Search This Blog

31.5.13

கடவுள் , மதத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட முடியும்?

கடவுளும், மதமும் கடைத்தேறப் போவதில்லை 

கடவுள் நம்பிக்கை இனி கரையத்தான் செய்யும். ஏதோ எந்தக் காலத்திலோ இடிக்கும் மின்னலுக்கும் பயந்து கற்பித்துக் கொண்ட கடவுள் மீதான பயம் இந்தக் காலத்தில் காலாவதியான ஒன்றாகும்.

கடவுள் படைப்புக் கொள்கை எல்லாம் பழைய பஞ்சாங்கமாகி விட்டது. டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மதம்  தன் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டு விட்டது.

பைபிளுக்கு விரோதமாக உலகம் உருண்டை என்று சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோ தண்டிக்கப்பட்டார். 360 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகன் போப் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இது அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்

 உயிர் களைப் படைத்தான் கடவுள் என்பதுதான் கடவுள் இருப்பதற்குக் கூறப்பட்ட மகத்தான காரணமாகும்.

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) விஞ்ஞானிகள் உண்டாக்கி உலகை வியக்க வைத்து விட்டனர். மதவாதிகளை வியர்க்கவும் வைத்து விட்டனர்.

நகலாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட போதே அந்தக் குலை நடுக்கம் கடவுள் மத வியாபாரிகள் மத்தியில் தொடங்கி விட்டது.

இது ஒரு புறம் இருந்தாலும் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரைச் சொல்லி நாட்டில் ஓட விடப்படும் மனித ரத்த வெள்ளம் கடவுள், மதங்களின் குரூரத்தை மக்கள் உணரும்படிச் செய்து வருகிறது.

ஈராக்கில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ்புஷ் படைஎடுத்து பல லட்ச மக்களைக் கொன்று குவித்ததற்கு என்ன காரணத்தைச் சொன்னார்? 

கடவுளிடம் அனுமதி பெற்றுத்தான் இந்தப் போரைத் தொடுத்தேன்! என்று சொல்லவில்லையா?

ஈழத்திலே பல லட்சக்கணக்கில் தமிழர்களின் உயிரைக் குடித்த வெறி சிங்கள வெறி மட்டு மல்லவே  மத வெறியும் அல்லவா கூட்டணி சேர்ந்து விட்டது! 

இவ்வளவுக்கும் கருணை, அன்பின் வடிவமான பவுத்த நெறி மதவெறியாகக் கூர் தீட்டப்பட்டு தமிழன் கழுத்துகளுக்கல்லவா அரிவாளாக, கோடரியாக மாற்றுருப் பெற்றது? 

இந்தியாவில் இந்துத்துவா கூட்டம் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு ராம் ராம் என்று உச்சரித்து அல்லவா இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தைத் துவம்சம் செய்தது?

குஜராத் மாநிலத்தில் என்ன நடந்தது? எத்தனை இலட்சம் அப்பாவி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டனர். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட வில்லையா? அந்தக் கருவை உருவி நெருப்பில் தூக்கியெறிந்து குதியாட்டம் போடவில்லையா? இந்தக் கொடியவர்களுக்கு வெறியூட்டி எரி நெருப்பைக் கையில் கொடுத்ததும் இந்து மதம் அல்லவா? இஸ்லாம் நாடுகளில்கூட நாத்திகம் முளைக்கக் காரணம் என்ன?

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் மீதும், மதத்தின்மீதும் மக்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட முடியும்?

அதன் விளைவுதான் உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகி வரும் அறிகுறிகள்!

கடவுள் - மதம் கூட்டணி வன்முறைகளை மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை, ஒழுக்கக் கேட்டையும் அல்லவா ஊட்டி வளர்க்கிறது.

சாமியார்களும் சாமியாரிணிகளும் செய்யும் அட்டகாசம் என்ன?

ஜெகத்குரு என்று சொல்லப்படுபவரே கொலைக் குற்றத்திற்கு ஆளாகி சிறையில் கம்பி எண்ணவில்லையா?

தப்பித் தவறி மதங்களும், கடவுள்களும் நிலைத் திருப்பதற்கு என்ன காரணம்?
இதோ தந்தை பெரியார் சொல்லுகிறார்:

மதங்களுக்குச் சீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமும் அல்லாமல் அவற்றின் உயர்ந்த கொள்கைகளோ, தத்துவங் களோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லி விட முடியாது

(தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் - 1928 நவம்பர் 26,27).

இனி அடுத்த கட்டம் பணமும், பிரச்சாரமும்கூட எடுபடாமல் போகும் நிலைதான்; எவ்வளவு காலத்திற்குத் தான் மக்கள் மயக்கத்திலேயே இருப்பார்கள்?
               ------------------------------"விடுதலை” தலையங்கம் 30-5-2013

29.5.13

கடவுள் நம்பிக்கை குறைகிறது!

கடவுள் நம்பிக்கை குறைகிறது


2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 87 சதவிகி தத்தினர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இப்பொழுது எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு கணக்கெடுப்பு மேற்கொண்ட போது அதில் ஆறு சதவிகிதம் குறைந்து 81 சதவிகிதத்தினரே கடவுள் நம்பிக்கை உள்ள வர்களாக உள்ளனராம்.

இதுபோன்ற கணக்குகள் துல்லியமாக இருக்கின்றனவா என்பது கேள்விக் குறியே! இன்னும் கூடுதலாக நாத்திகர்கள் இருக்கக் கூடும்.

சீனாவில் 14 சதவிகிதத்தினரும், ஜப்பானில் 16 சதவிகிதத்தினரும், செக் குடியரசில் 20 சத விகிதத்தினரும், பிரான்சில் 37 சதவிகிதத் தினரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை பெரும் அளவில் நாத்திகர்களே. அமெரிக்கா விலிருந்து வெளிவரும் நேச்சர் (இயற்கை) என்ற இதழ் உலகம் முழுவதும் உள்ள ஆயிரம் அறிவியல் அறிஞர்களிடம் கடவுள் பற்றிய வினாவைத் தொடுத்திருந்தது.

93 விழுக்காட்டினர் 1999இல் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த தாகவும் 1993ஆம் ஆண்டிலோ அது 85 விழுக்காடு என்று நேச்சர் இதழ் தெரிவித்தது. 1914ஆம் ஆண்டிலே விஞ்ஞானிகள் 72 விழுக் காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தனர்.

                     -----------------------------------------(ராணி 11.7.1999).

ஆண்டுகள் வளர வளர நாத்திகர்களின் எண்ணிக்கையும் வளர்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (5.6.2010) ஒரு தகவலைக் கூறியதுண்டு.

"கடந்த பத்து ஆண்டுகளாக நடந்த ஆய்வில் இவ்வுலகில் 50 முதல் 70 கோடி மக்கள் வரை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
அய்ரோப்பில் நாத்திகம் பரவலாக உள்ளது. அமெரிக்காவில் 2007இல் 5 விழுக்காட்டினரும், 2008 இல் 19 விழுக்காட்டினரும் நாத்திகர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

வியட்நாம் 81, சுவீடன் 46.85, டென்மார்க் 43.80, நார்வே 31.72, ஜப்பான் 64.65; செக் குடியரசு 54.61; பின்லாந்து 26.80, பிரான்சு 43.54, தென் கொரியா 30.52, எஸ்டோனியா 49 விழுக்காடு மக்கள் நாத்திகர்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது (5.6.2010).

அதற்கு இரண்டாண்டுகளுக்குமுன்  இதே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (13.6.2008) முக்கியமானதோர் தகவலை வெளியிட்ட துண்டு. Brainy People Outlive others by 15 years  என்ற தலைப்பில் வெளியான தகவல் அது.

அதிக மூளைத்திறன் கொண்டவர்கள் மற்றவர்களைவிட 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள் என்றது.

அறிவார்ந்த மக்களின் மூளை மிக மெதுவாகவே மூப்பு அடைவதால், அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று இத்தாலி நாட்டு கலாப்ரியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உண்மையிலேயே அவர்களை அறிவாளி களாக்கும் எஸ்.எஸ்.ஏ.டி.எச். என்ற மரபணு வுக்கே தான் நன்றி கூற வேண்டும்.

இன்னொரு தகவல் மிக மிக முக்கியமானது.  உல்ஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் ரிச்சர்ட்லின் தலைமையில் ஆய்வினை மேற் கொண்டவர்கள் அறிவாற்றல் கொண்ட மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்ப தில்லை. அறிவாற்றலுக்கும், நாத்திகத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இனிவரும் காலத்தில் இந்த நிலை தவிர்க்க முடியாதது - கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடையே நிலவும் பக்திகூட சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, கடவுள்மீது அழுத்தமான நம்பிக்கை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பது வெளிப்படை!
                  --------------------------"விடுதலை” தலையங்கம் 29-5-2013

28.5.13

இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது! உலகளவிலும் நாத்திகம் வளர்ச்சி!

இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது
உலகளவிலும் நாத்திகம் வளர்ச்சி! கருத்துக் கணிப்பில் தகவல்
லண்டன், மே 28 - உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக கட வுள் நம்பிக்கை கொண் டிருக்கிறார்கள் என்று கடந்த 2005-ஆம் ஆண்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது.
அப்போது இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்ப தாக தெரியவந்தது.

குறைந்தது

8 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் நம்பிக்கை பற்றி சமீபத்தில் உலகம் முழுவதும் மீண் டும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது. 51 ஆயிரத்து 927 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. லண் டனில் நேற்று இந்த கருத்துக் கணிப்பு முடி வுகள் வெளியிடப்பட்டன.
இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியர் களிடம் கடவுள் நம்பிக்கை குறைந்து விட் டது உறுதியாகி உள்ளது. 2005-ஆம் ஆண்டு கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது 6 சதவிகித இந் தியர்கள் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

சீனா முதலிடம்

ஒட்டு மொத்த இந்தியாவில் கணக்கிட்டால் 81 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுட னும் 13 சதவிகிதம் பேர் மத ஈடுபாடு இல்லாம லும், 3 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இல் லாதவர்களாகவும் உள் ளனர். நமது அண்டை நாடான சீனா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளது. அங்கு 48 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

சீனாவில் 14 சதவிகித மக்களே கடவுள் நம்பிக் கையுடன் உள்ளனர். அது போல ஜப்பானில் 16 சதவிகித மக்களே கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் செக் குடியரசு 20 சதவி கிதம், பிரான்சு 37 சதவிகிதம், தென் கொரியா 52 சதவிகிதம் நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

பாகிஸ்தான்

உலக அளவில் பாகிஸ்தானில் கடவுள் நம்பிக்கையுடன் அதிக மக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் தற்போது 6 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இருப்பவர் கள் பட்டியலில் சேர்ந் துள்ளனர்.

ஆனாலும் நாத்திக அமைப்புகளும் முஸ்லிம் நாடுகளில் தோன்றிட ஆரம்பித்துள்ளன.
   -------------------"விடுதலை”28-5-2013

27.5.13

ரஷிய யாத்திரையில் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை! - பெரியார்

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்
தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும் என்று தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு ஐரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என் கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.

நாம் இந்த 7, 8 வருஷ காலமாகவே படிப்படியாய் முன்னேறி வந்திருக் கின்றோம் என்பதை நமது இயக்க வேலையை முதலில் இருந்து கவனித்து வந்திருப்பவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.

சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பாக நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் எது மக்களுக்கு நன்மையானது என்று கருதினாலும் அதையெல்லாம் அரசாங்கத்தைக் கொண்டே செய்யச் சொல்லி கெஞ்சுவோம். அதற்கு பார்ப்பனர்களையே தரகர்களாய் வைத்து அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் திரிவோம், அவர்கள் சொல்லுவதையே நன்மை என்று கருதுவோம். அன்றியும் அது அரசாங்கம் வேறு பார்ப்பனர்கள்வேறு என்று சொல்ல முடியாத காலமாய் இருந்தது. அந்தக் காலத்தில் பெரும் பணக்காரன், ஜமீன்தாரன், மீராசுதாரன் என்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் காலடியில்தான் கிடந்தார்கள். அதிலிருந்து ஒரு பெரும் புரட்சி உண்டாயிற்று. அது தான் ஜஸ்டிஸ் கட்சி புரட்சி என்பது. அது தோன்றிய பின்பு பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும் பார்ப்பன ரல்லாத படித்தவர்கள் என்பவர்களுக்கும் சற்று செல்வாக்கு தோன்றிற்று. பார்ப்பனர் களையே நம்பி இருந்த அரசாங்கமானது பார்ப்பனரல்லாதாரைத் தட்டிக் கொடுத்து அவர்கள் ஆதரவில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் பயனாய் பார்ப்பனர்கள் அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுக்கக்கருதி பார்ப்பன ரல்லாத பாமர ஜனங்களை வசியம் செய்யத்தக்க சில புதிய சூக்ஷிகளைக் கையாள ஆரம்பித்தார்கள். அதன் பயனாய் பார்ப்பனர்கள் தன்மை இன்னது என்றும் அரசாங்கத்தின் தன்மை இன்னது என்றும் ஓரளவுக்கு வெளியாயிற்று. பிறகு அவை ஒரு புரட்சியாய் ஆயிற்று. அந்த இரண்டுவித கிளர்ச்சியும் சுயநலங்களையே அதாவது முன்னணியிலிருந்து கிளர்ச்சி செய்பவர்கள் அதிகாரமும் பதவியும் பெருவழியும் கவலை கொண்ட பாமர மக்களை ஆயுதமாக வைத்து போர் நடத்தியதால் இரண்டும் பலமற்று ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுவதும் மறுதடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதுமாக நிலையில்லாமல் இருந்து வந்தது. இந்த மாதிரியில் ஜஸ்டிஸ் கட்சி என்பதும் ஒரு தடவை நல்ல தோல்வியடைய வேண்டி ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பம் நமக்கு நல்ல சந்தர்ப்பமாய் கிடைத்ததால் நாம் சமூக வாழ்க்கையில் ஒரு கிளர்ச்சி செய்ய முடிந்தது. இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காத பக்ஷம் நமது வேலைக்கு அவ்வளவு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.

ஏனெனில் பார்ப்பனரல்லாதார்கள் ஜாதி வித்தியாசங்களையும் அதற்கு ஆதாரமான மத சம்பிரதாயங்களைப் பற்றியும் இவ்வளவு தூரம் கிளர்ச்சி செய்ய சம்மதித்து இருக்கவேமாட்டார்கள். பார்ப்பனரல்லாதாரியக்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்து மறுபடியும் அது வெற்றியாவதற் குள் சுமார் 4 வருஷ காலத்துக்குள் அபரிமிதமான காரியங்களைச் செய்திருக் கிறோம். இதை சமூக சம்பந்தமான ஒரு புரட்சி என்றே சொல்லவேண்டும்.

இப்பொழுது மேல்கண்ட அரசியல் கிளர்ச்சியும் சமூகக் கிளர்ச்சியும் நடத்தப்பட்டது போலவே தான் இப்போது பொருளாதாரத் துறையிலும் ஒரு கிளர்ச்சி செய்ததாக வேண்டியிருக்கின்றது. இது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதைப் பற்றி நாம் கலலைப்பட வேண்டியதில்லை. இது நியாயமா? அநியாயமா? அல்லது அவசியமா? அவசியமற்றதா? என்று தான் பார்க்கவேண்டும். அரசியலைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ சமூகத்தில் ஜாதி மதங்களைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ அவைகள் எல்லாம் இன்றைய பொருளாதார இயலிலும் இருப்பதைக் காங்கின்றோம். எப்படி அரசாங்கம் என்பதற்காக சில மக்களின் உழைப்பு வீணாகின்றதோ, எப்படி மேல் ஜாதியான் என்பதற்காக சில ஜனங்கள் இழிவு படுத்தப்படுகின்றார்களோ அதுபோலவே தான் பணக்காரன் முதலாளி என்பதற்காக பல மக்களின் உழைப்பு வீணாக்கப்படுவதுடன் இழிவு படுத்த வும் படுகிறார்கள். இந்தக் காரணங்களால் பொருளாதார இயலில் ஒரு பெரும் கிளர்ச்சி செய்யவேண்டியது இப்போது அவசியமாகின்றது. இது இன்று நமது நாட்டுக்கு மாத்திரம் அவசியம் என்று காணப்பட்டதாக நினைக் காதீர்கள். இன்று உலகில் எங்கும் இவ்வுணர்ச்சி பரவி தாண்டவமாடுகின்றது.

ரஷியா தேசத்தில் இவ்வுணர்ச்சி தோன்றி பெரும் புரட்சியாக மாறி வெற்றி பெற்று இன்று காரியத்தில் நடைபெற்றும் வருகின்றது. ரஷியாவில் அரசியல் ஆதிக்கமோ ஜாதிமத ஆதிக்கமோ செல்வவான் ஆதிக்கமோ ஒன்றுமே கிடையாது. அந்த நாட்டிலுள்ள வாலிபர்களுக்கு அரசியல் என்றால் என்ன மதம் என்றால் என்ன ஏழை பணக்காரன் என்றால் என்ன என்கின்றவைகளுக்கு அருத்தமே தெரியாது.

மனிதரில், வாழ்க்கையில், கவலையில், பொருப்பில் ஒருவருக் கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் அறியார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இங்கும் ஏற்படுவதில் யாருக்கும் எவ்வித கஷ்டமோ நஷ்டமோ இருக்காது. பணக்காரனென்றும் மேல் ஜாதிக்காரன் என்றும் அரசன் என்றும் சொல்லிக் கொள்ளப்படுவதில் ஒருவித செயர்க்கை திருப்தி ஏற்படுவதைத் தவிர இவற்றின் பயன்களால் இவர்கள் கவலையற்று, அதிருப்தியற்று சாந்தியாய் மனச் சமாதானமாயிருக்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

உலகம் தோன்றிய காலம்தொட்டு இதுவரை எத்தனையோ பேர் சாதாரண மனுஷர்களாகவும் ரிஷிகளாகவும், மகான்களாகவும் அவதார புருஷர்களாகவும் தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகவும் ஏற்பட்டு மக்கள் சமூக நன்மைக்காக என்று எவ்வளவோ காரியங்கள் செய்தாகி விட்டது. இவற்றால் வாழ்வில் மனிதனுக்கு எவ்வித சௌகரியமோ உயர்வோ ஏற்பட்டதாக சொல்வதற்கில்லை. இது மாத்திரமல்லாமல் மனித சமூக நன்மைக்காக, நல்ல வாழ்வுக்காக, முன்னேற்றத்திற்காக என்று எவ்வளவோ மதங்களும் அரசாட்சிகளும் சீர்திருத்தங்களும் தோன்றின. அவைகளும் இன்றை வரை எந்த ஆட்சியிலோ, எந்த மதத்திலோ எந்த சீர்திருத்தத்திலோ ஏதாவது ஒரு காரியம் சாதித்ததாக காணப்படவேயில்லை.

மக்களுக்கு சுக துக்கம் பொது என்றும் ஒருவன் சுகப்படுவதும் ஒருவன் கஷ்டப்படுவதும் இயற்கை என்றும் இவையெல்லாம் கடவுள் செய லென்றும், மாற்றமுடியாதவை என்றும் சொல்லப்பட்டு அந்தப்படியே மக்க ளையும் நம்பச்செய்து சிலர் கஷ்டப்படவும் சிலர் சுகப்படவுமான முறைகள் நிலைநிறுத்தப் பட்டனவே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

இன்றைய தினம் இருந்து வரும் எந்த அரசியலை, எந்த மத இயலை, எந்த செல்வ இயலைக் கொண்டும் மேல்கண்ட அக்கிரமங்களை ஒழித்து விடக்கூடும் என்றோ மக்கள் யாவரையும் சமமாக ஆக்கிவிடக்கூடும் என்றோ நினைப்பது முட்டாள் தனமேயாகும், ஆதலால் ஏதாவதொரு புதிய முறையைக் கொண்டுதான் ஆகவேண்டும். அதைப்பற்றி பிறத்தியார் என்ன சொல்லுவார்கள் என்கின்ற கவலையை சிறிதும் வைக்கக்கூடாது. அது கிளர்ச்சி என்று சொல்லப்பட்டாலும், புரட்சி என்று சொல்லப்பட்டாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. கிளர்ச்சியும் புரட்சியும் உலக இயற்கை, மனித இயற்கை, நடப்பு இயற்கை. கிளர்ச்சியிலும், புரட்சியிலும் பிரிக்க முடியாமல் கலந்து இருக்கிறான் என்பதை ஒவ்வொரு மனிதனின் நடப்பையும், உணர்ச்சியையும் கவனித்துப் பார்த்தால் விளங்கிவிடும் நாம் எவ்வித சுயநலத்தையோ பலாத்காரத்தையோ குறிவைத்து இப்படி பேசவில்லை. ஆனால் மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து சகிக்க முடியாமல் பரிதாபத் தாலேயே தான் இப்படிப் பேசுகிறோம்.

--------------------------------- 28.02.1933 இல் விருதுநகர் அம்மன் கோவில் முன்பு சுயமரியாதை சங்க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய உரை,”குடி அரசு” - சொற்பொழிவு - 12.03.1933

26.5.13

பகுத்தறிவு - பெரியார்
தோழர்களே!
திண்டிவனம் தாலுகா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனேயாவேன்.

அதோடு தாங்கள் அன்பாய் வாசித்தளித்த வரவேற் புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல்லவானாலும், என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும், எனது கொள்கைகளையும், ஆசைகளையும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற்கு இது ஓர் அளவு கருவியாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்தனத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன்.

இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண் களும், பெண்களும் பல ஜாதி பல வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நமது பகுத்தறிவுக்கு விரோதமான கூட்டத்தார்கள், மனித சமூக முன்னேற்றத்துக்குத் தங்கள் சுயநலத்தின் காரணமாக முட்டுக்கட்டையாய் இருக்கும் வகுப்பார்கள் நம்மைப் பற்றியும் நமது இயக்கக் கொள்கைகளைப் பற்றியும் விஷமப் பிரச்சாரம் செய்தும், திரித்தும், பழித்தும் கூறி வந்த இந்த ஊரில் இன்று இவ்வளவு பேர் இங்கு இந்த ஆண்டு விழாவுக்கு கூடி இருப்பதென்றால் எனக்குப் பெரும் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்கின்றது.

பகுத்தறிவு

பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் தலைவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது பேசுவதாய் இருந்தால் பகுத்தறிவு என்பதைப் பற்றி விளக்கிச் சில வார்த்தைகள் பேசுவது பொருத்த முடையதாகுமென்றே கருதுகிறேன்.

பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியையும், சிந்திப்பதின் உணர்ச்சியையும் தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையை பகுத்தறிவு என்றுச் சொல் லலாம். ஆனால் அப்பகுத்தறிவை பெரிதும் மனித னுடைய சிந்திக்கும் தன்மைக்கும், சிந்திப்பதின் கூர்மைக்குமே சொல்லப்படுகின்றது.

உலகில் உள்ள பல கோடி ஜீவராசிகளில் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும் ஒன்று என்பது மக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமாகும். மரம், புல், பூண்டு, செடி, கொடி ஆகியவைகளும் ஜீவ வர்க்கத்தில் சேர்ந்தவைகள் என்பது நவீன ஆராய்ச்சியால், ஆராய்ச்சி நிபுணர்களால் சொல்லப்பட்டு அறிஞர்களுக்கு மெய்ப்பித்தும் காட்டப்பட்டுவிட்டது.

வங்காள மாகாணத்தைச் சேர்ந்தவரும், உலகம் போற்றுபவருமான ரசாயன சாஸ்திரியார் டாக்டர் போஸ் அவர்கள் தாவர வர்க்கங்களுக்கு ஜீவன் (உயிர்) உண்டு என்பதை மெய்பித்துக் காட்டி செடிகளில் ஒரு சிறு கிளையை துண்டித்த போதிலும் அச்செடி துடிதுடிப்பதை ருஜுப்பித்துக் காட்டி இருக்கிறார். மற்றும் மண், கல், மலை ஆகிய அசேதனப் பொருள்கள்கூட வளருவதும், சேதிக்கப்பட்டால் வளர்ச்சி தடைப்படுவதும் முதலிய காரணங்களால் அவைகளின் இயங்குதல்கள் விளங்கு கின்றன.
இப்படிப்பட்ட காரியங்கள் மனிதன் நேரே காண முடியாமலும், மிக மிக மந்த கதியிலும், இயந்திரங்கள் மூலமல்லாமல் அறிய முடியாததாகவும் இருப்பதால் மக்கள் அதை சுலபத்தில் ஒப்புக் கொள்ள முடியாதவர்களாக இருந்து வருகிறார்கள்.

ஆன போதிலும் ஓர் அளவுக்கு அதாவது ஜீவப் பிராணிகள் இன்னின்னது தான் என்று ஒப்புக் கொண்ட அளவுக்கு அதனதனின் இயங்குதலை அறிந்து அதற் கேற்றபடி அவற்றின் அறிவை ஒப்புக் கொள்ளு கிறார்கள். அவ்வறிவின் மேலான தன்மைக்குப் பகுத்தறிவு என்ற பெயர் கொடுத்து அது மனிதனுக்கே உரித்தானது என்றும், அதனாலேயே மனிதன் ஜீவப் பிராணிகளிலெல்லாம்விட உயர்ந்தவன் என்றும் சொல்லுகிறார்கள்.
அறிவின் தன்மையும், அவற்றின் படிகளும் எப்படி இருந்தாலும் பரிணாம வாதக் கொள்கைப்படி (அதாவது ஒன்று மற்றொன்றாக மாறிக் கொண்டிருப்பது) பிரபஞ்சத் தோற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு வஸ்துவின் ஆரம்ப தோற்றமுமே இன்றிருப்பது போன்றல்ல. ஒன்று மற் றொன்றாக மாறி வருவதாலேயே பல்வேறு தோற்றங்கள் காணப்பட்டு நாளடைவில் ஜீவப் பிராணிகள் என்று சொல்லப்படுவனவாக காணப்படுகின்றன.
எப்படி இருந்தபோதிலும் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும், அசேதனமாகவும், தாவரமாகவும், அவசர மாகவும் இருந்த வஸ்துக்களில் இருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கிறானே ஒழிய வேறில்லை.

உலகம் எப்பொழுது உற்பத்தி ஆயிற்று என்பதற்கு எவ்வளவு வருஷக் காலம் தான் ஆயுள் சொல்லுவதாய் இருந்தாலும் பல லட்ச லட்சக்கணக்கான வருஷங் களுக்கு முன்பு அணுக்களாய் அணுக் கிருமிகளாய், இருந்து வந்த பொருள்கள் தான் இன்று மனித ரூபமாய் இருக்கும் (பகுத்தறிவு பெற்ற ஜீவன் என்று சொல்லப்படும்) மனிதனானவன் என்பது அறிஞர்களும், தத்துவ சாஸ்திரிகளும், விஞ்ஞான விற்பன்னர்களும் ஏற்றுக் கொண்ட விஷயமாகும்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று மேம்பட்டது

இது இவ்வாறாக, மனிதன் பகுத்தறிவு உடையவனாவன் என்பதனாலேயே பகுத்தறிவு இல்லாத ஜீவராசிகள் என்பன வற்றைவிட மனிதன் மேம்பட்டவன் என்று சொல்லிவிட முடியாது.

ஜீவராசிகளில் ஊர்வனவற்றில் பாம்புக்கு இல்லாத கால்கள் எப்படி பல்லி ஓணான்,  பாம்பரணை முதலியவை களுக்கு இருக்கின்றனவோ, அதுபோலும் நாய், கழுதை களுக்கு இல்லாத கை சவுகரியங்கள், விரல்கள் முதலியவை எப்படி குரங்கு, தேவாங்கு முதலிய ஜாதிகளுக்கு இருக்கின் றனவோ, அதுபோல் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு அளவு அறிவின் சிந்தனா சக்தி மனிதனுக்கு இருக்கின்றது என்கின்ற அளவு  வித்தியாசம் மாத்திரம்தான் உண்டே தவிர மற்றபடி தனிப்பட்ட மேன்மை ஏதும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில், மனிதனுக்கு இல்லாத பல சக்திகள் விசேஷக் குணங்கள் முதலியவை மற்ற ஜீவராசிகளிடத் தில் இருப்பதையும் காணலாம்.
அதுபோலவே, மற்ற ஜீவராசிகளிடம் இல்லாத சில கெட்ட குணங்களும், பல அசவுகரியங்களும், துன்பங் களும், கவலை களும், திருப்தி அற்ற தன்மைகளும் பகுத்தறி வுடைய மனிதனிடத் தில் இருப்பதையும் காணலாம்.
உதாரணமாக மனித னுடைய ஆசைக்கும், மற்ற ஜீவராசிகளுடைய ஆசைக் கும் எவ்வளவோ வித்தியாச முண்டு.

மனிதனுடைய ஆசை எல்லையற்றது. அவசிய மில்லாதது, வெறும் கற் பனையையும், மூடநம்பிக் கையையும், பொறாமையை யும், பலவீனத்தையும் அஸ் திவாரமாகக் கொண்டது மாகும். தனது தேவைக்கு மேலும் எவ்வளவு இருந் தாலும் தனது பின் சந்ததி யையும், தான் இறந்த பிறகு மோட்ச லோகம் என்பதில் பயன்படவும் வேண்டும் என்கின்ற அவிவேகமான ஆசையாகும்.
உதாரணமாக, நாடு பிடித்து ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதுகிறவனுக்கு எவ்வளவு நாடு இருந்தாலும் உலகமே அவனது ஏக சக்ராதிபத்திய சர்வாதிகாரத் தன்மைக்குக் கீழ் வந்து விட்டாலும்கூட மேல்லோகமும், கீழ்லோகமும் தனது ஆட்சிக்குள் வந்தால் நல்லது என்று முட்டாள்தனமான கற்பனைக்கு அடிமையாகி திருப்தி யற்றவனாகிறான். எவ்வளவு பூமி இருந்தாலும் சமுத்திரப் பரப்பெல்லாம் பூமியாகி அதற்கும் தானே மிராசுதாரனாக இருந்தால் நல்லது என்கின்ற ஆசைக்கு அடிமையாகி குறை பாட்டுக்குக் கட்டுப்பட்டவனாகிறான்.

அதுபோலவே, செல்வம் எவ்வளவுதான் கோடிக் கணக்காக இருந்தாலும்  எண்ணிக்கைக்கு எப்படி ஒரு அளவு கிடையாதோ, அதுபோல் எவ்வளவு பெருகினாலும் மேலும் மேலும் சொத்து சேர வேண்டும், வருவாய் பெருக வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்து விலக முடியாத வனாகி, போதவில்லையே போதவில்லையே என்கின்ற தரித் திரத்துக்கு அடிமை ஆகிறான்.

இந்த குணங்கள் பகுத்தறி வில்லாத ஜீவராசிகள் என்பவைகளிடம் காணக் கிடையாது. தன் பிள்ளைக்குட்டி, பேத்து, பிதுர் ஆகிய பின் சந்ததி களைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய, பகுத்தறிவில்லாத வைகளுக்கு இல்லை. அநேக ஜீவராசிகள் தன் பிள்ளைக் குட்டிகளை கவனிப்பதே இல்லை. அனேக ஜீவராசிகள் தன் பிள்ளை குட்டிகள் தனியே இரை தேடிக் கொள்ளும் பருவம் வந்தவுடன் வெறுத்துத் தள்ளி விடுகின்றன. எவையும் அவைகளைப் பற்றி சதா கவலைப்படுகிறதில்லை.

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவ தில்லை. தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்ப்படுத்து கிறான், வருத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்து கிறான். சோம்பேறியாய் இருந்து, தன் இனத்தின் உழைப் பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும், பயனை அனுபவிக்க ஒரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.
உதாரணமாக நாய், கழுதை, பன்றி என்கின்ற இழிவான மிருகக் கூட்டத்தில் பார்ப்பன ஜாதி, பறை ஜாதி, நாயுடு ஜாதி, முதலி ஜாதி என்கின்ற பிரிவு கிடையாது. ஆனால் மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து இழிவுபடுத்தப்படுகின்றது.

மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான். மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்ளுகிறான். மனிதனை மனிதன் வஞ்சிக்கிறான்.
பகுத்தறிவின் பயன் இதுவாயிருக்கும்போது பகுத்தறிவு இருப்பதாலேயே மேன்மை யானவன் என்று எப்படி சொல்ல முடியும்?

மனிதன் வாழ்க்கை நிலை

பொதுவாகவே, மனித வாழ்க்கையின் தன்மை மிக்க குறைபாடும், கவலையும், அதிருப்தி கொண்டதாகவே இருக்கிறது. இந்த குணம் எல்லா தேசத்திலும், எல்லா மனிதர்களிடையும் அரசன், குடிகள், பணக்காரன், ஏழை-மேல் ஜாதிக்காரன், கீழ் ஜாதிக்காரன், முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதங்களாக, தாரதம்மியங்களாக இல்லாமல் எல்லா மக்களிடமுமே இருந்து வருகின்றது.
அறிவில்லாததால் கஷ்டப்படுகிறான் என்று சொல்லுவதற்கு இல்லாமல் பகுத்தறிவு என்பதும் இருந்தும் மனிதன் ஏன் இத் தன்மையில் இருக்க வேண்டும்? மனிதன் காட்டுமிராண்டியாயும், சமுக வாழ்க்கை இல்லாமலும் காட்டில் தனித்தனியாய் திரியும்போது இல்லாத கஷ்டங்கள், கெட்ட எண்ணங்கள் எல்லாம் சமுக வாழ்க்கைக்கு வந்த பின்பு அனுபவிக்கின்றவனாகவும், உடைய வனாகவும் இருந்து வருகிறான்.
மனிதன் காட்டுமிராண் டித் தனி வாழ்க்கைக்கு வரும்போது ஒவ்வொரு மனிதனும் சமுதாய வாழ்க் கையில் ஒருவனுக்கொரு வன் உதவி செய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே ஒழிய, மற்ற மனிதனைக் கொடுமைப் படுத்தி, இழிவுபடுத்தி, கஷ் டப்படுத்தி, அதன் பயனாய் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படி கருதி இருந்தால் சமுக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது.

பரஸ்பர உதவிக்காக ஏற்பட்ட சமுக வாழ்க்கை பரஸ்பர தொல்லைக்கும், உபத்திரவத்துக்கும் ஆளாக ஏற்பட்டு விட்டது. சமுதாயத் துறையில் இன்று உள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத் தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, காலக் கொடுமையாலேயோ, கடவுள் தன்மையாலோ, அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில், சமுக வாழ்க்கையில் சரித்திர ஆரம்ப காலம் எதுவோ அக்காலத்திலிருந்தே இக் குணங்கள் மனித சமுகத்தில் இருந்து வந்திருப்பதை சரித்திர ஆதாரங்களில் பார்க்கக் காணலாம்.

கடவுள் தன்மை என்பதிலும், எப்படிப்பட்ட கடவுள் காலத்திலும், அவதாரங்களின் காலத்திலும் கடவுள் தன்மை பெற்ற தூதர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், சமயக் குறவர்கள் என்பவர்கள் காலத்திலும், இக்கொடுமைகளும், குறைவுகளும், இழி குணங்களும் நிலவி வந்திருக்கின்றன.

அதுபோலவே அரசாங்க விஷயத்திலும் இன்றுள்ள அந்நியர் வெள்ளைக்காரர் வியாபார உணர்ச்சியோடும், பொறுப்பில்லா மலும் ஆளுகின்ற ஆட்சி என்பன மாத்திரம் அல்லாமல் கடவுள் அவதார ஆட்சி, கடவுள் அருள்பெற்ற ஆட்சி, தர்ம தேவதைகள் ஆட்சி, மனு நீதி ஆட்சி, மற்றும் சேர, சோழ, பாண்டியன், பார்ப்பனர், நாயக்கர், முகமதியர் ஆகிய எல்லா ஆட்சிக் காலத்திலும் இருந்து வந்த குறைகளேதான் இன்று காணப்படுகின்றன.

எந்தக் காலத்திலும், எப்படிப்பட்ட கடவுளாலும், யாருடைய ஆட்சியிலும் இக்குறைபாடுகள் நீங்கி இருந்ததாகவோ, நீக்கப் பட்டதாகவோ காண முடியவில்லை.

ஆகவே, இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதாய் இருந்தால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று மனிதனுக்கு பகுத்தறிவு ஏற்பட்ட காரணத்தினாலேயே மனிதன் இத்யாதி கொடுமைக்கும், துக்கத்துக்கும், இழிவுக்கும் ஆளானான் என்று சொல்ல வேண்டும்.

இதை அறிஞர் ஒப்புக் கொள்ள முடியுமா? முடியாது. மற்றென்னவென்றால் மனிதன் அறிவை தப்பாய் பயன்படுத்தி இயற்கையையும், மனித சுபாவத்தையும் மனிதன் தவறுதலாய் கற்பித்துக் கொண்டு மனித ஜன்மமே அளவற்ற ஆசைக்கு அடிமைப்பட்டதென்றும், மனித ஜன்மமே துக்கம் அனுபவிக்கவும், கவலையால் மூழ்கவும் ஏற்பட்டதென்றும், மனிதன் தனது சமுக வாழ்க்கையே (சம்சார சாகரம்) துக்கம் என்று கருதி அதையே இயற்கை ஆக்கிவிட்டதால் இந்நிலையில் இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித வாழ்க்கை நிலை முழுவதையும் கட்டுப்படுத் திக் கட்டுப்பாட்டுக்கு அடிமைப்படுத்திக் கொண்டான். மனிதனுடைய இந்த சிந்தனா சக்தியையும்கூட கட்டுப் படுத்திவிட்டான். இயற்கைக்கு மாறாக இன்னின்ன படிதான் நடக்க வேண்டும். இன்ன இன்னபடி தான் சிந்திக்க வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டுக்கும் கூட ஆளாகி விட்டான்.

மனிதன் தனக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக் கட்டளை, கடவுள் கட்டளை என்பவைகள் முதலியவைகள் எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும் விரோதமாகவும், அனுப வத்திற்கு முடியாததாகவுமே கற்பித்துக் கொண்டான்.

இந்தத் தவறுதலோடு மாத்திரம் நிற்காமல் மனித சமுகத்தையே தேசம், பாஷை, மதம், ஜாதி என்பவை களால் பிரித்து வேற்றுமைப்படுத்திக் கொண்டான். அதோடு நிற்காமல் பல மதம், பல கடவுள், பல வேதம் என்பதாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன் கற்பித்துக் கொண்டான். இவற்றில் ஒன்றுக்காவது பகுத்தறிவை சுதந்திரமாய் பயன்படுத்த உரிமை இல்லாதவனாகி விட்டான். வஸ்துக்களை, உனது, எனது என்று பிரித்துக் கொண்டான். மனிதனின் ஓய்வு எல்லாம் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி, அடிமைத்தனத் திற்குப் போவதற்கே பயன்பட்டதே தவிர பகுத்தறிவால் பயன்படவோ, மேன்மை அடையவோ முடியவில்லை.
மனித சமுக நன்மைக்காக, அதாவது மக்கள் சமுகம் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிக பயன் அடையவும் கண்டு பிடிக்கப்பட்ட யந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி உழைப்பாளி, பாட்டாளிகட்கும் பட்டினியாக பயன்படுகின்றதோ, அதுபோலவே மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலை யற்ற தன்மையையும் உண்டாக்கித் தீர வேண்டிய பகுத்தறிவானது சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமை யாகி மக்களுக்கு துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகின்றது.

இவற்றாலும், இன்னும் இவை போன்ற காரணங் களாலேயும் மனிதன் பகுத்தறிவு பெற்றதால் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தொல்லையையும், கவலையையும், குறைவும், அதிருப்தியும், தரித்திரமும் அடையக் காரணஸ்தவனாகிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
எனவே மனிதன் இப்படிப்பட்ட கீழ்மை நிலையில் இருந்து மேம்பாடு அடைய வேண்டு மானால், முதலாவ தாக தன்னம்பிக்கை உடையவனாகவும், தனது சக்தி என்ன என்பதை உணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.

இன்று மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னைத்தான் நடத்துவதாக அவன் நினைப்பதில்லை. தனது காரியத்துக்குத்தான் பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன் தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளையையும், கடவுள் சித்தாந் தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.

அதோடு மாத்திரமல்லாமல் தனது சவுகரியத்துக்கு ஏற்றபடியெல்லாம் மாற்றிக் கொள்ளுகிறான். பெரிதும் சோம்பேறி வாழ்க்கைக்கே கடவுளை பயன்படுத்திக் கொள்ளுகிறான். இவ்வளவோடு அல்லாமல் தலைவிதி, முன் ஜன்ம கர்ம பலன் என்பவைகளை கற்பித்துக் கொண்டு தனது முட்டாள்தனத்துக்கும், அயோக்கியத் தனத்துக்கும் பரிகாரமாக்கிக் கொண்டான்.

மனிதன் முதல் முதல் தவறிப் போன இடம் இதுவேயாகும். கடவுளும் கருமமுமே மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பகுத்தறிவு அற்ற ஜீவராசிகளைவிட கேவலமாக்கி இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும், கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டது.

பகுத்தறிவுக்கு கடவுளும், கருமமும் நேர் விரோதி களாகும். ஏனெனில் கடவுளுக்கும், கருமத்துக்கும் அடிமைப்பட்டவனிடம் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. அவன் மரக்கட்டை. தண்ணீர் அலையில் அலைவது போன்றவனேயாவான். ஆதலால், இந்த உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதே பகுத்தறிவின் வெற்றிக்கு முதல் படியாகும்.

இந்தப்படி சொல்லுவதை மக்கள் நாஸ்திகம் என்கின்றார்கள். இதனாலேயே பகுத்தறிவு வாதிகள் நாஸ்திகர்கள் என்று உலகமெங்கும் பழிக்கப்படு கிறார்கள். பகுத்தறிவு மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கமானது நாஸ்திகப் பழிப்புக்கு பயப்படக் கூடாது.  

------------------------18.05.1935 அன்று திண்டிவனம் தாலுகா இராஜாகுளம், வடகரைத் திடலில் நடைபெற்ற பகுத்தறிவு சங்கத்தின்  முதலாவது ஆண்டு விழாவில்- தந்தை பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு.”குடிஅரசு” - சொற்பொழிவு - 26.05.1935

25.5.13

டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரியாரின் நண்பர் இல்லையா? தினமணி அய்யர்வாளுக்கு பதிலடி


டாக்டர் வரதராஜுலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளனர்.

அதன் இணையதளத் தொடக்க விழாவில் பங்கேற்க போயும் போயும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களை அழைத்துள்ளனர் - அந்த நிகழ்ச்சியில் பெரியாரின் நண்பர் என்று டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்களை அழைக்கக் கூடாது என்று புலம்பியிருக்கிறார்.

சென்னை வானொலியில் பணியாற்றும் தோழர் பழ. அதியமான் அவர்கள் பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு எனும் அரிய நூலை (479 பக்கங்கள்) ஆவணமாகத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். அதனை மனதிற் கொண்டுதான் திருவாளர் கே. வைத்தியநாதய்யர் தம் வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்க!

தேசியத்தையும், சுதந்திரத்தை, பண்பாடுகளையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரிதும் போற்றினார் அவரை பெரியார் ஈ.வெ.ரா.வின் நண்பர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. அவர் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந்திருக்க மாட்டார். நீதிக் கட்சியின் தீவிரமான விமர்சகராக இருந்தவர் வரதராஜுலு நாயுடு. அவர் பெரியாரின் இறை மறுப்புக் கொள்கையிலும் உடன்பாடு இல்லாதவர். அவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.; தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோரின் நண்பர் என்பது தான் நிஜம்! (தினமணி 12.5.2013 பக்கம் 6)

_ -இவ்வாறு பேசி இருப்பவர் தினமணியின் ஆசிரியர் திருவாளர் கே. வைத்தியநாதய்யர்.

தந்தை பெரியாரின் நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் அவர் கொள் கைகளை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டவர்கள் தானா?

ராஜாஜி அவர்கள் தந்தை பெரியாரைக் குறிப்பிடும் பொழுதுகூட எனது அன்பார்ந்த எதிரி என்கிறார்.

ராஜாஜி அவர்கள் மறைந்தபோது கூட தந்தை பெரியார் அவர்கள் நட்பின் மேலீட்டால் எப்படி துக்க முற்றார் என்பதை திரு. வைத்திய நாதன் அவர்களின் பத்திரிகைக் குருவான திருவாளர் சோ ராமசாமியே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார் (துக்ளக் 15.1.1973).

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர் களிடமிருந்து தந்தை பெரியார் மாறு பட்டு நின்றதுண்டு; கடும் விமர்சனக் கணைகளை ஏவியதும் உண்டு.

அதே நேரத்தில் இருவரும் ஒத்திசைந்து பார்ப்பனர் எதிர்ப்பினைத் துவம்சம் செய்ததும் ஏராளம்.

தந்தை பெரியார் இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று விரும்பினார்; அது குறித்த தகவல் ஒன்று இங்கே.

பத்திரிகை தொடங்குவது பற்றி முதலில் ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன் னேன்; அவர் எனது கொள்கையைக் கேட்டவுடன் சந்தோஷப்பட்டு, இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான்; அதற்கு நீயே சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது; ஒரு கூட்டத்தார் எப்படி யாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும் நடந்தவரை லாபம் நடத்துங்கள் என்றார்.

பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்பு வதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால், அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும்  எழுதி வரும்படியும் சொன்னார். பிறகு ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச் சாரியார் அவர்களிடம் சொன்னேன் அவர் இச்சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது; அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டுவிட்டு நீ பத்திரிக்கை நடத்தப் போவது சரியல்ல என்றார் (குடிஅரசு 1.5.1927) _ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பத்திரிகையைத் தொடங்கும் போது தனது சக நண்பர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார் பெரியார் என்பதும், அந்த சகாக்களில் டாக்டர் வரதராஜுலு நாயுடு இருந்தார் என்பதையும் தினமணி ஆசிரியர் தம் அறியாமை யிலிருந்து விடுபட்டு, வெளிச்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமது பொது வாழ்க்கைக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதைத் தந்தை பெரியார் அவர்களின் வாயிலாகத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தம். எனது (பெரியாரது) பொது வாழ்வுக்குத் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்களே காரணமாவார். அவரது கூட்டுறவு அந்தக் காலத்தில் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், அக்காலத்தில் எனது தொழிலின் பயனாய் இன்று நான் ஒரு சமயம் ஒரு பெரிய முதலாளியாகவும்; வணிகனாகவும் இருந்திருப்பேன் அல்லது ஒரு சமயம் அம்முயற்சி யால் அநாமதேயப் பாப்பராகவும் இருந்திருப்பேன். எப்படியிருந்தாலும் அவரது நேசமே நான் இன்று 
இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் (புரட்சி 3, டிசம்பர் 1933)

கடந்த எடுத்துக்காட்டு கண்களை மறைத்திருந்தாலும் ஈரோட்டாரின் இந்த எடுத்துக்காட்டு திரு வைத்திய நாதருக்கு சாங்கோ பாங்கமாகத் தெரிவித்திருக்கும் என்று நம்பலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் என்றால் நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள் என்பது ஒரு சொலவடையாகவே அமைந்த ஒன்று)

நாம் (பெரியார்) பச்சைத் தமிழில் எழுதுகிறோம். டாக்டர் (வரதராஜுலு நாயுடு) அவர்கள் ராஜதந்திரத் தமிழில் எழுதுகிறார்; ஸ்ரீமான் முதலியார் (திரு.வி.க.) அவர்கள் சங்கத் தமிழில் எழுதுகிறார்; பேசுகிறார்; இதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை (குடிஅரசு 1 ஆகஸ்டு 1926).

_ இதுவும் தந்தை பெரியார் அவர்களின் எழுத்து வடிவம்தான்;- எழுத்து நடை வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றே என்று நெற்றியடி கொடுத்து விட்டாரே வெண்தாடி வேந்தர்.

பார்ப்பனர் அல்லாதார் என்ற கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் ஒருக்கால் நாம் இணைத்துப் பேசலாம் என்று நினைக்கக் கூடும்.

பெரியாரையும், வரதராஜுலுவையும் பார்ப்பனர்கள் எந்தக் கண்ணோட் டத்தில் பார்த்தனர்?

இந்து அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீதிக்கட்சி தான் கொண்டு வந்தது. அப்பொழுது காங்கிரஸில் இருந்தபடியே ஆதரித்தும் குரல் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜுலு அவர்களும்; அதைப் பற்றி பார்ப்பனர்களின் பார்வை என்ன?

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது அவாளின் கண்ணோட்டம் எப்படி இருந்தது?

பெண்களைக் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுகிற பழக்கம் தப்பு என்பதாக  நாம் ஒருமுடிவு செய்து விடுவோமானால் ஈ.வெ. இராமசாமி நாயக்கரும், வரதராஜுலு நாயுடுவும் நாளைக்குக் கோயிலில் சுவாமிக்கு அர்ச்சகர்கள் வேண்டியதில்லை என்று சொல்லுவார்கள் அதையும் கேட்க வேண்டியதாய் ஏற்பட்டு விடும்!- -----------------------சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபை யில் பேச்சு (குடிஅரசு 11.3.1928).

இந்து தேவஸ்தான சட்டத்தைப் பற்றிப் பாமர ஜனங்களை ஏமாற்றத் தமிழ்நாட்டுத் தேசிய பிராமணர்களில் பெரும்பாலோர் செய்த கிளர்ச்சி ஈ.வெ. ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் போட்ட வெடி குண்டு களால் நசுக்குண்டு போயிருந்தாலும் வேறுவிதமான தந்திரங்கள்  இன்ன மும் நடந்து கொண்டு தானிருக்கின்றன (குடிஅரசு 9.3.1926).

தமிழ்நாட்டின் பொது வாழ்வில், முக்கிய பிரச்சினைகளில் இரு கரங்களாக இருந்து பல முக்கிய கட் டங்களில் களமாடிய தலைவர்களை நண்பர்களாகப் பார்ப்பதில் பார்ப்பனர்களுக்கு என்ன கண்ணோவோ தெரியவில்லை.

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந் திருக்க மாட்டார் என்று எம்டன் குண்டைத் தூக்கிப் போடுகிறார் தினமணியின் ஆசிரியர். டாக்டர் வரதராஜுலு அவர்கள் தந்தை பெரியாரைப் போல காங்கிரசை விட்டு விலகியதும் உண்டு.

குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் இணைந்ததும் உண்டு. இதற்குச் சாட்சியாக அவாள் ஆத்துக்காரரை விட்டே சொல்ல வைப்போம்.

வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசை விட்டு விலகியபோது, இப்போதுதான் காங்கிரசு படுசுத்தமானது என்று எஸ். சீனிவாச அய்யங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு 26.9.1926).

டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், தந்தை பெரியார் அவர்களும் முறையே காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் இருந்து போரிட்ட வருணாசிரம ஒழிப்புப் பெருங்களம் சேரன்மாதேவி குருகுலப் போராட் டமாகும். காங்கிரஸின் நிதி உதவியால் சேரன் மாதேவியில் நடத்தப்பட்டு வந்த குருகுலத்தின் நிருவாகியாக இருந்தவர் வரகனேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் -_- சுருக்கமாக வ.வே.சு. அய்யர்.

குருகுலத்தில் பார்ப்பன மாணவர் களுக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்களுக்கும் வருண வேறுபாடு காட்டப்பட்டது. தனித்தனி தண்ணீர் பானை என்கிற அளவுக்கு அது அருவருப்பாக இருந்தது. உணவில்கூட உப்புமா, இட்லி  பார்ப்பனர்களுக்கும் பழைய சோறு சூத்திரர்களான பார்ப்பனர் அல்லாதாருக்கும்;

பெரியார் காதில் விழுந்து விட்டால் சும்மா விடுவாரா? செவுள் பிய்ந்து விடாதா? வரதராஜுலு அவர்கள்தான் சாமானியமானவாரா? அந்தப் பிரச்சினையில் காந்தியாரின் வழவழா கொழ கொழா சமாதானத்தையே தூக்கி எறிந்தவராயிற்றே!

சேரன்மாதேவி குருகுலம்பற்றி காங்கிரஸ் செயற்குழுவில் கொந்தளித்த - பரிமாறிக் கொண்ட பிரயோகங்கள் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
வ.வே.சு. அய்யர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? பாரத கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. வேத முறைப்படிதானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டுள்ளார் என்று ஒரு பார்ப்பனர் பூணூல் தாண்டவம் ஆடியது.
ஈரோட்டு எரிமலை வெடித்தது! ஜாதிப்பாகுபாட்டுக்கும், உயர்வு - தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று குமுறினார் பெரியார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த டாக்டர் வரதராஜுலு அவர் களோ அக்னிக் குண்டமாக தகி தகித்தார்.

ஆரியர்களின் வேதகால கலாச் சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

                               ------------------(குருகுலப் போராட்டம் நாரா. நாச்சியப்பன் பக்கம் 52)

திருவாளர் கே. வைத்தியநாத அய்யர் கூறியுள்ளாரே _- டாக்டர் வரத ராஜுலு நாயுடு நமது கலாச்சாரத்தைப் பெரிதும் போற்றினாரென்று. குருகுலப் போராட்டத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடு எந்த கலாச்சாரத்திற்காகப் போர்க் குரல் கொடுத்தார்? அந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் தந்தை பெரியாரும், டாக்டர் நாயுடுவும் இரட் டைக் குழல் துப்பாக்கிகளாகத்தானே இருந்திருக்கின்றனர்.

குருகுலப் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் டாக்டர் வரதராஜுலு மீது ராஜாஜி உட்பட பார்ப்பனர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து முறியடித்தவர் தந்தை பெரியார். வரதராஜுலுவின் தியாகம் எந்த மற்றொரு தியாகத்துக்கும் குறைந்ததல்ல. வரதராஜுலுவின் தலைமையில் நம்பிக்கைத் தீர்மானம் இயற்றாமல் எவரும் கூட்டத்தை விட்டு வெளியில் போக முடியாது என்று எச்சரித்தவர் பெரியார் என்பது -_ வைத்தியநாதய்யர்வாள்களுக்குத் தெரியுமா? ராஜாஜி உட்பட நான்கு பார்ப்பனர்கள் காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து விலகுவதாக அப் பொழுதே கூறிடவில்லையா?

இன்னொரு களம் மிக முக்கிய மானது -_ அது தமிழ்நாட்டின் அரசி யல் களம்.
1952இல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்த ராஜாஜி அவர் களால் கொண்டு வரப்பட்ட குலக் கல்வித் திட்ட ஒழிப்புக் களம்.

சேரன் மாதேவிக்குப் பிறகு அந்த நாயுடுவும், அந்த நாயக்கரும் (டாக்டர் வரதராஜுலுவும், பெரியாரும்) மீண்டும் நாயகர்களாக நின்று ஆச்சாரியாரைப் பந்தாடி பொது வாழ்க்கைக் கோட்டுக்கு வெளியே வீசி எறிந்ததாகும்.
ராஜாஜி முதல் அமைச்சர் பதவியி லிருந்து விலகி ஓடும்படிச் செய்ததில் தந்தை பெரியார் அவர்களுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மிகப் பெரிய பங்குண்டு.

வேறு வழியின்றி பதவி விலகிய நிலையில் அடுத்து யார் முதல் அமைச்சர் என்ற வினாக்  குறிக்கு விடை யளித்தவர்கள் தந்தை பெரியாரும் - டாக்டர் வரதராஜுலும் ஆவார்கள்.

அந்தச் சந்திப்பு சென்னை அர சினர் தோட்டத்தில் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

தந்தை பெரியார், டாக்டர் நாயுடு, காமராசர், குத்தூசி குருசாமி ஆகியோர் அங்கிருந்தனர். முதல் அமைச்சர் காமராசர் என்று அந்தச் சந்திப்பில் தான் முடிவு செய்யப்பட்டது.

காமராஜர் தயங்கிய நிலையில், தந்தை பெரியார் கொடுத்த துணிவுதான் அப்பொறுப்பை ஏற்கச் செய்தது.

முதல் அமைச்சர் பதவிக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் காமராசர் பெயரை முன்மொழிந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆவார்.
தந்தை பெரியாருக்கும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கும் இருந்த இந்த நெருக்கத்தில் நட்பு கிடையாது என்று தினமணியார் கூறப் போகிறாரா?
தந்தை பெரியார் அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சென்னை பெரியார் திடலில் கலந்து கொண்ட டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ஆற்றிய உரை (17.9.1956) குறிப்பிடத் தகுந்ததாகும்.

தலைவர் அவர்களே! நண்பர் பெரியார் அவர்களே! சட்டசபை உறுப்பினர் மாநாடு ஒன்று நடந்தது.

கவர்னர் ஒரு விருந்து வைத்திருந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தமையால் இங்கு கொஞ்சம் பின் தங்கி வர நேர்ந்தது. நான் அய்யாவுக்குப் பத்து வயது இளையவன். எனக்கு மூத்தவரை வாழ்த்துவதற்கு நான் தகுதி உடையவன் அல்லன். பெரியார் அவர்கள் இன்னும் நூறு வயது வாழ வேண்டும். அவரது புரட்சிகள் பயங்கரமானதாகத் தோன்றலாம். வேகமாகப் போகிறார் என்று படும். அவரது புரட்சி பெரும் புரட்சி!

எனக்கு வெகு நாளாய் ஒரு யோசனை உண்டு. பொது இடம் ஒன்றில் பெரியார் அவர்களின் சிலை இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதை நான் மந்திரிகளிடமும் கூறி இருக்கிறேன். இந்த நிலத்தில் (பெரியார் திடலில்) பெரிய மண்டபம் கட்டி பெரியார் அவர்களின் நல்ல சிலையை வைக்கும்படி திராவிடர் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார் அவர்கள் நீடூழி வாழ விரும்புகிறேன்

                                   ----------------------------------(விடுதலை 20.9.1956)
என்றாரே - இதற்கு என்ன பதில்? விளிக்கும் போதே நண்பர் பெரியார் என்றுதானே குறிப்பிடுகிறார்.

நான் சொல்லும் நண்பர் என்பதற்குப் புதுப் பொருள் கொடுக்கப் போகிறாரா தினமணி அய்யர்வாள்?

குறிப்பு: பெரியார் திடலில் மண்டபமும் இப்பொழுது இருக்கிறது _ பெரியார் சிலையும் இருக்கிறது; ஆம்! டாக்டர் வரதராஜுலு நாயுடு வின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரியார் பற்றி வரதராஜுலு நாயுடு''
புதிய கல்வித் திட்டம் குறித்த அரசின் அறிவிப்பு 1953 ஏப்ரலில் வெளியானது. நகராட்சி, பேரூராட்சி நீங்கலாகக் கிராமப் பள்ளிகளிலும் ஆதாரப்பள்ளிகள் தவிர்த்த அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் 1953 (ஏப்ரலில் தொடங்கிய) கல்வி ஆண்டிலிருந்து அத்திட்டம் உடனே நடைமுறைக்கும் வந்தது.
இராஜாஜி முன்னுரைத்த கல்வித் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது.

பெரியார் அக்கல்வித் திட்டத்தை வர்ணாசிரம கல்வித் திட்டம், குலக்கல்வித் திட்டம் எனக் கண்டித்தார். தம்மைக் கலக்காமல் அறிவிக்கப்பட்டதால் காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிலரிடமும் அதிருப்தி நிலவியது.
அச்சமயத்தில் சேலம் சூரமங்கலத்தில் ஊராட்சி மன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற நமசிவாயம் என்பவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பெரியாருடன் வரதராஜுலு கலந்து கொண்டார். கல்வித் திட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சி மேற்கொண்டிருந்த பெரியாருக்கு, காங்கிரசுகாரரான வரதராஜூலுவின் அக்கூட்டப் பேச்சு மானசீக ஆதரவாகத் தோன்றியிருக்கலாம்.

பெரியர் ஒரு புரட்சி வீரர், இருப்பதை அழித்துப் புது அமைப்பை உண்டாக்க வேண்டும் என்று போராடுகிறவர். நம்மால் அவ்வளவுக்கு வேகமாகப் போக முடியாது. ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு காலம் கடத்தலாம் என்று நினைப்பவர்கள் நாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே பெரியார் அவர்கள் நினைத்தார்கள் சமுதாய சீர்திருத்தம் எற்பட்டால் தான் சுயராஜ்யம் உதவுமென்று காந்தியார் அவர்களும் இந்தப்படியே கருதினார். சமுதாய சீர்திருத்தம் இல்லாமலே சுதந்திரம் வந்தது. அதன் பலனை இப்போது அனுபவிக் கிறோம். எங்கும் ஜாதி வெறி, ஜாதிப் பூசல்கள் தலைவிரித் தாடுகின்றன. இந்த ஜாதி வெறியெல்லாம் ஒழிய வேண்டும் இன்னும் இந்தக் கட்சிப் பூசல்கள் ஒழிய வேண்டும்.
இன்றைய தினம் பெரியார் அவர்களின் கொள்கையும் சேவையும் பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் இன்றைக்கல்ல இன்னும் 15 ஆண்டுகள் கழித்து பெரியார் அவர்களின் சேவை இந்தத் தேசத்திற்கு எவ்வளவு தேவையானது, அவசியமானது என்பதை எல்லோரும் உணருவார்கள். பெரியார் அவர்களின் சேவை  இந்த நாட்டின் வரலாற்றிலே போற்றி எழுதப்பட வேண்டியது; எழுதப்படும். எனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்குமானால் அந்த மந்திரி சபையிலே பெரியார் அவர்களை ஒரு மந்திரியாக நிச்சம் சேர்த்துக் கொள்வேன் - அவருடைய சேவை தேசத்திற்கு மிகவும் தேவை (விடுதலை, 15 மே 1985).
வரதராஜுலு -பெரியார் உறவு மீண்டும் நெருக்கமாக விட்டதை மேற்கண்ட பேச்சிலிருந்து உணர முடியும்.

(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் -_ டாக்டர் 256_-257

டாக்டர் வரதராஜூலு நாயுடுக்காக பெரியார் சண்டமாருதம்

வரதராஜூலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜூலுவை கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜூலு அவர்களை ஆதரித்தது. சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகைய்ல பேர் போடுவதாகவும் படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத்துணியும் உபயோகித்துக் கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொது ஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தியோகங்களையும் பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா- அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).
குடி அரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜூலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.
(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் - டாக்டர் 224-_225

------------------------  மின்சாரம் அவர்கள் 25-5-2013 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

24.5.13

தலித்துகளுக்கும் - ஏழைவன்னியர்களுக்கும் நல்லுணர்வை ஏற்படுத்துவதே நோக்கம்-தோழர் திருமா

விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது.

தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடக் கூறி, சந்தேகத்தைக் கிளப்பும் பிராணிகளின் வாயை அடைத்துள்ளார்.

அக்கப் போர்களை எழுதிக் கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்களுக்கு மெல்லுவதற்குத் தேவையில்லாமல் அவலைக் கொடுப்பதற்குப் பதிலாக அவ்வப்பொழுது பளிச் சென்று சொல்லி வாயை அடைத்து விட்டால் தீர்ந்தது கதை.

அந்தப் பேட்டியில் தோழர் திருமா குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து நுட்பமானது. ஆரோக்கியமானது. தேவையானதும்கூட!

எங்களுடைய நோக்கம் தலித்துகளுக்கும் - ஏழை வன்னியர்களுக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரின் முதிர்ச்சியையும் - பக்குவத்தையும், பொறுப் புணர்வையும் இது தெளிவுபடுத்துகிறது.
இந்து மதத்தின் வருண அமைப்பு முறையில் ஏணிப்படிக் கட்டுகள் முறையில் ஜாதிகள் அமைக்கப்பட்டுள்ளன; graded ineqality என்று மிக அழகாகக் கூறுவார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

இதனைப் புரிந்து கொண்டால் எந்தத் தலைவர்களும் தவறான வழி காட்டுதல்களைத் தங்களைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க மாட்டார்கள்.
மூலபலம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்க்கிடையே ஏற்பட்டுள்ள சிக்கலை அவிழ்ப்பதற்குப் பதிலாக மேலும் படுமுடிச்சுகளைப் போடுவார்கள்.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அடிப்படையில் உழைப்பாளிச் சமூகம்; சமூக நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டாதவர் களாக ஆக்கப்பட்டவர்கள் - ஊருக்கு வெளிப்புறம் தள்ளி வைக்கப்பட்டவர்கள்.
முதல் உரிமை, முன்னுரிமை அவர்களுக்கு எல்லா வகைகளிலும் அளிக்கப்பட வேண்டியது தான் மனித உரிமை மீதும், மனித நேயத்தின்மீதும் சமத்துவத்தின் மீதும் அக்கறையுள்ள பகுத்தறிவுச் சிந்தனையுள்ளோரின் கடமையாகும்.

பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று தந்தை பெரியார் இரத்தினச் சுருக்கமாக ஆழ்ந்த சமூகச் சிந்தனையில் வெளியிட்டுள்ளார்கள்.

நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க உதவ வேண்டுமே தவிர வேறு வகையான முறையில்  அணுகக் கூடாது.

தாழ்த்தப்பட்டோர் படிக்கிறார்கள், உத்தியோகங்கள் பார்க்கிறார்கள் - குடிசைகளிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றால் அதனைக் கண்டு பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் கை தட்டி மகிழ வேண்டும் - பொறாமை உணர்வு எந்த வகையிலும் தலை தூக்கக் கூடாது!

அதே போல பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத்திற்கு உதவக் கூடிய வாய்ப்புக்கிட்டும் பொழுதெல்லாம் தாழ்த்தப்பட் டோரின் வழிகாட்டிகள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் திராவிடர் என்ற உணர்ச்சி மிகுந்து - அதற்குத் தடையாக உள்ள ஜாதி உணர்வுகளை ஆணி வேரோடு கெல்லி எறிய வேண்டும்.
திராவிடர் கழகம் இந்த அடிப்படைப் பணிகளைத் தான் செய்து வருகிறது. அந்தக் காரணத்தால்தான் இப்பிரச்சினையில் உதவிட நான் தயார் என்று தமிழர் தலைவர் வலிய முன் வந்து கூறியுள்ளார்.

இதுவரை தவறான அணுகுமுறைகளை மேற்கொண்டிருந்தாலும், நடந்து முடிந்திருக்கும் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு - தந்தை பெரியார் பெயரை பொருளோடு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்.

அடுத்தவர் உயிர் பிழைக்க ரத்தம் அளிக்கலாம் - அது வரவேற்கக் கூடியது. ஜாதியை முன்னிறுத்தி ரத்தம் சிந்தக் கூடாது - அடுத்தவர் உயிரைப் பறிக்கவும் கூடாது என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொன் மணக்கும் சொற்களைச் செவி மடுக்கக் கோருகிறோம். மறக்க வேண்டாம்! பொருள்  தந்தை பெரியாருடையது;  குரல் - திராவிடர் கழகத் தலைவருடையது.
              ------------------------"விடுதலை” தலையங்கம் 24-5-2013

23.5.13

அய்.பி.எல். போட்டியைத் தடை செய்!கிரிக்கெட் பார்ப்பனர்களின் விளையாட்டு?ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனைக் கடித்தது போல் என்று ஒரு சொலவடையைக் கூறுவார்கள்.

இது இன்றைய தினம் அய்.பி.எல். கிரிக் கெட்டுக்குத் தான் நூற்றுக்கு நூறு துல்லியமாகப் பொருந்தும்.

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள்  -தரகர்கள்தான் கிரிக்கெட் சூதாட்டத்தில்  ஈடுபட்டனர் என்றுதான் பொதுவாகப் பேசப்பட்டது.

துருவிச் செல்லும் பொழுது இதில் பெரும் பண முதலைகளும், சினிமாக்காரர்களும் மூக்கை நுழைத்து பெரும் பணம் சம்பாதித்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

இப்பொழுது அதையும் கடந்து கிரிக்கெட் வாரியத் தலைவரின் வீடு வரை இந்தச் சூதாட்டத்தின் கை நீண்டு கொண்டே போகிறது.

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவா சனின் மருமகனும் தொழிலதிபருமான குருநாத் வரை இதில் ஈடுபட்டு இருப்பதாகத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாரியத் தலைவர் சீனிவாசன்மிக மோசமான சிக்கலுக்கு ஆளாகி விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தை ஒழிக்க முடியாது என்று சில நாட்களுக்கு முன் பேட்டி கொடுத்த மகானுபவர் இவர் .

சூதாட்டத்தை ஒழித்தே தீர வேண்டும் என்று சொல்ல வேண்டிய வாரியத் தலைவர், அதனை ஒழிக்கவே முடியாது என்று சொன்னது - பல அய்யப்பாடுகளுக்கு இடம் அளித்தது.

இப்பொழுது அவரது மருமகனே சம்பந்தப் பட்டுள்ளார் என்றால், பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கத்தான் செய்யும்.

எந்த பொந்தில் எந்த பாம்போ என்று கருதும் நிலை உருவாகி விட்டது. வேறு எந்த விளையாட்டையும்விட கிரிக்கெட் மட்டும் ஏன் இந்த நிலைக்கு உள்ளாகிறது என்பது மிகவும் முக்கியமான கேள்வி மட்டுமல்ல - சிந்திக்க வேண்டிய ஒன்றும் ஆகும்.

கிரிக்கெட்டில் தவறு செய்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
மற்ற மற்ற விளையாட்டு களில் ஆட்டக்காரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள்; அதில் ஒரு ஆவேசம் இருக்கும். கிரிக்கெட் அப்படியல்ல; ஒருவர் பந்து வீசுவார், ஒருவர் பந்தை அடிப்பார் - ஒருவர் மட்டும் பந்தைத் துரத்திக் கொண்டே செல்லுவார். வேண்டுமானால் விக்கெட் கீப்பராக இருக்கக் கூடியவருக்குக் கடுமையான சுமை என்று சொல்லலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், விளை யாட்டு நடந்து கொண்டு இருக்கும்போது விளை யாட்டுக்காரர்கள் ரசிகர்களின் ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

கால் பந்தாட்டத்திலோ, ஹாக்கியிலோ, சடுகுடு ஆட்டத்திலோ
கூடைப்பந்திலோ, கைப்பந்திலோ இத்தகைய காட்சியைப் பார்க்க முடியுமா? அதற்கான வாய்ப்பே இந்த விளையாட்டுகளில் இருக்கவே முடியாது.
பெரும்பாலும் பார்ப்பனர்கள் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்ததற்கே காரணம் இந்த வசதி இதில் இருப்பதுதான்.

கிரிக்கெட் என்றாலே பார்ப்பனர்களின் விளை யாட்டு என்று ஆன பிறகு, ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றன. நேர்முக வருணனைகளை ஒரு கட்டத்தில் வானொலி வழங்க ஆரம்பித்து, இப்பொழுது தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பவும் ஆரம்பித்து விட்ட நிலை; இதில் அரைகுறை உடையோடு ஆடும் அழகிகள் வேறு. விளையாட்டா - ரெக்கார்டு டான்ஸ் நடைபெறும் இடமா?

விளையாடுபவர்களுக்கு கோடி கோடியாகப் பணம் கொட்டுகிறது. கிரிக்கெட்டில் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி, விளம்பரத்தளத்திலும் அடிவைத்து கோடிக் கோடியாக வருமானம்!

அளவுக்கு விஞ்சி பணம் இதில் புழங்குவதும் இந்தச் சூதாட்டத்துக்கு மிக முக்கிய காரணமாகும்.

முதற் கட்டமாக இந்த அய்.பி.எல். போட்டியைத் தடை செய்ய வேண்டியது. ஒழுக்கத்திலும், நேர்மை யிலும் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்பார்ப்பதாகும்.

                       ------------------------------"விடுதலை” தலையங்கம் 23-5-2013

22.5.13

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

நடந்த விஷயம் என்ன?
ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு

தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது.

என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை.

ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும்.

எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். அதாவது நான் அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்கின்ற கருத்தில்.

ஆச்சாரியாரைப்பற்றி அரசியல் விஷயத்தில் பொதுநல விஷயத்தில் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் தனிப்பட்ட விஷயத்தில் அவரை எனது மரியாதைக்கு உரியவர் என்றே கருதி இருக்கிறேன்.

நாங்கள் பொது வாழ்வில் நுழைவதற்கு முன் அவர் சேலம் சேர்மெனாயும் நான் ஈரோடு சேர்மெனாயும் இருக்கும் போதே எங்களில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுள்ள மாதிரியில் நெருக்கமுள்ளவர்களாய் இருந்ததோடு இருவரும் சொந்த வாழ்க்கையை அலட்சியம் செய்து பொதுவாழ்வில் தலையிடுவது என்கின்ற அருத்தத்தின் மீதே சற்றேறக் குறைய ஒரே காலத்தில் இருவரும் சேர்மென் பதவியையும் மற்றும் உள்ள சில கவுரவ பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு தோழர் வரதராஜுலுவும் உள்பட நெருங்கி கலந்து இருந்தோம். பிறகு ஒத்துழையாமை ஆரம்பமான வுடன் நான் அவருடைய உள்ளத்தை கொள்ளை கொண்ட காதலி போலவே இருந்து வந்தேன்.

எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையில் அபிப்பிராய பேதமே இல்லாதிருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து அதுவே என் அபிப்பிராயம் போல் காட்டி அவரை இணங்கச் செய்வதுபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டு விட்டே அவரைக் காணுவார்கள்.

அப்படிப்பட்ட நிலை வகுப்பு உணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றமடைய நேரிட்டுவிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டு விட்டன என்றாலும் அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டு விடுகின்றன.

அவரைக் காணும் போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ அதுபோல் ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை.

காரணம், எவ்வளவு பெரிய தியாகம் செய்தவர் அவ்வளவு தியாகமும் ஒரு பயனுமில்லாமல் போகும்படியாய் விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு. என்றாலும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்து பார்க்காமல் நான் ஒரு முடிவுக்கு வருவதில்லை. நான் பிரிந்து விட்ட பிறகும் ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். இந்திய சட்டசபைக்கும் நான் நிற்பது நல்லது என்கின்ற ஜாடையும் காட்டினார். எனக்கு வெற்றி செலவில்லாமல் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும் இந்த ஸ்தானங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்து விடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்.

இப்படியெல்லாம் இருந்தாலும் தற்கால அரசியல் புரட்டுக்களை நான் அறிந்திருப்பது போலவே ஆச்சாரியார் அவர்களும் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இரு கட்சிகளிலும் பெரிதும் சமய சஞ்சீவிகளே பயன் அனுபவித்து விடுவதும் நாம் ஒருவரை ஒருவர் துவேஷித்து முன்னேற ஒட்டாமல் தடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் நலம் கொள்ளை போவதும் என்னைவிட நன்றாய் உணர்ந்திருக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்.

இந்த நிலையில் என்னை அவர் கோயமுத்தூர் ஜெயிலில் எதிர் பிளாக்கில் ஒரு கைதியாக சந்தித்தார். தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் என்னை ஜெயிலில் சந்தித்த அதட்டியினாலும் தோழர் ஆச்சாரியார் முயற்சியாலும் நான் ஆச்சாரியார் அறைக்குப் பக்கத்தில் அவருடைய சமையலறை சாப்பாட்டில் இருக்க நேர்ந்தது.

அப்பொழுதும் எங்கள் பழைய கதை ஞாபகத்துக்கு வந்ததுடன் இருவருக்கும் கண்களில் நீர் ததும்ப எங்கள் காதலைக் காட்டிக் கொண்டோம். எந்த கருத்தில் என்றால் எனக்கும் அப்படிப்பட்ட தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார், அவருக்கும் என்னைப்போல ஒரு தொண்டன் கிடைக்க மாட்டான் என்கின்ற உணர்ச்சிக் கருத்தில் என்றே சொல்லலாம். முடிவில் இருவரும் சேர்ந்து முன்போல ஒத்து உழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்து உழைக்க சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்.

அதற்கு பிறகு ஒருதரம் சந்திக்க நேர்ந்தும் இருவரும் சரிவர அந்த அபிப்பிராயத்தை வலியுறுத்திக் கொள்ளவில்லை.

பிறகு சுமார் 20 மாதம் பொறுத்து நானும் தோழர்கள் பாண்டியன் முதலியவர்களும் குற்றாலத்தில் ஒரு நாள் ஸ்நானத்துக்கு போகையில் அங்கு நான்கு நாள் முன்னதாகவே சுகத்துக்காக போயிருந்த ஆச்சாரியார் அவர்கள் தன் ஜாகையிலிருந்தே என்னைக் கண்டார். பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார். அருவியில் குளித்துவிட்டு அவர் ஜாகைக்கு போனேன். அப்பொழுது மாலை 3 மணி இருக்குமாதலாலும் நானும் என் தோழர்களும் அதுவரை சாப்பிட வில்லையாதலாலும் ஆச்சாரியார் அவர்களிடம் அதிக நேரம் பேச சாவகாசமில்லை என்று சொல்லி அவசரமாய் விடை கேட்டேன். "ஏன் ஒரு நாள் சாவகாசமாக இங்கு தங்குவது தானே" என்றார். நான் இப்போது சாவகாசமில்லை என்றும் மற்றொரு நாள் வருவதாயும் சொன்னேன். அவசியம் வரவேண்டும் என்றார். ஆகட்டும் என்றேன். அந்தப்படியே 15 நாள் பொறுத்து மறுபடியும் குற்றாலம் சென்றேன். அது சமயம் அவர் ஒரு வனபோஜனத்துக்கு புறப்பட்டுக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்துவிட்டார். என்னைக் கண்டதும் ஆசையாக வரவேற்று வன போஜனத்துக்கு அழைத்தார். நான் பின் சென்றேன். செல்லுகையில் வழியில் சிறிது முன்னாக சென்று கொண்டிருந்த நாங்கள் காதல் மிகுதியால் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதுபோல் பல விஷயங்களை கலக்கிக் கலக்கி அங்கொன்று இங்கொன்றுமாக பேசிக் கொண்டே சுமார் 1 மைல் நடந்தோம். சங்கேத இடம் சென்று மற்ற எல்லோருடனும் சேர்ந்து சம்பாஷித்தோம். பிறகு வீட்டுக்கு திரும்பி அன்று மாலையும் இரவும் கழித்தோம். தானாக வந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசினோமே ஒழிய குறிப்பாக எதையும் வருத்தி ஒன்றும் பேசவில்லை. இவைகளிலேயே அனேக விஷயங்கள் கலந்து கொண்டன.

முடிவு என்ன வென்றால் இன்றைய இரு கட்சி கிளர்ச்சிகளும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதும், சேர்ந்து இன்ன இன்ன காரியம் செய்தால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நலன் ஏற்படும் என்பதும் பேசி ஒரு அபிப்பிராயத்துக்கு வந்த விஷயங்களாகும். அவரை விட எனக்கு இருவரும் கலந்து ஒற்றுமையாய் ஒரு வேலை செய்யக்கூடிய காலம் வராதா என்கின்ற ஆசை ததும்பி இருந்தது.

அவ்வளவு பெரிய விஷயம் பேச அந்த சந்தர்ப்பம் போதாது என்கின்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் சில விஷயங்களில் இருவருக்கும் நேர்மாறான அபிப்பிராயம் இருப்பதும் அது விஷயத்தில் ஒத்து வர முடியாதே என்று பயப்படக் கூடிய அம்சங்களும் வெளியாயிற்று.

எப்படி இருந்த போதிலும் ஒரு சமயத்தில் கூடுவோம் என்கின்ற நம்பிக்கை குறையவில்லை.

இவ்வளவுதான் நாங்கள் கலந்து பேசியதின் தத்துவமாகும்.

----------------------------------ஈ.வெ.ரா.'குடி அரசு' துணைத் தலையங்கம் 14.06.1936

21.5.13

ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?


ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும்  ஏற்றுக் கொள்ளவே முடியாது.

விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்றித் திருநாள் கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது (18.5.2013).
அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்சே மிகவும் நீட்டி முழங்கியுள்ளார்.  ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் அமைதியுடன் வாழ விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்கள் எல்லாம் நீண்ட வரிசையில் நின்று இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் மனு கொடுத்திருப்பார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

பேரழிவுக்குப்பிறகு அங்கு வாழும் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையில்தான் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு, மறு சிந்தனை கொள் வதற்கு  உகந்த வகையில் அதிபர் ராஜபக்சே அப்படி என்ன என்னவெல்லாம் தமிழர்களின் அமைதிக்கும், சுதந்திரமான வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் செய்துள்ளார் என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டியிருந்தால்கூட, ஏதோ தம் பக்கம் நியாயம் இருப்பதாகக் கருதி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் என்றுகூட நினைக்கத் தோன்றும்.

மூன்றே மாதங்களில் முள்வேலி முகாமி லிருந்து, ஈழத் தமிழர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி, சொந்த வீடுகளில் குடியமர்த்தம் செய்வோம் என்றாரே - அதன்படி ஏதாவது நடந்திருக்கிறதா? தமிழர்களுக்குரிய பூர்வீக வீடுகளை எல்லாம், நிலங்களை யெல்லாம் சிங்களக் காடையர்கள் அல்லவா ஆக்கிரமித்துள்ளனர்.

அதைவிடப் பெரிய கொடுமை - தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சிங்களமயமாக்கப் பட்டு விட்டதே - இன்னும் அந்தப் பகுதிகள் எல்லாம் இராணுவக் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன.

பத்திரிக்கை சுதந்திரம் உண்டா? வெளியுலக ஊடகக்காரர்களை அனுமதிக்காதது - ஏன்?

சண்டே லீடர் ஆசிரியர் வசந்த் பட்டப் பகலில் நடுவீதியில் சுடப்பட்டது எந்த நோக்கத்துக்காக? இந்த வரிசையில் பாசிச ஆட்சிக்கே உரித்தான போக்குகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நீண்ட பட்டியல் உண்டே!

எத்தனை ஆயிரம் ஈழத் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர்? அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? யாருக்குத் தெரியும்?

எத்தனை எத்தனை ஆண்டுகளாக அவசர நிலைப் பிரகடனம்? உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிட, 2011 ஆகஸ்டில் அவசர நிலையை ரத்துச் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அவசர நிலைப் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள அத்தனை அதிகாரங்களும் இதற்குள்ளும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். மறுக்க முடியுமா? போர்க் குற்றங்கள்பற்றி இலங்கை அரசே விசாரிக்கும் என்று மனித உரிமை ஆணையம் கூறியதைத் தொடர்ந்து, எந்தவித உரிமை மீறலும் இலங்கையில் நடைபெறவில்லை என்று இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிவித்து விடவில்லையா?

அதே போன்றதுதான் இப்பொழுது ராஜபக்சே வெளிப்படுத்தியிருக்கும் கூற்றும்.

அவர் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம்.

சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கத் தயார் தானா?

இலங்கை அதிபராக சிங்கள மொழி பேசும் - பவுத்த மதத்தைப் பின்பற்றும் ஒருவர்தான் அதிபராக முடியும் என்பதை விலக்கிக் கொள்ளத் தயாரா?

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்று முன்பு கொடுத்த உத்தரவாதத்தைச் செயல்படுத்த முன்வருவாரா?

குறைந்த பட்சம் இந்த மூன்று அம்சங்களுக் காவது பச்சைக் கொடி காட்டட்டும்; அதற்குப் பிறகு - ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ  விரும்புகிறார்கள் என்பதைப் பேச முயற்சிக்கட்டும்!

                    ----------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

கலைவாணர் போட்ட மந்திரம்!எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பிலையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள்கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்


நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

19.5.13

பகுத்தறிவுப் பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை! -பெரியார்


சிந்தனையாளர் சங்கம் இப்போது தான் ஏற்படுகிறதென்றும், இதற்கு முன் இருந்தவை சிந்தனையற்ற மிருகங்களின் சங்கம் என்பதே பொருளாகும்.

 உலகில் மனிதன் ஒருவனுக்குத் தான் சிந்தனா சக்தி உண்டு. மற்ற எந்த ஜீவனுக்கும் சிந்தனா சக்தி மாற்றிக் கொள்ளத் தெரியாது; மனிதன் ஒருவன் தான் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவும், நலனுக்கேற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியான அறிவினைப் பெற்றி ருக்கின்றான்.

மிருகங்களோடு மிருகங்களாக கண்டதைப் புசித்துக் கொண்டு குகையில் வாழ்ந்து கொண்டிருந்தவன், படிப்படியாக வளர்ந்து இன்று உணவை வேக வைத்து பல சுவைகளோடு உண்பதோடு வீடு கட்டிக் கொண்டு, அதில் பல வசதிகளை செய்து கொண்டு வாழ்கின்றான். மற்ற பிராணிகள் முன் எப்படி வாழ்ந்ததோ, அதுபோல்தான் இன்றும் வாழ்ந்து வருகிறது. இப்போது நாம் அடியோடு பகுத்தறிவில்லாத ஜீவனாக இல்லை, சில விஷயங்களில் மட்டும் இன்னும் காட்டுமிராண்டித் தன்மையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
உணவு, உடை, உறையுள் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்தித்து நலனுக்கேற்ப தன் அறிவைக் கொண்டு மாற்றிக் கொள்கிற மனிதன் கடவுள் - மத - மூட நம்பிக்கையின் காரணமாக இன்னும் மடையனாக, வளர்ச்சியடையாதவனாக, இழி மகனாக இருந்து கொண்டிருக் கின்றான். இந்நிலைமையை எடுத்துச் சொல்லி இந்த விஷயங்களிலும் அவன் அறிவு பயன்பட வேண்டும் என்பதை சிந்திக்கத் தூண்டுவதற்காகவே இச் சிந்தனையாளர் மன்றமென்பதாகும்.

கடவுள் - மதம் - சாஸ்திரம் - முன் னோர்கள் - தெய்வீக சக்தி பொருந்திய வர்கள் - பழமை என்கின்ற இவைகளின் காரணமாக, இவைகளைப் பற்றி சிந்திக் கக் கூடாது. சிந்தித்தால் நரகத்திற்குப் போக வேண்டும். பாவம் என்றெல்லாம் சொல்லி மனிதனை மடையர்களாக்கி விட்டார்கள். இதற்கு ஆட்பட்டவர்கள் உலகில் பல பாகங்களிலுமிருக்கிறார்கள் என்றாலும் மற்ற நாடுகளிலிருப்பதைவிட நம் நாட்டில் அதிகமிருக்கக் காரணம், நம் நாட்டில் தான் இலட்சக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலனடைய ஒரு கூட்டம் இருக் கிறது. ஆதலால் அக்கூட்டத்தார் அதனை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நாட்டில் முதன்முதல் மனிதன் அறிவு பெற வேண்டும் - எதையும் சிந்திக்கின்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று நான் ஒருவன்தான் தொண்டாற்றிக் கொண்டு வருகிறேன். இதை நான் ஆணவமாக சொல்வதாகக் கருதக் கூடாது.


எனக்கு இந்த உணர்வு எப்படி வந்ததென்றால் எங்கள் வீடு பணக்கார வீடு என்பதோடு பக்தர்கள் வீடானதால் எங்கள் வீட்டிற்கு நிறைய பக்தர்கள், புராண பிரச்சாரகர்கள், புலவர்கள் வருவார்கள். அவர்களோடு சிறு வயது முதல் வாதாடு வேன். எனது கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாதபோது அவர்கள் மிக சாமர்த்தியமாக தம்பி ரொம்ப கெட்டிக்காரன் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.

இப்படி சிறு வயது முதல் இயற்கையாக வாதாடுகிற தன்மை ஏற்பட்டது. எனக்கு என்று 10, 20 பேர் சேர்ந்தவர்கள். என் கேள்விகளுக்கு எவனாலும் சமாதானம் சொல்ல முடியவில்லை. காரணம், அவர்கள் எல்லாம் மடமையின் காரணமாக பலவற்றை ஏற்றுக் கொண்டிருப்பதால் அதை மீறி சமாதானம் சொல்ல அவர் களால் முடிவதில்லை.

இப்படி வாயாடியாக இருந்து பின் முனிசிபல் சேர்மன் ஆனேன். சேர்மனாக இருக்கும்போதே பொதுத் தொண்டு செய்து வந்தேன். அப்போது காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்ததால் சமு தாயத் தொண்டு வேஷம் போட்டது. அதைப் பார்த்து நானும் சமுதாயத் தொண்டு செய்ய வேண்டுமென் கின்ற ஆர்வத்தில் காங்கிரசில் போய்ச் சேர்ந்தேன். என்னோடு திரு.வி.க., வ.உ.சி., வரத ராஜூலு நாயுடு போன்ற பல தமிழர்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.

நாங்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்து பிரச்சாரம் செய்த காரணத்தால் மக் களிடையே அப்போது ஆட்சியிலிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் மீது பற்றும், ஆதரவும் பெருக ஆரம்பித்தது. மக்கள் ஆதரவு தங்களுக்கு அதிகமிருக்கிறது. தேர்தலில் நின்றால் வெற்றி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதும், காங்கிரஸ் தேர்தலில் ஈடுபடுவது இல்லை சட்டசபைக்குச் செல்வது போன்றது என்று சொல்லிக் கொண்டிருந்ததை மாற்றிக் கொண்டு தேர்தலில் நிற்பது என்று ஆரம்பித்தது.

காங்கிரஸ் தேர்தலில் ஈடுபடுவதாக இருந்தால் பார்ப்பனரல்லாத  மக்களுக்கு 100-க்கு 50 பாகம் ஒதுக்கி வைத்து விட்டு மிகுதியில் எல்லோரும் போட்டியிட வேண்டுமென்று சொன் னேன். முதலில் அதற்கு சம்மதித்தார்கள். பிறகு காஞ்சி புரத்தில் நடைபெற்ற காங்கிரசில் இதையே தீர்மானமாகக் கொண்டு சென்றேன்.

என்னுடைய தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விட்டால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், ஓட்டிற்கு விடாமல் இந்த காங்கிரசில் அடிப்படைக் கொள்கைக்கு மாறானது என்று சொல்லி தள்ளி விட் டார்கள். அந்த மாநாட்டிலேயே காங்கிரசை விட்டு நான் கோபித்துக் கொண்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன் கொள்கை கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு, காங்கிரஸ் ஒழிப்பு, காந்தி ஒழிப்பு, பார்ப்பான் ஒழிப்பு ஆகிய அய்ந்து காரியங்களுமேயாகும். இதில் காந்தியை பார்ப்பானே ஒழித்து விட்டான். மிச்சமிருப்பது கடவுள் - மதம் - காங்கிரஸ் - பார்ர்ப்பான் ஆகிய நான்குமேயாகும்.

நமது பகுத்தறிவு பிரச்சாரத்தால் மக்கள் எவ்வளவு தெளிவு பெற்றிருக் கிறார்கள் என்பதற்கு அவர்கள் இந்த பகுத்தறிவு ஆட்சியைக் கொண்டு வந்ததே போதுமே! இந்த ஆட்சியிலுள்ளவர்கள் கடவுள், மதம் ஆகியவைகளுக்கு விரோதி என்பது, எல்லா மக்களுக்குமே தெரியும் பகுத்தறிவாளர் ஆகாத காரியம் ஒன்று மில்லை. பகுத்தறிவிற்கு எதிரில் எதுவுமே நிற்க முடியாது. அவ்வளவு சக்தி பகுத்தறி விற்குண்டு. இன்றைக்கிருக்கிற விஞ்ஞான புதுமைகளையெல்லாம் பாதிரியோ, சங்கராச்சாரியோ, முல்லாவோ, பிஷப்போ கண்டுபிடிக்கவில்லை. பகுத்தறிவுடை யவன் கண்டு பிடித்ததாகும்.

நம்மில் இன்னும் இதுபோன்ற பகுத்தறிவுவாதிகள் தோன்றாததற்கு காரணம் பல ஆயிரக்கணக்கான ஜாதிகள், கடவுள்கள், மதங்கள். அவற் றிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட புராண, இதிகாச, சாஸ்திரங்கள் ஆகியவை நம் அறிவை வளரவிடாமல் தடை செய்த தாலேயேயாகும்.

மனிதன் வளர்ச்சியடைய வேண்டு மானால், அவனது குறைகள் நீங்க வேண்டுமானால், சமுதாய இழிவு ஒழிய வேண்டுமானால் மனிதன் பகுத்தறிவைக் கொண்டு சிந்திப்பது ஒன்றினால்தான் முடியும்.
நமது மக்கள் முட்டாள்கள், மூட நம்பிக்கைகாரர்கள், சரித்திரம் தெரிந்த நாள் முதலான ஈனஜாதி மக்கள் அவர்களிடையே அறிவை எடுத்துச் சொல்வதற்கு இதுபோன்ற அரசியல் சார்பற்ற மன்றங்கள் நிறையத் தேவை. இப்போது சென்னையில் அரசாங்கத்தில் உயர் பதவியிலிருக்கிறவர்கள் எல்லாம் சேர்ந்து பகுத்தறிவாளர் கழகம் என் கின்ற பெயரில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அரசாங்கத்தில் பதிவு செய் துள்ளார்கள். கோவையில் சிந்தனை யாளர் பேரவை என்கின்ற பெயரில் இரண்டும், மதுரை, திருச்சி, தாராபுரம், நாமக்கல் போன்ற நகரங்களிலும் இதுபோன்ற மன்றங்கள் ஏற்படுத்தி யுள்ளார்கள். இன்று இங்கு ஏற்படுத்தி யுள்ளார்கள்.

இதில் அரசாங்க உத்தியோகஸ்தர் களையெல்லாம் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் யாவரையும் சேர்க்க வேண்டும். உங்களுக்குள்ளேயே ஒவ் வொன்றைப் பற்றியும்  வாதாட வேண்டும். மற்ற பகுத்தறிவு வாதிகளை அழைத்து மாதம் ஒரு முறையாவது பிரச்சாரம் செய்யச் சொல்ல வேண்டும். பகுத்தறிவுக் கருத்துள்ள நூல்களை வரவழைத்து படிக்க வேண்டும். மற்ற மக்களுக்கும் பகுத்தறிவைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்களிடையே இருக்கிற இழிவு - மடமை - நீண்ட நாட்களாக இருந்து வருகிற அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டு மென்கின்ற தொண்டினை  செய்து வருகிற நாங்கள் அரசியலில் ஈடுபட்டால் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியாது. இந்த உண்மைகளை எடுத்துச் சொன்னால், மக்கள் ஓட்டளிக்க மாட்டார்களே! ஆன தனாலே நாம் அரசியலாலே முன்னேற்ற மடைய முடியாது. பகுத்தறிவாலே ஒரு துணிவு ஏற்பட்டால் தான் நாம் மாற்ற மடைய முடியும் .

--------------------------------------23.10.1970 அன்று கோபிச்செட்டிபாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.12.1970