Search This Blog

30.5.09

பஞ்சாபில் சீக்கியர்களின் கலவரத்திற்கான மூல காரணம் என்ன?




ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள ரூடோல்ஷிஸ் என்ற இடம் சீக்கியர்களின் ஒரு பிரிவினரான தேரா கச்சா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வழி பாட்டுக் கூட்டத்தில் மற்றொரு பிரிவினரான அதர்மியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் இராமானந்த் என்ற மதக்குரு கொல்லப்பட்டார்; 16 பேர் காயப்பட்டனர்.

சீக்கிய குருக்கள் 1469-ஆம் ஆண்டு முதல் 1708-ஆம் ஆண்டு வரை பாடிய பஜனை பாடல்கள், போதனைகள் குருகிராந்த்சாகிப் என்ற புனித நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. 1430 பக்கங்கள் கொண்ட இந்த நூலை சீக்கியர்கள் வணங்கி வருகிறார்கள். சீக்கியர்களில் அதர்மி, தேரா என்ற இரு பிரிவினர் உள்ளனர்.

அதர்மி இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். தேரா இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்ட மாட்டார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். பஞ்சாபில் சுமார் 50 லட்சம் இப்பிரிவு சீக்கியர்கள் உள்ளனர்.

70 ஆண்டுகளுக்கு முன்பு தேரா கச்சா பிரிவு உண்டானது. இதன் தலைவராக நிரஞ்சன் தாஸ் உள்ளார். வியன்னா சென்றிருந்த அவரது காலில் விழுந்து, குரு நிரஞ்சன் தாஸின் காலைத் தொட்டு அவரது ஆதரவாளர்கள் வணங்கினார்கள். இதற்கு உயர்ஜாதி சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையான சீக்கியர் புனித நூலான குருகிராந்த்சாகிப்பை மட்டுமே வணங்க வேண்டும். யார் காலிலும் விழக் கூடாது என்று தகராறு செய்தனர். இந்த தகராறு முற்றி, கத்திகுத்தாகி ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள குருத்துவாரா உள் ளேயே பெரும் ரத்தக் களரியை ஏற்படுத்தியது. குருத்துவாராவுக்குள் இரு சீக்கிய கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட கத்திச்சண்டையில் குத்துப்பட்ட சீக்கிய குரு மருத்துவ மனையில் மரணமடைந்தார். ஆஸ்திரியாவில் அவர் மரணமடைய, இந்தியாவில் - பஞ்சாப் தீப் பற்றிக் கொண்டது. பஞ்சாப் மாநிலம் எங்கும் நடந்த மோதலில் கோடிக் கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட துடன் மக்களின் பொது அமைதி பெரும் கேள்விக்குள்ளானது. தீ வைப்பு வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்களால் சிலர் கொல்லப்பட்டனர். சீக்கியர்களின் வன்முறை வெறியாட்டத்துக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் தப்பவில்லை. அதுவும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் எடுத்த அதிரடி அவசர நடவடிக்கைளால் பஞ்சாப் பிற்கு ராணுவம் அனுப்பப்பட்டு அங்கு அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்து மதத்திலிருந்து வெளியேறிய சீர்திருத்த மதம் தான் சீக்கிய மதம். அந்த மதத்திலேயே தீண்டாமை என்பது நியாயம் தானா?

இந்து மதத்தின் இரத்தத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகாலமாக ஊறித்திளைத்த ஜாதி - அதன் கொடிய நஞ்சான தீண்டாமை - அதைவிட்டு விலகி ஓடினாலும் நிழல்போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது எத்தகைய கொடுமை!

கிறித்துவ மதத்திலும் இந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கல்லறைகளில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக உள்ளது என்றால் இதற்கு மேல் எதைச் சொல்லி அழ?


இந்து மதத்தில் தான் தீண்டாமை இருக்கிறது. கிறித்துவ மதத்தில் இதோ பாருங்கள்; சீக்கிய மதத்திலும் சீறிடும் அந்தத் தீண்டாமைப் பாம்பைக் கவனியுங்கள்; என்று பார்ப்பனர்கள் கூறுவதற்கு அருகதை உடையவர்கள் அல்லர். இதற்கெல்லாம் மூலவித்து என்பது இந்தப் பாழாய்ப் போன இந்து மதம்தான்.

இந்த மூலபலம் தகர்க்கப்பட்டால் ஒழிய இந்து மதத்திலிருந்து கிளைத்த சீக்கிய மதத்திலும் சரி, மத மாறிச் சென்ற கிறித்துவ மதத்திலும் சரி தீண்டாமை என்னும் புற்றுநோய்த் தொற்றிக் கொண்டே தானிருக்கும்.

வியன்னாவில் தானே இந்தத் தாக்குதல் நடந்தது இந்தியாவில் ஏன் இந்தப் பிரதிபலிப்பு? இங்கு ஏன் வன்முறை? இரயில்கள் ஏன் எரிக்கப்படுகின்றன? பொதுச் சொத்துகள் அழிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி நியாயமானதாக இருக்கலாம்.

அதே நேரத்தில் தங்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டில் தாக்கப்பட்டால் அதனைக் கேள்விப்பட்டு நாங்கள் பூ பறித்துக் கொண்டிருக்க மாட்டோம் - எங்கள் உணர்வினை ஏதோ ஒரு வகையிலே வெளிப்படுத்துவோம் என்பதைக் காட்டிக் கொண்டுள்ளனர் பஞ்சாபிலும் அரியானா விலும் உள்ள சீக்கியர்கள்.

இலண்டனிலே இரு சக்கர வண்டிகளை ஓட்டிக் கொண்டு செல்பவர்கள் ஹெல்மட் அணிந்துதான் செல்ல வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது எல்லாருக்கும் ஒத்து வராது - தலைப்பாகைக்குமேல் ஹெல்மட் அணிவது என்பது இயலாத காரியம் என்று இந்தியாவில் துள்ளிக் குதிக்கவில்லையா? நமது பிரதமர் போன்றவர்களும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கவில்லையா?

அதே நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து முப்பதே கல்தொலைவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது. வாழும் உரிமை உண்டா? மொழிக்கு அங்கீகாரம் உண்டா? இரண்டாம் தர மக்களாகத்தானே ஆங்கே நடத்தப்படுகிறார்கள். ஒரே ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதற்கு இந்தியாவில் ரகளை நடக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாசமாக்கப்படுகின்றன.

இலங்கையிலே எங்கள் ஈழத் தமிழர் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஒரு அரசாங்கமே இதனை முன்னின்று செய்கிறது. குழந்தைகள் பயிலும் விடுதி என்றும் பாராது குறி பார்த்து குண்டுகளை வீசி கொன்று குதூகலிக்கிறார்கள். மருத்துவமனைகள் மீதும் குண்டு மழை பொழிகிறார்கள். மக்கள் சரணடைந்து கிடக்கும் வழிபாட்டு நிலையங்களையும் நீர்மூலமாக்குகிறார்கள்.

தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைக் குடிமக்கள் மீது வீசுகிறார்கள். முகாம்களை ஏற்படுத்தி சித்திரவதைகளைச் செய்கிறார்கள். உலகில் பல நாடுகள் எச்சரித்தும் நீ யார், எங்களைக் கேட்பதற்கு? என்று திமிர்வாதம் பேசுகிறது ராஜபக்சே அரசு. அய்.நா. எச்சரித்தாலும் போய்ட்டுவா என்று பதிலடி கொடுக்கிறது.

இவ்வளவுக்கும் அந்த ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழர்கள் - அய்ந்து கோடிக்குமேல் 30 கல் தொலைவில் இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் இன அழிப்பு வேலையை எந்திரம் போல செய்து கொண்டிருக்கிறது.

உலகின் பல நாடுகளிலும் போர் ஆயுதங்களை வாங்கி தமிழர்களைப் பூண்டோடு ஒழிக்கும் கொலை பாதகச் செயலில் முழு மூச்சாய் ஈடுபடுகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழ் நாட்டின் நிலைமை என்ன? ஒரு சீக்கியர் கொல்லப்பட்டார் என்பதற்காக பஞ்சாபும், அரியானாவும் கொதிகலன் ஆகிறது. ஆனால் பல்லாயிரக் கணக்கில் பக்கத்துத் தீவில் தமிழர் படுகொலை செய்யப்பட்டது தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது? அரசியல் பட்டிமன்றம் நடக்கிறது.

ஒருவரை ஒருவர் குறைகூறும் அக்கப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு நடக்கும் போரை நிறுத்துவது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் தமிழர்களுக்குள் நடக்கும் போர் நிறுத்தப்படட்டும் என்று கூறி வருகிறார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி.

யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்? தேர்தல் நேரத்தில் கிடைத்த வாராது வந்த மாமணியாக? இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்களே!

ராஜபக்சே மீது ஏவும் கண்டனக் கணைகளைவிட முதல் அமைச்சர் கருணாநிதி மீது ஏவும் எரியீட்டிகள்தான் ஏராளம்.

எதிலும் ஏட்டிக்குப் போட்டி என்பதுதான் இங்குள்ள தமிழர்களின் நினைப்பும் - நடப்பும்.

ஈழத்திலே தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கு பஞ்சாபிகளுக்கோ, வங்காளிக்கோ, நடந்திருந்தால் நாடே பற்றி எரிந்திருக்காதா!

இந்த நேரத்தில்கூட நம் தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் பஞ்சாபைப் பாருங்கள்; அரியானாவைக் கவனியுங்கள்.

வன்முறைகூட வேண்டாம்; அவர்கள் ஒன்று திரண்டு எழுகிறார்களே; அந்த ஒன்று திரளும் உணர்வு வந்தாலே போதுமே ராஜபக்சேக்களின் சப்தநாடிகளும் ஒடுங்கிப்போய் விடுமே!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக் கவிஞர் பாடல் வரிகளில் அடிநாதம் அதுதானே!

"தமிழா தமிழனாக இரு!"

"தமிழா இனவுணர்வு கொள்!"


----------------- மின்சாரம் அவர்கள் 30-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

/ ஒரு சீக்கியர் கொல்லப்பட்டார் என்பதற்காக பஞ்சாபும், அரியானாவும் கொதிகலன் ஆகிறது. ஆனால் பல்லாயிரக் கணக்கில் பக்கத்துத் தீவில் தமிழர் படுகொலை செய்யப்பட்டது தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது? அரசியல் பட்டிமன்றம் நடக்கிறது.//

இந்த வேதனை தீருவது எப்போது? தமிழன் ஒன்றுபடுவது எங்கனம்?