Search This Blog

Showing posts with label உலக நாடுகள். Show all posts
Showing posts with label உலக நாடுகள். Show all posts

19.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - ஜிம்பாப்வே




ஜிம்பாப்வே

19ஆம் நுற்றாண்டில்தான் இப்பகுதிக்கு அய்ரோப்பியர்கள் வந்தனர். பிரிட்டிஷ் தென் ஆப்ரிக்கக் கம்பெனி எனும் சிசில்ரோட் என்பவருக்குச் சொந்தமான நிறுவனம் வர்த்தக உரிமையை 1889இல் பெற்றது. பிறகு குடியேற்ற நாடாக மாற்றி தென் ரொடிசியா எனப் பெயர் சூட்டியது. 1922இல் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு வசித்த வெள்ளையர்களின் தன்னாட்சி நடந்தது. 1960இல் விடுதலை உணர்ச்சி ஏற்பட்டு கறுப்பின மக்களின் இயக்கங்கள் செயல்படத் தொடங்கின. ஜிம்பாப்வே ஆப்ரிக்க மக்கள் யூனியன், ஜிம்பாப்வே ஆப்ரிக்க தேசிய யூனியன் என்ற பெயர்களில் அவை இரண்டும் இயங்கின.

1953இல் மத்திய ஆப்ரிக்கக் கூட்டரசு பிரிட்டனால் உருவாக்கப்பட்டது. ஜிம்பாப்வே, ஜாம்பியா, மாளவி ஆகிய மூன்றும் இதில் உறுப்பு நாடுகள். பத்து ஆண்டுகளில் கூட்டரசு கலைந்து ஜாம்பியாவும் மாளவியும் 1963இல் விடுதலை பெற்றன. 1964இல் ஜிம்பாப்வேயில் இயான் ஸ்மித் என்பவர் பிரதமர் ஆனார். 1965இல் ஜிம்பாப்வேயின் விடுதலைப் பிரகடனத்தை அவர் செய்தார். சிறுபான்மை வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாடு என்பதால் உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது- விடுதலை இயக்கங்கள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டனர். 1979இல் பிரிட்டனின் முயற்சியால் லண்டனில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவின்படி புதிய அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 1980இல் ஜிம்பாப்வே ஆப்ரிக்க தேசிய யூனியனைச் சேர்ந்த ராபர்ட் முகாபே தேர்தலில் வென்று பிரதமர் ஆனார். 18--.4.-1980இல் ஜிம்பாப்வே விடுதலை பெற்றது.

தென் ஆப்ரிக்காவுக்கும் ஜாம்பியாவுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பள்வு 3 லட்சத்து 90 ஆயிரத்து 580 சதுர கி.மீ. மக்கள் தொகை ஒரு கோடியே 23 லட்சம். பாதிக் கிறித்துவ மத நம்பிக்கைகளையும் பாதிப் பழங்கால நம்பிக்கைகளையும் கொண்ட சிங்க்ரடிக் எனும் மதத்தைப் பின்பற்றுவோர் 50 விழுக்காடு கிறித்துவர்கள் 25 விழுக்காடு. மீதிப் பேர் பழமைவாத நம்பிக்கை கொண்டவர்கள்.

ஆட்சி மொழியாக இங்கிலீஷ் உள்ளது. பல்வேறு இனக்குழு மொழிகளை மக்கள் பேசுகின்றனர். 91 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.

நாட்டின் குடியரசுத் தலைவராக ராபர்ட் முகாபே 1987 முதல் இருந்து வருகிறார். இவரே ஆட்சியின் தலைவரும்.

2004இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 80 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். அதே அளவிலான மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.

வெள்ளையர்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அந்தத் தொகுதிகளில் மட்டுமே அவர்கள் போட்டியிடலாம். நாட்டின் தலைநகர் ஹராரே சூரிய ஒளி நகரம் என அழைக்கப்படுகிறது.

---

கடல் கடந்த எல்லைப் பகுதிகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குடியேற்ற நாடுகள் என்கிற தன்மை மாற்றப்பட்டு வந்தாலும் பல தீவுகள் இன்னமும் பல நாடுகளுக்குச் சொந்தமாக உள்ளன. ஆஸ்திரேலியா, சீனா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே, நியூஜிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடல் கடந்த தீவுகளைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளன.

ஆஸ்திரேலியா 6 தீவுகள்

சீனா 2 தீவுகள் டென்மார்க் 2 தீவுகள்

பிரான்ஸ் 10 தீவுகள்

நெதர்லாண்டு 2 தீவுகள்

நியூஜிலாந்து 3 தீவுகள்

நார்வே 3 தீவுகள்

பிரிட்டன் 17 தீவுகள்

அமெரிக்கா 13 தீவுகள்



---------------------- நிறைவு..."விடுதலை" 18-8-2009

உலக நாடுகள் -ஏமன்-ஜாம்பியா


ஏமன்

ஏடன் துறைமுகத்தைச் சுற்றி அமைந்த பழங்கால ஏமன் பகுதியை முதல் நூற்றாண்டில் ரோமானியர்கள் படையெடுத்துப் பிடித்தனர். ஆறாம் நூற்றாண்டில் பாரசீகர்களும் எத்தியோப்பியர்களும் படை யெடுத்தனர். 628ஆம் ஆண்டில் மக்கள் அனைவரும் இசுலாத்தைத் தழுவினர். பத்தாம் நூற்றாண்டில் ஜைதி இனப்பிரிவினராக ராசைட் அரச வமிச ஆட்சியில் இருந்தனர். 1538 முதல் 1918 வரை ஏமன் துருக்கியின் ஒட்டோமான் வமிச ஆட்சியில் இருந்தனர்.

ஏமனின் வடபகுதியில் இமாம்கள் (முசுலிம் மத குருக்கள்) ஆட்சியில் 1962 வரை ஆட்சி செய்தனர். எகிப்து நாட்டுக்கு ஆதரவாளர்களால் உள்நாட்டுக் கலவரம் மூண்டதன் விளைவாக ஏமன் அரபுக் குடியரசு நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் ஏடன் துறைமுகம் அமைந்துள்ள தென்பகுதி நாடு பிரிட்டன் வசமே இருந்தது. தேசிய விடுதலை முன்னணி அமைப்பு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, 1967இல் தெற்கு ஏமன் மக்கள் குடியரசு எனும் பெயரில் அமைத்தது.

அரபு நாடுகளில் அமைந்த ஒரே பொது உடைமை நாடாக 1979இல் ஏமன் இருந்தது. 22-.3.1990இல் ஏமனின் இரு பகுதிகளும் - மேற்கத்திய சார்பான வட ஏமனும் மார்க்சியச் சார்பான தென் ஏமனும் ஒன்றிணைந்து 300 ஆண்டுக்கால பிரிவினைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. ஓமன் நாட்டுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் பரப்பு 5 லட்சத்து 27 ஆயிரத்து 970 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 15 லட்சம். மூன்று வகை (ஷபி, சன்னி, ஜைடி (ஷியா) முசுலிம் பிரிவுகளிலும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

50 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். 22.-5.-1990இல் விடுதலை நாள் கொண்டாடும் குடியரசு நாடு. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளனர். ஆட்சித் தலைவராகப் பிரதமரும் இருக்கிறார். 35 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர். பாலைவனப் பகுதி நிறைந்த நாட்டில் நிலத்தடி எண்ணெய் வளம் உள்ளது. இருப்புப் பாதையே இல்லை.

ஜாம்பியா

ஜாம்பியாப் பகுதியில் 12ஆம் நூற்றாண்டில் ஷோனா இனத்தவர் குடியேறி மவேனா முடாபா அரச வமிச ஆட்சியை நிறுவினர். 16ஆம் நூற்றாண்டில் தற்போதைய காங்கோ நாட்டில் இருக்கும் இனத்தவரான லூபா மற்றும் லுண்டா மக்கள் குடியேறிச் சிறுசிறு ராஜ்யங்களை அமைத்தனர்.

18ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வந்தனர். பிரிட்டிஷ் மதப் பிரச்சாரகர் டேவிட் லிவிங்ஸ்டன் 1851இல் வந்தார். 1889இல் பிரிட்டன் இப்பகுதியில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது. வடரொடீஷியா எனப் பெயரிடப்பட்டது. உள்ளூர்த் தலைவர்களிடம் ஆட்சி செலுத்தும் உரிமையை அளித்துவிட்டு மறைமுகமான முறையில் பிரிட்டன் ஆண்டது.

1953இல் ரொடீஷியா மற்றும் நியாசாலாந்துக் கூட்டாட்சி அமைக்கப்பட்டது. அதில் வடரொடீஷியா, தென் ரொடீஷியா (தற்போதைய ஜிம்பாப்வே) நியாசாலாந்து (தற்போதைய மாளவி) ஆகியவை அடங்கின. 1963இல் இக்கூட்டாட்சி கலைக்கப்பட்டது. ஜாம்பியா 1964இல் விடுதலை அடைந்து கென்னத் கவுன்டா குடியரசுத் தலைவரானார். ரொடீஷியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஜாம்பியாவின் ஆதரவு அந்நாட்டின் (ஜிம்பாப்வே) விடுதலைக்குப் பெரும் பங்கு உதவியது.

தென்ஆப்ரிக்கப்பகுதியில அங்கோலா நாட்டுக்குக் கிழக்கே உள்ள இந்நாட்டின் பரப்பளவு 7 லட்சத்து 52 ஆயிரத்து 614 சதுர கி.மீ. மக்கள் தொகை ஒரு கோடி 15 லட்சம். பாதிக்கும் மேற்பட்டோர் கிறித்துவர். மீதிப் பேர் முசுலிம்களும் இந்துக்களும். 81 விழுக்காடுப் பேர் படிப்பறிவு பெற்றவர்கள்.

24-.10.-1964இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரே ஆட்சியின் தலைவர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் 86 விழுக்காடு மக்கள் இருப்பதாக 1993இல் எடுக்கப்பட்ட கணக்கு தெரிவிக்கிறது. 50 விழுக்காடு பேர் வேலை கிட்டாதோர் என 2000இல் எடுக்கப்பட்ட கணக்கு தெரிவிக்கிறது.

--------------------"விடுதலை" 17-8-2009

18.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - வெனிசுலா-வியட்நாம்


வெனிசுலா

1520ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் ஸ்பெயின் நாடு தன் குடியேற்ற முயற்சிகளைத் தொடங்கியது. ஸ்பெயின் நாட்டை பிரான்சின் நெப்போலியன் தாக்கித் தோல்வியுறச் செய்ததைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டினர் தம் விடுதலையைப் பிரகடனப் படுத்தி 1810இல் அறிவித்தனர்.

17.-12.-1819இல் உருவான மகா கொலம்பியா நாட்டின் அங்கமாக வெனிசுலா இருந்தது. இதன் அதிபர் சைமன் பொலிவர். இருப்பினும் 1829இல் மகா கொலம்பியாவில் இருந்து பிரிந்த வெனிசுலா, தன்னைக் குடியரசாக அறிவித்து காரகாஸ் நகரைத் தலைநகராகக் கொண்டது.

1830 முதல் 1935 வரை, ஒரு நூற்றாண்டுக் காலம், காடிலோக்கள் என்று அழைக்கப்பட்ட போர்த் தளபதிகள் மாற்றி மாற்றி ஆண்டு வந்தனர். 1935இல் சர்வாதிகாரி ஜுவான் வின்செட் கோமஸ் இறந்த பின்னர்தான இவ்வாட்சி முறை முடிவுக்கு வந்தது.

1928இல் உலகின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய உற்பத்தி நாடாக வெனிசுலா வளர்ந்தது. 1970லிருந்து இந்நாட்டுப் பொருளாதாரம், பெட்ரோல் விலை உயர்வால் வளர்ந்துள்ளது.

தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் கொலம்பியாவுக்கும் கயானாவுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பளவு 9 லட்சத்து 12 ஆயிரத்து 50 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 58 லட்சம் ஆகும். ரோமன் கத்தோலிக மதத்தினர் 96 விழுக்காடு உள்ளனர். 94 விழுக்காடு மக்கள் படிப்பறிவு உள்ளவர்.

5.-8.-1811இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்நாட்டில், குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவரும் கூட. நாட்டின் நாணயத்தின் பெயரே பொலிவர். பொலிவியா நாட்டை விடுதலை பெறச் செய்ய ஆயுதம் ஏந்திப் போராடிய கொரில்லாப் போர் முறைத் தலைவர் சைமன்டி பொலிவர் நினைவாக இப்பெயர்.

47 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 12 விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டவில்லை. நாட்டில் 682 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உண்டு.

வியட்நாம்

டொன்கின் என அழைக்கப்பட்ட வட பகுதியும் கொச்சின் சீனா என்று அழைக்கப்பட்ட தென்பகுதியும் 17ஆம் நூற்றாண்டில் இரு பகுதிகளாகவே இயங்கின. அவை இணைந்த பகுதிதான் இன்றைய வியட்நாம். 1812இல் இணைந்த இப்பகுதியில் ஓர் அரச வமிசம் ஆட்சி நடத்தியது. இந்நாட்டின் தலைநகரான சைகோன் நகரைப் பிரெஞ்சுப் படையினர் 1859இல் கைப்பற்றினர். அதன் மூலம் நாடு முழுவதையும் ஆளத் தொடங்கினர்.

இரண்டாம் உலகப் போர் நேரத்தில், ஜப்பானியர்கள் வியட்நாமைக் கைப்பற்றி விடுதலை அளித்தனர். இதனை பிரான்சு எதிர்த்தது. இந்தோ சீனப் போர் தொடங்கியது. 1954இல் தோற்றுப் போன பிரெஞ்ச் நாட்டினர் வெளியேறினர். இதன் பின்னர், வியட்நாம் இரண்டு பிரிவானது. விடுதலைக்கான போரில் ஈடுபட்ட ஹோசிமின் தலைமையில் வியட்நாமிய ஜனநாயகக் குடியரசு நாடு என வட வியட்நாமும், அரசர் பாவோதால் தலைமையில் தென் வியட்நாம் குடியரசு எனவும் நாடு இரண்டானது. சிறிது காலத்திற்குள் பாவோதாலின் பிரதம அமைச்சர் நகோதின் தியம் அரசரைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தச் செயலுக்கு அமெரிக்கா உடந்தையாக இருந்தது.

நகோதின்தியம் வட, தென் வியட்நாம் நாட்டுக்கு ஒரே தேர்தலை நடத்த ஒத்துக் கொள்ளவில்லை. இந்த முடிவும் அமெரிக்காவின் ஆலோசனைப்படியே, வட, தென் வியட்நாம் அரசுகளை ஒன்றுபடுத்திடவட வியட்நாம் போர் தொடுத்தது. 1975 வரை இப்போர் நடந்தது.தென் வியட்நாம் நிபந்தனையின்றி வட வியட்நாமிடம் சரண்அடைந்தது. 2-.7.-1976இல் இரண்டு வியட்நாம் அரசுகளும் அதிகாரப் பூர்வமாக இணைந்து வியட்நாம் சோஷலிசக் குடியரசு நாடாகியது. வடவியட்நாம் பகுதியில் உள்ள ஹனோய் தலைநகர் ஆனது.

இந்தப் பாதை வழியாக 10 லட்சம் பிரெஞ்ச் படையினர் போனார்கள்; ஒருவர் கூட உயிருடன் திரும்பவில்லை என்று சுதந்திரப் போர் நடைபெற்ற போது வைக்கப்பட்ட பலகை உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிரான போர் 20 ஆண்டுக் காலமாக நடந்து அவமானகரமான தோல்வியை அமெரிக்காவுக்கு அளித்தனர் வியட்நாம் மக்கள்.

இந்நாட்டின் பரப்பு 3 லட்சத்து 29 ஆயிரத்து 560 சதுர கி.மீ. மக்கள் தொகை 8 கோடி 44 லட்சம். பவுத்த மதம், ரோமன் கத்தோலிகம், பழமை நம்பிக்கைகள் கொண்ட மக்கள். வியட்நாம் மொழி ஆட்சி மொழி. 94 விழுக்காடு படிப்பறிவு கொண்டோர். பொது உடைமை அரசில் குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 19 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளனர். 2 விழுக்காடுப் பேர்களுக்கு வேலை கிட்டவில்லை.

------------------"விடுதலை" 16-8-2009

17.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -வனுவாட்டு - வாடிகன் நகரம்


வனுவாட்டு

இத்தீவுகள் 1606இல் போர்த்துகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1774இல் பிரிட்டிஷ்காரரான ஜேம்ஸ் குக் இந்தத் தீவுக் கூட்டங்களை ஆய்வு செய்து பெயர் சூட்டினார். நியூ ஹெப்ரைட்கள் எனும் பெயரைத் தீவுக் கூட்டத்திற்கு வைத்தார். 1906 முதல் பிரிட்டனும் பிரான்சும் கூட்டாக ஆண்டன. இரண்டாம் உலகப் போரின் போது போர்த்தளமாக இத்தீவுகள் பெருமளவில் பயன்பட்டன. நேசநாடுகள் பயன்படுத்திக் கொண்டன. 1980இல் விடுதலை அளிக்கப்பட்டது. வனுவாட்டு எனப் புதுப் பெயர் இட்டுக் கொண்டனர்.

ஓசியானியா பகுதியில், தென் பசிபிக் கடலில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதிக்கு வட கிழக்கே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 12 ஆயிரத்து 200 சதுர கி.மீ. மலைகளும் எரிமலைகளும் நிறைந்த நாடு. மக்கள் தொகை 2 லட்சத்து 10 ஆயிரம். கிறித்துவத்தின் எல்லாப் பிரிவுகளையும் மக்கள் பின்பற்றுகின்றனர். 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகளை 73 விழுக்காடு மக்கள் பேசுகின்றனர். 53 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

30.-7.-1980இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளு மன்றக் குடியரசு நாடு. நாட்டில் இருப்புப் பாதையே கிடையாது.

வாடிகன் நகரம்

வாடிகன் நகர அரசு ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான கி.மீ. பரப்புள்ள நாடு சிறுத்து இன்று எஞ்சியிருக்கும் போப் சாம்ராஜ்யத்தின் அளவு 0.44 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரம் மட்டுமே. 19ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டை ஒன்றுபடுத்தும் இயக்கம் நடந்தபோது போப் அரசின் பெரும்பகுதி நாட்டுடன் சேர்க்கப்பட்டது. பரமண்டல சாம்ராஜ்யம் இருக்கும்போது நர (மக்கள்) மண்டல சாம்ராஜ்யம் எதற்கு என எடுத்துக் கொண்டார்கள் போலும்!

1929இல் ஏற்பட்ட லாட்டரன் ஒப்பந்தப்படி வாடிகன் நகரம் மட்டுமே தனி அரசு என ஆக்கப்பட்டது.

ரோம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் வாடிகன் நகரம் அரை சதுர கி.மீட்டருக்கும் குறைவான பரப்புள்ளது. 2006இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 932 பேர்கள் வசிக்கின்றனர். போப்பும் அவர் பரிவாரங்களும் இவர்கள். அனைவரும் ரோமன் கத்தோலிக்கர்.

இத்தாலி, லத்தீன், பிரெஞ்ச் முதலிய பல மொழி பேசுகிறவர்கள். அனைவரும் படித்தவர்கள்.

இதற்கும் கூட ஒரு சுதந்திர நாள் உண்டு. 11-.2.-1929 நாட்டின் தலைவர் போப். அரசின் தலைவர் மற்றொரு கார்டினல். யூரோ நாணயத்தை இந்நாடும் ஏற்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் அளிக்கும் சிறப்பு வசூல் தொகைதான் இந்நாட்டின் பொருளாதாரம். பீட்டரின் பென்ஸ் என்ற பெயரில் இத்தொகை வசூல் செய்யப்படுகிறது. பீட்டர் என்பவர்தான் முதல் போப். இது தவிர, கண்காட்சி, நுழைவுக் கட்டணம், தபால் தலை விற்பனை, மெடல்கள், நாணயங்கள், நினைவுப் பொருள்கள், நூல்கள் விற்பனை, கட்டட வாடகை போன்ற வழிகளிலும் வருமானம் வருகிறது.

இந்த நாட்டில் 860 மீட்டர் நீளத்திற்கான ரயில் பாதை உண்டு. இந்த நாட்டுக்கெனத் தனியே இணைய தளக்குறியீடு உண்டு. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைப் பேசிகள் உண்டு.

-------------------"விடுதலை" 15-8-2009

உலக நாடுகள் -தூரப்பார்வை - உருகுவே - உஸ்பெஸ்கிஸ்தான்




உருகுவே


உருகுவே நாடு அமைந்துள்ள தென் அமெரிக்கப் பகுதிக்கு அய்ரோப்பியர்கள் 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் வந்தனர். 1726இல் ஸ்பெயின் நாட்டினர் மாட்டவிடியோ நகரை உருவாக்கி போர்த்துகீசியர் களிடமிருந்து உருகுவேவைப் பிடித்துக் கொண்டனர். லாபிஸ்டா அரசின் ஓர் அங்கமாக 1776இல் உருகுவே ஆனது. தலைநகராக போனஸ் அயர்ஸ் ஆகியது. போனஸ் அயர்ஸ் அர்ஜென்டினாவின் தலைநகர். அங்கிருந்தே உருகுவேவை ஆண்டனர். ஸ்பெயின் அரசரைப் பதவியிலிருந்து நெப்போலியன் தூக்கி எறிந்த பிறகு 1808இல் உருகுவே லாபிஸ்டாவின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தது.

உருகுவே நாடு அந்தக் காலத்தில் பண்டா ஓரியன்டல் என அழைக்கப்பட்டது. இந்நாட்டை ஆளுவது தொடர்பாக பிரேசில் நாட்டுக்கும் அர்ஜென்டினா நாட்டுக்கும் இடையே போராட்டம் நடந்தது. 1825இல் அர்ஜென்டினாவின் உதவியுடன் உருகுவே தனது விடுதலையை அறிவித்தது. தொடர்ந்து 1828இல் குடியரசு நாடாகிறது. வெள்ளையர்களுக்கும் சிவப்பிந்தியர்களுக்கும் (அவர்கள் கொலரடோக்கள் என்று அழைக்கப் பட்டனர்) 1835 முதல் 1865 வரை உள்நாட்டுப் போர் நடந்தது.

1865இல் அர்ஜென்டினா, பிரேசில் ஆகியவற்றுடன் உருகுவே சேர்ந்து முக்கூட்டுப் போரில் பராகுவேவுக்கு எதிராக ஈடுபட்டது. 5 ஆண்டுகள் நடந்த இப்போரினால் பராகுவே நாடு அழிக்கப்பட்டது. 1960இல் மார்க்சிஸ்ட் நகர்ப்புற கொரில்லா இயக்கம் என்பதான ஒன்று முளைத்து 1975 வரை செயல்பட்டது. 1973இல் போர்ப்படையினர் மக்கள் அரசைக் கைப்பற்றினர். இதன் காரணமாகக் காட்டாட்சி நடந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கொடூரக் கூடாரம் என்ற அவப்பெயரை உருகுவே பெற்றது. உலகில் அதிகமான எண்ணிக்கையில் அரசியல் கைதிகள் அடைக்கப் பட்ட நாடு என்ற பேரையும் பெற்றது.

ஒரு வழியாக 1985இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு ஏற்பட்டது.

அர்ஜென்டினாவுக்கும் பிரேசிலுக்கும் இடையில் தென் அமெரிக்காவில் உள்ள இந்த நாட்டின் பரப்பளவு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 220 சதுர கி.மீ. மக்கள் தொகை 34 லட்சத்து 50 ஆயிரம். ரோமன் கத்தோலிக மதத்தவர் 66 விழுக்காடு. 31 விழுக்காட்டினர் எந்த மதக் கொள்கைகளையும் பின் பற்றாதவர்கள்.

ஸ்பானிஷ், போர்த்துனால் மொழிகளுடன் பிரேசிலரோ எனும் மொழியும் பேசப்படுகின்றன. மக்களில் 98 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்.

25.-8.-1825இல் விடுதலை நாள் விழா கொண்டாடும் இந்நாட்டின் குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். 22 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 13 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

உஸ்பெஸ்கிஸ்தான்

பாரசீகப் பேரரசு, தாமரீன் பேரரசு ஆகியவற்றைச் சேர்ந்த உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் மீது உஸ்பெக் மக்கள் 16ஆம் நூற்றாண்டில் படையெடுத்து, வென்று, பக்கத்து நாட்டுடன் இணைத்துவிட்டனர். 19ஆம் நூற்றாண்டில் ரஷியாஇதன் மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டது.

சோவியத் புரட்சிக்குப் பிறகு 1924இல் சோவியத் யூனியனில் இணைந்தது. 1991இல் சோவியத் யூனியன் குலைந்தபோது, தனி நாடாகியது.

ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, மத்திய ஆசியாவில் உள்ள இந்நாட்டின் பரப்பளவு 4 லட்சத்து 47 ஆயிரத்து 400 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 74 லட்சம். சன்னி முசுலிம்கள் 88 விழுக்காடு. கிழக்கிந்தியப் பழமைவாதிகள்9 விழுக்காடு.

உஸ்பெக் மொழி பேசுவோர் 74 விழுக்காடு. ரஷ்ய மொழி பேசுவோர் 14 விழுக்காடு. தஜிக் மொழி பேசுவோர் 5 விழுக்காடும் உள்ளனர். மக்கள் அனைவருமே படிப்பறிவு பெற்றவர்.

குடியரசுத் தலைவர் அதிபராகவும் பிரதமர் ஆட்சித் தலைவராகவும் உள்ளனர். 28 விழுக்-காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 20 விழுக்காடு மக்களுக்குத் தகுதியான முழு நேரப் பணிவாய்ப்பு கிட்டவில்லை.

-----------------------"விடுதலை" 14-8-2009

16.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - அய்க்கிய அமெரிக்க நாடுகள்


அய்க்கிய அமெரிக்க நாடுகள்

அமெரிக்காவில் கொலம்பஸ் தனது காலடியைப் பதிக்கவில்லை யென்றாலும் ஸ்பெயின் நாட்டினர் தளம் அமைத்திட இவர் பேருதவி புரிந்தார். அதனைத் தொடர்ந்து பல அய்ரோப்பிய நாட்டினரும் அமெரிக்காவில் குடியேறினர். வடஅமெரிக்காவில் வால்டர்ராலே முதல் பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியைத் தொடங்கினார். இன்றைய வர்ஜீனியாப் பகுதியில் ஜேம்ஸ் டவுன் குடியேற்றப் பகுதி 1607 இல் உருவானது. தொடர்ந்து 1620 இல் அய்ரோப்பியர்கள் பிளிமத் காலனியை தற்போதைய (ஊடின) முனையில் அமைத்தனர்.
தற்போதைய நியூயார்க் நகரையும் ஹட்சன் ஆற்றுப் பகுதியையும் ஆய்வு செய்திட ஹென்றி ஹட்சன் என்பாரை 1609 இல் டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனி கேட்டுக்கொண்டது. 1624 இல் மன்ஹாட்டன் தீவை டச்சுக்காரர்கள் விலைக்கு வாங்கினர். விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 24 டாலர்கள். புதிய ஆம்ஸ்டர்டாம் எனப் புதுப் பெயர் வைத்தனர். அய்ரோப்பியர்கள் கொண்டு வந்த புது வகை நோய்களும் மண்ணாசையும் உள்ளூர் மக்களிடம் வெறுப்பையும் பகைமையையும் ஏற்படுத்தியது.

17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பஞ்சாலைகளிலும் புகையிலைத் தயாரிப்புத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்வதற்கு அடிமைகளாக ஆப்ரிக்க மக்களை இறக்குமதி செய்து விற்றனர் அய்ரோப்பியர்கள். ஏழாண்டுப் போரில் பிரான்சை வென்ற பிரிட்டிஷார் மிசிசிப்பி நதிக்கரை வரையிலான அமெரிக்கப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தித் தம் நாடு பிடிக்கும் வெறியை வெளிப்படுத்தினர். தனது நிருவாகச் செலவுகளுக்கும் பாதுகாப்புச் செலவுகளுக்குமான செலவுத் தொகையை குடியேற்றப் பகுதியிலிருந்தே வசூலிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் ஆட்சி மீது வெறுப்பும் எதிர்ப்பும் பரவலாக ஏற்பட்டது.

கடல் கடந்த பிரிட்டிஷ்காரர்களுக்கும் அமெரிக்காவில் குடியேறிய அய்ரோப்பியர்களுக்கும் (பிரிட்டாஷாரும் அடக்கம்) சண்டை 1775 இல் மூண்டது. மறு ஆண்டில் அன்றைய 13 மாநிலங்கள் தம் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தின. விடுதலைப் பிரகடனம் ஆவணமாகியது 1789 இல்! விடுதலைப் போரின் தளபதியாக இருந்து போருக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்கிற கருத்தைக் கொண்ட குடியரசுக் கட்சி (ரிபப்ளிக்)யின் வேட்பாளரான ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிமை முறையை ஆதரித்த 11 மாநிலங்கள் அய்க்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து பிரிந்து போய் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு எனும் பெயரில் அமைந்தன. இதன் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் என்பவர் ஆனார். உள்நாட்டுப் போர் தொடங்கியது. 1865 இல் கூட்டமைப்புப் படையினர் (அடிமை முறையை ஆதரித்தவர்கள்) சரண் அடைந்தனர். ஆபிரகாம் லிங்கனின் கருத்துகளுக்கு வெற்றி கிட்டியது.
ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாக ஆபிரகாம் லிங்கன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1898 இல் அமெரிக்காவுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் நடந்த போரின் விளைவாக போர்டோ ரீகோ, குவாம், பிலிப்பைன்ஸ், கியூபா ஆகிய நாடுகளை அமெரிக்கா வென்று தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. ஹவாய் தீவுகளையும் மறு ஆண்டில் கைப்பற்றிக் கொண்டனர். 1920 இல் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டது. மதுவகைகள் தயாரிப்பதும் விற்பதும் தடை செய்யப்பட்டன. இத்தடை 13 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. மதுவிலக்கு தோற்றது. மீண்டும் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

1929இல் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது (தற்போதுள்ள மாதிரியான தேக்கநிலை.) அய்ரோப்பிய நாடுகளும் ஏனைய வட அமெரிக்க நாடுகளும் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளும் இத்தேக்க நிலையில் சிக்கித் தவித்தன. வால்ஸ்ட்ரீட் பங்குச் சந்தை சரிந்தது.

1932இல் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய முயற்சி (நியூ டீல்) என்ற திட்டத்தை அமல் செய்து, மது விற்பனைக்கு இருந்த தடையை நீக்கினார்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா பெர்ல் (முத்து -_ றிமீணீக்ஷீறீ) துறைமுகத்தை ஜப்பானிய போர்க் கப்பல்கள் தாக்கின. ஹவாய்த் தீவில் உள்ள இந்தத் துறைமுகத்தில் அமெரிக்க ராணுவத் தளம் உள்ளது. இதனால் அமெரிக்கா போரில் ஈடுபட்டு, ஜப்பான் மீது போர் என அறிவித்தது. அமெரிக்கா மீது போர் என ஜெர்மனி அறிவித்தது. அச்சு நாடுகள் தோற்கடிக்கப்பட்டன. நேசநாடுகள் வென்றன. அணுகுண்டுகளைப் பயன்படுத்திய முதல் நாடாக அமெரிக்கா விளங்கியது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டது.

சண்டை முடிந்த பிறகு இரு வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் நாடுகள் அணி சேர்க்கத் தொடங்கின. பல நாடுகள் இரு தரப்பிலும் சேர்ந்து செயல்பட்ட நிலையில் பனிப்போர் மூண்டு நடந்தது. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகுதான் இந்த நிலை மாறியது.

ஆப்ரிக்க மரபு வழியினர்க்கும் சம உரிமை தராத நிலை அமெரிக்காவில் நிலவியது. சமஉரிமைப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. மார்ட்டின் லூதர் கிங் ஆப்ரிக்க இன மக்களின் தலைவராக இப்போராட்டத்தை வழி நடத்தினார்.

1955 முதல் 1975 முடிய 20 ஆண்டுகளுக்கு அமெரிக்கா வியட்நாமுடன் போர் நடத்தித் தோற்றது. வியட்நாம் பொது உடைமை நாடாகக் கூடாது என்கிற மனப்பான்மை கொண்ட அமெரிக்கா, எவ்வித முகாந்தரமும் இல்லாமல் போரில் இறங்கி மூக்கு உடைபட்டது. வட, தென் வியட்நாம் நாடுகள் இணையக்கூடாது என முயன்று மூக்குடைபட்டது.
பல்வேறு நாடுகளிலும் தனிநபர் ஆதிக்கச் சக்திகள் வலுப்பெறுவதற்காகத் தன் படை பலத்தைப் பிரயோகப் படுத்தி வருகிறது. இந்நாட்டின் மீது மத அடிப்படையில் இசுலாமியப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இரட்டைக் கோபுரத்தைத் தாக்கியது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

வடஅமெரிக்கக் கண்டத்தில் கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் அமைந்துள்ள 96 லட்சத்து 31 ஆயிரத்து 418 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டின் மக்கள் தொகை 30 கோடி ஆகும். பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சுயாட்சி பெற்றுள்ளவை இணைந்து உண்மையான கூட்டாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நாடு. 1776 ஜூலை 4 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் நாடு. இதன் தலைவராக குடியரசுத் தலைவர். இரண்டு நாடாளுமன்றங்கள். ஒன்றின் பெயர் காங்கரஸ். மற்றொன்று செனட் .

பிரதிநிதிகள் சபை (காங்கரஸ்)யில் 435 இடங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். செனட் சபையில் 100 உறுப்பினர்கள். பதவிக் காலம் 6 ஆண்டுகள். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிய முடிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்.

உலகளவில் வலிமையான பொருளாதார நிலையில் உள்ளதாகக் கருதப்படும் இந்நாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் 12 விழுக்காடுப் பேர்கள் உள்ளனர். வேலை கிட்டாதோர் 5 விழுக்காடுப் பேர் இருக்கின்றனர். மக்களில் புரொடஸ்டன்ட் கிறித்துவர் 52 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 24 விழுக்காடு, யூதர்கள், முசுலிம்கள் தலா ஒரு விழுக்காடு உள்ளனர். எம்மதமும் இல்லை என்போர் 10 விழுக்காடு உள்ளனர்.

------------------------“விடுதலை” 12,13-8-2009

12.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - அய்க்கிய அரசு (United Kingdom)


அய்க்கிய அரசு (United Kingdom)

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து (ஆறில் ஒரு பங்கு மட்டும்) ஆகியவை அடங்கிய நாடு அய்க்கிய அரசு. இங்கிலாந்து, பிரிட்டன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பொது ஆண்டுக்கு 100 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதிகளை ரோமர்கள் படையெடுத்துக் கைப்பற்றினர். 600 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஸ்கான்டி நேவியர்கள் படையெடுத்து வந்தனர். ஆங்கிலேய - சாக்ஸன் அரசுகள் பல உருவாகின. சாக்ஸன் மன்னரை நார்மண்டியின் மன்னன் வில்லியம் தோற்கடித்த போது, பிரான்சு நாட்டு ஆட்சியும் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தன.

நாளடைவில் மன்னரிடம் அனைத்து அதிகாரங்களும் குவியவே பிரபுக்களின் செல்வாக்கினை அரசர் ஒழித்தார். இதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தின் விளைவாக 1215இல் அரசர் ஜானுக்கும் மக்களுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது. மகாசாசனம் எனும் பொருள்படும் மாக்னா கார்ட்டா வெளியிடப்பட்டு மக்களுக்குப் பல உரிமைகள் அளிக்கப்பட்டன.

இங்கிலாந்தும் வேல்சும் 1284இல் இணைந்தன. பின்னர் 1536இல் இதற்கான சட்டமும் இயற்றப் பட்டது. பிரான்சின் அரச பதவிக்குக் குறி வைத்த மூன்றாம் எட்வர்டு மன்னரால் நூறாண்டுப் போர் இரு நாடுகளுக்கும் மூண்டது. 1338 முதல் 1453 வரை போர் நடந்தது. பிரான்சில் இருந்த பிரிட்டனின் பல பகுதிகளை இழக்க நேர்ந்தது. 14ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் பரவிய பிளேக் நோயால், பிரிட்டனின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் இறந்துவிட்டனர்.

1455 முதல் 1485 வரை நடந்த ரோஜா சண்டை என்பது யார்க் பகுதிக்கும் லங்காஸ்டர் பகுதிக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி. இதன் முடிவில் ஏழாம் ஹென்றி மன்னர் வெற்றி பெற்றார். இவர் காலத்தில்தான் இங்கிலாந்து சர்ச் மீது ரோமன் கத்தோலிக்கத் தலைமை குரு போப் செலுத்தி வந்த ஆதிக்கம் உடைபட்டது.

ஹென்றியின் மகள் முதல் எலிசபெத் ஆட்சியில் அய்ரோப்பிய நாடுகளில் வலிமை மிக்க நாடாக இங்கிலாந்து வளர்ந்தது. இந்த அரசி தன்னை சக்ரவர்த்தி என்றுதான் அழைத்துக் கொண்டார். சக்ரவர்த்தினி என அழைக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். பெண்ணாகப் பிறந்திருந்தாலும் ஆணாகச் செயல்பட்ட வீரத்தன்மையின் அடையாளம் இது. 1588இல் ஸ்பெயின் நாடு மிகப் பெரிய கப்பற் படையை அனுப்பி இங்கிலாந்தின் மீது தாக்குதல் நடத்தியது. அதனை பிரிட்டிஷ் படை தோற்கடித்து கடலிலும் தன் வலிமையை நிரூபணம் செய்தது.

1642இல் மன்னர் சார்லஸ், நாடாளு மன்றத்துடன் மோதல் போக்கைக் கடைப் பிடித்தார். சண்டை மூண்டது. மன்னர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1649 முதல் 1653 வரை மாநிலக் கவுன்சில் நாட்டை ஆண்டது. நாடாளுமன்ற உறுப்பினரான ஆலிவர் கிராம்வெல் 1653 முதல் 1658 வரை நாட்டின் பாதுகாவலராகவும் பொறுப்பேற்று ஆண்டார். அவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டது.

1660இல் இரண்டாம் சார்லஸ் பதவிக்கு வந்தார். 1668இல் ஏற்பட்ட புரட்சியில் அப்போதிருந்த அரசர் ஜேம்ஸ் பதவியிலிருந்து துரத்தப்பட்டார். 1707இல் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் சட்டப்படி இணைந்தன. 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டனின் ஆட்சி பூமியெங்கும் பரவியது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்தது. பிரான்சுடன் ஏற்பட்ட போரில் 1815இல் வாடர்லூவில் இங்கிலாந்து பிரான்சைத் தோற்கடித்தது.

விக்டோரியா மகாராணி 1837 முதல் 1901 வரை ஆட்சி செய்தார். 1876 முதல் 1901 வரை இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்துடன் விளங்கினார். அவர் காலத்தில் மன்னராட்சி இளகி, மக்கள் ஆட்சியின் மாண்புகளுக்குப் படிப்படியாக இடம் கொடுக்கத் தொடங்கியது. மன்னர் பெயரளவுக்கு இருப்பவராக நிலைமைகள் உருவாகின.

1920இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அயர்லாந்து பகுதிக்கு இரு நாடாளுமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வட அயர்லாந்தில் ஆறு பிரதேசங்கள் (மாவட்டங்கள்) ஒரு நாடாளு மன்றத்தின் கீழும் ஏனைய பிரதேசங்களுக்கு மற்றொரு நாடாளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டன. 1921இல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி பிரிட்டிஷ் மன்னருக்கு உட்பட்ட சுதந்திர மாநிலத் தகுதி அயர்லாந்துக்கு அளிக்கப்பட்டது. எனினும் வட அயர்லாந்திலிருந்து இத்தனிச் சுதந்திரப் பகுதி பிரிந்து விட்டது. வட அயர்லாந்து பிரிட்டனில் இன்றளவும் நீடிக்கிறது. கத்தோலிக மதப் பிரிவினர் பிரிந்து சென்றனர். புரொடஸ்டன்ட் பிரிவினர் இணைந்தே உள்ளனர் மத அடிப்படையில்.

இரண்டு உலகப் போர்களிலும் ஈடுபட்ட பிரிட்டன் வெற்றி வாகை சூடியது. போர்க்காலத்தில் கூட்டு அமைச்சரவை நாட்டை ஆளும் முறை அமைந்தது. இதற்கு வாய்ப்பாக பிரதமர் சாம்பர்லின் பதவி விலகினார். வின்ஸ்டன் சர்ச்சில் தேர்ந்தெடுக்கப்பட்டு 1940 முதல் 1945 வரையிலும், 1951 முதல் 1955 வரையிலும் பதவி வகித்தார். போரின் போதும் போருக்குப் பிறகும் திறமையாக நிருவாகம் செய்தார். இந்திய விடுதலையின்போது தொழிற்கட்சி ஆண்டது. பிரதமர் கிளெமன்ட் அட்லி இருந்தார்.

1936 ஜனவரியில் எட்டாம் எட்வர்டு அரசர் பதவிக்கு வந்தார். எனினும் டிசம்பரில் பதவியைத் துறந்தார். அவருடைய காதலி மணவிலக்கு பெற்றவர். அவரைத் திருமணம் செய்து கொண்டால் அரசராக நீடிக்க முடியாது எனப் பிரிட்டிஷ் பழக்கம். காதலுக்காக அரச பதவியைத் துறந்து வரலாற்றில் இடம் பெற்றார். பிறகு பதவிக்கு வந்தவர் எட்வர்டின் தம்பி ஆறாம் ஜார்ஜ். அவருக்குப் பின் அவரின் மகள் இரண்டாம் எலிசபெத் (இயற் பெயர் எலிசபெத் அலக்ஸான்ட்ரா மேரி) பதவியில் இருக்கிறார்.

குடிக்கோனாட்சி என்றாலும் அரசர் அலங்காரப் பதவியை வகிக்கிறார். நாடாளுமன்றம் தான் சர்வ அதிகாரமும் பெற்றது. இரு சபைகள் உள்ளன. மக்கள் சபை 646 உறுப்பினர்கள் கொண்டது. அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவர். மற்றொன்று பிரபுக்கள் சபை. 557 பேர்கள் ஆயுள் பிரபுக்கள். 118 பேர் வமிசாவழி உறுப்பினர் (பிரபுக்)கள். பரம்பரை பிரபுக்களின் இடம் காலியாகும்போது மட்டும் அவ்விடத்திற்குத் தேர்தல் நடக்கும்.

எழுதப்படாத அரசமைப்புச் சட்டப்படி 800 ஆண்டுகளாக நடைபெறும் நாடாளுமன்ற அமைப்பு முறை உள்ளது. பிரிட்டனைப் பொறுத்த மட்டில் பாராளுமன்றம் என்றே குறிப்பிடப்பட்டது; பார் முழுதும் ஆண்ட காரணத்தால். இப்போது நாடாளு மன்றம் என அழைப்பதுதான் பொருத்தம்.

இந்நாட்டின் பரப்பளவு 2 லட்சத்து 44 ஆயிரத்து 820 சதுர கிமீ. மக்கள் தொகை 6 கோடியே 9 லட்சம். மக்களில் பெரும்பாலோர் கிறித்துவத்தின் இரு பெரும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். முசுலிம்கள் 15 லட்சம் பேர். இந்துக்கள் 5 லட்சம் பேர். சீக்கியர்கள் 5 லட்சம் பேர். யூதர்கள் மூன்றரை லட்சம் பேர் அளவுக்கு உள்ளனர்.

இங்கிலீஷ், வெல்ஷ், ஸ்காட்டிஷ் மொழிகள் பேசப்படுகின்றன. 99 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.

அரசி நாட்டின் தலைவர். தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் ஆட்சியின் தலைவர். அந்நாட்டு நிலவரப் படிக்கான வறுமைக் கோட்டுக்குக் கீழ் 17 விழுக்காடுப் பேர் உள்ளனர். 5 விழுக்காடு வேலை கிட்டாதவர்களும் இருக்கின்றனர்.

------------------"விடுதலை" 10,11-8-2009

10.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - உக்ரைன்-அய்க்கிய அரபு எமிரேட்கள்


உக்ரைன்

9ஆம் நூற்றாண்டில் பெரிய நாடாக இருந்த உக்ரைன் நாடு கீவ் ரஷியா என அழைக்கப்பட்டதும் உண்டு. 10ஆம் நூற்றாண்டில் கீவ் மிகப் பெரிய அரசியல் கலாச்சார மய்யமாகத் திகழ்ந்தது. 1240இல் நடந்த மங்கோலியர்களின் படைபெயடுப்பு இப்புகழையும் பெருமைகளையும் அழித்து விட்டது.

சண்டைக் குணம் உள்ள கொசாக் இனத்தவர் உக்ரைனின் தென்பகுதியில தலையெடுத்தனர். இவர்களின் போரிடும் ஆற்றலை போலந்துக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஆனாலும் கொசாக் இனத்தவர் புரட்சி செய்ததை போலந்தியர் மிகவும் சிரமப்பட்டு ஒடுக்கினர்.
1645இல் போலந்தியர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி உக்ரேனியர்கள் (ரஷியா) மாஸ்கோவிடம் கேட்டுக் கொண்டனர். இதற்காகச் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரஷியாவுடன் கீவ் இணைத்துக் கொள்ளப்பட்டது. உக்ரைன் நாடு ரஷியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1917இல் ரஷ்யப் புரட்சி நடைபெற்றபோது இருந்த குழப்பநிலையைப் பயன்படுத்திக் கொண்டு உக்ரைன் தனது விடுதலையை அறிவித்துக் கொண்டது. 1920இல் சோவியத் நாடு உக்ரைனைக் கைப்பற்றிக் கொண்டது. ஜெர்மனியின் நாஜிப் படைகள் படையெடுப்பின் காரணமாக ஏராளமான உக்ரேனியர்கள் அழிந்துபட்டனர். நாஜிகளுடன் சேர்ந்து செயல்பட்ட காரணத்திற்காக 2 லட்சம் கிரிமிய டாட்டர்களைச் சைபீரியாவுக்கு நாடு கடத்தினார் ஸ்டாலின்.
அணுஉலை விபத்து பெருமளவில் 1986இல் செர்னோபிலில் நடந்தது. அதன் விளைவாக 50 லட்சம் பேர் கதிர் வீச்சுத் தாக்குதலுக்கு உக்ரைன், பெலாரஸ் மற்றும் ரஷியாவில் ஆளாகிப் பாதிக்கப்பட்டது. உலகின் பெரும் விபத்து ஆகும்.

1991இல் சோவியத் யூனியன் உடைந்தபோது, உக்ரைன் விடுதலை அடைந்தது.
கருங்கடல் கரையில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் பரப்பளவு 6 லட்சத்து 3 ஆயிரத்து 700 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 68 லட்சம். மக்கள் அனைவரும் பல்வேறு கிறித்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். உக்ரேனிய, ரஷ்ய, ரொமானிய, போலிஷ், ஹங்கேரிய மொழி பேசும் மக்கள். அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள்.

குடியரசுத் தலைவரும் ஆட்சித் தலைவருமான பிரதமரும் உள்ளனர். 29 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதவர்கள். உலகத் தொழிலாளர் நிறுவனத்தின் அறிக்கையின்படி 9 முதல் 10 விழுக்காடு பேர் வேலை கிட்டாதோர்.



அய்க்கிய அரபு எமிரேட்கள்

இந்நாட்டில், ஆரம்ப காலத்தில் கடல் பயணம் செய்வோர் குடியேறி வாழ்ந்தனர். கார்மத்தியர் எனும் இனத்தவர் இங்கே ஓர் அரசை நிறுவினர். இந்த அரசு குலைந்த நிலையில் மக்கள் கடற்கொள்ளையில் இறங்கினர். மஸ்கட், ஓமன் பகுதிகளை இவர்கள் தாக்கத் தொடங்கியபோது பிரிட்டன் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியது.

1853ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டன் இப்பகுதியை ஆண்டபோதிலும் உறுப்பு நாடுகள் தத்தம் எல்லைக்குள் கட்டுப்பாடு செலுத்தின. 1960இல் இவை தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டுக் குழுவை அமைத்துக் கொண்டன. அதுவே பின்னர் கூட்டரசாக ஆகியது. பஹ்ரைனும் ஓமனும் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்தன. பதிலாக ரஸ்அல்கயாமா நாடு 1972இல் கூட்டரசில் இணைந்தது.

ஓமன் வளைகுடா, பாரசீக வளைகுடா ஆகியவற்றுக்கிடையில் சவூதி அரேபியாவுக்கும் ஓமன் நாட்டுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பளவு 82 ஆயிரத்து 880 சதுர கி.மீ. ஆகும். 26 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் வெளிநாட்டவர் 16 லட்சத்திற்கும் அதிகமானோர். சன்னி முசுலிம்கள் 80 விழுக்காடு. ஷியா முசுலிம்கள் 16 விழுக்காடு. மீதிப் பேர் கிறித்துவர், இந்துக்கள்.

அரபி மொழி ஆட்சி மொழி. பாரசீகம், இங்கிலீஷ், இந்தி பேசப்படுகின்றன. 78 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள்.

தலைநகர் அபுதாபி. 2.-12.-1971 விடுதலை நாள். அதிபரும் பிரதமரும் உள்ளனர். திர்ஹாம் என்பது நாணயத்தின் பெயர். 2 விழுக்காட்டினர் வேலை கிட்டாது உள்ளனர். நாட்டில் இருப்புப் பாதையே கிடையாது.

---------------------நன்றி:-"விடுதலை" 9-8-2009

உலக நாடுகள் -தூரப்பார்வை - டுவாலு - உகாண்டா


டுவாலு

எல்லிஸ் தீவுகள் என அழைக்கப்பட்ட டுவாலு 1892இல் பிரிட்டனின் பாதுகாப்பில் வந்தது. 1915இல் தனது குடியேற்ற நாடாக அதனை அறிவித்தது. கில்பர்ட் தீவுகளுடன் சேர்த்து ஆண்டு வந்தது. 1975இல் இரண்டும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, டுவாலு எனப் பெயர் வைக்கப்பட்டது. சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு 1978 இல் முழு விடுதலை அளிக்கப் பட்டது.
தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள இத்தீவு வெறும் 26 சதுர கி.மீ. மட்டுமே பரப்புள்ளது. மக்கள் தொகை 12 ஆயிரம். மக்கள் கிறித்துவர்கள் டுவாலுவ மொழி பேசுகின்றனர்.
குடிக்கோனாட்சி முறை. பிரிட்டிஷ் அரசிதான் அதிபர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் உண்டு. ஆஸ்திரேலிய டாலரும் டுவாலிய டாலரும் பணப் புழக்கத்தில் இருக்கின்றன. இருப்புப்பாதை இல்லை.



உகாண்டா

விக்டோரியா ஏரியைச் சுற்றியுள்ள பெரும் பகுதியை உகாண்டா அரசு தன் ஆதிக்கத்தில் 1800 களில் வைத்திருந்தது. 1840இல் அரேபிய வணிகர்கள் வந்தனர். தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் வந்தனர். 1894இல் பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தது.
1921இல் உகாண்டாவுக்கு சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது. 1958இல் உள்நாட்டு சுயாட்சி அளிக்கப்பட்டது. 1962இல் விடுதலை பெற்றது. 1963இல் குடியரசு நாடானது. உகாண்டாவின் மன்னர் சர் எட்வர்ட் முடேசா முதல் குடியரசுத் தலைவரானார்.

1971இல் ராணுவத் தளபதி இடிஅமீன் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினார். ஆசியர்களைத் தம் நாட்டிலிருந்து வெளியேற்றினார். இசுரேல் நாட்டிடம் வைத்துக் கொண்டிருந்த உறவைத் துண்டித்து, லிபியா, பாலஸ்தீனத்துடன் உறவு வைத்துக் கொண்டார்.
இவரது ஆட்சிக் கொடுமைகளால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1978இல் தான்சானியா மீது படையெடுத்தார். காகரா பகுதியைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உகாண்டா மீது தான்சானியா 1979இல் படையெடுத்தது. அச் சந்தர்ப்பத்தில் இடி அமீனுக்கு எதிர்ப்பானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கினர். இடிஅமீன் நாட்டை விட்டு லிபியாவுக்கு ஓடினார். பின்னர் சவூதி அரேபியாவுக்குப் போய் அங்கேயே 2003 ஆகஸ்டில் இறந்தார்.

ஆப்ரிகாவின் கிழக்குப் பகுதியில் கென்யாவுக்கு மேற்கே உள்ள இந்நாட்டின் பரப்பளவு 2 லட்சத்து 36 ஆயிரத்து 40 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 82 லட்சம். கத்தோலிக்கர் 33 விழுக்காடு. புரொடஸ்டன்ட் 33 விழுக்காடு. முசுலிம் 16 விழுக்காடு. ஆப்ரிக்கப் பழங்குடி நம்பிக்கை கொண்டோர் 18 விழுக்காடு.

இங்கிலீஷ் ஆட்சி மொழி. ஆப்ரிக்க இனக்குடி மொழிகள் பேசப்படுகின்றன.70 விழுக்காடு மக்கள் படிப்பறிவு கொண்டவர்கள். 9.-10-.1962இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்த நாட்டில் குடியரசுத் தலைவரே ஆட்சியின் தலைவராகவும் உள்ளார்.
35 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

-------------------"விடுதலை" 8-8-2009

9.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - துருக்கி-துர்க்மனிஸ்தான்


துருக்கி

துருக்கிநாடு அமைந்துள்ள ஆசியாவின் பகுதியைப் பொது ஆண்டுக்கு 1900 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டைட் அரச வமிசம் ஆட்சி செய்தது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பாரசீக அரசு இப்பகுதியைத் தனதாக்கிக் கொண்டது. அதன்பின் ரோமப் பேரரசு கைப்பற்றி, கான்ஸ்டான்டைன் பேரரசர் காலத்தில் (இன்றைய இஸ்தான்புல்) கான்ஸ்டான்டிநோபில் கிழக்கிந்திய ரோமப் பேரரசின் தலைநகர் ஆக்கப்பட்டது. ரோமானிய அரசுக்குப் பின் பைஜான்டின் சாம்ராஜ்யத்தின் பிடியில் சிக்கி, அதன்பின் ஒட்டோமான் பேரரசின் ஆட்சியில் வந்தது.

ஓட்டோமான் பேரரசு 600 ஆண்டுக்காலம் ஆண்டது. இக்காலத்தில் தென்கிழக்கு அய்ரோப்பியப் பகுதிகளையும் தன்அரசில் இணைத்துக் கொண்டது. இப்பேரரசு தன் ஆதிக்கத்தில் மேலைநாடுகளான சிரியா, இசுரேல், ஈராக், அரேபியாவின் பெரும் பகுதி, எகிப்து, வடஆப்ரிகாவில் அல்ஜீரியா போன்ற பகுதிகளையும் தன்வசம் வைத்துக்கொண்டிருந்தது. 1922இல் ஒட்டோமான் பேரரசு சீர் குலைந்து துருக்கிக் குடியரசும் பற்பல சிறுநாடுகளுமாகச் சிதைந்தது.

1909இல் இளந்துருக்கியரின் புரட்சி வெடித்தது. அதன் விளைவாக அரசமைப்புச் சட்டம் அமைத்திடவும் தரமான சிந்தனையுள்ள அரசு அமைத்திடவும் ஏற்பாடானது. முதல் உலகப்போரில் ஜெர்மனியுடன் கூட்டு வைத்திருந்த காரணத்தால் தனது அரசின் பெரும் பகுதியை நாடு இழந்தது.

1923இல் துருக்கிக் குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. துருக்கியின் தந்தை (அத்தாதுர்க்) எனப் போற்றப்படும் முஸ்தபாகெமால் பாட்சாவின் தலைமையில் அரசு அமைந்தது. அரசராகவும் மதகுருவாகவும் ஆட்சி செய்து ஒரே நபர் அதிகாரம் செய்துகொண்டிருந்த காலிஃபா முறையை கமால்பாட்சா ஒழித்தார். ஏராளமான சமூகச் சீர்திருத்தங்களையும் சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி அய்ரோப்பாவின் நோயாளி துருக்கி என்று இருந்த பெயரை மாற்றினார். அய்ரோப்பிய பாணி உடையை ஆணும் பெண்ணும் அணியும் மாற்றத்தை உண்டாக்கினார். இங்கிலீஷ் எழுத்துகளில் துருக்கி மொழியை எழுதும் முறையைக் கொண்டு வந்தார். இசுலாமியர்கள் துருக்கிக் குல்லாய் அணிவதை மாற்றி அய்ரோப்பிய பாணித்தொப்பி அணிவதையும் பெண்கள் புர்க்கா அணிவதையும் தடைசெய்து, மாற்றினார்.

அய்ரோப்பிய, ஆசியக் கண்டத்தின் எல்லைநாடாக, கருங்கடல் கரையிலும் ஏமன் கடலிலும், மத்தியதரைக்கடலிலும் தனது எல்லைகளைக் கொண்டு கிரீசுக்கும் சிரியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பரப்பு 7லட்சத்து 80 ஆயிரத்து 580 சதுர கி.மீ. மக்கள் தொகை 7 கோடியே 4லட்சம் எல்லாரும் சன்னி இசுலாமிய மதத்தவர். ஆட்சிமொழி துருக்கி. 87 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள்.

29.10.1923இல் விடுதலை நாள். குடியரசு நாடு. குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 10 விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டவில்லை.

துர்க்மனிஸ்தான்

பொது ஆண்டுக்கு 400 ஆண்டுகளுக்கும் 300 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்த்தியன் பேரரசைச் சேர்ந்திருந்தது துர்க்மெனிஸ்தான். துர்க்மென் இனத்தவர் இந்நாட்டிற்கு 11ஆம் நூற்றாண்டில் வந்தனர். 1860இல் ரஷியர்கள், இங்கு படையெடுத்து வந்தனர்.பிறகு சோவியத் யூனியனில் ஒரு குடியரசாக ஆனது. 1925இல் சோவியத் சோஷலிசக் குடியரசில்இணைந்த நாடானது, சோவியத் யூனியன் 1991இல் சிதைந்த பிறகு துர்க்மனிஸ்தான் தனிநாடானது.

ஈரானுக்கும் கஜக்ஸ்தானுக்கும் இடையில் காஸ்பியன் கடற்கரையில் அமைந்திருக்கும் இந்நாடு மத்திய ஆசியாவில் உள்ளது. 4லட்சத்து 88 ஆயிரத்து 100 சதுர கி.மீ. பரப்பும் 51 லட்சம் மக்கள் தொகையும் உள்ளநாடு.

முசுலிம்கள் 89 விழுக்காடும் கிழக்கிந்திய பழமைவாத மதத்தினர் 9 விழுக்காடும் உள்ளனர். துர்க்மன் மொழிபேசுவோர் 72 விழுக்காடு. ரஷிய மொழி 12 விழுக்காடு. உஸ்பெக் மொழி 9 விழுக்காடும் என்கிற அளவிலுள்ள மக்கள். 99 விழுக்காட்டினர் கல்வியறிவுபெற்றவர்.

27.10.1991இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக் குடியரசு நாட்டிற்குக் குடியரசுத் தலைவரே அமைச்சரவையின் தலைவராகவும் உள்ளார். 60 விழுக்காடு மக்கள் வேலைகிட்டாமலும் அதே அளவு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழும் உள்ளனர்.

-------------------"விடுதலை" 7-8-2009

7.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -டிரினிடாட் மற்றும் டொபாகோ-டுனிசியா




டிரினிடாட் மற்றும் டொபாகோ

1498இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இத் தீவுகளுக்கு வந்தபோதே, அத்தீவுகளில் டிரினிடாடில் வாழ்ந்த ஆதி குடிகள் அரவாக் இனத்தினர். டொபாகோ தீவில் வாழ்ந்தவர்கள் கரிப் இனத்தினர். தீவுகள் 1802 வரை ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் பிறகு பிரிட்டிஷாரின் கைக்கு மாறியது. இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வேலை வாங்கப்பட்ட சம்பவங்கள் 1845 முதல் 1917 வரை நடந்தன. 1889இல் இரு தீவுகளும் ஒன்றாக்கப்பட்டன.

வரையறுக்கப்பட்ட சுயாட்சி 1925இல் இத் தீவுகளுக்கு வழங்கப்பட்டது. 1958 முதல் 1962 வரை மேற்கிந்தியக் கூட்டரசின் பகுதிகளாக இருந்தன. 1962இல் விடுதலை பெற்றன. 1976இல் குடியரசு நாடானது.

கரீபியத் தீவுக் கூட்டத்தில் உள்ள இந்நாட்டின் பரப்பு 5 ஆயிரத்து 128 சதுர கி.மீ. மக்கள் தொகை 11 லட்சம். மக்களில் 29 விழுக்காடு ரோமன் கத்தோலிகர். 24 விழுக்காடு இந்து. ஆங்லிகன் பிரிவுக் கிறித்துவம் 11 விழுக்காடு. முசுலிம் 6 விழுக்காடு. ஏனைய நம்பிக்கையாளர்கள் மீதிப்பேர்.

இவர்களின் ஆட்சி மொழி இங்கிலீஷ். இந்தி, பிரெஞ்ச், சீனம், ஸ்பானிஷ் மொழிகளை மக்கள் பேசுகின்றனர். மக்களில் 99 விழுக்காடு படிப்பறிவு பெற்றவர். இந்நாட்டைச் சேர்ந்த வி.எஸ்.நைபால் எனும் இந்திய மரபுவழி இங்கிலீஷ் எழுத்தாளர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

31-.8-.1962இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இந்நாட்டில், குடியரசுத் தலைவர் உள்ளார். ஆட்சித் தலைவராகப் பிரதமர் உள்ளார். 21 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 8 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

இருப்புப் பாதை இந்நாட்டில் கிடையாது.

டுனிசியா

இன்றைய டுனிசியா நாட்டில் போனிசியர்கள் குடியேறி 12ஆம் நூற்றாண்டுக் காலத்தில் வாழத் தொடங்கினர். நாட்டின் கார்த்தேஜ்நகர் (இன்றைய டுனிஸ்) பகுதிகளிலும் குடியேற்றம் நிறைந்திருந்தது. கார்த்தேஜ் நகர்ப் பகுதிகளுக்கும் ரோம் நகருக்கும் புனிக் போர்கள் நடைபெற்றன. போரினால் கார்த்தேஜ் நகரமே அழிக்கப்பட்டது.

1600இல் துருக்கி ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக டுனிசியா ஆனது. 1881இல் பிரான்சு நாட்டுப் படையினர் டுனிஸ் தலைநகரத்தைப் பிடித்து விட்டனர். நாட்டின் பொருளாதார நடவடிக்கை களிலும் வெளிநாட்டுத் தொடர்பு நடவடிக்கைகளி னாலும் பிரான்சு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. டுனிசியா பிரான்சின் ஆதிக்கத்திலும் கட்டுப் பாட்டிலும் 1883இல் வந்துவிட்டது. 1956இல் டுனிசியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. மறு ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு நாடு குடியரசானது.

மத்திய தரைக்கடல் கரையில் ஆப்ரிகாவின் வட பகுதியில், அல்ஜீரியாவுக்கும் லிபியாவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 610 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை ஒரு கோடியே 2 லட்சம். மக்களில் 98 விழுக்காடு முசுலிம்கள். கிறித்துவர்களும் யூதர்களும் தலா ஒரு விழுக்காடு உள்ளனர்.

அரபி மொழி ஆட்சி மொழி. பிரெஞ்ச் மொழி வணிக மொழி. மக்களில் 74 விழுக்காடு மட்டுமே படிப்பறிவு பெற்றவர்.

20-.3.-1956இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 14 விழுக்காடுப் பேர் வேலை கிட்டாதோர். 7 விழுக்காடுப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்.

-------------------"விடுதலை" 6-8-2009

6.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - தாய்லாந்து-டோங்கா


தாய்லாந்து

மோன் மற்றும் கமர் வமிச ராஜ்யங்களின் ஒரு பகுதியாக 9ஆம் நூற்றாண்டிலிருந்து விளங்கிய பகுதி தாய்லாந்து. தாய் மொழி பேசிய மக்கள் சீனாவில் இருந்து இந்தப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தனர். 13ஆம் நூற்றாண்டில் இரண்டு அரச பரம்பரைகள் உருவாகின. 1220இல் சுகேரத்தை வமிசமும் 1296இல் சாங்மாய் வமிசமும் உருவாகின. 1767இல் இந்த வமிச ஆட்சியை பர்மாக்காரர்கள் அழித்துவிட்டனர். 1782இல் சாக்ரி வமிசம் ஆட்சிக்கு வந்து பாங்காக் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு அரசின் எல்லைகளை விரிவாக்கினர். மலாய், லாவோஸ், கம்போடியா பகுதிகள் இவரது ஆளுகையில் வந்தன. 1856இல் நாட்டின் பெயர் சயாம் என்றழைக்கப் பட்டது.

தென்கிழக்காசியப் பகுதிகளில் மேலை நாட்டினர் தம் ஆதிக்கத்தைப் பரவ விட்டபோதிலும் சயாம் தனித்தே இருந்தது. 1932இல் நாட்டில் குடிக் கோனாட்சி முறை புகுத்தப்பட்டது. ராணுவப் புரட்சி இதற்குக் காரணமாக இருந்தது. 1939இல் மீண்டும் தாய்லாந்து எனும் பெயர் வைக்கப்பட்டது.

பர்மாவுக்குத் தென் கிழக்கே அந்தமான் கடலிலும் தாய்லாந்து வளைகுடாக் கடலின் கரையிலும் இடைப்பட்டு அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 5 லட்சத்து 14 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 6 கோடியே 47 லட்சம். மக்களில் 95 விழுக்காட்டினர் பவுத்த மதத்தினர். முசுலிம்கள் 4 விழுக்காடு. இந்துக்கள் கூட மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

தாய் மொழி ஆட்சி மொழி. இங்கிலீஷ் பேச்சு மொழி. 93 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். மன்னர் நாட்டின் தலைவர். பிரதமர் ஆட்சியின் தலைவர். தாராளப் பொருளாதார முறை உள்ள நாடு. ஆனாலும் 10 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். ஒரு விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டாத நிலையும் உண்டு.

தாய் கலாச்சாரத்தையும் இயற்கை அழகையும் அழகிய கடற்கரையையும் பவழப் பாறைகளையும் கண்டு களிக்க உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாத் தொழில் முக்கிய வருமானம் தருகிறது. தாய் உணவும் கூட சிறப்பானது.



டோங்கா

பாலினீசியர்கள்தான் டோங்கோவில் குடியேறி வசிக்கத் தொடங்கிய மக்கள். 1616இல் ஆலந்து நாட்டினர் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முயன்றனர். 1773இல் இங்கு வந்த காப்டன் ஜேம்ஸ் குக்கைத் தொடர்ந்து பிரிட்டிஷாரும் வந்தனர்.

டவுபாஹு டுபோ என்பவர் தற்போதைய அரசை 1831இல் நிறுவி முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் ஆளத் தொடங்கினார். அவரின் பெயரன் இரண்டாம் ஜார்ஜ் பிரிட்டிஷாருடன் நட்புணர்வு ஒப்பந்தம் புரிந்து பிரிட்டிஷ் பாதுகாப்பில் நாடு இருக்குமாறு செய்தார். 1959இல் மீண்டும் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட்டது. என்றாலும் 1970இல் டோங்காவுக்கு விடுதலை கிடைத்தது.

தென்பசிபிக் பெருங்கடலில் ஓசியானியா பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்களில் அமைந்துள்ள டோங்கா நாட்டின் பரப்பளவு 748 சதுர கி.மீ. மக்கள் தொகை ஒரு லட்சத்து 15 ஆயிரம். மக்கள் பேசும் மொழி டோங்கன். இங்கிலீசு மொழியும் பேசுகின்றனர். 99 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர். எல்லாரும் கிறித்துவ மதத்தினர்.

பரம்பரைக் குடிக்கோனாட்சி நடைபெறும் நாட்டின் தலைவராக மன்னரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உள்ளனர். மக்களில் 13 விழுக்காடு வேலை கிட்டாதோர். நாட்டில் இருப்புப் பாதை கிடையாது.

-------------------"விடுதலை" 5-8-2009

5.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - தான்சானியா-டோகோ


தான்சானியா

1500 ஆம் ஆண்டில் போர்த்துகீசியர் தான்சானியா நாட்டின் கடற்கரையில் இறங்கி 17 ஆம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் ஓமன் நாட்டு சுல்தான் இந்த நாட்டைப் பிடித்துக் கொண்டார். 1885 இல் ருவாண்டா, புருண்டி ஆகிய நாடுகளையும் இணைத்து தங்கநியிகா எனும் நாடு ஜெர்மனி கிழக்கு ஆப்ரிக்காவின் காலனியாக உருவாக்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்து இந்த நாட்டை நிருவகித்தது.

1961 இல் தங்கநியிகா விடுதலை பெற்றது. ஜுலியஸ் நைரேரே பிரதமரானார். அடுத்த ஆண்டில் குடியரசு நாடானது. 1964 ஆம் ஆண்டில் ஆப்ரிக ஷிராசிக் கட்சி புரட்சி நடத்தி ஜான்சிபார் சுல்தானை ஆட்சியிலிருந்து அகற்றியது. தங்கநியிகாவும் ஜான்சிபாரும் இணைந்து தங்கநியிகா ஜான்சிபார் அய்க்கியக் குடியரசு நாடு என அறிவித்தது. 1964 அக்டோபர் மாதத்தில் நாட்டின் பெயர் தான்சானியா அய்க்கியக் குடியரசு என மாற்றப்பட்டது.

இந்திய மாக்கடலின் கரையில் ஆப்ரிகாவின் கிழக்குப் பகுதியில் கென்யாவுக்கும் மொசாம்பிக் நாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 9 லட்சத்து 45 ஆயிரத்து 87 சதுர கி.மீ. ஆகும். இந்நாட்டைச் சேர்ந்த மாபியா, பெம்பா, ஜான்சிபார் தீவுகளின் பரப்பளவும் சேர்ந்தது. மக்கள் தொகை 3 கோடி 76 லட்சம்.

மக்களில் கிறித்துவர் 30 விழுக்காடு; முசுலிம் 35 விழுக்காடு; பழைய மதக் கோட்பாடுகள் உடையோர் 35 விழுக்காடு உள்ளனர். ஜான்சிபார் தீவின் மக்கள் அனைவரும் இசுலாமியர்கள். கிஸ்வாலி அல்லது சுவாஹிலி மொழி ஆட்சி மொழி. இங்கிலீஷ், அரபிமொழி மக்கள் பேசும் மொழி. மக்களில் 78 விழுககாடு படிப்பறிவு பெற்றவர்கள்.

26-.4-.1964 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் நாடு. குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். 36 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

டோகோ

1884 முதற்கொண்டு டோகோ நாடு ஜெர்மனியின் பாதுகாப்பில் இருந்தது. 1914 இல் பிரிட்டிஷ் துருப்புகளும் பிரெஞ்ச் துருப்புகளும் டோகோவைக் கைப்பற்றிக் கொண்டன. 1922 இல் உலக நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில், டோகோவின் மேற்குப் பகுதியின் நிருவாகப் பொறுப்பு பிரிட்டனுக்கும் கிழக்குப் பகுதியின் நிருவாகப் பொறுப்பு பிரான்சுக்கும் தரப்பட்டது.

1956 இல் பிரிட்டிஷார் வசம் இருந்த டோகோ-லாந்துப் பகுதிகள் கோல்டுகோஸ்ட் (தங்கக் கடற்கரை) எனும் நாட்டுடன் சேர்ந்தது. இந்நாடு பின்னாளில் கானா என்றழைக்கப்படுகிறது. 1960 இல் பிரான்சின் பிடியிலிருந்த பகுதி விடுதலை பெற்று டோகோ என்கிற நாடாகியது. மத்திய ஆப்ரிக்க நாடான இதன் பரப்பு 56 ஆயிரத்து 785 சதுர கி.மீ. மக்கள் தொகை 56 லட்சம். கிறித்துவர்கள் 29 விழுக்காடும், முசுலிம்கள் 20 விழுக்காடும் உள்ளனர். மீதிப்பேர் பழங்கால நம்பிக்கைகளைக் கொண்டோர். ஆட்சி மொழி பிரெஞ்ச். நிறைய ஆப்ரிக்க மொழிகள் பேசப்படுகின்-றன. 61 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள்.

27-.4-.1960 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக்குடியரசு நாட்டின் தலைவராகக் குடியரசுத் தலை-வரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உள்ளனர். 32 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 568 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உண்டு.

-------------------"விடுதலை" 4-8-2009

4.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சிரியா-தஜிகிஸ்தான்


சிரியா

பொது ஆண்டுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே சிரியா நாடு, சுமேரிய, அசிரிய, பாபிலோனியர் களின் ஆட்சியில் இருந்தது. அதற்கும் முன்னதாக 300 ஆண்டுகளாக இந்நாடு எகிப்திய, அர்காடிய, அமோரைட்களின் ஆட்சியில் பாரசீக அஷ்மெனியன் பேரரசின் அங்கமாக இருந்தது. பிறகு மகா அலெக்சாந்தரின் சாம்ராஜ்யத்தின் பகுதியானது.

அதன் பிறகு பல சாம்ராஜ்யங்கள் இந்த நாட்டை ஆண்டன. ரோமப் பேரரசு பைஜான்டைன் அரசு, ஒட்டாமான் பேரரசு போன்றவை ஆண்டன. பிரிட்டன் முதல் உலகப் போரின் போது, சிரியாவின் மீது படையெடுத்தது. போரின் முடிவில் பிரெஞ்ச் நாட்டுக்குச் சொந்தமாகியது.
1946 இல் ஏப்ரல் 17 இல் சிரியா விடுதலை பெற்றது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் மத்தியதரைக் கடலையொட்டி லெபனான், துருக்கி நாடுகளுக்கு இடையே அமைந்த இந்நாட்டின் பரப்பளவு ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 180 சதுர கி.மீ. ஆகும். இதில் இசுரேல் பிடித்து வைத்துள்ள பகுதி 1295 சதுர கி.மீ. ஆகும்.
நாட்டின் மக்கள் தொகை 1 கோடி 89 லட்சம். சன்னி முசுலிம்கள் 74 விழுக்காடு. கிறித்துவர்கள் 10 விழுக்காடு. மீதிப்பேர் பல்வேறு இசுலாமியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். பல்வேறு இனக்குழு மொழிகளைப் பேசுவோர் உள்ளனர். 77 விழுக்காடு மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள்.

இசுலாமிய மதச் சட்டப்படி நடக்கும் நாடு. அதிபரும் பிரதமரும் உள்ளனர். 20 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 12 விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டவில்லை.

தஜிகிஸ்தான்

பொது ஆண்டுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டில் பாரசீகர்கள் குடியேறினர். பாரசீக சாம்ராஜ்யத்திலும் மகா அலெக்சாண்டரின் பேரரசிலும் தஜிகிஸ்தான் அங்கமாக இருந்தது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை இந்நாட்டை உஸ்பெக்கியர் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1860 இல் நாட்டின் பெரும் பகுதியை ரஷியா கைப்பற்றிக் கொண்டது.

1924 இல் சுயாட்சி பெற்ற அரசாக உஸ்பெக் குடியரசு எனும் பெயரில் ஆனது. 1929 இல் குடியரசு நாடு எனும் தகுதியைப் பெற்றது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபோது விடுதலை பெற்ற நாடானது.

சீனாவுக்கு மேற்கே, மத்திய ஆசியாவில் உள்ள இந் நாட்டின் பரப்பு 1 லட்சத்து 43 ஆயிரத்து 100 சதுர கி.மீ. மக்கள் தொகை 73 லட்சத்து 50 ஆயிரம். சன்னி முசுலிம்கள் 85 விழுக்காடு. ஷியா முசுலிம்கள் 5 விழுக்காடு.

தஜிக் மொழி ஆட்சி மொழி. ரஷிய மொழி பரவலாகப் பேசப்படுகிறது. மக்கள் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள்.

குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 60 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 12 விழுக்காடு பேர் வேலை கிட்டாதோர். 482 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உண்டு

--------------------நன்றி:- "விடுதலை" 3-8-2009

2.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சுவீடன்-சுவிட்ஜர்லாந்து




சுவீடன்

1397இல் சுவீடன், நார்வே, டென்மார்க் ஆகியவை இணைக்கப்பட்டு வலுமிகுந்த நாடுகளாகத் திகழ்ந்தன. எனினும் சுவீடனுக்கும் டென்மார்க்குக் கும் பிரச்சினைகள் ஏற்பட்டுப் பிரிவு ஏற்பட்டது. 1520இல் டென்மார்க் அரசர் இரண்டாம் கிறிஸ்டியன் சுவீடன் மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டார். அத்துடன் சுவீடன் நாட்டுப் பெரிய மனிதர்களைக் கொன்று குவித்தார். ஸ்டாக்ஹோம் குருதிக் குளியல் என்று இப்படுகொலையை வரலாறு பதிவு செய்துள்ளது.

1523இல் சுவீடனின் அரசரான கஸ்டாவ் வாசா காலத்தில் டென்மார்க் நாட்டின் பிடியிலிருந்து சுவீடன் தன்னை விடுவித்துக் கொண்டது. 30 ஆண்டுப் போர் என வருணிக்கப்படும் 1618 முதல் 1648 முடிய நடைபெற்ற போரின் விளைவாக விடுதலை கிட்டியது. போரின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி பல புதிய பகுதிகள் சுவீடனோடு இணைக்கப்பட்டன.

அய்ரோப்பாவின் வட பகுதியின் ஃபின்லாந்துக்கும் நார்வேக்கும் இடையில் பால்டிக் கடலோரத்தில் உள்ள சுவீடனின் பரப்பு 4 லட்சத்து 49 ஆயிரத்து 964 சதுர கி.மீ. மக்கள் தொகை 91 லட்சம். கிறித்துவ லுத்தரன் பிரிவைச் சேர்ந்தவர்கள் 97 விழுக்காடு. மீதிப் பேர் பலவகை கிறித்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். சுவீடிஷ் மொழியுடன் சாமி ஃபின்னிஷ் மொழிகளும் பேசப்படுகின்றன. 99 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

குடிக்கோனாட்சி முறை நாடு. மன்னர் நாட்டுத் தலைவர். தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் ஆட்சித் தலைவர். 6 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

சுவிட்ஜர்லாந்து

பழங்காலத்தில் ஹெல்வெடியா என்று அழைக்கப்பட்ட சுவிட்ஜர்லாந்து ரோமானிய சாம் ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1648ஆம் ஆண்டில் அதிலிருந்து விடுதலை பெற்றது. 1798இல் பிரெஞ்ச் புரட்சிப் படையினர் இந்நாட்டைக் கைப்பற்றி ஹெல்வெடிக் குடியரசு நாட்டை நிறுவினர். இருப்பினும் 1803இல் நெப்போலியன் பழைய ஆட்சியை ஏற்படுத்தித் தந்தார். பிரெஞ்ச் மொழி பேசும் மக்களும் இத்தாலி மொழி பேசுவோரும் சம உரிமை படைத்தவர்களாக 19 ஆம் நூற்றாண்டில் நிலை உருவானது.

நாடுகள் மன்றத்தில் (League of Nations) 1920 இல் உறுப்பு நாடானது. அதனால் ஜினீவா நகரம் உலக நாடுகள் மன்றத்தின் தலைநகரானது. இரண்டு உலகப் போர்களிலும் சுவிட்சர்லாந்து பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.

அய்ரோப்பாவின் நடுப்பகுதியில் பிரான்சுக்குக் கிழக்கேயும் இத்தாலிக்கு வடக்கேயும் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பரவு 41 ஆயிரத்து 290 சதுர கி.மீ. மக்கள் தொகை 75 லட்சத்து 50 ஆயிரம். மக்களில் ரோமன் கத்தோலிகர் 42 விழுக்காடு. புரொடஸ்டன்ட் 35 விழுக்காடு. மதமே இல்லாதவர்கள் 11 விழுக்காடு.

ஜெர்மனி மொழி பேசுபவர்கள் 64 விழுக்காடு. பிரெஞ்ச் மொழி பேசுபவர்கள் 19 விழுக்காடு. இத்தாலி மொழி பேசுபவர்கள் 8 விழுக்காடு. ரோமான்ஷ் மொழி பேசுபவர்கள் ஒரு விழுக்காடு. இந்த நான்கு மொழிகளுமே ஆட்சி மொழிகள்.

மக்களில் 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். அய்ரோப்பாவின் உயரமான மலையான ஆல்ப்ஸ் இந்த நாட்டின் தென்பகுதியில் உள்ளது

------------------"விடுதலை" 2-8-2009

உலக நாடுகள் -தூரப்பார்வை - சூடான்-சுரிநாம்-சுவாசிலாந்து




சூடான்

350ஆம் ஆண்டுவரை எகிப்திய நாகரிகமும் நூபிய நாகரிகமும் இணைந்து வளர்ந்த பகுதி சூடான். அரேபியர்கள் வந்து ஆக்ரமித்து இசுலாத்தைப் பரப்பினர். ஆங்கில எகிப்திய சூடான் என்று இப்பகுதி 1898 முதல் 1955 வரை அழைக்கப்பட்டது. 1953இல் இங்கிலாந்தும் எகிப்தும் இந்நாட்டுக்கு சுயாட்சி உரிமை வழங்கின. பிறகு 1956இல் சூடான் விடுதலை அடைந்தது.

ஆப்ரிகாவின் வடபகுதியில், செங்கடல் பகுதியில் எகிப்துக்கும் எமிரேட்சுக்கும் இடையில் உள்ள இந் நாட்டின் பரப்பு 25 லட்சத்து 5 ஆயிரத்து 810 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 4 கோடி 13 லட்சம். சன்னி முசுலிம்கள் 70 விழுக்காடு. உள்ளூர் பழமைவாத நம்பிக்கை கொண்டோர் 25 விழுக்காடு. அரபி மொழி ஆட்சி மொழி. 61 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

1-.1-.1956 இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராக உள்ளார். ராணுவத் தளபதிதான் குடியரசுத் தலைவராக உள்ளார். 19 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

சுரிநாம்

1651ஆம் ஆண்டில்தான் அய்ரோப்பியர்கள் இந்நாட்டில் தோட்டப் பயிர்களை வளர்த்தனர். 1667இல் டச்சு நாட்டுக் கடற்படை சுரிநாமைக் கைப்பற்றியது. 1975ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தது. 25-.11.-1975இல் நாட்டுக்கு ஆலந்து விடுதலை அளித்தது.

வடஅமெரிக்க நாடான சுரிநாமின் பரப்பு 1 லட்சத்து 63 ஆயிரத்து 270 சதுர கி.மீ. மக்கள்தொகை 4 லட்சத்து 40 ஆயிரம். மக்களில் இந்துக்கள் 27 விழுக்காடு. இசுலாமியர்கள் 20 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 23 விழுக்காடு. புரொடஸ்டன்ட் கிறித்துவர் 25 விழுக்காடு.

டச்சு மொழியும் இங்கிலீசும் பேசும் மக்களில் 88 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். குடியரசுத் தலைவர்தான் ஆட்சித் தலைவர். 10 விழுக்காடுப் பேர் வேலை கிட்டாதோர். 301 கி.மீ. தொலைவு மட்டுமே இருப்புப்பாதை உண்டு.

சுவாசிலாந்து

மொசம்பிக் நாட்டிலிருந்து வெளியேறிய பாண்ட்டு இனக் குழுவினர் 18ஆம் நூற்றாண்டில் குடியேறிய நாடு சுவாசிலாந்து. ஜுலு குழு மக்களிடம் ஏற்பட்ட சிக்கலான கலவரங்களின் விளைவாக மன்னர் பிரிட்டிஷ் அரசுக்குப் பாதுகாப்பு கோரி 1840இல் கேட்டுக் கொண்டார். 1881இல் நாட்டுக்கு விடுதலை அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியது. தென் ஆப்ரிகாவின் பாதுகாப்பில் இருந்த சுவாதிலாந்தைத் தன் பாதுகாப்பில் 1902 இல் எடுத்துக் கொண்ட பிரிட்டன் 1968 இல் சுவாசிலாந்துக்கு விடுதலை அளித்தது.

தென் ஆப்ரிக நாடான சுவாசிலாந்தின் பரப்பளவு 17 ஆயிரத்து 363 சதுர கி.மீ. மக்கள் தொகை 11 லட்சத்து 50 ஆயிரம். பழைய நம்பிக்கைகளுடன் கிறித்துவ நம்பிக்கையும் கலந்த ஜியானிய மதத்தினர் 40 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 20 விழுக்காடு, முசுலிம்கள் 10 விழுக்காடு உள்ளனர்.

இங்கிலீஷ்தான் ஆட்சி மொழி. சிஸ்வாடி எனும் ஆப்ரிக்க மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. மக்களில் 82 விழுக்காடு மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்கள்.

மன்னராட்சி நடக்கும் இந்நாட்டின் விடுதலை நாள் 6.9.1968. பிரதம மந்திரி ஆட்சிப் பொறுப்பை நிருவகிக்கிறார். 69 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 40 விழுக்காட்டினர் வேலை கிட்டாமல் உள்ளனர். 301 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உண்டு.

------------------நன்றி:-"விடுதலை" 1-8-2009

1.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - தென்கொரியா-சிறீலங்கா


தென்கொரியா

பொது ஆண்டுக்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் சோசோன் வமிச ஆட்சியில் இருந்த கொரியாவை சீனா பொது ஆண்டுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பிறகு 1392 முதல் 1910 வரை யி வமிசம் ஆட்சி செய்தது. 1910இல் ஜப்பான் கைப்பற்றிக்கொண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேசநாடுகள் கொரியாவை ஜப்பானின் பிடியிலிருந்து விடுவித்தன. கொரியாவின் வடபகுதியை சோவியத்தும் தென் பகுதியை அமெரிக்காவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

1948இல் (வட) கொரியக் குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. 1950இல் தென்கொரியா தனது சுதந்திரத்தை அறிவித்தது. இருநாடுகளும் மோதிக் கொண்ட நிலையில் 1953இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்த முன்றாண்டுச் சண்டையில் மாண்டவர்கள் 40 லட்சம்.

1961இல் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ராணுவச் சட்டம் அமல் செய்யப்பட்டது. 1972இல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இருப்பினும் கலவரங்களும் எதிர்க்கலவரங்களும் ஏற்பட்டன.

2000ஆம் ஆண்டில் வடகொரியத் தலைநகரில் நடந்த பேச்சு வார்த்தைகளின்படி தென் கொரியாவுக்கு எதிர்ப்பாக வடகொரியா பரப்புரை செய்வதில்லை என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடுகளின் எல்லையில் இணக்கநிலை ஏற்படுத்த அலுவலகங்கள் திறக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த முயற்சிக்காகத் தென் கொரிய அதிபர் கிம் டே ஜங்குக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஜப்பான் கடலுக்கும் மஞ்சள் கடலுக்கும் இடைப்பட்ட கொரியத் தீவுக் குறையின் தென்பகுதி நாடான இதன் பரப்பு 98 ஆயிரத்து 480 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 89 லட்சம். கிறித்துவர்கள் 26 விழுக்காட்டினர். பவுத்தர்கள் 26 விழுக்காடு உள்ளனர். மதம் அற்றவர்கள் 46 விழுக்காடு இருக்கின்றனர்.

கொரிய மொழியும் இங்கிலீஷும் பேசப் படுகிறது. 99 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். தலைநகர் சியோல். 15-.8.-1945இல் விடுதலை நாளைக் கொண்டாடும் குடியரசு நாடு. அதிபரும் பிரதமரும் உள்ளனர். 15 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

சிறீலங்கா

இந்நாட்டின் ஆதிக்குடியினர் தென்னிந்தியத் திராவிட இனத்தவரான புரோடோ ஆஸ்ட்ரலாயிடு இன மக்கள் என வரலாறு கூறுகிறது. பொது ஆண்டுக்கு 500 ஆண்டுக்கு முன்பு இந்திய ஆரியர்கள் இங்கு நுழைந்தனர். 19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காகத் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

13ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு, மலாயா, சீனா போன்ற நாடுகள் இலங்கையின் மீது படையெடுத்தன. 1505இல் போர்த்துகீசியர் வந்திறங்கி 1619ஆம் ஆண்டில் ஏறத்ழ நாடு முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் டச்சு நாட்டு உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். 1796இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி தனது அதிகாரத்தைப் பிரிட்டனிடம் ஒப்படைத்தது. 1808இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக இலங்கை ஆகியது.

1948 பிப்ரவரி 4 இல் இலங்கைக்கு விடுதலை அளிக்கப்பட்டது. 1972இல் நாட்டின் பெயரை சிறீலங்கா என்று மாற்றிக் கொண்டனர்.

இந்தியாவுக்குத் தெற்கே இந்திய மாக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான இதன் பரப்பு 65 ஆயிரத்து 610 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 3 லட்சம். பவுத்தர்கள் 70 விழுக்காடு. இந்து மதத்தினர் 15 விழுக்காடு. கிறித்துவர்கள் 8 விழுக்காடு. முசுலிம்கள்7 விழுக்காடு உள்ளனர்.

ஆரிய இனத்தவரான சிங்களர்களின் சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழி. தமிழ் நாட்டு மொழி மட்டுமே. சிங்களம் 74 விழுக்காடு மக்களால் பேசப் படுகிறது. மக்களில் 92 விழுக்காடு பேர் படிப்பறிவு பெற்றவர்கள். குடியரசு ஆட்சி முறை. நாட்டின் தலைவரான அதிபரே ஆட்சியின் தலைவரும் கூட.

வறுமைக்கோட்டுக்குக் கீழே 22 விழுக்காடு மக்கள் உள்ளனர். 9 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

---------------------"விடுதலை" 31-7-2009

31.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சோமாலியா-தென் ஆப்பிரிக்கா


சோமாலியா

தற்போது ஏமன் எனப்படும் ஏடன் 1839இல் பிரிட்டனால் ஆக்ரமிக்கப்பட்டது. 1920இல் தற்போது சோமாலியா எனப்படும் நாடு பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளின் பாதுகாப்பில் இருந்தது. 1941இல் நாட்டின் முழுப் பகுதிக்கும் பிரிட்டன் உரிமை எடுத்துக்கொண்டது. 1950இல் உலக நாடுகள் மன்றத்தின் ஆணைப்படி இத்தாலி இந்த நாட்டின் பொறுப்பை ஏற்றது. 1960இல் பிரிட்டனும் இத்தாலியும் சேர்ந்து சோமாலி நாட்டுக்கு (பிரிட்டிஷ் சோமாலிலாந்து, இத்தாலி சோமாலிலாந்து) விடுதலை தந்தனர். அய்க்கிய சோமாலியக் குடியரசு 1960 ஜூலை முதல் தேதியில் உருவானது.

1991இல் நாட்டிலுள்ள ஏராளமான இனக் குழுக்கள் எப்படியோ ஆயுதங்களைப் பெற்று தங்களுக்கென தனித்தனிப் பிரதேசங்களை உருவாக்கிக் கொண்டனர். அதில் ஒன்று சோமாலிலாந்து. சோமாலி தேசிய இயக்கம் எனும் அமைப்பு பழைய பிரிட்டிஷ் சோமாலிலாந்து பகுதியில் செல்வாக்கு பெற்று அதனைத் தனி நாடாக அறிவித்தது. நாட்டின் பாதுகாப்பு, குடியரசுத் தலைவர், தனி நாணயம் முதலிய எல்லாம் உள்ளன. சர்வதேச அங்கீகாரம்தான் இல்லை.

2002இல் நாட்டின் தென் பகுதியில் போர்ப்படைத் தளபதிகள் 6 மாவட்டங்களைக் கொண்டு தனி அரசு அமைத்தனர். போரில் ஈடுபட்ட பிறகு குழுக்களுடன்அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

ஆப்ரிகாவின் கிழக்குப் பகுதியில் எதியோப்பியா வுக்குக் கிழக்கே உள்ள இந்நாட்டின் பரப்பு 6 லட்சத்து 37 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 89 லட்சம். மக்கள் அனைவரும் சன்னி முசுலிம்கள். ஆட்சி மொழி சோமாலி, ஆபி, இத்தாலி, இங்கிலீஷ் பேச்சு மொழிகள்.

குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் பிரதமர் ஆட்சித் தலைவராகவும் உள்ளனர். இவ்வளவு பெரிய நாட்டில் இருப்புப் பாதையே இல்லை. சுமார் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மட்டுமே சாலை வசதிகள் உண்டு. பாலை நிலம் மிகுந்த இந்நாட்டில் வறுமைதான் எங்கும்.

தென் ஆப்பிரிக்கா

1480இல் போர்த்துகீசியரான பார்த்தலோமு டயஸ் என்பவர்தான் ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் பயணித்தார். 1497இல் வாஸ்கோடகாமா, நேடாலில் கரையிறங்கினார். 1652இல் டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனியை ஜான்வான் ரீபீக்டேபிள் கூல் பகுதியில் அமைத்தார். இந்தப் பகுதியை பிரிட்டன் 1795இல் கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். 1840இல் டச்சு நாட்டைச் சேர்ந்த ஆப்ரிக்க போயர் இனத்தவர் ஆரஞ்சு சுதந்திர நாடு, டிரான்ஸ்வால் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1879இல் ஜுலு மக்களைத் தோற்கடித்த பிரிட்டிஷார் மீண்டும் ஆங்கிலேயர் - போயர் யுத்தத்தைச் சந்தித்தனர். டிரான்ஸ்வாலும், ஆரஞ்சு சுதந்திர நாடும் தன்னாட்சி உரிமை பெற்ற பிரிட்டனின் குடியேற்ற நாடுகளாயின.

1910இல் தென்ஆப்ரிக்க யூனியன் உருவாக்கப் பட்டது. 1912இல் ஆப்ரிக்க தேசிய மாநாட்டுக் கட்சி தொடங்கப்பட்டது. 1948இல் ஆட்சிக்கு வந்த தேசியக்கட்சி இன ஒதுக்கல் கொள்கையான நிற வேற்றுமையைக் கடைப்பிடித்தது. தேசிய மாநாட்டுக் கட்சி இந்த முறையை எதிர்த்தது. அதன் தலைவர் நெல்சன் மண்டேலா. கட்சி தடை செய்யப்பட்டது. 155 தலைவர்களை சிறையில் அடைத்தது. 1961இல் குடியரசு நாடென அறிவித்து பிரிட்டிஷ் காமன் வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது.

ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுச் சதிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி 1964இல் நெல்சன் மண்டேலாவைச் சிறையில் தள்ளியது அரசு. டி கிளெர்க் என்பார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்க தேசிய மாநாட்டுக் கட்சி மீதான தடை நீக்கப்பட்டு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகாலச் சிறை வாழ்வுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். நிற வெறியின் அடிப்படையிலான இன ஒதுக்கல் கொள்கை விலக்கிக் கொள்ளப்பட இதற்குக் காரணமாக இருந்த நெல்சன் மண்டேலாவுக்கும் டி கிளார்க்குக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994இல் நடந்ததேர்தலில் நெல்சன் மண்டேலா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் நாடு பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இணைந்தது.

ஆப்ரிகக்கண்டத்தின் தென் முனை நாடான தென் ஆப்ரிகாவின் பரப்பு 12 லட்சத்து 19 ஆயிரத்து 912 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 42 லட்சம். மக்களில் 68 விழுக்காடு கிறித்துவர். எல்லா உயிரினங்களுக்கும் (தாவரங்கள் உள்பட) ஆத்மா உண்டு எனும் பழமை வாத நம்பிக்கை கொண்டோர் 29 விழுக்காடு உள்ளனர். பல்வேறு ஆப்ரிக்க மொழிகளைப் பேசும் மக்கள் உள்ளனர்.

31.-5.-1910 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக்குடியரசு நாட்டுக்குக் குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். 50 விழுக்காடுக்கு மேல் உள்ள மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். 25 விழுக்காடுக்கு மேல் வேலை கிட்டாதோர் உள்ளனர்.

----------------"விடுதலை" 307-2009

29.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - ஸ்லோவேகியா-ஸ்லோவேனியா-சாலமோன் தீவுகள்


ஸ்லோவேகியா

ஆறாம் நூற்றாண்டுக் காலத்தில் ஸ்லேவிக் ஸ்லோவாக் இனத்தவர் இன்றைய ஸ்லோவேகியா பகுதியில் குடியேறி வாழ்ந்தனர். 9ஆம் நூற்றாண்டில் மொராவியன் அரச வமிசம் இவர்களை ஒன்று படுத்தியது. 907ஆம் ஆண்டில் மொராவியா நாடு மாக்யர்களின் கையில் வீழ்ந்ததால் ஸ்லோவேகியர்கள் ஹங்கேரி நாட்டின் ஆட்சியில் 1918 வரை இருந்தனர். அதன் பின்னர் பொஹமியாவுடன் இணைந்து பிறகு செக்கோஸ்லேவேகியா என்ற நாடாக உருப்பெற்றது.

1990இல் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் கலைந்து போன நிலையில் செக்கோஸ்லேவேகியாவின் குடியரசுத் தலைவராக வாக்லவ் ஹாவல் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1991இல் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவாக செக் நாடு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி ஸ்லோவேகியக் குடியரசாக 1.-1-.1993 முதல் விளங்கியது.

மத்திய அய்ரோப்பாவில் போலந்து நாட்டுக்குத் தெற்கே உள்ள இந்நாட்டின் பரப்பு 48 ஆயிரத்து 845 சதுர கி.மீ. மக்கள் தொகை 55 லட்சம். ரோமன் கத்தோலிகர் 69 விழுக்காடு புரொடஸ்டன்ட் 11 விழுக்காடும் உள்ளனர். மீதிப்பேர்களில் 13 விழுக்காடு மக்கள் மதம் இல்லை எனக் கூறுபவர்கள். ஸ்லோவேக் மொழி ஆட்சி மொழி. மக்கள் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள். நாட்டின் அதிபராகக் குடியரசுத் தலைவர் உள்ளார். ஆட்சித் தலைவராகப் பிரதமர். 11 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

ஸ்லோவேனியா

ஸ்லோவென் குழுவைச் சேர்ந்த ஸ்லேவிக் மக்கள் 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது சாமு அரசை நிறுவினார்கள். ஹங்கேரியில் ஆதிக்கம் செலுத்திய ஆவர் மக்களுடன் இணைந்து, 1867இல் ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் ராஜ்யத்தை உருவாக்கினர். முதல் உலகப் போரில் இந்நாடு தோற்கடிக்கப்பட்ட பின் ஸ்லோவேனியா தன் நாட்டு விடுதலையை 1918இல் அறிவித்தது. யூகோஸ்லேவியா என்ற பெயரில் செர்பியா, மான்டெனெக்ரா, குரோஷியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியது.

1991இல் ஸ்லோவேனிய நாடு விடுதலையை அறிவித்துக் கொண்டது மத்திய அய்ரோப்பிய நாடான இதன்பரப்பளவு 20 ஆயிரத்து 273 சதுர கி.மீ. மக்கள் தொகை 20 லட்சம். கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களில் சுமார் 33 விழுக்காடு மதம் இல்லை எனக் குறிப்பிடுபவர்கள்.

சுலோவேனிய மொழியை 92 விழுக்காட்டினர் பேசுகின்றனர். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். 25-.6-.1991இல் யுகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்ததை விடுதலை நாளாகக் கொண்டாடு கிறார்கள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 10 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

சாலமோன் தீவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டமான சாலமோன் தீவுகள் 1893இல் பிரிட்டிஷ் பாதுகாப்பில் வந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு 1975இல் தீவுகளுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. 1978இல் விடுதலை அளிக்கப்பட்டது. 28 ஆயிரத்து 450 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டில் மக்கள் தொகை 6 லட்சத்துக்கும் சற்றுக் குறைவு. மக்கள் அனைவரும் கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இங்கிலீஷ் ஆட்சி மொழியாக இருந்தாலும் பேச்சுமொழி மெலெனேசியன் பிட்கின் மொழி. பூர்வ குடிகளின் குழு மொழிகளாக 120க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

6-.7-.1978இல் விடுதலை நாள். பிரிட்டனின் ராணிதான் ஆட்சித் தலைவர். கவர்னர் ஜெனரலும் பிரதம மந்திரியும் நிருவாகம் செய்கின்றனர். இருப்புப் பாதையே இல்லாத நாடு.

------------------"விடுதலை" 29-7-2009

28.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப்பூர்


சியர்ரா லியோன்ஸ்

இப்பகுதிக்கு முதலில் வந்த அய்ரோப்பியர்களான போர்த்துகீசியர்கள் வைத்த பெயர் லியோன்ஸ் என்பது. 1787இல் அடிமைகளாக இருந்தவர்களுக்கான மறு வாழ்வுக்கான திட்டத்தைச் செயல் படுத்த இந்நாட்டைப் பிரிட்டிஷார் தேர்வு செய்தனர். 1808இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக ஆயிற்று.

1961இல் நாட்டுக்கு, விடுதலை தரப்பட்டது. 1971இல் குடியரசு நாடானது. 1978இல் புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு ஒரு கட்சி ஆட்சி முறை ஏற்பட்டது.

ஆப்ரிகாவின் மேற்குப் பகுதியில் வட அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் கினியாவுக்கும் லைபீரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு. பரப்பளவு 71 ஆயிரத்து 740 சதுர.கி.மீ. மக்கள் தொகை 60 லட்சம். இசுலாமியர் 60 விழுக்காடு. கிறித்துவர் 10 விழுக்காடு. மீதிப் பேர் பழங்கால நம்பிக்கைகளைக் கொண்டிருப்போர்.

இங்கிலீஷ் ஆட்சி மொழி 30 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவரும் கூட. 68 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பழைய பெயர் புலுவோசுங் என்பதாகும். மூன்றாம் நூற்றாண்டின் சீன நூல்களில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. தீபகற்ப முனையில் உள்ள தீவு என இதற்குப் பொருள். அமைப்பின்படி பொருத்தமான காரணப் பெயர்தான். சுமித்ரா நாட்டின் சிறீவிஜய வமிச அரசின் அவுட் போஸ்ட் ஆக சிங்கப்பூர் 14ஆம் நூற்றாண்டு வரை திகழ்ந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஜாவா, சயாம் நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடைசியாக மலாக்கா நாட்டைச் சேர்ந்ததாக ஆனது. அடுத்த இருநூறாண்டு களில் போர்த்துகீசியர்களும் டச்சுக்காரர்களும் மாறி மாறி ஆண்டனர்.

1819இல் பிரிட்டிஷார் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை ஜப்பான் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. போரின் முடிவுக்குப் பிறகு 1946இல் மீண்டும் பிரிட்டனின் ஆட்சிக்கு வந்தது. 1963இல் மலேசிய நாட்டரசில் சிங்கப்பூர் அங்கமாகியது. இதில் மலேயா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களும் அங்கம் வகித்தன. 1965இல் மலேசிய கூட்டரசிலிருந்து பிரிந்து தனி நாடாகியது.

692.7 சதுர கி.மீ. பரப்புள்ள இத்தீவின் மக்கள் தொகை 45 லட்சம். சீனப் பவுத்தர்கள், மலாய் முசுலிம்கள், இந்து, கிறித்துவ, சீக்கிய எனும் பல்வேறு மதத்தவர்களும் வாழும் நாடு. 93 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். சீனம், மலாய், தமிழ், இங்கிலீஷ் ஆகிய நான்கு ஆட்சி மொழிகள். மலாய் தேசிய மொழி.

9.-8.-1965இல் விடுதலை நாள் கொண்டாடப் படுகிறது. குடியரசுத் தலைவர் அதிபர். பிரதமர் ஆட்சித் தலைவர். அங்கும் கூட 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.


----------------"விடுதலை" 28-7-2009