Search This Blog
17.8.09
உலக நாடுகள் -தூரப்பார்வை - உருகுவே - உஸ்பெஸ்கிஸ்தான்
உருகுவே
உருகுவே நாடு அமைந்துள்ள தென் அமெரிக்கப் பகுதிக்கு அய்ரோப்பியர்கள் 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் வந்தனர். 1726இல் ஸ்பெயின் நாட்டினர் மாட்டவிடியோ நகரை உருவாக்கி போர்த்துகீசியர் களிடமிருந்து உருகுவேவைப் பிடித்துக் கொண்டனர். லாபிஸ்டா அரசின் ஓர் அங்கமாக 1776இல் உருகுவே ஆனது. தலைநகராக போனஸ் அயர்ஸ் ஆகியது. போனஸ் அயர்ஸ் அர்ஜென்டினாவின் தலைநகர். அங்கிருந்தே உருகுவேவை ஆண்டனர். ஸ்பெயின் அரசரைப் பதவியிலிருந்து நெப்போலியன் தூக்கி எறிந்த பிறகு 1808இல் உருகுவே லாபிஸ்டாவின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தது.
உருகுவே நாடு அந்தக் காலத்தில் பண்டா ஓரியன்டல் என அழைக்கப்பட்டது. இந்நாட்டை ஆளுவது தொடர்பாக பிரேசில் நாட்டுக்கும் அர்ஜென்டினா நாட்டுக்கும் இடையே போராட்டம் நடந்தது. 1825இல் அர்ஜென்டினாவின் உதவியுடன் உருகுவே தனது விடுதலையை அறிவித்தது. தொடர்ந்து 1828இல் குடியரசு நாடாகிறது. வெள்ளையர்களுக்கும் சிவப்பிந்தியர்களுக்கும் (அவர்கள் கொலரடோக்கள் என்று அழைக்கப் பட்டனர்) 1835 முதல் 1865 வரை உள்நாட்டுப் போர் நடந்தது.
1865இல் அர்ஜென்டினா, பிரேசில் ஆகியவற்றுடன் உருகுவே சேர்ந்து முக்கூட்டுப் போரில் பராகுவேவுக்கு எதிராக ஈடுபட்டது. 5 ஆண்டுகள் நடந்த இப்போரினால் பராகுவே நாடு அழிக்கப்பட்டது. 1960இல் மார்க்சிஸ்ட் நகர்ப்புற கொரில்லா இயக்கம் என்பதான ஒன்று முளைத்து 1975 வரை செயல்பட்டது. 1973இல் போர்ப்படையினர் மக்கள் அரசைக் கைப்பற்றினர். இதன் காரணமாகக் காட்டாட்சி நடந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கொடூரக் கூடாரம் என்ற அவப்பெயரை உருகுவே பெற்றது. உலகில் அதிகமான எண்ணிக்கையில் அரசியல் கைதிகள் அடைக்கப் பட்ட நாடு என்ற பேரையும் பெற்றது.
ஒரு வழியாக 1985இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு ஏற்பட்டது.
அர்ஜென்டினாவுக்கும் பிரேசிலுக்கும் இடையில் தென் அமெரிக்காவில் உள்ள இந்த நாட்டின் பரப்பளவு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 220 சதுர கி.மீ. மக்கள் தொகை 34 லட்சத்து 50 ஆயிரம். ரோமன் கத்தோலிக மதத்தவர் 66 விழுக்காடு. 31 விழுக்காட்டினர் எந்த மதக் கொள்கைகளையும் பின் பற்றாதவர்கள்.
ஸ்பானிஷ், போர்த்துனால் மொழிகளுடன் பிரேசிலரோ எனும் மொழியும் பேசப்படுகின்றன. மக்களில் 98 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்.
25.-8.-1825இல் விடுதலை நாள் விழா கொண்டாடும் இந்நாட்டின் குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். 22 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 13 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.
உஸ்பெஸ்கிஸ்தான்
பாரசீகப் பேரரசு, தாமரீன் பேரரசு ஆகியவற்றைச் சேர்ந்த உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் மீது உஸ்பெக் மக்கள் 16ஆம் நூற்றாண்டில் படையெடுத்து, வென்று, பக்கத்து நாட்டுடன் இணைத்துவிட்டனர். 19ஆம் நூற்றாண்டில் ரஷியாஇதன் மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டது.
சோவியத் புரட்சிக்குப் பிறகு 1924இல் சோவியத் யூனியனில் இணைந்தது. 1991இல் சோவியத் யூனியன் குலைந்தபோது, தனி நாடாகியது.
ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, மத்திய ஆசியாவில் உள்ள இந்நாட்டின் பரப்பளவு 4 லட்சத்து 47 ஆயிரத்து 400 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 74 லட்சம். சன்னி முசுலிம்கள் 88 விழுக்காடு. கிழக்கிந்தியப் பழமைவாதிகள்9 விழுக்காடு.
உஸ்பெக் மொழி பேசுவோர் 74 விழுக்காடு. ரஷ்ய மொழி பேசுவோர் 14 விழுக்காடு. தஜிக் மொழி பேசுவோர் 5 விழுக்காடும் உள்ளனர். மக்கள் அனைவருமே படிப்பறிவு பெற்றவர்.
குடியரசுத் தலைவர் அதிபராகவும் பிரதமர் ஆட்சித் தலைவராகவும் உள்ளனர். 28 விழுக்-காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 20 விழுக்காடு மக்களுக்குத் தகுதியான முழு நேரப் பணிவாய்ப்பு கிட்டவில்லை.
-----------------------"விடுதலை" 14-8-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment