Search This Blog

21.8.09

எவ்வளவு காலத்துக்கு இழிவைச் சுமந்து கிடப்பது? தேவை பெரியார் சிந்தனையே!




எது தேவை?


கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த வத்தராயன் தெத்து கிராமம். தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் வாழக்கூடிய பகுதி.

ஆடி வெள்ளியின்போது ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள பச்சைவாழி அம்மன் கோயில் தீ மிதி விழா நடைபெறுவது வாடிக்கை.

தீக்குண்டத்துக்குத் தேவையான விறகுகளைக் கொண்டு வந்து சேர்ப்பது, தீக்குண்டம் வெட்டுவது_ இந்த வேலைகளுக்கு மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் வேண்டுமாம் தீக்குண்டத்தில் இறங்கும்பொழுது மட்டும் திடீரென்று தீண்டாமை வந்து குதித்துவிடுமாம்!

நெருப்பில் கூட தீண்டாமை; ஆமாம், உயர்ஜாதிக்காரர்கள் தீண்டினால் நெருப்பு சுடாது; அதேநேரத்தில் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் தீண்டினால் நெருப்பு சுடும் _ அப்படித்தானே! ஆமாம், அதனை நம்பவேண்டும்; நம்பாவிட்டால் சமாச்சாரம் நாஸ்திகமாகி விடுமே!

சென்ற மாதம் 31 ஆம் தேதி அவ்வூரில் வழக்கம்போல தீ மிதி விழா நடைபெற்றது. அப்பொழுது ஒரு குழந்தை தீக்குண்டம் அருகே ஓடியது; பதறிப் போய் அந்தக் குழந்தையைத் தூக்கச் சென்றுள்ளார் ஒரு தோழர். அவ்வளவுதான், அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் தீக்குண்டத்தில்தான் இறங்க ஓடி வருகிறார் என்று கருதி ஆளாளுக்குத் தாக்கியுள்ளனர்.

இவ்வளவுக்கும் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர்தான் தீக்குண்டத்துக்கு விறகு கொண்டு வந்திருக்கிறார். தீக்குண்டத்திற்கான குழியையும் தோண்டியிருக்கிறார்.


அவர் செய்த தவறு என்ன? மனிதாபிமானத்தோடு தீக்குண்டத்துக்குள் விழாமல் ஒரு குழந்தையைத் தடுக்க ஓடியதுதான்.

அடிபட்ட தோழர் மருத்துவமனையில்! காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கைதான் இதுவரை இல்லை.

பொதுவாக நம் நாட்டில் கோயில் திருவிழா என்றாலே ஜாதி கொம்பு முளைத்துத் துள்ளிக் கிளம்பி விடுகிறது.


நம்மைத் தீண்டத்தகாதவன் என்று கூறும் இந்தக் கோயில் இருந்தால் என்ன? இல்லாதொழிந்தால் என்ன? என்கிற தார்மீகக் கோபம் வரவேண்டும். இல்லாவிட்டால் உமக்குள்ள உரிமை எனக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்ற உரிமைப் போர் வெடித்தாகவேண்டும்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இழிவைச் சுமந்து கிடப்பது? தேவை பெரியார் சிந்தனையே!



---------------- மயிலாடன் அவர்கள் 20-8-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: