேகம் செய்யப் படும் தண்ணீர் உள்ளிட்ட கலவையை எடுத்துப் பரிசோதனைக்கு கிண்டி கிங் நிறுவனத்திற்கு (King Institute) அனுப்பியபோது அதில் பலவகைப்பட்ட நோய்க்கிருமிகள் இருந் தன என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டதே - இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் பக்தர்களாக இருந்தாலும் - அவர்களும் மனிதர்கள் தானே - அவர்களைக் காப் பாற்ற முன்வரவேண்டாமா?

அமாவாசையன்று தீர்த்தமாடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்களாமே - யார் அந்த முன்னோர்கள்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மோட்சத்திலா, நரகத்திலா அல்லது மறு உயிர்களாகவா?

உயிர் பிரிந்த பிறகு மறுபிறவி எடுத்து விடுகிறதாகச் சொல்கிறார்களே - அப்படியிருக்கும்போது இந்தத் தர்ப்பணம் எதற்கு? யாருக்குப் போய்ச் சேர்கிறது?

கபிலர் கூறியதுபோல அருந்திய உண்டியால் ஆர்பசி கழிந்தது? என்ற வினாவுக்கு விடையில்லை.

அதுவும் சிரார்த்தம் கொடுப்பது என்றால் எதைக் கொடுப்பது? இறந்தவர் விரும்பும் பொருளையா? அல்லது புரோகிதர் விரும்பும் பொருளையா?

நாட்டில் நடப்பது என்ன? புரோகிதர் விரும்பும் பொருளைத்தானே பொறுக்கி எடுத்துக் கொடுக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் புரோகிதச் சுரண்டல் என்பது.

அய்.எம்.எப். சுரண்டல், புதிய பொருளாதாரச் சுரண்டலைப்பற்றி எல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு விமர்சிப்பவர்கள் கூட, சலனமின்றி நடைபெறும் இந்தப் புரோகிதச் சுரண்டல்பற்றி கண்டு கொள்வதில்லையே!

------------- மயிலாடன் அவர்கள் 25-5-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

வதந்திகள் முடிவதில்லை....

ஆனந்த விகடன் (8.10.2008) வார ஏட்டில் காலம் (Column) எழுதும் ஒருவர் வதந்திகளைப் பற்றி எழுதி, வழக்கமாக எழுதும் வகையில் மீன், கருவாடு பற்றியும் எழுதியுள்ளார். பல வதந்திகளைப் பற்றி எழுதியவர், நிறைய வதந்திகளை வசதியாக மறந்து விட்டார். மறைத்து விட்டார்.

அவருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவதற்காகச் சில வதந்திகளை நினைவு படுத்துகிறோம்.

மகாபாரதத்தில் யானை இறந்ததை வதந்தியாக தருமனே பரப்பியது முதல் வதந்தியா? அதற்கு முன்பே பூப்புக்கு வராத குந்தி குழந்தை பெற்றது வதந்தியல்லவா?

தொடர்ந்து அய்ந்து குழந்தை பெற்று விட்டுக் கடவுள் கொடுத்தாகச் சொன்னது வதந்தியல்லவா?

சூரியனைச் சக்கரத்தால் நிறுத்திப் பொழுதை நீட்டித்துச் சண்டை போட்டனர் என்பது வதந்தியல்லவா?

மரத்திலிருந்து கீழே அடித்து வீழ்த்தப்பட்ட நெல்லிக்கணி மீண்டும் மேலே சென்று ஒட்டிக் கொண்டது வதந்தியல்லவா?

அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீது ஆசைப்பட்டதைத் திரவுபதி எடுத்துச் சொன்னதும் கீழே விழுந்த பழம் மேலே, போனது என்று இருப்பது வதந்தி அல்லவா? (நியூட்டன் விதியை எழுதி விளக்க வேண்டமா?)

தொப்புள் இல்லாத சீதா (அயோனிஜா தானே) லட்சுமியின் அவதாரம் என்பது வதந்தி அல்லவா?

ஏர் உழும்போது கலப்பையில் மாட்டியது குழந்தை சீதா என்பது வதந்தியல்லவா?

ஓர் ஆள், குடிசையோடு அடி மண்ணையும் பெயர்த்து எடுத்துத் தூக்கிக் கொண்டு போனான் என்பது வதந்தி அல்லவா?

ஒரு குரங்கு மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தது என்பது வதந்தியல்லவா?

30 கி.மீ. தூரத்தை இந்தப் பக்கம் ஒரு காலும் அந்தப் பக்கம் ஒரு காலும் வைத்து குரங்கு நின்றது என்பது வதந்தியல்லவா?

கோட்டை மதில் உயரமாக இருந்ததால் நிலவு அதைத் தாண்டிப்போக முடியாமல் தேங்கி விட்டது என்றது வதந்தியல்லவா?

ராமன் விட்ட அம்பு இராவணனின் மார்பில் தையல் மிசின் போலத் துளைத்துச் சல்லடைக் கண்களாக்கி சீதையின் நினைப்பு எங்கே, எங்கே என்று தேடியது வதந்தி அல்லவா?

இராவணனின் மார்பைத் துளைத்து அலுத்துப் போன அம்பு கூலில் குளித்துக் கழுவிக் கொண்டு மீண்டும் ராமனின் அம்பறாத் தூளியில் வந்து புகுந்து கொண்டது வதந்தி அல்லவா?

உடலின் அழுக்கைத் திரட்டிப் பொம்மை செய்து உயிராக்கிக் காவலுக்கு வைத்தாள் பார்வதி என்பது வதந்தியல்லவா?

அழுக்குப் பொம்மையின் தலைவெட்டப் பட்டு அதில் யானைத் தலை ஒட்டப்பட்டது என்பது வதந்தியல்லவா?

யானை புணர்வதைப் பார்த்துக் கொண்டே புணர்ந்ததால் பார்வதியின் பிள்ளைக்கு யானைத் தலையுடன் மகன் பிறந்தான் என்றது வதந்தியல்லவா?

சனி (பகவானின்)ப் பார்வை பட்டதால் குழந்தையின் தலை டக் என்று காணாமல் போய்விட்டது, கிருஷ்ணன் யானைத் தலையைக் கொண்டு வந்து ஒட்டவைத்தான் என்பது வதந்தியல்லவா?

ஆற்றில் விட்ட ஆணின் விந்து, ஆறு முகமாகப் பிறந்தது என்பது வதந்தியல்லவா?

தாமரைப் பூவில் சரசுவதி நிற்கிறாள் என்பது வதந்தியல்லவா?

பாம்பில் பரந்தாமன் படுத்துத் தூங்குகிறான் என்பது வதந்தியல்லவா?

மயில்மேறி ஏறிப் பறக்கிறான் முருகன் என்பது வதந்தியல்லவா?

எலிமேல் ஏறித் தொந்திக் கணபதி வலம் வருகிறான் என்பது வதந்தியல்லவா?

பிரம்மாவின் நாக்கில் அவனது மகளும் மனைவியுமான சரசுவதி வசிக்கிறாள் என்பது வதந்தியல்லவா?

யானையின் காலைப் பிடித்த முதலை, விஷ்ணு வரும் வரை காத்திருந்து சுதர்சனச் சக்கரத்தால் அரியப்பட்டது என்பது வதந்தியல்லவா?

ஆதிசங்கரனின் காலைக் கடித்த முதலை அவன் அம்மா ஆர்யாம்பா சந்நியாசத்துக்கு அனுமதி தரும்வரை காலைத் துண்டாக்காமல் விட்டு வைத்தது என்பது வதந்தியல்லவா?

அவிநாசியில் சிறுவனை விழுங்கிய முதலை மூன்று ஆண்டுகள் கழித்து சட்டை, துணிமணியுடன் அப்படியே கக்கியது என்பது வதந்தியல்லவா?

எரிந்த எலும்புத் துண்டுகள் பூம்பாவையாக உருக்கொண்டது என்பது வதந்தியல்லவா?

ஆண் பனை மரங்கள் பதிகம் பாடியதும் பெண் பனை மரங்களாகின என்பது வதந்தி அல்லவா?

நரி குதிரையாகி அணிவகுத்ததும், இரவில் நரியாகி ஊளையிட்டதும் வதந்தியல்லவா?

விருத்தாசலம் ஆற்றில் போட்ட பொன் கட்டி திருவாரூரில் குளத்தில் எடுக்கப்பட்டது என்பது வதந்தியல்லவா?

நெருப்பில் போடப்பட்ட பனை ஏடுகள் எரியாமல் இருந்தன என்பது வதந்தியல்லவா?

ஆற்றில் வீசப்பட்ட ஏடுகள் எதிர் நீச்சல் அடித்தன என்பது வதந்தியல்லவா?

வெறும் கையில் வாட்ச் வரவழைத்தான் புட்டபர்த்தி சாய்பாபா என்பது வதந்தியல்லவா?

ரமண ரிஷி சாகும்போது அலாரம் கடிகாரம் நின்று விட்டது என்பது வதந்தியல்லவா?


நாஞ்சில் நாடன் எவ்வளவோ எழுதலாம் - எழுதும் போது நிதானம் வேண்டும். கூடவே அறிவும் வேண்டும்.

-------------------------சார்வாகன் அவர்கள் "உண்மை' அக்டோபர் 16-31 2008 இதழில் எழுதியது

23.5.09

இந்து மதக் கடவுள்களிடையே என்னென்ன கதைகள், அப்பா! கஷ்டகாலம்!

பரமசிவன் அரிசிக் கடை

மார்கழி மாதத்தில் அஷ்டமி நாளன்று தம் சம்சாரம் மீனாட்சியுடன் சொக்கநாதன் மதுரை நகரில் தெருத் தெருவாகப் போவாராம். சோமசுந்தரம் என்றும் கூறப்படும் இந்நபர் மதுரை வெளிவீதிகளில் மட்டும் நடப்பாராம். இவரின் கால்களைச் சுற்றிலும் நெற்கதிர்கள் கட்டப்பட்டிருக்குமாம். நடக்கும்போது சில நெல்மணிகள் சிந்துமாம். மக்களுக்குப் பரமசிவன் படியளப்பதாகக் கதை விடுகிறார்கள்.

சொக்கநாதனின் அரிசிக்கடையில் பழைய படி வைத்தோ அல்லது தற்போதைய கிலோ வைத்தோ அரிசி வழங்கப்படுவதில்லை! இந்த லட்சணத்தில் படி அளக்கும் பரமசிவன் பட்டம் எப்படிப் பொருந்தும்?



நீராகாரம்தான் உணவு

கல்லினுள் தேரைக்கும் படியளக்கும் பரமசிவனே, பஞ்சத்தால் வெறும் நீராகாரம் மட்டுமே உறிஞ்சி வருகிறாராம்! மதுரை, திருவேங்கடம், ஏடகநாதசாமி கோயிலில் உள்ள சட்டைநாதருக்கு நீராகாரம் மட்டுமே படைக்கப்படுகிறதாம்! சட்டைநாதர் சீர்காழியில் செத்துப் பிணமானார். ஆனால், இந்தக் கோயிலில் இருப்பது ஜீவ சமாதியாம். இங்குதான் நீராகாராம் தருகிறார்கள்.



மருமகன் - மாமியார் கதை

மருமகனுக்கு மாமியார் வீட்டில் பெருத்த மரியாதை கிடைக்கும் என்பார்கள். அதே அளவுக்குக் கைதிகளுக்குச் சாத்துபடி நிறைய கிடைக்கும் என்பதால் சிறைச்சாலையை மாமியார் வீடு என்பார்கள்.

ஆனால், மாமியாருக்காக மருமகன் பட்ட பெரிய சிரமங்களைக் கேள்விப் பட்டது உண்டா?

மீனாட்சியைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த சோமசுந்தரம் ஏழுகடல் நீரையும் ஒரு குளத்தில் சேர்த்துவரச் செய்தாராம். அந்த உப்புநீரில் குளிப்பதற்குத் தன் எதிர்கால மாமியாரை அழைத்து வருமாறு வருங்கால மனைவியான மீனாட்சியிடம் கூறினாராம். மகளும் போய், அம்மாவிடம் கூறினா ளாம். தன் மருமகன் தன்மீது கொண்ட கரிசனம் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டதாம் அம்மையாருக்கு.

உப்புநீர்க் குளியலுக்கு உவகை யுடன் வந்தவளிடம் பண்டாரம் ஒன்று சொல்லியதாம் - கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு குளிக்க வேண்டும் - மகனின் கையைப் பிடித்துக் கொண்டும் குளிக்கலாம் - இரண்டும் இல்லை என்றால் பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு மாடும் மனுஷியும் ஒன்றாகக் குளிக்க வேண்டும் - என்று கூறியதாம்.

மீனாட்சியின் தாய் தடாதகை கணவனை இழந்தவள்.மகனும் கிடையாது; மகள் மட்டுமே! மகளுக்குத்தான் இந்து மதத்தில் மண்ணளவு மரியாதையும் கூடக் கிடையாதே! மாட்டின் வால்தான் கதி என்று கவலைப்பட்டதை மகள் மீனாட்சி கண்டு தன் எதிர்காலக் கணவனிடம் கூறினாளாம்.

பரமசிவன், மீனாட்சியின் அப்பா, மலையத்துவஜப் பாண்டியனை, சிவ லோகத்திலிருந்து எழுப்பிப் பூலோகம் வரச் செய்தாராம். எல்லாரும் 7 கடல் உப்பு நீரில் குளித்தனராம். பிறகு, மலையத்துவஜப் பாண்டியனுடன் அவன் மனைவி காஞ்சன மாலையும் கரம்கோத்து மேல் உலகம் போய்ச் சேர்ந்தனராம்.


மாமியாரைக் குளிப்பாட்டி, மேலே அனுப்பிவிட்டார் மருமகன் பரமசிவன்.

***

சிவன் கோயிலில் காவல் நாய்

மனிதர்கள் வீட்டைக் காவல் காத்திட நாய் வளர்ப்பது போலவே, பரமசிவன் தன் வீட்டுக் (கோயில்) காவலுக்கு நாய் வளர்க்கிறார். பைரவன் என்ற பெயரில் நாய்தான் சிவன் கோயிலைக் காவல் காக்கிறது. கோயிலில் வடகிழக்குத் திசையில் நாய்க்கு இடம். சங்கிலியால் கட்டப்படாமல் இருக்கும்.

மதுரையில் சொக்கநாதன் கோயி லின் காவல் நாய் மட்டும், ஆவணி மூல வீதியில் இருக்கிறது.

வைணவக் கோயில்களை, மற்ற மற்ற முருகன், பிள்ளையார் கோயில் களில் காவல்நாய்கள் இல்லையே, ஏன்? அந்தந்தக் கடவுள்களே காவல் காக்கின்றனவா? அப்படியானால், காவல் காக்கும் சக்தி பரமசிவனுக்கு கம்மியா?

****





இரு பிறப்பாளன் முருகன்

இரு பிறப்பாளர் என்றால் (துவிஜா) பார்ப்பன, சத்திரிய, வைசியர் என்று தானே மனுநூல் கூறுகிறது! குறப்பெண் ஒருத்தியையும் மீனவப்பெண் ஒருத்தியையும் கட்டிக்கொண்ட முருகன் எப்படி துவிஜா ஆகமுடியும்? என்கிற கேள்விகிளம்புகிறதா?

துவிஜா என்றால் இரண்டுமுறை பிறப்பவன். அப்படியானால் முருகனும் இரண்டு முறை பிறந்தவன்தான்! தெரிந்துகொள்ளுங்கள் புராணத்தை.

மதுரையை ஆண்ட மலையத்துவஜப் பாண்டியனுக்கும், காஞ்சன மாலைக்கும் பிறந்த மீனாட்சிக்கு மூன்று முலைகள். ரவிக்கை தைப்பதிலிருந்து திருமணம் செய்வதுவரை பிரச்சினை ஆயிற்றே என்று தம்பதிகள் கைபிசைந்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். கடவுள் கனவில் தோன்றி, அவளைக் கட்டிக் கொள்ளப்போகும் கணவனின் முன்னால் அவள் நிற்கும் போது மூன்றாவது மறைந்துபோகும் என்று ஆறுதல் கூறினானாம்.

அதுபோலவே, சொக்கநாதன், சோமசுந்தரன் எனப்படும் பரமசிவம் மீனாட்சியின் முன்வரவே, மூன்றாவது காணாமல் போய்விட்டதாம். மீனாட்சியை சொக்கனுக்கே கட்டி வைத்தனர்.
மீனாட்சிக்கும் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்ததாம்! அதற்கான காரியங்களைச் செய்யாமல், சோமசுந்தரம் தன் இளைய மகனை நினைத்தானாம். முருகனும் வந்தானாம். தன் மனைவியின் ஆசையைத் தன் மகனிடம் சொன்னானாம். அவனும் அப்படியே, மீனாட்சியின் கருவில் குந்திக் கொண்டானாம்.

ஒருநாள் மகப்பேறு நடந்தது. முருகன் மீண்டும் யோனி வழி ஜனித்து வெளிவந்தான். மாமன் மாயவனாம் திருமாலும், மாமி திருமகளாம் லட்சுமியும் கருடன் மேலேறிப் பறந்துவந்து, மருகனைப் பார்த்து, மகிழ்ந்து, உக்கிரபாண்டியன் எனப் பேர் வைத்தார்களாம்.

உக்கிரபாண்டியன்தான் முருகன். முருகனாக வந்ததும் உக்கிரபாண்டியன். உக்கிரபாண்டியனாக வந்ததும் முருகன். இப்போது சொல்லுங்கள் - முருகன் இருபிறப்பாளன்தானே!

****

அரவாணிப் பிள்ளையார்!

தம்பி கதை இதுவென்றால், அண்ணன் கதை அரவாணி கதை! மதுரையில் சொக்கநாதனின் அறைக்கு எதிரில் உள்ள தூணில் பாவாடை கட்டிய பிள்ளையார் உருவம் செதுக்கப் பட்டுள்ளது.

ஆனைக்கும் கோவணம் கட்டுவது என்பார்கள் - கடினமான காரியமாம்! இது ஆனை முகத்தானுக்குப் பாவாடை கட்டிய கதை! ஆனை முகத்தான், அரவாணியாகிவிட்ட கதை போலும்!

பாவாடைப் பிள்ளையார் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்து மதக் கடவுள்களிடையே என்னென்ன கதைகள், அப்பா! கஷ்டகாலம்!


------------------செங்கோ அவர்கள் 23-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியது.

22.5.09

நட்சத்திரங்கள் - கிரகங்கள் மனிதர்களை ஆட்சி செய்கின்றனவா?




மனிதர்களை ஆதிக்கம் செய்வது 27 நட்சத்திரங்கள். அதன் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள். மனிதன் பிறந்ததிலிருந்து கிரகங்கள் அவனுடைய வாழ்க்கையை நிர்ணயித்து வருகின்றன என்று சோதிடர்கள் சொல்லுகின்றனர்.

சோதிடர்களின் இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. நட்சத்திரங்கள் பேராற்றல் கொண்டவைதான். அங்கிருந்து கதிர் வீச்சுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தக் கதிர் வீச்சுகள் பூமியை எட்டுகின்றனவா? நட்சத்திரங்களிலிருந்து கதிர் வீச்சுகள் பூமியை வந்தடைந்தால் பூமியில் மனிதயினமே வாழமுடியாமல் போகும்!

சூரியன் நமக்குப் பக்கத்திலே இருக்கின்ற சிறிய நட்சத்திரம்! 15 கோடி கி.மீ. தூரத்தி லிருக்கும் சூரியனில் ஹைட்ரஜன், ஹீலியம் நிறைந்துள்ளதால் அணுக்கதிர் வெடிப்பாகி வினாடிக்கு 60 கோடிடன் ஆற்றல் தீப்பிழம்பாகவும், காந்தப் புயலாகவும் கதிர் வீச்சாகவும் விண்வெளியில் பாய்ந்து பூமியை நோக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத் திட வருகிறது. பூமியின் கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலத்திற்குள் கதிர் வீச்சுகள் நுழைந் தவுடன் காற்று மண்டலம் அந்தக் கதிர் வீச்சுகளைத் தடுத்து சின்னா பின்னமாகச் சிதைத்து பூமியை எட்ட முடியாமல் தடுத்து விடுகிறது.அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர் வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு, காஸ்மிக் கதிர்வீச்சு, காமா கதிர் வீச்சு என்று எத்தனை கதிர் வீச்சு வந்தாலும் தடுத்து நம்மைக் காப்பாற்றுவது காற்று மண்டலம்!

பேராற்றல் கொண்ட நட்சத்திரங்களிலிருந்தும் இத்தகைய கதிர் வீச்சுகள் வந்த வண்ணமிருந்தாலும் அவைகளும் காற்று மண்டலத்தால் தடுத்து நிறுத்தப்படுகின்றன! அதனால்தான் பூமி மனிதயினம் பாதுகாப்பாக வாழத்தகுந்த இடமாக கருதப்படுகிறது.
எனவே சோதிடர்கள் கூறுவது போல நட்சத்திரங்களால் மனித வாழ்வு எந்த வகையிலும் பாதிப்படையாது பலாபலனும் அடைந்திடாது!


---------------- "சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்" என்ற நூலிலிருந்து...

மாரியம்மன் பண்டிகையை கொண்டாடலாமா?

முத்துமாரி!

ஜமதக்கினி முனிவனின் மனைவி ரேணுகைக்குத் திடீரென்று இன்னொருவன் மீது காதலாம். கங்கைக்குக் குளிக்கச் சென்ற அவள் வானத்தின்மீது சென்று கொண்டிருந்த சித்திரசேனன் என்னும் காந்தருவனின் உருவத்தை ஆற்று நீரில் கண்டுவிட்டே ஆசைப்பட்டு விட்டாள். (அவளருகில் அவன் இருந்து அவளிடம் சிக்கியிருந்தால் என்ன பாடுபட்டிருப்பான் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்) கங்கையிலிருந்து திரும்பிக் கணவன் முன்னிலையில் வந்த ரேணுகையின் மயக்கமும் தயக்கமும் கலந்த நடத்தையில் கணவருக்கு அய்யம் பிறந்தது.
ரிஷிகளுக்கு ஞான திருஷ்டி உண்டல்லவா? அந்தப் பார்வையால் நடந்தது அனைத்தையும் உணர்ந்து கொண்டான்.
வந்தது குருதிக் கொதிப்பு. தன்னுடைய மகன்களை அழைத்து ரேணுகையைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டான். மற்ற மகன்கள் மறுத்துவிட, பரசுராமன் என்பவன் தந்தையின் கட்டளையை நிறைவேற்ற முன் வந்து, அவளைக் கொல்ல முனைந்தபோது பலர் தடுக்க வர, அவர்களைக் கொன்று ரேணுகையின் தலையையும் அறுத்துத் தன் தந்தையிடம் வந்து பாராட்டுப் பெற்றான்.

என்னதான் இருந்தாலும் பெற்ற அன்னையின் தலையையே அற்றுப்போட நேர்ந்தமை குறித்து ஆழ்ந்த கவலை வயப்பட்ட மகன் தன் தந்தையிடம் தனது மனநிலையை வெளிப்படுத்த, முனிவன் மந்திர நீர் கொடுத்து, உன் தாயை எழுப்பி வா என்று கூறியனுப்பினான்.

இறக்கப்பட்டு, பல பேர் முண்டமும் தலையுமாய்க் கிடந்ததால் தாயின் உடலைச் சரியாகக் கண்டறிய முடியாமற் போய் ஏதோவொரு உடலின் மேல் அதன் தலையினைப் பொருத்தி ரேணுகையை உயிர்ப்பித்து தந்தையிடம் சேர்ப்பித்தானாம் பரசுராமன்.

கணவனும் மனைவியுமாய் மறு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தபோது ஜமதக்கினி முனி கார்த்த வீரியன் என்பானின் மக்களால் கொலையுண்டு போக, ரேணுகை தீப்புகுந்தபோது, உடனடியாக இந்திரன் வருணனைக் கொண்டு மழை மாரி பெய்விக்க, தன் ஆடை மட்டும் எரிந்துவிட்ட நிலையில் அரைவேக்காட்டுக் கொப்புளங்களுடன் இடையில் வேப்பந்தழையைச் சுற்றிக் கொண்டு ஊர்ப்புறச் சேரி மக்களிடம் உணவும், சலவையாளரிடம் துணியும் பெற்று மீண்டும் இறந்த கணவனிடம் சென்று புலம்பிக் கொண்டிருக்கையில் சிவபெருமான் தரிசனம் தந்தான்.

எங்கள் முத்து மாரியம்மா என்று பாடியபடி கோடை காலத்தில் நடெங்கிலும் விழாவெடுத்துக் கடன்படுகிறார்களே அறியாமையின் திருவுருவங்களாகிய மக்கள், அது இவளுக்காகத்தான்!

--------------------நன்றி: "விடுதலை"22-5-2009

19.5.09

ஆணுக்கும் ஆணுக்கும் நடந்த திருமணம்


ஒரு பால் திருமணம்

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் ஒரு ஹிந்து திருமணம் நடந்துள்ளது. மணப்பெண்ஜோசிங் எனும் ஆண். மணமகன் வெஸ்லி நோலன் எனும் ஆண். திருமணம் ஆணுக்கும் ஆணுக்கும் நடந்தது.

சிவனும் விஷ்ணுவும் செய்து கொண்டதைப் போல! கிருஷ்ணனும் நாரதனும் நடத்திக் கொண்டதைப் போல!

ஜோசிங் - வெஸ்லி நோலன் விவாக சுப முகூர்த்தத்தை நடத்தியவர் ஹிந்துப் புரோகிதர். தம்பதியர் இருவரும் ஆண்கள் அணியும் ஷெர்வானி உடையை அணிந்து தீக்குண்டத்தின் முன் சங்கல்பம் செய்து உறுதி மொழி கூறி விவாகம் செய்து கொண்டனர். ஜோசிங் கழுத்தில் வெஸ்லி நெக்லேஸ் ஒன்றைப் பூட்டினார். இதன் டாலரில் பிள்ளையார் படம் பொறிக்கப்பட்டிருந்த தாம்.

ஏன் பிள்ளையார்? தெற்கே இதற்குத் திருமணம் ஆகவில்லை! வடக்கே இரண்டு பெண்களுடன் திருமணம்! ஆக, இப்படி இரண்டுங்கெட்டான் சாமி இந்த இரண்டுங்கெட்டான்களின் திருமணத்திற்குப் பொருத்தம்தான்! ஏண்டா பிள்ளையார் என்றால் இரண்டு பயல்களுமே சொன்னார்களாம், கெட்டதுகளை நீக்கி அவர்கள் போகும் பாதையைத் தூய்மையாக்கிட பிள்ளையார்தான் சரியாம்!

இந்த விவாகத்திற்கு பெண் வீட்டார் அமோக ஆதரவாம்!

சென்ற ஆண்டு, மென்பொருள் பொறியாளர் ஒருவர் (மும்பைக்காரர்) அய்ந்தாண்டுக் காலமாகக் காதலித்த வெள்ளைக்காரப் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். சியாட்டில் நகரில் நடந்த இந்த விவாக சுபமுகூர்த்தத்திற்கு 450 பேர்கள் மும்பையிலிருந்து வந்து கலந்து கொண்டு அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனராம்!

இந்தக் கல்யாணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகுமா? ஆகாது. இந்தப்படி உடல் உறவு கொள்வது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை தரக் கூடிய கிரிமினல் குற்றம் என்கிறது சட்டம். ஆனாலும் இது போன்ற விவாகங்கள் வாரம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன என்கிறது செய்திகள். இவற்றை ஹிந்து மதப் புரோகிதர்களே நடத்தி வைக்கின்றனர். புரோகிதப் பார்ப்பனர்களிடம் பெரிய காந்தி நோட்டுகளை நீட்டினால், பேஷா செய்யலாமே என்று பல்லை இளித்துக் கொண்டு, நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு மந்திரம் சொல்லத் தொடங்கி விடுவர். கிறித்துவ, முசுலிம் மதப் புரோகிதர்கள் செய்யமாட்டார்கள்.

16 ஆண்டுகளுக்கு முன்பு, ஆதித்யஅத்வானி எனும் இளைஞன் தன் தாயிடம் கூறினாராம் - அம்மா, நான் ஆண் புணர்ச்சியில்தான் நாட்டம் உள்ளவன் என்று! போடா என்று புறந்தள்ளிய தாய் -பிறகு வேறு வழி இல்லாமல் உனக்கு ஏற்ற பையனை விளம்பரத்தின் மூலம் தேடு என்று கூறினாராம். இரண்டு ஆண்டுகள் கழித்து 1993 இல் மைக்கேல் டார் எனும் பையனைத் தன் குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்தான் ஆதித்ய அத்வானி! வழக்குரைஞரான அவனின் தாய் அவனுக்கும் மைக்கேல் டாருக்கும் விவாஹம் செய்து வைத்தார். மாலை மாற்றிக் கொண்டும், அரிஹர புத்திரனின் இரண்டு பித்தளைச் சிலைகளை மாற்றிக் கொண்டும் விவாஹம் செய்து கொண்டனர். செய்து வைத்தவர் சுவாமி போதானந்தா.

மற்றொரு ஜோடி. அரவிந்த குமார் அசோக் ஜெத்மலானி தம்பதியினர். கனடாவில் சான்ஜோஸ் நகரில் குடித்தனம் செய்கின்றனர். கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள அரவிந்தின் அண்ணனின் வீட்டில் வைத்து விவாஹம் செய்து கொண்டனர். வேட்டி கட்டி, அக்னி சுற்றிக் கல்யாணம் செய்து கொண்டனர்.

இவ்வாறு விவாஹம் செய்து கொண்ட இந்தியர்கள் எல்லாரும் இந்தியாவிற்கு வெளியேதான் வசிக்க முடிகிறது!

அரிகரபுத்திரனைக் கடவுளாகக் கொண்டாடும் நாட்டில் இவர்களுக்கு இடம் இல்லை என்பது அவலம்தான்!


------16-5-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் செங்கோ எழுதிய கட்டுரை

18.5.09

பார்ப்பனிய ஊடகங்களின் ஏமாற்று நாடகம்; பஞ்சமில்லாத ஜோதிடர்களின் புளுகுகள்






நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும்? யார் ஆட்சி அமைப்பார்கள்? குறிப்பாக தமிழ்நாட்டின் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? இவை பற்றி மணிக்கணக்கில் பார்ப்பனிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகத்தினரும் மற்றும் ஜோதிடர் களும் போட்டி போட்டு தகவல்களை வெளியிட்டு பொது மக்களை குழப்பி வந்தனர்.ஆனால் தேர்தல் முடிவோ அதற்கு நேர்மாறாக வெளிவந்து அவர்களின் முகங்களில் கரி பூச வைத்து விட்டது.

தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை போட்டிருந்தது அதனால் நாட்டின் 543 தொகுதிகளிலும் தேர்தல் முடியும் வரை அமைதி காத்த 'அவாள்களின்' ஊடகங்கள் மே 13 - ஆம் தேதி கடைசியாக தேர்தல் முடிந்தவுடன் தங்களின் பொய் மூட்டைகளை கடை விரிக்க ஆரம்பித்து விட்டனர்.

தேசிய அளவில் அனைத்து ஊடகங்களின் பார்வையும் தமிழ்நாடு நோக்கியே இருந்தது. இதற்காக கூட்டணி ஆட்சி அமைக்கும் பேச்சு வார்த்தை நடத்த அம்மையார் ஜெயலலிதா டெல்லி செல்ல விமான டிக்கெட்டுகள் எடுத்துக் கொடுக்காத குறையாக சில ஊடகங்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை போயஸ் தோட்டத்துக்கு ஆதராவாக ஓதின.

மே 13க்குப் பிறகு

கடைசிக் கட்டத் தேர்தல் மே13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் என்ற போர்வையில் வழக்கம்போல் தங்களின் போலி முகங்களையும், பொய் பிரச்சாரத்தையும் காட்டத் தொடங்கின.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் பார்ப்பனிய தொலைக் காட்சிகளும், பத்திரிகைகளும் படுத்திய பாடு போட்டியிட்ட வேட் பாளர்களையும், பொது மக்களையும் அளவுக்கு அதிகமாகவே குழப்பி விட்டன. சொல்லப் போனால் மக்களின் நிம்மதி குலைத்து தூக்கம் கெடுக்கும் பணியைச் செவ்வனே செய்தன அந்த பார்ப்பனிய ஊடகங்கள். அவர்களின் நோக்கம் எல்லாம் பார்ப்பனியம் அரியணை ஏறவேண்டும் என்பதுதான்.

காட்சி ஊடகங்களின் கைவரிசை

'நியூஸ் எக்ஸ்' தொலைக் காட்சி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 199 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 191 இடங்களும், மூன்றாவது அணிக்கு 104 இடங்களும், இதரக் கட்சிகளுக்கு 48 இடங்களும் கிடைக்கும் என்று பரபரப்பாக தகவல் வெளியிட்டது.

மேலும் இந்த தொலைக் காட்சி காங்கிரஸுக்கு 155 இடங்கள்தான் கிடைக்கும் என்றும்,பாஜகவுக்கு 153 இடங்களும் கிடைக்கும் என்றும் தம்பட்டம் அடித்தது குறிப்பிடத் தக்கது.

அதேபோல் 'யுடிவி அய்' தொலைக் காட்சியும், 'நியூஸ் 24' தொலைக் காட்சியும் தங்கள் பங்குக்கு நிறையவே பொய்த் தகவல்களை கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் மக்களிடம் கொண்டு சென்றன.

"நியூஸ் 24" தொலைக் காட்சி காங்கிரஸ் கூட்டணிக்கு 218 இடங்கள் தான் கிடைக்கும் என் றும், பாஜக கூட்டணி 194 இடங்களை கைப்பற்றும் என்றும் கூவியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதைவிடக் கொடுமை, மூன்றாவது அணி 110 இடங்களில் வெற்றிக் கொடி நாட்டும் என்று கூறியதுதான்.

'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி தனது கருத்து கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 198 இடங்களும், பாஜகவுக்கு 183 இடங்களும் கிடைக்கும் என்று கூறி பரபரப்பின் அளவை உச்சிக்கு கொண்டு சென்றன. மூன்றாவது அணிக்கு 'டைம்ஸ் நவ்'- தொலைக் காட்சி தெரிவித்த கருத்துக் கணிப்பு 112 என்பது குறிப்பிடத்தக்கது.

'ஸ்டார் நியூஸ்' தொலைக் காட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு 199 இடங்கள்தான் கிடக்கும் என்றும், பாஜக கூட்டணிக்கு 196 இடங் களும், மூன்றாவது அணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என்றும் தன்னுடைய கருத்துக் கணிப்பாக வெளியிட்டிருந்தது .

ஆனால் இவை எல்லாவற்றையும் ஓரம் கட்டும் அளவுக்கு தமிழ் நாட்டில் அதிமுக கூட் டணி 24 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று குறிப்பிட்டிருந்ததுதான் கொடுமையின் உச்சம்.40 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 11 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற முடியும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டு அம்மையாரை அற்ப மகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.

தமிழக அச்சு ஊடகம்

அதேபோல் தமிழ்நாடு பார்ப்பனிய அச்சு ஊடகம் ஜீனியர் விகடன் '40 தொகுதிகளின் நச் முடிவு' - என்ற தலைப்பில் தேர்தலுக்கு முதல் நாள் ஒரு கருத்து திணிப்புக் கொடுமையை 'கவர் ஸ்டோரியாக' அரங்கேற்றியதை யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் இறுதியாக தேர்தல் முடிவு, அவை வெளியிட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக் கும் நேர்மாறானவையாக இருந்தன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஒவ்வொரு தேர்தலிலும் வழக்கம் போம் ஆரியக் கூட்டத்தக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பார்ப்பனிய ஊடகங்கள் நடந்து முடிந்த தேர்தலிலும் அந்தப் புளுகுப் பணியை சிறப்பாகச் செய்து முடித்துள்ளன.

வெகுமக்கள் ஊடகம் என்ற போர்வையில் தாங்கள் திணிக்கும் பொய்களையும், புரட்டு களையும் இனியும் நம்ப மக்கள் தயாரில்லை.

ஜோதிடர்களின் பொய்கள்

அதே போல் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே கருத்து கந்தசாமிகளாய் அவதாரம் எடுப் பவர்கள், புளுகுகளை மட்டுமே தொழிலாகக் கொண்ட ஜோதிடர்கள்தான். அவர்களின் ஆரூடத்தால்தான் இந்திய அரசியலையே இயங்குவதாக அவர்களுக்கு நினைப்பு. அப்படி நடந்து முடிந்த தேர்தலில் ஆரூடம் என்ற போர்வையில் பிரதமர் நாற்காலியை ஜெயலலி தாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர் டெல்லியைச் சேர்ந்த புளுகு மன்னன் அசோக் சனோ ரியா என்பவர். இவர் சொன்னது என்ன தெரியுமா? இந்தியப் பிரதமராக ஒரு பெண்மணிதான் வருவார். அதற்கான ஜாதக வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறி இருந்தார்.அதேபோல் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த சோதிடர் ஜகன்னாத் மிஸ்ரா என்பவர் தேர்தல் நடக்கும் கால கட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களுக்கு ஆதரவாக கிரக நிலைகள் இல்லை என்றும் இதனால் தேர்தலில் பெரும் வன்முறை ஏற்படும் என்றும், இயற்கைப் பேரழிவுகளால் தேர்தலே ந்டத்த முடியாது என்றும் இவர் கூறி இருந்த பொய்யை மக்கள் மறக்கவில்லை.

இந்தப் புளுகுணி களின் பட்டியலில் டெல்லியைச் சேர்ந்த பிரபலமான சோதிடர் ஒருவர் பிரதமர் நாற்காலியில் அமரப்போவது ஒரு கறுப்புக் குதிரைதான் என்றும், அவ்வாறு அமை யும் ஆட்சி ஒன்றரை ஆண்டுகள்தான் நீடிக்கும் என்றும் கடைசியாகத் தெரிவித்து மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்கினார்.

ஆனால் தேர்தல் முடிவு எப்படி அமைந்துள்ளதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளோம். எனவே இனி வரும் காலங்களில் ஆருடங்களையும், ஜோதிடர்களையும் அடித்து துரத்துவதும், கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் பார்ப்பனியக் கூட்டத்தின் புளுகுகளையும், பொய்களையும் புறம் தள்ள வேண்டியது மானமுள்ள நம்மவர்களின் கடமை.

----------------"விடுதலை" 17-5-2009