Search This Blog

14.8.09

அரியும் சிவனும் ஒன்றா?அரியும் சிவனும் ஒன்றுமதுரையில் விருபாக்சன் ஒரு பார்ப்பனன், தன் மனைவி சுபவிரதையுடன் இல்லறம் நடத்தி வந்தான். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை இல்லை. அந்தக் காலத்தில் மருத்துவர்களும் இல்லை, சாமியார்களும் இல்லை, குழந்தை வரம் தருவதற்கு! ஆகவே விரதங்கள் இருந்தனர். சிவனை நோக்கித் தவம் செய்தனர். கடைசியாக மனம் இரங்கி குழந்தைப் பேறு தந்தார் பரமசிவன். சுபவிரதைக்குப் பெண் குழந்தை பிறந்தது. கவுரி (சிகப்பி) என்ற பெயர் சூட்டிச் செல்லமாக வளர்த்தனர்.

கவுரிக்கு அய்ந்து வயது ஆகும்போதே கடவுள் பக்தியை ஊட்டி, கதைகள் சொல்லி நம்ப வைத்து வளர்த்தனர். பார்ப்பன விரு பாக்சன் பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள உதவும் பராசக்தியின் மந்திரத்தை மகளுக்கு உபதேசித்து வளர்த்து வந்தான். கவுரியும் மந்திரத்தை மறக்காமல் பூஜித்து வந்தாள்.

கவுரி பருவ மங்கையானாள். ஒரு நாள் ஒரு பார்ப்பனன் பிச்சை கேட்டு அவர்கள் வீட் டுக்கு வந்தான். பிச்சைக்காரனைப் பார்த்ததும் தன் மகளை அவன் தலையில் கட்டி விடலாம் என்று விருபாக்சன் கணக்குப் போட்டு அவனிடம் பேச்சு கொடுத்தான். பிச்சை எடுத்துச் சாப்பிடும் ஒருவனுக்குப் பெண் கொடுக்க வருகிறவனை, வேண்டாம் என்று யார்தான் ஒதுக்குவார்கள்? அவன் சரி என்று தலையை ஆட்டிவிட்டான். நல்ல சமயமடா இது, நழுவ விடுவாயோ என மனதுக்குள் சொல்லிக் கொண்டே அப்பார்ப்பனன் தாரைவார்த்து (தண்ணீர் தெளித்து) மகளை அவனிடம் ஒப்படைக்கத் துணிந்து காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டான்.

தெருவில் நடந்த இத்தனை விசயங்களும் கவுரியைப் பெற்ற தாய்க்கே தெரியாது. தாயின் கருத்து முக்கியமா என்ன? தாய் பையனைப் பார்த்தாள். மனம் திடுக் என்று ஆகிவிட்டது. பையன் நன்னா பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொண்டு நின்றான். இவர்களோ பட்டை அடிக்கும் சிவபக்தர்கள். ஒத்து வருமோ? இருந்தாலும் என்ன செய்வது, தன் ஆம்படையான் தாரை வார்த்துக் கொடுத்து விட்டாரே?

வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், சீர், செனத்தி, வரதட்சணை எல்லாம் கொடுத்து விவாகத்தை நடத்தி இருவரையும் பிள்ளையாண்டான் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

புக்ககம் போனபோது, தம்மாத்து மருமகளைப் பார்த்ததும் அவர்களுக்குப் பொக்கென்று ஆகிவிட்டது. நல்ல வைஷ்ண வப் பையன் சிவகோத்திரக் கன்னிகையைக் கரம்பிடித்து வருகிறானே என்ற வருத்தம் தலைதூக்க இருவரையும் வரவேற்றனர். கவுரியும் நாமம் போடும் நபர்கள் வீட்டில் வாக்கப்பட்டிருக்கிறோமே என்கிற பயம் கொஞ்சங்கூட இல்லாமல் மந்திரமாவது நீறு சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள், கவுரியை மட்டும் வீட்டில் விட்டுப் பூட்டிக் கொண்டு எல்லாரும் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்திற்குப் போய்விட்டனர். பூட்டிய வீட்டுக்குள் இருந்து கொண்டு சன்னல் வழியே பராக்கு பார்த்துக் கொண்டிருந்த கவுரியின் கண்களில் திருவோடு ஏந்தித் தெருவோடு போன கிழப் பார்ப்பனப் பிச்சைக்காரன் பட்டுவிட்டான். அவனும் வீட்டுக்கு வந்தான். அவனை வரவேற்று உட்கார வைத்தாள் கவுரி.

மகிழ்ச்சியடைந்த பிச்சைக்காரக் கிழவன் சாப்பிடச் சோறு கேட்டான். கவுரி கையைப் பிசைந்து கொண்டே வீட்டில் உக்கிராண அறையும் சமையலறையும் பூட்டி இருப் பதைச் சொல்லித் தன்னிடம் சாவி இல்லை யென்று சொன்னாள். அசராத பிச்சைக்காரன் அவளிடம் சாவியே தேவையில்லை, நீ போய்க் கையை வை, பூட்டு திறந்து கொள்ளும் என்றான்.
முன்பு ஒரு முறை வேதாரண்யத்தில் பூட்டிக் கிடந்த கோயிலைத் திறக்க திருநாவுக்கரசர் ஒன்பது பாட்டு பாடியும் திறக்காமல் இருந்த பூட்டு, பார்ப்பன சம்பந்தன் ஒரு பாட்டு பாடிய உடனேயே திறந்து கொண்டதை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளலாம். கவுரி பூட்டில் கையை வைத்ததும் அது திறந்து கொண்டது. உடனே சமைத்து அவனுக்குச் சோறு போட்டாள்.

உணவு உண்டதும், என்ன ஆச்சரியம்? கிழப்பார்ப்பான் அழகிய வாலிபனாக உருமாறிவிட்டான். என்னடா, இது வம்பாகப் போய்விட்டதே என்று கவுரி செய்வது அறி யாது பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தபோது கல்யாணத்திற்குப் போனவர்கள் உள்ளே வந்து விட்டனர். அவர்களைக் கண்டவுடன் வாலிபன் ஒரு குழந்தையாக மாறிவிட்டான்.
குழந்தையைப் பார்த்த அவர்களுக்குத் திக் என்றாகிவிட்டது. ரிஷி எவனாவது வீட்டுக்கு வந்து, ஏடா கூடமாக நடந்து, ரிஷிப் பிண்டம் ராத்தங்காது என்கிற மாதிரி குழந்தை வந்து விட்டதோ என்று ஏதேதோ கற்பனை செய்து, குழந்தை ஏது என்று கவுரியைக் கேட்டார்கள். வானுலகத்தில் இருந்து சிவதூதன் வந்து குழந்தையைக் கொடுத்துக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு வெளியே போயிருக்கிறான் என்று பொய் சொன்னாள் கவுரி! கடவுள் பக்தர்கள் சமயத்திற்குத் தக்கமாதிரிப் பொய்களைக் கூறுவது பக்திக்கு அடையாளம் ஆயிற்றே!
ஆனாலும் கவுரியின் மாமியார்க்காரி ஏற்றுக் கொள்ளவில்லை. சிவனையே நினைத்து அவன்மீது பக்தியாக, சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு எலும்பு கடிக்கும் சிவனைக் கும்பிட்டுக் கொண்டு, வைஷ்ணவத்திற்கே அபச்சாரம் செய்யும் நீ என் ஆத்துக்கு வேண்டாம், வெளியே போ என்று துரத்தி விட்டார்கள். கட்டியவன் ஒன்றுமே சொல்லாமல் இருக்கவே, கவுரிக்கு வெறுத்துப் போய் விட்டது. பிச்சைக்காரப் பார்ப்பானால் தனக்கு நேர்ந்த நிலையை எண்ணி வருந்துவதா, ஏதோ ஒரு குழந்தையைச் சுமக்க வேண்டியதாகி விட்டதே என நொந்து கொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள். அந்த நேரத்தில் தந்தை சொல்லிக் கொடுத்த பராசக்தி மந்திரத்தை உச்சரித்தாள். அவ்வளவுதான்.
கையிலிருந்த குழந்தையைக் காணோம். நான்குபக்கமும் குழந்தையைத் தேடியவள், தலையைத் தூக்கி மேலே பார்த்தாள். அங்கே, வானில் மாட்டின் மேல் இரண்டு பேர் ஏறிக் கொண்டு அந்தரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். பரமசிவன் தன் பார்யாளுடன் காட்சி தந்தார். கவுரி மந்திரத்தைத் தொடர்ந்து உச்சாடனம் செய்து கொண்டே இருந்தாள். மனம் மகிழ்ந்த பராசக்தியான பார்வதி தன் கணவனிடம் சொன்னாள். அவனும் கவுரியைப் பார்வதி மாதிரி உரு மாற்றி மாட்டில் ஏற்றிக் கொண்டு மறைந்து போனான் - என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது!

அரியைத் தாழ்த்தி அரனை உயர்த்திக் கதை எழுதிப் பரப்பிவிட்டு, அரியும் சிவனும் ஒன்று, இதை அறியாதவன் வாயில் மண்ணு என்று பசப்பிக் கொண்டு இருக்கும் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது?


------------------செங்கோ அவர்கள் "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

passerby said...

நீங்கள் ஒருதலைபப்டமாக எழுதியிருக்கிறீர்கள்.

அயனைத் தாழ்த்தி அரியை உயர்த்தி எழுதப்பட்ட கதைகளும் ஏராளம்.

அதை ஒன்றை எடுத்துப் போடலாம்தானே?

அக்காலத்தில் இசுலாம், கிருத்தவம் போன்ற மதங்கள் இந்தியாவில் நுழைவில்லை. த்மிழக்த்தில் அவர்கள் யாரென்று எவருக்கும் தெரியாது.

இந்து மதம் மட்டுமே இருந்தது. என்ன செய்வார்கள்?

யாராவது ஒருவரைவிட தான் உயர்ந்தவன் என்று சொல்லி தன்னத்தான் மகிழ்வித்துக்கொள்வது மக்களின் அடிப்படை இயல்பு.

அதன்படி, இந்து மதத்தின் இருபிரிவுகளும் ஒருவரைவிட மற்றொருவர் உயர்ந்தவர் என சண்டைபோட்டுக்கொண்டார்கள். அப்போது இப்படிப்பட்ட கதைகள் எழுதப்பட்டு, தங்கள் தொண்டர்கூட்டத்துக்கு ‘கிளுகிளுப்பு’ ஏற்றி விடப்பட்டது.

தற்போது மற்றவிரு பெரிய மதங்களும் தமிழ்நாட்டில் சக்கைப் போடு போட்டு வருவதால், இந்துமதத்தின் இந்த சண்டையோய்ந்து, மற்றயிருவருடனும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இந்த இந்துமத இருபிரிவுகள் தங்களுக்குள் எந்த கொள்கைப்பிளவும் இல்லை என சாதிக்கிறார்கள். அஃதாவது, அரியும் சிவனும் ஒன்று; இயேசுவும் அல்லவும் வேறு என்பதாகும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி