கெட்ட ஆவியும் - ஒருமைப்பாடும்!
நம் நாட்டில் எதில் ஒருமைப்பாடு இருக்கிறதோ இல்லையோ, மூட நம்பிக்கையில், மதவெறியில் ஒருமைப்பாடு கொடிகட்டிப் பறக்கிறது!
காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை இந்த தேசத்தின் மூட நம்பிக்கையால் ஒரு மதத்தோடு இன்னொரு மதம் போட்டியிட்டு விளையாடி மக்களின் வாழ்க்கையை பலி பீடமாக்கி வருவதை அன்றாடச் செய்திகள் அறிவித்துக் கொண்டேதான் இருக்கின்றன!
சடங்குகளும், மூட நம்பிக்கைகளும் எங்களுக்கே சொந்தம்; ஏகபோகம் என்று ஹிந்துத்துவாவாதிகள் மார் தட்டிட முடியாது இனி! இல்லை, இல்லை அதிலும் உங்களோடு போட்டியிடத் தவறமாட்டோம் என்று போட்டிக் களத்தில் நிற்க காஷ்மீரில் உள்ள முஸ்லிம் தலைவர்களும் முன்வந்துள்ளது மிகவும் பெருமைப்படக்கூடிய(?) செய்தியாக இன்று ஒரு செய்தி வந்துள்ளது!
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் இந்த மூட நம்பிக்கையினால்_ பன்றிக் காய்ச்சல் பயத்தைவிட பயங்கரமாக இதில் ஆடிப் போய் இருக்கிறார்களாம்!
காரணம், சிறீநகரில் நடந்த பாலியல் வன்புணர்ச்சி முறைகேடுகள் பிரச்சினையில் தம் பெயர் உள்ளதோ என்ற பயம் முன்பு; இப்போது அதைவிடப் பெருங்குழப்பம், அங்கு 37 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட (கடந்த ஆண்டில்) புதியக் கட்டடத்தினை திறந்து வைத்த பின்னர், முதல் கூட்டத்தில் பேசிய குலாம்நபி ஆசாத் முதலமைச்சர் பதவியை இழந்தார்;
(ஓராண்டு கழித்துத்தான்) இரண்டாவது சட்டசபைத் தொடரில் பேசிய புதிய முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு எல்லாம் முக்கிய காரணம் என்னவென்று கண்டுபிடித்திருக்கிறார்களாம்!
கெட்ட ஆவி அங்கே உலவிக் கொண்டு உள்ளதுதானாம்! எனனே அரிய கண்டுபிடிப்பு _ அதுவும் இந்த 21 ஆம் நூற்றாண்டில்!
அந்த கெட்ட ஆவியை விரட்டிட விடுமுறை நாளில் சில மதக் குருக்களை சட்டப்பேரவைக்கு அழைத்து வந்து முக்கிய நபர்கள் பங்கேற்ற சிறப்பு பூஜையெல்லாம் நடத்தினார்களாம்.
இதோடு விட்டதா கெட்ட ஆவிப் பிரச்சினை? அம்மாநில தலைமைச் செயலாளருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டபோது அங்கே ஏற்கெனவே உயிரிழந்த ஒரு இளைஞனின் ஆவி சுற்றிச் சுற்றி வருகிறது என்று கூறி அனைத்து மதக் குருக்களையும் அழைத்து வழிபாடு நடத்தினார்களாம்! அதன் பின்னரே அவர் குடி புகுந்தாராம்! அந்தப் பெரிய பதவியாளர் அய்.ஏ.எஸ்.!
2008 ஆம் ஆண்டு குலாம்நபி ஆசாத் மாநில முதலமைச்சரானபோது, புகழ் வாய்ந்த தால் ஏரியைப் பார்த்தபடி அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தை, பங்களாவை 15 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துக் குடியேறினாராம்! ஆனால், அதே ஆண்டு ஜூலையில் பதவி இழந்துவிட்டார்!
அங்கும் கெட்ட ஆவி முதலமைச்சர்களுடனேயே குடியேறி விட்டதோ!
என்னே கொடுமை!
நபிகள் நாயகம் வாழ்வில் அவரது உறவினர் ஒருவர் மறைந்தபோது, ஏற்பட்ட கிரகணம்பற்றி, வான மண்டலம் துக்கம் அனுசரிக்கிறது இந்த இறப்புக்காக என்று ஒரு சிலர் நபிகள் நாயகத்திடம் சொன்னபோது, (கூட இருந்தவர்கள் இப்படியெல்லாம் பெரிய தலைவர்களுக்கு அய்ஸ் வைப்பது அப்போதே இருந்ததுபோலும்) உடனே இடைமறித்து, பெருமானார், அதெல்லாம் தவறான மூட நம்பிக்கை அதற்கும் இந்த இறப்புக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது; கிரகணம் இயற்கை நிகழ்வு என்று கூறி அவர்களைத் திருத்தினாராம்! இதை மறைந்த ஏ.கே.ஏ. அப்துல் சமது அவர்களே சென்னையில் சில ஆண்டுகளுக்குமுன்பு ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்!
என்றாலும், சிலர் பிழைக்க, மத குருமார்கள் சுரண்ட, மக்களுக்கு இப்படி மூட நம்பிக்கை இருந்தால்தானே லாபகரமாக இருக்கும்?
ஏன் இன்னும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் அங்கே படையெடுக்கவில்லையா?
காஷ்மீரில் பண்டிதர்களுக்கா பஞ்சம்?
வாஸ்து சாஸ்திரம் பார்க்காமல் அந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு விட்டதாக இருப்பதால் ஏற்பட்ட தோஷம்தான் காரணமாக இருக்கும் என்று புரூடா விடக் கூடியவர்கள் இன்னும் போகவில்லையா?
கழகப் பயிற்சி வகுப்பில் மாணவர் ஒருவர், மதங்கள் பற்றி பாடம் எடுத்த ஒருவரிடம், கேள்வி கேட்டார்.
பரிசுத்த ஆவி என்கிறீர்களே, அதற்கும், வெறும் ஆவிக்கும் என்ன வித்தியாசம்? என்று.
அந்த ஆசிரியர் சொன்னார்: வெறும் ஆவியில் இட்லி, புட்டு ஆகியவை வேக வைக்க முடியும்; பரிசுத்த ஆவியில் அதைச் செய்ய முடியாது என்று பதில் கூறினார்!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேய் விரட்டல், பிசாசு விரட்டல், கெட்ட ஆவிகள் விரட்டல் எல்லாம் பிரமாதமாக, மத நல்லிணக்கத்துடன் ஜாம், ஜாம்வென மூடநம்பிக்கை பிசினஸ் நடந்து வருகிறது!
இந்த கெட்ட ஆவியை உண்டாக்கியவர் யார்? சாத்தானா? அப்படியானால் சாத்தான் கடவுளைவிட சக்தி வாய்ந்தவனா? என்றெல்லாம் சு.ம. மாதிரி கேட்டுத் தொலைக்காதீர்! நம்புங்கள் இல்லையேல் நரகம்தான்!.
-----------"அகப்பையார்" அவர்கள் 7-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
2 comments:
சார் உங்கள் பிளாக்கை குரோமில் திறக்கும் போது ஸ்பேம் எச்சறிக்கை வருகிறது. சரிசெய்யவும். காரணமாக webvision.periyar.org.in இந்த முகவரியை காட்டுகிறது.
தாங்கள் மேலே சுட்டியக்காட்டிய குறைகளை சென்னை தோழர் ஒருவர் சரி செய்து கொடுத்துவிட்டார். தமிழ் ஓவியா வலைப்பூ கூகுல் குரோமில் இனி தடங்களின்றி பார்க்கலாம்.
சுட்டிக் காட்டியமைக்கும் மிக்க நன்றி விஜய்
Post a Comment