Search This Blog

30.6.16

ஆஸ்பிரின் மாத்திரையின் மகிமை அறிவீர்களா?

'ஆஸ்பிரின்' மாத்திரையின் மகிமை அறிவீர்களா?


'ஆஸ்பிரின்' - மாத்திரை வெறும் தலைவலிக்கான மாத்திரை என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால், இப்போது மருத்துவ உலகில், இந்த 'ஆஸ்பிரின்' உயிர் காக்கும் - மாரடைப்பைத் தடுக்க உதவிடும் முக்கியப் பணி செய்யும் மாத்திரை என்றே அங்கீகரிக்கப்பட்டு, இதய நோய், நிபுணர்களான மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர் அல்லது Stent   எனப்படும் ரத்தக் குழாயில் அடைப்பை தடுக்கும் தடுப்பான் உள்ளே பொருத்தப்பட்ட பிறகும் மருத்துவர்கள் இதனை நாள்தோறும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றே கூறுவது.

75mg அளவுள்ள மாத்திரை - அமெரிக்காவில்Bayer போன்ற மருந்து தயாரிப்பாளர்கள் 'குழந்தைகளுக்கான ஆஸ்பிரின்' 'பேபி ஆஸ்பிரின்' என்பவை 81 எம்.ஜி. அளவுக்கு தயார் செய்து, தருகின்றனர்; 75 என்பதற்குப் பதிலாக 81 எடுத்துக் கொள்ளலாம் தவறல்ல என்றே பல மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

பொதுவாகவே மூச்சுத் திணறல், நெஞ்சழுத்தம், கனத்தல் இதுபோன்ற இறுக்கம் ஏற்படுகிறதோ என்று நினைக்கையில், முதல் உதவி சிகிச்சை போல உடனடியாக ஒரு  ஆஸ்பிரின் மாத்திரையை விழுங் குதல் நல்லது.

'ஆஸ்பிரின்'பற்றி அண்மையில் 'Men's Health' என்ற ஒரு ஆங்கில மாத ஏட்டில் படித்தேன்.  அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன் அளிக்கும் அல்லவா!
ஆஸ்பிரினின் சக்தி அதிகம் இதன் பயன் பல வகைப்பட்டதாகும்.

ஆஸ்பிரினில் உள்ள கலவைகளில் ஒன்று முக்கியமாக 'சேலிசிலிக் ஆசிட்' (Salicylic acid) ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும் சக்தியுள்ளது. அதன் எரிச்சலையும் (inflamation) தோல் சிகப்பாகும் (redness) தன்மையையும் குறைக்கிறது என்றார் - அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் கவிதா மேரிவாலா, (அமெரிக்க தோல் சிகிச்சை நிபுணர் இவர்).

1. முகப் பரு போக்க: 


முகப்பருவினை இந்த ஆஸ்பிரின் கலவையில் உள்ள ஒரு கூறு, தடுக்கிறது. 'பிட்சா' முகம் போல உள்ளவர்களுக்கு, ஒரு ஆஸ்பிரினை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து, கலக்கி, (பாலைப் போல வெள்ளையாகும்) படுக்கப் போகும் முன் தடவிக் கொண்டு படுத்தால் முகப் பருக்கள்தானே சுருங்கும் வாய்ப்பு இதன் சக்தி மூலம் வரும்!
கொசுக்கடியால் ஏற்பட்ட முகத்தடிமன்கள், சிவப்பாகியுள்ள சீழ் கட்டிகள் போல உள்ளவைகளுக்கும்கூட இது பயன்படுத்தப்படுமாம். அரிப்பினையும் இது குறைக்க உதவும்.

2. புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க:

புற்று நோய் செல்கள் கெட்டியான ரத்த அணுக்களில் பரவுவதைத் தடுக்க, அதன் பசைத் தன்மையைக் குறைக்க (by making platelets less sticky) ஆஸ்பிரின் மாத்திரை ரத்தத்தின் உறையும் தன்மையைக் குறைக்கும் அல்லது தடுக்கும் சக்தியுள்ளதால் (ஆஸ்பிரினை ''Blood Thinner' என்றே கூறுவர்) புற்றுநோய் செல்கள் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் மூலம் உள்ளே நுழைவதைத்  தடுக்க உதவிடும்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்த உண்மை என்ன தெரியமா?
75mg 'ஆஸ்பிரின்' மாத்திரையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால் புற்று நோய்மூலம் ஏற்படும் இறப்பு 20 விழுக்காடு குறைகிறது என்பதாகும்.

இதன் மூலம் இறப்பு வாய்ப்பு மேலும் அடுத்த 15 ஆண்டுகள் தள்ளிப் போகச் செய்யக் கூடும் என்பதும் ஆய்வின் முடிவாகும்.

3. திட்டுகளை மிருதுவாக்க:


கையிலும், கால்களிலும் உள்ள கடுமையான சில திட்டு திட்டாக உள்ள பகுதிகளையும் (patches) மிருதுவாக்கிடும் தன்மை ஆஸ்பிரினுக்கு உண்டு.
மூன்று ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடி செய்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து குழைத்து 'அத்திட்டுக்களின்மீது தடவி வந்தால்,   அவை மிருதுவாக அப்புறப்படுத் தும் அளவுக்கு வரக் கூடும்).

4. பருக்களைப் போக்க:

ஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள 'சேலிசைலிக் ஆசிட்' பருக்களை போக்குவ தோடு மயிரில் உள்ள சிக்குகளையும்  (Cure Dandruff) போக்கவல்லது. தோல் காய்ந்த நிலையில் உள்ளதால் தலையின் பின்பகுதி (Scalp) ஷாம்புவுடன் இரண்டு ஆஸ்பிரின் மாத்திரையை கரைத்து முடிமேல் தடவி 30 வினாடிகள் அப்படியே விட்டு விடுங்கள்.  இப்படி வாரத்தில் மூன்று முறை தடவிக் குளியுங்கள், முடிச் சிக்குகள் தானே போகும் என்கிறார் டாக்டர் கவிதா மேரி வாலா என்ற அமெரிக்க தோல் சிகிச்சை டாக்டர்.
5. மன இறுக்கத்தை சோர்வைப் போக்க:

தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆஸ்பிரினை எடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்களை மனச் சோர்வு (Depression) மன இறுக்கம் எளிதில் அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் முடிவுகளில் ஒன்றாகும்! அதன் அறிகுறிகள் எளிதில் இத்தகையவர்களைத் தாக்குவதில்லை!
சைக்கோ தெரப்பி, அன்ட் சைக்கோஸ் மாடிக்  Psychotherapy and Psychosmatics  என்ற ஆய்வு இதழில் இதை விளக்கி கட்டுரைகள் வெளி வந்துள்ளன!
'ஒரு நாள் ஒரு ஆஸ்பிரின்' என்ற தலைப்பில் டாக்டர் கெய்த் சவுட்டர் (Dr. Keith Souter) எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் உள்ளெரிச்சலுக்கும் (Inflamation) ஆஸ் பிரினின் தடுப்புப் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டில் பெரு நிலையில் உள்ள பலரும் மனச்சோர்வினால் அவதி யுறும் நிலை சர்வ சாதாரணமாய்க் காணப் படுகிறது. இப்படி 'ஆஸ்பிரின்' அவர்தம் சோர்வைப் போக்கி மகிழ்ச்சியை அவர்தம் முகங்களில் வரவழைக்கிறதாம்!

என்னே ஆஸ்பிரின் மகிமை! என்ன, பையில் ஒரு ஆஸ்பிரின் இருக்கலாமே!

--------------------- கி.வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள் -’விடுதலை’ 30-6-2016

28.6.16

எந்தப் பார்ப்பனராவது சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறாரா?

சமஸ்கிருதத்தை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்ப்பாட்டம்

அடுத்தகட்டமாக சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு துறையினரையும் அழைத்து மாபெரும் மாநாடு நடத்துவோம்!
காரைக்குடியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்


காரைக்குடி, ஜூன் 28- சமஸ்கிருத ஆதிக்கத்தை, திணிப்பை எதிர்த்து முதற்கட்டமாக திராவிடர் கழகத்தின் சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்; அதற்கு அடுத்த கட்டமாக சமஸ் கிருதத்தை எதிர்த்து மிகப்பெரிய அளவில் பல தரப்பினரையும் அழைத்து மாநாடு நடத்திட உள்ளோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

27.6.2016 அன்று மாலை காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்த நிகழ்ச்சி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், நன்றாக விளம்பரம் செய்யப்பட்டு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டு இருக்கிறது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் பொழுது மழை வருமோ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால், மழை வரவில்லை.

என்னுடைய உரை அனேகமாக ஒரு மணிநேரம் இருக்கலாம். அந்த ஒரு மணிநேரத்திற்குள் எல்லா கருத்துகளையும் சொல்லிவிட முடியாது என்கிற காரணத்தினால்தான், அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் காலத்திலிருந்தே நாங்கள் கையாளுகின்ற முறை - ஆதாரங்களையெல்லாம் புத்தகமாகப் போட்டு, இங்கே பரப்பிக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம். புதிய புத்தகங்கள் எல்லாம் வெளியாகியிருக்கின்றன; அதனை வாங்கி நீங்கள் படித்துப் பயன்பெறவேண்டும்.

எதிரும் புதிருமாக இருக்கின்ற இரண்டு பெரிய தத்துவங்களுக்கிடையேதான் உருவான இயக்கம்

இன்றைக்கு நான் எடுத்துக் கொண்டிருக்கின்ற தலைப்பில் பல்வேறு செய்திகளை சொல்லலாம். ஆரம்பத்திலிருந்தே திராவிடர் கழகம் அதனுடைய தோற்றுவாய் காலத்திலிருந்து எதிரும் புதிருமாக இருக்கின்ற இரண்டு பெரிய தத்துவங்களுக்கிடையேதான் உருவான இயக்கம். அந்தத் தத்துவம் என்னவென்று சொன்னால், ஆரியம் - திராவிடம்!

நம் ஆட்களுக்கு, பல பேருக்கு உண்மை புரியாமல், திராவிடத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று சொல்கிறார்கள். திராவிடத்தால் வீழ்ந்திருந்தால், இன்றைக்கு இந்த நிலைமை வந்தி ருக்காது. திராவிடத்தால் எழுந்தோம் என்பதினால்தான், இன்றைக்கு நடமாடக் கூடிய அளவிற்கு வந்திருக்கின்றோம். டாஸ்மாக்கினால் ஒரு சிலர் வீழ்ந்திருக்கலாம்; திராவிடத்தால் ஒருபோதும் விழ மாட்டார்கள், அதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனக்கு முன் உரையாற்றிய தோழர்கள் இங்கே விளக்கமாக சொன்னார்கள்; நிறைய சொன்னார்கள். எங்கே பார்த்தாலும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன. நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை என்று புரட்சிக்கவிஞர் பாடினார். அதனை நடைமுறையில் இன்றைக்குப் பார்க்கின்றோம். எங்கே பார்த்தாலும் பெண் கல்வி மிகப்பெரிய அளவிற்கு. 90 விழுக்காடு பெண்கள் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள்.
திராவிடர் இயக்கம் இல்லை என்றால் 

இவையெல்லாம் நடந்திருக்குமா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட ஒரு நாட்டில், அதை காலங்காலமாக செயல்படுத்திக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தில், இன்றைக்குப் பெண்கள்
காவல்துறையிலிருந்து ராணுவத் துறை வரை வந்திருக்கிறார்கள் என்றால், திராவிடர் இயக்கத் தின் வெற்றியல்லவா! இந்த இயக்கம் இல்லை என்றால் இவையெல்லாம் நடந்திருக்குமா?
நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் செங்கல்பட்டில் சுயமரியாதை மாகாண மாநாடு கூட்டினார். அந்த மாகாண மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றி னார். ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் அத்துணை பேரும் பெண்களா கவே நியமிக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டார்.
கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் - தி.மு.க. ஆட்சியில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களாக பெரிதும் பெண்களைத் தான் நியமனம் செய்தார்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு பெண்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார்களே! இவையெல்லாம் எப்படி வந்தது? சரசுவதி பூஜை கொண்டாடுவதினால் வந்ததா? சரசுவதி நீண்ட நாள்களாக நம் நாட்டில்தான் இருக்கிறாள். அவ்வளவு காலத்தில் இல்லாத ஒன்றை இன்றைக்கு சாதித்திருக்கிறோம் என்று சொன்னால், தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் - நூற்றாண்டு விழாவினை இன் றைக்கு நாம் நடத்தி முடித்திருக்கிறோம் நீதிக்கட்சிக்கு; திராவிட இயக்கத்தினர் அன்றைக்கு அவர்கள் பாடுபட்டதினுடைய விளைவுதான், இன்றைக்கு நாம் ஓரளவு எழுந்து நிற்கின்றோம். எழுந்து நிற்கக்கூடிய நம்மை, மீண்டும் வீழ்த்துவதற்கான பள்ளத்தை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெரிய ஆபத்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, 
இந்தியா முழுவதையும் கவ்விக் கொண்டிருக்கிறது

பள்ளத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம், விழிபெற்று, பதவி கொள்வர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு விழி பெற்றோம் - திராவிடர் இயக்கத்தினால். அந்த விழிபெற்று வெளியே வந்திருக்கின்ற நேரத்தில், மறுபடியும் பள்ளத்தில் தள்ளவேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு முன்பெல்லாம் ரகசியமாக செய்ததை, இப் பொழுது மத்திய ஆட்சி தங்களுடைய கைகளில் இருக் கிறது, மாநில ஆட்சி அதற்கு உடன்பாடாக இருக்கும் என்கிற உணர்வோடு - ஒரு பெரிய ஆபத்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதையும் கவ்விக் கொண் டிருக்கிறது.

சமஸ்கிருதத்தை எதிர்த்து அந்தக் காலத்திலேயே போராடிய இயக்கம் திராவிட இயக்கம்

என்ன அந்த ஆபத்து? அதுதான் இனிமேல் நம் கல்வித் திட்டத்தில் கட்டாயமாக சமஸ்கிருதத்தைப் படித்தாகவேண்டும் என்பது. சமஸ்கிருதம் மொழியை நாம்தான் வடமொழி என்று தெளிவாக சொன்னோம். அந்த வடமொழி, நமக்கு சம்பந்தமில்லாத ஒரு மொழி. அதனை எதிர்த்து அந்தக் காலத்திலேயே போராடிய இயக்கம் திராவிட இயக்கம்.

தனித்தமிழ் இயக்கம் என்றெல்லாம் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் போன்றவர்கள், நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றவர்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. போன்றவர்கள் இன்னும் மிகப்பெரிய தமிழ் அறிஞர்கள், புலவர்கள் இவர்களெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பாக முன்னாலே ‘சாப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்’ என்று ராணுவத்தில் சொல்வார்கள், அதுபோல, பாதை போட்டுக் கொண்டு சென்ற இயக்கம் - செல்லும் இயக்கம் இன்றைக்கும் திராவிடர் இயக்கம்தான், அதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
புரட்சிக்கவிஞர் நீண்ட நாள்களுக்கு முன்பு சொன்னார்.

தமிழனே இது கேளாய் - உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
தமிழனே இது கேளாய்
வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
தமிழனே இது கேளாய்
என்று தெளிவாகச் சொன்னார்.

இன்றைக்கு பகிரங்கமாக அந்தப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது. அதனை எதிர்த்து திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான் இயக்கங்கள் என்கிற முறையில் இன்றைக்கு வெளிப்படையாக குரல் கொடுத்திருக்கின்றோம்.

93 வயது இளைஞர் நம்முடைய கலைஞர். இன்னமும் வயது ஒரு பொருட்டல்ல அவருக்கு. இங்கே நாராயண சாமி வந்திருக்கிறார், அவருக்கு வயது 96. இவர்கள் எல்லாம் களத்தில் நிற்கக்கூடியவர்கள்.
வயதில் மூன்று வகை உண்டு!

வயது என்பதில் இரண்டு, மூன்று வகை உண்டு. நிறைய பேருக்கு இது தெரியாது. பிறந்த ஆண்டைக் கணக்குப் போட்டால் அது ஒரு வகை வயது. அடுத்தது உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தால், அது உடற்கூறைப் பொருத்து அமைகின்ற வயது. இதையெல்லாவற்றையும்விட மூன்றாவது வயது ஒன்று உண்டு.

மனோதத்துவ ரீதியாக இருக்கக்கூடிய வயதுதான் பொதுவாழ்க்கையில் இருக்கின்றவர்களுக்குத் தேவை யான ஒரு வயது.

வயதில் அறிவில் முதியார்
வாய்மைப் போருக்கு 
என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
என்று தந்தை பெரியாரைப்பற்றி புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்.

அதுபோன்று, இவர்களுக்கு வயது ஆக, ஆக முதுமைப் பற்றுகிறது என்று சொல்வதைவிட, முதிர்ச்சி அவர்களைத் தெளிவாக்குகிறது, உறுதியாக்குகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
அந்த வகையில் பார்க்கும்பொழுது நண்பர்களே, தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி உண்டு.
சவுக்கை எடுப்போம் என்றார் கலைஞர்!
93 வயதில் கலைஞர் அவர்கள் சொல்கிறார்,

வடமொழி சமஸ்கிருத மொழி நாங்கள் இருக்கும் பொழுது நுழைந்துவிடலாமா? அப்படி சமஸ்கிருதம் வந்தால், சவுக்கை எடுப்போம் என்று சொன்னார்.

சவுக்கை எடுத்து அடித்து விரட்டவேண்டும் அதுதான் மிக முக்கியம். நம்மையெல்லாம் மீண்டும் அடிமையாக்க வேண்டும் என்று வருகிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் இந்தக் கவலையில்லை. நாங்கள் துப்புரவு தொழிலாளி. துப்புரவு தொழிலாளி என்றால், இந்த நகரத்தையே தூய்மைப்படுத்துகிறவர்கள். எவ் வளவு நாற்றம் வந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள் வோம். எவ்வளவு மலம் பட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். நாங்கள் பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் அல்ல.
அவர்களைத்தான் இந்த நாட்டில் கீழ்ஜாதி என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே அவர்கள் தான் உயர்ந்த ஜாதி. அவர்கள் செய்வதுதான் மேலான பணி.

சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒன்றாம் தேதி அறப்போராட்டம் நடைபெறவிருக்கிறது; இது முடிவல்ல - முதற்கட்டம்!

அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் இன்றைக்கு நாம் இந்தப் பணியை செய்வதற்காக இருக்கின்றோம். வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் சமஸ்கிருத ஆதிக்கத்தைக் கண்டித்து மாபெரும் அறப்போராட்டத்தினை நடத்தவி ருக்கின்றோம்.

ஒரு பக்கம் இரட்டைக்குழல் துப்பாக்கிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே திராவிடர் கழகமும் சொல்லியிருக்கிறது. இன்றைக்கு நாங்கள் அறிக்கை கொடுத்து, எங்களுடைய தோழர்கள் களம் காணுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். எல்லா மாவட் டங்களிலும் வருகின்ற ஒன்றாம் தேதி அறப்போராட்டம் நடைபெறவிருக்கிறது. இது முடிவல்ல - முதற்கட்டம்.

என்ன காரணம்? நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்; நம்முடைய சமுதாயத்தினுடைய அடிப்படை -எவ்வளவு பெரிய ஒரு சங்கடத்தை உருவாக்கக் கூடிய ஒன்றாக ஆக்கி வைத்துவிட்டார்கள். நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். நிறைய பேர் நினைக்கிறார் கள், ஒரு மொழியை கற்றுக்கொண்டால் நல்லதுதானே என்று.

தயவு செய்து ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஊடகக்காரர்கள், செய்தியாளர்கள் நான் சொல்வதை குறித்துக்கொள்ளவேண்டும்.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை சமஸ்கிருதத்தை வெறும் மொழிக்காக அதனை எதிர்க்கவில்லை. இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பது மொழிக்காக அல்ல. படிக்க விரும்புகிறவர்கள் எந்த மொழியையாவது, எத்தனை மொழியையாவது படித்துக் கொள்ளலாம். ஆனால், அந்த மொழியைத் திணிப்பதற்கான உள்நோக்கம் என்ன? இது வெறும் மொழியல்ல; ஒரு பண்பாட்டு படையெடுப்பினுடைய ஆதிக்கம்.

சுயமரியாதை இயக்கம் அவர்களுக்கெல்லாம் முதுகெலும்பு உண்டு என்று காட்டியது

சமஸ்கிருதம் என்பது ஆரிய மொழி - அடிப்படையில் இருமொழி கலாச்சாரங்கள். திராவிடம் வேறு; ஆரியம் வேறு. இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அந்த மொழியின் ஆதிக்கம் நீடித்திருந்தால், நம்மாள்கள் சூத்தி ரனாக, பஞ்சமனாக என்னென்னவோ தொழில் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களையெல்லாம் பெரியார் தான் மனிதர்களாக்கினார். சுயமரியாதை இயக்கம் அவர்களுக்கெல்லாம் முதுகெலும்பு உண்டு என்று காட்டியது.

இன்றைக்கு சிலர் விதம் விதமாக காலில் விழுகிறார் களே, அதற்குக் காரணம் என்னவென்றால், நமக்குப் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார் என்பதற்கு அடையாளம்தான். பல பேர் இன்றைக்கு உடல் உறுப்பு கொடையளிக்கிறார்கள். சுயமரியாதை கெட்டுப் போன வர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய கொடையளித்தார், அதுதான் முதுகெலும்பு கொடை.

அதற்கு முன்பு நம் தமிழனுக்கு, திராவிடனுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதே ஞாபகத்திற்கு வரவில்லை. அப்பொழுது விழுந்தவனை, நடுவில் நாங்கள் தூக்கி நிறுத்தினோம்.
அரிசிச் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை, மறுபடியும் மண் சோறு சாப்பிட வைத்துவிட்டார்கள். ஆகவே, ஆரியம் - திராவிடம் என்பது இருக்கிறதே, அது கட்சியை சார்ந்தது அல்ல நண்பர்களே, இரு வேறு இனத்தின் தனித்தன்மையான ஒன்று.
திராவிடம் என்றால் என்ன?

யாரையும் அடிமைப்படுத்தாததுதான் திராவிடம். நிறைய பேர் கேட்கிறார்கள், திராவிடம் என்றால் என்ன? அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? என்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிடம் என்றால், மொழியால் நாம் தமிழர்கள்; பண்பாட்டால் திராவிடர்கள்.
இந்த நாட்டில், மதத்தால் மாறுபட்டிருக்கின்ற இஸ்லாமியர்களும் திராவிடர்கள்.
மதத்தால் மாறுபட்டிருக்கின்ற கிறிஸ்தவர்களும் திராவிடர்கள்தான்.

ஒரு பார்ப்பன அம்மையார் 
என்னை பேட்டி கண்டார்!

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பார்ப்பன எழுத்தாளர் அம்மையார் அவர்கள் என்னை பேட்டி எடுப்பதற்காக வந்திருந்தார். அப்பொழுது அவர் ஒரு கேள்வியை கிண்டலாகக் கேட்டார்.

பண்பாடு என்றால் எனக்குப் புரிகிறது; அது என்ன தமிழ்ப் பண்பாடு என்று தனியாக ஒன்று இருக்கிறதா? என்று கேட்டார்.

ஏன், உங்களுக்குத் தெரியாதா? என்று நான் கேட் டேன்.
அது என்னங்க எனக்குச் சொல்லுங்களேன் என்றார்.

நான் உடனே சொன்னேன், எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், தாயை, சகோதரியை அடியே என்று கூப்பிடாததுதான் தமிழ்ப் பண்பாடு என்றேன்.
உடனே அந்த அம்மையார், அடுத்த கேள்விக்குப் போகிறேன் என்று சொன்னார்.

ஏனென்றால், நம்முடைய பண்பாடு சாதாரணமான தல்ல; மிகப்பெரிய பண்பாடு. எவ்வளவோ காலத்திற்கு முன்பாக ஊறின பண்பாடு.

ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து சென்னையில் ஒரு மாபெரும் மாநாடு!

சமஸ்கிருத ஆதிக்கத்தை  எதிர்க்கின்றோம் என்றால், வருகிற ஜூலை ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி நடைபெறுகிறது, அது முதற்கட்டம். ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் இணைப்போம்.

அடுத்த கட்டமாக, சென்னையில் ஒரு மாபெரும் மாநாட்டை ஒத்தக் கருத்துள்ளவர்களை, மொழியறிஞர் களை, கருத்தாளர்கள் ஆகியோரை இணைத்து நடத்தவுள்ளோம். இதனை சுலபமாக விட முடியாது. தொடர்ந்து போராடவேண்டும்.

அரசியலில் ஒரு கட்சி போய், இன்னொரு கட்சி வந்தது போன்றது அல்ல இது. எத்தனை சதவிகிதம் வித்தியாசம் என்பது அல்ல. ஒரு சதவிகிதம் வித்தியாசம்; நம் தோழர்கள் கொஞ்சம் கோட்டைவிட்டதினால் அவர்கள் வந்துவிட்டார்கள். அது அரசியலில்.

ஆனால், இதில் ஒரு சதவிகிதம் அல்ல; .0001 ஒரு சதவிகிதம் வந்தால்கூட, இந்த இனம் காலம் காலமாக ஏற்பட்ட எழுச்சி, மீண்டும் 2000 ஆண்டுகளுக்குப் பின்னாலே தள்ளப்படும் என்கிற அபாயம் உண்டு. ஆகவேதான், நாம் கவலைப்படுகிறோம்.

நம்முடைய தோழர்கள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாகவும் இருங்கள்; ஆனால், இந்த மண்ணுக்குரியவர்கள், இந்தத் திராவிடத்திலே பிறந்தவர்கள் என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள். எவ்வளவு காலத்திற்கு முன்பாக உள்ள நம்முடைய பண்பாட்டைக் கண்டு வியக்கிறார்கள், வெளிநாட்டவர்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
தீதும், நன்றும் பிறர்தர வாரா!

எவ்வளவு அழகாக இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரிய பண்பாடான வடமொழியை நாம் ஏன் எதிர்க்கிறோம். சமஸ்கிருதத்தை நாம் ஏன் எதிர்க்கின் றோம். நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். சமஸ் கிருதப் பண்பாடு என்ன என்பதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், மனுதர்ம சாஸ்திரம் புத்தகம் இருக்கிறது அதனை வாங்கிப் படித்துப் பாருங்கள்.
மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
அந்த மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லி யிருக்கிறார்கள்?

அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனுஸ்மிருதி அத்தியாயம் 1 சுலோகம் 87).
இதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார், வேறு எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை நம் நாட்டில் - சமத்துவமின்மை - நிக்ஷீணீபீமீபீ மிஸீமீஹீuணீறீவீtஹ் படிக்கட்டு முறை.

1919 இல் ஆண்டில், நம்மில் பல பேர் பிறக்காத காலத்தில் அச்சடித்து வைத்ததை, மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக - அந்தப் பதிப்பில் இருப்பதை அப்படியே கொடுத்திருக்கின்றோம்.

வள்ளலார் அவர்கள் என்ன சொன்னார்?
கடை விரித்தோம் கொள்வாரில்லை
கட்டிவிட்டோம் என்றார்.

ஆனால், அதே பணியை அதைவிட வேகமாக செய்த தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, அதே ஆரியத்தை, ஆரியப் பண்பாட்டை முறியடிக்கவேண்டும் என்கிற அந்தத் தத்துவங்களை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டில் சிறப்பாக மறைந்து போனதையெல்லாம் எடுத்துக் குறிப்பிட்டு சொல்கின்ற நேரத்தில் ஒன்றை சொன்னார்,

நான் கடை விரித்திருக்கிறேன். வள்ளலார் போன்று கொள்வாரில்லை கடையை மூடிவிட்டேன் என்று சொல்லமாட்டேன். நீங்கள் அந்த சரக்கை வாங்குகின்ற வரையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பேன். உங்களை வாங்க வைப்பேன் என்றதோடு அதில் வெற்றி பெற்றார் தந்தை பெரியார் அவர்கள்.
இன்றைக்கு அந்தக் கருத்தை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் நண்பர்களே!
எந்தப் பார்ப்பனராவது சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறாரா?

எனவே, ஆரியமாவது! திராவிடமாவது! என்று இப்பொழுதும் குழப்புகிறார்கள். இது ஒன்றும் ரத்தப் பரிசோதனை செய்து நாங்கள் சொல்லவில்லை. இவர்கள் எல்லாம் ஆரியர்கள்; இவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று.

பண்பாட்டு அடிப்படையில்தான் சொல்கின்றோம். அவர்கள் எந்த மொழியை நேசிக்கிறார்கள்; இதுவரையில் யாராவது ஒரு பார்ப்பனர் மாறிவிட்டார் என்று சொல்லுங்கள். எந்தப் பார்ப்பனராவது சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறாரா? எந்தப் பார்ப்பனராவது குன்றக்குடி அடிகளாரை அழைத்து தமிழ் முறையில் திருமணம் நடத்தியிருக்கிறார்களா?


எவ்வளவு பெரிய சீர்திருத்தம் பேசினாலும், எவ்வளவு சாராயம் குடித்தாலும், எவ்வளவு கறி தின்னாலும்,  காஸ்மோபாலிட்டன் பிராமின் அவர்; நம்மோடு நன்றாகப் பழகுவார்; நமக்கு வாக்களிப்பார்; நமக்கென்றால் செய்வார் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்பவர்களும் உண்டு.

அய்யா அழகாகச் சொன்னார், பார்ப்பான் கறி தின்றால், அவனுக்கு லாபம்; நம் ஆட்களுக்கு விஷம். இவன்தான் அதனை வாங்கி சமைத்துப் போடுகிறான். நாம் வழக்கமாக சாப்பிடுகிறோம். அவன் ஒரு நாள் சாப்பிட்டவுடன், அது பெருமை.


வடமொழி கலாச்சாரம் என்று வருகின்ற நேரத்தில், நண்பர்களே, நாம் சொல்வது இது ஒரு மொழி திணிப்பு மட்டுமல்ல; இப்பொழுது மறுபடியும் இந்துத்துவா என்று சொன்னால் என்ன அர்த்தம்?

பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இருப்பதுதான் இந்த இந்திய திருநாடு. ஒரே மொழி, ஒரே மதம் என்று ஆக்கக்கூடிய நிலையில் இருக்க முடியாது. ஏனென்றால், இது ஜனநாயக நாடு.

தங்கள் கைகளில் ஆட்சி உள்ளது என்பதற்காக, வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்

அவரவர் பண்பாட்டைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தில் உரிமை உண்டு. அதனை அப்படியே தூக்கி யெறிந்துவிட்டு, இப்பொழுது வந்துள்ள மத்திய அர சாங்கம் தங்கள் கைகளில் ஆட்சி உள்ளது என்பதற்காக, வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். சமஸ்கிருதத்தை நாங்கள் கொண்டு வருவோம் என்று. மற்ற மாநிலங்களில், அவர்கள் கைகளில் உள்ள மாநிலங்களில் அதனை வேகவேகமாக செய்கிறார்கள்.

இன்றைய விடுதலையில் வெளிவந்த தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்கள் அதனைப் படித்துப் பாருங்கள்.

அரியானா மாநிலத்தில் முஸ்லிம்கள் அவர்களுடைய பள்ளியில் உருது சொல்லிக் கொடுக்கிறார்கள். இது இயல்புதான். உத்தரப்பிரதேசம் மற்ற பகுதிகளில் உருது மொழியை நம்மாட்களே படிப்பார்கள். நேரு போன்ற வர்கள் எல்லாம் உருது, பாரசீக மொழி, பார்சியன் மொழியை படிப்பார்கள். இந்தி மொழியிலேயேகூட இந்துஸ்தானி என்ற ஒன்று இருக்கிறது பாருங்கள், உருது சம்பந்தப்பட்ட ஒரு இந்தி. அது இல்லாமல் ஆக்கு வதற்காகத்தான், அரசியல் சட்டத்தில் திட்டமிட்டு, இந்தியை புகுத்துகின்ற நேரத்தில், இந்தி மொழி ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்று சொல்கின்ற நேரத்தில், இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு வார்த்தையை போட்டார்கள். நம் ஆட்கள் நிறைய பேர் அதனைப் பார்த்தது கிடையாது. பெரியார் கண்ணாடியைப் போட்டு பார்த்தால்தான் அது சரியாகத் தெரியும்.
தேவ் நகரி என்றால் என்ன? கடவுள் எழுத்து. சமஸ்கிருதம் தேவபாஷை

அது என்னவென்றால், இந்தி (That is a Devnagari Script) என்று போட்டிருப்பார்கள். தேவ் நகரி ஸ்கிரிப்ட். நாம் இதுவரையில் இந்தி மொழியை மட்டும்தான் பேசியிருப்போம். இதோடு இணைந்த சிந்தனையை விளக்கி சொல்லவில்லை. விளக்கி சொல்லவேண்டும். அப் பொழுதுதான் நம்முடைய மக்கள் தெளிவடைவார்கள்.
இந்தி That is a Devnagari Script)  என்று சொன் னார்கள். தேவ் நகரி என்றால் என்ன? கடவுள் எழுத்து. சமஸ்கிருதம் தேவபாஷை. தமிழ் மொழி எல்லாம் நீஷ
பாஷை.

பாஷைகளையே பிரித்து வைத்துவிட்டான். இரண்டு பண்பாடு தனியாக இருக்கிறது பாருங்கள். நாமெல்லாம் பேசுகின்ற தமிழ்மொழி செம்மொழி. கலைஞர் இல்லை யென்றால், தமிழுக்கு செம்மொழி தகுதியே வந்திருக்காது. நமக்கு வந்தது மட்டுமல்ல, இன்னொரு பெரிய உண்மை வெளியே வந்தது.

நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி புல்லுக்கு அல்ல, புல்லுருவிக்கும் கிடைத்தது!

அது என்னவென்றால், சமஸ்கிருதம் செம்மொழி, செம்மொழி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்; ஆனால், அப்பொழுதுதான் தெரிந்தது, மத்திய அர சாங்கம் உத்தரவு போட்டு, கலைஞர் அரும்பாடுபட்டு தமிழை செம்மொழி ஆக்கிய பிறகுதான் தமிழ் மொழி யோடு சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி உத்தரவு போடுங் கள் என்றார்கள்.
கலைஞரால்தான், செம்மொழி என்கிற அந்தஸ்து சமஸ்கிருதத்திற்கும் சட்டப்பூர்வமாக கிடைத்தது.

நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி புல்லுக்கு அல்ல, புல்லுருவிக்கும் கிடைத்தது. நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், புல்லுக்குக் கிடைத்திருந் தால் பரவாயில்லை, எங்களுடைய மாட்டிற்காவது பயன்பட்டிருக்கும். புல்லுருவிக்கு அல்லவா கிடைத்தது. அது எங்களையே பதம் பார்க்கிறதே!

என்னிடம், சீதாராம் கேசரி அவர்கள் 

கேட்ட கேள்வி!

நான் பல மேடைகளிலும் சொல்லியிருக்கிறேன். இங்கேயும் அதனை சொல்கிறேன்.

சீதாராம் கேசரி அவர்கள் காங்கிரசு கட்சியினுடைய நீண்ட நாள் பொருளாளர். கடைசி காலத்தில் அவர் ஒரு 10 ஆண்டுகள் எங்களோடு நன்றாக அறிமுகமானார். அப்படி அறிமுகமான நேரத்தில், பெரியார் தத்துவங்களை ஆங்கிலத்தில் படித்துவிட்டு அவருக்கு ஒரே வியப்பு. பெரியாரிஸ்ட்டாகவே அவர் ஆகிவிட்டார் முழுக்க முழுக்க. பிறகு அவர் காங்கிரஸ் தலைவராக ஆகி, பிறகு சோனியா காந்தி அம்மையாருக்கு அவரே வழிவிட்டு விலகினார்.

அப்பொழுது ஒரு நாள் சீதாராம் கேசரி அவர்கள் என்னிடம் ஆங்கிலத்தில் கேட்டார், உங்களுக்கு தமிழில் சொல்கிறேன்.

சமஸ்கிருதம் என்று நான் நேரடியாக சொன்னால், எதிர்ப்பு வந்துவிடும்

எனக்கு ஒரு சந்தேகம் என்றார். பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி. அப்பேர்ப்பட்டவர் இந்தி மொழியை எதிர்த்தாரே, வெறும் மொழிக்காக ஒரு பகுத்தறிவுவாதி எதிர்த்து இருக்க முடியாது. அதற்கு இன்னும் சில ஆழமான காரணம் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதை உங்களிடம் கேட்டால்தான், என்னு டைய கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நினைக் கிறேன் என்றார்.

நான் சொன்னேன், நீங்கள் சொல்வது சரிதான். பெரியார் எதிர்த்ததில் விஷயம் இருக்கிறது. மொழிக்காக பெரியார் அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை. ஒரு பண்பாட்டு படையெடுப்பை அந்த மொழியின் மூலமாக திணிக்க முயல்கிறார்கள் என்பதுபற்றித்தான் 1938 ஆம் ஆண்டிலேயே பெரியார் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ராஜகோபாலாச்சாரியார்தான் இந்தி மொழியைத் திணித்தார் 1938 ஆம் ஆண்டில். அன்றைக்கே பெரி யாரும், திராவிட இயக்கமெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தது என்பது பழைய வரலாறு. அப்பொழுதுதான் முதல் கட்டம்.

அன்றைய காலகட்டத்தில் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பேசியது எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது. விடுதலையிலும் வந்திருக்கிறது.

முதன்முதலாக பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி யைக் கொண்டு வரப்போகிறார் கட்டாயமாக. அன்றைய காலகட்டத்தில் முதலமைச்சர் அல்ல; பிரதமர். சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜகோபாலாச்சாரியார், லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரை யாற்றும்பொழுது சொல்கிறார்,

நான் ஏன் இந்தியைக் கொண்டு வருகிறேன் என்றால், சமஸ்கிருதம் என்று நான் நேரடியாகச் சொன்னால், எதிர்ப்பு வந்துவிடும். அடுத்த கட்டமாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்காக முதலில் இந்தி மொழியை புகுத்துகின்றேன் என்றார்.

ஏனென்று கேட்டால், சமஸ்கிருதத்தை - ஆரிய மொழியை எப்படி வைத்திருக்கிறார்கள். ராமாயணம், மகாபாரதம், மனுதர்ம சாஸ்திரம் இவையெல்லாம் சமஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன.

ஆனால், வேதம் சமஸ்கிருதமா என்றால், கேள்விக் குறிதான். ஏனென்றால், சமஸ்கிருதம் தமிழ்மொழி போன்று நீண்ட வரலாறு படைத்தது அல்ல.
சமஸ்கிருதம் என்கிற வார்த்தைக்கு என்ன பொருள் என்று கேட்டுப் பாருங்கள்.

தந்தை பெரியார் அவர்கள் இமாலய புரட்டு என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

சமஸ்+கிருதம் என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், பல விஷயங்களை எடுத்து, பலதிலிருந்து எடுத்து சேர்த்து, நன்றாக சமைக்கப்பட்டது.
‘சமஸ்கிருதம்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் மந்தி ரம் ஓதுகின்ற அவர்களுக்கே தெரியாது.
இதே காரைக்குடியில் ஒரு சம்பவம் வடமொழி சம்பந்தமாக.

யாருக்காவது சந்தேகம் இருந்தால், தமிழ்நாட்டு வரலாற்றை எழுதிய பிரபலமான வரலாற்று ஆசிரியர்கள் - பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியர் என்று கருதப்பட்ட என்.சுப்பிரமணியன். உடுமலைப்பேட்டையில்தான் அவர் இறந்தார். நூறு வயதைக் கொண்டாடு வதற்கு இரண்டு மாதம் இருக்கும்பொழுது இறந்து போனார். அவர் ஒரு அய்யர். அவர் அந்த உணர்வுக்கு அப்பாற்பட்டு இருந்தவர். அவருடைய தந்தையார் அவர்கள் தமிழும் படித்தவர், சமஸ்கிருத மொழியும் படித்தவர், சரித்திரம் படைத்தவர். பல்க லைக் கழகப் பேராசிரியர் அவர். நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய தந்தையார் ஒரு பெரிய தமிழாசிரியர். பலராமய்யர் என்று பெயர். அவர் காரைக்குடியில் தமிழாசிரியராக இருந்தவர். வித்வான். மிகப்பெரிய ஆய்வாளர் அவர்.

சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் - அந்த சங்கராச்சாரியாரும், இவரும் நண்பர்கள்.

சாமிநாதன் என்பது அவருடைய ஒரிஜினல் பெயர்; இவருக்கு சுப்பிரமணியம் என்று பெயர். எனக்கு சாரங்கபாணி என்று பெயர் இருந்ததுபோன்று. ஏனென்றால், உனக்கும் பெயர் இருந்தது என்று யாராவது சொல்லிவிடக்கூடாது அல்லவா!

அந்த சங்கராச்சாரியார் விழுப்புரத்தில் படித்த காலத்திலிருந்து இவருக்குப் பழக்கம். காரைக்குடிக்கு சங்கராச் சாரியார் வந்து முகாம் போட்டிருக்கிறார்.
நம்முடைய செட்டியார், நகரத்தார் எல்லாம் அவரை உபசரித்தார்கள். அப்பொழுது சங்கராச்சாரியார் அவர் கள் பலராமய்யரை வரச் சொல்கிறார். அவரைப் பார்க்க இவர் செல்கையில்,
அவர் எழுதி காட்டுகிறார்; ‘‘நான் சந்தியாவதனம் எல்லாம் செய்து, ஸ்நானம் பண்ணிவிட்டேன். இனிமேல் நீஷ பாஷையான தமிழில் நான் பேசமாட்டேன். அதனால், நீ எது பேசுவதென்றாலும் சமஸ்கிருதத்தில் பேசு’’ என்று.

பலராமய்யரும் அய்யர்தான். அவர் தமிழாசிரியர்தான். அவருக்கு வந்ததே கோபம்; ‘‘என்னை மதிக்கவேண்டும் என்பது முக்கியமல்ல. என்னுடைய தமிழை மதிக்க வில்லை நீ. அதனால் உன்னிடம் பேசவேண்டிய அவசியமில்லை’’ என்று திரும்பி வந்துவிட்டார்.

எதற்காக இதனை சொல்கிறேன் என்றால், பார்ப்பனர் களாக இருந்தாலும்கூட, ஒரு பண்பாட்டை எப்படி அவர்கள் காப்பாற்றி நம்மீது திணித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் நீஷ பாஷை - பேசினால் என்னாகும்? நரகத்திற்குப் போய்விடுவோமாம்! 


நம்மூரில் புதுப் பணக்காரர்கள் எல்லாம் வணக்கம் சொல்லமாட்டார்கள். ஏழையாக இருக்கின்றவர்கள் வணக்கம் சொல்வார்கள். புதுப் பணக்காரர்கள் நமஸ் காரம் என்று சொல்வார்கள்.
திராவிட இயக்கம் தந்த 
அந்த உணர்வினால் வந்தது

திராவிட இயக்கம் என்ன செய்தது என்று நம்மாள் கள்கூட சில பேர் புரியாமல் கேட்கிறார்கள். சமஸ்கிருத ஆதிக்கம் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் உண்மை விளங்கும்.

முன்பெல்லாம் கூட்டங்களில் உரையாற்றும்பொழுது அக்கிராசனபதி அவர்களே என்று ஆரம்பிப்பார்கள்; ஒரு 50 ஆண்டுகள், 70 ஆண்டுகள் முன்பாக தலைவர் அவர்களே என்று சொன்னால், உற்றுப் பார்ப்பார்கள். அதென்ன வணக்கம் என்று கேட்பார்கள்.

முன்பெல்லாம் தேர்தலில் நிற்பவர்கள் அபேட்சகர் கள்தான். இன்றைக்கு வேட்பாளர். இவையெல்லாம் எப்படி வந்தது? யாரால் வந்தது? திராவிட இயக்கம் தந்த அந்த உணர்வினால் வந்தது.

சமஸ்கிருத ஆதிக்கம் என்கிற புத்தகத்தை மறுபதிப் பாக நாங்கள் போட்டிருக்கிறோம்.

அண்ணா அவர்கள் ஆரிய மாயை புத்தகத்தில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்:

நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழி புலவர்; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் கரை கண்டவர். நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தார். ஒரு புரோகிதப் பார்ப்பான் சமஸ்கிரு தத்தில் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். நாவலர் பாரதியாருக்குச் சமஸ்கிருதம் தெரியும் ஆதலால், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கூறும் தவறான மந்திரங்களைக் கேட்டு ஆத்திரப்பட்டு, ஓங்கி ஒரு அறைவிட்டார். கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் திடுக்கிட்டனர். அப்பொழுது நாவலர் பாரதியார் சொன்னார் - இந்தப் பார்ப்பான் கருமாதி மந்திரத்தை திருமணத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்றாரே பார்க்கலாம். அந்தப் புரோகிதனோ என்னுடைய தகப்பனார் இரண்டு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார். அதனைத்தான் நான் மாற்றி, மாற்றி சொல்கிறேன் என்றான். அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.

நீங்கள்தான் உங்கள் அப்பா - அம்மாவிற்கு பிறக்கவேண்டிய இடத்தில் முறையாகப் பிறந்தவர்கள் 

எல்லாக் கூட்டங்களிலும் சொல்வதையே இங்கேயும் சொல்கிறேன்.

பெரியார் உரையாற்றி முடித்ததும் ஒருவர் சீட்டை கொடுத்தார். அதில், நான்கு ஜாதியை சொல்லி, அவரவர்கள் எங்கே பிறந்தார்கள் என்று சொன்னீர்களே, நாங்கள் பஞ்சம ஜாதி என்று சொல்கிறீர்களே? நாங்கள் எங்கே பிறந்தவர்கள் என்று கேட்கிறார்.

உடனே பெரியார் சொல்கிறார், நீங்கள்தான் உங்கள் அப்பா - அம்மாவிற்கு பிறக்கவேண்டிய இடத்தில் முறையாகப் பிறந்தவர்கள் என்று சொன்னார்.

எல்லாவற்றிற்கும் தாழ்வாக பெண்கள் என்று வைத்திருக்கிறார்கள். இது ஆரிய கலாச்சாரம். இதுதான் சமஸ்கிருத பண்பாடு.

இந்தப் பண்பாட்டை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - பி.ஜே.பி.  ஆட்சி செய்தாலும், அதிகாரம் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைகளில்தான் இருக்கிறது.

அதிகாரம் கையில் இருப்பதினால், கல்வித் திட்டத்தில் மொழியைத் திணிக்க நினைக்கிறார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தில் கல்வித் திட்டம் என்பது மாநிலத்திற்கு உரியது முதலில்; நெருக்கடி காலத்தில் - இந்திரா காந்தி காலத்தில், அதனை பொதுப் பட்டியலில் கொண்டு சென்றார்கள்.

மாநில அரசும் சட்டம் செய்யலாம்; மத்திய அரசும் சட்டம் செய்யலாம் என்று கொண்டு சென்றார்கள். ஆனால், மாநில அரசுக்கு சம்பந்தமே இல்லாத - முழுக்க முழுக்க இன்னொரு பட்டியல் - யூனியன் லிஸ்ட் - சமஸ்கிருதத்தை கல்வித் திட்டத்தை நாங்கள் கைகளில் எடுத்துக்கொண்டோம் - உங்களை நாங்கள் கேட்க மாட்டோம்.

நுழைவுத் தேர்வா? நாங்களே முடிவு செய்வோம். சமஸ்கிருதத் திணிப்பா? நாங்களே முடிவு செய்வோம் என்கின்றனர். தயவு செய்து சிந்தித்துப் பார்க்கவேண் டாமா? இதனை எதிர்த்துக் கேட்பதற்கு திராவிட இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கம் கேட்டிருக்கிறது?

மருத்துவப் படிப்பிற்கு மனு போடவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும்!

எனவேதான் நண்பர்களே, சமஸ்கிருதத்தை எதிர்க்கின்றோம். சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க்கிறோம் என்று சொன்னால், ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க விரும்புகிறோம் என்று அதற்குப் பொருள். ஆகவேதான், அந்தப் பணியை நாங்கள் செய்கின்றோம்.

விவசாயம் பாபகரமான தொழில் என்று சொல் கிறார்கள்; ஏனென்றால், விவசாயம் சூத்திரன் செய்கின்ற தொழில்; ஒரு பஞ்சமன் செய்கின்ற தொழில். அதுதான் அடிப்படை.
திருவள்ளுவருடைய திருக்குறளில்,
ஏர்ப்பின்னது உலகம் என்றார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
நம்முடைய பண்பாடு - இதுதான் திராவிடப் பண்பாடு. திராவிடப் பண்பாட்டிற்கு உரியது இது.

அங்கே யாகம்; நமக்கு யாகம் கிடையாது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய ஒரு புத்தகம் வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வமா? என்பதை நாங்கள் உண்மை இதழில் எடுத்துப் போட்டுக் கொண்டு வருகிறோம்.
முன்பெல்லாம் மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மனு போட முடியும். அந்த நிலையை நீக்கியது பனகல் அரசர் - திராவிடர் இயக்கம் - தந்தை பெரியார் சொல்லி - போரா டியதன் விளைவுதான்.
தன்மானம் உள்ள 

திராவிடன் - தமிழனுடைய கடமை! 

ஆகவே, நாம் ஏற்கெனவே நொந்து போயிருக்கிறோம். ஏற்கெனவே ஜாதியால் பிளவுபட்டிருக்கின்றோம். தப்பித்தவறி ஏற்பட்டிருக்கின்ற விழிப்புணர்வு இருக்கிறது பாருங்கள், நூறாண்டு காலத்தில் - இந்த விழிப்புணர்வை மீண்டும் அழித்து - மறுபடியும் பழைய நிலைக்கு - மனுதர்ம காலத்திற்கே கொண்டு போவதற்காகத்தான் சமஸ்கிருதம் கட்டாயம் திணிக்கக் கூடிய ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

எப்படி நாம் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஓட ஓட விரட்டினோமோ, அதுபோல, கலைஞர் அவர்கள் சொல்லியதைப்போல சவுக்கை எடுத்து ஓட ஓட விரட்ட வேண்டியது தன்மானம் உள்ள அத்தனை திராவிடன் - தமிழனுடைய கடமை என்று கூறி முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                            ------------------------------’விடுதலை’ 28-06-2016

27.6.16

சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கடவுளைத் திட்டவில்லையே!-பெரியார்

சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கடவுளைத் திட்டவில்லையே!


தலைவரவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கு வதற்குத் தகுதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவையில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர தலைமை தாங்க தகுதி தேவை இல்லை.
தலைவரவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத் துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் இல்லை. பகுத்தறிவு என்றால் மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு என்றால் எதையும் சிந்தித்து அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பதாகும். அறிவைப் பிரித்தவர்கள் பகுத்தறிவிற்கு ஆறாவது அறிவு என்று பிரித்திருக்கிறார்கள்.
ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்கினால் அதன் தரம், விலை, மதிப்பு யாவற்றையும் சிந்தித்து அதன் பின்தான் வாங்குகின்றோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்துச் செய்கிற மனிதன் சில காரியங்களில் முன்னோர் சாஸ்திரம், புராணம், வழக்கம், கடவுள் என்று சொல்லி, சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டிருக் கின்றான். அதன் காரணமாக மனிதன் தன் அறிவினால் அடைய வேண்டிய அளவு பலன் அடையவில்லை.
மற்ற நாடுகளில் மனிதன் சந்திர மண்டலத்தில் கார் ஓட்டுகிறான் என்றால் அது அவனுடைய அறிவின் பலனாலே யேயாகும். இங்கு நமது மக்கள் அடிப்படையிலேயே அறிவற்றிருக்கிறார்கள். சிந்திக்காமல் எனது மதம், எனது இலக்கியம், எனது சாஸ்திரம், முன்னோர் சொன்னது என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.

பகுத்தறிவாளர் கழகம் என்பது மிருகப் பிரயாயத் திலிருக்கிற மக்களை மனிதப் பிராயத்திற்குக் கொண்டு வருவதேயாகும். அதற்கு முன் நாம் (சுமார் 100, 150 ஆண்டு களுக்கு முன்) கட்டை வண்டியில் பிரயாணம் சென்று கொண்டிருந்தோம். இப்போது எங்கள் முன்னோர் சென்றது, கடவுள் சென்றது, நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதற்காக எவரும் கட்டை வண்டியில் செல்வது கிடையாது.
மற்ற மதக்காரனை விட்டு நம் மதத்தை எடுத்துக் கொண்டால் உலக மக்களுக்கு அறிமுகமாகிற வகையில் நம்மை அவனுக்கு விளக்க வேண்டுமானால், சுருக்கமாகத் திராவிடன் என்று சொன்னாலும் இங்குள்ள முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் யாவரும் திராவிடர்களே ஆவார்கள்.
நம்மைத் தனித்துக் காட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இந்து என்று சொன்னால் இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆதி அடிப்படை என்ன? ஒரு கிறிஸ்து வனையோ, துலுக்கனையோ கேட்டால் அவன் தன் மதத் தலைவனையும், மத நூலையும், மதம் ஏற்பட்ட காலத்தையும் கூறுகின்றான். நீ இந்து என்ற சொல்வதற்கு உனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? உன் மதத்திற்குரிய வேத நூல் என்ன? உன் மதம் தோன்றிய காலம் என்ன என்பதற்கு எந்தப் பதிலைச் சொல்ல முடியும்?
இந்து மதம் என்பது ஒரு கற்பனையே தவிர, உண்மையில் அப்படி ஒரு மதம் இல்லை. இதைப் பற்றிக் காந்தியிடமே சொல்லி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துமதம் என்று ஒன்று இருந்தது என்பதற்கு நமது இலக்கியங்கள் எதிலும் ஆதாரம் இல்லை.
நாம் எந்தக் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ திட்டுகிறோமென்றால் அதில் நம்மைத் திட்டியிருக்கிற அளவிற்கு நாம் திட்டவில்லையே! இந்து மதப்படி எடுத்துக் கொண்டால் நீ நான்காம் ஜாதி, இழி ஜாதி சூத்திரன்தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற முட்டாள் தானே! நீ முட்டாளாக இருப்பதால்தானே  கோயிலுக் குப் போகிறாய், முட்டாளாக இருப்ப தால்தானே சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொள்கின்றாய். அறிவு இருந்தால் இதனைச் செய்வாயா?
கோயிலுக்குப் போகிறவன் முட்டாள் என்று சொல்கிறேன். நீயே சிந்தித்துப் பாரேன். நீ மிகச் சுத்தமாகக் குளித்து முழுகிவிட்டு பயபக்தியோடு கோயிலுக்குப் போகிறாய். அங்கு பார்ப்பான் இருந்து கொண்டு கர்ப்பக்கிரகம் இருக்கிற இடத்திற்கு நீ வரக்கூடாது; நீ சூத்திரன்; வெளியே நில்! என்கின்றான். அதைக்கேட்டு நீ வெளியே நின்று கன்னத்திலடித்துக் கொள்கின்றாயே தவிர, நான் ஏன் உள்ளே வரக்கூடாது என்று எவனும் கேட்பதில்லையே! இப்படிச் செய்கிறவன் முட்டாள் இல்லாமல் அறிவாளியா? என்று சிந்தியுங்கள். கோபப்படாமல் சிந்தியுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சூத்திரனாக - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருந்து கொண்டிருக்கிறதென்றால் அறிவும் சிந்தனையும் இல்லாததால்தானே!
                --------------------------------6.12.1970 அன்று கும்பகோணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை -"விடுதலை", 23.1.1971

19.6.16

பார்ப்பனியத்தை அடியோடு நாம் அழித்தாக வேண்டும்-பெரியார்

உதட்டால் அல்ல! உள்ளத்தால் திராவிடனாக வேண்டும்!


திராவிடர்களின் இழிவு களைந்தெறியப் பாடுபடும் நமது கழகம், அந்த இழிவுகளுக்குப் பெரும் பாதுகாப்பாக இருக்கும் மதம் அடியோடு ஒழிய வேண்டும் என்று அறை கூவுகிறது. இப்படி நாம் மதம் ஒழிய வேண்டும் என்று கூறினால், அந்த மதக் குட்டையில் அமிழ்ந்து கிடந்து உழலும் திராவிடர்களில் ஒரு சிலர் கோபப்படுவானேன்? மதத்தைக் குறை கூறும்போது ஒரு முஸ்லிமுக்குக் கோபம் வருவதில் நியாயம் இருக்கிறது. ஏன் என்றால் அவர்களது மதத்தில் மேன்மையான தன்மைகள் இருக்கின்றன. அதை அனுபவித்து வரும் முஸ்லிமுக்குக் கோபம் வருவதானால், நியாயம் என ஒப்புக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் இந்துவானால் அவர் கதி என்ன ஆகும்?
கீழ் ஜாதியாகத்தானே இந்து மதத்தில் சேர முடியும்! ஆகவே, தனக்கு மேன்மை தரும் தன் மதத்தில் முஸ்லிம் ஒருவர் பற்றுதல் கொண்டிருப்பது நியாயம்தான்.

ஆனால், அப்பேர்ப்பட்ட மத வெறி நமக்கு ஏன் என்று கேட்கிறேன். நம்மைச், சூத்திரர்கள் -_ தேவடியாள் பிள்ளைகள் என்று இழிவுபடுத்தும், இந்து மதம் அடியோடு தொலைய வேண்டும் என்று கூறினால், அப்பட்டங்களைப் பெற்றுள்ள நமக்குக் கோபம் வருவதேன்? அந்த அவமானப் பட்டங்களை மேலும் நிலை நிறுத்திக் கொள்ளவா? இந்து மதம் போகுதே என்று நாம் ஏன் வேதனைப்பட வேண்டும்? பார்ப்பான் வேண்டுமானால் வேதனைப்படலாம். இந்து மதம் போகுதே என்று. ஆனால் அம் மதத்தில் இழித்துரைக்கப்பட்ட ஒரு சூத்திரன் வேதனைப்படுவதா? இது எவ்வளவு மானக்கேடான சங்கதி? சிந்தித்துப் பாருங்கள்.

பெரிய கோம்பை நாய் போன்றது நமக்கு இந்து மதம்; வேட்டை நாய் போன்றது சாஸ்திரங்கள்; கடவுள்கள் சோனங்கி நாய் போன்றது இந்த மூன்று நாய்களும் நம்மை முன்னேற விடாமல் காத்து நிற்கின்றன. இந்த நாய்களை ஒழித்தால்தான் நாம் முன்னேற முடியும். அவற்றை ஒழிப்பதுதான் நமது கடமையாகும்.

பார்ப்பான் குறளைக் கைக்கொள்ள மாட்டான். இராமலிங்கசாமியைப் போற்ற மாட்டான். ஆனால், நம்மவர்களோ இராமாயணத்தைப் போற்றுவார்கள்! அதைக் காலட்சேப மாகக் கேட்பார்கள்! இராமனைக் கடவுள் என்று துதி பாடுவர்! கீதையைப் போற்றுவார்கள்! பாரதத்தைப் படித்து பக்திப் பரவசமாகி விடுவார்கள்! இம்மாதிரியான உணர்ச்சியை விரைவில் நாம் போக்கிவிட முடியுமா? சிந்தியுங்கள். எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறதென்று எண்ணிப் பாருங்கள்.

நமக்கு இழிவு தரும் ஆதாரங்கள் அத்தனையும் ஒழிய வேண்டும் என்று கூறினால், இவர் என்னவோ சாதிக்கிறார் என்றல்லவோ நினைத்தோம்; கோவிலையும், சாமியையும் அல்லவா திட்டுகிறார் என்று நம்மவர்களே முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இவற்றையெல்லாம் ஏன் திட்டு கிறார்கள் என்பதை முதலில் உணர வேண்டும். ஆனால், அதை ஏன் எண்ணுவதில்லை. இவ்வளவு நாள் பாடுபட்டும் போதிய பலனைக் காணவில்லையே!

செய்திப் பத்திரிகையைப் பார்த்தால், இன்றைய நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் தினசரி வெளியாகும் சுமார் 60 செய்திகளில், 30 சங்கதிகள் வெறும் இராமாயணக் காலட்சேபம், பகவத் கீதை, பாரதம், பெரிய புராணம் போன்ற புராணக் குப்பை நிகழ்ச்சிகளாக இருக்கின்றனவே தவிர, நம்மவருக்கு என்று என்ன இருக்கிறது? நம்மவர்கள்  பெரிய புராணத்தைப் பிரசாரம் செய்யக் கிளம்பி விடுகிறார்களே ஒழிய, குறளைத் தொட மாட்டேன் என்கிறார்களே, குறளைப் படித்தால் அவன் கருப்புச் சட்டைக்காரனாகி விடுவான். அவ்வளவு கேவலமான தன்மைகள் இன்று இருந்து வருகின்றன.

ஆகவே, தோழர்களே, நமது இழிவுக்கும், பின் நிலைமைக்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கும் மத - கடவுள் காரியங்களும், சமுதாயத்தில் நிலவிவரும் மூட நம்பிக்கைகள் அத்தனையும் வெறுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு கோயில் பைத்தியம் அடியோடு ஒழிய வேண்டும். இராமாயணப் பாராயணங்கள் கேட்பதை விட்டொழிக்க வேண்டும். இவற்றைப் பெரியவர்கள் விட்டுவிட்டால்தான் அவர்களது குழந்தைகளும் விட்டு விடுவார்கள்.

இராமாயண விழாக்களிலும் மற்ற கடவுள் தன்மை திருவிழாக்களிலும் பெரிய தலைவர்கள் எல்லாம் ஈடுபாடு கொண்டிருப்பது மிக அக்கிரமமான செயலாகும். சர்க்கார் அதிகாரத்திலிருப்பவர்களே இராமாயணம் படிப்பதுதான் கல்வி என்று கூறும் அளவுக்கு இன்று நம் நாடு அவல நிலைமை-யடைந்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் இவ்வளவு தூரம் எதிர்ப்புப் பிரச்சாரம் நடந்தும் நமக்குப் போதுமான வெற்றி கிடைக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் நம்மவர்களின் உணர்ச்சியில் இன்னும் இழிவு தட்டவில்லை என்பது தான்.

இந்த நாட்டுக்கு உரிமையாளர்கள் நாம்; இந்நாட்டை ஆண்டவர்கள் நாம்; அப்பேர்ப்பட்ட மக்கள் இன்று ஆரியர்களுக்கு அடிமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆரியர்கள் புகுத்திய கடவுள், சாமி, கோயில், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரியர்கள் போர் செய்து திராவிடர்களை வென்று விடவில்லை - வெல்லவும் முடியாது. ஆனால், ஆரிய கலாசாரத்தை நம் மக்களிடையே புகுத்தியே வெற்றி பெற்றனர். அதுலிருந்து முளைத்ததுதான் இந்த கீழ் ஜாதி -  மேல் ஜாதி யாகும். மதத்திலே, கடவுள் தன்மையிலே, தத்துவத்திலே நம்மை வென்று விட்டனர். அதிலிருந்துதான் இப்போது நாம் மீட்சியடைய வேண்டியிருக்கிறது. பார்ப்பனியத்தை அடியோடு நாம் அழித்தாக வேண்டும்.

கோயிலுக்குப் போவதை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். நெற்றிக்குறியிடுவதையும் விட வேண்டும். ஆரியப் பண்பாட்டின் அறிகுறி எதுவும் தெரியாதபடி ஆரியப் பெயர்களையும் ஒழித்து விட வேண்டும்.

----------------------------------------மார்ச் 18, 19 ஆகிய நாள்களில் சென்னை மாவட்ட மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு ------------"விடுதலை" 23 மற்றும் 24.3.1950