Search This Blog

30.6.13

பக்தர்கள் பதறாமல் சிந்திப்பார்களா? சிலை வணக்கம் என்பதுபுத்தி குறைந்தவர்களுக்குத்தான்!


ஆண்டவனைத் தரிசிக்கப் போனவர்கள் அலறினார்கள்! கடவுள் கடாட்சத் துக்காக வேண்டி ஆயிரம் ஆயிரம் மைல்கள் தாண்டிப் பயணம் செய்த பக்தர்கள் பதறினார்கள்.

யாத்திரை சென்றவர்கள் பல லட்சம்; பலியானவர்கள் பல்லாயிரம் என்னும் கொடுஞ் செய்தி மண்ணையே உலுக்குகிறது.

பிணங்கள்ஆற்றில் அடித்துச் செல்லுவதை நேரில் பார்த்தோம். எங்களைச் சுற்றி எங்கும் பிணங்கள்! பிணங்கள்!!. பிணங்கள் மீதே படுத்துக் கிடந்தோம்! எங்கள் உடைமைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து இழுத்துக் கொண்டே போயின!

பிணங்கள்மீது இருந்த துணிமணிகளைப் பறித்து நாங்கள் உடுத்திக் கொண்டோம்!

குருதியை உறையச் செய்யும் செய்திகள் கொத்துக் கொத்தாக! ஒவ்வொரு நாளும் வடக்கே கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை சென்றவர்களின் நிலைதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக ஏடுகளைப் புரட் டினாலும், தொலைக்காட்சிப் பெட்டி களைத் திருகினாலும் அலை அலையாக இந்த அவலச் செய்திகள்தான்.
சிவனின் சடையிலிருக்கும் கங்கை நதியே கரை புரண்டு மக்களைக் காலி செய்து விட்டது -_ ஏன் சிவன் கோயில் களையே மண்மூடச் செய்துவிட்டது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளுக்கு மக்கள் பக்தர்கள் தலை வைத்துப் படுக்க முடியாதாம்.

ஏனிந்த நிலை? வானிலை அறிக்கைகள் முன் கூட்டியே அறிவிக்கப்ப டவில்லையா? இதற்குமுன் எந்தக் கால கட்டத்திலும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் மொழியில் ருத்ரதாண்டவம் நடைபெற்றது ஏன்?

சுற்றுச்சூழல் பாதிப்புதான் இதற்குக் காரணம் என்று அறிவியலாளர் சொல்லுகிறார்கள். காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் புதிது புதிதாகக் கட்டப்படுகின்றன. மலைகளை உடைத்து மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தியாதி _- இத்தியாதி இயற்கை அழிப்பால் ஏற்பட்ட இழப்பு என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானம் பகர்கிறது.

இதற்கிடையே பக்தி வியாபாரிகளுக்கு மிகப் பெரிய பதற்றம் _ பகீர் என்று கலக்கம்.

யாத்திரை சென்ற இடங்களில் உள்ள பகவான்கள் பற்றிக் கட்டுக்கட்டாக பிர தாபங்கள் அள்ளிவிடப்பட்டுள்ளனவே. அவற்றை நம்பித்தானே பக்தர்கள் படையெடுக்கின்றனர். கிழடுகள் கூட அல்லவா கிளம்பி விட்டனர்.
பாவங்களை - எல்லாம் கரையேற்ற பகவானைத் தேடியல்லவா சென்றுள்ளனர். பகவான் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை; தம்மை நாடி வந்த பக்தர்களையும் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை.
மக்கள் உயிர் இப்படி மலிவாகப் பறி போனது கண்டு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் பதைபதைக்கின்றனர்.
இல்லாத கடவுளை நம்பி இன்னு யிரை இழந்து விட்டனரே என்ற எண் ணம் நம் நெஞ்சங்களை அழுத்துகிறது.

தன் காலை முதலை கவ்வியபோது ஆதிமூலமே! என்று கஜராஜனாகிய யானை அலறியபோது, பறந்தோடி வந்து சங்கு சக்கரத்தை ஏவி முதலையைக் கொன்று தன் பக்தனான யானையைக் காப்பாற்றினான் விஷ்ணு என்றெல்லாம் எழுதி வைத்துள்ளனரே

துரோபதையின் மானத்தைக் காப்பாற்ற பீஸ்பீஸாகத் துணிகளை வழங்கிய கிருஷ்ண பகவான் உத்தரகாண்டில் ஆடைகளை இழந்து அம்மணமாக நின்றவர்களுக்கு ஆடைகளை வழங்கிட ஓடி வரவில்லையே ஏன்?

எத்தனை எத்தனை அவதாரம் எடுத்து தன் பக்தர்களை எல்லாம் பகவான் காப்பாற்றினார் என்று பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து வைத்துள் ளனரே _- அந்தப் பகவானின் பாதார விந்தங்களைத் தேடிப் பக்திப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் எல்லாம் பதறப் பதற மாண்டு மடிந்துள்ளனரே -_ அந்த மகேசுவரன்கள் எல்லாம் உதவிக் கரம் நீட்டவில்லையே! இராணுவ வீரர்கள் தானே தங்கள் உயிரையும் பணையம் வைத்து உதவிக்கு ஓடோடி வந்து பல்லாயிரக்கணக்கான பகத்ர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த நிலையில் உயிருக்கு இறுதி கெடு வந்த நேரத்தில் எத்தனை எத்தனைக் கடவுள்களை அழைத்திருப்பார்கள்? எத்தனைக் கோவிந்தாப் போட்டு இருப்பார்கள்.

எத்தனை சிவசிவா குரல் கொடுத் திருப்பார்கள்? கேதார்நாத்தில் குடிகொண் டிருந்த கடவுள் கேளாக் காதினனாக இருந்தது ஏன்? பத்தரிநாத் பகவான் பார்வை பக்தர்கள் பக்கம் பாய மறந் ததேன்? கங்கோத்ரி கடவுள் தன் கடாட் சத்தைக் கொட்டாமல் எங்கே போனான்? யமன் வந்து தன் பக்தர்களைப் பாசக் கயிறு போட்டு இழுத்தபோது யமு னோத்ரி ஈசன் எங்கு சென்றான்? எங்கு சென்றான்? இந்தக் கேள்விகளைப் பகுத்தறிவுவாதி எழுப்புவது எதையும் குத்திக் காட்டி ஆனந்தமாய்த் துள்ளிக் குதிக்கவல்ல.

பக்தி என்னும் பெயரால் பகுத்தறிவை இழந்ததால் இப்படிப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பரிதாபமாக மாண்டு போனார்களே, -இவற்றைப் பார்த்த பிறகா வது நம் மக்களுக்கு நல்ல புத்தி வராதா? வரக் கூடாதா? என்ற நல்லெண்ணத்தின் உந்துதலால் தான் எழுதுகிறோம் - நிகழ்வுகள் தரும் நெற்றியடிப் பாடங் களைப் படிக்கத் தவறினால், இன்னும் என்னென்ன இழப்புகளை எதிர்காலத்தில் சந்திக்க நேருமோ என்ற தொலை நோக்கோடு எழுதப்படுபவைதான் இவை.

கொண்டாட்டத்தோடு அல்ல  - குமுறும் நெஞ்ச அலைகளின் துயரக் குரல் இவை.

இதற்கு முன்பும் கூட இதுபோன்ற இழப்புகள் துயரங்கள், விபத்துகள் நடந் திருக்கின்றன.

அவற்றிற்குப் பிறகும்கூட இந்தப் பக்திப் பிடியில் சிக்கிய மக்கள் திருந்திய பாடில்லையே என்று தீராத வேதனையின் வெளிப்பாடுதான் இவை.
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை இப்பொழுதாவது உணர வேண்டாமா என்ற வேண்டுகோள்தான் இந்த எழுத்துகளுக்கு அடிப்படை!
சர்வசக்தி என்பதும் சர்வப் பொய்; தயாபரன் என்பதும் தரை மட்டமான பொய்; கடவுளை நம்பினால் கைவிட மாட் டான் என்பது கடைந்தெடுத்த பொய் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட் டினாலாவது சுதாரித்துக் கொள்ள மாட் டார்களா? என்ற நல்லெண்ணத்தோடு கூறப்படுவதுதான் இது.

சிலைகளை வணங்குவது சீலமா?

திக்குவாய் குறைதீர திருப்பந்துறை முருகப் பெருமான். (மதுரை மணி 10.11.2007).

கணித அறிவை மேம்படுத்த இன்னம்பூர் இறைவன். (குங்குமம் 3.5.2007).
குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி (நெல்லையில்).

திருமணம் கைகூட திருவீழிமிழலை  அழகிய மாமுலையம்மை (திருவாரூர்) (தினத்தந்தி இலவச இணைப்பு - 27.7.2010).

வழக்குகளில் வெற்றி பெற சொல்லங்கு வெட் டுடையார் காளிகோயில் சிவகங்கை. (ராணி 16.5.2010).

வீடு கட்ட உதவும் கடவுள் -_ திருப்புகழூர்.

அக்னீஸ்வரர் (குங்குமம் 16.7.2009).

இழந்த பொருளைப் பெற - தஞ்சபுரீஸ்வரர் கோயில் _ திருவையாறு 

                                     -------------------------(தினத்தந்தி ஆன்மீக மலர் 26.2.2010).

இப்படியெல்லாம் ஏடுகளில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன; ஆன்மீக சிறப்பு இதழ்களில் வண்டி வண்டியாக எழுதித் தள்ளு கிறார்களே இவையெல்லாம் உண்மைதானா?

கடன் தீர்ப்பதிலிருந்து கல் யாணம் ஆவது வரை குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று கும்பிடு தண்டம் போடுவதன்மூலம் நிறை வேறும் என்றால் மனித முயற்சிக்கு இடம் உண்டா? அரசுகளின் தேவைதான் என்ன?

இப்படி எல்லாம் நம்பி கோயில் கோயி லாகச் சென்று கண்ட பலன் என்ன? உத்தரக் காண்டில் உள்ள கோயில்களுக்குச் சென் றவர்களும் இவை களுக்கு மேலான எதிர் பார்ப்புப் பேராசை களுடன் தானே?

பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது பக்திக்கும், அனுப வத்துக்கும் ஒவ்வாததை ஒருக்காலும் நம்பிப் பின்பற்ற மாட்டான். கடவுள் நம்பிக்கைகூட மனிதனுக்கு அனேகமாய் பேராசையினாலும், பயத்தினாலும் ஏற்படுகிறதேயல்லாமல் உண்மையைக் கொண்டதன்று
என்று கூறும் தந்தை பெரியாரின் சிந்தனை இந்த விடயத்தில் துல்லியமானதே!
பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத் துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்ப மாட்டான் (விடுதலை 17.10.1962) என்றும் தந்தை பெரியார் கூறினார்.

கோயில் கோயிலாக திரிபவர்கள் நேர்த்திக் கடன்களைக் கழிப்பவர்கள் மனத்தில் இருப்பதெல்லாம் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும்; மக்கள் எல்லாம் சுபீட்சமாக வாழ வேண்டும் என்றா வேண்டுதல் செய்கிறார்கள்? மாறாக தான் தனது குடும்பம் இவற்றின் நலன் எனும் பேராசையைத் தாண்டி இருப்பதில்லையே! இதனைத் தான் தந்தை பெரியார் மிகக் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

கோயிலுக்குச் செல்லுவது -_ சிலை களைக் கும்பிடுவதில் கூட ஆன்மீகத் துக்குள்ளேயே பல்வேறு கருத்துகள் உண்டு.

உத்தர கீதை

அக்நிரதேலோத் விஜாதீநாம்
முநிநாம் ஹிருதிதைவதம்
பர்மாஸ்வ பாபுத்தா நாம்
ஸர்வத்ர ஸமதர்சிந

பொருள்: துவிஜர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனர் களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர் களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம். 

ஸ்கந்தபுராணம்
ஞானயோக காண்டம்
நாடி சத்திராத்தியம்
தீரத்தே தாதையக்ஞே
காஷ்டே பாஷாணகேபதா
சிவம் பஸ்யதி
மூடாத்மாசி லோதே ஹெபர் திஷ்டித
மூடாத்மாக்கள் தீர்த்தத்திலும் தானத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும் கல்லிலும் சிவம் இருப்பதாக நினைக்கிறார்கள். சிவமோ தமக்குள்ளேயே இருக்கிறார்.
சாகதபலசன சுலோகா
அபஸுதேலாப நீஷநாம்
காஷ்டலோஷ்ட்டேஷீ மூடாராம்
யுக்தஸ் யாத்மநி தேலதா
சாதாரண மனிதர்களுக்குத் தெய்வம் நீரில்; சற்றுத் தெளிந்தவர்களுக்குத் தெய்வம் ஆகாசத்தில்; முட்டாள்களுக்குத் தெய்வம் கல்லிலும், கட்டையிலும்; யோகி களுக்குத் தெய்வம் அவர்களுக்குள்ளே
மகா நிர்வாணா
எவம்குணா நுஸாரேண ரூபாணி
வவிதாநி சக்ல பிதாநி
ஹிதார்த்தாய பக்தாநி
அல்பமே தஸாம்
இவ்வித குணங்களை யனுசரித்துப் பலவித உருவங்கள் அற்ப புத்தியுடை யவர்களுக்காகக் கற்பிக்கப்பட்டன.
வால்மீகர் சூத்திரஞானம்
தாளென்ற உலகத்தில் சிறிதுபேர்கள் சடைப்புலித்தோல் காஷாயம் தாவடம்பூண்டு
ஊளென்ற சிவபூசை தீட்சையென்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோமென்பார்
கானென்ற காட்டுக்குள்ளே அலைவார்கோடி
காரணத்தை யறியாமல் கதறுவாரே
நில்லென்ற பெரியோர்கள் பாஷையாலே
நீடுலகம் தனக்குள் நாலுவேதம்
வல்லமையாம் சாஸ்திரங்கள் இருமூன்றாக
வயிறு பிழைக்கப் புராணங்கள் பதினெட்டாகக்
கல்லுகளைக் கரைப்பது போல் வேதாந்தங்கள்
காட்டினர் அவரவர் பாஷையாலே
தொல்லுலகில் நாற் சாதி
அநேகஞ்சாதி தொகுத்தார்கள்
அவரவர்கள் பிழைக்கத்தானே

சிலை வணக்கம் என்பதுபுத்தி குறைந்தவர்களுக்குத்தான் என்று ஆன்மீக சாத்திரங்களே கூறு கின்றனவே!

உத்தரகாண்டுக்கும் இமய மலையின் அடிவாரத்துக்கும் செல்லுவது - கேதார்நாத் பத்ரிநாத் என்று யாத்திரை சென்று அங்கு கட்டி வைக்கப்பட்டுள்ள கோயில் களில் உள்ள சிலைகளைக் கும்பிடுவது எல்லாம் அற்பப் புத்தியுடையது என்று கூறப் பட்டுள்ளதே இதற்கு என்ன பதில்?
இந்த சாத்திரங்கள் சமாச்சாரங்கள் எல்லாம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் எழுதி வைத்தது இல்லையே! ஆன்மீக கொழுந்துகள் தானே எழுதி வைத்துள்ளார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் துவிஜாதி என்று கூறப்படும் பூணூல் மேனிகளான பார்ப்பனர்களுக்குக் கட வுள்கள் அக்னிதானே - அப்படி இருக்கும் போது இவர்கள் கோயில் கோயிலாகச் சுற்றித் திரிகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை தேவை!

பக்தர்களைப் பகவான் காப்பாற்றுகிறானா?

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலியாவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அவ்வப்போது நடப்பதுதான்.

அந்த நேரத்தில் கொஞ்சம் சலசலப்பு அதற்குப்பின் - வழக்கத்தால் மாடுகளும் செக்குச் சுற்றும் எனும் தன்மையில் பக்த யாத்திரை கிளம்பி விடுவார்கள்.
இவ்வளவு அமளிகள் -_ அவலங்கள் நடத்தும் பத்ரிநாத் பனிலிங்கத்தைச் சேவிக் கப் பக்தர்கள் பயணம் என்று சேதி வரு கிறதே -_ எங்குப் போய் முட்டிக் கொள்ள?

எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பட்டியல்:

இந்தியாவில் நடந்த பெரிய நெரிசல்கள்!

ஏப்ரல் 14, 1986 : அரித்வார் பாலத்தில் நெரிசல்: 46 பேர் சாவு.
நவம்பர் 9, 1986 : அயோத்திராமன் கோயில் நெரிசல்; 32 பேர் சாவு.
பிப்ரவரி 18, 1992 : கும்பகோணம் மகாமக விபத்து; 60 பேர் சாவு.
ஜூலை 15, 1996 : உஜ்ஜெய்னி மற்றும் அரித்வார் நெரிசல்; 60 பக்தர்கள் பலி.
ஜுன் 1997 : தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கின் போது யாகத் தீப்பற்றி பந்தல் எரிந்து 42 பேர் பரிதாப மரணம்.
1999 : மகர ஜோதியின் போது கூட்ட நெரிசலில் 53 பக்தர்கள் பலி!
ஆகஸ்டு 27, 2003 : நாசிக் கோதாவரி கும்பமேளா நெரிசல்; 41 பேர் சாவு, 150 பேர் காயம்.
சனவரி 2004 : சிறீரங்கம் புரோகிதத் திருமணத்தில் தீப்பற்றி மணமகன் உட்பட 52 பேர் மரணம்.
ஜனவரி 25, 2005 : மராட்டிய மாநிலம் சதாராவிலுள்ள குலபாய் கோவில் நெரிசல்; 340 பேர் சாவு.
நவம்பர் 4, 2006 : பூரி ஜெகந்நாத் கோவில் விழா நெரிசல்: 4 பேர் பலி, 24 பேர் காயம்.
ஆகஸ்டு 13, 2007 : ஜார்கண்ட் வைத்தியநாத் கோவில் நெரிசல்: 11 பேர் சாவு, 30 பேர் காயம்.
அக்டோபர் 14, 2007 : வதோதரா அருகே மாகாளி கோவில் நெரிசல் , 6 பேர் சாவு, 12 பேர் காயம்.
ஜனவரி 3, 2008 : விஜயவாடா அருகே கனக துர்க்கா கோவில் நெரிசல்,  6 பேர் சாவு, 12 பேர் காயம்.
மார்ச் 27, 2008 : மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் கோவில் விழாவில் நெரிசல்: 9 பேர் சாவு, 10 பேர் காயம்.
ஜூலை 4, 2008 : பூரி ரத யாத்திரை நெரிசல்; 6 பேர் சாவு, 10 பேர் காயம்.
ஆகஸ்டு 3, 2008 : இமாச்சலப் பிரதேசம் - பிலாஸ்பூர் - மலைக்கோயில் விழா நெரிசல்; 150 பேர் சாவு.

இதற்கெல்லாம் என்ன பதில்?

தன்னை நாடி வந்த பக்தர்களையே காக்க முடியாத கடவுள்மீது சக்தியை ஏற்றி வாய் கிழியப் பேசுவதில் பொருள் இருக்க முடியுமா?

பக்தியின் சாயமும், கடவுள் சக்தியின் நிறமும் வெளுக்க ஆரம்பித்தவுடன் என்ன செய்வார்கள் தெரியுமா?

ஏதோ கடவுள் குற்றம் நடந்திருக் கிறது? இரவில் பக்தர்கள் அந்தக் கோயில்களில் தங்கியதால் கடவுளுக்குக் கோபம் என்று திசை திருப்புவார்கள்?

கடவுளுக்குக் கோபம் வரும்; - தம் பக்தர்களைப் பலி கொள்ளும் என்றால் அதற்குப் பெயர்தான் கடவுளா? என்ற கேள்வி எழும். கருணையே உருவான வன் கடவுள் என்ற கதையெல்லாம் கந்தையாகி விடாதா?

காளஸ்தி கோயில் கோபுரம் நெடுஞ் சாண்  கிடையாக விழுந்தது என்றவுடன், மக்கள் பகவான் சக்தியைக் கேலி பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்து, அதற்கொரு புதுக்கதை ஜோடித்து விடுவார்கள்.

சாந்தி கழிக்க வேண்டும் என்று கிளப்பி விடுகிறார்கள்; ஏதோ நடக்கப் போகிறது _ அதற்கான அறிகுறி இது என்று கதை கட்டுவார்கள். அதிலும் பார்ப்பனப் புரோகிதக் கும்பலுக்குதான் கொண்டாட்டம் வருமானம்.

கோயில் இருந்தாலும் லாபம், இடிந்தாலும் கொள்ளை லாபம்! இப்படி ஒரு சுரண்டல் தந்திரத்தை உலகில் வேறு எங்கு காண முடியும்?

சிறீரங்கத்தில் வைதீகக் கல்யாணத் தின்போது ஓம குண்டத்தில் தீயால் பந்தல் தீப்பிடித்து மணமகன் உட்பட 52 பேர் பலியானார்கள் என்றவுடன், பார்ப்பனச் சுரண்டல் தொழிலான வைதிகக் கல் யாணக் கடையை இழுத்து மூட வேண் டிய நிலை  ஏற்பட்டால் என்னாவது? மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற அச்சம் உலுக்க, காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் - செய்தார் தெரியுமா?

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயி லில் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்தில் மோட்ச விளக்கை ஏற்றச் சொன்னார்.

புரிகிறதா? ஓம குண்டத் தீப்பற்றி கருகிச் செத்தவர்களை மோட்சத்துக்கு அனுப்புகிறார்களாம். இந்தச் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

தீயிலேயே மோசமான தீ பக்தீயா யிற்றே. அந்தப் பலகீனத்தைப் பயன்படுத்தி பக்தர்களை மேலும் மேலும் முட்டாள் களாக்கி  சுரண்டல் தொழிலை ஜாம் ஜாம் மென்று நடத்த ஆரம்பித்து விடுவார்கள்.

உலகம் போற்றும் உத்தமராகக் கருதப்பட்ட காந்தியார் அவர்களை நாதுராம் கோட்சே என்னும் இந்து வெறிக் கொடியவன் படுகொலை செய்த நேரத்தில், அந்தக் கோபம் இந்து மதத்தின் மீதும் பார்ப்பனர்கள்மீதும் திரும்பி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் என்ன செய்தார் அன்றைய காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி தெரியுமா?

எல்லாப் பாவங்களுக்கும் தோஷம் கழிப்பது ஸ்நானம் செய்வதன் மூலமாகத் தான்! இந்துக்கள் அனைவரும் அதனைச் செய்யுங்கள் என்று சொன் னாரே பார்க்கலாம்.

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டு மானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம் தான் கடவுள், மதம், கெட்ட இடமாகும் (விடுதலை 24.4.1967) என்றாரே தந்தை பெரியார் - எண்ணிப் பாருங்கள்  - பொருத்திப் பாருங்கள் - புத்திக்குப் புரியும்.

கூட்டிக் கழித்துப் பாருங்கள் வைதி கத்தின் வண்டவாளம் புரியும். பகுத்தறி வின் பரிமாணமும் பளிச்சிடும்!

பக்திக்கொள்ளை!
உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் பக்தர்கள். அந்த நேரத்தில்கூட சாமியார்கள் என்ன செய்தார்களாம் -  பொருள்களை கொள்ளையடித்துள்ளனர்.

வங்கியில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். செத்துப் போன பக்தர்களின் உடல்களை வெட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்திருக்கின்றனர். பெண்களிடம் பூசாரிகள் பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார்கள் - பக்தியின் ஒழுக்கம் இதுதான்.
 *************************************************************************************
கடவுளிடம் வேண்டுதல் என்பது சரியானதுதானா?
கடவுள்தான் எல்லாம் அறிந்தவர் என்றும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்றும் ஆன்மீக சிரோன்மணிகள் அளக்கிறார்களே _  அப்படி இருக்கும்போது ஆண்டவனிடம் கோரிக்கைகளை வைப்பது ஏன்? வரங்களை வேண்டுவது - _ ஏன்?

அவன்தான் எல்லாம் அறிந்தவனாயிற்றே? கல்லினுள் தேரைக்கும் படியளப்பவனாயிற்றே _ அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பது அதிகப் பிரசங்கித்தனமா அல்லது ஆண்டவன் ஒரு அறியாமை ஆசாமி _ நாம் எடுத்துச் சொன்னால்தான் விளங்கிக் கொள்வான் என்று கருதும் மனப்பான்மையா? இதுகுறித்து கறுப்புச் சட்டைக்காரன் கூறினால் கொஞ்சம் கசக்கும்தான்

கல்கி சொன்னால் இனிக்கும் அல்லவா?

இதோ கல்கியில்
கடவுளை வியாபாரியாக்காதே!
கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா...?
-  வி. மனோகரி, குமாரபாளையம்

பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரி யாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல.

கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தரக் கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.

ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி.
அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.

(எழுத்தாளர் ராஜேஷ்குமார் _ கல்கி 6.11.2011)

சரணடைந்து பாருங்கள்! என்று சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்!
பிரார்த்தனை என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம் என்று கருப்புச் சட்டை சொல்லவில்லை கல்கி சொல்லுகிறதே இதற்கு என்ன பதில்?
********************************************************************************
---------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 29-6-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

29.6.13

பெரியார் காட்டிய வழிமுறைகளில் அறப் போராட்டம்

கீழத்தஞ்சை தயாராகி விட்டது! நீங்கள்?


ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை)ப் போராட் டத்திற்கு நாள் குறிப்பிட்டு விட்டார் கழகத் தலைவர் - தமிழர் தலைவர்.

இராஜபாளையம் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு கழகத் தோழர்கள் மத்தியில் ஆர்வம் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது.

தென் மாவட்டங்களில் இரண்டு அணிப் போராட்ட விளக்கப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மதுரை நிகழ்ச்சியில் (8.7.2013) தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றுகிறார்.

இதற்கிடையே நமது போராட்டத்தின் நோக்கம் உள்ளிட்ட சகல அம்சங்களையும் உள்ளடக்கிய 32 பக்கங்களைக் கொண்ட வெளியீடு ஆவணக் காப்பமாக வெளியிடப்பட்டுள்ளது.

நன்கொடை ரூ.5 மட்டும் தான்; எல்லா மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகத் தலைவர் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப் பயணத் திலேயே ஆயிரக் கணக்கில் கழகத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.

தந்தை பெரியார் காட்டிய வழிமுறைகளில் நமது அறப் போராட்டம் நடைபெறும்; பிரச்சாரம் விளக்கம் - வேண்டுகோள் - இவற்றைத் தொடர்ந்து களம் காணுதல் என்பதுதான் நமது போராட்ட முறை! 

போராட்டத்தை அறிவித்த இராஜபாளையம் மாநாட்டிலேயே  போராட்டத்தில் குதிக்கக் கழகத் தோழர்கள் கையொப்பமிட்டுப் பட்டியலிட்டு கழகத் தலைவரிடம் அளித்து விட்டனர். அடுத்து மதுக்கூர் மாநாட்டிலும் அளித்தனர்.

கீழத்தஞ்சை மாவட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தில் ஆயிரக்கணக்கில் நான் முந்தி நீ முந்தி என்று விவசாயப் பெருங்குடி மக்கள் - குறிப்பாக நமது தாய்மார்கள் போட்டி போட்டுக் கொண்டு போராட்டத்தில் குதிக்க முன்வந்த காட்சி பழைய புறநானூற்றைத் தான் நினைவூட்டும்.

நம்முடைய இயக்கம் உயிர்த் துடிப்பாக (Live Wire) இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் எடுப்பான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பிரச்சாரம் - போராட்டம் என்ற அணுகு முறைகளைக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கம் தானே திராவிடர் கழகம்?  கழகத் தலைவர் அவர்கள் கூறும் மிகப் பொருத்தமான உதாரணம் கடிகாரத்தில் பெண்டுலம் போல இரு பக்கங் களிலும் அசைந்தாடி காலத்தைக் காட்டுவது போல கழகம், பிரச்சாரம் போராட்டம் என்ற களங்களில் களமாடி தமிழர்களின் விடுதலைக் களத்தில் வெற்றிகளைக் குவித்து வருகிறது.


நமது போராட்டங்களில் எப்பொழுதுமே அரசியல் நோக்கம் இருக்காது. இன்னும் சொல்லப் போனால் பச்சைத் தமிழர் காமராசர் வாழ்க! என்று குரல் கொடுத்துக் கொண்டே ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்துச் சிறை சென்றவர்கள் நாம்.

அறியாமைக்கு எதிரான போர்- இன இழிவுக்கு எதிரான போர் - சமூக அநீதிக்கு எதிரான போர் - பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான போர் - தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்துப் போர் - பெண்ணுரிமைக்கான போர் - என்று நமது போராட்டம் - எல்லாம் அடிப் படையானவை - அடுத்த தேர்தலைப் பொறுத்த தல்ல - அடுத்த தலைமுறை விடியலுக்கான போராட்டம்! நமது போராட்ட நடவடிக்கைகள்தான் எதிர்கால வரலாற்றின் பக்கங்கள் ஜாதி -தீண்டாமை சட்டப்படி அதிகாரப் பூர்வமாகப் படம் எடுத்து ஆடுவது கோயில் கருவறையில்தான்.

பெரியார் கைத்தடியால் தான் அதற்கு மரணவோலை! மக்களை நாம்தயார்படுத்துவோம்; அரசின் சட்டங்கள் நொண்டி அடித்துக் கொண் டாவது பிறகு ஓடி வரும். அதில் ஒன்றும் அய்யம் வேண்டாம்.

போராட்ட வீரர்களின் பட்டியலைத் திரட்டத் தொடங்கி விட்டீர்களா? போராட்ட விளக்க வெளியீட்டினை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

கீழ்த்தஞ்சை தயாராகி விட்டது - நீங்கள்?

                        ----------------------------------”விடுதலை” தலையங்கம் 28-6-2013

28.6.13

மழை வேண்டி யாகமாம்! அண்ணா யாகத்தை ஏற்றுக் கொண்டவரா?

மழை வேண்டி யாகமாம்! 

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே போல கிருஷ்ணா கால்வாய் நீரும் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வராததால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய தண்ணீரும் நிறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறு எல்லா திசைகளிலும் தண்ணீர் கிடைக்காததால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 30 அடிக்கு கீழே சென்று விட்டது. மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் லாரிகளில் அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத் துகின்றனர்.

இந்நிலையில், மழைக்காக சிறப்பு யாகம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மாநகரில் உள்ள 28 கோயில்களில் ஜூன் 20 முதல் வரும் ஒன்றாம் தேதி வரை யாகங்கள் நடத்தப்படுகின்றன.

இந்து அறநிலையத்துறை சார்பில் ஜூன் 20 காலை 7.30 மணி முதல் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், புரசை வாக்கம் கங்காதேஸ்வரர் கோயில், தம்பு செட்டித்தெரு காளிகாம்பாள் கோயில் ஆகிய 4 கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. 

ஒவ்வொரு நாளும் 4 கோயில்கள் வீதம் இந்த யாகங்கள் நடத்தப் படுகின்றன. இவ்வாறு நாளேடுகளில் செய்தி ஒன்று வெளி வந்துள்ளது. இதனைப் படிக்கும் பொழுது எவ்வளவு பாமரத்தனமாக இந்த ஆட்சி நடக்கிறது என்று ஒரு பக்கத்தில் பரிதாபமும் இன்னொரு பக்கத்தில் பகுத்தறிவு ரீதியான சிந்தனையும் எழுகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் வலியுறுத்துகிறது (51A(h).

ஒவ்வொரு குடிமகனின் கடமையே இப்படி இருக்க வேண்டும் என்கிற போது குடி மக்களை ஆளும் ஓர் அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

விஞ்ஞான மனப்பான்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; மதச் சார்பற்ற அரசு குறிப்பிட்ட மதத்தின் (இந்து) கோயில்களில் யாகங்களை நடத்தச் சொல்லுவது எந்த வகையில் சரி? இதன் மூலம் குறிப்பிட்ட மதத்திற்கு இந்த ஆட்சியில் மரியாதையும் ஒரு சார்பும், செல்வாக்கும் அதிகம் என்ற கருத்து உருவாகாதா?

பல மதங்களைக் கொண்ட, மத நம்பிக்கையற்ற மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஓர் அரசு நடந்து கொள்ளலாமா?

மழை பொழிவதற்குக் காரணம் - கடவுள்தான் என்று இந்த அரசு நம்புகிறதா? அப்படி என்றால் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கூறி கருநாடக மாநில அரசை எதிர்த்து எதற்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுகிறார் தமிழ்நாடு முதல் அமைச்சர்?

மேட்டூர் அணையில் தடபுடலாக யாகத்தை நடத்த வேண்டியதுதானே? இது என்ன இரட்டை நிலை? மழை ஏன் குன்றியது என்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு; சுற்றுச்சூழல் பாதிப்பு மிக முக்கிய மான காரணம் என்கிறது அறிவியல். அதெல்லாம் இல்லை வருண பகவானின் கோபம் தான் காரணம் என்கிறது அண்ணா தி.மு.க. அரசு.

அண்ணா ஒரு முழு பகுத்தறிவுவாதி; அண்ணா யாகத்தை ஏற்றுக் கொண்டவரா? பெரியார், அண்ணா கொள்கைகளை திராவிட என்னும் மூடு திரையோடு கொச்சைப்படுத்தும் வேலையில் இந்த ஆட்சி இறங்கி இருப்பதாகத் தெரிகிறது - இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனைக் கேட்டால்கூட மழை பெய்வதற்கும், பொய்த்துப் போவதற்குமான காரணங்களைச் சொல்லி விடுவானே!

ஆனால் இந்த விவரம் ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை என்பது பரிதாபமே!

இதற்கு முன்பே கூட எம்.ஜி.ஆர். ஆட்சியில் மழை வேண்டி புழல் ஏரிக்கரையில் அமர்ந்து கொண்டு குன்னக்குடி வைத்தியநாதய்யரை, அமிர்தவர்ஷிணி ராகத்தில் பிடில் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டதே! கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்ததோ மழை!
ஆட்சியாளர்களின் நம்பிக்கையின் அடிப்படை யிலேயேகூட கேட்கிறோம். மக்களுக்குமழை வேண்டும் என்ற அறிவும், கருணையும் இல்லாதவன்தான் கடவுளா?

யாகம் நடத்தித்தான் அவனுக்குத் தெரிவிக்க வேண்டுமா? அல்லது ஆண்டவனைத் திருப்திப்படுத்த வேண்டுமா?

அப்படி என்றால் அந்த ஆண்டவனைவிட பொறுப்பற்றவன், புகழ்ப் போதைக்கு தற்பெருமைக்கு அடிமைக்காரன் வேறு யாராக இருக்க முடியும்?

மழை பொழிவதற்கு யாகம் நடத்த வேண்டும் என்றால் உத்தரகண்டில் மழை கொட்டித் தீர்த்ததே - வெள்ளம் பெருக்கெடுத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததே - அதனைத் தடுப்பதற்கு எந்த யாகத்தை நடத்த வேண்டுமாம்?

கடவுள் என்ன போக்கிரியா? தேவையான இடத்தில் மழை பொழியாமல் இருப்பதும், தேவையற்ற இடத்தில் கொட்டித் தீர்ப்பதும்தான் கடவுளின் யோக்கியதையா?

2013ஆம் ஆண்டிலும் நிலவில் குடியேற்ற முன்பதிவு செய்து கொள்ள ஆயத்தமாகும் கால கட்டத்தில் ஒரு  மாநில ஆட்சியே மூடநம்பிக்கையின் முகவரியாக  இருப்பது வெட்கக்கேடே!
                  ----------------------------"விடுதலை” தலையங்கம் 27-6-2013

27.6.13

மாங்கனித் திருவிழா! பக்தி வந்தால் புத்திதான் போய் விடுமே!

காரைக்கால் வீதிகளில் எங்கு பார்த்தாலும்  மாம்பழங்கள் சிதறிக் கிடக்கின்றன. பக்தர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது.

என்ன காரணமாம்! ஏதோ மாங்கனித் திருவிழாவாம்! அதற்காக உணவுக்குத் தேவைப் படும் ஒரு பொருள் மிதிபட்டு இப்படி வீணாய்க் கிடக்க வேண்டுமா?
பகுத்தறிவும், மனிதாபிமானமும் கொண்ட வர்கள் இப்படித்தான் கேள்வி எழுப்புவார்கள்.

ஆனால் வைதீகர்கள் இதற்கு வேறு காரணங்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வீணாக்கப்படும் மாங்கனிக்காகக்கூட வீண் பேச்சு - வெட்டிப் பேச்சு சமாச்சாரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்களே!

சரி.. சரி.. அந்தக் கதைக்குள்தான் போய்ப் பார்ப்போமே!

காரைக்காலில் தனதத்தன் தனதத்தன் என்ற ஒருவர் இருந்தார் - அவருடைய மனைவியின் பெயர் தர்மவதி. அவர்களுக்கு ஒரே ஒரு மகள் பெயர் புனிதவதி.
புனிதவதிக்கும் வியாபாரியான பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் முடிக்கப்பட்டது.

திருமணம் ஆனாலும்கூட, அளவு கடந்த சிவன் மீதான பக்தி மட்டும் குறையவில்லை; பொங்கி வழிந்து கொண்டு இருந்ததாம்.

பரமதத்தன் இரண்டு மாம்பழங்களை ஒருவர் மூலம் தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நேரத்தில் பிச்சைக்கார சிவனடியார் அங்கு வந்தார்; அவனுக்குப் புனிதவதி அன்னம் பரிமாறினாள் - அத்தோடு இரண்டு மாம்பழங் களில் ஒரு மாம்பழத்தையும் அந்தச் சிவனடி யார்க்கு அளித்து மகிழ்ந்தார்.

சிறிது நேரம் கழித்து கணவனான பரமதத்தன் வீட்டுக்கு வந்தான். உணவு பரிமாறினாள்; மீதியிருந்தஒரு மாம்பழத்தை தன் கணவனுக்குப் பிரியமுடன் அளித்தாள் புனிதவதி.

மாம்பழம் நன்கு ருசியாக இருக்கவே, இன்னொரு மாம்பழத்தையும் கொண்டு வரும்படிக் கேட்டான்.

கணவனிடம் இல்லை என்று சொல்ல மனம் வராத பாரியாள், 

சமையலறைக்கு சென்று கண்களை மூடிக் கொண்டு சிவனைப் பிரார்த்தித் தாள்.

என்ன ஆச்சரியம்! சாயிபாபா கையசைப்பில் ஏதோ வரும் என்று சொல்லுவார்களே, அதே போல ஒரு மாம்பழம் அவள் கையில் டக்கென்று வந்தது.

அதைத் தம் கணவரிடம் கொடுத்தாள். முதலில் தந்த மாம்பழத்தை விட இது மேலும் இனிப்பாக இருந்ததால் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதுபற்றிக் கேட்டபோது நடந்ததைச் சொன்னாள் மனைவி.

அப்படியென்றால் இன்னொரு மாம்பழத்தை வரவழைத்துக் கொடு பார்க்கலாம் என்று தன் மனைவியைச் சோதனை செய்து பார்த்தான் கணவன்.
சிவனை அவள் பிரார்த்தனை செய்ய, திடீர் என்று ஒரு மாம்பழம் வந்து திடீரென்று மறைந்தும் விட்டதாம்.

தன் மனைவி தெய்வ சக்தியுடையவள் என்று அறிந்து, வீட்டைத் துறந்து வியாபார நிமித்தமாக வெளியூர் சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். கணவனைத் தேடிச் சென்றாள் புனிதவதி. அங்கு தன் கணவனும், அவனது மனைவியும் குழந்தையுடன் முன்னாள் மனைவி புனிதவதியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

தன் கணவனுக்குப் பயன்படாத தனது அழகும், உடலும் உருக்குலைந்து போகட்டும் என்று சிவனை வேண்டினாள் புனிதவதி. சதை உருக்குலைந்து எலும்பாகி முதியவள் ஆனாள் புனிதவதி.

இறைவனைத் தரிசிக்க கயிலாயம் சென்ற போது கண்ணில் கண்ட கற்கள் எல்லாம் அவருக்குச் சிவலிங்கமாகத் தெரிந்ததாம். அதனால் காலை ஊன்றாமல் தலையாலேயே நடந்து சென்றாளாம்.

அப்பொழுதுதான் அம்மையே! என்று சிவன் விளித்து அழைத்துக் கொண்டார்.

அவர் காரைக்காலைச் சேர்ந்தவர் ஆதலால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப் படுகிறார். அங்கு அவளுக்கென்று ஒரு கோயில் இருக்கிறது. அங்குதான் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பவுர்ணமியில் மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது காரைக்கால் அம்மையாரிடம் மாங்கனி வாங்க சிவன் வீதி உலா வரும்போது ஒவ்வொரு வீட்டின் மாடியில் இருந்தும் மாம்பழங்களை எடுத்து வீசுவார்கள். அவற்றைப் பக்தர்கள் முண்டியடித்து பெற்றுக் கொண்டால், அது நற்பேறு!

இப்படியாக ஒரு தலப் புராணத்தை வழக்கம்போல கட்டி விட்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தெருப் புழுதி திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.
துளியோண்டு அறிவைச் செலுத்தினால் கூட சில உண்மைகள் பளிச் சென்று புரியும்.

தன் கணவன் வீட்டுக்கு வந்தபோதோ அல்லது இன்னொரு மாம்பழத்தைக் கேட்ட போதோ உண்மையைப் புனிதவதி ஏன் மறைக்க வேண்டும்? (அதில் ஏதோ குற்றம் இருக்கிறது அல்லவா!)

பிரார்த்தனை செய்து இன்னொரு மாம் பழத்தை புனிதவதி வரவழைத்தது போல, இப்பொழுது எந்த ஒரு தெய்வ பக்தி நிறைந்த ஒரு பெண்ணின் மூலம் வரவழைத்துக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். (அப்படியென்றால் உண்மையான சிவபக்தி உள்ள ஒரே ஒருவர்கூட நாட்டில் கிடையாதா? வெறும் வெளி வேஷம் தானா?)

ஒரு அற்புதத்தைக் கூறுவதன் மூலம்தான் இதுபோல தெய்வ சக்திகளை இன்னொருவர்மீது திணிக்க முடியும்.

கயிலாயம் செல்லும்போது  கண்ணில் பட்ட கற்கள் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது என்று சொல்லப்படுகிறதே - அப்படியென்றால் அந்தப் பெண் கண்டிப்பாக மனநிலை (மூளை) பாதிக்கப் பட்டவராகத் தானிருந்திருக்க வேண்டும்.

காலால் நடக்கக் கூடாது- அப்படி நடந்தால் கல்லாகிய சிவலிங்கங்களை மிதிக்கும்படி நேரும் என்பதற்காக ஒரு பெண்ணானவள் தலையால் நடந்தாள் என்றால் அது எவ்வளவு பெரிய அருவருப்பு - ஆபாசம்! அந்தக் காலத்திலேயே பைஜாமா கண்டுபிடித்து விட்டார்களா என்ற கேள்வி எழாதா?

(புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஒருவர் இந்தப் பகுத்தறிவுக் கேள்வியை எழுப்பிய தற்காக - பதில் சொல்ல முடியாதவர்கள் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயன்று தோல்வி கண்டனர்).

இந்த முட்டாள்தனமான புராணப் பொய்க் கதைக்காக ஒவ்வொரு வருடமும் மாங்கனித் திருவிழா என்று கூறி, மாம்பழங்களை வாரி இறைக்கிறார்கள் என்றால் இது முட்டாள்தனம் மட்டுமல்ல - மக்களுக்கான உணவுப் பொருளை நாசப்படுத்தும் - கிரிமினல் குற்றம் அல்லாமல் வேறு என்னவாம்?

பக்தி வந்தால் புத்திதான் போய் விடுமே!

எங்கே சுற்றினாலும் கடைசியில் ஈரோட்டுப் பாதையின் கேள்விக் கண்ணி வெடியில்தான் சிக்க வேண்டும்.
                  --------------------------------"விடுதலை” 27-6-2013

26.6.13

இந்து என்ற சொல்லுக்கு பொருள்

இந்து  என்ற சொல்லுக்குத் திருடன் என்று பொருள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி விட்டாராம். எங்களுக்கு மானம் போயிற்று என்று குதித்து வழக்கு மன்றம் சென்றுள்ளார்களாம்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்து என்று சொல்லும்போது மானம் போச்சு! என்று குதிக்க வேண்டியவர்கள் ஆத்திர அலை பாய வேண் டியவர்கள் பார்ப்பனர் அல்லாத சூத்திரர்கள் தான்.

காரணம் சூத்திரன் என்றால் ஏழு வகைப் படுவர் என்றும் அதில் ஒன்று விபச்சாரி மகன் என்றும்  இந்து மதத்தின் மிக  முக்கிய சாஸ்திர மான மனுதர்மம் கூறு கிறதே! (மனுதர்மம் அத் தியாயம் 8 - சுலோகம் 415).

கமலபாதி திரிபாதி எழுதிய நூலிலிருந்து எடுத்துக் காட்டினார் மானமிகு கலைஞர் என்பது தான் உண்மை.

பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறு வனம் வெளியிட்டுள்ள ஞானசூரியன் நூலில் (சுவாமி சிவானந்த சரஸ் வதி) இந்து என்ற சொல் இந்தியாவில் உள்ள எந்த மொழியிலும் இல்லாத ஒன்று; அது பாரசீக மொழியைச் சார்ந்தது - அதில் நாகரிகத் தன்மையற்றவர்கள்; திருடர்கள் என்று பொருள் கூறப் பட்டுள்ளதே!
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் (12.6.1982) தி.மு.க. பொதுச் செயலாளர் மானமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் உரையாற்றுகையில் ஆதாரத்துடன் ஒரு தக வலை எடுத்துக் கூறினார்.

இந்தி சப்தசாகர் என்னும் இந்தி மொழிப் பேரகராதியை வாரணா சியில் உள்ள நாக நிலை பிரச்சார சபா என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன் ஆசிரியர்கள் இந்தி மொழிப் பண்டிதர் களான இராமச்சந்திர வர்மா, ஷியாம் சுந்தர் தாஸ் ஆகியோர் ஆவார். இந்த அகராதியில் இந்து என்ற சொல்லுக்குத் தந்துள்ள

பொருள் விளக்கம்.

1)     Black and Ugly
2)     An Uncultural Brute
3)     A decoit
4)     Anything Belonging to India

கருப்பானவன் -அருவருப்பானவன் நாகரிக மற்ற காட்டுமிராண்டி, கொள்ளைக்காரன்  என் றெல்லாம் கூறப்பட்டுள்ளதே - இதற்குப் பதில் சொல்லுவதற்கு வக்கு இல்லாமல், எடுத்து சொல்பவர்கள்மீது காய்வது - ஏன்?
காரணம் கையில் சரக்கு இல்லாததுதானே?

          --------------------- மயிலாடன் அவர்கள் 25-6-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25.6.13

எப்போது தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்?


தினமலரில்  (23.6.2013, பக்கம் 2) ஒரு செய்தி:

எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், இந்து மதத்தை நம்பி, பலர் மீண்டும் இந்து மதத்துக்கு வருவது, தாய் மதத்தின்மீது கொண்ட நம் பிக்கையை பிரதிபலிக்கிறது என, காஞ்சி சங்கர மடத்தின் அறங்காவலர் குழு உறுப் பினர், நாராயணன் பண்டிட் கூறினார்.

பல்வேறு மதங்களில் இருந்து, இந்து மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள, சங்கர மடத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த, 120-க்கும் மேற்பட்டோர், இந்து மதத் திற்குத் திரும்பினர். தாய் மதம் திரும்பியவர்களுக்கு, காஞ்சி சங்கர மடத்தின், அறங்காவலர் குழு உறுப் பினர் நாராயணன் பண்டிட், அபிஷேக நீர் தெளித்து, புதுப்பெயர் சூட்டினார்.

நிகழ்ச்சியில் நாராய ணன் பண்டிட் பேசியதாவது:

பல்வேறு மதங்களில் இருந்து, தாய் மதத்துக்கு திரும்புவது ஆரோக்கிய மானது; வீட்டை பிரிந்த குடும்ப உறுப்பினர்கள், மீண் டும் தாய் வீட்டுக்கு வந்திருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது. தாய் மதத்துக்கு மீண்டும், திரும்பி வந்திருக்கும் உங் களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை. இருந் தாலும், எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இந்து மதத்தை நம்பி, மீண்டும் வந்திருப்பது, தாய் மதத்தின்மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிக் கிறது. இவ்வாறு அவர் பேசி யுள்ளார்.

இந்த 120 பேர்கள் என்ன காரணத்துக்காக இந்து மதத்தை விட்டுச் சென்றார்கள்? இப் பொழுது என்ன காரணத் துக்காக மறுபடியும் இந்து மதத்துக்கு வந்து சேர்ந் துள்ளனர் என்பதை விளக்கி இருந்தால், அது வரவேற்கத்தகுந்த அறிவு நாணயத்தின்பாற்பட்ட ஒன்றாக இருந்திருக்குமே!

தினமலர் சொல்வதில் அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லையே!
பல லட்சக்கணக்கான மக்களை இணைத்துக் கொண்டு பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தைவிட்டு, நாக் பூரில் புத்த மார்க்கம் சென்றாரே - (14.10.1956) அதற்காக அவர் சொன்ன காரணங் கள், எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதி மொழிகள் அப்படியே தானே செங்குத்தாக எழுந்து நிற்கின்றன.
இந்து மதத்தில் ஜாதி - வருண பேதம் ஒழிந்துவிட் டதா? தீண்டாமை விடை பெற்றுச் சென்று விட்டதா?

பார்ப்பனரான காகா கலேல்கர் சொன்னாரே:

தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அதைச் சமய சம்பந் தத்தினால் தான் தீர்க்க முடி யும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங் களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப் போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும் என்றாரே டாக்டர் கலேல்கர்.

அந்த நிலை ஏற்படாத வரை வேறு மதங்களுக்குச் சென்றவர்கள் இந்து மதத் திற்கு மீண்டும் வருவதால் என்ன பயனோ?

கடைசிக் கேள்வி (Tail Piece) வந்து சேர்ந்த வர்கள் எந்த ஜாதியாம்? ஜாதியில்லாதவன் இந்து மதக்காரனே அல்லவே! என்ன பதில்?   

 ------------------- மயிலாடன் அவர்கள் 25-6-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

24.6.13

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?


மனிதன் மின்சார விளக்கைப் பயன் படுத்துகின்றானே தவிர, முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!

இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோதம் என்று சொல்லி மனிதனின் சிந்தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழை யும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.

உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின் தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறிவிருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன் னோர் - பெரியோர் என்கிற காரியங் களில் பயன்படுத்தாததே என்பது புலப்படுகிறது.

பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவ தாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவு வாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என் கின்றேன்.

குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக்கின்றனர். எதற்காக ஒருவன்மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென் மத்தில் அவன் செய்த புண்ணியம் என் கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலையெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனி தனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட்டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென்கிறோம்.

நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய்தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்ப தால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக் கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானுமில்லை, பறையனுமில் லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!

இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளி வான விளக்கம் இல்லை. இவற்றிலி ருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.

சிந்திக்காததனாலே எவன் அதை உபயோகப்படுத்திக் கொண்டு வாழ் கின்றானோ,  அவன்தான் நம்மை யெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக் கின்றான். மற்றவற்றில் பகுத் தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத்திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.

நாம் கடவுள் இல்லை என்று சொன்னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.

பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்ப வில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்ற வனையெல்லாம் கொலை செய்திருக் கிறார்களே! சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தான்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண்டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்று தானே? துலுக்கன் முஸ்லிம் அல்லாத வன்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?

1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற் பட்டதே மதத்தைப் பரப்புவதற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன் னார். அதற்காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கையற்றவர் களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கின் றார்கள்.

நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக்கிடையே இருக்கிற மடைமை, முட்டாள்தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர்களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதே யாகும் என எடுத்துரைத்தார்.

--------------------------------------10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971)

22.6.13

ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் தொழிற்கல்வியா?

மூன்று செய்திகள் மீதான விவாதங்கள்
 • கோயில் பிசினஸ்
 • இந்தியாவின் ஆன்மா?
 • குலக்கல்வி திட்டம் தொழிற்கல்வியா?

செய்தி -1

கன்னியாகுமரியில் திருப்பதி மாதிரி கோயிலுக்கு பூமிபூஜை!
கன்னியாகுமரி, ஜூன் 4: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமையவிருக்கும் சுவாமி ஏழு மலையான் மாதிரி கோயிலுக்கான பூமிபூஜை, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் கடந்த 28.2.2010ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம், கன்னியாகுமரியில் வெங்கடேஸ்வர பெருமாளுக்கு மாதிரி கோயில் கட்ட முடிவு செய்தது.

கோயில் கட்ட 5.5. ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் தானமாக தர முன்வந்தது. இதையடுத்து, கோயில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்தது.
இந்த நிலையில் ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் கோமாதா பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, ஸ்ரீநிவாச பூஜைகள் சங்கல்பம் ஆகியன நடை பெற்றன.

இதையடுத்து, காலை 6.37 மணிக்கு பூமிபூஜை நடத்தப்பட்டது. பூஜையின்போது நவதானியங்கள், நவரத்னம், பஞ்சலோகம் ஆகியன பூஜை நடைபெற்ற இடத்தில் தெளிக்கப் பட்டன. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து வந்தி ருந்த அனைத்துப் பக்தர்களுக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூமி பூஜை நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் கே.பாபிராஜு, நிர்வாக அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம், சென்னை கமிட்டித் தலைவர் ஆனந்த குமார் ரெட்டி, உறுப்பினர்கள் சிவபிரசாத், கிருஷ்ணாராவ், மோகன் ராவ், விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொரு ளாளர் ஹனுமந்தராவ், தமிழக பா.ஜ.க., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சாமி தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
(தினமணி _- 5-_6_-2013, பக்கம் 14)

1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் அகில இந்திய இந்து மாநாடு  நடை பெற்றது. அம்மாநாட்டில்  சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஓர் உண்மையை அவரை அறியாமலேயே கக்கிவிட்டார்.

மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள் மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும் மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் (குஹளுழஐடீசூ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும் பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்று ஒரே ஒரு தடவை உண்மையைச் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

திருப்பதி வெங்கடாஜலபதி இந்தியாவின் மிகப் பெரிய கல் முதலாளி. மொட்டை அடிப்பதால் கிடைக்கும் தலைமுடிகூட கோடிக் கணக்கில் பணத்தை கொண்டுவந்து கொட்டுகிறது.

வியாபாரம் பெருகி விட்டால் பிராஞ்சு ஆபீஸ் திறக்க வேண்டியது தானே - அதுதான் கன்னியாகுமரியில் ஆரம்பம்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் என்றால் அந்த ஊருக்கென்று தலப் புராணம் வைத்திருப்பார்களே - பல அற்புதக் கதைகளை வைத்திருப் பார்களே. இப்பொழுது கன்னியா குமரியில் கட்டப்படும் ஏழுமலையான் கோயிலுக்கு என்ன தல புராணம் சொல்லப் போகிறார்கள்? (இதற்குமேல் எதையாவது அவிழ்த்துவிட்டால்தான் உண்டு)

விசுவஹிந்து பரிஷத் -_ சிறீரங் கத்திலே மாநாடு நடத்தி, வழிபாட்டுக்கு வசூல் செய்யக்கூடாது என்று தீர்மானம் போட்டார்கள்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பக்தி வியாபாரம் படுத்துவிடுமே - பார்ப்பனச் சுரண்டலுக்கு மூடுவிழா நடத்த வேண்டி இருக்குமே - அது நடக்குமா என்ன?
விசுவ ஹிந்து பரிஷத் துகள் வெறும் மாநாடு நடத்தி ஏட்டில் தீர்மானம் போட்டால் போதுமா?

கோயில்களில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மறியல் செய்ய வேண்டியது தானே. செய்வார்களா?

இந்த நேரத்தில் இன் னொன்று நினைவிற்கு வந்து தொலைகிறது.
திருவாளர் சோ. ராமசாமி துக்ளக்கில் கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லி யிருந்தார்.

கேள்வி: சென்னை தீவுத்திடலில் திருப்பதி ஏழுமலையானின் சீனிவாச கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?

பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேசப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை. (துக்ளக், 23.4.2008, பக்கம் 17) என்று எழுதினாரே!

திருவாளர் சோவுக்கே பொறுக்கவில்லை - இந்தப் பக்தி வியாபாரத்தைக் கண்டு. வசூல் செய்து திருவிழாக்களை நடத்தி மக்களை ஈர்க்காவிட்டால் கடவுளைப் பற்றி யார் நினைக்கப் போகிறார்கள்?

பணமும், பிரச்சாரமும் இல்லை யென்றால் கோயிலாவது கடவுளாவது _- வெங்காயமாவது!

செய்தி -2

ஆன்மீகம் பற்றி திருவாளர் குருமூர்த்தி

அகோபில மடம் அழகிய சிங்கரின் வாழ்க்கை வரலாற்றை கவிஞர்வாலி வசன கவிதையால் ஆன நூல் ஒன்றை எழுதி அதன் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

குமுதம் வரதராஜ அய்யங்காரின் ஏற்பாட்டில் தடபுடல்! கலந்துகொண்ட பிரமுகர்களின் பெயர்களைப் பார்த்தால் அந்த விழாவின் கன பரிமாணத்தை சாங்கோபாங்கமாகவே தெரிந்து கொள்ளலாம்.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் நூலை வெளியிட, கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படும் குருமூர்த்தி அய்யர் பெற்றுக் கொண்டுள்ளார்.

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, பாலச்சந்தர், முக்தா சீனிவாசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அக்கிரகாரப் பெருவிழா என்பது சொல்லாமலே விளங்கிவிடும். ஆழ்வார் மய்யம் நடத்தும் திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலந்து கொண்டதும் சரி பொருத்தம் தானே!

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் ஒலிபெருக்கிக்கு முன் வந்து உரை நிகழ்த்தினார்.

அழகிய சிங்கரின் பக்தன் நான். ஆச்சாரியாரின் அனுக்கிரகமும் ஆசியும்தான் என் வாழ்க்கையின் அச்சாணி. என்னை வழிநடத்துவதும் அதுதான். 

ஆன்மீகமும், தெய்வீகமும் இங்கே இணைஞ்சிருக்கு. அதனால் இது ஒரு அற்புத விழா என்று தன் பிறவிக் கடமையைச் செய்தார்.

அடுத்து வந்தாரே பார்க்கலாம் ஆடிட்டர் குருமூர்த்தி. தனக்கே உரிய பாணியில் பேசியதைக் குமுதம் எழுதுகிறது:

ஊழல் செய்தவர்கள் இங்கே கொண்டாடப்படுகிறார்கள். அதைச் செய்தவர்கள் யாருக்கும் கூச்சமில்லை. அதனால் தொடர்ந்து தவறு செய்யலாம்னு நெனைக்கிறாங்க. இருந்தாலும் இன்னமும் இந்தியாவின் ஆன்மா கெடாமல் இருக்கு. அதற்குக் காரணம் ஆன்மீகம்தான் என்று சொல்லி பார்வையாளர்களின் அப்ளாசை அள்ளினார். (குமுதம் _- 19.6.2013 _- பக்கம் 13)

ஆமாம், உண்மைதான் - ஆன்மீகம் என்பது காஞ்சி சங்கராச்சாரியார் வடிவத்தில்தானே நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஆன்மா கெடாததற்கு அவாளின் லோகக்குரு ஜெயேந்திரர் நடமாடிக் கொண்டு இருப்பதுதான் காரணம்.

அவருடைய ஒழுக்கம் உள்ளூரையும், இந்தியாவையும் தாண்டி ஓகோ என்று ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அனுராதா ரமணன் என்ற பார்ப்பன பெண் எழுத்தாளர் ஜெயேந்திரர் என் கையைப் பிடித்து இழுத்தார் என்று கண்ணீரும் கம்பலையுமாக கதறிய காட்சியைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின அல்லவா! ஆமாம், ஆன்மிகம் அங்கே குடிகொண்டுதான் உள்ளது.  விடாது இதே குருமூர்த்தியும் சோ ராமசாமியும் சேர்ந்துகொண்டு அந்தப் பெண் எழுத்தாளர் மீது இல்லாததும் பொல்லாததுமாக பழியைச் சுமத்தவில்லையா? (துக்ளக் - 29-12-2004)

அதற்கு பதிலடி கொடுத்தார் அனுராதா ரமணன். சங்கரமடத்தில் என் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் லோகக்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஆபாசமாக நடந்து கொண்டதைச் சொல்லி தலையில் அடித்துக் கொண்டாரே. இவ்வளவுக்கும் அந்த அம்மையார் பார்ப்பனர்தான். சங்கராச்சாரியார் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர்தான்.

சங்கராச்சாரியாரின் அழைப்பின் பேரில் (ஒரு பத்திரிகை நடத்துவது தொடர்பாக) சங்கரமடத்துக்குச் சென்றபோது தன்னிடம் லோகக்குரு நடந்துகொண்ட ஆபாசமான - கேவலமான செயலுக்குப் பிறகுதான் குமுறினார். காவி உடையில் நடமாடும் காம நரியின் உண்மை உருவத்தின் முகத்திரையைக் கிழித்தார்.

காஞ்சி ஜெயேந்திரரையும் காஞ்சி மச்சேஸ்வரர் கோயில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன்களையும் பார்த்த பிறகும்கூட, இந்தியாவின் ஆன்மாவை ஆன்மீகம்தான் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்று சொல்லுவதற்கு  உண்மையிலேயே அளவுக்கு மீறிய அகம்பாவமும் ஆரியக் குணமும்தான் இருக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.
அது சரி... அது என்ன இந்தியாவின் ஆன்மா? அவர்தான் விளக்கவில்லை. செய்தியை ஓகோ என்று வெளியிட்டு மகிழ்ந்திடும் குமுதமாவது அடுத்த இதழில் எழுதுமா?

செய்தி -3

ராஜாஜியின் குலக்கல்வி திட்டம்
ராஜாஜி 1953 மே முதல் புதிய கல்வித் திட்டம் கொண்டுவந்தாராம். அதைக் குலக்கல்வி திட்டம் என்று தவறான பெயர் கொடுத்துக் கெடுத்து விட்டார்களாம் - கூறுகிறது தினமலரின் வாரமலர் (16.6.2013 -பக்கம் 8,9)
80 ஆண்டுகளுக்குப் பிறகும் அவாளின் ஆச்சாரியார் அரசியலி லிருந்து விரட்டப்பட்ட ஆத்திரத்திலிருந்து அவாள் விடுபட வில்லை என்று தெரி கிறது.

கல்கி இதழும் இதே பாணியில் எழுதியதுண்டு. ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒருவேளை தொழில் என்றார். அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளை யும், ஆசிரியர்களை யும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்து வத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும் அதில் இழிவு இல்லை என அறிவுறுத் தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது. தொழில் உற்பத் திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது. வேலையில்லாத் திண்டாட் டத்தைப் போக்குவது.

தொழிற் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாய் இருந்தது அவ்வளவுதான். (கல்கி - 1980 ஜூலை)

ஆச்சாரியாரின் அந்தக் குலக்கல்வி திட்டத்தின் காரணமாக ஆயிரங் கால் சிங்கமாக தந்தை பெரியார் சீறி எழுந் ததன் விளைவாக ஆச்சாரியாரின் அரசியல் பொதுவாழ்க்கையே அஸ்தமனமானது. அந்த ஆத்திரம் அவாளை இன்று வரை சுளுக் கெடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஆச்சாரியார் கொண்டு வந்தது என்னவோ தொழிற் கல்வி திட்டமாமே - அப்படியென்றால் அவனவன் அப்பன் தொழிலைத்தான் பையன் செய்ய வேண்டும் என்று நிபந்தனை வைத்தது எந்த அடிப்படையில்?
பள்ளிக்கூடங்களிலேயே தொழிற் கல்வியைக் கற்பிக்கக் கூடாதா? சிரைக்கிறவன் மகன் சிரைக்கவும், வெளுக்கிறவன் மகன் வெளுக்க வும்தான் கற்றுக்கொள்ள வேண்டுமா? பார்ப்பார வீட்டுப் பிள்ளைகள் எந்தத் தொழிலை செய்யுமாம்? பள்ளியில் படிக்கும் பொழுதே வக்கீல் தொழிலைச் செய்வார்களா? உயர்நிலைப் பள்ளி யில் படிக்கும் பொழுதே பாப்பாரப் பிள்ளைகள் டாக்டர் தொழிலைச் செய் வார்களா?

தந்தை பெரியார் கடுமையாக எதிர்த் தார் என்பது உண்மை தான். பெட்ரோலும், தீப்பந்தமும் தயாரா கட்டும் _ - அக்ரகாரத் திற்குத் தீ வைக்க  நாள் குறிப்பிடும் வரை காத்திருங்கள் என்று சொன்னது உண்மைதான்.

ஆச்சாரியாரின் அந்தக் கல்வித் திட்டத்தை அவர் சார்ந்த காங்கிரஸ் காரர்களே _ காமராசர் உட்பட எதிர்த் தார்களே. - அதற்கு எந்த உள்நோக் கத்தைக் கற்பிக்கப் போகிறது இந்தக் கல்கி, தினமலர் வகையறாக்கள்?

இன்னொரு கேள்விக்கு நாணய மாக பதில் சொல்லட்டும் பார்க்கலாம். 6000 கிராமப் பள்ளிகளை ஏன் இழுத்து மூடினார் ராஜாஜி? 1937இல் வந்தபோதும் 2500 கிராமப் பள்ளிகளுக்கு ஏன் மூடுவிழா நடத்தினார்? 1952இல் வந்தபோதும் பள்ளிகளை இழுத்து மூடினாரே. அதுகூட தொழிற்கல்வியைப் பிள்ளை களுக்கு ஊட்டத்தானோ!

தினமலர், கல்கி மட்டுமல்ல _- துக்ளக்கிலும் திருவாளர் சோ அப்படித்தான் எழுதினார்.

ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர். (துக்ளக் _- 15.7.1988) என்று அழுது புலம்பினாரே திருவாளர் சோ.

பார்ப்பனர்களைப் புரிந்துகொள்ள இது ஒன்று போதாதா?

----------------- மின்சாரம் அவர்கள் 22-6-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

21.6.13

பக்தர்களே, சிந்திப்பீர்!

வடமாநிலங்களில் விளம்பரம் பெற்ற கோவில் களுக்குத் தரிசனம் செய்யச் சென்ற பக்தகோடிகள் கடும் மழை - வெள்ளம் காரணமாகப் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பதற்காக வருத்தப்படுகிறோம் - பரிதாபமும் அடைகிறோம்.

வெள்ளத்துக்கு 150 பேர் பலி என்றும், 5 ஆயிரம் பேர் கதி என்ன என்றும் அலமரும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமல்லர்; அவர்களின் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சென்றவர்களின் நிலை என்ன என்ற வினாக்குறியை எழுப்பி வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

மானசரோவர் யாத்திரை தடை செய்யப் பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ள வர்களுக்குப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நடந்தாலும் ஓர் உண்மையைப்பற்றிப் பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. பக்தர்கள் யாத்திரைக்காகச் சென்ற இடம்பற்றி அவர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது?

சக்தி வாய்ந்த கடவுள் - அந்தக் கடவுள்கள் குடிகொண்டு இருக்கும் அந்தக் கோவில்களுக்குச் சென்றால் நல்ல வரம் கிடைக்கும்; தங்களின் வாழ்க்கைச் சுமைகள் தீரும் - வளமான எதிர்காலம் அமையும், தாங்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும்  நோய் நொடியின்றிச் சுகமாக நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்த்துத் தானே இந்தக் கோவில்களுக்குச் செல்லுகிறார்கள்.

இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பேகூட கும்பமேளா, கும்பகோணம் மகாமகம், அய்யப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் என்று சொல்லி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலியானது வாடிக்கையான ஒன்றுதானே!
கடவுள்கள் தங்களைக் கைவிட்டுவிட்டாரே என்று ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை? கடவுளுக்கு சக்தி என்று ஒன்று இருந்தால், அவரை நம்பி வந்த மக்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்பதுபற்றியெல்லாம் நியாயமாகச் சிந்திக்க வேண்டாமா?

கடவுள் நம்பிக்கை என்னும் போதை அளவுக்குமீறி குடிகொண்டு இருப்பதால்தான் - அதைப்பற்றிச் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

பக்தி என்பது மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்கப்படவேண்டிய, சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாகும்.
பக்தி சிறப்பிதழ்களை வெளியிடும் பத்திரிகை முதலாளிகள், எழுத்தாளர்களாவது இதைப்பற்றி எழுதவேண்டாமா?  மாறாக என்ன எழுதுகிறார்கள்? நேற்றைய  நாளேடு ஒன்றின் தலைப்பு என்ன தெரியுமா?
மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இடையே கேதார்நாத் கோவில் மட்டும் சேதமின்றித் தப்பிய அதிசயம்! என்று தலைப்பிட்டுச் செய்தியை வெளியிடுகிறது.

இதன் நோக்கம் என்ன? கடவுளை நம்பி வந்தவர்கள் பலியாகிவிட்டார்களே, பல துன்பங் களுக்கு ஆளாகிவிட்டார்களே - கடவுள் சக்தி என்ன என்ற சிந்தனை இயல்பாக வந்துவிடும் அல்லவா? - அந்த நிலையைப் பக்தர்கள் அடைந்து விடக்கூடாது என்பதற்கான திசை திருப்பும் யுக்திதான் இத்தகைய செய்திகள்.

இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. கடவுள் தன்னை மட்டும்தான் காப்பாற்றிக் கொள்வாரா? தன்னை நாடிவந்த பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அல்லது நல்ல மனம் கடவுளுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகின்றதே.
அய்யப்பன் கோவிலும், சிறீரங்கம் கோவிலும் தீப்பற்றி எரிந்ததுண்டே! காளகஸ்தி கோவிலின் நெடுங்கோபுரம் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தது உண்டே! அவற்றிற்கு என்ன பதிலாம்?

பக்தர்களே, கடவுள் என்று நம்பி கோவிலில் அடித்து வைக்கும் பொம்மைக்கு, சிலைகளுக்குச் சக்தி ஏதும் இல்லை - இல்லவே இல்லை - நம்பி ஏமாறாதீர்கள்!
                       ------------------------------"விடுதலை” தலையங்கம் 21-6-2013

காந்தியைக் கொல்வோம்!பரபரப்பு நூல்-புதிய தகவல்கள்

பரபரப்பு நூல்-புதிய தகவல்கள்


  காந்தியைக் கொல்வோம்!
  காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய ”காந்தியைக் கொல்லுவோம்”  என்கிற நூல் சமீபத்தில்  பரபரப்பினை  உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான்  எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது,  சமீப காலங்களில் இந்துத்துவ  போன்ற  அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார்கள். கோட்சேவை ஒரு வீரப்  புருஷனாகச் சித்தரித்து வருகின்றனர்.
  காந்தியின் தூண்டுதலால்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உண்டாகியதாகவும், சுதந்திர இந்தியாவை வலியுறுத்தி 55 கோடி ரூபாயினைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வைத்தது காந்திதான் என்றும், எப்பொழுதுமே சிறுபான்மை இசுலாமியர்களுக்கே காந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தியதும், அதனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு எந்தக் கேடு வந்தாலும் கவலை கொள்ளாமல் இருந்தது போன்றவை இந்துமத வெறியர்கள் காந்தியின் கொலைக்கான காரணங்களாகக்   கூறும்  முக்கியக் குற்றச்சாட்டுகள். இதைப் பற்றி எந்தக் கவலையும் சொரணையும் இல்லாமல் காந்தியவாதிகளும், காங்கிரஸ்காரர்களும் வாளாக இருப்பதுதான் வேதனை என்கிறார் துசார் காந்தி. இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் மீண்டும் பார்ப்பனிய பனியா  கூட்டங்கள் தலைதூக்கி இந்து ராச்சியம் என்கிற பெயரில் மீண்டும் பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்திவிடுவார்கள் என்கிற கவலையோடும் கோபத்தோடும் எழுதப்பட்ட நூல்தான் காந்தியைக் கொல்லுவோம் என்கிறார். ஏன் இந்த விந்தையான தலைப்பு என்று கேட்கத் தோன்றும். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே மற்றும் அவனது கூட்டாளி ஆப்டே பூனா நகரத்தில், இந்து மகாசபையின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்.

  இவர்கள் அக்ரனீ என்கிற நாளிதழை நடத்தி வந்தார்கள். (இந்நாளிதழ்  தடை செய்யப்பட்டவுடன் இந்து ராஷ்டிரா  என்கிற வேறு பெயரில் அதனை மீண்டும் வெளிக்கொண்டு வந்தனர்). இப்பத்திரிகை மூலமாக அவர்கள் இசுலாமிய எதிர்ப்பு விஷக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். அத்துடன் சர்வர்கரின்  நச்சுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களது பிரதான வேலையாக இருந்தது. இந்தப் பத்திரிகையை நடத்த அவர்கள் இசுலாமிய வெறிக் கொண்ட பெரும் பணக்காரர்களான மார்வாரிகள், பனியாக்கள் போன்றோரை நம்பி இருந்தனர். இவர்களிடம் இசுலாமியர்களை எதிர்த்து இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்று வாய்ச் சவடால்விட்டு பணத்தைக் கறந்து பத்திரிகையினை நடத்தி வந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பண முதலாளிகள் பணம் தருவதை நிறுத்திவிட்டனர். இவர்களது நம்பகத்தன்மை பெருமளவில் குறைந்து வருகின்ற சமயத்தில், ஏதாவது செய்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள  யோசிக்கின்ற வேளையில், கோட்சே நாம் ஏன் காந்தியைக் கொல்லக் கூடாது எனக்  கேட்கிறான். அந்தக் கேள்வியே  இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத இரத்தக் கறையை ஏற்படுத்தியது. துசார் காந்தி இதனையே தன் நூலுக்குத் தலைப்பாகக் கொள்கிறார்.
  காந்தியைக் கொன்றதற்குக் கூறப்படும் காரணங்கள் புதியவை ஒன்றும் அல்ல. ஏற்கெனவே கோட்சே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம்தான். அதைத்தான் இன்று இந்துமத வெறியர்கள் தூசி தட்டி எடுத்துள்ளனர். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத _ பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்ட கோட்சே பக்கம் பக்கமாய் மணிக்கணக்கில் புலமை வாய்ந்த ஆங்கிலத்தில் பேசியதுதான் விந்தை. அவன் நீதிமன்றத்தில் படித்த உரையினை நன்றாக ஆராய்ந்தால் தெரியும் அது யாருடைய உரை என்பது. அய்யமின்றி சர்வர்கரின் எழுத்தேதான். சர்வர்கர் ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் புலமை பெற்றவர். கேட்போரைக் கட்டியிழுக்கும் சொல் வீச்சினை உடையவர், அத்தகைய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்தான் படிப்பறிவற்ற பாமர இளைஞர்களை அவர்தம்பால் இழுத்தது. இப்படித்தான் மராட்டிய மாநிலத்தில் இந்து மகாசபை,  போன்ற அமைப்புகள் வளர்ந்தன.
  காந்தியைக் கொன்றதற்காகச் சொல்லப்பட்ட  காரணங்கள் எல்லாம் பொய்யானவை மற்றும் ஒன்றுக்கும் உப்புப்  பெறாதவை. ஏனெனில், காந்தியை  ஒரு முறை அல்ல, அய்ந்து முறை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. 1934இல் இருந்து இந்து மத வெறியர்கள் முயற்சித்துள்ளனர். அச்சமயம் பாகிஸ்தான் என்றோ பிரிவினை என்றோ பேச்சு எழாத நேரம். முஸ்லிம் லீகுகூட பிரிவினையினைப் பற்றி  நினைத்துப் பார்க்காத காலகட்டம். முஸ்லிம் லீகும், முகமது அலி ஜின்னாவும் பிரிவினை கேட்கத்  தூண்டியதே காங்கிரசும் அதன் தலைமையும்தான். நேரு தலைமையில் 1946இல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முடிவின்படி, சுதந்திர இந்தியாவின் நிர்வாக விஷயங்களை காங்கிரஸ் கட்சியே முடிவு செய்யும், மற்றும் எந்த அமைப்புடனும் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்கள் செல்லாது என முடிவு செய்தனர். இது குறிப்பாக முஸ்லிம் லீகுக்கு விடப்பட்ட சவால். இனி காங்கிரஸ் கட்சியையும் நேருவையும் நம்பி ஏமாற முடியாது என ஜின்னா தனி நாடு கோரிக்கையை வைத்தார். இது நடந்தது 1946இல் அப்படி இருக்க 1934லேயே காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தால் அதற்கு வேறு காரணங்கள்தானே இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் காந்தி பிரிவினையை எதிர்த்தவர். பிரிவினைக்குப்பின் ஏற்பட்ட உயிர் இழப்புகள் அவரை பாகிஸ்தானிற்குச் சென்று அவர்களிடம் பேசி எப்படியாவது மீண்டும் இந்தியாவுடன் இணைக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது. அடுத்து, 55 கோடி ரூபாயைப் பொறுத்தவரை பாகிஸ்தானிற்குக் கொடுப்பதைத் தவிர  இந்தியாவிற்கு  வேறு வழியே இல்லை. ஏனென்றால், பிரிவினை சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தமானது மொத்தமுள்ள பணத்தினை நிலத்தின் அளவிற்கு ஏற்ப இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது என்பதாகும். இதில் முதல் தவணையாக 20 கோடி ரூபாய்  ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் காஷ்மீர் யாருக்கு என்பதில் இரு நாடுகளுக்கும் பிரச்சினை உருவாகியது.
  மீதி ரூபாய் 35 கோடியைக் கொடுத்தால் பாகிஸ்தான் அப்பணத்தை  இந்தியாவினை எதிர்க்க ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்திவிடும் என அச்சப்பட்டு, பணத்தைத் தரக்கூடாது என காங்கிரஸ் அரசாங்கம்  முடிவு செய்தபொழுது, பன்னாட்டு அழுத்தம், மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போய்விடும் போன்ற  காரணங்களால்  நேருவின் அரசாங்கம் முடிவை மாற்றிக் கொண்டது. காந்திக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை.
  உண்மை இப்படி இருக்க, காந்தியை ஏன் கொல்ல முயற்சிக்க வேண்டும்?
  சர்வர்கர், கோட்சே, ஆப்டே ஆகியோர் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்கள். இவர்கள் பார்ப்பனர்களில்  தங்களை உயர்வாக கருதிக் கொள்பவர்கள். சித்பவன் என்றால் புனிதத் தீயில் புத்தாக்கம் பெற்றவர்கள் எனப்  பொருள்படும். தாங்கள்  சுத்தமான ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என நம்புபவர்கள்.  மகாராஷ்டிரா மாநிலம் எப்பொழுதுமே இந்து அடிப்படைவாதக்  கொள்கைக்கு ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது. இதற்கு வித்திட்டவர் பால கங்காதர திலகர். இந்தியாவில் மக்களிடம் மத உணர்வைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முடியும் என்பதற்கு முதன்முதலாக வழிக்கோலிட்டவர் திலகர். அந்தத் திலகரின் உரைகளைக் கேட்டும் எழுத்தினைப் படித்தும் உருவானவர் சர்வர்கர். கோட்சே, ஆப்டே, கர்கரே, பட்கே, மதன்லால் போன்ற இளைஞர்கள் சர்வர்கரினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். சர்வர்கருக்கு  இந்தியாவை இந்து-இந்தியாவாக மாற்ற வேண்டும் என்பது கனவு. அப்படி உருவாக்கப்படும் இந்து ராஷ்டிராவிற்கு தான் தலைமை ஏற்க வேண்டும் என்பது அவரது ஆசை. அவரது கனவிற்கும் ஆசைக்கும் குறுக்கில் நிற்பது காங்கிரசும் காந்தியும்.
  அதனால் காந்தி ஒழிக்கப் படவேண்டும் என்ற நச்சு விதையினை அவர் தொடர்ந்து இளைஞர்கள் மனதில் விதைத்து வந்தார். அதனைத் தவிர இன்னொரு காரணமும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி, பிற ஜாதியினரின் வளர்ச்சி இவைகள் எல்லாம் பார்ப்பனியத்திற்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. குறிப்பாக, வருணாசிரம தருமம் வீழ்த்தப்படுவதாகக் கருதினர். காந்தியின் பேச்சும் எழுத்தும் தொடக்கத்தில் வருணாசிரம தருமத்தை ஆதரித்து வந்தாலும், பின் அவரது போக்கு மாறத் தொடங்கியது. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் இந்து மதம் மாற்றம்  பெற வேண்டும் என காந்தியார் விளம்பினார். கோயில் விபச்சாரம் செய்யும் இடமாக உள்ளது என காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொறுப்பார்களா சனாதனிகள்! காந்தியை ஒழிக்க முடிவு செய்துவிட்டனர். ஆகவே, காந்தியைக்  கொல்ல  இதுதான்  காரணமேயன்றி வேறு ஒன்றுமில்லை.
  தாய் தந்தை அற்றவர்கள்,  கல்வியில் தோல்வியுற்றவர்கள் , சிறு வயதில் பிரச்சினையான வாழ்க்கையைக் கொண்டவர்கள் இவர்கள் எல்லோருக்கும் சர்வர்கரின் பேச்சு அருமருந்தாய் இருந்தது.. பிடிப்பற்ற அவர்களுக்கு சர்வர்கர் உற்ற தோழனாய் , தனயனாய், தந்தையாய் விளங்கினார். துசார் காந்தியை மனம் நோகச் செய்தது காந்தியின் உயிரைப் பாதுகாப்பதில் போலீஸ் மற்றும்  அரசு காட்டிய மெத்தனங்கள். 1948, ஜனவரி 20ஆம்  தேதி பிர்லா  மாளிகையில் கையெறி குண்டு மற்றும் துப்பாக்கி மூலமாக காந்தியை வீழ்த்த கொலையாளிகள் முயற்சிக்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்து மதன்லால் என்கிற கூட்டாளியைக்  காவல் துறை கைது செய்கிறது. அவனது வாக்குமூலத்தில் எல்லா உண்மைகளும் வெளிவருகின்றன. அவன் கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே போன்றவர்களின் பெயர்களை போலீசிடம் சொல்லிவிடுகிறான். 24 மணி நேரத்தில் டெல்லி காவல் துறையினர் அவனிடமிருந்து பெரும்பான்மையான தகவல்களைப் பெற்றுவிடுகின்றனர்.
  இந்தக் குற்றத்தை விசாரணை செய்யும் சிறப்பு அதிகாரி சஞ்சீவி, எப்படியாவது தப்பிச் சென்ற மற்றவர்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மதன்லாலின் வாக்குமூலத்துடன் இரு காவலர்களைப் பம்பாய்க்கு அனுப்புகிறார். ஆனால், பம்பாயில் இந்த காவல் துறை உயர் அதிகாரி நகர்வாலா டெல்லியிலிருந்து வந்த தகவல்களைப் புறம்தள்ளி காவலர்களை டெல்லிக்குத் திரும்பிச் செல்லும்படி விரட்டிவிடுகிறார். அதுமட்டுமின்றி, நகர்வாலா இன்னொரு தவறும் செய்கிறார். மதன்லால் கைது செய்யப்பட்ட செய்தியினை நாளிதழில் படிக்கும் டாக்டர் ஜெயின் என்பவர், மதன்லாலும் இன்னொரு கூட்டாளி கர்கரேயும் தன்னை ஜனவரி 14ஆம்  தேதி  தன் வீட்டில் சந்தித்து காந்தியைக் கொல்லப் போகிறோம் என்று கூறியதை நினைவுகூர்ந்து அச்செய்தியினை மாநில உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் (பின்னாளில் இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பதவி வகித்தவர்) பகர்கிறார். செய்தியைக் கேட்டுப் பதற வேண்டிய மொரார்ஜி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிடுகிறார். பின் மொரார்ஜி, நகர்வாலாவைத் தன் வீட்டிற்கு அழைக்க, அவர், தான் தற்சமயம் வேறு ஒரு பணியில் இருப்பதாகக்  கூறுகிறார். அதற்கு மொரார்ஜி, தான் மாலை ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால்  இரயிலடியில் சந்திக்கும்படி விளிக்கிறார். இரயிலடியில்  செய்தியைக் கேட்டறிந்த நகர்வாலா, முறையான _ ஒழுங்கான விசாரணையினைச் செய்யத்  தவறிவிடுகிறார். இதில் கொடுமையென்னவெனில், கர்கரே என்பவன் ஏற்கெனவே போலீஸால் வேறு ஒரு குற்றத்திற்காகத் தேடப்பட்டு வருபவன்.
  இதற்கிடையில் வெறும் கையுடன் டெல்லி திரும்பிய காவலர்கள் பம்பாயில் நடந்ததை சிறப்புக் காவல் அதிகரி சஞ்சீவிடம் தெரிவிக்கின்றனர். இந்த அதிகாரியும் பம்பாய் காவல் துறையின் போக்கினை மத்திய  உள்துறை அமைச்சர் பட்டேலிடமோ வேறு முக்கிய அமைச்சர்களிடமோ சொல்லி அதைச் சரி செய்து கொள்ளாமல் ரானே என்கிற இன்னொரு அதிகாரியை மீண்டும் பம்பாய்  அனுப்புகிறார். விமானத்தில் பறந்து செல்ல வேண்டிய ரானே ரயிலில் செல்ல முடிவெடுக்கிறார். (பின்னாளில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுது, விமானப்  பயணம் தனக்கு அச்சம் அளிக்கக்கூடியது. எனவே, அதைத் தவிர்த்ததாகக் கூறுகிறார். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது.) அதுவும் டெல்லியிலிருந்து அலகாபாத் வழியாக ஏறத்தாழ 36 மணி நேரம் பயணித்து பம்பாய் நகரை அடைகிறார். இடையில் அலகாபாத்தில் மதச்  சடங்கிற்காக இறங்கி நேரத்தை வீணடிக்கிறார். இவர் பம்பாய் போய்ச் சேரும்பொழுது கொலையாளிகள் பம்பாயை விட்டு வெளியேறி டெல்லி நகரை அடைகின்றனர்.
  காவல்துறையினரின் அலட்சியப் போக்கு இங்ஙனம் என்றால் ஆட்சியாளரின் போக்கு இன்னும் வித்தியாசமானது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் இந்து அடிப்படைவாதியாகத்தான் இருந்தார். தான் பிரதம மந்திரியாக முடியாமல் போனதற்கு காந்தி முக்கியக்  காரணம் என்று கருதினார். காந்தியின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் கூடுதலான எச்சரிக்கையோடு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர், 30 கோடி மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய துறையின் தலைவர், நாட்டின் தந்தை காந்திக்குப் பாதுகாப்பு அளிக்கத்  தவறினார். காந்தி, தன்னைச் சந்திக்க வருபவர்களை பாதுகாப்பு என்கிற பெயரில் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என கண்டிப்பாகக் கூறியிருந்தார். என் பாதுகாப்பு இறைவனின் கைகளில். ஆகவே இறைவனுக்கு உகந்தாத  காரியத்தை நான் செய்ய மாட்டேன் என்று தடுத்துவிட்டார். (இறைவனைப் பாதுகாக்கவே காவலர்களும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளும் தேவை என்பதை காந்தியார் உணர மறந்ததுதான் வேடிக்கை). சரி, அப்படித்தான் காந்தியின் விருப்பப்படி இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சாதாரண உடை அணிந்த காவலர்களை பிர்லா இல்லத்தில் உலவவிட்டிருந்தால், கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே ஆகியோரை எளிதாகப் பிடித்திருக்கலாமே?

  ஜனவரி 30 அன்று கொலை நடப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்கூட கோட்சே பிர்லா  இல்லத்தில் வேவு பார்த்தானே, அதைக்கூடத் தடுக்க முடியவில்லையே. பட்டேலின்  அலட்சியப் போக்கு காந்தியின் உயிரைப் பலி கொண்டு விட்டது.
  இன்றைக்கு இந்துத்துவக் கூட்டம் பட்டேலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது. பிரிட்டிஷாரின் பிரிவினைக்கான திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் பட்டேல் முக்கியமானவர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு ரூபாய் 55 கோடி கொடுக்கும் தீர்மானத்தில் முதலில் கையெழுத்துப் போட்டவரும் பட்டேல்தான். அப்படியிருக்க, இந்துத்துவச் சக்திகள் பட்டேலை புனித உருவமாகச் சித்தரிக்க முயல்வதும், காந்தியின்மீது  வீண்  பழி சுமற்றுவதும்  உள் நோக்கமுடையது. காந்தியின் செல்லப்  பிள்ளையான நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில், கொஞ்சம் கொஞ்சமாக காந்தியின் கொள்கைகளிலிருந்தும் காந்தியிடம் இருந்தும் விலகிச் சென்று கொண்டிருந்தார். பஞ்சாப் மாநிலம் மேற்கு கிழக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்ற முக்கியமான செய்தியினைக்கூட காந்தியிடம் விவாதிக்கத் தவறினார். நேருவிற்கும் ஏனைய காங்கிரஸாருக்கும் உயிரோடு இருக்கும் காந்தியைவிட காந்தி என்கிற பிம்பம்தான்  வசதியாக இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை காந்தியை  ஒரு சுமையாகத்தான் கருதினார்கள்.
  ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூல் படிப்பதற்கு மிக எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. குறிப்பாக ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி காந்தி கொல்லப்படும்  வரை, நாள்தோறும் நடந்த நிகழ்வுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளின் திட்டம், அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள், கொலையை நிறைவேற்றுதல் என்று அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருப்பது துசார் காந்தியின் சிறப்பு. இந்திய வரலாற்றுப் பக்கங்களை_ குறிப்பாக சுதந்திரம் பெற்ற காலம், நாட்டின் பிரிவினை, ஆட்சியாளரின் போக்கு, இந்துவெறியர்களின் ஆட்டம், காந்தியின் கொலை, வழக்கு, வாக்குமூலம், தண்டனை  என பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள உதவும் அற்புதமான பொக்கிஷம்.
  ---------------- வெளிச்சம் ----------"உண்மை”  ஜூன் 16-30 - 2013