Search This Blog
19.8.09
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்!
அவதிப்படும் ஈழத்தமிழர்களுக்கு அவசர உதவிகளைச் செய்ய
இலங்கை அரசை வலியுறுத்துமாறு கலைஞர் எழுதிய கடிதம்
காலத்தால் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கையே!
இதில் அரசியல் வேண்டாம்! அரசு மூலமாக அழுத்தம் கொடுத்தால்தான் காரியங்கள் நடக்கும்
இலங்கையில் ஏதிலிகள் (அகதிகள்) முகாம்களில் அவதிப்படும் ஈழத் தமிழர் களுக்கு உடனடியாக செய்யப்பட வேண்டிய உதவிகள் குறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நிலையில் தமிழ்நாடு அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலமாகத் தான் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய இயலும் என்றும் இதில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்றும் அறிக்கையில் கேட்டுக் கொண் டுள்ளார்.
நமது துணை முதல்வர் டாக்டர் மு.க.ஸ்டாலின் புதுடில்லியில் நடைபெற்ற முதலமைச்-சர்கள் மாநாட்டில் தமிழக அரசின் முதல் அமைச்சர் சார்பில் கலந்து கொள்ளச் சென்றபோது, அவரிடம் நமது முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று ஈழத்தமிழர்களின் இன்னல்களைக் களைய, அவர்கள் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதை உறுதி செய்ய, இந்திய (மத்திய) அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்தம் துயர் துடைப்புக்கு உடனடியாகக் காலதாமதம் செய்யாமல் வழிவகை காணவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி நேரில் கொடுத்து இதுபற்றி வற்புறுத்தச் செய்துள்ளது மிகவும் ஆறுதல் அளிக்கக்கூடியது.
முதல் அமைச்சர் கடிதம்
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் நிலைமையை மேம்படுத்துவதற்காக தமிழகஅரசும் இந்திய அரசும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றன. போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள், இலங்கையில் பல்வேறு இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறைந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், போதிய மருத்துவ வசதிகள் இன்றி, அவதிப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. சமீபத்தில் அங்கு பெய்துள்ள மழையால் அந்த முகாம்களில் தண்ணீர் புகுந்துள்ளதால், தமிழ்க் குடும்பங்களில் பிரச்சினைகளும், துயரமும் அதிகரித்துள்ளன.
இதற்காக தமிழக அரசு அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, ஆடைகள், பாத்திரங்கள், செருப்புகள் உள்ளிட்ட ரூ.38.83 கோடி மதிப்புள்ள பல்வேறு பொருள்களை கப்பல்களில் நான்குமுறை அனுப்பி வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 80 ஆயிரம் குடும்பங்க-ளுக்குத் தேவையான பொருள்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஈழத் தமிழர்களுக்காக வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் கப்பலில் கொடுத்தனுப்பிய பொருள்கள் இலங்கைத் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக இலங்கை அரசுக்கு, செலுத்தப்பட வேண்டிய கூடுதல் தொகை ஏதேனும் இருந்தால், அதனை செலுத்துவதற்கும் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆயினும் இது தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது பற்றி தெளிவாக தகவல் ஏதும் தெரியவில்லை.
தமிழக அரசு கடந்த வாரத்தில், ஈழத் தமிழ் ஏதிலிகளுக்காக அனுப்பி வைத்த பொருள்களை அங்குள்ள தமிழர்களுக்கு வினியோகிப்பதற்காக இலங்கையில் உள்ள துணைத் தூதர் அதனைப் பெற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.
இலங்கையில் பரிதவித்துவரும் தமிழ் குடும்பங்களின் துயரங்களைப் போக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் நாம் உதவவேண்டும் என்று குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. எனவே மனிதாபிமானஅடிப்படையில், அரசு அளவிலும், அரசி யல் ரீதியாகவும், இலங்கை அரசின் பல்வேறு மட்டங் களுக்கு இந்திய அரசு நெருக்கடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளதாக நான் உணர் கிறேன். இப்பிரச்சினை யில் இந்திய அரசு உடன டியாக நடவடிக்கை எடுக் கும் என நம்புகிறேன் என்று கடிதத்தில் குறிப்-பிட்டுள்ளது காலத்தால் மேற்கொள்ளப்பட்ட தக்க நடவடிக்கையாகும் இது!
பிரதமரின் வாக்குறுதி
இக்கடிதத்தினை துணை முதல்வர் அவர்கள், பிரதமரிடம் நேரில் அளித்ததோடு, நேராகவும் வற்புறுத்தியபின், பிரதமர் அவர்கள் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதும் நமக்கு ஓரளவுக்கு கவலையைப் போக்குவதாக இருக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் முள்வேலிக்குள் ஆடு மாடுகளைவிடக் கேவலமாக அடைத்து வைக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் கூட இல்லா-மல் நடத்தப்படுவதை நேரில் பார்த்த அய்.நா. மன்றத்தின் தலைமை நலவாழ்வு அதிகாரிகூட இது மனித நேயத்திற்கு முரண்பட்ட செயல் என்று தனது கண்டனத்தை சில நாள்களுக்கு முன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அக்கறை
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழர்களை அழைத்து நேரில் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது அமெரிக்க அரசாங்கம் முதன்முறையாக.
அமெரிக்காவும் இப்போது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் தலையிடத் தொடங்கி உள்ளது.
ஜனாதிபதி ஒபாமாவின் அதிகாரிகள் 13.-8-.2009 அன்று அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதும் நம் போன்றவர்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது!
இந்தப் பேச்சுவார்த்தைக்கு தெற்கு ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க வெளிநாட்டு உதவி மந்திரி ராபர்ட் பிளேக் தலைமை தாங்கியுள்ளார். இலங்கைக்கான முன்னாள் தூதர் ஜார்ஜ் மூர் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் 16 அமெரிக்கவாழ் ஈழத் தமிழர் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இலங்கைத் தமிழர்களிடம், அந்நாட்டுத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு கேட்டு அறிந்துள்ளனர்.
அமெரிக்காவை விட இந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு
அமெரிக்க அரசைவிட, பலமடங்கு இந்திய அரசுக்கு இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றும் கடமையும் பொறுப்பும் உண்டு.
அதைத்தான் தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று அனுப்பி வற்புறுத்திய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேண்டாமே அரசியல்!
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புப் பிரச்சினையை தேவையற்ற முறையில் அரசியலாக்காமல் கருமத்திற்குரியவர் கலைஞர், அவர் என்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பார் என்பதை நம்பி, முக்கியமான விடியலைத் தேடுவதில் கவனஞ்செலுத்தாமல் சிலர் இவர்களை விமர்சிக்கும் வேலையில் ஈடுபடுவது சிங்கள வெறித் தனத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ துணை போகிறவர்கள் ஆவார்கள்.
வெற்று ஆரவார முழக்கங்கள், அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கும் அவதூறுகளால் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்பு ஏற்படாது. தமிழக அரசின் இடையறாத வற்புறுத்தல்தான் (ஆக்க ரீதியாக) இந்திய அரசு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்து, ஈழத் தமிழர்களை அவர்தம் சொல்லொணாக் கொடுமை, துயரங்களிலிருந்து விடுபட்டு மான வாழ்வு வாழச் செய்ய இயலும்!
எனவே. இங்குள்ள தமிழர்கள்,- தலைவர்கள் - எது நம் இலக்கு என்பதைத் தெளிவாகப் புரிந்து செயல்படுவார்களாக!
--------------------"விடுதலை" 18-8-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment