Search This Blog

27.8.09

ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே!


திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி


*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி -5




ஞாநியின் பதில்:

("எதிரொலி"யில் வெளியான சங்கராச்சாரி சின்னக்குத்தூசி சந்திப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்பாக துக்ளக் பத்திரிகையின் 15-4-83 இதழில் ஒருவாசகர் கடிதமும், ஆசிரியர் சோவின் விளக்கமும் வெளியிடப்பட்டிருந்தன. இதில் கூறப்பட்டிருந்த பொய்களை மறுத்து 15-4-83 அன்றே ஞாநி சோவுக்கு ஒருகடிதம் எழுதியும் அதை அவர் துக்ளக்கில் இதுவரை வெளியிடவில்லை. எனவே கடிதவிவரம் இங்கே வெளியிடப்படுகிறது.)

டியர் மிஸ்டர் சோ,

காஞ்சி சங்கராச்சாரியார் சின்னக் குத்தூசி பற்றி "எதிரொலி"யில் வெளியான கட்டுரையை ஒட்டி எழுந்துள்ள ஒரு சர்ச்சை பற்றி 15-4-83துக்ளக்கில் எழுதியிருந்ததைப் படித்தேன்.

இந்த விவகாரத்தில் நீங்கள் நடந்து கொண்டுள்ளவிதம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சங்கராச்சாரியார் சந்திப்பு பற்றி 3-4-83ல் சின்னக் குத்தூசியும், 4-4-83 அன்று நானும் எதிரொலியில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்த ஓரிருநாட்கள் கழித்து புகைப்படக்கார நண்பர் சுபா சுந்தரம் போன் செய்ததையும் அதையடுத்து நானும் சின்னக் குத்தூசியும் உங்களுக்கு போன் செய்து பேசியதையும்உங்களுக்கு நினைவுபடுத்தவும் உங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்தவும் விரும்புகிறேன்.

சுபா சுந்தரம் போனில் என்னிடம் "சோ பலமுறைகள் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டார். 'சுவாமிகள் தியாகராஜனிடமும் (சின்னக் குத்தூசி)ஞாநியிடமும் அப்படித்தான் சொன்னாரா' என்று ரொம்ப அப்செட் ஆகிக் கேட்டார். நீங்கள் அவரோடு பேசுங்கள்" என்று சொன்னார். உடனே நான்போன் செய்து உங்களோடு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினேன். ஸ்வாமி சொன்ன மாதிரி நீங்கள் யாரும் தயார் செய்து அனுப்பக் கூடிய ஆளல்ல. உங்களோடு எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் நானும் தியாகராஜனும் நிச்சயம் சுவாமிகள் சொன்னதை இப்போதும் நம்பவில்லை. விநோ அபவுட் யுவர் இண்டிபெண்டண்ட் ஆட்டிட்யூட் என்று நான் சொன்னதற்கு நன்றி தெரிவித்தீர்கள். "இப்போது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில்இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன்" என்றீர்கள்."என்ன செய்வது? உண்மைதான் முக்கியம்" என்று நான் சொன்னேன். "உங்களையும் தியாகராஜனையும் தவிர யாராவது அதை எழுதியிருந்தால் நான்நம்பியிருக்க மாட்டேன்" என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு தியாகராஜனிடமும் இதுபற்றிப் பேசினீர்கள்.

இப்போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உங்களிடம் தெரிவித்த பொய்யை வெளியிட்டிருக்கிறீர்கள்.

அது அவருடைய ஸ்டேட்மெண்ட். வெளியிடுவது முறைதான். அதைத் தொடர்ந்து, உங்கள் கமெண்ட் வேறு. நானும் தியாகராஜனும் பொய் சொல்லமாட்டோம் என்று நீங்கள் நினைப்பதாக போனில் எங்களிடம் சொல்லிவிட்டு, நாங்கள் பொய் சொல்லியிருப்பதாக அர்த்தம் வரும்படி பத்திரிகையில்எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ரெஸ்பெக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் மேலோங்கியதில் உண்மை இரண்டாம் பட்சமாகிவிட்டது.

ஆசாரிய சுவாமிகளைச் சந்தித்தபோதே கட்டுரையை வெளியிடாமல் திடீரென்று கலாச்சார விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன் என்று அவர் சார்பில்கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை அன்றைக்கு நாம் போனில் பேசியபோதே தியாகராஜன் உங்களிடம் தெரிவித்தார். சந்திப்பு முடிந்த ஓரிருதினங்களில் தியாகராஜன் ஏஜென்ஸி விஷயமாக டூர் போய்விட்டார். ஒரு மாத காலம் அவர் சென்னையில் இல்லை. அதனால்தான் அப்போதே வெளியிடமுடியாமல் போயிற்று.

தவிர, சுவாமிகள் நடத்திய விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்ட அமைச்சர் காளிமுத்து செல்லவில்லை. இந்த நிலையில் அடுத்த நாளேசுவாமிகள் திடீரென்று மறுநாள் முதலமைச்சர் (அழைப்பிதழில் குறிப்பிடப்படாதவரோ) வரப்போவதாக நிருபர்களிடம் அறிவித்தார். இப்படியாக சுவாமிகள்பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற நிலையில் அவர் எங்களோடு பேசியவற்றை எம்.ஜி.ஆர். விழாவுக்கு வரும் நாளன்று வெளியிடுவது பொருத்தமென்பதால்3-4-83 அன்று சின்னக்குத்தூசியின் கட்டுரை வெளியிடப்பட்டது. நடத்தது அவ்வளவுதான்.

"பிரசுரத்துக்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார்" என்றுஎழுதியிருக்கிறீர்கள். இது சுத்தப் பொய். பிரசுரிப்பதற்காக அல்ல என்று எதையும் சுவாமிகள் சொல்லவில்லை. அவருடைய தூதர் கார்ப்பரேஷன் பேங்க்சீனிவாசன் இதை அறிவார்.

குண்டுராவ் அருண்ஷோரியை சாப்பாட்டுக்கு அழைத்தபோது சாப்பிடும் வேளையில் இருவரும் சம்பாஷித்ததை அருண்ஷோரி சண்டே இதழில் வெளியிட்டபோதுயாரும் ப்ரைவேட் கான்வர்சேஷன் என்று எதிர்த்துப் பேசவில்லை. குண்டுராவ் மடாதிபதியாக இருந்தால் பேசி இருப்பார்களோ என்னவோ? அவ்வளவுஏன்? ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைக் காண திருப்பூர் கிருஷ்ணனும் வலம்புரி ஜானும் பரணீதரனும், மணியனும்(!) போகிற வேளைகளில் யார் யாரோபக்தர்கள் சுவாமிகளைச் சந்திக்க வருவதையும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறுவதையும் அவற்றுக்கு சுவாமிகள் கூறும் அருளாசிகளையும்அப்படியே கண்டு மெய்சிலிர்த்து, நெகிழ்ந்து நெஞ்சுருகி எழுதுகிறபோது பக்தர்களின் ப்ரைவேட் பிரச்சனைகள் அச்சில் எழுதுவதை யாரும் விமர்சிப்பது இல்லை.சுவாமிகளைப் பாராட்டி அவரது இமேஜை பம்ப் வைத்துக் காற்றடித்து உயர்த்தும்போது வாய்மூடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மெடர்னிடிடாக்டரும் அபத்தம் என்று உடனடியாகச் சொல்லக் கூடிய விதத்தில் பிறக்கும்போதே கைகளைக் கூப்பியவாறு பிறந்த குழந்தை ஜெயேந்திரசரஸ்வதிகள் என்று உங்கள் சகோதர ஏடு எழுதுவதும் இமேஜூக்கு பம்ப் அடிக்கிற சமாசாரம்தான். இதைப்பற்றி உங்கள் பேனா எழுதாது.ஆனால் சுவாமிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும்போதும் மட்டும் "பிரசுரத்துக்காக அல்லாமல்" என்று புதுக்கரடி விடுகிறது.

3-4-83 எதிரொலியில் சின்னக் குத்தூசியின் கட்டுரை வெளியான மறுநாள் சுவாமிகளின் தூதர் சீனிவாசன் போன் செய்தார். கட்டுரையாளர் தியாகராஜனுடன் பேசினார். "என்ன இப்படி திடீர்னு பப்ளிஷ் பண்ணீட்டிங்க" என்று கேட்டார். "பேசினதைத்தானே போட்டிருக்கிறது. பேசாததைப்போடவில்லை அல்லவா" என்றார் தியாகராஜன். "ஆமாமா பேசினது தான் வந்திருக்கு. தப்பா எதுவும் இல்லை. மைல்டாதான் இருக்குன்னுபெரியவா சொன்னா. ஞாநியோட கட்டுரை எப்படி இருக்கும்? அதுவும் மைல்டாதானே இருக்கும்?" என்று சீனிவாசன் கேட்டார். "எனக்குத்தெரியாது. நான் அதை இன்னும் படிக்கல" என்று தியாகராஜன் சொன்னார். என் கட்டுரை வந்தபிறகு சீனிவாசன் தொடர்பே கொள்ளவில்லை.

"வீணாக அவருடைய (சுவாமிகளுடைய) பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்" என்று நீங்கள் தீர்ப்பு வேறு வழங்கிஇருக்கிறீர்கள்.

அவரை நாங்கள் எங்கே சர்ச்சைக்கு இழுத்தோம்?

கடந்த 6 மாத காலமாக எதிரொலி நிர்வாக இயக்குநர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனிடம் அவர் கணக்கு வைத்துள்ள கார்ப்பரேஷன்பேங்க் மேனேஜர் சீனிவாசன், எதிரொலியில் சங்கராச்சாரியார்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதை தேவராஜன்,சின்னக் குத்தூசியிடம் சொல்லிவிட்டு, "தகவலுக்காகச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்" என்பார். முதல் நான்குமாத காலம் இப்படிநடந்தது. பிறகு சுவாமிகளின் தூதர் சீனிவாசன் தன் அப்ரோச்சை மாற்றினார்.

"சின்னக்குத்தூசியை ஒருதடவை பார்த்து பேசச் சொல்லிப் பெரியவர் கேட்டுண்டார். கொஞ்சம் அவரை கன்வின்ஸ் பண்ணி வரச் சொல்லுங்க" என்று தேவராஜனிடம் சொல்ல ஆரம்பித்தார். இது 2 மாத காலம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. சின்னக்குத்தூசி ஜெயேந்திரரை சந்திக்க ஆர்வம்காட்டவில்லை.

பிறகு தேவராஜன் ஒருநாள், "சார், போய்ப் பார்த்துவிட்டு வந்துடுங்க. பிரஷர் தாங்க முடியலே. நம்ம இருக்கிற இருக்கப் போகிறோம்;பார்க்கிறதுனாலே ஒண்ணும் தப்பில்லே" என்றார். இதன் பிறகே சின்னக் குத்தூசி ஒப்புக் கொண்டார்.

அதன்படி அவரை சீனிவாசன் அழைத்துச் சென்றபோதுதான் நான் தற்செயலாக உடன் சென்றேன்.

ஆக, சர்ச்சைக்கு சுவாமிகளை இழுத்தது யார்? அவர்தான் தன்னைப் பற்றிய விமர்சனங்களை விரும்பாமல் விமர்சகரின் மனதை மாற்ற முயற்சி செய்தார்.

அப்படிப்பட்ட ஒரு துறவிதான், உங்களைப் பற்றிச் சொன்னதை, இப்போது இல்லை என்று மறுக்கிறார். அவர் கூறியவிதம் கூட இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.

"மத்த மதங்களை ஏன் டி.கே. விமர்சனம் பண்றது இல்லே? இதைக் கேட்டா மழுப்பிடறீங்க. வீரமணியை சோ பேட்டி கண்டாரோ, இல்லியோ?அப்பவும் அவனால் இதுக்கு பதில் சொல்ல முடியலியே!" இந்த இடத்தில் ஒரு கணம் நிறுத்திவிட்டு, முகத்தில் குதூகலப் புன்னகையோடு, சுவாமிகள் அடுத்துச்சொன்ன வாக்கியங்கள் இவைதான். "நான்தான் சோவை அதுக்கு தயார் பண்ணி அனுப்பிச்சேன். என்னென்ன கேக்கணும்னு ரெடி பண்ணி அனுப்பிச்சேன்.அவனால ஒண்ணுத்துக்கும் பதில் சொல்ல முடியலியே!"

இவ்வாறு தான் சொன்னதை, இல்லை என்று, இப்போது மறுக்கிற சுவாமிகள், 3-4-83 முதல் இன்றுவரை எதிரொலிக்கு மறுப்புஅனுப்பவில்லை. தூதனுப்பத் தெரிந்தவருக்கு நேரடியாக மறுப்பனுப்பத் தெரியாதது ஏன்? உங்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏன்?


இப்படிப்பட்ட ஒரு மனிதர், உங்களிடம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வேறு கூறியிருக்கிறார். நீங்கள் அதை அப்படியே வெளியிட்டு, அதன் அடிப்படையில்உங்கள் மேலான தீர்ப்புகளையும் வழங்குகிறீர்கள்.

அவர் சொல்லாதவற்றைச் சேர்த்தோமாம். சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டோமாம். சம்பாஷணைகளின் சில பகுதிகளை முற்றிலும்விட்டுவிட்டோமாம்.

இந்த மூன்றில் முதல் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அவர் சொல்லாதவை என்னென்னவென்று விவரமாக தெரிவிக்கட்டும். அடுத்தஇரண்டு குற்றங்களை செய்திருப்பது உண்மைதான். ஒப்புக் கொள்ளுகிறேன்.

அவர் சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டது உண்மைதான். அவை என்ன தெரியுமா? மணியனைப் பற்றி அவர் கூறின அசலானவாக்கியங்கள்தான். "அவனைப்பத்தி என்னண்ட கேட்காதீங்கோ. அவனுக்கு ஆத்மாவும் கெடயாது. ஆத்மார்த்தமும் கெடயாது. அவன் வியாபாரி.அவனுக்கும், எனக்கும் ஸ்நானப் பிராப்திகூட கிடையாது" என்றார் சுவாமிகள். மணியனுக்கு சுவாமிகள் அங்கீகாரம் உள்ளதாகப் பலரும் கருதுவதை தவறென்று தெளிவுபடுத்த இதைப் பொது மேடையிலும் சொல்லி விடுங்களேன் என்று நான் கேட்டபோது வெறும் சிரிப்பே பதில்! பொது மேடையில் கூறமறுத்தால் மணியனுக்கு சுவாமிகள் உடந்தை என்றே நான் கருத வேண்டி வரும் என்ற போது அதற்கும் ஒரு சிரிப்பு. பதில் கூற முடியாமல் நழுவுவது யார்?இந்தப் பகுதியை நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வெளியிடவில்லைதான்.

இதேபோல, உண்மையான பிராமணன் யார் என்ற சர்ச்சையை சின்னக்குத்தூசி எழுப்பியபோது சுவாமிகள் அருகிலிருந்த சீனிவாசனைக் காட்டிப் பேசியதைநாங்கள் வெளியிடவில்லை. "இவன் மீசையும் கிராப்பும். இவனை யார் பிராமணன்னு ஒத்துப்பா? 20 வருஷம் முன்னாடி இந்த மாதிரி இருந்துண்டு என் முன்னாலவர முடியுமோ? எல்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா. அப்படித்தான் இருக்கும்" என்றார் சுவாமிகள். உடனே சீனிவாசன் வெட்கத்தோடுநெளிந்தார். இந்தப் பகுதியை நாங்கள் வெளியிடவில்லை.

இதேபோல வெளியிடாமல் விட்ட இன்னொரு பகுதி சின்னக்குத்தூசி தியாகராஜனை சுவாமிகள் எதிரொலி விஸ்வநாதன் என்பவரோடு குழப்பிக் கொண்டதுபற்றியது. தமிழ் எழுத்தாளர்களை, சுவாமிகள் தர்ம பிரகாஷில் சந்தித்தபோது எதிரொலியிலிருந்து ஒருவர் வந்து தம்மிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம்வாங்கிக் கொண்டதாக அவர் சொன்னார். "எதிரொலின்னு விக்கிரமன் மைக்ல சொன்னதும் எல்லோரும் ஒரு செகண்ட் ஆச்சரியமா பார்த்தா" என்றுசுவாமிகள், எதிரொலிக்காரர் ஒருவர் தம்மிடம் ஆசிர்வாதம் வாங்கியது பற்றிய பெருமிதத்தோடுச்சொன்னார். "நீங்கதான் அவர்னு நெனச்சேன். ஆனாஅவர் வேற மாதிரியிருந்தாரே" என்று சின்னக் குத்தூசியிடம் கேட்டார். நானும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். "அப்படி எதிரொலி பத்திரிகைக்காரர்யாரும் அங்கே சுவாமிகள் காலில் விழவில்லையே" என்று சொன்னேன். சுவாமிகள் "எதிரொலி விஸ்வநாதன்" என்று பெயரைச் சொன்னார்.அவருக்கும் எதிரொலி பத்திரிகைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று விளக்கியபோது, சுவாமிகள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.இதெல்லாம்தான் நாங்கள் வெளியிடாத பகுதிகள்.

வெளியிட்ட பகுதிகளில் உங்களைப்பற்றி சொன்னதை சுவாமிகள் இப்போது மறுத்திருக்கிறார்.

இன்னும் எதை எதையெல்லாம் மறுக்கிறார் என்றும் நீங்கள் கேட்டிருந்தீர்களானால் நன்றாயிருந்திருக்கும்.

1. எல்லோரையும் 'அவன் இவன்' என்று பேசியதை மறுக்கிறாரா?

2. கருணாநிதி மீது ஏற்பட்ட கோபத்தால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வெற்றி பெற்றதாகச் சொன்னதைமறுக்கிறாரா?

3. மணியனைப் பற்றிச் சொன்னதை மறுக்கிறாரா?

4. தமிழ் அர்ச்சனை, அரிஜன அர்ச்சகர்கள் இரண்டையும் இவர் ஆதரித்தாலும் இவர் பக்தர்கள் அவற்றை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போவதைத்தடுக்காதது ஏனென்று கேட்டபோது, வெறுமே சிரித்தாரே, அதை மறுக்கிறாரா?

5. எல்லா மனிதர்களைப் பற்றியும் கவலைப்படாமல் மத அடிப்படையில் பிரிப்பது சரியல்ல என்று நான் சொன்னபோது, "எனக்கு எல்லா மனுஷனைப்பத்தியும் கவலையில்லை. இந்துக்களைப் பற்றித்தான் கவலை" என்று சொன்னாரே, அதை மறுக்கிறாரா?

6. திராவிடர் கழகம் இந்து மதத்தை விமர்சிப்பதால் முஸ்லீம்கள் பலம் பெருகுவதாகக் கவலை தெரிவித்தாரே. அதை மறுக்கிறாரா?

7. "முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை" என்று சொன்னதை மறுக்கிறாரா?

8. ஒரேயடியாக எதிரொலிக்கு சீனிவாசனைத் தூதனுப்பியதையும், சின்னக்குத்தூசியைச் சந்திக்க விரும்பியதையும், அதன்படி அவரும் அவரோடு நானும்சுவாமிகளை வசந்த மண்டபத்தில் சந்தித்ததையும், அப்போது பேசியதையும், கடைசியில் எங்களுக்குப் புரசை இலையில் கல்கண்டு கொடுத்ததையும் எல்லாவற்றையுமே கூட "அப்படி எதுவுமே நடக்கவில்லை. நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை" என்று மறுக்கிறாரா?


கேட்டுச் சொல்லுங்கள். சுவாமிகளிடம் மட்டுமல்ல; இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றிச் சம்பந்தப்பட்ட எல்லாரிடமும்போய்க் கேளுங்கள். மனசாட்சியின் நெருடலை காவி உடை சாகடித்து விடலாம். ஆனாலும், சாதாரண மனிதர்களின் மனசாட்சிகள் அவ்வளவு சுலபத்தில்சாவதில்லை என்று நம்புகிறேன்.

"நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காதது போல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்குவேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை" என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

எதிரொலி தி.மு.க. சார்புள்ள பத்திரிகைதான். ஆனால், நான் தி.மு.க.வையோ தி.க.வையோ சார்ந்தவன் அல்ல. அவர்களுடன் எனக்கு சிலவற்றில்உடன்பாடும், சிலவற்றில் மாறுபாடும் உண்டு. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனும் அல்ல. உங்கள் துர்வாசரைப் போல் நானும் (துக்ளக் உட்பட)எல்லா இடங்களிலும் உண்மையைத் தேடுகிறேன். அவ்வளவுதான்.

நீங்கள் கட்சி சார்புள்ளவர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். ஸ்ரீசங்கராச்சாரியார் இந்து முன்னணியையும் ஆர்.எஸ்.எஸ்.சையும்ஆதரிப்பவர். முஸ்லீம் லீக்கைப் போல் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு கட்சிதான் என்பதே என் கருத்து. எனவே, கட்சி சார்புள்ளவர்களுக்கு நடந்ததை நடக்காததாகவும், நடக்காததை நடந்ததாகவும் காட்டும் அவசியம் ஏற்படலாம் என்ற உங்களுடைய வியாக்கியானம் உங்கள் இருவருக்கேபொருந்தும். அந்தத் தியரியே எனக்கு உடன்பாடல்ல. (சரியான தத்துவம் உள்ள கட்சிக்கு அந்த அவசியமே வராது.) அந்தத் தியரி எனக்குப்பொருந்தவும் இல்லை.

மனிதர்களை நேசிப்பதும், வாழ்க்கையில் நல்ல நெறிமுறைகளோடு வாழ்வதும், மனிதர்கள் எல்லாரும் சமமாய் வாழும் சுருதி சுத்தமான ஒரு உலகம்அமையக் கண்ட கனவை நனவாக்க உழைப்பதும், இதற்கெல்லாம் எதிரான சக்திகளோடு தொடர்ந்து யுத்தம் செய்வதும்தான் சரியென்று நான்நம்புகிறேன்.

அன்பு, ஆன்மீகம், நெறி, நல்லொழுக்கம் இவற்றைத் தயவுசெய்து கடவுள், காவி, மதம், மடாதிபதிகளோடு இணைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.இரண்டும் வெவ்வேறு. சத்தியத்தைத் தேடுபவர்களில் ஒருவராக, நீங்களும் ஒரு காலத்தில் இருந்தீர்கள் என்பதனால்தான் (தொடர்ந்து ஒருவேளைஇருக்கவும் கூடும் என்ற நம்பிக்கையினாலும் தான்) உங்களுக்கு இதைச் சொல்கிறேன்.

அன்புள்ள, ஞாநி

15-4-83

இந்தக் கடிதத்தை 1.5.83 துக்ளக் இதழில் சோ வெளியிடாததன் வாயிலாக அவருடைய பத்திரிகை தர்மம் என்னவென்று தெரிந்துவிட்டது.

கடந்த மூன்று இதழ்களாக, துக்ளக் பத்திரிகையில் துர்வாசர் என்பவர் தமிழில் மலிந்திருக்கிற தரங்கெட்ட எழுத்துக்களை (சரியாகவே) விமர்சித்து எழுதிவருகிறார். இதுபற்றி 1-5-83 துக்ளக் இதழில் சோ வெளியிட்ட அறிவிப்பைப் பார்க்கலாம்.

"கவலையில்லை

குறிப்பு: திரு. ஹேமா ஆனந்த தீர்த்தன் மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதுவும் பிரசுரமாகும். வாசர்களில் மிகச்சிலர் எழுத்தாளர்கள் சிலரைஆதரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவையும் பிரசுரமாகும். இது பற்றிய எல்லா வாதங்களுக்கும் பதில் தர துக்ளக் தயாராக இருக்கிறது.இன்றைய பத்திரிகை உலகிலும் எழுத்துலகிலும் பலர் சேர்ந்து ஓட விட்டிருக்கும் சாக்கடையைச் சுத்தப்படுத்துவது என்ற முயற்சியில் அச்சாக்கடையில்இறங்குவது என்ற தீர்மானத்தை நன்றாக யோசித்தே செய்தோம். விடுவதாக இல்லை.

- ஆ.ர்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் சோ தெரிவித்திருக்கிறார். துர்வாசர் கட்டுரைக்கு எத்தனை பேர் பதில் எழுதினாலும் கவலையில்லை. சமாளிக்கலாம்.ஏனென்றால் துர்வாசர் சத்தியத்தின் பக்கம் நிற்பதுதான் அந்த பலத்தைத் தருகிறது.

ஆனால், சங்கராச்சாரி விவகாரம் பற்றி, சோ எழுதியதற்கு எதிராக ஒரு கடிதத்தைக் கூட அவரால் வெளியிட முடியவில்லை. ஏனென்றால், அவருடைய,சங்கராச்சாரியுடைய பொய்கள் அப்போது அம்பலமாகி விடுகின்றன.

ஆபாசப் பத்திரிகைகள் ஆபாசமாகத் தொடர்ந்து இயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால், கருத்துலகில் ஆரோக்யமான மாற்றங்களுக்காக உழைப்பதாகஒரு இமேஜை மூலதனமாக்கிக் கொண்டு இயங்கும் துக்ளக், அந்தக் கருத்துலக நேர்மை இல்லாத பத்திரிகையாக இருப்பது ஒரு சாதாரண விஷயமல்ல.மக்களின் மூளையை இன்னொரு வடிவத்தில் திசை திருப்பும் வேலையாக இதுவும் ஆகிவிடுகிறது.

எல்லாப் பத்திரிகைகளையும் விமர்சித்து சாக்கடையை சுத்தப்படுத்தும் வேலையில் துர்வாசரை இறக்கியுள்ள துக்ளக், தன்னையும் சுய விமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை அதற்கு இருக்குமா என்பது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிச்சயம் சந்தேகத்துக்குரியதாகி விட்டது. அப்படி செய்தால் அதுவும் ஒருகண்துடைப்பு வேலையாக மட்டுமே மேற்கொள்ளப்படலாம்.

இங்கேதான் ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே!

இந்த சூழ்நிலையில் உண்மையே உன் நிலை, விலை என்ன?

- ஞாநி.



------------------------------------நூல்:-"சின்ன சங்கராச்சாரி - யார்?" - பக்கம்: 33-44

0 comments: