Search This Blog

10.8.09

மதங்களும் அரசியலும் - (2)





அரசியலில் இருந்து, மதச் செல்வாக்கை ஒழித்துள்ள ஊர்களில், மதம் ஆதரிக்கப்பட்டிருப்பதற்குக் காரணமென்னவெனில் அரசு புரிந்து வரும் தலைவர்கள் மதப் பற்றுடையவர்கள் ஆதலால் நாஸ்திகம் பரவ இடமில்லாமலிருந்து வருகிறது. இஸ்பெயின் (France) தேசத்தில் மத ஸ்தாபனங்களை அரசாங்கம் கைப்பற்றியும், மதம் நிலைத்தே வருகின்றது. அங்கு தற்கால அரசியல் தலைவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டார்களே யொழிய, மூட நம்பிக்கைகளைப் போக்க முயற்சித்தார் ஒருவருமில்லை. பிரான்ஸ் தேசத்திலும் பாதிரிமார்களை ஊரைவிட்டுத் துரத்தவும், அவர்கள் கற்பனைகளை, மனிதர்களின் உள்ளத்திலிருந்து துரத்தவும் பிரயாசைப் பட்டார் யாருமிலர். இதுதான் உலகிலிருந்து மதத்தைப் போக்குவதற்குள்ள கஷ்டம்.

அரசியலை நடத்துகின்றவர்களுக்கு மதங்களை ஆதரிப்பதற்கு ஒரு பெருத்த காரணமுண்டு. மதங்களை அனுசரிப்பது, ஒரு பெரிய பொருளாதாரச் செல்வாக்கை அளிக்கின்றது. அரசியலில் செல்வாக்கு உடையவர்கள் யாவரும், பொருளாதாரச் செல்வாக்கைப் பெற்றுள்ளவர்கள். இவர்களை ஆதரிப்பவர்களில், பெரும்பான்மையோர், மதப் பற்றுடையவர்கள். இவர்களுடைய ஆதரவின்றி, அரசியல் அதிகாரிகளுக்கு ஆதிக்கம் வலுத்து வராது. ஆதலின் அரசியல் அதிகாரிகளுக்கு மதக் கற்பனைகளே, ஆதரவாக இருந்து வருகின்றன.

மதங்களை அரசியல் அதிகாரிகள் ஆதரிப்பதற்கு இன்னொரு காரணமுண்டு. மதப் பற்று உடையோருக்குப் பகுத்தறிவு அதிகமிராது. இவர்கள் தங்கள் பகுத்தறிவினைப் பூரணமாக உபயோகிப்பார் களேயானால், அதிகாரிகளுடைய சூழ்ச்சிகளை வெகு சுலபமாக அறிந்து கொள்ளலாம். பாமர ஜனங்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் வரை, அவர்கள் மூடத்தனத்தைக் கொண்டு அதிகாரிகள், தங்கள் ஆதிக்கத்தை நிலைக்க வைத்துக் கொள்ள இடமுண்டு. இதன் நிமித்தமாகவே, அதிகாரிகள் மதஸ்தர்களைப் பற்றித் தெளிவு பெறச் செய்ய இடம் கொடுப்பதில்லை.

உலகம் மூடத்தனத்தில் இருந்தால்தான், கொள்ளைக்காரர்களுக்கு லாபம். மூடத்தனத்தை ஆதரித்து வரும் ஸ்தாபனங்களில் மதம் முக்கியமானது. இதனைத் தழுவியும், ஆதரித்தும் வந்தால்தான், மூடத்தனம், உலகில் தழைத்தோங்கும். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அதிகாரிகள் தங்கள் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தப் பொருளாதார அனுகூலத்திற்காகவே அதிகாரிகள் மதநடுநிலைமை என்றும் மத விஷயத்தில் பிரவேசிப்பதில்லை என்றும், இன்னும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு நாளைக் கழிப்பதென அறிக. அந்தந்த அரசாங்க ஆதரவாலேயே, அந்தந்த மதங்கள் அந்தந்த ஊர்களில் நிலைத்து வருகின்றன. முற்காலத்தைப் போல அரசுகள் மதங்களை வெளிமுகமாக ஆத-ரிக்காவிட்டாலும், மதநடுநிலைமை என்ற கற்பனையை சிருஷ்டித்துக் கொண்டு, அதன் நிழலில் இருந்து கொண்டு, மதங்களை ஆதரித்து வருகின்றன.

மதங்கள், மதகுருமார்களுக்கும், அவர்களை அடுத்தோருக்கும், பல விதத்தில் அவர்கள் ஜீவனத்திற்கு அனுகூலமாகவே இருந்து வருகின்றன. அரசு செலுத்தும் அதிகாரிகளுக்கு அரசு புரிவதால் எவ்வளவு செல்வாக்குக் கிடைக்கின்றனவோ அவ்வளவு செல்வாக்கும், ஆதிக்கமும், மதகுருமார்களுக்கு மதப் பற்றால் உண்டாகின்றன.

நமது தேசத்தில் மத ஆதரவில் பிழைத்து வரும் மடாதிபதிகள் எத்தனை? குருக்கள் எத்தனை? பூசாரிகள் எத்தனை? சோம்பித் திரியும் சந்நியாசிகள் எத்தனை? பைராகிகள் எத்தனை? பிச்சைக்காரர்கள் எத்தனை? இவர்கள் ஒரு பக்கமிருக்க கோயில் ஸ்தாபனங்களாலும், மத ஸ்தாபனங்களாலும் பிழைப்போர் எத்தனை? தர்மகர்த்தர்கள் எத்தனை? கோவில் சிப்பந்திகள் எத்தனை? மேளக்காரர், புஷ்பக்காரர், வாணவேடிக்கைக்காரர், பால்காரர், தயிர்க்காரர், பழக்காரர் எத்தனை? இதுவும் போதாமல் வாகனங்கள் செய்வோர் எத்தனை? குடைகள் செய்வோர் எத்தனை? கோவில் மராமத்து செய்வோர் எத்தனை? புதிய கோவில்களும், சமாதிகளும் கட்டுவேர் எத்தனை?

நமது தேசம் முழுமையும் பழைய கோயில்கள் இடிய, இடிய புதிய கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன! மதத்தால் பிழைக்கும் நமது நாட்டுப் பிரஜைகள் ஒரு கோடிக்கு மேல் இருக்கலாம். இதுவும் போதாதென நமது காருண்ய அரசாங்கத்தார், மத ஸ்தாபன கமிட்டி (Religious Endowment Board) ஒன்றை ஏற்படுத்தி அதனால் பல பேருக்கு பிழைப்புத் தேடி வைத்துள்ளனர். இதற்கு நமது மாகாண ஜஸ்டிஸ் கட்சியார் புண்ணியங் கட்டிக்கொண்டார்கள்!!

இவ்வளவு பேர் நமது நாட்டு மக்கள் நமது மதங்களால் ஜீவித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் இந்து மார்க்கத்தினர். கிறிஸ்துவ மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், மகமதிய மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், இவ்விரு மதங்களால் பிழைத்து வரும் மக்கள் எத்தனை? கத்தோலியர் கூட்டத்தில் எத்தனை பேர் ஆணும், பெண்ணும் மாதாகோவில் மூலமாகவும், கன்னி மடங்கள் மூலமாகவும் ஜீவித்து வருகிறார்கள்? பிராடஸ்டன்ட் (Protestant) மார்க்கத்தில் எவ்வளவு பிஷப்புகள் (Bishops), ஆர்ச் பிஷப்-புகள் (Arch Bishops), சாப்டர்ஸ் (Chapters), எல்டர்ஸ் (Elders or Presbyters) முதலியவர்கள். முகமதிய மார்க்கத்திலும் மவுலிகளும், மவுலானாக்களும் காஜிகளும் நிறைந்துள்ளனர்.

மொத்தத்தில் உலகிலுள்ள 170, 180 கோடி ஜனங்களில் பத்திலொரு பங்கும் மதங்களால் ஜீவனம் புரிந்து வருவதாக எடுத்துக்கொள்ளலாம்! இவ்வளவு பேரும் கற்பனையை வளர்த்தும், ஆதரித்தும், கோடான கோடி மாந்தர்கள் மூடப் பழக்கத்தில் தலைமுறை, தலைமுறையாக ஆழ்ந்து கிடந்துவர தங்கள் ஜீவனத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால் மதங்கள் மிகவும் பொருளாதார நன்மையாக இருந்து வருகின்றதென்று சமுதாயிகள் அதாவது சமதர்ம வாதிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமுள்ளது என்பதை நினைக்க வேண்டி இருக்கின்றதென்பதைப் பாருங்கள்? இவ்வளவு ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், ஜீவ உபாயத்தையும் மதங்கள் கோடானுகோடி மக்களுக்கு அளிப்பதென்றால் மதங்களை ஒழிப்பது லேசான காரியமா?

இவ்வளவும் எந்தக் காரியத்திற்கென்றால், அவித்தை அதாவது மூடதனத்தை (Ignorance) வளர்க்கவும், பகுத்தறிவைக் கொல்லவும் என அறிக. இவ்வளவு அனர்த்தத்திற்கும், உலக அரசுகள் சாட்சி பூதமாக நின்று கொண்டு மத நடுநிலைமை என்ற மதிரத்தை உச்சரித்துக் கொண்டு ஆஷாடபூபதி வேஷம் பூண்டு நிலைத்து வருகின்றன. இந்தப் பல்லவியைத் தான் நமது தேச காங்கிரசும் அதன் அதிபதியாகிய காந்தியாரும் பாடுகின்றார்கள். இனியும் பாடவும் போகின்றார்கள்.

மதங்கள் மூடத்தனத்தை வளர்ப்பதென்றால் இவ்வளவு செல்வாக்கும் அதற்கு எப்படி வந்ததென்று கேட்கலாம்? சிலருக்கு ஜீவன உபாயமும், செல்வாக்கும் ஆதிக்கமும் இருத்தலால் மதம் மூடத்தனத்தை வளர்த்து வந்த போதிலும் அழியாமலிருந்து வருகின்றன என்று அறியலாம்.

ஆதி மதங்களை உண்டாக்கிய மந்திரக்காரனே அரசனாகவாவது அல்லது தலைவனாகவாவது இருந்து வந்தான். அவன் அதிகார ஸ்தாபனத்தில் வந்த சிற்றரசுகளும், பேரரசுகளும், தாங்களே உலகக் கடவுளென (Gods on Earth) எண்ணி வந்திருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டிலும் பல அரசர்கள் மத குருமார்களிடமிருந்தே தங்கள் கிரீடத்தைப் பெறுகின்றார்கள். மகுடாபிஷேகங்களில் பிராமணர்களே நமது நாட்டு அரசர்களின் மகுடத்தை ஆசிர்வதித்து அரசின் தலையில் வைக்கிறார்கள். கிரீடத்தை வைக்கும் போதெல்லாம் கிரீடம் தங்களுடையதென்றே சொல்லி அரசன் முடியில் வைக்கின்றார்கள். இன்னும் பல நாடுகளில் பிராமணர்களுக்கே சில அரசர்கள் அடிமைகளெனவே நடந்து கொள்கின்றார்கள்.

இன்றைக்கும் அரசன் எந்த மதத்தைச் சேர்ந்தவனோ அந்த மதத்தையே அவனது குடிகளும் அனுசரித்துள்ளனர். அய்ரோப்பா தேசம் முழுமையும், (ரஷ்யாவைத் தவிர) கிறிஸ்து மத அரசர்களாலும், தலைவர்களாலும் (Presidents) ஆளப்பட்டு வருகின்றது. ஆதலின் பெரும்பான்மையான அய்ரோப்பியரும், கிறிஸ்துவர்களே. மதங்களால் மதகுருமார்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துகளுக்கும் ஜீவனமுண்டு.

கோயில்களாலும் அவைகளால் நடக்கும் உற்சவவாதிகளாலும் அநேக கோடி மக்கள் பிழைத்து வருகின்றார்கள். அவர்களை நோக்கி மதங்களை ஒழியுங்களென்றால் இலேசில் ஒழிப்பார்களா? மதங்கள் மனிதருடைய மூடத் தனத்தை வளர்க்கின்றமையால் மூடத்தனத்தைக் கொண்டு பாமர மக்களைப் பல அரசர்கள் ஆண்டு வரச் சந்தர்ப்பம் நேரிடுகின்றபடியால் அரசுகளும் மதத்தை ஆதரித்து வருகின்றன.

இத்தியாதி ஆதாரங்களைக் கொண்டு பலப்படுத்தியிருக்கும் மதங்களை ஒழிக்க வேண்டும் என்றால் இலேசில் ஆகும் காரியமா? இதனை நமது சுயமரியாதைத் தலைவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 100 வருஷங்களாக மெஞ்ஞானமும், பகுத்தறிவு சங்கங்களும் ஆங்கில நாடுகளில் உழைத்து வந்தும் மதக் கற்பனைகள் பெரும்பான்மையோரிடம் இருந்து ஒழியவில்லை என்றால் நமது நாட்டில் வைரம் பெற்றிருக்கும் மூடமதங்களைச் சுலபத்தில் ஒழிக்க முடியுமா வெனச் சிந்திக்க வேண்டும்.

இந்த முக்கிய பிரச்சினையைச் சரித்திர மூலமாகவும், நியாய மூலமாகவும் விசாரித்து அறிந்த முடிவு என்னவெனில், அரசுகள் மதப்பற்றை ஆதரிக்கும் வரை மதங்கள் நமது நாட்டை விட்டு ஒழிவது முடியாத காரியமே. நாஸ்திகம் தழைக்க வேண்டுமானால், அரசும் நாஸ்திகமாக மாற்றிக் கொண்டாலும் தற்காலம் வாழும் மக்கள் பெரும்பான்மையோர் நாஸ்திகமாவது கஷ்டம். ஆனால் நமது நோக்கத்தை நமது குழந்தைகள் பால் செலுத்த வேண்டும்.

இனிவரும் சந்ததியாரை நாஸ்திகத்தில் வளர்க்கவேண்டும். அதற்கு நமது வீடுகளிலும், நமது பள்ளிக் கூடங்களிலும், நமது கல்விச் சாலைகளிலும் மூடத் தனத்தை உண்டாக்கும் மதத்தை நீக்கி, நாஸ்திகம் என்று சொல்லப்படும் சமதர்மக் கொள்கைகளைக் கற்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்தான் வருங்காலத்திலாவது நமது மக்களை சமதர்மக் கொள்கையுடைய பிரஜைகளாக்கச் செய்ய முடியும்.

---------------- ம. சிங்காரவேலர்- "குடிஅரசு", 28.-02.-1932

0 comments: