Search This Blog
25.8.09
1971 இல் தியாகராயர் நகர் திடீர் பிள்ளையாரை அகற்றியவர் கலைஞர்
1971 இல் தியாகராயர் நகர் திடீர் பிள்ளையாரை அகற்றியவர் கலைஞர்
ஆசிரம மோசடிகளைத் தடுக்க
காவல் துறையில் புதுப்பிரிவு அமைத்திடுக
மோசடிக் கும்பலைக் கைது செய்த முதல்வர் கலைஞருக்கு நன்றி
எல்லா ஆசிரம ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட தமிழர் தலைவர் வேண்டுகோள்
திருவண்ணாமலையில் கஞ்சா அடித்துக் குறி சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடிக் கும்பலை மிக விரைவாகக் கைது செய்த முதல்வர் கலைஞ ருக்கு நன்றி தெரிவித்து தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை.
திருவண்ணாமலையில் மது குடித்தும், கஞ்சா அடித்தும் குறி சொல்லி மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சுதா என்ற பெண் சாமியாரிணியும், அவரது தந்தை துரை என்ற பேர்வழியும் கிரிவலப் பாதையில் கறுப்பு சாமி பீடம் ஒன்றை அமைத்து (ஆக்கிரமித்து) வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள்களில் மட்டும் பெண் சாமியாரிணியான இவர் தன்னிடம் வருபவர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார்.
ஒரு நாளைக்கு 100 பேருக்குமேல் குறி சொல்லுகிறேன் என்று பலரை ஏமாற்றி திடீர் பணக்காரராகி-விட்டார். இதன்படி இவரிடம் ஏமாந்த பாமரர்கள் படித்த, படிக்காத பாமரர்கள் ஆயிரம் பேருக்குமேல் தாண்டும்.
இதை கலைஞர் தொலைக்காட்சி மிகவும் விவரமான பேட்டியெடுத்து அம்பலப்படுத்தியது.
பக்தர்கள் கொண்டு வரும் மதுவை ராவாக சோடா போன்றவைகளைக் கலக்காமலேயே குடிப்பது, கஞ்சா அடிப்பது, சுருட்டுப் பிடிப்பது போன்ற வித்தைகளையெல்லாம் செய்து காட்டி, பக்தி வியாபாரத்தை, மோசடி வித்தையை நன்கு விளம்பரப்படுத்தி, குறுகிய காலத்தில் மக்களின் அறியாமையை மூலதனமாக்கிட ஒரு பெருந்திட்டத்தையே போட்டார்.
இதுபோன்று பற்பல ஊர்களில் பல்வேறு நூதன டெக்னிக்குகளைக் கையாண்டு எச்சில் துப்பும் சாமியார், விசிறி மட்டை சாமியார், விளக்குமாற்றால் அடித்து பக்தர்களை அருள்பாலிக்கும் சாமியார் (தேனி மாவட்டத்தில்) இப்படிப் பலப்பல மூட நம்பிக்கை மோசடிகள் முளைத்துக் கிளம்பின.
இதுபற்றி நாம் அறிக்கை விடுத்து, திருவண்ணாமலை மக்களது அமோக வரவேற்பிற்கிடையே (பக்தர்கள் கூட இந்த அருவருப்பை விரும்பாததால் நமது கண்டனத்திற்கு பேராதரவு தந்தனர்) 21.8.2009 அன்று பெரிய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தி, ஒரு பெரும் பொதுக்கூட்டத்தினை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தி, மக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
பகிரங்க வேண்டுகோள்
ஒரு மாதத்திற்குள் இந்த சாமியார் மோசடிகளுக்கும் ஆபாச அருவருப்புகளுக்கும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மாவட்ட அரசு அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்றவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தோம்.
இதை ஏடுகள் வாயிலாகவும் அறிந்த முதல்வர் அவர்கள், தக்க நேரத்தில் இதனைத் தடுத்து மோசடிக் கும்பலைக் கைதுசெய்து சிறையில் தள்ள ஏற்பாடுகளைச் செய்த மானமிகு சுயமரியாதைக்காரரான மாண்புமிகு முதல்வருக்கு அனைத்து பகுத்தறிவாளர்கள், சுயமரியாதைக்காரர்கள் சார்பில் எமது நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காவல் துறையில் தனி பிரிவு
க்யூ பிராஞ்ச் போல இதற்கென ஒரு தனி போலீஸ் பிரிவினையே உருவாக்கி, இந்த காவி வேட்டி அல்லது வேறு வண்ணங்களில் மக்களைச் சுரண்டுவதை கண்காணிப்பதையும், அரசு நிலங்களை எவ்வித அனுமதியும் இன்றி ஆக்கிரமித்து பெரும் முதலாளிகளாகி பக்தி சுரண்டலை, வியாபாரத்தைப் பெருக்குவதைத் தடுத்து நிறுத்திட, காவல் துறையை, உளவுத் துறையை முடுக்கவேண்டும்.
தீவிரவாதிகள்கூட இப்படி ஒரு காவி வேடம் அணிந்து, வடக்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சாமியாரிணிமூலம்தான் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை இராணுவ மேஜர் ஒருவரையே பயன்படுத்தி நடத்தியுள்ள வழக்கு இன்னும் நடத்தாமல் நிலுவையில் அங்கே உள்ளது போன்ற ஆபத்து நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதே நமது கவலையாகும்.
முதல்வர் கலைஞரின் துணிச்சல்
1971 இல் தியாகராயர் நகரில் இப்படித்தான் பேருந்து நிலையம் அருகில் திடீர் பிள்ளையாரை நட்டு வைத்து, அதனைக் கண்டு வணங்க, அங்கே இருந்த ஆர்.எஸ்.எஸ். சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் ஏற்பாடு செய்து, சில நாள்களில் பல்லாயிரக்கணக்கில் கூட்டம்; உண்டியல் வருமானம்; விடுதலை எழுதியவுடன் முதல்வர் கலைஞர் அவர்கள் உண்டியலை இந்து அறநிலையச் சொத்தாக்கி விட்டார்கள்!
தந்தை பெரியார் அங்கே சென்று இதை அம்பலப்படுத்தி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதான அறிவிப்பு வந்தவுடன், முதல்வர் கலைஞர் அவர்கள் துணிச்சலாக அந்தப் பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தி விட்டார்; அய்யா நடத்திய கூட்டத்தில் கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
மோசடிக்குத் துணை போன பெரியவாள்
அதன் பிறகு தனி விசாரணையை காவல்துறைமூலம் நடத்த ஆணையிட்டபோது, செல்வராஜ் என்ற ஏட்டு (போலீஸ்) 84 ரூபாய்க்கு அப்பிள்ளையாரை வாங்கி நட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
காஞ்சி சங்கராச்சாரியார் (பெரியவர்) இதைப்பற்றி அது சுயம்பு, தானே கிளம்பியிருக்கும், என்றுகூட பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்து அந்த மோசடிக்குத் துணை போனார்!
1971 இல் முதல்வர் கலைஞரின் துணிச்சலான நடவடிக்கை இல்லையென்றால், அங்கே ஒரு புதுக்கோயில் உருவாகி பேருந்து நிலையத்தையே கிளப்பவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
பகுத்தறிவு ஆட்சி
அதுபோன்றதுதான் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் நடைபெற்ற துணிவுமிக்க நடவடிக்கையும்!
எனவே, இந்தப் பகுத்தறிவு ஆட்சி இருப்பதால்தான் இந்நிலை; இப்போதே பல பெரிய அதிகாரிகள் தங்கள் கடமையிலிருந்து நழுவுகிற நிலை உள்ளதே!
அவசியம், அவசரம்!
எனவே, முதல்வருக்கு நம் நன்றி! அமைச்சர், மாவட்ட அதிகாரிகள் முதலியவர்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்றிடுவதில் சுணக்கம் இல்லாமல் செயல்படுவதோடு, வழக்கினை உறுதியாக நடத்தி தண்டனை கிடைக்கும்படிச் செய்வதும், இதுபோல் மற்ற இடங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதும்கூட அவசியம், அவசரம்!
------------------"விடுதலை" 24-8-2009
************************************************************************************
முடிவல்ல - தொடக்கம்
30 ஆண்டுகளுக்கு முன்பு, கலை, பண்பாடு என்கிற பெயரில் இந்துமத மூடநம்பிக்கைகளுக்குப் புத்துயிர் கொடுக்க காஞ்சி சங்கராச்சாரி (ஏ-1 சங்கராச்சாரிதான்) முயற்சி எடுத்தார். பச்சைப் பார்ப்பன வருணாசிரம வெறித்தனம், மறுஉரு எடுக்கிறது என்பதை ஈரோட்டுக் கண்ணாடியால் அறிந்து கொண்டார், தமிழர் தலைவர்.
பார்ப்பனப் பண்பாட்டு, கலை ஆகிய மோசடிகளை வெருட்டுவது பகுத்தறிவே என்று பாடிய புரட்சிக் கவிஞரைத் தமிழ் மக்கள் மனதில் பதியவைத்து, அவரது புரட்சிப் பாடல்களைப் பரப்பி மூடநம்பிக்கைகளின் முடைநாற்றத்தை விரட்டியடிக்க வேண்டும் என முடிவு செய்து அவர் அறிவித்ததுடன் தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா என்பது.
மூடநம்பிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிற முயற்சியின் முத்தாய்ப்பு_ ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழா. மூடநம்பிக்கைகள் புதியதாக முளைத்தாலும்கூட அவை, முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பாகவே முறித்துப் போடுவது அவரது போர்முறை!
பிரார்த்தனையால்தான் ஒரு மக்கள் தலைவர் நோய் தீர்ந்து திரும்பினார் என்று பார்ப்பனர்களும் அவர்தம் பாதம் தாங்கிகளும் திட்டமிட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, தமிழர் தலைவர்தான் பிரார்த்தனை மோசடி என்ற தொடர் சொற்பொழிவை நிகழ்த்தி அந்த மோசடியைத் தோல் உரித்தார். பிரார்த்தனையின் பெயரால் தில்லுமுல்லு செய்யும் எல்லா மத ஏமாற்றுக்காரர்களையும் சந்தி சிரிக்க வைத்தார். (அதே தலைப்பில் அவ்வுரைகள், அரிய நூலாகவே வெளிவந்துள்ளன.)
திருவண்ணாமலை கிரிவலம் எனக்கூறிய கெடுமதியாளர்களின் நரித்தனத்தை நாறடிக்க கருப்புச் சட்டை கரிவலம் நடத்தி (யானைகளின் அணிவகுப்பு) அதன் அற்புதத்தைக் குலைத்தார்; 6 ஆண்டுகளுக்கு முன்பே!
ரமணரிஷி முதல் நேற்றைய கருப்பண்ணசாமி சுதா வரை, அத்தனை சாமியாடிகளின் அசிங்கச் செயல்களை அம்பலப்படுத்தி, அரெஸ்ட் செய்ய வைத்துள்ளார், தமிழர் தலைவர்.
அவரே, திருவண்ணாமலையில் அறிவித்தவாறு, இது முடிவல்ல தொடக்கம்.
கழகம், அவரது விரலசைவுக்கு ஏற்ப கணையெனக் கிளம்பும் தீர கோட்டம்! அவர் ஆணைப்படி பணி தொடங்கி, பெரியார் பணி முடித்திட முடிவு செய்துள்ள வீரர் கூட்டம்!
வெண்தாடி அசைந்தால் போதும்
கண்ஜாடை தெரிந்தால் போதும்
கருப்புடை தரித்தோர் உண்டு
நறுக்கியே திரும்பும் வாள்கள்
என்று, கவிதையல்ல எனப் பாடினார் நம் கலைஞர் 1945இல்!
கருப்புடை தரித்தோரின் படை ஆர்ப்பரித்துக் கிளம்பும் மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பை முறிக்கும் பகுத்தறிவுச் சமுதாயத்தைச் சமைக்கும் என்கிற சூளுரையை விடுதலை ஏட்டின் பவள விழா நிகழ்ச்சி நாளன்று ஏற்கிறோம்!
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே, மகுடம் கழற்று.
-----------------------"விடுதலை" 24-8-2009 பக்கம் -5
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment