Search This Blog

25.8.09

மதத்தின் பெயரால் நடைபெறும் சுரண்டலுக்கும், ஆபாசத்திற்கும் எல்லையே இல்லை!


திருவண்ணாமலை வழிகாட்டுகிறது

மக்களின் பாமரப் பக்தியை முதலீடாகக் கொண்டு அவர்களைச் சுரண்டுவோர் கூட்டம் நாளும் பெருகிக் கொண்டு இருக்கிறது. அதுவும் கீழ்த்தரமான முறையில் அவை நடைபெறுகின்றன.

மனதை ஒருமுகப்படுத்துவதுதான் பக்தி என்றெல்லாம் மேம்போக்காகச் சொல்லி விட்டுப்போகிறார்கள். ஆனால், நடப்பது என்ன?

மக்களின் அறியாமையையும், பேராசையையும் பயன்படுத்திக் கொண்டு அருவருப்பான முறைகளையெல்லாம் பயன்படுத்தும் போக்கு 2009 ஆம் ஆண்டிலும் நடைபெற அனுமதிக்கலாமா?

மக்கள் மத்தியிலே அறிவியல் மனப்பான்மையை உண்டாக்கவேண்டும் என்றும், அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையென்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் மதத்தின் பெயரால் நடைபெறும் சுரண்டலுக்கும், ஆபாசத்திற்கும் எல்லையே இல்லை. அதனைத் தட்டிக் கேட்பதற்கும் இந்தியாவிலேயே தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகத்தைத் தவிர முழுமையான அமைப்புகள் கிடையவே கிடையாது.

பீடி சாமியார் என்றும், சுருட்டு சாமியார் என்றும், எச்சில் சாமியார் என்றும், கெட்ட வார்த்தை பேசும் சாமியார் என்றும் அவர்களிடம் சென்றால் நோய்கள் தீரும் என்றும், வறுமை நீங்கிவிடும் என்றும், பீடித்த பீடை போகும் என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு விளம்பரம் செய்கின்றனர்.

குழந்தை வரம் கொடுக்கும் சாமியாராம்! அவர் எவ்வாறு குழந்தை வரம் கொடுப்பார் என்பதை கொஞ்சம் அறிவைச் செலுத்தினால்கூடப் புலனாகிவிடும். சாமியாரிடம் வாழ்க்கையைப் பறிகொடுத்து ஏமாந்தவர்கள் எத்தனை எத்தனையோ பெண்கள்!

கோயில் திருவிழா என்று சொல்லி, குழந்தைப் பேறு இல்லாத பெண்களைக் குப்புறப்படுக்கவைத்து ஆணியுள்ள செருப்புக்காலால் அவர்கள்மீது நடந்து செல்கிறார்கள்_ பூசாரிகள். மாட்டுக்குத் தார்க்குச்சி போடுவதே குற்றம் என்று சட்டம் உள்ள ஒரு நாட்டில் மதத்தின் பெயரால் இந்த மனிதக் கொடுமை! இதனை சட்டப்படி தடுக்கவேண்டாமா?


தலையிலே தேங்காய் உடைத்தல் குற்றம்தான். ஆனாலும், தலையை மொட்டையும் அடித்து, அதன்மேல் தேங்காயும் உடைக்கப்படுகிறது என்றால், உடல் ரீதியாக எத்தகைய பாதிப்பு? மூளை நரம்பு பாதிக்கப்படக் கூடிய அபாயகரமான இந்தப் போக்கு அனுமதிக்கப்படலாமா?

தக்க விளம்பரங்கள்மூலம் அரசே முன்வந்து இவையெல்லாம் தடை செய்யப்பட்டவை என்று பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். மதுரையை அடுத்த பேரையூரில் குழிமாற்றுத் திருவிழாவை (குழந்தைகளைக் குழியில் போட்டுப் புதைக்கும் கொடுமை) அரசு தடுக்கவில்லையா? இதே முறையை மற்ற மூடத்தனங்கள் விஷயத்திலும் பயன்படுத்தலாமே!

அண்மைக்காலமாக திருவண்ணாமலையில் கிரிவலம் என்ற ஒரு கூத்து அரங்கேறியுள்ளது. அண்ணாமலையார் மலையைச் சுற்றி வந்தால் நினைத்தது நடக்கும்; செல்வம் கொழிக்கும்; நோய் நொடி நீங்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் கூடுகிறார்களாம்.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருவண்ணாமலையிலும் சுற்றுப்புறங்களிலும் குறி சொல்லுவது, சாமியாடுவது என்பது போன்ற குடிசைத் தொழில்கள் மலிந்துவிட்டன. மக்களின் பணத்தையும் சுரண்டி வருகின்றனர்.

பெண் ஒருவர், பீர் சாமியார் என்று விளம்பரப்படுத்தப்பட்டார். பக்தர்கள் கொடுக்கும் பீர்களைக் குடித்துக்கொண்டே குறி சொல்லுவார் என்று பரப்பப்பட்டது. கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. அந்தப் பெண்ணின் தந்தையார் அதன் பின்னணியில் இருக்கிறார். பீர் மட்டுமல்ல; கஞ்சாவும் சாப்பிடுகிறாராம், கஞ்சா வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றமல்லவா?

அவரைக் கைது செய்திருக்கவேண்டுமே! இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். 22.8.2009 அன்று மாலை மூட நம்பிக்கையை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன.

அருவருக்கத்தக்க முறையில் நடக்கும் இத்தகைய நடவடிக்கையை வெறுக்கக் கூடிய பொதுமக்களும் கணிசமான அளவுக்கு இருக்கவே செய்தனர். ஆனாலும், பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் பிரச்சினை.

ஆம், திராவிடர் கழகம்தான் பூனைக்கு மணியைக் கட்டியது. 30 நாள்களுக்குள் இந்தக் கேவலமான ஆபாச மூடத்தனங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லையென்றால் திராவிடர் கழகம் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடும் என்று தமிழர் தலைவர் எச்சரித்தார்.

பகுத்தறிவு அரசான கலைஞர் அரசு உடனடியாகத் தலையிட்டு மறுநாளே சம்பந்தப்பட்ட சாமியாரிணியையும் அப்பெண்ணின் தந்தையாரையும் கைது செய்து என்பது மிகவும் பாராட்டத்தக்க செயலாகும்.


இது ஒரு தொடக்கம்தான்; இதே தன்மையில் நாடெங்கும் நடைபெறும் பித்தலாட்டக்காரர்கள்மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறோம். இல்லையேல், கழகம் நேரிடையாகக் களத்தில் இறங்கும் என்றும் தெரிவிக்கின்றோம்.

---------------------"விடுதலை" தலையங்கம் 24-8-2009

4 comments:

யாத்ரீகன் said...

Good Job, i saw that lady & her father in Vijay TV,makkal innum yepdi yemaaruraanga..

btw, unga site-la virus/spyware/malware iruku.. please rectify it

Prabhu said...

Sir,
well done.....

please continue this in force....

in vijay tv we can see

Bhuvaneswari amman sami ....

Meenakshi amman saami...

white and white nallakanda saami....

so many saamiyar's are ccoming with thier business

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யாத்ரீகன்

முன்பு malware இருந்தது.அப்போதே சரிச்ய்யப்பட்டு விட்டது. இப்போது அப்படி எதுவும் இல்லை.

இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி indian