Search This Blog

25.5.09

இதற்குப் பெயர்தான் புரோகிதச் சுரண்டல்

அக்னி தீர்த்தம்

வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை 4 மணிமுதல் அக்னித் தீர்த்தத்தில் தீர்த்தமாடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனராம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது; பக்தர்கள் தீர்த்தமாடுகின்றனர்; மகாளய அமாவாசை என்று கூறி, அன்று ஏகப்பட்ட அமர்க்களங்கள் நடக்கின்றன.

பெயரக்கேற்ப அது அக்னி (நெருப்பு)த் தீர்த்தமாகவிருந்தால் பக்தர்கள் அதில் நீராட முடியுமா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஒரு குட்டையில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குளித்தால், அத னால் ஏற்படும் சுகாதாரக் கேடு எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இத்தகைய தீர்த்தங்களில் மக்கள் குளித்து எழுந்த பின் அந்தத் தண்ணீரை பரிசோதனை செய்து பார்த்ததுண்டா? மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தக் கடமையைச் செய்ய வேண்டாமா? நல்லாட்சி (welfare State) என்ற சொல்லாட்சி என்பது அப்பொழுதுதானே பொருந்தும்.

இந்திரா காந்தி என்ற அம்மையார் சென்னைப் பல்கலைக்கழகத்திலே மயிலாப்பூர் கோயிலைப்பற்றிய ஒரு ஆய்வின்போது, அந்தக் கோயில் மூல விக்கரகத்தில் அபிஷேகம் செய்யப் படும் தண்ணீர் உள்ளிட்ட கலவையை எடுத்துப் பரிசோதனைக்கு கிண்டி கிங் நிறுவனத்திற்கு (King Institute) அனுப்பியபோது அதில் பலவகைப்பட்ட நோய்க்கிருமிகள் இருந் தன என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டதே - இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் பக்தர்களாக இருந்தாலும் - அவர்களும் மனிதர்கள் தானே - அவர்களைக் காப் பாற்ற முன்வரவேண்டாமா?

அமாவாசையன்று தீர்த்தமாடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்களாமே - யார் அந்த முன்னோர்கள்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மோட்சத்திலா, நரகத்திலா அல்லது மறு உயிர்களாகவா?

உயிர் பிரிந்த பிறகு மறுபிறவி எடுத்து விடுகிறதாகச் சொல்கிறார்களே - அப்படியிருக்கும்போது இந்தத் தர்ப்பணம் எதற்கு? யாருக்குப் போய்ச் சேர்கிறது?

கபிலர் கூறியதுபோல அருந்திய உண்டியால் ஆர்பசி கழிந்தது? என்ற வினாவுக்கு விடையில்லை.

அதுவும் சிரார்த்தம் கொடுப்பது என்றால் எதைக் கொடுப்பது? இறந்தவர் விரும்பும் பொருளையா? அல்லது புரோகிதர் விரும்பும் பொருளையா?

நாட்டில் நடப்பது என்ன? புரோகிதர் விரும்பும் பொருளைத்தானே பொறுக்கி எடுத்துக் கொடுக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் புரோகிதச் சுரண்டல் என்பது.

அய்.எம்.எப். சுரண்டல், புதிய பொருளாதாரச் சுரண்டலைப்பற்றி எல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு விமர்சிப்பவர்கள் கூட, சலனமின்றி நடைபெறும் இந்தப் புரோகிதச் சுரண்டல்பற்றி கண்டு கொள்வதில்லையே!

------------- மயிலாடன் அவர்கள் 25-5-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

6 comments:

Ragztar said...
This comment has been removed by the author.
Ragztar said...

அடேங்கப்பா, நீங்க இதெல்லாம் ரொம்ப புதுசாப் பாக்கரீங்களாக்கும்?

Ragztar said...

என் முந்தைய முனுட்டத்தை நானல்லவா அகற்றினேன், எழுத்துப் பிழைதிருத்த வேண்டி. நிர்வாகி அகற்றினார் என்று வருகிறதே?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கு நன்றி ஓவியன்.

//என் முந்தைய முனுட்டத்தை நானல்லவா அகற்றினேன், எழுத்துப் பிழைதிருத்த வேண்டி. நிர்வாகி அகற்றினார் என்று வருகிறதே?//

அவரவர்களின் தராதரத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள அது உதவும் என்பதால் எந்தப்பின்னூட்டத்தையும் நான் அகற்றியதே இல்லை.

நன்றி ஓவியன்.

Gokul said...

அய்யா,

கிண்டலாக கேட்கலாம் இது 1909 வருடத்திய கட்டுரை ஆயிற்றே என்று. ஆனால் 2009 ஆண்டிலும் இந்த கட்டுரை எழுதுவதற்கான தேவை இருக்கிறது என்பது பெரியாருக்கு நாம் அனைவரும் செய்யும் சரியான அஞ்சலி இல்லை.

ஒரு வரலாற்று தலைவர் , இறந்து 40 வருடங்கள் கூட ஆகாத நிலையில் , இந்த மண்ணில் மூட நம்பிக்கையை இந்த அளவு விட்டு வைப்பது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.

ஏனெனில் இப்போது தமிழகம் இருக்கும் நிலையில் பெரியாரின் அறிவுரை இல்லாத மற்ற மாநிலங்களும் இருக்கின்றன(அதாவது மூடநம்பிக்கையில் )..வேண்டுமானால் சற்று கூட குறைய இருக்கலாம், எனவே பெரியாரின் தீப்பொறிக்கு என்னதான் நாம் ஆற்றும் எதிர்வினை என்று தெரியவில்லை.

Ragztar said...

//அவரவர்களின் தராதரத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள அது உதவும் என்பதால் எந்தப்பின்னூட்டத்தையும் நான் அகற்றியதே இல்லை.//

ஆம். அது நாகரிகமும் இல்லை.