Search This Blog
30.8.09
பெரியாரின் போர்க்கருவி - விடுதலை
தந்தை பெரியாரின் போர்க்
கருவியாக விளங்கிய ஏடு - விடுதலை
ஈரோட்டில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தந்தை பெரியார் அவர்-களுடைய போர்க்கருவியாக விளங்கிய ஏடுதான் விடுதலை நாளிதழ் என்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டி விளக்கவுரையாற்றினார்.
ஈரோட்டில் 25.8.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
விடுதலை பவள விழா
விடுதலை பவள விழாவை ஒட்டி மத்திய அரசின் அஞ்சல்துறை சார்பிலே சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு, அதனுடைய தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய விடுதலை பவள விழா நிகழ்ச்சியில் நானும் உங்களோடு பங்கேற்று சில கருத்துகளை, என்னுடைய உணர்வுகளை உங்களிடத்திலே வெளிப்படுத்துவதிலே நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சிடைகிறேன்.
இந்த மகிழ்ச்சியை இந்தப் பெருமையை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக் கூடிய இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய விழா குழுவினருக்கு, குறிப்பாக திராவிடர் கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு _ அதையும் தாண்டி பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் பெருந்தகை அவர்களுக்கு நான் இந்த நேரத்திலே நன்றியைக் காணிக்கையாக்க விரும்புகின்றேன்.
பெரியாரின் போர்க்கருவி விடுதலை
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாடப்பெற்று அவருடைய சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றிருக்கக் கூடிய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய போர்க்கருவியாக விளங்கிய ஏடுதான் விடுதலை என்பதை யாரும் மறுத்திட முடியாது.
அப்படிப்பட்ட விடுதலை ஏடு இன்றைக்குப் பவள விழா காணக் கூடிய வகையில் அதை ஒட்டி பவளவிழா அஞ்சல் உறை வெளியிடப்பட்டு அப்படிப்பட்ட அந்த சிறப்பான நிகழ்ச்சியிலே இன்றைக்கு உங்களோடு பங்கேற்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்றி-ருக்கின்றேன்.
விடுதலை ஏடு தந்தை பெரியாருடைய செல்லப் பிள்ளையாக விடுதலை ஏடு, தந்தை பெரியார் அவர்களுடைய கைத்தடியாக விடுதலை ஏடு, தந்தை பெரியார் அவர்களுடைய போர்வாளாக, விளங்கியிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கின்ற பொழுது நாம் உள்ளபடியே பெருமைப்படுகிறோம்.
ஈரோட்டு குருகுலத்திலே பயின்றவர் கலைஞர்
தந்தை பெரியார் அவர்களையும், விடுதலை ஏட்டினையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.
தந்தை பெரியாருடைய வாழ்விலே பிணைந்து, இணைந்த ஒரு மிகப்பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக் கூடிய ஏடுதான் விடுதலை ஏடாக அமைந்திருக்கிறது.
பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய தளபதியாக இருந்தவர். அதே போல் தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாருடைய பல்கலைக் கழகத்தில் குறிப்பாக ஈரோட்டு குருகுலத்திலேதான் பயின்றவர் என்பதை அவரே பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள்.
திராவிட இயக்கத்தால் பல இதழ்கள் வளர்ந்திருக்கின்றன. அதே போல பல்வேறு இதழ்களால் திராவிட இயக்கங்களும் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
அந்தக் காலத்தில் இருந்த பத்திரிகைகள்
தென்னிந்திய நல உரிமைச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் அன்றைக்கு இருந்த பத்திரிகைகள்.
திராவிடன் என்கிற ஒரு தமிழ் ஏடு; அதே போல ஆந்திர பிரகாசினி என்கிற தெலுங்கு ஏடு ஜஸ்டிஸ் என்கிற ஆங்கில ஏடு, இந்த மூன்று பத்திரிகைகள் அன்றைக்கு இருந்திருக்கின்றன.
அதிலே குறிப்பாக திராவிடன் ஏட்டைப் பொறுத்த வரையிலே 1916 முதல் 1931ஆம் ஆண்டு வரையிலே ஏறக்குறைய 16 ஆண்டுகாலம் அன்றைக்கு மக்களிடத்திலே ஓர் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஏடாக அந்த ஏடு விளங்கியிருக்கிறது.
ஜஸ்டிஸ் ஏடு-ஜஸ்டிஸ் கட்சி
ஜஸ்டிஸ் என்கிற அந்த ஏட்டைப் பொறுத்த வரையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அந்த ஆங்கில ஏடு அன்றைக்கு மக்களிடத்திலே ஒரு சிறப்புக்குரிய செல்வாக்கைப் பெற்று ஒரு மிகப்பெரிய வகையிலே தங்களுடைய கடமையை நிறைவேற்றிக்கொண்டிருந்தது.
ஆக, மக்களிடத்திலே ஒரு சிறப்பான செல்வாக்கைப் பெற்ற காரணத்தால் அந்த ஏட்டினுடைய பெயரையே கட்சிக்குப் பெயராக வைத்து ஜஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக்கட்சி என்றும் அன்றைக்கு எல்லோராலும் அழைக்கப்பட்டது.
இவைகள் எல்லாம் வரலாற்றிலே இடம் பெற்றிருக்கக் கூடிய செய்திகளாகும்.
நான் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களாக தமிழ்நாட்டிலே இருந்தவர்களில் தந்தை பெரியார் அவர்களும் ஒருவராக இருந்திருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி 1925இலே சுயமரியாதை இயக்கத்தைத் கண்டார்கள்.
ஏடுகள் நிலைத்து நிற்கமுடியாக்காலம்
சுயமரியாதை இயக்கத்தை கண்டதற்குப் பின்னால் அந்த இயக்கத்தினுடைய கொள்கைகளை மக்களிடத்திலே பரப்புவதற்காக குடிஅரசு என்கிற வார இதழை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கினார்கள்.
அந்தக் காலத்திலே பிராமணர்களுக்கு எதிராக எழுதக் கூடிய எந்த ஏடாக இருந்தாலும் அந்த ஏடுகளைத் தொடர்ந்து நடத்திட முடியவில்லை. எவ்வளவு வேகமாக நம்முடைய ஏடுகள் அன்றைக்குத் தொடங்கப்பட்டிருந்தாலும், அந்த ஏடுகள் நிலைத்து நிற்கக் கூடிய நிலையை நாம் பெற்றிருக்கவில்லை.
நீதிக்கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து
அதனால்தான் அன்றைக்கு விடுதலை ஏட்டைத் தொடங்கியிருக்கின்றார்கள். அப்படித் தொடங்-கப்பட்ட விடுதலை ஏடு இன்றைக்கு கம்பீரமாக 74 ஆண்டுகளை முடித்து 75ஆம் ஆண்டிலே அடி எடுத்து வைத்து இன்றைக்குப் பவள விழா காணக் கூடிய ஒரு மிகப்பெரிய சிறப்பை இன்றைக்கு இந்த விடுதலை ஏடு பெற்றிருக்கிறது.
1935லே நீதிக்கட்சி-யினுடைய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்சிக்கென்று ஒரு அதிகார பூர்வ ஏடாக விடுதலை ஏட்டை தந்தை பெரியாரிடத்திலே அன்றைக்கு ஒப்படைத்தார்கள்.
நீதிக்கட்சியாக இருந்தாலும் சரி, சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, அதனுடைய கொள்கைகளை எல்லாம் பரப்பக்கூடிய ஒரு நாளிதழாக விடுதலை விளங்கி 75 ஆண்டு காலத்தை தொட்டு இன்றைக்குப் பவள விழா காணக்கூடிய வகையிலே கம்பீரமாக தன்னுடைய நடையை இன்றைக்கு மக்களிடத்திலே போட்டுக் கொண்டிருக்கிறது.
திராவிட இதழ்களின் பொற்காலம்
நான் இன்னொன்-றையும் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். 1942ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழை அன்றைக்கு தொடங்கினார்கள்.
திராவிட இயக்கத்தின் சார்பிலே அந்த காலக்கட்டத்தில் ஏராளமான ஏடுகள் அப்பொழுது தொடங்கப்பட்டிருக்கின்றன. 1942 முதல் 1962வரை திராவிட இதழ்களுடைய பொற்காலம் என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன்.
1942க்குப் பிறகு திராவிட இயக்கத்தினுடைய முன்னணித் தலைவர்கள் அன்றைக்கு இதழ்களினுடைய ஆசிரியராக இருந்திருக்கின்றார்கள்.
விடுதலை பவள விழா கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் அதைப் பற்றி நான் நினைவுகூர்வது என்னுடைய கடமையாகக் கருதுகின்றேன்.
குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை போன்ற பத்திரிகைகளுக்கு அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் ஆசிரியராக இருந்திருக்கின்றார்கள்.
அண்ணா-கலைஞர் வழி நடத்தினர்
அதே போல நம்நாடு, திராவிட நாடு, காஞ்சி போன்ற பத்திரிகைகளுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதை வழிநடத்தியிருக்கின்றார்கள்.
அதே போல மறவன் மடல், முரசொலி, முத்தாரம், மாணவர் நேசன், போன்ற பத்திரிகைகளைத் தொடங்கி அதற்கு ஆசிரியராக இருந்து வழி நடத்தியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
புதுவாழ்வு என்கிற பத்திரிகைக்கு கலைஞர் அவர்கள் ஆசிரியராக இருந்து அந்த பத்திரிகையை பேராசிரியர் அவர்கள் வழி நடத்தியிருக்கின்றார்கள்.
அதே போல மன்றம் என்ற ஒரு பத்திரிகையை நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அன்றைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதை அவர்கள் வழி நடத்திக்காட்டிருக்கின்றார்கள்.
ஏன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் குயில் என்கிற பத்திரிகையையும், அதே போல கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தென்றல் என்ற அந்த பத்திரிகையையும் கே.ஏ.மதியழகன், தென்னகம் என்ற அந்த பத்திரிகையையும் அன்றைக்கு ஆசிரியராகப் பொறுப்பில் இருந்து அவைகளை எல்லாம் வழி நடத்திக் காட்டியிருக்கின்றார்கள்.
விடுதலையின் ஆசிரியர்கள்
நான் இன்னொரு செய்தியைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். இன்றைக்கு பவள விழா காணக்கூடிய விடுதலை இதழைப் பொறுத்த வரையிலே இதனுடைய அதிகாரபூர்வ ஆசிரியர்களாக இருந்திருக்கக் கூடியவர்களின் பட்டியலைப் பார்த்தோம் என்று சொன்னால், டி.ஏ.வி.நாதன், பண்டித எஸ்.முத்துச்சாமி, பொன்னம்பலனார், கரிவரதசாமி அவர்கள் , கே.ஏ.மணி _ அன்னை மணியம்மையாருடைய இயற்பெயர் அந்த பெயர். அதற்குப் பிறகு திருமணத்திற்குப் பின் ஈ.வெ.ரா மணியம்மையார் அவர்கள்; அதற்குப் பிறகு இன்றைக்கு விடுதலைக்கு 75ஆம் ஆண்டு பவள விழாவை எழுச்சியோடு கொண்டாடுகின்றாரே நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அவர்கள்.
அன்றைக்கு விடுதலை இதழின் விலை...
அதே விடுதலையினுடைய பொறுப்பாசிரியராக இருந்து இந்த பத்திரிகையை நடத்தியிருக்கக் கூடியவர்கள். சி.என்.அண்ணாதுரை என்கிற நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள், சா.குருசாமி, சாமி.சிதம்பரனார், ஏன், பொறுப்பாசிரியராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் கூட இருந்திருக்கின்றார்.
1935ஆம் ஆண்டு விடுதலை இதழ் வாரத்திற்கு இருமுறையாக வந்து கொண்டிருந்தது.
விடுதலையின் விலை எவ்வளவு என்று கேட்டால் அரையணா. அதற்குப் பிறகு 1937ஆம் ஆண்டு நாளேடாக வரத்தொடங்கியதற்குப் பிறகு காலணா.
ஒரு ரூபாயிலே 64 இல் ஒரு பங்குதான் காலணா என்பதாகும். ஆக அந்த நிலையிலே வந்து கொண்டிருந்த ஒரு பத்திரிகைதான் ஒரு ஏடுதான் இன்றைக்குப் பவள விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். எவ்வளவுதான் நட்டம் வந்தாலும், அதைப்பற்றிச் கிஞ்சித்தும் கவலைப்படாமல் லாப நோக்கத்தை கருதாமல் கொள்கையிலே எந்த லாபம் பெற்றிருக்கிறோம்? லட்சியத்தில் எந்த லாபம் பெற்றிருக்கிறோம் என்ற உணர்வோடு நடத்தக் கூடிய ஒரு பத்திரிகையாக இன்றைக்கு விடுதலை ஏடு விளங்கியிருக்கிறது என்று சொன்னால், அந்த ஏட்டினுடைய பவளவிழாவிலே இன்றைக்கு நாமெல்லாம் பெருமையோடு பங்கேற்றிருக்கின்றோம்.
அஞ்சல் உறை பற்றி ஆசிரியர்
இங்கே அஞ்சல் உறையைப் பற்றி நம்முடைய ஆசிரியர் அவர்கள் பேசுகிற பொழுது குறிப்பிட்டுச் சுருக்கமாகச் சொன்னார்.
இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற அந்த அஞ்சலுறையில் வெளியிடப்பட்டிருக்கின்ற அந்த வாசகங்களைக் கூட அவர் படித்துக் காட்டினார்.
-------------------தொடரும் ....."விடுதலை" 28-8-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment